அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய உந்துதலும் இல்லாமல் அணைந்துகொண்டன.
மாடியேறித் தங்கள் பொது அறைக்கு வந்து கதவைத் திறந்தான்.
விடிவிளக்கின் ஒளியில் மிளிர்மிருதை ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. கூடவே அவளுக்கு இரு பக்கமும் உறங்கிக்கொண்டிருந்த ஆத்வீகனும் சாத்வீகனும் அணையாக இரு பக்கமும் அவளை அணைத்தவாறு படுத்திருந்தனர். அதுவும் ஆத்விகனின் கால் மிளிர்மிருதையின் இடையைச் சுற்றிப் போட்டிருக்க, மற்றவனின் காலோ, அவளுடைய தொடைக்கு மேல் போடப்பட்டிருந்தது.
அதுவும் காயம் பட்ட காலின் மீது. உடனே கட்டிலை நெருங்கியவன், தன் கரத்திலிருந்த பொருட்களை விளக்கு மேசையில் வைத்துவிட்டு, அவர்களை நோக்கித் திரும்பினான்.
அவளுடைய தொடையின் மீது தன் காலைப் போட்டுப் படுத்திருந்த சாத்விகனின் காலை மெதுவாக விலக்கி, அலுங்காமல் அவனைத் தூக்கி சற்றுத் தள்ளிக் கிடத்திவிட்டு, மிளிர்மிருதையின் முன்னால் வந்தான்.
அவள் கையணைப்பில் தூங்கிக்கொண்டிருந்த சாத்வீகனை நெருங்கி, அலுங்காமல் அவனைத் தூக்கித் தள்ளிப் படுக்கையில் கிடத்திவிட்டு நிமிராமலே குனிந்து தன் மனையாளைப் பார்த்தான் அபயவிதுலன்.
தூக்கத்தில் உதடுகள் மெல்லியதாகப் பிளந்திருந்தன. அந்தப் பிளவினுள் நுழைந்து சென்றுவிட அவன் உயிர் துடித்தது. தன்னையும் மீறி வலது கரத்தின் பெருவிரலால் அந்த உதடுகளை வருடிக் கொடுத்தவனின் உள்ளத்தில் என்றுமில்லாத தாபம் வந்து ஆட்கொண்டது.
தொடலாம், வருடலாம், ஆனால் உரிமை கொள்ள முடியாது… எண்ணும்போதே ஏக்கம் பிறந்தது.
“எப்போது என்னை முழுதாக ஏற்றுக்கொள்வாய் கண்ணம்மா… இந்தத் தாபத்தில் அப்படியே எரிந்து கருகிவிடுவேன் போல இருக்கே…” என்று தவிப்புடன் எண்ணியவனின் விழிகள் ஏக்கத்துடன் அவள் உடலை வருடிச் சென்றன.
எத்தனை அழகிய வீணை… ஆனாலும் மீட்ட முடியாதே… பெருமூச்சுடன் எழுந்தவனின் பார்வை அவளுடைய கால்களில் வந்து நிலைத்தன.
நல்ல தூக்கத்தில் புரண்டு படுத்திருந்ததாலும், ஆத்வீகனும் சாத்வீகனும் அவள் மீது காலைப் போட்டிருந்ததாலும் அவளுடைய இரவாடை தாராளமாகவே மேலே ஏறி அவளுடைய காயங்களை வெட்டவெளிச்சமாகக் காட்ட, அதைக் கண்டதும், அதுவரையிருந்த தாபம் மாயமாக மறைந்துவிட்டிருந்தது.
இதுவரை அவளை இடித்துவிட்டுச் சென்றது யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் விக்டர் எப்போதோ தகவல் கொடுத்திருந்திருப்பார். அதுவும் அவள் இடிபட்ட இடத்தில் எந்தச் சிசிடிவி கேமராவும் இல்லை. அதனால் அவர்களைக் கண்டு பிடிப்பது சிரமம்தான்.
அவர்கள் மட்டும் அவன் கரங்களில் கிடைத்தால்… எந்த ஜென்மத்திலும் வாகனம் ஓட்ட முடியாதவாறு செய்துவிடுவான். பற்கள் நற நறக்க அவளுக்கருகாமையில் படுக்கையில் அமர்ந்து கால்களைத் தூக்கித் தன் மடியில் வைத்தான்.
அவளுடைய தூக்கம் கலையா வண்ணம், மெதுவாகக் காயத்தின் கட்டினை அவிழ்க்கும் போதே சிறிது தூக்கம் கலைந்தாள் மிளிர்மிருதை.
காலில் எதுவோ ஊருகிறது என்று எண்ணியவள் போலத் தன் காலை உதற, அவசரமாக அவளைத் தட்டிக் கொடுத்தவன்,
“ஹே… இட்ஸ் ஓக்கே… கோ டு ஸ்லீப்…” என்று அவள் வயிற்றைத் தடவியவாறு மென்மையாகக் கூற, அதுவரை வலது புறம் படுத்திருந்தவள், தூக்கக் கலக்கத்தில் நிமிர்ந்து பின் இடது பக்கமாகச் சரிந்து படுக்க முயன்றாள்.
இடது பக்கம் சரிந்து படுத்தால், இடது காலின் காயம் அழுத்தப்படுவதோடு, மருந்திட முடியாது.
உடனே அவள் பக்கமாகச் சரிந்து தோளில் கரத்தைப் பதித்துத் தடுத்து மல்லாக்காகப் படுக்க வைத்தவன், சற்று அதீதமாக மேலேறிய ஆடையைப் போகிற போக்கிலேயே சரியாக்கிவிட்டுத் தன் கவனத்தைக் காயத்தின் மீது நிலை நிறுத்தினான்.
காயத்தைத் துடைக்க முயல, தூக்கத்திலேயே விதுலன்தான் தன் காயத்திற்கு மருந்திடுகிறான் என்பதை மிளிர்மிருதை புரிந்து கொண்டாள்.
“ஸ்டாப் இட் வி…து…லா… தூ…க்கம்… வருகிற…து… நாளைக்…கு போ..டலா…ம்…” என்று கூறியவாறு காலை உதற முயல அவளுடைய கணுக்காலில் தன் பலம் பொருந்திய கரத்தைப் பதித்துத் தடுத்தான் அபயவிதுலன்.
அவன் எதுவும் பேசினானில்லை. மீண்டும் அவள் உறங்கத் தொடங்கிவிட, விட்ட பணியைத் தொடர்ந்தான்.
இரத்தம் ஊறிய கட்டைக் கழற்றி எடுத்துத் தரையின் ஒரு ஓரமாகப் போட்டவன், மீண்டும் காயத்தைக் கவனமாக ஆராய்ந்தான். காயம் முன்னையை விடப் பயங்கரமாக இருந்தது. அவளுடைய தொடையிலிருந்த கண்டலையும் காயத்தின் ஆழத்தையும் உற்றுப் பார்த்தவனுக்கு, நிச்சயமாக அந்தக் வாகனம் குறைந்தது 60 Km/hr வேகத்தில் வந்து இடித்திருக்க வேண்டும் என்பது நன்கு புரிந்தது. காயத்தை வாயால் ஊதி… ஊதி… வருடிக் கொடுத்தவனுக்கு அவள் விழுந்த வேகம் மிகப் பாரதூரமானதே… என்பதைப் புரிந்துகொண்டான். நல்லவேளை எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. கடவுள் காத்தது. ஆனாலும் மனம் இதைச் செய்தவர் யார் என்று அரிக்கத் தொடங்கியது.
யாராக இருக்கும்? எவர் இந்த வேலை செய்தார்கள்… உண்மையாகவே தற்செயலாக நடந்த விபத்தா, இல்லை… வேண்டுமென்றே அவனைப் பழிவாங்குவதாக இவளைக் காயப்படுத்த நினைக்கிறார்களா? நினைக்கும் போதே அவனையும் மீறி உடலில் மெல்லிய நடுக்கம்.
தன்னை அறியாமலே வலது கரம் அவளுடைய கணுக்காலை வருட, மீண்டும் தூக்கம் கலைந்தாள் மிளிர்மிருதை.
விழிகளைத் திறக்காமலே இரு பக்கமும் முழங்கைகளை வைத்து ஊண்டியவாறு எழுந்தவள், திறக்க மறுத்த விழிகளைக் கோடாகத் திறந்து தன் காலடியில் தவம் கிடந்தவனைப் பார்த்தாள்.
முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் அபயவிதுலனின் உருவம் ஓரளவுக்குத் தெரிந்தது. சற்றுக் குனிந்து பார்க்க, அவளுடைய தந்த நிறக் கால்களுக்கு அந்தக் காயம் அப்பட்டமாய் இழித்துக்கொண்டிருக்க, அதற்கு அருகாமையில் மானிறக் கரம் அங்கும் இங்கும் அசைவதைக் கண்டு, மீண்டும் ஒற்றை விழியை மூடி மறு விழியால் அபயவிதுலனின் முகத்தைப் பார்த்தாள்.
அவன் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.
‘ஐயோ…! தானும் உறங்காமல் என்னையும் உறங்கவிடாமல் செய்கிறானே… பாதகா…” என்று மனதிற்குள் திட்டியவள்,
“என்ன விதுலா…! தூக்கம் வருகிறது… பேய்கள் கூட இப்போது முழித்திருக்காது… நீங்கள் என்னவென்றால்…” என்று சிணுங்கத் திடுக்கிட்டுத் திரும்பித் தன்னவளைப் பார்த்தான் அபயவிதுலன்.
அவளோ ஒன்றைக் கண்ணை மூடியவாறு இவனைப் பார்த்துக்கொண்டிருக்க, அதைக் கண்டுமெல்லியதாக நகைத்தவன்,
“என்னடி… இப்படி என்னைக் கண்ணடித்துப் பார்க்கிறாய்…?” என்றான் கிண்டலாக.
இப்போது மறு கண்ணை மூடி மற்றைய கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தவள்,
“நான் ஒன்றும் கண்ணடிக்கவில்லை விதுலா…! அது தூங்குகிறது…” என்றவாறு மீண்டும் தொப்பென்று கட்டிலில் விழுந்தவள்,
“வலிக்கிறது விதுலா…! பிடித்து விடுங்களேன்…” என்றாள் உறக்கத்தை மீண்டும் அணைக்க முயன்றவாறு.
அதைக் கேட்டதும் இவன்தான் கலங்கிப்போனான். இதுவரை வலியைப் பற்றி அவனிடம் அவள் சொல்லவேயில்லை. இப்போதுதான் உறக்கக் கலக்கத்தில் தன்னை மறந்து உளறுகிறாள். அந்த வலியைத் தன்னதாக உணர்ந்தவனாய்,
“சரி சரி… முதலில் காயத்திற்கு மருந்து போடுகிறேன்… பிறகு பிடித்துவிடுகிறேன்…” என்றவன், இப்போது கரத்திலிருந்த எண்ணெய்யை எடுத்துக் காயத்தின் மீது போட்டு மெதுவாகச் சுத்தவரப் பூசினான். கூடவே தொடையிலிருந்த கண்டலின் மீதும் பூசியவன், இரத்த சுற்றோட்டத்திற்காகச் சற்று அழுத்து விடத் தொடங்கினான்.
“ஷ்… ஆ… வலிக்கிறது விதுலா…!” என்று தூக்கத்திலும் அவள் மெல்லியதாக அலற,
“கொஞ்சம் பொருத்துக்கொள்மா… இரத்தோட்டம் சரியானால் வலி குறைந்து விடும்… ஒரு ஐந்து நிமிடம்… நீ தூங்கு கண்ணம்மா…” என்றவாறு மேலும் சற்று நேரம் அழுத்திக் கொடுத்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவள் காலிலிருந்த தன் கரத்தை எடுக்க முடியாது திணறிப்போனான்.
ஆரம்பத்தில் அவளுடைய வலியைப் போக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவன் மனதிலிருந்தது. ஆனால் இந்த மனம் இருக்கிறதே… சே… அது ஒரு குரங்கு போல. அங்கும் இங்கும் தாவி, எதை நினைக்கக் கூடாதோ அதை மட்டுமே நினைக்க வைக்கிறது.
தன் புத்தி இடம் தடம் மாறுவது புரியப் பதற்றமாகத் தன் கரத்தை விலக்கிக்கொண்டான் அபயவிதுலன்.
ஆரம்பத்திலிருந்த தேவ குணம் இப்போது காணாமல் போயிருந்தது. அந்த இடத்தில் அசுரகுணம் அவனை ஆட்டுவித்தது. தப்புத் தப்பாக எண்ண முயன்ற மனத்தை அடக்க முயன்றவன் மெது மெதுவாகத் தோற்றுப் போகத் தொடங்க, அது வரை வைத்தியனாகச் செயல்பட்ட அவனுடைய கரங்கள் தடம் புரண்டு ஒரு கணவனாகச் செயல்பட முயன்றன.
உள்ளத்தோடு உடலும் முறுக்கேறத் தொடங்கின. விரல்கள் அவன் கட்டளையையம் மீறிப் பாதம் முதல் மெது மெதுவாக ஊர்ந்து பயணிக்கத் தொடங்கின. மெல்ல மெல்ல மேலேறத் தொடங்கின கரங்கள்.
இவள் என்னவள், என் தேவதை என்கிற இறுமாப்பும் கூடி அவனுடைய நல்ல மனதை மங்கச் செய்யத் தன்னையும் மீறி அவளுடைய பாதம் நோக்கிக் குனிந்தான் அபயவிதுலன்.
“வலிக்கிறது விதுலா…! இன்னும் பிடித்துவிடுங்களேன்…” என்று மிளிர்மிருதை முனங்கத்தான் தன் நினைவுக்கே வந்தான் அபயவிதுலன்.
என்ன காரியம் செய்யத் துணிந்தான். தீச் சுட்டது போலத் தன் கரத்தை விலக்கியவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயநினைவு பெறுவதற்கு.
தாள முடியாத வலியுடன் தன் விழிகளை மூடியவனுக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.
எத்தனை நாட்களுக்கு இந்த விரகதாபத்துடன் அவன் வாழப்போகிறான். பெரும் தவிப்புடன் எண்ணியவன், அதற்கு மேல் அவளுடைய அருகாமையில் இருக்க முடியாமல் எழுந்தவன், மடியில் கிடந்த கால்களைக் கவனமாகப் படுக்கையில் வைத்தான். அவள் ஆடையை இழுத்துச் சரிப்படுத்தி, கம்பளிப் போர்வையை அவள் மீது போர்த்திவிட்டு எழுந்தவனுக்குத் தூக்கம் சுத்தமாகத் தொலைந்து போனது.
திடீர் என்று முழங்காலில் எழுந்த சுளீர் வலியில் மெதுவாக விழிகளைத் திறந்தாள் மிளிர்மிருதை. விழிகளை விரித்தபோதே, சூரிய கதிர்கள் அவள் முகத்தில் பலமாக அடிக்கத்தொடங்கப் பதறியவாறு எழுந்து தலையைத் திருப்பி நேரத்தைப் பார்க்க அது ஏழு மணி என்றது.
“அடியாத்தி… இவ்வளவு நேரமாகவா தூங்கியிருக்கிறோம்?’ என்று அதிர்ந்தவள், அவசரமாகக் கட்டிலை விட்டு எழ முயன்றபோதுதான் இரவாடை தொடைக்குக் கீழாக மஞ்சளாக மாறியிருப்பது தெரிந்தது. கூடவே மஞ்சளின் மணம் வேறு.
மஞ்சள்… இது எங்கிருந்து வந்தது? என்று குழம்பியவாறு தன் சட்டையை உயர்த்திப் பார்க்க, தெடை வரை மஞ்சள் அப்பியிருந்தது.
அப்போதுதான் அபயவிதுலன், இரவு தான் தூக்கத்திலிருந்த போது காலுக்கு மருந்திட்டது நினைவுக்கு வந்தது.
அந்த நேரத்திலும் தன் காயத்தை எண்ணி அதற்கு மருந்திட்ட தன் நாயகனை எண்ணி உள்ளம் உருகிப்போயிற்று. ‘இவனைக் கணவனாக அடைய என்ன தவம் செய்தோமோ…’ என்று மன நிறைவுடன் எண்ணியவள், சிரமப்பட்டுக் கட்டிலை விட்டு எழ, விண் என்று தெறித்தது காயம். மேசையைப் பிடித்து வலியுடன் சற்றுக் குனிந்து நின்றவள். பின் மெதுவாக எழுந்த போது, அபயவிதுலன் குளியலறையிலிருந்து தன் கம்பீர நடையுடன் வெளியே வந்துகொண்டிருந்தான்.
குளித்திருந்தான்… நன்றாகத் துவட்டாததால் அவனுடைய சுருண்ட குழலில் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. விரைந்து சென்று உதிரும் தண்ணீரைத் தன் கரத்தில் ஏந்தவேண்டும் என்கிற ஆவல் அவளையும் மீறிப் பிறக்க, அவனை ஒரு விதப் போதையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மிளிர்மிருதை.
அவன் பாத்ரோப் அணிந்திருந்தான். இடையில் மட்டும் ஒரு கட்டு. அதனால் மார்பின் நடுப்பகுதி திறந்திருந்தது.
அவனுடைய பரந்த மார்பின் சுருண்ட அடர்ந்த முடிகள் இவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்ட ஏனோ இவளுக்கு அந்த மார்பிலிருந்து தன் விழிகளை விலக்கவே முடியவில்லை. ஓடிச் சென்று அதன் மீது தன் தலையைப் புதைத்து, நாசியின் நுனியால் அம்மார்பு ரோமங்களைத் தேய்த்து நுகரவேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.
அவனோ, அவளைக் கண்டதும் முகம் மலர நெருங்கியவன், அவள் முன்னால் தன் தலையைச் சிலுப்ப, அவன் முடியிலிருந்த ஈரம் அவள் முகத்தில் பட்டுத்ததெறிக்க, அதுவரை தன்னை மறந்து வேறு உலகத்தில் சஞ்சரித்திருந்தவள், திடுக்கிட்டு விழிகளைச் சிமிட்டித் தன் கணவனை முறைத்தாள். அவனோ, சற்றுச் சிவந்திருந்த மூக்கின் நுனியைத் தன் சுட்டுவிரலால் மென்மையாகத் தட்டியவன்,
“ஹாய்… மை ஏஞ்சல்… நன்றாகத் தூங்கினாயா?” என்றான் இனிமையாய். கூடவே எப்போதும் போல அவனுடைய விழிகள் அவளுடைய உதடுகளில் தஞ்சமாகியிருந்தன.
அவள் ஆம் என்று தலையை ஆட்டிவிட்டு அவன் பார்வை கொடுத்த அவஸ்தையில் அவனை விட்டு விலக முயலச் சற்றும் தாமதிக்காது தனது வலது உள்ளங்கை கொண்டு, அவளுடைய வயிற்றில் பதித்துத் தடுத்தவன் கரத்தை விலக்காமலே இடை கொண்டு சென்று தன்னை நோக்கி இழுத்து,
“காயம் எப்படியிருக்கிறது?” என்றான் அவளுடைய முகத்தைப் பார்த்தவாறு.
அந்தக் கூரிய பார்வையின் வீச்சில் ஏற்பட்ட உணர்வலையில் உள்ளம் நடுங்கத் தன் விழிகளைத் தாழ்த்தியவள்,
“இ… இப்போது பரவாயில்லை விதுலா…!” என்றாள் திக்கித் திணறி.
“பரவாயில்லையா… பார்த்தால் அப்படித் தெரியவில்லையே… நொண்டுகிறாயே… அதிகம் வலிக்கிறதாம்மா…” என்றவாறு அவள் இடையில் கரங்களைப் பதித்துத் தூக்கி அங்கிருந்த மேசையில் அமர்த்தியவன், முழங்காலைப் பார்க்க முயல, அவளும் அவனுக்குச் சிரமம் காட்டாது, காயத்தைக் காட்டினாள்.
சற்றுக் குனிந்து கவனமாக ஆராய்ந்தவன் முழங்காலில் ஏற்பட்ட காயத்தைச் சுற்றிவரப் பெருவிரலால் தடவிப் பார்த்தான். காயம் வீங்கியிருந்தது. சற்று மேலேறிக் கண்டலையும் பார்த்தான். இன்னும் அவள் வெண்ணிறத் தோலுக்கு, அக் கண்டல் ஒருவிதக் கருமை நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. கூடவே கல்லுக் கட்டிபோல இறுகிப்போய் இருந்தது. அவனுடைய வருடலில் ஏற்பட்ட எண்ண அலைகளைக் கட்டுப்படுத்த முடியாதவளாக அவன் கரத்தைப் பற்றித் தள்ளிவிட்டவள் அவசரமாகத் தன் ஆடையைக் கீழிறக்கி,
“கொஞ்சம் நெறி போடுகிறது… அவ்வளவுதான்… விரைவில் சரியாகிவிடும்…” என்று நெளிந்தவாறு கூறியவளின் நாடியில் ஒற்றை விரலைப் பதித்த மெதுவாக மேலே தூக்கியவன், அவள் கண்களுக்குள் தன் கண்களைக் கலந்து,
“ஒரு வேலையும் செய்யக் கூடாது… ஓக்கேயா… ப்ராமிஸ் மீ…” என்றான்.
அவள் ஆம் என்று தலையாட்ட,
“குட்…” என்றவன் மீண்டும் அவள் முதுகுக்கூடாகக் கரத்தைக் கொண்டு சென்று, கீழே இறக்கிவிட்டு , “போ… போய்க் குளித்துவிட்டு வா… படிகளில் இறங்கிச் செல்ல உதவி செய்கிறேன்…” என்றவாறு ஆடை மாற்றும் அறைக்குள் செல்ல அவன் சொன்னது போலக் குளியலறை சென்று விரைவாகவே காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குளிக்கத் தயாராகும் போதுதான் ஆடை கொண்டுவரவில்லை என்பதே புரிந்தது.
தன் தலையில் தட்டியவள், கதவைத் திறக்கக் குமிழியில் கைவைத்தபோது, குளியலறைக் கதவு தட்டப்பட்டது. உதட்டில் புன்னகை விரிய, முகம் மலரக் கதவைத் திறக்க, அங்கே பான்ட் மட்டும் அணிந்து வெற்று மேலுடன், அவளுடைய ஆடைகளைக் கையில் ஏந்தியவாறு அபயவிதுலன் நின்றிருந்தான்.
“சீக்கிரம் குளித்துவிட்டு வாம்மா… கீழே சித்தார்த் வந்துவிட்டான் போல…” என்று கூறிவிட்டு ஆடைகளை அவளிடம் கொடுத்துவிட்டுத் திரும்ப, முதுகில் அந்த விகாரமான தழும்பு. கண்டதும் எப்போதும் போல இதயம் கசங்கக் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
எப்போதுமே நடந்ததை மறக்கவைக்காதிருக்க அந்தத் தழும்புகள் இருக்கின்றனவே. ஒரு கணம் அவன் செய்ததை மறந்தால், மறு கணம் அந்தத் தழும்புகள் அவற்றை நினைவு படுத்துகின்றன. உள்ளம் வலிக்க,,
“விதுலா…!” என்றழைக்க, நின்று அதே புன்னகையுடன் திரும்பித் தன்னவளைப் பார்த்தான் அபயவிதுலன்.
அவனை நெருங்கிப் பின் புறமாகச் சென்று, எப்போதும் போல அந்த வடுவின் மீது தன் தலையைப் பதித்துக் கரங்களை முன்புறமாகக் கொண்டு சென்று இறுக அணைத்தவள், சற்று நேரம் அப்படியே நின்றாள்.
உள்ளம் சிலிர்க்க அப்படியே நின்றவன், மார்பில் படர்ந்திருந்த கரங்களை இறுக பற்றி உதட்டில் பொருத்தி எடுத்து, பின் அவள் புறமாகத் திரும்பித் தன் மார்பில் அவளை விழ வைத்தவன்,
“என்னடா….” என்றான்.
அப்போதே தன் மனமாற்றத்தைச் செல்லிவிடலாமா என்று ஏங்கியவள், அவசரமாக அதை விடுத்து, அவனிடமிருந்து விலகியவாறு, புன்னகையுடனே ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டுக் குளியலறைக்குள் நுழைய இவனோ, பெரும் ஏக்கத்துடன் அவள் தலை பதித்திருந்த மார்பில் தன் கரத்தை வைத்துத் தட்டிக் கொடுத்தவன் விழிகள் மூடி சற்று நேரம் நின்றான். இன்னும் அவள் அணைத்திருப்பது போலவே உணர்வு சிலிர்த்துக்கொண்டது.
“ஓ…. பேபி… எப்போது என்னை உடலால் தாங்கிக்கொள்ளப் போகிறாய்…” என்று ஏக்கத்துடன் முணுமுணுத்தவன், ஏக்க மூச்சுடனேயே ஆடை மாற்றும் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
குளித்து முடித்து மிளிர்மிருதை வெளியே வந்தபோது, அபயவிதுலன் அவளுக்காகத்தான் காத்திருந்தான்.
கண்ணாடி மேசையின் முன்னால் அமர்ந்தவள் தன் கூந்தலைக் களைந்து சிக்கு நீக்கத் தொடங்கினாள்.
அபயவிதுலனோ சற்றுத் தள்ளி சுவரோரமாகச் சாய்ந்து நின்றவாறு, மார்புக்குக் குறுக்காக ஒரு கையைக் கட்டியவாறு, மறு கரத்தால் தன் கைப்பேசியில் எதையோ கிண்டிக்கொண்டிருந்தான். ஆனால் விழிகள் மட்டும் தன்னவளிடமே இருக்க, அதைப் புரிந்துகொண்டவளாக, கண்ணாடிக்கூடாகவே அவனைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன், என்ன என்பது போலப் பார்த்தாள்.
அவனும் அவளிடமிருந்து தன் பார்வையை விலக்காமலே அமர்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்தவன், அவளை நெருங்கிச் சென்று தன் கரத்திலிருந்த கைப்பேசியைக் கண்ணாடி மேசையில் வைத்துவிட்டு, அதே கரத்தை, அவள் புறமாக நீட்ட, அவன் எதற்காகக் கரத்தை நீட்டுகிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் போலத் தன் கரத்திலிருந்த சீப்பை அவனிடம் கொடுத்தவாறு,
“ஃப்ரஞ்ச் ப்ரெய்ட்…” என்றாள்.
உடனே முகம் மலர, நீண்ட முடியை வாரத் தொடங்கினான்.
உச்சி பிரிக்காது மேவி இழுத்தவன், எங்கே அவளுக்கு வலித்துவிடுமோ என்று அஞ்சியவன் போல முடியை நேராக்கி இழுத்து, அவளுடைய சீப்பை வாய்க்கு இடையில் வைத்துப் பற்களால் கடித்தவாறு, இருபக்கக் கரையோரமிருந்து சில கற்றை முடிகளை ஒழுங்காக்கினான். பின், நெற்றியின் கரையோரத்திலிருந்த முடிக்கற்றைகளை இழுத்து எடுத்து ஒன்றோடொன்று சேர்த்துப் பின்னத் தொடங்க அவளுடைய கூந்தலில் அலைவடிவம் உருவாகத் தொடங்கியது.
அதை வருடிக் கொடுத்தவளுக்கு, அபயவிதுலனை எண்ணிப் பெரும் வியப்பாக இருந்தது.
கோடியில் புரள்பவன் ஆனால் ஒரு போதும் அந்தக் கெத்தைக் காட்டியது கிடையாது. அதுவும் வீட்டில் அவன் சாதாரண மனிதன். எந்தப் பந்தாவும் பிகுவும் செய்யாதவன். ஏன் சமையலுக்குக் கூட வீட்டில் ஆள் வைக்காதவன். இதோ இப்போது தனக்குச் செய்வது போல ஆராதனாவிற்கும் பின்னிவிடுவான். ஏதாவது விழா என்றால் ஆராதனா அபயவிதுலனைத்தான் தேடி வருவாள்.
“மாமா.. இந்தப் பின்னல் சரியே வரமாட்டேன் என்கிறது… பின்னிவிடுங்கள்…” என்றால், முக்கிய வேலையாகக் கிளம்பினாலும் அதை ஓரம் கட்டிவிட்டு அழகாக அவளுக்குப் பின்னிவிடுவான்.
இவளும் எங்காவது கிளம்ப வேண்டுமானால், அவளுடைய தலை அலங்காரம் நன்றாக இல்லையென்றால், சற்றும் தாமதிக்காது அவளை இழுத்துச் சென்று தலையைக் குலைத்து மீண்டும் அழகாகப் பின்னிவிடுவான்.
ஆராதனா வளர்ந்த காலத்தில். அவளுக்காகவே, தலை அலங்காரமெல்லாம் பழகியிருந்தான். இப்போது இவளுக்கு அது உதவுகிறது.
பார்த்துப் பார்த்து தலை முடியைப் பின்னிய கணவனின் எல்லையில்லா அன்பில் உள்ளம் நிறைந்து போனது மிளிர்மிருதைக்கு. கூடவே மெல்லிய குறும்பும் எட்டிப்பார்க்க, கண்ணாடிக்குள்ளாக, அவன் பின்னும் அழகைக் கண்டவாறே, தன் கரத்தை மெதுவாக அசைத்து சற்றுத் தள்ளியிருந்த அவனுடைய கைப்பேசியைக் கவனத்தைக் கவராத வகையில் இழுத்தெடுத்தாள்.
நகைப்பில் உதடுகள் நெளிய, கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைக் கிளிக்க, அது அம்சமாக இருவரையும் படம் எடுத்திருந்தது. அப்படத்தில் தெரிந்த அபயவிதுலனைக் கண்டு, ‘க்ளுக்’ என்று சிரிக்க,
“ஏய்… டோன்ட் மூவ்…” என்று எச்சரித்தவாறு பின்னி முடித்துப் பான்ட்டைப் போடுவதற்குள் மிளிர்மிருதை சலிக்காமல் பல படங்களை எடுத்துவிட்டிருந்தாள்.
எல்லாம் முடித்துக் கண்ணாடியில் தன் மனைவியின் எழிலைப் பார்த்து ரசித்தவன், பொட்டில்லாமல் நெற்றி வெறுமையாக இருப்பதைக் கண்டு, கண்ணாடி மேசையில் குங்குமத்தைத் தேடினான்.
குங்குமச் சிமிழ் ஒரு ஓரமாக இருக்கக் குனிந்து அதை எடுத்தவன், கண்ணாடியில் தன் மனைவியைப் பார்த்தவாறே, இடது கரத்தை முன்புறமாக அவள் கழுத்துக்கூடாக எடுத்துச் சென்று தன் இறுகிய வயிற்றோடு அழுத்தியவன், பின் பொன் விரலால் குங்குமத்தை எடுத்து நெற்றியிலும் வகிட்டிலும் வைத்துவிட்டான்.
அதை வைக்கும் போதே ஒரு குழந்தைக்கு அன்னை பொட்டு வைப்பாளே, அதே அக்கறையில் மாற்றுக் குறையாமல் இருந்ததைக் கண்டு சிலிர்த்துப் போனாள் மிளிர்மிருதை..
பொட்டு வைத்ததும் மனைவியின் எழிலில் தன்னை மறந்தவனாக அப்படியே பார்த்துக்கொண்டிருக்க, மிளிர்மிருதையோ தன் கரத்திலிருந்த கைப்பேசியை ஓரமாக வைத்துவிட்டுத் தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை இழுத்து வெளியே எடுத்து இரு கரங்களாலும் பற்றி, அவன் முன்பாக நீட்ட, உடனே புரிந்துகொண்டவனாக, அதற்கும் வைத்துவிட்டு,
“இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்துகொண்டு இந்தச் சென்டிமென்ட் தேவையா?” என்றான் அபயவிதுலன்.
மெல்லியதாகச் சிரித்தவாறு தன் தாலியைத் தூக்கிப் பார்த்தவள்,
“இருபத்தோராம் நூற்றாண்டு கடந்தாலும் சாமி இருக்கிறதென்று நம்புகிறோம் அல்லவா… சாமி இருப்பது உண்மையென்றால் என் நம்பிக்கையும் உண்மைதான் விதுலா…!” என்றவள் தன் தாலியை மார்புக்குள் போட்டவாறு,
“இது… சாமி எப்படி இந்த உலகைக் காக்கிறதோ, அது போல என் சாமி…” என்றவள் நிமிர்ந்து அபயவிதுலனைப் பார்த்து, “என்னைக் காக்கும் என்கிற நம்பிக்கையை எனக்குக் கொடுக்கும் சின்னம் விதுலா இது…” என்றாள் மன நிறைவுடன்.
“சத்தமாகச் சொல்லாதே… கேட்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள்… கூடவே உன்னைப் பத்தாம் பசலி என்று முத்திரை வேறு குத்திவிடுவார்கள்… இந்தக் காலத்தில் இந்த நம்பிக்கையெல்லாம் அதீதம் என்று ஓரம் கட்டிவிடுவார்கள். தவிர இப்போது தாலி தேவையில்லை என்று கோஷமிடும் காலம்… தாலி அடிமைத்தனம் என்கிறார்கள். தாலி கட்டாமலே சேர்ந்து வாழ்வது சரி என்று சொல்லும் காலத்திலிருக்கிறோம்…” என்றவனை நகைப்புடன் பார்த்த மிளிர்மிருதை,
“தாலி அணிவதா வேண்டாமா என்று முடிவு செய்வது நான்… அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை விதுலா…! அப்புறம் பத்தாம் பசலி என்று சொல்பவர்களுக்குப் புரிவதில்லை.. தாங்களும் பத்தாம் பசலியாக இருப்பதை… சொல்லப்போனால் தாலி கட்டி கணவனோடு இணைந்து வாழ்வதுதான் நாகரீகம்…” என்றவளைப் புரியாமல் அபயவிதுலன் பார்க்க,
“என்ன புரியவில்லையா… தாலி கட்டாமல் நினைத்தவனோடு கிடைத்தவனோடு மிருகம் போல இணைந்து மனிதன் வாழ்ந்தான் எப்போது தெரியுமா? நாகரிகம் தோன்றுவதற்கு முற்பட்ட காலம். கற்காலம். அதற்குப் பிறகு பலரோடு உறவு கொண்டால் பாலியல் நோய் தாக்கும் என்பதைப் புரிந்துகொண்ட பின்னாடி, ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற கொள்கை வந்தது… உன்னைத் தவிர வேறு ஒருத்தனை அல்லது ஒருத்தியைத் திரும்பியும் பார்க்கமாட்டோம் என்று சத்தியம் செய்தார்கள்… அதுதான் திருமணம்… பெண் பொதுவாக மனவலிமை படைத்தவளன்றி உடல் வலிமை கொண்டவள் அல்ல. அதனால் இவளை நெருங்காதே… மணம் முடித்தவள், எனக்குரியவள் என்பதை நிலைநாட்டத் தாலி அணிவித்தான்… இப்போது சொல்லுங்கள்… தாலி கட்டாது வாழ்வது நாகரீகமா… இல்லை… தாலி கட்டி ஒருத்தன் ஒருத்தியோடு வாழ்வது நாகரீகமா?” என்றாள் மிளிர்மிருதை. ஒரு கணம் அபயவிதுலனே திகைத்துப்போனான்.
“அடேங்கப்பா… பரவாயில்லையே… என்னுடைய மனைவிக்கு இது கூடத் தெரிந்திருக்கிறதே… ஆனால் பெண்களுக்குத் திருமணம் முடிக்கத் தாலி ஆதாரம்… ஆண்கள் நாம் என்ன தப்பு செய்தோம்… நாம் திருமணம் முடித்தவர்கள் என்று காட்ட எதுவும் இல்லையே…” என்று கிண்டலாகக், கேட்க,
“ம்… என்ன செய்வது அப்போது ஆண்கள் வீரர்களாக இருந்ததால் வீரவளையும், வீரக் கழலும்தான் அணிந்தார்கள்… பொதுவாக ஆண்களுக்குச் சும்மா அணிகலன்கள் அணிவதில் அத்தனை விருப்பு இல்லை என்பதால் அவர்களுக்குத் தாலி அணிவிக்கும் வழக்கம் இல்லையோ என்னவோ…” என்றவள், அவனுடைய ஷேர்ட் காலரைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அவள் இழுத்த வேகத்தில் அவளை நோக்கிக் குனிந்தவனிடம்,
“வேண்டுமானால்… உங்களுக்கும் தாலி கட்டுவோமா?” என்றாள் கிண்டலாக. சற்று நேரம் அவள் முகத்தை உற்றுப் பார்த்தவன்,
“அதை நீ கட்டுவதாக இருந்தால் தாராளமாக ஏற்றுக்கொள்கிறேன்…” என்று பெரும் காதலுடன் சொன்னவனை நகைப்புடன் பார்த்தாள் மிளிர்மிருதை. பின், அவன் கழுத்தைச் சுற்றிக் கரத்தைப் போட்டவாறு,
“ஆண் திருமணம் முடித்தான் என்பதற்கு ஆதாரம், அவன் கடைப்பிடிக்கும் கற்பொழுக்கம்தான் விதுலா…!” என்றவள் மெதுவாக அவன் முகம் நோக்கிச் சென்றவாறு,
“என் விதுலன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்பவன்… என் நிழல் தவிர வேறு நிழலைத் திரும்பியும் பாராதவன்… என்னைத் தவிர வேறு ஒருத்தியை கரம் கொண்டும் தீண்டாதவன்… அவனுக்குத் திருமணம் முடித்ததற்கான குறியீடு தேவையே இல்லை தெரியுமா?” என்றவாறு மேலும் தன்னை மறந்து அவனுடைய உதடுகளை நோக்கிச் செல்ல, இரு உதடுகளும் உரசும் தூரத்தில் நெருக்கமாய் நின்றன. இருவருடைய மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து அந்த உதடுகளுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்தன. இன்னும் கொஞ்சம் அசைந்தால் போதும், நான்கு உதடுகளும் ஒரு உதடாய் மாறிப் போகும்.
இன்னும் கொஞ்சம் நெருங்க மாட்டானா? ஏக்கத்துடன் அவன் விழிகளுடன் விழிகளைக் கலக்கவிட்டவளை அவனும் சற்று நேரம் தாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்கத்தான் சுயநினைவு பெற்றவனாக, வேகமாக அவளிடமிருந்து விலகி,
“சரி சரி… நேரமாச்சு வா… சித்தார்த் வந்துவிட்டான் மிருதா… கீழே போகலாம்..” என்றான் சற்று நடுங்கிய குரலில்.
அவனுடைய நிலையை நினைத்துச் சிரித்தவள், ‘எத்தனை நாளைக்கு இந்த ஒதுக்கம் என்று நானும் பார்க்கிறேன்…’ என்று மனதிற்குள் எண்ணியவளாக, அவனுடைய கரத்தைப் பற்றி அடுத்த அடியை எடுத்து வைத்தவாறு சற்று எட்டிக் கண்ணாடி மேசையில் வைத்த கைப்பேசியை எடுத்தாள்.
பற்றியிருந்த அவன் கரத்தை விலக்கி, கவனமாக முதலே இரண்டடி தள்ளி நின்றவள், கைப்பேசியில், சிலதைத் தட்டிவிட்டு அவன் முன்னால் நீட்டப் புருவம் சுருங்க என்ன அது என்று எட்டிப் பார்த்தான். தெளிவாகத் தெரியவில்லை. அதனால் அவளிடமிருந்து வாங்குவதற்காகத் தன் கரத்தை நீட்டினான்.
அவளோ மறுப்பாகத் தலையை ஆட்டி, அவன் புறமாக நன்கு திருப்பிக் காட்ட, அதைப் பார்த்தவன் வாய்பிளந்தான்.
வாயில் சீப்பிருக்க, இவள் தலையைப் பின்னிக்கொண்டிருக்கும் படம் மிக அழகாகக் கைப்பேசியின் திரையில் துல்லியமாகத் தெரிந்தது. அதைக் கண்டதும் அதிர்ந்து விழித்தான் அபயவிதுலன்.
“ஏய்… என்ன காரியம் செய்திருக்கிறாய்… கொடு இங்கே…” என்று அவளிடமிருந்து கைப்பேசியைப் பறிக்கப் போக, இவளோ சிரித்தவாறு வேகமாகப் பின்னால் சென்றவள்,
“ஹா ஹா ஹா… இன்று தப்ப முடியாது மாப்பிள்ளை… இருங்கள்… இதை எடுத்துச் சென்று…” அவள் முடிக்கவில்லை,
“கொன்றுவிடுவேன் உன்னை… அதை மரியாதையாகக் கொடு… என் கைப்பேசியின் கடவுச்சொல்லை உன்னிடம் கொடுத்தது தப்பாகப் போய்விட்டது… கொடுடி…” என்றவாறு அவளை நோக்கிப் பாய இவளோ அவனை வெட்டி மறு பக்கம் சென்று நின்றவாறு
“ஆமாம் பெரிய கடவுச்சொல் என்னுடைய பிறந்த திகதி, குழந்தைகளின் பிறந்த திகதி… அதைத்தானே போட்டு வைத்திருக்கிறீர்கள்… பெரிய… பிரம்ம ரகசியத்தைக் கடவுச்சொல்லாகப் போட்ட பில்டப் வேறு…” என்றவாறு கதவை நோக்கிப் போக முயல
“நோ… மிருதா…! மரியாதையாகக் கொடுத்துவிடு…” என்றவாறு அவளுக்கும் கதவுக்கும் இடையில் வந்து நின்றவன் அவளிடம் பறிப்பதற்காகத் தன் கரத்தை நீட்ட, அவன் முயற்சி புரிந்தவளாக, சுழன்று அவன் பிடியிலிருந்து தப்பி, ஓடியவாறு
“நோ… நோ… நோ… இன்று எனக்கு அருமையான வாய்ப்பக் கிடைத்திருக்கிறது… அதை எப்படிக் கை நழுவ விடுவேன்… த கிரேட் பிஸ்னஸ் மான்… பிசாத்து பொண்டாட்டிக்குத் தலை சீவி அலங்கரிக்கிறார்… ஹா ஹா ஹா… சிக்கினான் சிங்கன்…” என்று நகைத்தவாறு அவனை விட்டு ஓட, இவனோ அவளைத் துரத்தியவனாக,
“மரியாதையாகக் கொடு மிருதா… திஸ் இஸ் நாட் ஃபனி…” என்றவாறு அவளுக்குப் பின்னால் விரைந்தான் அபயவிதுலன்.
எட்டும் தூரத்தில் அவளைப் பாய்ந்து பிடிக்க முயல, அவளோ அவனை விட்டு விலகிக் கட்டிலின் மீதேறி, அதன் மறு பக்கமாக வந்து நின்றாள்.
அந்த நேரம், அவனுடைய விளையாடிய அந்த நொடி, கால் காயங்களின் வலி சுத்தமாக மறைந்துபோயிருந்தது.
“மிளிர்…! கொடுக்கப் போகிறாயா இல்லை…” என்றவாறு அவளை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய, அவனிடமிருந்து தப்புவதற்காக மேலும் பின்னால் பாய்ந்தவளின் காலை அங்கிருந்த ஒற்றைக் கதிரை இடறி விட, அதை எதிர்பார்க்காத மிளிர்மிருதை சமநிலை தவறினாள்.
பெரிதாகச் சிரித்தவாறு தன்னை நிதானப் படுத்த முயன்று முடியாமல் சுழன்று தரையை நோக்கி விழத்தொடங்க, அதை நொடியில் புரிந்துகொண்ட அபயவிதுலன்,
“ஏய் பார்த்துமா…” என்று பதறியவாறு அவள் தடுமாறும் போதே கட்டிலின் மீதேறி அவள் பக்கமாகப் பாய்ந்து அவளுடைய இடுப்பைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மொத்தமாய் மோதி நின்றாள் மிளிர்மிருதை.
ஆனால் மிளிர்மிருதைக்கோ அவன் தன்னை இழுத்ததோ, அவன் உடலோடு ஒட்டி நிற்பதோ எதுவும் உறைக்கவில்லை. மாறாக. உதடுகள் பிளந்து சிரிக்க, தன் மன்னவனின் முகம் பார்த்து,
“நன்றாக மாட்டினீர்கள் விதுலா…! இன்று இதுதான் இந்த வீட்டின் முக்கியச் செய்தி…” என்று குறும்புடன் கூறியவளைக் கிண்டலுடன் பார்த்தான் அபயவிதுலன்.
“ஆஹாங்…” என்றவாறு அதே கிண்டல் நகையுடன் தன் கரத்திலிருந்த கைப்பேசியை அவள் முகத்திற்கு நேராகப் பிடித்து உயிர்ப்பித்து, எதையோ தட்ட அதை வாய் பிளக்கப் பார்த்தாள் மிளிர்மிருதை. தன்னையும் மறந்து தன் கரத்தைப் பார்க்க, அது வெறுமையாக இருந்தது.
என் கரத்திலிருந்த கைப்பேசி எப்படி அவனிடம் சென்றது? எப்போது என் கரத்திலிருந்து தன் கரத்திற்கு மாற்றினான். தான் விழ முயன்ற தருணம் அவளைப் பற்ற வந்தவன், அந்த நேரத் தடுமாற்றத்தில் அந்தக் கைப்பேசியைத் தன் கரத்திற்கு மாற்றியிருக்கிறான்.
கோபம் வர,
“யு…” என்று சிணுங்கியவள், அவனிடமிருந்து அதைப் பறிக்க முயல, அந்தோ பரிதாபம். அவனுடைய முழங்கையைக் கூட அவள் கரத்தால் எட்ட முடியவில்லை.
“நோ… இது சீட்டிங்… மரியாதையாகக் கொடுங்கள் விதுலா…!.” என்று கடுகடுத்தவள் துள்ளிப் பாய்ந்து அந்தக் கைப்பேசியைப் பறிக்க முயன்றாள்.
“ட்ரை இஃப் யு வோன்ட்…” என்றவாறு அப்படியே நிற்கத் துள்ளித் துள்ளிப் பார்த்தவள், அதற்கு மேல் முடியாதவளாகத் தன் இடையைச் சுற்றியிருந்த அவன் கரத்தை இழுத்து விலக்கியவள், கால் தடுக்கி விழ இருந்த கதிரையை இழுத்து அதற்கு மேல் ஏறி நிற்க இப்போது ஓரளவு அவன் உயரத்திற்கும் சற்று மேலேறி நின்றிருந்தாள் மிளிர்மிருதை.
அபயவிதுலனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. தன்னையும் மறந்து,
“குள்ள வாத்து…” என்று கூற
“யார் குள்ள வாத்து… நானா… நீங்கள்தான் ஒட்டகச் சிவிங்கி போல… இல்லை இல்லை அது பாவம்… பனை மரம் போல… ம்ஹூம் மலை போல வளர்ந்திருக்கிறீர்கள்… அதற்கு நானா பாடு…” என்று சீறியவள், அவன் கையிலிருந்த கைப்பேசியைப் பறிக்க முயல, அவனுடைய முகத்தில் அவளுடைய பொன்னுடல் முட்டி நிற்பதைக் கூட அவள் உணரவில்லை.
அவனோ எங்கே தடுக்கி விழுந்துவிடுவாளோ என்ற அஞ்சியவன் போல, அவள் உடலைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு இறுக்கிப் பிடித்தவாறு,
“பாத்துடி… குள்ள வாத்து.. விழுந்துவிடப் போகிறாய்….” என்றவன் கைப்பேசியை இன்னும் உயர்த்திப் பிடித்து,
“இத்தனை உயரமாக ஏறி நின்றும் உன்னால் கைப்பேசியைப் பற்ற முடியவில்லையே… அப்படியானால் நீ குள்ள வாத்துதானே…” என்றான் கிண்டல் சற்றும் மாறாமல்.
“நான் குள்ளமென்றால் பின் எதற்கு என்னைத் திருமணம் முடித்தீர்களாம்… எதற்கு…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை.
அது வரையிருந்த இனிமை காணாமல் போக, திக்கித் திணறியவாறு அவனைப் பார்க்க அவனுடைய முகமும் கறுத்து இறுகிப் போனது.
எதையோ சொல்ல வாய் எடுத்தவன், அதற்கு மேல் சொல்ல வராது தடுமாறி அவள் இடையைச் சுற்றியிருந்த கரம் கொண்டு தூக்கித் தரையில் இறக்கியவன், அவள் உள்ளங்கையில் கைப்பேசியை வைத்துவிட்டு, அங்கிருந்து விலகிச் செல்ல, அந்த ஒரு விநாடி… அவன் முகத்தில் தெரிந்த எல்லையில்லா வலியை உணர்ந்து தவித்துப் போனாள் மிளிர்மிருதை.
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…
(17) அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…
சேதி 16 ********* மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…
(15) அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான்…
சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின்…