Categories: Ongoing Novel

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 35

(35)

அவள் அழுதிருக்கிறாள் என்று வீங்கிச் சிவந்த முகம் மறை சாற்ற, இவனுக்குத்தான் வயிற்றைக் கலக்கியது.

எத்தனை பெரிய தவறு செய்துவிட்டான். சற்றும் யோசித்து ஆராயாமல்… சே… அவனும்தான் என்ன செய்வான் கிடைத்த ஆதாரங்கள் எல்லாமே அவளுக்கு எதிராக எண்ண வைத்துவிட்டதே.

தவறு செய்துவிட்டு மன்னிப்பை வேண்டினால் அந்தத் தவறு சரியாகிவிடுமா? தவிப்புடன் ஓரெட்டில் மீநன்னயாவை நெருங்கிய அதகனாகரன், வலியுடன் அவளைப் பார்த்து, எதையோ சொல்ல வர, ஒற்றைப் பார்வையால் அவனுடைய பேச்சை நிறுத்தினாள் மீநன்னயா. மறுப்பாகத் தலையை அட்டி,

“வேண்டாம் விட்டுவிடுங்கள்… நீங்கள் செய்த காரியத்திற்காக மன்னிப்பு வேண்டி வருகிறீர்கள் என்றால், அது பயனற்ற மன்னிப்பு…” என்று பெரும் வலியுடன் கூறிவிட்டு ஜெயராமைப் பார்க்க,

“நன்னயா… ப்ளீஸ்… நான் சொல்வதைக் கொஞ்சம் கேளேன்…” என்று தவித்தவனை ஏறிட்டவள், வெறுமையாகப் பார்த்து,

“நீங்கள் மன்னிப்புக் கேட்டதும், என்னை ஏமாற்றியது இல்லையென்றாகிவிடுமா அதகனாகரன்… என்னை உயிரோடு எரித்து விட்டீர்களே… எத்தனை நம்பினேன்… உலகத்திலேயே மறக்க முடியாத வலி எது தெரியுமா… அது நம்பிக்கைத் துரோகம். ஆனால் பாருங்கள், எல்லாத் தவறுக்கும் தண்டனை உண்டு… ஆனால் இதற்கு…” என்றவள் கன்னத்தை நனைத்த கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு,

“உங்களை மனதாரக் காதலித்ததற்குத் தக்க பாடம் படிப்பித்துவிட்டீர்கள் தெரியுமா… காலம் முழுவதும் இந்த வலி என்னைத் துரத்துமே… அதிலிருந்து எப்படித் தப்பப் போகிறேன்…” என்று கலக்கத்துடன் கேட்க, இவனோ கலங்கியவனாக,

“நன்னயா… ப்ளீஸ்… நான் செய்தது தவறுதான்… ஆனால் என் பக்கத்து நியாயத்தையும் நீ புரிந்துகொள்ள வேண்டும் உன் தந்தையின் பக்கம் ஒரு நியாயம் இருந்தது போல என் பக்கமும் நியாயம் இருக்கிறது…” என்றவனை வெறுப்போடு பார்த்தாள் மீநன்னயா.

“என் தந்தையோடு உங்களை ஒப்பிடாதீர்கள். அசிங்கமாக இருக்கிறது. என் தந்தை யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லை. அவர் சூழ்நிலைக் கைதியே தவிரக் குற்றவாளியில்லை. நீங்கள்… மன்னிக்கக் கூடத் தகுதியில்லாத குற்றவாளி…” என்று கடுமையாகக் கூற, இவனோ தவிப்புடன்,

“நன்னயா… என் அக்காவின்…” அவன் முடிக்கவில்லை, அடித்துக் கும்பிட்டவள்,

“சாமி… போதும் உங்கள் விளக்கம்… கேட்கும் வரைக்கும் கேட்டாயிற்று… இனி இதற்கு மேல் என்னால் முடியாது… விட்டுவிடுங்கள்…” என்றவள், அதே ஆத்திரத்தோடு அவனை முறைத்து,

“ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை இதைப்பற்றி சொல்லியிருந்தால், எங்காவது காணாமல் போயிருப்பேன் தெரியுமா… ஆனால்…” என்றவள் கண்கள் கலங்க, “வலிக்கிறது ரஞ்சன்…. ஓ… உங்கள் பெயர் ரஞ்சன் இல்லையல்லவா… அதகனாகரன்…” என்றுவிட்டு ஆத்திரத்துடன் கண்களைத் துடைத்தவள்,

“ஒரு வேளை, எனக்கு நல்லது செய்ய ஆசைப்பட்டீர்கள் என்றால், தயவு செய்து என் முகத்தில் விழிக்காதீர்கள் நீங்கள் செய்த அத்தனையும் எனக்குப் போதும்…” என்றவள் திரும்பி ஜெயராமைப் பார்த்து,

“ராம்… நான் தயார் என்றாள் அழுத்தமாக. கையில் கிடைத்த சொர்க்கத்தை இழப்பது என்பதை இதுதானோ… அவள் தன்னைத் தாண்டிச் செல்வதைச் சகிக்க இயலாதவனாக,

“நோ…” என்று கத்தியவன், வேக நடையுடன் அவளை நெருங்கி அவள் கரத்தைப் பற்றித் தன் புறம் திருப்பி, அவள் தோள்களில் தன் கரங்களை அழுத்தமாகப் பதித்து,

“நோ… நீ என்னை விட்டு எங்கும் போக முடியாது நன்னயா, போக விடவும் மாட்டேன்…” என்றான் உறுதியாக.

அதைக் கண்டு ஏளனத்துடன் நகைத்த ஜெயராம்,

“அவளை விடு ஆகரன், அவளைத் தடுக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது…” என்றார். இவனோ ஜெயராமைத் திரும்பிப் பார்த்து,

“எனக்கு உரிமையில்லையா… எனக்கு உரிமையில்லை என்றால் வேறு யாருக்கு அந்த உரிமை இருக்கிறது… சொல்லப்போனால், அவளுக்கான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் எனக்கு மட்டும்தான் இருக்கிறது…” என்று அழுத்தமாகக் கூற,

“ரியலி…?” என்றார் ஜெயராம் கிண்டலுடன். இவனோ பற்களைக் கடித்தவாறு,

“திருமணம் ஆகும் வரைக்கும்தான் இவள் உங்கள் மகள். இப்போது இவள் என் மனைவி…” என்று தன் உரிமையை நிலைநாட்டும் வேகத்துடன் கூற, அவரோ கிண்டலுடன் சிரித்து,

“திருமணமா… எது… வெறும் நான்கு சுவருக்குள் ஒரு கையெழுத்துப் போட்டுவிட்டால் அது திருமணமாகிவிடாது ஆகரன்… அதுவும் ஏமாற்றி நடந்த திருமணம், செல்லுபடியாகாது…” என்று அதகனாகரனின் பிடியிலிருந்த தன் மகளைத் தன் பக்கம் இழுக்க முயல, அந்தோ பரிதாபம், அதகனாகரனின் இறுகிய பிடியிலிருந்து மீநன்னயாவை அத்தனை சுலபத்தில் பிரித்தெடுக்க முடியவில்லை ஜெயராமால்.

பின் நிமிர்ந்து அவனைப் பார்த்து,

“விடு ஆகரன்… அவளை என்னோடு அழைத்துப் போகிறேன்…” என்று கண்டிப்பாகக் கூற, மறுத்தவனாகத் தலையாட்டி,

“இல்லை… அவள் எங்கும் வரமாட்டாள். அவள் என்னோடுதான் இருப்பாள்…” என்றான் இவன் உறுதியாக.

ஒரு கணம் அதகனாகரனை அழுத்தமாகப் பார்த்த ஜெயராம், குனிந்து மீநன்னயாவைப் பார்த்தார். பின் அவளிடமிருந்து தன் கரத்தை விலக்கி,

“மீனா, இது உன் வாழ்க்கை… நீதான் முடிவு செய்யவேண்டும்… உன்னை ஏமாற்றித் திருமணம் முடித்தவனோடு சேர்ந்து வாழப்போகிறாயா, இல்லை என்னோடு வந்து புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறாயா… முடிவு உன் கையில்…” என்று விட்டு மேசையிலிருந்த தன் கைப்பையைக் குனிந்து எடுத்தவாறே,

“நான் வாகனத்தில் உனக்காகக் காத்திருக்கிறேன்… உனக்குப் பத்து நிமிடங்கள்தனர் அவகாசம்… நீயே பேசி ஒரு முடிவுக்கு வா… பத்தாவது நிமிடம் நீ வாசலில் தென்படவில்லை என்றால், என் பாட்டிற்குப் போய்விடுகிறேன்…” என்றவர் அவளை நெருங்கி, சிவந்த கன்னங்களில் தன் உள்ளங்கை ஒன்றைப் பொருத்தி,

“யு ஆர் நாட் டிசேர்வ் இன் திஸ் லைஃப்… உனக்கான வாழ்க்கை அற்புதமானதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்… அது இதுவல்ல…” என்றவர், வெறுப்போடு அதகனாகரனைப் பார்த்துவிட்டு வெளியேற, அதகனாகரனோ பற்றிய மீநன்னயாவின் கரத்தை விடாமலே அவளைத் தவிப்போடு பார்த்தான்.

“நன்னயா… ஐ ஆம் சாரி… ரியலி ரியலி சாரி… நான் மிகப் பெரும் தவறு செய்துவிட்டேன்… தயவு செய்து என்னை மன்னித்துவிடு…” என்று தன் தவறை உணர்ந்து உருகிக் கேட்டுக்கொள்ள, அவனை நிமிர்ந்து வெற்றுப் பார்வை பார்த்தாள் மீநன்னயா. பின் தன் கரத்தை அவன் கரத்திலிருந்து விடுவித்துவிட்டு,

“இதுவரையும் என் தேகம்தான் அசிங்கம் என்று நினைத்தேன் ஆகரன்… ஆனால்… அதை விட அசிங்கமாக நீங்கள் தெரிகிறீர்கள்… நிச்சயமாக உங்களோடு என்னால் வாழ முடியாது. ஒவ்வொரு முறையும் உங்களைப் பார்க்கும் போது நீங்கள் ஏமாற்றியதும், நான் உங்களிடம் ஏமாந்ததும்தான் நினைவுக்கு வந்து போகும்… வேண்டாம்… இந்த அசிங்கப்பிடித்த வாழ்க்கை நம் இருவருக்குமே கசப்பைத்தான் கொடுக்கும்… நாம் நம்முடைய உறவை இத்தோடு முடித்துக் கொள்ளலாம்… நீங்கள் உங்கள் பாதையைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் என் பாதையைப் பார்த்துக் கொள்கிறேன்…” என்று திரும்பியவளை மறைத்தாற் போல வந்து நின்றான் அதகனாகரன். அவளுடைய தோள்களில் தன் கரங்களைப் பதித்து,

“நோ… நோ… யு கான்ட்… நன்னயா… என்பக்கத்து நியாயத்தையும் நீ புரிந்து கொள்ளவேண்டும்… அத்தானோடு உன்னைக் கண்டதும், அதுவும் அக்காவைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்காத மனிதர், உன்னோடு நெருங்கிப் பழகுவதைக் கண்டதும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு நீ அவர் மகள் என்று எப்படித் தெரியும் சொல்லு… அந்த நேரத்தில் தப்பாகப் புரிந்துகொண்டேன் நன்னயா…” என்று அவன் தவிப்புடன் கூற, ஆத்திரத்துடன் அவனை முறைத்தவள்,

“சீ… ஒரு ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசினாலே தப்பானதுதான் என்று எண்ணும் பழக்கத்தை எப்போது விடப்போகிறீர்கள்…” என்று சீறியவளிடம், அதே ஆத்திரத்தோடு பார்த்த அதகனாகரன்,

“ஒரு ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசுவதற்கென்று ஒரு வரைமுறை உண்டு நன்னயா… எந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணைச் சும்மா சும்மா அணைத்து முத்தமிட மாட்டான்… அன்று உன்னையும் அத்தானையும் பார்த்தபோது, நீங்கள் இருவரும் அணைத்துக் கொண்டீர்கள். அத்தான் வேறு உன் தலையில் அடிக்கடி முத்தமிட்டார், நீங்கள் இருவரும் யார், உங்களுக்கிடையில் என்ன உறவு இருக்கிறது என்று எதுவும் தெரியாதவர்கள் என்ன நினைப்பார்கள்… கொஞ்சம் யோசித்துப் பார் நன்னயா. அதுவும்… எனக்கு…” என்றவன், ஒரு வித கலக்கத்தோடு அவளைப் பார்த்து,

“அன்று அந்த உணவகத்தில் உன்னைப் பார்த்தேன். நீண்ட கூந்தல் தரையில் புரள, அமர்ந்திருந்த உன் முதுகுதான் முதலில் என் கண்களுக்குப் பட்டது. அந்தக் கூந்தலும், உன் உடல் அமைப்பும், உன்னை யார் என்று கண்டுவிடவேண்டும் என்கிற வேகம் எனக்குள். பொருத்துப் பொருத்துப் பார்த்த எனக்கு ஒரு கட்டத்தில் முடியாமல், நீ யார், நீ எப்படியிருப்பாய் என்று உன்னைக் கண்டுவிட வேண்டும் என்கிற வேகத்தில் எழுந்தும் விட்டேன். ஆனால், அத்தானைக் கண்டதும் ஓடிப்போய் அணைத்தாய் பார்… கடவுளே… அந்த உணர்வை எப்படி விவரிப்பேன். சத்தியமாக நீ அத்தானை அணைத்து நின்ற காட்சியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நீயும், பிற பெண்களைப் போலப் பணக்கார ஆண்களை வளைத்துப் போட முயல்கிறாய் என்று எண்ணிவிட்டேன்.

எப்படியாவது உன்னை அத்தானிடமிருந்து பிரித்திடவேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால்தான் இப்படியெல்லாம் நடந்துகொண்டேன் நன்னயா… ஐ நோ… நான் செய்தது தவறுதான். மன்னிக்க முடியாத குற்றம்தான். ஒத்துக்கொள்கிறேன்… ஆனால்… என் அக்காவின் வாழ்க்கை, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம்… எல்லாவற்றுக்கும் மேலாக, நீ இன்னொருத்தனுக்கு உடைமையாவதா என்கிற ஆத்திரம்… இது எல்லாம் சேர்ந்துதான் உன்னை எப்படியாவது பிரித்துச் சென்றுவிடவேண்டும் என்று நினைத்தேன்… யோசித்துப் பார் நன்னயா… என் மீதும் நியாயம் இருக்கிறது அல்லவா…” என்றவனை ஏளனத்துடன் பார்த்தாள் மீநன்னயா.

“நியாயமா… உங்களிடமா… எது… இப்படி ஒரு பெண்ணைப் பொய் சொல்லி எய்ப்பதுவா…?” என்றவள் ஆத்திரத்துடன் அவனை நெருங்கி,

“ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை, நீ என் அத்தானோடு பழகுவது பிடிக்கவில்லை… விலகிவிடு… என்று சொல்லியிருந்தால், கண்காணாமல் எங்காவது போயிருப்பேன் ஆகரன்… என் வரவால் ராமுடைய வாழ்க்கை கேள்வி குறியாகும் என்றால், நிச்சயமாக அவரை என் அருகே நெருங்கக் கூட விட்டிருக்க மாட்டேன்… ஆனால் நீங்கள்… பொய்… பொய்… அத்தனையும் பொய்… நீங்கள் என்னைச் சந்தித்த நொடியிலிருந்து, நேற்று படுக்கையில் நாம் நம் உடல்களைப் பரிமாறிய கணம் வரை பொய்யாக நடித்திருக்கிறீர்கள். பொய்யாக வாழ்ந்திருக்கிறீர்கள்…” என்று அவள் முடிக்கவில்லை,

“நீ மட்டும் என்ன… எத்தனை முறை ஜெயராமை பற்றி உன்னிடம் பேசினேன், ஒரு முறையாவது அவருக்கும் உனக்கும் இடையிலிருந்த உறவு பற்றிக் கூறியிருந்திருக்கலாமே. நீ கூறியதை வைத்துப் பார்த்தால், அவர் மீது காதல் கொண்டவள் போலத்தானே தெரிந்தது… அப்போதே அவர் உன் தந்தை என்று சொல்லியிருந்தால், நான் ஏன் தவறாக நினைக்கப் போகிறேன்…” என்றவனை ஆத்திரத்துடன் பார்த்தாள் மீநன்னயா.

“எப்படிச் சொல்ல… அவர் என் தந்தை என்பதே அவர் சொல்லித்தான் தெரியும். எந்த அங்கீகாரமும் இல்லாமல், இவர்தான் என் தந்தை என்று எப்படிச் சுட்டிக்காட்டுவேன். தவிர, அவர் என் தந்தை என்று வந்து நின்றால், அது அவருடைய வாழ்க்கையைப் பலிவாங்கிவிடாதா… சமுகத்தில் அவர் மேலிருக்கும் நல்ல எண்ணங்கள் அத்தனையும் தவிடுபொடியாகிவிடாதா… கலிஃபோர்னியா ஆளுநராக இருந்த ஆர்னல்ட் சுவாட்ஸ்நேக்கரின் வளமான மக்கள் செல்வாக்கு, சட்டத்திற்குப் புறம்பாக ஒரு குழந்தையைப் பெற்றதால், அப்படியே அந்தச் செல்வாக்கு கவிழ்ந்து போகவில்லை. ஆர்னல்டிற்கே அந்த நிலை என்றால், என் ராமின் எதிர்காலம் என்னவாகியிருக்கும். தவிர, ராம் சொல்லியிருக்கிறார், அவர் இத்தனை வளத்தோடு இருக்க நீங்கள்தான் காரணம் என்றார், உங்கள் அக்காவின் வாழ்க்கையை அவர் கேள்விக்குறியாக்கிவிட்டார் என்பதற்காகவே அவருடைய எதிர்காலத்தை நீங்கள் தரைமட்டமாக்கியிருக்க மாட்டீர்களா… எந்தத் தைரியத்தில் நான் இவர்தான் என் தந்தை என்று சொல்வேன்… இன்று வரை ராம் என் தந்தை என்கிற பிரமிப்பு போகவேயில்லை தெரியுமா… பன்னிரண்டு வயதுவரை அம்மாவும் பாட்டியும்தான் எனக்குத் தெரிந்த உலகம். அம்மா இறந்த பின், பாட்டியோடுதான் என் வாழ்க்கை… இதை மீறிப் புதிய உறவுகள் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை… அப்படியிருக்கையில் திடீர் என்று நான்தான் உன் தந்தை என்றால், அதை எப்படி ஜீரணிப்பது. இந்தக் கணம் வரை இதெல்லாம் மாயை என்றுதானே எண்ணத் தோன்றுகிறது. அப்படியிருக்கையில் எப்படிச் சொல்வேன் இவர்தான் என் தந்தை என்று…” என்று கேட்டவள், தன் தலையைக் குலுக்கி,

“வேண்டாம் ஆகரன்… என்னை விட்டு விடுங்கள்… நான் நிறைய வலிகளைப் பட்டுவிட்டேன். அதோடு இந்த ஏமாற்றமும் சேர்ந்த கொண்டது. இதை ஜீரணிக்கச் சற்றுக் காலங்கள் எடுக்கும். இன்னும் இன்னும் வேதனைகளைத் தாங்கும் சக்தி எனக்குச் சத்தியமாக இல்லை…” என்றவள் வலியுடன் கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு,

“உண்மையாகவே என் மீது இரக்கமிருந்தால், என்னிடம் மன்னிப்பு வேண்டுவது உண்மையாக இருந்தால், தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்… நீங்கள் ஏமாற்றியதின் வலியைத் தாங்குவதே முடியாத காரியமாக இருக்கிறது… இதற்கு மேலும் உங்களோடு இருந்தால், சத்தியமாகத் தாங்க முடியாத வலியில் என் இதயம் நின்றுவிடும்… அதையும் மீறி, நான் உங்களோடு இங்கே இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தால், கொஞ்ம் விஷம் வாங்கிக் கொடுங்கள்…. நிம்மதியாகப் போய்விடுகிறேன்… சும்மாவே உலகுக்குப் பாரமாக இருப்பது போல உணர வைத்துவிட்டீர்கள்… இந்த உதவியையாவது செய்யுங்கள்…” என்று கூற அதற்கு மேல் அவளைத் தடுக்கும் சக்தி அதகனாகரனுக்கு இருக்கவில்லை.

எதையோ கூற வந்தவன், உன்னோடு வாழ்வதை விடச் சாவது மேல் என்று சொன்ன பிறகு, அவளைத் தடுத்து வைக்கும் சக்தி அவனுக்கு இருக்கவில்லை.

மெதுவாக அவள் கரங்களை விட்டு விலகி நின்றவன்,

“ஐ.. ஐ ஆம் சாரி…” என்று கூறியவாறு வாழ்வில் முதன் முறையாகத் தலை குனிய, அவனை வெறித்துப் பார்த்துவிட்டு, தன் பெட்டியோடு கடகடவென்று வெளியேறத் தொடங்கினாள் மீநன்னயா.

What’s your Reaction?
+1
21
+1
4
+1
1
+1
0
+1
6
+1
7
Vijayamalar

View Comments

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

21 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…

2 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…

5 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

7 days ago