சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை அபயவிதுலன் புகாடி வெய்ரோன் விஷேட தயாரிப்பு 2019 வைத்திருந்த அத்தனை பேருடைய தகவல்களை இணையத்தில் தேடிச் சேகரிக்க முயன்றான். அதில் சிலருடைய தகவல்களைச் சேகரித்து விசாரித்து ஒப்பிட்டுப் பார்த்துத் தான் தேடும் நபர்கள் அவர்களாக இருக்க முடியாது என்கிற முடிவில் அவர்களைக் கழித்து வைத்தவன் மிகுதி நான்கு பேரையும் பற்றி அக்குவேறு ஆணி வேறாக விசாரிக்கத் தொடங்கினான். இவன் நினைத்ததுபோல அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பாதுகாப்புக் கருதி எல்லாமே மறைமுகமாகத்தான் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டீஃபன் கஸ்டாவா, கோனர் ஆத்தர், ஆஜய்பட்டேல், சாம் சான்டர் இவர்களைப் பற்றி அறிந்தாலன்றி அவனால் எதுவும் செய்ய இயலாது. பிறரின் உதவியை அவன் பெறலாம்தான்… ஆனால் அதுவே அவனுக்குச் சாட்சியமாக எதிராகத் திரும்பிவிட்டால்…? இருக்கும் மனநிலையில் எதிரியைக் கண்டால் என்ன செய்வான் என்றே அவனுக்குத் தெரியாது… இந்த நிலையில், தன்னைக் காட்டிக்கொடுக்கும் சாட்சியத்தை எப்படி விட்டுவைப்பான்.
சோர்வுடன் தன் மருமகளின் அருகே வந்தமர்ந்தவனுக்கு அவளைப் பார்க்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இதோ மூன்று நாட்கள் கடந்த நிலையில், ஆராதனாவில் வேகமாக முன்னேற்றம்… அதனால் அவசியமற்ற குழாய்களை நீக்கியிருந்ததால் ஓரளவு அவளுடைய முகம் இப்போது தெரிந்தது.
நன்கு நினைவு தெரிந்த பின்பு, அவள் தன் காதல் கணவனைத் தேடியதை விட அதிகம் தன் மாமனையே தேடினாள் என்று சொல்லலாம். கணவனின் கரத்தைப் பற்றியிருந்தாலும், அபயவிதுலன் அறைக்குள் வந்தால், கணவனின் கரத்தை விடுத்து, அபயவிதுலனின் கரத்தை இறுகப் பற்றிக்கொள்வாள்.
சித்தார்த்துக்கும் கூட அபயவிதுலன் அருகே இருக்கும் போது, தன் மனம் பாதுகாப்பாக உணர்வதை அவன் ஒரு வித ஆச்சரியத்துடன் உணர்ந்துகொள்வான்.
அவனுக்கே அப்படியிருக்கும் போது, குழந்தையாக இருக்கும்போதே பாதுகாத்த அபயவிதுலனை அவள் தேடுவதில் ஆச்சரியமில்லையே.
அதே வேளை அபயவிதுலன், அனைவரையும் தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தான். தன் சகோதரியையும் மனைவி குழந்தைகளையும் எங்கும் போகாதவாறு பாதுகாத்தான். எதற்காக அவன் அப்படிச் செய்கிறான் என்பது மிளிர்மிருதைக்குத் தெரியுமாகையால் அவனுடைய உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து, அருகிலேயே இருந்தாள். காந்திமதிதான், தன் தம்பியைத் திட்டினார்.
“என்னடா நீ… பாத்ரூம் போவதாக இருந்தாலும் உன்னிடம் சொல்லிவிட்டா போகவேண்டும்… அதிகமாக அழும்பு பண்ணுகிறாய்… குழந்தைகளையாவது ஆடி ஓட விடேன்டா…” என்று சிடுசிடுக்கத் தவறவில்லை. ஆனாலும் தன் தம்பி காரணமின்றி அப்படிச் செய்யமாட்டான் என்று புரிந்ததால் முணுமுணுப்போடு தம்பியின் கட்டளையை நிறைவேற்றவே செய்தார்.
“ஹாய்… மை டியர் குண்டு பூசனி… ஹெள ஆர் யு?” என்று அவள் தலையைக் கலைத்தவாறு கேட்க, ஆராதனாவின் முகம் கோபத்தில் சிவந்தது. அந்த நிலையிலும் தன் மாமனை முறைத்தவள், அவனை அடிப்பதற்காகத் தன் கரத்தைத் தூக்க முயன்றாள்.
“ஏய்… உன்னால்தான் முடியவில்லை அல்லவா… சீக்கிரம் எழுந்து நடக்கப் பழகு… அப்போதுதான் என்னைத் துரத்திப் பிடிக்கலாம்…” என்று கிண்டலுடன் கூறிவிட்டு சித்தார்த்தைத் தேடினான்.
“ஹே… எங்கே சித்தார்த்?” என்று கேட்க உதட்டைப் பிதூக்கிய ஆராதனா, எதையோ கூற முயன்றாள்.
“சரி சரி… விடு… நான் பார்த்துக் கொள்கிறேன்?” என்று அவளை வம்புக்கு இழுத்துக்கொண்டிருக்கும் போதே சித்தார்த் கைப்பேசியுடன் உள்ள வந்தான்.
அவனுடைய கரத்தில் அந்தக் கைப்பேசி. அபயவிதுலனிடம் அதை நீட்டியவன்,
“இந்தா… இதை இன்னும் நன்றாகச் செய்யக்கூடியவர்களிடம் கொடுத்திருந்தால், எப்போதோ காரியம் முடிந்திருக்கும்…” என்று கூற, கிட்டத்தட்டக் கைப்பேசியைப் பறித்தவன், அதை உயிர்ப்பித்துப் பரிசோதித்தான். ஒரு சிலர்தான் மாறி மாறி அவனை அழைத்திருந்தனர். அவர்களின் தொலைபேசி இலக்கங்களைக் கொண்டு அவர்களின் தகவல்களை அறிந்தான். யாரும் அந்த வாகனத்திற்கு உரியவர்கள் அல்ல.
ஆனாலும் மனம் கேட்காமல் தன் கைப்பேசியிலிருந்து அந்த இலக்கங்களை அழைத்துப் பார்த்தான். அதில் ஒரு சிலர் துக்கம் விசாரிக்க இவன் எடுத்தான் என்று நினைத்து வருந்தினர். அதில் ஒருத்தனின் கைப்பேசி மட்டும் என்கேஜ்ட் என்று வந்தது. அதைச் சித்தார்த்திடம் கொடுத்து அந்த இலக்கத்திற்குரிய நபரைக் கண்டுபிடிக்கச் சொன்னான்.
முயற்சி செய்த சித்தார் தன் உதடுகளைப் பிதூக்கி, “இது ஜெனரேட் பண்ணிய இலக்கம் அபயன்… கண்டு பிடிக்க முடியாது” என்றான்.
எரிச்சலுடன் புகைப்படங்களைப் பார்ப்பதற்காகத் தட்டிக்கொண்டு போனான்.
ஏதேதோ நிறையப் படங்கள் இருந்தன. ஆராதனாவிற்கு அருகாமையிலிருந்த இருக்கையில் அமர்ந்து ஒவ்வொன்றாகப் பெருப்பித்துப் பார்த்துக்கொண்டு வந்தான். அந்த நேரம் மிளிர்மிருதை குழந்தைகளைக் காந்திமதியிடம் விட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். அபயவிதுலன் அமர்ந்தவாறு கைப்பேசியை நோண்டிக்கொண்டிருக்க, தொண்டையைக் கனைத்தவள்,
“ஆரு… உங்கள் மாமாவைச் சாப்பிடச் சொல்லு…” என்று அவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்தவாறு கூற, அவளுடைய பாராமுகம் அபயவிதுலனின் உதட்டில் மெல்லிய நகைப்பை உண்டாக்கியது.. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், கைப்பேசியிலேயே கவனமாக இருக்க, கோபத்துடன் நெருங்கியவள், அதைப் பறித்து ஆராதனாவின் படுக்கையில் வைத்துவிட்டு,
“ஆரு… சொல்லிக்கொண்டிருக்கிறேன்… கேட்கவில்லை…” என்றாள் எரிச்சலுடன்.
“பசிக்கவில்லை அம்முக்குட்டி… பிறகு சாப்பிடுகிறேன் என்று அந்தக் குள்ளவாத்துவிடம் சொல்லு…” என்று அவன் சிரமப்பட்டுத் தன் நகைப்பை அடக்கியவனாகக் கூற, ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி நின்றவள், அபயவிதுலனிடம் எதையோ கூறுவதற்கு வாயைத் திறந்து, பின் மூடித் திறந்து, இறுதியில் ”ர்ர்ர்ர்ர்ர்…” என்கிற ஒலியுடன் அவனை எதுவும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்துடன் திரும்ப, அதைக் கண்டு நீங்களும் உங்கள் சண்டையும்’ என்பது போல, கட்டிலில் கிடந்த கைப்பேசியை எடுத்து அதுதான் முக்கியம் என்பது போலப் படங்களைப் பார்க்கத் தொடங்கினாள் ஆராதனா. சும்மாதான் பார்க்கத் தொடங்கினாள். ஆனால் அதில் ஒரு படம் இவள் கவனத்தைக் கவர உற்றுப் பார்த்தாள். விழிகள் விரிய,
“மா… மாமா…” என்றாள் திக்கித் திணறி. தன் மருமகளின் அழைப்பில் திரும்பிப் பார்க்க, அவனிடம் அந்தக் கைப்பேசியை நீட்டியவாறு முகம் மலர,
“சுவிஸ்லாந்தில்… உ… உங்கள் நண்…பரை… சந்தித்…தேன்… என்று… சொன்… சொன்னேனே..” என்று கூறப் புருவம் சுருங்க வாங்கிப் பார்த்தான் அபயவிதுலன்.
அங்கே சிரித்துக்கொண்டு ஒரு கரத்தால் ஒரு பெண்ணை அணைத்தவாறு மறு கரத்தில் மதுப் போத்தலை ஏந்தியவாறு நின்றிருந்தான் பத்ரிநாத். பத்ரிநாத்பட்டேல். அவனைக் கண்டதும் இவன் முகம் எரிச்சலில் சிவந்தது. திரும்பித் தன் மருமகளைப் பார்த்தவன்,
“இவன் என் நண்பனா… யார் உனக்குச் சொன்னது?” என்று கேட்க, யோசித்தவள் உதடுகளைப் பிதூக்கி,
“மா..மாலில் சந்தித்து..ருக்கி…றேன்… மா…மா… உங்கள்… நண்..பரென்று… சொல்..லியிருக்கி…றார்…” என்று கூற,
“மை ஃப்ரன்ட்… மை ஃபுட்… ஐ ஹேட் திஸ் பாஸ்டட்…” என்று சீற, மிளிர்மிருதை எட்டிப் பார்த்தாள். அவன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் இவளை நடனமாட வரக் கேட்டுத் தொந்தரவு செய்தபோது அபயவிதுலனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டவன். அன்று பார்த்ததிற்கும் இப்போது படத்தில் பார்ப்பதற்கும் கொஞ்சம் வேறுபாடுகள் இருந்தாலும், அவன் அதே பத்ரிநாத்தான். ஆனால் இவன் எதற்கு அம்முக்குட்டியிடம் என் நண்பன் என்று சொல்லவேண்டும்? எப்படி என் குழந்தைகளைக் கடத்தியவனின் கைப்பேசியில் அவனுடைய படம் வந்தது?? ஒரு வேளை இவன் அன்று அவமானப்படுத்தியதற்குப் பழிவாங்க முயல்கிறானோ…? அப்படியே முயன்றாலும் ஒன்றரை வருடங்கள் கழித்துத்தான் பழிவாங்கவேண்டுமா என்ன? குழம்பியவனாக, பத்ரிநாத் பட்டேல் என்கிற பெயரைக் கூகிளில் தேட அவனைப் பற்றிய தகவல்கள் கூட அதிகம் இருக்கவில்லை. அன்று அபயவிதுலனிடம் அடி வாங்கி அவமானப் பட்ட செய்திகள் மட்டும் தெளிவாய் அங்கும் இங்குமாக இருந்தன.
மேலும் குழம்பிப்போனான் அபயவிதுலன். மிளிர்மிருதையைக் கொல்ல வந்த இடங்களில் இந்தப் புகாடி சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்தப் புகாடியை வாங்கியவர்களில் நால்வர் சந்தேகத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதே வேளை ஆத்விகனையும் சாத்விகனையும் கடத்தியவர்களின் கைப்பேசியில் பத்ரிநாத் இருக்கிறான். அப்படியானால் பத்திரிநாத்திற்கும், அந்தப் புகாடியை வைத்திருக்கும் ஏதோ ஒரு நபருக்கும் சம்பந்தம் இருக்கிறதா… இல்லை இரண்டு குழுக்கள் இவனுக்கு எதிராகத் தனித் தனியாக இயங்குகிறதா? அந்த இரண்டு குழுக்களையும் இணைக்கும் புள்ளி என்ன? பலவாறாக யோசித்தவனுக்கு ஒன்று பளிச்சென்று புரிந்தது.
இந்தப் படத்தில் இருப்பது பத்ரிநாத் பட்டேல். இவன் புகாடி வாகனத்தை வைத்திருந்தவர்களில் சந்தேகிக்கும் நால்வரில் ஒருவனின் பெயர் அஜய் பட்டேல். இருவருக்குமான இறுதிப் பெயர்கள் ஒன்று. அப்படியால் பத்ரிநாத்தான் அஜய் பட்டேலா…? இல்லை இருவரும் வேறு வேறா… புரியாத குழப்பத்தில் சற்று நேரம் இருந்தவனுக்கு, அதை ஆராயவேண்டிய அவசியம் புரிந்தது. கூடவே எதிரியைத் தான் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் செல்கிறோம் என்பதும் புரிந்தது. இந்த அஜய் பட்டேலுக்கும், பத்ரிநாத்திற்கும் இடையில் என்ன தொடர்பு என்பதை அறிந்துகொண்டால் எல்லாம் தெளிவானது போல. முடிவு செய்தவன், எழுந்து, தன் மனைவியைப் பார்த்தான்.
மிளிர்மிருதை என்ன என்பது போலப் பார்க்க,
“நான் கனடா செல்லவேண்டும்…” என்றான். அதைக் கேட்டதும் தன் கணவன் ஓரளவு எதிரியை நெருங்கிவிட்டான் என்பது புரிய,
“யார்… யார் அவர்கள்…” என்றாள் மிளிர்மிருதை ஒரு வித பரபரப்புடன். அதைக் கேட்டுப் புன்னகைத்தவன்,
“வந்து சொல்கிறேன்… அதுவரை என்மீதிருக்கும் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொள்… அப்புறம், நான் கனடா போகிறேன்… வரும் வரைக்கும் பத்திரமாக இருந்துகொள்.. அன்று செய்தது போல, அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று போனாய் என்று தெரிந்தது… அதற்குப் பிறகு நீ இன்னொரு அபயவிதுலனைப் பார்ப்பாய்…” என்று அடிக்குரலில் எச்சரித்தவன், காந்திமதியிடம் சென்றான்.
“அக்கா… முக்கிய வேலை ஒன்றிருக்கிறது… அவசரமாகக் கனடா போகவேண்டும்… திரும்பி வர சில நாட்கள் எடுக்கும் அது வரை குழந்தைகளையும் மிருதாவையும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம்… வெளியே எங்கும் செல்லவேண்டாம்…” என்றவன் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“சித்தார்த்… ஓரளவு எதிரியைக் கண்டுவிட்டேன்… நான் போகாமல் இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது… சோ… எல்லோரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்…” என்றுவிட்டுத் திரும்ப, அந்த ஆறடி எட்டங்குல இராட்சஷன் இவர்களைத்தான் தூர நின்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும், தன் கரத்தை உயர்த்த, அந்த மாமிச மலை இவனை நோக்கி வந்தது. உடலெல்லாம் அவனுக்குத் தசைகள் உருண்டு திரண்டு பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருந்தது.
ஆறடியை நெருங்கியிருந்த சித்தார்த் கூட அந்த மாமிச மலையின் தலையைத் தொடவேண்டுமானால் அவனுக்கு ஒரு கதிரையாவது வேண்டும்.
“டேய்… அபயன்… யாரடா இவன்…” என்று வாய் பிளந்தவாறு கேட்க, மெல்லியதாகச் சிரித்த அபயவிதுலன்,
“இவர் பெயர் அலக்ஸ். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். ஆராதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இவருடைய கண்காணிப்பில்தான் அக்காவும், நீயும், அம்முக்குட்டியும் இருக்கிறீர்கள்… இப்போது நான் போய்த் திரும்பும் வரைக்கும் இவருடைய பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும்… இவர் பாதுகாத்தால் மட்டும் போதாத சித்தார்த்… நீங்களும் கவனமாக இருக்கவேண்டும்… மிளிரையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்…” என்றவன் திரும்பி அலக்ஸைப் பார்த்து,
“தாங்க்ஸ் ஃபோர் யுவர் ஹெல்ப் அலக்ஸ்…” என்று கைகொடுக்க, அபயவிதுலனின் கரத்தை விட ஒன்றரை மடங்கு பெரிய கரத்தால் கைகுலுக்கியவர்,
“மை ப்ளஷர்…” என்றார் அவர். அந்தக் குரலைக் கேட்ட சித்தார்த்திற்கு ஒரு கணம் ஏதாவது ஒலிவாங்கியை முழுங்கிவிட்டுப் பேசுகிறானா என்ன? என்று குழப்பமாக வேறு இருந்தது.
அலக்சின் பாதுகாப்பில் யாரும் தன் குடும்பத்தை நெருங்க முடியாது என்கிற தைரியத்துடன் அபயவிதுலன் கனடா நோக்கிப் பயணப்பட்டான்.
ஐந்து நாட்கள் கழித்து இரவு பத்து மணி
அவன் தொலைக்காட்சியில் படமொன்றைப் பார்த்துவிட்டு, மெல்லியதாய் எட்டிப்பார்த்த கொட்டாவியை விரல்களின் இடுக்கில் வெளிவிட்டவாறு தள்ளாட்டத்துடன் எழுந்தான். போன சரக்கு அப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. திரும்பிப் பார்க்க அவனுடைய சகாக்கள் கஜேந்தரும், சர்ஜீத்தும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மட்டையாகக் கிடந்தனர்.
அவர்கள் இப்போதைக்கு விழிக்கமாட்டார்கள் என்பது புரிய, சரிதான் தூங்கலாம் என்று, தொலைக்காட்சியை நிறுத்தும் பொருட்டுத் தானியங்கியை எடுக்கக் குனிந்தவனுக்கு எதுவோ உறுத்த தன் தலையைத் திருப்பிப் பார்த்தான்.
அவனுடைய விழிகளுக்கு எதுவும் தட்டுப்படவில்லை. குழப்பத்துடன் மீண்டும் குனிந்து தானியங்கியை எடுத்துத் தொலைக்காட்சி நோக்கி நீட்டியவாறு திரும்ப, அங்கே திரையை மறைத்தவாறு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்துபோய் நின்றான் அவன். உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. இதயம் படு வேகமாக இயங்கியது.
“நீ…. நீயா…” என்று வார்த்தைகள் வராது தடுமாற, அவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு கால்களைச் சற்று அகட்டிக் கிண்டலுடன் பார்த்துக்கொண்டிருக்க, அதற்கு மேல் நிற்க முடியாது அதுவரை ஏறியிருந்த போதை முற்று முழுதாக அவனை விட்டு விடைபெற்றுச் செல்ல பொத்தென்ற இருக்கையில் விழுந்தான் அவன்.
“ஹே… நாட் நவ்… இப்போது செத்துத் தொலைக்காதே… நான் பேசவேண்டியது நிறைய இருக்கிறது…” என்று கிண்டலுடன் கூறும்போதே புதிய குரலில் தூக்கம் கலைந்து கஜேந்தரும், சர்ஜீத்தும் விழிக்க, அங்கே தங்கள் கண்களின் முன்னே, அபயவிதுலன் நிற்பதைக் கண்டு அதிர்ந்து போய்,
“நீயா…” என்றனர்.
“சீ… உட்கார்…” என்று அபயவிதுலன் கர்ஜித்த கர்ஜிப்பில் சர்வ நாடியும் அடங்கிப்போய் உட்கார்ந்தவர்களுக்கு என்றுமில்லாதவாறு கைகால்கள் நடுங்கத் தொடங்கின.
“எத்தனை வாட்டி கேட்பீர்கள்… நீயா நீயா நீயா… என்று… கண் நன்றாகத் தெரிகிறது அல்லவா… நானும் இவனும் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லவா… இடையில் எதற்கு மூக்கை நுழைக்கிறீர்கள்… மூடிக்கொண்டு இருக்கவேண்டும்… புரிந்ததா…” என்று எச்சரிக்க, அந்தக் குரலில் கப் சிப்பென்று வாயை மூடியவாறு அமர்ந்துகொண்டனர் இருவரும். அதைக் கண்டவன், கஜேந்திரனின் அருகே சென்று உற்றுப் பார்த்தான். அடுத்தக் கணம் அவன் முக்கில் பலமாக ஒரு குத்து விட்டவன்,
“உன்னுடைய நண்பனோடு பேசிவிட்டு உன்னிடம் வருகிறேன்?” என்று சொன்னவன் அஜய் பட்டேலை நோக்கித் திரும்ப, அவனோ,
“என்ன தைரியம் உனக்கு… என் வீட்டிற்குள் எப்படி வந்தாய்…” என்று சீறினான். அந்தச் சத்தம் இவன் காதுகளில் பலமாக மோதியதோ, தன் காதிற்குள் சுண்டுவிரலை வைத்துக் குடைந்த அபயவிதுலன்
“ஷ்… நாம் நான்கு பேர்தானே இருக்கிறோம்… எதற்கு இப்படிக் கத்துகிறாய்… செவிப்பறை கிழிந்து விட்டது…” என்றவன், எதிர்பாராத தருணத்தில் தன் முன்னால் நின்றிருந்தவனை ஓங்கி அறையப் பொறிகலங்கிப்போய்க் கண்கள் மங்க எதுவும் புரியாத குழப்பத்தில் காதுகளுக்குள் எதுவோ ரீங்காரிக்க… மலங்க மலங்க விழித்தான் அவன். கூடவே அபயவிதுலன் அடித்ததால் வலதுபுறத்துச் செவிப்பறை கிழிந்து இரத்தம் வேறு காதிற்குள்ளாக வெளி வரத் தன் கரத்தால் தொட்டுப் பார்த்து அதிர்ந்து போய் அபயவிதுலனை வெறித்தான். அவனோ எதுவும் நடக்காதது போல,
“வித் யுவர் பெர்மிஷன்… நீண்ட நேரமாக நிற்கிறேனா… கால் வலிக்கிறது… சோ… இந்தக் கதிரையில் அமரட்டுமா…” என்றவன், அவர் அனுமதியையும் பெறாது, இருக்கையை இழுத்து அதன் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு, முதுகு சாயும் இடத்தில் தன் முன்னுடலைப் பதித்து, கதிரையை அணைத்தாற் போலக் கரத்தை வைத்தவன், தன் நாடியை மேல் சட்டத்தின் மேல் பதித்து,
“ம்… இப்போது கேள்…” என்றான் அதே நக்கலுடன்.
அவனோ அவசரமாகத் தன் வீட்டிற்குள் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கருவியைப் பார்க்க, இவனும் அண்ணாந்து பார்த்து,
“அட… கண்காணிப்புக் கருவி… எதற்கு வைத்திருக்கிறாய்… ஓ… திருடன் வந்தால் பிடிப்பதற்கா… வைத்துக்கொள் வைத்துக்கொள்…” என்று தலையை ஆட்டியவன் ”சரி சரி… எதற்குத் தேவையில்லாத வெட்டிப்பேச்சு… நம்முடைய கதைக்கு வருவோம்… இப்போது சொல்லு…” என்றவன்
“எதற்கு எனக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாய்? ம்… மறைந்து தாக்கினால் உன்னைக் கண்டு பிடித்துவிடமாட்டேன் என்று நினைத்தாயா? அஜய்பட்டேல்” என்றான் ஆர்வம் போல. ஆனால் அவனுடைய கண்களோ அக்கினிச் சீற்றத்தை வெளிப்படுத்த,
“என்ன சொன்னாய்? உனக்குக் குடைச்சல் கொடுத்தேனா… ஏன் எனக்கு வேறு வேலையில்லையா? என்ன உளறல் இது…” என்றான் இவன் புரியாதவன் போல.
“ம்… அப்போ நீ என் மனைவியைக் கொல்ல ஆட்கள் அனுப்பவில்லை… என்னுடைய பெயருக்குத் தீங்கு விளைவிக்க முயலவில்லை… என் குழந்தைகளைக் கடத்த முயலவில்லை… என் மருமகளை நீ காரேற்றிக் கொல்ல ஆளை அனுப்பவில்லை… ம்… இவற்றையெல்லாம் நீ செய்யவில்லையென்றால் வேறு யார் செய்திருப்பார்கள்… உன் அண்ணன் பத்ரிநாத்தா…?” என்றதுதான் தாமதம் அஜய்பட்டேலின் முகம் வெளுரிப்போனது. ஆனாலும் தன்னைச் சமாளித்தவனாக,
“என்ன உளறுகிறாய்…” என்று கேட்டபோது ஒரு கணம் தன் முன்னால் அமர்ந்திருந்தவனை உற்றுப் பார்த்தான் அபயவிதுலன்.
“ஷ்ஷ்ஷ்… ரொம்பப் படுத்துகிறானே…” என்று சலித்தவன்,
“டேய்… எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறதுடா… உண்மையைச் சொன்னாயானால் நான் பாட்டுக்குக் கேட்டுவிட்டுப் போய்விடுவேன்… அதை விட்டுவிட்டு அடம் பிடித்தால் நான் என்ன செய்யட்டும்?” என் கேட்டபோது அபயவிதுலனின் குரலில் அதுவரை இருந்த இளக்கம் போய் அங்கே கடுமையும் அகோரமும் குடிகொண்டது.
தன்னை அதிர்வுடன் பார்த்த அஜேய்பட்டேலை ஏறிட்டவன், பின் மெதுவாகச் சிரித்தான்.
“அஜய்பட்டேல்… எல்லாத்தையும் ஒழுங்காகப் பக்காவாக என்னுடைய கையில் சிக்காத வகையில் காயை நகர்த்திக்கொண்டு வந்த நீ… ஒரு இடத்தில் சறுக்கிவிட்டாயே…” என்றவன் பின் ”புரியவில்லை??” என்றவாறு தன் பான்ட் பாக்கட்டிலிருந்த இரு படங்களை எடுத்து அஜேய்பட்டேலின் முன் நோக்கி விட்டெறிய, புருவம் சுருங்க அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தான்.
அங்கே அவனுடைய புகாரி கார் ஒரு தரிப்பிடத்தில் நின்றிருந்தது. அடுத்தப் படத்தில் அவன் ஒரு கரத்தில் மதுவும் இன்னொரு கரத்தில் மாதுமாக நின்றிருந்தான். பக்கத்தில் கஜேந்திரன் இழித்துக்கொண்டு அஜய்பட்டேலின் தோளின் மீது கரத்தைப் போட்டவாறு நின்றிருந்தான். அதை அலட்சியமாகப் பார்த்தவன், “இதை எதற்கு என்னிடம் கொடுக்கிறாய்?” என்றான் கோபமாக.
ஒரு விநாடி அஜேய்பட்டேலை உற்றுப் பார்த்த அபயவிதுலன்,
“புரியவில்லை…?” என்று கேட்டான். அவனோ மறுப்பாகத் தலையை ஆட்ட, ஆவேசமாக எழுந்தவன் ஓங்கி அவன் தாடையில் குத்த, தாடையிலிருந்து இரண்டு பற்கள் கொட்டுண்ட வாயெல்லாம் இரத்தம் வழியத் துடித்துப்போய்ப் பார்த்தான் அஜெய்பட்டேல்.
அடுத்தக் குத்துக் குத்துவதற்கு அபயவிதுலன் தன் கரத்தை ஓங்க, உடனே கஜேந்திரனும் சர்ஜீத்தும் அவன் மேல் பாய, அவனோ வேகமாகத் திரும்பி இருவரின் தலையையும் பற்றிப் பலமாக ஒன்றோடு ஒன்று மோதப் பொறிகலங்கிப் போனார்கள் இருவரும்.
அதே ஆவேசத்துடன் சுழன்று சர்ஜீத்தின் மார்பில் தன் காலால் உதைய, உதைந்த வேகத்தில் அங்கிருந்த நீளிருக்கையில் கவிழ்ந்து விழுந்தான் சர்ஜீத்.
திரும்பிக் கஜேந்திரனைப் பார்த்தான் அபயவிதுலன் அவனைத் தாக்க முதலே ஓடிப்போய் நீளிருக்கையில் பயத்துடன் அமர்ந்துவிட்டிருந்தான். அதுவும் கால்களையும் நீளிருக்கையில் மடித்துப் போட்டு அதைச் சுற்றிக் கரங்களை வைத்தவாறு, பயத்துடன் மலங்க மலங்க விழிக்க அதைக் கண்ட அபயவிதுலனுக்கு உதடுகள் தன்னை மறந்து சிரித்தன. தன் தலையை மறுப்பாக ஆட்டியவன், சிரித்தவாறு மீண்டும் அஜெய்பட்டேலிடம் தன் கவனத்தைத் திசை திருப்பி,
“என் மனைவியைக் கொல்ல முயன்ற இடங்களில் எனக்குக் கிடைத்த தடயம் புகாடி வெய்ரோன்… அது அஜய்பட்டேல் என்பவனின் பெயரில் பதியப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளைக் கடத்த ஆட்களை அனுப்பியிருந்தாயல்லவா… அதில் அவனுடைய கைப்பேசியை ஊடுருவி பார்த்தேன். அதில் ஒரு படம்… பத்ரிநாத்துடையது… அப்படித்தான் நினைத்தேன்… புகாடி கார் அஜய்பட்டேலுடையது… படத்தில் இருப்பது பத்ரிநாத்… இரண்டு பெயரிலும் எந்த விபரங்களும் இணையத்தில் கிடைக்கவில்லை. சோ எனக்குத் தெரிந்த பத்ரிநாத் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விசாரித்தேன்… அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், என் மனைவியை நெருங்க முயன்று என்னிடம் அடிவாங்கி அவமானப் பட்டுச் சென்ற பின்பு… இந்தியா போனவன் மூன்று மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தான்… ஆனால் இந்தியா போன பத்ரிநாத்திற்கும் திரும்பி வந்த பத்ரிநாத்துக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். செயலில், பேச்சில், நடத்தையில் முக்கியமாகக் கையெழுத்தில்” என்றதும் அதிர்ந்துபோய்ப் பார்த்தான் பத்ரிநாத்.
“என்ன அதிர்ச்சியோடு பார்க்கிறாய்… இரண்டு பத்ரிநாத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொண்ட பின்னாடி, அதை உறுதிப்படுத்தாமல் எப்படி உண்மையைக் கண்டு பிடிப்பது? அதுதான் தற்போது நீ போட்ட கையெழுத்தையும் முன்பு போட்ட கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். கணினியில் இரண்டும் வேறு வேறு என்று வருகிறது. அதனால்… நீ பத்ரிநாத் அல்ல என்பதைக் கண்டுகொண்டேன்…
“இப்போது சொல், உனக்கும் அஜய் பட்டேலுக்கும் என்ன சம்பந்தம்… அவனுடைய வியாபாரத்தையும், அவனுடைய செயல்பாட்டையும் நீ தொடரக் காரணம் என்ன? உண்மையைச் சொன்னால் உனக்கு நிம்மதி…!. இல்லை என்று வைத்துக்கொள், என்றவாறு தன் இரு உள்ளங்கைகளையும் தேய்க்க, அடுத்த அடி முகத்தில் விழப்போகிறதோ என்ற அஞ்சியவனாக,
“சொல்கிறேன்… சொல்கிறேன்…” என்று பதறியவாறு தன் முகத்தை மூடினான் அஜய்பட்டேல்.
“குட்…” என்ற அபயவிதுலன் எழுந்து சற்றுத் தள்ளியிருந்த மதுபானம் அடுக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றான். தன் விரல்களால் ஒவ்வொரு போத்தலாகத் தடவியவன், குறிப்பிட்ட ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தான்.
“ம்… சல்வட்டோர்ஸ் லெஜசி… வாவ்…” என்றவன் மேலே தொங்கிக்கொண்டிருந்த நான்கு குவளைகளை எடுத்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அவுன்ஸ் வீதம் விட்டவன், அதில் இரண்டை எடுத்து வந்து ஒன்றை சர்ஜீத்திடமும் மற்றதை கஜேந்திரனிடமும் நீட்ட, முதலில் இருவரும் தயங்கினர்.
“பயப்படாமல் குடியுங்கள்… நானும் உங்கள் கூடத்தான் குடிக்கப்போகிறேன்…” என்றதும், வேறு வழியில்லாமல் அதை வாங்கிக் கொள்ள, இவன் திரும்பச் சென்று மற்றைய இரண்டையும் எடுத்து வந்து ஒன்றை அஜய்பட்டேலிடம் நீட்டிவிட்டு, தன் கிளாசை எடுத்து ஒரு சிப் குடித்தவாறு நிமிர, அவன் இன்னும் குடிக்காமல் தயங்கிக்கொண்டிருந்தான்.
“என்ன… இன்னும் நம்பிக்கை வரவில்லையா… உன்னைக் கொல்லவேண்டுமானால், இத்தனை நேரம் விட்டு வைப்பேனா… தவிர உன்னிடமிருந்து விபரங்கள் அறியாமல் பரலோகம் அனுப்ப மாட்டேன்.. அதனால் தயங்காமல் குடி…” என்றவன் இன்னொரு சிப்பை வாயில் வைக்க, இப்போது மூவரும் பயம் நீங்கியவர்களாகக் குவளையை வாயில் வைத்தனர்.
வறண்டு போயிருந்த தொண்டைக்கு, அந்த மதுபானம் நன்றாகத்தான் இருந்தது.
இருவரும் உள்ளே இழுப்பதைக் கண்டு,
“இது நல்ல பிள்ளைக்கு அழகு…” என்றவன் அங்கிருந்த கதிரையை இழுத்து மீண்டும் அதில் அலட்சியமாக அமர்ந்தவன், கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
“சரி… இப்போது… சொல்…” என்றதும் அச்சத்துடன் தன் நண்பர்களைப் பார்த்துவிட்டு தலை குனிந்தான் அஜய்பட்டேல்.
(38) ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும்…
(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ…
(36) “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக்…
(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது.…
(34) மறுநாள் யாருக்கு எப்படியோ, அபயவிதுலனுக்கு மட்டும் மிக அழகாகவே விடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை அலைக்கழித்த…
(33) பயத்துடனேயே தன் விழிகளைத் திறந்தவனுக்கு அங்கே அவன் மனைவி அதே புன்னகையுடன் நின்றிருக்கக் கண்டான். அப்படியானால் அவன்…