Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-10

 

அடுத்துக் காரியங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததையும் மீறிப் படு வேகமாக நடந்து முடிந்தன. எந்தச் சம்பிரதாயங்களும் இன்றி, நேரடியாகவே திருமணம் நடைபெற இருந்தது. அதுவும் அவன் விரும்பியது குடிமுறைத் திருமணத்தைத்தான். ஆனால் புஷ்பாதான் அதற்குச் சம்மதிக்கவில்லை.

தங்கள் மூத்த மகளுக்கு முறைப்படி திருமணம் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அதற்கு மதிப்புக் கொடுத்துச் சம்மதித்தான் உத்தியுக்தன்.

அவன் மிகப்பிரபல்யமானவன் என்பதால் அத்தனைப்பேரையும் திருமணத்திற்கு அழைக்க முடியாத நிலையில் நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் மட்டும் திருமணம் நடத்துவதென்று முடிவானது.

அதனால் அங்கும் இங்கும் என்று வெறும் முப்பது பேர்தான் வந்திருந்தார்கள். அதில் முக்கால்வாசிப் பேரும் சமர்த்தியின் உறவினர்கள்தனர்.

இதோ திருமண நாளும் வந்தாகிவிட்டது. மணப்பெண்ணாய் அலங்கரிக்கப்பட்டு, அழகுப் பதுமையாய் மணப்பெண் அறையில் அமர்ந்து இருந்தவளுக்கு ஏனோ நெஞ்சம் படபடத்தது. இன்னும் சில மணி நேரத்தில் திருமதி உத்தியுக்தன் ஆகிவிடுவாள். நினைக்கும்போதே பயப்பந்து நெஞ்சை அடைத்தது.

திருமணம் என்றால் மகிழ்ச்சி தோன்றவேண்டும். உள்ளே குதூகலிக்கவேண்டும். ஆனால்… இங்கே ஏதோ பாரத்தைத் தூக்கி வைத்திருப்பது போலத் தவிப்பாக இருந்தது.

பெண்ணை அழைத்து வாருங்கள் என்று ஐயர் உத்தரவிட்டதும், அண்ணியும் அண்ணனும் ஒரு சில பரிவாரங்களோடு மணமகள் அறைக்குச் செல்ல, அங்கே சமர்த்தி தவிப்போடு அமர்ந்திருந்தாள்.

புஷ்பாவின் விழிகளிலும் கண்ணீர் கோர்த்து இருந்தது. தன் நாத்தனாரின் முகத்தைப் பற்றித் தூக்கி, நெற்றியில் முத்தமிட்டு,

“இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ இன்னொருத்தன் வீட்டுப் பெண்ணாகிவிடுவாய்… அதன் பிறகு உன் மீதான உரிமை நமக்கு இல்லாமல் போய்விடும் அல்லவா…” என்று கூறும்போதே அவருடைய கண்களில் கண்ணீர் பொங்கத் தொடங்கியிருந்தது.

அதைக் கேட்டு தயாளனும் குலுங்கத் தொடங்கிவிட்டார்.

அதைக் கண்டு சமர்த்தியும் விம்மிவிட்டாள். எழுந்தவள், தன் அண்ணனின் மார்பில் விழுந்து, விசும்பத் தொடங்கத் தன் தங்கையை அணைத்துக் கொண்டவர்,

“என் கண்ணே… நீடுழி காலம்… மகிழ்ச்சியாக… சந்தோஷமாக வாழ வேண்டும்…” என்றார் அழுகையினூடே.

யாருக்காக இல்லையென்றாலும், தன் அண்ணன் அண்ணிக்காகவாவது நன்றாக வாழ வேண்டும். இல்லை என்றாலும் நடிக்கவாவது வேண்டும் என்று முடிவெடுத்தவளாக, தன் வேதனையை மென்று விழுங்கிவிட்டு,

“அண்ணா.. உங்களதும், அண்ணியினதும் ஆசியும் இருந்தால் போதும்… நான் மகிழ்ச்சியகாவே வாழ்வேன்…” என்று சமாதானம் கூறும்போதே,

“என்ன புஷ்பா… இப்படி ஆள் ஆளுக்கு அழுதுகொண்டிருந்தால், பெண் எப்போது மணவறை ஏறுவது. நேரம் போகிறது… நல்ல நேரத்தில் தாலி கட்ட வேண்டமா…?” என்று ஒரு பெண் கடிய, அதற்குமேல் சமர்த்தியை அணைத்திருக்க முடியாது அவளை விடுவித்தார் தயாளன்.

இன்னொரு பெண், சமர்த்தியின் முகத்தை மறைத்தாற் போலப் பொன்னிற வலையாலான திரையைப் போட்டுவிட்டு அவளுடைய கரத்தில் மாலையைக் கொடுக்க, மற்றைய பெண்கள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

கரத்திலே மாலையேந்தி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க… அப்படியெல்லாம் இல்லாமல் அச்சத்தில் கால்கள் பின்ன மணவறை நோக்கி நடக்கத் தொடங்கினாள் சமர்த்தி.

சூழ இருந்த பெண்கள் நகைச்சுவையாக எதையோ பேசுகிறோம் என்கிற பெயரில் எதை எதையோ உளறச் சத்தியமாக எதையுமே ரசிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

ஒரு வேளை மனம் விரும்பி இந்தத் திருமணத்தை ஏற்றிருந்தால், அவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் வெட்கத்தில் மேனி சிவந்து சிரிப்பில் குலுங்கியிருக்குமோ? ஆனால் இங்கே விதைத்த வினையை அறுவடை செய்ய அல்லவா மணமேடை நோக்கிப் போகிறாள். நினைக்கும் போதே அவளையும் மீறித் தேகம் தள்ளாடியது.

இப்படியே மாலையைத் தூக்கிப் போட்டுவிட்டு எங்காவது ஓடிவிடமாட்டோமா என்று கூடத் தோன்றியது. நடக்கும் காரியமா அது? அவள் ஒடிவிடுவாள். அதன் பின்… அதை எண்ணும்போதே வேகமாகத் துடித்த இதயத்தின் ஓசை இவள் காதுகளுக்கும் கேட்டது.

அதுவும் அவனை நெருங்கியதும் இவள் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. முகம் வெளிறியது. மெல்லியதாகத் தள்ளாடியவளை ஒரு வெண்ணிறக் கரம் பற்றிக்கொண்டது. யாரோ வெள்ளைக்காரி. அவனுடைய தோழியாம். அன்று அவள்தான் பெண் தோழியாம். பெண் தோழியாக வருவதற்கு அவன் பக்கத்தில் உறவினர்கள் என்று யாரும் இல்லை என்பதால் அவளைப் பிடித்து விட்டிருந்தார்கள்.

கோடி கோடியாகப் பணம் கொட்டி என்ன புண்ணியம்? கரம் கொடுக்க உறவுகள் கூடக் கிடையாது. ஏளனத்துடன் அவனைப் பார்க்க, அவனோ ஐயர் சொன்னதைக் கன சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

பெண் தோழியோ, முடக்கப்பட்ட ரோபோ போல, யாரோ சொல்வதைக் கேட்டு அட்சரம் பிசகாமல் குதுகலமாகச் செய்துகொண்டிருந்தாள்.

பெண் தோழி இவளுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் சென்று மாப்பிள்ளையின் அருகே விட, தன் கரத்திலிருந்த மாலையை மாப்பிள்ளைக்குப் போடுவதற்காகத் தூக்கியவள், அவனுடைய விழிகளில் தெரிந்த ஏளனத்தைக் கண்டு திணறிப் போனாள். அப்படியே மணவறையை விட்டு ஓடிவிட்டால் என்ன என்று கூடத் தோன்றியது சமர்த்திக்கு. ஆனால் முடியாதே. தயங்கி நிற்கையில்,

“மாலையைப் போடாமல் தம்பியையே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி… அவனைத்தான் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறாயே…” என்று யாரோ கூறத் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவனுக்கு மாலையைப் போட்டுவிட்டுப் பக்கத்தில் தொப்பென்று அமர்ந்தாள். கைகால்கள் குளிரெடுத்தன. போதாததற்கு அவனுடைய உடல் சூடு இவளைத் தகிக்கச் செய்ய, நடுக்கத்துடன் தன் அண்ணன் அண்ணியைப் பார்த்தாள்.

அவர்களோ மன நிறைவுடன் ஐயர் சொல்வதைக் கன சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

காப்புக் கட்டிக் கன்னிகாதானம் செய்யும்போது, இவள் வலது பக்கமிருந்து புஷ்பாவும், தயாளனும் தங்கள் தங்கை முழு நிறைவுடன் இருக்கவேண்டும் என்று மனதார வேண்டியவாறு இவளுடைய கரத்தைப் பற்றி அவனுக்கு அருகாமையில் அமர்ந்திருந்த அவனுடைய தாய் தந்தையிடம் கொடுக்கப்போக, ரதியும் ஆதித்தனும் அவளுடைய கரங்களை ஏந்துவதற்காகத் தங்கள் கரங்களை நீட்டிய நேரம், அவளுடைய தளிர் கரம் அவர்களின் கரங்களில் பட முதலே, தன் கரத்தை நீட்டி அவளுடைய கரங்களைப் பற்றி ஏந்திப் பொத்திக்கொண்டான் உத்தியுக்தன்.

அனைவரும் யோசனையோடு அவனைப் பார்க்க, மெல்லிய புன்னகையோடு ஐயரையும், புஷ்பாவையும் பார்த்து,

“இவளை என் வாழ்க்கைத் துணையாகப் பெற்றவன் நான்… இவளைக் காப்பதும் போற்றுவதும் என் கடன்… அதனால் எனதுடமையான இவளை நான்தானே வாங்கிக்கொள்ளவேண்டும். எதற்கு அவர்கள்?” என்று அவன் கேட்க புஷ்பாவினதும் தயாளனுடையதும் முகம் மலர்ந்து போக, அந்தக் கணம் ரதியினதும் அவள் கணவனினதும் முகங்கள் கறுத்துக் கண்டிச் சுண்டிப் போயிற்று.

ஐயரோ மந்திரத்தை ஓதியவாறு கூறைப் புடவையைத் தட்டோடு எடுத்து, அதை அருகே அமர்ந்திருந்த உத்தியுக்தனின் கரத்தில் கொடுத்து,

“பெண்ணிடம் குடுங்கோ…” என்று மணியடிக்க எந்தத் தயக்கமும் இல்லாமல் அந்தத் தட்டை வாங்கியவன், சமர்த்தியை நோக்கி நீட்டியவாறு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

நல்லவேளை அவள் திரை போட்டிருந்தாள். இல்லை என்றால் நிச்சயமாக வெளிறிய அவள் முகத்தையும் நடுங்கும் அவளுடைய உதடுகளையும் கண்டு ரசித்திருப்பான்.

“மாப்பிள்ளை கையால் வாங்கிக்கொண்டு சென்று புடவையை மாற்றிக்கொண்டு வாங்கோ…” என்று ஐயர் கூற அவன் நீட்டிய தட்டை வாங்கிக் கொண்டாள் சமர்த்தி.

தெரிந்து பட்டதா, தெரியாமல் பட்டதா தெரியவில்லை. அவனுடைய வெம்மைக் கரங்கள் அவளுடைய கரங்களின் மீது பட்டு விலக, அக் கரங்களின் வெம்மை அவள் உடலில் பட்டுப் படர்ந்து செல்ல அவள் உடலில் சூடு ஏறுவதற்குப் பதில் கடும் குளிர்தான் எடுத்தது.

வாங்கிய தட்டுடன் நடக்கத் தடுமாறியவளை பெண்தோழியே பற்றிக்கொண்டு நடத்திச் சென்றாள்.

மணமகள் அறைக்கு வந்ததும் சமர்த்திக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பெரும் அழுத்தம் அவளை வியாபிக்க, அவசரமாகக் கழிவறை செல்கிறேன் என்றுவிட்டு, உள்ளே போனவள், தன்னை சமப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள்.

கடவுளே… இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுக்கு மனைவியாகிவிடுவாள். அதற்குப் பிறகு இவளுடைய வாழ்க்கை எப்படி நகரும்? நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது. விளைவு விழிகளில் கண்ணீர் கொப்பளித்தது. தன்னையும் மீறி ஒரு மூச்சு அழுதுவிட்டுக் கலங்கிய முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தவளின் செவிப்பறையில் வந்து விழுந்தது வெளியே நின்றிருந்தவர்களின் பேச்சு.

“என்னடி… இவனுக்கு மட்டும் பெண்கள் சுண்ட முதல் காலில் வந்து விழுகிறார்கள். முன்னம் அந்த ஜூலியட்… அதற்குப் பிறகு வேறு பெண்ணோடு தொடர்பு என்று பத்திரிகையில் கூட வந்தது… இப்படிப் பெண்களைக் கண்டதும் பல்லிழிக்கும் இவனை எப்படி மணக்கச் சம்மதித்தாள்…? திருமணத்திற்குப் பிறகும் அவன் உண்மையாக இருப்பான் என்று என்ன நிச்சயம்? நினைக்கும் போதே அருவெறுக்கிறது. என்னைக் கேட்டால் இந்தத் திருமணம் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிக்காது…” என்று ஒருத்தி கூற, அதற்கு இன்னொருத்தி,

“அடப் போப்பா… இந்தக் காலத்தில் யார்தான் ஒழுக்கம் பற்றிக் கவலைப் படகிறார்கள். அதுதான் அவனிடம் பணம் கொட்டிக் கிடக்கிறதே… அது போதாதா? விவாகரத்துப் பெற்றாலும் அவளுக்கு இலாபம்தானே. அவனிடமிருக்கும் பல பில்லியன் டாலர்களை வறுகிவிடலாமே. பணத்திற்கு முன்னால் அவனுடைய பலவீனமெல்லாம் வெறும் ஜூஜூபி” என்று கூற மற்றவளோ,

“என்னதான் சொல்லு… எனக்கு அவன் பக்கத்தில் போகவே பயமாக இருக்கிறது… என்மீது பாய்ந்து விட்டால்…” என்று கூற அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கிண்டலாய் சிரிக்க, இவளுடைய உடலில் யாரோ பெற்றோலை ஊற்றிக் கொழுத்திவிட்டதுபோலத் தீயாக எரிந்தது.

சீ… எப்படி அபாண்டமாகப் பேசுகிறார்கள். அவனுடைய பணத்திற்காக ஆசைப்பட்டா அவனை மணக்கிறாள். உண்மை என்ன என்று தெரியாமல் இப்படி வாய்கூசாமல் பேசுகிறார்களே. இவர்களைச் சும்மா விடக்கூடாது…’ ஆத்திரத்தோடு கதவைத் திறக்க முயன்றவளுக்கு அப்போதுதான் சுளீர் என்று ஒன்று உறைத்தது.

இவளும் அவனைப் பற்றிய உண்மை தெரியாமல்தானே பலதும் எழுதினாள். இங்கே வெறும் இருவர் பேசும் பேச்சையே தாங்க முடியவில்லை. அங்கே பல்லாயிரக் கணக்கான மக்களின் அவதூறான பேச்சுக்களைக் கேட்கும் போது எப்படித் துடித்திருப்பான். வதைபட்டிருப்பான். இப்போது கூட அவர்களின் இந்தப் பேச்சுக்களைக் கேட்கும் போது எத்தனை கோபம் வருகிறது. அங்கே வாழ்க்கையையே தொலைத்து, செய்யாத தப்புக்குத் தண்டனையையும் அனுபவித்த அவன் எப்படித் துடித்திருப்பான்?

முதன் முறையாக அவனை எண்ணிக் கலங்கி நின்றாள் சமர்த்தி. நெஞ்சம் வலிக்க, முகத்திற்குப் போட்ட அரிதாரம் அழிந்து விடாமல் முகத்தைக் கழுவியவள், மீண்டும் வெளியே வந்தபோது பேசியவர்களின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.

மீண்டும் சேலையுடுத்தி, அதற்குப் பொருத்தமான நகைகளை அணிவித்துத் திரையைப் போட்டு, மணவறையில் அமர்த்தப்பட்டாள். முகூர்த்த நேரம் மட்டு மட்டாக இருந்த காரணத்தால் ஐயரும் அதிக மந்திரங்களை இழுக்காமல், அடுத்த ஐந்து நிமிடங்களில் பொற்றாலியை விரித்துப் பிடித்தவாறு உத்தியுக்தனிடம் நீட்டி,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது,

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

என்று வள்ளுவன் வகுத்த இல்லற நெறியை மந்திரம்போலக் கூறிக்கொண்டு உத்தியுக்தனைப் பார்த்து,

“தம்பி நல்ல மனைவி கிடைப்பது வரம், அதைத் தக்க வைப்பது உங்கள் கரங்களில்தான் இருக்கிறது. இந்த மாங்கல்யத்தைக் கட்டும்போது, இந்தக் கணத்திலிருந்து அவளுடைய ஆசைகளை நிறைவு செய்வேன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்கலங்க விடமாட்டேன் என்றும், பிரம்மன் தன் மனைவியை நாவிலும், கிருஷ்ணர் தன் மனைவிய இதயத்திலும், அந்த ஆதி சங்கரன் தன் உடலின் சரிபாதியிலும் வைத்துக்கொண்டது போல, உங்கள் மனைவியின் சொல் கேட்டு, காதலில் கலந்து, அவளுக்கான சம உரிமையைக் கொடுப்பேன் என்று உறுதி செய்துகொண்டு கட்டுங்கோ…” என்று கூறிக்கொண்டு,

“மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனா…” என்று கம்பீரமாக மந்திரத்தை ஒலிக்க இவனோ தாலியை இவள் கழுத்தை நோக்கிக் கொண்டு வந்தான்.

இவளுடைய வெளிறிய முகத்தை அவனுடைய விழிகள் இரசனையாகப் பார்க்கத் தடுமாறிப்போனாள் சமர்த்தி. இவளுக்கே தான் வெளிப்படையாகவே உடல் நடுங்குவது தெரிந்தது.

தவிப்புடன் தன் அண்ணியை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் சந்தோஷத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தங்கள் மூத்த மகளின் திருமணத்தின் முக்கியக் கட்டத்தைப் பார்ப்பதற்காகக் கரத்தில் அறுகரிசியை வைத்தவாறு நின்றிருந்தனர்.

இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அந்த விழிகளில் தெரிந்த பளபளப்பும், அதையும் மீறித் தெரிந்த ஆத்திரமும், கூடவே கலந்த அலட்சியமும், இதுதான் உன்னுடைய மகிழ்ச்சியான வாழ்விற்குரிய இறுதி நிமிடங்கள் இப்போதே அனுபவித்துக் கொள் என்று சொல்லாமல் சொல்ல, இவளோ அவனை யாசகமாகப் பார்த்து, வேண்டாம் என்பது போல மெல்லியதாக மறுப்பாகத் தலையை அசைத்தவாறு பார்த்தாள். அதைக் கண்டவனுடைய உதட்டில் மெல்லிய ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது. தன் ஒற்றைப் புருவத்தைச் சற்று மேலே தூக்கியவன், அடுத்து அவள் கழுத்தை நோக்கிக் கரங்களைக் கொண்டு வந்தான்.

நாதஸ்வரமும், மிருதங்கமும் முழக்கமிட, உத்தியுக்தன் தன் அழுத்தமான கரம்கொண்டு, சமர்த்தியின் மென்மையான கழுத்தில் திரு மாங்கல்யத்தைக் கட்டுவதற்காக அவள் பக்கமாகக் குனிந்து கழுத்தை நோக்கி எடுத்துச் சென்று அவளுடைய காதுகளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“இதைக் கொண்டு இப்படியே உன் கழுத்தை இறுக்கி மூச்சுக் குழாயைத் திருகவேண்டும் போல ஆவலாக இருக்கிறது சதி.. செய்யட்டுமா..” என்றான்.

அந்த அழுத்தம் நிறைந்த குரலைக் கேட்டவள் விதிர் விதிர்த்துப் போனாள். பதறியவாறு நெஞ்சம் வெடிக்க நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“ஆனால் அப்படி நெரித்தால் எனக்குத்தானே சிரமம்… அதனால்…” என்றவன், தாலிக்கொடியை அவளுடைய கழுத்தைச் சுற்றி எடுத்துச் சென்று சுலபமாகவே கொடியில் தொங்கிக்கொண்டிருந்த சுரையை மிகக் கவனமாகப் புரியில் போட்டுச் சுழற்றி மிக இறுக்கமாக பூட்டிவிட்டுக் கரத்தை விலக்க, அதுவரை அவளுடைய முகத்தை மறைத்திருந்த வலைத் துண்டு நீக்கப்பட்டது.

அது கூட உறைக்காமல் இறுக்கமாக அமர்ந்து இருந்தாள் சமர்த்தி.

தாலி கட்டிவிட்டானா என்ன…? இப்படிக் கழுத்தை நெரிக்கிறதே. தன்னை மறந்து கழுத்தை வருடிப் பார்த்தாள். இல்லையே… தாலி கழுத்தை நெரிக்கவில்லை… கரங்கள் நடுங்க விலக்கிக் கொண்டவளுக்கு அவன் கட்டியது தாலியாகத் தெரியவில்லை. கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கட்டிய முட்கம்பி போலத் தோன்றியது.

அடுத்துக் குங்குமத்தைத் தொட்டு நெற்றியிலும் தாலியிலும் வைக்கச் சொல்லி ஐயர் கூற, பொன் விரலில் குங்குமத்தை எடுத்தவன் அவள் நெற்றியில் வைக்கப் போனான்.

“அப்படியில்லை தம்பி… பின் பக்கமாகக் கொண்டு வந்து நெற்றியில் வையுங்கள்…” என்றதும், அவனுடைய பெரிய நீண்ட கரம் அவளைச் சுலபமாகச் சுத்தி வளைத்துக் குறிப்பாகக் கழுத்தை மலைப்பாம்பு போல வளைத்து நெற்றியிலும் வகிட்டிலும் பொட்டிட்டு விலக்க ஒரு கணம் அவளுக்குப் பயத்தில் உயிர் ஊசலாடியது என்பது மட்டும் உண்மை.

அடுத்துத் தன் கரத்திலிருந்த மாலைகளை இருவரின் கரங்களிலும் கொடுத்து

“மாலை மாத்துங்கோ…” என்றார். அவன் சுலபமாக இவளுக்கு மாலையைப் போட்டுவிட்டான். இவள்தான் திண்டாடிப்போனாள். சும்மாவே பயத்தில் உதறிக்கொண்டிருந்தவளுக்கு அத்தனை உயரத்தில் இருந்தவனின் தலையை எப்படி எட்டுவது? அவனோ இம்மியும் அவளை நோக்கிக் குனிந்தானில்லை.

உன்னால் என்னை வளைக்க முடியாது என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுகிறானோ? கால் பெரு விரலில் நின்று கூட முயன்று பார்த்தாள். அவளுடைய கைகள் அவனுடைய காது வரைதான் சென்றதே தவிர, அதற்கு மேல் போகவேயில்லை.

விருந்தினரோ அந்தக் காட்சியைக் கண்டு கொல் என்று சிரித்துக்கொண்டிருக்க, இவளுக்கு முகம் சிவந்து அழும் நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

இப்போது என்ன செய்வது என்று புரியாமல் குழம்ப, அடுத்த கணம் அவனுடைய உயரத்திற்கு உயர்ந்து நின்றாள் சமர்த்தி. அதிர்ச்சியுடன் குனிந்து பார்க்க, அவளுடைய மருமகன்கள், வசந்தனும், ரகுநந்தனும் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்றவாறு அவளைத் தூக்கியிருந்தனர்.

அண்ணன் தயாளனோ தன் மகன்கள் தங்கையை விழுத்திவிடுவார்களோ என்று அஞ்சியவராக,

“டேய் பார்த்துடா…” என்றவாறு தங்கையின் இடைபற்றி நிற்க, சமர்த்தியோ தன் மருமக்களை நன்றி பெருகப் பார்த்தாள்.

அவர்களின் செயல், எச்சந்தர்ப்பத்திலும் உன்னை வீழ விடமாட்டோம், தாங்கும் தூணாக இருப்போம் என்று கூறுவதுபோலத் தோன்ற, இப்போது நிமிர்ந்து உத்தியுக்தனை நேராகப் பார்த்தவள், அடுத்து அவன் கழுத்தை நோக்கி மாலையை எறிய அது சரியாகச் சேரும் இடம் சென்றது.

ஒரு கணம் அவனுடைய விழிகள் சுருங்கி விரிந்தனவே தவிர அவனிடம் எந்த மாற்றமுமில்லை. அடுத்து அவனைப் பார்த்து ஐயர்,

“உள்ளே உள்ள மாலையை எடுத்து உங்கள் மனைவியின் கழுத்தில் போடுங்கள்…” என்றதும், முதல் மாலைக்கூடாகக் கரங்களை விட்டு உள்ளே இருந்த மாலையை வெளியே எடுத்துக் கழற்றி அவளுடைய கழுத்தில் போட்டு ஒரு இழுவை இழுக்க. அவளைத் தூக்கியிருந்த கோபுரம் சரியப் பார்த்தது. நல்லவேளை தயாளன் பின்னாலிருந்து இறுகப் பிடித்திருந்ததால் அந்தக் கோபுரம் விழாமல் தப்பியது.

அவன் மட்டும் இழுப்பதை நிறுத்தாமல் இருந்திருந்தால் ரகுநந்தனும், வசந்தனும் அவளைக் கைவிட்டிருப்பார்கள்.

எப்படியோ மாலைமாற்றும் படலம் முடிவுற, அவர்களை மணமேடையில் அமரச் சொன்ன ஐயர், அங்கிருந்த இரு பெண்களைப் பார்த்து,

“திரையைப் போடுங்கோ…” என்றுவிட்டு ஒரு குவளையில் பாலும் பழமும் சேர்த்துச் சமர்த்தியிடம் நீட்டியவாறு, “தேன் கலந்திருக்கிறது… உங்கள் வாழ்க்கையும் தேன் கலந்தாற்போல இனிமையாகத் தொடங்கட்டும்…” என்றவாறு சமர்த்தியிடம் நீட்டினார்.

நடுங்கிய கரங்களுக்கூடாக வாங்கியவளுக்கு, எங்கே சிந்திவிடுவோமோ என்கிற அச்சம் வேறு எழுந்தது. எப்படியோ சமாளித்தவளாக, அவன் கரங்களில் மூன்று முறை வைக்க அவன் குடித்துவிட்டு, சாவதானமாக அவள் கரத்திலிருந்து குவளையை வாங்கி, அதிலிருந்து ஒரு துண்டு வாழைப்பழத்தை எடுத்து அவள் கரத்தில் வைத்து,

“உணவில் விஷம் வைத்தால் கூட மகிழ்ச்சி தான்…” என்றான்.

அதிர்ந்துபோனாள் சமர்த்தி. உண்பதற்காக வாய்க்குள் எடுத்துக் கொண்டு சென்றவளுக்கு அதை வாயில் போடவே முடியவில்லை. திக்கித் தடுமாற, அவனோ மெல்லியதாகச் சிரித்துவிட்டு,

“இங்கேயில்லை… வீட்டிற்குப் போனதும்…” என்று கூற, பால் மார்பில் விழுவதைக் கூடப் பொருட்படுத்தாது அவன் கொடுத்ததை மெல்லாமலே விழுங்கி வைக்க, பாலும் பழமும் படலம் கசப்புடன் நிறைவுற்றது.

“தம்பி… ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்ட பின்னும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று சொல்லிக்கொண்டு, பெண்ணுடைய கையைப் பற்றுங்கள்…” என்று கூற, இப்போதும் அவள் பக்கமாகக் குனிந்தவன், அவளுடைய கரங்களை இறுகப் பற்றி,

“என்னோடான வாழ்க்கை எத்தகைய நரகத்தை உனக்குக் கொடுக்கும் என்பதைக் காட்டி அழைத்துச் செல்கிறேன்…” என்றவாறு கரங்கள் உடையும் வகையில் இறுகப் பற்ற, மேலும் ஒரு முறை இவளுடைய உடல் தூக்கிப்போட்டது. கூடவே அவனுடைய அழுத்தமான பிடியில் வலி எடுக்க, முகத்தில் மாற்றங்களைக் காட்டாமலே தன் கரத்தை விடுவிக்கப் பார்க்க விட்டுவிடும் வகையிலா அவன் பற்றியிருந்தான்.

“மாப்பிள்ளைத் தோழனும், பெண்தோழியும் முன்னால் வாருங்கள்…” என்று ஐயர் அழைக்க, அன்று மாப்பிள்ளைத் தோழனாக நின்றிருந்த வசந்தன் முன்னால் வந்து உத்தியுக்தனின் இடது கரத்தைப் பற்ற, உத்தியுக்தனின் வலது கரத்துச் சுண்டுவிரலைச் சமர்த்தி தன் இடது கரத்தால் பற்ற, சமர்த்தியின் வலக்கரத்தைப் பெண் தோழி பற்றிக்கொள்ள, அக்கினியைச் சுற்றி வந்தனர் அனைவரும்

அடுத்து, ஏழடி வைக்கும் சடங்கு… கடவுளே இன்னும் எத்தனை சடங்குகள்தான் அவளைப் பயமுறுத்தப் போகின்றன… எச்சிலைக் கூட்டி விழுங்கியவளுக்குச் சடங்கென்ற பெயரில் அவளைத் தீக்குள் தள்ளிவிடுவானோ என்கிற அச்சம் வேறு தோன்றியது.

அவனோ அவள் முன்னால் மண்டியிட்டமர்ந்து, ஐயர் சொன்னதுபோல, அவளுடைய வலது காலைப் பற்றித் தூக்க, சமர்த்திக்குச் சமநிலை தவறிப் பின்புறமாக விழத் தொடங்கினாள்.

நல்ல வேளை பின்னால் புஷ்பா நின்று தாங்கிக் கொண்டார். இல்லை என்றால் அவன் இழுத்த வேகத்தில் நிச்சயமாகப் பின்புறமாக விழுந்திருப்பாள் சமர்த்தி.

“தம்பி அவசரம் வேண்டாம்… பார்த்து… இந்த வேகத்தில் செய்தீர்கள் என்றால் உங்கள் சாந்தி முகூர்த்தம் மருத்துவமனையில்தான் நடக்கும் போல…” என்று ஐயர் தான் விட்ட நகைச்சுவைக்குத் தானே சிரிக்க. சூழ இருந்தவர்களும் எப்போது சிரிக்கலாம் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள் போலும், கெக்கே பெக்கே என்று சிரிக்க இவளுக்குத் தான் காந்திக்கொண்டு வந்தது.

பதட்டத்துடன் குனிந்து இவனைப் பார்க்க இவனோ ஒரு வித நகைப்புடன் தான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

புஷ்பா துணையிருக்க, அவளுடைய வலது காலின் பெருவிரலைப் பற்றி ஏழடி எடுத்து வைக்க. ஒவ்வொரு அடிக்கும் ஐயர் ஒவ்வொரு மந்திரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

எப்போதும் உனக்கு உணவு குறைவில்லாது கிடைக்க இறைவன் துணை புரியட்டும். (உன்னைப் பட்டினி போட்டு சித்திரவதைப் படுத்துவேன்,)

உடல் வலிமை கிடைக்க இறைவன் பின் தொடரட்டும் (உடல் வலிதான் இனி உன் வாழ்க்கையே)

விரத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு உன்னை இறைவன் பின் தொடர்ந்து வரட்டும். (இறைவன் பின்தொடர்வதா… நான்தான்டி நரகத்தில் தள்ளப் பின்தொடர்வேன்)

சுகமும் மனச்சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னோடு இருக்கட்டும். (இனி இந்த ஜென்மத்திற்கு அது உனக்குக் கிடைக்க விடமாட்டேன்)

பசுக்கள் தூய பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும். (அதை வைத்தே உன்னை முட்ட வைக்கிறேன்)

சகல சௌபாக்கியங்களும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்…” (வாழ்க்கையின் கஷ்டம் என்றாலே என்ன என்று இனித்தான் உணரப் போகிறாய்..)

என்று ஐயர் சொல்லச் சொல் இவளுடைய வயிறு அச்சத்தில் கலங்கியது. அத்தனை ஏழு மந்திரங்களும் எதிர்மறையாகவே அவள் காதுகளில் ஒலிக்க அச்சத்தில் சுரந்த உமிழ்நீரை விழுங்கியவள்,

‘கடவுளே இந்தக் கண்டறியாத சடங்கு சம்பிரதாயங்களை யார்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லையே. இப்படி வயிற்றில் புளியைக் கலக்கும் அளவுக்கு இருக்கிறதே…’ என்று அவள் மனதிற்குள் புலம்பும் போதே எட்டாவது அடியாக அவளுடைய பாதம் கருங்கல் அம்மி மீது வைக்கப்பட்டது.

“இந்தக் கல்லைப் போல நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்குக் கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அது போல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும்.” என்று ஐயர் விளக்கம் கொடுக்க, ஏனோ அது அவளுக்காகவே சொல்லப்பட்டதுபோலத் தோன்றியது.

இன்னும் எத்தனை சிரமங்களை அவள் தாங்கப் போகிறாளோ…. அச்சத்துடன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய கரங்கள் அவளுடைய இரண்டாவது விரலில் மெட்டியை அணிவித்தன.

கூடவே அந்த அழகிய பாதங்களை ஒரு கணம் தன்னை மறந்து பார்த்தவன் சட்டென்று தன் தலையைக் குலுக்கிவிட்டு எழுந்து, அவள் காதுகளுக்குள்,

“இந்த அம்மி தூக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது… அப்படியே மண்டையில் ஓங்கிப் போட்டால்…” என்று ரசனையுடன் அவன் கூறத் திக் என்றது சமர்த்திக்கு.

அவன் நிற்கும் கோலத்தைக் கண்டால் செய்தாலும் செய்வான் போலத் தோன்றியது. கூடவே அவன் நெற்றியிலிருந்த தழும்பையும் கண்டவளுக்கு நடுக்கம் அதிகரித்தது.

திருமணச் சடங்கு எல்லாம் நன்மைக்காக வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவளுக்கு மட்டும், வாழ்க்கையைப் புரட்டிபபோடவென்றே அமைக்கப் பட்டிருக்கிறதே… என்ன செய்வாள்…?

மீண்டும் அக்கினியைச் சுற்றி, மறு பாதத்தில் மெட்டியிட்டு கணையாழி எடுப்பதற்காகப் பானையில் மோதிரத்தைப் போட்டு,

“மோதிரத்தை எடுங்கோ…” என்று ஐயர் சொல்ல, எல்லாரும் சிரிக்க இவள் மட்டும் அழும் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

பானைக்குள் கைவிட்டால் வெளியே என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாது. இவன் கரத்தை உடைத்துவிட்டால், அச்சத்துடன் திணற, இவனோ சுலபமாகக் கரத்தை உள்ளே விட்டு மோதிரத்தைத் தேடினான். இவள், கரங்களை முழுவதும் நுழைக்காமல் நுனித் தண்ணீரில் மட்டும் கரத்தை வைத்துத் தேடுவது போலப் பாசாங்கு செய்ய, அப்போதுதான் தெரிந்தது ஐயர் மோதிரமே போடவில்லை என்று.

பிறகு என்ன ஐயர் மோதிரத்தைப் போட மூன்று முறையும் இவனே மோதிரத்தை எடுத்து நீட்டினான்.

“தம்பி வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துப் போகவேண்டும்.. அப்போதுதான் வாழ்க்கை நன்றாக இருக்கும்…” என்று அவர் கூற, இவனோ,

“உண்மைதான் ஐயரே… இவள் விட்டுக் கொடுத்தால், நான் வெற்றி பெற்றவனாவேன்…” என்றதும் இவளோ என்ன பதிலைக் கூறுவது என்று தெரியாமல் திரு திரு என்று விழித்தாள். அவள் இருக்கும் நிலைக்கு இப்போதைக்குச் செய்யக் கூடியது அது ஒன்றுதானே.

What’s your Reaction?
+1
27
+1
9
+1
0
+1
2
+1
2
+1
3
Vijayamalar

View Comments

  • உங்க ஸ்டோரி எல்லாத்துலயும் நம்ம ஹீரோ அதிரடியாதான் இருகாங்க ஆனா பாருங்க நம்ம ஹீரோ நம்ம சமர்த்தி கிட்ட தொபுக்கடீருன்னு விழ போறாரு சமர்த்தி பன்னதும் தப்பு தானே அவன் பட்ட அவமானத்திற்கு இப்படிதான் இருப்பான்

    • பின்ன சும்மா இருந்தவன சீண்டிவிட்டது அந்த லூசு சமர்த்திதானே. தன்மானம் அடிபட்டா எவன்தான் சும்மா இருப்பான். இனி சங்குதான்பா.

  • ஹலோ யாருங்க லூசு?😬😬😬 என்றாளு அவளோட தேவைக்கு வேலைக்கு சின்சியரா இருந்தா.
    பதவிக்கு நிக்கனும் னா அவந்தான் சரியா இருந்திருக்கனும். அவனை சேந்தவங்களையும் சரியா இருக்க வச்சிருக்கனும்.
    அதைய வுட்டுபோட்டு நானு தலைகீழா தான் குதிப்பேன். யாராவது பாத்தாக்க அவுகளை பழிவாங்குவேனு நெனைச்சு செய்யறதெல்லாம் டூ டூ டூ மச்சூ.
    இவனோட வூட்டு கூரை ஒழுகுதாம் அதைய சரி பண்ண மாட்டானாம். அதைய யாராச்சும் சுட்டி காமிச்சா தப்பாம். எல்லாம் காசு பணம் நெறைய இருக்குற தெனாவட்டு🫤🫤🫤🫤🫤

    • எலே என்னல சவுன்டு ஜாஸ்தியா இருக்கு. பிச்சுபோடுவேன் பிச்சு. உங்க ஆளு செஞ்ச வேலைக்கு அவளை திட்டாம என் ஆளையா திட்டுறீங்க. எம்பிட்டு தைரியம் உங்களுக்கு. உங்க ஆளு சுயநலவாதி. அவளுக்கு மத்தவங்க எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நாசமா போனாலும் ஒன்னுமில்ல. அவளும் அவ குடும்பமும் நல்லா இருந்தா போதும். இதில அவளுக்கு வக்காலத்து வேற. எங்கடா அந்த அருவா.

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

22 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago