சற்று நேரம் அப்படியே இருந்தவன் பின் தன் தலையை நிமிர்த்தினான். இப்போது அவனுடையைக் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. விட்டால் அந்தக் கணமே அபயவிதுலனைக் கொன்று பொசுக்கிவிடுவான் என்று நன்றாகப் புரிந்தது.
“ஆமாம்… உன் குடும்பத்தைப் பழிவாங்கத்தான் அப்படிச் செய்தேன்…” என்று சொன்ன அஜய்பட்டேல் வேகமாக மூச்சை எடுத்து அபயவிதுலனை எரிப்பது போலப் பார்த்தான்.
“பத்ரிநாத் வேறு யாருமில்லை… அது என் அண்ணா…” என்று கூறத் தலையை ஆட்டிய அபயவிதுலன்,
“ம்… ஊகித்தேன்… இப்போது அவன் எங்கே…” என்றதும், அபயவிதுலனை ஆத்திரத்தோடு பார்த்த அஜய்பட்டேல்,
“அவன் அவன்… இப்போது உயிரோடு இல்லை…” என்று எல்லையில்லா ஆத்திரத்துடன் சீற, அதிர்ந்துபோனான் அபயவிதுலன்.
“இது என்ன புதுக்கதை…” என்றான் அபயவிதுலன்.
“புதுக்கதையா… இல்லை… இது பழைய கதை… பத்ரிநாத் இறந்துவிட்டான். அதற்குக் காரணம்… நீ… நீ மட்டும்தான்தான்..” என்றவன் கரத்திலிருந்த மதுவை முழுதாக வாய்க்குள் கொட்டிக் குவளையைத் தூக்கி வீசி உடைத்தவன்,
“அன்று… உன் மனைவியை நடனமாடக் கேட்டபோது அத்தனை பேருக்கு முன்பாகவும் அவனை அடித்தாயே… நினைவில்லை… அத்தனை பேரின் பார்வைகளுக்கு முன்னாலும் அவனை ஒரு குற்றவாளி போல ஆக்கிவிட்டாயே பாஸ்டட்… அது மட்டுமா… செய்தித்தாள்களிலும், இணையத்திலும் அவன் பாலியல் தொந்தரவு கொடுத்தான் என்று புகைப்படத்தோடு பிரசுரித்த போது எப்படித் துடித்தான் தெரியுமா… xxxx…” என்று கூறியவாறு அழுத அஜய்பட்டேல், ஆத்திரத்துடன் தன் மூக்கில் வடிந்ததைத் துடைத்தவாறு,
“இங்கே இருக்க முடியாமல் இந்தியா வந்தான்… என்னிடம் நடந்ததைக் கூறிக் கதறினான்… அதுதான் அவனை நான் உயிரோடு கடைசியாகப் பார்த்தது…” என்று வலியுடன் கூறியவன், அதே வலிக்கு நிகராக ஆத்திரத்துடன் அபயவிதுலனைப் பார்த்து,
“உனக்குக் குடும்பத்தைப் பற்றி என்ன தெரியும்… தாய் தந்தை இல்லாமல் பைத்தியக்கார சகோதரியின் வளர்ப்பில் அதுவும் முகம் தெரியாத ஒருவனுடைய பிள்ளையைச் சுமந்தவள் வளர்ப்பில் வளர்ந்தவன் தானே… நீ… உனக்கென்ன தெரியும் குடும்பத்தின் பெருமை பற்றி… ஒன்றாகக் கூடி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி வலிக்கும் தெரியுமா” என்று சொல்லி முடிக்கவே அபயவிதுலனின் கை முஷ்டிகள் இறுகின. பற்கள் ஒன்றோடொன்று கடிபட்டு அரைப் பட்டன. ஆனாலும் அவனைத் தாக்கவில்லை. அவன் கூறியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க, ஆத்திரத்துடன் தொடங்கினான் அஜய்பட்டேல்.
“என் குடும்பம் எத்தகையது தெரியுமா…. வசதியோடும், பெருமையோடு வாழ்ந்த குடும்பம் உன்னைப் போல நினைத்தாயா? என் அண்ணனைப் பற்றித் தப்புத் தப்பாகச் செய்திகள் வந்தபோது அவன் பட்ட அவஸ்தை… அது மட்டுமா” என்று கர்ஜித்த அஜய்பட்டேல் பின் சாய்ந்தமர்ந்து விழிகளை மூடி,
“அவனைப் பற்றி வெளியான செய்திகளைப் பார்த்து அவன் மனைவி…” என்றவன் அபயவிதுலனை ஆக்ரோஷமாகப் பார்த்து ”அவனை விட்டுப் பிரிந்து போய்விட்டாள்…” என்று சீறியவன், மீண்டும் மூக்கைத் துடைத்தவாறு ”அது தாங்க முடியாமல் என்னிடம் வந்து புலம்பினான்… மறு நாள்…” என்றவன் அழுகையுடனேயே மேலே பார்த்து, “தூக்கில் தொங்கிவிட்டான்… செல்ஃபிஷ் பாஸ்டட்… அவன் என்னைப் பற்றி… என் அம்மா அப்பாவைப் பற்றி அவன் குடும்பத்தைப் யோசிக்கவேயில்லை… மறுநாள் அவனைப் பிணமாகப் பார்த்தபோது…. ஓ காட்…” என்று விழிகளை இறுக மூடிய அஜயப்ட்டேல்… ”இதற்கெல்லாம் காரணம் நீதானே… உயிரானவர்கள் பிரிந்துபோனால் அதன் வலி என்னவென்று உனக்குத் தெரியவேண்டாம்…? முடிவு செய்தேன்… அவனும் நானும் உருவ அமைப்பில் கிட்டத்தட்ட ஒரே போல என்பதால், அவன் பெயரில் நான் இங்கே வந்தேன்… உன்னையும் உன் குடும்பத்தையும் அழித்தபின்னாடி, நான் மீண்டும் இந்தியாவுக்குச் செல்வதாக முடிவெடுத்திருந்தேன். வந்ததும் முதல் செய்த காரியம் உன்னைப் பற்றியும் உன் தொழில் பற்றியும் அறிய முயன்றதுதான். அப்போதுதான் தெரிந்தது, உனக்கு உன் உறவினர்கள் மீது அளவற்ற பாசம் என்று. அதுவும் உன் மனைவி மருமகளின் மீது உயிரையே வைத்திருக்கிறாய் அல்லவா… அவர்களில் ஒருவரைத் தூக்கினாலும் நீ துடிப்பாய் அல்லவா…?” என்றவன் சீற்றத்துடன் அபயவிதுலனை முறைத்துப் பார்தவாறு,
“ஓடுமீன் ஓட உரு மீன் வரும் வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு… உங்கள் தமிழ் பழமொழிதான்… சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்… அன்று உன் மனைவி சித்தார்த் ஆராதனாவோடு வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அங்கே வந்துகொண்டிருந்த ஒருவனுக்குப் பணம் கொடுத்து அவளைத் தள்ளிவிடக் கேட்டேன்… பணத்திற்கு ஆசைப்பட்டு அவனும் முயன்றான். ஆனால் அவள் அதில் தப்பினாள், அதற்குப் பிறகு அவளை நான் தனியாக எங்கும் காணவில்லை. எப்போது பார்த்தாலும் ஏதாவது பாதுகாப்புடன்தான் வெளியே சென்றாள். ஆனாலும் நான் முயற்சியைக் கைவிடவில்லை. ஒவ்வொரு நாளும் உன் மனைவி செல்லும் வாகனத்தை யாரும் அறியாமல் பின்பற்றிச் செல்வேன்… தெரியுமா… அன்று எனக்குரிய நாள் போலும்… உன் மனைவி இறங்கித் தனியாக நடந்து செல்வதைக் கண்டேன்… அடித்து ஒரே தூக்கு… படு வேகத்துடன்தான் காரை செலுத்தினேன்… பட்… அவள் கொஞ்சமாகச் சுதாரித்திருந்ததால், தப்பிவிட்டாள்… இல்லை…” என்று அவன் கூற, வேகமாக எழுந்த அபயவிதுலன் தான் அமர்ந்திருந்த கதிரையைத் தூக்கி ஓங்கி அஜயப்பட்டேலின் மீது வீசி அடிக்க, அது அடித்த வேகத்தில் தெறித்துச் சென்றாலும், அஜய்பட்டேல் கதிரையோடு சரிந்து விழுந்தான்.
கொல்லும் வெறியுடன் அவனை நெருங்கியவன் கீழே விழுந்திருந்தவனின் சட்டையைக் கொத்தாக பற்றித் தூக்க, இவனுடைய பலத்தில் சுலபமாக மேலே தூக்கப்பட்டான் அஜய்பட்டேல்… கூடவே வலது காலால் சரிந்திருந்த கதிரையை நிமிர்த்திய அபயவிதுலன் மீண்டும் அவனை அமரச் செய்து,
“சாரி… கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்… மிச்சத்தையும் சொல்…” என்று கடித்த பற்களுக்கிடையேயான வார்த்தைகளைத் துப்ப, இரத்தம் வழிந்த உதடுகளைக் கரத்தால் வழித்தவாறு சிரித்தான் அஜய்பட்டேல்…
“என்னதான் அடித்து உன் கோபத்தைத் தீர்க்க முயன்றாலும்… நடந்ததை இல்லையென்றாக முடியுமா…” என்று ஏளனமாகக் கேட்டுவிட்டு.
“உன் மனைவியைப் பல வகையில் கொல்ல ஆட்களை அனுப்பினேன்… ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்குப் பெரும் ஏமாற்றமே கிடைத்தது.. அதற்குக் காரணம் நீ… நீ… சரி உன் மனைவியை நெருங்க முடியவில்லை என்றால் என்ன… உனக்கொரு மருமகள் இருக்கிறாள் அல்லவா… அவளுக்கும் அடித்தால் உனக்கு வலிக்குமல்லவா…?” என்று கிண்டலுடன் கேட்க எழுந்து ஒன்று கொடுக்க வேண்டும் என்று எழுந்த ஆவேசத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் அபயவிதுலன். அவனை அடித்துக் கொன்றுவிடலாம்தான். ஆனால்… அவனுக்கு வேண்டிய தகவல்கள் கிடைக்காதே. அதை எண்ணிப் பல்லைக் கடித்துக்கொண்டிருக்க, பத்ரிநாத் தொடர்ந்தான்.
“உன் மருமகளுக்குத் தூண்டில் போட முயன்றேன்… ஆனால் எப்படியோ ஒவ்வொரு முறையும் அவள் என்னிடமிருந்து தப்பித்துவிடுவாள்… நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் அண்ணாவிற்குச் செய்யும் துரோகம் என்று நான் துடித்துப் போவேன் தெரியுமா…” என்று ஆக்ரோஷத்துடன் கூறியவன் தன் விரல்களைச் சுண்டி,
“சிறிய வழி… சிறிய வழி கிடைத்தாலும், உன்னைப் பிழிந்து சாறு எடுத்துவிட மாட்டேன்… உன் குழந்தைகளின் பின்னாலும், உன் சகோதரி பின்னாலும், ஆராதனா சித்தார்த்தின் பின்னாலும் ஆட்களை அனுப்பிக் கண்காணிக்கத் தொடங்கினேன்… ஆனால் உன்னை மீறி என்னால் அவர்களை நெருங்க முடியவில்லை… ஒரு வருடம்… ஒரு வருடம் காத்திருந்தேன் அபயவிதுலன்… உன்னைப் பழிவாங்க…” என்று சிரித்தவன் கலைந்த தலைமுடியை ஒற்றைக்கையால் மேவிவிட்டவாறு,
“அப்போதுதான் சித்தார்த்தும் ஆராதனாவும் தேனிலவுக்குச் சுவிஸ்லாந்து செல்லப்போகிறார்கள் என்பதை அறிந்தேன்… கூடவே தொழில் விஷயமாக நீ ஜப்பான் போகிறாய் என்பதையும் தெரிந்துகொண்டேன். ஹா ஹா… உன் பாதுகாப்பில்லாத இடம்… என் கைவரிசையைச் சுலபமாகக் காட்டிவிடலாம்… முடிவு செய்தேன்… நானும் சுவிஸ்லாந்து போனேன்… உன்னுடைய மருமகளைக் கொல்லத்தான் போனேன்… எதேச்சையாக அந்தப் பூங்காவில் வைத்து அவளைச் சந்திப்பது போலச் சந்தித்துக் காரியத்தை முடித்துவிடலாம் என்றுதான் யோசித்தேன்… அப்போதுதான் எனக்கு அவல் போல ஒரு செய்தி வந்தது. நீ தங்கியிருக்கும் விடுதி என் நண்பருடையது என்று… பெரிய மீனே சிக்கியிருக்கிறது… சின்ன மீனைப்பற்றி எனக்கென்ன… உடனே ஜேர்மனி வந்தேன்… இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் உன்னைப் பழிவாங்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். என் நண்பரின் உதவியுடன் உன் உணவில் போதைப்பொருள் கலந்தேன்… எனக்குக் கம்பனி கொடுக்க வந்த பெண்ணிடம் பணத்தைக் கொடுத்து உன்னோடு உறவு வைக்குமாறு கேட்டேன். ஒப்புக்கொண்டாள். உங்கள் உறவை ஒளிப்பதிவு செய்து உலகம் முழுவதும் பார்க்கப் பதிவு செய்ய முடிவு செய்தேன்” என்றதும் அபயவிதுலனின் உடலில் மெல்லிய நடுக்கம்.
எதைக் கேட்க அஞ்சினானோ, எதை அறிந்து கொள்ளவேண்டும் என்று துடித்தானோ, எது அவனைக் குற்றவாளியா இல்லையா என்பதை நிரூபிக்கப் போகிறதோ அதே இடத்தில் நின்றிருந்தான் அபாயவிதுலன். அஜய்பட்டேலை நெருங்கி, ஒரு விநாடி தன் விழிகளை இறுக மூடித் திறந்தவன்,
“நான்… நான் அந்தப் பெண்ணோடு… த… தப்பாக நடந்துகொண்டேனா..” என்று தன் தவிப்பை மறைத்தவாறு கேட்க,
“அது எப்படிடா… அத்தனை பயங்கரமான போதை மருந்து போட்டும், அந்தளவு கட்டுப்பாட்டோடு இருந்தாய்…? அந்தப் பெண் எவ்வளவோ முயன்றாள்… அந்த நிலையிலும் நீ அவளுக்கு ஈடு கொடுக்கவில்லை… மாறாக உதைத்தாய்… தள்ளிவிட்டாய்… படுக்கையிலிருந்து எழுந்து வெளியேற முயன்றாய்… நீ அடித்த அடியில் அவளுடைய உதடுகள் கிழிந்து இரத்தம் கூட வந்தது என்றால் பார்த்துக்கொள்ளேன்… சரி நமக்கு வேண்டியது என் அண்ணனின் பெயரை எப்படி நாசமாக்கினாயோ, அதே போல உன்னதையும் நாசமாக்குவது. சோ முடிந்தவரை உன்னை வைத்துப் புகைப்படம் எடுத்தோம்… மறு நாள் நடந்ததுதான் உனக்குத் தெரியுமே… எப்படியோ… உன்னுடைய பெயரில் கரும்புள்ளி விழ வைத்துவிட்டேன்… ஆனால்…” என்று சீற்றத்துடன், கூற அபயவிதுலனோ அவன் கூறுவதைக் கேட்கும் மனநிலையில் இல்லை.
அவன்தான் அந்த நிலையிலும் பெரும் மகிழ்ச்சியில் அவசரமாகத் தன் மனைவியுடன் டூயட் பாடப் போயிருந்தானே… அந்தக் கணம், அதுவரையிருந்த இறுக்கம் முழுவதுமாக விட்டு விலகிப்போனது.
யாரோ ஒருத்தியைத் தொட்டுவிட்டுத் தன் மனைவியின் அருகே நெருங்கமுடியாமல் தவித்தவனுக்குத் தான் தன் மனைவியைத் தவிர வேறு எவளையும் அருகில் நெருங்க விடவில்லை என்பது புரிந்ததும் அதுவரை அடைத்திருந்த மன அழுத்தம் தொலைந்து போனது. எல்லையில்லா நிம்மதி பிறக்க,
“முட்டாள்… போதையிலிருந்தால் கூட என்னால் என் மனைவியை இனம் காண முடியும்… அப்படியிருக்க வேறு ஒரு பெண்ணைத் தொட்டிருப்பேன் என்று நினைத்தாயா…” என்று ஆத்திரத்துடன் கேட்க,
“ப்ச்… அதிலும் என் முயற்சி தோற்று விட்டதே… ஜேர்மனிய நீதிமன்றம் உன்னை நிரபராதி என்று தீர்ப்புக் கொடுத்ததும், இங்கே கனடாவில் உன் குற்றமற்ற தன்மையைப் புகழ்ந்து பேசியதும், அடங்கியிருந்த ஆத்திரம் வீறு கொண்டு எழுந்தது. இத்தனை சிரமப்பட்டுப் பயனில்லாது போய்விட்டதே… அப்போது முடிவு செய்தேன் முட்டாள் போலக் குழந்தைகளைப் பொதுப் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாயே…” என்று கூற அபயவிதுலன் அந்த இடத்தில் தன்னை மறந்து சிரிக்கத் தொடங்கினான். அவன் சிரிப்பதைக் கடும் ஆத்திரத்துடன் அஜய்பட்டேல் பார்த்துக்கொண்டிருக்க, எப்படியோ சிரிப்பை அடக்கியவன்,
“முட்டாள்… முட்டாள்… என் மனைவிக்கு ஆபத்து விளைவிக்கும் காரியத்தைச் செய்கிறீர்கள்… அது தெரிந்தும் என் குழந்தைகளை அலட்சியமாகப் பொதுப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியிருக்கிறேனே, ஏன் என்று யோசிக்க மாட்டாயா? அப்படியே அனுப்பினாலும் பாதுகாப்பு இல்லாமலா அனுப்பியிருப்பேன்… யோசிக்க மாட்டாய்? அவர்கள் பொடும் தொப்பியிலிருந்து, பள்ளிக்கூடப் பையிலிருந்து, சப்பாத்து வரை ஜிபிஎஸ் பொருத்தியிருக்கிறேன். அவர்கள் எந்த மூளையிலிருந்தாலும் சுலபமாகவே நான் கண்டுபிடித்து விடுவேன்… என் குழந்தைகளைப் பொதுப் பள்ளிக்கூடம் அனுப்பியதற்குக் காரணமே உங்களைக் கண்டுபிடிக்கத்தான்டா என் xxx xxx… என்ன புரியவில்லையா…? என் முகத்திற்கு நேராக இருந்து மோதியிருந்தால் நீங்கள் யார் என்று எப்போதோ அறிந்திருப்பேன்… ஆனால் முதுகுக்குப் பின்னாலிருந்தல்லவா குத்தினீர்கள்… என்று என் மனைவியைத் தாக்க முயன்றீர்களோ அப்போதே இது எனக்கான குறி என்பதைப் புரிந்துகொண்டேன்… உங்களை வலைவீசத் தொடங்கினேன்… ஆனால்… சின்னத் தடயம் கூட இல்லாமல் உங்களைப் பிடிக்க முடியாமல்… நான் பட்ட அவஸ்தை… அப்போது முடிவு செய்தேன்… தூண்டில் போட்டு மீனைப் பிடிக்கலாம் என்று… நான் போட்ட தூண்டில் என் குழந்தைகள்… அதில் சிக்கிக்கொண்டவன்தான் நீ…” என்றவன், எழுந்தவாறு,
“என் முயற்சி வீண் போகவில்லை. நீயே சிக்கிக்கொண்டாய்” என்றவன்
“உன் அண்ணன் ஒரு முட்டாள்… ஒரு பெண்ணை அனுமதியில்லாமல் பார்ப்பதே தவறு, அவளை நடனமாடுமாறு கட்டாயப்படுத்தினால்… பார்த்துக்கொண்டா இருப்பார்கள்… அதுவும் அவள் என் மனைவியாக இருக்கும்போது… என் மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்தாலே பொசுக்கிவிடுவேன்… தொட்டு நடனமாடக் கேட்டால் கைக்கட்டி வாய் பொத்தி பார்த்துக்கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா?” என்றவன் எழுந்து அஜய் பட்டேல் அமர்ந்திருந்த கதிரையின் கைப்பிடியில் தன் கரங்களைப் பதித்து,
“எனக்கு இன்னும் ஒன்று மட்டும்தான் புரியவில்லை, எதற்காக நீ உன் அண்ணன் பெயரில் இங்கே வந்தாய் பத்ரிநாத் போல நடந்துகொள்ளக் காரணம் என்ன?” என்றதும் ஏளனமாக இவனைப் பார்த்த அஜய் பட்டேல்,
“உன் குடும்பத்தில் ஒருவரைத்தன்னும் கொன்ற பின் காவல்துறையிடம் சிக்கிக் கொள்ள நான் என்ன முட்டாளா? ஒருவேளை கொலையாளி யார் என்று கண்டுபிடித்தாலும், காவல்துறை செத்துப்போன பத்ரிநாத்தைத்தான் தேடுவார்களே தவிர இந்த அஜய் பட்டேலை அல்ல. உனக்கொரு வழி செய்தபின் மீண்டும் இந்தியா சென்று என் வாழ்க்கையைத் தொடர இருந்தேன்… ஆனால்…” என்று தன் தோல்வியை எண்ணி ஆத்திரத்துடன் சினக்க,
“ம்… ஆனால் அந்தப் புகாடி உன் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது இல்லையா… முட்டாள், எல்லாவற்றையும் பக்காவாகச் செய்த நீ, அந்தப் புகாடியை உன் சொந்தப் பெயரில் வாங்கி மாட்டிக்கொண்டாயே… ம்…” என்று நகைக்க, எரிச்சலுடன் அபயவிதுலனைப் பார்த்த அஜய்பட்டேல்,
“ஆமாம்… நான் செய்த மிகப் பெரும் தவறு, அதுதான்… புகாடியை வாங்கியதும், அதை அண்ணன் பெயரில் வாங்க மனமில்லாமல் என் பெயரில் வாங்கியதும் என் முட்டாள்தனம்தான். இல்லையென்றால், நிச்சயமாக என்னைக் கண்டு பிடித்திருக்க மாட்டாய்… உன் அக்கா மகள் மட்டும் இறந்திருந்தால், நான் இப்போது மகிழ்ச்சியாகவே இந்தியா சென்றிருப்பேன்… அது தவறியதால்தான் இன்னும் இங்கே இருக்கிறேன்…” என்று மிகப் பெரும் குறோதத்துடன் கூற, அபயவிதுலன் ஓங்கி இன்னொரு குத்து விட்டான்.
பின் ஆவேசத்துடன் எழுந்து, திரும்பி, அதே வேகத்தில் கஜேந்திரனின் மார்பில் ஒரு உதை கொடுக்க, அவனோடு சேர்ந்து நீளிருக்கையும் பின்புறமாகச் சரிந்தது.
மீண்டும் அவனை நெருங்கி சட்டையைப் பற்றி மேலே தூக்க, அந்தக் கஜேந்திரன் ஓரடி மேலே தூக்கப்பட்டான். அவனை ஒரு உலுப்பு உலுப்பிய அபயவிதுலன்,
“ஏன்டா… நீதானே அந்த வாகனத்தை ஓட்டினாய்…” என்று உலுப்ப அதிர்ந்துபோனான் கஜேந்திரன்.
“நா.. நானி… நானில்லை…” என்று அவன் திமிற, கீழே விட்டவன், அவன் தலையைப் பற்றி இழுத்துச் சென்று ஓங்கி சுவரில் அடிக்க, அவனுடைய தலை ட்ரைவோலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சிக்குப்பட்டு நின்றது. முதுகுப்புறச் சட்டையைப் பற்றி இழுத்து எடுத்தவன்,
“எப்படிடா உனக்கு மனது வந்தது…” என்று ஆவேசத்துடன் கேட்டவன் மீண்டும் அவனுடைய தலையை அங்கிருந்த மேசையில் பலமாக மோத, அந்தக் கண்ணாடி மேசைப் பலமாக உடைந்து அதில் ஒரு துண்டு கஜேந்திரனின் கண்ணுக்குள் சொருகி நிற்க, அதைக் கண்டு திருப்தி கொண்டவனாகக் கரத்தை விட்டவன், பின் திரும்பி அஜய்பட்டேலைப் பார்த்து,
“யாருடைய குடும்பத்தின் மீது கைவைத்தாய்… சும்மா திரும்பிப் பார்த்தாலே விட மாட்டேன்.. என் கிட்டவே உங்கள் கதகளியை ஆட நினைக்கிறீர்களா… சூரசம்ஹாரம் செய்திட மாட்டேன்..” என்று சீற அதைக் கேட்டு கடகடவென்று சிரித்தான் அஜய்பட்டேல்.
“டு யு நோ வட்… அபயவிதுலன்… நீ என்னை என்ன செய்தாலும் ஐ டோன்ட் கெயர்… ஏன் என்றால், நீ என்னிடம் தோற்றுவிட்டாய்… புரியவில்லை… முடிந்த வரை உன்னைச் சுற்றவிட்டேனே… கடந்த ஒரு வருடமாக உன்னை நிம்மதியில்லாமல் இருக்கச் செய்தேனே… இது போதாதா எனக்கு… இதுவரை எவராலும் நெருங்க முடியாதிருந்த அபயவிதுலனை அவனுக்குத் தெரியாமலே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிவைத்தேனே… எத்தன அடி… மாறி மாறி எழ விடாமல் செய்தேன்… பார்த்தாயா… ஐ ஆம் சோ ஹாப்பி மான்… முதன் முறையாகத் தி கிரேட் அபாயவிதுலன் தடுமாறி நின்றதை பார்த்தேன்… அதைப் பார்க்கும்போது எப்படி இருந்தது தெரியுமா…? அப்படியே பட்டாசு கொளுத்தி தீபாவளி கொண்டாடியது போல… மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது… அடுத்தது உன் அக்காவையும் போட்டுத்தள்ளதான் நினைத்தேன்… பட் அதற்கிடையில் என்னைக் கண்டுபிடித்து விட்டாய்… பரவாயில்லை… இந்த ஒன்றரை வருடமாக உன்னுடைய கண்ணுக்குள் விரலை வைத்து ஆட்டினேன் அல்லவா… அது போதும் எனக்கு…” என்று பெருமையுடன் கிண்டலடித்துச் சிரிக்கச் சற்று நேரம் அமைதி காத்தான் அபயவிதுலன்.
“யெஸ்… ஐ அக்ரி… ஏதோ ஒரு வகையில் உன்னிடம் தோற்று விட்டேனே… என்னுடைய எதிரிகள் கூட நேர்மையானவர்கள் அதனால் அவர்களுக்கு முதுகில் குத்தத் தெரியாது. ஆனால் நீ… அது ஒன்றுமில்லை அஜய்பட்டேல்… எனக்கு வீரர்களுடனேயே எதிர்த்துப் பழகிவிட்டதா… கோழையான உன்னை எப்படிக் கண்டுபிடித்து வெல்வது என்று எனக்குத் தெரியவில்லை… தட்ஸ் ஓக்கே… இது கூட எனக்கு நல்ல பாடம்தான்…” என்றவன், தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மலர்ந்தது.
ஓக்கே… நவ் யுவர் டைம் ஸ்டார்ட் கெட் ரெடி டு” என்று கூறிவிட்டுத் திரும்ப அங்கிருந்த மூவரும் அதிர்ந்து போனார்கள்.
“என்ன கொல்ல போகிறாயா…” என்று கிண்டலுடன் அஜய்ப்பட்டெல் கேட்கும் போதே அவனுக்கு எங்கோ பறப்பது போலத் தோன்றியது. கூடவே இதயம் அடைத்துக் கொண்டு வந்தது.
அதைக் கண்டு மெல்லியதாகக் குலுங்கி நகைத்த அபயவிதுலன்,
“பயப்பட ஒன்றுமில்லை… அஜய்பட்டேல்… நீ குடித்த மதுவில் ஹெரோயின் கலந்திருக்கிறேன்… கூடவே எட்டுக் கிலோ ஹிரோயின் இரண்டு கிலோ கொகேன்… மூன்று நவீன ரகத் துப்பாக்கிகள்… கொஞ்ச கைக்குண்டுகளும் நிலவறையில் பதூக்கியிருக்கிறேன்… சொல்லப்போனால்… பயங்கரவாத செயலுக்குண்டான அத்தனை பொருட்களும் வைத்திருக்கிறேன்… முடிந்தால் எழுந்து அப்புறப்படுத்து… ஏன் என்றால் இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் காவல்துறை வந்துவிடும்…” என்றவன், மயக்கத்துடன் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அஜய்பட்டேலைப் பார்த்து,
“என்ன அப்படிப் பார்க்கிறாய்… கொல்லாமல் விட்டு வைக்கிறேன் என்றா… நீ பத்ரிநாத்தாக இருந்திருந்தால்… எப்போதோ உன்னைக் கொன்று குழிதோண்டிப் புதைத்திருப்பேன்.. ஆனால்… நீ அவனுடைய தம்பி… அண்ணனின் பாசத்திற்காக இந்த எல்லை வரைக்கும் வந்திருக்கிறாய்…” என்றவன் சற்று அமைதி காத்து,
“சகோதர பாசம் என்றால் என்ன என்று எனக்கும் தெரியும் அஜய்பட்டேல்… அவர்கள் துடித்தால், அது நம்மை எந்தளவுக்குத் துடிக்க வைக்கும் என்றும் எனக்குத் தெரியும்…” என்று முணுமுணுத்தவன், பின் நிமிர்ந்து,
“என்னைக் காட்டிக்கொடுத்தாலும் நான் வருந்தப்போவதில்லை. அஃபிஷலி நான் இப்போது அமரிக்காவில் இருக்கிறேன்…” என்றவன் எதையோ நினைத்தவன் போல, நெற்றியை சுண்டுவிரலால் சொரிந்து திரும்பி சர்ஜீத்தை பார்த்து,
“இந்தக் கண்காணிப்புக் கருவி கொஞ்ச நேரத்தில் இயங்கத்தொடங்கிவிடும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிற காவல்துறை இவனுடன் சேர்ந்து உன்னையும் கைது செய்யும்… அது மட்டுமல்ல நீ குடித்த மதுவிலும் ஹெரோயின் கலந்திருக்கிறேன்… சோ… உன்னால் உடனே தப்ப முடியாது… முடிந்தால் தப்பிக்கொள்.… ப்ரீ அட்வைஸ் தான்பா… பிடித்தால் பற்றிக்கொள்… இல்லை என்றால் இங்கேயே இருந்து வாங்கிக் கட்டிக்கொள்…” என்றவன் சிரித்தவாறு அஜய்பட்டேலின் பான்ட் பாக்கட்டில் கைவிட்டுக் கைப்பேசியை வெளியே எடுத்து, அஜய்பட்டேலைப் பார்த்து,
“ஆ.. மறந்துவிட்டேன்.. உன்னுடைய நண்பன்… கஜேந்திரனை நான் அடிக்கவில்லை… நீதான் அடித்திருக்கிறாய்… போதையில் அவன் உன்னை அடித்தான்… பதிலுக்கு நீ அவனைக் காயப்படுத்திவிட்டாய்… இதை மறக்காமல் காவல்துறையிடம் சொல்லிவிடு… சொல்லாவிட்டாலும் பாதகமில்லை… அவர்களே இடைவெளியை நிறப்பிவிடுவார்கள்…” என்றவன், கஜேந்திரனைப் பார்த்து,
“நீதான் என் ஆராதனா சித்தார்த் போன வண்டியை மோதினாய் என்று எப்படிக் கண்டுபிடித்தேன் என்று குழம்பிப்போயிருப்பாய், அன்று என் குழந்தைகளைக் கடத்தியவனின் கைப்பேசியை எடுத்து ஊடுருவிப் பார்த்ததில், அஜய்பட்டேலுக்குப் பக்கத்தில் இழித்துக்கொண்டு நின்றிருந்தது நீதான்… கிடைத்த கண்காணிப்புக் கருவிக்களில் பதிவான படங்களில் முகத்தை மறைத்துத் தொப்பிப் போட்டிருந்தாலும், உன்னுடைய தோடு உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டது…” என்றவாறு கைப்பேசியைத் தூக்கிப் பார்த்தான்.
அது அஜய்பட்டேலின் முகத்தினை அடையாளமாகக் கேட்கச் சரிந்திருந்தவனின் முகத்திற்கு முன்பாகக் கமராவைப் பிடிக்க அது திறந்து கொண்டது. அதில் எதை எதையோ எல்லாம் தட்டியவன் பின், அதிலிருந்தே 911 என்று அடித்தான்.
“யெஸ்… வட் இஸ் யுவர் எமேர்ஜன்சி…”
“ஹெல்ப் மி…. ப்ளீஸ் ஹெல்ப் மி…” என்று இவன் அலறிவிட்டுக் கைப்பேசியை அணைக்காது அதை ஓரமாகப் போட்டவன், தலை கவிழ்ந்திருந்தவனைப் பார்த்து
“சாரி அஜய்.. உண்மையாக உன் சகோதரனின் இழப்புக்காக நான் வருந்துகிறேன்… ஆனால் அதில் என் தப்பு எதுவும் இல்லை… அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்… செத்துப்போன உன் அண்ணனுக்காக, என்னைப் பழிவாங்குவதாக நினைத்து என் குடும்பத்தின் மீது கைவைத்து விட்டாய்… எதை மன்னித்தாலும் இதை என்னால் மன்னிக்க முடியாது… அதற்கு நான் தரும் தண்டனை… வாழ் நாள் முழுவதும் நீ சிறையில் இருப்பது… இதற்கு மேலும் நீ ஏதாவது கோல்மால் செய்தியானால்,…” என்றவன் அவனுடைய கன்னத்தில் மெதுவாகத் தட்டிக்கொடுத்துவிட்டு வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினான் அபயவிதுலன்.
(39) சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும்…
(38) ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும்…
(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ…
(36) “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக்…
(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது.…
(34) மறுநாள் யாருக்கு எப்படியோ, அபயவிதுலனுக்கு மட்டும் மிக அழகாகவே விடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை அலைக்கழித்த…