Sun. Dec 7th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-38

(38)

 

ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும் பிழைப்பாளா என்கிற நம்பிக்கையில்லாது தோய்ந்து போயிருந்தவர்களுக்கு ஆராதனாவின் மாமா என்கிற ஒற்றைச் சொல்லில் நின்ற உலகமே அசையத் தொடங்கியது.

கட்டிய கணவனுக்குக் கூட உயிர்க்காத அவள் உணர்வுகள் குழந்தையாய் பாதுகாத்து வளர்த்த மாமனின் தொடுகையும் அவன் குரலும் உயிர்ப்பித்தது என்றால், அவன் மீது அவளுக்கு எத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும். என் மாமா வந்துவிட்டான், ஒரு அச்சமும் இல்லை என்று உள்ளுணர்வு சொன்னதால்தானே அவள் மீண்டெழுந்தாள்.

வைத்தியர்களுக்குக் கூட ஒரு முறையல்ல பலமுறையே தங்கள் வியப்பைக் கூறிவிட்டிருந்தார்கள். சித்தார்த்தோ, அபயவிதுலனைக் கட்டிப்பிடித்து விடவேயில்லை. அவன் உயிரானவளை மீட்டுவந்தவன் அல்லவா அவன்.

“தாங்க் யு அபயவிதுலன்… தாங்க் யு சோ மச்… நீ வராமல் இருந்திருந்தால்… என் ஆராதனா… என் ஆராதனா என்னை விட்டுப் போயிருப்பாள்…” என்று கதறியே விட்டான். காந்திமதியோ மகிழ்ச்சியும் துக்கமுமாக மிளிர்மிருதையை இறுகப் பற்றியவாறு குலுங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அபயவிதுலனுக்குதான் எதையும் நம்ப முடியவில்லை.

தன் கரம் பட்டதும் அசைந்த அவள் கரங்களும், அவன் குரல் கேட்டதும் உயிர்த்த அவன் இதயமும்தான் அவன் நினைவில் மாறி மாறி வந்தன.

“ஓ மை பேபி கேர்ள்…” என்று முணுமுணுத்தவனுக்கு அப்போதுதான் சுரணையே முழுதாக வந்தது. அதுவரையிருந்த இறுக்கம் விலகிச் செல்ல, தன் அணைப்பிலிருந்த சித்தார்த்தை விலக்கியவன், வேகமாக ஆராதனாவின் படுக்கையில் அமர்ந்து மீண்டும் அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான்.

இப்போதும் விழிகள் மூடிக்கொண்டுதான் இருந்தன. ஆனாலும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி மூடியிருந்தன.

தன் பெரிய கரத்தால், ஆராதனாவின் கன்னத்தில் பதித்து,

“என்னுடைய அம்முக்குட்டி… நான் இருக்கிறேன் அல்லவா… இனி எந்த ஆபத்தும் வராதுடா… ஐ ப்ராமிஸ் யு…” என்று கலங்கிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த தாதி அவர்களை வெளியே போகுமாறு பணிக்க, மனமில்லாமலே எல்லோரும் வெளியே வந்தனர்.

அடுத்து சித்தார்த் கலக்கத்துடன் அவர்களை அழைத்துச் சென்ற இடம், குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இன்கியூபெட்டர் அறை. எல்லோரும் உள்ளே போக முடியாது என்பதால், சித்தார்த் அபயவிதுலனை மட்டும் அழைத்துக்கொண்டு அனுமதி பெற்று உள்ளே சென்றான்.

போகும் முதல், தொற்று நீக்கி ஆடைகளும், கையுறைகளும், மாஸ்கும் கொடுத்து அணிவிக்கச் சொல்ல, அதை அணிந்தவாறே உள்ளே சென்றனர். கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு குழந்தைகள் அங்கே வைக்கப்பட்டிருந்தர்.

குறிப்பிட்ட இங்கியூபெட்டர் வந்ததும், அபயவிதுலனின் கரத்தைப் பற்றிய சித்தார்த்,

“என் குழந்தை அபயன்…” என்றான் புன்னகையுடன். திரும்பிப் பார்த்த அபயவிதுலனுக்கு மூச்சே வெளிவராது தடுமாறியது. அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருந்தது குழந்தை. சின்னதாய். மெல்லியதாய், வாயில் ஏதோ குழாய் வைக்கப்பட்டிருக்க, உடல் முழுவதும் வயர்களுடன் விழிகளை மூடியிருந்தது குழந்தை. இதயம் மட்டும் வேகமாகத் துடிக்கவில்லையென்றால், அது உயிரோடு இருக்கிறது என்றே சொல்ல முடியாது.

அபயவிதுலனுக்கு ஏனோ படபடத்துக்கொண்டு வந்தது. அந்தப் பெட்டியில் ஒரு கை போகும் அளவுக்கு இருந்த துளைக்குள் கரத்தை நுழைத்து அதன் கன்னத்தை வருட, அதுவரை அமைதியாக இருந்த குழந்தை மெதுவாகத் தன் காலை அசைத்தது. மெல்லிய சிரிப்புடன் அதன் கரத்தைப் பற்றப் போக, அது சற்றும் தாமதிக்காத அவனுடைய சுட்டுவிரலை இறுகப் பற்றிக்கொண்டது.

அபயவிதுலனுக்கு உடலே சிலிர்த்தது. இதோ இதே போலத்தான் அன்று அம்முக்குட்டி பிறந்தபோது அவன் கரத்தைப் பற்றிக்கொண்டாள். அன்றிலிருந்து, அவள் மணமாகிப் போகும் வரைக்கும் அவன் கரத்தை விட்டதில்லை. இப்போது… அவள் குழந்தை அவன் கரத்தைப் பற்றிக்கொள்கிறது… அப்போது மனதில் உறுதியெடுத்தான்… எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்தக் குழந்தையின் கரத்தை விடப்போவதில்லையென்று.

அதிக நேரம் அங்கேயே இருக்க முடியாது என்பதால் தாதி அவர்களை வெளியேறுமாறு பணிக்க ஏதோ கனவில் நடப்பது போல வந்த அபயவிதுலன் அங்கே நின்றிருந்த மிளிர்மிருதையைக் கண்டதும் அதற்கு மேல் தாங்க முடியாதவனாக விரைந்து சென்று அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.

தன் விழிகளை இறுக மூடியவாறு கிடந்தவனுடைய கரங்கள் மட்டும் அவளைத் தன்னுள் புதைப்பது போல இறுக அழுத்திக்கொண்டிருக்க, அவனுடைய உணர்வுகளை உடனே புரிந்துகொண்டாள் மிளிர்மிருதை.

அவனுடைய உடல் பாரம் மேலும் மேலும் அவளை அழுத்த, இப்படியே நின்றால் கீழே விழுந்துவிடுவோம் என்பதைப் புரிந்துகொண்டவளாக, அங்கிருந்த இருக்கையை நோக்கி அவனை நடத்திச் சென்றவள், அவனையும் இழுத்துக்கொண்டே அதில் அமர, அவனும் அவளை விட்டு விலகாமல் இறுகக் கட்டிப்பிடித்தவாறே இருக்கையில் அமர்ந்தான்.

சற்று நேரம் அவனை அப்படியே விட்டவள், பின், அவனுடைய முதுகைத் தட்டிக் கொடுத்துத் தலையைச் சற்றுத் திருப்பிக் கழுத்து வளைவிலிருந்தவனின் காதடியில் மெல்லிய முத்தமொன்றைப் பதித்து,

“விதுலா…! உங்களைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்… சொன்னேன் அல்லவா… கடவுள் நல்லவர்களைச் சோதிப்பான்… ஆனால் கைவிடமாட்டான் என்று… யாருக்கும் எதுவும் ஆகாது… அதுவும் நீங்கள் அருகே இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது…” என்று அவனுக்குச் சமாதானப் படுத்த, மெதுவாக அவளிடமிருந்து விலகியவனின் விழிகளில் கடுமையும் அகோரமும் குடிகொண்டிருந்தன.

அவனுடைய அம்முக்குட்டியை இந்த நிலைக்குத் தள்ளியவனைச் சும்மா விடப்போவதில்லை ஆவேசம் கொழுந்துவிட்டெரிய, வாயை மறைத்திருந்த மாஸ்க்கைக் கழற்றியவாறு, சித்தார்த்தைக் கூர்மையாகப் பார்த்தான் அபயவிதுலன்.

“இந்த விபத்து எப்படி நடந்தது?” என்றான் அழுத்தம் நிறைந்த குரலில்.

“தெரியவில்லை அபயன்… காவல்த்துரை தேடிக்கொண்டிருக்கிறது… இதுவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் வேறு மயங்கிவிட்டோம். கார் அடிபட்ட வேகத்தில், டோட்டல் டாமெஜ்… இதுவரை எந்தத் தடையமும் கிடைக்கவில்லை.” என்று கூற அபயவிதுலன் தன் நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டான்.

முதலில் அவன் மனைவி, பிறகு அவன், குழந்தைகள்… ஆராதனா… அடுத்து யார்… அக்காவா? நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது. உயிரே ஊசலாடும் நிலைக்குச் சென்றது… கடவுளே… எப்படிக் காந்திமதியைக் காக்கப் போகிறான்…? புரியாத குழப்பத்துடன் தன் கரத்தில் முகத்தை மூடிக்கொண்டான். அதைக் கண்டதும் மிளிர்மிருதைக்கு இரத்தமே கசிந்தது.

பெரும் பிரச்சனைகள் வரும் போது, அதற்கான தீர்வு தெரியாது தத்தளிக்கும் போதெல்லாம் அவன் இப்படித்தான் கரங்களுக்குள் முகத்தை மறைத்துக் கொள்வான். அதைக் கண்டதும், அவனுடைய தோளை அழுந்த பற்றியவள்,

“விதுலா…! எவ்ரிதிங் வில் பி ஓக்கே…” என்று சமாதானப் படுத்தினாலும், உள்ளே உதறத்தான் செய்தது. அபயவிதுலன் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தாற்பரியம் அவளுக்குப் புரிந்ததால் அதிலிருந்து எப்படி அவன் வெளியே வருவான் என்றும் அவளுக்குத் தெரியவில்லை.

அபயவிதுலனுக்குப் படைபலமில்லை. அவன் கையே அவனுக்குதவி… அவனால் பிறரின் உதவியைப் பெற முடியாது… அப்படிப்பட்டவன் எவரின் உதவியும் இல்லாமல்தான் எதிரியைக் கண்டுபிடிக்க வேண்டும்… அவனால் அது முடியுமா? இத்தனை வேகமாகக் கனவாய் போல நாலா பக்கமும் கரங்களை வீசி ஒரு குடும்பத்தையே அழிக்க நினைக்கும் அந்த எதிரியுடன் மோதி இவனால் ஜெயிக்க முடியுமா? அதை எண்ணியதும் அவளுக்கும் பெரும் குழப்பமாகிப் போனது.

யோசனையும் அச்சமும் போட்டிபோடத், தன் தலையை அவன் தோளில் வைக்க, தன்னவளின் ஸ்பரிசத்தில் சுயநினைவு பெற்றவனாக முகத்திலிருந்து தன் கரங்களை விலக்கியவன், நிமிர்ந்தவாறு அவள் தோள்களைச் சுற்றி கரத்தைப் போட்டுத் தன்னை நோக்கி இழுக்க, இழுத்த வேகத்தில் அவன் மார்பில் விழுந்தாள் மிளிர்மிருதை.

அவள் தோளைச் சுற்றிக் கரத்தை எடுத்துச் சென்று, மேல் கரத்தை வருடிக் கொடுத்தவாறே,

“பயமாக இருக்கிறது மிருதா… மெல்ல மெல்லத் தோற்றுக்கொண்டிருக்கிறேன்… யோசிக்கவே நேரம் கொடுக்காது தாக்கும் எதிரியை எண்ணி முதன் முறையாகப் பயப்படுகிறேன் மிருதா… என்னால் உங்கள் எல்லோரையும் காப்பாற்ற முடியாதோ என்று அச்சமாக இருக்கிறது… என்னால்தானே இதெல்லாம் என்று யோசிக்கிற போது, நிறையக் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது கண்ணம்மா… நான் என்ன செய்யட்டும்?” என்று தவிப்புடன் கேட்கத் தலையை விலக்காமல் அண்ணாந்து அபயவிதுலனைப் பார்த்த மிளிர்மிருதை,

“என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்… உங்களால்தான் எங்களுக்குப் பிரச்சனையா… என்ன உளறல் இது? சற்று முன் பார்த்தீர்கள் அல்லவா… இனி உயிர் பிழைக்க மாட்டாள் என்று வைத்தியர்கள் கூடக் கைவிரித்த நிலையில், உங்கள் ஸ்பரிசம் பட்டதும், ஆராதனா கண்விழித்துவிட்டாள்… அந்தக் குழந்தை… அது கூட உங்களைப் புரிந்துகொண்டதே விதுலா…! நீங்கள் அருகே இருந்தாலே குற்றங்கள் மறைந்து போகும்… தோல்விகள் தொலைந்து போகும்… யாரும் எங்களை நெருங்க மாட்டார்கள்…! நீங்கள் வாலி போல, எதிரி உங்கள் முன்னே இருந்தால் போதும், அவனுடைய சக்தி முழுவதும் உங்களுக்கு வந்துவிடும்… உங்களை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குச் சூர சம்காரம்தான்…” என்று அவள் கூற, தன் விழிகளைச் சற்றுத் தளர்த்தித் தன்னவளைப் பார்த்தவன்,

“எதிரி கண்ணுக்கு முன்னால் இருந்தால் அவனை ஜெயிப்பது சுலபம் மிருதா… ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டம் காட்டுகிறான்… அதுதான் சிக்கலே… எந்தத் தடையமும் இல்லாமல் அவனை எப்படிக் கண்டுபிடிப்பேன்… என் எதிரிகளுக்குக் கூட ஒரு தகுதி உண்டு கண்ணம்மா. அவர்கள் ஒளிந்திருந்து என்னோடு மோத மாட்டார்கள்… எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராகத்தான் மோதுவார்கள். அப்படியிருந்தும் விசாரித்து விட்டேன்… எனக்குத் தெரிந்த எதிரிகள் யாருக்கும் இதில் தொடர்பில்லை. இது வேறு எதிரி… புதியவன்… அவன் யார்… சின்னத் தடையம்… சின்னத் தடையம் கிடைத்தாலும் எனக்குப் போதும்… யார் என்று கண்டு பிடித்துவிடுவேன்…” என்று கூறியவன், குனிந்து அவள் தலையில் உதடுகளைப் பொருத்தி எடுத்தவனுக்குச் சடார் என்று அந்த நினைப்பு வந்தது.

“கைப்பேசி… அவசரமாக மிளிர்மிருதையிடமிருந்து பிரிந்தவன் தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கைப்பேசியை வெளியே எடுத்தான்.”

இதை ஊடுருவிச் செயல்பட வைக்கச் சித்தார்த்தால் முடியும். அவசரமாக எழுந்தவன் சித்தார்த்தை நோக்கிச் சென்றான். அவன் ஆராதனாவின் அருகேதான் அமர்ந்திருந்தான்.

“சித்தார்த்… ஐ நீட் யுவர் ஹெல்ப்…”

“சொல்லு அபயன்…”

“இந்தக் கைப்பேசியைச் செயல்படவைக்கவேண்டும்…” என்று கூற, கட்டுப் போடாத கரத்தால் வாங்கிப் பார்த்தான்.

“ஐ ஃபோன் எய்ட்…” என்றவன், “இப்போதேயா அபயன்…?” என்றான் சோர்வுடன்.

“யெஸ்… ரைட் நவ்…” என்று அபயவிதுலன் அழுத்தமாகக் கூற, உடலில் ஏற்பட்ட வலியுடன் எழுந்தான் சித்தார்த்.

“இட்ஸ் நாட் ஈசி அபயன்… ஊடுருவும்போது கொஞ்சமாகச் சறுக்கினாலும் எல்லாம் அழிந்துவிடும்… இந்தக் கைப்பேசியை வைத்திருந்தவனைப் பற்றி ஏதாவது இன்ஃபோர்மேஷன் தெரியுமா?” என்று கேட்க,

“இல்லை சித்தார்த் எதுவும் தெரியாது…” என்று கூற,

“ஐ ட்ரை…” என்றவாறு திரும்பியவனிடம்,

“சித்தார்த்…” என்றான். நின்று திரும்ப,

“பத்திரம்… இது மூன்றாம் நபருக்குத் தெரியக் கூடாது…” என்றான் அழுத்தமாக.

“ஷூவர்… பட் உடனே என்னால் முடியாது அபயன்… ஐ நீட் சம் டைம்…” என்று சோர்வுடன் கூற, சித்தார்த்தை நெருங்கியவன்,

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் நீ இதை ஊடுருவி செயல்பட வைக்கவேண்டும்… ஏன் என்றால்… நம் ஆருவை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் பற்றிய தகவல்கள் ஒரு வேளை இந்தக் கைப்பேசியில் இருக்கலாம்…” என்று கூற ஒரு கணம் அசைவற்று நின்றான் சித்தார்த். நிமிர்ந்து அபயவிதுலனைப் பார்த்து,,

“உண்மையாகத்தான் சொல்கிறாயா?” என்று கேட்க, இவன் ஆம் என்பது போலத் தலையாட்டினான்.

“என்னிடம் விடு விதுலா…! சீக்கிரம் இதைச் செயல்படுத்தி உன்னிடம் கொடுக்கிறேன்…” என்றவனிடம்,

“சித்தார்த், விபத்து நடந்த இடத்திலோ அதற்கு அருகாமையிலோ சிசிடி கேமராவில் ஏதாவது ஒளிப்பதிவுகள் சிக்கியிருக்கிறதா?” என்று கேட்க,

“இரண்டு காஸ் ஸ்டேஷனிலிருந்து கிடைத்திருக்கிறது. ஆனால் எதிலும் தெளிவான தடயங்கள் கிடைக்கவில்லை. காவல்துறையில் இருந்து ஒரு சில படங்கள் எனக்கு வந்திருக்கிறது… வேண்டுமானால் உன் கைப்பேசிக்கு அனுப்புகிறேன் பார்…” என்று விட்டு அந்தப் படங்களை உடனே அபயவிதுலனுக்கு அனுப்பிவிட்டுத் தன் செயலாளரிடம், தன்னுடைய பிரத்தியேகக் கணனியை எடுத்துவருமாறு கூறிவிட்டுத் தன் மனைவியின் பக்கம் சென்றமர, அபயவிதுலனோ சித்தார்த் அனுப்பிய புகைப்படங்களைக் கவனமாகப் பரிசோதித்தான்.

அவன் சொன்னது போல எந்தப் படங்களும் தெளிவாக இல்லை. ஒரு படத்தில் மட்டும், நீண்ட சுமையூர்தியின் முகப்பு மரங்களுக்கு மத்தியில் தெரிந்தது. மரங்கள் மறைத்திருந்ததால், சுமையூர்தியின் பாகங்கள் எதுவும் தெரியவில்லை. எர்ச்சலுடன் அதை ஓட்டியவனை அடையாளம் காண முயன்றவனுக்கு அங்கேயும் தோல்விதான் கிடைத்தது.

அவன் முகத்தை மறைத்தாற்போலத் தொப்பி அணிந்திருந்தான். ஆனால் காதின் மேற்புரத்தில் குத்தியது போல ஒரு தோடு அணிந்திருந்தான். நிச்சயமாக அதை வைத்து இவன்தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கவே முடியாது. எரிச்சலுடன் கைப்பேசியை அணைத்தவன், களைப்புடன் தலைமுடியை வருடிக் கொடுத்தவாறு ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்த ஜன்னலின் அருகே வந்து நின்றான்.

மூளை எக்கச்சக்கமாக வேலை செய்ததால் களைத்துப்போயிருந்தது. எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாது புத்தி மக்கர் பண்ணியது. எரிச்சலுடன் வெட்ட வெளியைப் பார்க்க, அவன் கருத்தைக் கவர்ந்தது ஒரு நூல் நிலையம். உடனே மிருதாவின் பக்கம் திரும்பியவன்,

“மிருதா… எதிரே ஒரு நூல் நிலையம் இருக்கிறது… போய்விட்டு வருகிறேன்… அவசரம் என்றால் என் கைப்பேசிக்கு அழை…” என்றவன், “எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு வெளியே நீயோ அக்காவோ போகக் கூடாது… புரிந்ததா” என்றவன் அந்த நூல்நிலையத்தை நோக்கிச் சென்றான்.

அங்கே கணினி பிரிவுக்குச் ஒரு கணினிக்கு முன்பாக வந்து நின்றான். கூகிளைத் தட்டியவன், புகாடி வெய்ரோன் 2019 ஸ்பெஷல் எடிஷன் இன் கனடா…” என்று அடிக்கத் தொடங்கினான்.

அடுத்த இரண்டு மணி நேரங்களில் அந்த வாகனங்கள் யார் யார் வாங்கினார்கள் என்கிற அத்தனை செய்திகளையும் சேகரித்தான். கிட்டத்தட்ட பதினைந்து பேர் அதே போன்ற வாகனத்தை வைத்திருந்தனர். சிலவற்றைக் கழித்துவிட்டு எஞ்சிய பெயர்களைப் பார்த்தான். அதிலிருக்கிற பெயர்கள் இதுவரை அவன் கேள்விப்பட்டதில்லை. மீண்டும் அந்த ஏழு பேரின் பெயர்களைப் பார்த்தான். இவர்கள் யாரோ ஒருவருடையதுதான் அந்த வாகனம்… யாருடையது? யோசனையுடன் மீண்டும் ஆராய்ந்தான். அதில் ஒரு சிலர் மிகத் தொலைவில் இருந்ததால், அந்த வாகனம் அவர்களுடையதாக இருக்காது என்று புரிந்தவனாய் அவர்களையும் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டுப் பார்க்க நால்வர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அந்தப் பட்டியலை எடுத்துக்கொண்டு, மீண்டும் மருத்துவமனை நோக்கி வந்தவன், ஆராதனாவின் அறையை நோக்கிச் சென்றான்.

ஆராதனாவின் அறைக்குள் சென்றவன் முதலில் தேடியது காந்திமதியைத்தான். அவர் ஒரு பக்கமாக அமர்ந்து ஏதோ கடவுள் மந்திரம் போலும் புத்தகத்தைப் பார்த்துப் படித்துக்கொண்டிருந்தார். சித்தார்த் அந்த ஐஃபோனைத் தன் மடிக்கணணியில் இணைத்து அதனோடு போராடிக்கொண்டிருந்தான். மிளிர்மிருதையையும் குழந்தைகளையும் காணவில்லை.

“அக்கா… மிளிர்மிருதை எங்கே?” என்று இவன் பதட்டமாகக் கேட்க,

“குழந்தைகள் பசிக்கிறது என்றார்கள்… கீழே கஃபேயில் சாப்பாடு வாங்கிக் கொடுக்க அழைத்துச் சென்றுவிட்டாள்…” என்று கூற, அதைக் கேட்டு அதிர்ந்தவன், வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவனாகப் புயலெனக் கஃபேயை நோக்கிப் பாய்ந்தான்.

உள்ளே சென்றவன், உயிரைக் கையில் பிடித்தவாறு ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டு வந்தான். அங்கும் இல்லை என்றதும் இவனுடைய உடல் பயத்தில் நடுங்கத் தொடங்கியது. அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு வந்தவன், அங்கே கழிவறையிலிருந்து மிளிர்மிருதை தன் குழந்தைகளைக் கரத்தில் பிடித்தவாறு அழைத்து வருவதைக் கண்டதும் அதுவரையிருந்த அச்சம் வடிந்து போக அங்கே ஆத்திரம் சீற்றமாகக் கிளம்பியது.

என்ன செய்கிறோம் என்று உணராமலே அவளை நெருங்கியவன் தன் கரத்தை ஓங்கிவிட்டிருந்தான். அவன் கரத்தை ஓங்கியதும் ஒரு கணம் அதிர்ந்து இரண்டடி பின்னால் வைத்து அந்த அடியிலிருந்து தப்புவதற்காகத் தன் கன்னத்தைத் திருப்பிய மிளிர்மிருதைக்கும் பயத்தில் உடல் நடுங்கியது. அதைக் கண்டுகொண்டவனாகத் தன் கோபம் அனைத்தையும் சேர்த்து அவளுக்கு ஓங்கிய கரத்தைப் பக்கத்திலிருந்த சுவரில் பலமாக ஓங்கிச் அறைய, அங்கே பெரும் ஓசையே கேட்டது. அப்படியிருந்தும் அவனுடைய கோபம் மட்டுப்படவில்லை.

ஒரு ஐந்து நிமிடத்தில் என்னமாக அவனைப் பதறவைத்துவிட்டாள்.

“யு ஸ்டுபிட்… உன்னிடம் என்ன சொன்னேன்… எக்காரணம் கொண்டும் வெளியே போகவேண்டாம் என்று சொல்லவில்லை…” என்று கர்ஜிக்கத் தன் கன்னத்தில் விழ இருந்த அடி சுவரில் விழுந்ததும், ஒரு கணம் பதறியவள், பின் அவன் ஆவேசம் கண்டு, சமாதானப் படுத்தும் முகமாக,

“அது… குழந்தைகள்… பசிக்கிறது என்று…” முடிக்கவில்லை தன் இரு கரங்களையும் முஷ்டியாக்கி தன் சினத்தை அடக்க முயன்றவன் பின் தோற்றவனாக, அவள் தோள்களில் தன் கரத்தைப் பதித்து,

“சோ வட்… கொஞ்ச நேரம்… எனக்காகக் காத்திருக்க முடியாதா உங்களுக்கு… வட் இஃப் எனிதிங் ஹப்பன் டு யு… தெரியும் அல்லவா… எத்தகைய பெரிய பிரச்சனையைச் சிந்தித்திருக்கிறோம், சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்று…” என்று சீறியவன், அவள் கரத்திலிருந்து குழந்தைகளைப் பறித்தவாறு நடக்கத் தொடங்க முகம் சுருங்கிப் போனாள் மிளிர்மிருதை.

ஆனாலும் அவனை எதிர்த்துப் பேச முடியவில்லை. தற்போதைய நிலையில் அவன் பல அழுத்தத்தின் மத்தியிலிருக்கிறான் என்பது அவளுக்கு நன்கு புரிந்தது. பாவம் அவனும்தான் என்ன செய்வான். எதிரியைத் தேடிப்பிடிக்கவேண்டும். அவர்களை மட்டுமல்ல காந்திமதியைக் காக்கவேண்டும்… குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும், ஆராதனாவின் உடல் நிலை இப்படி எல்லாச் சிக்கல்களையும் தனி ஒருவனாகத் தாங்கும் அவனுடைய மனநிலை எத்தனை குழப்பத்திலிருக்கும் என்பது அவளுக்கு நன்கு புரிந்ததால் அந்த இடத்தில் அவனுக்கு எதிராக அவளால் பேச முடியவில்லை. சற்றுப் பொறுத்து அவன் சரியாகிவிடுவான் என்பது புரிந்ததால், அவன் பின்னே செல்லத் தொடங்க, அங்கே அவர்களையே ஒருவன், அதுவும் ஆறடி எட்டங்குல உயரத்தில், கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் ராட்சஷன் போல வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

What’s your Reaction?
+1
12
+1
5
+1
1
+1
0
+1
3
+1
3

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!