எப்படியோ அனைத்தும் ஒரு நிலைக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகமாக ஆவன செய்துவிட்டு நிமிர்ந்தபோதே, அதிகாலை ஐந்து மணியையும் கடந்துவிட்டிருந்தது.
சரி, இனி அலரந்திரியைப் போய்ப் பார்க்கலாம் என்று திரும்பிய வேளையில் கைப்பேசி அலற, எடுத்துக் காதில் பொருத்தியபோது, மறுபக்கம் கூரிய செய்தியில் ஒரு கணம் ஆடிப்போனவனாக நின்றிருந்தான் ஏக்வாமன். தன்னையும் மறந்து, “நீயா…” என்றான்.
“என்ன கேள்வி இது வாமன்… உனக்குள்ள ஒரே எதிரி நான்தான்… நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்… ம்…” என்று மறுபக்கம் கரகரப்புடன் கேட்க ஏகவாமனின் இரத்த அழுத்தம் எகிறியது. விழிகள் சிவந்தன. பற்கள் ஒன்றோடொன்று நெருமியது… கை முஷ்டிகள் இறுகின.
“எனது ஊகம் சரி என்றால்… உனது இரத்தம் இப்போது கொதித்துக்கொண்டிருக்கிறது… அப்படித்தானே… அடடே…. அந்தக் காட்சியைப் பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே… வாமன்… வேண்டுமானால் இந்தக் கருந்தேவனுக்காக ஒரு உதவி செய்கிறாயா? உன்னுடைய மூஞ்சியைப் படமெடுத்து நெட்டில் போட்டுவிடுகிறாயா… எப்படியாச்சும் பார்த்துக் கொள்கிறேன்…” என்று மறுபக்கம் கிண்டலாகக் கூற,
“யு… சன் ஆஃப் எ… xxx” என்று சீறினான் ஏகவாமன்.
“ஐயையையையே… என்னப்பா உனக்கு இப்படியெல்லாம் கோபம் வருகிறது… சரியில்லையே… ம்… நீ என்னைச் சொல்கிறாயே… நீ எப்படி… மருத்துவமனையில் உன் தம்பி பெண்டாட்டி என்று வந்தவளையே கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாயாமே… கேட்கும்போதே அசிங்கமாக இல்லை…” என்று அதே ஏளனத்துடன் கேட்க. ஏகவாமனின் கன்னத்தின் ஓரம் அதீத கொதிப்பில் துடிக்கத் தொடங்கியது.
“சரி சரி… அதை விடு… ஊர் உலகத்தில் நடக்காத விஷயமா இதெல்லாம்… அதைக் கண்டும் காணாமலும் நான் விட்டுவிடுகிறேன்… ஆனாலும் உன் தம்பிக்கு ஆயுள் கெட்டிதான்டா… மூன்று வருடங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறானே…” என்றதும் இவன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து நின்றான்.
“என்ன எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தாயா? உன்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம் வாமன்.!அப்புறம்… முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன்… ஏதோ… இன்றைக்குக் காப்பாற்றிவிட்டாய் போல இருக்கிறது… இன்னும் எத்தனை நாளைக்கு உன் தம்பி பொண்டாட்டியைக் காக்கப் போகிறாய்…? நாளை… நாளை மறு நாள்…. அதற்கு மறுநாள்… ?” என்று கொக்கரிக்க, மிதமிஞ்சிய ஆத்திரத்தில் ஏவாமனின் மூச்சு மூசியவாறு வெளியே வந்தது.
“அப்படியானால் இன்று குடிசைக்குத் தீ வைத்தது…”
“இன்னுமா சந்தேகப் படுகிறாய்? நானேதான்பா… சந்தேகப் படாதே தம்பி… நானேதான் தீ வைத்தேன்… அது எப்படி… அவள் உன் தம்பியின் மனைவி என்று உறுதிப்பட்ட பின்னும் அவளை உயிரோடு விடுவேன்… எப்போதோ போயிருக்க வேண்டியவள்… அந்த டாக்டர் செய்த குளறுபடியால் இத்தனை காலம் உயிர் தப்பினாள்… ஆனால் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றாய் பார்… அதற்கு மேலும் சும்மா இருந்தால் எப்படி… கடவுள் என்னைக் கோவிக்காது… ஆனால் பார்… சுலபமாக எரிந்து சாகவேண்டியவளை வந்து காப்பாற்றிவிட்டாயே… அட அட அட… என்ன வேகம் என்ன வேகம்… புயல் தான் போ…” என்று மறு பக்கம் முடிக்கவில்லை,
“இதோ பார்… அவள்மீது உன் விரலின் நுனி பட்டாலே உன்னைப் பொசுக்கிவிடுவேன் ஜாக்கிரதை…” என்றான் கனன்ற ஆத்திரத்துடன்.
“அட… தம்பி மனைவிமீது எம்பிட்டு அக்கறை… ஏன் வாமா… உன்மையாக அவள் உன் தம்பி பெண்டாட்டிதானா… இல்லை… உன்னுடைய… கழுதை விடு… இதைப் பற்றிய ஆராய்ச்சி நமக்கெதற்கு…? ஆனாலும்… மூன்று வருடங்களாக என்னைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறாய்… இன்று வரை உன்னால் ஒரு ஆணியும் பிடுங்க முடியவில்லை. இனியும் பிடுங்கிவிடுவாயா என்ன?” நக்கலுடன் கேட்டதும், அதற்கு மேல் கேட்க முடியாதவனாகத் தன் கைப்பேசியை ஓங்கித் தரையில் வீச அது சுக்கு நூறாக உடைந்து சிதறிப் போனது.
ஏனோ மனம் தாங்க முடியாத பயத்தில் நடுங்கியது. தனது மட்டுமல்ல, அவளுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள் என்பது புரிய ஆடிப்போனான் ஏகவாமன். இதற்குப் பிறகு நிச்சயமாக அவளால் தனித்து வாழ முடியாது… அவளுக்குப் பாதுகாப்பு வேண்டும்… அவள்மீது சிறு துரும்பு கூடப் படாது காத்துக் கொள்ள வேண்டும்… அதுவும் உடனடியாக…? எப்படி… எப்படி…?” என்று தன்னை மறந்து யோசித்தவனின் கரங்கள் தலை முடியை அழுந்தக் கோதி விட்டன. விழிகள் மூடிக் கொண்டன…
அதே நேரம் நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால், இடி இடி என்று நகைத்துக்கொண்டிருந்தான் கருந்தேவன். அவனுடைய முகம் குதூகலத்தில் மலர்ந்தது.
“வாடா என் சிங்கக் குட்டி… உன்னைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன் கண்ணா…” என்று தன் இளைய மகனை இழுத்து அணைத்துக்கொண்ட கருந்தேவனை அதே ஆக்ரோஷத்துடன் பார்த்தான் வீரதேவன்.
“அப்பா… எங்கள் அண்ணாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்றான் அல்லவா அந்த ஏகவாமன்… அவனைச் சும்மா விடக் கூடாது அப்பா… அவனால்தானே எங்கள் தாத்தாவை இழந்தோம்… அம்மாவை இழந்தோம்… இழப்பின் வலி என்றால் என்ன என்று தெரிய வேண்டாம்… அவனுக்கு உறவு என்று சொல்ல யாரும்… யாருமே இருக்கக் கூடாது. ஒவ்வொரு விநாடியும்… ஒவ்வொரு நொடியும்… அந்த வலி அவனை வதைக்க வேண்டும்…” என்றான் கடும் ஆக்ரோஷத்துடன்.
“பலே… பலே… அவனுடைய ஒவ்வொரு துளி இரத்தமும் நிலத்தில் விழும்போது வலியோடு விழவேண்டும் வீரா…” என்ற கருந்தேவன் கூற,
“நிச்சயமாக… அந்தக் கிழடுகளையும் கொன்றிருப்பேன்… நீதான்… வேண்டாம்… என்றாய்… இல்லையென்றால், எப்போதே அவர்களைப் புதைத்த இடத்தல் புல் முழைத்திருக்கும்… என்று வீரதேவன் கூற,
“அடப் போடா… கிழடுகள்… இன்னும் கொஞ்சக்காலத்தில் தானாகவே உயிர் போய்விடும்… எதற்கு அதுகளையும் கொன்று கரங்களைக் கறைபடிய விடுவான்…” என்ற கருந்தேவன், எதையோ யோசித்தவனாக,
“வீரா… எனக்கென்னவோ அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் ஏதோ இருப்பது போலத்தான் தோன்றுகிறது. அவளைப் பற்றிக் கூறிய உடனே பொங்குறானே…?” என்று இழுக்க,
“தெரியவில்லை… முதன் முதலாக ஜெயவாமனின் மனைவி என்று கூறிக்கொண்டுதான் வந்தாள்… விசாரித்த இடத்தில் ஜெயவாமனுக்கும் இவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ பித்தலாட்டம் என்றுதான் நினைத்தேன்… ஆனால்… ஏகவாமன் அவளையே அழைத்துக்கொண்டு அந்தப் பரராஜசிங்கத்தின் மருத்துவமனைக்குப் போகத்தான் ஏதோ இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்டேன்… ஆனாலும் அந்த ஜெயவாமனுக்கு ஆயுள் கெட்டிதான்” என்று எரிச்சலுடன் கூற,
“சரி… நடந்தது நடந்து விட்டது… இதோ பார்… நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் அந்தப் பெண்ணுடைய இரத்தத்தை நான் பார்க்க வேண்டும்… புரிந்ததா?” என்று கர்ஜிக்க.
“நிச்சயம்பா… அந்த நல்ல செய்தியோடுதான் அடுத்து உங்களபை பார்ப்பேன்…” என்றுவிட்டு வெளியேறிய இளைய மகன் வீரதேவனைப் பெருமையுடன் பார்துக்கொண்டிருந்தானர் கருந்தேவன்.
அதே நேரம், அலரந்திரிக்குப் பாதுகாப்பின் அவசியம் புரிய. சற்றும் தாமதிக்காது, வேக நடையுடன் அவளை நெருங்கினான் ஏகவாமன்.
அப்போதுதான் ஒரு சிறுமி தண்ணீர் கேட்க, போத்தல் மூடியைத் திறந்து கொண்டிருந்தவளின் கவனத்தை ஒரு நிழல் கவரத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே உதித்த சூரியனை மறைந்தவாறு, ஏகவாமன் நின்றிருந்தான். ஏனோ நெஞ்சம் படபடக்க, அவசரமாக அவனிடமிருந்து பார்வையை விலக்கி அந்தச் சிறுமியிடம் செலுத்த, இவளுடைய அலட்சியம் ஏகவமனை சற்று அசைத்துப் பார்த்தது. கூடவே சுறு சுறு என்று கோபமும் எழத்தொடங்க, சிரமப்பட்டு அதை அடக்கியவனாக,
“நான் உன் கூடச் சற்றுப் பேசவேண்டும்…” என்றான்.
அவனுடைய அந்தக் குரலில், ஒரு கணம் தடுமாறியவள், தன் கரத்திலிருந்த தண்ணீர் போத்தலின் மூடியைத் திறந்து அந்தப் பெண்ணின் கரத்தில் வைத்தவாறு அவனை மேலும் அலட்சியம் செய்ய இவன் தன் பற்களைக் கடித்தான்.
நடக்கப் போகும் விபரீதம் எதுவும் புரியாமல், முகத்தைத் திருப்புபவளை என்ன செய்வது என்று தெரியாமல் எரிச்சலுடன் பார்த்தவன்,
“அலரந்திரி… உன்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்… உன் கூடக் கொஞ்சம் பேசவேண்டும்” என்றான் அழுத்தமாக. தன் கரத்திலிருந்த தண்ணீர் போத்தலை இறுகப் பற்றியவள், வேகமா அவன் பக்கமாகத் திரும்பி,
“எதற்கு?… முன்பு உங்கள் தம்பி உயிரோடு இருக்கிறார் என்று பெரிய பூதத்தையே திறந்து விட்டீர்கள்… இப்போது எந்தப் பிசாசை மறைத்து வைத்திருக்கிறீர் திறந்து விட? இதோ பாருங்கள்…அன்றே சொல்லிவிட்டேன்… உங்கள் பாதை வேறு என் பாதை வேறு என்று… மீண்டும் அந்தப் பாதையை இணைக்க நான் தயாராக இல்லை… தயவு செய்து என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்…” என்று அழுத்தமாகக் கூற,
“அலரந்திரி… இது வேறு பிரச்சனை… விபரமாகக் கூறுகிறேன்… தயவு செய்து என் கூட வா…” என்றவாறு அவளுடைய கரத்தைப் பற்றப் போகச் சடார் என்று இரண்டடி தள்ளி நின்றாள் அலரந்திரி. நீட்டிய கையைக் கீழே இறக்கியவனுக்குப் பொறுமை மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. ஆனாலும் தன்னைச் சமாளித்தவாறு,
“என்னுடைய பொறுமையை நீ மிகவும் சோதிக்கிறாய் பெண்ணே… இதோ பார்… நீயாக என் கூட வரப் போகிறாயா… இல்லை… இத்தனை பேரும் பார்க்கட்டுமே என்று இழுத்துச் செல்லவா?” என்றவனின் அடக்கிய ஆத்திரத்தைக் கண்டுகொண்டவளுக்கு ஏனோ அதுவரையிருந்த தைரியம் மெதுவாகக் கலைந்து போயிற்று. தன்னையும் மறந்து சுத்தவரப் பார்த்தவளுக்கு இத்தனை பேர் இருக்கும் போது, என்னை என்ன செய்துவிட முடியும்? என்கிற தைரியத்தில்,
“அப்படியா… ஐயையோ… பயமாக இருக்கிறதே…” என்று கிண்டலுடன் கூறியவள், “இதோ பாருங்கள் சார்… என்னைக் காப்பாற்றினீர்கள் என்பதற்காக, நீங்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுப்பேன் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்திருந்தால், அந்த நினைப்பை இந்தக் கணமே மறந்து விடுங்கள்… ஏதோ இவர்களுக்கெல்லாம் உதவி செய்தீர்கள்… மிக்க நன்றி… அதோடு முடிந்தது…” என்று கூறிவிட்டுத் திரும்ப முயல, அவளுடைய பாதையை மறைத்து நின்றிருந்தவனுடைய உதடுகள் மெல்லிய புன்னகையைத் தத்தெடுத்தன.
ஊதிவிட்டால் பறந்து செல்லும் அளவிலிருந்து கொண்டு என்னமாகப் பேசுகிறாள்….? அவளை நோக்கி ஓரடி வைத்தவன், கிண்டலுடன்,
“இல்லையென்றால் என்ன செய்வாய் பெண்ணே… அன்று சிலரை அடித்தாயே… அதே போல என்னையும் அடிப்பாயா? உன்னால் அது முடியுமா… வேண்டுமானால் முயன்று பாரேன்…” என்று மெல்லிய நகைப்புடன் கூற, அவனை அண்ணாந்து பார்த்தாள் அலரந்திரி.
அவள் அடித்தால் வாங்கும் உடலா அது… எப்படித்தான் அடித்தாலும் கொசு கடித்ததுபோலத்தான் அவனுக்குத் தோன்றும். எரிச்சலுடன் தலையைக் குனிய, அதுவரை பொறுமையாக இருந்தவன் அதற்கு மேல் முடியாதவனாக,
“லிசின்… ஐ ஆம் சோ டயர்ட்… தவிர உன்னோடு மல்லுக்கட்டச் சத்தியமாக எனக்கு நேரமில்லை… பொறுமையும் இல்லை… தயவு செய்து என் கூட வருகிறாயா?” என்றவனை ஏறிட்டுப் பார்த்தாள் அலரந்திரி.
அவன் சொல்வது போலக் களைத்துத்தான் இருந்தான். முகம் வாடியிருந்தது. அவன் அணிந்திருந்த கையில்லாத பெனியனிலும், முகத்திலும் கரி பூசியிருந்தது. எது எப்படியாக இருந்தாலும் அவனுடன் செல்வதற்கு மனம் வரவில்லை.
“களைப்பாக இருந்தால் போய் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்… அதைவிட்டுவிட்டு இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று அவள் கேட்க, வேகமாக அவளை நெருங்கியவன்,
“சாரி… எனக்கிதை விட வேறு வழியில்லை…” என்றவாறு அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.
அதிர்ந்துபோனாள் அலரந்திரி. பதற்றத்துடன் தன்னை விடுவிக்க முயன்றவளுக்கு அவனுடைய இறுகிய பிடியிலிருந்து இம்மியும் விலகமுடியவில்லை. தன் கால்களை உதறித் திமிறியவாறு
“என்ன இது… காட்டுமிராண்டித் தனம்… விடுங்கள் என்னை…” என்று அவனுடைய மார்பை அடித்தவாறு தன்னை விடுவிக்க முயல, அவனோ, அவளைக் கீழ்க்கண்ணால் பார்த்து,
“பார்க்கட்டும்… மரியாதையாக வா என்றேன்… நீதான் முடியாதென்று அடம்பிடித்தாய்… கேட்டும் கிடைக்கவில்லையென்றால், பறித்தெடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை…” என்றவாறு வாகனம்வரைக்கும் சுமந்து சென்றான் ஏகவாமன்.
அலரந்திரிக்கோ, அவனுடைய கரங்கள் பட்ட இடங்கள் முழுவதும் தகிப்புடன் எரிந்தது. அதுவும் அவனிடம் திமிறும்போது அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்ட விதத்திலும், அவனுடைய விரல்கள் பட்ட இடங்களிலும், உள்ளுக்குள் பெரும் பூகம்பமே எழுந்தது.
வாகனத்தை நெருங்கியவன், அவளை இறக்காமலே கதவைத் திறந்து அதில் அவளை இருக்கையில் அமர்த்திவிட்டுக் கதவைச் சாத்த முயல, இவளோ இறங்க முயன்றாள். அவளை நோக்கிக் குனிந்தவன்,
“லிசின்… ஒரு அடி… ஒரு அடி கீழே உன் காலை வைத்தாய்… அதன் பிறகு முதன் முறை என்னைப் பார்த்தாயே… அந்த ஏகவாமனைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவாய்… புரிந்ததா…” என்று அடிக் குரலில் அவன் கர்ஜிக்க, அந்தக் குரலில் வெலவெலத்தவளாகச் சட்டென்று உள்ளே கால்களை வைத்து அமர்ந்து கொண்டவளுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.
அசையாமல் வெளியே வெறித்துக் கொண்டிருக்க, அவளை நோக்கிக் குனிந்தான். அதிர்ந்தவளாக அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளுக்குரிய இருக்கைவாரை இழுத்துப் போட, மிக மிக அருகே தெரிந்த அவனுடைய கம்பீர முகத்தைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள்ளே தடுமாறியது. அவனும் அவளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கைவாரைப் போட்டான். அஞ்சிய முகமும், நடுங்கிய தேகமும் அவனுள் மெல்லிய சலனத்தை ஏற்படுத்த, தன் நினைவுகள் போகும் திசை கண்டு, எரிச்சல் கொண்டவனாக எதையோ முணுமுணுத்தவாறு காரை உயிர்ப்பித்தான்.
இப்போது புதிய அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. எங்கே அழைத்துப் போகிறான்… நடுக்கத்துடன் அவனை ஏறிட, அவள் என்ன கேட்க வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவனாக,
“நான் எதைச் சொன்னாலும் இப்போது நீ நம்பப்போவதும் இல்லை. அதைக் காதைக் கொடுத்துக் கேட்கப்போவதும் இல்லை. அதனால் கொஞ்சம் பொறுமையாக இரு… போனபின்பு தெரியும்…” என்றான் அழுத்தமாக.
அவளோ தயக்கத்துடனும் சந்தேகத்துடன் அவனைப் பார்க்க, அவள் விழிகளில் தெரிந்த மொழியைப் படித்து அறிந்தவனுக்கு ஏனோ முகம் கறுத்து இறுகிப் போனது.
இவள் என்னைப் பற்றி என்ன நினைத்தாள். பெண் கிடைத்ததும் பாய்ந்து பலவந்தப் படுத்தும் பொறுக்கி என்றா? தன் பற்களைக் கடித்து விழிகளை இறுக மூடித் திறந்தவன் பின் அவளை உற்றுப் பார்த்து,
“என் தாய்… என்னை வளர்க்கும்போது, பெண்களை மதிக்கவும், போற்றவும் கற்றுக் கொடுத்தார்கள். இன்று வரை அவர்கள் கற்றுக் கொடுத்ததை நான் மறந்ததுமில்லை, அவர்கள் தலை குனியுமாறு நடந்துகொண்டதும் கிடையாது… இனி நடக்கப் போவதுமில்லை… கூடவே…” என்றவன் அவளை ஒரு வித ஏக்கத்துடன் பார்த்துவிட்டு,
“நான் தொடும் பெண் என் மனைவியாக, உயிர் காதலியாக இருக்கவேண்டும்… என்னைப் புரிந்துகொண்டவளாக, என்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டவளாக இருக்க வேண்டும்… அது நிச்சயமாக நீ இல்லை… அதுவும் என் தம்பியின்…” என்றவன் அவசரமாகத் தன் வார்த்தைகளை இடை நிறுத்தி, எதையோ விழுங்கியவனாகப் பெரும் வேதனையுடன் வெளியே வெறித்துப் பார்த்து,
“அது நிச்சயமாக நீ இல்லை… நான் சத்தியம் செய்கிறேன்… என் விரல் நகம் கூட உன்னைத் தப்பான நோக்கத்தில் தீண்டாது…” என்றவன் இன்னும் அவள் முகத்திலிருந்து விலகாதிருந்த சந்தேகத்தையும், தெரிந்த பயத்தையும், அதனால் விளைந்த நடுக்கத்தையும் கண்டு பெரும் சீற்றத்துடன் வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்.
தான் சொல்லியும் நம்பாதவளைக் கடும் ஆத்திரத்துடன் பார்த்தவன், கதவைத் திறந்து சடார் என்று வெளியே வந்தான். சற்று நேரம் இடையில் கரத்தைப் பதித்து அண்ணாந்து வாணத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்கு மனம் கனத்துப் போனது.
என்ன சொன்னாலும் நம்ப மறுப்பவளிடம் எதைச் சொல்லிப் புரியவைப்பது. சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பாளா? நினைக்கும் போதே பெரும் ஆயாசமானது.
சலிப்புடன் அவள் புரத்துக் கதவைத் திறக்க, அவசரமாகத் தள்ளி அமர்ந்தவாறு இவனை வெறித்தாள் அலரந்தரி.
அவனோ, அவளுக்கு முன்புறமாக இருந்த டாஷ் போர்டைத் திறந்து, அதற்குள்ளிருந்த துப்பாக்கியை வெளியே எடுக்க, அலரந்திரிக்கு விழிகள் தெரிந்துவிடும் போல விரிந்தன. அவளையும் மீறிக் கரங்களுடன் சேர்ந்து இதயமும் நடுங்கியது.
அவனோ நிமிர்ந்தவன், துப்பாக்கியை இழுத்து லோட் பண்ணினான். அவன் நிமிர்ந்த விதமும், துப்பாக்கியை இழுத்த விதத்தையும் கண்டவளுக்கு, அவன் தன்னைத்தான் சுடப்போகிறான் என்று தெரிய, பதற்றத்துடன் உயிரைக் கையில் பிடித்தவாறு கீழே இறங்க முயன்றாள். அவனோ, அவளுடைய பாதையைக் குறுக்காக மறைத்து நின்றவாறு அவளை நோக்கிக் குனிந்தான்.
இப்போது அவனுடைய கம்பீரமான முகம் அவளுடைய முகத்தை நோக்கி நெருங்கியிருந்தது. அச்சத்துடன் தன் விழிகளை இறுக மூடியவாறு, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்கிற கிலியுடன் அப்படியே இருக்க, அவனோ மடியில் கிடந்த அவளுடைய தளிர் கரங்களைப் பற்றினான்.
பதட்டத்துடன் தன் விழிகளைத் திறக்க, அவனோ, அவளுடைய இடது உள்ளங்கையைப் பற்றி, அதில் துப்பாக்கியை வைக்க, குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள் அலரந்திரி.
துப்பாக்கியோடு கரங்களைப் பற்றி, அவள் புறமாக மண்டியிட்டு அமர்ந்து, நிமிர்ந்து பார்த்தான். அவளோ தெறித்து விடும் விழிகளுடன் அவன் பிடியில் சிக்கியிருந்த தன் கரங்களையும், அந்தத் துப்பாக்கியையுமே பார்த்துக்கொண்டிருக்க,
“இதில் லோட் பண்ணியிருக்கிறது… ஒரு வேளை… நான் தப்பாக நடப்பதுபோல உனக்குச் சிறு சந்தேகம் தோன்றினாலும் சற்றும் யோசிக்காமல் என்னைச் சுட்டுவிடு…” என்றான். அவளோ நம்ப மாட்டாமல் அவனைப் பார்க்க,
“சுடும்போது…” என்றவன், தன்னையும் மீறி அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். என்னென்னவோ நினைவுகள் அவனை உருக்கி எடுக்க, அவளுடைய விழிகளுடன் தன் விழிகளைக் கலந்து, தன் இடது மார்பைச் சுட்டிக்காட்டி,
“நேராக என் இங்கே சுடு…” என்று கூறிவிட்டு எழ, இவளோ பேச்சற்றவளாக அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘இவனைச் சுடுவதா… அதுவும் அவள்… நடக்கும் காரியமா? நினைக்கும் போதே யாரோ இதயத்தில் ஆணி அடித்ததுபோலத் தோன்ற, தன் கரத்திலிருந்த துப்பாக்கியையே வெறித்தாள் அலரந்திரி.’ அவனோ, தரையில் அழுத்தியிருந்த அவளுடைய கால்களைப் பற்றி உள்ளே வைத்து விட்டு, வெளியே தெரிந்த சேலையைக் கூட்டி உள்ளே தள்ளிக் கதவைச் சாத்திய பின்னும் தன் கரத்திலிருந்த துப்பாக்கியிலிருந்து தன் விழிகளை விளக்காது அப்படியே நின்றிருக்க மறுபக்கம் வந்தமர்ந்தவன், வாகனத்தை உயிர்ப்பிக்க, மறு கணம் அது தெருவில் ஏறிப் பறக்கத் தொடங்கியது.
பத்து நிமிடப் பயணத்தில், ஏகவாமனின் வாகனம் ஒரு சிறிய வீட்டின் முன் வந்து நிற்க, இவளோ இன்னும் அச்சம் மாறாமல் அந்த வீட்டையே பார்த்தாள். திரும்பி அலரந்திரியைப் பார்த்தவன்,
“போகும் இடத்தில் இப்படியே போக முடியாது… குறைந்தது ஆடையாவது மாற்றவேண்டும்… பத்து நிமிடங்கள்தான்… உள்ளே வா…” என்றவாறு இறங்கியவன், அவள் புறமாக வந்து கதவைத் திறந்து விட, அவளோ பிடித்துவைத்த பிள்ளையார் போல அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவளுடைய எச்சரிக்கை உணர்வு புரிபடப் பல்லைக் கடித்தவன்,
“ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்… எந்தப் பெண்ணையும் நான் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை என்று… ஒரு பெண்ணைத் தப்பாகத் தொட்டதற்காகவே கட்டிவைத்து எரித்தவன் நான்… நானே அந்தத் தப்பைச் செய்வேன் என்று நினைத்தாயா? தவிரத் துப்பாக்கியையும் உன்னிடம் கொடுத்திருக்கிறேன்… பிறகு எதற்கு அச்சம்… ஓ… ஒரு வேளை டம்மி துப்பாக்கி என்று நினைத்தாயா? வேண்டுமானால் உன் காலுக்குக் கீழாகச் சுட்டுக் காண்பிக்கவா?” என்று அவன் கிண்டலுடன் கேட்க, அவசரமாகக் காரை விட்டு வெளியே வந்து நின்றாள் அலரந்திரி.
ஒரு கணமேயானாலும் அவளுடைய விழிகளில் தெரிந்த அச்சத்தைப் படித்துக்கொண்டவனுக்கு, மனம் சற்று இளகிப்போனது.
“உள்ளே வா…” என்று முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தாள் அலரந்திரி.
அந்த வீடு, அவனுடைய அரண்மனை வீட்டோடு ஒப்பிடும்போது மிக மிகச் சிறியதுதான்… ஆனாலும் ஒரு சிறிய குடும்பத்திற்கு அளவான வீடு. சிறிய தோட்டம். அமைதியான இடம்…
ஏனோ பார்க்கும்போதே அந்த வீடு பிடித்துப்போனது. சுத்தவரப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே,
“தையற் தொழிற்சாலை வாங்கும்போதே இந்த வீட்டையும் வாங்கியிருந்தேன்… போக்குவரத்திற்கு இலகுவாக இருக்கும் என்று… இப்போது இங்கேதான் தங்கியிருக்கிறேன்… அதனால்தான் விரைவாக வந்து உன்னைக் காப்பாற்ற முடிந்தது…» என்றவாறு கதவைத் திறக்க முயல அப்போதுதான் கரத்தின் வலியே அவனுக்குப் புரிந்தது. திறப்பிலிருந்து, கரத்தை விலக்கி உதறியவன், மீண்டும் திறக்க முயல, தன்னை மறந்து அவனை நெருங்கியவள்,
“நா… நான் திறக்கிறேன்…” என்றாள். மறுக்காது விலகிக்கொள்ள, ஒரு கரத்தால் துப்பாக்கியை ஏந்தியவாறு மறு கரத்தால் கதவைத் திறந்துவிட்டு, அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ
“உள்ளே போ…” என்றுவிட்டு, அவள் பின்னால் வீட்டிற்குள் நுழைந்தான். வீடு படு சுத்தமாக இருந்தது. சிறிய வீடு என்பதால், அதற்குப் பொருத்தமாகச் சிறிய தளபாடங்களே வைக்கப்பட்டிருந்தன.
“உட்கார்… இதோ வருகிறேன்…” என்றுவிட்டு, அங்கிருந்த அறைக்குள் நுழைய, இவளோ அதுவரை தன் கரத்தில் கனத்துக்கொண்டிருந்த துப்பாக்கியை அங்கிருந்த சிறிய மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, சுவரில் சில புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஆவலுடன் விரைந்து சென்று அவற்றைப் பார்வையிடத் தொடங்கினாள்.
அதில் ஒரு வயதுபோனவர், ஏகவாமனின் எழுபதுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில் நரைத்த தலை, முறுக்கிய மீசை என்று இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் ஒரு பாட்டி கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார். அவர்கள்தான் ஏகவாமனின் தாத்தா பாட்டி என்பது புரிந்தது. அவர்களுக்கு இரு பக்கமும் கதிரைச் சட்டங்களில் அமர்ந்தவாறு, ஏகவாமனும், காருண்யனும்… இல்லை ஜெயவாமனும் முகம் முழுக்கப் புன்னகையைச் சிந்தியவாறு அமர்ந்திருக்க, அவர்களுடைய கரங்களோ தாத்தா பாட்டியைக் கர்வத்துடன் அணைத்தவாறு இருந்தன. அவர்களுக்கு முன்னால் சம்மணமிட்டு, ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள்… அவள்தான் சௌந்தர்யா போலும்.
எத்தனை பெரிய அழகி… துரு துரு கண்கள்… சிவந்த உதடுகள்… சற்று அண்ணனின் சாயலுடன்… அவளைப் பார்க்கும் போதே உள்ளுக்குள் பெரும் வலி எழுந்தது. வாழக் கொடுத்து வைக்கவில்லையே அவளுக்கு… வேதனையுடன் விழிகளை நிமிர்த்த, தாத்தா பாட்டிக்குப் பின்னால் ஏகவாமனின் தாய் தந்தை, அருகருகே நின்றிருந்தனர். சேதுபதியின் இடது கரம் கர்வத்துடன் தன் மனைவியின் தோளைச் சுற்றியவாறு நின்றிருக்க, கமலாதேவியோ, மெல்லிய நாணத்துடன், கண்களில் கருணை வடிய, முக மலர்ச்சியுடன் இவளையே பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது.
எத்தனை அழகான நிறைவான குடும்பம்… ஒரு விநாடியில் ஒன்றுமில்லாததாக ஆக்கிவிட்டார்களே அந்தக் கயவர்கள்… இந்நாள்வரை அவளுடைய வலிதான் பெரிதென்று எண்ணியிருந்தாள்… ஆனால் ஏகவாமனுடன் ஒப்பிடும்போது அவளுடைய வலி சிறுத்துக் குறுகியல்லவா தெரிகிறது… எத்தனை மகிழ்ச்சியாகக் கம்பீரமாக இருக்கிறான் ஏகவாமன். அவன் புன்னகையில் எத்தனை கர்வம்… எத்தனை சந்தோஷம்… அத்தனையையும் மொத்தமாகத் தொலைத்துவிட்டு, நிற்பெதன்றால்… எப்படித் துடித்திருப்பான்… எண்ணும்போதே யாரோ இதயத்தைக் கசக்கிப் பிழிவது போலத் தோன்றியது அலரந்தரிக்கு.
தன்னை மறந்து கரம் நீட்டி அந்தப் படத்தை வருடிக் கொடுக்க முயன்ற விநாடி, ஏகவாமனின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவசரமாகத் தன் கரத்தைக் கீழிறக்கியவள், கண்ணீரால் நிறைந்துபோன தன் கண்களைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, இவளை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தான் ஏகவாமன்.
எதையோ சொல்லத் தன் வாயை எடுத்தவன், அவள் விழிகளின் சிவப்பைக் கண்டு, அழுதிருப்பாள் என்பதைப் புரிந்துகொண்டவனாக,
“ஹே… என்னாச்சு… எங்காவது வலிக்கிறதா?” என்றான் சிறு பதற்றத்துடன். விழிகளோ அவசரமாக அவள் உடலை மேலிருந்து கீழ்வரை அலச, மறுப்பாகத் தன் தலையை ஆட்டியவள், சுவரில் தொங்கிய படத்தைக் காட்டி,
“உங்கள் தங்கை… மிகவும் அழகாக இருக்கிறாள்…” என்றாள்.
இப்போது ஏகவாமனின் முகம் கனிந்து போனது. பின் கலங்கிப் போக, தன் வலியை அவளுக்குக் காட்டப் பிடிக்காதவனாக, முகம் இறுக நின்று,
“யெஸ்… ஷி இஸ்…” என்றுவிட்டு தன் கரத்திலிருந்த சேலையை அவளிடம் நீட்டி,
“இது… இது… ம்கூம்… இது… என்னுடைய அம்மாவின் சேலை… இப்போதைக்கு இதுதான் இருக்கிறது…” என்று கூற, இதையேன் என்னிடம் கொடுக்கிறான் என்று புரியாமல் விழித்தாள் அலரந்திரி.
“அதோ… அதுதான் குளியலறை… இந்த வீட்டுக்கு ஒரு குளியலறைதான்… அதனால் போய்க் குளித்துவிட்டு இந்தச் சேலையை மாற்றிக்கொண்டு வா…” என்று அவன் கூற, அவன் கரத்திலிருந்த சேலையையே வெறித்தாள் அலரந்திரி.
அவனுடைய தாயின் சேலையையே அவளிடம் கொடுக்கிறானே… அந்தளவுக்கு அவளுடைய மதிப்பு உயர்ந்துவிட்டதா என்ன? நம்ப மாட்டாமல் அவனைப் பார்த்தவள், பின் மறுப்பாகத் தலையை அசைத்து,
“இ… இல்லை… இதுவே பரவாயில்லை… நா… நான் இப்படியே இருக்கிறேன்…” என்று கூற, கால்களைச் சற்று அகட்டி, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி, தலையை மேலும் கீழுமாக ஆட்டி,
“எப்படியே… இப்படியா…” என்றான், விழிகளால் அவளுடைய உச்சந்தலை முதல் பாதம்வரை பார்த்தவாறு.
அவன் கேட்ட விதத்தில் ஒரு வித சங்கடத்தை உணர்ந்து கொண்டவளாக, அவன் விழிகள் சென்ற திசை அறிந்து புருவங்கள் சுருங்கத் தன்னைக் குனிந்து பார்த்தாள் அலரந்திரி.
அப்போதுதான் கவனித்தாள், சேலை பல இடங்களில் நெருப்புப் பட்டுத் தீய்ந்துபோயிருந்தது. அதுவும் மார்புப் பகுதியில் ஒரு பக்கம் பெரிய ஓட்டையே விழுந்திருந்தது. பதற்றத்துடன் அதைச் சரிப்படுத்த முயல, இன்னொரு விரிசல் அவளைப் பார்த்துச் சிரித்தது. விழிகள் கலங்க நிமிர்ந்து அவனைப் பார்த்தால், அவனோ அவள் விழிகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய பார்வையில் அக்கறைதான் இருந்ததன்றி, அதை மீறி எதுவும் தெரியவில்லை. மெல்லிய தைரியமும் திடமும் தோன்ற, அவசரமாக அவன் கரத்திலிருந்த சேலையை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டவள், இதழ்களைக் கடித்தவாறு தலை குனிய, இப்போது அவனுடைய விழிகள் அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அவளுடைய உதடுகளில் பதிந்து நிலைத்து நின்றன.
‘ஏன் என் வாழ்வில் முன்னமே நீ வரவில்லை? வந்திருந்தால் இந்தத் தவிப்பு எனக்கேது…?’’ என்று எப்போதும் போல எண்ணிக் கலங்கியவனுக்குத் தறிகெட்டும் ஓடும் மனத்தை எப்படிச் சமப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. அவன் என்ன சன்னியாசியா என்ன முற்றும் துறந்து வாழ்க்கையைத் தொலைப்பதற்கு…? அவள்மீது காதல் கொண்டவனாயிற்றே. அதுவும் அவள் தவறானவள் என்று எண்ணியபோதே மனதைப் பறி கொடுத்தவன்… தம்பிக்கு மனைவியானவள் என்று தெரிந்து துடித்தபோதே அவளை விட்டு விலக முடியாது தவித்தவன், இப்போது தன்னை ஏற்க மாட்டாள் என்று தெரிந்த பின்னும், அவள் பக்கமாகவே சாயும் மனத்தை என்னவென்று கட்டுக்குள் கொண்டு வருவான்…? என்னதான் தம்பிக்கு வாக்குக் கொடுத்தாலும், அதை நிறைவேற்றுவது அத்தனை சுலபமா என்ன? தவிப்புடன் நின்றிருக்க, அவளோ,
“நா… நான்… குளிக்கிறேன்…” என்றுவிட்டு ஓட்டமாய்க் குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்த, நிமிர்ந்து அங்கிருந்த படத்தைப் பார்த்தவன்,
“மா… ஐ லவ் ஹேர்… ஆனால் என் மனைவியாக முடியாத நிலையில் இருக்கிறாள்… நான் என்ன செய்யட்டும்… இந்த அவஸ்தையிலிருந்து நான் எப்படி வெளியேறுவேன்… ப்ளீஸ்… ஹெல்ப் மீ… வித்தவுட் ஹேர்… ஐ ஆம் நத்திங்மா…” என்று முணுமுணுத்தவன், அதற்கு மேல் நின்றால் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்பத புரிய, மெல்லியதாகக் கோடிட்ட கண்ணீரை அவசரமாக மறைத்தவாறு தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் ஏகவாமன்.
அதே நேரம் குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திய அலரந்திரி தன் கரத்திலிருந்த சேலையை மார்போடு அணைத்தவாறு கதவின் மீது சாய்ந்து நின்றுகொண்டு விழிகளை மூட, ஏகவாமன்தான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். பதற்றத்துடன், தன் கரத்திலிருந்த சேலையில் முகத்தைப் புதைக்க, அதிலிருந்த வாசனை, தடுமாறிய இதயத்தைச் சற்றுச் சமப்படுத்துவது போலத் தோன்றியது. மெதுவாக விழிகளைத் திறந்தவள், பெருமூச்சுடன் சேலையையும், அதனோடு இணைந்த ரவிக்கையையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டுக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள்.
முகமெல்லாம் கரியப்பி, கழுத்தில் மெல்லிய எரி காயத்துடன் பார்க்கவே பயங்கரமாக இருக்கத் தன் சேலையைக் களைந்துவிட்டுக் குளியல் தொட்டியின் அருகே வந்து நின்று தண்ணீர் குழாயைத் திறந்து விட்டு, தண்ணீரை அள்ளி அள்ளிப் புகை மணம் போகும் வரைக்கும் தன் மீது ஊற்றத் தொடங்கினாள்.
ஷாம்பு போட்டுக் குளித்தும் புகை மணம் போவதாயில்லை. அங்கிருந்த சோப்பை எடுக்கக் கரத்தைக் கொண்டு சென்றவளுக்கு அதைத் தொடவே என்னவோ மாதிரியிருந்தது.
அவன்தானே பாவித்திருப்பான்… இதை எப்படித் தொடுவது?’ சங்கடத்துடன் கரத்தை நீட்டுவதும், பின் கரத்தை இழுப்பதுமாக நர்த்தனம் ஆடியவள், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் தண்ணீரில் சோப்பைப் பலவாட்டி கழுவிய பிறகே தன் உடலில் பூசிக்கொண்டாள் அலரந்திரி.
ஆனாலும் ஏனோ அவனுடைய வாசனை தன் மேனியில் படர்ந்ததுபோல ஒரு வித உணர்வு. ஒரு வகையில் அது பிடித்துத்தான் இருந்தது. மனதிற்கு யானை பலத்தைக் கொடுத்தது. கூடவே பெரும் சங்கடமாகவும் இருந்தது. எப்படியோ குளித்து முடித்து, அங்கே தொங்கிய துவாயை எடுக்கக் கரத்தை நீட்டியபோதும் அதே சங்கடம்தான். ஆனால் வேறு வழியில்லை. அதைக்கொண்டு துடைத்தேதான் ஆகவேண்டும். தலை முடியையும் உடலையும் துடைத்தவள், மீண்டும் கவனமாகத் துவாயை விரித்துப் போட்டுவிட்டு, அவன் கொடுத்த சேலையைப் பிரித்து அணிந்து கொண்டாள். ரவிக்கை அவளைவிட ஒரு சுற்றுப் பெரிதாக இருந்தது. ஆனாலும் மனதிற்கு இதமாக இருந்தது. அவனுடைய அன்னையினுடையதாயிற்றே… தன்னை மறந்து ஆவலுடன் சேலையை வருடிக் கொடுத்தவள், அதிக நேரம் எடுத்துக்கொள்ள முடியாமல் ஈரம் காயாத முடியைக் கொண்டையாக்கி வெளியே வந்தபோது, அவனும் குளிப்பதற்குத் தயாராகிக் கழுத்தைச் சுற்றித் துவாயைப் போட்டவாறு மாற்றுடையுடன் நின்றிருந்தான்.
அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள, அவனோ,
“ஒரு நிமிஷம்…” என்று அவளைத் தடுத்தான். இவள் தடை போட்டதுபோல நிற்க, மீண்டும் தன் அறைக்குச் சென்றவன், இன்னொரு துவாயுடன் வெளியே வந்து, அவள் முன்புறமிருந்த கதிரையில் போட்டுவிட்டு,
“தலையை நன்றாகத் துவட்டிக்கொள்… இன்னும் காயவில்லை” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றினான்.
தோளிலிருந்த தன் துவாயை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, ஆடைகளைக் களைய முயல, தரையின் ஓரமாகக் குவிந்திருந்த அவளுடைய சேலை கண்ணில் பட்டது.
என்னவென்று வரையறுக்க முடியாத உணர்வுடன் அந்தச் சேலையைக் குனிந்து எடுத்துப் பார்த்தவனுக்கு ஏனோ நெஞ்சம் தடதடத்தது. சற்று முன் அவள் அணிந்திருந்த சேலையல்லவா… பல இடங்களில் அவனுடைய மனதைப் போலவே பொசுங்கிப்போயிருந்தது. தன்னை மறந்து சேலையில் முதக்தைப் புதைக்க, ஏனோ அவளுடைய மடியில் தலைசாய்த்துப் படுத்த உணர்வு அவனுக்கு. பின் தன் புத்தி போகும் திசை உணர்ந்து சடார் என்று கரத்தை விலக்கியவன், தன் மீதே கோபம் கொண்டவனாக, அங்கிருந்த வாளியில் சேலையைச் சுருட்டிப் போட்டுவிட்டுக் குளியல் தெட்டியின் அருகே வந்து நின்றபோதும் அவளுடைய சேலையின் வாசனையை அவனுடைய நாசி உணர்ந்துகொண்டுதான் இருந்தது.
எதிலிருந்தோ தப்ப விரும்பியவனாகத் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றினான். குளிர்மையான தண்ணீர் தலையில் கொட்டினாலும் அவன் மனதின் தகிப்பை அதனால் சற்றும் குறைக்க முடியவில்லை.
அவளிடம் கூறியது பொல, எப்போதுமே அவள் எனக்குரியவள் ஆக மாட்டாளா… அதற்குரிய வாய்ப்புகள் இல்லையா?’ என்று எண்ணியபோதே உள்ளம் சோர்ந்து போனது. நிச்சயமாக அதற்குரிய வாய்ப்புக்கள் இல்லைதானே.
என்னதான் அவள்மீது அப்பழுக்கற்ற காதல் இருந்தாலும், அவள் யார் என்பதை மாற்ற முடியாதே. அவளும் அப்படித்தானே… இறந்த கணவனின் அண்ணனை எப்படி மணக்கச் சம்மதிப்பாள்…
அதுமட்டுமா? என்னதான் ஜெயவாமன் அவளை மணந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டாலும், இறந்துபோன தம்பி மனைவி என்கிற உணர்வு நெருஞ்சி முள்ளாய்க் குத்திக்கொண்டுதானே இருக்கம்… அதிலிருந்து எப்படி மீண்டு வருவது? ஒரு கணம் இவள்தான் என் மனைவி என்று துடிக்கும் மனது மறு கணம், இறந்த தம்பியை எண்ணிக் கதறுகிறதே… கூடவே அவளை விட்டு விலகி இருக்க முடியாமல் மனம் அல்லல் படுகிறதே…
இப்படிப் பல்வேறு பட்ட உணர்வில் சிக்கித் தவித்தவன் ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல், தண்ணீர் நிறைந்த தொட்டியை வெறித்தான். தன் இயலாமையில் ஆத்திரம் எழ, சடார் என்று அதற்குள் தன் முகத்தைப் புதைத்தான். மூச்சுத் தடைப்பட்டாலும், மனதைச் சமநிலைப் படுத்த அப்படியே நின்றிருந்தான். ஒரு கட்டத்தில், நுரையீரல் சுவாசத்திற்காகக் கெஞ்சியது. அப்படியிருந்தும் அவன் எழுந்தானில்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டுதானே… இறுதியில், உடல் நடுங்க, இனியும் முடியாது என்பது புரிய, ஆவேசத்துடன் எழுந்தவனின் விழிகளில் தோன்றிய கண்ணீரும் தண்ணீரோடு கரைந்து வழிந்து கீழே சென்றது.
குளித்து முடித்ததற்கு அறிகுறியாக முகத்தில் வடிந்த தண்ணீரை வழித்தெடுத்தவன், துவாயை எட்டி எடுத்துத் தலையைத் துவட்டத் தொடங்கினான். துடைத்த துவாயை இடையில் கட்டியவன், எடுத்துவந்த டிஷேர்ட்டை அணிந்துகொண்டு, வெளியே வந்தான்.
முன்னறை வெறுமையாக இருந்தது. எங்கே போனாள்? யோசனையுடன் தன அறைக்கு நுழைந்தவன் பாண்டை அணிந்து, பெல்ட்டை போட்டுவிட்டு வெளியே வந்தான்.
அவனுடைய விழிகளில், அங்கிருந்த மேசையில் அவனுடைய துப்பாக்கி தெரிய, விரைந்து சென்று அதை எடுத்துப் பான்டின் பின்புறம் செருகியவாறு பதட்டத்துடன் வாசலுக்கு வந்தான். அங்கே, உதிக்கும் சூரியனைப் பார்த்தவாறு தூண் ஒன்றில் சாய்ந்தவாறு நின்றிருந்தவளைக் கண்டதும், பதட்டம் மறைய, அவள் நின்றிருந்த தோரணையில் மொத்தமாய்த் தொலைந்து போனான்.
தொலைவில் சூரியனின் கதிர்கள் அவள்மீது பட, தங்கத் தாரகையாக மின்னியவளின் அழகிலிருந்து தன்னுடைய விழிகளை விலக்க முடியாமல் திணறினான் அந்த ஆண்மகன். கால காலமாக இப்படியே இருந்துவிடமாட்டோமா என்கிற ஏக்கம் அவனை வதைக்க அசைவற்று நின்றான் ஏகவாமன்.
அவனுடைய வரவு அவளைச் சலனப்படுத்தியதோ, அவசரமாகத் திரும்பிப் பார்க்க, ஏகவாமன் இவளைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதைக் கண்டதும், அதுவரை அமைதியாக இருந்த இதயம் படபக்க, என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவாறு நின்றாள் அலரந்திரி.
அவனோ, சுயநினைவு பெற்றவனாக, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தவாறு, “வண்டியில் ஏறு…” என்றுவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தவனுக்கு ஏனோ மூச்சே அடைபட்ட உணர்வில் திணறிப்போனான் ஏகவாமன்.
(27) நரைத்த முடி, சற்று சுருங்கிய வெண்ணிற முகம். நெற்றியில் பெரிய வட்டப் பொட்டு. அதற்கு மேல் திருநீற்றுக் குறி…
(11) கரங்களில் இரத்தம் வடிய, பற்களைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு அவனோடு இழுபட்டுச் சென்ற இதங்கனைக்கு போராடத் தோன்றவில்லை.…
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…