Categories: Ongoing Novel

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47)

அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே இருக்க, ஜெயராமனும் சற்றுக் குழம்பித்தான் போனார். சட்டத்தரணி மூலம், அவனோடு தொடர்பு கொள்ள முயல, அவன் டொரன்டோவில் இல்லை என்கிற செய்திதான் கிடைத்தது. ஏதோ கார் பந்தயத்திற்காக ஜேர்மணி சென்றுவிட்டான் என்று அறிந்து பெரும் எரிச்சல் கொண்டார் ஜெயராமன். இங்கே பற்றி எரிகிறது. அதைப் பற்றிய அக்கறையில்லாமல் குதுகலமாகப் போட்டிக்குச் சென்றுவிட்டானா… எரிச்சலோடு எண்ணியவராக, அவன் வரும் வரைக்கும் அமைதி காக்கலாம் என்று பொறுமையாக இருந்தார்.

மேலும் இரண்டு மாதங்கள் கடந்த பின்னும் அவனிடமிருந்து எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்றதும், சட்டத்தரணி மீண்டும் அவனோடு தொடர்பு கொள்ள முயல, அப்போதும் கார்ப்பந்தயம் என்று அவுஸ்திரேலியாவில் இருப்பதாகத் தகவல் வந்தது.

சட்டத்தரணியும் உடனே வந்து கையெழுத்திட்டால், விவாகரத்துப் பெறுவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளலாம் என்று கூற, முடிந்த வரையில் விரைவாக டொரன்டோ வந்து அவர்கள் கேட்கும் கையெழுத்தைப் போடுவதாக அவன் வாக்குக் கொடுக்க, மீண்டும் விவாகரத்துக்காகக் காலதாமதம் ஏற்பட்டது.

அது ஒருவகையில் மீநன்னயாவிற்கு நிம்மதியைத்தான் கொடுத்தது.

அன்று ஒரு வேகத்தில் அவனிடம் விவாகரத்துக் கேட்டாள்தான். தந்தை விவாகரத்துப் பத்திரத்தை நீட்டியபோது கையெழுத்தும் போட்டாள்தான். ஆனால், அதற்குப் பிறகு அவள் பட்ட அவஸ்தை அவளுக்கு மட்டும்தான் தெரியும். என்னதான் அவனிடமிருந்து விவாகரத்தைப் பெற்ற பிறகும், அவள் சொன்னது போல இன்னொரு புதிய வாழ்க்கையை அவளால் அமைத்துவிட முடியும் என்று தோன்றவில்லை. அதுவும் குழந்தை வயிற்றில் வளர வளர, அவனுடைய அருகாமை அவளுக்குப் பெரிதும் தேவைப்பட்டது என்னவோ உண்மைதான். அதுவும் மருத்துவரிடம் செல்லும்போது, குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிக் கூறும்போதும் அதைக் கேட்க அதகனாகரன் அருகேயில்லையே என்கிற ஏக்கம் அவளையும் மீறி எழத்தான் செய்தது. இது என்ன தறிகெட்ட மனம் ஒரு நிலையில் இல்லாது அங்கும் பாய்ந்து இங்கும் பாய்கிறது… ஒரு பக்கம் அவனை மன்னிக்க முடியவில்லை. மறுபக்கம் அவன் வேண்டும் என்று துடிக்கிறிது… இது என்ன இரண்டு தோணியில் கால் வைத்தால் எப்படிக் கரை சேர்வது. இது புரியாமல் இல்லை. ஆனாலும் அவளையும் மீறி சண்டித்தனம் செய்யும் மனத்தை என்னதான் செய்வாள்.

இப்படியே மேலும் இரண்டு மாதங்கள் கடந்தன. இதற்கிடையில் வீட்டில் சும்மா இருந்தால், அவளுடைய மனநிலைதான் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொண்ட ஜெயராம், டொரன்டோவில் உள்ள தன் தொழிற்சாலை ஒன்றில் மீநன்னயாவிற்கு எளிமையாகச் செய்யக்கூடிய வேலை ஒன்றில் அமர்த்திவிட அது அவளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகவே இருந்தது.

அதுவும் முதன் முறையாக அவளுடைய வங்கிக் கணக்கில் அவள் உழைத்ததன் பெறுபேறு பணமாய்ச் சென்று விழ, அவளுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்ததை விடப் பலமடங்கு அதிகரித்துப் போனது.

தன் செலவுகளைத் தானே மேற்கொண்டாள். யாரிடமும் அது பெற்ற தந்தையாகவே இருந்தாலும், சென்று கையேந்தும் நிலை அவளுக்கு வரவில்லை. ஜெயராமனுக்கும் அதுதான் வேண்டும். எத்தனை நாட்களுக்கு அவள் பிறரின் பராமரிப்பில், அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பது. அவளுக்கென்று சுயமாய்ச் சிந்திக்கும் செயல்படும் வாய்ப்பு வேண்டுமே.

அவர் எதிர்பார்த்தது போலவே தன் முழுக் கவனத்தையும் வேலையில் காட்டியவள், மெல்ல மெல்லத் தன் கூட்டைவிட்டு வெளியே வரத் தலைப்பட்டாள். அதன் விளைவு, தந்தையிடம் வந்து, தனக்காகத் தனி வீடு பார்த்துக் கொடுக்கும் படி கேட்க, மாதவி ஆடித்தான் போனார்.

“என்னது… தனி வீடா… ஏன் உன்னை நாங்கள் பார்த்துக்கொள்ள மாட்டோம் என்று நினைத்தாயா, இல்லை உனக்கொருத்திக்காகச் சமைத்துக் கொட்டுவதுதான் சிரமம் என்று நினைத்தாயா… உன்னை எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நான் பார்க்கிறேனே தவிர, ஒரு போதும் பிறத்தியாளாக, நான் பார்த்ததில்லையே. ஆனால் நீ…” என்று விழிகள் கலங்கக் கூற, ஓடி வந்து அவருடைய கரங்களைப் பற்றிய மீநன்னயா,

“ஐயோ…! நீங்கள் நினைப்பது போல இல்லைமா… சத்தியமாக நான் தனி வீடு கேட்டதற்குக் காரணமே வேறு…. தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்வார்கள் இல்லையா… எனக்கு இப்போது இருபத்திரண்டு வயதுமா… எத்தனை நாட்களுக்குத்தான் உங்களுக்குப் பாரமாக, உங்கள் நிழலிலேயே இருப்பது… நான் தைரியமாக இந்த உலகை எதிர்கொள்ள வேண்டாமா… எப்போதும் இந்தப் பாதுகாப்பான கூட்டிலிருந்தால், தைரியமும் தன்னம்பிக்கையும் எப்படி வரும் சொல்லுங்கள்… இப்போது எனக்கும் ஒரு குழந்தை வரப்போகிறதேமா… நான் தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்தானே, அதுவும் என்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும்…” என்றவள், தந்தையைப் பார்த்து,

“தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்பா… எனக்கென்று இப்போது உழைப்பிருக்கிறது… நிச்சயமாக என்னால் சுயமாக வாழ முடியும்… புரிந்த கொள்ளுங்கள்…” என்று கெஞ்ச, ஒரு கணம் தன் மகளைப் பெருமையுடன் பார்த்த ஜெயராமன்,

“உன்னுடைய தன்னம்பிக்கை, தைரியத்தைக் கண்டு சத்தியமாக மகிழ்ச்சி அடைகிறேன்மா… இதற்காகத்தான் உன்னை வேலைக்கு அழைத்துச் சென்றதே… ஆனால் பார்… நீ தனி ஒருத்தியாக இருந்திருந்தால், உன் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்திருப்பேன். ஆனால், இப்போது நீ ஒரு குழந்தையைச் சுமக்கிறாய்… இந்த நிலையில் தனியே இருப்பது சரி வராது… இந்தக் குழந்தை சுகமாக உன் கரங்களில் கிடைக்கும் வரைக்கும் இங்கேயே இரு… ஓரளவு உன்னால் தனியாகச் செயல்பட முடியும் என்கிற போது, தனி வீடு பார்க்கலாம் சரியா…” என்றுவிட, அதுவும் அவளுக்கு நியாயமாகத்தான் பட்டது. அதனால் மறுக்காது தந்தையின் விருப்புக்கு ஒத்துக்கொள்ள, அதற்குப் பிறகு காலங்கள் தம்பாட்டுக்கு நகரத் தொடங்கின.

மீநன்னயாவுக்கு ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. வயிறு நன்றாகவே வெளியே தெரியத் தொடங்கியிருந்தது. குழந்தை வளர வளர இடுப்பெலும்புகள் விலகத் தொடங்கியதால் ஏற்பட்ட வலியில், அவளுக்கு நடப்பதுதான் மிகச் சிரமமாகிப் போனது. ஆனாலும் வேலைகளைப் பார்த்து ஆகவேண்டுமே.

அன்று விடிந்ததும், எழுந்தவளுடைய வயிறு ஆடி அடங்க, ஒரு வித புன்னகையோடு வயிற்றை வருடிக் கொடுத்தவள்,

“ஹாய் பேபி… எப்படி இருக்கிறீர்கள்… இன்று சனிக்கிழமை… எனக்கும் வேலை கிடையாது… அதனால் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு நீங்கள் துள்ளிக் குதிக்கலாம்… இன்று முழுவதும் உங்கள் அசைவைக் கண்டு நான் மகிழ்வேன் சரியா…” என்று எழுந்தமர்ந்தவாறு தன் குழந்தையுடன் பேசியவளுக்குச் சடார் என்று முகம் வாடிப்போனது.

எத்தனை அழகாகக் குழந்தை வயிற்றில் வளர்கிறது. எப்படியெல்லாம் துள்ளிக் குதிக்கிறது. ஆனால் இதைக் கண்டு ரசிக்க அதகனாகரன் இல்லையே… அவன் மட்டும் ஏமாற்றாமல் இருந்திருந்தால், அவர்களின் வாழ்க்கை எத்தனை அழகாகப் பயணிக்கும்… என்று எண்ணியவளுக்கு அவளையும் மீறி விழிகள் கலங்கிப் போயின. ஏழு மாதங்களாயிற்று அவனைப் பார்த்து. எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்கிற தகவல்கள் மட்டும் எப்போதாவது வரும். அனால் டொரன்டோ மட்டும் அவன் வரவில்லை. வந்தால் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போடவேண்டும் என்பதால்தான் வராது இருக்கிறானோ. ஒரு பக்கம் அவளையும் மீறிப் புன்னகை மலரவே செய்தது.

“பார்க்கலாம் பேபி… உன் அப்பா எந்த எல்லை வரை ஓடுகிறார் என்று… “ என்று நினைத்தவள், எழுந்து குளித்துவிட்டு வெளியே வந்தபோது முன்னறையில் பெரும் சத்தத்துடன் மாதவி யாருடனோ பேசிக்கொண்டிருக்க, இவளுடைய புருவங்கள் நெரிந்தன.

இதுவரை இத்தனை சத்தமாக மாதவி பேசி அவள் கேட்டதில்லை. அதுவும் இத்தனை கோபமும் அழுகையுமாகப் பேசி இவள் கண்டதேயில்லை. என்னவாயிற்று அம்மாவுக்கு. யாரோடு இத்தனை கோபமாகப் பேசுகிறார்கள்… குழப்பத்துடன் சிரமப்பட்டுப் படிகளில் இறங்கி வந்தவள், முன்னறை நோக்கித் திரும்ப, அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்துபோய் நின்றாள் மீநன்னயா.

அங்கே, நெடுநெடு என்கிற உயரத்தைச் சற்றுக் குறைப்பதுபோலக் கால்களை அகட்டிப் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை விட்டவாறு முதுகு காட்டி நின்றிருந்தான் அதகனாகரன். அவனுக்கு முன்பாக அழுகையுடன் மாதவி நின்றிருக்க ஜெயராமன், சற்றுத் தள்ளி யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

இவளைக் கண்டதும், உடனே தன் முகத்தில் தெரிந்த யோசனையை ஒதுக்கிய ஜெயராமன், புன்னகையைத் தேக்கி,

“குட் மார்ணிங் பேபி… ஹௌ இஸ் யுவர் ஸ்லீப்…” என்று கேட்க, இவளோ தந்தையின் கேள்வியைக் காதில் வாங்காதவளாகத் தனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்த அதகனாகரனையே இமைக்காது வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஜெயராமனின் குட் மார்ணிங்கில் மாதவி சுயத்திற்கு வந்தவராகத் தன் கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு உதடுகளில் வலிய ஒரு புன்னகையைத் தேக்கி,

“வா… வாம்மா… தே… தேநீர் குடிக்கிறாயா…” என்று கேட்க, அதுவரை மீநன்னயாவிற்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தவனின் உடலில் ஒரு வித இறுக்கமும் சிலிர்ப்பும் ஓடியது போல, ஒரு கணம் தேகம் நடுங்கி அடங்கியது. அவனுடைய மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதைக் கூடச் சற்றுத் தள்ளியிருந்தவர்கள் சுலபத்தில் கண்டிருப்பார்கள்.

ஒரு வித ஆவலும், தாபமும், தாகமும் போட்டிபோட இதயம் படு வேகமாகத் துடிக்க அதை அடக்கும் வழி தெரியாமல், மெதுவாகத் தன்னவளின் பக்கமாகத் திரும்பிய அதகனாகரனைக் கண்டு மேலும் அதிர்ந்துதான் போனாள் மீநன்னயா.

இது அவளுடைய அதகனாகரனா என்ன…? இவனுக்கு என்னவாயிற்று. முன்பே அவன் தாடி வைத்திருந்தான்தான். ஆனால் அதை அளவாக வெட்டி மிகக் கம்பீரமாக இருப்பான். ஆனால் இப்போது மார்புவரை தாடி வளர்த்திருந்தான். தலைமுடி வெட்டியதற்கான அடையாளமேயில்லை. முன்பு உடல் இறுகித் திடகாத்திரமாக இருப்பான். இப்போது மெலிந்து பார்பப்தற்கே நோயுற்றவன் போலப் பரிதாபமாக இருந்தான். அதைத்தான் விட்டுவிட்டாலும் அவன் முகத்தில் இருந்த காயங்கள்… என்ன ஆயிற்று இவனுக்கு. சமீபத்தில்தான் எங்கோ விபத்தில் சிக்கியவன் போல, இடது பக்க நெற்றியிலிருந்து வளைவாகக் கன்னம் வரைக்கும் நீண்ட தையல் போடப்பட்டிருந்தது. கூடவே வலது கண்ணுக்குக் கீழேயும் நான்கு தையல் போட்டதற்கான அடையாளம்…

அதைக் கண்டதும் அச்சத்தில் பயப்பந்தொன்று நேராகச் சென்று அவளுடைய உச்சந்தலையில் அடிக்க, முகம் வெளிறக் கால்கள் பலமிழந்து போகச் சரியத் தொடங்கியவளை விரைந்து சென்றும் தாங்கிக்கொண்டானில்லை அதகனாகரன். எந்த மாற்றமும் இல்லாது, பான்ட் பாக்கட்டிற்குள் கைகளை விட்டவாறு சக்தியிழந்து சரியத் தொடங்கியவளைத்தான் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான். நல்லவேளை ஜெயராமன் சுயத்திற்கு வந்தவராய்ப் பாய்ந்து சென்று தன் மகளைத் தாங்கி அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர வைக்க, அப்போதும் அசையாமலே மீநன்னயாவை வெறித்தக்கொண்டிருந்தான் அதகனாரகன். விழிகளோ இமைப்பொழுதும் மூடவில்லை. மாறாக, அவளையும் அவள் வயிற்றையுமே நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தன.

எத்தனை நாட்களாயிற்று அவளைப் பார்த்து. எத்தனை முறை அவளைப் பார்க்க ஏக்கம் கொண்டான். அதே வேளை பார்க்க அச்சம் கொண்டு ஒதுங்கியும் நின்றுகொண்டானே. இப்போது பார்த்தாகிவிட்டது. ஆனால் அவன் விரும்பியது போல நெருங்க முடியவில்லை தொட முடியவில்லை. அணைக்க முடியவில்லை… ஏதோ அன்னியப்பட்டது போன்ற உணர்வில் தள்ளியே நிற்கவேண்டிய நிலை…

அதே நேரம் ஜெயராம், மீநன்னயாவைத் தட்டிக்கொடுத்து,

“என்னம்மா… என்ன செய்கிறது… ஏதாவது குடிக்கப் போகிறாயா?” என்று அன்பாகக் கேட்க, இப்போது ஓரளவு தன்னைச் சமாளித்தவளாக,

“இல்லைபா… எனக்கொன்றுமில்லை… கொஞ்சம் தலை சுற்றிவிட்டது…” என்றவள், கண்களில் கண்ணீர் நிறையச் சற்றுத் தள்ளி நின்றிருந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த நேரம் வயிற்றிலிருந்த சிசுவும் தந்தையின் அருகாமையை உணர்ந்துகொண்டதோ, திடீர் என்று அவள் வயிற்றில் துள்ளிக் குதிக்க, சுயத்துக்கு வந்தவளாய், ஆழ மூச்செடுத்தவள், மேடிட்டிருந்த வயிற்றில் கரத்தைப் பதித்தவாறு, மீண்டும் அதகனாகரனை ஏறிட்டாள். அவனும் அவள் வயிற்றின் அசைவை உணர்ந்துகொண்டவன் போல, நம்பமுடியாத பாவனையுடன், ஏறி இறங்கிய அவளுடைய வயிற்றைத்தான் ஒரு வித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தக் கணமே அவளை நெருங்கித் தன் சிசுவின் அசைவை அறியவேண்டும் என்கிற வேகம் பிறக்க அதைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான். அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது அதை உணர்ந்து கொள்ள… பெரும் ஏக்கம் பூதாகரமாகத் தாக்க, அங்கிருந்தவர்களைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்தியவன், அங்கிருந்து வெளியேற, மீநன்னயாவும் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

(48)

மீநன்னயாவிற்கு இன்னும் நம்பமுடியவில்லை. உண்மையாகவே அதகனாகரன் வந்திருக்கிறானா என்ன? வந்தவன், இவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே. குறைந்தது குழந்தையைப் பற்றியாவது கேட்டிருக்கலாமே… தவிப்புடன் மாதவியைப் பார்த்தவள்,

“அவருக்கு என்னவாயிற்று… ஏன் முகத்தில் காயம் இருக்கிறது?”’ என்று பெரும் வலியுடன் கேட்க, தன்னை மறந்து விம்மிய மாதவி, பதில் கூற முடியாமல், இல்லை பதில் கூறப் பிடிக்காமல் நிமிர்ந்து சற்றுத் தள்ளியிருந்த தன் கணவனைப் பார்த்துவிட்டு, அங்கே இருக்க முடியாமல், வெளியேற, மீ நன்னயாவோ குழப்பத்துடன் தன் தந்தையைப் பார்த்து,

“என்னாயிற்று… நான் வரும்போது அம்மா சத்தமாகப் பேசினார்களே… ஏன்…” என்றாள் கலக்கத்துடன். தன் மகளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த ஜெயராமன்,

“ப்ச்.. அதைப் பற்றி நீ ஏன் வருந்துகிறாய்… விடு… எல்லாம் தானாகச் சரியாகிவிடும்… அது சரி… நீ சாப்பிட்டுவிட்டாயா…? வா சாப்பிட…” என்று அழைக்க, மீநன்னயாவிற்குப் பசி சுத்தமாகத் தொலைந்து போனது.

அவளுக்கு அப்போதே, அந்தக் கணமே அதகனாகரனைப் பார்க்கவேண்டும், என்கிற வெறி எழ, சிரமப்பட்டு இருக்கையை விட்டு எழுந்தவள்,

“இல்லைபா… நான் பிறகு சாப்பிடுகிறேன்…” என்று விட்டு வெளியே வர, வாசல் கதவு திறந்திருந்தது. வெளியே எட்டிப் பார்க்க அதகனாகரன் இப்போதும் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களை வைத்தவாறு வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தான்.

அப்போதே அவனுடைய காயத்திற்கான காரணம் அறியவேண்டும் என்கிற வேகம் பிறக்க, அவனுக்கு அருகே சென்றவள்,

“உங்கள் முகத்தில் காயங்கள் எப்படி வந்தன…” என்று கேட்கச் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தான் அதகனாகரன். அங்கே நின்றிருந்த மீநன்னயாவைக் கண்டு மெல்லியதாகப் புன்னகைத்தவன், மீண்டும் வெளியே பார்த்தவாறு,

“சின்ன விபத்து…” என்றான் மென்மையாக..

“வி… விபத்தா… என்ன விபத்து… எப்படியாயிற்று… ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை…” என்று கோபமும் பதட்டமுமாகக் கேட்க, அவனிடம் ஒரு கணம் அசைவு நின்று போனது. சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,

“ஏன் சொல்லவேண்டும்…?” என்றான் அடுத்து. அதைக் கேட்டதும் கோபம் கொண்டவளாக,

“ஏன் சொல்லவேண்டுமா… உங்களுக்கிருக்கும் குடும்பம் இவர்கள்தானே… இவர்களுக்கு அறியும் உரிமை கிடையாதா…?” என்று ஆத்திரத்துடன் கேட்கச் சடார் என்று அவள் பக்கமாகத் திரும்பி அழுத்தமாகப் பார்த்தான் அதகனாகரன்.

“அந்த உரிமை உனக்குக் கிடையாதா…?” என்று நெஞ்சம் கனக்கக் கேட்டவனுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டது மனதில் தோன்ற முகம் கசங்கிப் போனது.

அன்று அவளுடைய கையெழுத்தோடு, விவாகரத்துப் பத்திரத்தைக் கண்டபோது ஏற்பட்ட வலி, வேதனை இன்றுவரை இம்மியும் குறையாது அப்படியேதானே இருக்கிறது. இன்னும் அந்த ரணம் மாறாமல் வலிக்கச் செய்கிறதே.

இப்போது கூட அவளை விட்டுத் தள்ளியிருப்பதே பெரும் வலியைக் கொடுக்கிறதே. இந்த நிலையில் எப்படி விவாகரத்தைக் கொடுப்பான். அதுவும் அவள் குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அவள் யாரோ தான் யாரோ என்று எப்படி வாழ்வான். நாளை அவனுடைய குழந்தையைச் சந்திப்பதற்கான நேரத்தை ஏதோ ஒரு சட்டம்தானே நிர்ணயிக்கும். அத்தகைய கொடிய வாழ்க்கை அவனுக்குத்தான் எதற்கு. அதை விட அவன் உயிரை விடலாமே. அந்த நினைவில் உடல் இறுகிப்போக நின்றிருந்தவனை ஏறிட்ட மீநன்னயா,

“கேட்கிறேனே… இப்போது இந்தக் காயங்கள் எப்படி இருக்கின்றன… வலி குறைந்து விட்டதா…” என்று தன்னை மறந்த பதைபதைப்போடு கேட்க, மீண்டும் அவளை விடுத்துப் பார்வையைத் திருப்பியவன்,

“அதை உரிமை உள்ளவர்கள் கேட்பார்கள் மீநன்னயா… நீ எதற்காகக் கேட்கிறாய்…” என்று அவன் கிண்டலுடன் கேட்க, இப்போது மீநன்னயாவிற்கும் கோபம் வந்தது.

“ஏன் எனக்கு அந்த உரிமையில்லையா…” என்று கேட்க, இப்போது பற்கள் தெரியச் சிரித்தான் அதகனாகரன். பின் அவளைத் திரும்பிப் பார்த்து,

“என்ன…? உனக்கு உரிமை இருக்கிறதா? அதுவும் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டபின்னும் அதே உரிமை இருக்கும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்க ஒரு கணம் வாயடைத்துப் போனாள் மீநன்னயா.

விவாகரத்துப் பெறுவதற்காக கையெழுத்துப் போட்டாள்தான். ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லையே. அதற்கு அவனும் அல்லவா கையெழுத்துப் போடவேண்டும்.

“நான்தான் கையெழுத்துப் போட்டேன். நீங்கள் ஒன்றும் போடவில்லையே…” என்று அவள் எரிச்சலுடன் கூற, இப்போது அவளை அழுத்தமாகப் பார்த்த அதகனாகரன்,

“அதற்கான பதிலை ஏற்கெனவே உனக்குச் சொல்லிவிட்டேன்… நான் உயிரோடு இருக்கும் வரை உனக்கு விவாகரத்துக் கொடுக்க மாட்டேன்… நான் சாகும் வரை நீ என் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்…” என்று அறுத்து உறுத்துத் தெளிவாகச் சொல்ல, இவளுக்குள் எதுவோ சுறுசுறு என்று ஏறியது. எரிச்சலுடன் பற்களைக் கடித்தவள்,

“அது சரி… அலைகள் ஓய்ந்தபின்தான் குளிக்க முடியும் என்றால், அது இந்த ஜென்மத்தில் நடக்காது…” என்றாள் மீநன்னயா பெரும் எரிச்சலோடு.

“ஏன் நடக்காது… சுனாமி வரும் போது கடல் அமைதியாக இருக்குமாம் நன்னயா… உனக்கும் அப்படி ஒரு காலம் வரும்… அப்போது தாராளமாகக் குளித்துக் கொள்…” என்றுவிட்டு அதற்கு மேல் அவளுடைய முகத்தைப் பார்க்காமல் கடகடவென்று உள்ளே சேல்ல முயல, ஆத்திரத்துடன் அவனை வெறித்தவள்,

“எதற்கு அந்தச் சுனாமியில் மூழ்கிச் சாகவா… ஏற்கெனவேதான் என்னை அதற்குள் இழுத்து என் வாழ்க்கையையே பாழாக்கிவிட்டீர்களே… இன்னும் என்னை நாசமாக்க என்ன இருக்கிறது…?” என்றாள் சுள்ளென்று. நடந்து சென்று கொண்டிருந்தவன், நின்று நிதானித்து அவளை நோக்கித் திரும்பி, உற்றுப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, அவளைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு உள்ளே செல்ல, இவளோ அந்தப் புன்னகைக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பிப் போய் நின்றாள்.

ஆனாலும் இவளுக்கு மனம் ஆறவில்லை. இவன் எத்தகைய விபத்தில் சிக்கினான். எப்படி அந்த விபத்து நடந்தது. அந்தக் காயங்கள் நன்றாகவே ஆறிவிட்டனவா…. அதை அறிந்து விடும் வேகத்தில் மாதவியைத் தேடிச் செல்ல, அவர் தன் அறைக்குள் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போனாள் மீநன்னயா. இரண்டெட்டில் அவரை நெருங்கி,

“அம்மா… ஏன் அழுகிறீர்கள்…” என்று கேட்க, அதற்கு மேல் முடியாதவராகப் பாய்ந்து வந்தவளை அணைத்து, ஓ என்று கதறிவிட்டார் மாதவி. மீநன்னயாவும் குழம்பிப்போனவளாக, அவருடைய முதுகை வருடிக் கொடுத்து,

“என்னாச்சுமா… எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்… தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை…” என்று அவள் தட்டிக் கொடுக்க, விம்மியவாறு அவளிடமிருந்து விடுபட்ட மாதவி,

“நான் என்னத்தைச் சொல்வேன் தங்கம்… இத்தனை பெரிய விபத்து நடந்திருக்கிறதே. ஒரு வார்த்தை நமக்குத் தெரிவித்தானா… ஐயோ…! இந்தப் பாழாய்ப் போன விளையாட்டு வேண்டாம் என்று எத்தனை முறை அவனிடம் கெஞ்சினேன். பிடிவாதமாகப் போய், மூன்று முறை விபத்தில் சிக்கி உயிர் தப்பி வந்தான்மா… இப்போதும் அதே போல… முகத்தைப் பார்த்தாய் அல்லவா…. எப்படிச் சிதைத்து வைத்திருக்கிறான் பாவி பாவி… இப்படி மறைத்துவிட்டானே… நான் ஒருத்தி சாகாமல் உயிரோடுதானே இருக்கிறேன்… அவனை இப்படிப் பார்க்க முடியவில்லையே… திருமணம் முடித்தால் நாசமாய்ப்போன இந்த விளையாட்டிலிருந்து வெளியே வருவான் என்று நினைத்தேன்… ஆனால் அதற்கு மாறாக இன்னும் வெறியோடு விளையாடுகிறானே. நான் என்ன செய்வேன்… மீனா… என் மூத்த மகன் அவன்தான்மா… அவனுக்கு ஒன்று நடந்தால், அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லையே… நான் என்ன செய்வேன்…” என்று தன் தம்பியின் நிலையை நினைத்து நினைத்து அழ, மீநன்னயாவிற்கு அதகனாகரனின் மீது அதீத கோபம் வந்தது.

கூடப்பிறந்தவளைக் கதறவைத்து அப்படி ஒரு விளையாட்டு அவனுக்குத் தேவையா. கண்ணோரத்தில் பட்ட காயம், கண்ணில் பட எத்தனை நேரமாகும்… இவனுக்கு ஏன் புத்தி இப்படிப் போகிறது. ஒருத்தன் உயிரைப் பணயம் வைத்து இப்படியா முட்டாள்தனமான விளையாட்டில் ஈடு படுவான். யாருக்குக் காட்ட. உயிர் போனால், அந்த வெற்றியை வைத்துக் கரைத்தா குடிக்க முடியும்…? எப்போதும் வெறும் காயத்தோடு மட்டும்தான் தப்புவான் என்று ஏதாவது இருக்கிறதா… நினைக்கும் போதே அவளையும் மீறி உடல் நடுங்கத் தொடங்கியது.

உடனே மாதவியை விட்டு விலகியவள், ஓட்டமும் நடையுமாக அதகனாகரனின் அறை நோக்கிச் சென்று கதவைக் கூடத் தட்டாமல் சடார் என்று திறக்க, அங்கே அவனும் படுக்கையில் மல்லாக்காக விழுந்து முகட்டைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்படி அவள் திடீர் என்று உள்ளே வருவாள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை போல. புருவங்கள் சுருங்க அவளை ஏறிட்டவன், அவள் முகம் கிடந்த கிடப்பைப் பார்த்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன் போல எழுந்தமர்ந்து,

“என்னாச்சு…” என்றான் மெல்லிய கலக்கத்துடன்.

“இது என்ன பைத்தியக்காரத் தனம்…” என்று வந்த வீச்சுக்கு சீற, அதகனாகரனோ புரியாமல் அவளைப் பார்த்து,

“பைத்தியகாரத்தனமா… என்ன சொல்கிறாய்…” என்றான் குழப்பத்துடன்.

“நடிக்காதீர்கள்… ஏற்கெனவே உங்கள் நடிப்பைப் பார்த்து ஏமாந்தது போல இனியும் ஏமாறுவேன் என்று நினைக்காதீர்கள். நான் எதைப் பற்றிக் கேட்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்..” என்று பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப, அதகனாகரனோ புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்து,

“நீ என்ன உளறுகிறாய் என்று சத்தியமாகப் புரியவில்லை… எதுவாக இருந்தாலும் தெளிவாகச் சொல்…” என்றான் அவன் பொறுமையிழந்தவனாக.

“அம்மா சொன்னார்கள்… இந்தக் காயங்கள் கார்பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் வந்ததாமே…” என்று தொண்டை அடைக்கக் கேட்க, அவனோ, அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தவன் போல,

“ஓ… இதுவா…” என்றான் அலட்சியமாக. பின் எழுந்து அவளை நோக்கிச் சென்று, அவளுக்கு அருகேயிருந்த இருக்கையை இழுத்துப் போட்டுவிட்டு,

“உட்கார்…” என்றான் மென்மையாக. அவளோ விறைப்புடன் அவனைப் பார்த்து,

“சொல்லுங்கள்… இந்தக் கார் பந்தயம் உயிருக்கும் உலைவைக்கும் என்று தெரிந்து எதற்காக அதில் ஈடு படுகிறீர்கள்…” என்று குறையாத ஆத்திரத்துடன் கேட்க, .

“எதற்காக ஈடுபடுகிறேன் என்றால்? பிகாஸ் தட் இஸ் மை ப்ரஃபஷனல்…” என்று அவன் முடிக்கவில்லை,

“ப்ரஃபஷனல்… மண்ணாங்கட்டி… இப்படி உயிரைப் பணயம் வைத்துத்தான் உங்கள் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டுமா…” என்றாள் பெரும் எரிச்சலுடன்.

அவனோ அவளுடைய பதட்டத்தையும், பயத்தையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டது போலத் தெரியவில்லை. தன் பாட்டிற்கு நடந்து சென்றவன், அங்கிருந்த குவளையில் தண்ணீரை ஊற்றி வந்து அவளிடம் நீட்டி,

“முதலில் தண்ணீரைக் குடி நன்னயா… பதட்டம் அடங்கும்… உன் பதட்டம் நம் குழந்தைக்கு நல்லதில்லை…” என்று கூற ஆத்திரத்துடன் அந்தக் குவளையை வாங்கி ஓங்கித் தரையில் விசிறி அடித்துவிட்டு, சற்றும் சீற்றம் அடங்காதவளாக அவனை நெருங்கி அவனுடைய சட்டையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து,

“நான் என்ன கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்… உங்களுக்கு உங்களுடைய உயிர் அத்தனை அலட்சியமாகப் போயிற்றா… கடவுளே உயிர் ஒரு முறை போனால் மறு முறை திரும்ப வருமா… ஏன் இப்படிச் செய்கிறீர்கள்…” என்று எல்லையில்லா வேதனையுடன் கேட்க, அவனோ உணர்ச்சியற்றுத் தன் சட்டையைப் பற்றியிருந்த அவள் கரத்தையே பார்த்தான். பின் அவளுடைய கரங்களைப் பற்றித் தன் சட்டையிலிருந்து விடுவித்து,

“எனக்காக நீ வருந்துவது ஆச்சரியமாக இருக்கிறது நன்னயா…” என்றான் மெல்லிய ஏக்கத்துடன். அதைக் கேட்டதும் அவனைப் பார்த்து முறைத்தவள்,

“நான் ஒன்றும் உங்களுக்காக வருந்தவில்லை… உங்கள் அக்கா அங்கே அழுதுகொண்டிருக்கிறார்கள்… கொஞ்சமாவது அவர்களைப் பற்றி யோசிக்கிறீர்களா… இப்படிக் காயங்களோடு அவர்களுக்கு முன்பாக வந்தால், எப்படி இருக்கும்…” என்று தான் அவனுக்காகக் கலங்குவதை மறைத்துக் கூற. அவனுடைய உதடுகளில் வலி நிறைந்த புன்னகை ஒன்று மலர்ந்தத.

“அதுதானே… நீ எங்கே வருந்தப் போகிறாய்… ஆனால் உனக்கொன்று தெரியுமா நன்னயா… எப்போது நீ கையெழுத்திட்ட விவாகரத்துப் பத்திரத்தைக் கண்டேனோ… அன்றே… நான் சாம்பலாகிப்போனேன்…” என்றவன் விழிகளில் எல்லையில்லா வலியைத் தேக்கி,

“இப்போதெல்லாம் தேடித் தேடிப் போட்டிகளில் கலந்துகொள்கிறேன்… அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா நன்னயா? அது நீதான்…” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள், பின் சீற்றத்துடன் அவனைப் பார்த்து முறைத்து,

“என்ன உளறல் இது… நீங்கள் சாவை விலைகொடுத்து வாங்குவதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றவளை வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்தவன்,

“நீ ஆசைப்பட்டது என்னிடமிருந்து விடுதலைதானே… அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் போதும் அவற்றைப் பற்றிக் கொள்கிறேன்? அவ்வளவுதான். இதற்காக நீ மகிழ்ச்சிதான் அடையவேண்டுமே தவிரக் கலங்கக் கூடாது” என்று அவன் கூற, மீநன்னயா கொதித்துப் போனாள்.

என்ன உளறுகிறான் இவன். அப்படியானால் அவளுக்காகவா அந்தப் போட்டிகளில் கலந்துகொள்கிறான்? அதற்கு முன் அந்தப் பக்கமே போனதில்லையாமா… ஏளனத்துடன் அவனைப் பார்த்தவள்,

“ஏன்… நான் உங்கள் வாழ்க்கைக்குள் வர முதல் நீங்கள் கார் பந்தயத்தில் பங்கேற்கவேயில்லையா… இல்லை விபத்துகளில்தான் சிக்கவில்லையா. சொல்லப்போனால் இதற்கு முதல் மூன்று முறை விபத்துக்குள்ளாகி இருந்தீர்களே… அதுதான் உடல் முழுவதும் வடுக்களோடு சுத்தித் திரிகிறீர்களே… இப்போது என் பரிதாபத்தைச் சம்பாதிக்கத் தட்டையே திருப்பிப் போடுகிறீர்களா…” என்றவளை வருத்தத்தோடு பார்த்தான் அதகனாகரன்.

“பங்கேற்றேன்தான்… அப்போது பங்கேற்றதற்கும் இப்போது பங்கேற்பதற்கும் வித்தியாசம் உண்டு நன்னயா. முன்பு வெற்றி மட்டும்தான் என் குறிக்கோளாக இருந்தது. இப்போது உனக்கான விடுதலை குறிக்கோளாக இருக்கிறது… அதற்காக நானாகத் தற்கொலை செய்ய முயற்சிக்கிறேன் என்றெல்லாம் எண்ணிவிடாதே… நான் சிறந்த கார்பந்தைய வீரன்…. என் போட்டிக்கு முன்னால், எந்தத் தனிப்பட்ட விடயங்களும் உள் நுழையாது. முடிந்த வரை வெற்றியைத் தழுவுவது மட்டும்தான் என் நோக்கம்… அதே வேளை உன் ஆசைக்கும், உன் விருப்பத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறேன்… அவ்வளவுதான்… ஒரு வேளை உன் விருப்பம் நிறைவேறவில்லை என்றால், மீண்டும் முயல்வேன்… நிச்சயமாக முயல்வேன்… உனக்கான விடுதலையைக் கொடுப்பதற்காக முடிந்த அளவு முயல்வேன்… ஆனால்… நிச்சயமாக விவாகரத்துக் கொடுக்கமாட்டேன் நன்னயா. என்றவனை வெறித்தவள்,

“எதற்கு இந்தப் பிடிவாதம்… இதை விட விவாகரத்துக் கொடுத்தால் உங்கள் உயிராவது மிஞ்சுமே… இதோ பாருங்கள்… உங்களை நான் காதலித்தது உண்மை. அதையும் மீறி, நீங்கள் என்னை ஏமாற்றியதுதான் கண்முன்னால் வந்து நிற்கிறது… சத்தியமாக அதைத் தாண்டி உங்களை என்னால் ஏற்று வாழ முடியாது. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்… இந்த விஷப் பரிச்சை வேண்டாம்… விட்டுவிடுங்கள்…” என்றவளை ஏக்கத்துடன் பார்த்தான் அதகனாகரன்.

அவளிருக்கும் நிலையில், அவன் என்ன செய்தாலும் அது தவறாகத்தான் அவளுக்குத் தெரியப் போகிறது. இதில் எந்த விளக்கம் கொடுத்தும் பயனில்லையே… ஒரு பெருமூச்சுடன்,

“ஏற்கெனவே சொல்லிவிட்டேன்… நான் தவறு செய்திருக்கிறேன் என்று. இப்போது அந்தத் தவறைச் சரிப்படுத்தவும் விளைகிறேன்… ஆனால் அதற்கு நீ கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை என்றால் நான் என்ன செய்யட்டும்… எனக்கு வாழ வேண்டும் நன்னயா.. உன் கூட.. நம் குழந்தை கூட நீண்ட காலங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்… இதோ இப்போது இந்தக் கணம் கூட… உன்னை இந்தப் படுக்கையில் போட்டு விடிய விடிய நுகரவேண்டும் என்கிற வெறியே தோன்றுகிறது தெரியுமா… உள்ளே என்னென்னவோ சொல்கிறது… நன்னயா…. நான் உன்னை ஏமாற்றியதையும் மீறி, உன்னை நான் காதலிக்கிறேன்… முதன் முதலில் நான் பார்த்து ஆசைப்பட்டவளும் நீதான், காலம் முழுவதும் உன்னோடு வாழவேண்டும் என்று ஆசைப்பட வைத்தவளும் நீதான்… நீயில்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை… ஐ லவ் யு… ரியலி ரியலி ஐ லவ் யு. ஆனால் நான் என்ன சொன்னாலும் அதை நடிப்பாகத்தான் பார்ப்பாய் என்று எனக்குத் தெரிகிறது… அது உன் குற்றமும் அல்ல… மூத்தது கோணம் முற்றும் கோணம் என்பார்கள். அதுபோலத்தான்… முன்பு செய்த தவறு, இப்போது வரை என்னைத் தப்பாகவே காட்டுகிறது…” என்றவன் ஆழ மூச்செடுத்து,

“நீ கேட்ட விவாகரத்தை நான் கொடுக்கலாம்தான்… ஆனால் எனக்கு உன் மீதான உரிமை தொலைந்து போகுமே. கூடவே இன்னொரு ஆணை மணக்கும் அதிகாரத்தையும் உனக்குக் கொடுக்குமே… அப்படி நீ இன்னொருவனை மணந்தால்… அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை நன்னயா… என் குழந்தைக்கு இன்னொருத்தன் தந்தையாவதையும் காணும் சக்தியும் எனக்கில்லை… அதனால்தான் விவாகரத்துக் கொடுக்க நான் மறுக்கிறேன். அதே வேளை உனக்கு விடுதலை வேண்டுமானால், அதற்கு ஒரே வழி என் மரணம்… அதற்கான முயற்சிகள்தான் இது… உன்னைப் பிரிந்து வாழ்வதை விட… இது எனக்கு நிம்மதியைக் கொடுக்கும்… அது மட்டும் நிச்சயம்…” என்றவனை வெறித்தவள்,

“என்ன… இதைச் சொன்னதும் மனம் இரங்கி உங்களோடு வாழ வந்துவிடுவேன் என்று நினைத்தீர்களா. நிச்சயமாக இல்லை… ஒரு வேளை என் மனத்தை மாற்றத்தான் இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுக்கிறீர்கள் என்றால், அந்த முடிவை இப்போதே மாற்றிவிடுங்கள். இந்த ஜென்மத்தில் உங்களோடு சேர்ந்து வாழ மாட்டேன். தயவு செய்து என் பரிதாபத்தைச் சம்பாதிக்க இப்படியான வேலைகளைப் பார்க்காதீர்கள். அதற்கு நான் எடுபடவும் மாட்டேன். இதற்கு மேலும் அந்த வாகனங்களைத்தான் கட்டி அழப்போகிறீர்கள் என்றால் தாராளமாக அழுது கொள்ளுங்கள்… நான் கவலைப் படப்போவதுமில்லை” என்றவள் அதற்கு மேல் அவனோடு என்ன பேச்சு என்பது போல வெளியேற, கண்களில் கண்ணீர் தேங்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அதகனாகரன்.

What’s your Reaction?
+1
25
+1
3
+1
0
+1
0
+1
14
+1
6
Vijayamalar

View Comments

  • yerkanave padica kathai thaan irunthalum re run le padikirapovum kovam varuthu...yen ipadi vartaiye vidura meena? avan pannunathu thappu thaan athukunu ipadiya pesuvange?

    • தெய்வமே தனி ஒருத்தியா இருந்து ஹீரோக்கு ஆதரவா பேசி நொந்து நூடுல்சா போயிருந்தேன். என்னை காக்க வந்த தெய்வமே... நீங்களாச்சும் அவனுக்கு ஆதரவா பேசுறீங்களே.... எங்கா இந்த ஈரோயின் ஆர்மிங்க. பாருங்கயா பாருங்க... என்ற தளபதிய பாருங்க.

      • athe than ma...kovam verupu enna venum nalum irukattum ana setthu po nu epadi sollalam? apadi solli unmaiya nadantha santhoshama irupa la? vartaiye kottuna allave mudiyathe

        • அப்படி சொல்லுங்க. தீயினால் சுட்ட புன் உள்ளாறும். ஆறாது நாவினால் சுட்ட வடு. வள்ளுவனே சொல்லியிரக்கான். இந்த ஈரோயினி லூசுக்கு புரிஞ்சாதானே

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

13 hours ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…

4 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

6 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 23/24

(23) அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது…

1 week ago