மின்னியங்கியின் மூலம், ஒன்பதாவது தளத்திற்குச் செல்ல, அங்கிருந்தவர்கள் அவளைக் கண்டு மரியாதையுடன் பல வகையில் வரவேற்றவாறு ஒவ்வொரு பக்கமாகத் தங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்க, அனைவருக்கும் தன் தலையை அசைத்தவாறு, படபடத்த இதயத்துடன் அபயவிதுலனின் அலுவலக அறை முன்னால் வந்து நின்றாள் மிளிர்மிருதை.
அப்படியே உள்ளே செல்லாது, இடது கையிலிருந்த சாப்பாட்டுப் பையை, கைப்பையைத் தாங்கியிருந்த வலது கரத்திற்கு இடமாற்றியவள், அவசரமாகக் கலைந்திருந்த தலை முடியை இடது கரத்தால் வாரிச் சரிப்படுத்த முயன்றாள். அப்படியே முகத்தையும் துடைத்து விட்டவள் பெரிய மூச்சொன்றை எடுத்து விட்டு, முகத்தைச் சிரிப்பது போல வைத்தவாறு கதவைத் தட்டுவதற்காத் தன் கரத்தை எடுக்கும்போதே கதவு தானாகத் திறந்து கொண்டது.
அங்கே அபயவிதுலன் அவளைத்தான் எதிர்பார்த்தவன் போல முகத்தைக் கடினமாக வைத்திருந்தான். அமைதியற்று இருந்தான் போலும். டை தாறுமாறாக இருந்தது. ஷேர்ட் பான்டை விட்டு வெளியே கிடந்தது. கோர்ட்டைக் காணவில்லை. உதடுகளின் ஓரத்தில் ஒரு வித தவிப்பு.
அதுவும் இவளைக் கண்ட உடன் மெதுவாக மறைந்து போனாலும், ஒன்றோடொன்று செருகு பட்டது போலச் சுழித்திருந்த புருவங்கள் அப்படியே இருந்தன
இவளைக் கண்டதும், தன் தலையை உள்ளே வருமாறு அசைத்துவிட்டு, அவள் உள்ளே நுழைந்ததும் விலகிச் செல்லாதிருக்க, அவளுடைய கைத்தலத்தைப் பற்றித் தடுத்தவன், அறைக் கதவைப் பூட்டிவிட்டு அவளைச் சுழற்றிக் கதவோடு அழுத்தி,
“மிருதா… இஸ் எவ்ரிதிங் ஓக்கே…” என்றான் மெல்லிய படபடப்புடன். அவனையும் மீறி விழிகள் அவளை மேலும் கீழும் அளவிட்டன.
உள்ளே எழுந்த குளிரைக் காட்ட முடியாமல்,
“ஹி ஹி… ஐ ஆம் ஓக்கே விதுலா…! ஏன் கேட்கிறீர்கள்… சற்றுத் தாமதமாக வந்தது பெரிய குற்றமா என்ன…? எதற்கு இத்தனை பில்டப்… ம்…?” என்று குறை பட்டவாறு அவனிடமிருந்து விலகிச் சென்றவள், சற்றுத் தள்ளியிருந்த, இன்னொரு அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த சாப்பாட்டு மேசையில், தன் கரத்திலிருந்த பொருட்களைப் பக்குவமாக வைத்துவிட்டுப் பின்னால் தொடர்ந்து வந்தவனை நோக்கித் திரும்ப, அவனோ,
“வட் கொஞ்ச நேரமா…? அரை மணி நேரம்… நான் எப்படிப் ப..ய…” என்று சொல்லிக்கொண்டு வந்தவனின் வார்த்தைகள் அரைவழியில் காணாமல் போயின. அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டவள் போல, சற்று எரிச்சலுடன் அவளுடைய தளிர் கரங்கள் அவனுடைய வாயை மூடிவிட்டிருந்தன.
மெல்லிய மென்மையான கரங்கள் அந்த அழுத்தமான உதடுகளில் படிந்தால் யார்தான் சீராகச் சுவாசிப்பார்கள். அதுவும் உள்ளம் கொள்ளை கொண்டவளின் தொடுகை அந்த ஆண்மகனைச் சற்று சுயநிலை இழக்கத்தான் செய்தது. கூடவே அந்த மென்மையில் அதுவரையிருந்த அழுத்தம் சற்று வடிந்து போனது என்னவோ நிஜம்தான். ஆனால் அவளோ, அதைச் சற்றும் கருத்தில் கொள்ளாதவளாகத் தன் கணவனைப் பார்த்து முறைத்து,
“ஜெஸ்ட் ஹாஃப் அன் அவர் விதுலா…! அதுக்கு இத்தனை அலப்பறையா?” என்று முறைக்க அவனோ தன்நினைவு பெற்றவனாய், மூடிய வாய்க்குள்ளிருந்து எதையோ சொல்ல முயன்றான். இவளோ,
“ஓக்கே…! ஓக்கே…!” என்று சற்று எரிச்சலுடன் தலையாட்டிவிட்டு, “ஹாஃப் அன் அவர் உனக்குக் கொஞ்ச நேரமா…? ஒரு நிமிடம் தன்னும் தாமதிக்காமல் இங்கே வரவேண்டும் என்று சொல்லியிருந்தேன்… ஆனால் நீ…! நான் தவிப்பேன் என்று உனக்குத் தெரியுமா தெரியாதா? கைப்பேசி…! அதைக் கூட விட்டுவிட்டு வந்திருக்கிறாய்… கொஞ்சமாவது அறிவு வேண்டாம்… இதையெல்லாம் எதற்காகச் செய்கிறேன். உன் பாதுகாப்பிற்காகத்தானே? அதையேன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்? உன்னிடம் நான் வேண்டுவது உன்னுடைய பாதுகாப்பை மட்டும்தானே… இதைக் கூடவா நீ எனக்காகச் செய்யக் கூடாது… ப்ளா பிளா பிளா…’ இதைத்தானே சொல்ல வந்தீர்கள்… நீங்கள் சொல்லி இதைக் கேட்டு என் காதுகள் புலித்துவிட்டன!” என்றவள் அவன் வாயிலிருந்து தன் கரத்தை விலக்கி, அவனுடைய கழுத்தைச் சுற்றித் தன் கரத்தை மாலையாக்கி மார்பில் சாய்ந்து நின்றவாறு,
“போரடிக்கிறது விதுலா… இதை விட நீங்கள் என்னைத் தங்கக் கூண்டில் அடைத்து விடலாம்… எனக்கு இது பிடிக்கவேயில்லை… என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்களேன்… சில வேளைகளில் உங்கள் அதீத அன்பு மூச்சு முட்டச் செய்கிறது தெரியுமா…” என்று குறைபட, அவனோ தன் மேல் கிடந்தவளைச் சுற்றிக் கரங்களைப் போட்டு அணைத்தவாறு எதையோ கூற வர, அதை உணர்ந்தவள் போல அண்ணாந்து அவனைப் பார்த்தவள், ஒற்றைக் கரத்தை விலக்கி, அவன் உதடுகளில் தன் சுட்டுவிரலைப் பதித்து,
“இனஃப்… விசாரணை முடிந்தாகிவிட்டது… குற்றவாளி தப்பு செய்யவில்லை என்று தீர்ப்பாகிவிட்டது… இனி இதற்கு மேல் இந்தப் பேச்சை எடுத்தால், நீதிபதிக்குத் தண்டனை வழங்கப்படும்…” என்று கறாராகச் சொல்லிவிட்டு, அவனிடமிருந்து விலகியவள், தன் மேற்சட்டையின் சிப்பைக் கழற்ற முயல, சிப் கழற மாட்டேன் என்பது போல, எதிலோ செருகப்பட்டிருந்தது.
அதை உணர்ந்தவனாக மிளிர்மிருதையை நெருங்கியவன், சிப்பைப் பற்றி அது எதில் செருகப்பட்டிருக்கிறது என்பதை அவதானித்து, சிக்கலை விலக்கி, அதைக் கீழிறக்கி, ஜாக்கட்டைக் கழற்ற முயல, அவனிடமிருந்து விலகித் தானே கழற்றி அங்கிருந்த கதிரையில் கொழுவியவாறு கணவனை நோக்கித் திரும்பினாள். அவனோ, பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு,
“இந்தச் சிப்பைப் பார்த்தாயா? கவனமாக மேலே இழுத்திருந்தால் சிக்கியிருக்காது…” என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்து,
“உனக்கும் அப்படித்தான்… நீ எந்தச் சிக்கலிலும் மாட்டக் கூடாது என்றுதான் அவதானமாக உன்னைப் பாதுகாக்க முயல்கிறேன்…’’ என்றவனைச் சலிப்புடன் பார்த்துவிட்டுத் திரும்பிச் சற்றுத் தள்ளியிருந்த கபோர்டிலிருந்து உணவுத் தட்டையும் குவளையையும் எட்டி எடுத்தவாறு,
“பாதுகாப்புக் கொடுப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவே வேலையாக இருப்பதுதான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது… சொல்லப்போனால் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பாதுகாப்பை விட எனக்குப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது… ஏன் விதுலா…! எனக்கு என்ன ஆகிவிடும் என்று இப்படிப் பயப்படுகிறீர்கள்?” என்று இவள் கேட்க
“ஆகக் கூடாது என்பதற்காகத்தான் இதெல்லாம் மிருதா…” என்றவனுக்கு எப்படி உண்மையைச் சொல்வதென்று புரியவில்லை. உண்மையைச் சொன்னால் பயந்துவிடுவாளே. இவன் தயங்க, அவளோ,
“எனக்கு என் இஷ்டத்திற்கு இருக்க ஆசை இருக்காதா… சில வேளைகளில் இந்தக் கட்டுப்பாடுகள் சுமையாகத் தெரிகின்றன விதுலா…!” என்று குறைபட்டவாறு சாப்பாட்டுத் தட்டை மேசையில் வைக்க, முகம் இறுகிப்போனான் அபயவிதுலன்.
அவனுடைய பயம், அவன் கொடுக்கும் பாதுகாப்பு அவளுக்குச் சுமையாக இருக்கிறதா? ஒவ்வொரு விநாடியும் அவளைப் பொத்தித் தன் கரத்திற்குள் பாதுகாக்கவேண்டும் என்று அவன் துடிப்பது, அவளுக்குப் புரியவில்லையா? அவனுக்காகவும், அவனுடைய பணத்திற்குப் பின்னாலும், எத்தனை எதிரிகள். அத்தனையையும் அவன் ஒருவன் முறியடித்துவிடுவான். ஆனால் அவளுக்கும். அவன் குழந்தைகளுக்கும் ஒன்றென்றால், அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியுமா? சின்னக் கீறல் விழுந்தாலே துடித்துப் போவான். இதில் அவளுக்கு ஏதாவது நடந்தால்? உயிரையே விட்டுவிடுவானே… இது புரியாமல், அவன் அழுத்தத்துடன் பற்கள் நற நறக்க நின்றவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் சொன்னது உறைத்தது.
‘ஐயையோ…! சும்மா இருந்த சிங்கத்தைச் சுரண்டி சீண்டிவிட்டோம் போலிருக்கே… என்ன செய்வது?’ என்று தனக்குள் எண்ணி அஞ்சியவள், அசடு வழிந்தவளாக,
“அது… அது வந்து…” என்று தடுமாறினாள். அதைக் கண்டு கோபம் ஆறா விட்டாலும், தன் விழிகளைத் திருப்பியவனுக்கு அப்போதுதான் அது உறுத்தியது.
மீண்டும் சந்தேகம் கொண்டவனாக அவளுடைய காலடியைப் பார்த்தான். நீண்ட பாவாடை அணிந்திருந்தாள்… குளிருக்குத் தோதாய் பூட்ஸ் வேறு அணிந்திருந்தாள். ஆனாலும் தரையில் இரு பொட்டு இரத்தத் துளிகள். பதற்றத்துடன் நிமிர்ந்தவன்,
“மிருதா… ஆர் யு கொட் யுவர் பீரியட்ஸ்…” என்றவன் பின் எதையோ யோசித்தவனாக, ‘இல்லையே… இரண்டு கிழமைகளுக்கு முன்னம்தானே வயிற்று வலியென்று படுத்திருந்தாள்… அத்தனை விரைவாகவா வந்துவிட்டது?” என்று குழப்பத்துடன் அவளைப் பார்க்க, அவளோ,
“பீரியட்சா… இல்லையே …! ஏன் கேட்கிறீர்கள்” என்றதும்தான் தாமதம், வேகமாக அவளை நெருங்கியவன், சற்றும் தாமதிக்காது, அவளுடைய நீண்ட பாவாடையை உயர்த்திப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.
அவளுடைய இடது முட்டிக்காலில் தேய்பட்டதற்கு அடையாளமாகத் தோள் வளன்றிருந்தது. அதிலிருந்து வழிந்த இரத்தம், பளிங்கு வெண் காலில் சித்திரமாய் படர்ந்திருந்தது. போதாற்கு, பாவாடையிலும் பச்சை இரத்தம். அது அசையும் போது காயத்தைச் சீண்டி விடுவதால், இரு துளி இரத்தம் தரையிலும் விழுந்திருக்கிறது. உள் இழுத்த மூச்சுடன், மேலும் பாவாடையைத் தூக்க, தொடையின் கரையிலும் கண்டலுடனான சிராய்ப்பின் ஆரம்பம். .
முகம் கடுமையாகப் பாவாடையை விடுவித்தவன்,
“ஐ நியூ இட்… நான் அப்போதே நினைத்தேன்…” என்று சீற்றத்துடன் முணுமுணுத்தவன், அடுத்து அவளைத் தன் கரங்களிலும் ஏந்தியிருந்தான்.
அவன் கண்டுபிடித்து விட்டான் என்பது புரிய, சங்கடத்துடன் அவன் கரங்களில் நெளிந்தவள்,
“அது… ஒன்றுமில்லை விதுலா…! விழுந்துவிட்டேன்…” என்றாள் அவனைச் சமாதானப் படுத்தும் முகமாக.
“ஸ்டாப் இட்… ஜெஸ்ட்… ஸ்டாப் இட்… ஐ டோன்ட் வோன்ட் டு ஹியர் எனிதிங் ஃப்ரம் யு…” என்று கடித்த பற்களுக்குள் வார்த்தைகளைத் துப்பியவன், பக்குவமாக அங்கிருந்த நீண்ட மென் இருக்கையில் அமர்த்திவிட்டு, விரைந்து அங்கிருந்த கழிவறைக்குள் நுழைந்தான். வெளியே வரும் போது, ஒரு பாத்திரத்தில் மிதமான வெந்நீரும், வெண்ணிறத்தில் கை துடைக்கும் துண்டு சிலதும் எடுத்து வந்து அவள் பாதமடியில் வைத்துவிட்டு மீண்டும் கழிவறைக்குள் நுழைந்து, முதலுதவிப் பெட்டியுடன் வெளியே வந்தான்.
பின் அவள் முன் மண்டியிட்டு அமர இவள்தான் சங்கடப்பட்டுப் போனாள்.
“வேண்டாம் விதுலா…! ஐ ஆம் ஓக்கே…” என்று அவளைத் தடுக்க முயல, அவனோ ஒரு வார்த்தை தன்னும் பேசினானில்லை.
அவள் மறுப்பைச் சற்றும் பொருட்படுத்தாது பாவாடையைத் தூக்கி அவள் தொடை மீது போட, அவசரமாக அதைக் கீழிறக்க முயன்றவளை ஒரு முறைப்பில் தடுத்தான் அபயவிதுலன்.
“லிசின்… இப்போது கரங்களைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருக்கப் போகிறாய். இல்லையென்றால் அவற்றைக் கட்டிவைத்துவிட்டு என் வேலையைப் பார்ப்பேன்… புரிந்ததா?” என்றவாறு வெண்ணிறத் துண்டைத் தண்ணீரில் அமுக்கிப் பிழிந்தவன், மெதுவாக அவள் காயத்தின் மீது வைக்க, வலி தாங்க முடியாது, “ஷ்…” என்றாள் மிளிர்மிருதை.
உடனே தன் கரத்தை விலக்கியவன், அவள் முகத்தைப் பரிதவிப்புடன் பார்த்தான்.
“சாரிமா…! ரொம்ப வலிக்கிறதா?” என்று பதட்டத்துடன் கேட்டவன், தன் வாயைக் குவித்துக் காயத்தின் மீது ஊத, ஏற்கெனவே நீர் பட்டிருந்த இடத்தில் அவன் உயிர் மூச்சும் சேர்ந்து பட ஒரு வித சுகத்தில் தன் விழிகளை மூடிக்கொண்டாள் மிளிர்மிருதை. அவளுடைய உதடுகள் மெல்லியதாய் மலர, அதைக் கண்டு தன் தலையை ஆட்டியவன், தன் வேலையில் கருத்தானான்.
அவள் முன்னால் கால் மடக்கி சப்பாணி கட்டியவாறு அமர்ந்து காயப்பட்ட காலைத் தன் தொடை மீது வைத்துக் கருத்தாகத் துடைத்து விட்டவன், தொடைவரை கண்டத் தொடங்கிய இடத்தைக் கண்டதும், அவனுடைய கரிசனை மாயமாக மறைந்த போனது.
தன் பல்லைக் கடித்துச் சற்று நேரம் நின்றவன், மேலும் கண்டிய இடம் பக்கமாகத் துணியை விலத்த, அங்கே இரத்தக் கண்டலுடன் சிராய்ப்புகள். ஆனால் அத்தனை ஆழமில்லை. அதையும் கவனமாகத் துடைத்து விட்டு நிமிர இப்போது, சுத்தமாகத் துடைக்கப்பட்ட காயம் அகோரமாய் இவனைப் பார்த்துப் பல்லிளித்தது. கூடவே பொட்டாய் இரத்தம் வேறு உதிக்கத் தொடங்கியது.
உடனே முதலுதவிப் பெட்டியை எடுத்து, அதற்குரிய சிகிச்சையைச் செய்து முடித்துக் காலைச் சுற்றிக் கட்டுப் போட்டவன், மற்றைய முழங்காலையும் பார்த்தான்.
அது அந்தளவு பாரதூரமாக ஒன்றும் காயப்படவில்லை. அதையும் துடைத்து மருந்து போட்டுப் பாவாடையை மீண்டும் பழையது போல இழுத்து விட முயல அவனுடைய கரங்களிலும் இரத்தம் பிசுபிசுத்தது. கூடவே இரத்தவாடையும் அடித்தது.
இத்தனை இரத்தம் கொட்டும் வரையுமா ஒன்றும் நடக்காதது போல இருந்தாள்… ஆத்திரம் வரச் சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவனாக, கழிவறை சென்று தன் கரத்தைக் கழுவிவிட்டுக் கைப்பேசியை எடுத்து, சில இலக்கங்களைத் தட்டி எதையோ கூற, அடுத்தப் பத்து நிமிடங்களில் அவனுடைய அறைக் கதவு தட்டப்பட்டது.
“கம்மின்…” என்கிற உத்தரவுடன் உள்ளே நுழைந்தார் சாரா. அவர் பிரபலிய ஆடை வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியாளர். மிளிர்மிருதைக்கு ஆடைகளை அவர்கள் கடையிலிருந்துதான் அபயவிதுலன் பெற்றுக் கொள்வான்.
உள்ளே வந்தவர் தன் கரத்திலிருந்த பொட்டலத்தை அவனிடம் நீட்ட,
“தங்க் யு சாரா… ஐ சீ யு லேட்டர்…” என்று கூறி அவரை அனுப்பிவிட்டு மிளிர்மிருதையிடம் வந்தான்.
அவளிடம் அந்தப் பொட்டலத்தை நீட்டி,
“போ… போய் ஆடையை மாற்றி விட்டு வா…” என்று கூற, தற்போதிருக்கும் நிலையில் விவாதம் எடுபடாது என்பதைப் புரிந்துகொண்டவளாக, அவன் நீட்டிய பொட்டலைப் பறித்தவள் அங்கிருந்த குளியலறைக்குள் விந்தியவாறு நுழைந்தாள்.
இரத்தம் படிந்த ஆடையைக் கழற்றிப் புதிய ஆடையை அணிந்தவாறு, வெளியே வர, அபயவிதுலன் அவளுக்காகத்தான் காத்திருந்தான். அவன் முகத்தைக் கண்டதுமே, ஆத்தா மலையிறங்கவில்லை என்பது புரிய, நொண்டி நடந்தவாறு சென்று நீள் இருக்கையில் அமர்ந்தவளுக்கு மெல்லிய கிலி ஏற்பட்டது. அவள் முன்னால் மார்பில் கைக்கட்டி காலைச் சற்று அகட்டிவைத்தவாறு, .
“இப்போது சொல்… என்ன நடந்தது?” என்றான் அழுத்தமாக. எப்படிச் சொல்வாள்? சொன்னால் அடுத்து என்ன செய்வான் என்று அவளுக்குத் தெரியாதா?
“அது… நான் வரும் போது… ஐ மீன்… வாகனத்திலிருந்து இறங்கும் போது… தடுக்கி விழுந்து விட்டேன்…” என்று சொல்ல அவனோ சற்றும் இளகாமல் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“உண்மையைத்தான் சொல்கிறேன் விதுலா…! நான்… தடுக்கித்தான் விழுந்தேன்…” என்று நெளிய, அவனோ ஆழ்ந்த மூச்செடுத்து விட்டவன்,
“உனக்கு இரண்டு நிமிடங்கள்தான் அவகாசம் தருவேன். ஆதற்குள் நீ நடந்ததைச் சொல்கிறாய்… இல்லை… டேவிட்சனின் வேலை பறக்கும்… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்று அதே கடுமையுடன் கூற, இவளுக்குக் கோபம் வந்தது.
“அதுதான் சொல்கிறேனே விதுலா…! வாகனத்திலிருந்து இறங்கும்போது கீழே விழுந்து… ஓக்கே… ஓக்கே… வரும் வழியில் பழக்கடையைக் கண்டேன்… உங்களுக்குப் பழம் வாங்கலாம் என்று ரோடைக் கடக்க முயன்றேன்.. அப்போது ஒரு கார்… என்னை…” முடிக்கவில்லை, வேகமாக அவளிடமிருந்து விலகியவன், கைப்பேசியை எடுத்து, டேவிட்சனுடன் தொடர்பு கொண்டான்.
“டேவிட்சன்… கம் ரைட் நவ்…” என்றவனை எதுவும் சொல்ல முடியாது அவனையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்மிருதை.
உள்ளே நுழைந்தபோதே, டேவிட்சனுக்கு உண்மை புரிந்து போனது. உள்ளம் பயத்தில் நடுங்க, முகம் வெளிற நின்றவனை அழுத்தமாக ஏறிட்டான் அபயவிதுலன்.
அதைக் கண்டதும் வயிற்றில் புலி கரைக்க, சாரி சார்… மாடம் திடீர் என்று காரை விட்டு இறங்கிவிட்டார்கள்… நான் தடுப்பதற்குள்ளாக…” அவன் முடிக்கவில்லை, தனது மேசையில் சாய்வாக மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அமர்ந்தவன், வலது காலுக்குக் குறுக்காக இடது காலைப் போட்டு,
“வாகனத்தின் லைசன்ஸ் நம்பர் பார்த்தாயா?” என்றான் அவனுடைய அலட்டலைக் கேட்கப் பிரியப்படாதவனாக.
“இல்லை சார்…! மாடம் விழுந்த பதற்றத்தில் எதையும் யோசிக்கத் தோன்றவில்லை என்றதும் இவனுடைய முகம் மேலும் கடினமானது.
“என்ன வாகனம்…”
“அது… அது வந்து… அது…”
“என்ன நிறம்…”
“க்ரே சார்…”
“எத்தனை பேர் காருக்குள் இருந்தார்கள்…”
“அது… அது… வந்து…”
“காரை ஓட்டியது ஆணா பெண்ணா…”
“தெ… தெரியவில்லை… சா… சார்…”
“எனி ஸ்டீர்ட் காமராஸ்…”
“அதைக் கவனித்தேன் சார்… இருப்பதுபோலத் தெரியவில்லை…”
“ஓக்கே… குட்…” என்று தன் கீழ் உதட்டை ஒரு முறை கடித்து விடுவித்தவன், பின் தனக்கு அருகிலிருந்த தொலைப்பேசியின் ரிசீவரை எடுத்து அதில் ஒரு இலக்கத்தைத் தட்டிவிட்டுக் காதில் பொருத்தி, ஆங்கிலத்தில்,
“விக்டோரியா… டேவிட்சன், இன்றிலிருந்து வேலைக்கு வரமாட்டான்… இத்தனை நாள் செய்த வேலைக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடு…” என்று விட்டு பேசியை வைக்க, மிளிர்மிருதையும், டேவிட்சனும் அதிர்ந்து போய் நின்றனர்.
முதலில் சுதாரித்த டேவிட்சன்,
“சார்… ஐ… ஐ ஆம் சாரி சார்…” என்று மட்டும்தான் டேவிட்சனால் கூற முடிந்தது. ஆனால் மிளிர்மிருதையோ. முழங்காலில் எழுந்த வலியைப் பொருட்படுத்தாது, அபயவிதுலனை நெருங்க முயல, சடார் என்று அவள் பக்கமாகத் திரும்பியவனின் பார்வையில் தெரிந்த கடுமையில், சர்வநாடியும் அடங்கியவளாக, அதே இடத்தில் நின்றாள் மிளிர்மிருதை.
அபயவிதுலனோ, தன் கரத்திலிருந்த தொலைப்பேசி வாங்கியை அந்த இடத்தில் வைக்காது, அதைத் தாங்கிய கரத்தைத் தொடையின் மீது வைத்தவாறு டேவிட்சனைப் பார்த்து,
“உன்னை வேலைக்கு அமர்த்தியபோது, என்ன சொல்லியிருந்தேன்…” என்றான் டேவிட்சனை நிதானமாகப் பார்த்தவாறு. அவனோ சற்றுத் தயங்கியவாறு,
“மாடமை… வீ… வீட்டிலிருந்து நேராக வேலைத்தளத்திற்கு அழைத்து வரவேண்டும்…”
“நீ என்ன செய்துவிட்டு வந்திருக்கிறாய்?” என்று அடுத்து கேட்க, இப்போது தயக்கத்துடன் தலை குனிந்த டேவிட்சன்,
“மாடம்தான் வண்டியை நிறுத்த சொன்னார்கள்…” என்று கூற, அவனை எரிப்பதுபோலப் பார்த்த அபயவிதுலன்,
“உன்னை வேலைக்கு அமர்த்தியது… நானா… மாடமா…?” என்றான் அடுத்துக் கடுமையாக. அதற்கு என்ன பதிலைச் சொல்வான். இந்த வேலைக்கு அமர்த்த முதலே ஒன்றுக்குப் பல முறை, மிளிர்மிருதையை நேராக வேலைத்தளத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றுதான் சொல்லியிருந்தான். ஆனால் முதலாளியின் மனைவியின் பேச்சைக் கேட்காது எப்படியிருப்பது? மிளிர்மிருதை நிறுத்தச் சொன்னதும் மறுபேச்சின்றி நிறுத்திவிட்டான். ஆனால் அது இத்தனை பிரச்சனையைக் கொண்டுவரும் என்று கனவிலும் நினைக்கவில்லையே. பதில் கூறமுடியாது தயங்க,
“என்னுடைய அகராதியில் தவறுக்கு இடமேயில்லை டேவிட்சன்… நான் சொன்னதை மீறி நடந்துகொண்டதால், நடந்த விளைவைப் பார்த்தாய் அல்லவா?” என்று கறாராகக் கேட்டவன்.
“நீ இனி போகலாம்…” என்றான்.
உடனே மறுப்புக் கூறாது தலையைக் குனிந்தவாறு அவன் வெளியேற, மிளிர்மிருதைக்குப் பயத்திலும், கடும் ஆத்திரத்திலும் உடல் நடுங்கியது. கூடவே உள்ளமும்.
“விதுலா…! டேவிட்சனின் தப்பு எதுவும் இல்லை. நான்தான் என் இஷ்டத்திற்கு…” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, கரத்திலிருந்த வாங்கியை மீண்டும் காதில் பொருத்தி, அதுவரை நீண்ட நேரமாக வைக்கப்படாதிருந்த தொலைப்பேசியில் ஏற்பட்ட டீட் டீட் ஓசையை நிறுத்திவிட்டு மீண்டும். சில இலக்கங்களைத் தட்டி,
“ஹாய்… விக்டர்… இட்ஸ் மி… அபயவிதுலன்…” என்றவன் திரும்பித் தன் மனைவியைப் பார்த்துவிட்டு, நடந்ததைக் கூறி, “இது விபத்தா, இல்லை திட்டமிட்டதா என்று எனக்குத் தெரியவேண்டும்…” என்றான்.
“டோன்ட் வொரி மான்… என்னிடம் ஒப்படைத்து விட்டாய் அல்லவா… நானே விசாரிக்கிறேன்…”
“தாங்க் யு…” என்று தொலைப்பேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு நிமிர, அதுவரை பற்களைக் கடித்துக்கொண்டிருந்தவள், பொருமையை முற்றாக இழந்தவள் போல,
“விதுலா…! எதற்காக அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? ப்ளீஸ்… பி கூல்… நீங்கள் நினைப்பது போல, வேண்டும் என்று யாரும் எதுவும் செய்யவில்லை…” என்று அவள் முடிக்கவில்லை, ஆக்ரோஷமாகத் திரும்பினான் அபயவிதுலன்…
“வட்… உணர்ச்சிவசப்பட்டு அதீதமாக நடக்கிறேனா… யாரோ ஒருவன் உன்னைத் தன் வாகனத்தால் இடித்துவிட்டுப் போயிருக்கிறான்… அதைக் கேட்ட பின்னும் கைக்கட்டிக்கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா? இது உனக்கு உணர்ச்சி வசப்பட்டதுபோல இருக்கிறதா?” என்று கர்ஜிக்க அவன் கர்ஜனையைக் கேட்டதும் ஒரு கணம் ஆடித்தான் போனாள். பதில் கொடுக்க முடியாது, திருதிரு என்று விழிக்க, அவனோ,
“இது உனக்கும் ஒரு பாடம்தான் மிளிர்மிருதை… என் கட்டளையை மீறி, உன் இஷ்டத்திற்கு ஏதாவது ஏடாகூடமாகச் செய்தாய் என்றால்… இதோ இப்போது நடந்த விளைவுதான் பின்னும் நடக்கும்…” என்றவன் இன்னும் ஆத்திரம் அடங்காதவனாக, அவள் பக்கம் திரும்பி,
“உன்னிடம் பழங்கள் வேண்டும் என்று கேட்டேனா நான்…? கேட்டேனா? வெறும் பத்து டாலர் பழத்துக்காக, உன்னைக் காயப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறாயே… கொஞ்சமாவது அறிவு வேண்டாம்…? எதற்காக இத்தனை காவல் உன்னைச் சுற்றி வைத்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமல்லவா… நமக்கே தெரியாமல் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருக்கிறேன் நான்… அவர்களால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று ஒவ்வொரு கணமும் நான் பயப்படுவது உனக்கு உணர்ச்சி வசப்படுவதாகத் தெரிகிறதா?” என்று அவன் ஆவேசத்துடன் கேட்க, அந்த ஆவேசத்தில் மிளிர்மிருதையின் முகத்தில் இரத்தம் வடிந்து போனது.
அதை உணர்ந்தவனாகத் தன் தலையைக் குலுக்கியவன், பற்களைக் கடித்து எதையோ முணுமுணுத்தவாறு, அதற்கு மேல் பேசப் பிடிக்காமல், சாப்பாட்டு மேசைக்குச் சென்றான்.
வைத்திருந்த உணவுப் பெட்டியைத் திறந்து, மிளிர்மிருதை ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுத் தட்டில் போட்டுவிட்டு அமர்ந்தவன், அவளை நோக்கித் திரும்பி,
“சரி வா… உட்கார்… சாப்பிடு…” என்றான் கறாராக. இவளோ எரிச்சலுடன் தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,
“எனக்கு வேண்டாம்… பசிக்கவில்லை…” என்றாள் பட்டென்று. அதைக் கேட்டதும், மூச்சை ஆழ எடுத்து விட்டவன், இன்னும் கோபம் அடங்காதவனாக, இருக்கையை விட்டு சடார் என்று எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் கதிரை பின்னால் தேய்த்துக்கொண்டு செல்ல, அதைப் பற்றிச் சற்றும் கருத்தில் கொள்ளாது, புதிய தட்டில் அவளுக்குரிய மரக்கறி உணவுகளைப் போட்டு, அவளை நோக்கி வர, அவனையும் தட்டையும் மாறி மாறிப் பார்த்தாள் மிளிர்மிருதை. அடுத்து அவன் தனக்கு ஊட்டப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டவளாக,
“எனக்கொன்றும் ஊட்ட வேண்டாம்… நான் கோபமாக இருக்கிறேன்…” என்றாள் எகிறலாய்.
“அதை நான் சொல்லவேண்டும்… எத்தனை தைரியமிருந்தால் என்னிடமே நீ பொய் சொல்வாய்? இத்தனை நடந்திருக்கிறது… சற்றும் பதற்றப்படாமல் இருக்க எப்படி முடிந்தது. சற்று எசகுபிசகாக ஏதும் நடந்திருந்தால்?” என்றவன் தன் விழிகளை மூடியவனுக்கு, அதை நினைத்த போதே நடுங்கிக்கொண்டு வந்தது.
விழிகளைத் திறக்காமலே,
“வட் இஃப் எனிதிங் ஹப்பன் டு யு…” என்றவன் முகம் கசங்கத் தன் விழிகளைத் திறந்து,
“ஏதாவது உனக்கு நடந்தால்… அந்தக் கணமே…” அவன் முடிக்கவில்லை, தன் கோபத்தை மறந்து ஓடிச் சென்று தன்னவனை இறுக அணைத்துக்கொண்டாள் மிளிர்மிருதை.
“வேண்டாம்… வேண்டாம் விதுலா…! தவறியும் உங்கள் வாயால் இப்படிக் கூறாதீர்கள்… அதைக் கேட்கும் சக்தி எனக்கில்லை…” என்று துடிக்க, வெறுமையாக இருந்த இடக் கரத்தால் தன்னவளைத் இறுக அணைத்துக்கொண்ட அபயவிதுலன், அவள் தலை முடிக்கூடாகத் தன் விரல்களைச் செலுத்தி, தலை உச்சியில் தன் உதடுகளைப் பொருத்தி விடுவித்து,
“யு ஆர் மை சோல் … உனக்குச் சிறிய காயம் ஏற்பட்டாலே என் ஆவி துடிக்கிறதே… பாரதூரமாக நடந்தால்… ஓ மை காட்… எப்படி இந்த உலகில் சுவாசிப்பேன்… அதையேன் நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்… இதோ பார்… இதுதான் நான் உனக்குக் கொடுக்கும் கடைசி எச்சரிக்கை, இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் என் கட்டளையை மீறாதே… புரிந்ததா…” என்று அழுத்தமாகக் கேட்க, ஆம் என்று தலையாட்டியவளின் நெற்றியில் உதடுகளைப் பொருத்தி மெல்லியதாக முத்தமிட்டவன்,
“கம்… ஈட்…” என்றவாறு, அவள் கரத்தைப் பற்றி அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்து அவள் முன்னால் தன் கரத்திலிருந்த சாப்பாட்டுத் தட்டை வைக்க, அவனுடன் அதற்கு மேல் விவாதம் செய்யாமல் நல்ல பிள்ளையாக உண்டு முடித்தாள் மிளர்ம்ருதை. அவள் உண்பதைப் பார்த்தவாறே தன் பசியையும் தீர்த்துக்கொண்டவன், அவள் உண்டு முடிக்கும் வரை அவளுக்காகக் காத்திருந்து, அவள் முடித்ததும், அவளுடன் சேர்ந்து தானும் எழுந்து கைகழுவச் சென்றான்.
அவள் கை கழுவும் போதே அவள் பின்னால் வந்து நின்றவன், அவள் பின்னுடலுடன் தன் முன்னுடல் முட்ட நின்றவாறு, அவள் கரங்களுக்குள் தன் கரங்களைச் செலுத்தி, அவள் உள்ளங்கைகளைப் பற்றித் தேய்த்துவிட்டவாறு தன் கரங்களையும் கழுவிக்கொண்டவன், பின் விலகி, அங்குத் தொங்கிக்கொண்டிருந்த துவாய் ஒன்றை இழுத்துத் தானும் துடைத்து அதை அவளிடம் கொடுத்துவிட்டு, அவள் துடைத்து முடித்ததும், அதை அவளிடமிருந்து வாங்கி, துவைக்கும் கூடையில் போட்டுவிட்டு நிமிர்ந்து இவளைப் பார்த்து,
“அவனுடைய முகத்தைப் பார்த்தாயா மிருதா…” என்றான். முதலில் புரியாமல் ஏறிட,
“அவனைத்தான்… உன்னை இடித்துவிட்டுப் போனானே… அவனை…” என்றான் அழுத்தமாக.
மிளிர்மிருதை மறுப்பாகத் தலையை ஆட்டிவிட்டு,
“அந்த நேர அதிர்ச்சியில் எதுவும் தோன்றவில்லை…!” என்றவாறு தன் மேசையை நோக்கிச் செல்ல, அதைக் கண்ட அபயவிதுலன்,
“எங்கே போகிறாய்…” என்றான் புருவம் சுருங்க.
“என்ன கேள்வி…! சமைக்கப் போகிறேன்…” என்றாள் புன்னகையில் துடித்த உதடுகளை அடக்க முயன்றவாறு. அதைக் கேட்டதும் முதலில் திகைத்தவனிடம், அதுவரையிருந்த ஒரு வித கலக்கம் மறைந்து போக, அங்கே மெல்லிய புன்னகை வந்து உட்கார்ந்து கொண்டது.
“என்ன ஜோக்கா…” என்றவனிடம் வேகமாக ஆம் என்பது போலத் தலையை ஆட்ட,
“ஷ்… கடிக்குதுடி…” என்றான் தன் உள்ளங்கரத்தை சொரிந்தவாறு. அதைப் பார்த்து அவள் நகைக்க, அந்த நகைப்பில் தானும் கலந்து கொண்டவனாக,
“நீ ஆணியே பிடுங்கவேண்டாம்… போ… போய்ச் சோஃபாவில் இரு…” என்று கட்டளையிட்டுவிட்டுத் தன் மேசைக்குச் சென்றான்.
அந்த மேசையின் இழுப்பறையைத் திறந்து, அதிலிருந்த ஒரு பொதியை வெளியே எடுத்தவன், திரும்பிப் பார்த்தான்.
இன்றும் அவள் உட்காராமல் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். உடனே அவளை நோக்கி விரைந்தவன், அவளுடைய கரத்தைப் பற்றி, இழுத்துச் சென்று நீளிருக்கையில் அமர்த்திவிட்டு, அவளிடம் அந்தப் பொதியை நீட்ட, அவளோ, தொப்பென்று இருக்கையில் அமர்ந்த வேகத்தில் முழங்கால்கள் வலிக்க,
“ஷ்…” என்று, வருடிக் கொடுத்தவாறு அவன் நீட்டிய பொதியை வியப்புடன் வாங்கி,
“என்ன இது?” என்றாள்.
“ம்… ஊறுகாய்… சாப்பிடு…” என்றான் அதே கிண்டலுடன். அப்போது அவள் சமைக்கிறேன் என்று சொன்னதற்குப் பதிலடியாம். அதைப் புரிந்துகொண்டவளாகத் தன் உதடுகளை இழுத்துப் பிடித்துச் சிரிப்பது போல ‘ஈ’ என்றவள்,
“சிரித்துவிட்டேன்… போதுமா…” என்று விட்டு
“கேட்டால் சொல்வதுதானே…” என்று முணுமுணுத்தவாறு மடியில் வைத்துப் பொதியை மேலும் விரிக்க, அங்கே அமர்ந்திருந்தது கேலிச்சித்திரப் புத்தகம். அதுவும் அன்று காலை இருவரும் ரசித்துச் சிரித்துப் படித்த எழுத்தாளரின் தொடராக வந்த ஐந்து புத்தகங்களையும் வாங்கியிருந்தான் அபயவிதுலன்.
அதைக் கண்டதும் மிளிர்மிருதைக்கு விழிகள் நிறைந்து போனது. கூடவே இதயம் கனிந்து உருகிப் போயிற்று.
“ஒவ்வொரு விநாடியையும், ஒவ்வொரு கணத்தையும், அவளுக்காகவே யோசிக்கிறானே. அவளுக்காகவே வாழ்கிறானே… இவனுக்காக நான் என்ன செய்திருக்கிறேன்…?” எண்ணும்போதே இதயம் வலியில் கலங்கியது.
கண்கலங்க நின்றவளைக் கண்டதும், அவள் எதற்காகக் கலங்குகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாக, அவள் முன்னால் முழங்கால் பதித்து மண்டியிட்டு அமர்ந்து, அவள் கரங்களைத் தன் வலது கரத்தால் இறுகப் பற்றிக்கொண்டவன், இடது கரத்தால், அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு,
“ஷ்… இட்ஸ் ஓக்கேமா… என் கூடவே நீ இருக்கிறாயே… இதை விட என்ன வரம் எனக்குக் கிடைத்து விடப் போகிறது… கடவுளுக்கு நைவேத்யம் படைக்கும்போது, அது வரம் தருமா தராதா என்று யோசித்துப் படைப்பதில்லை… அது போலத்தான் இதுவும்… என் உலகத்தை ஆளும் என் சாமிக்கு நான் கொடுக்கும் சின்னச் சின்ன மகிழ்ச்சி… அவ்வளவுதான் கண்ணம்மா…” என்றவன் தன் கரத்திலிருந்த அவளுடைய கரத்தைத் தூக்கித் தன் உதடுகளில் பொருத்தி விடுவித்தவன்,
“இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும் எனக்கு… வேறு எதுவும் வேண்டாம்… எப்போதும் எந்தச் சந்தர்ப்பத்திலும் என்னைப் பிரியாது என் கூடவே, என் இறுதிக்காலம் வரைக்கும் இதே போலப் பயணித்தாலே போதுமானது…” என்று அவன் கூற, உள்ளுக்குள் நொறுங்கிப்போனாள் அந்தக் கோதை.
அவன் சொல்வது உண்மைதான். இந்த இருவருடங்களாக அவளைப் பூஜை அறையில் வைத்துப் பூசிக்கவில்லையே தவிர, அவளுடன் இருக்கும் ஒவ்வொரு விநாடியையும் அவன் பக்தனாகத்தான் மாறிப்போனான். என்றாவது வரம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் தன் உடல் பொருள் ஆவி உருக அவளுக்காகக் காத்துத்தான் இருக்கிறான்… இவள்தான் வரம் கொடுக்க முடியாமல் இன்னும் தள்ளியே இருக்கிறாள்.
உள்ளம் வலிக்க அவன் விழிகளுடன் கலங்கிய தன் விழிகளைக் கலக்க விட்டவள், அவன் கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து,
“அது மட்டும் போதுமா விதுலா உங்களுக்கு?” என்றாள் பெரும் ஏக்கத்துடன். சற்று நேரம் அமைதி காத்தவன், சுழித்த அவளுடைய உதடுகளைக் கண்டு, அதைப் பற்றி இழுத்துவிட்டவன்,
“இப்போதைக்கு அது போதும்மா…” என்றவாறு எழுந்தான். பின் முகம் கடுக்க,
“நான் சொல்லும் வரைக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இங்கேயே இருக்கிறாய்… புரிந்ததா…” என்று கடுமையாகக் கூறிவிட்டுக், கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்றரை ஆகியிருந்தது நேரம்.
இன்று அவனுக்கு முக்கியமாக zoom இல் அனைவரும் கூடி ஆலோசனை செய்யும் கூட்டம் இருந்தது. அதற்கு இன்னும் தயார் படுத்தவில்லை. அவனுடைய கூட்டத்திற்கான முக்கியக் குறிப்புகளை மிளிர்மிருதைதான் தயாரித்துக் கொடுப்பாள்… இந்த நிலையில் அவளால் செய்ய முடியாது. உடனே தன் மேசைக்குச் சென்றமர்ந்தவன், தாறுமாறாக இருந்த டையை நேராக்கியவாறு இருக்கையில் அமர்ந்து, தன் மடிக்கணினியில் எதையோ தட்டி நகல் எடுத்தான். அடுத்த ஒரு மணி நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை.
மிளிர்மிருதையோ, அவன் கொடுத்த கேலிச்சித்திரப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினாள்.
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 18 ********* நள்ளிரவை நெருங்கப் போகும்…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…
(15) அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…