Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-18

18

 

அவனுடைய அழைப்பில் லீ கூட ஒரு முறை துள்ளித் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

வேலைக்குக் கிளம்பிவிட்டிருந்தான் போலும். இந்த நேரத்தில் அங்கே வருவான் என்று இரு பெண்களும் நினைத்திருக்கவில்லை. அதுவும் இப்படி வந்து சீறுவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனோ சமர்த்தியையும், அவள் கைங்கரியத்தில் சிதைந்து போன வெங்காயத்தையும் மாறி மாறிப் பார்த்தான். முகம் ஏனோ இறுகிப்போனது. அவளை விடுத்து லீயை ஏறிட்டவன்,

“எனக்கொரு கொஃபி ப்ளீஸ்… அன்ட்… உன்னைத் தவிர இந்தச் சமையலறையில் வேறு ஒருவர் நுழைவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, லீயின் முகம் வெளிறிப் போனது. பதட்டத்துடன் சமர்த்தியைப் பார்க்க, அவளுக்கோ அவனுடைய அலட்சியம் படு அத்திரத்தைக் கொடுத்தது.

ஏன் இவள் உள்ளே நுழைந்தால் என்னவாம்? ஒரு வேளை இவன் உணவில் விஷத்தை வைத்து விடுவாள் என்று அச்சப்படுகிறானோ? எரிச்சலுடன் எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தவள் அவன் முகம் போன போக்கில் பக்கென்று தன் வாயை மூடிக்கொண்டாள்.

இதோ இவனுக்குத் தமிழ் தெரிந்திருந்தாலாவது தமிழில் திட்டியிருக்கலாம். இவள் என்ன சொல்கிறாள் என்று லீயிற்கும் தெரிந்திருக்காது. ஆனால், ஆங்கிலத்தையே குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவனோடு எப்படி மல்லுக்கட்டுவது. சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவள், கோபம் அடங்காமல் அவனைக் கடந்து செல்ல முயல, அவனுடைய வலது கரம் அவளுடைய இடது மேல் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டது.

உள்ளே கணன்ற கோபத்துடன் நிமிர்ந்து பார்க்க, அவனோ பற்றிய கரத்தை விலக்காமலே அவளுடைய கைத்தலம் நோக்கிக் கரத்தை நகர்த்திச் சென்றவன், அவள் கரத்தைத் தூக்கிப் பார்த்தான். அவள் சுட்டுவிரலிலிருந்து இரத்தம் துளித்துளியாய் விழுந்து கொண்டிருந்தது. அதிர்ந்து போனாள் சமர்த்தி.

அம்மாடி இரத்தம். பதறியவளாய் நிலத்தைப் பார்க்க. வெண்ணிறப் பளிங்குத் தரையில் இரத்தத்தால் கோலம் போட்டிருந்தாள் சமர்த்தி. லீயும் அதிர்ந்துதான் போனாள்.

“மாடம்…” என்று பதறியவள், கைகால்கள் நடுங்க முதலுதவிப் பெட்டியை எடுத்துவரச் செல்ல, அவனோ, அதே கரத்துப் பெருவிரலால் இரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தவாறு நிதானமாக அவளை ஏறிட்டு,

“கூரான கத்தி என்று தெரிந்தும் அதனோடு விளையாட முயன்றது உன் குற்றம்… தெரியாத அறியாத வேலைக்குள் எதற்கு மூக்கை நுழைக்கிறாய்?” என்றான் கடுமையாக. தொடர்ந்து,

“என்ன லீ பற்றி அறிந்து அதைப் பத்திரிகையில் போட்டு அவளுடைய வாழ்க்கையையும் நாறடிக்கப் போகிறாயா? ஏன் என் வாழ்க்கையை நாசமாக்கியது போதாதா?” என்று எள்ளலுடன் கேட்க முணுக்கென்று கண்ணீர் விழிகளில் பொங்கியது. கூடவே ஆத்திரம் வர, அவன் கரத்திலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றவாறு,

“ஏன் பத்திரிகையில் வாழ்க்கை வரலாற்றை மட்டும்தான் எழுதவேண்டுமா? வேறு எதுவும் எழுத மாட்டோமா? எத்தனை திறமையாகச் சமைக்கிறார்கள். அதை ஊக்கப்படுத்தும் விதமாக எழுதலாம்தானே..?” பற்களைக் கடித்தவாறு கேட்க, இவனோ அதைக் கிண்டலுடன் கேட்டுச் சிரித்தவாறு,

“யார்…? நீ…? ஹா ஹா ஹா… உனக்கு நல்லதெல்லாம் எழுதத் தெரியுமா என்ன?” என்றவன், தன் தோள்களைக் குலுக்கி, “எனக்குத் தெரிந்து எந்தப் பத்திரிகைகளும் பிறர் நன்மை கருதி எழுதியதாகத் தெரியவில்லை… அதிலும் நீ… சுத்தம்…” என்று ஏளனத்துடன் கூறும்போதே, லீ உதவிக்கு வந்திருந்தாள்.

உடனே தன் பிடியிலிருந்த அவளுடைய கரத்தை விடுவித்தவன்,

“இனிமேல் நீ கத்தியைக் கரத்தில் எடுப்பதை நான் பார்க்கக் கூடாது. புரிந்ததா?” என்று கூறியவன், லீயையும் அழுத்தமாகப் பார்த்துவிட்டுத் தன் அறை நோக்கிச் செல்ல, ஏனோ அவனுடைய அந்த அலட்சியத்தில் மேலும் நொந்துபோனாள் சமர்த்தி.

இதுவே புஷ்பாவாக இருந்திருந்தால் ஊரையே கூட்டியிருப்பார். உதடுகளைக் குவித்து ஊதி ஊதி அவள் காயத்தின் வலியை ஆற்ற முயன்றிருப்பார். ஏதோ தனக்குக் காயம் பட்டதுபோலக் கண்கள் கலங்கியிருப்பார். வலிக்கிறதா வலிக்கிறதா ஒரு முறைக்குப் பத்து முறை கேட்டு இவளையே சலிப்புடைய செய்திருப்பார். சிந்திய இரத்தத்திற்காக, மூன்று நேரமும் சூப் வைத்துக் கொடுத்திருப்பார். அதை நினைத்தபோதே அவளுக்குப் புஷ்பாவின் அருகாமை மிக அவசரமாகத் தேவைப்பட்டது. ஏனோ அவர் மடி சாய்ந்து அவர் வயிற்றில் முகம் புதைத்து ஒரு மணி நேரமாவது தூங்கவேண்டும் போல ஏக்கம் பிறந்தது. காயம்பட்ட கரத்தைக் காட்டி அவருடைய பரிதாபத்தைச் சம்பாதித்து, அதில் பாதுகாப்புத் தேடவேண்டும் போலப் பெரும் ஆவல் தோன்றியது.

இவள் தன்னை மறந்து அண்ணியின் நினைவிலிருக்க, லீயோ அவள் விரல்களுக்கு அழுத்தமாகக் கட்டுப்போட்டு விட்டிருந்தாள். லீயோ சமர்த்தியை விட்டு விலகி, உத்தியுக்தனுக்குக் காப்பி வார்த்து எடுத்துச் செல்ல முயல, இவளுக்குள் பளிச்சென்று அது தோன்றியது.

விரைந்து லீயை நெருங்கியவள், நீ கொடு லீ… நான் எடுத்துச் செல்கிறேன்…” என்றவாறு அவள் கரத்திலிருந்த காப்பியைக் கிட்டத்தட்டப் பறித்தவாறு, உத்தியுக்தனின் அறை நோக்கி ஓடினாள்.

அவனுடைய அறையை நெருங்க நெருங்க இவளுடைய நெஞ்சம் படபடத்தது. வலது கரத்தில் காப்பிக் குவளை இருந்ததால் இடது கரத்தால் கதவைத் தட்டிப் பார்த்தாள். கரத்தின் அதிர்வில் விரல் நொந்தது. உதடுகளைச் சுழித்தவள், குவளையை மறு கரத்திற்கு மாற்றிவிட்டு வலது கரத்தால் கதவைத் தட்டினாள். அதுவும் சற்றுப் பலமாகவே. சிறிது நேரம் எந்தச் சப்தமும் வரவில்லை. உதடுகளைக் கடித்தவள் மீண்டும் தட்டிப் பார்த்தாள்.

“கம் இன்…” என்றது அவன் அழுத்தமான குரல். அவன் குரலின் வன்மையிலோ, அல்லது, அவள் கூறு வந்த செய்தி கேட்டு என்ன சொல்லப் போகிறானோ என்கிற அச்சம் அவளைப் பாடாய்ப் படுத்த, மெதுவாகக் கதவைத்திறந்து, உள்ளே வந்தவளுக்கு மேசையின் இந்தப்பக்கம் நின்றிருந்த அவனுடைய புறமுதுகுதான் தரிசனமாய்க் கிடைத்தது.

உள்ளே வந்தவளைத் திரும்பிக் கூடப் பார்த்தானில்லை. அவள்தான் வந்திருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியுமா? இல்லை லீ வந்திருக்கிறாள் என்கிற அலட்சியமா? அது என்ன அப்படி ஒரு அலட்சியம். திரும்பிப் பார்த்தால் குறைந்தா போய் விடுவான். ஆத்திரத்துடன் எண்ணியவளுக்கு அவன் திரும்பிப் பார்க்கும் வரை காப்பியை மேசையில் வைப்பதில்லை என்கிற முடிவோடு அப்படியே நின்றிருக்க, அவனோ சற்றுக் குனிந்து ஏதோ ஒரு தாளைக் கையில் எடுத்துப் படித்தவாறு,

“இன்னும் எத்தனை நேரமாக அப்படியே நிற்பதாக உத்தேசம்…” என்றான் தன் கவனம் கலையாதவனாக. அப்படியானால் நான்தான் வந்து இருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறதா என்ன? தெரிந்ததால்தான் இப்படி அலட்சியமாக நிற்கிறானோ? ஆத்திரம் வர,

“நீங்கள் நிமிர்ந்து பார்க்கும் வரைக்கும்…” என்றாள் பட் என.

இப்போது கரத்திலிருந்த தாளை மேசையில் போட்டவன் அப்போதும் திரும்பிப் பார்த்தானில்லை. இரு கரங்களையும் மேசையில் ஊன்றிவாறு சற்று நேரம் நின்றான். பின் நிதானமாக எழுந்து பான்ட் பாக்கட்டில் கரங்களை நுழைத்தவாறு திரும்பி அவளைப் பார்த்தவன்,

“என்ன வேண்டும்…” என்றான்.

அவளோ தன் கரத்திலிருந்த குவளையை அவனை நோக்கி நீட்ட, அவனோ வாங்காது காப்பியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான். பின் அவளை அழுத்தமாக ஏறிட்டு,

“என்ன விஷயம்?” என்றான் மீண்டும். ‘ஐயோ இப்படிக் கேட்டால் எப்படிச் செய்தியைக் கூறுவது? அண்ணி வீட்டிற்குத் தனியாகப் போய் வருவது என்றால், அனுமதி கூடக் கேட்காது சென்றிருப்பாள். ஆனால் இவனையும் அல்லவா அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது…’ எச்சில் கூட்டி விழுங்கியவள், சொல்வதற்காக வாய் திறந்தாள். ஆனால் முடிய வில்லை. வேறு வழியில்லாமல் அவன் முன்னால் குவளையை உயர்த்தியவள்,

“வந்து… வந்து… காப்பி… லீ வார்த்தார்கள்…” என்றவாறு நடுங்கும் கரங்கள் கொண்டு அவன் முன்பு நீட்ட, அவனோ அதை வாங்காது பின்னாலிருந்த மேசையில் சாய்வாக அமர்ந்து காலுக்குக் குறுக்காக மறு காலைப் போட்டவன், அவளைக் கீழ்க்கண்ணால் பார்த்து,

“லீயின் கை கால்களுக்கு என்னவாயிற்று. சற்று முன் கூட நன்றாகத்தானே இருந்தாள்?” என்றான் வியந்தவன் போல.

‘எதற்கு நீ கொண்டுவந்தாய்? லீயிடம்தானே கேட்டிருந்தேன்’ என்பதை இப்படிப் பூடகமாகச் சொல்கிறானாம். தயங்கியவளாக அவனை ஏறிட்டவளுக்கு இப்படிப் பேசுபவனிடம் என்னவென்று செய்தியை உரைப்பது என்று தெரியவில்லை.

“இல்லை… அது வந்து… நான்…” என்றவள் தொண்டைக்குள் அடைத்ததைச் சிரமப்பட்டு விழுங்கி விட்டு, அசட்டுச் சிரிப்போடு தன் கரத்திலிருந்த காப்பியைப் பார்த்துவிட்டு, அதை அவனுக்கு அருகாமையில் அவசரமாக வைத்துவிட்டு நிமிர, அவனோ தன் விழிகளின் கண்ணிமைகளைக் கூட அவளிடத்திலிருந்து அசைத்தானில்லை.

தடுமாறி நின்றவள் கரங்களைப் பிசைய, இப்போது இவனுடைய விழிகள் கட்டப்பட்டிருந்த சுட்டுவிரலில் ஒரு கணம் நிலைத்துப் பின் அவள் முகத்தில் பதிந்தன.

“அதுதான் வந்துவிட்டாயே… பிறகு என்ன… வந்த விஷயத்தைச் சொன்னால் என் நேரமாவது மிச்சமாகும்…” என்றான் பெரும் சலிப்புடன்.

“வந்து… வந்து… நான் உங்களிடம் ஒரு உதவி… வந்து சின்ன உதவிதான்… அதை நீங்கள்தான் செய்யவேண்டும்…” என்று எப்படியோ கூறி முடித்துப் பெருமூச்சு விட்டவளாக அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ வேடிக்கைதான் பார்த்தானேயன்றி, அவள் சொன்னதை உள்வாங்கியதுபோல எந்த அறிகுறியும் அவனுடைய முகத்தில் தென்படவில்லை.

என்னவேண்டும் என்று கொஞ்சம் இளகிக் கேட்டால் வாயில் அதக்கி வைத்த நாகர் மாணிக்கங்கள் கொட்டிவிடுமா என்ன? எரிச்சலை அடக்கியவளாக,

“அண்ணி அழைத்திருந்தார்கள்…”

“ம்ஹூம்…”

“திருமணம் முடிந்து இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன…”

“அப்படியா…?”

“நாம் இருவரும் இன்னும் அவர்களின் வீட்டிற்குப் போகவில்லை…”

“ம்ஹூம்…”

“அதனால் நாளைக்கு நல்ல நாளாம்… நம் இருவரையும் வரச் சொன்னார்கள்…” என்று ஒரு மாதிரி செய்தியைக் கூறி முடிக்க அவனோ, வேறு இன்னும் சொல்வதற்கு இருக்கிறதா என்பது போலப் பார்த்தான். அவளோ ஆர்வமாய் அவன் முகம் பார்க்க,

சரி… அவ்வளவும் தானா? வேறு ஏதாவது இருக்கிறதா…? இல்லையென்றால் வெளியே செல்… எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன…” என்று கூறிவிட்டு எழுந்து மேசையின் மறுபக்கம் செல்லத் தொடங்க, இவளோ பொறுமை இழந்தவளாக,

“நான் கேட்டதற்குப் பதில் கூறவில்லையே…” என்றாள் அவசரமாக. இவனோ நிதானமாக இவளை நிமிர்ந்து பார்த்து,

“பதில் கூறப் பிடிக்காத கேள்விகளை என் தலைக்குள் போடுவதில்லை சமர்த்தி” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, முன்பு போட்டிருந்த வெண்தாளை எடுத்து மீண்டும் எதையோ வாசிக்கத் தொடங்க, இவளுக்குக் கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது. ஆனாலும் காட்ட முடியாதே… அவளுக்குக் காரியம் ஆகவேண்டுமே.

“இதோ பாருங்கள். எனக்கும் உங்களுக்கும் ஆயிரம் இருக்கலாம். அதற்காக நம்மைச்சுற்றி இருப்பவர்களை வேதனைப்படுத்துவது சரியா உதி…” என்று குரல் கம்மக் கேட்க, அவனோ கரத்திலிருந்த தாளைக் கவிழ்த்துப் பிடித்தவாறு சுத்தவரப் பார்த்தான். புருவங்கள் மேலேற அவளைப் பார்த்தவன்,

“நம்மைச் சுற்றியா…?” என்றவன், வியந்து, உதடுகளைப் பிதுக்கி, “இங்கே உன்னையும் என்னையும் தவிர யாருமே இல்லையே…” என்றான் கிண்டலாக. அதைக் கேட்டதும், இவளோ பற்களைக் கடித்து விழிகள் மூடித் தன் கோபத்தை அடக்க முயன்று தோற்றவளாக விழிகளைத் திறந்து,

“நம்மைச் சுற்றி என்றால் என் அண்ணா அண்ணி, உங்கள் உறவினர்கள் நண்பர்கள் இவர்களைச் சொன்னேன்…” என்றாள் பெரும் எரிச்சலோடு. இவனோ,

“ஓ… ஓக்கே…” என்றபோது அந்தக் குரலில் இருந்த ஏளனமும் கிண்டலும் மேலும் இவளைத் திணறடித்தது. உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“இதோ பாருங்கள்… நம்முடைய பிரச்சனை நான்கு சுவர்களைத் தாண்டிப் போகாமல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்… இல்லையென்றால் நம்மை எண்ணி வருந்துவார்கள் உதி” என்றபோது இவனோ அவளை அலட்சியமாகப் பார்த்தவாறு,

“ரியலி.. அதை நீ சொல்கிறாய்.. இன்டரஸ்டிங்..” என்றதும், பொறுமையிழந்தவளாக,

“அது வேறு… இது வேறு… அது ஒரு பணக்கார வியாபாரியின் வாழ்க்கை… இது நம்முடைய சொந்த வாழ்க்கை…” என்று அவள் முடிக்கவில்லை, ஆவேசத்தோடு இருக்கையை விட்டு எழுந்தவன், பலமாகத் தன் உள்ளங்கையால் மேசையில் அடிக்க, அது எழுப்பிய சத்தத்தில் ஒரு கணம் துள்ளி அடங்கினாள் சமர்த்தி. அச்சத்துடன் அவனைப் பார்க்க அவனோ எரிப்பது போல அவளைப் பார்த்து,

“எப்படி எப்படி…? ஒரு பணக்கார வியாபாரியின் வாழ்க்கையா…? அப்படியானால் அவனுக்கென்று ஒரு சொந்த வாழ்க்கை கிடையாதா…? இதைக் கூற உனக்கு வெட்கமாக இல்லை?” என்றவன் தன்னை அடக்கக் கொஞ்ச நேரம் சிரமப்பட்டான். பின் ஆழ மூச்செடுத்து விட்டவன்,

“சரி.. யாரோ மூன்றாம் மனிதருக்கும் நம்முடைய வாழ்க்கை வெறும் செய்திதானே. அவர்களுக்கும் நம்முடைய வாழ்க்கை யாரோ ஒரு பணக்கார வியாபாரியின் வாழ்க்கைதானே… அப்படியானால் ஒன்று செய்யலாம்… நம் வாழ்க்கையில் நடப்பதைக் கதை கதையாகக் கொடுப்போம்… அவர்களும் அவர்களும் நம் கதையை வைத்து வியாபாரம் செய்து சம்பாதிக்கட்டும்…” என்று கூற இவள்தான் வாயடைத்து நிற்கவேண்டியதாயிற்று.

உண்மைதானே. அன்று யாரோ ஒருத்தனின் வாழ்க்கை என்றிருந்தது, இன்று நம்முடைய வாழ்க்கை என்றான பின்னாடி, அதைப் பாதுகாக்கத் தானே முயல்கிறாள். சற்று நேரம் அமைதியாக இருந்தவள்,

“சாரி…” என்றாள் மெல்லியதாய்.

“சாரி! இந்த வார்த்தை கண்டுபிடித்தவனைச் சொல்லவேண்டும்…” என்று அவன் சினக்க,

“அப்படியானால் மன்னிப்பு… இது… தமிழ் வார்த்தைதான்… இதில் கேட்டால் ஓக்கே வா…” என்றாள் அப்பாவியாக. முதன்முறையாக இவனுடைய உதட்டின் ஓரத்தில் மெல்லிய துடிப்பு. ஒரு வேளை எழுந்த புன்னகையை அடக்க முயன்றானோ?

“இந்தச் சாரி, மன்னிப்பு இதையெல்லாம் உன்னோடு வைத்துக்கொள்… பிறருக்காக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வந்தாயானால், அப்படியே வெளியே போய்விடு. எனக்கு நடிக்கத் தெரியாது…” என்று விட்டு இருக்கையில் அமர்ந்து விட்ட வேலையைத் தொடங்க, இவளோ, இப்படிச் சொன்னால் எப்படி என்பதுபோல அவனைப் பார்த்தாள்.

இன்னும் கிளம்பாமல் அங்கேயே இருப்பதை உணர்ந்தவன், பொறுமையை இழந்தவனாக, “இன்னும் என்ன?” என்றான் பொறுமையற்று. அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல்,

“அண்ணி அழைத்திருந்தார்களே.” என்றாள் தவிப்புடன்.

“அதற்கு நான் என்ன செய்வது?”

“தலைகீழாக நிற்கவேண்டும்…” என்று தன்னை மறந்து பட்டென்று சொன்னவள், அப்போதுதான் வாய் விட்டது தெரிய,

“சா… சாரி… அது வந்து… நாம் இருவரும் அங்கே போகவேண்டும்…” என்றாள் சமாளிக்கும் விதமாக. இவனோ, அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான்.

“நீ முட்டாளா இல்லை முட்டாள் போல நடிக்கிறாயா? நடிப்பு. அதுதான் உனக்குக் கைவந்த கலையாயிற்றே…” என்று வெறுப்புடன் கூற, இவளோ அடிபட்டவளாக,

“உதி ப்ளீஸ்.. நான் செய்தது சரி என்று சொல்லவில்லையே… ஆனால் உங்களைப் பற்றிக் கட்டுரை எழுதியதற்குப் பின்னால் என்னுடைய சுயநலம் எதுவும் இல்லை.. ஒன்டாரியோ மக்களின் விழிகளைத் திறக்க வேண்டும் என்றுதான் நினைத்தேனே தவிர, உங்களைப் பற்றித் தவறாக எழுதி எனக்கென்ன லாபம் சொல்லுங்கள்?” என்று கேட்க, இவனோ ஏளனத்துடன் அவளைப் பார்த்தான்.

“என்ன சொன்னாய்.. பொது நலம் இருந்ததா?” என்றவன் கடகடவென்று சிரித்தான். அந்தச் சிரிப்பு சமர்த்தியின் அடிவயிற்றைக் கலக்கப் போதுமானதாக இருந்தது. சிரித்து முடித்தவன்,

“பொது நலம்… அந்தப் பொதுநலம் எதிர்க்கட்சி இடமிருந்து ஒரு மில்லியன் பெற்றபோது எங்கே போனது? உனக்குப் பேரும் புகழும் கிடைத்தபோது, இதற்கு நான் தகுதிற்றவள் என்று ஏன் ஒதுங்க முடியாமல் போனது. ஆக உனக்குப் பணமும் வேண்டியிருக்கிறது. புகழும் வேண்டியிருக்கிறது. இதில் பொதுநலம் எங்கிருந்து வந்தது? என்று அவன் ஆத்திரத்துடன் கேட்க,

“காட்… உதிதன்… குழந்தையாக இருந்தபோது, சாப்பாடு தரக்கூட ஆளில்லாமல் வீட்டில் தனியே கதறிக்கொண்டிருந்த என்னைத் தன் குழந்தையாகத் தத்தெடுத்து வளர்த்தவர்கள் என் அண்ணியும் அண்ணாவும். அவர்கள் கடனில் திக்குமுக்காடிய போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தப் பணம் எனக்கு வரப்பிரசாதமாகவே இருந்தது. அண்ணா அண்ணியின் கடன் சுமையை என்னால் போக்கிவிட முடியும் என்று நம்பினேன்….” என்று தடுமாறியவாறு கூறியவள் கண்களில் கண்ணீர் பொங்க,

“உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது… ஆனால் நீங்கள் என் இடத்திலிருந்து பார்க்க வேண்டும்… சத்தியமாக நான் செய்தது தவறு என்று தெரிந்ததும், மிகவும் வருந்தினேன்…” என்று கலக்கத்துடன் கூற, அவளை வெறுப்போடு பார்த்தான் உத்தியுக்தன்.

“சரி… நான் குற்றமற்றவன் என்று உனக்குத் தெரிந்த பின்பு, நீ என்ன செய்தாய்?”

“அது வந்து… நான்… வந்து… தெரிந்த பின்…” முடிக்க முடியாது திணற,

“தெரிந்த பின்?” அழுத்தமாகக் கேட்க, பொறுமை இழந்தவள், ஒரு பெருமூச்சை விட்டு,

“ஓக்கே… தெரிந்த பின்னும் அதை மறைத்தேன் போதுமா… அப்போதுதான் என் திறமை வெளிவரத் தொடங்கிய காலம். அப்போதுதான் என்னை ஒரு நிருபராக ஏற்றுக்கொண்டார்கள்.. அந்த நன்மதிப்பை இழக்க விரும்பவில்லை உதி. ஒத்துக்கொள்கிறேன்… நான் செய்தது நியாயமில்லைதான்… ஆனால் பாருங்கள் நான் ஒன்றும் தெய்வப்பிறவியில்லையே கிடைக்கும் பெருமையை மறுத்துச் செல்ல…” என்று பெரும் குற்ற உணர்ச்சியுடன் கூறியவள், அவனை நிமிர்ந்து பார்த்து,

“அது… அது மட்டும் காரணமில்லை உதிதன்… நாங்களோ சாதாரணக் குடும்பம்.. இந்த உண்மைச் செய்தியை வெளியிட்டால் எதிர்க்கட்சியாளர்களால் ஏதாவது ஆபத்து வருமோ என்கிற பயமும் என் மௌனத்திற்குக் காரணம்…” என்றாள் சிறுத்துவிட்ட குரலில்.

“ம்… வலிட் பாய்ன்ட்… ஆனால் பார்… இரக்கம் வருவதற்குப் பதில் எரிச்சல்தான் தோன்றுகிறது… ஏன் என்றால் நான் பட்ட அவமானங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் முன்னாடி, உன்னுடைய இந்த மன்னிப்பும், அழுகையும் எதுவுமேயில்லை தெரியுமா” என்று அவன் கூற, மீண்டும் தலை குனிந்தாள் சமர்த்தி.

“உன்னுடைய செய்தி வந்த பின்னால் என் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் என்று உனக்குத் தெரியும்தானே… சொல்… அத்தனை அவமானங்களும், நீ கேட்கும் ஒரு மன்னிப்பில் காணாமல் போய்விடுமா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டுவிட்டு, “நீ என் வாழ்வில் நியாயம் இல்லாமல் நடக்கும்போது, நான் ஏன் உன் வாழ்வில் நியாயமாக நடக்கவேண்டும்…” என்றான் ஆத்திரத்துடன். இவளோ மறுப்பாகத் தலையை ஆட்டி,

“இல்லை… என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்… தாங்கிக் கொள்கிறேன். செய்த குற்றத்திற்குத் தண்டனையாக ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் என் அண்ணா அண்ணி என்ன தவறு செய்தார்கள். அவர்களை ஏன் தண்டிக்கவேண்டும்… ப்ளீஸ் உதிதன்… ஒரே ஒரு முறை அங்கே வாருங்களேன்…” என்று தன் நிலை இழந்து கெஞ்ச அவனோ நிதானமாக அதுவும் சுவாரசியமாகச் அவளைப் பார்த்தான்.

“உனக்குப் போக ஆவலாக இருக்கிறதா?” என்று கேட்டபோது பளிச் என்று மலர்ந்த முகத்துடன் ஆம் என்று தலையை அட்டினாள் சமர்த்தி. அதைக் கிண்டலுடன் பார்த்தவன்,

“சாரி… எனக்கு அங்கே வர நேரமில்லை…” என்றுவிட்டு அங்கிருந்த கோப்பு ஒன்றைத் திறந்து அதிலிருந்து எதையோ படிக்கத் தொடங்க, பொறுமை இழந்தவளாக,

“உங்களுக்குக் கோபம், ஆத்திரம் எல்லாம் என்னோடுதானே. எதற்கு என் அண்ணா அண்ணியின் மனதை வருத்துகிறீர்கள்…” என்ற போது அவளையும் மீறி, குரல் கரகரக்கத் தொடங்கி இருந்தது.

இவனோ அந்தக் கரகரத்த குரல் சற்றும் பிடிக்காதவனாக,

“இதோ பார்… உனக்காக என்னால் எல்லா இடங்களும் அலைந்து திரிய முடியாது. தவிர நான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவனும் கிடையாது. என்னுடைய ஒவ்வொரு வினாடிகளும் பெறுமதி மிக்கவை… அதையெல்லாம் விட்டுவிட்டு உனக்குக் கூஜா தூக்க என்னால் முடியாது… அதனால் உன் நேரத்தை விரையமாக்காமல் வெளியே செல்…”

“அங்கே நீங்கள் வராது விட்டால் நமக்கிடையில் ஏதாவது பிரச்சனை இருப்பது தெரிய வரும்… உதி… தவிர இது நாம் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை… நம்முடைய இரு குடும்பங்களும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அது அவர்களையும்தானே பாதிக்கும்… நம்முடைய சிக்கல் நிறைந்த வாழ்க்கை அவர்களைப் பாதிப்பது சரியா சொல்லுங்கள்…” என்று பரிதவிப்போடு கூற அவளை அழுத்தமாகப் பார்த்தான் உத்தியுக்தன்.

இதோ பார். என் அம்மா பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை. இனியும் படப்போவதில்லை.. அப்படியிருக்கையில் உன் உறவினர்களைப் பற்றி நான் ஏன் வருந்தவேண்டும். அவர்கள் தங்களுக்கான எல்லையோடு இருப்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் நல்லது. அப்படியே நீ அவர்களைப் பற்றிக் கவலைப் பட்டாலும் எனக்கென்ன வந்தது. அது உன் பிரச்சனை…” என்று அலட்சியமாகச் சொன்னவனை வேதனையுடன் பார்த்தாள் சமர்த்தி.

“இப்படிச் சொன்னால் நான் என்ன செய்யட்டும். அவர்கள் உங்கள் அம்மா போலவா…? என்னைக் குழந்தையிலிருந்து தங்கள் உயிரைக் கொடுத்து வளர்த்தவர்கள் உதி… அவர்களுக்காக நான் எதையும்… எதையுமே செய்வேன்… அது உங்களுக்கும் தெரியும்…” என்று ஆவேசமாகக் கூற, இறுகிய அவன் உடலைக் கண்டதும்தான் தான் வாய்விட்டதே அவளுக்குப் புரிந்தது.

அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்க்க, உத்தியுக்தன் அவளைத்தான் வெறித்துக் கொண்டு இருந்தான். நெஞ்சம் உதற,

“சாரி… நான்… வேண்டும் என்று… அது வந்து…” என்று கலங்கித் தடுமாற,

“யார் சொன்னார்கள்…” என்றான் பற்களைக் கடித்து.

தலை குனிந்தவள்,

“ஜான்சி ஆன்டி சொன்னார்கள்…” என்றதும் இவனுடைய முகம் சற்று இளகிப் போனது. அதை உணர்ந்தவளாக,

“என் வலி, வேதனை, துன்பம் மகிழ்ச்சி இன்பம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள் அவர்கள் உதி. சொல்லப்போனால் நான் என்னைப் பற்றிக் கவலைப்பட்டதை விட அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப் பட்டதுதான் அதிகம்… இந்த நிலையில் என் வாழ்க்கை வலி நிறைந்தது என்பது தெரிந்தால் துடித்துப்போவார்கள்… தயவு செய்து ஒரே ஒரு முறை அங்கே என் கூட வாருங்களேன்… ஒரே ஒரு முறை என்னோடு அன்பாக இருப்பதுபோல நடந்துகொள்ளுங்களேன்… சத்தியமாக இதைத் தவிர உங்களிடம் வேறு எதுவும் கேட்கமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு..” என்று கண்கள் கலங்க அவள் வேண்ட, ஆத்திரத்துடன் பக்கென்று சிரித்தான் உத்தியுக்தன்.

“என்ன சொன்னாய்? உன் உறவுக்காரர்களுக்கு முன்பாக நான் அன்பாக நடக்கவேண்டுமா…? அதுவும் உன்னுடன்…” என்றவன் அவளை ரசனையுடன் பார்த்தான்.பின் எழுந்து அவளருகே சென்று தன் பெரிய உள்ளங்கையை அவளுடைய கன்னத்தில் பதித்துப் பெருவிரலால் கன்னக் கதுப்பை வருடிக் கொடுத்தவாறு,

“உன்னை எப்படி வலிக்கச் செய்யலாம் என்று கனவில் கூடத் திட்டம் போட்டவன் நான். அப்படி இருக்க உன்னை வருத்த ஒரு வாய்ப்புக் கரங்களில் கிடைக்கும் போது அதைக் கைநழுவ விடுவேனா? ஹெள கியூட்.” என்று கேட்டவன், பின் ஆத்திரம் கொண்டவனாகத் தன் கரத்தை விலக்கி,

“நினைவில் கூட என்னால் அப்படி யோசிக்க முடியாத போது மற்றவர்களுக்காக நடிப்பதா? அது கனவில் கூட நடக்காது.” என்று கோபத்துடன் எகிறும்போதே அதுவரை தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் விழுந்து உருண்டு போனது.

அதைக் கண்டதும், அதுவரையிருந்த ஆத்திரமும் கோபமும் சட்டென்று வடிந்து போக, ஏனோ இதயத்தின் ஓரத்தில் மெல்லிய தாக்கம். அந்த உணர்வு பெரும் வெறுப்பைக் கொடுக்க,

“இதோ பார் சமர்த்தி… உள்ளே எரியும் நெருப்புக்கு வடிகால் நீ என்று முடிவான பின்பு, அங்கே உன் உறவினர்களின் முன்பாக அந்தத் தீயில் விழுந்து பொசுங்கிவிடாதே… உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன்… அங்கே நான் வந்தாலும் பாதிக்கப்படப் போவது நீதான். இப்போது சொன்னாயே நான்கு சுவருக்குள் நடக்க வேண்டும் என்று… அதை நாற்பதுபேர் பார்க்கும்படி செய்துவிடாதே… இனி ஒரு தரம் இப்படி என் முன்னால் வந்து நிற்காதே… வெளியே போ…” என்று வாசலைப் பார்த்தவாறு கூற, இறுகிப்போய் இருந்த அவன் முகம், இனி எதற்கும் இளகாது என்பதைப் புரிந்துகொண்டவளாக, மீண்டும் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவளுக்கு ஓ வென்று வந்தது.

உத்தியுக்தன் மீது தாங்கமுடியாத ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கூடவே தன் அண்ணன் அண்ணிக்கு என்ன பதிலைச் சொல்வதென்றே புரியவில்லை. வேதனையுடன் கலங்கிப்போய் நிற்க மீண்டும் அவளுடைய கைப்பேசி அழைத்தது.

எடுத்துப் பார்த்தால் அண்ணிதான். நெஞ்சம் தடுமாற அதை உயிர்ப்பித்துக் காதில் வைக்க.

“தங்கம்…. என்ன முடிவு செய்திருக்கிறாய்? நாளை வருகிறாயா?” என்று கேட்க, ஆழ மூச்செடுத்தவள், கூடவே முடிவும் எடுத்தவளாக எச்சில் கூட்டி விழுங்கியவாறு,

“ஆமாம் அண்ணி… உத்திக்கு ஏதோ முக்கியக் கூட்டம் இருக்கிறதாம். பின்னாடி வந்து சேர்ந்து கொள்கிறேன் என்றார்…” என்று கூற, புஷ்பாவின் குரலில் மெல்லிய வாட்டம்.

“அப்படியா தங்கம். முதன் முதலாக வீட்டிற்கு வரும்போது சேர்ந்து வந்தால்தானே நன்றாக இருக்கும்…” என்று மென்மையாகக் கூற,

“நானும் அதைத்தான் சொன்னேன் அண்ணி… ஆனால் பாருங்கள் ஏற்கெனவே ஆயத்தம் செய்த கூட்டத்தை இடை நிறுத்த முடியாது என்கிறார். வேண்டுமானால் இன்னொரு நாள் போகலாமா என்று கேட்டார்…” என்றாள் திக்கித் திணறி.

“அவர்தான் கூட்டம் முடிந்ததும் வருவதாகக் கூறியிருக்கிறாரே. பிறகு என்ன…” என்று தயாளன் கண்டிப்பது இவள் காதுகளுக்கும் கேட்டது. அவளையும் மீறிக் கண்கள் நிறைந்து போனது சமர்த்திக்கு.

புஷ்பாவும்,

“இல்லைடா… நாளை மிக நல்ல நாள்… அதை விட்டால் ஒரு மாதம் கழித்துத்தான் வருகிறது… பரவாயில்லை… நீ முதலில் வா… பின்னாடி தம்பி வரட்டும்…” என்று கூற, பெரும் நிம்மதியானது சமர்த்திக்கு.

அவன் வராவிட்டால் கிடக்கிறான். இவனுக்காக ஏன் சொந்த உறவுகளைப் பார்க்க மறுக்க வேண்டும். அவன்தான் எந்த உறவுகளும் இல்லாமல் தனிமரமாகப் பாசம் என்றால் என்ன என்றே தெரியாத பாலைவனத்தில் முளைத்த பாறையாக இருக்கிறான் என்றால், இவளுக்கென்ன வந்தது. நீ வராவிட்டால் போ… நான் போகத்தான் போகிறேன்… என்னுடைய உறவுகளைக் கண்டு கூடிக் குலாவத்தான் போகிறேன். அதைத் தடுக்க எவனுக்கும் உரிமையில்லை. அவள் கணவனே ஆனாலும் அந்த உரிமையைக் கொடுக்கப் போவதில்லை…” என்று முடிவு செய்தவளாய்த் தன் அண்ணன் அண்ணியைக் காணத் தயாரானாள் சமர்த்தி.

What’s your Reaction?
+1
33
+1
8
+1
0
+1
2
+1
1
+1
0
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍😍😍. அப்படித்தான் சக்தி. இவன் வராட்டி நம்மளால போகமுடியாதா,? .ரோடு போயி நம்ம அண்ணியூட்டு வாசல்ல போயி சேர்க்காதா?.
    இல்லை நாம ஏறிப் போற வண்டி நம்மளை கொண்டு போயி சேர்க்காதா?.
    பெரிய வெங்காயம் இவன்🫤🫤🫤🫤🫤

    • வைஷூ குட்டி என்ன இத்தனை நாளா ஆளைக் காணோம். நீங்க நலமாதானே இருக்கீங்க. ஐ மிஸ் யு பா. திரும்ப உங்களை பாத்தது ரொம்ப சந்தோஷம்யா.

  • ஹாய் நயணிம்மா நானு நலமாக இருக்குறேன். நீங்க நலமா இருப்பீர்கள் என்று பழனிமுருகனை வேண்டிக் கொள்கிறேன்.💖💖💖💖💖💖.நானும் மிஸ் பண்ணுனேன் நயணிம்மா 💕💕💕💕💕💕.
    ஆடி பொறந்ததும் கொஞ்சம் வேலைஅதிகம் ஆகிடுச்சு நயணிம்மா.
    தேங்கா சுடற நோம்பில இருந்து ஆடி வெள்ளி,ஆடி பதினெட்டு வரைக்கும் வேலைதான்.
    நாளை மறுநாள்ல இருந்து ஓகே ஆகிடும் நயணிம்மா. வந்துடுவேன்.

    • ஓ.. ஓகே ஓகே. கொஞ்சம் யோசனையா இருந்துச்சுயா. ஒரு போஸ்ட் போடுவமான்னு கூட நினைச்சேன். ஏதாச்சும் உடம்புக்கு முடியாம போயிடுச்சோன்னு கவலையா இருந்துச்சு. இப்ப மீ ஹப்பி. என்ஜாய் பண்ணுங்க உங்க திருவிழாவை.

Recent Posts

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 17

17 “மாமா அத்தை கண் விழித்துவிட்டார்கள்...” அதைக் கேட்டதும், மீண்டெழுந்தான் உத்தியுக்தன். அந்தக் கணம் உயிர் பெற்றான் அந்த ஆண்மகன்.…

14 mins ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

24 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago