Categories: Ongoing Novel

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 14

(14)

இரண்டு மணி நேர ஓட்டத்தில், அலரந்திரி தங்கியிருக்கும் இடத்தை நெருங்கியபோது, சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். அதுபோல அவனுடைய தைரியமும் மெல்ல மெல்லக் கரையலாயிற்று. அவனையும் அறியாமல் நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது. எப்படி அவளை எதிர்கொள்ளப்போகிறான்? எப்படி உன்மை நிலையைச் சொல்லிப் புரியவைக்கப் போகிறான்… அவன் சொல்லும் செய்தியை அவளால் தாங்க முடியுமா… என்று புரியாமல் கலங்கித் தவிக்கும் போதே வாகனம் மெல்ல மெல்ல அவளுடைய குடிசைப் பகுதியை அண்மித்தது.

இறங்காமல் வாகனத்திலேயே இருந்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது தன்னை நிலைப்படுத்த. பாரபட்சமின்றி எதிரிகளை நசுக்கும் அந்த வீரனுக்கா இந்த நிலை? அதுவும் ஒரு பெண்ணிடம் பேசத் தயங்கி நிற்பது ஏகவாமன்தானா? எந்தச் சூழ்நிலையையும் அசால்ட்டாகக் கடந்து செல்லும் ஏகவாமன்தானா அடுத்து என்ன செய்வது என்று தெரியாது ஏங்கி நிற்பது? இதைத்தான் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களோ?

எப்படி அவளிடம் சென்று உன் கணவனான என் தம்பி உயிரோடு இருக்கிறான்… அதுவும் மரணத்தின் பிடியிலிருக்கிறான்… என்னுடன் வா என்று அழைக்கப்போகிறான்? அதுவும் அவளிடம்… என் நெஞ்சே வெடித்துவிடாதா… கடவுளே… இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாளப் போகிறேன்…

தாங்க முடியாத வேதனையுடன் தன் விழிகளை அழுந்த மூடியவன் வாகனத்தின் இருக்கையில் தலையைச் சாய்த்து சிறிது நேரம் அப்படியே இருந்தான். இதயம் ரணமாக இருந்தது. உள்ளத்தோடு உடலும் சேர்ந்து வலித்தது. யாரோ எதையோ அவனிடமிருந்து பிரித்தெடுப்பது போன்ற பரிதவிப்புடன் இதயம் வேகமாகத் துடித்தது. கூடவே சொந்தமான பொருள் ஒன்று கைநழுவிப் போன வலியில் தொண்டை கூட அடைத்தது. எப்படியோ தன்னைச் சமப்படுத்துபவனாக, ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து விட்டவாறு தன் முகத்தை அழுந்தத் தேய்ககம்போதே நலிந்த அவன் தம்பி மனக்கண் முன் வந்து நின்றான். யாருக்கு நியாயம் செய்யவில்லை என்றாலும், அவன் தம்பிக்குச் செய்தாகவேண்டுமே… வேதனையுடன் காரை விட்டுக் கீழே இறங்கினான்.

அதே நேரம் அவனைத் தொலைவில் கண்டுகொண்ட ஒருவன், தான் குடித்துக்கொண்டிருந்த புகையிலையைத் தூர எறிந்துவிட்டு, உள்ளே எடுத்த புகையை வெளியே ஊதியவாறு, கரங்களால் அதை அங்கும் இங்கும் தள்ளிவிட்டுப் பதற்றத்துடன் இவனை நோக்கி ஓடி வர, அவனைக் கண்ட ஏகவாமன்,

“அவளுடைய குடிசை எது?” என்றான். அவன் சுட்டிக் காட்ட,

“நன்றி ஆனந்தன்… இனி நீங்கள் புறப்படுங்கள்… இப்போதைக்கு உங்கள் உதவி தேவைப்படாது… தேவைப்படும்போது சொல்லி அனுப்புகிறேன்…” என்றுவிட்டு ஆனந்தன் காட்டிய குடிசையை நோக்கி விரைந்தான் ஏகவாமன்.

குடிசையை நெருங்க நெருங்க இதயம் இன்னும் வேகமாகத் துடித்தது. நரம்புகள் அனைத்தும் முறுக்கிச் சிக்கியது போல ஒரு வித உணர்வு தோன்றியது… இத்தகைய ஒவ்வாமை உணர்வை இதுவரை அவன் உணர்ந்ததில்லை.

தவிப்புடன் அவள் குடிசைக் கதவைத் தட்டுவதற்காகக் கையைத் தூக்கியபோது, அலரந்திரியின் குடிசைக்கு முன்புறக் குடிசையிலிருந்து வெளியே வந்தாள் ஒருத்தி. வந்தவளின் விழிகளில் ஏகவாமனைக் கண்டதும் முகத்தில் சந்தேகம் தோன்றிப் பின் ஒரு வித அருவெறுப்புப் பிறந்தது.

மாலை நேரத்தில் ஒரு ஆடவன், அதுவும் வாட்டசாட்டமான ஒருத்தன், பிடிக்காத ஒருத்தியின் வீட்டில் நின்றால் புத்தி துருதுருக்காதா? கண்டபாட்டிற்குக் கற்பனை செய்யாதா? அதுவும் பிடித்தமான கற்பனையாயிற்றே…

ஏகவாமனை மேலும் கீழுமாகப் பார்த்து, ஒரு வித ஏளனப் புன்னகையைச் சிந்திவிட்டு விலகிச் செல்ல, அந்தப் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஏகவாமனுக்கு அடி நெஞ்சிலிருந்து சினம் துளிர்த்தது.

ஒரு ஆண், வேளை கெட்ட நேரத்தில் ஒரு பெண்ணின் இருப்பிடம் வந்தால் அது நிச்சயமாகத் தவறாகத்தான் இருக்கவேண்டும்? வேறு ஏதாவது காரணம் இருக்கக் கூடாதா? பார்ப்பதை வைத்து மட்டும் ஒருத்தரைக் குற்றம் சொல்லி விட முடியுமா? காலங்கள் மாறினாலும் மனிதர்களின் சிந்தனை மட்டும் மாறவில்லையே’ என்று எரிச்சலுடன் எண்ணியவன், அந்தச் சினம் மாறாமலே அலரந்திரியின் கதவைத் தட்டினான்.

அவன் தட்டிய தட்டலில் கதவு தானாகத் திறந்து கொள்ள, கதவைத் திறந்துவிட்டு என்ன செய்கிறாள்? என்று எண்ணியவனாக எட்டிப் பார்த்தான்.

வெறுமையாக இருந்தது குடிசை. ஏனோ அந்தக் குடிசையைப் பார்க்கும் பொது இவனின் உள்ளம் தவித்தது. அவனுடைய தம்பி மூன்று வருடங்களாக இருந்த இடமல்லவா அது… தன்னை மறந்து உள்ளே நுழைந்தவன் சுத்தவரப் பார்த்தான். மிகவும் சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஓரமாகக் கயிற்றுக் கட்டில். அதன் மீது துவைத்துத் துவைத்து நூலாகிப்போன தலையணை. அதனருகே நைந்துபோன பாய்… சின்ன டரங்க் பெட்டி… கொடியில் அவள் உடுத்தும் சேலைகள் ஒன்றிரண்டு தொங்கிக்கொண்டிருந்தன. அதற்கருகே ஒரே ஒரு சாமிப்படம். எந்தச் சாமி என்று கூடத் தெரியவில்லை. அந்தளவுக்கு மங்கியிருந்தது படம். அதில் ஒற்றைத் திரியில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அடுப்படியில் இரண்டு மூன்று நெளிந்த பானை சட்டிகள்… அது தவிரத் தண்ணீர்க் குடங்கள் இரண்டு.

எந்தத் தடுப்புமில்லாத சிறிய குடிசைதான்… ஆனாலும் அவள் வாழ்வதாலோ என்னவோ நிறைவாக இருந்தது அவனுக்கு. அதை நினைத்ததும் அவன் முகம் மீண்டும் வாடிப் போனது. அவனுக்குரியவள் அல்லவே அவள்.

சோர்வுடன் அவன் திரும்ப, அந்த நேரம் பார்த்து அலரந்திரியும் தன் குடிசைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள்.

வந்தவள், அங்கே மலைபோல நின்றிருந்த ஏகவாமனைக் கண்டதும் அதிர்ந்துபோனாள்.

சத்தியமாக அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது வெளிறிப்போன அவளுடைய முகத்தில் தெரிய, இரண்டெட்டில் அவளை நெருங்கிச் சமாதானப் படுத்த முயல, அவளோ பதறியவாறு இரண்டடி பின்னால் வைத்தாள்.

“ஹே… இட்ஸ் ஓக்கே… இட்ஸ்… ஓக்கே… நான்தான்…” என்று அவன் மென்மையாகக் கூற முயன்றாலும் அதிர்ச்சி மாறாதவளாக, வேகமாகத் துடித்த இதயத்தைச் சமப்படுத்துபவள் போல, மார்பை அழுத்திக் கொடுத்து, தன் முன்னால் நின்றிருந்தவனை வெறித்துப் பார்த்தாள் அலரந்திரி.

‘இவன் எங்கே இங்கே… அதுவும் இந்த நேரத்தில் எதற்காக வந்திருக்கிறான்…? என்று எண்ணியவளுக்கு மனம் பலவாறு எண்ணித் தறிகெட்டு ஓடியது. ஏதோ தன்னை விழுங்க வரும் பூதம்போல அவனைப் பார்த்தவள், உடனே அந்தக் குடிசையை விட்டு ஓட முயன்ற விநாடி, சற்றும் தாமதிக்காது அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றித் தடுத்தான் ஏகவாமன்.

அதிர்ந்துபோனாள் அலரந்திரி. தன் கரத்தைப் பற்றிய ஏகவாமனை வெறித்துப் பார்த்தவள்,

“என்ன இது… எடுங்கள் கையை…” என்று சீறியவாறு அவனிடமிருந்து விடுபட முயல, உடனே அவளுடைய உள்ளுணர்வைப் புரிந்துகொண்ட ஏகவாமன், தன் கரத்தை விலக்கி இரண்டடி தள்ளி நின்றவாறு அலரந்திரியை அழுத்தமாக ஏறிட்டான். அவளோ விட்டால் போதும் என்பது போல மீண்டும் வெளியே ஓட முயல,

“நில்…” என்றான் கர்ஜனையாக. ஏனோ அவளால் அதற்கு மேல் ஒரு அடிகூட வைக்க முடியவில்லை. பயம் மாறாமலே அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

“எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்…? அதுவும் இந்த நேரத்தில்…. தயவுசெய்து வெளியே போங்கள்…” என்று தன் பயத்தை மறைத்தவளாகக் கெஞ்ச, அவனோ சற்றும் இளகாமல்,

“நான் உன் கூடச் சற்றுப் பேசவேண்டும்…” என்றான்.

“உங்களிடம் பேச எனக்கு எதுவுமில்லை… தயவு செய்து வெளியே போங்கள்… உங்களையும் என்னையும் சேர்த்துப் பார்த்தால் நம்மைத்தான் தப்பாக நினைப்பார்கள்… தயவு செய்து வெளியே போங்கள் சார்…” என்று அவள் கடித்த பற்களுக்குள்ளாக வார்த்தைகளைத் துப்ப,

“யார்… யார் தப்பாகப் பேசுவார்கள்… நீ சிக்கலில் மாட்டியபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்தார்களே அவர்களா… இல்லை… உன் அதிர்ஷ்டத்தைக் குத்திக்காட்டிப் பேசும் அந்தப் பெரிய மனிதர்களா? யாருக்காகப் பயப்படுகிறாய் பெண்ணே…” என்று அவன் அழுத்தமாகக் கேட்க, ஒரு கணம் பேச முடியாது வாயடைத்து நின்றாள் அலரந்திரி.

“இதோ பாருங்கள்… நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்… நான் சமூகத்துடன் இணைந்து வாழ்பவள்… அதன் கட்டுக்கோப்பை விலக்கி என்னால் பயணிக்க முடியாது… ஏற்கெனவே என்னைத் தீண்டத் தகாதவள் போலப் பார்க்கிறார்கள்… தயவு செய்து நீங்களும் அவர்களுக்கு அவல் கொடுத்து விடாதீர்கள்…” என்றவளை ஆத்திரத்துடன் பார்த்தான் ஏகவாமன். எதையோ சொல்ல வாய் எடுத்தவனின் கண் முன்னால் ஜெயவாமன் வந்து நின்றான்.

அதை நினைக்கும் போதே நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது ஏகவாமனுக்கு. எப்படியோ தன்னைச் சமப்படுத்தியவனுக்கு என் கூட வா என்றால் இவள் வருவாளா என்கிற சந்தேகமும் எழுந்தது. நிச்சயமாக வரமாட்டாள். அதுவும் அவன் கூப்பிட்டால் சொர்க்கம் என்றாலும் கூட வரமாட்டாள். அதைவிட,

“நீ போ என்ற சொன்னதும் போகும் நிலையில் நானில்லை அலரந்திரி… அதனால் உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ நீ இப்போது என் கூட வரப்போகிறாய்…” என்றவன் அவளை நெருங்கி, அவளுடைய கரத்தைப் பற்றிக் குடிசைக்கு வெளியே இழுத்து வர, பதறிப்போனாள் அலரந்திரி. அதிர்ச்சியுடன் அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க முயல, இவர்களை வாசலில் வைத்து வரவேற்றது அந்த முன் குடிசை வீட்டுப் பெண்மணிதான்.

உள்ளே போன இளைஞன் என்ன செய்கிறான் என்று புலன் விசாரணையில் இறங்கியிருந்தார் போலும், அந்த மங்கும் வெளிச்சத்திலும் அரிசியில் கல்லைப் பொறுக்கிக்கொண்டிருந்தவளின் புலன்கள் மட்டும் அலரந்திரியின் குடிசையிலிருந்ததால், திடீர் என்று ஏகவாமன் அலரந்திரியை இழுத்துக் கொண்டு வர முதலில் அதிர்ந்தவள் பின் ஏளனத்துடன் இருவரையும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு,

“கறுமம், கறுமம்… தூ” என்றவருடைய கண்களில் தெரிந்த இளக்காரத்தைக் கண்டு கூனிக் குறுகிப்போனாள் அலரந்திரி.

பெரும் தவிப்புடன், அவனுடைய பிடியிலிருந்து விலக முடியாமல் தவிக்க, ஏகவாமனோ எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளைத் தரத் தரவென்று இழுத்துக்கொண்டு தன் வாகனத்தின் அருகே வந்தான். அதே வேகத்துடன் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளிவிட்டு ஒட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்து காரை உசுப்ப மேலும் அதிர்ந்துபோனாள் அலரந்திரி.

வாகனத்துக்குள் தள்ளிக் கதவைப் பூட்டியுமாகிவிட்டது… எதைத் திறந்தால் அவள் வெளியேற முடியும் என்பது கூட அவளுக்குத் தெரியாது. ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடாதவாறு, வாகனத்தின் கைப்பிடியை இழுத்து இழுத்துப் பார்த்தால், கதவு திறந்தால் அல்லவோ… வாகனம் நகரத் தொடங்க உயிர் போகும் பதட்டத்துடன்,

“என்ன காட்டுமிராண்டித்தனம்… மரியாதையாக என்னை வெளியே விடுங்கள்…” என்று அவள் திணறத் திணற, அவள் பக்கமாகத் திரும்பியவன்,

“டோன்ட் வேஸ்ட் யுவர் எனேர்ஜி… என்னதான் நீ கத்தினாலும், கதறினாலும் என்னோடு வரத்தான் போகிறாய்… ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன்… என்னால் உனக்கு எந்த ஆபத்தும், சிக்கலும் வராது… நம்பு…” என்றவன் மேலும் வாகனத்தின் வேகத்தைக் கூட்ட, அதற்குப் பிறகு என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறியவள், அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்துடன் உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடும் தெருவையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினாள்.

மீண்டும் இரண்டு மணி நேர ஓட்டத்தின் பின், அந்தப் பிரமாண்டமான வைத்தியசாலைக்கு முன்பாக வாகனம் வந்து நிற்க அலரந்திரியோ குழப்பத்துடன் திரும்பி ஏகவாமனைப் பார்த்தாள். அவனும் அந்த மருத்துவமனையைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இ… இங்கே எதற்கு வந்திருக்கிறோம்? யாருக்கு என்ன?” என்று இவள் கேட்க, சுய நினைவு வந்தவனாக அவளைத் திரும்பிப் பார்த்து,

“சொல்கிறேன்…” என்றவாறு வெளியேறியவன், அவள் புறமாகக் கதவைத் திறந்து, “வெளியே வா…” என்று கூற, இப்போது மறுக்காமல் காரை விட்டு இறங்கினாள்.

“என்னோடு வா…” என்றவாறு உள்ளே செல்லத் தொடங்க அவள் வந்திருப்பது மருத்துவமனை என்பதால் அச்சமும் தயக்கமும் முற்றாக அவளை விட்டு விலகிச் செல்ல, மறுக்காது அவன் பின்னே சென்றாள் அலரந்திரி.

பத்து நிமிட நடையில் ஜெயவாமனின் அறைக்கு முன்னால் வந்து நின்ற ஏகவாமனுக்கு உயிர் துடித்தது. செயல் நிலை புரியாது தடுமாறியது… உள்ளம் தவித்தது, புத்தியோ தாறுமாறாக யோசித்தது. இதோ… இந்தக் கணத்திலேயே ஜெயவாமனின் கையணைப்பில் விழப்போகிறாள்… இவன் அந்தக் காட்சியைக் கண்டு தவித்து மறுகப்போகிறான்… அந்த நினைவே பெரும் வலியைக் கொடுக்க, யாரோ இதயத்தைச் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வில் துடித்தவனாக அறைக் கதவைத் திறந்தான் ஏகவாமன்.

அதே நேரம் ஏகவாமனுக்குப் பின்னால் அலரந்திரி நின்றிருந்ததால், படுக்கையில் கிடந்தவனை முதலில் தெரியவில்லை. யோசனையுடன் எட்டிப்பார்க்க முயன்றவளுக்குச் சிரமம் கொடுக்காது பெரிய மூச்சொன்றை எடுத்து விட்ட ஏகவாமன் விலகி வழிவிட உள்ளே பார்த்தாள். பார்த்தவளின் புருவங்கள் யோசனையில் சுருங்கிப் பின் விரிந்தன.

முதலில் அது யார் என்கிற செய்தி அவளுடைய புத்திக்கு எட்டவே சற்று நேரம் எடுத்தது. புரிந்ததும் அதிர்ந்து போனாள் அலரந்திரி. முகம் வெளிறியது. உடல் இரத்த ஓட்டத்தை நிறுத்தியது. காதுகள் அடைத்தன. தன்னையும் மறந்து முன்னால் நின்றிருந்தவனின் பலத்த புஜத்தைக் கரங்களால் அழுந்தப் பற்றியவள், பின் தன் விரல்களை மடக்கி ஷேர்ட்டைப் பற்றிக் கசக்கியபோது அவளுடைய உடலின் பெரும் பாரத்தை அவனுடைய கடிய உடல் தாங்கிக் கொண்டது.

அவளுடைய நிலை புரிந்து தன் கரம் கொடுத்துத் தாங்கிக் கொண்டவனுக்கும் மனது ஒரு நிலையில் இருக்கவில்லை. அவன்மீது சாய்ந்திருக்கிறோம் என்றோ, பாதுகாப்புத் தேடி அலைந்த கரங்கள் அவன் மார்புச் சட்டையைப் பற்றி இறுக்கியவாறு நின்றதையோ அவனுடைய கரங்கள் அவளை அணைத்தவாறு இருப்பதையோ அவள் சற்றும் உணர்ந்தாளில்லை.

மனமோ நம்ப முடியாத அவஸ்தையில் தவித்தது. கூடவே பெரும் தவறு செய்தது போல மாபாதகம் செய்ததுபோலக் குற்றம் சாட்ட உடல் நடுங்கியது… புத்தியோ சிந்திக்கும் திறனை இழந்தது… அவளையும் மீறி அடிக்கடி தோன்றி இம்சித்த ஏகவாமன் நினைவில் வந்து அவளைக் குன்ற வைத்தது. எத்தனை நேரம் மதி கெட்டிருந்தாளோ… கடவுளுக்குத்தான் வெளிச்சம். மெல்ல மெல்ல ஸ்மரனை திரும்ப, சூழ்நிலை உறைத்தது.

அந்தச் சூழ்நிலை புரிந்தபோது மூச்சு விடவே பயமாக இருந்தது. அவள் கனவு காண்கிறாளா என்ன? காருண்யன் இன்னும் உயிரோடுதானா இருக்கிறான்… அப்படியானால் இறந்தது என்று சொன்னது…? நம்ப முடியாத ஆத்திரத்துடன் அவனை விட்டு விலகாமலே அண்ணாந்து பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த விழிகள்… முதன் முறையாகக் கலங்கியிருக்கக் கண்டாள் அலரந்திரி. அவளல்லவா கலங்கியிருக்கவேண்டும்… அவளல்லவா வருந்த வேண்டும்… இவன் எதற்காக வருந்துகிறான்… இவன்தானே பொய் சொன்னான்… இவன்தானே காருண்யன் இறந்ததாகக் கூறினான்… ஆவேசம் தோன்ற, தன்னையும் மறந்து பற்றிய ஷேர்ட்டை விடுத்து, அவனுடைய சட்டைக் காலரை இறுகப் பற்றி,

“ஏன்… ஏன் பொய் சொன்னீர்கள்… எதற்காகப் பொய் சொன்னீர்கள்…இவர் இறந்து விட்டதாக எண்ணி…” என்று தவித்தவள் சொல்ல முடியாத வலியுடன் ஏகவாமனைப் பார்க்க அவனும் அதே வலியுடன்தான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். முதன் முறையாக அவனுடைய விழிகளில் ஒரு வித தவிப்புத் தெரிய, தன்னை மீறி எழுந்த ஆத்திரத்தில், அவனுடைய மார்பில் கரங்களை வைத்துத் தள்ளிவிட்டவள்,

“நீ மனிதனல்ல… மிருகம்… மன்னிக்க முடியாத… மிருகம்…” என்று சீறியவளைக் கையாலாகாத்தனத்துடன் பார்த்தான் ஏகவாமன். அவளுக்கு என்ன கூறி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை.

மரணித்தவன் என்று நினைத்தவன் இப்போது முழுதாக உயிருடன் கண்முன்னால் வந்திருக்கிறான் என்றால்… அதை எப்படித் தாங்கிக் கொள்வாள். அவளுடைய நியாயமான கோபத்திற்கான காரணம் தெரிந்ததால் ஏகவாமன் அமைதியாகவே அதைத் தாங்கிக்கொண்டான். அதே நேரம்,

“அ… அம்மா…” என்கிற மெல்லிய குரல் அவளுடைய காதுகளில் விழ விதிர் விரித்துப் போனாள் அலரந்திரி. எல்லையில்லா தவிப்புடன் திரும்பிப் பார்க்க, அவளை நோக்கித்தான் கரத்தை நீட்டியிருந்தான் காருண்யன்.

“கா… காருண்யன்…” என்று முனங்கியவளுக்கு ஏனோ ஓடிச்சென்று அந்தக் கரத்தைப் பற்றவேண்டும் என்று தோன்றவேயில்லை.

மாறாக ஒரு வித பயத்தின் பிடியில் சிக்கியவளாக, நிமிர்ந்து ஏகவாமனைப் பார்த்தாள். தன்னையும் மீறி நடுங்கிய கரங்களால் அவனுடைய கரத்தைப் பற்றியவளுக்கு, அப்படியே திரும்பி ஓடிவிடவேண்டும் போலத் தோன்றியது. அவளை மனதளவில் கடினப்படுத்திய அந்த மூன்று வருடங்களும் கண்முன்னால் படமாக விரிந்தன. எரிகிற நெருப்புக்குப் பயந்து கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த கதையல்லவா அது. மீண்டும் அப்படியொரு வாழ்க்கைக்குள் அவள் போகவேண்டி வந்துவிடுமோ? என்கிற அச்சம் அவளை நிலை குலையச் செய்தது.

அவள் ஒன்றும் அன்னை தெராசா இல்லையே, எந்தக் கஷ்டத்தையும் சுலபமாகத் தாங்கிக் கொள்வதற்கு. அவளும் சாதாரண மனுஷிதானே. அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கிறதே… அவளுக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது தானே… அவள் என்ன முற்றும் துறந்த கிழவியா, இல்லை உணர்ச்சியற்ற ஜடமா?

அவனை மணமுடித்தபோது, விதிவசத்தால் அவன் படுக்கையில் விழ, ஒரு மனைவி என்கிற ஸ்தானத்தில் அவனைக் காத்தாள் தான்… மிக நன்றாகவே பார்த்துக்கொண்டாள். அதுவும் சக்திக்கு மீறிப் பார்த்துக் கொண்டாள். அவன் மரணித்தான் என்கிற செய்தியை அறிந்ததும், அவள் உணர்ந்தது நிம்மதி… நிம்மதியை மட்டும்தான். ஒருவனின் இறப்பில் யாராவது சந்தோசப்பட முடியுமா? நிம்மதியைத் தேட முடியுமா…. ஆம்… அவள் மகிழ்ந்தாள்… இனி அவனுக்கு வலி வேதனையிலிருந்து விடுதலை என்று எண்ணி மகிழ்ந்தாள்… அவனுக்கு மட்டுமல்ல… இதுவரை காலமும் தன்னைப் பழுவாக அமுக்கியிருந்த அந்தப் பாரத்திலிருந்தும் விடுதலை என்று எண்ணி நிம்மதி கொண்டாள்… இதோ! இப்போதுதான் அவனில்லாத வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டுப் புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே வரவேற்று ரசிக்கத் தொடங்கியிருந்தாள்… ஆனால் அதற்கும் ஆயுள் இல்லையோ…? மீண்டும் பிடிக்காத சூழலில் சிக்கித் திணறி, அடுத்த நிமிடம் எந்தப் பூதம் எந்த ரூபத்தில் வரும் என்று பயந்து, அல்லும் பகலும் விழித்துப் பம்பரமாய்ச் சுழன்று… நினைக்கும் போதே உடல் தளர்ந்தது… சோர்வு வந்து ஆட்கொண்டது…’ பல்வேறு பட்ட தவிப்புடன் தன்னையும் மறந்து கலங்கிக் கொண்டிருந்தவளுக்குத் தன் உணர்வு போன திசை கண்டு அதிர்ந்துபோனாள்…

அவளா அப்படி நினைத்தாள்? அவளா காருண்யனைச் சுமையாகக் கருதினாள்… கடவுளே! அவளுடைய சிந்தனை ஏன் இப்படித் தறிகெட்டுப் போகிறது… ஒரு வேளை ஒட்டாத வாழ்க்கை என்பதால் சுமையாகத் தெரிகிறதோ? ஐயோ…! என்ன கொடுமை இது?’ என்று மனதிற்குள் அலறிக்கொண்டிருக்கும் போதே தன்னிடமிருந்து அவளைப் பிரித்த ஏகவாமன், அவளுடைய கரம்பற்றிக் காருண்யனின் படுக்கைவரைக்கும் அழைத்துச் சென்றான். நகர மறுத்த கால்களைச் சிரமப்பட்டு அசைத்தவளாக, அவன் இழுப்புக்கு இழுபட்டுச் செல்ல, விழிகளோ சருகாகக் கிடந்த ஜெயவாமனிடமே நிலைத்திருந்தன.

ஜெயவாமனோ, சிரமப்பட்டு”அ… அலரந்திரி…” எனறவாறு தன் கரத்தை நீட்ட, தன் சுயநினைவு பெற்றவளுக்கு நீட்டிய கரத்தைப் பற்றுவதா? விடுவதா? என்கிற குழப்பம் தோன்றியது. மூன்று வருடங்களாக இல்லாத தயக்கம் முதன் முறையாக அவளிடம் பிறந்தது.

அவனைத் திருமணம் முடித்தபோது அவன் கரம் பற்றினாள். அதற்குப் பிறகு அவன் கோமாவிலிருந்தபோது பற்றினாள். அவள் பற்றியதை அவனும் உணரவில்லை, தான் பற்றினோம் என்கிற உணர்வும் அவளுக்குத் தோன்றவில்லை. அது மட்டுமா? ஒரு அன்னையாகக் காருண்யனுக்கு உடல் முழுவதும் ஈரத்துணி கொண்டு துடைத்திருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத பதற்றம், தயக்கம் இப்போது அவன் விழித்திருந்தபோது அவளுக்குத் தோன்றியது. ஏதோ அவன் கரத்தைப் பற்ற ஒரு வித தடை. அதுவும் ஒரு அன்னியனின் கரத்தைத் தொடுவது போன்ற தடுமாற்றத்தில், தன்னையும் மறந்து விழிகளைத் திருப்பி ஏகவாமனைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மீண்டும் திரும்பிக் காருண்யனைப் பார்த்தாள். அவனுடைய விழிகளோ கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன. அதுவரையிருந்த தயக்கம் மாயமாகப் போக, விழிகள் கலங்க,

“காருண்யன்…” என்றபோது ஏனோ குரல் அடைபட்டது. அதைக் கேட்டதும், இப்போது காருண்யனின் முகத்தில் மெல்லிய புன்னகை. பின் மறுப்பாகத் தலையை அசைத்தவன்,

“இ.. இல்லை… என் பெயர்… காருண்யன்… அல்ல… ஜெயவாமன்… நான்… உன்னிடம் பொய் சொன்னேன்…” என்றவன் தானாகவே அவளுடைய கரத்தைப் பற்றித் தன் மார்பில் பதித்தவாறு அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.

ஏனோ அவன் கரத்தில் சிக்கியிருந்த தன் கரத்தை இழுத்து எடுக்கவேண்டும் என்று தோன்றிய வேகத்தை அடக்கிக் கொண்டவளாக, இதழ் கடித்து நின்றவளின் கரத்தை மென்மையாக அழுத்திக் கொடுத்த ஜெயவாமன்,

“என்னைத் தப்பாக நினைக்காதே அலரந்திரி… நான் அப்படியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்… என்னுடைய அடையாளங்களை மறைக்கவேண்டிய கட்டாயம்…” என்றவன் நிமிர்ந்து அண்ணனைப் பார்த்தான். தன் மறு கரத்தை நீட்ட, அதைப் புரிந்துகொண்டவனாக ஏகவாமன் நெருங்கித் தம்பியின் கரத்தை அழுந்தப் பற்றி அதில் தன் உதட்டைப் பொருத்தி எடுக்க, பெருமையுடன் தன் அண்ணனைப் பார்த்துச் சிரித்தவன்,

“தனிமை எத்தனை கொடுமையானது தெரியுமாண்ணா… அம்மா அப்பா… தங்கச்சி… நீ… தாத்தா… பாட்டி… ஊர் மக்கள் என்று கொள்ளை கொள்ளையா மகிழ்ச்சியை அனுபவித்துவிட்டு எங்கோ ஒரு இடத்தில், யார் என்கிற அடையாளத்தைக் காட்ட முடியாமல் மறைந்து வாழ்வது… எத்தனை பெரும் வேதனை தெரியுமா… யாராவது நமக்காகப் பேசமாட்டார்களா, நம்முடன் கூட இருக்க மாட்டார்களா என்று எண்ணி ஏங்கித் தவித்து…” என்றவன், ஏக்கத்துடன் அண்ணனைப் பார்த்து,

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் அண்ணா… அமெரிக்காவிலிருக்கும் உன்னுடன் தொடர்பு கொண்டு பேச நினைத்தேன்… ஆனால்… எங்கே நான் ஏதாவது சொல்லப்போய், உனக்கு உன்மை தெரிந்து நீ இங்கே வந்தால்… உன்னையும் கொன்றுவிடுவார்களோ என்றுதான் உன்னோடு தொடர்பு கொள்ளாமல் இருந்தேன்…” என்றவனின் மூச்சு மெல்லியதாகத் தடைப்பட,

“ஹே… ஹே… இட்ஸ் ஓக்கே… எதுவாக இருந்தாலும் பின்னாடி பேசிக்கொள்ளலாம்… நீ ஆசைப்பட்டது போல… உன்னுடைய ம… மனை… அலரந்திரியை அழைத்து வந்துவிட்டேன் அல்லவா… இனி நிம்மதியாகத் தூங்கு… ஜெயன்…” என்று ஏகவாமன் மறு கரத்தால் ஜெயவாமனின் மார்பை வருடிக் கொடுத்தவாறு கூற, மறுப்பாகத் தலையை ஆட்டியவன்,

“இல்லையண்ணா… நான் இப்போதே இதைச் சொல்லவேண்டும்… இதைச் சொல்வதற்கான வாய்ப்பு பிறகு வருமோ வராதோ… இப்போதே சொல்லிவிடுகிறேன்…” என்றவன் திரும்பி அலரந்திரியைப் பார்த்தான்.

“சாரி… உன்னுடைய வாழ்க்கையை நான் கேள்விக்குறியாக்கிவிட்டேன்… நான் வேண்டுமென்று செய்யவில்லை… காலம் அப்படிச் செய்யவைத்தது… உன்னை முதன் முறையாகப் பார்த்தபோது, என் அம்மாவைத்தான் நினைவு படுத்தினாய். அதே அமைதியான முகம்… அதே அழகான முகம்…” என்றவன் கனிவுடன் ஏதோ ஒரு கனவு உலகத்திற்குச் சென்றுவிட்டு ஒரு தாயைப் பார்ப்பதுபோல அலரந்திரியை ஏறிட்டான்.

“யாருமில்லா தனிமையில் தவித்த எனக்கு, உன்னைக் கண்டதும், உன் கூடவே இருக்கவேண்டும் என்கிற ஆவல்… என் அம்மாவின் மடியில் படுப்பது போலவே உன் மடியில் படுத்து உறங்கவேண்டும் என்று மிகவும் ஏக்கமாக இருக்கும் தெரியுமா?” என்றவன் எதையோ நினைத்துச் சிரித்தான். பின், “அம்மாவின் மடிக்காக நானும் அண்ணாவும், எங்கள் தங்கை சௌந்தர்யாவும் எத்தனை சண்டை பிடித்திருக்கிறோம்… ஹா ஹா…” என்று மெல்லியதாக நகைத்தவன்,

“பாவம் சௌந்தர்யா… அண்ணாக்காக விட்டுக் கொடுப்பாள்… நான்… ம்கூம்… அதனால் எனக்கும் அண்ணாவுக்கும் பெரிய போட்டியே நடக்கும்…” என்றவன்”அண்ணா… ஐ மிஸ் ஹேர் அண்ணா… ஐ மிஸ் ஹேர் லாட்…” என்றபோது உருகிப்போனான் ஏகவாமன்.

“ஷ்… இட்ஸ்… ஓக்கேடா… இட்ஸ் ஓக்கே… இதோ பார்… எல்லாமே இனி சரியாகிவிடும்… நான்தான் இருக்கிறேன் அல்லவா…” என்று இவன் சமாதானப் படுத்த, இப்போது அழுகையை நிறுத்திவிட்டு, திரும்பி அலரந்திரியைப் பார்த்தான்.

“இதையெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் என்றுதான் நினைத்தேன்… ஆனால்… வாய்ப்புதான் கிடைக்கவில்லை…” என்றவாறு சற்று நேரம் அமைதி காத்தான்.

அலரந்திரியோ அவன் கூறுவதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் ஏகவாமனைப் பார்க்க, அவனோ தன் வேதனைகளை அடக்க முயன்று முடியாதவனாக உதடுகள் ஒன்றோடு ஒன்று அழுந்தி நிற்கத் தன் தம்பியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்தின் பின், அலரந்திரியை ஏறிட்டவன், “நம்முடைய குடும்பம்பற்றி உனக்கொன்றும் தெரியாதல்லவா? எதற்காப் பெயரை மாற்றினேன் என்று நீ அறியவேண்டும்…?” என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க நின்றவன், அதற்கு மேல் பேச முடியாதவனாக அண்ணனின் கரத்தை இறுகப் பற்றி,

“அண்ணா… அலரந்திரிக்கு நம் கதையைச் சொல்லுங்கள்… என்னால் முடியவில்லை… மூச்சு விடச் சிரமமாக இருக்கிறது…” என்று திணற, ஜெயவாமனைக் கோபத்துடன் பார்த்தான் ஏகவாமன்,

“நான் தான் சொன்னேனே… பிறகு…” என்று கடிய,

“ப்ளீஸ் அண்ணா… அவள் தெரிந்து கொள்ள வேண்டும்… அவளும் நம் குடும்பத்தில் ஒருத்தி… சொல்லுங்கள் அண்ணா…” என்று கெஞ்ச, தன் தம்பியின் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவித்த ஏகவாமன், அவனுக்குப் போர்வையைச் சரியாகப் பொருத்திவிட்டவாறே, அலரந்திரியைப் பார்த்தான்.

அவளும் அவனைத்தான் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த விழிகளைக் காண மனம் மீண்டும் சலனப்பட்டது.

“டாமிட்…” என்று முணுமுணுத்தவன் அவளைப் பார்க்காமல் எங்கோ பார்த்தவாறு தொடர்ந்தான்.

What’s your Reaction?
+1
19
+1
0
+1
4
+1
1
+1
7
+1
1
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

12 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

4 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

5 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago