அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம் வாஷிங்டன். ஆங்காங்கே வெள்ளை தெறித்தாற்போல சுருண்டிருந்த கரிய முடி. அதற்கேற்ப கரிய நிறம். சிறிய விழிகள், ஆனாலும் கூர்மையான பார்வை. அந்தப் பார்வையில் நிறைய யோசனை. அதை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய கரத்திலிருந்த தண்ணீர் குவளை அங்கும் இங்கும் உருண்டுகொண்டிருந்தது. அந்த நேரம், அறையைத் திறந்துகொண்டு வந்தான் அவன்.
உயரமாக இருந்தான். மிக மிக மிக உயரமாக இருந்தான். அடர்ந்த முடியை ஒட்ட வெட்டியிருந்தான். அதற்கேற்ற கரிய நீண்ட இமை. கூரிய சற்று விரிந்த விழிகள். ஈட்டிபோல் செதுக்கிய நாசி. அழுத்தமான உதடுகள். அளவாய் வெட்டிய தாடி மீசை மிகக் கச்சிதமாக அவனுக்குப் பொருந்தியிருந்தது. தினவெடுத்த உடல். அகன்ற மார்பு. இறுகிய தசைகள். கரங்களை சற்று அசைத்தாலும் அவை முறுகித் திரண்டு நின்றன. வேக நடை. அதுவும் அழுத்தமான உறுதியான நடை. கையிலே கரிய நிறத்தில் ஒரு கோப்பு.
உள்ளே வந்தவன்,
“ஹாய்…” என்று தலையை அசைத்து விட்டு, அவருக்கு முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்து காலுக்கு மேல் காலைப் போட,
“ஹௌ ஆர் யு…” என்றான் மால்கம். முகத்தில் எள்ளளவுக்கும் சிரிப்பில்லை. அதே போல அவருக்கு முன்னாலிருந்தவனின் முகத்திலும் சிரிப்பில்லை.
“குட்…” என்று அவர் கேள்விக்கு பதில் சொன்னவன், தன் கரத்திலிருந்த கோப்பை மால்கமிற்கு முன்னால் மேசையில் போட, அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார் அவர்.
“இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?”
“நான் சேகரித்த தகவல்கள்… தவறாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” நறுக்குத் தொனித்தாற் போல வந்தது பதில்.
பதில் சொல்லாமல், அவனை முழு விநாடி பார்த்தவர், மீண்டும் அவன் கொடுத்த கோப்பில் இருந்த தகவல்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார். முதல் பக்கத்திலேயே வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் புகைப்படம் இருந்தது. நிறைய பதக்கங்கள் பொறிக்கப்பட்ட, காவல்துறை சீருடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் ரோயல் கனடியன் மௌன்டட் பொலிசின் டெப்யூட்டி கமிஷனரான கொன்ஸ்டன்டைன். அடுத்தது, கனடிய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருக்கிற தென் கொரிய நாட்டைச் சேர்ந்த யுன் ஹூன். அடுத்தது கனடாவின் வியாபாரத் துறையில் முன்னணியில் இருக்கும் டேஜங், இறுதியாக இருந்த படத்தைப் பார்த்த மால்கம் கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் அதையே வெறித்துக்கொண்டிருந்தான். அதிலிருந்தது கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஃபன்ஹூ
வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவர்,
“இந்த நால்வரையும் நீ கொல்லவேண்டும்…” என்று மால்கம் கூற, தலையை அசைத்தவன்,
“வித் மை ப்ளஷர்…” என்று விட்டு எழுந்தான் அவன். அவனைத் தடுத்த மால்கம்,
“எவ்வளவு காலம் எடுக்கும்…”
“குறைந்தது ஒரு வருடம்…”
“இட்ஸ் டூ லாங்… அதற்குள் தேர்தல் வந்துவிடும். ஃபன் கூதான் அடுத்த பிரதமர். அவர் பிரதமராக வந்தால் நாம் சந்திக்கும் சிக்கல்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை…” என்று அழுத்தமாகக் கூற, இவனோ, மால்கமை ஏறிட்டு,
“எனக்கு அது புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? டு வி ஹாவ் எனி ஆப்ஷன்?” என்றவன் ஒரு பெருமூச்சோடு மால்கமை ஏறிட்டு,
“இவர்கள் சாதாரண ஆட்களில்லை சுலபமாகக் கொல்வதற்கு! நிறையத் திட்டங்கள் போடவேண்டும். கொலையை விபத்தாகக் காட்ட வேண்டும்… அதைக் கண்ணிமைக்கும் நொடியில் செய்துவிட முடியாது…” என்றான் அழுத்தமாக.
“ஆனால்…” என்று மால்க்கம் இழுக்க, இப்போது எழுந்து நின்றவன்,
“உங்களுக்கு அவசரம் என்றால் தாராளமாக வேறு யாரையும் இந்த வேலைக்கு அனுப்பலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை…” என்று தெளிவாக்க கூற, உடனே மறுப்பாகத் தலையை ஆட்டினான் மால்கம்.
இவனைத் தவிர இத்தகைய வேலையைத் திறம்பட செயல்படுத்த வேறு யாராலும் முடியாது. பெருமூச்சுடன் இருக்கையை விட்டு எழுந்த மால்கம்,
“நிச்சயமாக ஒரு வருடத்தில் இவர்களை கொன்றுவிடுவாயா? என்றான்.
வித்தவுட் மிஸ்டேக்…” என்றவனிடம், மால்கம் ஒரு உறையை நீட்ட அதை வாங்கி மேசையில் கொட்டிப் பார்த்தான். அவனுக்கு வேண்டிய பணம் கட்டுக்கட்டாக இருந்தது. அதை அலட்சியமாக எடுத்துப் பான்ட் பாக்கட்டிற்குள் செருகியவன்,
“சீ யு சூன்…” என்று விட்டுத் திரும்ப,
“ஆளியுரவன்…” என்றார் மல்கம். இவன் நின்று தலையை மட்டும் திருப்பிப் பார்க்க,
“உனக்கு நால்வரைத்தான் கொலை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது…” என்றார் அழுத்தமாக. அதைக் கேட்டு மெல்லியதாக சிரித்தவன்,
“இட்ஸ் நாட் இன் மை ஹான்ட்…” என்ற விட்டு வெளியேற, அவனையே மேல் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார் மால்கம்.
இரண்டு மாதங்களின் பின்பு,
இராணுவத்தின், கடந்த இருபது வருடங்களாகக் கடமையாற்றி வந்த, மேஜர் ஜெனரல் யுன் ஹூ பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியதால், சம்பவ இடத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார். பிறப்பில் தென்கொரியாவைச் சேர்ந்த யுன் ஹூ, வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் ஏற்பட்ட மோதலில் தாய்தந்தையை இழந்த நிலையில், தன்னுடைய பதினாறாவது வயதில், கனடாவிற்கு அகதியாகக் குடிபெயர்ந்தார். கனடிய இராணுவத்தின் மீது கொண்ட பற்றில் பதினெட்டாவது வயதில் இராணுவத்தில் சேர்ந்து தன்னுடைய கடிய உழைப்பால் படிப்படியாக முன்னேறி ய நாற்பத்தைந்தாவது வயதில் மேஜர் ஜெனரல் பதவியைப் பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது. அவரின் மரணம் கனடிய இரானுவத்திற்குப் பேரிழப்பாகும். இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்ட யுன் ஹூவினுடைய பூத உடலை இராணுவத்தினர் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
எட்டு மாதங்களுக்குப் பின்பு
நவம்பர் மாதம் என்றாலே மழையின் தொல்லைதான். வாகனத்தைக் கூட ஓட்ட முடியாமல் அடையாய் பெய்த மழையை எதிர்த்துத் தன் ஹொன்டா சிவிக்கை ஓட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
மழை கனமாகப் பெய்ததால், தெரு சுத்தமாகத் தெரியவில்லை. அதுவும் வேக வீதியில் அந்த மழையைக் கிழித்துக்கொண்டு அங்கும் இங்கும் சமிக்ஞையைப் போட்டுத் பாதையை மாற்றி ஓடும் வாகனங்களுக்கு மத்தியில் நேராக வண்டியை ஓட்டுவது என்பது பெரிய ‘சேர்க்கஸ்’ வித்தைதான்.
ஏற்கெனவே வேலைக்குத் தாமதமாகிவிட்டது. இந்த நேரத்தில், இத்தனை மெதுவாகப் போனால் அவ்வளவும்தான். சற்று வண்டியின் வேகத்தைக் கூட்டலாம் என்று எண்ணி அக்ஸலரேட்டரை அழுத்திய நேரம், திடீர் என்று ஒரு வாகனம் அவளுடைய பாதைக்குள் நுழைந்து மறு பாதைக்குச் செல்ல, அதிர்ந்துபோனாள் அவள்.
இப்படி திடீர் என்று கண்ணிமைக்கும் நொடியில் அவளுடைய பாதைக்குள் அவன் வருவான் என்று இவள் எதிர்பார்க்கவில்லை. பதட்டத்தோடு வேகமாகத் தடையை அழுத்த ஒரு குலுக்கலோடு வண்டி நின்றது. நல்லவேளை பின்னால் எந்த வாகனமும் வரவில்லை. அப்படி வந்திருந்தால், நிச்சயமாக இவள் வாகனத்தோடு முட்டியிருக்கும்.
ஒரு கணம் அவளுடைய உயிரைப் பிரித்து எடுத்துவிட்டான் அந்த வண்டிக்காரன். ஆத்திரம் வர. ஜன்னலைக் கீழே இறக்கி விட்டுத் தலையை வெளியே நீட்டினாள் அவள்.
அப்பப்பா… வானத்து முழுமதிதான் வழி தவறி வாகனத்தை ஓட்டுகிறதோ…? இல்லை அன்றலர்ந்த தாமரைதான் வண்டி ஓட்டுகிறதா? கனடாவில் இப்படி ஒரு அழகியா. தோள்வரை வழிந்த சுருண்ட குழல். வில்லென வளைந்து நின்ற அடர்ந்த புருவங்கள். அதற்குக் கீழே நீண்ட பெரிய கரிய விழிகள். அவை கோபத்தோடு வண்டெனத் துள்ளிக் குதிக்க, சற்றுச் சதைப் பற்றுக் கொண்ட கிள்ளத் தூண்டும் கன்னங்களைக் கைகொடுத்து இணைக்கும், மெல்லிய கூறிய நாசி. அதில் பொட்டுப் போன்ற வைர மூக்குத்தி. அந்த நாசி, குளிராலோ, இல்லை அதீத கோபத்தாலோ சற்றுச் சிவந்து துடித்துக்கொண்டிருக்க, அதற்குக் கீழ் இயற்கையாகவே சிவந்த செர்ரிப்பழ அதரங்கள். சங்குக் கழுத்து. அதற்குக் கீழ்…. அடடா… ரவிவர்மன் வரைந்த அந்த தேகத்தைப் பார்க்க முடியாமல் வாகனம் மறைத்த்துவிட்டதே… ஆனாலும் செழிப்பாய் பெய்த மழை அந்தத் தடையைத் துச்சமாக்கித் தாராளமாகவே, வாகனத்தின் உள்ளே பாய்ந்து அவள் தேகத்தை வருடிச் செல்ல, இவளோ அந்த மழையைப் பற்றிச் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, இடையில் புகுந்த அந்த வாகன ஓட்டியைத் தாறுமாறாகத் திட்டிக்கொண்டிருந்தாள்.
காமனே காதல் கொள்ளும் அந்த அழகியின் திட்டல் கூட, ஏழுஸ்வரங்களின் இன்னிசையாய் அந்த வாகன ஓட்டிக்கு இருந்ததோ. அவள் திட்டலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவன் பாட்டுக்கு கச்சிதமாய் தன் வண்டியை மறு பாதைக்கு மாற்றி, அங்கிருந்து காணாமல் போக, இவளுக்குத்தான் ஆத்திரம் கட்டுப்பட மறுத்தது.
“xxxx xxxx xxxx” என்று அந்த வாகன ஓட்டியைத் தாராளமாகத் திட்டியவள், வலது கரத்தை வெளியே நீட்டி அதன் நடுவிரலை மட்டும் நிமிர்த்திக் காட்டி விட்டுத் தொடர்ந்து வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு ஜன்னலை மேலேற்றி வண்டியின் வேகத்தைக் கூட்ட, அவள் திட்டிய திட்டும் அந்த மழையும் எருமையின் மீது பெய்த மழையின் கதையாகிப் போனதுதான் பரிதாபமே.
இதற்கிடையில் அவளுடைய அவசரம் புரியாமல் சற்றுத் தூரத்தில் ஏதோ விபத்துப் போல. அத்தனை வாகனங்களும் முன்னும் போகமுடியாமல், பின்னாலும் போகமுடியாமல் நடுவிலேயே நின்றிருக்கத் திரிசங்கு நரக நிலைக்குத் தள்ளப்பட்டாள் அவள்.
இதுவே ஊராக இருந்தால் சந்துபொந்துகளில் விழுந்தாவது வெளியேறியிருக்கலாம். கனடாவில் அதற்குக் கூட வழியில்லையே.. அதுவும் வேகவீதியில் ம்கூம் அதற்கு வாய்ப்பே இல்லை. முன்னும் போக முடியாமல், பின்னும் போக முடியாமல், பக்கமாகவும் செல்ல முடியாமல்… திணறிப்போனாள் அந்தக் கோதை. எரிச்சலுடன்,
“உப்…” என்கிற ஓசையை வெளிவிட்டவாறுத் தலையைப் பின்னால் சரித்தவளுக்கு ஆயாசமானது.
இன்று வேலைத்தளத்தில் வேளைக்கு வரச் சொன்ன குற்றத்திற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இந்த சிக்கலான போக்குவரத்திற்குள் சுழியோடி எப்படிப் போய்ச் சேர்வது… தலைவலி வந்ததுதான் மிச்சம். சோர்வுடன் டாஷ் போர்டைத் திறந்து அதிலிருந்து ஒரு கம்மை எடுத்து வாய்க்குள் போட்டு மென்றவாறு பபிளை ஊதிக்கொண்டிருக்க ஒவ்வொரு அங்குலமாக வாகனம் நகரத் தொடங்கியது.
ஏனோ தானோ என்று வாகனத்தை ஓட்டும்போது, அவளுடைய கைப்பேசி அடித்தது.
சலிப்புடன் வாகனத் திரையில் மின்னிய அழைப்பைப் பார்த்தாள். அதில் வந்திருந்த பெயரைக் கண்டதும் அதுவரையிருந்த சோர்வு மாயமாகிப் போக, முகம் பளிச்சென்று மலர்ந்தது, உடனே அழைப்பை ஏற்றவள்,
“ஹே…” என்றதும்,
“ஹே… ஸ்வீட்டி எங்கே இருக்கிறாய்…” என்கிற ஆண் குரல் ஒன்று மறுபக்கமிருந்து வந்தது.
“ம்… மழைக்கு இதமாகக் காஃபி வாங்கிக் குடிக்கலாம் என்று டிம்ஹாட்டனுக்கு வந்தேன்…” என்று கிண்டலும் எரிச்சலுமாகக் கூற,
“ஊப்ஸ்… இன்று வேலைக்குச் சீக்கிரம் போகவேண்டும் என்று சொன்னாய் இல்லையா… மறந்து விட்டது… என்ன போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டாயா” என்றான் மகிந்தன் இரக்கமாக.
“ப்ச்… ஆமாம்… இப்படியே போனால் நாளைக்குத்தான் வேலைக்குப் போய்ச் சேர்வேன் போல…” என்றதும், அவளுக்காகப் பரிதாபப்பட்டவன், பின்,
“இன்று மாலை நீ ஃப்ரீதானே…” என்றான் மென்மையாக.
“ம்… மாலையா… ஏன்…?” என்றவளிடம் சற்று நேரம் அமைதியாக இருந்த மகிந்தன், பின்,
“உன்னிடம் ஒரு முக்கியமான விடயம் பற்றிப் பேசவேண்டும்…” என்றான்.
“முக்கியமான விடயமா…? ஏன்பா… சீதனம் கீதனம் ஏதாவது மறைமுகமாகக் கேட்கப்போகிறாயோ… அப்படியானால் இப்போதே சொல்லிவிடு… காதும் காதும் வைத்தாற்போல நம் திருமணத்தை இப்போதே நிறுத்திவிடலாம்” என்றாள் இவள் கிண்டலுடன். அவனோ,
“அது சரி… நீ கொடுக்கும் சீதனத்தில்தான் நான் வாழப்போகிறேனாக்கும்…? நான் வேலை செய்யாதிருந்தாலே நான்கு சந்ததிகள் சும்மா இருந்து உண்ணும் அளவுக்கு சொத்து இருக்கிறது.. நீ கொண்டு வரும் பணம் எனக்கு எதற்கு?” என்றவன் பின், சற்றுக் கோபமாகக், “கேட்டால் பதில் சொல்வதுதானே…” என்றான் மெல்லிய எரிச்சலுடன்.
“சரி… சரி… வருகிறேன்…! ஆறு மணிக்கு வளமையாகச் சந்திக்கும் டிம்ஹாட்டேனுக்கு வரவா…?”
“இல்லை…! நேராக என் வீட்டிற்கு வா…! அப்போதுதான் சிக்கல் எதுவும் இல்லாமல் பேச முடியும்.” என்றான் மகிந்தன்.
“என்னது அதிசயமாக வீட்டுக்கு அழைக்கிறாய்? ஏதாவது ரேப் கீப் பண்ணப்போகிறாயா?” என்று கிண்டலாகக் கேட்க, இவனோ,
“ம்கும்… அதற்கு நீ என்னை விடவேண்டுமே…? ஒரு முத்தம் பெறுவதற்கே நிறையச் சண்டித்தனம் செய்யவேண்டியிருக்கிறது…! இதில் ரேப் செய்திட்டாலும்…! அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் தானாகக் கனிந்து விழப்போகும் பழம் நீ…! நான் ‘ஏன் தடிகொண்டு அடித்துப் பறிக்கவேண்டும். தவிர நான் காவல்துறையை சேர்ந்தவன்மா… இந்தக் காரியத்திற்கெல்லாம் நான் பரம எதிரி..” என்றதும் கிளுக் என்று சிரித்தவள்,
“சரி… வேலையை முடித்துக்கொண்டு வருகிறேன்…” என்று விட்டுக் திரையில் தெரிந்த அவன் அழைப்பை அணைத்தவாறு நிமிர, வாகனங்களும் மெதுவாக அசையத் தொடங்கின.
நிதானமாகக் கிடைத்த இடைவெளிக்குள் வாகனத்தைச் செலுத்தியவாறு அலுவலகம் நோக்கிப் பயணப்பட்ட அவள் வேறு யாருமில்லை. இதங்கனை.
கனடாவில் வாழும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். அளவுக்கு மீறிய பணம் இல்லையென்றாலும் கூட, தேவையை நிறைவாகப் பூர்த்தி செய்யும் அளவுக்குச் செல்வம் படைத்தவர்கள் என்பதால் இதுவரை குறை என்று எதுவும் அவர்களை அண்டியதில்லை. அப்பா, அம்மா, ஒரு தம்பி என்கிற அளவான குடும்பம். இதழியல் துறையில் ஆர்வம் இருந்ததால், அது சார்ந்து பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது, கல்வி விடயமாக அடிக்கடி காவல்துறையில் சுப்பிரின்டன்னாகக் கடமையாற்றிக்கொண்டிருந்த மகிந்தவை சந்திக்கவேண்டிய இருந்தது.
கொஞ்சக் காலப் பழக்கத்தில், மகிந்தனுக்கு இதங்கனையைப் பிடித்துப் போகத் தன் காதலை உடனே சொல்லிவிட்டான். அவனை மறுப்பதற்கு எதுவுமில்லையே. காவல்துறையில் உயர் பதவியில் இருக்கிறான். கைநிறைய சம்பாதிக்கிறான். அது தவிர அவன் பெயரில் கனடாவில் முக்கிய இடங்களில் இரண்டு சொந்த வீடுகள் உண்டு. இவை தவிர ஊரிலும் சொந்தமாகக் காணி பூமிகள் உண்டு. அதையும் மீறி அவனுடைய பண்பும், பழக்க வழக்கமும் தானாக அவளைச் சம்மதம் சொல்ல வைத்தது. ஆனாலும் இதுவரை அவன் மீது அவள் வைத்திருப்பது காதலா என்று கேட்டால் பதில் தெரியாது. அடிக்கடி மகிந்தன் லவ் யு என்பான். இதுவரை அந்த வார்த்தைகளை இவள் சொன்னதில்லை. ஆனால் மகிந்தனை மிகவும் பிடிக்கும். அவனுக்காக எதையும் செய்யும் அளவுக்குப் பிடிக்கும். மகிந்தனும் அவள் வாயிலிருந்து லவ் யு என்பதைக் கேட்க நிறைய முயற்சிகள் செய்தான்தான். ம்கூம். சொன்னதில்லை. ஏனோ சொல்லத் தோன்றியதில்லை.
ஏன் என்று கேட்டால் பதில் அவளுக்குத் தெரியவில்லை. சொல்ல வாய் வரவில்லை அவ்வளவுதான். வாயால் சொன்னால்தான் காதலா. செயலால் சொன்னால் அது காதில்லையா. அதனால் தன் காதலை முடிந்தளவு செயலால் நிறைவு செய்துவிடுவாள் இதங்கனை.
மகிந்தனும் இவளும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கிய பின், தன் படிப்பை முடித்த பிற்பாடு தாய் தந்தையிடம் தன் விருப்பத்தைக் கூறலாம் என்கிற உறுதியுடன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினாள். வெளியேறிய உடனேயே ஒரு பத்திரிகை நிறுவனத்திலும் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு இவளுக்குத் தக்க வரனைத் தேடத் தொடங்கியபோதுதான், மகிந்தனைப் பற்றி தாய்தந்தையருக்குச் சொன்னாள்.
வேற்று இனத்தவனை அழைத்து வராமல், தமிழனாக ஒருத்தனை அழைத்து வந்ததில் இந்திரகுமாருக்கும் பார்வதிக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். உடனே மகளின் விருப்புக்கு மதிப்புக் கொடுத்து, அவளுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சிக்கல் மகிந்தன் வீட்டிலிருந்துதான் பிறந்தது.
தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற சம்பந்தமில்லை என்று மகிந்தனின் தாய் மேனகா ஆரம்பத்தில் எதிர்ப்புக் கொடிதான் காட்டினார். கை நிறைய சீரோடு இன்னும் அதிகம் படித்த பெண்ணை எதிர்பார்த்திருப்பார் போல. ஆனால் மகிந்தனின் பிடிவாதத்தால் வேறு வழியில்லாமல் சற்று இறங்கி வந்தாலும், இதங்கனையோடு அதிகம் அவர் ஒட்டவில்லை. இவளும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வாழப்போவது அவளும் மகிந்தனும்தானே. இதில் மேனகையைப் பற்றி அவளுக்கென்ன வந்தது. அதன் பின் திருமணமும் நிச்சயமானது.
இதோ, இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். இதற்குள் அவள் செய்து முடிக்கவேண்டிய வேலைகள் வேறு எக்கச்சக்கமாகக் குவிந்திருந்தன. அதுவும் கனடடியத் தேர்தல் வேறு விரைவாக வர இருப்பதால், அரசியல்வாதிகளின் அரசியல் பேச்சுக்களைப் பற்றி இவள் ஆய்வு செய்து எழுதவேண்டும். குறிப்பாக இன்னும் இரண்டு கிழமைகளில் நடக்க இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஃபங்கூ அவர்களின் முக்கிய பேச்சு ப்ளு மவுன்டனில் நடக்க இருப்பதால், அது சார்ந்த வேலைகளையும் இவள்தான் செய்யவேண்டியிருந்தது.
இப்போது கூட அது விடையமாகத்தான் சற்று வேளைக்கு வரச்சொல்லி மேலதிகாரி சொல்லியிருந்தார். ஆனால் எங்கே… எப்படியோ, திக்கித் திணறித் தட்டுத் தடுமாறி சிக்கிச் சின்னா பின்னப்பட்டு ஒரு மாதிரி வேலைத் தளத்திற்கு வந்து சேர்ந்தாள் வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வேலைத்தளத்திற்குள் நுழைந்தவள், தன் மேசையை நோக்கி ஓடினாள்.
முன்தினம் விட்டுச் சென்ற வேலை அப்படியே அவளைப் பார்த்து பல்லைக் காட்ட, எரிச்சலோடு கணினியை உயிர்ப்பித்தவாறு மேசையில் கிடந்த ஃபன்ஹூ வைப் பற்றிய செய்திகளை அள்ளி எடுத்து மேலோட்டமாகப் பார்த்தாள்.
ஃபங்கூ… இன்றைய தேதியில் மக்களின் அபிப்பிராயத்தைப் பெரிதும் பெற்றிருக்கும் தலைவர்களில் ஒருவர். அவர் மக்களுக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதிகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அவற்றுள் முக்கியமானது, சட்டத்திற்குப் புறம்பான எந்தப் பொருட்களும் கனடாவிற்குள் நுழையாதிருக்க கடும் பாதுகாப்பு அமுல் படுத்துவது. அதிலும், ஆயுதக் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருட்ககளை விற்றல் என்பன போன்ற சட்டவிரோதச் செயலுக்கு, அதிகபட்ச தண்டனை வழங்கப்படுதல், அதிக பணம் சம்பாதிக்கும் வியாபாரிகளின் வரியை ஏற்றி சாதாரண மக்களுக்கு வரி குறைப்பு என்று அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பெரும்பாண்மையான மக்களுக்கு உவப்பானதாக இருந்ததால் அனைவரும் அவரைத் தூக்கிக் கொண்டாடினார்கள். இதனால் அடுத்த பிரதமராக ஃபன்ஹூ வே வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது…” என்று தான் எழுதிய கட்டுரையை மேலோட்டமாக, வாசித்து விட்டு, அதில் ஒரு சில திருத்தங்களோடு கட்டுரையாக்கிச் செய்தித்தாளில் பதிப்பதற்கு ஏதுவாக மின்னஞ்சல் செய்து விட்டு, அவள் செய்யவேண்டிய மிச்சச் சொச்ச வேலைகளையும் முடித்துக்கொண்டு, நிமிர்வதற்குள் மாலை நான்கு முப்பதையும் தாண்டியிருந்தது.
அதன் பின், கணினியை அணைத்து விட்டுக் கைப்பையைத் தோளில் மாட்டியவாறு எழுந்தவள், அலைபேசியை எடுத்து மகிந்தன்வைச் சந்தித்து விட்டு வருவதாகத் தாயிடம் கூறி அனுமதி கேட்க, மறுபக்கம் ஒரு கணம் அமைதி காத்தது. அன்னை பார்வதியிடமிருந்து அனுமதி பெறுவது அத்தனை சுலபமில்லைதான். ஆனாலும் மகள் மீதிருக்கும் நம்பிக்கையில் சம்மதம் சொல்வார்.
“திருமணம் இன்னும் ஒரு மாதத்தில்… அதனால் புரிந்து நடப்பாய் என்று நம்புகிறேன்…” என்று அழுத்தமாகக் கூற, தாய் எதைக் கூறுகிறார் என்பதை விளங்கிக் கொண்டவளாக, அழகாய் சிரித்தவள்,
“நான் உங்கள் மகள்மா… அதனால் எப்படிப் போகிறேனோ, அப்படியே திரும்பி வருவேன்…” என்று உறுதி கூறி விட்டு, வெளியே வந்தவள் கண்ணுக்குத் தெரிந்தவர்களிடம் சிரித்துத் தலையாட்டி விடைபெற்றவாறு வெளியே வந்தாள்.
வாகனத்தில் ஏறி அமர்ந்து அதை உசுப்ப, அடுத்த அரை மணி நேரத்தில் மகிந்தவின் வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது வாகனம். அதை அலட்சியமாகத் தரிப்பிடத்தில் விட்டு விட்டு, கம்பீரமாய் அவனுடைய வீட்டிற்கு முன்பாக வந்து நின்றவள், அழைப்பு மணியை அழுத்த, இவளுக்காகத்தான் காத்திருந்தான் போல, உடனே கதவைத் திறந்தான் மகிந்தன்.
மகிந்தன் சற்று உயரமாக இருந்தான். பொது நிறம். அடர்ந்த முடி. காவல்துறை என்பதால் உடலைக் கச்சிதமாக வைத்திருந்தான். சொல்லப்போனால் ஆண் அழகன்தான்.
இதங்கனையைக் கண்டதும் புன்னகை மலர,
“ப்ச்… உன்னிடம் என் வீட்டுத் திறப்பு இருக்கிறதே… திறந்து வருவதற்கு என்ன? சரி… சரி… உள்ளே வா…” என்று கடிந்தவாறு வழிவிட, இவள் வந்ததும் கதவை மூடி விட்டு,
“காஃபி… டீ?” என்று கேட்டான்.
“டீ ப்ளீஸ்…” என்றவள் தடித்த மேலாடையகை் கழற்றி, ஒதுக்கிடத்தில் கொளுவியிருந்த கொளுவியில் மாட்டி விட்டு குளிருக்குத் தோதான சப்பாத்தைக் கழற்றி ஓரமாக வைத்து விட்டுக் கரங்களைத் தேய்த்தவாறு முன்னறைக்கு வந்தாள்.
நீளிருக்கையில் சாய்வாக அமர்ந்தவாறு விழிகளை ஓடவிட்டாள். வீட்டைப் புனரமைப்பதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்குமாக இறைந்து கிடந்தன.
ஐந்து நிமிடங்களில் தேநீரோடு அவளை நோக்கி வந்தவனிடம்,
“இன்னுமா வோஷ்ரும் புனரமைத்து முடியவில்லை….?” என்று வியந்தாள் இதங்கனை.
“எல்லாம் முடிந்து விட்டது இதா… குளியலறை கண்ணாடிக்குப் பின்னால்தான் கொஞ்சம் டைல்ஸ் போடும் வேலை இருக்கிறது. அது முடிந்தால் எல்லாம் முடிந்துவிடும். அடுத்தது வீட்டுக்கு வர்ணம் பூசுவதுதான் மிச்சம்… அதையும் விரைவாக முடித்துவிடுவேன்…” என்றவனைக் கிண்டலுடன் பார்த்தவள், இப்படிச் சொல்லியே இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன…” என்றாள்.
அவளைச் சலிப்பாகப் பார்த்தவன்,
“ப்ச்.. நானும் விரைந்து முடிக்கத்தான் பார்க்கிறேன்… ஆனால்… நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது. என்ன செய்ய?” என்றான். இவளோ தன் தோள்களைக் குலுக்கி,
“எது எப்படியோ, நம் திருமணத்திற்குள் முடித்துவிடுபா… திருமணம் ஆன கையோடு கையில் பிரஷ்ஷும் பெய்ன்டுமாக இருந்தால் நன்றாகவா இருக்கும்?” என்றாள் கிண்டல் நகைப்புடன்.
அதைக் கேட்டு சிரித்தவன், “பயப்படாதே… திருமணம் ஆன பின்னாடி உன்னிடம் நான் வாங்கும் வேலை வேறாக இருக்கும்…” என்றவனின் விழிகளில் பார்வை மாற, அதை உணர்ந்தவளாக, உடனே பேச்சை மாற்றினாள் இதங்கனை.
“சரி சரி… இது பற்றி பேசவா என்னை வரச் சொன்னாய்? இப்போது சொல்… அப்படி என்ன ராணுவ ரகசியம் என்னோடு பேசவேண்டி இருக்கிறது? அதுவும் தனிமையில்” என்றாள் அவசரமாக. அவனோ தேநீரை அவளிடம் நீட்டியவாறு,
“முதலில் தேநீரைக் குடி… அதற்குப் பிறகு சொல்கிறேன்…” என்றதும், அவன் நீட்டிய தேநீரை வாங்கி ஒரு இழுவை இழுக்கத் தித்திப்பாக உள்ளே இறங்கியது தேநீர்.
“வர்ரே வா… செம டீ… நம் திருமணம் முடிந்த பிறகு நீதான் எனக்குக் காலையில் தேநீர் போட்டுத் தரவேண்டும்…” என்று அவள் கண்டிப்பாகக் கூற, அவளைப் பார்த்து முறைத்தவன்,
“ஹே… நான் என்ன வேலைவெட்டி இல்லாதவன் என்று நினைத்தாயா… சுப்ரின்டன்ட் ஆஃப் பொலிஸ்மா… தவிர யார் கண்டா வருங்காலத்தில் நான் பிரதமராக வரக் கூட வாய்ப்பிருக்கிறது… நான் போய் உனக்குத் தேநீர் வார்த்துக் கொடுப்பதா… நெவர்…” என்று உதடுகளைச் சுழிக்க,
“என்னது பிரதமரா….? அப்போ காவல்துறை வேலை அவ்வளவுதானா… ஆசை இருக்கலாம்பா.. ஆனால் பேராசை… ம்கூம் இருக்கவே கூடாது. தவிர நாட்டுக்கே ராஜா ஆனாலும் நீ எனக்குக் கணவன் என்பதை மறந்துவிடாதே… காலையில் தேநீர் இல்லை என்றால் நீ அறைக்கு வெளியேதான்…” என்று கறாராகக் கூற,
“என்னது அறைக்கு வெளியேயா…? எதற்கு ஈ ஓட்டவா… சரி சரி… டீல்…” என்றவனிடம்,
“அது…” என்கிற கெத்துடன் தேநீரைக் குடித்து முடித்து மேசையில் வைத்து விட்டு,
“சரி இப்போது சொல்… எதற்காக என்னை வரச்சொன்னாய்” என்றாள் இதங்கனை.
சொல்கிறேன் என்றவன், எழுந்து உள்ளே சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவனுடைய கையில் இரண்டு மூன்று கோப்புகள் வீற்றிருந்தன. அதை அவளுக்கு முன்பாக இருந்த மேசையில் வைத்து விட்டு,
“இதைப் பார்…” என்றான் மகிந்தன்.
இதங்கனை வியப்பில் புருவங்கள் சுருங்க, அதை இழுத்து எடுத்து முதல் பக்கத்தைத் திறக்க, அதில் விலைமதிப்பற்ற ஒரு வாகனத்தின் மீது சாய்ந்து நின்றவாறு ஒரு காலுக்குக் குறுக்காக மறு காலைப் போட்டவாறு யாருக்கோ காத்திருப்பது போல நின்றிருந்தான் ஒருவன். மெல்லிய குழப்பத்துடன் நிமிர்ந்து மகிந்தனைப் பார்த்தாள் இதங்கனை.
“இது யார்?”
“அரவன்..” என்றதும், வியப்புடன் மகிந்தவைப் பார்த்து விட்டு மீண்டும் அந்த புகைப்படத்தை ஏறிட்டாள்.
“இவன்தான் அந்த அரவனா… இவனைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறேன் மகிந்தன்… இவனுடைய பெயரில் இங்கே நிறைய வியாபார நிறுவனங்கள் உண்டே…. தவிர இவன் நிறைய நிலங்களை வாங்கி விற்றுக் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கிறான். இப்போது இவன் அமரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டதாகக கேள்விப்பட்டேன்…” என்றவா மகிந்தனை ஏறிட,
“ம்… நீ சொல்வது சரி… ஆனால்… இப்போது ஒரு வருடமாக இவன் வன்கூவரில்தான் இருக்கிறான்…” என்றான் மகிந்தன்.
“ஓ… திரும்பவும் வியாபாரத்தை இங்கே மாற்றிவிட்டானா?” என்றாள் இதங்கனை. இவனோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“இல்லை… அவன் இங்கே வந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று நம்பப் படுகிறது?” என்றான் மகிந்தன்.
“என்ன காரணம் மகிந்த…?” என்று இவள் புரியாமல் கேட்க, ஒரு கணம் ஆழ மூச்செடுத்து விட்ட மகிந்த,
“இவனுக்கும், ஆளியுரவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்…” என்றதும் அதிர்வுடன் தன் முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்டாள் இதங்கனை.
“ஆளியுரவனா…? அதிர்ந்து போனாள் இதங்கனை.
“கடந்த ஒரு வருமாகக் கனடாவில் அதிகளவில் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று பேசப்பட்டவன்… தவிரப் பல கொலைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப் படுபவன். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் காவல்துறை திணறிக்கொண்டிருக்கிறது… நீ கூட இவனைப் பிடிப்பதற்கு நிறைய முயற்சிகள் செய்தாய். உனக்கு உதவ என்று நானும் அவனைப் பற்றி நிறைய விசாரித்துத் தகவல்கள் சேகரிக்க முயன்றேன். கட்டுரை கூட எழுத நினைத்தேன். நீதான் இடையில் என்னைத் தடுத்து விட்டாய்…” என்று வியப்பும் குறையுடனும் கூறிய இதங்கனையை ஏறிட்ட மகிந்த,
“உனக்கு அவனைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை இதங்கனை. அவன் நீ நினைப்பது போலச் சாதாரணமானவன் அல்ல. அவனுக்கு எல்லா இடங்களிலும் கண்கள் உண்டு. நீ அவனைப் பற்றி விசாரித்தாலோ கட்டுரை எழுதினாலோ, உன்னுடைய உயிருக்குத்தான் ஆபத்து…” என்றவன் அவளுக்கு முன்பாக அமர்ந்து, “இதங்கனை நீ எனக்கு எந்தளவு முக்கியம் என்று உனக்குத் தெரியும். அப்படியிருக்கையில், உன்னை எப்படி ஆபத்தான வேலையைச் செய்ய ஊக்குவிப்பேன்… அதனால்தான் மறுத்தேன்…” என்றதும் உள்ளம் குளிர்ந்துபோனாள் இதங்கனை.
அவளுக்காக அவன் எந்தளவு யோசிக்கிறான். எந்தப் பெண்தான், காதலனோ கணவனோ, தனக்காக யோசிக்கும் போது, அதை ரசிக்காமல் உவகை கொள்ளாமல் இருந்திருக்கிறாள். முகம் மலர அன்பு பொங்க, மகிந்தனைப் பார்க்க, மகிந்தனோ, அந்த பார்வையில் சொக்கிப் போய் நின்றான்.
“ஏய்… அப்படிப் பார்க்காதே… பிறகு என்ன சொல்ல வந்தேன் என்பதே மறந்து போகும்…” என்று கண்டிப்புடன் கூற, மேலும் மலர்ந்தவள், அழகாய் புன்னகைத்து,
“நாட்கள் போகப் போக உன் மீதான பிடிப்பும் அதிகரித்துச் செல்கிறது மகிந்த…” என்றாள் அழகாய். அதைக் கேட்டு புன்னகைத்த காவலன்,
“இப்போது கூட ஐ லவ் யு சொல்ல உனக்கு மனம் வரவில்லை அல்லவா…” என்றான் குறையுடன். தன் உதடுகளைச் சுழித்தவள்,
“உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது, எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. இடையில் எதற்கு அந்த வார்த்தைகள். தவிர ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன் தானே… உன்னைப் பிடிக்கும்… மிக மிகப் பிடிக்கும். திருமணம் செய்யும் அளவுக்குப் பிடிக்கும். ஆனால் அது காதலா என்று கேட்டால் தெரியாது! ஏன் காதல் எப்படி இருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது! தெரியாத ஒன்றை வார்த்தைகளால் சொல் என்றால் எப்படிச் சொல்வது?” என்று கேட்கத் தன் தோள்களைக் குலுக்கியவன்,
“எப்போது கேட்டாலும் இதையே சொல்…! என்னைப் பிடித்திருக்கிறது என்கிறாய்… ஆனால் ஆதியிலிருந்து இப்போது வரை தொட விடமாட்டேன் என்கிறாயே…? எப்போதாவது அத்திப் பூத்தாற் போல ஒரு முத்தம் மட்டும் கொடுத்து விட்டு ஓடிவிடுகிறாய். அதுவும் கன்னத்தில்… எத்தனை ஏங்கியிருக்கிறேன் தெரியுமா?” என்று மகிந்தன் குறையுடன் கூற, இப்போதும் அழகாய் சிரித்தவள்,
“எதற்கு மூதாதையர் திருமணம் என்கிற ஒரு சடங்கை வைத்திருக்கிறார்கள். ஆட்களுக்குக் காட்டவா…. இல்லையே… ஒரு ஆணும் பெண்ணும் இணையும் அந்த அழகான புனிதமான நாளை உலகிற்குக் காட்டத்தானே. அப்படியிருக்கையில், திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழத் தொடங்கிவிட்டால், அந்த சடங்குதான் எதற்கு? அப்படியே வாழ்ந்து விட்டுப் போகலாமே?” என்றவளை எரிச்சலோடு பார்த்தான் மகிந்தன்.
“எப்போது கேட்டாலும் இதே பாடம்தானா…? நாம்தான் திருமணம் முடிக்கப்போகிறோமே… பிறகு என்ன தடை…?” என்றவனைக் கோபத்தோடு ஏறிட்ட இதங்கனை,
“மகிந்த…! எப்போதும் சொல்வதுதான்… என் தாய் தந்தை என் மீது நம்பிக்கை வைத்து என்னை உன்னோடு பழக அனுமதித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் தீங்கு செய்யமாட்டேன்… தவிர மனதுக்கு ஒவ்வாத காரியத்தை நிச்சயமாகச் செய்யமாட்டேன்…” என்று உறுதியாகக் கூறத் தன் கரங்களைத் தூக்கியவன்,
“சரி… சரி… சரி… தெரியாமல் கேட்டுவிட்டேன்… மலையிறங்கு…” என்று வேண்ட, இப்போது பளிச்சென்று சிரித்தாள் இதங்கனை.
“சரி… வள… வள.. கொழ கொழ எதற்கு… எதற்காக இங்கே வரவழைத்தாய். அதற்கான பதிலைச் சொல்…” என்றதும், இப்போது மெல்லிய சங்கடத்துடன் இதங்கனையைப் பார்க்க,
“சொல்… உனக்கு என்ன உதவி வேண்டும். எதுவாக இருந்தாலும் நிச்சயமாக உனக்காகச் செய்கிறேன்…” என்றதும், ஒரு கணம் தயங்கியவன், பின் அவளை ஏறிட்டு,
“அதற்கு முதல் அந்த அரவனைப் பற்றி முழுவதுமாகப் படி… பிறகு சொல்கிறேன்…” என்றான் மகிந்தன். மறுக்காமல் படிக்கத் தொடங்கினாள் இதங்கனை.
அரவன்,
‘இவன் கனடாவில் பணக்கார வரிசையில் முதல் ஐந்தாவது இடத்தில் இருப்பவன். பல தொழில்களுக்குச் சொந்தக்காரன். முக்கியமாக நிலபுலன்களை வாங்கிப் போடுவது அவன் முக்கிய வியாபாரத்தில் ஒன்று. அதைத் தவிர கனடாவிலும், அமரிக்காவிலும் பெரிய அளவில் பண்ணை வைத்திருக்கிறான். அவற்றில் முக்கியமானது மாமிச ஏற்றுமதி. இவை தவிர, இப்போது அவனிடமிருக்கும் பல பில்லியன் அமரிக்க டாலர்கள், நேர் வழியில் வந்ததா என்று கேட்டால் ஆதாரங்கள் ஆம் என்றன. ஆனால் நேர்மையாக உழைத்திருந்தால் இத்தனை வேக வளர்ச்சி இருந்திருக்குமா என்பதும் கேள்வியே. ஒட்டு மொத்தமாக அவனைப் பற்றி அலசினால், பணம் சம்பாதிப்பது மட்டுமே அவனுடைய உயிர் மூச்சு. அதற்காக என்னவும் செய்வான். வருடத்திற்கு ஒரு முறை அநாதை மடங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் நிதியாகப் பணத்தை அள்ளிக் கொட்டுவான். அதற்கான ரசீதையும் பத்திரமாக வாங்கிக்கொள்வான். பின்னே வருமானவரிக்குக் காட்ட அந்த ரசீதுதானே வேண்டும்…” படித்து முடித்து விட்டு நிமிர்ந்து மகிந்தனைப் பார்க்க, அவனோ,,
“மேலும் படித்துப் பார்…” என்றான். சரி என்று படிக்கத் தொடங்கினாள்.
பிடிக்காதது பெண்களின் கண்ணீர். மிக மிகப் பிடித்ததும் பெண்கள்தான். அதுவும் படுக்கையில் அதிகம் பிடிக்கும். அவன் பழகும் பெண்கள் எப்போதும் உயர் தரமாக இருக்கவேண்டும். தாய் தந்தை சிறுவயதில் விபத்தொன்றில் இறந்துபோனதால், ஆரம்ப வாழ்க்கை உறவினர்களின் வீட்டில்தான் தொடங்கியது. அதனால் ஏற்பட்ட கசப்பு, யாருடனும் ஒட்டாமல் தனியாகவே காலத்தைக் கடத்துகிறான். இவனுடைய இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் ஆளியுரவன் இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. அவனுடைய பினாமிகளில் ஒருவனாக இவன் இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது…” படித்து முடித்ததும் வியப்புடன் மகிந்தனைப் பார்க்க,
“அடுத்த கோப்பையும் பார்…” என்றான் மகிந்தன். இவள் அதை எடுத்துத் திறந்தாள். ஆளியுரவன் என்கிறதுக்குப் பக்கத்தில் பெரிய கேள்விக் குறி போடப்பட்டிருந்தது. இவள் புரியாமல் பார்க்க,
“அவன் எப்படியிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவனைப் பற்றி விசாரித்ததில் சிலது தெரிய வந்தது. அடுத்த பக்கத்தில் இருக்கிறது மேலே படி…” என்றதும் உடனே திறந்து பார்த்தாள். அவள் ஓரளவு தெரிந்து வைத்தவைதான் அங்கே இருந்தன.
ஆளியுரவன்.
இன்றைய காலகத்தில் கனடா அரசுக்கே மிகப்பெரும் சவாலாக இருக்கும் சட்டவிரோதி அல்லது சமூகவிரோதி. ஆனால் இதுவரை பிடிபட்டதில்லை. அத்தனை புத்திசாலி. ஒன்றின் மீது ஆசைவைத்தால், அதை அடைய எந்த எல்லைக்கும் போவான். இதயத்தை பாறாங்கல்லால் செதுக்கி வைத்ததால் கருனைக்கும் அவனுக்கும் தூரம் மிக மிக அதிகம். ஒருவேளை துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை நல்லவனைக் கண்டால் தூரவிலகு என்று தப்பாகப் புரிந்துகொண்டானோ என்னவோ. இவனைப் பற்றி இதுவரையும் யாருக்கும் எதுவும் தெரியாது. அதனால் இன்றுவரை கைதுசெய்ய முடியாது காவல்துறை திணறுகிறது. அவனைப் பிடிக்கப் பலவகையில் முயன்றாலும், இதுவரை வெற்றிக்கனியை அவர்கள் பறித்ததில்லை. காரணம் அதற்கான ஆதாரங்கள் துரும்பு கூடக் கிடையாது.
அதுமட்டுமன்றி, இன்றைய தேதியில் அரவனைப் பற்றி அறியாத மேல்மட்டமே கிடையாது. உலகத்தில் உள்ள அத்தனை பெரிய தலைகளுடனும் தொடர்பில் இருப்பதாக நம்பப்படுகிற ஒரு மாயைதான் இவன். இன்று இலங்கை, பங்களாதேஷ், ஈராக், ஈரான், இஸ்ரேல் போன்ற யுத்த பூமிகளுக்கு ஆயுதங்களை கைமாற்றுபவன் அவன்தான் என்று பேசப்படுகிறது. அது நிஜமா பொய்யா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். இதுவரை அவனை யாரும் சந்தித்ததில்லை. எப்படியிருப்பான் என்றும் தெரியாது. நெட்டையா குட்டையா மொட்டையா எதுவுமே தெரியாது. அவன் இருப்பது இலங்கையா இந்தியாவா அமெரிக்காவா லண்டனா கனடாவா அதுவும் தெரியாது. அவனுக்கு ஆயிரம் பெயர்கள். அதில் எந்தப் பெயரில் எங்கே இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது. அந்த ஆளியுரவன் என்கிற பெயர்கூட உண்மையா பொய்யா என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும். தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், ஆளியுரவன் கனடாவின் நிழலுலக தாதா. படித்து முடித்ததும் குழப்பத்துடன் மகிந்தனைப் பார்த்த இதங்கனை,
“இது ஓரளவு முன்பே தெரிந்த செய்திதானே மகிந்தன்.” என்றதும் ஆம் என்பது போலத் தலையை அசைத்த மகிந்தன்,
“நாம் ஆளியுரவனைப் பிடிக்கவேண்டும் என்றால் நமக்கு இந்த அரவன் வேண்டும்…” என்றான் மகிந்தன்.
“பிடித்து விசாரிக்க வேண்டியதுதானே…” என்று இதங்கைன எரிச்சலோடு கூற, மறுப்பாகத் தலையை அசைத்த மகிந்தன்,
“எப்படி… நமக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து ஆணி கூடப் பிடுங்க முடியாது… அப்படியிருக்கையில் எப்படி அரவனைப் பிடித்து விசாரிப்பது?” என்று எரிச்சலுடன் கேட்க ஒரு முழு நிமிடம் மகிந்தனை ஏறிட்டாள் இதங்கனை.
“நான் உன்னிடம் ஒன்று கேட்டால் தப்பாக நினைக்கமாட்டாயே…” என்று கேட்க, இவனோ
“உன்னைப் போய் தப்பாக நினைப்பேனா… சொல்…” என்றதும்,
“இல்லை… ஆளியுரவன் எப்படிப்பட்டவன் என்று நீ சொல்லித்தான் எனக்குத் தெரியும். அதுவும் ஆறுமாதங்களுக்கு முன்பே எனக்கு அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறாய். அப்போது இல்லாத இந்த வேகம், ஏன் திடீர் என்று வந்திருக்கிறது…” என்று கேட்க. அவளுடைய கூரிய புத்தியை நினைத்து வியந்தவனாக,
“ஆமாம் சற்று வேகம் காட்டுகிறேன்தான்… ஏன் என்றால் நம்முடைய, மேஜர் ஜெனரல் யுன் ஹூவையும் ஆளியுரவன்தான் கொலைசெய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதனால், இவனை உடனே பிடிக்கச் சொல்லி மேல்மட்டத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது.” என்றதும் அதிர்ச்சியோடு மகிந்தனை ஏறிட்டவள்,
“யுன் ஹூ கொலைசெய்யப்பட்டாரா… ஆனால் விபத்தென்றல்லவா சொன்னார்கள்…” என்று திணற,
“அது விபத்துப்போலத்தான் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதை விசாரித்ததில் கண்டுகொண்டோம். வெளியே சொன்னால் தேவையற்ற சிக்கல் என்பதால், மறைமுகமாக விசாரித்து வருகிறோம்… ஆனாலும் ஆளியுரவனின் தலையீடு நிச்சயமாக இதில் இருக்கிறது என்பது நம் சந்தேகம்… அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.. தவிர கனடாவிற்குள் அதிக ஆயுதப் புழக்கமும் வந்துவிட்டன. அதற்குக் காரணமும் இவன்தான் என்று உறுதியாகத் தெரிகிறது. நம் நாட்டினை சீர்குலைக்க இவனால் சதி நடக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.” என்று மகிந்தன் கூற.
“சரி… இதில் நான் எங்கே வருகிறேன்?” என்றாள் குழப்பமாக. ஒரு கணம் தயங்கிய மகிந்த,
“என் கடைசி நம்பிக்கை நீதான் இதங்கனை…” என்றவன் சொல்லத் தயங்க.
“பரவாயில்லை… சொல்லு… நான் என்ன செய்யவேண்டும்…?”
“சிம்பிள்… நீ அந்த அரவனை வேவு பார்க்கவேண்டும்…”
“எப்படி?”
“அரவனைப் பற்றி விசாரித்ததில் அவன் பெண்கள் விடயத்தில் கொஞ்சம் பலவீனமானவன்… என்று… தெரிந்தது… அதனால்…”
“அதனால்…” அவள் முடிக்காமல் இழுக்க, இதங்கனையை நெருங்கிய மகிந்தன்,
“எனக்குத் தெரியும்… இது உனக்குச் சிரமம்தான் என்று… ஆனால் உன்னை விட்டால் எனக்கு வேறு வழியுமில்லை… இதங்கனை. எந்த வழியிலாவது அந்த ஆளியுரவனைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்… அதற்கு இந்த அரவனை நெருங்கினால் மட்டும்தான் சாத்தியம்…” என்று தயங்கித் தயங்கிக் கூற,
“மகிந்த… நான் என்ன செய்யவேண்டும் என்று கூறாமல் ஏதேதோ உளறுகிறாய்… இப்போது என்னிடம் என்னதான் எதிர்பார்க்கிறாய்…” என்று இவள் பொறுமையிழந்த கேட்க,
“இதங்கனை… நீ அழகி… பேரழகி… உன் அழகு நிச்சயமாக அரவனை உன் வலையில் விழுத்தும்…” என்று முடிக்க முதல், ஆத்திரத்தோடு மகிந்தனை முறைத்தாள் இதங்கனை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று இவளுக்குத் தெளிவாகப் புரிந்து போக,
“மகிந்தன் என்ன உளறல் இது… என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறாயா… அவனிடம் நான் எப்படி.. சீ… நினைக்கும் போதே குமட்டவில்லை…” என்று அருவெறுத்தவாறு கூற, இவனோ இயலாமையில் ஒரு பெருமூச்சை விட்டான்.
“இதங்கனை…! இது நம் நாட்டின் மானப்பிரச்சனை. என் நாட்டைக் காக்க எந்த எல்லைக்கும் போகும் நிலையில்தான் இருக்கிறேன். இதங்கனை…! எல்லா வழியிலும் முயன்றாயிற்று. இதை விட எனக்கு வேறு வழியில்லை. நான் என்ன செய்யட்டும்…? நமக்கு வேண்டியது நம்பிக்கையானவளாக வேண்டும். அவனுடைய பணத்தைக் கண்டு மயங்காதவளாக, அதே நேரம் நாட்டுப் பற்றுக் கொண்டவளாக, யாரைத் தேடுவேன். உன்னை விட வேறு ஒருத்தியை என்னால் எங்கும் கண்டுபிடிக்க முடியாது… ப்ளீஸ்மா… இதெல்லாம் வெறும் நடிப்புதான். நீ எதற்கும் வருந்த வேண்டியதில்லை. எப்போதும் உனக்குத் துணையாக நான் இருப்பேன்… நம்பு…” என்று அவன் வேண்ட, இவளோ எரிச்சலுடன் அவனை ஏறிட்டு,
“மகிந்தன்… உன் பிரச்சனை எனக்குப் புரிகிறது… ஆனால் நீ என்னைப் பற்றியும் யோசிக்வேண்டும்… என்னால் எப்படி ஒருவனிடம் போய்… காட்… நினைக்கக் கூட முடியவில்லையே.. அதை எப்படிச் செயலில்…” என்று முடிக்க முடியாமல் சலிப்புடன் கேட்க, அவளைப் பொறுமையற்றுப் பார்த்தான் மகிந்தன்.
“இதங்கனை… இதை மிக மிக ரகசியமாகக் கையாளவேண்டியதும் கூட… ஏதாவது ஒரு வழியில் இந்த செய்தி வெளியே போனால், அந்த ஆளியுரவன் சுலபமாகவே தப்பித்துக் கொள்வான்… அதனால் அவனுடைய சந்தேகத்தை எழுப்பாத வகையிலும் விசாரிக்கவேண்டும். கூடவே அவனைக் கவரும் வகையிலும் இருக்கவேண்டும்… அதனால்தான் உன்னிடம் கேட்கிறேன்… அது மட்டுமில்லை, நீ பத்திரிக்கைத்துறையில் வேலை செய்வதால், மிக அவதானமாக இருப்பாய். ஒவ்வொரு விடயங்களையும் மிகக் கவனமாகக் கிரகிப்பாய். தவிரச் சிக்கல்கள் வந்தால், உன்னைக் காக்கவும் உனக்குத் தெரியும்… உன்னை விடத் தகுதியான பொருத்தமான ஒருத்தியை என்னால் கண்டுபிடிக்க முடியுமா தெரியவில்லை…?” என்றவன் இப்போது அவளை அழுத்தமாகப் பார்த்து,
“இப்போது எனக்கு வேண்டியது இந்த வேலையை உன்னால் செய்ய முடியுமா இல்லையா என்பதுதான்.. இதோ பார், என் வருங்கால மனைவி நீ… உன்னையே இந்த வேலைக்கு அனுப்புகிறேன் என்றால்… நம் பிரச்சனையின் பாரதூரத்தை நீ புரிந்துகொள்ள வேண்டும்… நம் நாட்டை காக்கவேண்டுமானால், இதைச் செய்துதான் ஆகவேண்டும். இதற்கு மேலும் உன்னால் முடியாது என்றால் சொல்… நான் வேறு வழி கண்டுபிடிக்கிறேன்…” என்றதும் ஒரு கணம் அமைதி காத்த இதங்கனை பின் நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“சரி செய்கிறேன்… உனக்காக இல்லை என்றாலும் நம் நாட்டின் நலனுக்காக, அந்தத் துரோகி பிடிபடவேண்டும் என்பதற்காக நான் இந்த வேலையைச் செய்கிறேன்…” என்று கூற, முகம் மலர்ந்த மகிந்தன்,
“நன்றி இதங்கனை.. மிக மிக நன்றி… நம் நாடு எப்போதும் உன் சேவையைப் பாராட்டும்…” என்று உணர்ச்சி பெருக்குடன் கூற.
“சரி… அடுத்து நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள் இதங்கனை.
“இங்கிருந்து வன்கூவருக்கு நீ போக வேண்டும்…” என்றான் தெளிவாய்.
“வன்கூவரா…” இவள் வாய் பிளக்க.
“ஆமாம்…” என்றவன் அவன் கொண்டுவந்த மற்றைய கோப்பைத் திறந்து அதிலிருந்து ஒரு உறையை வெளியே எடுத்து நீட்டி,
“இது அந்த அரவனைப் பேட்டி காண்பதற்கான அனுமதிக் கடிதம்.. மிகச் சிரமப்பட்டு எப்படியோ அந்த அரவனைப் பேட்டிகான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறேன்.” என்றதும் அவனைக் கோபத்துடன் பார்த்து,
“அப்படியானால் இதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று உனக்கு முன்னமே தெரியுமா…” என்றாள் ஆத்திரத்தோடு.
“ப்ச்… முதலில் கடிதத்தைப் பார்…” என்று கூற, உடனே அதை விரித்துப் பார்த்தாள். அதில் விந்தியா என்கிற பெயரில், அனுமதிக் கடிதம் இருக்க, இவள் குழப்பத்துடன் மகிந்தனைப் பார்த்தாள்.
“அங்கே நீ விந்தியா என்கிற பெயரில்தான் போகிறாய். பெயர் மட்டுமில்லை, உன்னுடைய அடையாளங்கள், அனைத்தும் இந்த விந்தியாவின் பெயரில்தான் இருக்கப் போகின்றன. உன்னோடு இன்னும் இரண்டு பேர் வருவார்கள்… நானும் வருவேன்…” என்றதும் இவளுடைய முகம் மலர்ந்தது. அதைக் கண்டதும்,
“நான் உன் கூட வரமாட்டேன் இதங்கனை. தனியாகத்தான் வருவேன். எந்த சந்தர்ப்பத்திலும் உனக்கும் எனக்கும் உறவு இருப்பதாக நாம் காட்டிக்கொள்ளப் போவதில்லை. அங்கே நீ யாரோ நான் யாரோ…” என்றவன் இன்னொரு உறையை அவளிடம் நீட்டி, நாளை கழித்து மறு நாள் மதியம் ஒரு மணிக்கு விமானம்..” என்றவன் அவளை நெருங்கி, அவளுடைய கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்து,
இதோ பார், இது வெளியே யாருக்கும் தெரியாது. அதனால் உனக்கு எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும், உனக்காக நானிருப்பேன்… நம்பு…” என்று அவளுக்கு உறுதியாகக் கூற, கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் தன் கரத்திலிருந்த கடிதத்தையே வெறித்துப் பார்த்தாள் இதங்கனை.
இது அவளுடைய திறமைக்குக் கொடுக்கப்பட்ட சவால் மட்டுமல்ல, நாட்டைக் காப்பதற்குமான ஒரு வாய்ப்பு… நிச்சயமாகத் திறம்பட இந்த வேலையை முடிப்பாள். நம்பிக்கை வர,
“உனக்காக நம் நாட்டிற்காக என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்கிறேன் மகிந்தன்…” என்று உறுதி கூற,
“தட்ஸ் மை கேர்ள்… இன்னும் இரண்டு நாட்களில் நீ வன்கூவர் போகவேண்டும்… அப்புறம், எக்காரணம் கொண்டும் உன் வீட்டில் இதைப்பற்றி வாய் திறக்காதே புரிந்ததா…” என்று உறுதி கூற, அதற்குச் சம்மதமாகத் தலையை ஆட்டியவள், விந்தியா என்கிற அந்தப் புதிய பெயரோடு மகிந்தனின் வீட்டை விட்டு வெளியேறினாள். ஆனாலும் ஏனோ உள்ளே தப்பாக எதுவோ உறுத்திக்கொண்டிருந்ததை மட்டும் இவளால் விலக்க முடியவில்லை.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…