Categories: Amazon Kindle

விழியே…! விலகாதே… விலக்காதே… – இன்று

இன்று….

 

அன்று அவனுக்குத் தூக்கம் சுத்தமாக வரவில்லை. அதுவும் கடந்த ஒரு கிழமையாகப் பொட்டுக் கண்கூட அவனால் மூடிமுடியவில்லை… ஏனோ நெஞ்சம் அவஸ்தையில் தவித்தது. ஏதோ தவறு நடப்பது போல உள் மனம் குத்திக் குடைந்துகொண்டிருந்தது… அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று புரியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பவனுக்கு எப்படித்தான் தூக்கம் வரும்? உருண்டு புரண்டு திரும்பிக் கவிழ்ந்து… அத்தனை முறையையும் பின்பற்றியாயிற்று… ம்கூம்… இம்மிகூட அவனால் உறங்க முடியவில்லை.

பின்னே… தூக்கம்தான் எப்படி வரும். திருமணம் நடக்க இருப்பது அவன் உயிராய் காதலித்த காதலிக்கல்லவா. நெஞ்சம் முழுவதும் ஏமாற்றமும் வேதனையும் விம்மி வெடித்து அவனைக் கொல்லாமல் கொன்றுகொண்டிருக்கும்போது விநாடிப் பொழுதாவது விழிகள் மூடுமா என்ன… அதுவும் கடந்த ஒரு வருடமாக நரகத்தில் உழன்றுகொண்டிருந்தவனுக்கு அவளுடைய திருமண நாள் நெருங்க நெருங்க, எதையோ பறிகொடுத்த உணர்வில் திணறிக்கொண்டிருந்தான்.

இன்னும் ஒரு மாதம்தான்…  அவள் முழுதாக இன்னொருத்தனுக்குச் சொந்தமாகிவிடுவாள். அதற்குப் பின் அந்தப் பிரதாபன் அவளை அணைப்பான்… உறவு கொள்வான்… அதற்குச் சாட்சியாகக் குழந்தைகள்… நினைக்கும்போதே இதயம் ஏமாற்றத்தில் வேகமாகத் துடித்தது. படுக்கை, முள்ளாய்க் குத்தி வதைக்கச் சட்டென்று எழுந்தமர்ந்தான் மிகல்திதியன். கற்பனையில் அந்த வடிவான உடலை இன்னொரு ஆண் தழுவும் காட்சி வந்து போகத் துடித்துப்போனான் மிகல்திதியன். வியர்த்துக் கொட்டியது. நெற்றியில் பூத்த வியர்வையைப் புறங்கையால் துடைத்து விட்டவனுக்குக் கரங்கள் நடுங்கின. கற்பனையில் கூட அந்தக் காட்சியைக் கண்டு கழிக்க முடியவில்லையே. நிஜத்தில் எப்படி அதைத் தாங்கப் போகிறான்?

அந்த நினைவே உயிரோடு கொல்ல, அதிலிருந்து எப்படியாவது வெளியே வந்துவிடவேண்டும் என்கிற வேட்கையில், சற்றுச் சரிந்து, மேசை விளக்கைப் போட்டுவிட்டு, அதற்குப் பக்கத்திலிருந்த  புத்தகம் ஒன்றை இழுத்துப் படிக்கத் தொடங்கினான். இது கூட அவளிடம் கற்றதுதான். அவளுக்கு நாவல் படிப்பதென்றால்  கொள்ளைப் பிரியம். இவனுக்குச் சுத்தம். படிப்பு படிப்பு என்று காலத்தைத் தொலைத்தபோது, அவற்றைப் படிக்க எங்கே நேரம். ஆனால், அவள் கிடைக்கமாட்டாள் என்று தெரிந்த பின்பு, வீணாய்ப் போன மனது, அவள் செய்வதைச் செய்துபார்க்க விளைகிறது. அதனால், நாவல்களை விடுத்துத் தனக்குப் பிடித்ததாக ஆவனப் புத்தகங்கள் எடுத்துப் படிக்க முயன்றான்… பெரும்பாலும் தோல்வியைத் தழுவினாலும், முயன்றவரை வாசித்தான். இதோ, இப்போதும் அந்தப் புத்தகத்தைத் திறந்ததும்  மனம் அவளிடம்தான் சென்று நின்றது. அதுவும் படிக்கிறேன் என்று அவள் செய்த அட்டூழியங்கள்  நினைவுக்கு வந்து அவனை இம்சித்தன. சிரமப்பட்டு அவளை மறக்க முயன்றவனாய், புத்தகத்தில் தன் கவனத்தைச் செலுத்த, அந்தோ பரிதாபம். மாறாக எழுத்துகளில் அவள் உருவம் தோன்றிக் கைகொட்டிச் சிரித்தது.

நன்றாகப் பார்…! மிக நன்றாகப் பார்… எனக்குத் திருமணம்…! இப்போது என்ன சொல்கிறாய்? என்று அவனைப் பார்த்துக் கிண்டலடித்தது.

“xxxxx xxxxx” வாய்க்குள் கெட்டதாய் எதையோ முணுமுணுத்துவிட்டு, அதற்கு மேல் புத்தகத்தைப் படிக்க முடியாமல், சட்டென்று அறைந்து மூடியவன், அதைக் கட்டிலில் தூக்கி எறிந்துவிட்டு, ஏமாற்றத்துடன் விழிகளை அழுந்த மூடிச் சற்று நேரம் கிடந்தான்.

காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் பாரதி மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான்… உயிரோடு இருந்தாலும், செத்தவராகத்தான் தோன்ற வைக்கிறது அந்தப் பாழாய்ப் போன காதல்… அவள் மீது காதலில் எப்போது விழுந்தான்… எப்படி விழுந்தான்? சத்தியமாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு புள்ளியில், அவளுடைய ஒரு செயலில் மொத்தமாய் வீழ்ந்து போனவனுக்கு இன்றுவரை எழத்தெரியாது இருப்பதுதான் விந்தையிலும் விந்தை. அதுவும், உலகத்திலேயே பிடிக்காத ஒருத்தரைச் சொல் என்று கேட்டால், அவன் முதலில் சுட்டிக்காட்டுவதும் அவளைத்தான்… ஒருத்தருக்காக உயிரை விடும் அளவுக்கு நேசிப்பது யாரை என்று கேட்டாலும் அவன் சுட்டிக்காட்டுவது அவளைத்தான். எத்தனை பெரிய அவலம் இது.

ஆனால் அவனுடைய வெறுப்புக்கும் அப்போது மதிப்பிருக்கவில்லை. அவனுடைய காதலுக்கும் இம்மியளவு மதிப்பிருக்கவில்லை.

அப்படியிருந்தும், பாழாய்ப் போன அகம்பாவத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அவளிடம் மணக்குமாறு கேட்டுச் சென்றான்தான். ஆனால், அவள் கைகொட்டிச் சிரித்ததை நினைக்கும்போது,  இப்போதும் நெஞ்சம் அனலில் வெந்து துடிக்கிறது. அன்று மனதால் அடிவாங்கியவன்தான், ஓராண்டும் ஆகிவிட்டது. இந்த நொடிவரை அவனால் எழ முடியாததுதான் பரிதாபமே. அங்கிருக்க முடியாமல் கனடா வந்து, தன் முழுக் கவனத்தைப் படிப்பிலும், வேலையிலும் செலவழித்தாலும் கூட, எஞ்சிய நேரத்தில் அவளாட்சியாகத்தானே இருக்கிறது. என்னதான் செய்வான் அவன். மழை நின்ற பின்னும் தூவானம் நிற்காத கதையாக, அவள் நினைவுகள் சதா அரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு கட்டத்தில், இருக்கும் வேட்கைக்கு அவளைக் கடத்திச் சென்றாவது வாழ்ந்துவிடலாமா என்று பல முறை எண்ணிவிட்டான். ஆனால் நல்ல தாயின் வளர்ப்பு அவனை அப்படிச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது. அவனுடைய பிடிவாதத்திற்காக அவளைப் பலவந்தப் படுத்தி வாழ்ந்துவிடலாம்தான். அதற்குப் பின்னான வாழ்க்கை? நரகமாகிவிடாதா? அவனுக்கு மட்டுமா, அவளுக்கும்தானே அது கொடுமையாகிப் போகும். தவிர, அவள் ஒன்றும் மற்றப் பெண்களைப் போல, தாலிகட்டிவிட்டாய், வாழ்கிறேன் என்று பின்தொடரும் ரகமில்லை. தாலி கட்டிய அடுத்த விநாடியே அதைக் கழற்றி அவன் முகத்தில் விட்டெறிந்து விட்டுப் ‘போடா போ…’ என்று போய்விடுவாள். ஏற்கெனவே அவளுக்கு அவன் மீதிருந்த மதிப்பு போய்விட்டது. இதையும் செய்துவிட்டால், மொத்தமாக வெறுத்துவிடுவாள். ம்கூம்… அப்படி வாழ்வதை விட, இப்படித் தனியாக வாழ்ந்து சாவதே மேல்… இத்தனை  வியாக்கியானமாக யோசித்தும் என்ன பயன்? வெட்கம் கெட்ட மனம் மீண்டும் அவளிடம்தான் போய் நிற்கிறது.

மீண்டும் அவள் நினைவில் நெஞ்சம் தவிக்க, நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டுக்கொண்டான் மிகல்திதியன். அவசரமாக சிகரட் கேட்டது தொண்டை.

எழுந்தவனின் தலை கூரையைத் தொட்டுவிடும் அளவுக்கு உணர்ந்து நின்றது. அம்மாடி… இத்தனை உயரமா இவன்.. குறைந்தது ஆறடி நான்கங்குலமாவது இருப்பான் போலவே…

நடந்த சென்றவன், சற்றுத் தள்ளியிருந்த மேசையிலிருந்து ஒரு சிகரட் பெட்டியைம் லைட்டரையும் வாரி  எடுத்து, அதிலிருந்து ஒரு  சிகரட்டை உருவி வாயில் பொருத்தியபோது, மேற்சட்டையில்லா வெற்று மேனி,  அந்த மின்விளக்கில் கிரேக்கச் சிற்பம்போல திடகாத்திரமாகக் காட்சி கொடுத்தது. சுருண்டு கலைந்த கரிய குழல். ஆங்காங்கே ஒன்றிரண்டு இளநரை. அடர்ந்த புருவங்களின் கீழ் சோர்வை ஏந்தியிருந்தாலும், கூரிய விழிகள். நேரான செதுக்கிய நாசி. அழுத்தமான நேர் உதடுகள். சிரித்தால் வரிசைப் பற்கள் பார்ப்போரை வியக்க வைக்கும். உடற்பயிற்சியால், உருண்டு திரண்ட புஜங்கள். அவை நிச்சயமாக பாகு பலியை நினைவுகூரும். அதற்கு இரண்டங்குலம் தோள் புறமாக, எப்போதே எட்டங்குளத்திற்கு நீண்டிருந்த வெட்டுக் காயம். அதில் தையலிட்ட அடையாளம். இறுகித் திரண்ட கரங்கள். முடியடர்ந்த அகன்ற இறுகிய மார்பு.  ஆறு அடுக்குகள் கொண்ட ஒட்டிய வயிறு. பலம் பொருந்திய கால்கள்… கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில், இருக்கும் கம்பீரத்தை அதிகரிக்கச் செய்யும் கரும் சந்தன நிறம். நிச்சயமாகப் பல பெண்களின் கனவு நாயகனான இருந்திருப்பான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவனைப் போய் ஒருத்தி மறுத்திருக்கிறாள் என்றால், அவளுக்கு நிச்சயமாகக் கண் இல்லாமல்தான் இருக்க வேண்டும்.

சிகரட்டை உதட்டில் பொருத்தியவாறு பல்க்கனியைத் திறக்க, மெல்லிய குளிருடனான காற்று அவனுடைய பலம் பொருந்திய வெற்றுத் தேகத்தை வருடிச் சென்றது. ஆனாலும் அது அவனுக்கு உறைத்தது போலத் தெரியவில்லை. உள்ளே எரியும் எரிவை நிச்சயமாக அந்தக் குளிர்காற்றால் தணிக்க முடியாது.

அந்தக் குளிரை ஒரு முறை உள் வாங்கியவன், அடுத்து, சிகரட்டின் நுனியில் தீ வைக்க, அது கற்பூரமாய் பற்றிக்கொண்டது. அடுத்து அதன் புகையை ஒரு இழுவை இழுத்தவாறு  வெளியே எட்டிப்பார்த்தான். பன்னிரண்டாம் மாடியிலிருந்து மின்விளக்கைத் தூவிவிட்ட உலகம் சிறிதாய்த் தெரிந்தது.  மீண்டும் ஒரு முறை சிகரட்டை இழுத்துப் புகையை வெளி விட, இப்போது கொஞ்சமாய்த் தவிப்புக் குறைந்திருந்தது. ஆனாலும் அவளுடைய முகம் மட்டும் பசுமரத்தாணியாக நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருந்ததால் அந்த அமைதியும் அதிக நேரம் நீடிக்கவில்லை.

நிச்சயமாக அவளைத் தவிர வேறு எவளையும் அவனால் சிந்தையாலும் தொட முடியாது என்பது புரிந்தது. இன்னும் அவளை அணைத்த அணைப்பும், முத்தமிட்ட உதடுகளும் மரணிக்கும் தருவாயில் கூட மறந்துபோகாது. இப்போது கூட அவளுடைய உடலின் மென்மையை அவனால் உணர்ந்து கொள்ள முடியும். கூடவே வேறு யாருக்கோ சொந்தமாகப் போகிறவளை, இப்படி நினைத்துத் தவிக்கிறோமே என்கிற தவிப்பும் எழுகிறது. மனதிற்கேது கடிவாளம். குரங்கை நினைக்காது மருந்தைக் குடித்தவன் கதைதான் அவனதும்.

எரிச்சலுடன் சிகரட்டில் பூத்த சாம்பலைத் தட்டிவிட்டு இன்னொரு முறை உதட்டில் பொருத்திப் புகையை இழுக்க, இரைப்பை வரை சென்று படர்ந்தது புகை. மீண்டும் அதை வாயருகே எடுத்துச் சென்ற வேளை, இதயத்தில் ஒருவித படபடப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.

ஏன் என்று தெரியவில்லை… கடந்த ஒரு கிழமையாக அந்தப் படபடப்பு அதிகமாக இருக்கிறது. ஏதோ தவறு செய்தது போல, ஒரு வித தவிப்பைக் கொடுக்கிறது. ஒருவித ஒவ்வாமையில் மனம் கிடந்து படபடக்கிறது…  எங்கோ ஏதோ ஒரு தவறு நடப்பது போல உள்ளே எதுவோ சொல்லிக்கொண்டிருக்கிறது… ஆனால் என்ன என்று இவனால்தான் புள்ளியிட்டுக் காட்டமுடியவில்லை.

குழப்பத்துடன் தலைமுடியை வாரி விட்டுக்கொண்டிருக்க, அவனுடைய கைப்பேசி அடித்தது.

இந்த நேரம் யார் எடுக்கிறார்கள்? இப்போது பன்னிரண்டு மணிக்கும் மேலிருக்குமே… சட்டென்று கருணை பொங்கும் முகத்துடன் அன்னை ஜயந்தி வந்தார்.

அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனையா?  பதறி அடித்தவனாக சிகரட் துண்டைக் கீழே போட்டு காலால் மிதித்தவன், விரைந்து உள்ளே சென்று உயிரூட்டப்பட்டுக்கொண்டிருந்த கைப்பேசியை இழுத்தெடுத்து, யார் என்று பார்த்தான். .

அவனுடைய தந்தை கதிர்காமர்தான் அழைத்திருந்தான்.

பதட்டத்துடன் அதை எடுத்துக் காதில் பொருத்தி,

“அப்பா…” என்று அழைக்க,

“மகன்… ஒரு முறை வந்துவிட்டுப் போகிறாயா..” என்றார் குரல் கரகரக்க.

“அப்பா… என்னப்பா… என்னாச்சு…  அம்மா… அம்மாவுக்கு…” அவன் முடிக்க முடியாமல் திணற,

“அம்மாவுக்கு ஒன்றுமில்ல…” என்று தயங்கியவர், சற்றுப் பொருத்து “இது… நிதார்த்தனிக்கு…” என்று கூற மிகல்திதியனின் உலகம் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது.

“நி… நிதாவுக்கா…? அவளுக்கு… அவளுக்கு என்ன?” என்று இவன் பதறித் துடித்துக் கேட்க, அடுத்துத் தந்தை சொன்னதைக் கேட்டவனுக்கு உலகமே தட்டாமாலையாகச் சுழன்றது. காதுகள் அடைக்க, மூச்சு விட மறந்தவனாய்த்த திணறினான் மிகல்திதியன். தன் மகனிடமிருந்து சத்தம் வராது போக,

“தம்பி… மகன்.. நீ… நீ..இருக்கிறாய் தானே..” என்கிற தந்தையின் பதட்டத்தில் சுயநினைவு வந்தவனாக,

“அ… அப்பா… இப்போது அவளுக்கு எப்படி… எப்படி இருக்கிறது?” வார்த்தைகள் குழறின. மனமோ, அவன் கேட்டது பொய்யாக இருக்கக் கூடாதா என்று ஏங்கின.

“இரண்டு நாட்கள் மருத்துவமனையில்தான் இருந்தாள்பா… இப்போது வீட்டில்தான் இருக்கிறாள்… யாரோடும் பேசாமல், பித்துப் பித்தவளாக இருக்கிறாள்டா… நானும் அம்மாவும் போய்ப் பார்த்தோம்… எங்களின் முத்தைக் கூட அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை தம்பி… அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு…எனக்குத்தான் மனம் கேட்கவில்லை. ஏனோ உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது…” என்று சொன்ன கதிர்காமரின் குரலிலும் அதீத வலி.

“இது… எப்போதுப்பா இது நடந்தது?” குரல் குழறியது இவனுக்கு.

“ஒரு கிழமையாயிற்று..”

ஒரு கிழமையா? இதனால்தான் இவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்ததா? கலங்கியவனாக,

“ஏன்பா… இதை உடனே சொல்லவில்லை…” என்று படபடப்பும் கோபமுமாகக் கேட்க, சற்று நேரம் அமைதி காத்தார் கதிர்காமர்.

“எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை தம்பி… இதை அறிந்தால் நீ துடித்துப்போவாய் என்று எனக்குத் தெரியுமேப்பா… நீயாவது நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால்… நீ வந்து பார்ப்பதுதான் நல்லது என்று தோன்றுகிறது…” என்று தந்தை சொன்னதைக்  கேட்டவனுடைய கரங்கள் கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கின. கைப்பேசி நழுவிக் கீழே விழுவது கூட உறைக்காமல் பித்துப் பிடித்தவனாகச் சிலையென அப்படியே நின்றிருந்தான் மிகல்திதியன்.

அவனுடைய நிதார்த்தனி… அவனுடைய நிதார்த்தனிக்கா இந்த நிலை…? அந்த உண்மை நெஞ்சத்தை அறையக் கால் மடங்கித் தொப்பென்று தரையில் விழுந்தவனுக்குக் கண்களில் கண்ணீர் கோடிடத் தொடங்கியது. காதலை விட மரணம் கூட சுகமானதோ?

What’s your Reaction?
+1
38
+1
1
+1
3
+1
0
+1
9
+1
1
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍.
    அச்சோ என்னாச்சு என்றாளுக்கு😱😱😱

    • உங்கட ஆளுன்ட வாய்க்கு எதுவும் நடக்கலாம்.

Share
Published by
Vijayamalar

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

16 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

18 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

3 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

4 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago