அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு பெட்டி வீற்றிருந்தது.
இவளோ, என்ன என்பது போலப் பார்க்க, அந்தப் பெண், உள்ளே வந்து, அந்தப் பெட்டியைப் படுக்கையில் வைத்து விட்டு மீண்டும் குனிந்து வணக்கத்தைத் தெரிவித்து விட்டு வெளியேற, இதங்கனை புருவங்களைச் சுருக்கியவாறு நடந்து சென்று அந்தப் பெட்டியின் மூடியைத் திறக்க, அதில் சிவந்த நிறத்தில் கவர்ச்சியாக ஒரு ஆடை வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் ஒரு அழகிய வண்ண அட்டையும் இருக்க, எடுத்துப் பார்த்தாள். அதில் சரியாக ஏழுமணி என்று எழுதப்பட்டிருந்தது. உடனே அந்த அட்டையைப் படுக்கையில் எறிந்து விட்டு, அந்த ஆடையைத் தூக்கிப் பார்த்தாள். பளபளத்தது ஆடை. மிளகாய் சிவப்பில் தொடைக்கும் மேலாக வெட்டப்பட்டு, பின் முதுகு முழுவதும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்பகடி.
அதைக் கண்டதும் ஒரு கணம் அன்னை கற்பனையில் தோன்றி விழிகளை உருட்டி மிரட்ட, பதட்டத்தோடு அதைச் சுருட்டிப் படுக்கையில் விட்டெறிந்தாள் இதங்கனை.
அவள் வாழ்க்கையில் இதுவரை இத்தகைய கவற்சியாக ஆடை அணிந்ததேயில்லை. அதை அவளுடைய தாய் விரும்பியதும் இல்லை. இவள் பிறந்து வளர்ந்தது கனடாவாக இருந்தாலும், அன்பும் கண்டிப்பும் நிறைந்த தாயின் கரங்களில் வளர்ந்ததால், தாய்க்குப் பிடிக்காத எதையும் இதுவரை செய்ததில்லை
ஆனால் இப்போது என்ன செய்யப்போகிறாள். நாய் வேடம் போட்டதற்காக நாய் மாதிரியே குரைக்கலாம்தான். ஆனால் நாயாகவே ஆகிவிட முடியாதே. என்ன செய்வது என்கிற குழப்பத்துடன் எழுந்தவள் மீண்டும் ஜன்னல் பக்கமாக வந்து வெளியே வெறித்தாள். ஆறு மணி என்பதால் நன்கு இருட்டிப்போயிருந்தது. அதைப் பார்த்து அவளுடைய மனமும் சோர்ந்து போனது.
எப்படி இந்த ஆபத்திலிருந்து சேதாரமில்லாமல் தப்பப் போகிறோம் என்று சுத்தமாகத் தெரியவில்லை. சோர்வுடன் திரும்பியவளின் விழிகளில் எதுவோ உறுத்த, மீண்டும் திரும்பி உற்றுப் பார்த்தாள்.
சற்றுத் தொலைவில் மரங்கள் அடர்ந்த காட்டின் மத்தியில் மெல்லிய வெளிச்சம் முணுமுணுப்பதுபோலத் தோன்ற, உற்றுப் பார்த்தாள். சந்தேகமேயில்லை. அங்கே ஒரு வெளிச்சம் முணுமுணுத்துக்கொண்டுதான் இருந்தது.
உடனே காதில் உள்ள ஒலிவாங்கியின் பொத்தானை அழுத்தி,
“மகிந்த இருக்கிறாயா?” என்றாள் கிசுகிசுப்பாக.
“சொல்லு இதங்கனை…”
“இங்கே என் அறையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் ஒரு வெளிச்சம் தெரிகிறது…” என்றாள் கிசுகிசுப்பாய்.
“வெளிச்சமா…? சிலவேளைகளில் நடைபாதைக்காக வெளிச்சம் போட்டிருப்பார்கள் இதங்கனை…”
“ப்ச்… நடைபாதைக்கான வெளிச்சம் என்றால் நான் கண்டுபிடிக்க மாட்டேனா. அது இல்லை மகிந்த. இந்த அரவனின் வீட்டிற்குப் பின்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் காடுதான் இருக்கிறது. அதில் எப்படி வெளிச்சம் வரும்?” என்று இவள் சந்தேகம் கேட்க, உடனே மகிந்தன் பரபரப்பானான்.
“உன்னால் அங்கே சென்று பார்க்க முடியுமா…?”’ என்று அவன் கேட்க, இவள் ஜன்னலுக்குள்ளாக எட்டிப் பார்த்தாள். வெளியே உப்பரிகை தெரிந்தது.
“என்னால் முடியும் போலத்தான் தோன்றுகிறது… இரு… நான் முதலில் முயற்சி செய்து பார்க்கிறேன்…” என்று விட்டுச் சற்றும் யோசிக்காமல், அறையை விட்டு வெளியே வந்தவள் அந்த உப்பரிகை அமைக்கப்பட்ட திசை நோக்கிக் கொஞ்சத் தூரம் சென்றாள்.
செல்லும் போதும் அவதானமாக யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். நல்லவேளை யாருமில்லை. நிதானமாக நடக்க,
“பார்த்து போ இதங்கனை… வீணாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளாதே. அதன் பிறகு நம் முயற்சிகள் அத்தனையும் வீணாகப் போய்விடும்…” என்று எச்சரிக்க,
“எனக்குத் தெரியும்… முதலில் எனக்குப் பயங்காட்டுவதை நிறுத்து…” என்று சிடுசிடுத்து விட்டு மீண்டும் காதில் விரலை நுழைத்து ஒலிவாங்கியை அணைத்தவள், நடக்கத் தொடங்கினாள்.
உப்பரிகைக்குச் செல்லும் கதவைத் திறக்க, உப்பரிகை விரிந்தது. யாருடைய பார்வையிலும் சிக்காமல் கடகடகவென்று பின் முத்தத்தில் இறங்கியவள் சுத்தவரப் பார்த்தாள்.
யாருமில்லை. இருட்டாக இருந்தது பின்பகுதி. இருநூற்று ஐம்பது அடிக்கு அப்பால் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி இருக்கத் திரும்பி தன் அறை எங்கே என்று பார்த்தாள். அதிலிருந்து அந்த வெளிச்சம் தெரிந்த இடத்தைக் கணக்கிட்டு கடகடவென்று அந்த மரங்களுக்கூடாக நடக்கத் தொடங்கினாள் இதங்கனை.
அது காட்டுப் பகுதி என்பதாலும், ஒதுக்குப் புறம் என்பதாலும், இதங்கனைக்கு அச்சம் தொண்டைவரை பரவத்தான் செய்தது. ஆனாலும் திரும்பிச் செல்வதாக இல்லை. மேலும் மேலும் நடக்கத் தொடங்க. அவள் சந்தேகம் சரிதான் என்பது போல மரத்திலான ஒரு பழைய குடில் ஒன்று சற்று உயரமான ஒரு பகுதியில் கண்களுக்கு விரிந்தது.
அங்கிருந்துதான் வெளிச்சம் வந்ததா? குழப்பத்தோடு மேலும் முன்னேற, அது மேட்டுப் பகுதி என்பதால் ஏற ஏற மூச்சுத்தான் வாங்கியது.
அந்த குடிலை நெருங்க, மெல்லிய சலசலப்புச் சத்தம் இவளுடைய கூரிய செவிகளுக்குள் வந்து விழுந்தது. உடனே தன் செவிப்புலனைக் கூர்மையாக்கி உற்றுக் கேட்க முயன்றாள். சந்தேகமில்லை. யாரோ முனங்கும் ஒலிதான் அது.
யார் அங்கே முனங்குகிறார்கள். அறியும் ஆர்வத்தோடு, அங்கிருந்த மரம் ஒன்றைப் பற்றியவாறு ஏறியவள், சிரமப்பட்டே அந்த குடிசையை நெருங்க,
“பம் பம் பம் கும்… ஹக்…” என்கிற சத்தம் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது.
யாரோ எவரையோ பலமாகப் போட்டுத் தாக்குகிறார்கள் என்பது மட்டும் நன்கு தெரிந்தது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலாக மீண்டும் அலற முடியாத முனங்கல், துடிப்பு. அதைக் கேட்டவளின் ஈரக்குலையே நடுங்க மேலும் முன்னேறியவள் எங்கேயிருந்து சத்தம் வருகிறது என்று பார்ப்பதற்காச் சுத்தவரப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் ஒரு ஜன்னல் தென்பட, விரைந்து நெருங்கியவள் அந்த ஜன்னலை மெல்லியதாகத் திறந்து பார்த்தாள்.
உள்ளே ஒருவன் உடல் முழுவதும் இரத்தம் வழியக் கதிரை ஒன்றில் அமர்த்தப்பட்டிருந்தான். அவன், பலமாக அடிவாங்கியதன் பலனாகக் முகம் முழுவதும் வீங்கிச் சிவந்திருந்தது. உதடுகள் கிழிந்து இரத்தம் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. அங்கே அவனுடைய முகம் இருப்பதற்குப் பதில், இரத்தமும் சதையும்தான் தெரிந்தது. கோணல் மாணலான முகத்துடன் அதீத வலியில் சக்தி இழந்தவனாகச் சோர்வுடன் கிடந்தான் அந்த மனிதன். அடிவாங்கிக் காயப்பட்டதன் பலன், அவன் எந்த இனத்தவன் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு முகம் சிதைந்திருக்க, அதைக் கண்ட இதங்கனைக்கு வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது.
அவசரமாகத் தன் ஒற்றைக் கரத்தால் வாயை மூடியவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றுகூடத் தெரியவில்லை. பதட்டத்தோடு சுவரோடு சாய்ந்து அமர்ந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும், காதின் பொத்தானை அழுத்தியவள்,
“மகி… மகிந்த…” என்றாள் அழுகையும் வேதனையும் போட்டிபோட்ட கிசுகிசுத்த குரலில்.
“இதங்கனை… யு ஓக்கே… என்னம்மா… என்ன பிரச்சனை…?” என்று அவன் பதற, இவளோ,
“இ.. இங்கே… யாரோ… யாரையோ போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள் மகிந்த…” என்றாள் இவள் அழுகையுடன்.
“ஏய்… இட்ஸ் ஓக்கே… இதோ பார்… அழாதே… யார் அவன்… உன்னிடம் கைப்பேசி இருக்கிறதா… நடப்பதை ஒளிப்பதிவு செய்து எனக்கு அனுப்ப முடியுமா… கமான் இதங்கனை… தயவு செய்து சோர்வடையாமல் இதைச் செய்…” என்று பரபரப்பும் அவசரமுமாக அவளை உசுப்ப, உடனே தன் கண்ணீரைத் துடைத்தவள், தன் பான்ட் பாக்கட்டைத் தடவிப் பார்த்தாள். கைப்பேசி இருந்தது.
நடுங்கும் கரங்கள் கொண்டு கைப்பேசியை எடுத்தவள், அதை உயிர்ப்பித்து ஜன்னல் பக்கமாகத் திரும்பி நின்றவாறு உயர்த்திப் பிடிக்க, அது கச்சிதமாக உள்ளே நடப்பதைச் சேகரித்ததோடு, இவளும் நேரடியாகப் பார்க்காமல் திரை மூலமாக உள்ளே நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினாள்.
“கேட்கிறேன் அல்லவா… பதில் சொல்…” என்றவாறு அந்த இராட்சதன், மேலும் இரக்கமில்லாமல் இறுதியாக ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்துவிட,
“ஹக்…” என்கிற சத்தத்துடன் அவனுடைய தலை சரிந்தது. குத்தியவனுடைய பின் புறம்தான் திரையில் விழுந்துகொண்டிருந்தது. அதனால் அவன் யார் என்று தெரியவில்லை. காயம்பட்டவனின் முகம் சிதைந்திருந்ததாலும் அதுவும் யார் என்று தெரியவில்லை.
ஆனால் முதுகு காட்டிக்கொண்டிருந்த அந்த உருவம் நிச்சயமாகப் பயங்கரமானவனாக வக்கிரகம் பிடித்தவனாக இருக்கவேண்டும். இல்லை என்றால் இரக்கமற்ற இந்தக் காரியத்தைச் செய்யமாட்டானே.
அதுவரை ஆத்திரம் தீரக் குத்திக்கொண்டிருந்தவன், அந்தப் பாவப்பட்டவனின் தலை சரிந்ததும், எரிச்சலுடன் நிமிர்ந்து தன் கரத்தை நீட்ட, அவனுடைய வலது கரம், செந்நிற இரத்தத்தைப் பூசியிருந்தது. அது அடித்ததால் வந்த காயத்தின் இரத்தமா, இல்லை அடிவாங்கியவனின் காயத்திலிருந்து வந்த இரத்தமா என்று இனம் பிரிக்க முடியவில்லை. அவன் கரத்தை நீட்டிய மறு விநாடி, அதில் ஒரு வெண்ணிறத் துண்டு வைக்கப்பட, அதைக் கிட்டத்தட்டப் பறித்து எடுத்தவன் இவள் பக்கமாகத் திரும்பினான்.
திரும்பியவனைக் கண்ட இதங்கனைக்கு மூச்சே நின்றுவிடும் போலானது. அச்சத்தில், பதறியவாறு சமநிலை தவறிக் கைப்பேசி தெறிக்கத் தொப்பொன்று தரையில் விழுந்தவளுக்கு அது கூட உறைக்கவில்லை.
சத்தியமாக அது அந்த அரவனாக இருக்கும் என்று இவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எங்கே அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடுமோ என்று அஞ்சியவள் போல மார்பை ஒற்றைக் கரத்தில் அழுத்தியவளுக்கு மயக்கமே வரும்போல இருந்தது.
அம்மாடி எத்தனை பெரிய கொடூரம். இப்படிப்பட்டவனை எதுவும் செய்யாமல் ஏன் இந்த அரசு விட்டு வைத்திருக்கிறது. தட்டுத் தடுமாறித் தரையில் விழுந்த கைப்பேசியை எடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க அது உயிர்க்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. சத்தம் வெளியே வராதவாறு தட்டியும் குலுக்கியும் பார்த்தாள். ம்கூம்…
“மகிந்த… முழுவதையும் என்னால் படம் பிடிக்க முடியவில்லை. கைப்பேசியின் சார்ஜ் போய்விட்டது…” என்று கிசுகிசுக்க,
“பரவாயில்லை… முதலில் அந்த இடத்தை விட்டுப் போ இதங்கனை… அங்கே அதிகம் நிற்பது உனக்குத்தான் ஆபத்து… நான் சொல்வது புரிகிறதா?” என்று மகிந்தன் அழுத்தமாகக் கூற,
“சரி…” என்றவள் அங்கிருந்து போக முதல், மீண்டும் ஜன்னலை நெருங்கி, எட்டிப் பார்த்தாள். அந்த அரவனின் ஒரு பக்கம்தான் தெரிந்தது.
அவனோ, தன் கரத்திலிருந்த இரத்தத்தைத் துடைத்தவாறு,
“உயிர் இன்னும் இருக்கிறதா?” என்றான். அதில் ஒருவன். வெள்ளை இனத்தைச் சேர்ந்தவன்… அவன் கூட அந்த அரவனின் உயரத்தில் திடகாத்திரமாகத்தான் இருந்தான்.
தலை கவிழ்ந்திருந்தவனின் கழுத்தில் இரு விரல்களை வைத்துப் பரிசோதித்து விட்டு, உதடுகளைப் பிதுக்கி இல்லை என்று தலையை ஆட்ட, அதுவரை கரத்தைத் துடைத்துக்கொண்டிருந்த அரவனிடமிருந்து அசைவு நின்றது. வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவனாகத் தன் கரத்திலிருந்த துண்டைத் தூக்கி எறிந்து விட்டுத் திரும்பியவன், இருண்ட அந்த அறையின் ஒற்றை வெளிச்சத்தில் கொல்லமுடியா இராட்சசன் போலத் தோன்றினான் இதங்கனைக்கு.
அவனோ நிதானமாகத் திரும்பித் தன் கூட்டாளியில் ஒருவனைப் பார்த்து,
“டிஸ்போஸ் ஹிம்… அன்ட் க்ளீன் த ப்ளேஸ்…” என்று விட்டுத் திரும்ப அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது திறந்திருந்த அந்த ஜன்னலும், கூடவே ஏதோ ஒரு அசைவும்.
புருவங்கள் சுருங்க, அந்த ஜன்னலை நோக்கி அவன் வரத் தொடங்கிய நேரம், அதைக் கண்டுகொண்ட இதங்கனைக்குப் பக்கென்றானது.
“டாமிட்…” முனங்கியவாறு, பின்னால் செல்ல,
“ஹே…. என்னாச்சு…” என்கிற மகிந்தனின் குரல் காதில் விழும்போதே, காலை ஒரு கல் தட்டிவிட, எவ்வளவு சமாளித்தும் முடியாமல், மெல்லிய கூச்சலுடன் தரையில் விழுந்து கடகடவென்று உருளத் தொடங்கினாள்.
அது அந்தப் பாம்புச் செவியனின் காதுக்குள் விழுந்ததோ. விழிகளால் தன் சகாக்களைப் பார்த்துத் தலையை அசைத்துச் சென்று பார்க்குமாறு சைகை செய்ய, அடுத்த கணம் இருவர் வெளியே சென்றனர். இவனோ, ஜன்னலை நோக்கி வந்து யோசனையோடு ஜன்னல் கதவைச் சற்றுத் தள்ளிப் பார்க்க அது சிக்கல் இல்லாமல் திறந்து கொண்டது. ஆக ஜன்னல் சரியாகப் பூட்டப்படவில்லை. பெரும் கோபம் எழ, வாய்க்குள், எதையோ முணுமுணுத்தவாறு திரும்பித் தன் ஆட்களைப் பார்த்தான். அங்கே எஞ்சியிருந்த இருவருக்கும் தாம் ஜன்னலைச் சரியாகப் பூட்டவில்லை என்பது அப்போதுதான் உறைத்தது போலும். சங்கடத்துடன் தலை குனிய, எரிச்சல் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய வெளியே எட்டிப் பார்த்தான்.
எதுவும் சந்தேகப்படும்படியில்லை. அங்கே அவன் அனுப்பிய சகாக்கள்தான் ஏதாவது தெரிகிறதா என்றும் அங்கும் இங்கும் பார்த்தவாறு நடந்துவந்துகொண்டிருந்தனர்.
எரிச்சலோடு திரும்பி, “க்ளோஸ் த டாம் வின்டோ…” என்று சீறி விட்டுப் படு வேகமாக வெளியே வந்தான் அரவன்.
அதே நேரம் தரையில் உருண்டு விழுந்த இதங்களுக்கும் பயங்கர அடி.. ஆனாலும் கைவிட்ட கைப்பேசியை அந்த அவசரத்திலும் தேடிக் கைப்பற்றிக் கொண்டவள், பான்ட் பாக்கட்டிற்குள் செருகியவாறு மின்னல் விரைவுடன் அரைவாசி இலைகளைக் கொட்டியிருந்த அடர்ந்த புதருக்குள் மறைந்து கொள்ள, நல்லவேளை இருட்டு முழுதாக அவளை விழுங்கிக் கொண்டது.
மேலே நின்றிருந்த அரவனின் ஆட்கள் எங்காவது ஏதாவது நடமாட்டம் தெரிகிறதா என்று பார்த்தார்கள். எதுவும் தெரியவில்லை.
‘ஏதாவது சந்தேகப்படும்படி இருக்கிறதா?” என்றவாறு அரவன் வர, இதங்கனை மூச்சை ஆழ இழுத்து வெளிவிடாதவாறு அப்படியே அமர்ந்திருந்தாள். கொஞ்சம் முன்னால் நகர்ந்து குனிந்து பார்த்தாலும் போதும் இவளைச் சுலபமாகவே கண்டு கொள்ளலாம்.
இல்லாத தெய்வங்களிடம் மன்றாடித் தன்னைக் காக்குமாறு வேண்டிக்கொள்ள, அவனுடைய ஆட்களோ உதடுகளைப் பிதுக்கியவாறு,
““நத்திங்…” என்றனர். ஒரு முறை தன் கூரிய விழிகளால் சுத்தவரப் பார்த்த அரவன் பின் தன் சகாக்களிடம்,
“ஏதாவது காட்டு விலங்காக இருக்கலாம்… உள்ளே வாருங்கள்… விட்ட வேலையைத் தொடரலாம்…” என்று கூற,
“அதற்கு வாய்ப்பில்லை அரவன்… சுத்தவர பத்தடி உயரத்தில் கம்பிவேலி போட்டிருக்கிறோம். தவிர மின்சாரம் வேறு பாய்ச்சியிருக்கிறோம்… எந்த மிருகங்களும் உள்ளே வர வாய்ப்பில்லை….” என்று நண்பன் கூற, அரவனோ மீண்டும் சுத்தவரப் பார்த்து விட்டு,
“அப்படியானால் காற்றுக்கு ஏதாவது கிளைகள் அசைந்திருக்கும்… நீங்கள் உள்ளே வாருங்கள்…” என்றவாறு அவன் நிதானமாகக் குடிலை நோக்கிச் செல்ல, இதங்கனைக்கு அவளையும் மீறி மாபெரும் நிம்மதிப் பெருமூச்சொன்று பிறந்தது.
கடவுளுக்கு நன்றி. அவன் கண்டுகொள்ளவில்லை. கண்டிருந்தால் நிச்சயமாகச் சற்று முன் ஒருவனுக்கு நடந்த கதிதான் இவளுக்கும்.
ஓரளவு சலசலப்பு அடங்கியதும் மெதுவாக வெளியே வந்தவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை. அடுத்த கணம், மின்னல் விரைவாக வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள் இதங்கனை.
“இதங்கனை… எந்தப் பிரச்சனையும் இல்லையே…” என்று கேட்ட மகிந்தனுக்கு ஓடிவந்த வேகத்தில் பதில்கூடச் சொல்ல முடியவில்லை. வந்த பாதையிலேயே சென்று அரவனின் வீட்டிற்குள் அவளுடைய அறைக்குள் நுழைந்த இதங்கனைக்கு நீண்ட நேரம் எடுத்தது இதயம் தன் கட்டுப்பாட்டிற்கு வர. இதற்கிடையில் மகிந்தன் பல முறை அவளை அழைத்து விட்டான்.
இறுதியில் வெளியே வந்து துடிக்க முயன்ற இதயத்தை அழுத்திப் பிடிப்பது போல வலக் கரத்தால் இடது மார்பை அழுந்தப் பற்றிக்கொண்டவள், வாயைத் திறந்து ஆழ மூச்செடுத்துச் சமப்படுத்தியவாறு,
“யேஸ்… யெஸ்… ஐ ஆம் ஓக்கே…” என்றவாறு உமிழ் நீர் கூட்டி விழுங்க முயன்றவளுக்கு அது கூட முடிந்திருக்கவில்லை. அந்தளவுக்குத் தொண்டை வறண்டு போயிருந்தது.
விரைந்து குளியலறை நோக்கிச் சென்றவள், தண்ணீர் குழாயைத் திறந்து இரண்டு கரங்களாலும் தண்ணீரை அள்ளி எடுத்து ஒரு வாய் குடித்த பின்புதான் அவளுக்கு நிம்மதியானது.
“என்னாச்சு இதங்கனை…” என்று மகிந்தன் மீண்டும் கேட்க, இப்போது ஓரளவு சுயத்திற்கு வந்திருந்தாள் இதங்கனை. மீண்டும் ஆழ மூச்செடுத்து நடந்ததை மகிந்தனுக்குக் கூறினாள்.
“அவர்கள் உன்னைக் கண்டுகொண்டார்களா?” என்று ஒரு வித அவசரத்தோடு மகிந்தன் கேட்க,
“அவர்கள் என்னைக் கண்டிருந்தால், இப்போது உயிரோடு உன்னிடம் பேசிக்கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா மகிந்தன்…” என்றவள் பின் கிலியோடு,
“எப்படிப்பட்ட இராட்சதன் அவன்… வெறும் கையாலேயே ஒருத்தனை அடித்துக் கொன்றுவிட்டான் தெரியுமா… இவனை… இவனை சும்மா விடக் கூடாது மகிந்த… நிச்சயமாக விடக் கூடாது… இவனைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தி தோலுரித்து உப்பும் தூளும் போட்டு துடிக்க வைக்க வேண்டும்…” என்று சீற,
“அதற்குத்தான் நான்னும் முயல்கிறேன் இதங்கனை… நிச்சயமாக அவனை சும்மா விடப்போவதில்லை… சரி….. நீ எடுத்த ஒளிப்பதிவை எனக்கு இப்போதே அனுப்புகிறாயா?” என்றான் மகிந்தன். உடனே கைப்பேசியை வெளியே எடுத்தவள், அதை உயிர்ப்பிக்க முயல, அப்போதுதான் அது இறந்து போனதே தெரிந்தது.
“கொஞ்சம் இரு… முதலில் கைப்பேசிக்கு உயிரூட்டுகிறேன்…” என்றவள் விரைந்து சென்று தன் கைப்பைக்குள் துழாவி மின்னூட்டியை எடுத்தவள், அதைக் கிடைத்த மின்செருகியில் போட்டு விட்டு சற்று நேரம் காத்திருக்கக் கைப்பேசி உயிர்பெற்றது.
நிம்மதியுடன், தான் எடுத்த ஒளிப்பதிவைப் பார்த்தவளுக்கு ஐயோ என்றானது. ஒளிப்பதிவுக்கு வேண்டியது சரியான வெளிச்சம். உள்ளே இருட்டாக இருந்ததால் அவளுடைய கைப்பேசி அந்தளவு தெளிவாக ஒளிப்பதிவு செய்திருக்கவில்லை. ஆனால் யாரோ யாரையோ அடிப்பது நன்றாகவே தெரிந்தது. உடனே அதை மகிந்தனுக்கு அனுப்ப முயன்றவளுக்கு அப்போதுதான் தெரிந்தது தொடர்பாடல் கைப்பேசியில் இல்லை என்று.
“மகிந்தன்… என்னால் உனக்கு அனுப்ப முடியவில்லை… இங்கே இணைப்புக் கிடைக்கவில்லை…” என்று இவள் பதட்டத்தோடு கூற,
“நினைத்தேன், ஜாமர் பொருத்தியிருக்கிறான் போல..” என்று மகிந்தன் எரிச்சலோடு கூற, இவளோ,
“ஆனால் நானும் நீயும் பேசுகிறோமே மகிந்தன்…” என்றாள் குழப்பத்தோடு.
“நாம் பேசிக்கொண்டிருப்பது வானொலி அலைவரிசையூடாக இதங்கனை. இது ஒரு விதமான வாக்கிடாக்கி…” என்றவன், “பரவாயில்லை… முடிந்த வரைக்கும் உன் கைப்பேசியில் தகவல்களைச் சேகரித்து வை… எப்படியும் இன்று இரவு அவன் நம் கைப்பிடியில். உன் கைப்பேசியில் சேகரிக்கும் தகவல்கள்தான் நமக்கான ஆதாரம் புரிந்ததா?” என்றதும், சரி என்று தலையை அசைத்தவளுக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. அவள் தயாராக இன்னும் அரை மணி நேரம்தான் இருந்தது,
“மைகாட்… மகிந்த நேரம் செல்கிறது… நான் தயாராகவேண்டும்… பிறகு பேசுகிறேன்…” வந்தவள் அவசரமாகக் காதில் பொருத்தியிருந்த ஒலிவாங்கியைக் கழற்றிப் பக்கத்திலேயே வைத்து விட்டு, வேகமாகக் குளியலறை நோக்கிச் சென்றாள் இதங்கனை. அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளித்துப் புத்தம் புதுப் பூவாகி, அந்த அரவன் கொடுத்த சிவந்த ஸ்பகடி ஆடையில் கவற்சியின் இருப்பிடமாய் குளியலறையை விட்டு வெளியே வந்தாள் இதங்கனை.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(21) அன்று ஏகவாமனும் அலரந்திரியும் ஜெயவாமனின் அருகேயே அமர்ந்திருந்தனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை… பேசினால் மட்டும் வலிகளின் அளவு…