பதினைந்து நிமிடப் பயணம். மேடு பள்ளங்களுக்குள் ஏறி இறங்கிக் கடைசியாக வண்டி ஒரு கேட்டின் முன்னால் வந்திருக்க, உடனே கதவு திறக்கப்பட்டது. கற்களால் பதிக்கப்பட்ட பாiதையில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வண்டி ஓடி ஒரு செயற்கைப் பொய்கையிலான ரௌன்டபவுட்டை சுற்றிப் பிரிந்து சென்று பல வகையாகத் தரித்திருந்த வாகனங்களைத் தாண்டிச் சென்று ஒரு பெரிய பங்களாவின் முன்னால் வந்து நின்றது.
அந்த வீட்டைக் கண்ட அலரந்திரி ஒருகணம் அதிர்ந்து போனாள். வெண்ணிறத்தில் பிரமாண்டமாக ராட்சத வெள்ளை யானை ஒன்று படுத்திருப்பது போல இருந்தது அந்த மாளிகை. இல்லை இல்லை பிரமாண்டமான அரண்மனை. அதற்கு முன்னால் பெரிய பூந்தோட்டமே அதுவும் படு கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவே செயற்கை அருவி வேறு. அரண்மனைக்குப் பின்னால் கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் பச்சைப் பசேலென்ற வயல். எப்போதோ ஒரு படத்தில் பார்த்த நேரடிக் காட்சி. ‘இந்த வில்லன்களுக்கும் அழகான நந்தவனத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்று அவளால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
மலைத்துப்போய் நின்றவளை, ஒரு வித இளக்காரமாகப் பார்த்த சேது,
“உள்ளே போகலாமா…” என்றான் அலட்சியத்துடன்.
அவன் குரலிலிருந்த அலட்சியத்திற்கான பொருள் அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அந்தக் குரல் அவளை உசுப்பிவிட,
“இதோ பாருங்கள் மிஸ்டர் சேது… எனக்குக் கண்ட கண்டவர்களுடைய வீட்டிற்குள் வரவேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் முதலாளியை இங்கே வந்து என்னுடன் பேசச் சொல்லுங்கள்…” என்றாள் அழுத்தமும் எரிச்சலும் போட்டிப்போட.
அவளுடைய அலட்சியம் அருகே காவலுக்கு நின்றிருந்தவர்களில் ஒருவனுக்குக் கோபத்தை விளைவித்ததோ?
“யாரை வெளியே வரச்சொன்னாய்? எங்கள் ஐயாவையா…?” என்றவாறு அவளை நெருங்க முற்பட, அந்த ராட்சசனின் உருவத்தையும், அவன் முகத்தல் தெரிந்த அகோரத்தையும் கண்ட அலரந்திரியின் உயிர், ஒரு கணம் உடலிலிருந்து போய் வந்தது மட்டும் உண்மை.
அச்சத்தில் அவளுடைய தளிருடல் நடுங்குவதைக் கண்ட சேது, அவசரமாகத் திரும்பி, அந்தக் கையாளை ஒரே பார்வையில் அடக்கிவிட்டுத் திரும்பி அலரந்திரியைப் பார்த்து,
“இதோ வருகிறேன்…” என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே சென்றான்.
அவன் உள்ளே சென்றதும் அலரந்திரிக்கு ஏனோ பெரிதும் களைப்பாக இருந்தது.
இதுவரை காலமும் ஓடியோடி மனம் சலித்துப் போனதோ? திடீர் திருப்பத்தால் விளைந்த பரிதவிப்போ…? இல்லை இந்த மனித மிருகங்களுடன் போட்டியிடுவதற்கான போதிய வலு அவளிடம் இல்லையோ…? உடல் ஓய்வுக்குப் பெரிதும் கெஞ்சியது.
ஒரு மனிதனால் எவ்வளவு தூரம்தான் ஓட முடியும்? ஒரு முறை இரு முறையென்றால் பரவாய் இல்லை. வாழ்க்கை முழுவதும் ஓடுவதென்றால்… அவளால் எப்படி முடியும்? சலிப்புடன் சுத்தவரப் பார்த்தாள். அங்கே கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் இவளைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர். அத்தனை பேரின் கரங்களிலும் ஏதாவது ஒரு ஆயுதம் வீற்றிருக்க, இவளுக்குத்தான் வயிற்றைக் கலக்கியது. அது வேறு அவளைச் சோர்வடையச் செய்தது.
அவர்களைப் பார்க்கப் பார்க்க அச்சமும் பதட்டமும் சோர்வும் அதிகரித்ததன்றிச் சற்றும் குறையவில்லை. இந்தப் பெரிய கும்பலுடன் அவள் ஒருத்தியாக எப்படி மல்லுக்கட்ட முடியும்? அது முடியும் காரியமா என்ன? எல்லா வேதனையும் கோபமாகத் திரண்டதால் அசட்டுத் துணிச்சல் வந்துவிட்டதோ? மனம் சலனப்பட்டது.
சற்றுத் திரும்பிப் பார்க்க இவளைப்போலத்தான் சில பெண்கள் கரத்தில் சில வெண் தாள்களை மடித்து வைத்துக்கொண்டு தரையில் குந்தி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு என்ன பிரச்சனையோ… பார்க்கும்போதே பரிதாபமாக இருந்தது. சோர்வுடன் மீண்டும் அந்த வீட்டு வாசலை நிமிர்ந்து பார்த்தாள்.
உள்ளே போனவன் ஐந்து நிமிடங்களாகியும் வெளியே வரவில்லை. போதாததற்கு உச்சி வெய்யில் வேறு தலைக்கு மேல் நின்று இவளை முறைத்துப் பார்க்க அண்ணாந்து பார்த்தாள் அலரந்திரி.
கண்களைக் கூசியது. அவசரமாகக் கண்களை மூடித் தலையைக் குனிய, வியர்வை உடலிலிருந்து வழிந்தது. தொண்டை தண்ணீருக்காக ஏங்கியது. உதடுகள் காய்ந்தன. சேலைத் தலைப்பால் கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தவாறு வாசலை நிமிர்ந்து பார்த்தாள். கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் அந்த ஏகவாமனும் சேதுவும் வெளியே வரவில்லை. இன்னும் எத்தனை நேரம்தான் அவள் இப்படி வெயிலில் நிற்பது? எங்காவது அமரவேண்டும் போhலத் தோன்ற, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அங்கே சற்றுத் தள்ளி அழகுக்காக வைத்திருந்த இரண்டடி உயரமுள்ள கருங்கல்லைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் அதை நெருங்கிச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். உள்ளே போனவன் எப்போது வெளியே வருவான்? வருவானா இல்லை இப்படி வெய்யிலில் இவளைக் காய வைத்துவிட்டுப் போ என்று சொல்வானா? பொறுமை மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியது.
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருக்க எங்கிருந்தோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கத் தன் நினைவு கலைந்து நிமிர்ந்து பார்த்தாள். சற்றுத் தள்ளி ஒரு பெண்… வேலைக் காரப் பெண் போலும், தன் அழும் குழந்தையை இடையில் வைத்து உணவூட்ட முயன்றுகொண்டிருந்தாள். குழந்தை உண்ண மறுத்து அடம் பிடித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் இவளையும் அறியாமல் உதடுகள் புன்னகையில் மலர்ந்தன. கூடவே பெரும் சோகமும் எழுந்தது.
அவளும் எல்லோரையும் போல வாழ்ந்திருந்தால் இப்படிக் குழந்தை குட்டியென்று அவளுக்கென்றொரு உலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பாள் அல்லவா. இப்படிப் பிச்சைக்காரி போல, யாரோ ஒருவனின் வீட்டிற்கு முன்னால் நின்று காய்ந்திருக்க மாட்டாள்… வேதனையுடன் எண்ணியவளுக்குக் காருண்யன் மனதின் கண் வந்து நின்றான்.
அவனை நினைக்கும்போதே பரிதாபமும், வேதனையும்தான் எழுந்ததன்றிக் காதலோ, அன்போ எள்ளளவும் ஏற்படவில்லை. ஒரு வேளை காருண்யன் உயிரோடு இருந்து, அவளுடன் அன்பாகப் பழகி, ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருந்தால், அவளுடைய உள்ளத்தை அவன் பாதங்களுக்குச் சமர்ப்பித்திருப்பாளோ என்னவோ… ஆனால் அப்படி நடப்பதற்கு முன்பாகவே அவன் வாழ்க்கை கருகிவிட்டதே. அவனுடையது மட்டுமா? அவளுடையதும்தானே. சோர்வுடன் எண்ணும்போதே,
“என்ன தாயி… ஐயாவைப் பார்க்க வந்திருக்கிறாயா?” என்று ஒரு வயதுபோன குரல் கேட்கத் தன் நினைவிலிருந்து விடுபட்டுத் திரும்பிப் பார்த்தாள். ஒரு அறுபது வயது அம்மா, கீழே அமர்ந்தவாறு இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். வெற்றிலையைச் சப்பிச் சப்பிக் கறை படிந்த பற்கள். உதடுகளும் வெற்றிலையால் சிவந்திருந்தது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே அவர் கேட்டதால், முதலில் அவர் என்ன கேட்டார் என்று இவளுக்குப் புரியவில்லை. தடுமாற்றத்துடன்,
“ஆ…” என்று குழம்ப,
“இல்லை… ஐயாவைப் பார்க்க வந்தியா என்று கேட்டேன்…” என்று தன்மையாகக் கேட்க, இவளுக்கு ஏறியது. அவள் எங்கே பார்க்க வந்தாள்… இழுத்தல்லவா வரப்பட்டாள்… ஆனால் அதை எப்படிக் கூறுவது? பதில் கூறாமல் தலையை ஆட்டி ‘ஆம்’ என்று கூற,
“யோசிக்காதேம்மா… நீ ஐயாவைத் தேடி வந்துவிட்டாயல்லவா… இன்றிலிருந்து உன் தரித்திரம் தொலைந்து…” என்று முடிக்கவில்லை, இவளுடைய உதட்டில் மெல்லிய ஏளனப் புன்னகை மலர்ந்தது.
“என்னம்மா சிரிக்கிறாய்? நம்பிக்கையில்லையா… நம்ம ஐயாவிடம் வேண்டிக் கையேந்தியவர்கள் யாரும் வருந்தியது கிடையாது தாயி…” என்று அந்தப் பெண்மணி கண்கள் பணிக்கக் கூற,
‘உங்கள் ஐயாவிடம் வேண்டி யாசிக்க நான் என்ன பிச்சைக்காரியா? மூன்று வருடங்கள், மூன்று வருடங்களாகக் காருண்யனை வைத்துப் பாதுகாத்தேன்… ஒரு தாயாக, ஒரு தாதியாக ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ வந்து, என் அனுமதியும் இல்லாமல் தம்பி என்கிற பெயரில் அவளிடமிருந்து பிரித்து அழைத்து வந்துவிட்டானே… அப்படிப்பட்டவனா எனக்கு உதவப் போகிறான்?’ என்று மனதில் எண்ணியவளுக்கு, நிச்சயமாக இதை இப்படியே விடப்போவதில்லை என்கிற உறுதியும் தோன்றலாயிற்று.
காருண்யனுக்கு என்ன நடந்தது, அவன் உண்மையாகவே இந்த வீட்டிற்கு உரியவனா, அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை அறியாமல் அவள் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கப்போவதில்லை.
திடத்துடன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே வாசலில் அரவம் கேட்க,
“ஏகவாமன் ஐயா வருகிறார்…!” என்ற அந்தப் பெண் மரியாதையாக எழுந்து நிற்க, நிமிர்ந்து பார்த்தாள் அலரந்தரி.
திறந்திருந்த கதவினூடாக வெள்ளை வேட்டி சட்டையுடன் குளிர் கண்ணாடி அணிந்தவாறு சேதுவுடன் வேக நடையுடன் வந்துகொண்டிருந்தவனைக் கண்டவள் அதிர்ந்துபோய்ச் சிலையாக இமைக்க மறந்தவளாக அப்படியே நின்றாள் அலரந்திரி.
அவனுடைய உருவத்தைக் கண்டவளுக்கு மூச்சுகூட எடுக்க முடியவில்லை. சுவாசப்பை பயங்கரமாகத் திணறியது. அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அவசரமாக அந்தக் கண்ணீரைத் தட்டி வழிய விட்டவள், மீண்டும் அவனை உற்றுப் பார்த்தாள்.
அவள் கண்ட காட்சி பொய்யில்லை. கனவில்லை… நிஜம்…! நம்ப முடியாத பேரதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றாள் அலரந்திரி.
இது எப்படிச் சாத்தியம்? காருண்யன்… அவன் எப்படி… இப்படி? நடக்கிறானே… அதுவும் கம்பீரமாக… இவனா இரண்டு நாட்களுக்கு முன்பு மூச்சுக்காகத் திணறினான்… இவனா மெலிந்து காய்ந்துபோய் இயக்கமில்லாது வருடங்களாகச் சுயநினைவின்றியிருந்தான்…?’ சத்தியமாக அவளால் நம்ப முடியவில்லை. இத்தனை கம்பீரமாக… இத்தனை திடகாத்திரமாக… மலைபோல நடந்து வருபவன் காருண்யன்தானா? பதட்டத்துடன் எழுந்து நின்று உற்றுப் பார்த்தாள்.
அப்போதுதான் அவன் தன் குளிர் கண்ணாடியைக் கழற்றி, சட்டைப் பையில் செருகியவாறு சேதுவுடன் பேசிக்கொண்டு வர, இவளும் தன்னை மறந்து அவனை நோக்கி நடக்கத் தொடங்கினாள். இருவரும் நெருங்க, அதுவரை சேதுவுடன் எதையோ பேசிக்கொண்டிருந்த ஏகவாமனும் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவளைப் பேச்சினூடாகக் கவனித்தான். கவனித்தவனும், ஒரு கணம் அசைவைத் தொலைத்தவன் போல அப்படியே நின்றிருந்தான். அவனுடைய கூரிய விழிகளில் ஒரு மலர்ச்சி, ஒரு ஆராய்ச்சி, ஒரு தேடல் கணப்பொழுதில் வந்து மறைய, அந்த விழிகள் பேசிய மொழியின் பொருளை உணரா விட்டாலும், அவை கொடுத்த தாக்கத்தில் ஒரு விநாடி தன்னை மறந்துதான் போனாள் அலரந்திரி.
அந்தப் பார்வை… அந்த விழிகள்… அந்த விழிகளின் நிறம்… அவை கொடுத்த தாக்கம்… ஏனோ அவளுடைய இதயம் சில்லிட்டது. இரை தேடும் புலியின் பார்வை அது. இல்லை போருக்குச் சென்ற மாபெரும் வீரனின் கூரிய துளைக்கும் பார்வையது… இல்லை எதிராளியின் மனதைக் கூறுபோடும் ஆராய்ச்சிப் பார்வையது… அப்போதுதான் அவளுக்கு உறைத்தது அது.
இல்லை இது காருண்யன் இல்லை. அவனைப் போலிருக்கும் இன்னொருவன்… உற்றுப் பார்க்கும்போதுதான் இருவருக்கும் இடையில் உள்ள மலையளவு வித்தியாசங்கள் நெஞ்சில் அடித்தன. இவன் காருண்யனை விட மிக மிக உயரமாக இருந்தான்.
முதன் முதலாகப் பார்த்த காருண்யனின் விழிகளில் புன்னகை சிந்தும். இவன் விழிகளில்… தன்னை மறந்து கூரிய தீயென அனல் கக்கிய கண்களைப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாது உள்ளத்துடன் சேர்ந்து உடலும் நடுங்கின. அந்த விழிகளில் தெரிந்த கூர்மையும், கடுமையும் இதுவரை யாரிடமும் பார்த்திராதது. விழிகளா அவை?எரிக்கும் ஏவுகணைகளை ஏவியது போலல்லவா இருக்கிறது. தவிரக் காருண்யனுடைய விழிகளின் கண் மணிகள் கரிய நிறம் கொண்டவை. இது… தேனின் நிறம் கூடக் கடுமைதான். அதனால்தானோ என்னவோ அவன் பார்வையில் தாக்கம் மிகப் பயங்கரமாக இருந்தது.
காருண்யனின் அதே கூரிய செதுக்கிய நாசி. அவனைப் போலவே அடர்ந்த சுருண்ட குழல். அதே போன்ற அடர்ந்த இமைகள். சீராக வெட்டிய தடித்த மீசைக்குக் கீழ் சிரிப்பதற்குப் பணம் கேட்கும் அழுந்த மூடிய உதடுகள்… காருண்யனின் உதடுகளிலிருந்த மென்மை இவன் உதடுகளில் இல்லை. காருண்யனின் உதடுகள் எப்போதும் புன்னகையைச் சிந்தத் துடித்துக்கொண்டிருக்கும். இவனுடைய உதடுகள்… அவற்றிற்குப் புன்னகைக்கத் தெரியுமா என்ன? காருண்யன் இவனைவிடச் சற்று வெண்மை கலந்தவன். இவன் மாநிறத்திற்கும் சற்றுக் குறைந்தவன்.
பாய் போட்டு உறங்கலாம் என்று எண்ணத் தோன்றும் அகன்ற மார்பு. அணிந்திருந்த டி ஷேர்ட்டையே கிழித்துவிடும் போல எம்பி நின்ற திரண்ட புஜங்கள். சடார் என்று சற்றுக் குறுகிய இடை. வலுவான அழுத்தமான கால்கள்… இவை காருண்யனிடம் இல்லாதவை. மற்றும்படி பார்க்கும்போது காருண்யனேதான்…
அதே போலச் சற்றுக் கால்களை அகட்டி மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு தன் முன்னால் நின்றிருந்தவளைக் கூர்மையுடன் அடி முதல் தலை வரை அலட்சியத்துடன் ஏறிட்டான் அவன்.
எளிமையே உருவான தோற்றம். பிறை நெற்றி. அதில் அழுத்தமாகப் பதிந்திருந்த செஞ்சாந்துப் பொட்டு. சற்றுத் தள்ளி எப்போதோ காயம் பட்டதற்கான தளும்பு. காதுவரை நீண்ட கயல் விழிகளில் சோகத்துடன் கூடிய எரிச்சலின் சாயல் வடிந்துகொண்டிருந்தது. வில் போன்ற அடர்ந்த புருவங்கள். மெல்லிய ஆனால் கூரிய நாசி. அதில் எப்போதோ மூக்குத்தி குத்தியதற்கான அடையாளம். காய்ந்து வெளிறிப்போன வடிவான உதடுகள், காதில் பிளாஸ்டிக் தோடு. சுருண்ட இடைவரை தொங்கிய நீண்ட கூந்தல். மெல்லிய இடை. ஒட்டிய வயிறு. ஏனோ அந்த உருவம் அவனைச் சலனப்படுத்தியதோ?
யோசனையுடன் புருவம் சுருங்க ‘யாரிவள்?’ என்று எண்ணியவனாக விழிகளை மேலே கொண்டு செல்ல, அவன் பார்வையில் விழுந்தது வெண் கழுத்தும் அதில் அழுக்கேறிய மஞ்சள் கயிறும்தான். திருமணம் ஆனவள். அதைக் கண்டதும் ஏனோ இவன் முகம் மேலும் கண்டி இறுகியது.
அவள் மணமுடித்தவள் என்றால் இவனுக்கென்ன… ஆனாலும் அந்த மஞ்சள் கயிறு அவனுக்குப் பிடிக்கவில்லை. யார் இவள்? என்று யோசிக்கும் போதே,
அவன் பக்கமாகச் சற்றுக் குனிந்த சேது,
“இந்தப் பெண்தான் அண்ணா… உங்களைப் பற்றிப் புகார் கொடுத்தது…” என்றான் கிசுகிசுப்பாய். அதுவரை ஆராய்ச்சியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஏகவாமன், இப்போது முகம் இறுக, அவளை வெறித்துப் பார்த்தான்.
‘எதற்காக அவனைப்பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவேண்டும்? இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… ஒரு வேளை நம்மிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஒருவனுடைய மனைவியாக இருக்குமோ? எது எப்படியோ, அவளைக் கண்டதும் மனதின் ஓரத்தில் ஏற்பட்ட இனம்புரியாத மெல்லிய சலனம் அவனுக்குப் பிடிக்கவில்லை. உடனே அவளை அங்கிருந்த விரட்டவேண்டும் என்பது மட்டும் தோன்ற,
“யார் நீ…” என்றான் கறாராக. குரலில் கூட வித்தியாசம் தெரிந்தது. குரலா அவை… விழிகளைவிட அவனுடைய குரல் மேலும் ஒரு வித விதிர் விதிர்ப்பை அவளுக்கு ஏற்படுத்த, அவளையும் அறியாது அவளுடைய உடல் மெதுவாக நடுங்கத் தொடங்கியது. எதற்காகப் பயப்படுகிறோம் என்று புரியாமலே பயப்பட்டாள் அலரந்திரி.
அவளுடைய நடுக்கத்தை ஒரு வித அலட்சியமாகப் பார்த்தவன்,
“கேட்கிறேனே… யார் நீ…” என்றான் ஏகவாமன் இப்போது சற்று உயர்த்திய குரலில்.
“நா… நான்…” என்றவளுக்கு அதற்குமேல் சொல்ல முடியவில்லை. அவளும் என்னதான் சொல்வாள்? உன் தம்பியின் மனைவி என்பதா? சொன்னால் நம்புவானா? இல்லை நம்பக்கூடிய தோற்றத்தில்தான் அவள் இருக்கிறாளா?
“அதைத்தான் நான் கேட்கிறேன். யார் நீ? எதற்காக என்னைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் கொடுக்கப் போனாய்?” என்றான் அவன் அதிகாரமாக.
எதைச் சொல்வது. உன்மேல் ஏற்பட்ட கோபத்தில் அப்படிச் செய்தேன் என்பதா? என் கணவனை நீ இங்கே எடுத்துவந்துவிட்டாய் அதற்காகப் பழிவாங்கினேன் என்று சொல்வதா? இல்லை உன்னை எப்படிப் பார்ப்பது என்று தெரியாமல் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினேன் என்பதா? எதைச் சொல்வது?
அவனிடம் சொல்வதற்காகத் தன் வாயைத் திறந்தவளுக்கு அவனுடைய விழிகளைக் கண்டதும், சொல்ல வந்தது அப்படியே வாயோடு அடைபட்டுப் போனது.
இவனுடைய ஊடுருவும் அந்தக் கண்களைப் பார்த்தால், எதையும் கூறமுடியாமல் வார்த்தைகள் திக்கித் தடுமாறுகின்றனவே. அவ்விழிகள் தன் விழிகளுக்குள்ளாக ஊடுருவி இதயத்திற்குள் நுழைந்து அங்கே மண்டிக்கிடந்த அவள் சோகத்தை அப்படியே வாரி அள்ளி எடுத்துச் சென்றுவிடுவன போலப் பார்க்கின்றனவே. அவை என்ன சொல்ல வந்தோம் என்பதையே மறக்கடிக்கின்றனவே என்று தடுமாறியவாறு நிற்க, எதுவும் பேசாது திகைத்துப்போய் நின்றவளை எரிச்சலுடன் பார்த்தான் ஏகவாமன்.
“ஹலோ… என்ன? எந்தக் கேள்வியைக் கேட்டாலும் இப்படி விழித்துக்கொண்டு நிற்கிறாயே? எந்தத் தைரியத்தில் காவல்துறையிடம் என்னைப் பற்றிப் புகார் கொடுத்தாய்?” என்ற கறாராகக் கேட்டவாறு அவளை மேலும் நெருங்க, இப்போத அலரந்திரிக்கு உள்ளத்துடன் சேர்ந்து உடலும் நடுங்கத் தொடங்கியது.
அவனுடைய உருவம் ஏதோ திருமாலே அவளை நோக்கி வேகமாக வருவது போன்ற ஒரு பிரமையை உருவாக்க வெலவெலத்துப் போனாள்.
அவனோ தன் புருவங்களைச் சுருக்கி, அதுவரை மார்பிலே கட்டியிருந்த தன் கரங்களை விலக்கி, தன் வலது காலைப் பின்புறமாக மடக்கத் தெறித்த வேட்டியை வலக்கரத்தால் பற்றி, அப்படியே அதன் நுனியைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து நின்றவாறு, அவளைக் கீழ் கண்ணால் பார்த்தான். பின் தன் தலையைச் சற்று இடப்புறமாகச் சரித்து வலமிருந்து இடமாக அசைத்து,
“என்னைச் சிக்க வைக்கவேண்டும் என்பதில் அத்தனை அவசரமா? சரி அதை விடு உனக்குப் பின்னால் இருந்து என்னைச் சிக்கவைப்பதற்காக, உன்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் சக்தி என்ன?” என்றான் ஏளனமாக.
ஏகவாமன் அப்படிக் கேட்டதுதான் தாமதம், அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவன் நிரந்தரியை நோக்கி வேகமாகப் பாய முயல, அதைத் தன் உள்ளுணர்வால் உணர்ந்தவாறே, வேட்டி நுனியை விட்டவன், அக்கரத்தை உயர்த்திச் சுட்டு விரலைப் பாய்ந்தவனை நோக்கி நீட்ட, உடனே அவன் தடை போட்டதுபோல நின்று அலரந்திரியை முறைத்துப் பார்த்தான். விட்டிருந்தால் தன் கரத்திலிருந்து அருவாளால் அவளை இரண்டு துண்டாகப் பிளந்திருப்பான்.
அலரந்திரியோ அந்த வேலையாளிடம் அத்தகைய ஆவேசத்தை எதிர்பார்க்காததால் நடுங்கிப்போனாள். ஒரே பாய்ச்சல்… ஒரே வெட்டு… அவளுடைய கதை முடிந்தது. நினைக்கும்போதே நெஞ்சுக்கூடு காலியானது போன்ற உணர்வில் அதிர்ந்துபோனாள்.
அதுவரை அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்த ஏகவாமன், அவள் அச்சத்தைப் புரிந்துகொண்டவனாக, சற்றுத் திரும்பி, அந்த அடியாளைப் பார்த்து, நீட்டிய சுட்டுவிரலைச் சுழற்றி அசைத்து அவனைப் பின்னால் செல்லுமாறு எச்சரிக்க, அவனுடைய கட்டளைக்கு மறுப்பேதும் சொல்ல முடியாது, பின்னால் சென்றாலும் அந்தத் தடியன் நிரந்தரியைக் கொலை வெறியுடன் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
இப்போது கரங்களைப் பின்னால் கட்டியவாறு, அவளை உற்றுப் பார்த்த ஏகவாமன்,
“பார்த்தாய் அல்லவா… சும்மா எனக்கு எதிராகச் சுட்டுவிரலை நீட்டுகிறாய் என்பது தெரிந்த உடனேயே உன்னைக் கொல்லத் துணிகிறார்கள்… உண்மை தெரிந்தது… அதற்குப் பிறகு கடவுளால் கூட உன்னைக் காக்க முடியாது… மரியாதையாகச் சொல்… யார் நீ… என்னைப் பற்றி எதற்காகப் புகார் கொடுத்தாய்? நீயாகக் கொடுத்தாயா இல்லை… யாரும் ஒருவரின் தூண்டுதலில் நீ கொடுத்தாயா?” என்றான் ஏகவாமன் மிகுந்த அழுத்தத்துடன்.
அலரந்திரிக்கு அவன் கூறிய எதுவும் புரியவேயில்லை. அவன் மீது புகார் கொடுக்க யாரோ என்னைத் தூண்டினார்களா? என்னை எதற்காகத் தூண்டவேண்டும்.. என்ன சொல்கிறான் இவன்…? என்று குழம்பியவளாக,
“என்ன உளறுகிறீர்கள்…? உங்கள்மீது புகார் கொடுக்க என்னை எதற்காகத் தூண்டிவிடவேண்டும்…? நீங்கள் என்ன இந்த நாட்டின் பிரதம மந்திரியா? இல்லை பெரிய அப்பாடக்கரா…? வெறும் ரௌடிதானே…! செய்த தவற்றுக்குப் புகார் கொடுப்பதற்கு எதற்கு இன்னொருவர் தூண்டிவிடவேண்டும்?” என்றாள் பெரும் சினத்துடன்.
அதே நேரம் தங்கள் தலைவனை ஒருத்தி அலட்சியமாக, அதுவும் ஊதாசினமாகப் பேசுவதா? கடும் ஆத்திரத்தில் அத்தனை வேலையாட்களின் உடல்களும் இறுக, அவளைக் கொலை வெறியுடன் பார்க்க, அந்த ஏகவாமனோ அதைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாது,
“அதை நீதான் சொல்லவேண்டும்…” என்றான் சற்றும் இரங்காமல்.
அதே நேரம் அலரந்திரிக்குப் பின்னால் நின்றிருந்த ஒருவன் திடீர் என்று தன் இடையிலிருந்த குறுங்கத்தியை இழுத்தெடுத்தவாறு, முன்னால் நின்றிருந்தவளைத் ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு, கொலைவெறியுடன் ஏகவாமனை நோக்கிப் பாய, அடுத்து நடந்தவை அனைத்தும் கற்பனைக்கும் எட்டாத சம்பவமானது.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…