Categories: Ongoing Novel

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 5

(5)

தள்ளப்பட்ட அலரந்திரி இரண்டடி சென்று தரையில் விழுந்தவாறு அதிர்ச்சியுடன் தன்னை யார் தள்ளிவிட்டதென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே, ஒருவன் ஏகவாமனைக் கொல்வதற்காகத் தன் கத்தியைத் தூக்கியவாறு பாய்ந்திருந்தான்.

இதை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்ணிமைக்கும் நொடியில் அவன் பாய்ந்ததால், அதிர்ச்சியில் அனைவரும் விறைத்துப்போய் நின்றிருந்தனர்.

ஏகவாமனின் கதை இன்றோடு முடிந்தது என்று அனைவரும் பதறிய கணங்கள் சொற்பமே. ஆனால் அவனோ, தன்னை நோக்கி ஒருவன் பாயவும் எந்தவித அலட்டலுமில்லாமல், அதைக் கூரிய விழிகளால் எதிர்நோக்கி நின்றானே அன்றி, அவனுக்கு எதிராகத் தன் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை.

எதிரியோ, ஏகவாமனனின் மார்பை நோக்கிக் கத்தியைப் பலமாக இறக்க, இவனோ கத்தியை இறக்கியவனின் மணிக்கட்டை வலது கரத்தால் பற்றித் தடுத்தான்.

அவன் கரத்தால்தான் பிடித்தான். ஆனால் ஏதோ முற் கம்பியால் பிடித்து இறுக்கியது போன்ற பெரும் வலியைக் கொடுக்கத் தன்னையும் மீறி முனங்கிய எதிரி தன் கரத்தை விடுவிக்க முயன்றான். அந்தோ பரிதாபம், ஏகவாமனுடைய உடும்புப் பிடியிலிருந்து மணிக்கட்டைச் சிறிது கூடத் திருப்ப முடியவில்லை.

அதற்கு மேல் முடியாதவனாக அச்சத்துடன் ஏகவாமனை நிமிர்ந்து பார்க்க, அவனோ சற்றுத் தலையைச் சரித்து எதிராளியைப் பார்த்து, சிறிது கருனை ததும்பும் குரலில்,

“இந்த விஷப்பரீட்சை தேவையா… யாரோ ஒருவனுக்காக எதற்கு உன்னுடைய உயிரைப் பணயம் வைக்கிறாய்… உனக்கென்றும் குடும்பம் குழந்தை குட்டியென்றிருக்கும்… அவர்களை நடுத்தெருவில் விடப்போகிறாயா… வேண்டாம்… விட்டுவிடு… உன்னை மன்னித்து விடுகிறேன்… உன் பாதையைப் பார்த்துக்கொண்டு சென்று விடு… உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்… இப்போது யாரையும் கொலைசெய்யும் மூட்டில் நானில்லை” என்றவன் அவனுடைய கரத்தை விடுவித்துவிட்டு,

“போ… போய்விடு… உன்னை ஒன்றும் செய்யவேண்டாம் என்று என் ஆட்களிடம் சொல்லிவிடுகிறேன்…” என்றவன், எதிரியை விட்டுவிட்டு முன்னேற முயல,

“யாரை யார் மன்னிப்பது… உன்னை உயிரோடு விட்டால் நான் கருந்தேவன் ஐயாவுடைய சோற்றைத் தின்றதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்…” என்றவாறு சீற்றத்துடன் ஏகவாமனின் முதுகில் கத்தியை இறக்க முயன்றான்.

அடுத்த கணம் எதிரி தரையில் கிடந்தான்.

முதுகில் குத்துவதற்காக எதிரியின் கரங்கள் கீழே இறங்கவும், அதை உணர்ந்து எதிரியை நோக்கிச் சடார் என்று திரும்பியவன், அவனுடைய மணிக்கட்டைத் தன் வலது கரத்தால் அழுந்தப் பற்றி எதிராளியை உற்றுப் பார்த்தான்.

“xxx xxx குத்துவதாக இருந்தால் தைரியமாக மார்பை நோக்கிக் குத்து. இப்படிக் கோழைபோல முதுகில் குத்தாதே.” என்று கர்ஜித்தவனின் இரைதேடும் சிங்கப் பார்வையைக் கண்ட எதிராளி ஒரு கணம் நடுங்கித்தான் போனான். ஏகவாமனின் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றவன் முடியாமல் பெரும் சீற்றம் கொண்டு, மறு கரத்தை ஓங்கி ஏகவாமனின் முகத்தை நோக்கிச் செலுத்த, சற்றுப் பின்னே சரிந்து அந்த அடியிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டவன், நிமிர்ந்து மெல்லியதாகச் சிரித்தான். எதிரியோ இரையைத் தப்பவிட்ட நரிபோல ஏகவாமனை முறைக்க,

“சொல்லிக்கொண்டிருக்கிறேன்… அதற்குப் பிறகும் திருந்தவில்லை என்றால்… நான் என்ன செய்யட்டும்… ஆடு தானாக வந்து வாளைக் கொடுத்து வெட்டு வெட்டு என்று தலையை நீட்டுகிறது… வெட்டவில்லையென்றால் ஆடு என்னைத் தப்பாக நினைத்துவிடாது…?” என்று கிண்டலுடன் கேட்டவன், கண்ணிமைக்கும் நோயில், எதிரியின் கரத்தை மடக்கி மடித்து வேகமாக அவனுடைய நெஞ்சை நோக்கிச் செலுத்த, அந்தக் கத்தி எதிரியின் நடு மார்பில் அரைவாசி மட்டும் துளைத்து நின்றது. அதைக் கண்டு திருப்தி அற்றவனாக,

“சே… மொட்டைக் கத்தியுடனா என்னைக் கொல்ல வந்தாய்? பார் எப்படி வலிக்கிறது என்று…” என்றவன், பேசிக்கொண்டே உள்ளங்கையால் ஓங்கி அந்தக் கத்தியின் பிடியில் அடிக்க, அடுத்த கணம் அது எலும்பையும் சிதைத்துக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் இதயத்தைக் கீறிச் சென்றது. அப்போதும் அவன் கரத்தை விட்டானில்லை.

துடித்துத் திணறிய எதிரி இறுதியில் உயிர் துறந்து அப்படியே சரிந்து இவன்மீது விழத் தொடங்கத் தன் கரத்தை விலக்கத் தரையில் சரிந்தான் எதிரி.

“தன் வினை தன்னைச் சுடும்…” என்று முணுமுணுத்தவாறு அங்கிருந்த கூட்டத்தை ஏறிட்டுப் பார்த்து,

“வேறு யாராவது எச்சம் சொச்சம் மிச்சம் இருக்கிறீர்களா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்க, அந்த இடம் சலசலப்பின்றி அமைதியானது.

“இருந்தால் இப்போதே வந்துவிடுங்கள்… எனக்கு வேலையிருக்கிறது…” என்று அழுத்தமாகக் கூற, சற்றுப் பின்னால் நின்றிருந்த ஒருவன் தன் சகாவிற்கு நடந்த கதியைக் கண்டு, பெரும் அச்சத்துடன் இரண்டடி பின்னால் வைக்க, அடுத்த விநாடி அவனைச் சுற்றி ஏகவாமனின் ஆட்கள் நின்றிருந்தனர்.

அடுத்து ஏகவாமனின் முன்னால் கொண்டுவந்து நிறுத்த, அவன் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு, அவனைப் பற்றியிருந்த தன் ஆட்களிடம் விழிகளாலேயே அவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு,

“ஏன்பா… நீயாவது… நான் சொல்வது போலத் தப்பி ஓடி விடுகிறாயா…. இல்லை…” என்றவன் விழிகளால் காலின் கீழ் விழுந்திருந்த எதிரியைக் காட்டி,

“இப்படி உயிரை விடுகிறாயா… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்றான் தோள்களைக் குலுக்கி

“இ… இல்லை… நா… நான் ஓடிவிடுகிறேன்… சார்…” என்று அவன் நடுக்கத்துடன் கூற,

“ம்… சரி… ஆனால் நீ தப்பினாலும் உன் கருந்தேவனிடமிருந்து தப்ப மாட்டாயே… என்ன செய்யப்போகிறாய்?” என்றான் அடுத்து.

“என் மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு எங்காவது கண்காணாத தேசத்திற்குப் போய்விடுவேன் சார்…” என்று தடுமாற, அவனை ஆத்திரத்துடன் பார்த்தான் ஏகவாமன்.

“முட்டாள்… மனைவி குழந்தைகளை வைத்துக்கொண்டா இத்தகைய வேலைக்குச் சேர்ந்திருக்கிறாய்… உனக்கு ஏதாவது நடந்தால் அவர்களின் நிலையை யோசித்துப் பார்த்தாயா? அறிவு கெட்டவனே…” என்று சீறியவன் திரும்பிச் சேதுவைப் பார்த்து,

“சேது…” என்றான். உடனே சேது தன் கையிலிருந்த பையிலிருந்த இரண்டு கட்டு நோட்டுக்களை எடுத்து நடுங்கிக்கொண்டிருந்தவனிடம் நீட்ட, அவனோ வாங்காமல் திருத் திருவென்று விழித்தான்.

“பயப்படாதே… வாங்கு… இரண்டு லட்சம் இருக்கிறது… உன் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்காவது சென்று பிழைத்துக்கொள். இனி எங்காவது உன்னைக் கத்தி கடப்பாரையுடன் பார்த்தேன்… உன் நண்பனுக்கு நடந்ததுதான் உனக்கும் புரிந்ததா?” என்று சீற, முதன் முறையாகக் கண்களில் கண்ணீர் மல்க அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டவன்,

“நன்றி சார்… நான் எல்லாம் விரும்பி இந்தத் தொழிலில் சேரவில்லை சார்… குழந்தை குட்டி என்று ஆகிவிட்டது… மூன்று நேரமில்லை என்றாலும் ஒரு நேரமாவது சாப்பிடவேண்டுமே சார்… அதுதான் இந்தக் கூட்டத்தோடு சேர்ந்தேன்… நிச்சயமாக இனி இப்படி நடந்துகொள்ள மாட்டேன் சார்… திருந்திடுவேன் சார்…” என்று விட்டு மகிழ்ச்சியுடன் அவன் செல்ல,

“என்ன சாரே… இப்படிப் பண்ணிட்டிங்கோ… அவனையும் சாவடிச்சிருக்கனும்… இவர்களை எல்லாம் நம்பக் கூடாது சார்…” என்று ஏகவாமனின் கையாள் ஒருவன் எகிற, திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தவன்,

“காசி… ஒருவனைப் பார்க்கும்போது தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று… பாவம் குழந்தை மனைவி என்று வாழ்பவன்… பணத்தின் தேவைக்காக இந்தத் தொழிலில் இறங்கிவிட்டான்… பிழைத்துப் போகட்டும்…” என்றவன் என்ன யோசித்தானோ, சடார் என்று திரும்பி,

“என்னை மீறி அவனுக்கு ஏதாவது நடந்தால்… என்னைப் பற்றித் தெரியும் அல்லவா?” என்று கேட்க,

“சார்… என்ன சார் இப்படிச் சொல்லிட்டே… உன் கையால் காசு வாங்கிட்டுப் போறான்… அவனைப் போய்… காயப்படுத்துவேனா… போ சார்… எங்களைப் புரிஞ்சிட்டது அம்பிட்டும்தானா…” என்று அவன் மூஞ்சையை நீட்ட, மெல்லியதாகச் சிரித்தவன், திரும்பித் தன் அருகே நின்றிருந்த அடியாட்களைப் பார்க்க, அவன் பார்வையில் தெரிந்த கட்டளையைப் புரிந்துகொண்டவர்களாக இறந்தவனை நோக்கி நெருங்கினர். மறு கணம் இறந்துகிடந்தவனின் பிணம் அகற்றப்பட்டது. திரும்பிச் சேதுவைப் பார்த்த ஏகவாமன்,

“இவனைப் பற்றிய முழு விபரமும் எனக்கு வேண்டும்… இவனுக்கும் குடும்பம் இருக்கா என்று பார்…” என்று உத்தரவிட்டுவிட்டுத் தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தான். இரத்தத்தில் குளித்திருந்தது கரங்கள். ஒரு வித அருவெறுப்புடன்,

“தண்ணீர் கொண்டுவா…” என்று குரல் கொடுக்க மறு கணம் தோட்டத்திலிருந்து தண்ணீர் பைப் இழுத்து வரப்பட்டது. தன் கரத்தை நன்றாகக் கழுவியவன் கரத்தை உதறியவாறு அணிந்திருந்த ஆடையைக் குனிந்து பார்த்தான். வெண்ணிற ஆடையில் அங்கும் இங்குமாக இரத்தக் கறை. எரிச்சலுடன் சட்டைப் பொத்தானை ஒவ்வொன்றாகக் கழற்றியவனுக்கு அப்போதுதான் அலரந்திரியின் நினைவு வந்தது போலும். பொத்தான்களைக் கழற்றியவாறே திரும்பி அவளைப் பார்க்க, அவளோ அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் தரையிலேயே அமர்ந்தவாறு இவனைத்தான் மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவனோ கிண்டலுடன் பார்த்துச் சிரித்தவாறு, தன் ஷேர்ட்டைக் கழற்றி அருகேயிருந்த ஒரு அடியாளிடம் நீட்டிவிட்டுத் திரும்ப, இன்னொரு சுத்தமான வெண்ணிற ஷேர்ட் அவனிடம் நீட்டப்பட்டது.

அதை வாங்கி உதறி அணிந்து கொண்டவன் பொத்தான்களைப் போட்டவாறே அலரந்திரியை ஏறிட்டு,

“என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா…? நீ பெண் என்பதால் உயிரோடு விடுகிறேன்… திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடு… இல்லை…! உன் கூட்டாளிக்கு நடந்த கதைதான் உனக்கும்…” என்றவன் பொத்தான் போட்டு முடித்த ஷேர்ட்டை இழுத்துச் சரியாக்கியவாறே, மீண்டும் அவளைப் பார்த்து,

“அத்தனை சுலபத்தில் என்னைக் கொல்ல முடியாது பெண்ணே… போய் உன்னை அனுப்பிய ஆளிடம் போய்ச் சொல்… இந்த ஏகவாமனை அழிப்பதற்கு இந்த உலகத்தில் ஒருவன் இதுவரை பிறக்கவும் இல்லை… பிறக்கப் போவதுமில்லை…” என்றவன், தன் சட்டைப்பையில் வைத்திருந்த குளிர் கண்ணாடியை வெளியே எடுத்துக் கண்களில் போட்டுக்கொண்டு நடக்கத்தொடங்க அலரந்திரி அசைவின்றிச் சென்றுகொண்டிருந்தவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலரந்திரியால் சற்று முன் நடந்த சம்பவத்தை ஜீரணிக்கக் கூட முடியவில்லை. கண்ணிமைக்கும் நொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டிருந்தது. தனக்குப் பின்னால் ஒரு அசைவு மட்டும்தான் அவளுக்குத் தெரியும். ஆனால் திடீர் என்று ஒருவன் அந்த ஏகவாமனை நோக்கிப் பாய்வான் என்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

பாய்ந்தவனை அந்த ஏகவாமன் எப்படிக் கண்டுகொண்டான் என்று கூட அவளுக்குப் புரியவில்லை. என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாகவே அவன் மார்பில் கத்தியை ஏற்றிவிட்டிருந்தான் அந்த மல்லன்.

ஒரு விநாடி கூட இல்லை… அதற்குள் ஒருவன் இறந்து விட்டான். அதுவும் எப்படி… நினைக்கும் போதே சர்வமும் நடுங்கியது. ஒரு உயிரைக் கொல்வது என்பது அத்தனை சுலபமா? அப்படியானால் உயிருக்குத்தான் என்ன மதிப்பு… கடவுளே… இவன் மனிதனா இல்லை மிருகமா…’ நம்ப முடியாதவளாக அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு ஏனோ இறந்தவன், ஏகவாமனைக் கொல்லந்தான் என்கிற உணர்வு தோன்றவேயில்லை. தாங்க முடியா ஆத்திரத்தில், எழுந்தவள், போய்க்கொண்டிருந்தவனின் பின்னால் சென்று,

“என்ன மனிதன் நீ… ஒருவனைக் கொல்வது அத்தனை சுலபமா உனக்கு… உனக்குக் கொஞ்சமும் இரக்கமில்லையா? நிச்சயமாக உன்னைச் சும்மா விட மாட்டேன்… இங்கே நடந்ததை அப்படியே காவல்துறையிடம் சொல்வேன்… உன்னைத் தூக்கில் ஏற்றாமல் நான் ஓயப்போவதில்லை…” என்று கடும் சீற்றத்துடன் கொந்தளிக்க, அவளை நோக்கித் திரும்பியவனின் அழுத்தமான உதடுகள் சற்றுப் பிரிந்து மெல்லிய புன்னகையைச் சிந்தின.

அலரந்திரி கூட அந்தப் புன்னகையில் அயர்ந்து போனாள். இவனால் எப்படி இப்படிச் சிரிக்க முடிகிறது? நம்ப முடியாமல் அவனை வெறிக்க, ஏகவாமனோ, நகைப்பு சற்றும் மாறாமல் தலையை ஆட்டிவிட்டு,

“சேது… நம்முடைய டிஜிபியுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை இவர்களிடம் கொடுத்துவிடு… பாவம் ஏதோ என்னைப் பற்றிப் புகார் கொடுக்கப்போகிறார்களாம்…” என்று கூற, சேதுவோ வந்த சிரிப்பை அடக்கப் பெரிதும் பாடுபட்டவாறு,

“ஸ_ர் அண்ணா…” என்றான்.

திரும்பி அலரந்திரியைப் பார்த்த ஏகவாமன், தன் இடது கரத்தை மடித்து இடையில் பதித்தவாறு வலது கரத்தின் சுட்டுவிரலையும் பெருவிரலையும் கொண்டு நெற்றிப் பொட்டில் மெதுவாகச் சொரிந்து எதையோ யோசித்தவாறு,

“டிஜிபி இன்று மாலை கொழும்புக்குப் போவதாக என்னிடம் கூறியிருந்தார்… சோ…” என்றவன் தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்து,

“நாட் பாட்… உனக்கு நேரம் இருக்கிறது… இப்போதே கால் பண்ணி என்னைப் பற்றிய புகாரைக் கொடுத்துவிடு. தவறவிட்டாயானால் அவர் திரும்பி வரும் வரை, ஒரு கிழமையாவது நீ காத்திருக்கவேண்டி வரும். உனக்குத் தங்க இடம் இருக்கிறதுதானே…? வேண்டுமானால் ஒன்று செய்! எங்கள் விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்.” என்று பரிதாபப் படுவது போலக் கூறிவிட்டு, “சாரி பெண்ணே…! அதிக நேரம் உன்னோடு பேச முடியாது. முக்கிய வேலையாக வெளியே போய்க்கொண்டிருக்கிறேன். வண்டியை எடுங்கள்… நேரமாயிற்று…” என்றவாறு வெளியே செல்லத் தொடங்கியவன், என்ன நினைத்தானோ, நின்று தன் குளிர் கண்ணாடியைக் கழற்றித் திரும்பி, முன்னம் அலரந்திரியின் மீது பாய முயன்றவனை வெறித்துப் பார்த்தான். விழிகளால் ஏதோ எச்சரிக்கையாகக் கூறிவிட்டுப் பின் அதே எச்சரிக்கைப் பார்வையை மற்றைய அடியாட்கள்மீதும் செலுத்திவிட்டு, அலரந்திரியை ஏறிட்டான்.

வலது காலால் வேட்டியின் நுனியைத் தெறிக்க விட்டவன், அதைப் பற்றி இடையில் மடித்துக் கட்டியவாறு,

“இதோ பாரம்மா…! என் அடியாட்கள் உன்மீது கடும் வெறியில் இருக்கிறார்கள்… எந்த நேரமும் அவர்களை அடக்கி வைக்க என்னால் முடியாது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு விரைந்து சென்றாய் என்றால் உயிராவது மிஞ்சும்… சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி உன் இஷ்டம்” என்கிற கட்டளையுடன், நடந்து சென்றவன் பாய்ந்து ஜீப்பில் ஏறி அமர, அது புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி வேகமெடுத்துச் சென்று மறைந்தது.

அலரந்திரியோ அடுத்து என்ன செய்வது என்று புரியாத கையறு நிலையில் சோர்ந்து போய் நின்றாள்.

என்ன மாதிரி மனிதன் இவன். அடிக்கிறானா, இல்லை அணைக்கிறானா? புரியாமல் குழம்பியவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவளின் இதயம் வாய்க்குள் வந்து துடித்தது.

அங்கே தம் உயிருக்கும் மேலான தலைவனைக் காட்டிக் கொடுக்க முயன்றதோடு, கொலைசெய்யவும் ஒருவனை அழைத்து வந்ததாக எண்ணிவளைப் பார்த்துக் கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தனர். கூடவே அவளை ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்தை எண்ணி வெறுத்தவர்களாக வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு விலகிச் சென்றான்.

ஏகவாமனனின் எச்சரிக்கைப் பார்வை மட்டும் இல்லாது இருந்திருந்தால், இப்போது அவள் விண்ணுலகை எட்டியிருப்பாள். தன் அடியாட்களின் குணம் தெரிந்துதான் அவன் பார்வையால் எச்சரித்துவிட்டுச் சென்றான்.

ஆனாலும் பொறுக்க முடியாதவனாக அங்கிருந்த ஒருவன், அவளருகே பற்களை நெருமியவாறு நெருங்க, அவனுடைய வேகத்தைக் கண்டு அச்சத்துடன் இரண்டடி எடுத்து வைத்தவளின் நடை தடுமாறியது. போதாததற்குக் கால் தடுக்கிவிட, மீண்டும் தரையில் பொத் என்று சரிந்தாள். சரிந்தவளை வெறித்துப் பார்த்த அந்த அடியாளுக்கு அவளைத் தூக்கிவிடவேண்டும் என்கிற எண்ணமே இல்லை. ஆனாலும் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்,

“இதோ பாரம்மா… உன் மீது செம காண்டில் இருக்கிறோம். மரியாதையாக இங்கிருந்து போய் விடு… ஏதோ எங்கள் ஐயா சொன்னதற்காக, அவர் கட்டளையை மீறாது கைக்கட்டிக்கொண்டிருக்கிறோம். எந்நேரமும் இப்படியே இருப்போம் என்று நினைத்துக்கொள்ளாதே… வெளியே போய் விடு…” என்று எச்சரிக்கை செய்துவிட்டு, மற்றவர்களைப் பார்க்க அவர்களும் அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, அங்கிருந்து விலகிச் சென்றாலும் அந்த இடத்தைவிட்டு மட்டும் அகலவில்லை.

அலரந்திரியோ பிரமை பிடித்தவள் போல அப்படியே கிடந்தாள். இப்போது என்ன செய்வது? காருண்யனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதா? இல்லை உயிர் போனாலும் பரவாயில்லை என்று, இங்கேயே இருந்து உண்மையை அறிந்து செல்வதா?

குறைந்தது அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாதா?

என்ன நினைத்தாளோ, எழுந்தவள் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாலும், அந்த வீட்டிற்கு முன்புறமிருந்த ஆலமரம் ஒன்றின் முன்னால் சரிந்து அமர்ந்தாள்.

What’s your Reaction?
+1
10
+1
3
+1
2
+1
0
+1
4
+1
0
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

15 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

5 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

6 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago