Categories: Ongoing Novel

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15)

 

அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான் அபயவிதுலன். அவர்களின் கைங்கரியத்தில், அந்த வீடே சொர்கக்லோகமாக மாறிக்கொண்டிருந்தது.

ஆத்வீகனும் சாத்வீகனும் ஆளுக்கொரு திசையில் ஒருவரை ஒருவர் துரத்தியவாறு அங்கிருந்தவர்களின் கால்களில் முட்டுப் பட்டு, மோதுப்பட்டு மன்னிப்புக்கேட்டு, பின் விழுந்து உருண்டு எழுந்து ஓடிக்கொண்டிருக்க, காந்திமதியோ சமையலறையில் பலகாரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

கீழே வந்த மிளிர்மிருதை, அபயவிதுலனைத் தேட, அவனோ, வீசிய குளிர்காற்றையும் கருத்திற்கொள்ளாது வெறும் டீஷேர்ட் பான்ட்டுடன் இடது பக்கத்துப் பாக்கட்டில் கையை நுழைத்தவாறு இடது காலுக்குக் குறுக்காக வலது காலைப் போட்டவாறு முன் வாசலிலிருந்த தூணில் தன் தோளை முட்டுக்கொடுத்தவாறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

அதைக் கண்டதும் அவனுக்குக் குளிருமே என்று வருந்தியவளாக முன்னறை க்ளோசட்டைத் திறந்தவள், அவசரமாகத் தானும் தடித்த ஜாக்கட்டைப் போட்டுக்கொண்டு, அவனுடைய ஜாக்கட்டையும் எடுத்துக்கொண்டு அவனை நோக்கிச் சென்றாள்.

ஏதோ முக்கிய அழைப்புப் போலும் காதிலிருந்து கைப்பேசியை இறக்காமலே, இவளுடைய அசைவு தெரிந்து திரும்பிப் பார்த்தவன், தன்னவளைக் கண்டு ஒற்றைக் கண்ணை அடித்துவிட்டு அவள் கரத்திலிருந்த ஜாக்கட்டைக் கண்டு நிமிர்ந்தவன், பான்டிலிருந்து கையை எடுத்து அவளை நோக்கி நீட்ட, அதில் ஜாக்கட்டின் கரத்தைப் புகுத்தியதும், வலது கரத்திலிருந்த கைப்பேசியை இடது கரத்திற்கு மாற்றிவிட்டு வலது கரத்தை நீட்ட, அதிலும் ஜாக்கட்டின் மறு கரத்தைக் கொளுவி விட்டு அவன் முன்புறமாக வந்தவள், கழுத்தடியிலிருந்த காலரைச் சரிப்படுத்தி ஜாக்கட்டையும் சரிப்படுத்தி, அதன் சிப்பை மேல் நோக்கி இழுத்துவிட்டு, வேலை முடிந்தது என்பது போல அவனைப் பார்த்து இனிய புன்னகை ஒன்றைச் சிந்திவிட்டுத் திரும்ப, கைப்பேசியில் பேசியவாறு தன்னவளின் கரத்தைப் பற்றிக்கொண்டான் அபயவிதுலன்.

புருவம் சுருங்க நிமிர்ந்து பார்க்க, அவனோ அவள் மீது கவனமில்லாது கைப்பேசியில் கவனமாக இருக்க, உதட்டைச் சுழித்தவள். தன் கரத்தை அவனிடமிருந்து விடுவித்துவிட்டுக் குழந்தைகளைத் தேடினாள்.

அவர்கள் தோட்டத்தில் அபயவிதுலன் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டியில் விளையாடிக்கொண்டிருக்க, சற்றுத் தள்ளி சித்தார்த்தும் ஆராதனாவும் குழந்தைகளிடம் ஒரு கண்ணை வைத்தவாறு எதையோ பேசிக்கொண்டிருந்தனர்.

அதைக் கண்டு மெல்லியதாகச் சிரித்தவள், அவர்களின் இனிய உணர்வைக் குலைக்க விரும்பாது அபயவிதுலனைத் தாண்டித் திரும்பிச் செல்ல முற்பட்டவளின் மணிக்கட்டை மீண்டும் பற்றிக்கொண்டான் அவன்.

திகைப்புடன் நிமிர்ந்து பார்க்க, அவனோ இப்போது தன்னவளின் மீது கவனத்தை வைத்தவாறு,

“நோ ப்ராப்ளம் ஜார்ஜ்… யெஸ்… ஐ வில் பி தெயர் ஒன் டைம்.. தாங்க்ஸ்…” என்று புன்னகையுடன் கூறியவாறே, கையில் பற்றியிருந்த அந்தத் தளிர் கரத்தைச் சற்றுச் சுண்டி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில், அவனுடைய பரந்து விரிந்த மார்பில் வந்து விழுந்தாள் மிளிர்மிருதை.

விழுந்தவள் விலகாதிருக்கத் தன் வலது கரத்தை இடை சுற்றிக் கொண்டு சென்றவன் அவளைத் தன்னோடு அழுத்திப் பிடிக்க, அவளோ விழுந்த வேகத்தில் அவனுடைய ஜாக்கட்டை இறுகப் பற்றியவாறு, என்ன என்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் முகத்தில் விழுந்த முடியைக் கைப்பேசியை ஏந்திய கரத்தால் ஒதூக்கி விட்டவன்,

“கனடாவின் வியாபார முகவர்கள் சேர்ந்து பெரிய விழா வைக்கிறார்களாம்… போகலாமா?” என்றான் ஆவலாக.

“விழாவா.. ஆளை விடு சாமி… நான் வரவில்லை… அதுவும் நீங்கள் போகும் பார்ட்டி… சான்சே இல்லை… நீங்கள் போய்வாருங்கள்…” என்று உதட்டைச் சுழித்தவாறு கூற,

“ப்ளீஸ்டி… இந்த ஒரு முறை வரக் கூடாதா?” என்றான் ஏக்கமாக. அவளோ அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தை மாலையாக்கியவள்,

“ப்ளீஸ் விதுலா…! அங்கே குடிப்பார்கள்… அசிங்கம் அசிங்கமாக மொக்கை போடுவார்கள்… நடனமாடக் கூப்பிடுவார்கள்… அது உங்களுக்குப் பிடிக்காது… என்னைத் தனியாகவும் விட மாட்டீர்கள்… என்னைச் சுற்றியே திரிவீர்கள்… நீங்களும் அனுபவிக்க மாட்டீர்கள்… இது தேவையா… நான் வீட்டிலேயே இருக்கிறேனே… குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டும் வர முடியாது…” என்று கெஞ்சியவாறு மறுக்க, அவள் முள்ளந்தண்டு முடிவு வரை தன் கரத்தைக் கொண்டு சென்று மேலும் கீழும் வருடிக் கொடுத்தவன்,

“குழந்தைகளைப் பற்றி எதற்கு வருந்துகிறாய்… அக்கா பார்த்துக்கொள்வார்கள்… ப்ளீஸ்டி…நீ வரவில்லை என்றால் போரடிக்கும்மா…” என்றான் அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவாறு.

“நோ… சாரி… அதுவும் அங்கே மது குடிப்பார்கள்… என்னால் முடியாது விதுலா…! புரிந்துகொள்ளுங்கள்” என்று மறுத்தவள், அவன் வாடிய முகத்தைக் கூடக் கவனிக்காது விலகி உள்ளே செல்ல, அவள் மறுத்ததால் ஏற்பட்ட ஏக்கத்துடன் அங்கேயே நின்றான் அபயவிதுலன்.

உள்ளே வந்த மிளிர்மிருதைக்கு அவனுடைய வாடிய முகம் மெல்லியதாய் வதைத்தாலும், ஏனோ அந்த   விழாவிற்குச் செல்ல அவள் விரும்பவில்லை. ஒரு முறை சென்று அவள் பட்ட அவஸ்தை இந்த ஜென்மத்திற்கும் போதும் என்று தோன்றியது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்… ஏதோ முக்கிய விழா என்று இப்படித்தான் அழைத்துச் சென்றான். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பத்ரிநாத் என்று ஒருவன் வந்து அவளிடம் நடனமாடுமாறு கேட்கும் வரை.

இவள் இதமாக மறுக்க, கேட்டவனின் பிடிவாதம் சற்று அதிகரித்தது.

கடைசியில் அவளுடைய கரத்தைப் பற்றியபோது, எப்படித்தான் தொலைவில் நின்றிருந்த அபயவிதுலன் கண்டுபிடித்தானோ… புயல் போல வந்தவன், அவளுடைய கரத்தைத் தொட்டவனின் கரத்தைப் பற்றி முறுக்கி கிட்டத்தட்ட உடைக்கும் நிலைக்குச் சென்றுவிட்டிருந்தான். கூடவே பலமாக அவன் மூக்கில் ஒரு குத்து விட, மூக்கு உடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்கியது. எப்படியோ அபயவிதுலனை சமாதானப் படுத்தி, அடிவாங்கியவனையும் தன்னிலைக்குக் கொண்டுவருவதற்குள் அங்கிருந்தவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அதுவும் அவன் அபயவிதுலனை பார்த்துவிட்டு சென்ற விதம்… இப்போது நினைத்தாலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும்.

அதன் பின் அபயவிதுலன் இத்தனை நாட்களில் அவளைப் பார்ட்டிக்கென்று அழைத்துச் சென்றதில்லை. இவளும் போனதில்லை. ஆனால் இப்போது, புதிதாக அவளை வருமாறு அவன் வற்புறுத்தியது அவளுக்குப் பெரும் வியப்பாகவே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். யோசனையுடன் உள்ளே சென்றவள், அலங்கரித்துக்கொண்டிருந்தவர்களை மேற்பார்வை பார்த்தவாறு, சமையலறைக்குள் நுழைந்தாள்.

அங்கே காந்திமதி கொழுக்கட்டையை அவித்து எடுத்துக்கொண்டிருக்க, அவருக்கு உதவுதற்காக நெருங்கினாள் மிளிர்மிருதை.

அவளைக் கண்டிப்புடன் பார்த்த காந்திமதி,

“மரியாதையா இருக்கையில் அமர்ந்து பேசாமல் இரு…” என்று கூறிவிட்டுத் தன் வேலையைத் தொடங்க, எரிச்சலுடன் கதிரையில் தொப்பென்று அமர்ந்தவள்,

“போரடிக்கிறதும்மா… எனக்குக் காலில்தான் அடிபட்டிருக்கிறது… கையிலில்லை… ப்ளீஸ்மா… எதையாவது செய்யத் தாருங்களேன்…” என்று கெஞ்ச, சற்று யோசித்தவர், ஏற்கெனவே செய்து வைத்திருந்த சீனி அரியதரத்தை அவளுக்கு முன்னால் வைத்து,

“இதை ஒரு டாலர் அளவில் உருட்டிவை…” என்று வாழை இலைக்கு எண்ணெய் தடவி அவள் முன்னால் வைக்க, மகிழ்ச்சியுடனேயே அவர் சொன்ன அளவில் உருண்டைகளாகப் பிடித்துப் பின் அதைத் தட்டித் தட்டையாக்கி வாழையிலையில் வைத்துக்கொண்டிருக்க, அலங்காரம் செய்துகொண்டிருந்தவர், காந்திமதியிடம் எதையோ கேட்டுக்கொண்டு வந்தார்.

அவருக்கு உதவுவதற்காக, மிளிர்மிருதையிடம் திரும்பி,

“கொழுக்கட்டை அவிந்ததும் எடுத்துவிடு மிளிர்…! இதோ வந்துவிடுகிறேன்…” என்றுவிட்டுச் செல்ல தலையை ஆட்டிவிட்டுத் தன் வேலையில் கவனமாக இருக்க, உள்ளே வந்தான் அபயவிதுலன்.

தன் மனைவி சீனி அரியதரத்தை உருட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு

“என்னடி செய்கிறாய்?” என்றான். அவளோ தன் கவனத்தைத் திசை திருப்பாமலே,

“ம்… பொழுது போகவில்லை… அதுதான் கடைக்குக் கால்நடையாகப் போய்க்கொண்டிருக்கிறேன்…” என்று சொல்ல, அருகேயிருந்த தண்ணீர் குழாயைத் திறந்து குவளையில் தண்ணீர் பிடித்து அருந்தியவன், அவளை நெருங்கித் தன் கரத்திலிருந்த முக்கால் குவளைத் தண்ணீரை அவள் தலையில் ஊற்றியவாறு,

“அடடே… மழைக்குக் குடை எடுக்காமலா கடைக்குப் போகிறாய்…?” என்று வியக்க, குளிர் நீர் உச்சியில் பட்டதும் அதிர்ந்து நடுங்கிச் சிலிர்த்தவள், அது முகத்தில் வழிந்து உடலில் வழிந்து செல்ல, மூச்சடைபட்டுப் பெரும் சீற்றத்துடன் திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள். அவளுக்கு முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“விதுலா…!” என்று அலறியவள், “உங்களை…” என்றவாறு கரத்தில் உருட்டிக்கொண்டிருந்த அரியதரத்தைப் பேழையில் போட்டவாறு கோபத்துடன் அவனை நோக்கி எழ, அப்போதுதான் கண்டான்.

அவன் ஊற்றிய தண்ணீர் தலையில் வழிந்து முகத்தில் பயணித்து, அவள் ஆடைக்குள் அடைக்கலமாக, அவள் அணிந்திருந்த இளமஞ்சல் மேலாடை அவள் உள்ளாடையுடன் பட்டும் படாமலும் ஒட்டிக்கொண்டன.

அவள் நிலையைக் கண்டு அதுவரை தன் நகைப்பை அடக்கி வைத்திருந்தவன், பின் முடியாமல் பக் என்று சிரித்தவாறு அவளைப் பற்றி இழுத்து, தன் மார்பில் போட்டு, நனைந்துவிட்ட உச்சந்தலையில் தன் உதட்டைப் பொருத்தி, ஈரமாகிவிட்டிருந்த கன்னத்தை மெதுவாகத் தன் கரத்தால் துடைத்து விட்டவாறு,

“கேட்டால் பதில் சொல்வதுதானே… அதை விட்டுவிட்டு… எதற்குக் கிண்டல் பேச்சு?” என்று சிரிப்பை மறைக்காமல் கேட்க, ஓங்கி அவன் மார்பில் குத்தியவள்,

“அதற்காக இப்படியா…? நான் என்ன செய்கிறேன் என்று தெரிகிறதுதானே… பிறகு எதற்கு இந்தக் கேள்வி…” என்று தலை நிமிர்ந்து கேட்டவளின் முகத்தைப் பார்த்தவனுக்குத் தன் விழிகளை விலக்கவே முடியவில்லை.

அதுவும் ஒரு துளி நீர், அவள் இமையின் கரையோரத்திலிருந்து வழிந்து அங்கிருந்த இன்னொரு துளி நீரையும் அழைத்துக்கொண்டு வேகமாகக் கன்னத்தில் பயணித்து மார்பில் விழ, அவனுடைய விழிகள் அவசரமாக அந்த நீருடன் பயணித்து, அது அடைக்கலமான இடத்தில் சற்று நேரம் தங்கி நின்றன. அவசரமாக உமிழ்நீரைக் கூட்டி விழுங்கியவனின் விழிகள் இப்போது அவள் கழுத்தில் நிலைத்தன.

அதுவும், ஒரு துளி நீர் முத்து சங்குக் கழுத்தில் ரோஜா இதழில் பதிந்ததுபோலப் பட்டு நிலைத்திருக்க, கன்னத்தை வருடிய கரம் மெதுவாகக் கீழிறங்கிக் கழுத்தில் பயணித்து, அங்கிருந்த நீர்த்துளியை மென்மையாய் பட்டும் படாமலும் சுண்டிவிட, அவனுக்கெப்படியோ மிளிர்மிருதைதான் சிலிர்த்துப்போனாள். உள்ளத்தில் ஏதோ ஒரு வித உணர்வு… அடி வயிற்றிலிருந்து புறப்பட்ட இனம்புரியாத ஒரு வலி மேலெழுந்து உள்ளத்தைத் தாக்கத் தன் விழிகளை மூட மறந்தவளாய், நடுங்கிய உதடுகளைக் கடித்தவாறு அபயவிதுலனை ஒரு வித போதையுடன் பார்க்கத் தொடங்கினாள். அவனோ,

“உன்னுடைய கன்னம்… ரொம்ப மிருதுவா இருக்கிறது… உன் பெயரைப் போலவே…” என்று தாபத்துடன் கூறியவன், அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாக, அவளுடைய கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பொருத்த ஒரு கணம் வேறு ஒரு மாய உலகத்திற்குள் குப்புற் விழுந்தாள் மிளிர்மிருதை.

உதடுகளைப் பதித்த, அவனுக்கும் அவள் கன்னத்தை விட்டு உதடுகளை விலக்கவேண்டும் என்று தோன்றவில்லை, அவளுக்கும் அவனிடமிருந்து விலகவேண்டும் என்று தோன்றவில்லை. போதாததற்கு அவனுடைய சுடு மூச்சு அவள் கன்னத்தில் சீற்றமாய்ப் பட்டுத் தெறிக்க, அது வேறு அவளைப் போதைகொள்ளச் செய்தது.

மெல்ல மெல்லமாக அவனுடைய உதடுகள் அவளுடைய உதடுகளை நோக்கி நகரத் தொடங்க, முதலில் சிலிர்த்த உடல் இப்போது மெல்லியதாக விறைக்கத் தொடங்கியது. அது வரை ஒரு வித கிரக்கத்துடன் மயங்கியிருந்த அவளுடைய விழிகளில் மெல்லியதாய்… மிக மெல்லியதாய் ஒரு அச்சம் தோன்ற, தன்னை மறந்த வேகத்துடன் உதடுகள் நோக்கிப் பயணித்தவனின் விழிகள் அவள் விழிகளைச் சந்திக்க, அங்கே கண்ட மெல்லிய அச்சத்தைக் கண்டு தன் பயணத்தை நிறுத்தினான்.

அப்படியே நின்றவனுக்குச் சற்று நேரம் எடுத்தது தன் நிலை பெறுவதற்கு. அப்போதுதான் தான் செய்துகொண்டிருந்த காரியம் புரிய, வேகமாக அவள் கன்னத்தை விட்டுத் தன் உதடுகளைப் பிரித்து எடுத்தான். இன்னும் மயக்கம் தெளியாமலே அவள் முகத்தை ஒரு வித போதையுடன் பார்த்துக்கொண்டிருக்க, “ஷ்…” என்கிற சத்தம் அவர்களைச் சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.

பதட்டத்துடன் திரும்பிப் பார்க்க, கொழுக்கட்டை என்னைக் கவனி கவனி என்று இவர்களைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தது.

அதிர்ந்தவள்,

“ஐயையோ…! கொழுக்கட்டை…!” என்று அலறியவள், அவனைத் தள்ளிவிட்டுக் கொழுக்கட்டையின் மூடியைத் திறந்து பார்க்க, ஆவி பெரும் புகையாய் அவள் முகத்தில் பட்டுத் தெறிக்க, அந்த ஆவி கலையும் வரைக்கும் காத்திருந்தவள், எட்டிப் பார்த்தாள். கொழுக்கட்டையோ, அவிந்து களைத்துப்போய், வாய் பிளந்து பயறு வெளியேறி இவளைப் பார்த்து ’ஙே’ என்றது.

தன் தலையில் அடித்தவள்,

“உங்களால்தான்… விதுலா…! இப்போ அம்மா வந்தால் என்ன சொல்வேன்…” என்று பதறியவள், அவசரமாக அடுப்பை அணைத்துவிட்டுக் கொழுக்கட்டையைப் பரிதாபமாகப் பார்க்க, அந்த நேரம் காந்திமதி உள்ளே வந்தார்.

“என்னம்மா… கொழுக்கட்டை அவிந்துவிட்டதா? இறக்கி வைத்தாயா?” என்று கேட்க, இவளோ திருத் திரு என்று விழித்தவாறு திரும்பி காந்திமதியைப் பார்த்து,

“அது… அம்மா… வந்து… நான்…” என்று திணற, உடனே முந்திக்கொண்டவனாய்,

“என்ன கொழுக்கட்டை செய்திருக்கிறாய் அக்கா… பதம் சரியே இல்லை… வெடித்து விட்டது பார்… இத்தனை காலம் எப்படித்தான் கொழுக்கட்டை செய்தாயோ…” என்று அவன் குறைபட்டவாறு கடிய, காந்திமதி திகைத்துப் போனார்.

“ஏன்டா… எப்பவும் போலத்தானே செய்தேன்… ஏன் என்னாச்சு…” என்று வந்து அடுப்பை எட்டிப் பார்க்க, அங்கே கிடந்த கொழுக்கட்டையின் நிலை பார்த்து அதிர்ந்தவராய்,

“அடக் கடவுளே… எப்போதும் போலத்தான்டா செய்தேன்… மாவில்தான் ஏதோ தப்புப் போல…” என்று வருந்தியவாறு, ஸ்டீமரிலிருந்து கொழுக்கட்டையை வெளியே எடுக்க

“அது சரி… ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம்… போக்கா… போய் சரியா மாவைப் பிசை…” என்றவாறு வாயைப் பிளந்து நின்றிருந்த தன் மனைவியை இழுத்தவாறு வெளியே வந்தவனின் உதட்டில் நெளிந்த நகைப்பை நல்லவேளை காந்திமதி கவனிக்கவில்லை.

வெளியே வந்த மிளிர்மிருதை, அபயவிதுலனைப் பார்த்து,

“பாவம் அம்மா… அவர்கள் மீதே தப்பு சொல்கிறீர்களா? கடவுளுக்கே அடுக்காது… தெரியுமா?” என்று இடையில் கைவைத்தவாறு முறைக்க, மெல்லியதாக நகைத்தவன்,

“அதை விடு, அக்கா அதைச் சரிப்படுத்தி விடுவார்கள்… சற்று நேரத்தில் சித்தார்த் ஆராதனாவை அழைத்துக் கொண்டு திருமணத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்குமான சேலை எடுக்கப் போகிறானாம்… நாமும் போய்வரலாமா?” என்றான் ஆவலாக.

“வட் இன்றா… விதுலா…! விளையாடுகிறீர்களா… நாளைக்கு நிச்சயதார்த்தம். அதற்கு இரண்டு நாட்கள் கழித்துத் திருமணம் தெரியுமல்லவா…? தலைக்கு மேல் அயிரம் வேலை இருக்கின்றன… இந்த நிலையில் நான் எப்படி… நோ… வேண்டுமானால் நீங்கள் போய்விட்டு வாருங்கள்…” என்று மறுக்க,

“நான் போய்வருவதா? பைத்தியமா உனக்கு.. நான் மட்டும் தனியாகப் போய் என்ன செய்வது… அப்படியே உன் கூடக் கொஞ்ச நேரம் செலவழிக்கலாம் என்று பார்த்தால் ரொம்பத்தான் பிகு பண்ணுகிறாய்…” என்று அவள் முகம் நோக்கிக் குனிந்தவாறு கூற, அவன் கன்னத்தைப் பற்றித் தள்ளிவிட்டு அவனைப் பார்த்து முறைத்தவாறு,

“விதுலா…! எப்படி விதுலா…! நிறைய வேலைகள் இருக்கிறதே…” என்றாள். அவனோ அதற்கு,

“அதை அக்கா பார்த்துக்கொள்வார்கள்டி…” என்றான் அவசரமாக. கூடவே, “எப்போதாவது உன்னை இப்படி அழைத்துச் செல்ல நேரம் கிடைத்திருக்கிறது… போய்வரலாமே…” என்றான் ஆவலாக.

“அம்மா எத்தனை வேலையைத்தான் தன் தலையில் போடுவார்கள் விதுலா…! முடிந்தளவுக்கு அவர்கள் சுமையைக் குறைக்கவேண்டாமா… அலங்கரிப்புக்கு ஆட்கள் இருந்தாலும் நாம் இருந்து பார்ப்பது போலாகுமா…” என்றவாறு அவளிடமிருந்து விலக முயல, மேலும் அவளைத் தன்னோடு இறுக அணைத்துப் பிடித்தவாறு,

“சந்திரன் அங்கிளும் நந்தினி ஆன்டியும் வருகிறார்கள் மிருதா… தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்கள்… நாம் போய் வரலாம்…” என்று கெஞ்ச, அவன் கெஞ்சுவது பிடிக்காதவளாக,

“சரி… சரி… வருகிறேன்… இப்போது என்னை விடுங்கள்…” என்றவாறு அவனை விட்டு விலகியவள், “நிற்கும் வரையாவது அம்மாவிற்கு உதவுகிறேன்…” என்றவாறு திரும்பியவள், என்ன நினைத்தாளோ, எம்பி, அவன் தலை முடியைக் கலைத்துவிட்டு சமையலறைக்குள் ஓட இவன் மெல்லிய சிரிப்புடன் அதைக் கண்டு ரசித்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சந்திரனும் நந்தினியும் வந்துவிட, அவர்களிடம் மிச்ச வேலைகளை ஒப்படைத்துவிட்டு, மிளிர், சித்தார்த், ஆராதனாவை அழைத்துக் கொண்டு, டொரன்டோவில் உள்ள பெரிய தென்னிந்தியப் புடவைக் கடைக்கு அழைத்துச் சென்றான் அபயவிதுலன்.

 

(16)

 

பிரமாண்டமான அந்தக் கடைக்குள் இந்தியர், தென்னிந்தியர்கள், ஈழத்தவர்களுக்கான, பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் சார்ந்த, ஆடைகளும், நகைகளும் விதம் விதமாக அடுக்கப்பட்டிருக்க, முதலில் முகூர்த்த புடவைகள் எடுக்கலாம் என, அந்தப் பகுதிக்குள் நுழைந்தனர்.

ஆராதனா மணப்பெண் என்பதால் அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால் என்ன… அவளுக்குப் பிடித்தது சித்தார்த்திற்குப் பிடிக்கவில்லை. சித்தார்த்திற்குப் பிடித்தது அவளுக்குப் பிடிக்கவில்லை சற்று நேரம் பொருத்துப் பொருத்துப் பார்த்த மிளிர்மிருதைக்கும், அபயவிதுலனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை பறக்கத் தொடங்கியது.

“சித்து… இது நன்றாக இருக்கிறது அல்லவா?” என்று ஆராதனா இளஞ்சிவப்பில் பொன்னிறத்தில் வேலைப்பாடு செய்த காஞ்சிப்பட்டை எடுத்துக் காட்ட,

“வேண்டாம் … உன் நிறத்துக்கு அது நன்றான இருக்காது… கொஞ்சம் கடும் நிறத்தில் பாருமா…” என்று கூற எடுத்ததை வைத்துவிட்டு, இப்போது சற்றுப் பச்சை நிறத்தில் எடுத்துக் காட்ட,

“சீ சீ இது அடிக்கிறது… இதைப் பார்…” என்று ஊதாக் நிறத்தில் சித்தார்த் எடுத்துக் காட்ட,

“யக்கி… ஊதா… எனக்குப் பிடிக்காது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா சித்து…” என்று ஆராதனா சிணுங்க, இப்போதைக்குச் சேலை எடுபடப்போவதில்லை என்பது மட்டும் இருவருக்கும் நன்கு புரிந்து போயிற்று. கடைசியில், சித்தார்த்தின் முதுகில் தட்டி,

“வாழ்த்துக்கள் மாப்பிள்ளை… இப்போதுதான் உண்மையான கணவன் மனைவி ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறீர்கள்… நீ இங்கிருந்து சேலையை எடுத்துக் கொடு… நான் என் பொண்டாட்டிக்கு அவள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துக் கொடுக்கிறேன்…” என்று கூறிவிட்டு மிளிர்மிருதையை அழைத்துக்கொண்டு டிசைனர்ஸ் சேலைப் பக்கமாகச் செல்ல, மிளிர்மிருதையும் மறுக்காமல் அவன் பின்னால் சென்றாள்.

அடுக்கி வைத்திருந்த எல்லாச் சேலையும் அழகாகவே இருக்க, மிளிர்மிருதை அபயவிதுலனை யோசனையுடன் பார்த்தாள்.

அவனோ, எந்தச் சேலை அழகாக இருக்கும் என்று ஷெல்ஃபைக் கவனமாக ஆராய்ந்தவன், அதிலிருந்த இளஞ்சிவப்புச் சேலை ஒன்றைக் கண்டு, அதை எடுக்குமாறு பணிக்க, உடனே அதை உருவி எடுத்து அவர்கள் முன்னால் கடை பரப்பிக் காட்டினார் கடைக்காரர்.

இளஞ்சிவப்பு நிறத்திற்குத் தாமிரம் நிறம் கலந்து நெய்யப்பட்டிருந்தது சேலை. அதன் அழகு கண்களைப் பறிக்கத் தன்னை மறந்து வருடிக் கொடுத்தவளிடம்,

“இது உனக்குப் பிடித்திருக்கிறதா மிருதா…” என்றான் ஆவலாக.

அந்தச் சேலையைக் கண்ட உடனேயே மிளிர்மிருதைக்குப் பிடித்துப் போனது. ஆனாலும் மறுப்பாகத் தலையசைத்தவள்,

“இல்லை விதுலா…! உங்களுக்குக் காஞ்சிப்பட்டுத்தானே பிடிக்கும்… நாம் அதையே எடுக்கலாமே… இது வேண்டாம்…” என்று கூற தன் விருப்புக்கு மதிப்புக் கொடுக்கும் தன் மனைவியின் தோளில் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தவன்,

“எனக்குக் காஞ்சிபட்டுதான் பிடிக்கும்… ஆனால் உனக்கு டிசைனர்ஸ் சேலை தானே பிடிக்கும்… தவிர, உன்னிடம் நிறையக் காஞ்சிபட்டு இருக்கிறதே… அதனால் இதையே எடுத்துக் கொள்ளலாம்…” என்று கூறியவாறு, வேலையாளிடம்,

“இதை எடுத்து வையுங்கள்…” என்றான்.

தன் விருப்பத்தை மதிக்கும் தன் கணவன் மீது இன்னும் காதல் பொங்க,. உடனே அவன் கரத்தைப் பற்றித் தடுத்தவள்,

“என் ஆசைக்கு இந்தச் சேலை எடுத்தாகிவிட்டது. இனி உங்கள் ஆசைக்குப் பட்டு எடுக்கலாம்…” என்றதும் மறுக்காமல் அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

அழைத்துச் செல்லும் போதே, எங்கிருந்தோ, ‘ஹூடி’ அணிந்திருந்த ஒருவன், வேகமாக மிளிர்மிருதையின் பக்கமாக மோதுப்படுவது போல வர, அதைக் கண்டுகொண்ட அபயவிதுலன், கண்ணிமைக்கும் நொடியில் சுதாரித்து மிளிர்மிருதையைத் தன் புறமாக இழுக்க, கதிர் முனையளவு வித்தியாசத்தில் இருவரும் மோதுப்படாமல் தப்பிக் கொண்டனர்.

அந்த ‘ஹூடி’ அணிந்தவன், அதைக் கழற்றாமலே,

“சாரி மாடம்…” என்றவாறு அந்த இடத்தை விட்டு விலகத் தொடங்க, அபயவிதுலன் ஆத்திரத்துடன் அவனை நோக்கிப் போக முயன்ற விநாடி, மிளிர்மிருதை அவனுடைய சட்டையைப் பற்றித் தடுத்து,

“இட்ஸ் ஓக்கே விதுலா…! வேண்டும் என்றா முட்டுப்பட வந்தார்… ஆக்சிடன்ட் தானே… இட்ஸ் ஓக்கே… அதுதான் மன்னிப்பும் கேட்டுவிட்டார் அல்லவா… பிறகென்ன…” என்று கடிந்துவிட்டு, இன்னும் சமாதானமாகாமல் முறைத்துக்கொண்டிருந்தவனின் கரத்தைப் பற்றி, காஞ்சிப்பட்டுப் பகுதிக்கு இழுத்துச் செல்ல, வேறு வழியில்லாமல் மிளிர்மிருதையின் பின்னே போகத் தொடங்கினான் அபயவிதுலன்.

தன்னவளுக்காகச் சேலை வாங்கப் போகும் மகிழ்ச்சியில், கோபம் மறைந்து போக, ஆவலுடன் அவளுக்குப் பொருத்தமான சேலைகளை விழிகளால் மேயத் தொடங்கினான்.

எத்தனை முறை மெனக்கெட்டாலும் மிளிர்மிருதைக்காக ஒரு பொருள் வாங்குவதென்றால் அவனுக்கு அலுத்ததே கிடையாது. விழிகள் ஒரு இடத்தில் நிலைக்காது ஒவ்வொரு சேலைகளாகச் சென்று அது அவளுக்கு எப்படி இருக்கும் என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தும்.

அவனை விட்டால் அந்தக் கடை முழுவதையும் வாங்கி மிளிரிடம் கொடுத்து, தினமும் ஒரு சேலை கட்டு என்று சொல்லிவிடுவான். ம்… ஆனால் அதற்கு அவள் சம்மதிக்க வேண்டுமே.

பெருமூச்சுடன் அங்கிருந்த சேலைகளைப் பார்வையிட்டவனின் விழிகளை மாம்பழ நிறத்தில் தங்க வேலைப்பாடு செய்த சேலை கவர, அதை எடுக்குமாறு பணித்தான்.

கடைக்காரர் எடுத்து விரித்துக் கடைபரப்ப, அதைக் கரத்தில் எடுத்துப் பார்த்தான். அந்தச் சேலை அவளுக்கு மிக அழகாக இருக்கும் என்பது புரிய, முகம் மலர ஆவலுடன் மிளிர்மிருதையை நிமிர்ந்து பார்க்க, அவளோ வேறு எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவன் ஒருத்தன் அவளுக்காய் எந்தச் சேலை நன்றாக இருக்கும் என்று பரபரத்துக்கொண்டிருக்கிறான். இவள் என்னவென்றால், எங்கோ கவனத்தைச் சிதறவிட்டுக்கொண்டிருக்கிறாளே… எரிச்சலுடன், தன் தோளால் மிளிர்மிருதையை இடித்தவன்,

“மிருதா… எங்கே பார்க்கிறாய்…? இந்தச் சேலை எப்படியிருக்கு…?” என்று கேட்கத் தன் கவனம் சிதறியவளாக நிமிர்ந்து அபயவிதுலனைப் பார்த்தாள். பின் அவன் கரத்தில் எடுத்து வைத்திருந்த சேலையைப் பார்த்து,

“உங்கள் தேர்வு எப்போதும் சோடை போனது கிடையாது. அதனால்… உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத் தேர்ந்தெடுங்கள்…” என்றவாறு மீண்டும் தன் விழிகளை ஓட விட, அவளுடைய விழிகள் அங்கிருந்த ஒருத்தனின் மீது நிலைத்தன.

சும்மா நின்றிருந்தால் எப்படியோ, ஆனால் அவன், இவர்களைத்தான் அடிக்கடி முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. சில வேளை தனக்குத்தான் அப்படி இருக்கிறதோ? என்று குழம்பியவள், தனக்குப் பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தாள்..

ம்கூம்… யாரும் இல்லை. அப்படியானால் நம்மைத்தான் அப்படி முறைத்துப் பார்க்கிறானா? ஏன்? ஏனோ அந்தப் பார்வையைக் கண்டதும், மிளிர்மிருதையின் உள்ளத்தில் மெல்லிய நடுக்கம் ஊடுருவத் தொடங்கியது. அவசரமாகத் தன் தலையைத் திருப்பிக் கொண்டவளுக்கு, யார் அவன், என்கிற எண்ணமும் தோன்றியது. கூடவே உண்மையாகவே அவர்களைக் கண்டு முறைக்கிறானா, இல்லை அப்படித் தோன்றுகிறதா? சந்தேகத்துடன் மீண்டும் திரும்பிப் பார்க்க, இப்போதும் அவன் இவர்களைத்தான் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்.

இவளோ குழப்பத்துடன் தலையைக் குனிய, ஒவ்வொரு சேலையாகப் பார்த்துக்கொண்டு வந்தவன், என்ன எண்ணினானோ, போகிற போக்கில் நின்றுகொண்டிருந்தவளின் பின் புறம் வந்தவன், அவளுடைய இடையின் இரு பக்கமும் கரத்தைக் கொண்டு சென்று தன் அணைப்பில் வைத்துக்கொண்டவனாக, உள்ளங்கரங்களை அந்த ஷோக்கேஸ் மேற்புறத்தில் பதித்து, அவள் காதின் புறம் சற்றுக் குனிந்து,

“முதல் சேலை நான் தானே தேர்வு செய்தேன்… இதையாவது நீ தேர்வு செய்யக் கூடாதா?” என்றான்.

அவனுடைய வெம்மையான மூச்சுக் காற்றும், பேசும் போது பிறந்த காற்றும் சேர்ந்து அவளுக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த, மெதுவாகக் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் அவனுடைய பலம் பொருந்திய இரு கரங்களுக்கும் இடையில் தான் சிக்கியிருப்பது புரிந்தது.

ஏதோ ஒரு விதத்தில் வேலியாக அமைக்கப்பட்டிருந்த அந்தக் கரங்கள், அதுவரையிருந்த பயத்தைப் போக்கிவிடப் பெரும் நிம்மதி மூச்சுடன், அவனுடைய வலது புறங்கையின் மீது தன் வலது கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுக்க, அவளுடைய கரத்தில் தெரிந்த மெல்லிய நடுக்கத்தை அபயவிதுலன் உடனே புரிந்துகொண்டான்.

இடது கரத்தை விலக்கி, அவளுடைய தோளில் பதித்து,

“மிருதா… என்னாச்சு… கையேன் இப்படிக் குளிர்கிறது… நடுக்கம் வேறு…?” என்று புருவம் சுருங்கக் கேட்க, அவசரமாக அவன் கரத்திலிருந்த தன் கரத்தை விலக்கியவள், ஒன்றுமில்லை என்று மறுப்பாகத் தலையாட்டிவிட்டு, மீண்டும் திரும்பிப் பார்த்தாள். அவன் அங்கேயேதான் நின்றிருந்தான்.

அவனுடைய பார்வை மீண்டும் அச்சத்தைக் கொடுக்க உடல் மீண்டும் நடுங்கத்தொடங்கியது. அதை உணர்ந்துகொண்டவனாக,

“மிருதா… உன்னைத்தான்… எதற்காகப் பயப்படுகிறாய்…? என்னவாகிவிட்டது…?” என்றவனிடம் மறைக்க முடியாது,

அவனை அண்ணாந்து பார்த்து, வலது சுட்டுவிரலால் அந்தத் திசையைக் காட்டி,

“அ.. அது ஒன்றுமில்லை விதுலா…! சும்மா… யாரோ… அங்கே…” என்று முடிக்க முதல்,

“யார்…” என்றவாறு அவள் பார்த்த பக்கம் எரிச்சலும் கோபமும் போட்டி போட திரும்பிப் பார்த்தான்.

அங்கே அந்த இடம் வெறுமையாக இருக்க, மிளிர்மிருதைதான் குழம்பிப்போனாள். இப்போதுதானே பார்த்தாள். ஒரு வேளை அது மாயையோ? இல்லை… நிச்சயமாக அங்கே ஒருத்தன் நின்றிருந்தான்…அதற்குள் எப்படிக் காணாமல் போனான்??’ என்று எண்ணித் தடுமாறியவள்,

“இ… இல்லை… போய் விட்டார்கள்… ஜெஸ்ட்… தெரிந்தது போல…” என்று சங்கடத்துடன் கூறியவளுக்குக் குழப்பமாக இருந்தது.

‘எங்கே போனான்…’ என்று யோசனையுடன் சுத்தி வரப் பார்த்தவளுக்குப் பதில் கிடைக்கவில்லை. தன் தலையைக் குலுக்கி சமப்படுத்தியவள், அவளுக்கு முன்னாலிருந்த சேலையை எடுத்துத் தன் தோளில் போட்டவாறு அவன் புறம் திரும்ப, இப்போதுதான் அவன் எத்தனை நெருக்கத்தில் நின்றிருந்தான் என்பது உறைத்தது

அவனுடைய உடல் சூட்டைக் கூட அவளால் உணர முடிந்தது.. இப்போது குழப்பத்திற்குப் பதில் அவஸ்தை தொற்றிக்கொண்டது. சங்கடத்துடன் நெளிந்தவள், யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளை யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை.

“வி… விதுலா…! என்ன… இது… ஆட்கள்… பார்க்கப் போ…கிறார்கள்… ப்ளீஸ்..” என்று தடுமாற, இப்போது அபயவிதுலனின் முகத்தில் மெல்லிய குறும்புப் புன்னகை உற்பத்தியானது.

“ஏய்… என் மனைவி… நான் நெருங்கி நிற்கிறேன்… யார் தப்பாகப் பேச முடியும்?” என்றவாறு மேலும் கிட்டே செல்ல, அந்தப் பொது வெளியில், அவனுடைய அந்த அருகாமை மேலும் அவளை அவஸ்தைக்குள்ளாக்கியதோடு, ஒரு வித தடுமாற்றத்தையும் கொடுக்கத் திணறித்தான் போனாள். அதன் விளைவாக மூச்சு படு வேகமாகப் பிறக்க, முகம் சூடேற, உடல் படபடக்க ஒரு விதப் புது உணர்வோடு, தன்னை மறந்து சேலையைப் பற்றியிருந்த கரத்தை விலக்கி அவன் மார்பில் வலது உள்ளங்கையைப் பதித்து,

“விதுலா…! என்ன இது… ப்… ப்ளீஸ்…” என்று தடுமாற்றத்துடன் கேட்டவளை மெல்லிய நகைப்புடன் பார்த்தான் அபயவிதுலன்.

“ப்ளீஸ்… என்ன?” என்றவன், அவளுடைய நாடியைப் பற்றித் தன்னை நோக்கித் தூக்க, நான்கு விழிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டன. பின் நான்கு விழிகள் இரு விழிகளாகிப் பின் ஓர்விழியாகியது. ஏதோ அந்த இடத்தில் அவனும் அவளும் மட்டுமாய் ஒரு வித உணர்வு மிளிர்மிருதையை ஆட்கொண்டது.

அவளுடைய மெல்லிய உதடுகள் துடித்தன. துடித்த உதடுகளைத் மேல் பற்கள் கொண்டு சிறைபிடித்தாள் மிளிர்மிருதை, அந்தச் சிறைபிடித்த உதடுகளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான் அபயவிதுலன். அவனுடைய உதடுகள் செய்யவேண்டிய வேலையை, அவளுடைய பற்களல்லவா செய்கின்றன. தன்னை மறந்து இடம் பொருள் ஏவல் மறந்து சிறைப்பட்ட உதடுகளைத் தன் உதடுகள் கொண்டு விடுவிக்க எண்ணியவனாய், அவளை நோக்கிக் குனிய,

“மாமா…. இந்தச் சேலை எப்படி இருக்கிறது…” என்று கூவிக்கொண்டு பூஜைவேளை கரடியாய், வந்தாள் ஆராதனா.

முதலில் விறைத்த அபயவிதுலன், தன் நிலைக்கு வந்தவனாய், அந்த நிலையிலும் அவசரமாய் அவள் உதடுகளில் சிக்கியிருந்த கீழ் உதட்டைப் பெரும் விரலால் விலக்கிவிட்டவாறு விலகி நின்றவனுக்குச் சற்று நேரம் எடுத்தது முழுதாக இந்த உலகை உணர்வதற்கு.

தன் படபடப்பை யாரும் பார்க்க முடியா வகையில் ஆழ மூச்செடுத்து விட்டவன், பின் மார்பில் கரங்களைக் கட்டியவாறு ஷோகேசின் மீது சாய்ந்து நின்று இடது காலுக்குக் குறுக்காக வலது காலைப் போட்டவாறு தன் மருமகளைக் கனிவுடன் பார்த்தான்.

அவள் கரத்திலிருந்த, இளம் பச்சைக்கு மஜந்தா போர்டர் வைத்த காஞ்சிப்ட்டும், மஜந்தா நிறத்தில் பொன் நிறத்தில் கொடி வேலை செய்த கூறைப் பட்டும், இளஞ்சிவப்பில் கடும் சிவப்பில் வேலை செய்த இணைக் கூறையும் வீற்றிருக்க, அதைக் கண்டதும் அபயவிதுலனின் முகம் மலர்ந்தது.

எப்படியோ அந்தக் கடையைப் புரட்டிப்போட்டுப் பிடித்த சேலையை எடுத்துவிட்டாள் என்பது புரிய நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்த்தான்.

அவன் முகம் களைத்து விழுந்து கிடக்க, எழுந்த சிரிப்பை அடக்கியவனாக, “அட… அத்தனை விரைவாகவா தேர்வு செய்தாய்?” என்றான் கிண்டலாக.

“இன்னும் இல்லை மாமா…” என்றதும் அதிர்வுடன் நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்க்க, அவனும் அதே அதிர்ச்சியுடன்தான் ஆராதனாவைப் பார்த்தான்.

“என்ன… இன்னும் தேர்வு செய்யவில்லையா?” என்று சித்தார்த் கேட்க,

“பின்னே… என் மாமா எப்படியிருக்கிறது என்று சொல்லாமல் நான் எப்படித் தேர்வு செய்வேன்…” என்றவள், திரும்பி தன் மாமனைப் பார்த்து,

“சொல்லுங்கள் மாமா…. எப்படி இருக்கிறது… நன்றாக இருக்கிறதா?” என்றாள் ஆர்வமாக.

அபயவிதுலன் நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்க்க, அவனோ,

“சரி என்று சொல்லு…சரி என்று சொல்லு…” என்று சைகையில் கெஞ்ச, தன் உதடுகளுக்குள் நாக்கைச் சுழற்றி, மேற் பற்களை வருடி, பின் வெளியே எடுத்து மேல் உதட்டை வருடியபோதே சித்தார்த் புரிந்துகொண்டான் அபயவிதுலன் ஏதோ திட்டம் போட்டுவிட்டான் என்று.

பெரும் கோபத்துடன் நிமிர்ந்து அபயவிதுலனைப் பார்க்க, அவனோ மெல்லியதாகச் சிரித்தவாறு,

“அம்முக்குட்டி… நன்றாகத்தான் இருக்கிறது… ஆனால் பார்… இணைக் கூறையுடைய பார்டர் எடுப்பாயில்லை… அப்புறம், இந்த நிச்சயதார்த்தப் புடவை இருக்கிறதல்லவா… அதில்…” என்று முடிக்கவில்லை விரைந்து அவர்களை நெருங்கிய சித்தார்த், அவன் கரத்திலிருந்த சேலையைப் பறித்து,

“நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… நீ… உன்னுடைய வேலையைக் கன்டினியூ பண்ணு… அதற்காகத்தானே இதைச் சொல்கிறாய்…” என்று முறைத்தவாறு வாங்கித் தன் கையிடுக்கில் சேலையை வைக்க,

“அது இல்லைடா… சேலை… நன்றாகத்தான்…” முடிக்க முதலே, வலது கரத்தைத் தூக்கித் தன் வாயில் வைத்து அவன் பேச்சைத் தடுத்தவன்,

“அந்த ஈர வெங்காயத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்…” என்றவன், பின், எரிச்சலுடன் தன் நண்பனைப் பார்த்து,

“பாத்துடா… நாளைக்கு நிச்சயதார்த்தம்… கடிச்சுக் கிடிச்சு வச்சிராதே… உன்னுடைய வேலை முடியவில்லை என்றதும் என்னை அலைய விடுகிறாய் அல்லவா… நன்றாக வருவாயடா… நீ…” என்று கடு கடுப்புடன் கூறியவன், பின் ஆராதனாவைப் பார்த்து,

“நீ வாம்மா…. இவன் தன்னுடைய பொண்டாட்டிக்குச் சேலை எடுக்கும் வரைக்கும் நாம் இங்குதான்… வா… வேறு சேலை பார்க்கலாம்…” என்று நடக்கத் தொடங்கியவன் பின் நின்று திரும்பி,

“என்னுடைய சாபம் உன்னைச் சும்மா விடாதுடா… கால் வலிக்கிறதுடா… இரண்டு மணி நேரம்… முடியவில்லை… சீக்கிரம் வந்து தொலை…” என்று கூறியவாறே ஆராதனாவின் கரத்தைப் பற்றி மறு பக்கம் இழுத்துச் சென்றான் சித்தார்த்.

 

 

 

What’s your Reaction?
+1
15
+1
4
+1
1
+1
9
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

1 day ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

    சேதி 18 *********                    நள்ளிரவை…

3 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

5 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே! அத்தியாயம் 15

சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின்…

6 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய…

7 days ago