Categories: Ongoing Novel

புயலோடு மோதும் பூவை – 5/6

(5)

உள்ளே காலடி வைத்ததும் அவளையும் மீறி உடல் தளர்ந்ததோ. அதை அவன் உணர்ந்துகொண்டானோ, சட்டென்று அவளுடைய இடையைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுத் தன்னோடு நெருக்கிக்கொண்டவன்,

“ஹே… ரிலாக்ஸ்… என்னோடு செலவுசெய்யும் ஒவ்வொரு விநாடியும் உனக்கு இன்பமானதாக இருக்கும்… நம்பு…..” என்று மென்மையாகக் கூற, அவனுடைய செயலில் தூக்கிவாரிப் போட்டது இதங்கனைக்கு. ஆனாலும் சமாளித்தவளாக,

“தெ… தெரியும்…” என்று கூறித் தன் தடுமாற்றத்தை மறைக்கும் முகமாக அழகாய் புன்னகைக்க, அந்தப் புன்னகையை ரசித்தவனாய், அவளை விடாமலே அழைத்து வந்து இருக்கையில் அமரவைத்து விட்டுத் தன் கரத்தை விலக்க, அதுவரை அவன் கரம் பட்ட இடையில் ஏற்பட்ட குறுகுறுப்பை அடக்கும் வழி தெரியாமல் சற்றுத் தடுமாறித்தான் போனாள் இதங்கனை. அவனுக்கோ அது எதுவும் உறுத்தியதுபோலத் தெரியவில்லை. மாறாக, அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்தவாறு,

“உனக்கு மதுபானங்கள் பிடிக்காது என்று எனக்குத் தெரியும்… அதனால், தேநீர் இல்லை என்றால், காஃபி…” என்று இதமாய்க் கேட்க, இவளோ ‘ஐயோ இவன் கையால் குடி பானமா. அதில் எந்த மருந்தைப் போட்டுத் தொலைவானோ… ம்கூம்… பிச்சைவேண்டாம் நாயைப்பிடி…’ அவசரமாக மனதிற்குள் முடிவு செய்தவள், அழகாய் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு,

“ஓ… அரவன்… வரும்போதுதான் தேநீர் குடித்து விட்டு வந்தேன்… எதுவாக இருந்தாலும் பிறகு குடிக்கிறேன்…” என்று மறுத்தவாறு அப்போதுதான் சுரீர் என்று ஒன்று உறைத்தது.

அவளுக்கு மதுபானம் பிடிக்காது என்று இவனுக்கு எப்படித் தெரியும்? ஆரம்பத்தில் கூட இவளை அழைத்துச் செல்ல இவன்தான் வந்தான். தவிர நீதான் விந்தியாவா என்று அவன் ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. அப்படியானால் இவனுக்கு என்னைத் தெரியுமா. மீண்டும் அச்சத்தில் உடல் உதற,

“உங்… உங்களுக்கு என்னைப் பற்றி எல்லாம் தெரியுமா…” என்றாள் திக்கித் திணறி. இவனோ மெல்லியதாக நகைத்து,

“ஏன் கேட்கிறாய்…” என்றான்.

“இ… இல்லை… எனக்கு மதுபானம் பிடிக்காது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்…” என்றதும், அதற்கும் தன் அழகிய பல்வரிசையைக் காட்டி,

“விசாரித்தேன்…” என்றான். அதைக் கேட்டதும் வயிற்றில் புளியைக் கரைக்க,

“வி… விசாரித்தீர்களா… எ.. எதற்கு…” என்றதும் கிண்டல் புன்னகை ஒன்றை வெளியிட்டவன், தன் காலுக்கு மேல் காலைப் போட்டுத் தலையைச் சற்று சரித்து, அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் தேகம் வெளிப்படையாகவே நடுங்கிப் போயிற்று. கரங்கள் கால்கள் அனைத்தும் சில்லிட்டுப் போனாலும் சமாளித்தவளாக அமர்ந்துகொள்ள, அவனோ, இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்து,

“இதுவரை யாருக்கும் நான் பேட்டி கொடுத்ததில்லை… பேட்டி கொடுக்கப் பிடிப்பதுமில்லை… முதன் முறையாக, பேட்டி கொடுக்க சம்மதித்தேன்… உனக்காக…” என்றதும் இப்போது அவளுடைய தேகத்திலிருந்து இரத்தம் வடிந்துசெல்வது போலானது.

“இவளைப் பற்றி விசாரித்தான் என்றால், எதுவரைக்கும் விசாரித்தான். இவளுடைய நிஜப்பேர், இவள் யார் என்பது பற்றியெல்லாம் அறிந்துகொண்டானா… அது தெரியாமல் இங்கே வந்து மாட்டிக்கொண்டாளா… கடவுளே… இப்போது எப்படி இங்கிருந்து தப்பிப்பது? பதறி நிற்க,

“இதங்கனை… லிசின்… அவனுக்கு உன்னைப் பற்றி எதுவும் தெரியாது… தெரிந்துகொள்ள வாய்ப்பும் இல்லை… அவன் குட்டையில் மீன் பிடிக்க முயல்கிறான்… எக்காரணம் கொண்டும் காட்டிக்கொடுக்காதே. சாதாரணமாக இரு…’ என்று காதுக்குள் மகிந்தன் சமாதானப் படுத்தித் திடப்படுத்த முயல, அந்த நிலையில் இவளுக்கு மகிந்தனைக் கொல்லும் வெறியே வந்தது.

அவனுக்கென்ன, ஒரு சொல்.. இவள் அல்லவா தவிக்கிறாள். எங்கோ தள்ளி நின்றவாறு அப்படிச் செய் இப்படிச் செய் என்று வழிகாட்டுகிறான். இவளுக்கல்லவா உயிர் போகிறது. அந்த அரவனின் விழிகள் இவள் மீது பட்டாலே தேகம் நடுங்கித் தொலைக்கிறதே. அதையும் மீறி இதயம் வெடித்துவிடுவது போலத் துடிக்கிறதே. உடல் சில்லிடுகிறதே… இவன் என்னவென்றால் சமாதானப்படுத்த முயல்கிறான்.  எரிச்சலோடு, பற்களைக் கடிக்கும்போதே,

“ஹே… ஆர் யு ஓக்கே… ஏன் உன் முகம் திடீர் என்று இப்படி வெளுறி இருக்கிறது…” என்று அவன் பரிதாபம் போலக் கேட்டான் அந்த இராட்சதன். மேலும் கலங்கிப்போனாள் இதங்கனை. காதுக்குள் மகிந்தன் பேசுவது இவனுக்குக் கேட்டிருக்குமா? அது வேறு கிலியை ஏற்படுத்த, அதைச் சமாளிக்கும் முகமாகப் பற்களைக் காட்டியவள்,

“ஹீ… ஹீ… ஒன்றுமில்லை… எனக்கு… ம்கும்… எனக்குக் கொஞ்சம்… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா…” என்றாள்.

“இதோ எடுத்து வருகிறேன்…” என்றவாறு எழுந்து செல்ல, அதுவரை பொறுமையாக இருக்கையில் அமர்ந்திருந்தவள், தன் கடமையைச் செய்யவும் தவறவில்லை.

அவசரமாகத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் கையை  விட்டு அதற்குள் பதுக்கிவைத்திருந்த சிறிய பெட்டியை வெளியே எடுத்து நடுங்கும் கரங்கள் கொண்டு அதிலிருந்து ஒலிவாங்கும் கருவி ஒன்றை எடுத்து அதிலிருந்த தாளை நீங்கித் தேநீர் மேசைக்குக் கீழே வைக்க, அது பசக் என்று ஒட்டிக்கொண்டது.

நிம்மதியோடு நிமிர்வதற்குள் அந்த அரவன் தண்ணீர் போத்தலோடு அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

“xxxx” வாய்க்குள் முணுமுணுத்தவளுக்கு அவன் தன்னைக் கண்டிருப்பானோ என்கிற சந்தேகமும் எழுந்தது. மீண்டும் தேகத்தில் பயங்கர நடுக்கம் ஓட, அதைக் காட்டாதிருக்கப் பெரும் பிராயச்சித்தம் செய்தவாறு, அந்த சிறிய பெட்டியை பான்ட் பாக்கட்டிற்குள் போட நேரம் இல்லாதவளாகத் தன் மணிக்கட்டுவரை நீண்ட சட்டைக்குள் சட்டென்று உள்ளே தள்ளி, அது விழாதவாறு  விரல்களால் பற்றிக்கொண்ட அதே நேரம், ஏதோ அந்தத் தேநீர் மேசையிலிருந்த சஞ்சிகையை எடுப்பதற்காகத்தான் எழுந்தவள் போல ஒரு சஞ்சிகையை இழுத்து எடுத்துக்கொண்டு,

“உங்களுக்குச் சஞ்சிகை படிக்கும் பழக்கம் இருக்கிறதா என்ன?” என்றாள் வியப்போடு. இப்போது அழகாகச் சிரித்தவன், அவளிடம் தண்ணீர் போத்தலை நீட்டியவாறு,

“ஆமாம்… எப்போதாவது நேரம் கிடைக்கும் போது….” என்றான். அவன் நீட்டிய போத்தலை வாங்கியவாறே,

“எந்த சஞ்சிகை அதிகம் படிப்பீர்கள்…”

“டிஸ்கவரி அன்ட் அனிமல் ஹன்டிங்…” என்றான் தெளிவாய்.

டேய்… சஞ்சிகையில் கூடவா வேட்டையாடுவது பற்றிப் படிக்கவேண்டும்…?’ உள்ளே திட்டினாலும் வெளியே ஈ என்றவள், நடுங்கும் கரங்கள் கொண்டு போத்தல் மூடியைத் திறந்து கடகடவென்று தண்ணீரை வாயில் கொட்டியவளுக்கு வறண்ட தொண்டைக்கு அந்தத் தண்ணீர் தேவாமிர்தமாகவே இருந்தது. ஒரு மாதிரி குடித்து முடித்து மீண்டும் மூடியைப் பூட்டி, அந்த வீட்டை வியப்போடு பார்ப்பது போலப் பார்த்து,

“உங்கள் வீடு அழகாக இருக்கிறது…” என்றாள்.

“அப்படியா… வீட்டைச் சுற்றிப் பார்க்கப் போகிறாயா?”

“ஏன் கூடாது…”

“சரி வா…” என்றவாறு முன்னால் நடக்கத் தொடங்க, இவளோ காரியமே கண்ணாக சுத்தவரப் பார்த்துக்கொண்டு அவன் பின்னால் நடக்கத் தொடங்கினாள்.

“இது என் வேலைத்தளம்…” என்றதும் பிரமாண்டமாக விரிந்தது ஒரு அறை. அவளுடைய வீடு முழுவதையுமே அந்த அறைக்குள் வைத்துவிடலாம் போல. அத்தனை பெரிதாக இருந்தது. அத்தனை தளபாடங்களும் தேக்கினால் கைவேலைப்பாடு செய்யப்பட்டவை என்பதைப் பார்த்த உடனேயே புரிந்துகொண்டாள் இதங்கனை. இருக்காதா பின்னே. கொள்ளையடித்த பணத்தை இப்படியாவது செலவழிக்காவிட்டால் எப்படி. ஏளனத்துடன் எண்ணியவாறு நடந்தவள், கால் தடுக்கியவள் போலத் தடுமாறியவாறு இன்னொரு ஒலிவாங்கியை அலுவலக மேசையின் கீழ் பொருத்த, இவனோ, பதறியவனாக,

“ஹே… பார்த்து…” என்றவாறு அவளுடைய கரத்தைப் பற்ற, இவளோ மீண்டும் அந்தச் சிறிய பெட்டியை அவன் கவனிக்க முதல், பழையது போல மறைத்துக்கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்துச் சிரித்து,

“நடக்கும் போது தடுக்கிவிட்டது…” என்றாள். அவனோ அவளைக் கூர்மையாகப் பார்த்து,

“பார்த்து நடக்கவில்லையென்றால் அப்படித்தான்… சரி வா…” என்றவாறு மேலும் நடக்க, அந்த அறையோடு ஒட்டிய நூல் நிலையம் விரிந்தது. வியந்தவாறு அழகாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவள்,

“வாவ்…” என்றாள் தன்னை மறந்து. இவனோ அவளை ரசனையாகப் பார்த்து,

“உனக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்குமோ?” என்றான் கனிவாக. அதைக் கேட்டுத் தன்னை மறந்து சிரித்தவள்,

“ம்… மிக மிகப் பிடிக்கும்…” என்றவாறு மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு ஒவ்வொரு புத்தகங்களாகப் பார்த்துக்கொண்டு வந்தவளுக்கு வியப்பில் புருவங்கள் மேலேறத் தொடங்கின. ஒரு பக்கம் முழுவதும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவேண்டிய புத்தகங்கள். அத்தனையும் முதலாவது பிரதிகள். இன்றைய தேதியில் ஒரு புத்தகம் மட்டும் பல லட்ச டாலர்களைத் தாண்டும். வியப்புடன் அவனை ஏறிட்டு,

“அம்மாடி… அருங்காட்சியகத்தில் இருக்கவேண்டியதெல்லாம் இங்கே வைத்திருக்கிறீர்களே…” என்றவள் அவனை ஆவலுடன் திரும்பிப் பார்த்து,

“இதில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கலாமா?” என்றாள் ஆவலாக.

“வை நாட்…” என்று அவன் கூற, ஒவ்வொரு தலைப்பாகப் பார்த்துக்கொண்டு வந்தவள், அதில் ஒரு அட்டை அவளுடைய சிந்தையைக் கவர, இழுத்து எடுத்து விரித்துப் பார்த்தாள். ஏதோ கணக்கு புத்தகம் என்று தெரிந்தது. ஆனால் என்ன மொழி என்று சுத்தமாகத் தெரியவில்லை. அசடு வழிந்து விட்டு,

“இது..” என்று அவள் இழுக்க,

“Mathematical Principles of Natural Philosophy. இது லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருப்பதால் உனக்குப் புரியவில்லை…” என்றதும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தவள்,

“இதையெல்லாம் படித்தீர்களா?” என்றாள் வியந்தவாறு. தன் தோள்களைக் குலுக்கியவன்,

“இல்லை… ஆனால் புத்தகங்கள் சேகரிப்பது என் தந்தையின் பொழுதுபோக்கு. அது என்னிடமும் தொற்றிக்கொண்டதால், நானும் கிடைக்கிற புத்தகங்களைச் சேகரிப்பேன்… இதெல்லாம் என் தந்தை சேகரித்தது… என்னுடையது அங்கே…” என்றவன் அழைத்துச் செல்ல, அங்கே தமிழ் மொழியில் நிறைய அடுக்கி வைத்திருந்தான். வியந்தவளாக,

“தமிழ் படிக்கத் தெரியுமா?” என்று கேட்க இப்போது வாய் விட்டுச் சிரித்தவன்,

“தமிழனாகப் பிறந்து தமிழ் தெரியவில்லை என்றால் அது அவமானம் இல்லையா… நான் இங்கே பிறந்து வளர்ந்தவன் ஆனாலும் தமிழ் எழுதுவேன், வாசிப்பேன், பேசுவேன்…” என்று கூற, இவள் வியந்துதான் போனாள். ஏனோ அந்தப் புத்தகங்களைப் பார்க்கும் போது அவனைக் கெட்டவனாக நினைக்க அவளால் முடியவேயில்லை.

ஒருவர் படிக்கும் புத்தகங்களை வைத்து அவன் நல்லவனா கெட்டவனா என்று பகுத்தறிய முடியும் என்பார்கள். ஆனால் புத்தகங்களில் இத்தனை பைத்தியமாக இருப்பவன் எப்படிக் கெட்டவனாகக் கண்டறியப்பட்டான். குழப்பத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க, இவனோ தன் புருவங்களை மேலே ஏற்றி,

“என்ன?” என்றான்.  மறுப்பாகத் தலையை அசைத்து,

“ஒன்றுமில்லை… உங்கள் அப்பா… அம்மா… அவர்கள் எங்கே…” என்று கதையை மாற்ற. ஒரு கணம் அவன் முகத்தில் நிழலாய் ஒரு உணர்வு படிந்து விலகியது. பின் அதே புன்னகையை முகத்தில் தேக்கி,

“அவர்கள் இப்போது உயிரோடு இல்லை… என்னுடைய பதினாறாவது வயதில், விமான விபத்தில் உயிரிழந்து விட்டார்கள்…” என்றதும், ஏனோ இவளுடைய நெஞ்சம் அவளையும் மீறித் தவித்தது.

“ஓ… ஐ ஆம் சாரி…” என்று வருந்த, தன் தோள்களைக் குலுக்கியவன்,

“நடந்து பன்னிரண்டு வருடங்களாகிவிட்டன…” என்று கூற, ஓ என்றவளுக்கு அவன் மீது பரிதாபம்தான் தோன்றியது.

நல்ல தாய் தந்தையின் வளர்ப்பில் வளராததால்தான் இப்படித் தப்பும் தவறுமாக வளர்ந்திருக்கிறானோ. இவனை மட்டும் சரியான பாதையில் வழிகாட்டியிருந்தால், இப்படிக் கெட்டவனாக மாறியிருக்க மாட்டானோ. அந்த ஆளியுரவனின் கைப்பாவையாக ஆளாகியிருக்கமாட்டானோ. பாவம், யாருமில்லாமல் இருந்தவனைச் சுலபமாகவே தன் தேவைக்கு மாற்றி வைத்துக்கொண்டான் போல. ஏனோ அந்த ஆளியுரவன் மீது கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. எரிச்சலுடன் நிமிரும் போதே,

“சரி… வா…” என்று அவளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு இடங்களாகக் காட்டிக்கொண்டு வந்தான் அந்த அரவன்.

ஒவ்வொரு பகுதிகளும் ஒவ்வொரு விதமாக அவளைக் கவர்ந்தது மட்டும் உண்மை. இறுதியாக அவளை மேல் மாடி அழைத்துச் சென்றவன், இரட்டைக் கதவில் ஒரு கதவைத் திறந்து,

“வெல்கம் டு மை பெட் ரூம்…” என்றதும், ஆணி அடித்ததுபோல வாசலிலே நின்றுவிட்டாள் இதங்கனை.

ஏனோ உள்ளே நுழையாதே என்று உள்ளுணர்வு அவளை எச்சரிக்க,

“இ… இல்லை… இல்லை… பரவாயில்லை… நான்… நான்… பிறகு பார்த்துக் கொள்கிறேன்…” என்றவாறு அவசரமாக அந்த இடத்தை  விட்டு நகரத் தொடங்க, மறு கணம் அவனால் சுண்டி இழுக்கப்பட்டாள் இதங்கனை.

(6)

ஏனோ அந்த இடத்தை  விட்டு மாயமாக மறைந்துவிடவேண்டும் என்கிற உந்துதலில் பதறி அடித்துக்கொண்டு விலகியவளின் கரத்தைப் பற்றி அவன் ஒரு இழுவை இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவனோடு மோதி நின்றவளின் இடைபற்றி அணைத்தவன், ஒரு சுழன்று சுழன்று அவளைச் சுவரோடு மோதி, அவள் தேகத்தோடு தன் தேகத்தைப் பொருத்தியவாறு அவளைக் குனிந்த பார்க்க,  உயிர் ஒரு கணம் அச்சத்தில்,அவளை  விட்டுச் சென்று மிண்டும் அவளிடமே திரும்பியது.

அடிவயிற்றில் மாபெரும் பீதி சுளீர் என்று பிறந்து அப்படியே அத்தனை அணுக்களிலும் நுழைந்து புத்திவரை சென்று அடிக்க, முகம் வெளுறிப்போனது. நடுக்கத்தில் தேகம் உதற, விழிகளில் பட்டும் படாமலும் கண்ணீரு் கோர்க்க அவனை அண்ணாந்து பார்த்தவளுக்கு அவனுடைய விழிகளைக் கண்டதும் பேச்சு கூட வரவில்லை.

அவள் அணிந்திருந்த அந்த மூன்றங்குல உயரக் குதிக்காலோடு ஐந்தடி ஏழங்குல உயரத்தில் நின்றிருந்தவள் அண்ணாந்து பார்க்கும் அளவில் மலைபோல நின்றிருந்தவனின் உருவம் வேறு அவளைச் செயலிழக்க வைக்க, என்ன பேசுவது, ஏது செய்வது என்று எதுவும் தெரியாத கையறுநிலையில் நின்றிருந்தவளை, அவன் ஒருவித ஆர்வத்தோடு பார்த்தான். பின் தன் படுக்கையைப் பார்த்தான். மீண்டும் அவளைப் பார்த்தான்,

“இந்தப் படுக்கை உனக்காகக் காத்திருக்கிறது…” என்று கிசுகிசுத்தவன், இப்போது அவளை நோக்கிக் குனிந்து, அவள் நாசியோடு தன் நாசி முட்டும் அளவுக்கு நெருங்கி,

“உன்னைப் பார்த்த நொடியிலிருந்து… என்னால் மூச்செடுக்க முடியவில்லை… தேகம் நீ வேண்டும் என்று சண்டித்தனம் செய்கிறது… உன் உடலின் ஒவ்வொரு அங்கங்களையும் என் விரல்களால் தொட்டு உணர்ந்துகொள்ளவேண்டும் என்று புத்தி பிடிவாதம் கொள்கிறது… அதனால்…” என்றவன் இப்போது சற்று விலகி அவளுடைய காதுகளுக்கு நேராகத் தன் உதடுகளை எடுத்துச் சென்று உரசியவாறு,

“நீ இன்று என்னோடு தங்குவாயா?” என்றான் பெரும் ரசனையோடு.

கடவுளே! எத்தகைய சிக்கலில் வந்து மாட்டிக்கொண்டாள். அச்சத்தில் கால்கள் துவள  அவனை உதறி விட்டு ஓடவேண்டும் என்று எழுந்த அந்தப் பயங்கர உந்துதலை அடக்கும் சக்தியற்று அதற்கான முயற்சியில் இறங்க முயல, காதில் விழுந்த மகிந்தவின் குரல் அவளைச் சற்று அடக்கியது.

“ப்ளீஸ்… ப்ளீஸ்… தயவு செய்து நல்ல வாய்ப்பை இழந்து விடாதே…  சரி என்பது போலச் சொல் இதங்கனை… எப்படியும் இன்று இரவுக்குள் அவனை மயக்கத்திற்குள் தள்ளிஅந்த ஆளியுரவன் யார், எப்படி இருப்பான், எங்கே இருக்கிறான் என்பதை அறிந்து விடலாம்…” என்று மகிந்த காதுக்குள் ஓத, இவளுக்கோ ஆத்திரமும் அருவெறுப்பும், கோபமும் கட்டுக்கடங்காமல் வந்தது.

அந்தக் கணமோ காதுக்குள் இருப்பதைப் பிடுங்கி எறிந்து விட்டுக் கண்காணாத தேசத்திற்கு ஓடவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. ஆனால் முடியாதே. அவளையும் மீறிய இயலாமையில் அழுகை வந்தது. பயத்தில் தேகம் முழுவதும் தந்தியடித்தது. இந்த நிலையில் எப்படி அவனிடம் நடிப்பாள்.

ஆனால் அவனோ தன் தலையை உயர்த்திச் சுட்டுவிரல் கொண்டு அவளுடைய நெற்றி முதல் நாசி வரை கோடிழுத்தவாறு வந்தவன் அந்த சிவந்த உதடுகளைக் கண்டதும் கிறங்கியவனாக அதன் அளவையும் வடிவத்தையும் கண்டுகொள்ளும் வேகத்தோடு மென்மையாய் அந்த உதடுகளை வருடிக் கொடுத்து,

‘ஷ்… ஸ்வீட்…” என்றான் மயக்கமாய்… பின் மெதுவாகப் புற விரல்களால், அவளுடைய கழுத்துவரை வருடியவாறு இழுத்துக்கொண்டு வந்தவன், அப்படியே மார்புவரை கொண்டு செல்ல, இடையில் அவன் விரல்களை தடுத்து நிறுத்தியது அந்த சங்கிலி.

தன் பயணத்தைத் தடுத்த அந்த சங்கிலிமீது ஆத்திரம் கொண்டவனாக அதைச் சுட்டுவிரலில் பற்றி மேலே தூக்கியவன், அதை ஒரு இழுவை இழுக்க, அந்த மெல்லிய சங்கிலி அவனுடைய கையோடு வந்து சேர்ந்தது. பதறியவளாக பறிக்க முயன்றவள்,

“அது… அது என்னுடைய சங்கிலி…” என்றாள் மெல்லிய கூச்சலோடு. அவனோ அதற்கும் சிரித்து விட்டு,

“என்னுடையது என்றா சொன்னேன். உன்னுடையதுதான்… ஆனால் இது உன் கழுத்துக்கு அழகாக இல்லை…” என்றவன் அவளுடைய தோள்களில் தன் கரத்தைப் பதித்து, மெதுவாக அழுத்திக் கொடுத்துப் பின் தன்னை நோக்கி இழுத்து, அவள் கழுத்தையும், வெளியே தெரிந்த வெண்ணிற நெஞ்சையும் இரசனையாகப் பார்த்து விட்டு,

“உன் கழுத்தை வைரம் அலங்கரித்தால் எப்படியிருக்கும்… அதுவும்…” என்றவன் அவளுடைய காதுகளுக்குள் எதையோ கிசிகிசுக்க இதங்கனைக்கு அருவெறுப்பிலும் ஆத்திரத்திலும் தேகமே பற்றியெரிந்தது. ஆனாலும் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்த முடியாத அவல நிலையில் சிக்கிக்கொண்டவளாகப் பற்களைக் கடித்துத் தன்னைச் சமாளித்தவள்,

“எ… எனக்கு வைரம் ஒத்துக்கொள்ளாது அரவன்… என் சங்கிலியே எனக்கும் போதும்… கொடுக்கிறீர்களா..?” என்றாள் முடிந்தவரை நிதானமாக. அவனோ பதில் கூறாமல் அந்தச் சங்கிலியைத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் போட்டவாறு,

“தருகிறேன்… நீ இங்கிருந்து போகும் போது உன் பொருட்கள் அத்தனையையும் உன்னிடமே கொடுக்கிறேன்… சரி இப்போது வா… உன் அறையைக் காட்டுகிறேன்…” என்றவன் அவனுக்குப் பக்கத்திலிருந்த அறைக்கு அழைத்துச் சென்று கதவைத் திறக்க இன்னொரு அழகிய உலகம் சட்டென்று விரிந்தது. அந்த அறையை நோட்டமிட்டவளை ஏறிட்டவன்,

“இது உன் வீடு போல… அதனால் எந்த சங்கடமும் இல்லாமல் உனக்கு எப்படி இருக்க விருப்பமோ அப்படியிரு…’ என்று விட்டுத் திரும்பியவனைத் தடுத்த இதங்கனை.

“என்… என்னோடு வந்தவர்கள் இங்கே எப்போது வந்து சேர்வார்கள்?” என்றாள் அவஸ்தையோடு. அவனோ அவளை முட்டும் அளவுக்கு நெருங்கி,

“ஷ்… இங்கே… நீ… நான்… மட்டும்தான்… மூன்றாம் நபருக்கு வேலையில்லை….” என்றான் கிசுகிசுப்பாய்.

ஐயோ.. இதற்கு எப்படி செயல் படுவது என்று கூடத் தெரியவில்லையே…! காதுகள் அடைத்துக்கொண்டு வந்தன. சிரமப்பட்டுத் திக்கித் திணறி,

“அ… அரவன்… நான் இ… இங்கே வந்ததே உங்களைப் பேட்டி காண்பதற்காக… அதற்கு… அவர்… அவர்களும் முக்கியம்…” அச்சத்தில் உமிழ்நீர் கூட்டி விழுங்கினாள் இதங்கனை.

அவனோ விழிகளால் அவளுடைய ஆடைகளைத் துகில் உரித்துப் பர்த்துக்கொண்டிருந்தான். அதுவும் சற்று திறந்திருந்த மேலாடையை  விட்டு அவனுடைய விழிகள் அங்கும் இங்கும் அசைவதாக இல்லை.

அதைக் கண்டவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அவசரமாக அவிழ்த்துவிட்ட பொத்தான்களைச் சரியாகப் பூட்டவேண்டும் என்கிற வேகத்தை சிரமப்பட்டு அடக்கியவளாக, அவனுடைய பார்வையின் வீரியத்தைக் கண்டும் காணாமலும் நின்றுகொள்ள, அவனோ, ஒரு கட்டத்தில் தன் உதடுகளைக் கடித்து விடுவித்து,

“நான்தான் எங்கே ஓடப்போகிறேன், நீதான் எங்கே ஓடப்போகிறாய். இன்று நாள் முழுவதும் நமக்கானது. நாளை நீ விரும்பியது போல பேட்டி காணலாம்…” என்று அவன் கூற, அப்பொதே அவிழ்த்து விட்ட பொத்தான்களைப் போட எழுந்த வேகத்தைச் சிரமப்பட்டு அடக்கியவாறு,

“என்.. என்னோடு வந்தவர்கள்…?” என்றாள் கேள்வியாய்.

வருவார்கள்… எப்போது வரவெண்டுமோ அப்போது வருவார்கள்… ஆனால்…” என்றவன் அவளை மேலும் நெருங்கி, அவளுடைய  சிவந்திருந்த அந்தக் கன்னக் கதுப்புகளைப் பெருவிரலால் வருடிக் கொடுத்து,

“நீ… என்னை விடுத்து வேறு ஒருவரை நினைப்பது… எனக்குப் பிடிக்கவில்லை தெரியுமா…” என்றான் கட்டளை போல. பின் அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து, அவள் முக அழகில் தொலைந்தவன் போல,

“மை… மை… யு மேக் மி கிரேசி பேபி… இப்போதே என் படுக்கையறைக்கு நீ ஏன் வரக்கூடாது…” என்று காமம் பொங்கி எழக் கேட்க, இவளுக்கோ வந்த ஆத்திரத்தில், அவனுடைய கால்களைப் பற்றித் தூக்கிச் சுத்திச் சுழற்றிக் கண்காணாத தேசம் நோக்கி விட்டெறிய வேண்டும் என்கிற வேகம் வந்தது.

ஆனால் அவளால் முடியாதே. கற்பனைக்குச் சுகமானது நிஜத்தில் நடக்காதே. அதனால் தன்னை அடக்கி, ஈ என்றவள், இப்போது அவளாகவே அவனை நெருங்கி, தன் உள்ளங்கைகளை அவனுடைய கன்னத்தில் பதித்து,

“நிச்சயமாக உங்கள் அறைக்கு வருகிறேன். இப்போதல்ல… அழகிய மேசையில் மெழுகுவர்த்தியின் ஒளியில் இனிய இன்னிசையின் ஓசையோடு, இரவு விருந்தை உண்டவாறு, கொஞ்சமாகப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னாடி…” என்று கிறக்கமாய் கிசுகிசுப்பாய்க் கூற, அவனுடைய முகம் பளிச்சென்று மலர்ந்து போனது.

“வாவ்… கற்பனை செய்யும் போதே, என்னுடைய இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது… இந்த விநாடியே… இந்தக் கணமே உன் ஆசையை நிறைவேற்ற உள்ளம் துடிக்கிறது…” என்றவன், “சரி… கொஞ்சம் ஓய்வெடு… நீ சொன்னது போலவே அத்தனையையும் தயார்ப் படுத்தி விட்டு உன்னை அழைத்துச் செல்ல வருகிறேன்…” என்றவன், சட்டென்று அவளை இழுத்து அணைத்து, அவள் என்ன என்பதை உணர்வதற்குள்ளாக அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தி, அவளுடைய வாசனையை உறிஞ்சி எடுப்பதுபோல ஆழ மூச்செடுத்து விலகி,

“இப்போதைக்கு இது போதும் எனக்கு… இரவுவரை தாங்கிக்கொள்வேன்…” என்று  விட்டு வெளியேறியதும்தான் இவளுடைய நாசியில் நிதானமான சுவாசம் வெளியேறியது. ஆனாலும் அவன் முகம் பதித்த கழுத்து வளைவில் ஏற்பட்ட இனம் தெரியாத அந்தக் குறுகுறுப்பை வெறுத்தவளாகத் தன் கரங்களால் அழுந்தத் துடைத்துக்கொண்டவள், அந்த அரவன் வெளியேறிய மறு கணம்,

“யு xxxx xxxx xxxx” என்று முடிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் மகிந்தனைத் திட்டித் தீர்த்தாள் இதங்கனை.

“எத்தனை தைரியமிருந்தால் என்னை இத்தனை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளுவாய்… உன்னைத்தான் நான் திருமணம் முடிக்கப்போகிறேன் என்பதை நினைக்கும் போது அசிங்கமாகவும் ஆத்திரமாகவும் இருக்கிறது… எந்தக் காதலன் தன் காதலியை இத்தகைய ஒரு சிக்கலில் மாட்டிவைக்கத் துணிவான்… நீ மட்டும் என் முன்னால் நின்றிருந்தால், நிச்சயமாக உன்னைக் கொன்றே இருந்திருப்பேன்…” என்று சீற, அவளுடைய கோபம் மகிந்தனைச் சற்றும் பாதித்ததுபோலத் தெரியவில்லை. மாறாக,

“ஐ ஆம்… சாரி பேபி.. ரியலி ரியலி சாரி… எனக்கு உன் இக்கட்டான நிலை புரிகிறது கண்ணம்மா… ஆனால் உனக்கும் என் நிலை தெரியும்தானே… உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என்கிறபோது நான் என்னதான் செய்யட்டும் சொல்… ப்ளீஸ்மா… கொஞ்சம் பொறுமையாக…” அவன் முடிக்கவில்லை,

“மண்ணாங்கட்டி பொறுமை… அவனோடு மனுஷன் பேசுவானா? ஒரு பெண்ணைப் புதிதாகப் பார்க்கிறோம் என்கிற அறிவு கொஞ்சமாவது இருக்கா. ஏதோ அதிக நாட்கள் பழகியவன் போலப் படுக்கைக்குக் கூப்பிடுகிறான் பரதேசி… இவனை எல்லாம் எதற்கு  விட்டு வைத்திருக்கிறீர்கள். இருக்கிற துப்பாக்கியால் சுட்டுக் கொன்று  விட்டுப் போகவேண்டியதுதானே.. அவனுடைய உயிரை எடுக்காமல் என் உயிரை எதற்கு எடுக்கிறாய் நீ…” என்று மகிந்தவைக் கடுமையாகத் திட்ட,

“ப்ளீஸ்மா… கொஞ்சம் பொறுத்துக்கொள்… நீ நினைப்பது போல எதுவும்… எதுவுமே நடக்காது. அந்த தைரியத்தில்தான் உன்னை அனுப்பினேன். இன்று இரவு மட்டும் அவனுக்கு நான் கொடுத்த மருந்தைக் கலந்து கொடுத்து விடு போதும். அவன் உளறத் தொடங்குவான். ஒரு வார்த்தை அந்த ஆளியுரவனைப் பற்றி அவன் கூறினால் போதும்… மறு கணம் அவனைக் கைதுசெய்ய நாங்கள் எல்லோரும் வந்துவிடுவோம்…” என்று மகிந்தன் கூற,

“கிழிப்பாய்… நாம் இருக்கும் இடம் தனியான ஒரு பகுதி… இதற்குள் அத்தனை சுலபத்தில் உள்ளே நுழைய முடியாது…” என்று இதங்கனை சலிப்புடன் கூற,

“அதைப் பற்றி நீயேன் வருந்துகிறாய். ஏற்கெனவே நாங்கள் உள்ளே நுழைவதற்குத் தயாராக இருக்கிறோம். அதுவும் இரண்டு கிலோமீட்டர்களுக்குத் தள்ளித்தான் இருக்கிறோம்.  அவன் மட்டும் வாய் திறந்தால் போதும்…” என்றதும் அதுவரையிருந்த அழுத்தம் இறங்கிச் செல்ல,

“தாங்க் காட்… இதுவரை நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியாமல் நிறையவே பயந்து போனேன் தெரியுமா… இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. அந்த அரவன் வேறு… நீ கழுத்தில் போட்ட சங்கிலியையம் பிடுங்கிக் கொண்டு போய்விட்டான் மகிந்தன்…. ” என்றதும், அதிர்ந்து போன மகிந்தன்,

“ஷிட்… என்ன சொல்கிறாய் நீ…” என்றான் மெல்லிய பதைப்புடன்.

“என்ன சொல்கிறேனா… மாங்காய்க்கு உப்பில்லை…” என்று இவள் எரிச்சலுடன் சீற,

“ஷ்… விளையாட இது நேரமில்லை இதங்கனை.. என்ன நடந்தது..? ஏன் அதைப் பிடுங்கினான்…” என்றதும்,

“ம்… அவனுடைய கரங்களின் பயணத்திற்கு அது தடையாக இருந்தது என்று பிடுங்கி விட்டு, வைரத்தால் என்னை அலங்கரிக்கப்போகிறானாம்…” என்று எரிச்சலுடன் கூறியவள் பின் ஏதோ பெரும் சோர்வு ஏற்பட்டடவள் போல அங்கிருந்த படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள். ஏனோ இயலாமையில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.  குரல் கம்ம,

“மகிந்த… சத்தியமாக என்னால் முடியும் போலத் தோன்றவில்லை… அவனைக் கண்ட நொடியிலிருந்து இந்தக் கணம் வரை, நடுங்கிய தேகம் இந்த விநாடிவரை நிறுத்தவேயில்லை தெரியுமா… அதுவும் அவனுடைய பார்வை… அம்மாடி… அது பார்வையா… அந்தப் பார்வையாலே என் உள்ளத்தில் உள்ள ரகசியங்கள் அத்தனையையும் கண்டுபிடித்துவிடுவான் போல இருக்கிறது. அதுவும் அவன் பான்ட் பாக்கட்டிற்குள் கைவிடும் போதெல்லாம் எங்கே, துப்பாக்கியை எடுத்து நீட்டிவிடுவானோ என்று  கிலியாக இருக்கிறது… சத்தியமாக என்னால் முடியவில்லை மகிந்தன்… அவனோடு பேசிய இத்தனை நேரத்தில் என் சக்தி அனைத்தையும் பிழிந்து எடுத்துவிட்டது போல இப்போது என் உடலில் தெம்பேயில்லை…” என்றவள் இயலாமையில் விசும்பத் தொடங்க, பதறிப்போனான் மகிந்தன்.

“ஷ்… என்ன இது… நீ ஒரு பத்திரிகை நிருபர் என்பதை அடிக்கடி மறந்துபோகிறாய் இதங்கனை. தயவு செய்து மனத்தைத் தளர விடாதே. இது நம் நாட்டுப் பிரச்சனை. நம் நாடு சிதறினால், எல்லாமே சிதறிப்போகும்… ப்ளீஸ்டா…” என்று கெஞ்ச, இப்போது அழுத கண்ணீரைத் துடைத்தாள் இதங்கனை.

“மகிந்தன்… எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. எனக்கு மதுபாணம் பிடிக்காது என்று அவனுக்கு எப்படித் தெரியும்? எனக்கென்னவோ இவன் என்னைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறானோ என்று தோன்றுகிறதுடா…” என்று கலங்க,

“ஹே… டோன்ட் வொரி… விந்தியா என்கிற பத்திரிகை நிருபர் ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தொன்றில் இறந்துபோனாள். இப்போது அவளுடைய பெயரைத்தான் உனக்கு கொடுத்திருக்கிறோம். அவளிடமும் எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. கிட்டத்தட்ட உன்னைப் போலதான் அவளும் இருப்பாள்…” என்று அவளைத் தேற்றியவன், பின், சமாதானப்படுத்தும் முகமாக,

“கமான் இதங்கனை… இத்தகைய காரியத்திற்கு உன்னை அனுப்பும் போது இதில் உள்ள ஆபத்துக்களை எல்லாம் நான் யோசிக்கமாட்டேனா. சாதாரண மனிதனுக்கே பார்த்துப் பார்த்துச் செய்யும் நான், என் சரி பாதி நீ. உன்னை அனுப்பும் போது, எத்தனை கவனமாக இருப்பேன்… நம்புமா…! என்னதான் சல்லடை போட்டுத் தேடினாலும், நீ பொய்யான விந்தியா என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியாது.. அதற்கேற்ற மாதிரி அத்தனையும் மாற்றி வைத்திருக்கிறோம்.” என்று சமாதானம் கூறியவன், தொடர்ந்து,

“உன் கூடத்தான் சோஜினும், ஒலிவும் இருக்கிறார்களே. என்ன சிக்கல் வந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இதங்கனை.” என்று கூற இவளோ சினத்தோடு,

“மண்ணாங்கட்டி…! அவர்கள் இங்கே வரவில்லை மகிந்தன்.” என்றாள் இதங்கனை. அதைக் கேட்டு அதிர்ந்த மகிந்தன்,

“என்னது…? அவர்கள் வரவில்லையா? அப்படியென்றால் அவர்கள் இப்போது எங்கே…?” என்றான் பெரும் பதட்டத்தோடு.

“அவர்களை வேறு எங்கோ அழைத்துச் சென்றுவிட்டார்கள் போல! இங்கே நானும் அவனும் மட்டும்தான் இருக்கவேண்டுமாம். அந்த உளறலைக் கேட்டு பாதி உயிர்  போய்விட்டது…! எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது.” என்று நடுங்க,

“பயப்படாதே இதங்கனை. நாங்கள் மிக அருகில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அவனால் எதுவும் செய்ய முடியாது. நம்பு. சோஜினும். ஒலிவரும் எங்கே என்று விசாரிக்கிறேன். நீ பத்திரமாக இரு.” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, வெளியே யாரோ வருவது போலச் சத்தம் கேட்டது.

“மகிந்த…! யாரோ வருகிறார்கள் போல. நான் பிறகு பேசுகிறேன்.” என்று விட்டுத் தன் பதட்டத்தை அடக்க முயன்றவளாகக் கூந்தலைக் காதுக்கு மேல் இழுத்துக்கொண்டவள், அங்கிருந்த ஜன்னலின் அருகே போய் நிற்க, இவளுடைய கதவு தட்டப்பட்டது.

“யெஸ் கம் இன்…!” என்று விட்டுக் கதவை நோக்கித் திரும்ப அந்த அறைக் கதவு திறந்தது.

What’s your Reaction?
+1
12
+1
3
+1
3
+1
0
+1
0
+1
1
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

20 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

5 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

6 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago