Categories: Ongoing Novel

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 8/9

(8)

பெரும் சீற்றத்துடன் ஜன்னலருகே நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்த ஏகவாமனனின் செவியில் தொப் என்று விடும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தான்.

வாடிய மலராகத் தரையில் கிடந்தவளைக் கண்டு, என்றுமில்லாத பதற்றம் அவனை ஆட்கொள்ள நிலத்திலே சரிந்து கிடந்தவளை இரண்டெட்டில் நெருங்கிக் கால்மடித்து அமர்ந்தவன் அவளைத் தன்பக்கம் திருப்புவதற்காகக் காரத்தைக் கொண்டு சென்றான்.

ஆனாலும் அவளைத் தொடத் தயக்கமாக இருந்தது. ‘இவள் உண்மையாகவே மயங்கி விழுந்துவிட்டாளா இல்லை… நடிக்கிறாளா?’ என்கிற சந்தேகம் வேறு எழுந்தது. யோசனையுடன் மறுபக்கம் சார்ந்திருந்த அவள் முகத்திற்கு முன்பாகச் சொடக்குப் போட்டான். அசைவில்லை. தயக்கத்துடன் சரிந்திருந்த முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பிப் பார்த்தான். மூடியிருந்தன சிப்பி விழிகள். முகம் வேறு இரத்தப் பசையற்று வெளிறிப்போயிருந்தன.

மார்புகள் ஏறி இறங்குகிறதா என்று பார்த்தான். இல்லை. தன்னையும் மறந்து அவளுடைய கழுத்தில் தன் கரம் பதித்து நாடித்துடிப்பை அவதானிக்க முயன்றான். மெதுவாகத் துடிப்பது தெரிந்தது. நிம்மதியுடன் பெருமூச்சு விட்டவன், முகத்தை மறைத்திருந்த கலைந்த கூந்தலைப் பட்டும் படாமலும் ஒற்றை விரலால் ஒதுக்கிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

அவனையும் மீறி விழிகள் அவள் முகத்தில் மட்டுமல்லாது அவள் உடல்வரை பயணித்தன. பிறை நெற்றியில் திருத்தமான வில் போன்ற இமைகள். மூடியிருந்தாலும் சற்று அதைத்த நீண்ட விழிகள். சங்குக் கழுத்து. அவளுக்காகவே செதுக்கிய மேடுகளும் பள்ளங்களும். சடார் என்று விழுந்ததால் ஒதுங்கியிருந்த சேலையில் தெரிந்த உடுக்கை இடை… தொடரும் பளிச்சிட்ட வெண்ணிற ஒட்டிய வயிறு. கூடவே அடிவயிற்றின் ஓரமாகப் பொட்டு வைத்தாற்போலக் கரிய மச்சம். ஏனோ ஏகவாமனால் அந்தக் கரிய மச்சத்திலிருந்து தன் விழிகளை விலக்கவே முடியவில்லை.

இப்படித் தன்னிலை கேட்டிருக்கும் பெண்ணை, பார்ப்பது தவறு என்று புத்திக்குத் தெரிந்தது… ஆனால் மனதுக்கு…? அது அவள் லாவண்யங்களைப் பார்ப்பேன் என்று ஆர்ப்பாட்டமல்லவா செய்கிறது… இதுவரை எந்தப் பெண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதவன், முதன் முறையாக ஒரு பெண்ணின் அங்கங்களை, சூழ்நிலை மறந்து, காலம் மறந்து, பார்த்துக்கொண்டிருந்தான்.

மீண்டும் விழிகளை மேலே எடுத்துச் சென்று முகத்தில் பதியவைத்தான். தன்னையும் மீறி வாடியிருந்த முகத்தை வருடுவதற்காக மறுகரத்தைக் கொண்டுபோனான். அப்போதுதான் செய்ய விளைந்த காரியம் புரிய, வேகமாகத் தன் கரத்தை இழுத்துக்கொண்டவனுக்கு அவளை என்ன செய்வதென்று புரியவில்லை.

அப்படியே விடுவதா, இல்லை தூக்கி சோஃபாவில் படுக்க வைப்பதா…? தனக்குள் பட்டிமன்றம் நடத்தியவன் அவளைத் தூக்குவதற்காகத் தன் கரங்களைக் கொண்டு சென்றான். ஆனால் கரங்கள் இடையிலேயே தடுத்து நின்றன. ஏனோ அவளைத் தொட்டுத் தூக்க மெல்லிய தயக்கம் ஏற்பட்டது. கரங்களைக் கொண்டு செல்வதும் இழுப்பதுமாக இருந்தவன், ஏதோ முடிவெடுத்தவன் போல அவளைத் தன் கரங்களில் அள்ளிக்கொண்டான். அள்ளியவனுக்குத் தன்னையும் மீறி அவள் பாரத்தைத் தன் நெஞ்சில் சுமந்தவனுக்கு அவளுடைய உடலின் கனம் அவனை யோசிக்க வைத்தது.

ஏதோ பஞ்சுப்பொதியைத் தூக்குவது போலத்தான் இருந்ததன்றி, ஒரு பெண்ணைத் தூக்கியதுபோல அவனுக்குத் தோன்றவேயில்லை.

கரங்களில் கிடந்தவளைக் குனிந்து பார்த்தான். மீண்டும் அவள் உருவம் பெரும் பாதிப்பை அவனுக்கு விளைவிக்கத் தன்னையும் மறந்து உதடுகளைக் கடித்தவாறு நின்றான் ஏகவாமன். மெதுவாகச் சோஃபா நோக்கி நடக்க இப்போது அவளுடைய முகம் சரிந்து அவன் மார்பில் பதிய, என்றுமில்லாத வகையில் அவனுடைய உடலில் ஒருவித நடுக்கம் ஓடியது. புரியாத ஒருவித புது உணர்வில் தவித்துப்போனான் ஏகவாமன்.

எங்கே வலித்துவிடுமோ என்று அஞ்சியவன் போல மெதுவாக அவளைக் கிடத்திவிட்டு ஒதுங்கி இருந்த சேலையை இழுத்துச் சரியாக்கிவிட்டு நிமிர்ந்தவனிடம் மீண்டும் தடுமாற்றம்.

‘சே… என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறேன்…’ என்று தன்னையே கடிந்தவன், சற்றுத் தள்ளியிருந்த சிறிய மேசையில் கிடந்த தண்ணீர் போத்தலை எட்டி எடுத்து, அதிலிருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க, அவள் விழிகளில் மெல்லிய அசைவு.

இப்போது அவளுடைய கன்னத்தைத் தட்டியவன்,

“அலர்… வேக்கப்…” என்றான். முதன் முறையாக அவளுடைய பெயரைச் சுருக்கிக் கூறுகிறான் என்பது கூட அவனுக்குப் புரியவில்லை. ஏன் அவள் பெயரைச் சொல்லி அழைத்தோம் என்று கூட அவன் உணரவில்லை. மீண்டும் அவள் முகம் நோக்கிக் குனிந்து,

“அலர்… விழித்துக்கொள்…” என்று அழைக்க, அவனுடைய அழுத்தமான ஆழமான குரல் செவிப்பறைக்கூடாகச் சென்று புத்தியை எட்ட, புத்தி இதயத்திற்கு வேகமாகத் துடிக்குமாறு கட்டளையிட, அதன் கட்டளையை ஏற்றுக்கொண்டதாக இதயம் மிக வேகமாகத் துடிக்கத் தொடங்கிய நேரம், தன்னுணர்வு பெற்று, மெதுவாக விழிகளைத் திறந்தாள் அலரந்திரி.

திறந்த விழிகளுக்குள் மிக நெருக்கத்தில் தெரிந்த அவனுடைய முகத்தைக் கண்டதும், பதறிக்கொண்டு எழுந்தமர்ந்தவள், தன் இரு கால்களையும் மடித்துத் தன் மார்போடு கட்டிக்கொண்டு அவனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

உடனே அவள் நிலையைப் புரிந்துகொண்டவனாக, அவள் புறமாகக் கரத்தை நீட்ட, அவளோ அக்கரம் தன்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியவளாக மேலும் ஒடுங்க,

“ஹே… இட்ஸ் ஓக்கே… நீ மயங்கி விழுந்துவிட்டாய்… ஹெள ஆர் யு நவ்…” என்றான் மென்மையாக.

தன் எச்சியைக் கூட்டி விழுங்கியவளுக்கு, அப்போதுதான் மயங்கி விழுந்தது நினைவுக்கு வந்தது. எப்படிச் சோபாவிற்கு வந்தோம் என்பதை யூகிக்கப் பிரமாதமான மூளை வேண்டியதில்லையே. அதை நினைக்கும்போதே பெரும் சங்கடமாகிப்போனது அலரந்திரிக்கு. சே இப்படி இவன் முன்னால் விழுந்து வைத்துவிட்டோமே… என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்… சும்மாவே அவள்மீது அவனுக்கு நல்ல அபிப்பிராயம் எதுவும் இல்லை. இதில் விழுந்து வேறு வைத்துவிட்டாள்… வேண்டும் என்று செய்ததாக நினைப்பானோ… எல்லாம்  இரண்டு நாட்கள் சாப்பிடாததால் வந்த வினை… என்று தன்னையே கண்டித்தவள், சற்று ஆழ மூச்செடுத்து

“சாரி…” என்றாள் சத்தம் வராத குரலில்.

“இட்ஸ் ஓக்கே…” என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

“நீங்கள்… சொன்னது உண்மையா?” என்றாள். ஏகவாமனோ அவள் எதைக் கேட்கிறாள் என்று புரியாமல் உற்றுப்பார்க்க,

“உங்கள் தம்பி… இற… இறந்தது…” என்று நினைவு படுத்தியவள், அவன் முகம் போன போக்கைக் கண்டு தன் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அமைதி காக்க, அவனோ அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது திரும்பியவன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கைப்பேசியை எடுத்து ஏதோ இலக்கங்களகைத் தட்டி, யாரிடமோ எதையோ சொன்னான்.

அவன் தன் கேள்விக்குப் பதில் கூறாது, தவிர்ப்பதைக் கண்டவளுக்கு இப்போது மெல்லிய எரிச்சல் பிறந்தது. எதனை முக்கியமான கேள்வியைக் கேட்கிறாள். ஆனால் இவன்!

“கேட்டேனே… உங்கள் தம்பி…” என்று சற்று சுருதியைக் கூட்டி கேட்க, கடும் சீற்றத்துடன், சடார் என்று அவள் பக்காமாகத் திரும்பியவன்,

“இதோ பார்… முடிந்து போன அத்தியாயத்தை மீண்டும் பிரித்துப் படிப்பதை நான் விரும்பவில்லை. தவிர என் தம்பியைப் பற்றி அறியும் தகுதியோ, இல்லை உரிமையோ உனக்குக் கிடையாது…” என்று அழுத்தமாகக் கூற, இவளுக்குத்தான் யாரோ முகத்தில் அறைந்தது போல ஒரு வலி தோன்றியது.

கூடவே அவன் சொல்வதிலிருந்த நியாயமும் புரிந்தது. அவள் யார் அவர்களுக்கு…? இடையில் உரிமையென்று வந்தவன் இடையிலேயே கலைந்து போனான். கடந்து செல்லும் மேகங்கள்போல அவனும் அவளுடைய வாழ்வை விட்டுக் கடந்து சென்றுவிட்டான். அவனுடைய நினைவுகளும் காலப்போக்கில் மெல்ல மெல்லக் கலைந்துபோகும்… மறைந்துபோகும்… இனி எதற்காக அவனைப் பற்றி எண்ணிக் கலங்கவேண்டும்… எதோ விதிவசத்தால், முற்பிறப்பில் பெற்ற கடனை இந்தப் பிறப்பில் வட்டியும் முதலுமாக வாங்குவதற்காக அவளுடைய கணவனாகக் கொஞ்ச காலம் வந்திருக்கிறான். கடன் கொடுத்து முடிந்ததும் போய்வருகிறேன் என்று கூடாகக் கூறாமல் சென்று விட்டான்… இனி அவனுக்காக வருந்தி எந்தப்பயனும் இல்லையே… சற்று நேரம் அமைதியாக இருந்தவளுக்கு இனி எதற்காக அங்கே இருக்கிறோம் என்று தோன்றியது.

எதைத் தெரியவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாளோ, அதைத் தெரிந்துகொண்டாள். எதை அறியவேண்டும் என்று விரும்பினாளோ அதையும் அறிந்துவிட்டாள். தெரியாத கேள்விக்கு இப்போதே பதில் கிடைத்துவிட்டது… இனி… அவள் தன் பயணத்தைத் தொடரவேண்டியதுதான்… யாருமில்லாத பயணம்… அவள் மட்டும் தனியாளாய்… நினைக்கும் ஒரு வித அச்சதம் தோன்றியது.

தனிமை எத்தனை பயங்கரமானது. பேச ஆளில்லாமல், பழக எவருமில்லாமல், இருட்டில் நான் மட்டும் தனியாளாய், எந்த நேரம் எந்தப் பூதம் வருமோ என்று அஞ்சி, தனி ஒருத்தியாகவே அவற்றை ஜெயித்து… முடியுமா என்னால்? மெல்லிய குமிழ் விளக்குகூட அச்சம் கொடுக்கும்… எங்கோ கேட்கும் மெல்லிய சத்தம் கூட, வீட்டுக் கதவை யாரோ ஒரு கயவன் சுரண்டுகிறானோ என்று நடுக்கம் தோன்றுமே… அதிலிருந்து எப்படித் தப்பப் போகிறாள்… அவளால் தப்ப முடியுமா?’’ என்று எண்ணியவளுக்கு நெஞ்சுக்கூடு காலியானது போலத் தோன்றியது.

கூடவே தன் நினைவை எண்ணிச் சிரிப்பும் வந்தது.

பிறக்கும் போதே தனியாகத்தான் பிறக்கிறோம் இறக்கும் போதும் துணையின்றித்தான் இறக்கப்போகிறோம். இறப்புக்கும் பிறப்புக்கும் இடைப்பட்ட இந்தக் காலத்தில் எதற்குத் துணை? இனி அவளுக்கு அது வேண்டியதில்லை. அவளால் சமாளிக்க முடியும். தனியொருத்தியாக இந்த உலகத்தைச் சமாளிக்க முடியும். சமாளிப்பாள்…’ என்று உறுதியுடன் எண்ணியவள் வேகமாக எழுந்தாள். பாழாய்ப் போன சோர்வு அவளைத் தள்ளாட வைத்தது.

அதைக் கண்டு வேகமாக நெருங்கிப் பற்றப்போன ஏகவமனை ஒற்றைப் பார்வையால் தடுத்தவள், வாசல் நோக்கி நடக்கத் தொடங்க, பொறுமையற்ற மூச்சுடன்,

“எங்கே போகிறாய்?” என்றான்.

அவனுடைய அழுத்தமான குரல் அவள் செவிப்பறையைத் தொட்டுச் செல்ல, மீண்டும் இதயம் படபடத்தது. அவனுடைய குரலைக் கேட்டால் மட்டும் இப்படி உள்ளம் பதறுகிறதே… ஏன்? அதை ஆராயப் பிடிக்காதவளாக, அவனை நிமிர்ந்து பார்த்து,

“நா… நான் எங்கே போவேன்… வீட்டிற்குத்தான்” என்றவாறு மேலும் நடக்கத் தொடங்க,

“நில்…” என்றான் அவன். அவளோ, ‘நின்றால் மட்டும், எல்லாம் சரியாகிவிடுமா என்ன?’ ஏளனத்துடன் நினைத்தவள், மேலும் தன் நடையைத் தொடங்க பொறுமையற்ற மூச்சுடன் அவளை நெருங்கி, அவளுடைய மேல் கரத்தைப் பற்றித் தடுத்தான் ஏகவாமன்.

அதிர்ச்சியுடன், தன் காரத்தைப் பற்றியிருந்த அவனுடைய பலம் பொருந்திய கரத்தை வெறித்துப் பார்த்தவள், குழப்பத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்து,

“எ… என்ன இது… கையை விடுங்கள்…” என்றாள் கடுமையாக.

அவனோ பற்றிய கரத்தை விடும் எண்ணமேயில்லாதவனாக,

“முதலில் உட்கார்… உணவு வரவழைக்கிறேன்… சாப்பிட்டுவிட்டுப் போ…” என்றான் அதிகாரமாக.

உணவா… அதுவும் இவன் கரத்தால் கொடுக்கப்படுகின்ற உணவா… அதை உண்டுதான் உயிர்வாழ வேண்டும் என்றால், அவளுக்கு அந்த உயிர் வேண்டியதில்லை. நிச்சயமாக வேண்டியதில்லை. வெறுப்பும் ஆத்திரமும் போட்டிப்போட, அவனை வெறித்துப் பார்த்தவள் ஏளனத்துடன் சிரித்து,

“உங்கள் ஆஸ்திக்கும் அந்தஸ்திற்கும், வெறும் மூன்றாம் தர மனிதனுக்கு உணவு படைப்பதா… சே சே… உங்கள் மரியாதை என்னாவது?” என்று ஏகாதலமாகக் கெட்டவள், பின் கம்பீரமாய் நிமிர்ந்து நின்று,

“உங்கள் வீட்டு உணவை உண்டுதான் நான் உயிர் வாழ வேண்டுமானால் அந்த உயிர் எனக்குத் தேவையில்லை… அதைவிட, விஷத்தைச் சாப்பிடுவேன்…”என்று கடுமையாகக் கூறியவள், அவன் பதிலையும் எதிர்பார்க்காமல் அவன் கரத்தை உதறி விடுவித்து இருந்த பலம் முழுவதையும் ஒன்றிணைத்து, வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

அவனோ நின்ற இடத்திலிருந்து அசையாது அவள் செல்வதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளுக்கு வேண்டாம் என்றால் அவனுக்கென்ன வந்தது? போ… நன்றாகப் போ… அதுதான் எனக்கும் வேண்டியது… போகும் நீ இனி ஒரு போதும் என் விழிகளில் தட்டுப்பாட்டு விடாதே…’ என்று உள்மனம் எண்ணினாலும், அவனையும் அறியாது இன்னொரு மனம் ஒருவித ஏமாற்றத்தில் திளைத்தது. அவள் பலவீனமும், பசியும் இவனைப் பலவீனப்படுத்தியது. ஓடிச்சென்று தடுத்து உணவு கொடுக்கவேண்டும் என்று நெஞ்சம் பரர்பாத்தது. ஆனாலும் அசைந்தானில்லை. சற்று நேரம் சிலையென நின்றவன், சோர்வுடன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

சுருள் குழலை வாரி விட்டவன் கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தான். பின் மெதுவாகக் கரங்களைக் கீழே இறக்கும்போதே விழிகளைத் திறக்க அவை நன்கு சிவந்திருந்தன. அது அவன் உள்ளத்தில் கொந்தளித்த நெருப்பின் சிவப்பா, இல்லை வலியின் சிவப்பா இல்லை, ஏமாற்றத்தின் சிவப்பா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

மெதுவாக எழுந்தமர்ந்தவன், சற்று முன்னால் குனிந்து மேசையின் இழுப்பறையைத் திறந்து, சட்டமிட்ட படமொன்றை வெளியே எடுத்தான். அதில் ஜெயவாமன் கருனை பொங்கும் சிரிப்புடன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு நின்றிருந்தான்.

பெரும் தவிப்புடன் அந்தப் படத்தைப் பார்த்தவனின் கரம், மெல்லிய நடுக்கத்துடன் வருடிக் கொடுக்க, முதன் முறையாக அவனுடைய விழிகள் கலங்கின. எதுவோ தொண்டையில் அடைக்கச் சிரமப்பட்டு விழுங்கியவனின் தொண்டை கமறியது. பிடிக்காத அந்த வலியில் சிக்கப் பிடிக்காதவனாக, அவசரமாக அதை மீண்டும் இழுப்பறையில் வைத்து மூடிவிட்டு ஆழ மூச்செடுத்தவனுக்கு, மீண்டும் சுயத்திற்கு வரச் சற்று நேரம் எடுத்தது.

பிடிக்காத அந்த வலியிலிருந்து விடுபட விட்ட வேலையைத் தொடர முயன்றான். ஆனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஜெயவாமனும், களைத்து ஓய்ந்த அந்தப் பெண்ணின் முகம்தான் நினைவில் வந்து இம்சித்தது.

அவள் உண்மையாகவே என் தம்பியின் மனைவிதானா? அந்த விழிகள்… அவை பொய் சொல்வது போலத் தெரியவில்லையே… என் விழிகளையே தைரியமாக ஏறிட்டனவே…’ என்கிற யோசனை எழ அதுவரை எதையோ எழுதிக்கொண்டிருந்தவன் தன் கரத்திலிருந்த பேனாவைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டுக் கதிரையில் சாய்ந்தமர்ந்து, வலித்த நெற்றியை வருடிக் கொடுத்தான்.

சொத்துக்கு ஆசைப்பட்டு வந்தாளா? இல்லை என்னை ஏய்க்க அனுப்பப்பட்டவளா? ஒரு வேளை அவள் சொல்வது போலப் பத்து வீதம் உண்மையாக இருந்தால், அது தெரியக் கூடாதவர்களுக்குத் தெரிந்தால், இவளுடைய நிலை என்ன?”காட்…” என்றவாறு பதறி எழுந்தவன், விரைவாக வெளியே வந்து,

“சேது…” என்று அலறினான். அவனுடைய அலறலில் வெளியே யாருடனோ பேசிக்கொண்டிருந்த சேது அலறியடித்துக்கொண்டு உள்ளே ஓடி வந்தான்.

“அண்ணா… என்னவாகிவிட்டது…” என்று பதற, அப்போதுதான் இயல்புக்கு மீறி நடந்துவிட்டோம் என்பதைப் புரிந்தவனாக,

“ந… நத்திங்… ஜெஸ்ட்… ஐ… நீட்…” என்று தடுமாறித் தன்னைச் சமப்படுத்தி, திடப்படுத்தி”

“சேது… ஐ நீட் ஹெர் ஃபுள் டீடேய்ல்ஸ் அஸ் சூன் அஸ் பாசிபிள்…” என்றான் கட்டளையாக.

அடுத்த மூன்று மணி நேரத்தில் அவனுடைய தொலைநகல் இயந்திரத்திலிருந்து தாள்கள் வெளியே வர, அவசரமாக எடுத்துப் பார்த்தான். கவனமாக அதைப் படித்தவனின் உதடுகளில் பெரும் ஏளனத்துடனான புன்னகை மலர்ந்தாலும், அவனுடைய முகம் பெரும் கோபத்தினால் கறுத்துச் சிவந்து போனது.

தன் கரத்திலிருந்த தாள்களை மேசையில் தூக்கிப் போட்டவன்,

“ஹெள டெயர்… இஸ் ஷி…” என்றபோது அவனுடைய விழிகள் மட்டுமல்ல, வெளியே விட்ட மூச்சுக் காற்றுகூடப் பயங்கரமான சீற்றத்துடனேயே வெளியே வந்தன.

(9)

அலரந்திரிக்கு இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைத்தது. அரக்கப் பரக்க ஓடத்தேவையில்லை. முன்பு காருண்யன்… (இன்னும் அவளால் அவனை ஜெயவாமன் என்று எண்ண முடியவில்லை.) இருந்தபோது அரக்கப் பரக்க ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கும். சொல்லப்போனால் சாப்பிடக் கூட நேரம் கிடைக்காது.

அவனுடைய தேவைகளைப் பார்த்து, அவசர அவசரமாகக் குளித்து, வேலைக்குப் போய், அதன் பின் காருண்யனுக்கு மருந்து கொடுப்பதற்காக விழுந்தடித்து வீட்டிற்கு ஓடிவந்து… சாப்பாட்டைக் கரைத்துத் தொண்டையில் போடப்பட்ட குழாயினூடாக ஊற்றி, அசுத்தமாக்கியிருந்த படுக்கை விரிப்புக்களைக் களைந்து துவைத்தது மாற்றி, மீண்டும் படுத்த நிலையிலிருக்கும் அவனைச் சுத்தப்படுத்தி, என்று நிறைய வேலைகள் இருந்தன.

இப்போதெல்லாம் அதற்கு அவசியமில்லை. பதட்டப்படாமல் வேலைக்குப் போய், அவசரமில்லாமல் வீட்டிற்கு வந்து, அவள் ஒருதிக்குமாக மட்டுமே சமைத்து… சிலவேளைகளில் அலுப்புடன் சமைக்காமலும் படுத்து விடுவாள்.

அவளுடைய கொஞ்சச் சம்பளம் கூட இப்போது தாராளமாகப் போதுமானதாக இருந்தது. முன்பு எல்லாம் காருண்யனின் மருத்துவச் செலவுக்கே முழுப் பணமும் போய்விடும். இப்போது அந்தச் செலவும் கிடையாது. அதனால் ஓரளவு பணம் அவளால் சேர்க்க முடிந்தது. இப்படியே போனால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் இப்போது அதற்கும் கேடு காலம் வந்துவிடும் போல் இருந்தது. அவள் வேலை செய்யும் தையல் தொழிற்சாலையை யாரோ வாங்கப்போகிறார்களாம். அதனால் அங்கே வேலைசெய்யும் பல தொழிலாளர்களுக்கு வேலை நீக்கம் செய்யப்படும் அபாயம் இருப்பதாகப் பேசிக்கொண்டனர். யார் யாருக்கு எந்த நேரத்தில் கழுத்துக்குக் கத்திவருமோ என்கிற அச்ச நிலையில் அனைவரும் விழி பிதுங்கத் தொடங்கியிருந்தனர். அந்த விழிபிதுங்கியவர்களில் அலரந்திரியும் ஒருத்தி.

மற்றவர்களுக்கு எப்படியோ, இவளுக்கு இந்த வேலையை விட்டால் வேறு வேலை செய்வதற்கான தகுதி இல்லையே. இந்த வேலைக்கே யார் யாருடையதோ கை காலைப் பிடித்துத்தான் எடுக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் இன்னொரு இடத்தில் வேலை தேடுவதென்றால்… நினைக்கும்போதே ஆயாசமானது.

சில வேளைகளில் யோசிக்கும்போது விரக்திதான் மிதமிஞ்சித் தோன்றும். அவள் யாருக்காக இருக்கவேண்டும்? காருண்யனின் மரணச் செய்தியை அறிந்து ஒரு முறை சிற்றன்னையும், தந்தையும் வந்துவிட்டுப் போனார்கள். அவர்களிடம் காருண்யன் யார் என்கிற உண்மையை அவள் கூறவில்லை. கூறித்தான் என்ன பயன்? இறந்த காருண்யன் எழுந்து வரப்போகிறானா, இல்லை அவள் அவனுடைய மனைவிதான் என்பதை அந்த ஏகவாமன் நம்பப் போகிறானா? எதுவுமே கிடையாதே.

இப்போது அவள் தனித்தீவு. யாரும் இல்லாத தனித்தீவு. அவளுக்கு எது நடந்தாலும் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. ஏன் என்று கூட வருந்தப்போவதில்லை. இந்த நிலையில் அவளுக்கு இருக்கக்கூடிய நிம்மதியே வேலைக்குப் போய் வருவது ஒன்றுதான். இப்போது அதற்கும் வழியில்லாத நிலைமை வரப்போகிறதே என்பதை என்னும்போது தாள முடியவில்லை.

இதற்கிடையில் அவளுடைய தந்தை அருணாசலம் திடீர் என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்துவிட்டார். பெரிய பணக்காரருக்கு வரவேண்டிய வருத்தம் அவருக்கு வந்து சேர்ந்தது. அதுதான் ஹார்ட் அட்டாக். தன் கையிலிருந்த அத்தனை சேமிப்பையும் வழித்துத் துடைத்துச் சிற்றன்னையின் கையில் கொடுத்துவிட்டு வந்தாள்.

அவளுக்கும்தான் பணம் எதற்கு. அவள் ஒருத்தி எப்படியோ தன் பிழைப்பைப் பார்த்துக்கொள்வாள். ஆனால் சித்தி, அவளுக்குப் பிறந்த குழந்தைகள். அவர்களின் வயிற்றுப் பாட்டைப் பார்க்கவேண்டுமே.

இப்போது காருண்யன் இறந்துபோனதால் அவளைத் தங்களுடன் வந்து தங்கும்படி சிற்றன்னை அழைப்பு விடுத்திருந்தாள். உன்மையான அன்போடு அழைத்திருந்தால் அவள் யோசித்திருப்பாளோ என்னவோ… ஆனால் அவர்கள் அழைத்தது பிரத்தியேகமாகக் கிடைக்கக்கூடிய அந்த வருமானத்திற்காக அல்லவா.

இத்தனை காலமாகத் தொலைந்து போன அன்பு திடீர் என்று முளைத்ததற்குக் காரணம் அவளுக்குத் தெரியாதா என்ன? வேலை இருக்கும் வரைக்கும் வருந்தி அழைப்பவர்கள், வேலை போய்விட்டது என்பதை அறிந்தால், அழைத்த வாய் அவளைத் துரத்தவும் தயங்காதே. அதனால் அவர்களுடன் போய்ச் செருகி நிற்பதை அவள் அறவே வெறுத்தாள். அதனால் இதமாகவே மறுத்தும் விட்டாள். அது சிற்றன்னைக்குப் பிடிக்கவில்லைதான். அதற்காகப் பார்க்கப்போனால், அவளுக்கிருக்கும் கொஞ்ச நிம்மதியும் பறிபோகும். அதற்கு இவள் தயாராக இல்லை.

அன்று அவள் வேலைக்குப் போனதுமே அந்த இடி போன்ற செய்தியை அறிந்துகொண்டாள். அவர்கள் நினைத்தது போலவே பழைய நிர்வாகம் கைவிடப் புதிய நிர்வாகம் அந்தத் தொழிற்சாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டது. அன்று அந்தத் தொழிற்சாலையைப் புதிதாக வாங்கியவர் தொழிலாளர்களையும் இடத்தையும் மேற்பார்வை பார்க்க வருவதாகக் கூறி இருந்ததால், என்றுமில்லாமல் அந்தத் தொழிற்சாலை சுத்தமாகப் பளிச்சிட்டது.

எல்லாத் தொழிலாளர்களும், வளமைக்கு மாறாக முன்னதாகவே தொழிற்சாலையில் முகாமிட்டிருந்தனர். எந்த நேரமும் முதலாளி வரலாம்.

“அம்மா… அலரந்திரி… உள்ளே வெட்டிய துணிகள் இருக்கிறது எடுத்துவாம்மா…” என்று கூற சரி என்று தலையாட்டிவிட்டுத் துணிகள் வெட்டும் இடம் நோக்கிச் சென்றாள்.

உள்ளே போனால் சட்டை தைக்கும் துணிகளை வெட்டி, அதனோடு இணைந்த இதர பாகங்களையும் ஒன்றிணைத்துச் சுருட்டிக் கட்டி பத்துப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு பெட்டிக்குள் குறைந்தது இருபத்தைந்தாவது இருக்கும். போதாததற்கு அந்தத் துணிகள் சற்றுக் கனமானவை. அவள் ஒருத்தியாகத் தூக்க முடியாது. விரைந்து சென்று தள்ளு வண்டியை எடுத்து வந்தவள், பெட்டியைச் சிரமப்பட்டுத் தூக்கி வண்டியில் வைக்கும்போது, அவள் படும் சிரமத்தைக் கண்டு, அங்கே வேலை செய்யும் நந்தன் கைகொடுக்க, எப்படியோ அத்தனை பெட்டிகளும் அந்தத் தள்ளுவண்டியில் ஏற்றியாயிற்று.

பெட்டிகள் ஏற்றப்பட்டுவிட்டன. தள்ள வேண்டுமே. போதாததற்குத் தள்ளுவண்டியின் சில்லுகள் தம் இஷ்டத்திற்கு ஒவ்வொரு பக்கமாக இழுபட, அவசரமாக நந்தனுக்கு நன்றி உரைத்து விட்டுத் தன் முழுச் சக்தியையும் பயன்படுத்தித் தள்ளத் தொடங்கினாள் அலரந்திரி.

பெட்டிகள் பார்வையை மறைக்க எட்டி எட்டிப் பாதையைப் பார்த்தவாறு வண்டியைத் தள்ளத் தொடங்கியவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தள்ளுவண்டி இன்னொரு பக்கமாக இழுக்கத் தொடங்கியது.

 

பார்வையைப் பெட்டிகள் மறைத்ததால் நடப்பதற்கே சிரமமாக இருந்தது. நேராகச் சென்று வலப்புறம் திரும்பினால் போதும். அதன் பின் ஒவ்வொருவருக்கும் பெட்டியிலிருந்து துணியை வினியோகித்தால் தைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

வேகமாகச் சென்றவள் வலப்புறமாகத் திரும்பினாள். அந்த நேரம் பார்த்து யாரோ முன்புறம் நடந்துவர, இவள் அதைக் கவனிக்கவில்லை.

சென்ற வேகத்திலேயே அவள் தள்ளிய வண்டி, முன்னால் வந்துகொண்டிருந்தவனின் மீது மோதுப்பட, தள்ளுவண்டியிலிருந்த பெட்டிகள் கீழே சரியத் தொடங்கின.

தன்னை மறந்து வாய் பிளந்தவள், யாரோடு முட்டுப்பட்டோம் என்பது புரியாமலே, கீழே விழுந்திருந்த பெட்டியைப் பயத்துடன் பார்த்தவாறு

“ஓ… ம… மன்னித்துவிடுங்கள் சார்…” என்று கூறியவாறு விரைந்து சென்று, கீழே விழுந்திருந்த துணிகளைப் பொறுக்கிச் சரிந்திருந்த பெட்டிகளில் போடத் தொடங்கினாள்.

“என்னம்மா நீ… கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அனைத்தையும் கீழே போட்டுவிட்டாயே… அறிவில்லை… இப்போது இந்தத் துணிகளில் தூசு பட்டிருக்குமே… கொஞ்சமாவது புத்தியைப் பாவிக்கமாட்டாயா? நீயெல்லாம்…” என்று சீறிய மேலதிகாரியின் குரல் சடார் என்று திரும்பிப் பார்த்த அந்தப் புதியவனின் அக்கினிச் சீற்றப் பார்வையில் கப்பென்று அடங்கிப்போக, இவளுக்கோ மேலதிகாரியின் குரல் கேட்டுச் சர்வமும் நடுங்கிப்போனது.

கீழே துணிகளைப் போட்டுவிட்டோமே என்கிற வருத்தத்தைவிட, அவருடைய கடுமையான பேச்சு இதயத்தைக் குத்திக் கிழித்தது. முணுக் என்று கண்ணீர் கூட எட்டிப்பார்த்தது. அவர் தனிமையில் திட்டியிருந்தால் இத்தனை பாதிக்காது. அவருடன் வந்திருந்த புதியவன் பார்க்கும்போதே அவர் திட்டியதுதான் அவளை உறைத்தது. தவிர வேலை செய்தவர்கள் எல்லோரும் அவளையே வெறித்துப் பார்க்கப் பெரும் அவமானமாக இருந்தது. நிமிர்ந்து பார்க்காமலே,

“சா… சாரி சார்…” என்று கமறும் குரலில் கூறியவள் அவற்றை எடுத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டிருக்கும் போதே,

“ஏன் மிஸ்டர் சங்கரன்… இந்தப் பெண் தனியாக இத்தனை பெட்டிகளையும் கொண்டுவரவேண்டுமா? இந்த வேலைக்குச் சற்றுப் பலமுள்ள ஆண்களை அனுமதித்திருக்கலாமே…” என்று அந்தப் புதியவன் கேட்க, அந்தக் குரலில் கொஞ்ச நேரம் அசைவற்று நின்றாள் அலரந்திரி.

இந்தக் குரல்… இந்தக் குரல்… அந்த… அந்த ஏகவாமனின் குரல் அல்லவா? விதிர் விதிர்த்துப்போய்த் தலையைச் சடார் என்று நிமிர்த்திப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

அவன்தான். அவனேதான். அதே இராட்சசன் தான்… அதே திமிர், அதே அலட்சியத்துடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனும் தரையில் ஒற்றைக்கால் மடித்து அமர்ந்திருந்தவளைத்தான் அக்கு வேறு ஆணிவேராகப் பார்த்துக்கொண்டிருந்தான். முன்னைவிட இளைத்திருந்தாள். நெற்றி வெறுமையாக இருந்தது. கழுத்தில் மெல்லிய கறுப்புப் பாசிமணியிலான மாலை. கரங்களில் நகைகள் இல்லாமல் வெறுமையாக இருந்தது. நீண்ட விழிகளில் அதிகமான வலி தெரிந்தது. அவள்மீது மலையளவு சீற்றமும் ஏமாற்றமும் இருந்தாலும், ஏனோ அப்போது அவளை அந்தத் தோற்றத்தில் பார்க்க அவனுக்குப் பிடிக்கவில்லை.

“இல்லை சார்… இந்த வேலை செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்… இன்று வரவேண்டியவன் லீவு. அதுதான் இந்தப் பெண்ணையே செய்யச் சொன்னேன்…” என்றார் சங்கரன் சற்றுப் பதட்டத்துடன்.

‘இந்தப் பெண்… ஏன் இவளுக்குப் பெயர் கிடையாதா…’ என்று எரிச்சலுடன் எண்ணியவன், அதை வாய்விட்டும் கேட்டே விட்டான்.

“ஓ… அது வந்து…” என்று அவர் சொல்வதற்குள்ளாகவே, அத்தனை துணிகளையும் வாரிப் பெட்டியில் போட்டவள் பெட்டியைத் தூக்கித் தள்ளுவண்டியில் வைக்க முயல, அவனோ அவளை நெருங்கிச் சற்றும் தாமதிக்காமல் அவளுடைய மேல் கரத்தை ஒற்றைக் கரம் கொண்டு பற்றிச் சற்றுத் தள்ளிவிட்டுத் தானே குனிந்து அநாயசமாகப் பெட்டியைத் தூக்கித் தள்ளு வண்டியில் வைத்துவிட்டு விலக, அலரந்திரி மட்டுமல்ல மேலாளரும் அதிர்ந்துதான் போனார்.

 

அந்த இடத்தையே வாங்கியிருக்கும் புது முதலாளி சாதாரணத் தொழிலாளிக்கு உதவி செய்வதா…?

“ஐயோ சார்… என்ன இது… விடுங்கள் சார்… அந்தப் பெண்ணே அனைத்தையும் செய்துவிடுவாள்… நீங்கள் இந்தப் பக்கமாக வாருங்கள்… இங்கேதான் துணிக்குச் சாயம் போடும் இடம் இருக்கிறது…” என்று அவசரமாக அவனுடைய புலனைத் திசை திருப்ப முயல, அலரந்திரியோ அவன் கரம் பட்ட அதிர்வில் சற்று நேரம் மூச்சை எடுக்கக் கூட மறந்து அப்படியே நின்றிருந்தாள்.

அவன் எப்படி அவளைத் தொடலாம். அவனுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? சினம் எழுந்தாலும் ஒரு பக்கம் ஒரு வித குறுகுறுப்பு எழவே செய்தது. அங்கேயே நிற்க முடியாமல், தள்ளுவண்டியைத் தள்ள முயல அவனோ வண்டியைப் பற்றி நிறுத்திவிட்டுத் திரும்பிச் சங்கரனைப் பார்த்து,

“இவர்களுக்கு வேறு இலகுவான வேலையைக் கொடுங்கள் சங்கரன்… இதைத் தள்ளுவதற்கு வேறு யாரையும் பிடியுங்கள்…” என்று உத்தரவாகக் கூற,

“அது… யாரை அழைப்பது…” என்று தயங்கியவரின் முன்னால் பற்றியிருந்த வண்டியைத் தள்ளியவன்,

“ஒருவரும் இல்லையென்றால்… நீங்கள் தள்ளிச் செல்லுங்கள் சங்கரன்… எனக்கொரு ஆட்சேபனையும் கிடையாது…” என்றுவிட்டு முன்னேறச் சங்கரனோ வாய்பிளந்து மலங்க மலங்க விழித்தார்.

அவர் தள்ளுவண்டியைத் தள்ளுவதா… அவருடைய மரியாதை என்னாவது? அவசரமாகச் சுத்தவரப் பார்த்தவர், அங்கே போய்க்கொண்டிருந்த நந்தனைக் கூப்பிட்டு,

“நந்தா… இந்தா… இதைத் தள்ளிச் சென்று தைக்கும் இடத்தில் விடு…” என்றுவிட்டுத் திரும்பிக் கோபத்துடன் அலரந்திரியைப் பார்த்து,

“போ… போய்த் துணிகளை எல்லாருக்கும் தைக்கக் கொடு…” என்று தன் கெத்தை விடாமலே கூறிவிட்டு அவசரமாக ஏகவாமனின் பின்னே ஓடினார்.

வேகமாகத் திரும்பித் தைத்துக்கொண்டிருந்த பெண்களை நோக்கிப் போனாள். ஒவ்வொருவருக்கும் துணிகளை ஒப்படைத்துவிட்டுத் தன்னுடைய தையல் இயந்திரத்தின் அருகே வந்தவளுக்கு நூல் வைக்கப்படவில்லை.

சரிதான் அதை எடுத்துவரலாம் என்று உள்ளே சென்றவளுக்கு வெறும் பெட்டிதான் வரவேற்றது. அனைத்து நூலும் கொடுத்தாகிவிட்டது போல. இனி நூல் தேவையென்றால் புதுப்பெட்டியைத்தான் திறக்க வேண்டும்.

உடனே நூல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றவள், வேண்டிய நூல் பெட்டியைத் தேடத் தொடங்கினாள். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு இலக்கம் உண்டு. தைக்கும் துணியின் நிறத்தை வைத்து நூலின் நிறத்தைத் தேர்வு செய்வார்கள். தைக்கவேண்டிய துனிக்குரிய நூலைத் தேடிக்கொண்டு வந்தவள், அந்தக் குறிப்பிட்ட நூல் சற்று உயரத்தில் இருப்பது தெரிய, உடனே சேலையைத் தூக்கிச் செருகியவள், அங்கிருந்த ஏணியை எடுத்துச் சாய்த்துவிட்டுக் கடகடவென்று ஏறத் தொடங்கினாள். கிட்டத்தட்டப் பத்தடி ஏறியவள், பெட்டியை இழுத்து எடுக்கத் தொடங்க, அவளிருந்த பக்கமாக வந்துகொண்டிருந்தான் ஏகவாமன்.

அவனைக் கண்டதும் அவளையறியாமல் கால்கள் நடுங்கத் தொடங்கின.

“ஐயோ… இந்தக் கொலைகாரன் எதற்கு இங்கே வருகிறான்?” என்று நினைத்தவள், அசைந்து திரும்ப, அவள் அசைந்த வேகத்திற்கு ஏணி ஒருபக்கமாகச் சரியத் தொடங்கியது.

அதைக் கண்டதும் இரண்டெட்டில் ஏணியை நெருங்கிய ஏகவாமன், ஏணி சரியாது பற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்க்க, அங்கே அலரந்திரி திருதிரு என்று விழித்தவாறு இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அங்கே என்ன செய்கிறாய்?” என்று ஏகவாமன் எரிச்சலுடன் கேட்க, அவளோ நூல் பெட்டியைக் காட்டி,

“நூல் எடுக்க வந்தேன்…” என்றாள் திக்கித் திணறி.

“சரி… ஏணியைப் பிடிக்கிறேன்… இறங்கு…” என்று எரிச்சலுடன் கூற, அந்தப் பெட்டியை இழுத்து எடுத்தவள், அதைச் சுமந்துகொண்டு எப்படி இறங்குவது என்று தெரியாமல் தடுமாற, அவளை நோக்கித் தன் கரத்தை நீட்டியவன்,

“கொடு…” என்றான். மறுக்காமல் அவனை நோக்கிக் குனிந்தவாறு நீட்ட அவனுடைய பிடிமானமில்லாது ஏணி மீண்டும் சரிந்தது.

மீண்டும் ஏணியை இறுகப் பிடித்து நேராக்கியபோதே அவளுடைய கரத்திலிருந்த நூல் பெட்டி கச்சிதமாக ஏகவாமனின் தலையில் தொபீர் என்று விழுந்தது.

இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. பெட்டி தலையில் விழுந்ததும் ஒரு கணம் உலகமே தட்டாமாலையாகச் சுழன்றது ஏகவாமனுக்கு. கண்களுக்கு முன்னால் பொறி பறக்க,

“வட் த… xxx” என்று கடும் சீற்றத்துடன் அலரந்ததிரியைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியில் வாய் பிளந்திருப்பது கூடப் புரியாமல் விழிகள் தெறிக்கும் நிலையில் நின்றிருந்தாள்.

ஆழ மூச்செடுத்து விட்டவன்,

“கெட் டவுன் ரைட் நவ்…” என்று ஏணியை விடாது இறுகப் பற்றியவாறு வார்த்தைகளைத் துப்ப, உடனே அவசரமாக இறங்கிய அலரந்திரிக்கு ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குக் கீழ் இறங்க முடியவில்லை. அவனோ ஏணியின் இரு பக்கமும் கரங்களைப் பற்றியவாறு நின்றிருந்தான். இனி இறங்கினால் அவனுடைய அணைப்புக்குள் இறங்கியதுபோல இருக்கும். ஒன்றில் அவன் தள்ளி நிற்கவேண்டும். அல்லது பக்கமாக நின்று பிடிக்கவேண்டும்.. ஆனால் அவனோ இது புரியாமல் அவள் இறங்கும் வரைக்கும் காத்திருக்க, பின்புறத்தைக் காட்டியவாறு இறங்க முடியாமல் சிரமப்பட்டு அவனைப் பார்க்குமாறு திரும்பி நின்று எச்சியைக் கூட்டி விழுங்கி,

“நா… நான் இறங்கிக்கொள்வேன் சார்… ப்ளீஸ்… விலகிக் கொள்ளுங்கள்…” என்றாள் பெரும் சங்கடத்துடன். அதற்கு அவனோ,

“முதலில் இறங்கு… விலகுகிறேன்…” என்றான் சற்றும் இரக்கமில்லாதவனாக.

உதடுகளைக் கடித்துச் சற்று நேரம் நின்றவள் இறங்காமல் அப்படியே நிற்க, அவள் நிலை புரிந்தவனாக விவாதம் செய்யாது இப்போது அவன் வலது கரத்தை மட்டும் விலக்கி இடப்பக்கமாக நின்று கொள்ள, நிம்மதியுடன் கடகடவென்று கீழே இறங்கியவளின் வேகத்தில் இடையில் செருகியிருந்த சேலை அவிழ, அது காலில் சிக்குப் பட, தடுமாறி முன்புறமாகச் சரியத் தொடங்கினாள்.

அவள் விழுகிறாள் என்று அறிந்த மறுகணம், சற்றும் யோசிக்காமல் அவள் வயிற்றில் தன் வலது கரத்தைப் பதிக்க, அது கச்சிதமாகச் சேலை சற்று விலகியதால் தெரிந்த மென் வயிற்றில் பசக் என்று ஒட்டிக் கொண்டது.

அவனுக்கு எப்படியோ… அவளுக்குத்தான் உலகமே ஒரு கணம் தன் அசைவை நிறுத்திக் கொண்டது. முதன் முறையாக ஒரு ஆணுடைய கரம் அவளுடைய மேனியில். இதுவரை புரியாத புதுவித உணர்வில் தகித்தவளுக்கு மூச்செடுக்கவும் மறந்து போனது.

அவனுடைய வெம்மைகொண்ட உள்ளங்கையின் அழுத்தம் அதுவரை தூங்கிக்கொண்டிருந்த பெண்மையை விழிக்கச் செய்ததோ? அவள் அதிர்ந்து நிற்க அவனோ எதுவுமே நடக்காததுபோலத் தன் கரத்தை விலக்கிக் கொள்ள அப்போதும் அவன் கரம் தன் வயிற்றில் அழுத்தமாகப் பதிந்திருப்பது போன்ற உணர்வில் தவித்துப்போனாள் அலரந்திரி. கூடவே அவளுக்குத் தன் நிலை புரியப் பெரும் அவமானமாகவும் இருந்தது.

‘கடவுளே… எனக்கென்னவாகிவிட்டது? நான் திருமணம் ஆனவள்… விதவை என்று முத்திரை குத்தப்பட்டவள்… நான் போய் ஒரு ஆடவனின் கரத்தின் தொடுகையை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டேனா… எனக்கு என்னவாகிவிட்டது? என் மனம் ஏன் இப்படிப் போகிறது?’ நம்ப முடியாத பதட்டத்தில் அவள் நின்றிருக்க, அவனோ, அவள் நிலையைப் பற்றிச் சிறிதும் கருத்தில் கொள்ளாதவனாக, கீழே விழுந்திருந்த பெட்டியைக் குனிந்து எடுத்து அவளுடைய கரத்தில் வைத்துவிட்டு விலகிச் செல்ல, சக்தி இழந்தவளாக நின்றிருந்தாள் அவள்.

இன்னும் இடையில் படர்ந்த குறுகுறுப்பில் தவித்தவள், இவனுடைய கரம் பட்டா நிலை கெட்டோம் என்கிற அவமானமும், கோபமும் பொங்கி எழ, ஒற்றைக் கரத்தால் பெட்டியை அணைத்துப் பிடித்தவாறு இடக் கரத்தால் வயிற்றைப் பலமாகத் தேய்த்து அந்தக் குறுகுறுப்பை அழிக்க முயன்றாள். அந்தோ பரிதாபம், மீண்டும் மீண்டும் அதில் வெம்மை ஒட்டிக்கொண்டது போன்ற அவஸ்தையில் பெரிதும் தவித்துப் போனாள் அலரந்திரி.

 

மீண்டும் அவனுடைய உள்ளங்கையின் வெம்மை அவளைப் பாடாகப் படுத்தியது. மறந்து போன அல்லது கருகிப்போனதாக நினைத்த இளமை அவனுடைய அந்தத் தீண்டலில் மெல்லத் துளிர் விடத் தன் மனம் போகும் திசை அறிந்து பதறிப்போனாள் அலரந்திரி.

ஏதோ பிசாசிற்குப் பயந்தவள் போலத் தைக்கும் இடத்திற்குச் சென்று தன் இருக்கையில் அமர, ஏனோ மார்பு படு வேகமாக மேலும் கீழும் இறங்கத் தொடங்கின. முகம் வியர்த்துக் கொட்டியது.

கடவுளே… நான் ஏன் இப்படி எண்ணுகிறேன்… அதுவும்… அந்த ஏகவாமன் தொட்டதற்காக நான் ஏன் பதறவேண்டும்… என் நிலை என்ன என்பதை மறந்து போகும் அளவிலா சிந்தையைக் கலைக்கிறது? அந்தளவு தப்பானவளா நான்… நான் விதவையாக இருந்துகொண்டு ஒரு ஆடவனின்… அதுவும் காருண்யனின் அண்ணனின் வருடலில்… எண்ணும்போதே தீயில் குளித்த உணர்வில் துடித்துப்போனாள் அலரந்திரி.

அந்த நினைவிலிருந்து வெளி வர முடியாதவளாக, இதழ்களைக் கடித்து ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்த முயன்றவள், முடியாமல் நூல் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து இரு நூல்களை எடுத்துக் கோர்த்துவிட்டுத் துனியைத் தையல் சப்பாத்தில் வைத்து இயக்கத் தொடங்க மீண்டும் புத்தி குறுகுறுத்த இடையிலேயே அவமானத்துடன் சென்று நின்றது.

மனம் என்பது குரங்குபோல, எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ அதைத்தான் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்ளும்… அவளும் அப்போது அந்த நிலையில்தான் இருந்தாள். கூடவே, யாராக இருந்தாலும், இளமைக்கென்றொரு தேடல் இருக்கிறது என்பதும், அந்தத் தேடல் மனதின் ஆழத்தில் பதிந்துபோன ஆடவனின் அருகாமையில் மட்டுமே பூர்த்தி அடையும் என்பதையும் அவனன்றி வேறு எவராலும் பெண்மையையும் மலரச் செய்ய முடியாது என்பதையும் அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

What’s your Reaction?
+1
19
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

15 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

5 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

6 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago