Categories: Ongoing Novel

விழியே…! விலகாதே… விலக்காதே… – 27

27

இன்று

‘க்றீச்’ என்ற சத்தத்தோடு, வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டியோடு இறங்கினான், மிகல்திதியன்.

வாசலில் அமர்ந்தவாறு அரிசி புடைத்துக் கொண்டிருந்த ஜெயந்திக்கு, தன் மகனைக் கண்டதும் நம்ப முடியாத அதிர்ச்சி.

உடனே சுளகை ஓரமாக வைத்து விட்டு, “தம்பி… நீயா… இப்போது தான் வரத் தெரிந்ததா…?” என்ற போது, ஜெயந்தியின் குரல் கமறத் தொடங்கியது.

வெளியே வந்த கதிர்காமரும், மகனைக் கண்டு நிம்மதி கொண்டவராக, “வாப்பா… நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்…” என்று கூற,

“பா… நிதார்த்தனி இப்போது எப்படி… எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டபோதே, அவனுடைய இதயத்தின் துடிப்பு இவன் காதுகளுக்குக் கேட்டது.

தன் மகனின் தோளைத் தட்டிக் கொடுத்த கதிர்காமர், “இப்போது பரவாயில்லை தம்பி… அவள் மற்றப் பெண்களைப் போல அல்ல… தைரியமானவள்… ஓரளவு தன்னை மீட்டுக் கொண்டாள்… தனக்கு இப்படி ஆனது என்று பயந்து ஒதுங்கிப் போகாமல், முதல் வேலையாகக் காவல்துறையில் புகார் கொடுத்ததே, அவள் தான்…” என்றதும், அவனையும் மீறி முகத்தில் ஒரு வித பெருமை வந்து ஒட்டிக் கொண்டது. தன்னையும் மீறித் தலையை ஆட்டியவன்,

“அவள் படிக்கும் காலத்திலேயே அப்படித் தான்பா…” என்றவாறு தந்தையை ஏறிட்டு, “அவன்.. பிடிபட்டு விட்டானா…?” என்று கேட்டான் பெரும் ஆவலாக.

தந்தையோ மறுப்பாகத் தலையை அசைத்து, “இல்லைபா… அவன் யார் என்று நிதார்த்தனிக்கும் தெரியாது… அவன் முகமூடி அணிந்திருந்தானாம்… ஆனால், அவன் தன்னை விட கொஞ்சம் தான் உயரம் அதிகம் என்று சொல்லி இருக்கிறாள். அப்படிப் பார்த்தால், ஒரு ஐந்தடி ஆறு அல்லது ஏழு அங்குலங்கள் இருப்பான். ஆனால், அதை ஒரு தடயமாக வைத்துக் கண்டுபிடிக்க முடியாதே…” என்று கூறிய போது, மிகல்திதியனின் உடல் இறுகிப் போனது.

‘அவனுடைய உயிரானவளைச் சிதைத்தவன் இன்னும் பிடிபடாமல் மகிழ்ச்சியாக எங்கோ இருக்கிறானா?’ பற்களை நெருமியவனுக்கு அந்தக் கணமே ஓடிப்போய் நிதார்த்தனியைப் பார்த்துவிட வேண்டும் என்கிற வேகம் எழுந்தது.

“அப்பா… நிதாவை… நான் பார்க்க வேண்டும்…” என்ற போது அவனையும் மீறிக் குரல் தளதளத்தது.

அதைக் கேட்டதும் தன் மகனின் தோளில் தட்டிக் கொடுத்த கதிர்காமர், “பார்க்கலாம்பா… முதலில் உள்ளே வா…! வந்து மேலைக் கழுவி சற்று நேரம் ஓய்வெடு…! அதற்குப் பிறகு அவளைப் போய் பார்க்கலாம்…” என்று தந்தையாய் அறிவுறுத்த, அவனுடைய மனமோ, அந்தக் கணமே, அந்த விநாடியே தன்னவளைச் சென்று பார்த்துவிட வேண்டும் என்று பரபரத்தது.

ஆனாலும் தந்தை சொன்னதற்கமைய, உள்ளே சென்றவன், குளித்து விட்டுத் தயாராகி, வெளியே வர, தாய் அவனுக்குத் தேநீர் வார்த்துக் கொண்டு வந்தார்.

தாயின் மனம் கோணாது, அதை வாங்கி இரண்டு மிடறு குடித்தவன், “மா… வெளியே போய்விட்டு வருகிறேன்…” என்றவாறு தன் மோட்டார் வண்டியை நோக்கிச் செல்ல,

“இப்பவேயா… நேரத்தைப் பார்த்தாயா… காலை ஒன்பது மணி. இந்த நேரம் எங்கே போகிறாய்…” என்று தடுக்க முயல,

“ப்ச்… அவன் ஏதோ அவசர வேலையாகப் போகிறான்…. ஏன் தடுக்கிறாய் ஜெயந்தி… விடு…” என்று விட்டு மகனை நிமிர்ந்து பார்த்து, “வேண்டுமானால் நானும் வரவாப்பா…” என்றார் மென்மையாக. மறுக்க முடியவில்லை மிகல்திதியனால்.

அவன் தனியாக நிதார்த்தனியின் வீட்டிற்குச் சென்றதில்லை. அதை விட, தந்தை வந்தால், அவர்களுக்கும் இவனை வரவேற்பது சுலபமாக இருக்கும். அதனால் சரி என்று தலையை அசைக்க, அடுத்து, மிகல்திதியனின் மோட்டார் வண்டி, நிதார்த்தனியின் வீட்டை நோக்கி வேகம் எடுத்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் அவளுடைய வீட்டிற்கு முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு, இருவரும் இறங்கினார்கள்.

ஏனோ, மிகல்திதியனுக்குப் பெரும் தயக்கமாக இருந்தது. எப்படி அவளை எதிர் கொள்ளப் போகிறோம் என்கிற பதற்றம் தொற்றிக் கொண்டது. தயங்கி நின்றவனை திரும்பிப் பார்த்த தந்தை, “வா…” என்றவாறு கதவைத் திறந்து உள்ளே செல்ல, கதிர்காமரைக் கண்டு ஓடி வந்தார், ராமமூர்த்தி.

“வா… வாருங்கள்…” என்றவரின் குரல் அவரையும் மீறித் தடுமாற, அவருடைய தோளில் தட்டிக் கொடுத்த கதிர்காமர் முன்னேற, மிகல்திதியன் தந்தைக்குப் பின்னால் அமைதியாக வந்தான்.

“எந்த நிலையில் இருக்கிறது, ராமமூர்த்தி. ஆள் யார் என்று கண்டு பிடித்தார்களாமா?”

“இ… இல்லை… காவல்துறை விசாரிக்கிறது… ஆனால்… இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை…” என்று குரல் கம்மக் கூற,

“ப்ச்… வருந்தாதீர்கள். எல்லாம் சரியாகி விடும்…?” என்றவாறு உள்ளே செல்ல, சத்தம் கேட்டுப் பரபரப்போடு முன்னறைக்கு வந்த, மனோகரி, அங்கே கதிர்காமரைக் கண்டதும், ஒரு கணம் ஏமாற்றத்துடன் முகம் வாடி நின்றார். தன்னையும் மறந்து,

“அண்ணா… நீங்களா…? பிரதாபன் வந்து இருக்கிறானோ என்று நினைத்தேன்…” என்றவரின் குரலில் நிச்சயமாகப் பெரும் ஏமாற்றம் வீற்றிருந்தது.

அதைக் கேட்டுக் குழம்பிய கதிர்காமர், “பிரதாபன், நிதார்த்தனியை வந்து பார்க்கவில்லையா என்ன?” என்றார் குழப்பமாக.

“செய்தி அறிந்த அன்று மருத்துவமனை வந்து பார்த்து விட்டுப் போனார்கள். அதற்குப் பிறகு, எப்படியிருக்கிறாள் என்று கூட விசாரிக்கவில்லை…” என்ற போது, ராமமூர்த்தியின் குரல் உடைந்து போனது.

“ஷ்… எதற்கு இந்தக் கலக்கம்…? அவர்களுக்கும் ஜீரணிக்க நேரம் கொடுக்க வேண்டும் இல்லையா…? வருவார்கள்… நிச்சயமாக வருவார்கள்… என்ன சொன்னாலும் நிச்சயிக்கப் பட்டவள் நிதார்த்தனி. வராமலிருப்பானா? நிச்சயமாக வருவான்…” இதைச் சொன்ன போது, மிகல்திதியனின் முகம் கறுத்து வாடிப்  போயிற்று.

என்னதான் அவன் செய்தி கேட்டுப் பதறியடித்து வந்தாலும், அவள் இவனுக்கு உரியவள் அல்லவே. அவள் இன்னொருத்தனுக்குச் சொந்தமாகப் போறவளாயி்றே….!

கதிர்காமர் தன் மகனின் நிலை புரிந்தவராக, அவனைத் திரும்பிப் பார்த்து, அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தவர்,

ராம மூர்த்தியைப் பார்த்து, “தம்பி நிதார்த்தனியைப் பார்க்க வேண்டும் என்றான்… அதுதான் அழைத்து வந்தேன்… ஒரு வாட்டி அவளைப் பார்க்கலாம் தானே…! உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே…” என்றார் மென்மையாக.

“ஐயோ…! எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை கதிர்காமர். ஆனால் அவள்தான்… யாருடைய முகத்தையும் பார்க்க விரும்பாமல் அறைக்குள்ளேயே கிடக்கிறாள். பச்சைத் தண்ணீர் கூட அருந்தவில்லை… பித்துப் பிடித்தவள் போல நிற்கிறாள்…” என்றவரின் கன்னத்தில் கண்ணீர் கோடு போட்டது.

நிமிர்ந்து மிகல்திதியனைப் பார்த்து, “அவளை இப்படிப் பார்க்கவே முடியவில்லை தம்பி… எப்போதும் துருதுருப்பாக… ஏதாவது குழறுபடி செய்துகொண்டே இருப்பாள்… இப்போது.. அவள் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடப்பதைப் பார்க்கும் போது… ஐயோ…! என்னால் தாள முடியவில்லையே…! நான் என்ன செய்வேன்..?” என்று அழுது கரைய, விரைந்து  ராம மூர்த்தியை  இழுத்து அணைத்துக்கொண்ட கதிர்காமர்,

“ஷ்.. என்ன ராமமூர்த்தி இது… பெரியவர்கள் நாம் தானே அவர்களுக்குத் திடம் சொல்ல வேண்டும்… நாமே இப்படி வதங்கினால், அவளைத் திடப்படுத்துவது யார்…? இப்போது என்ன நடந்து விட்டது என்று இத்தனை வேதனை உங்களுக்கு… யாரோ செய்த தவறுக்கு, நம் குழந்தை என்ன செய்யும்…? நிதார்த்தனி திடமானவள். இத்தனை தைரியமாக நடந்ததைக் காவல் துறையில் சொன்னவள், தன்னைத் தேற்றிக் கொள்ள மாட்டாளா…! தயவு செய்து வருந்தாதீர்கள்… எல்லாம் சரியாகி விடும்… காலம் எல்லா வடுவையும் ஆற்றும்…” என்று கூறியவாறே, தன் மகனுக்குக் கண்களால் உள்ளே போ என்று கூற, உடனே வீட்டிற்குள் நுழைந்தான் மிகல்திதியன். நிதார்த்தனியின் அறை எது என்று அவனுக்குத் தெரியும் என்பதால், அவளுடைய அறையின் குமிழில் கரத்தைப் பதித்து மெதுவாகத் திறந்தான். இருட்டடித்திருந்தது அறை.

மின்விளக்கைப் போட, வெற்று அறைதான் அவனை வரவேற்றது. புருவங்கள் சுருங்க வெளியே வந்தவன், முன்னறைக்கு வர,

“என்னடா… நிதார்த்தனியைப் பார்த்தாயா?” என்றார் கதிர்காமர்.

“அவள் அறையில் இல்லையேப்பா…” என்றதும், திடுக்கிட்டு எழுந்தார் மனோகரி.

“என்ன தம்பி சொல்கிறீர்கள்…? கொஞ்ச நேரத்துக்கு முன்பு, அறையில் தான்  இருந்தாள்… ஒரு வேளை கழிவறை போயிருப்பாளோ… இருங்கள் பார்த்து விட்டு வருகிறேன்…” என்றவாறு உள்ளே சென்றவர், அங்கும் தன் மகளைக் காணாமல்,

பசுமாடுகள் கட்டியிருந்த இடத்தை நோக்கி ஓடினார். அங்கும் அவளில்லை.

பயந்தடித்தவராகத் தன் கணவரை நோக்கி ஓடி வந்தவர், “அப்பா…! நிதாவைக் காணவில்லை…” என்று பதற, ராமமூர்த்தி அரண்டு போனார்.

“எல்லா இடமும் பார்த்தாயா?”

“எல்லா இடமும் தேடி விட்டேன்… எங்குமில்ல…” என்று கதறத் தயாராக,

“ஷ் தங்கச்சி… அழாதீர்கள்… நிதார்த்தனி இங்கே எங்காவது பக்கத்தில் தான் இருப்பாள்…” என்று கூறும் போதே,

“அவள் எங்கே போயிருப்பாள் என்று எனக்குத் தெரியும்…” என்ற மிகல்திதியன் தன் வண்டியை நோக்கிப் பாய்ந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடம், அந்தப் புல்வெளியை வந்தடைந்தான். எப்போதும் அவள் அமருமிடத்தில் நிதார்த்தனி இல்லை. அச்சத்தில் இவனுக்கு உடல் வியர்த்தது. எங்கே போனாள்…? அதுவும் இந்தக் காலைப் பொழுதில். ஏதாவது தவறான முடிவுக்குப் போயிருப்பாளோ…! சீ… சீ… அவனுடைய நிதார்த்தனி, அந்தளவு கோழை இல்லை… எதார்த்தமாகச் சிந்திக்கக் கூடியவள். நிச்சயமாகத் தப்பாக எதையும் செய்திருக்க மாட்டாள்…!

ஆனால், எங்கே போனாள்…? தவிப்போடு சுத்தவரப் பார்த்தவனுக்கு எதிர்த் திசையிலிருந்த வயல்வெளி தெரிந்தது. உடனே பாதையைக் கடந்து, அந்த வயல்வெளியை நோக்கி ஓடினான். இந்தப் பரந்த வெளியில் அவளை எங்கேயென்று தேடுவது.

சுத்தவரப் பார்த்தவனுக்குச் சற்றுத் தள்ளி, ஒரு உருவம் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, வேகமாக அந்த உருவத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். நெருங்க நெருங்க அது நிதார்த்தனி என்று தெரிந்தது.

அதுவும் கிணற்றிற்கு மிக அருகாமையில், கரங்களைக் கட்டியவாறு ஆழமாக இருந்த தண்ணீரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஓரடி முன்னால் வைத்தாலும் கிணற்றிற்குள் விழுவது உறுதி.

அதைக் கண்டவனுக்கு ஒரு கணம் பதறியது. எங்கே குதித்து விடுவாளோ என்று அஞ்சியவனாக, அவளை நோக்கிச் சென்றவன், தன் கைபேசியை எடுத்துத் தந்தைக்குக் குறுஞ்செய்தியாக,

“நிதார்த்தனி இங்கே தான் இருக்கிறாள்… அவளை அழைத்து வருகிறேன். யாரும் பயப்பட வேண்டாம்…” என்று அனுப்பிவிட்டு, மெதுவாக அவளை நோக்கிச் சென்றான்.

அவளை நெருங்கியதும், தொண்டையைக் கனைத்து, “என்ன… கிணற்றிற்குள் குதித்து உயிர் விடப் போகிறாயா…? ஆழம் போதுமா… வேண்டுமானால் வேறு கிணறு தேடலாமா?” என்று கறாராகக் கேட்க, நிதார்த்தனியின் உடல் ஒரு கணம் இறுகிப் பின் தளர்ந்தது. அந்தக் குரலைக் கொண்டே வந்திருப்பது யார் என்று தெரிந்தது.

ஏனோ ஓங்கரித்துக்கொண்டிருந்த மனம் இப்போது ஒரு நிலைக்கு வந்தது போல அமைதியானது. கூடவே அவளையும் மீறி விழிகள் நனைந்து போயின.

ஆத்திரத்தோடு அந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டவள்,

“நான்… நான்… ஏன் உயிரை மாய்க்க வேண்டும்… அப்படி நான் என்ன தவறு செய்தேன்?” என்றவள், நிதானமாக அவன் பக்கம் திரும்ப,  திரும்பியவளின் முகத்தைக் கண்ட மிகல்திதியன் ஒரு கணம் துடித்துப் போனான். இதயம் வெடித்துச் சிதறி விடுவேன் என்று பயமுறுத்துவது போலத் துடித்தது. எங்கே உண்மையாகவே அது தன் துடிப்பை நிறுத்தி விடுமோ என்று அஞ்சியவன் போல, வலக் கரத்தால் இடது மார்பை அழுத்திக் கொடுத்தவாறு நிதார்த்தனியை வெறிக்க, அவளோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதுவா அவனுடைய நிதார்த்தனி. எப்போதும் உயிர்த் துடிப்போடிருக்கும்  விழிகள் எங்கே. சிவந்த செவ்விய இதழ்கள் எங்கே. அவை காயப்பட்டுக் கண்டித் தடித்துத் தம் அழகைத் தொலைத்துப் பரிதாபமாக நிற்கின்றனவே.

கண்ணுக்குத் தெரிந்த, தேகம் முழுவதும் கண்டிக் கறுத்து தழும்புகள் என்று தெய்வமே, என்ன கொடுமை இது…? அந்த விபத்து நடந்து ஒரு கிழமை ஆயிற்றே. அப்படியிருந்தும் அந்தக் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கிறது என்றால், சிதைக்கப் பட்டவள், எத்தனை பாரதூரமாகச் சிதைக்கப் பட்டிருக்க வேண்டும்…? என்.. தேவதையை இந்த நிலைக்குத் தள்ளியவன் யார்? அவளைப் பார்க்கப் பார்க்கத் தாளவில்லை அவனுக்கு. அவனையும் மீறிக் கண்கள் கலங்கின.

ஆனால் அவளோ, அவன் விறைத்து நின்றிருந்த நிலையைக் கண்டு, “இப்… இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதா?” என்றாள் வலி நிறைந்த குரலில். அவனோ, அவள் முகத்தை விட்டு விழிகளை அசைக்காது, ஆம் என்று தலையை ஆட்டி,

“ம்… நிறைய…” என்ற போது அவனுடைய குரல் பயங்கரமாக நடுங்கியது.

அதைக் கேட்டதும், நிதார்த்தனியின் விழிகளில் இருந்து இரு துளிக் கண்ணீர் வழிந்து சென்றது. ஒரு வேளை அவன் பரிதாபப் பட்டிருந்தால், அவள் மேலும் இறுகியிருப்பாளோ…!

ஆனால், அவனுடைய எதிர்மறையான பதில், அவளை இறுக வைப்பதற்குப் பதில், இளக வைக்க, மெதுவாக அவளுடைய உதடுகள் அழுகையில் துடிக்க முயன்றன. அதைக் கண்டவன் மேலும் கலங்கிப் போனான்.

அவள் மட்டும் பிரதாபனுக்கு நிச்சயிக்கப் படாதிருந்தால், இந்த நேரம் அவளை இழுத்துத் தன் கைவளைவுக்குள் நிறுத்தி அவளுடைய அத்தனை வலியையும் தன்னதாக்கியிருப்பான். ஆனால் முடியாதே!

இனி எக்காலத்திலும் அவளைத் தன்னவளாக்க வழி இல்லையே. பெரும் ஏமாற்றமும் ஏக்கமும் தோன்ற, சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவனாக,

“எதுவாக இருந்தாலும், இரண்டடி தள்ளி நின்று பேசலாமே… ஒருவேளை… நீ தவறி விழுந்து ஏடாகூடமாகி விட்டால்… அதைச் சுத்தப்படுத்தும் செலவு வேறு… இதில் நான் வேறு பக்கத்தில் இருக்கிறேன். என்னைக் கைதி செய்து களி தின்ன வைத்துவிடுவார்கள். என்னை நம்பி கனடாவில் ஒரு நிறுவனமே இருக்கிறது… இது தேவையா?” என்று கேட்டவாறு அவளை நோக்கி நடக்க, இவளோ மீண்டும் திரும்பிக் கிணற்றை ஏறிட்டாள்,

“ஆழமாக இருப்பதால்தான் தண்ணீர் அசையாமல் இருக்கிறது…” என்றவள், அவன் சொன்னது போல இரண்டடி தள்ளி நின்று கொள்ள, அதற்குப் பிறகுதான் இவன் நிதானமாக மூச்சு விட்டான்.

தன்னை மறந்து அவளை நோக்கி ஓரடி வைக்க முயல, அவளோ சடார் என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவள் பார்த்த விதத்தில் அதில் தெரிந்த அச்சத்தையும், கூடவே தெரிந்த சீற்றத்தையும் கண்டவன், அப்படியே அசையாது நின்றான்.

இதயத்தில் இரத்தம் கசிய, அவளைப் பெரும் வேதனையுடன் பார்த்தவன்,

“எ… எப்படி… எப்படி இருக்கிறாய்?” என்றான் மென்மையாக. என்னதான் முயன்றும் குரல் நடுங்கத்தான் செய்தது.

அவளோ, தோள்களைக் குலுக்கி, “எனக்கு என்ன…? இருக்கிறேன்… மிக நன்றாக இருக்கிறேன்” என்ற போது, அவள் முகத்தில் தெரிந்த எல்லையில்லா வலியைக் கண்டு, இவன் ஒரு முறை செத்து மீண்டான்.

“இ… இங்கே தனியாக என்ன செய்கிறாய். உன்னைக் காணவில்லை என்று, அத்தையும் மாமாவும் பதறிப் போயிருக்கிறார்கள்…” என்று அவன் சொன்ன போது, இவள் முகத்தில் திரை விழுந்தது. எதையோ கூறுவதற்காக வாயைத் திறந்தவள். பின் மூடியவளாக நிற்க.

“என்னம்மா… ப்ளீஸ்… வா வீட்டுக்குப் போகலாம்…” என்றான் அவள் இதயத்தைத் தொட்ட குரலில்.

அவளோ வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துவிட்டு மறுப்பாகத் தலையசைத்து, “எ… எனக்கு வீட்டில்.. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை…” என்றாள் முகம் கசங்க.

அதைக் கேட்டவன் உள்ளம் உருக, “நிதா…” என்றான், பட்டை ஒத்த  மென்மையான குரலில். அந்தக் குரலில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள், “என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்…” என்றாள் ஆத்திரத்தோடு.

பின் தலையைப் பற்றிக் கொண்டவள், “கடவுளே… என்னால் முடியவில்லை… சத்தியமாக முடியவில்லை… அம்மாவின் பரிதாபப் பார்வை, அப்பாவின் தவிப்பு, அக்காவின் கலக்கம், ஊர் மக்களின் மறைமுகப் பேச்சு, ஐயோ…! இதெல்லாம் என்னைப் பைத்தியமாக ஆக்கிவிடும் போலத் தோன்றுகிறதே…! எந்தத் தவறும் செய்யாமல், பெரும் தவறு செய்தவள் போல என்னைக் கலங்கடிக்கிறதே… நான் என்ன செய்யட்டும்…” என்றவள் கால் மடக்கித் தரையில் அமர்ந்து,

“ஐ ஹேட்… இட்… ஐ ஹேட் இட்…” என்றாள் அழுதவாறு. பின் ஆத்திரத்தோடு அவனை வெறித்து,

“ஐ ஜஸ்ட் லொஸ்ட் மை வேர்ஜினிட்டி… யாரோ ஒரு புறம்போக்கு என் அனுமதியில்லாமல் பலவந்தப் படுத்தி என் கன்னித்தன்மையை எடுத்து விட்டான்… அவ்வளவு தான்… அதற்கெதற்கு இத்தனை பரிதாபம், பரிதவிப்பு… அக்கறை… நான் உயிரையா விட்டுத் தொலைத்தேன்… அந்தக் கறுமாந்திரம் போனதையிட்டு நானே கலங்கவில்லை… ஆனால்… இவர்கள் ஏன் நான் செத்தது போல இப்படி வருந்துகிறார்கள்… கடவுளே…,! அவர்களின் வேதனை என்னைக் கொல்லாமல் கொல்கிறதே…! தவறு செய்தவள் போலத் தோன்ற வைக்கிறதே…! உள்ளே குத்திக் குடைகிறதே…! ஏதோ தொலைக்கக் கூடாத ஒன்றைத்  தொலைத்து விட்டதாக எண்ண வைக்கிறதே…! நான் என்ன செய்யட்டும்… என் உடல் வலியை விட, அவர்கள் என்னைப் பார்க்கும் விதம் என்னைக் கொல்கிறது…! என்னை எழ விடாது வீழச் செய்கிறது… கடவுளே, என்னால் பழைய நிதார்த்தனிவாக மாற முடியாதா…? என்னால் பழையது போல நடமாட முடியாதா?” என்று அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து விம்மி வெடித்து அழ, அதைக் கண்ட மிகல்திதியனால், அதற்கு மேல் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

ஓரெட்டில் அவளை நெருங்கியவன், அவளுக்கு முன்பாக சட்டென்று மண்டியிட்டமர்ந்து அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொள்ள, அவளோ முதலில் அவனிடமிருந்து விடுபடப் போராடினாள். ஆனால் அவனோ அவளை விடாது மேலும் தன்னோடு இறுக அணைத்தவாறு, அவளுடைய முதுகை வருடி,

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே…இட்ஸ் ஓக்கே பேபி… இட்ஸ் ஓக்கே…” என்று அவளைத் தட்டிக் கொடுக்க, முதலில் திமிறியவள், பின் மெல்ல மெல்ல அடங்கி விசும்பத் தொடங்கினாள்.

கடந்த ஒரு  கிழமையாக, அவள் பட்ட வேதனை அவளுக்கு மட்டும்தான் தெரியும். யாரோ இனம் தெரியாத ஒருத்தனால் கன்னித் தன்மையைப் பலவந்தமாக இழக்கும் போது ஏற்பட்ட உடல் வலியை விட, பிறரால் ஏற்பட்ட மன வலிதான் அவளைப் பலமாகத் தாக்கியது.

யாரைப் பார்த்தாலும் அந்த விழிகளில் தெரிந்த பரிதாபம் அவளைக் கொல்லாமல் கொன்றது. யாரிடமும் தன் உணர்வுகளைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், உள்ளுக்குள்ளேயே இறுகிப் போன அவளுக்கு… மிகல்திதியனின் அந்த எதிர்மறையான பதிலும், எதிர்மறையான செயல்பாடும், உள்ளே அடைத்துப் பூட்டியிருந்த அழுத்தத்தை மெல்ல மெல்லத் தளர்த்த, அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவளாகக் கதறி விட்டாள், நிதார்த்தனி.

ஒரு கட்டத்தில் அழுகை கூட வரம் தான் போல. அழுதவளின் தலையை வருடி, முதுகை வருடி, கன்னத்தை வருடி என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றவன், பின் மென்மையாக,

“கண்ணம்மா… உன்னைச் சுற்றியிருந்த அவர்களின் கலக்கத்திற்குக் காரணம், அந்த நிறம் தெரியாத, கண்ணுக்குத் தெரியாத ஒன்றை நீ இழந்ததால் என்றா நினைக்கிறாய்… இல்லைமா…! அவர்களின் வருத்தம், நீ இப்படிக் கலங்கி நிற்கிறாயே என்பது தான்… உன்னை ஒருத்தன் வலிக்கச் செய்து விட்டானே என்கிற தவிப்புதானே தவிர, நீ நினைப்பது போல எதுவும் இல்லை நிதா… தயவு செய்து கலங்காதே… திடப்படுத்திக் கொள்…!” என்று தட்டிக் கொடுக்க,

அதுவரை விசும்பிக் கிடந்தவளுக்கு மெல்ல மெல்ல உணர்வுகள் திரும்பத் தொடங்கியது. அப்போது தான் அவனுடைய அணைப்பில் தான் இருப்பது புரிந்தது, நிதார்த்தனிக்கு.

அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்தவள், அவனிடமிருந்து விலக, அதற்கு மேல் அவனும் அவளை இறுகப் பிடிக்கவில்லை.

விலகியவளை ஏறிட்டுப் பார்த்தவன், “யு ஓக்கே நவ்?” என்றான் மென்மையாக.

மீண்டும் கண்ணீரைத் துடைத்தவாறு, ஆம் என்று தலையை ஆட்டியவள், “சா… சாரி” என்றாள் விக்கியவாறு.

“லீவ் இட்…” என்றவன் இப்போது தரையில் அமர்ந்து இரண்டு முழங்கால்களையும் மடித்து அதைச் சுற்றிக் கரத்தைப் போட்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய கூரிய விழிகள், தன்னைத் துளைப்பதை உணர்ந்தவள், “உ.. உங்களுக்கு எப்படித் தெரியும்… யார்… சொன்னார்கள்…” கேட்கும் போதே, குரல் கசங்கியது, நிதார்த்தனிக்கு.

“நேற்று முன் தினம்தான் தெரியும்… அப்பா சொன்னார்கள்…” என்றதும், அவனை அதிர்வுடன் பார்த்தாள், நிதார்த்தனி.

‘நேற்று முன்தினமா… தெரிந்த உடனேயே கிளம்பி வந்து விட்டானா… ஏன்… எதற்கு?’ விழிகள் கனக்க அவனை ஏறிட்டவள்,

“ஏன்…?” என்றாள் குரல் நடுங்க. அவனோ அவளைப் புரியாமல் பார்த்து,

“புரியவில்லை… ஏன் என்றால்…”

“செய்தி தெரிந்ததும், ஓடி வந்து இருக்கிறீர்களே… அதற்கு… அதற்குக் காரணம்…?” முடிக்க முடியாமல் அவள் திணற,

அவனோ உதடுகளைப் பிதுக்கி, “வேறு எதற்கு…. நீ படும் சிரமத்தை ரசிக்கத் தான்…” என்றபோது அதில் தெரிந்த எல்லையில்லா வலியை உணர்ந்தவள், அவனை வெறித்துப் பார்க்க, வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தியவன்,

“இதற்கான பதில் உனக்குத் தெரியும் நிதார்த்தனி…” என்றான் மென்மையாக. அதைக் கேட்டு அதிர்ந்தவளாக அவனை நிமிர்ந்து பார்த்து,

“இன்னும் அதை… அதை மறக்க வில்லையா…” என்ற போது, விழிகள் கலங்கிக் கண்ணீர் வழிந்தது.

“மறப்பதா… மறப்பதற்கு இது என்ன காய்கறி வியாபாரமா… காதல்… உன் மீது வைத்த அந்தக் காதல், எந்தக் காலத்திலும் மறக்காது. அழியாது… உனக்கு ஒன்றென்றால், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நான் ஓடி வருவேன்…” என்றவனை நம்ப முடியாமல் பார்த்தவள்,

“எனக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது, திதியன்…” என்று அவள் சொன்ன போது, அவளை முழு நிமிடம் வெறித்தான் மிகல்திதியன். அவளுடைய அந்தத் திதியன் என்கிற அழைப்பிற்காகவே உயிரையும் கொடுக்கலாமே.

“நீ திருமணம் முடித்துக் குழந்தைகளோடு வாழ்ந்தாலும் கூட, உனக்கு ஆபத்தென்றால் வருவேன்… உனக்காக வருவேன்…” என்ற போது நிதார்த்தனிக்கு விம்மி வெடித்துக் கொண்டு வந்தது.

பிரதாபனின் காதலுக்கும் இவனுடைய காதலுக்கும் தான் எத்தனை வேறுபாடு. அவள் குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, ஒரு முறை வந்து பார்த்தான்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று கூட கேட்கவில்லையே. விசாரிக்கவில்லை. குறைந்தது அவள் கரத்தைப் பற்றி நான் இருக்கிறேன் கலங்காதே என்று கூடச் சொல்லவில்லை.

இத்தனைக்கும் எத்தனை இனிமையாகப் பேசினான். எத்தனை அன்பாக நடந்து கொண்டான். உன் மீது உயிரென்றெல்லாம் பிதற்றினானே…! அவள் மீது பித்து என்பது போல நடந்து கொண்டான்…! எத்தனை முறை வார்த்தைகளால் அவளைக் கூசச் செய்திருக்கிறான்… எத்தனை முறை உன்னைக் காதலிக்கிறேன் என்று புலம்பியிருக்கிறான்… ஆனால் இப்படி என்றதும், அவள் மீது காட்டிய அந்தப் பைத்தியக்காரத்தனமான அன்பு, காதல் எல்லாம் எங்கே போயிற்று… நெஞ்சம் கசங்க,

“பிரதாபன், உங்கள் அக்கறையில் பாதியாவது காட்டி இருக்கலாம்… என் மனம் கொஞ்சமாவது அமைதி அடைந்து இருக்கும்…” ஏக்கத்துடன் சொன்னவளை ஏறிட்டவன்,

“அவனுக்கும் அதிர்ச்சியாக இருக்கும் நிதா… கொஞ்சம் அவகாசம் கொடு, மீண்டும் உன்னைத் தேடி வருவான்…” என்றவனை வலியோடு ஏறிட்டவள்,

“உ… உங்களுக்கு என் மீது கோபமே வரவில்லையா…” என்றாள் குரல் கம்ம. அவனோ வேதனை நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தி,

“ஏனில்லை… நிறையவே இருக்கிறது… என்னை விடுத்துப் பிரதாபனை நீ தேர்ந்து எடுத்ததை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அல்லும் பகலும், நீ இன்னொருத்தன் மனைவி என்பதை ஏற்றுக் கொள்ள, நான் படாத பாடு படும் போதெல்லாம், உன் மீது கோபப் பட்டிருக்கிறேன்… இந்தக் கணம் வரை அந்தக் கோபம் அப்படியேதான் இருக்கிறது…” என்றவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. எப்படிச் சொல்வாள், அந்த நேரத்தில் அவனோடு வாழ்வதை விடப் பிரதாபனோடு வாழும் வாழ்க்கை அழகானதாக இருக்கும் என்று நினைத்தாள். நம்பினாள்…!

ஆனால், அந்த நம்பிக்கை பின்னாளில் இப்படி ஆட்டம் காணும் என்று அவள் நினைத்து இருக்கவில்லையே. முகம் கசங்கி நிற்க,

அதை உணர்ந்து, “நிதா… எல்லோருடைய வாழ்க்கையும் அழகானதாக இருப்பதில்லை. எங்கோ ஒரு புள்ளியில் இப்படியான சவால்களைச் சந்திக்க வேண்டித்தான் வரும்… இத்தனை பெரிய வேதனையை எத்தனை சுலபமாகத் தாண்டி வந்து விட்டாய்.. இனியும் வருவாய்…” என்று கூறியவனுக்கு அவள் மீது அவன் காதல் கொள்ளக் காரணமே அந்தத் திடமும், உறுதியும் தானே.

அவளை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அந்த அதிசயத் தன்மை அவளிடம் இருந்ததால் தானே அவள் மீது பைத்தியமானான்.

ஆனால், இப்போது அவள் உடைந்து போய் இருப்பதைக் காணும் போது, அடி நெஞ்சில் பெரும் வலி எழுந்தது. அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் கலங்கி நிற்கும் போது, அவனுடைய கைபேசி அடித்தது.

எடுத்துப் பார்க்க, தந்தைதான் அழைத்திருந்தார். உடனே எடுத்துக் காதில் பொருத்த,

“எங்கேப்பா இருக்கிறாய்…?” என்றார் கதிர்காமர் சற்று பதட்டமாக.

“இங்கே… வயல் வெளியில்… நிதார்த்தனியோடு பேசிக் கொண்டு இருக்கிறேன்பா…”

“ஏதாவது பிரச்சனையா தம்பி…”

“இல்லைப்பா… அப்படியே தான் இருக்கிறாள். நாம் காட்டும் பரிதாபம் தான் அவளைக் குன்றிக் குறுக வைக்கிறது” என்றதும்,

“ஓ…” என்ற கதிர்காமரின் குரல் இப்போது, சற்று தாழ்ந்து ஒலித்தது. “தம்பி… பிரதாபன் வந்து இருக்கிறான்…” என்றதும், அதைக் கேட்ட மிகல்திதியனின் முகம் வாடியது.

“ஓ…” என்றவனுக்கு அதற்கு மேல் பேச முடிந்திருக்கவில்லை.

“நிதார்த்தனியோடு பேச வேண்டுமாம்…” என்ற போது தந்தையின் குரலில் தெரிந்த தயக்கத்தை உணர்ந்தவன், சடக் என்று எழுந்து சற்று தள்ளிப் போய், “ஏ… ஏதாவது பிரச்சனையாப்பா…” என்றான்.

“தெரியவில்லை… ஆனால்… எனக்கேதோ சரி இல்லை என்று தோன்றுகிறது… பிரதாபன் ஏதோ ஒட்டியும் ஒட்டாத மாதிரியும் இருக்கிறான்… நீ… நிதார்த்தனியை அழைத்து வருகிறாயா…” என்றதும்,

திரும்பி நிதார்த்தனியைப் பார்த்தான். அவளோ எங்கோ வெறித்துக் கொண்டிருக்க,

“சரிபா… அழைத்து வருகிறேன்… பிரதாபன் ஏதாவது சொன்னானா…”

“இல்லை… நிதார்த்தனியோடு பேசவேண்டும் என்று மட்டும் தான் சொன்னான். அதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை. அமர்ந்திருக்கிறான்….”

“சரிப்பா…” என்றவன் கைபேசியை அணைத்துவிட்டுத் திரும்பி நிதார்த்தனியைப் பார்த்து.

“வீட்டிற்குப் போகலாமா…”  என்றான்.

இவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமலே மறுப்பாகத் தலையை அசைத்து,

“வேண்டாம்… இங்கேயே இருக்கிறேன். அங்கே போனால் கலங்கி இருக்கும் அம்மா அப்பாவின் முகத்தைப் பார்க்க வேண்டும், சற்று உடலை அசைத்தாலும், வலிக்கிறதா வைத்தியரை அழைக்கவா என்று ஒவ்வொரு விநாடியும், அந்த அவல நாளை, எனக்கு நினைவு கூறச் செய்கிறார்கள்… நான்… நான் இங்கேயே இருக்கிறேனே…” என்று கலக்கத்துடன் கூற, இவனோ அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, “பிரதாபன் வந்திருக்கிறானாம்…” என்றதும்,

விலுக் என்று நிமிர்ந்து மிகல்திதியனைப் பார்த்தாள் நிதார்த்தனி. மீண்டும் பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தாள்.

பின் என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்தவள் ஒரு கணம் தடுமாற,

கண் இமைக்கும் நொடியில் அவளைத் தாங்கிப் பிடித்தான், மிகல்திதியன்.

ஒரு முழு விநாடி அவனுடைய கரங்களில் அசையாமல் கிடந்தவள், மெதுவாக விலகி, கடகடவென்று வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

What’s your Reaction?
+1
24
+1
2
+1
5
+1
1
+1
14
+1
3
Vijayamalar

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

10 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

12 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

2 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

4 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago