Categories: Ongoing Novel

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 39/40

(39)

ஆயிற்று மீநன்னயா கனடாவில் கால்பதித்து ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தன. ஆனாலும் ஜெயராமனுக்கும் மாவிக்குமிடையில் திரைமறைவாய் எழுந்த சுவர் மட்டும் உடையவில்லை.

தன் அவசரத்தால், ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி மாதவியிடமும், தன் மனைவியிடம் தன் காதலைச் சொல்லாமல் மறைத்த குற்ற உணர்ச்சி ஜெயராமனிடமும் இருந்ததால் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்கப் பெரிதும் தயங்கினர். தவிர, முதலில் அந்தச் சுவரை யார் உடைப்பது என்கிற தயக்கம் இருவருக்குள்ளும்.

கனடா வந்த பின் மீநன்னயா மாதவியுடன் நன்றாகவே பொருந்திக்கொண்டாள். செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வது போலத் தான் பெற்ற மகளாகப் பார்த்துக்கொண்டாள் மாதவி. ஆனாலும் அவளைப் பார்க்கும்போதெல்லாம் மாதவிக்குள் மிகப் பெரும் தவிப்பு. அவருடைய அவசரப் புத்தியால்தானே அவள் வாழ்க்கை இப்படியானது. அவர் கொஞ்சம் சுதாரித்திருந்தால், தன் கணவன் அப்படித் தவறு செய்திருக்கமாட்டார் என்கிற நம்பிக்கை இருந்திருந்தால், தன் கணவன் இப்படிப் பெண்ணோடு சுற்றித் திரிகிறார் என்கிற செய்தியைக் கேட்ட அந்தக் கணம், அந்தப் பெண் யாராக இருக்கும் என்று ஆராய்ந்திருப்பார். குறைந்தது நேராகவே கணவனிடம் கேட்டும் இருந்திருப்பார். ஆனால் தந்தை கற்றுக்கொடுத்த பாடம், இது தவறுதான் என்று முடிவுசெய்யப் போதுமானதாக இருந்துவிட்டது,

அன்று ஐந்து முப்பதிற்கு எழுப்பொலி அடிக்கப் படுக்கையில் கிடந்த மாதவி மெதுவாக விழிகளைத் திறந்து திரும்பிப் பார்த்தார். கணவன் படுக்கும் இடம் வெறுமையாக இருந்தது. முன்பெல்லாம் அவளுடைய கையால் தேநீர் வாங்கிக் குடித்தபின்தான் படுக்கையை விட்டே எழுவார். அப்படி எழும்போது வயசுக்கு ஏற்றாட்பொல நடந்துகொள்வதும் கிடையாது. மாதவியை ஒரு வழி செய்தபின்தான் வெளியே விடுவார். இப்போது அவள் அருகே படுப்பதையே முற்றாக நிறுத்திவிட்டார். நினைக்கும்போதே ஏக்கம் பேரலையாக எழுந்தது.

மீண்டும் அந்தப் பழைய நாட்கள் போல வராதா என்கிற வேதனை பிறந்தது. வேளை கெட்ட நேரத்தில் அன்று அவளை அணைக்க அவர் ஆசை கொண்டது நினைவுக்கு வர, விழிகளில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

பெரும் வேதனையுடன் தயாராகிச் சமையலறைக்குள் புகுந்து தேநீர் வார்த்து முடிய ஜெயராம் உள்ளே வந்தார். மீண்டும் அவர் முகம் பார்க்க முடியாமல் சங்கடம் ஒட்டிக் கொண்டது. ஆனாலும் வார்த்த தேநீரை அவருக்கு அருகாமையில் தள்ளி வைக்க, ஜெயராமோ அதைத் தவிர்த்துவிட்டுத் தனக்கான தேநீரை வார்க்கத் தொடங்க, மாதவிக்குக் கண்கள் பொங்கிக் கொண்டு வந்தன. ஆனாலும், அந்த மௌனத்தை உடைக்கப் பிரியப்படாதவராக, மீநன்னயாவிற்கு வார்த்துக்கொண்டு சமையலறை விட்டு வெளியேற, சென்ற தன் மனைவியின் முதுகைத் திரும்பிப் பார்த்து வெறித்தார் ஜெயராம்.

பின் தேநீர் வார்ப்பதில் தன் கவனத்தைச் செலுத்தியவருக்கு மாதவி வார்த்த தேநீர் அவரை வா வா என்று அழைப்பது போலத் தோன்றியது. எரிச்சலுடன் அதை முறைத்துவிட்டுத் தன் வேலையில் கவனமாக, மீண்டும் அவர் கண் அந்தத் தேநீர் குவளையில் சென்று நிலைத்தது.

எத்தனை நாட்களாயிற்று அவள் கையால் தேநீர் குடித்து. அவரையும் மீறி நா உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ள, என்ன நினைத்தாரோ, அடுப்பை நிறுத்திவிட்டு யாராவது வருகிறார்களா என்று எட்டிப்பார்த்தார்.

நல்லவேளை யாரும் இல்லை. உடனே அந்தத் தேநீர் குவளையை எடுத்து ஒரு இழுவை இழுக்க, உச்சந்தலை முதல் தித்தித்தது தேநீர். அடுத்த கணம் அத்தனையையும் மறந்தவாறு தேநீரை ரசித்துக் குடித்துக்கொண்டு வெளியேற, மாதவியோ தன் கணவனின் இந்தத் தில்லுமுல்லுத் தெரியாமல் மீநன்னயாவின் அறையைத் தட்டிவிட்டுத் திறந்தார்.

மீநன்னயா அப்போதுதான் குளித்துவிட்டு வந்தாள் போலும், அவள் முகத்தில், நீர் முத்துக்கள் கொட்டிக்கொண்டிருந்தன.

அந்த அழகிய முகத்தைக் கண்டு அப்போதும் வியந்தவராக முகம் மலர, அவள் முன்னால் தேநீர் குவலையை நீட்ட, அதை வாங்கிக் கொண்ட மீநன்னயா,

“அம்மா… எனக்காக எதற்கு இங்கே எடுத்து வந்தீர்கள்… அழைத்திருந்தால் நானே வந்திருப்பேன் அல்லவா…” என்று உரிமையாகக் கடிந்துவிட்டு அவர் கரத்திலிருந்த தேநீர் குவளையை வாங்கிக் கொள்ள,

“இதில் என்ன சிரமம் எனக்கு.. சொல்லப்போனால் மகிழ்ச்சிதான்மா… செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் போல…” என்றவரின் விழிகள் கலங்கிப்போக, அவசரமாகத் தன் கரத்திலிருந்த குவளையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுக் கலங்கி நின்ற மாதவியின் கரத்தைப் பற்றி,

“அம்மா… இது என்ன… நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்… அதைப்பற்றியே நினைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி… தவிர, உங்களிடம் எந்தத் தப்பும் இல்லையே… உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பேனோ என்னவோ… எந்தப் பெண்ணும் தன் கணவனை இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்தால், கைக்கட்டி வாய் பொத்தி நிற்கமாட்டார்கள்… என்னால் உங்கைளைப் புரிந்து கொள்ள முடிகிறது…” என்று எப்போதும் போல அப்போதும் கூறி மாதவியைச் சமாதானப்படுத்த முயல, பெரும் வேதனையுடன் தன் முன்னால் நின்றிருந்தவளை ஏறிட்டு,

“நீ என்னதான் சொன்னாலும், என் மனம் ஆறமாட்டேன் என்கிறதே… இந்தப் பாவத்திற்கு மன்னிப்பு என்பது கிடையாதுமா… நான் உன் வாழ்க்கையை மட்டுமல்ல, என் தம்பியின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டேன். நான் மட்டும் கொஞ்சம் சுதாரித்திருந்தால், நிச்சயமாக இப்படி ஒரு தப்பை அவன் செய்திருக்க மாட்டான்… இந்தப் பிரச்சனையை என் கையில் விடு என்று அவன் சொன்னபோது நான் தடுத்திருக்கவேண்டும். என் பிரச்சனை நான் அதைக் கையாள்கிறேன் என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக அவன் அதை மீறியிருக்கமாட்டான்…. முடிந்தால் என்னை மன்னித்தது போல அவனையும் மன்னிக்க முயற்சிசெய் அது போதும்..” என ஏக்கம் நிரம்பிய குரலில் அவர் கேட்க, மீநன்னயாவின் முகம் இறுகிப் போனது.

மன்னிப்பா… அதகனாகரனையா… அவனை இந்த ஜென்மத்தில் மன்னிக்க முடியுமா… நம்பினாளே… முழுதாக நம்பினாளே. தனக்கு நல்லதுதான் செய்வான் என்று உறுதியாக நம்பினாளே… அந்த நம்பிக்கையில்தானே அவனை மணந்தாள். அந்த நம்பிக்கையில்தானே காயம்பட்ட அந்தத் தேகத்தை அவனுக்குக் காட்டினாள். அந்த நம்பிக்கையில்தானே அவளைத் தொட விட்டாள். எல்லாம் முடிந்த பின், நான் நீ நினைப்பவனல்ல என்று பெரிய குண்டைப் போட்டு அவளை உயிரோடு அல்லவா கொன்றுவிட்டான். எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம். அவனை எப்படி மன்னிப்பது…? பதில் கூறாமல் மௌனம் சாதிக்க மாதவிக்கும் புரிந்துபோனது மீநன்னயாவின் நிலை.

“உன்னுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறதுமா… அதகனாகரனுக்கு நான் என்றால் உயிர். ஜெய் என் வாழ்க்கையில் நடந்த கசப்புகளை உனக்குச் சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது என் தந்தை அவரோடு வேலை செய்யும் ஒருத்தியோடு தொடர்பில் இருப்பது தெரிந்த போது, என் அம்மா அடைந்த ஏமாற்றம் வலி… அதற்குப் பிறகு நாம் பட்ட சிரமங்கள்… சொல்லில் அடங்காது நன்னயா… உனக்கொன்று தெரியுமா, ஆகரன் இன்றுவரை எங்கள் அம்மாவின் பெயரைத்தான் ‘லாஸ்ட் நேம்’ ஆகப் போடுவான்… அவனுக்கு அப்பா இப்படி ஒரு துரோகத்தைச் செய்ததை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்தக் காயம் இன்றுவரை ஆறாத வடுவாகத்தான் அவன் மனதில் இருக்கிறது. ஜெயும் இப்படி ஒரு பெண்ணோடு சுற்றுவது தெரிந்ததும், சரியான பாதையில் சிந்திக்க அவனையும் விடவில்லை, என்னையும் விடவில்லை. ஆனால் எத்தனை பெரிய மகத்தான தவறு அது என்று இப்போதுதான் தெரிகிறது… மீநன்னயா… இதை உன்னிடம் கேட்கும் தகுதி எனக்கில்லை தான். இருந்தாலும், என் தவறை மன்னித்தது போல அவனுடைய தவறையும் மறந்து மன்னிக்கப்பாரம்மா…” என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டுத் தளர்வுடன் கீழே செல்ல, மீநன்னயா வேதனையுடன் மாதவியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளால் முடியுமா… அதகனாகரனை மன்னிக்க அவளால் முடியுமா… உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றிணைந்து இல்லை என்று சொன்னது.

(40)

எப்படியோ ஒன்றரை மாதத்திற்குள் மீநன்னயா அந்தக் குடும்பத்தோடு ஒருத்தியாக ஒன்றிப்போனாள் என்றுதான் சொல்லவேண்டும். மாதவியும் மீநன்னயாவும் நிறையப் பேசினார்கள். மாதவி தன் வாழ்வில் நடந்த அத்தனையும் சொன்னாள். ஏற்கெனவே அது பற்றி ஜெயராமன் சொல்லியிருந்தாலும், மாதவி சொன்னபோது அவர்களின் வலியையும் ஏமாற்றத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது அவளால்.

அவளையும் மீறி மாதவியின் பக்கம் நியாயம் பேசியது உள்ளம். ஆனாலும் அதகனாகரனை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. அவன் செய்தது ஏமாற்று. நம்பிக்கை துரோகம் அல்லவா. அவனை எப்படி மன்னிப்பது. அதனால் அவன் மீதிருந்த வெறுப்பு எள்ளளவும் குறையவில்லை… கூடவே அவன் மீது வைத்த பாழாய்ப் போன காதலும் குறையவில்லை.

அது ஒரு பக்கமிருக்கப் புகழேந்திக்கும், பூங்கோதைக்கும் மீநன்னயாவை மிகவும் பிடித்துப் போனதால், எந்தச் சுணக்கமுமின்றி அவளைத் தம் சகோதரியாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள். மீநன்யாவிற்குத் தன் தாயின் நினைவாகப் பெயர் சூட்டிய பூங்கோதையின் மீது பாசம் ஒரு பிடி அதிகம் என்றே சொல்லலாம்.

எப்படியோ இழந்த அன்பை, மாதவியிடமும் ஜெயராமிடமும், அவர்களின் பிள்ளைகளிடமும் தாராளமாகவே பெற்றுக்கொண்டாள் மீநன்னயா. ஆனால் இரவின் தனிமைதான் மிகக் கொடியதாக இருந்தது. அந்த நேரத்தில் அதகனாகரனின் நினைவு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

எந்தளவுக்கு அவனை வெறுத்தாளோ அதே அளவுக்கு அவன் அருகாமைக்காகப் பெரிதும் ஏங்கத் தொடங்கினாள். இதுதான் ஐஸ்க்ரீம் என்று சுவையைக் காட்டும் வரைக்கும் அதைப் பற்றிய அருமை யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அதைச் சுவைத்தபின்தானே தெரிகிறது அதில்லாமல் இருக்க முடியாதென்று. அதே நிலையில்தான் இருந்தாள் மீநன்னயா.

இதுதான் காதல் என்று தெரியாத போது, இதுதான் உறவு என்று தெரியாத போது அதைப்பற்றிக் கவலையில்லாதிருந்தவள், அதகனாகரனைக் காதலித்தபின், அவனோடு படுக்கையைப் பகிர்ந்த பின், இப்போது உள்ளமும் தேகமும் அவன் அரவணைப்புக்காய், அவன் அன்புக்காய் வெட்கம் கெட்டுத் தேடத் தொடங்கியது. அந்த மனத்தை எப்படி அடக்குவாள். அதனால் இரவு தூக்கமில்லா இரவுகளாகவே அவளுக்குக் கடந்து சென்றது.

விழிகளை மூடினாலே, காயம்பட்ட தேகத்தில் உதடுகளைப் பொருத்திய அவன்தானே வந்து நின்று கண்களைச் சிமிட்டுகிறான்.

அன்றும் இரவு அவளுக்குத் தூக்கம் சுத்தமாய் வருவதாக இல்லை. ஏனோ அதகனாரகன் வேண்டும் என்று அந்த இரவு சண்டித்தனம் செய்தது.

சோர்வுடன் படுக்கையை விட்டு எழுந்தவள், நேரத்தைப் பார்க்க, இரண்டு மணி என்றது கடிகாரம். இனியும் படுத்திருந்தால் பைத்தியம் பிடிக்கும் என்பது புரிய, எழுந்தவள், உடலை மறைக்கத் தடித்த வேர்ட்ரோப் ஒன்றை இழுத்து எடுத்துத் தன்னை மறைத்தவாறு அறையின் ஜன்னலருகே வந்து வெளியே வெறித்தாள். டிசம்பர் மாதம் என்பதால் பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. எங்குப் பார்த்தாலும் வெண்மை. அதனால் இரவு கூடப் பகல் போலக் காட்சிகொடுக்க, சற்று நேரம் அதையே வெறித்த பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, அந்தக் குளிருக்கு இதமாக எதையாவது குடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அதைச் செயற்படுத்தும் நோக்கில் வெளியே வந்தவள் படிகளில் இறங்கி நேராகச் சமையலறை நோக்கிச் செல்ல, அங்கே ஏற்கெனவே விளக்கு எரிந்துகொண்டிருக்க,

‘அடடே… விளக்கை அணைக்க மறந்துபோய்ப் படுத்துவிட்டார்கள் போல..” என்று எண்ணியவளாக மெல்ல அடியெடுத்து நடந்தவள், சமையலறைக்குள் நுழையவும், அப்போதுதான் சமையலறை வாசலில் ஒட்டினாற்போல வைத்திருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பால் பெட்டியை எடுத்துக்கொண்டிருந்த அந்த உருவம் திரும்பவும் நேரம் சரியாக இருந்தது.

இப்படித் திடீர் என்று மீநன்னயா உள்ளே வருவாள் என்று அந்த உருவமும் நினைத்திருக்கவில்லை, சமையலறைக்குள் புகுந்த மீநன்னயாவும் அங்கே ஒரு உருவம் நிற்கும் என்று நினைத்திருக்கவில்லை.

திடீர் என்று அந்த உருவத்தைக் கண்ட அதிர்ச்சியில்,

“அம்மா…” என்கிற மெல்லிய அலறலுடன் இரண்டடி பின்னே வைத்தவளை அங்கிருந்த இருக்கை ஒன்று காலை வாரிவிட, சமநிலை தவறிப் பின்னால் சரிந்தவளை, சுதாரித்த அந்த உருவம் பாய்ந்து இடை பற்றித் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ள, அந்த உருவம் இழுத்த வேகத்தில், அந்த உருவத்தின் உடலில் மோதி நின்ற மீநன்னயாவிற்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.

அவளையும் மீறி தேகம் நடுங்கியது. அதை அந்த உருவமும் உணர்ந்து கொண்டதோ, பதறி நின்ற அவள் முதுகைத் தட்டியும் வருடியும் கொடுத்து, அவள் காது நோக்கிக் குனிந்து தன் உதடுகளால் உரசியவாறு,

“ஈசி… ஈசி… இட்ஸ் மீ…” என்றான் அதகனாகரன்.

அந்த நிலையிலும் மீநன்னயாவின் தேகம் சிலிர்த்துப் போனது. அவனால் மட்டும்தான் அவளைக் குழைய வைக்க முடியும். சிலிர்க்க வைக்க முடியும். தகிக்க வைக்க முடியும்.

ஒரு கணம், தன்னை மறந்து அவனுடைய அந்த உடல் சூட்டை அனுபவிப்பவளாக விழிகளை மூடிக் கிடந்தவளுக்கு மெல்ல மெல்லச் சுரணை வர, அப்போதுதான் தான் நிற்கும் நிலையே அவளுக்குப் புரிந்தது.

என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாள். அவளை ஏமாற்றியவனின் அணைப்பில் மயங்கிக் கிடக்கிறாள்… ஆத்திரம் உச்சந்தலையில் அடிக்கத் தமிறி அவனை உதறித் தள்ளியவள்,

“சீ…” என்று அருவெறுப்போடு கூறிவிட்டு விலகிச் செல்ல முயல, அந்தச் சீ என்கிற சொல் அவனை உசுப்பிவிட்டதோ. ஓரெட்டில் விலகிச் செல்லத் தொடங்கியவளை பற்றிச் சுழற்றிச் சுவரோடு மோத வைத்து அவள் விலகாதிருக்க இரண்டு பக்கங்களும் தன் கரத்தைப் பதித்தவாறு அவளை உற்றுப் பார்த்தான். இப்படி அவன் தன்னை இழுத்துச் சுவரோடு அழுத்துவான் என்பதைச் சற்றும் எதிர்பார்க்காத மீநன்னயா அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ அவளை அழுத்தமாகப் பார்த்து,

“என்ன சொன்னாய்? சீ யா…” என்று கிண்டலுடன் கேட்டவனின் ஒற்றைக் கரம் சற்றுக் கீழிறங்கி அவளுடைய இடையைப் பற்றிக்கொள்ள, பதறிப்போனாள் மீநன்னயா.

வேகமாக அவனுடைய கரத்தை விலக்க முயல, சுலபமாக விலக்கும் அலவு பலமற்றவனா அவன்? இப்போது இடையைப் பற்றிய கரம், அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவன் மார்போடு விழுந்தவளை மேலும் அழுத்தமாக பற்றித் தன்னோடு நெரித்தவாறு அவளைக் குனிந்து பார்க்க, இவளோ ஒரு வித தவிப்புடன் அவனை ஏறிட்டாள். கடவுளே… அவன் கரம் ப்டால் இந்தப் பாழாய்ப் போன உடல் குழைந்து உருகிப் போகிறதே… அதை எப்படித் தடுப்பது? கலக்கத்துடன் அவனை அண்ணாந்து பார்க்க, உதடுகளோ அச்சத்தில் நடுங்கின. அதைக் கண்டவனின் உதடுகளும் வறண்டு போயின.

கடந்த ஒன்றரை மாதங்களாக, அவள் அருகாமையில்லாமல், தவிப்பவனாயிற்றே. அவளைக் காண வருவதற்கான நேரம் பார்த்திருக்க, ஜெயராமன் முக்கிய வேலை விடயமாக அமரிக்கா செல்கிறார் என்பதைத் தெரிந்த மறு கணம், இங்கே வந்துவிட்டிருந்தான்.

ஆனால் இவளோ, வந்துவிட்டவனைக் கண்டு அருவெறுத்து ஓடுவதா… அதை எப்படி அத்தனை சுலபத்தில் விடுவது. தன் கோபத்தைத் தாபத்தை அவளிடம் காட்டவேண்டி மேலும் அவளை இறுக்கியவாறு அவளை நோக்கிக் குனிந்த அதகனாகரனின் நெருக்கத்தைக் கண்டு வியர்த்துக் கொட்டியது மீநன்னயாவிற்கு.

ஒரு பக்கம் அவனுடைய தொடுகையில் குழைந்து உருக்கும் உடல். மறு பக்கம் அவன் செய்த செயலால் வெறுத்து ஒதுக்கும் மனம்… என்னதான் செய்வது. திரிசங்கு சொர்க்கத்தில் கிடந்தவளுக்குத் தன் இயலாமையில் அழுகைதான் வந்தது.

கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் முகம் நோக்கிக் குனிந்தவன், கசங்கிய அவள் முகம் கண்டு ஒரு கணம் நிதானித்தவனாகத் தயங்கி நின்றான். பின் தன் ஒற்றைக் கரத்தை அவள் கன்னத்தில் பொத்தினால் போல வைத்து, அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்து அவள் உள்ளத்தைப் படிக்க முயன்றான். பலமாக அடித்த அவளுடைய இதயத்தை அவனுடைய மேல் வயிறு கூட உணர்ந்து கொண்டது. அதன் வேகமே சொன்னது அவனுடைய அருகாமை எந்தளவுக்கு அவளிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று. ஏன் அவனுடைய இதயம் கூட அவளுடைய இதயத்தின் வேகத்திற்குச் சற்றும் குறையாமல்தானே துடிக்கிறது.

அவளுடைய விழிகளை மாறி மாறிப் பார்த்தவன், அவன் சுழன்று திருப்பியதால் கலைந்த கூந்தல் கற்றை அவள் நெற்றியில் விழுந்திருக்கக் கன்னத்தைப் பற்றியிருந்த கரத்தை விலக்கி நெற்றியில் படர்ந்த கூந்தல் கற்றையை விலக்கி,

“ஐ… ஐ… மிஸ் யு பேபி…” என்றான் கிசுகிசுப்பாய். பின் அவள் முகம் நோக்கிக் குனிந்தவன், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் உதடுகளால் ஒற்றி எடுக்க, மீநன்னயா அதக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாதவளாக விழிகளை மூட, இப்போது அவனுடைய உதடுகள் கண்ணீர் சிந்திய விழிகளை ஒற்றி எடுத்தன. அவனுடைய உதடுகளின் வருடலில் மீநன்னயாவின் கால்கள் வலுவிழந்து போனவை போலத் துவள, துவண்ட தன்னவளை இறுகப் பற்றி நிலை நிறுத்தியவனாக மெதுவாக அவளை விட்டு விலகி, தாபத்துடன் அவள் முகத்தை ஏறிட்டான் அதகனாகரன்.

இயலாமையில் கசங்கிப்போயிருந்த அந்த முகத்தைக் கண்டவன், என்ன நினைத்தானோ, மெதுவாக அவளை விட்டு விலகி,

“ஐ… ஆம் சாரி…” என்றான் முணுமுணுப்பாய். அவன் விலகியதுதான் தாமதம், சுயம் பெற்றவளாக, அதற்கு மேல் அங்கே நிற்கும் சக்தியற்றவளாகப் பாய்ந்து படிகளில் ஏறித் தன் அறைக்கு வந்து கதவைச் சாற்றிவிட்டுப் படுக்கையில் அமர்ந்தவளுக்கு நீண்ட நேரம் எடுத்தது தன்நிலை பெற. வலது கரமோ இடது மார்பை அழுந்தப் பற்றிக்கொள்ள, பலமான இதயத் துடிப்பை அவள் கரம் கூட உணர்ந்துகொண்டது.

விழிகளை மூடியவாறு ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப் படுத்த முயன்றவளுக்கு மெல்ல மெல்ல சுயம் வரத் தொடங்க, அது பெரும் கேவலுடன் வெளிப்பட்டது.

இனி இவன் முகத்தில் விழிக்கக் கூடாது என்று நினைத்தாள், ஒரு பொழுதாவது அவனுடைய அணைப்பில் உறங்க வேண்டும் என்று ஏங்கினாள், அவன் திசைக்கே திரும்பக் கூடாது என்று எண்ணினாள், அவனுடைய கடைக்கண் பார்வை விழும் தூரத்திலாவது நிற்கவேண்டும் என்று தவித்தாள். அவன் திசையில் வீசிய காற்று கூட அவள் திசைக்குத் திரும்பக்கூடாது என்று வேண்டினாள், அதே நேரம் அவன் விட்ட சுவாசக்காற்றை ஒரு முறையாவது சுவாசிக்கவேண்டும் என்று வெறி கொண்டாள். இரண்டும் எதிர் எதிர் எண்ணங்கள்… எதிர் எதிர்த் திசைகள்… ஆனாலும் பாழாய்ப் போன மனம் இரண்டையும் விரும்பித் தொலைத்த நேரத்தில் இப்படி முழுதாகக் கண் முன்னால் வந்து நிற்கிறானே.

அவனை வெறுக்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் சேரவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்… கடவுளே என்ன செய்யப் போகிறாள். மனதின் திசையில் செல்லப் போகிறாளா, இல்லை புத்தி காட்டிய வழியில் போகப் போகிறாளா. எந்தப் பாதையில் போகப் போகிறாள். இதோ இப்போது கூட அவளை அணைத்தபோது அவன் கரங்கள் கொடுத்த சூட்டை இந்த உடல் விரும்பித் தொலைக்கிறதே. கடவுளே… இது என்ன கொடுமை. இதில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள். என்னதான் அவன் பக்கம் சாய்ந்தாலும், அவளை ஏமாற்றிய அவனை எப்படி மன்னித்து ஏற்றுக் கொள்வது. அது இந்த ஜென்மத்தில் முடியாதே.

கலங்கியவாறு படுக்கையில் சரிந்தவளுக்குத் தூக்கம் கொஞ்சமும் அவள் பக்கம் வருவதாயில்லை.

அதே வேளை சமையலறைச் சுவரில் சாய்ந்து நின்றிருந்த அதகனாகரன் தன் கரங்களையே தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளைத் தொட்ட தித்திப்பு இன்னும் அந்தக் கரங்களில் மிச்சமிருந்தது.

ஒன்றரை மாதங்கள், ஒன்றரை மாதங்கள் அவளைப் பார்க்கமுடியாதவனாகப் பைத்தியக்காரன் போல அலைந்து திரிந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் இனி அவளைப் பார்க்காது முடியாது எனப் புரிந்துகொண்டவனாகச் சகோதரியிடம் வரப்போவதாகக் கூற, மாதவிதான் அவனைத் தடுத்துவிட்டிருந்தார்.

“இல்லைப்பா… இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும்… உன் அத்தானும் கோபத்தில் இருக்கிறார்… மாதவியும் கசப்பிலிருந்து வெளிவரவில்லை. கொஞ்ச நாட்கள் காத்திரேன்…” என்று வேண்டிக் கொள்ள வேறு வழியில்லாமல் உழன்று திரிந்தான் அதகனாகரன். அதன் விளைவு, முக்கியமான கார்பந்தயம் ஒன்றில் பயங்கரமாகத் தோற்றுப்போக, நீண்ட நாட்களுக்குப் பிறகு தோல்வியைத் தழுவிக்கொண்டான் அதகனாகரன். அந்தத் தோல்வி கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இதில் தோற்றால், இன்னொரு பந்தயத்தில் வென்றுவிடுவான். ஆனால் மீநன்னயாவிடம் தோற்றால்… அவன் வாழ்க்கையே தோற்றுப் போகுமே.

ஆம் யாரைக் காதலிப்பதாக நடித்தானோ, அவளையே உயிர் உருகும் அளவுக்கு நிஜமாகவே காதலிப்பது தெரிய உடைந்துபோனான் அதகனாரகரன். தீர விசாரிக்காமல் அவன் செய்த ஒரு காரியம், மீநன்னயாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவனுடைய வாழ்க்கையையுமல்லவா தகர்த்தெறிந்துவிட்டது. என்னதான் மன்னிப்பு வேண்டினாலும், செய்தது இல்லையென்றாகிவிடுமா என்ன?

தவித்து உருகிக் கலங்கிக் காத்திருக்கையில்தான், ஜெயராமன் முக்கியக் கூட்டத்தை மேற்கொள்ள அமரிக்கா சென்றிருந்தார். அதை அறிந்ததும் இவன் உடனே கிளம்பிவிட்டிருந்தான்.

எப்படியாவது அவளைப் பார்த்துவிடவேண்டும். அவள் பேசுவதைக் கேட்டுவிடவேண்டும். குறைந்தது, அவள் தங்கும் இடத்திற்கு அருகாமையில், அவள் சுவாசிக்கும் காற்றைச் சுவாசித்து ஒரு நாளாவது வாழ்ந்துவிடவேண்டும்.

முடிவெடுத்தவனாக, மாதவியிடம் கூடச் சொல்லாமல் வந்துவிட்டான்.

அந்த வீட்டின் திறப்பு அவனிடமும் இருந்ததால் சத்தமிடாமல் கதவைத் திறந்துகொண்டு வந்தவனுக்கு ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு நெஞ்சம் ஓரளவு அமைதியை உணர்ந்துகொண்டது. உள்ளே வந்தவன் ஆழ மூச்செடுத்து மிநன்னயா விட்டுச் சென்ற காற்றை நாசிக்குள் எடுத்து நுரையீரலில் நிரப்ப… அப்பப்பா எத்தனை ஆனந்தம்… எத்தனை தித்திப்பு.

அதுவரை இறுகியிருந்த முகம் இளகிப் போக, முதன் முறையாக அவனுக்குப் பசித்தது.

அந்தப் பசியை உணர்ந்து எத்தனை நாட்களாகிவிட்டன. அவளுக்கு அருகே தான் இருக்கிறோம் என்கிற குதுகலத்துடன் அணிந்திருந்த பனிச் சப்பாத்தையும், தடித்த மேலாடையையும் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, சமையலறைக்குள் புகுந்தவன், பாலைச் சூடு பண்ணலாம் என்று நினைத்துக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோதுதான் மீநன்னயா உள்ளே வந்தாள்.

எத்தனை நாள் காத்திருப்பு. கடவுள் வரம் கொடுத்தாற் போல, அவளைத் தொட்டும் விட்டானே. இதை விட ஆனந்தம் வேறு என்ன இருக்கப் போகிறது.

நீண்ட நேரமாகத் தன் கரத்தையே பார்த்திருந்த அதகனாகரன், முகம் கனிய, உதடுகள் புன்னகையைச் சிந்த, விழிகளை மூடி,

“ஐ லவ் யு பேபி…” என்றான் மென்மையாய்.

What’s your Reaction?
+1
18
+1
8
+1
6
+1
0
+1
0
+1
0
Vijayamalar

View Comments

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

13 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…

2 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…

4 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

6 days ago