Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 12

(12)

 

இப்படியே இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றன. கந்தழிதரனின் நண்பர்கள் அவனைத் தேடி வருவதும், பேசிவிட்டுப் போவதும், அவனை அழைத்துச் செல்வதுமாக நாட்கள் பறந்தன. அன்றும் நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தபோது வீடே மயான அமைதியாக இருந்தது. வெளியே வந்து தோட்டத்தை எட்டிப் பார்த்தவன், அங்கும் ஆட்கள் இல்லாது போக, மாட்டை இழுத்துக் கட்டிக்கொண்டிருந்த வேலனை நெருங்கி,

“வேலா… அத்தை எங்கே…” என்றான்.

“அத்தையா… அவர்கள் யாரையோ பார்த்துவிட்டு வருவதாகப் போயிருந்தார்கள் தம்பி…” என்று கூற,

“ஓ… என்றவன், கிணற்றடியை நெருங்கி ஏற்கெனவே தொட்டியில் நிறைத்திருந்த தண்ணீரை இரண்டு கரங்களாலும் அள்ளி முகம் கழுத்து என்று ஊற்றிக் கழுவிவிட்டு, உதடுகளுக்கு நேராக வழிந்த நீரை உதடுகள் கொண்டு ஊதித் தெறிக்கவிட்டுவிட்டுத் திரும்ப, அங்கிருந்த பெரிய மாமரம் அவனை அழைத்தது.

உள்ளம் கனிய, அவற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான். எங்குப் பார்த்தாலும் மா, பலா, வாழை, அகத்தி என்று பயன்தரும் மரங்களின் ஆட்சி. தன்னை மறந்து அதிலிருந்த ஒரு மா மரத்தை வருடிக் கொடுத்தவனுக்கு நெஞ்சம் கனத்துப் போனது. அது அவனும் அவன் மாமன் காசிநாதனுமாக இணைந்து நட்டது. அவர் நடும்போது கூறியது இன்னும் நினைவிலிருந்தது.

“கந்தழி… நாம் இந்த உலகத்தில் இருக்கிறோமோ இல்லையோ… நாம் விட்டுச் செல்லும் இந்த மரங்கள்தான் நம் பேரைச் சொல்லும்… சந்ததிகளைக் காக்கும்… உலகத்திலேயே சுயநலமில்லாதது இந்த மரங்கள்தான் தெரியுமா? நாம் வெட்ட வெட்டத் தளைத்து, நமக்கு நிழலையும் தரும் உண்பதற்கு உணவும் கொடுக்கும்…” என்றவாறு அம்மரத்தை நட்டது இப்போதும் நினைவிலிருந்தது.

இதோ அவர் சொன்னது போல நட்ட மரம் இருக்கிறது… ஆனால் அவர்தான் இப்போது இல்லை. காசிநாதனுக்குக் கைராசி நிறைய உண்டு. அவர் மரம் நட்டால் அவை செழித்து வளரும். அதனால் மரங்கள் நடுவதற்கு எப்போதும் அவரைத்தான் அழைப்பார் பரந்தாமன். அவர் வரும்போதெல்லாம் அம்மேதினியும் தொற்றிக்கொண்டு வந்துவிடுவாள். வந்தாள் என்றால் அவனுடைய கரத்தைப் பற்றியவாறுதான் நடப்பாள். இல்லை அவனுடைய முதுகில் உப்பு மூட்டையாகத் தொங்குவாள். கூடவே அதை எடு, இதைக் கொடு, என்று கட்டளைகளும் பொறி பறக்கும்.

அந்த நினைவில் முகம் கனிய மேலும் நடக்கத் தொடங்க, திடீர் என்று தொலைவிலிருந்து,

“ஏய்… பார்த்துடி…” என்கிற அலறல் சத்தம் கேட்க, பழைய நினைவிலிருந்து மீண்டவனாகச் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான் கந்தழிதரன்.

சற்றுத் தூரம் போனதும், அங்கே ஒரு மாமரத்திற்குக் கீழாகப் பெண்கள் நின்று அலறிக்கொண்டிருக்க, இவனோ,

“என்னாச்சு…” என்றான் பதறியவனாக.

அதில் ஒருத்தி, கையைத் தூக்கிக் காட்ட, அங்கே அம்மேதினி பதினைந்தடிக்கு மேல் ஒரு மாமரக் கிளையைப் பற்றித் தொங்கியவாறு நின்றிருந்தாள்.

அந்தக் காட்சியைக் கண்டதும் இவனுடைய இதயம் வாய்க்குள் வந்து துடிக்க,

“அம்மணி பார்த்து…” என்று பதற, அந்த நிலையிலும் குனிந்து கந்தழிதரனைப் பார்த்து முறைத்தவள்,

“கந்து… பார்த்துக்கொண்டிருக்கிறாயே… காப்பாத்துடா… கை வலிக்கிறது…” என்று கால்களை உதறியவாறு அலற, அடுத்தக் கணம் விறுவிறு என்று அந்த மரத்தின் மீது ஏறத் தொடங்கினான் கந்தழிதரன்.

ஏறி அவளை நெருங்கி அவள் தொங்கிக்கொண்டிருந்த கிளையின் இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தவன், அவளைக் காப்பாற்றும் எண்ணமே இல்லாதவன் போல,

“என்னடி இது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை இப்படி நிருபித்துக் கொண்டிருக்கிறாய்…” என்றவன் கிளையில் சாய்ந்து அமர்ந்தவாறு, “ஆமாம் மாமரத்தில் மாங்காய் தானே தொங்கவேண்டும்… நீ ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறாய்?’ என்றான் ஏதோ ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி போல.

“டேய்… ஆராய்ச்சி செய்யும் நேரமா இரு… கையைப் பிடிடா… விழப் போகிறேன்…” என்று சிரமப்பட்டுப் பிடியை விடாதவாறு நிமிர்ந்து பார்த்துக் கெஞ்ச, இவனோ,

“அதை ஏற முதல் அல்லவா யோசித்திருக்க வேண்டும்… ஆமாம்… யாருக்குச் சர்க்கஸ் வித்தை காட்ட ஏறியிருக்கிறாய்… உன்னுடைய நண்பர்களுக்கா? பணம் போடுவார்களா” என்றான் கிண்டலாய். இவளோ,

“டேய்… எடுபட்ட பயலே… காப்பாத்துடா… கை… வலி…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு கரம் வழுக்கியது. ஆனாலும் பாய்ந்து இறுகப் பற்றிக்கொண்டவள் கால்களை உதறியவாறு,

“டேய்… கையைப் பிடியடா…” என்று அழ இவனோ,

“ஆமாம்… ஏறத் தெரிந்த உனக்கு இறங்கத் தெரியாதா என்ன?” என்று ஆச்சரியமாகக் கேட்க, இவளோ அதற்கு மேல் முடியாதவளாகத் தன் கரங்களை விட, அடுத்தக் கணம் கந்தழிதரனின் இறுகிய பிடியில் தொங்கிக் கொண்டிருந்தாள் அம்மேதினி.

அத்தோடு தன் கதை முடிந்தது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் விழாது அந்தரத்தில் தொங்குவது தெரிய, அதுவரை இறுக மூடியிருந்த விழிகளைத் திறந்து நிமிர்ந்து பார்க்க, கந்தழிதரன் மாங்கொப்பின் மீது குப்புறப் படுத்தவாறு இவளைப் பற்றியிருந்தான். அதே நேரம் விழிகளில் மெல்லிய நகைப்பு வேறு.

எரிச்சலுடன் அவனைப் பார்க்கும்போதே

“அருகேயிருக்கும் கொப்பின் மீது காலை வை…” என்று உத்தரவிட, அவன் கூறியது போலவே முயன்றவாறு காலை நீட்டி, அவன் குறிப்பிட்ட கொப்பில் பதிக்க, இப்போது வலக்கரத்தை விடுவிக்க, அவசரமாக ஒரு கிளையைப் பற்றித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள, அவள் இனி விழமாட்டாள் என்பதை உறுதிப்படுத்தியவாறு மறு கரத்தையும் விட்டுவிட்டுக் கடகடவென்று கீழே இறங்கி நிமிர்ந்து பார்த்து,

“பத்திரமாக இறங்கு…” என்றான். ஏற்கெனவே அச்சத்தில் உடல் நடுங்கப் பாதங்களைப் பதித்து, கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியவள் இனி தரையில் குதிக்க வேண்டியதுதான், என்று எண்ணியவளாகப் பாய, கச்சிதமாக அவளைத் தன் இரு கரங்களிலும் தாங்கியிருந்தான் கந்தழிதரன். ஒரு கணம் அவளைத் தன்னோடு இறுக அணைத்து விலக்கியவன்,

“இப்போது எதற்காக மரத்தில் ஏறினாய்?” என்று கடிய, இவளோ சிறுத்துவிட்ட குரலில்,

“மாமரத்தில் எதற்காக ஏறுவார்களாம்? பம்பரம் விடவா… மாங்காய் பிடுங்கத்தான் ஏறினேன்…” என்று கூற

இவளை முறைத்துப் பார்த்து,

“அறிவிருக்கிறதா உனக்கு? நான் வராமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும். கைகால்களை உடைத்திருப்பாய்… முட்டாள்…” என்றான். அதுவும் தோழிகளுக்கு முன்பாக அவன் திட்டியது இவளுக்குப் பிடிக்கவில்லை.

“பின்னே… உன்னுடைய அத்தை பெண்தானே நான்… புத்திசாலியாகவா இருப்பேன்…” என்று பதிலுக்குக் கொடுக்க, இவனோ,

“சைக்கிள் கேப்பில் என்னையே முட்டாள் என்கிறாயா… எத்தனை தைரியம் உனக்கு…” என்று சீறிக்கொண்டிருக்கும் போதே, அம்மேதினியின் தோழிகள் இவர்கள் இருவரைப் பற்றியும் அக்கறை கொள்ளாது கீழே ஆய்ந்து போட்டிருந்த மாங்காய்களை அங்கிருந்த மரத்தில் குத்தி அது பிளந்ததும் அதிலிருந்து துண்டுகளைப் பக்குவமாக எடுத்து வாயில் போட்டு உதடுகளைச் சுளுக்கி,

“என்னடி… இப்படிப் புளிக்கிறது… இதற்கு உப்பும் மிளகாய்த் தூளும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே.…” என்று சப்புக்கொட்ட அப்போதுதான் இருவருக்குமே நிகழ்காலம் புரிந்தது.

அதுவும் தான் கந்தழிதரனின் கரங்களில் விழுந்திருக்கிறோம் என்பதும், அவன் தன்னை அணைத்துத் தூக்கியிருக்கிறான் என்பது புரியவும், பெரும் சங்கடத்திற்கு உட்பட்டவளாகத் தன் கால்களை உதறித் தரையில் இறங்க முற்பட, கந்தழிதரனோ, அவசரமாக அவளைத் தரையிறக்கி,

“அடுத்த வாட்டி இப்படி மரங்களில் ஏறி உன் மூதாதையர் குரங்கு என்று நிரூபித்து வித்தை காட்டாதே…” என்று விட்டு அதைத் தொடர்ந்திருந்த பற்றைக் காணிக்குள் போக, இவளுக்கோ சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.

தோழிகளைக் கண்டதும் மாங்காய் பறித்து உண்ணும் ஆர்வத்தில் மாமரம் அருகே போக, அது மாங்காய் காலம் அல்ல என்பதால் அதிக மாங்காய்கள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அதுவும் ஒரு மரத்தின் உச்சியில் ஒரு கொத்து மாங்காய் காய்த்திருப்பதைக் கண்டு எதையும் யோசிக்காமல் விறுவிறு என்று ஏறிவிட்டிருந்தாள். ஏறிய பிறகுதான் அதன் தொலைவே உறுத்தியது. ஆனாலும் முன்வைத்த காலைப் பின் வைத்தால் அவள் அம்மேதினியாக இருக்க முடியாதே. எப்படியோ எட்டி மாமரத்திலிருந்த சிறிய கிளையை ஒடித்து, அங்கிருந்த மாங்காய்களைக் கீழே விழ வைத்துவிட்டாள். வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் கரங்களைத் தட்டப் பிடியை விட்டதுதான் தெரியும், உடல் தடுமாற அவள் ஏறி நின்றிருந்த மாங்கிளை வேறு முறிய, பிறகு என்ன கீழே விழத் தொடங்கினாள். எப்படியோ கைக்குக் கிடைத்த ஒரு கிளையைப் பற்றிக்கொண்டதால் தப்பினாள்.

ஆனாலும் அவனுக்கு இத்தனை தெனாவெட்டுக் கூடாது. எப்படி அலறவைத்து விட்டான். கோபத்துடன் அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருக்க, அவளுடைய தோழிகளில் ஒருத்தியான பிரபா, ஒரு துண்டு மாங்காயை வாயில் வைத்தவாறு,

“யாரடி இந்த ஹீரோ… வடிவாக, கம்பீரமாக இருக்கிறாரே…” என்று கேட்க, அவளைப் பார்த்து முறைத்தாள் அம்மேதினி.

எல்லாம் இவர்களால் வந்தது. இவர்களுக்கு வீரம் காட்டப் போய்தான் இப்படிச் சிக்குப்பட்டாள். ஆத்திரத்துடன் தோழியின் கரத்தலிருந்த மாங்காயைப் பறித்தவள் கந்தழிதரன் சென்ற திசைப்பார்த்து ஒரு கடி கடிக்க, அதன் புளிப்பு உச்சந்தலையில் சென்று அடித்தது. அதன் புளிப்பில் முகத்தைச் சுளுக்கியவளுக்கு அதுவரையிருந்த நடுக்கமும், கோபமும் சுத்தமாய் மறைந்து போனது.

“ப்ச் கேட்கிறேனே… யார் என்று சொல்லேன்…” என்று ஆர்வமாகத் தோழி கேட்க, இவளோ,

“சொன்னேனே… எங்கள் வீட்டிற்கு என் அம்மாவின் அண்ணன் மகன் வந்திருக்கிறார் என்று… அவர்தான் இவர்…” என்றதும்,

“கொடுத்து வைத்தவள்டி… இப்படி அத்தான் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்…” என்றாள் பிரபா பெருமூச்சுடன்.

“ஏன்… உனக்கும்தான் ஒரு அத்தான் இருக்கிறதே… பிறகு எதற்குப் பெருமூச்சு விடுகிறாய்?” என்று மற்றைய தோழி கவிதா காலை வார, அவளை எரிச்சலுடன் பார்த்த பிரபா,

“ஐயையையே… ராஜாவின் பார்வையில் வரும் விஜயைப் பற்றிப் பேசினால் நீ ஏன்டி வடிவேலுவை நினைவு படுத்துகிறாய்?” என்று கடிந்தவள், திரும்பி அம்மேதினியைப் பார்த்து,

“சரி… சரி நாங்கள் கிளம்புகிறோம், உன் அத்தான் பற்றைக்கானிக்குள் போகிறார். என்னவென்று பார். பாம்பு கீம்பு இருந்து தொலைக்கப் போகிறது…” என்றதும் இவளுக்குத் திக்கென்றது.

ஆம் அங்கே நாகப்பாம்புகள் முதல் முத்திரைப் புடையன் வரை சர்வ சாதாரணமாக நடமாடும் இந்த நிலையில் கொத்து வாங்கிக்கொண்டான் என்றால்? அதற்குமேல் அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

அந்தக் காணி மிகவும் ஒதுக்குப்புறமான இடம். அந்தக் காணி கந்தழிதரனின் தாய்வழி உறவினரின் காணிதான். இந்திய இராணுவத்தின் வருகையின் போது கணவர் இறந்துவிட, குழந்தைகளைக் காக்கவேண்டி யாழ்ப்பாணத்தை விட்டுப் போனவர்கள்தான். இதுவரை தலைகாட்டியதில்லை. அதனால் அந்த இடத்தை யாரும் பராமரிப்பதில்லை. அதன் காரணமாக அதிகமான முட்புதர்களும், தேவையற்ற தாவரங்களும் அங்கே அடர்ந்து வளர்ந்திருந்தன. கூடவே விஷ ஜந்துக்களின் குடியிருப்பாகவும் மாறியிருந்தது. அவன் மீது கழிவிரக்கம் தோன்ற, வேகமாகக் கந்தழிதரன் சென்ற திசை நோக்கிச் சென்றாள் அம்மேதினி.

கிடைத்த இடைவெளிக்குள் கவனமாக ஊடுருவியவள் எட்டி எட்டி அவனைத் தேடினாள். ஆளைக் காணவில்லை.

‘அதற்கிடையில் எங்கே போனான்… இந்தப் பக்கமாகத்தானே வந்தான்… ஒரு வேளை ஏதாவது பூச்சி பொட்டு கடித்திருக்குமோ…?’ என்று எண்ணிய போதே நெஞ்சம் பதறியது.

அருகே இருந்த பெரிய குச்சியை எடுத்தவள், முட்புதரைத் தட்டியவாறு, முன்னோக்கிச் செல்ல திடீர் என்று அவளுக்கு அருகே ”ஸ்…” என்ற சத்தம் கேட்க, அம்மேதினிக்கு இரத்தமே உறைவதுபோலத் தோன்றியது.

ஐயையோ, அவனைக் காக்கவந்து இப்போது இவள் பாம்பிடம் சிக்கிக் கொண்டாளே… முகம் வெளிற, தன்னை மறந்து,

“காக்கக் காக்கக் கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்கத் தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க… பா… பா… பார்க்கப் பார்க்கப் பார்க்க… ஐயோ… அதற்குப் பிறகு என்னவென்று மறந்துவிட்டதே… நல்லூர் கந்தா…” என்றவாறு அச்சத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பித் தரையில் பார்த்தாள். வெறும் முட்கள் நிறைந்த பற்றைதான் தெரிந்ததே தவிரப் பாம்பைக் காணவில்லை.

குனிந்து குனிந்து தேடியவள், பாம்பைக் காணாமல்,

‘ஐயோ… டேய்… தரன்… உன்னைத் தேடப் போய் இப்படிப் பாம்பிடம் சிக்கிக்கொண்டேனே…’

“கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா… காக்கக் காக்கக் கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்கத் தாக்கத் தாக்கத் தடையறத் தாக்கப் பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட… பில்லி… பில்லி.. பில்லி.. ஐயோ பயத்தில் கந்தன் கவசமே மறந்து போய்விட்டதே… காக்கக் காக்கக் கனகவேல் காக்க…” என்று உருப்போட்டவாறு உடல் நடுங்க, உள்ளம் பதற, அந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் என்று எண்ணியவள் போலத் திரும்பிய நேரத்தில், அந்த வீணாய்ப் போன கந்தழிதரன், அவள் முன்னால் ‘ஸ்…’ என்றவாறு மறைவிலிருந்து எழ, சத்தியமாக அவனை அப்படி எதிர்பார்க்கவில்லை அம்மேதினி.

ஏற்கெனவே பயத்திலிருந்தவள், தன்னை மறந்து, “அம்மா…” என்ற பெரும் அலறலோடு, பின்னோக்கிச் சரிய, பதட்டத்துடன் அவன் அவளைப் பாய்ந்து பிடிப்பதற்குள் அவள் முட்புதரின்மீது விழுந்துவிட்டிருந்தாள்.

“ஊப்ஸ்… ஐ ஆம் சாரிடி… ரியலி சாரி…” என்றவனுக்கு ஒரு பக்கம் அவள் விழுந்திருந்த கோலம் சிரிப்பைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் எங்காவது முட்கள் அவள் மேனியைக் காயப்படுத்தியிருக்குமோ என்கிற அச்சமும் தோன்ற, அவளைப் பற்றித் தூக்க முயன்றான்.

அவளுக்குமட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால், கந்தழிதரனை அவள் நிச்சயமாக எரித்துச் சாம்பலாக்கி விட்டிருப்பாள்.

கோபமும், ஆத்திரமும், அவமானமும் சேர தன்னை நோக்கி நீட்டிய கரத்தை ஓங்கி ஒரு அடி கொடுத்து விலக்கியவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனுடைய கழுத்தை  நெரிக்கவேண்டும் என்கிற வெறியே வந்தது. எத்தனை தைரியமிருந்தால் அவளையே விழ வைப்பான். இவனை, என்றவாறு ஆவேசத்துடன் எழ முயல, அவளுடைய ஆடைகள் வேறு முட்களுக்குள் சிக்கி அவளை எழ விடாது செய்தன.

“பார்த்துடி…” என்றவன் அவளை மேலும் நெருங்க முயல,

“நில்லுங்கள் அங்கேயே… ஒரு அடி என்னை நோக்கி வைத்தாலும் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது…” என்று கோபத்துடன் சீற, இவனோ அவளைப் பரிதாபமாகப் பார்த்தான். பழைய நினைவில் அவளுடன் விளையாடும் எண்ணத்தில் பயங்காட்ட நினைத்தது தப்பாகிப் போன வருத்தத்தில்,

“சாரிம்மா… நான் வேண்டும் என்று செய்யவில்லை. பழைய நினைவில்…” என்று இரக்கத்துடன் அவளை நோக்கி இன்னும் நெருங்கி வர,

“மண்ணாங்கட்டிப் பழைய நினைவு. அதுதான் நாங்கள் யாரும் வேண்டாம் என்று போராட்டத்திற்குப் போனீர்களே… அப்போது இந்த நினைவுகள் எல்லாவற்றையும் தூக்கிப் பரனில் போட்டுவிட்டுத்தானே போனீர்கள். இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது… இனிமேல்பட்டு, பழைய நினைவு, புதிய நினைவு என்று என்னருகே வந்தீர்கள்… அதன் பிறகு நான் மனுஷியாக இருக்கமாட்டேன் ஜாக்கிரதை…” என்று சீறியவள்,

“விளையாட்டாம் விளையாட்டு… இது என்ன விளையாட்டு மைதானமா…?” என்று பற்களைக் கடித்து பொறுமியவாறு சிக்கிய ஆடைகளின் சிக்கல்களை அவிழ்த்துவிட முயல, வலக்கரத்தை அங்கிருந்த முட்செடி ஒன்று பதம்பார்க்க முயல,

“சரி.. சரி… இனிமேல் உன் கூட இப்படி விளையாடவில்லை. போதுமா… விடு… நான் உதவி செய்கிறேன்…” என்றவன் அவளை நெருங்கி மெதுவாக அவள் அணிந்திருந்த பாவாடையை விடுவித்துவிட்டு, அவள் அனுமதியையும் வேண்டாது கரங்களைப் பற்றி இழுக்க, அவளுடைய சட்டையோடு சேர்ந்த வந்தது நான்கைந்து முற்கிளைகள்.

அதைக் கண்டவன் உண்மையாகவே துடித்துப்போனான்.

“ஓ மை காட்…” என்றவன் மீண்டும் மன்னிப்பு வாங்கியவாறு அவள் முதுகில் குத்தியிருந்த முட்களைக் கவனமாக இழுத்தெடுக்க,

“அவுச்… பார்த்துடா எருமை…” என்று சீற,

“சாரிடி… ரியலி சாரி…” என்றவாறு கவனமாக எடுக்க, சற்று நேரம் அப்படியே நின்றிருந்தவள், அவனை முள்ளெடுக்க விட்டுவிட்டு,

“கந்து…” என்றாள் மென்மையாய்.

“ம்”

“நீ… நீ அந்த ரோகிணியை விரும்புகிறாயா?” என்றாள் அடைபட்ட குரலில். அவனோ தோள் புறத்தில் குத்தியிருந்த முற்கிளையை இழுத்து எடுத்தவாறு,

“வாட்… விரும்புகிறேனா… உனக்குப் பைத்தியமா என்ன?” என்று இவன் இவளை நிமிர்ந்து பார்த்தவாறு கேட்டுவிட்டு மீண்டும் முள்ளை இழுத்தெடுப்பதில் கவனம் செலுத்த,

“அப்படியானால் அவளைத் திருமணம் முடிப்பதற்குச் சம்மதம் என்பது போலக் கூறினாயே…” என்றாள் அவனை நோக்கித் திரும்ப முயன்றவாறு. உடனே அவள் இரு தோள்களிலும் தன் கரத்தைப் பதித்து அவள் அசைவைத் தடுத்தவன்,

“ஆடாதே அம்மணி…” என்று கடிந்து விட்டுத் தன் காரியத்தில் கண்ணாக இருந்தவாறு,

“திருமணம் முடிப்பதற்கும் விரும்புவதற்கும் என்ன சம்பந்தம். நம் நாட்டில் காதல் திருமணத்தை விடப் பேசித் திருமணம் தானே அதிகமாக இருக்கிறது. திருமணம் முடித்தபிறகு விருப்பம் தானாக வந்துவிடும்… தவிர ரோகிணியை மறுப்பதற்குக் காரணம் எதுவுமில்லை. நல்ல குடும்பம்… நம் சொந்தம் வேறு… படித்தவள்…” என்று அவன் அடுக்க, இவளோ அவனை உதறித் தள்ளிவிட்டு, ஆத்திரத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து,

“பணம் வேறு இருக்கிறது…” என்றாள் சுள் என்று.

“ஆமாம்… அதுவும் கூடுதல் காரணம் தான் பேபி கேர்ள்…” என்று அவன் கூற, இவளுக்கோ கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது.

‘ஏனோ அவன் அந்த ரோகிணியைத் திருமணம் முடிக்க மறுப்புத் தெரிவிக்காதது பெரும் ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் அவளுக்குக் கொடுத்தது. அதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அவளுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அந்த ரோகிணியை அவன் மணப்பதுதான் காரணமாக இருக்குமோ? பாவம் அவன் ரோகிணியை மட்டுமல்ல. வேறு எவளை மணந்தாலும் இவளுக்குப் பிடிக்கப்போவதில்லை என்பதை அவள் உள் மனது அறிந்து கொள்ளவில்லை.’

அவன் யாரைக் கட்டினால் இவளுக்கென்ன? அவன் எப்படிப் போனால் இவளுக்கென்ன? அது புரியாத புதிர்தான். ஆனால் சிறு வயது முதலே இவன் என்னவன் என்கிற அந்த உரிமை அடி மனதில் காதலாக உருமாறி இதயம் வரை நிறைந்துவிட்டது என்பதை அவள் இன்றுவரை உணரவேயில்லை. அதனால் ஏற்பட்ட வெறுமை, ஏமாற்றம், வலி, தவிப்பு மொத்தமாகச் சேர்ந்து அவன் மீது கொலைக் காண்டை ஏற்படுத்த, தன் கோபத்தை அடக்க முயன்றும் முடியாமல் விழிகளை அழுந்த மூடி ஒன்று இரண்டு என்று பத்துவரை எண்ணி தன் கோபத்தையும் ஏமாற்றத்தையும் அடக்க முயன்றாள். அதன் நிமித்தமாக அவள் கன்னத்தில் கண்ணீர் வழிய, முட்களால் ஏற்பட்ட காயத்தில் கண்கள் கலங்குகிறாள் என்று எண்ணிய கந்தழிதரன்,

“அதிகம் வலிக்கிறதா அம்மணி…?” என்றான் மெய்யான வருத்தத்துடன். இவளோ,

“இல்லை… குளுகுளு என்றிருக்கிறது…” எனச் சுள்ளென விழுந்தவள், வேகமாக அங்கிருந்து ஓட முயல, மீண்டும் அவள் அணிந்திருந்த பாவாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. அதைக் கண்டு ஆத்திரம் கொண்டவளாக அதை ஒரு இழுவை இழுக்க, அந்தோ பரிதாபம். அவள் மனதைப் போலவே அவள் அணிந்த பாவாடையும் கிழிந்துகொண்டு வந்தது.

ஏற்கெனவே அணிந்திருந்த மேலாடையில் சில இடங்களில் கிழிசல் விழுந்திருந்தது. இப்போது இது வேறு. முன்பென்றால் அவனுக்கு இதொன்றும் பெரிதாகத் தோன்றியிருக்காது. ஆனால் ஒரு பெண்ணாய் அதற்குரிய அழகோடு பரிணமித்திருந்த அந்தத் தேவதையின் எழில் கிழிந்த ஆடையில் பட்டும் படாமலும் வெளிப்பட ஒரு ஆண்மகனாய் சற்றுத் திணறித்தான் போனான் கந்தழிதரன்.

அவசரமாகத் தன் பார்வையை அவளிடமிருந்து திருப்பியவன், தான் அணிந்திருந்த டீ ஷேர்ட்டைக் கழற்றி அவள் பக்கமாக நீட்டி,

“இதைப் போட்டுக் கொள் அம்மணி…” என்று மென்மையாகக் கூற,

“எனக்கொன்றும் உன்னுடைய உதவி வேண்டியதில்லை…” என்று அவனை வெட்டியவள், வேகமாக நடக்கத் தொடங்க, சடார் என்று அவளுடைய கரத்தைப் பற்றியவன்,

“ப்ச்.. இது என்ன பிடிவாதம்? சொன்னால் கேட்கவேண்டும்… உனக்கு என்மேல் ஆயிரம்தான் கோபம் இருந்தாலும், அந்தக் கோபத்தைக் காட்டுவதற்கு இதுவா நேரம் ஒருவன் நன்மைக்குச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்… இந்தக் கிழிந்த ஆடையுடன் நீ போனால், உன்னைப் பார்ப்பவர்கள் உன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள். இங்கே தவறாக நினைப்பதற்கு ஏதுவும் இல்லை என்றாலும், உனக்குப் பைத்தியம் பிடித்து, அதனால் உன் உடையைக் கிழித்துக்கொண்டு போகிறாய் என்று நினைக்க மாட்டார்களா? சும்மாவே அப்படித்தான்…” என்றவன் அவனை அவள் பார்த்த பார்வையில் கப்பென்று அடங்கியவன்,

“ஐ மீன்… சும்மா எந்த நேரமும் நீ சிடுசிடு என்று இருப்பாயா… முகம் வேறு அதற்கேற்றாற் போல உம்… என்றிருக்கிறதா…” என்று இழுக்க,  அம்மேதினியின் உதடுகள் அவளையும் மீறி மெல்லியதாய், மிக மெல்லியதாய் புன்னகையை வெளிப்படுத்த, குனிந்து தன்னைப் பார்த்தாள்.

அவன் சொன்னது உண்மைதான். அவளுடைய ஆடை கிழிந்திருந்த இடங்கள் பார்ப்பவர்களுக்குத் தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியவைதான். வேகமாக அவன் கரத்திலிருந்த அவனுடைய ஆடையைப் பறித்துத் தன் மீது போட்டுக் கொள்ள, அவனுடைய டீஷேர்ட் சற்று வியர்வையைப் பூசிக்கொண்டதால் போடும் போதே சற்றுக் குளிர்ந்தது. கூடவே அவன் வியர்வை மணம் அவள் நாசிக்கூடாகப் பயணப்பட்டு அவள் நுரையீரலை நிரப்ப, ஏனோ தடுமாறிப்போனாள் அந்தக் காரிகை.

‘இது என்ன மாற்றம். என்ன தவிப்பு? ஏதோ கவசகுண்டலம் கிடைத்தது போலத் தைரியம் தோன்றுகிறதே… அது ஏன்? புரியவில்லை.’ அந்தக் குழப்பத்துடனேயே அந்த இடத்தை விட்டு ஓடியவள், தாயின் பார்வையில் தெரிந்த வேறுபாட்டைக் கண்டும் காணாதவள் போல, அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாற்றிக் கொண்டாள். கதவின் மீது சாய்ந்து நின்றுகொண்டவளுக்கு ஏனோ இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்கின.

ஒரு வித தவிப்புடன் அணிந்திருந்த அவனுடைய டீஷேர்ட்டைத் தூக்கிப் பார்த்தாள். அவளை விடப் பெரியது. மிக மிகப் பெரியது. ஆனாலும் அது அவள் உடலை அலங்கரிக்கும்போது ஏற்பட்ட உணர்வுக்கு விளக்கம் அவளால் கூற முடியவில்லை. டீ ஷேர்ட்டை இழுத்துத் தன் கரங்களுக்குள் சுருக்கியவாறு கரங்களை மார்பின்மீது கட்டிக்கொண்டவள், தலையைக் கதவில் சாய்த்தபோது, அவளுடைய சிந்தனை கந்தழிதரனிடம் சென்றது.

‘அவன் அந்த ரோகிணியைத் திருமணம் முடிக்கச் சம்மதிக்கிறான் என்றால் எனக்கென்ன வந்தது? நான் ஏன் கோபப் படுகிறேன். நான் ஏன் தவிக்கிறேன். அவன் கிட்டே வந்தால் கூட உடலில் ஏதோ இனம்புரியாத மாற்றம் ஏற்படுகிறதே. இதயம் சற்று வீங்கிச் சுருங்குகிறதே… உடலின் மயிர்க்கால்கள் எம்பி நிற்கின்றனவே. அடிவயிற்றில் ஒரு அவஸ்தை தோன்றுகிறதே… உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதோ ஒரு வித உணர்வு பரவிச் சொல்கிறதே… அடிவயிற்றில் ஏற்படும் நுண்ணிய மாற்றம் பெரிதாகி மார்பில் வந்து அடைக்கிறதே… அது ஏன்? இத்தனை காலம் எந்த ஆணையும் ஏறெடுத்துப் பார்க்காத நான், இவனைக் கண்டதும் ஏன் என் சுயம் இழக்கிறேன். அப்படியானால் இவனை நான் காதலிக்கிறேனா என்ன?’ அந்த அண்ணம் பெரும் அதிர்வலைகளாக அவளுக்குள் கிளம்ப அதிர்ந்துபோய் மூடிய விழிகளைச் சடார் என்று திறந்தாள் அம்மேதினி.

‘காதலா… அவளுக்கா… அதுவும் கந்தழிதரன் மீதா… இதென்ன முட்டாள்தனமான சிந்தனை கடவுளே… இப்படி ஒரு சிந்தனை எப்படி எனக்குத் தோன்றியது. நான் அவனை விரும்புகிறேனா… இல்லை இல்லை இல்லை… நிச்சயமாக இல்லை… எனக்குக் கந்தழிதரனைப் பிடிக்காது. நிச்சயமாகப் பிடிக்காது… எனக்கு அவன் மீது இருப்பது வெறுப்பு… வெறுப்பு மட்டும்தான்…’ என்று பிடிவாதமாக எண்ணியவாறு திரும்பிக் கதவில் நெற்றியை முட்டி, நின்றிருந்தவளுக்கு ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது.

‘அவள் வாழ்வில் நடந்தவை பெரும்பாலான சம்பவங்களை மறந்துவிட்டாள். ஆனால் கந்தழிதரனுடனான நினைவுகள் இன்று வரை அழியவில்லை. அவனும் அவளுமாய் நடை பயின்றது. அவளை உப்பு மூட்டை சுமந்தது, அவளைத் துவிசக்கர வண்டியில் ஏற்றிப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தது. வயதுக்கு வந்ததும் அவனிடம் சென்று அழுதது…’ என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, அன்றிலிருந்து இன்று வரை அவனை மறக்காது நினைவில் இருப்பதை எண்ணி வியந்துபோனாள் அம்மேதினி. அவன் மீது அவளுக்கிருக்கும் வெறுப்புகூட, தன்னை விட்டு அவன் போராட்டத்திற்குப் போனது மட்டுமே.

‘அவளுக்குத் தந்தை மீது மட்டற்ற அன்பு இருக்கிறது. ஆனால் இதுவரை அவர் நினைவில் வந்ததை விடக் கந்தழிதரன் நினைவில் நின்றதுதானே அதிகம். அவரிடம் இல்லாத நெருக்கம் அவனிடத்தில் அவளுக்கிருந்ததே அது ஏன்? அதுவும் குழந்தைப் பருவம் முதல் அவன் என்றால் அவளுக்கு உயிராயிற்றே… ஏன் தந்தைவழியும் சரி, தாய் வழியும் சரி அவளுக்குத் தோதான ஆண் நண்பர்கள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் இவன் என்றால் மட்டும் பாதுகாப்பாக உணர்வாளே. இவன் என்றால் மட்டும் உள்ளம் தைரியமாகச் சதிராடுமே. அதற்குக் காரணம் என்ன?

இவ்வளவு ஏன்? சற்று நாட்களுக்கு முன்பு கந்தழிதரனுக்கு அன்னை திருமணம் பேசியது தன்னை மனதில் வைத்துதான் அன்னை பேசுகிறார் என்று பெரிதும் எதிர்பார்த்தாளே, அது ஏன்…? அவனுக்காகப் பார்த்த பெண் தானில்லை அது ரோகிணி என்று தெரிந்தபோது நெஞ்சமெல்லாம் வெடித்ததே… பொறாமையில் உடலே அதிர்ந்ததே. அதுக்குக் காரணம் என்ன…?’ என்று எண்ணியவளுக்கு ஏனோ எல்லாமே குழம்பிப்போன உணர்வு.

‘கடவுளே… எனக்கு என்னவாகிவிட்டது…’ என்று தனக்குள் முனங்கியவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது.

‘கந்தழிதரனை அத்தனை சுலபத்தில் கைவிட முடியாதென்று.’

‘அப்படியானால் அவன் மீது அவளுக்கிருப்பது பாசமா? இல்லை அதையும் தாண்டி வேறு ஏதாவதுமா?’ நினைத்தபோதே அதிர்ந்து போனாள் அம்மேதினி.

‘இல்லை… இல்லை… அவன் மீது அவளுக்கிருப்பது அக்கறை… வெறும் அக்கறை.. அதைத் தவிர வேறு எதுவுமில்லை…’ என்று உறுப்போட்டவாறு கால்கள் நடுங்கப் படுக்கையில் சென்று அமர்ந்தவளுக்கு ஏனோ நெஞ்சை முட்டிக்கொண்டு காற்று நிறைந்திருப்பது போலத் தோன்றியது.

What’s your Reaction?
+1
17
+1
2
+1
5
+1
2
+1
1
+1
1
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

12 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 15

(15)   மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி...…

3 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)   அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 3

(3) அன்றைய முக்கிய வகுப்புகளை முடித்துக்கொண்டு மதியம் போலப் புறப்பட்ட விதற்பரைக்கு, ஏனோ சலிப்புத் தட்டியது. எப்போதும் அவள் கூட வரும் கதரின்…

1 week ago