Categories: Ongoing Novel

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 10/11

(10)

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப் புத்தகம் பட, அதை எக்கி எடுக்கப் பார்த்தாள். அவளுடைய உயரத்திற்குக் கைகள் சற்றும் அதைத் தொடவில்லை. பாய்ந்தும் எடுக்க முயன்றாள். ம்கூம், அவளால் இம்மியும் தொடமுடியவில்லை. என்ன செய்வது? என்று அவள் யோசிக்கும்போதே நீளமான ஒரு கரம் உயரே சென்று அந்தப் புத்தகத்தை இழுத்து எடுக்க, இவள் அச்சரித்துடன் திரும்பிப் பார்த்தாள். அங்கே, அதகனாகரன்தான், அந்தப் புத்தகத்தை இழுத்து எடுத்து அது என்ன புத்தகம் என்று திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இவளுடைய அடர்ந்த புருவங்களோ வியப்பில் மேலே ஏறின. இது அவனேதானா. அன்று அவளுக்காய் பார்த்துப் பார்த்துச் செய்த அந்த நிரஞ்சன்தானா… கடந்த இரண்டு நாட்களாக ஜெயராமைக் கூட மறக்கடித்த அதே நிரஞ்சன்தானா… அம்மாடி… எதையும் சிந்திக்கச் செயல்படவிடாமல் செய்துவிட்டானே… இதோ… இப்போது சற்றைக்கு முன்புகூட இவனைப்பற்றித்தானே நினைத்தாள். இப்போது நேராக முன்பே வந்து நிற்கிறானே.

அவளையும் மீறி விழிகள் பளிச்சிட,

“நீங்களா…?” என்றாள் சிரமப்பட்டுக் குதுகலத்தை மறைக்க முயன்றவாறு.

அவனோ தன் கம்பீரப் புன்னகையைச் செலுத்தியவாறு அவளை நோக்கி புத்தகத்தை நீட்டி,

“ஏன்… சந்தேகமா…” என்றான் கிண்டலாய்.

அதற்கு அழகாய் மலர்ந்து சிரித்தவள்,

“நீங்கள் எங்கே இங்கே…?” என்றாள் தன் குதுகலத்தை மறைக்க முயன்று தோற்றவளாய். அதை மனதிற்குள் குறித்துக் கொண்டவன்,

“ம்… மதிய சாப்பாட்டிற்குக் காய்கறி வாங்க வந்தேன்…” என்றவன், சுத்தவரப் பார்த்துவிட்டு, “இங்கே என் விருப்பத்திற்கேற்ற காய்கறிகள் எதுவும் கிடைக்கவில்லை…” என்று சோகம் போலக் கூற, இவளோ தன்னையும் மீறி வாய்விட்டு அழகாய்ச் சிரித்து,

“ஷ்… சாரி… கொஞ்சம் கடிதான் இல்லையா…” என்றாள். அவனோ பிளந்த அந்த உதடுகளையும், அதனூடே தெரிந்த வெண்ணிறப் பற்களையும், கூடவே சிரித்த விழிகளையும் கண்டு

“நீ சிரிக்கும்போது இன்னும் அழகாய் இருக்கிறாய் நன்னயா…” என்றான் கிறங்கியவன் போல. உண்மையும் அதுதான். அவள் சிரித்தால், இல்லை பேசினால், இவனுக்குள் மத்தாப்பு வெடிப்பதை ஏனோ தடுக்க முடியவில்லை.

அவளோ அதைக் கேட்டதும், முகம் சிவக்க,

“ஓ… நன்றி…” என்று விட்டுப் பின் நிமிர்ந்து அவனை ஆர்வத்துடன் பார்த்துப் புத்தகங்கள் நிறையப் படிப்பீர்களோ?’” என்றாள் ஆவலாய்.

‘எங்கே அதற்கு நேரம் கிடைக்கவேண்டுமே…’ என்று முணுமுணுத்தவன்,

“ம்.. நிறையப் படிப்பேன் என்று சொல்லமுடியாது, பொழுது போகவில்லை என்றால் படிக்கும் பழக்கம் உண்டு…” என்றான் தன் வரிசைப் பற்களைக் காட்டிச் சிரித்தவாறு. இவளோ குறும்பாக அவனைப் பார்த்து,

“ம்… அப்படியானால் இப்போது உங்களுக்குப் பொழுது போகவில்லை என்று சொல்கிறீர்கள்…” என்றவளிடம் மேலும் நகைத்தவனாக,

“அதி புத்திசாலிதான் நீங்கள்…” என்றவாறு, அவளுடைய கரத்தை விழிகளால் சுட்டிக்காட்டி,

“காயம் எப்படி இருக்கிறது?” என்றான் கனிவாய். அந்த அக்கறையில் இவள் வீழ்ந்துதான் போனாள். தன்னையும் மீறி எழுந்த கண்ணீரை அடக்க முயன்றவாறு,

“ஆமாம்… இப்போது எவ்வளவோ பரவாயில்லை. நேற்று சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது. இப்போது, என்னால் விரல்களை மூடியெல்லாம் விரிக்க முடிகிறது…” என்றவளை மேலும் நெருங்கி, அவளுடைய கரத்தைச் சரியாகக் கணித்து அதைப் பற்றித் தூக்கிப் பார்த்தான்.

அவள் சொன்னதுபோலக் காயம் சற்று ஆறித்தான் இருந்தது. ஆனாலும் சிவந்து சற்று வீங்கியிருந்தது. அக்காயத்தைத் தன் பெருவிரலால் மெதுவாக வருடிக்கொடுத்துவிட்டு, “முழங்கை எப்படியிருக்கிறது…?” என்று கேட்க, நீண்ட கைகொண்ட கம்பளி ஆடைக்குள் மறைந்திருந்த காயத்தை உணர்ந்தவளாக,

“அதுவும் ஆறிவிட்டது நிரஞ்சன்…” என்றாள் மென்மையாக. ஆனால் அவனோ திருப்தி கொள்ளாதவன் போல,

“முழுதாக ஆறவில்லையே… இன்னும் ரணமாகத்தான் இருக்கிறது இல்லையா… ஒரு முறை வைத்தியரிடம் போயிருக்கலாம்” என்று சொன்னவாறு, அவளுடைய மென் கரத்தை ஆர்வத்துடன் தன் கரத்தில் ஏந்திப் பார்த்தான். புறங்கையையும் வருடிக்கொடுத்து, வியந்தவனாக அவளைப் பார்த்து,

“மிக மிக மென்மையான கரங்கள் உன்னுடையது…” என்றான் கவரும் கரகரத்த குரலில். ஏனோ அவனுடைய அந்தப் பாராட்டு இதயத்தின் நடுப்புள்ளியை இதமாய்த் தட்டிச் செல்ல, அது நாணமாய் முகத்தில் வந்து மேத, கன்னம் சிவந்தவளாய்த் தன் கரத்தை விலக்கியவாறு,

“ந… நன்றி…” என்றாள் கிசுகிசுப்பாய். அந்தச் சிவந்த முகத்தைக் கண்டு இவனும் சற்றுத் தடுமாறித்தான் போனான். என்னதான் ஆண்மகன் கம்பீரமாக இருந்தாலும், நாணம் கொண்ட பெண்ணைக் கண்டால் உள்ளம் தட்டுத் தடுமாறுவது இயற்கைதான் போலும்.

தன்னை மறந்து அந்த அழகிய முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, இவளோ ஓரளவு தன்னைச் சமாளித்தவாறு,

“நீங்கள் புத்தகம் எடுக்கவில்லையா?” என்றாள் திகைப்புடன்.

“ம்… எடுத்துவிட்டேனே…” என்று அவன் கூற, இவளோ வியந்தவளாய் மீண்டும் அவனுடைய கரங்களைப் பார்த்துவிட்டு,

“எங்கே… காணவில்லையே…” என்றதும், அவனோ புன்னகையுடன் அவளைச் சுட்டிக் காட்டி,

“உங்களைத்தான் தான் சொன்னேன்…” என்றான் மென்மையாக. இவளோ திகைத்து,

“என்னது… என்னையா?” என்று புரியாமல் குழம்ப, அவனோ மேலும் சிரித்து,

“ஆமாம், உங்களைத்தான்… நேரம் போகவில்லை என்றால்தானே புத்தகம் படிப்பேன் என்றேன்… இப்போதுதான் நீங்கள் முன்னால் இருக்கிறீர்களே… பிறகு எதற்குப் புத்தகம்… அதுதான் சொன்னேன்…” என்று கூற, அவளோ கிளுகிளுத்துச் சிரித்தவாறு,

“நன்றாகவே சமாளிக்கிரீர்க்ள நிரஞ்சன்…” என்றவள், அவனை ஆவலுடன் நிமிர்ந்து பார்த்து,

“உங்களுக்கு நேரம் போகவில்லையென்றால், பக்கத்தில்தான் உணவகம் ஒன்று இருக்கிறது… வாருங்களேன், சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்…” என்றாள்.

மறுப்பதற்கு இவனுக்கென்ன பைத்தியமா. அவனே சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறான். இது பழம் நழுவித் தானாக அல்லவா பாலில் விழுந்திருக்கிறது.

உடனே மறுக்காமல் ஒத்துக் கொள்ள, புத்தகங்களை உடனே அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு நடக்கத் தொடங்கியவளைத் தடுத்தவன்,

“என்ன, வெறுங்கையோடு கிளம்பிவிட்டீர்கள். புத்தகங்களை எடுக்கவில்லையா…?” என்றான் வியந்து. இவளோ,

“இல்லை இவற்றை என்னோடு எடுத்துச் செல்ல முடியாது. அதற்கான நூல்நிலைய அட்டை என்னிடமில்லை. இங்கேயே இருந்து படிக்கலாம் என்றுதான் வந்தேன்… ஆனால் இதை விட முக்கியமானது உங்களுக்கு விருந்து கொடுப்பது… அதனால் இதைப் பிறகு வந்து படித்துக் கொள்கிறேன்… நீங்கள் வாருங்கள்…” என்றவள், சற்றும் யோசிக்காமல் அவனுடைய கரத்தைப் பற்ற, இவனோ ஆச்சரியத்தோடு இணைந்த தம் கரத்தைப் பார்த்தவாறு அவளோடு நடக்கத் தொடங்கினான்.

வெளியே வந்தபின்தான் அவளும் கவனித்தாள் போல, அவனுடைய கரத்தைப் பற்றியிருப்பதை. ஒருவித தடுமாற்றத்தோடு தன் கரத்தை விலக்கி,

“மன்னித்துவிடுங்கள், ஆர்வக் கோளாற்றில் உங்கள் கரத்தைப் பற்றிவிட்டேன்…” என்று அசடு வழிய, அவனோ,

“மீண்டும் என் கரத்தைப் பற்றுவாய் என்றால் உன்னை மன்னிக்கிறேன்…” என்றவனை உதடுகள் கடித்துப் பார்த்தவள்,

“நீங்கள் மன்னிக்கவே வேண்டாம்… வாருங்கள்…” என்று கிளுகிளுத்தவாறு நடக்கத் தொடங்க, இவனும் புன்னகையுடனேயே அவளைப் பின்தொடர்ந்தவாறு,

“எனக்கு உணவு வாங்கிக் கொடுப்பதில் அத்தனை ஆர்வமோ…?” என்றான். விழிகளில் மகிழ்ச்சி பளிச்சிட நடந்துகொண்டே அவனைத் திரும்பிப் பார்த்து,

“பின்னே, அன்று எனக்கு எத்தனை உதவி செய்தீர்கள். அதற்குத் தகுந்தாற்போல நான் நன்றிகூடக் கூறவில்லை தெரியுமா. அதுதான், என்னால் முடிந்தது…” என்று குதுகலத்துடன் கூறியவாறு “அதோ அந்தச் சந்தித் திருப்பத்தில்தான் உணவகம் இருக்கிறது…” என்று கூறிக்கொண்டே முன்னே நடக்கத் தொடங்க, தன்னை மீறி அவளை ரசித்தவாறு பின்னால் நடக்தக் தொடங்கினான் அதகனாகரன்.

கூந்தல் வேறு அவள் நடைக்கேற்ப அங்கும் இங்கும் அசைந்துகொண்டிருக்க, இவனுடைய கவனம் முழுவதும் அந்த நீளக்கூந்தலில்தான் நிலைத்திருந்தது, ஏனோ அவள் முன்னால் நின்றால், அந்தக் கூந்தலிலிருந்து கவனத்தை வேறு எந்தத் திசைக்கும் திருப்ப முடிவதில்லை. ஒரு வேளை, அக்காலங்களில் ஆண்களைக் கவரத்தான் இத்தகைய நீளக் கூந்தலை வைத்திருந்தார்களோ? தெரியவில்லை. ஆனால் இவனுடைய கவனம் முழுவதும் அவளுடைய கூந்தலில்தான் இருந்தது.

ஐந்து நிமிட நடையில்தான் அந்த உணவகம் இருந்ததால், இருவருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தேவையாகத்தான் இருந்தது.

அதுவும் மீநன்னயாவிற்கு இது புதிதாக இருந்தது. ஜெயராமோடு பல இடங்களுக்குப் போயிருக்கிறாள்தான். அவருடைய கரங்களைப் பற்றி நிறையக் கதைகள் பேசிச் சிரித்திருக்கிறாள்தான். ஆனால் அது வேறு, இது வேறு. அங்கே கொந்தளித்த உணர்வுகள் வேறு. இங்கே கொந்தளிக்கும் உணர்வுகள் முற்றிலும் மாறானது. அது மனதிற்கும் புத்திக்குமான குதுகலம். இருவழிப் பாதை… போகும்வரை போய்விட்டு பிடிக்கவில்லை என்றால் திரும்பிவிடலாம்.. ஆனால் இது… எப்படிச் சொல்வது… மனதும் புத்தியும் உடலும் ஒன்றாய் இணைந்து ஒருவழிப் பாதையில் குதுகலித்தவாறு செல்கிறது. அந்தப் பாதையை விட்டு இனி திரும்ப முடியும் போலத் தோன்றவில்லை. இது என்ன விந்தை. சொல்லப்போனால் அவனை இன்றுதானே இரண்டாம் முறையாகப் பார்க்கிறாள். அதற்குள் இப்படி மாற்றங்கள் வந்துவிடுமா என்ன?

மனம் முழுவதும் அவன் நினைவாகவே நடந்துகொண்டிருந்தவளுக்குப் பாதையில் கவனம் செல்லவில்லை. சற்றும் யோசிக்காமல், அந்த ஒருவழிப் பாதையில் காலைப் பதிக்கப்போக, அந்த நேரம் பார்த்து ஒரு வாகனம் வேகமாக வலப்பக்கம் திருப்பக் கண்ணிமைக்கும் நொடியில், நடக்க இருப்பதை உணர்ந்தவனாய், மின்னல் விரைவுடன் மீநன்னயாவை நெருங்கி, அவளுடைய கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, இழுத்த வேகத்தில் அவன் உடலோடு மோதி நின்றாள் மீநன்னயா. கணப்பொழுதில் அந்த வாகனத்தில் மோதுப்படாமல் தப்பித்தாள் மீநன்னயா.

அவன் உடலோடு மோதி நின்றவளுக்கு இன்னும் புரியவில்லை, எதற்காக அவனோடு மோதி நிற்கிறோம் என்று. தன்னை மறந்து ஆச்சரியத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ சற்றுக் கோபத்தோடு அவளைத்தான் முறைத்துக்கொண்டிருந்தான்.

ஆனால் இடையில் ஊன்றிய அவனுடைய கரம் மட்டும், சற்று அழுத்தமாகவே அவள் இடையைப் பற்றிக்கொண்டிருந்தது. போதாததற்கு அவள் திரும்பிய வேகத்தில் மேலாடை சற்று மேலே ஏறியதால், துடியிடை மிக அழகாய் அவனுடைய உள்ளங்கைக்குப் பதமாய் சிக்கிக்கொண்டது. மறுகரமோ அவளுடைய மேல் கரத்தை அழுந்தப் பற்றியிருந்தது. அந்தக் கோதையின் இரண்டு உள்ளங்கைகளும் அவன் மார்பில் பதிந்திருக்க, முன் தேகம் முழுவதுமாக அவன் முன்னுடலுடன் உரசி நின்றது.

அவன் கரத்தின் வெம்மையை அவள் இடையும், அவள் இடையின் மென்மையை அவன் கரமும் உணர்ந்துகொண்ட நேரம் அது. அப்பப்பா, ஒரு ஆணும் பெண்ணும் தொட்டுக்கொண்டால் தீப்பற்றிக்கொள்ள வேண்டுமா என்ன? உடலில் ஏன் இத்தனை மாற்றங்கள். புத்தி ஏதேதோ கற்பனை செய்து தொலைக்கிறதே… எதுவும் பேசத் தோன்றாமல், வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, பட் பட் பட் என்கிற பெரிய ஓசையுடன் வந்த மோட்டார் வண்டிதான் இவர்களைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

அப்போதுதான் தாமிருக்கும் நிலையே இருவருக்கும் உறுத்தியது போலும். மீநன்னயா, பதறியவாறு அவனை விட்டு விலக, இவனும் சுதாரித்தவாறு,

“என்ன அவசரம்… பாதையில் கவனமிருக்க வேண்டாமா… அப்படி எங்கே உன் யோசனையை வைத்திருந்தாய்? கொஞ்சம் தாமதித்திருந்தாலும் என்னவாகியிருக்கும்?” என்று சற்றுக் கடுமையாக அவன் கண்டிப்பதுபோலக் கேட்டாலும், அந்தக் கோபத்தில் ‘ங்கள்’ மறைந்து போனதை இருவரும் கண்டுகொள்ளவில்லை.

மீநன்னயாவோ அவன் கண்டிப்பில் தித்தித்தவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அக்கறை இருப்பதால்தானே கண்டிக்கத் தோன்றுகிறது. அவள் மீது ஈர்ப்பில்லாமல் அந்த அக்கறை எப்படித் தோன்றும்? ஏனோ மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கத் தொடங்க,

“அதற்குத்தான் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்களே, எனக்கு ஒரு ஆபத்தென்றதும், காக்க வரமாட்டீர்களா என்ன?” என்றவள், குறிப்பிட்ட உணவகம் வந்ததும் அவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

(11)

வந்தவர்களை அழைத்துச் சென்று ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு, அன்றைய உணவுப் பட்டியலை அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டு உணவு பரிமாறுபவர் உள்ளே செல்ல, இவளோ ஆர்வத்துடன் உணவுப் பட்டியலைப் பார்த்தவாறு,

“உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்றாள். இவனோ, தன் தோள்களைக் குலுக்கி,

“நீ எதைத் தருவித்தாலும் நான் சாப்பிடுவேன்…” என்று கூற,

“நீங்கள் சைவமா அசைவமா…?” என்றாள். தன் தோள்களைக் குலுக்கி,

“நான் எப்போதும் அசைவம்தான் நன்னயா…” என்றவனை வியந்து பார்த்தவள்,

“வெள்ளிக் கிழமை கூடவா…?” என்று வியந்தாள். இவனோ மெல்லியதாக நகைத்து,

“வெள்ளிக்கிழமை என்ன பாவம் செய்தது…” என்று கேட்க உதடுகளைச் சுழித்து,

“கோவிலுக்குப் போகும் பழக்கம் உண்டா இல்லையா…” என்றாள் அவனை அறிந்துவிடும் ஆர்வத்தோடு.

“ம்… செய்யும் தொழிலே தெய்வம் எனக்கு… மற்றும்படி மதம், ஜாதி அப்படி ஒன்று உலகில் இருப்பதாகவே நான் நினைக்கவில்லை…” என்றவனை மதிப்போடு பார்த்தவள், எதையோ கேட்க வரப் பேரர் வந்தார். உடனே அவரிடம் வேண்டியதைக் கூறிவிட்டு நிமிர்ந்து அதகனாகரனைப் பார்க்க, அவனோ இவளைத்தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தத் தீட்சண்யம் மிகுந்த விழிகள் தன் மீது படர்வதைக் கண்டவளுக்கு மீண்டும் உள்ளே பரிதவிப்புடனான பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பு. எதற்காக இப்படிப் பார்க்கிறான்? சங்கடத்துடன்,

“ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் திக்கித் திணறி.

அவனோ ரசனையுடன் அவளைப் பார்த்து,

“தெரியவில்லை… நீ அருகேயிருந்தால் என் கவனம் முழுவதும் உன்னிடம்தான் குவிகிறது…” என்றான் தெளிவாய். அதைக் கேட்டதும் குப்பென்று முகம் சிவக்க,

“ஏ.. ஏன்…” என்றாள் சூடேறிய முகத்தை மறைக்க முயன்றவாறு. அதையும் ரசனையுடன் பார்த்தவாறு,

“தெரியவில்லை… ஆனால் நீ எங்கிருந்தாலும் என் பார்வை உன் மீதுதான் இருக்கிறது… காரணம் கேட்டால் தெரியவில்லை… சரி… அதை விடு… உன்னைப் பற்றிச் சொல்… உன் பேச்சிலேயே நீ இலங்கை என்று தெரிகிறது… இலங்கையில் எங்கே? எப்போது இங்கிலாந்து வந்தாய்?” என்று அவளைப் பற்றி அறிய ஆவல் கொண்டவன் போலக் கேட்க, மீநன்னயாவின் முகம் ஒரு கணம் வாடிப்போயிற்று. அந்த வாட்டத்துடனேயே தன்முன்னால் அமர்ந்திருந்தவனை ஏறிட்டு,

“நான் யாழ்ப்பாணம்… இங்கே வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன” என்றதும்,

“ம்… நினைத்தேன்…” என்றான் அதகனாகரன். இவளோ,

“நினைத்தீர்களா… என்ன நினைத்தீர்கள்…?” என்று வியப்புடன் கேட்க,

“நீ இங்கே அண்மையில்தான் வந்தாய் என்று ஊகித்தேன். அது சரியாகத்தான் இருக்கிறது…” என்றான். இவளோ மேலும் வியந்தவளாய்,

“அது எப்படி ஊகித்தீர்கள்… நான் கூட நினைத்தேன், பொதுவாக என்னை முதன் முதலில் பார்ப்பவர்கள், வட இந்தியர் என்றுதான் நினைப்பார்கள். நீங்கள் மட்டும்தான் நான் தமிழ் என்று சரியாக ஊகித்தீர்கள்… ஆமாம் ஆரம்பத்திலேயே என்னோடு தமிழில்தான் பேசினீர்கள்… உங்களுக்கு நான் தமிழ் என்று எப்படித் தெரியும்…” என்று மிகுந்த வியப்புடன் கேட்க, அவனோ ஓரளவு தன்னைச் சமாளித்தவனாக, தன் தோள்களைக் குலுக்கி,

“ஈசி…. நீ வட இந்தியர்கள் போல, சிவந்த நிறமாக இருந்தாலும், உன் நடை உடை பாவனை, இலங்கைத் தமிழர் என்பதை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிட்டதே. பொதுவாக வெளிநாடு வருபவர்கள், மறுநாளே இந்த நாட்டுக்கு ஏற்பத் தங்கள் ஆடைகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் அதிகமான இலங்கைத் தமிழர்கள் தம்மை மாற்றிக்கொள்ளச் சற்றுக் காலம் எடுப்பார்கள்… அதுதான் நீ வந்து அண்மைக்காலம் என்று ஊகித்தேன்…” என்றவன், தன் கூரிய விழிகளால், அவள் புருவ மத்தியில் அழகாய் அமர்ந்திருந்த கருஞ்சாந்துப் பொட்டைப் பார்த்தான். பின் எந்த அலங்காரமும் இல்லாத, விழிகளில் மட்டும் மையிட்ட முகத்தைப் பார்த்தான். உதட்டுச் சாயமில்லாத செழித்த உதடுகளைப் பார்த்தான். வெட்டாத நீண்ட கூந்தலை நினைவுக்குக் கொண்டு வந்தான். உடல் தெரியாது அணியும் ஆடையை எண்ணினான். எல்லாவற்றிற்கும் மேலாக, நாகரிகம் பழக்கப்படாத எதார்த்தமாக நடந்துகொள்ளும் அவளுடைய நடை உடை பாவனையை நினைவுக்கும் கொண்டுவந்தான். அதையே அவளுக்குக் கூறுவது போல,

“இங்கே வந்த சில நாட்களில் தொலைந்து போகும் நம் அடையாளம் இந்தப் பொட்டுதான்… வைத்தால் வித்தியாசமாகப் பார்ப்பார்களோ என்கிற சங்கடத்தில், வைப்பதை நிறுத்திவிடுவார்கள். அடுத்தது, இத்தனை நீளத் தலைமுடியை யாரும் வைத்திருக்க மாட்டார்கள். வந்த சில நாட்களிலேயே பராமரிக்கச் சிரமம் என்று வெட்டிவிடுவார்கள். அதற்குப் பின், எந்தப் பூச்சும் இல்லாத உன்னுடைய முகம்…” என்றவன் அவள் பக்கமாகக் குனிந்து, செழித்த கன்னத்தைச் சுட்டுவிரலால் மெதுவாக வருடி எடுத்து அவளிடம் காட்டி,

“நீ இன்னும் ஸ்பொன்ஸ் பௌடர்தான் போடுகிறாய். கூடவே குளிராக இருந்தாலும், கணுக்கால் வரை நீண்ட பாவாடை அணிந்திருக்கிறாய். இடை வரை நீண்ட மேலாடை… இது போதாதா நீ இங்கே வந்து ஒரு சில நாட்கள்தான் ஆகின்றன என்பதைக் கண்டுபிடிக்க…” என்று கூற, முதலில் வெட்கத்தில் முகம் சிவந்தவள், பின் அழகாய்ச் சிரித்து,

“அம்மாடி… இத்தனை விடயங்களை விட்டு வைத்திருக்கிறேனா…” என்றாள். அவனோ, அவள் வெட்கத்தை ரசனையுடன் பார்த்து, தன் சுட்டுவிரலால் அவள் முகத்தை ஒரு வட்டமாகக் காட்டி,

“முக்கியமானது இந்த வெட்கம்… இதுவும் உன்னிடம் மிச்சமிருக்கிறது… என்று கூற மேலும் முகம் சிவந்தவளிடம்,

“அழகாக இருக்கிறாய்.. மிக மிக அழகாக இருக்கிறாய்… நீ வெட்கப்படும்போது, மிக அழகாக இருக்கிறாய்…” என்றதும் அவள் முகத்திலிருந்த சிவப்பு விடைபெற்றுச் செல்ல அதிக நேரம் எடுத்தது.

இருவரும் சற்று நேரம் அமைதி காக்க, மேலும் அவளைப் பற்றி அறியும் ஆர்வத்தோடு,

“அது சரி… உன்னை இங்கே அனுப்பிவிட்டு உன்னைப் பெற்றவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்… உனக்கு வேறு சகோதரர்கள் இருக்கிறார்களா?” என்று அவன் கேட்க, மீநன்னயாவின் விழிகளில் எல்லைக கடந்த வலி தோன்றி மறைந்தது. அதைக் கண்டவன் சற்றுத் தடுமாற, இவளோ முள் கரண்டியால் உணவுத்தட்டிலிருந்த எதையோ உருட்டியவாறு, தலையை மறுப்பாக அசைத்து,

“இல்லை… நான் ஒருத்தி மட்டும்தான். என் தந்தை நான் பிறக்க முதலே தொலைந்து போய்விட்டார். என்னை வளர்த்தது என் அம்மாதான். அவரும், இறுதியாக நடந்த யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். அம்மா இறந்த பிறகு, என் பாட்டியோடுதான் வளர்ந்தேன்…” என்று வலியை மறைத்துப் புன்னகையுடன் கூற, முதன் முறையாக இவனுடைய உள்ளத்திலும் ஒரு வித தடுமாற்றம். ஒருவித தவிப்பு. தந்தையில்லாது வாழ்வது எத்தனை கொடுமையானது என்று இவனுக்குத் தெரிந்ததுதானே.

“ஓ… அப்படியானால் ஜெயராமை உனக்கு எப்படித் தெரியும்…?” என்று அவன் கேட்க அதற்கும் சற்று நேரம் அமைதியாக இருந்தவள். பின் நிமிர்ந்து,

“இரண்டு வருடங்களுக்கு முன்பு, முள்ளி வாய்க்காலில் பாதிப்படைந்த இடங்களைப் பார்க்க வந்திருந்தார். அங்கேதான் என்னையும் சந்தித்தார். என் வாழ்க்கையைக் கண்டு மனம் வருந்தினார். அவர்தான் இங்கே என்னை வரவழைத்தார். அவர் இல்லாவிட்டால், என் நிலை என்னவாகியிருக்குமோ…” என்று அச்சத்துடன், சொல்ல, இவனோ ஏளனத்துடன் அவளைப் பார்த்தான்.

ஆக வறுமையில் கிடந்த அம்மையாருக்கு அதிலிருந்து தப்பக் கிடைத்த கொழுகொம்புதான் ஜெயராமன். இது பணத்திற்காக வந்த காதலே தவிர, பாசத்தால் வந்த காதலில்லை. இதோ இப்போது கலங்கித் தவிப்பதுபோலத்தான் ஜெயராமையும் இவள் வசம் மயக்கியிருக்க வேண்டும். அதே முறையைத்தான் இவனிடமும் கையாள்கிறாள். ஆக அவளை என் வசம் இழுப்பது மிகச் சுலபம். தவிர இவளுக்கு ஜெயராமன் திருமணம் ஆனவர் என்பது தெரியுமா தெரியாதா? தெரியாதென்றால், தவறு ஜெயராமன் மீதுதான். இவளுக்கு அது தெரியாதென்றால், ஜெயராமன் பொய்சொல்லி இவளை எய்த்திருக்கிறார். ஒருவேளை அவர் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் அவரோடு ஒட்டுண்ணியாக வாழ முயல்கிறாள் என்றால்…” நினைக்கும் போதே அதகனாகரனின் கைமுஷ்டிகள் இறுகின. மூச்சுக் காற்று சூடாக வெளியே வந்தன.

நிச்சயமாக அவளை மன்னிக்கவே மாட்டான். அவள் செய்த தவறுக்கான தண்டனை பயங்கரமாக இருக்கும். முதலில் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்…

ஏனோ மனம், அவளுக்குத் தெரிந்திருக்கக் கூடாது என்றுதான் வேண்டியது. அவள் மீது தவறு இருக்கக் கூடாது என்கிற ஏக்கம் பிறக்க,

“ஹே… உன்னைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்பட்டதால்தான் விசாரித்தேனே தவிர, உன் வலியை அதிகமாக்கவேண்டும் என்றெல்லாம் நான் எண்ணவில்லை. மறந்த வேதனையை நான் நினைவு படுத்தினேன் என்றால், ரியலி ஐ ஆம் சாரி..” என்றான் மன்னிப்பு வேண்டும் முகமாக. அவளோ கலங்கிய கண்ணை மறைக்க முயன்றவாறு, அவன் பிடியிலிருந்து தன் கரத்தை விலக்கியவள், வலியுடன் கூடிய புன்னகை ஒன்றைச் சிந்தி,

“அதனால் என்ன… என்னைப் பற்றித்தான் உங்களுக்கு எதுவும் தெரியாதே… என்னை அறிந்து கொள்வதற்காகக் கேட்டீர்கள் இதில் என்ன தப்பு?” என்று கூற,

“ம்…” என்றவன் அவளைக் கூர்மையாகப் பார்த்து,

“ஜெயராமை மிகவும் பிடிக்குமோ…” என்றான். இப்போது வாடிய அவள் முகம், மலர்ந்து போனது. மலர்ச்சியுடன் அவனைப் பார்த்து,

“பிடிக்குமாவா… அவர் என் உயிர் நிரஞ்சன்… இந்த வாழ்க்கை, இந்த மகிழ்ச்சி எல்லாமே அவரால்தான் எனக்குக் கிடைத்தது…” என்றவளை ஆத்திரத்தை அடக்கிப் பார்த்தவாறு,

“ஜெயராமன் அதிக வசதி கொண்டவரோ?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, இவளோ, பெருமையுடன்,

“ஆமாம்… கனடாவில் மிக வசதியானவர் நிரஞ்சன்… நிறைய வியாபாரத்தளங்கள் வைத்திருக்கிறார்…” என்று கூற, இவனும் வியந்தவன் போலப் புருவங்களை மேலேற்றி,

“அடேங்கப்பா… இந்தச் சின்ன வயதில் இத்தனை உயர்ச்சியா…” என்றான். அவளோ க்ளுக்கென்று சிரித்து,

“என்னது… சின்ன வயதா… அவருக்கு வயது முப்பத்தொன்பது தெரியுமா…” என்றதும் அதிர்ந்தவன் போல, முப்பத்து ஒன்பதா…” என்றவன், ஆச்சரியமாக இருக்கிறதே… இத்தனை வயதாகியும் திருமணம் முடிக்காமலா இருக்கிறார்…” என்று வியக்க, அதற்கும் மெல்லியதாகக் குலுங்கி நகைத்தவள்,

“யார் சொன்னார்கள் அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்று. அவருக்கு அழகான குடும்பம் இருக்கிறது தெரியுமா. அழகான மனைவி, அழகான இரண்டு குழந்தைகள்… அவர் வாழ்க்கை மிக நிறைவாகத்தான் இருக்கிறது…” என்று அவன் தலையில் ஒரு குண்டைப் போட்டுவிட்டு உணவில் கவனத்தைச் செலுத்த, அதிர்ந்துதான் போனான் அதகனாகரன்.

தெரிந்துகொண்டுமா அவரோடு உறவு வைத்திருக்கிறாள்… ஆத்திரமும் ஏமாற்றமும் பொங்கி எழ,

“தெரிந்துகொண்டுமா அவரோடு… சீ…” என்று தன்னை மறந்து சீறிவிட்டான் அதகனாகரன். அதுவரை உணவை உருட்டிக்கொண்டிருந்தவள், திடீர் என்று அவனிடமிருந்து வந்த சீற்றத்தில் அதிர்ந்தவளாக,

“என்ன சொன்னீர்கள்…” என்றாள் குழப்பத்துடன். உடனே தன்னுடைய ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டான் அதகனாகரன். இல்லை இது சீறுவதற்கான நேரமில்லை. பதறிய காரியம் சிதறிவிடும். காயை மெதுவாகத்தான் நகர்த்தவேண்டும். சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கியவனாக,

“இல்லை… அங்கே ஒரு குடும்பம் இருக்கும் போது, உன்னோடு எப்படி அவர்…” என்று அவன் இழுக்க, ஒரு கணம் மீநன்னயாவின் முகம் மாறிப்போயிற்று. அவன் என்ன நினைக்கிறான், எதைப்பற்றிப் பேசுகிறான் என்று புரிந்துபோக, முகத்தில் இனம்கண்டுகொள்ள முடியாத ஒரு உணர்வு வந்து மறைந்து போனது. அதுவரையிருந்த இளகிய தன்மை காணாமல் போக, அவனை அழுத்தத்துடன் பார்த்தாள் அவள்.

பின் நிதானமாகத் தன் உணவில் கவனத்தைச் செலுத்தியவாறு,

“சில விடயங்களைப் பேசாதிருப்பது உங்களுக்கும் எனக்கும் நல்லது நிரஞ்சன். மீறிக் கேட்பேன் என்றால், நம் நட்பை இத்தோடு முறித்துக் கொள்ளலாம்…” என்று விட்டுக் கரத்திலிருந்த கரண்டியை உணவுத்தட்டின் மீது போட்டுவிட்டு எழ, சடார் என்று அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான் அதகனாகரன்.

“ஹே… ஐ ஆம் சாரிமா… நான் வேண்டுமென்று கேட்கவில்லை… உன்னைப் பற்றி அறியவேண்டும் என்கிற ஆவலில்தான் கேட்டேன். அது தவறு என்றால் மன்னித்துவிடு…” என்று உடனே தாழ்ந்து கேட்க, அதற்கு மேல் அவளாலும் கோபத்தை இழுத்துப் பிடித்திருக்க முடியவில்லை.

சற்று நேரம், அமைதி காத்தவள், “சாரி நிரஞ்சன்… சில விடயங்களுக்கு நம்மிடம் பதில் இருக்காது. பதிலிருந்தாலும் சொல்ல முடியாது. எனக்கும் ராமுக்கும் இடையே உள்ள உறவு அத்தகையது… புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்…” என்று அவள் அழுத்தமாகக் கூற, அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன்,

“ஐ வில்…” என்றான். அதைக் கேட்டதும் முகம் மலர, தட்டில் போட்ட கரண்டியை மீண்டும் எடுத்து, உணவை அள்ளி எடுத்தவாறு,

“சரி… இப்போது உங்கள் முறை… சொல்லுங்கள்… உங்களுக்கு ஏதாவது சகோதரர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டவாறு கரண்டியை வாயில் திணிக்க, இவனோ, தோள்களைக் குலுக்கி,

“சொல்லப் பெரிதாக எதுவுமில்லை நன்னயா… பரம்பரையாகவே வசதி படைத்தவர்கள்…” என்று தன் நண்பன் நிரஞ்சனின் குடும்பம் பற்றிய கதைகளைத் தன்னதுபோலத் தெளிவாகக் கூறிவிட்டு உண்பதில் கவனம் செலுத்த, மீநன்னயாவும் அவன் சொல்வதை ஆர்வமாகக் கேட்டவாறே உணவை உண்ணத் தொடங்கினாள்.

What’s your Reaction?
+1
12
+1
4
+1
5
+1
0
+1
0
+1
0
Vijayamalar

View Comments

Recent Posts

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 21/22

(21) மெதுவாகத் தூக்கம் கலைந்து எழுந்தாள் மீநன்னயா. ஏனோ அடித்துப்போட்டதுபோலச் சோர்வாக இருந்தது. சிரமப்பட்டு விழிகளைத் திறந்தவளுக்குக் கண்முன்னே விரிந்த…

4 hours ago

தொலைந்த எனை மீட்க வா…!- 6/7

(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால்…

1 day ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 19/20

(19) மறுநாள் மீநன்னயா எழுந்தபோது இரண்டு மூக்கும் முற்றாக அடைத்திருந்தது. அவளால் மூச்சே எடுக்க முடியவில்லை. நேற்று அந்தக் குளிரில்…

2 days ago

தொலைந்த எனை மீட்க வா…!-5

(5) உண்மை இத்தனை கசப்பாகவா இருக்கும். பற்களை கடித்துத் தன்னை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றவள், “போதும்... பிளீஸ்... இதற்கு…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 17/18

(17)   சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!-4

(4) கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல்…

5 days ago