இப்போது அவளை எப்படி அழைத்தான்… இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப் பார்த்தாள் பெண்ணவள். அவனோ சவதானமாகத் தன் உணவை உண்டு கொண்டிருந்தான்.
ஒரு வேளை தவறாகக் கேட்டுவிட்டோமோ? மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல அவன் எதையோ சொல்ல இவளுக்கு வேறு மாதிரிக் கேட்டுவிட்டதோ? உமிழ் நீர் கூட்டி விழுங்கியவள்,
“எ… என்னை…. என்னை எப்படி அழைத்தீர்கள்…” என்றாள் திக்கித் திணறி.
அவனோ நிதானமாகக் கரத்திலிருந்த முள்ளுக் கரண்டியைத் தட்டில் போட்டு விட்டு, அருகேயிருந்த துண்டை எடுத்து உதறி, அதைக் கொண்டே உதடுகளையும் அதன் கரையோரத்தையும் துடைத்து விட்டு அந்தத் துண்டைச் சுருட்டி பக்கமாக வைத்தான். பின், பழைய மதுக் குவளையை ஒதுக்கி விட்டுச் சற்றுத் தள்ளியிருந்த புதிய மதுக் குவளையை எட்டி எடுத்து அதில் புதிதாய் மது ஊற்றி ஒரு உறுஞ்சு உறிஞ்சியவன், பின் அதை மேசையில் வைத்து விட்டு, நிதானமாக இதங்கனையைப் பார்த்தான்.
பின் அமர்ந்த வாக்கிலேயே கதிரையைச் சற்றுப் பின்னால் தள்ளி, காலுக்கு மேல் காலைப் போட்டவாறு,
“இதங்கனை என்றேன்… உன் பெயர் அதுதானே…” என்றான் மென்னகையுடன். அதுவரை உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தவளுக்கு மொத்தமாய் உலகம் இருண்டு போனது. அதிர்வுடன் அவனையே விறைத்துப்போய் பார்த்தவள்…
“எ… எப்படி… எப்போது…” என்று திக்கித் திணற, மெல்லியதாக் குலுங்கிச் சிரித்தவன்,
“என்னை பேட்டி காண முயற்சி எடுக்கும்போதே விசாரிக்கத் தொடங்கிவிட்டேன்… பின்னால் மகிந்தன் இருப்பது தெரிய வந்தது. பிறகு என்ன ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிடத் தெரியாத சிறுவனா நான்?” என்றவன் கரத்தைத் தூக்கிச் சுட்டுவிரலை மட்டும் நிமிர்த்தி,
“ஒரு நிமிடம்… உனக்கு ஒரு சின்ன பரிசு தரவேண்டும்…” என்றவன் இப்போதும் தலையைச் சற்று சரித்து
“ரோசி…” என்றான். அவனுடைய அழைப்பிற்காகவே அந்த ரோசி காத்திருந்தாள் போல. அடுத்த கணம், பணிப்பெண் ஒருத்தி, ஒரு கரிய நிற வெல்வெட் பெட்டியொன்றை ஏந்தியவாறு அரவனை நோக்கி வந்தாள்.
“தங்க் யு…” என்று புன்னகைத்தவாறு, அவள் கரத்திலிருந்த பெட்டியை வாங்கியவன்,
“ரோசி… இனி உங்கள் யாருடைய உதவியும் வேண்டியதில்லை…. நீங்கள் எல்லோரும் கிளம்பலாம்… அதுவும் விரைவாக… போகும் போது விக்டரிடம் எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்கச் சொல்…” என்று கூற,
“ஷுர் சார்…” என்று விட்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு விலக, அந்த ரோசி மறையும் வரைக்கும் காத்திருந்தவன், அவள் சென்றதும், இதங்கனையை ஏறிட்டுப் பார்த்தான். இதங்கனையோ இன்னும் அந்த மலைப்பிலிருந்து வெளி வரவில்லை.
அப்படியென்றால் ஆரம்பத்திலேயே அவள் யார் என்று இவனுக்குத் தெரிந்திருக்கிறது. இதுவரை அவளை விந்தியா என்று அவன் அழைக்கவேயில்லை… பேபி என்றான்… இல்லையென்றால் பெயர் சொல்லாது பேசினான்… அப்போதே சிந்தித்திருக்க வேண்டும். அது மட்டுமா, அவளுக்கு மதுபானம் பிடிக்காது என்று தெரிந்து வைத்திருந்த போதே விழித்திருக்க வேண்டும்… இவள்தான் முட்டாள் போல… மகிந்தன் சொன்னதை நம்பி, அவனுக்குத் தெரியாது என்று நினைத்து… கடவுளே… இப்போது என்ன செய்யப் போகிறாள். இப்படிக் கையும் களவுமாகப் பிடிபடுவோம் என்று சிறிது கூட எண்ணவில்லையே.. அடுத்து என்ன செய்யப் போகிறாள்? அச்சத்துடன் அவனைப் பார்க்க, அவனோ தன் கரத்திலிருந்த வெல்வெட் பெட்டியை அவள் முன்பாக நீட்டி,
“எ ஸ்மால் பிரசன்ட் ஃபோர் யு…” என்றான் புன்னகை சற்றும் வாடாமல்.
ஏனோ அந்தப் புன்னகை இவளுடைய அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்ததன்றி எள்ளளவும் குறைக்கவில்லை. இவனுக்கு அரவன் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். நஞ்சைக் கக்கும் பாம்பு போலப் படம் விரித்து ஆடுகிறானே. இதிலிருந்து எப்படி வெளியேறப் போகிறாள்? புத்தி செயல்பட மறுத்தது. தொண்டையோ வறண்டு போனது. ஏதும் செய்ய முடியாத பரிதாபத்துடன் அவனை ஏறிட,
“கமோன்… டேக் இட்…” என்றான் இனிமையாய். அந்த இனிமையில்தான் எத்தனை கொலைவெறி. இவளுக்குத் தொண்டையோடு மூச்சும் அடைத்துக் கொண்டது. முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியவள் அந்தப் பெட்டியையே வெறித்தாள். அதில் என்ன குண்டை வைத்திருக்கப் போகிறானோ… வாங்குவதா விடுவதா என்று அவள் கலங்கி நின்றவள் இறுதியாக, வெளிப்படையாக நடுங்கிய கரங்களைக் கொண்டு அவன் நீட்டிய பெட்டியை வாங்கினாள்.
அதைத் திறக்கவேண்டும் என்று தெரியும்தான். ஆனால் திறப்பதற்கு அச்சம் அவளைக் கொல்லாமல் கொன்றது. திரு திரு என்று அந்தப் பெட்டியையே வெறித்துப் பார்க்க,
“ஓப்பன்…” என்றான்.
அவளுடைய இதயம் பலமாகத் துடிப்பது இவள் காதுகளுக்கே கேட்டது. ஏதோ அந்தப் பெட்டிக்குள் அவள் உயிரை உலுக்கும் பொருள் இருக்கிறது என்று உள்ளுணர்வு சொல்ல, அச்சத்துடன் அவனைப் பார்ப்பதும், அந்தப் பெட்டியைப் பார்ப்பதுமாகத் தடுமாறினாள் இதங்கனை.
அவள் தடுமாற்றத்தை உணர்ந்தவன் போல, அரவன் இருக்கையை விட்டு எழுந்தான்.
“என்ன தயக்கம் ம்?” என்றவன், அவளுக்குப் பின்னால் வந்து நின்றான்.
“லெட் மி ஹெல்ப் யு…” என்றவாறு அவளை மேலும் நெருங்கி, அவளைச் சுற்றிக் கரங்களைக் கொண்டு சென்று அவள் கரத்திலிருந்த பெட்டியை அவளுடைய கையோடு பற்றிக் கொள்ள, அவனுடைய பரந்த மார்போ அவளுடைய தலையை முட்டி நின்றது. அவனுடைய தேகத்தின் கடுமையான சூட்டை இவள் உணரும் அளவுக்கு அவன் தகித்துக்கொண்டிருப்பது இவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அச்சத்தின் சுவை இத்தனை கொடுமையானதாகவா இருக்கும். பேச மொழியற்று, சிந்திக்கத் திறன் இழந்து அப்படியே சிலையென நின்றிருக்க, அவனோ குளிர்ந்த அவளுடைய கரங்களை உள்ளங்கையில் உணர்ந்தவனாக,
“ஹே… எதற்காக இப்படிக் கரங்கள் குளிர்கின்றன…” என்றான் இதமாக. குரல் இதமாகத்தான் வந்தது. ஆனால் அந்த இதம் இதயம் வரை சில்லிட வைத்தது. அவனுக்கோ அவளுக்காக அந்தப் பரிசுப் பெட்டியைத் திறக்க, அங்கே, அவன் இருப்பிடங்களில் அவள் பொருத்திய ஒலிப்பதிவு சாதனங்கள் சமத்தாக அமர்ந்திருந்தன.
பீதி உடல் முழுவதும் பரவ, விலுக்கென்று அண்ணாந்து பார்த்தாள் இதங்கனை.
அவனோ புன்னகையுடன் இராட்சதன் போல நின்றிருந்தான். அந்த அழகிய புன்னகை கூட இத்தனைக் கிலியை ஏற்படுத்துமா என்ன? இப்போது அவளை நோக்கிக் குனிந்தவன், சுருண்ட கூந்தலில் தன் நாசியைப் பொருத்தி அதன் வாசனையை உணர்ந்து,
“உன்னுடைய கூந்தலின் மணம்… என்னைச் சுருட்டிப் போடுகிறது இதங்கனை….” என்றவன் இப்போது உதடுகளைச் சற்று இடம் மாற்றி வலது காதுவரை குனிந்தவன், அவளுடைய காதுகளை மறைத்த கூந்தலோடு உதடுகள் தீண்ட,
“ஹௌ இஸ் மை சேர்ப்ரைஸ் பேபி…” என்றான்.
என்ன பதிலைச் சொல்வாள். எப்படிச் சொல்வாள். திக்கித் திணற, இப்போது அரவனின் கரங்கள் அவளுடைய தோள்களில் அழுந்தப் பதிய விதிர் விதிர்த்துப் போனாள் அந்தப் பேதை. அவனோ பதிந்த கரங்கள் சற்று மேலேற்றிக் கழுத்தைப் பற்ற, இதங்கனையின் உயிர் அவசரமாக அவளை விட்டு ஓடிவிட முயன்றது.
கழுத்தை நெரித்துக் கொல்லப் போகிறானோ…? விழிகளை அழுந்த மூடிக் கழுத்தை நெரிக்கும் நொடிக்காகக் காத்திருக்க, அவனோ, கழுத்தை வருடியவாறு இன்னும் மேலேற்றிக் காதுகள் வரை கொண்டு வந்தான். அடுத்து இடது காதின் பக்கமிருந்த கூந்தலை ஒதுக்கி,
“பிக்கபூ…” என்றான். அங்கே மகிந்தன் கொடுத்த ஒலிவாங்கி அரவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது.
இப்போதும் இதங்கனை இரத்தப்பசை இழந்தவளாக மூச்சுக்கூட விட மறந்தவளாக அப்படியே அமர்ந்திருந்தாள். இதோ அவளுடைய இறுதி நிமிடங்கள் எண்ணப்படுகின்றன. எந்த நேரமும் அவளுடைய உயிர் அவளை விட்டுப் போய்விடலாம். அவள் இறந்த பின் அவளுடைய உடலை என்ன செய்வார்கள். அந்தக் காட்டுக்குள் புதைத்துவிடுவார்களா? காணாமல் போன பல இளம் பெண்களின் பட்டியலில் அவளும் இடம் பெறுவாளா…? விழிகளை இறுக மூடியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறிக் கன்னத்தில் வடிந்து செல்ல, அவனோ, காதுக்குள் பொருத்தியிருந்த ஒலிவாங்கியைக் கழற்றி எடுத்து, அணைத்திருந்த அதன் பொத்தானை அழுத்தி அதை உயிர்ப்பித்துத் தன் உதட்டுக்கு நேராகப் பிடித்து,
“ஹலோ…” என்றான் கிண்டலாக. பின் அதைத் தூக்கிக் காதுக்கு அருகாமையில் வைத்து மறுபக்கம் கேட்கும் சத்தத்திற்காக காத்திருந்தான். எந்த சத்தமும் வரவில்லை.
உதடுகளைப் பிதுக்கியவன், மீண்டும் அதை வாயருகே வைத்து ஹலோ என்று விட்டுக் காதுக்கு நேராகக் கொண்டு வர, இப்போதும் அமைதி காத்தது அந்த ஒலிவாங்கி. இப்போது இதங்கனையை வியப்போடு பார்த்தவன்,
“இது பெண்களிடம் மட்டும்தான் பேசுமா…? என்னிடம் பேசாதா?” என்றான் கிண்டலுடன். இப்போதும் இவள் வாய் திறந்தாளில்லை. திறந்து பயனில்லை என்றும் நன்றாகத் தெரிந்தது.
அரவனோ, அடுத்த கணம், அந்த ஒலிவாங்கியைத் தரையில் போட்டுக் காலால் ஒரு மிதி மிதிக்க அது நசிந்து சுக்குநூறாக, அங்கே ஒரு ஆணுடைய குரல் திடீர் என்று வந்ததும் அதிர்ந்து போன மகிந்தன், மூச்சே விட மறந்தவனாக அமைதி காத்திருந்த நேரம், காதில் ஙொய் என்கிற சகிக்க முடியாத பயங்கர சத்தத்தில் காது சவ்வு வெடித்து இரத்தம் வந்துவிட்டிருந்தது மகிந்தவுக்கு.
“xxxxxx xxxxx xxxx” என்று கத்தியவன் தன் காதிலிருந்த ஒலிவாங்கியைக் கழற்றி எறிந்து விட்டுக் காதைத் தட்டிக் கொடுத்தவன், திரும்பித் தன் காவல்துறை நண்பர்களைப் பார்த்து,
“புறப்படுங்கள்… இதங்கனையைக் காப்பாற்ற வேண்டும்…” என்றான் சீறலாய்.
அடுத்த விநாடி, கைத்துப்பாக்கியை எடுத்துப் பான்ட் பாக்கட்டிற்குள் செருகிக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து பாய்ந்து வெளியே வர, இங்கே, அரவனோ, தன் சட்டையின் கசங்கலை நீக்கியவாறு, தன் இருக்கையில் நிதானமாக வந்தமர்ந்தான். பின் இதங்கனையை ஏறிட்டு,
“எதுவரை தெரிந்து வைத்திருக்கிறாய்…” என்றான் மிக மிக நிதானமாக.
இதற்கு என்ன பதிலைச் சொல்வாள். பதில் சொல்லாது அவனை ஏறிட, இவனோ மதுக் குவளையை எடுத்து, ஒரு மிடறு குடித்து விட்டு அதை மேசையில் வைத்துப் பின் மடியோடு கரங்களைக் கோர்த்து வைத்தவாறு அவளை ஏறிட்டான்.
“இதோ பார்… மரியாதையாக உண்மையைச் சொன்னால், சேதாரமில்லாமல் வெளியே போவாய். இல்லை என்றால்… ஐ ஆம் சாரி… எனக்கும் வேறு வழியிருக்காது…” என்றான். இப்போதும் அவள் பதில் கூறாது அவனையே வெறித்துப் பார்க்க, அந்த ராட்சதன் சற்றும் நிதானம் தவறாமல்,
“லிசின்… எனக்கு ஆண் பெண் பேதம் என்பதெல்லாம் கிடையாது… எனக்கு எதிராக ஒருத்தன் செயல்படுவது தெரிந்தால், அது யாராக இருந்தாலும், அடித்தே கொன்றுவிடுவேன். கொஞ்சத்திற்கு முன்னம் நீ கூட அந்தக் காட்டுக் குடிலில் பார்த்தாயே…. அவன் பெயர் என்ன? ஆ… சோஜின்… உனக்குத் துணையாக வந்தவன்… பாவம், என் விசாரணைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிட்டான்…” என்று அவன் கூற, அவன் சொன்ன சோஜின் என்கிற பெயரில் விலுக் என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் இதங்கனை.
சற்று முன் இறந்தது சோஜினா…? அவனையா கொன்றான்…? அவன் காவல் துறையைச் சேர்ந்தவன்… இவனுக்கு அது தெரியுமா தெரியாதா? அப்படியானால் ஆலிவருக்கு என்னானது? ஏனோ அவளையும் மீறிக் கண்களில் கண்ணீர் உற்பத்தியானது. எத்தனை சுலபமாகக் கொன்றுவிட்டேன் என்கிறான்… இவன் மனிதனா இல்லை இராட்சதனா…
“ஏன்… ஏன் அவரைக் கொன்றாய்… அவர் காவல் துறையைச் சேர்ந்தவர்…” என்று அழுகையில் திக்கித் திணற,
“யெஸ் ஐ நோ… என்ன செய்வது… அதிகம் வாய் திறக்க மறுத்தான். கொஞ்சம் பலம் கூட்டி அடித்தவிட்டேன் போல… தலை சரிந்துவிட்டது…” என்று அலட்சியமாக் கூறியவன், பின் புருவங்களைச் சுருக்கி,
“உன்னோடு வந்த இன்னொருத்தன் பெயர் என்ன? ஆலிவரா…?” என்று சந்தேகம் போல கேட்டவன், பின் தெளிந்தவன் போல,
“யெஸ் ஆரிவர்… தப்பிவிட்டான்… ஆனால் அவனும் சீக்கிரம் பிடிபட்டுவிடுவான்… அவனுக்கும் இதே தண்டனைதான்… ஏன் உன் காதலன் மகிந்தனாக இருந்தாலும்… என் தண்டனை ஒன்றுதான்… நீ என்றாலும் கூட…” என்றதும்
“யு ஆர் இன்சேன்…” என்றாள் இதங்கனை அழுகையும் ஆத்திரமுமாக. இவனோ தோள்களைக் குலுக்கி,
“தாங்க் யு…” என்றான். பின் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்து,
“என்னவோ தெரியவில்லை… உன்னை அடித்துக் கொல்ல என்னால் முடியும் போலத் தோன்றவில்லை… அதனால் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்… உனக்கு எதுவரை தெரியும்… நீ எந்தளவுக்கு மகிந்தனின் திட்டத்திற்குள் இணைந்திருக்கிறாய்… மகிந்தனின் அடுத்த திட்டங்கள் என்ன…? இதைச் சொன்னால் போதும்… உன் மீது சிறு கீறல் கூட இல்லாமல் அனுப்பி விடுகிறேன்…” என்று கூற இவளோ பதில் கூறாமல் அரவனை வெறித்துப் பார்த்தாள்.
அவன் கேட்கும் கேள்விக்கு அவளிடம் ஏது பதில். உண்மையைச் சொன்னால் அவன் நம்புவானா? பொய்சொன்னால்தான் ஏற்றுக் கொள்வானா. சித்திரவதைப் படுத்திக் கொன்றுவிடுவானே. வெள்ளம் தலைக்கு மேல் போன பின்பு சாண் போனால்தான் என்ன முழம் போனால்தான் என்ன. போகும் உயிர் போகத்தானே போகிறது. நினைக்கும்போதே அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அதைக் கண்டவன் என்ன நினைத்தானோ,
“மகிந்தனுக்கு என்னிடம் அனுப்ப வேறு பெண்களா கிடைக்கவில்லை… அதுவும் திருமணம் முடிக்க இருக்கும் பெண்ணையே அனுப்பியிருக்கிறானே… நான் நல்லவனாகப் போனதால் நீ தப்பித்தாய். இல்லையென்றால் என்னவாகியிருக்கும்…?” என்று உலகமகா நல்லவன் போல அவன் பேச, இதங்கனையோ அழுகையை விடுத்துக் கடும் ஆத்திரத்தோடு அவனை எரிப்பதுபோலப் பார்த்தாள்.
“நல்லவனா… நீயா… சீ… அசிங்கத்திற்கும் துரோகத்திற்கும் பிறந்தவன் நீ… எப்படி நல்லவனாக இருக்கமுடியும். தவிர, மகிந்தவைப் பற்றிப் பேச உனக்கு என்ன தகுதியிருக்கிறதா. நீ ஒரு கொலை காரன், உலகையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரவாதிக்குக் கால்பிடித்துவிடும் ஒரு அடிமை… கேவலமானவன்… ஆனால் என் மகிந்தன் உன்னையே வேட்டையாடும் ஒரு காவல்துறை அதிகாரி… உத்தமர்… ஒன்று சொல்கிறேன் நன்றாகக் கேட்டுக் கொள் அரவன்… உனக்கு என் மகிந்தவின் கையால்தான் சாவு…” என்று தெளிவாய் அழுத்தமாகக் கூற, இவனோ சிரமப்பட்டுத் தன் சிரிப்பை அடக்க முயன்றவாறு,
“ரியலி… அப்படியா… ஐயோ பயமாக இருக்கிறதே…” என்றான் கிண்டலாக. பின் அவள் பக்கமாகக் குனிந்து,
“நிறைய வாட்டி உன் காதலனும் நானும், திருடன் பொலிஸ் விளையாட்டு விளையாடிவிட்டோம். இன்றுவரை எங்கள் முடியைக் கூட அவனால் தொட முடிந்ததில்லை தெரியுமா…” என்றான் கிண்டலாக.
இவளோ அங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசிக்கத் தொடங்கினாள். அதை உணர்ந்தவன் போல,
“அத்தனை சுலபத்தில் என்னிடமிருந்து தப்ப முடியாது இதங்கனை…” என்றான் அழுத்தமாக. இவளோ அவனை வெறித்துப் பார்த்து,
“ஏன் முடியாது… இன்னும் பத்து நிமிடங்களில் மகிந்தன் உன்னைத் தேடி வந்துவிடுவார்… அதற்குப் பிறகு நீ நினைத்தாலும் உன்னால் தப்ப முடியாது…” என்று இவள் சூளுரைக்க இவனோ இப்போது வாய் விட்டுச் சிரித்தான்.
“அப்படியா…” என்றான்.
அவன் கேட்ட விதத்திலேயே இதங்கனைக்குப் புரிந்து போயிற்று. மகிந்தனைத் தடுக்க அரவன் ஏதோ திட்டம் போட்டிருக்கிறான்… என்று. என்ன அது…? அப்படியானால் மகிந்தனால் அவளைக் காக்க வர முடியாதா…? அவளேதான் அவளைக் காக்க வேண்டுமா? கடவுளே எப்படிக் காக்கப் போகிறாள்…? யோசிக்கும் போதே, அரவனின் கைப்பேசிக்கு ஒரு செய்தி வந்ததற்கான சத்தம் வர எடுத்துப் பார்த்தான்.
அதிலிருந்த செய்தியைக் கண்டதும்,
“சரி… நேரம் போகிறது… வா… இப்போதைக்கு இங்கிருந்து கிளம்பலாம்… பிறகு ஆற அமர உன்னை விசாரிக்கிறேன்…” என்றதும், அதுவரை அச்சத்தில் புலன் இழந்து கிடந்தவள், அடுத்த விநாடி அங்கிருந்து தப்பவேண்டும் என்கிற வேகம் அவள் இரத்தத்தைப் பொங்கியெழச் செய்ய, பின்விளைவுகள் எதைப் பற்றியும் யோசிக்காமல், ஆவேசத்தோடு எழுந்து, தனக்கு முன்னால் ஆவி பறந்துகொண்டிருந்த சூப் பாத்திரத்தை எடுத்து அவனை நோக்கி விட்டெறிந்து விட்டுப் பாய்ந்து அந்த அறையை விட்டு ஓடத் தொடங்கினாள் இதங்கனை.
ஓடியவள், அடுத்துக் கதவு வாசலில் கால் வைத்ததுதான் தெரியும். மறு கணம், பறக்கும் தட்டாய் சுழன்று வந்த இரும்பினாலான மெழுகுதிரியைத் தாங்கும் பெரிய தாங்கி ஒன்று, அவளுடைய பின் மண்டையில் பலமாக மோத, அது மோதிய வேகத்தில் பூச்சிகள் பறக்க, அடுத்து என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள்ளாகவே சுழன்று தொப்பென்று தரையில் விழுந்தவளின் உலகம், சட்டென்று இருண்டு போனது.
அங்கே சூப் ஊற்றப்பட்ட தன் ஷேர்ட்டில் படிந்திருந்த உணவு எச்சங்களைப் புறங்கையால் நிதானமாகத் தட்டி விட்டவாறு எழுந்தவன், சற்று வெளியே வந்திருந்த வெண்ணிற ஷேர்ட்டைப் பான்டிற்குள் திணித்துக்கொண்டே அவளை நோக்கி வந்தான்.
குப்புற விழுந்து கிடந்தவளின் முதுகு அந்த ஆடைக்கூடாக வெளியே பளிச்சென்று தெரிய, அதைப் பற்றிய அக்கறையில்லாதவனாக, அவளைத் திருப்ப வேரறுந்த கொடியாகத் திரும்பினாள் இதங்கனை. அவளுடைய முகத்தைப் பற்றி அப்படியும் இப்படியும் திருப்பியவன், பின், தன் முகத்தைச் சரித்து அவளைப் பார்த்தான்.
அவன் மெழுகுதிரியின் தாங்கியை எறிந்த வேகத்தில் உயிரை விட்டுவிட்டாளா என்ன? சந்தேகம் கொண்டவனாகச் சுட்டுவிரலை அவளுடைய மூக்கில் வைத்துப் பார்த்தான். மூச்சு வந்துகொண்டுதான் இருந்தது. நிம்மதி கொண்டவனாக, நிமிர்ந்தவனின் விழிகளில், ஆடைகள் விலகியதால் தெரிந்த வலது காலில் எதுவோ மினுமினுப்பது போலத் தெரிய, மேலும் ஆடையை விலக்கிப் பார்த்தான் அரவன்.
காலைச் சுற்றிய சலோட்டேப்பில் இறுக ஒட்டப்பட்ட கைப்பேசியைக் கண்டதும் அவனுடைய உதட்டில் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது. அந்தப் புன்னகையோடு அவளை நோக்கிக் குனிந்தவன், அடுத்த கணம், அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினான்.
அதே நேரம் அரவனின் வீட்டை நோக்கிச் சீறிப்பாய்ந்து வந்த மகிந்தனின் வாகனம் முன்னேற முடியாமல் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்து பாதையை மறைத்திருந்தது. அதை அகற்றி விட்டு முன்னேறிய அந்த நேரம் வாகனத்தின் முன் டயர் வெடிக்க மறு கணம், வண்டி தன் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் சென்று அங்கிருந்த பாறை ஒன்றோடு மோதி நின்றது.
அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் திட்டிக்கொண்டு வெளியே வந்த மகிந்தன், இறங்கி வந்து டயரைப் பார்த்தான். அங்கே இரண்டடி நீளமுள்ள ஒரு கட்டையில் ஏற்றப்பட்ட ஆணிகள் டயரைக் குத்தியிருப்பதைக் கண்டதும், கடும் ஆத்திரம் வந்தவனாக ஓங்கித் தன் வாகனத்தை குத்தியவன், அடுத்த வாகனத்தில் பாய்ந்து ஏற, அந்த வாகனம் மின்னல் விரைவுடன் அரவனின் வீட்டை வந்து சேர்ந்தது.
ஆனால், அவர்களை வரவேற்றது என்னவோ வெற்றுவீடுதான்.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…
(21) அன்று ஏகவாமனும் அலரந்திரியும் ஜெயவாமனின் அருகேயே அமர்ந்திருந்தனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை… பேசினால் மட்டும் வலிகளின் அளவு…
View Comments
ஹாய் நயணிம்மா நீங்க நலமா? நாங்க நலம்.🥰🥰🥰
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖💖 நயணிம்மா