Categories: Ongoing Novel

நீ பேசும் மொழி நானாக – 20

(20)

 

கோவிலின் உள்ளே சென்றபோது, வள்ளியம்மையும், ரஞ்சனியும் தமது குசல விசாரிப்பை முடித்து, மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே வந்த சர்வாகமனைக் கண்டதும்,

 

“வாப்பா.. வா… உனக்காகத்தான் காத்திருக்கிறோம்… ரஞ்சனி… இவர்தான்…” என்று வள்ளியம்மை சர்வாகமனை அறிமுகப் படுத்த முயல,

 

“தெரியும் பெரியம்மா… ஏற்கெனவே வெளியே சந்தித்தோம்…” என்றவாறு அவனை விழிகளால், பருகியவாறு ரஞ்சனி கூற, அந்தப் பார்வையில் கடுப்பான சர்வாகமன்,

 

“நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்… நான் போய் சிற்பங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்…” என்று உத்தரவு பெற்றுவிட்டுச் செல்ல, ரஞ்சனியின் பார்வையின் பொருளைக் கண்டுகொண்ட வள்ளியம்மைக்குப் பெரும் உற்சாகம் எழுந்தது.

 

அதே நேரம், கோவிலின் உள்ளே வந்த நிரந்தரி, தன் அத்தையின் அருகே ரஞ்சனி நிற்பதைக் கண்டதும், பதறியவளாக ஒரு தூணின் பின்னே மறைந்து நின்றுகொண்டாள்.

 

தான் யார் என்று இன்னும் அந்தப் பெண்ணிற்குத் தெரியாது. தெரிந்தால், தன் நிலை அதோ கதிதான் என்பதைப் புரிந்தவளாக, தற்போதைக்கு அத்தை தன்னை தேடமாட்டாள் என்கிற உறுதியும் எழுந்ததால், அந்த இடத்தை விட்டு நகரத்தொடங்கினாள்.

 

சர்வாகமனோ தன் காரியத்திலேயே கண்ணாகக், கோவிலின் ஒவ்வொரு சிற்பமாகத் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தான். அதைத் தன் புகைப்படக் கருவிக்குள் படங்களாக எடுத்துத் தள்ளினான். அந்தப் புராதன காலக் கோவிலின் சிற்ப அழகு அவனை மெய்சிலிர்க்க வைத்தது. விஞ்ஞான காலத்திலேயே இத்தனை நுட்பமாகச் செய்யமுடியாதபோது, இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்பு செதுக்கிய சிற்பங்கள் இன்றும் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது, இவன் உள்ளம் பெருமையில் பூரித்தது. தமிழனின் திறமைக்குச் சான்றுகள் அல்லவா அவை.

 

நிரந்தரியோ எத்தனையோ காலத்திற்குப் பிறகு இன்றுதான் கோவிலுக்கே வந்ததால், ஒவ்வொரு கடவுள்களையும் ஆவலுடன் பார்த்துப் பார்த்து தரிசித்தாள்… இனி இத்தகைய வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ… கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால்தான் உண்டு. வீட்டிற்குச் சென்றால், பழையபடி, அவளுடைய உலகம் சுருங்கிவிடும்.

 

அதைச் சற்றுத் தொலைவிலிருந்து பார்த்துக்ககொண்டிருந்த சர்வாகமனுக்கும் தெவிட்டவில்லை. தன் கரத்தில் வைத்திருந்த கைபேசியிலிருந்து தன் இஷ்டத்திற்குப் படத்தை எடுத்துத் தள்ளினான். அவளுடைய முகத்தில் தெரிந்த குதூகலத்தையும்,   துள்ளலையும் பார்க்கப் பார்க்க இதயம் குதூகலித்தது.

 

ஆனாலும் ஒரு நெருடல்… அவளுடைய உள்ளப் பீடத்தில் அவனை அமர்த்துவாளா… இல்லை ஏற்கெனவே அதில் அந்த ஜெயன் ‘நோ… நோ…’ அதற்கு மேல் அவனால் சிந்திக்க முடியவில்லை. இதயம் வேகமாகத் துடிக்க வியர்த்துக் கொட்டியது. அந்த நினைப்பையே தாங்க முடியவில்லையே… ஒரு வேளை கட்டிய கணவன் என்று அவன் மீது காதல் கொண்டிருந்தால்…? சோ வட்…? ஒரு வேளை ஜெயனுடைய பெயர் அவளுடைய இதயத்தில் பதியப்பட்டிருந்தால், அதை அழித்துவிட்டுத் என் பெயரை ஆழமாகப் பச்சை குத்துவேன்… யெஸ்… ஐ வில் டு தட்…’ என்று திடமாக எண்ணியவன் அவளை நோக்கிப் போக முயல, தன் அண்ணியைத் தேடிவந்த தாமரை, அவள் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று அவன் ஆசையில் மண்ணள்ளிப் போட்டாள்.

 

மனதிற்குள் தாமரையைத் திட்டியவன் தனியே பேசும் சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்? என்று எண்ணியவனாக சென்றவர்களின் பின்னால் அவனையும் மீறி இழுபட்டுச் சென்றான் சர்வாகமன்.

 

கோவில் முழுவதையும் சுத்தி வணங்கிவிட்டு, ஓய்வாக அங்கிருந்த மரத்தடிக்கு அனைவரும் வந்து சேர்ந்து கொள்ள, ரஞ்சனியைத் தன் கரத்திலேயே பற்றிக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தாள் வள்ளியம்மை.

 

எல்லோருடைய மனதிலும் பெரும் நிம்மதி எழுந்திருந்தது.

 

வயது போனவர்கள், சற்று நேரம் அங்கேயே ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பலாம், என்று முடிவு செய்ய. இளையவர்கள் இராவணன் வெட்டுப் பார்க்கக் கிளம்பினர். அதே நேரம், ரஞ்சனி, சர்வாகமன் போவதைக் கண்டு, அவன் பின்னால் போக முயல, நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ட தன் அண்ணன் மகளை விட மனமில்லாமல்,

 

“நீ அடிக்கடி பார்க்கும் இடம்தானே… பிறகு பார்த்துக்கொள்ளலாம்… இப்படி உட்கார் உன் கூட பேசவேண்டும்…” என்று தெரிந்தோ, தெரியாமலோ, இளையவர்களுக்குப் பேருதவி செய்திருந்தார். அதே நேரம் தாமரை, நிரந்தரியின் கரத்தைப் பற்றி இழுத்துச் செல்வதைக் கண்ட ரஞ்சனி,

 

“யாரத்தை அது…” என்றாள் வலித்த தன் கன்னத்தை வருடியவாறு.

 

“யாரைக் கேட்கிறாய்?” என்று திரும்பிப் பார்க்க,

 

“தாமரையுடன் செல்வது?” என்று கேட்டாள்.

 

முகம் கறுக்கப் பற்கள் ஒன்றோடு ஒன்று நெரிபட,

 

“அவளா… அவள் எங்கள் வீட்டு வேலைக்காரி… வாய் பேச மாட்டாள்… வீட்டை விட்டு விரட்டவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் திண்டாடுகிறேன்…” என்று எரிச்சலுடன் கூற,

 

“வேலைக்காரியா?” என்று அதிர்ந்தாள் ரஞ்சனி. போயும் போயும் ஒரு வேலைக்காரியிடம் அடி வாங்கியிருக்கிறேனா… எத்தனை தைரியம் இருந்தால், என்னை அறைந்திருப்பாள்… விடமாட்டேன்… நிச்சயம் விடமாட்டேன்… இதற்கு நீ பதில்சொல்லியே ஆகவேண்டும்…’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தவாறு, நிரந்தரியின் பின்புறத்தைக் கொலை வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி.

 

தாமரை, நிரந்தரியின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு தன்னோடு அழைத்துச் செல்ல, சர்வாகமனும், காற்றில் இழுபட்ட சருகாக, அவர்களின் பின்னால் இழுபட்டுச் சென்றான். அவனால் ஏனோ அவளை விட்டு விலகி இருக்கவே முடியவில்லை.

 

பிரகாஷ் தன் நண்பர்களுடன் முன்னுக்குப் போனதால், நிரந்தரி, தாமரையுடன் சற்றுப் பின்தங்கியே சென்றுகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சர்வாகமன் வந்துகொண்டிருக்க, அவனுடைய கூரிய விழிகள் தன் முதுகைத் துளைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. ஏனோ நிரந்தரியால் சாதாரணமாக நடக்கக் கூட முடியவில்லை.

 

தயங்கிய நிரந்தரியைக் கண்டு,

 

“என்ன அண்ணி.. எப்போது பார்த்தாலும், இப்படித் தயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்… சீக்கிரம் வாருங்கள்…” என்று தாமரைதான் இழுத்துச் சென்றாள்.

 

இராவணன் வெட்டுப் பார்வையாளர்கள் பகுதி வந்ததும், அங்கிருந்து அனைவரும் கீழே அதன் ஆழத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

நிரந்தரியின் அருகே நின்று கீழே பார்த்த சர்வாகமனுக்கு அங்கே என்ன புதுமை இருக்கிறது என்று புரியவேயில்லை. இராவணன் வாளால் வெட்டியதால் பிளந்த குன்றுகளாம் அவை.

 

மக்களை வரவழைக்க மேற்கொண்ட கட்டுக்கதையென்றே அவனுக்குத் தோன்றியது. புவியியல் காரணமாக, மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் குன்றுகள் கத்தியால் வெட்டியதுபோல பிளந்திருக்க வேண்டும்.

 

“பார்த்தீர்களா அண்ணா… இராவணன் வெட்டு…” என்று பெருமையாகத் தாமரை கூற,

 

“எது… இது… முதலில் இராவணன் என்பவன் இருந்தானா என்ன?” என்று சர்வாகமன் கேட்க, அவனைக் கோபத்துடன் பார்த்த தாமரை,

 

“என்ன அண்ணா அப்படிக் கேட்டுவிட்டீர்கள்… இராமாயணத்தில், இராவணன் சீதாபிராட்டியின் மீது ஆசை வைத்து அவரைக் கடத்திவந்து இங்கே சிறைவைக்க, அதை அறிந்து இராமன் இராவனனுடன் போர் புரிந்து சீதையைக் காப்பாற்றினார்களாம்…” என்று தாமரை கூற,

 

“ஆ… பிறகு…” என்று இவன் கிண்டலுடன் இழுக்க, அவளோ தன் தமையன் ஆர்வமாகத்தான் கேட்கிறான் என்ற எண்ணித் தனக்குத் தெரிந்த கதையை, அப்படியே எடுத்து விட, எதுவும் பேசாது கேட்டுக்கொண்டிருந்த சர்வாகமனின் முகத்தில் தெரிந்த கிண்டலை அப்போதுதான் கவனித்த தாமரை, கோபத்துடன்,

 

“எதுக்கு அண்ணா சிரிக்கிறீர்கள்… இராமர் மகா புருஷர் தெரியுமோ… அவர் ஒருத்தனுக்கு ஒருத்தியென்று வாழ்ந்த ஏகபத்தினி விரதன்…” என்றாள் சிணுங்கலாக.

 

“ராமர் ஏகபத்தினி விரதனா இல்லையா என்று எனக்குத் தெரியாது… ஆனால நான் அதுதான் தாயே… எவளை மனைவியாக ஏற்றுக்கொள்கிறேனோ… என் முடிவுக் காலம் வரைக்கும் அவள்தான் எனக்கு…” என்று பின்னால் நின்றிருந்த நிரந்தரியைப் பார்த்தவாறு கூறிவிட்டுப் பின் தாமரையைப் பார்த்து, “நீ மேலே சொல்லும்மா…” என்றான் கிண்டலாக.

 

தன் தமையனின் கிண்டலைப் பார்த்துக் கோபம் கொண்டவள்,

 

“நான் ராமர் பக்தை அண்ணா… அவரைத் தப்பாக நினைத்தீர்கள்… பிறகு நான் என்ன செய்வேன் என்றே எனக்குத் தெரியாது…” என்ற கழுத்தை நெரிப்பது போல கரங்களைப் பிடித்தவாறு கூற, அதைக் கண்டு நகைத்தவன் தன் தலையை ஆட்டி,

 

“சரி… இப்போது நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்…” என்றவன், “உன்னுடைய இராமன் எப்படியானவன்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டான்.

 

“அழகன், வீரன், தன் மனைவி மீது தீரா காதல் கொண்டவன்…”

 

“வெல்… ஹெள எபவுட் வாலி, அனுமார், இராவணன்…”

 

“ஐயே… இது தெரியாதா… வாலி தன் தம்பி சுக்கிரீவனின் மனைவியைக் கடத்திய ஒரு வானரம்… அனுமார் வானரமாக இருந்தாலும், இராமன் சீதையைத் தன் நெஞ்சிலே பதித்துக்கொண்ட மாபெரும் வீரன்… இராவணன் அரக்கன்… இராமனின் மனைவி சீதாபிராட்டியின் மீது காமவசப்பட்டு, அவனைக் கடத்திச் சென்றவன்…” என்றாள்.

 

“இவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்?” என்றான் அடுத்து.

 

“எந்த இடம் என்றால்?”

 

“ம்… இராமன் வடக்கிலிருந்து வந்தவன், அது போல மேற்கு கிழக்கு…” அவன் முடிக்கவில்லை,

 

“இது தெரியாதா? அவர்கள் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள்” என்றதும் அதைக் கேட்டுச் சிரித்தவன்,

 

“இப்போது ஏதாவது உனக்குப் புரிகிறதா?” என்கிற கேள்வியைக் கேட்க, அது வரை அவன் கூறியதை உடன்பாடில்லாமல் கேட்டுக்கொண்டிருந்த நிரந்தரி கூட, விழிகள் விரிய, அவனை வியப்புடன் பார்த்தாள்.

 

அதைக் கண்டதும், தான் என்ன சொhல்ல வருகிறோம் என்பதை, தன்னவள் உடனே புரிந்துகொண்டாள் என்பதை அறிந்துகொண்ட சர்வாகமனுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

 

“மண்டு… உன் அண்ணி புரிந்துகொண்டார்கள்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,  இங்கே என்ன பஞ்சாயத்து என்று கேட்டவாறு பிரகாஷ், தன் நண்பர்கள் சூழ வந்து சேர்ந்தான். செய்தியைத் தாமரை கூற,

 

“எனக்கும் புரியவில்லையே அண்ணா…” என்றான் பிரகாஷ் குழப்பமாக.

 

“உங்கள் யாருக்கும் புரியவில்லை… ஆனால் உன் அண்ணிக்குப் புரிந்துவிட்டது…” என்று பெருமையுடன் கூறியவன்,

 

“ப்ரகாஷ்… ராமாயணம், மகாபாரதம், இந்த இரண்டையும் ஆழ்ந்து படித்தால், அதற்குப் பின்னால் இருக்கக் கூடிய உண்மை புரியும்… வடக்கில் உள்ளவர்கள் கடவுள், அழகானவர்கள், வீரர்கள், கூடவே நியாய தர்மம் நிறைந்தவர்கள்… என்று காட்டுவதற்காகவும், தெற்கிலிருந்தவர்கள் வானரங்கள், அழகற்றவர்கள், அரக்கக் குணம் கொண்டவர்கள் நியாயமற்றவர்கள், காம வசப்பட்டவர்கள், பெண்களைக் கண்டால் கடத்திச் செல்பவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவும், எழுந்த காப்பியங்கள்தான் இவை.”

 

“நிஜமாகத்தான் சொல்கிறீர்களா அண்ணா?” என்று பிரகாஷ் வியக்க,

 

“இரண்டு காப்பியங்களையும் தமிழனா எழுதினான்… வடக்கிலிருந்தவன்தானே எழுதினான்… இராமாயணம் எழுதப்பட்டபோது, சோழன் இமயம் கண்டுவிட்டான்… தமிழனின் வீரமும், கொடையும், செயலும் உலகம் முழுவதும் பேசப்பட்டது. வியாபாரத்தில் சிகரத்தைத் தொட்டவன் தமிழன். அவனுடைய இலக்கியத்திற்கு நிகராக உலகில் எந்த இலக்கியங்களும் கிடையாது. அப்படிப் பட்ட தமிழனின் தன்மானத்தையும், பெருமையையும், வீரத்தையும், அவனுடைய மாபெரும் சிறப்புப் பெற்ற இலக்கியங்களையும், அழிக்கவேண்டும் என்பதற்காக நம்முள் திணிக்கப்பட்ட ஒன்றுதான் இராமாயணம், மகாபாரதம் போன்றவை… யோசித்துப் பார்த்தாலே தெரியும்… வடக்கிலிருப்பவர்கள் தம்மை ஒரு அவதாரமாகவும், தெற்கில் இருப்பவர்களை, வானரங்கள், அரக்கர்கள் மற்றும் அடிமை என்பது போலவும் காட்டியிருப்பார்கள்… வாலி, சுக்ரீவன், இராவனன், குகன் இவர்களின் கதாபாத்திரங்களைப் பற்றி யோசித்தாலே புரியும்   சுக்கிரீவனின் மனைவியை வாலி கடத்திச் சென்றால் அது குற்றம், ஒரு மனைவிக்கு ஐந்து கணவன்மார் இருந்தால் அது தெய்வீகம்… அதைப் பயபக்தியுடன் படிப்பதற்கு நாங்கள்… வெட்கமாக இல்லை…” என்றவன் திரும்பி நின்று இராவனன் வெட்டைப் பார்த்தவாறே,

 

“இராமாயனத்திற்குப் பின்னால் இன்னொரு சதியும் இருந்தது… தமிழர்களின் புகழும் வீரமும் உலகம் முழுவதும் பேசப்பட்டதால், வடக்கிலிருந்த பெண்களுக்கு தெற்கில் உள்ள ஆண்களின் வீரத்தின் மீதும் அவர்களின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் மீதும் பெரும் கவர்ச்சி ஏற்பட்டதாம். அதனால் அவர்களுடைய சிந்தையை மாற்றுவதற்காகத் தமிழ் வீரர்களைக் கொச்சைப்படுத்த வேண்டிய நிலை வடக்கிலிருந்தவர்களுக்கு ஏற்பட்டதன் காரணத்தால், இராமாயனம் எழுதினார்கள்…” என்றவாறு கரங்களைத் தன் பான்ட் பாக்கட்டில் வைத்தவாறு நிமிர்ந்து நின்று,

 

“இது புரியாமல், அவர்கள் நமக்குள் திணித்த கடவுள்களை வணங்கிக்கொண்டிருக்கிறோம்… இந்தக் காப்பியங்களைப் படிக்கும் போதே, நம்மையெல்லாம் எத்தனை கீழ்த்தரமாக நினைத்திருக்கிறார்கள் என்பது புரியும்…  இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்களோ எனக்குத் தெரியாது… சொல்லப்போனால், நான் தப்பானவனாகக் கூடத் தெரியலாம்… ஆனால் என் கருத்தைக் செல்வதற்கு உரிமையிருக்கிறது அல்லவா? என்றான் தன் தோளைக் குலுக்கி.

 

“அப்போ நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா அண்ணா?” என்று பிரகாஷ் வியப்புடன் கேட்க,

 

“எல்லாரும் இதைப் பற்றிப் பேசும் போது அப்படி என்ன இருக்கிறது என்பதை அறியவேண்டும் என்கிற ஆவலில்தான் படிக்கத்தொடங்கினேன்… படிக்கப் படிக்கத்தான், அதின் உள்ளர்த்தம் புரிந்தது… எனக்கு வேறு கடவுள் நம்பிக்கை கிடையாது… சோ… ஒரு கதையாகத்தான் படித்தேன்…” என்று மீண்டும் தன் தோளைக் குலுக்கியவாறு கூற, அவன் கூறுவதை ஒரு சிலர் ஏற்றுக்கொண்டாலும், ராமனை அவதார புருஷனாக ஏற்றுக்கொண்ட சிலர், அவன் கருத்தை மறுத்தனர்.

 

“அப்போ ராமர் என்கிற ஒருத்தர் இல்லையா?” என்று கேட்டான் பிரகாஷின் நண்பன் ஒருவன்.

 

“காவிய நாயகர்கள் இருந்திருக்க வேண்டும் என்றில்லையே…” என்றான் சர்வாகமன் அலட்சியமாக.

 

“அப்போ இராமர் பாலம் எப்படி வந்தது? தானாக முளைத்ததா?” என்றான் இராமனின் மீது தீராக காதல் கொண்ட இன்னொரு நண்பன்.

 

“இராமர் பாலத்தை இராமன் தான் கட்டியிருக்கவேண்டுமா? தமிழனால் கட்டியிருக்க முடியாதா? இதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோனேச்சரத்தைக் கட்டத் தெரிந்த தமிழனால், ஒரு பாலத்தைக் கட்ட முடியாதா என்ன? அதற்கு வடக்கிலிருந்து ஒருவன் வரவேண்டுமா?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டவன், இப்போது திரும்பி நின்று கைபிடிக்கும் கம்பியில் சாய்ந்தமர்ந்தவாறு, மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டி,

 

“எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தமிழன் கட்டிய அந்தப் பாலத்தை இராமன் கட்டியதாகக் கூறி அந்தச் சிறப்பையும் அவன் தலையில் போட்டுவிட்டோம்… போதாததற்கு சும்மா ஓடிய அணிலுக்கு வேறு திருநீறு பூசியாகிவிட்டது… டூ யு நோ வட்… அமெரிக்காவிலும், கனடாவிலும் கூட இராமர் தடவிய அணில்கள் இருக்கின்றன” என்று கிண்டலாக கூற, சிறிது நேரம் அனைவரும் அமைதி காத்து எதையோ யோசித்தனர். ஆனாலும் திருப்தி வராதவர்களாக சில கேள்விகளைக் கேட்க, அதற்கும் சளைக்காமல் பதில் சொன்னான் சர்வாகமன்.

 

அப்படியே பேசியவாறு சர்வாகமனை அழைத்துக்கொண்டு பிரகாஷ் முன்னால் போக, பேச்சு சுவாரசியத்தில், பின்னால் வந்துகொண்டிருந்த தாமரையையும், நிரந்தரியையும், அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

 

சர்வாகமன் குழுவிற்கும், நிரந்தரிக்குமான இடைவெளி சற்று அதிகரித்துச் செல்ல, திடீர் என்று அவர்களை நோக்கி மூவர் வரத் தொடங்கினர். பார்த்தாலே பயங்கரமாக இருந்த அந்த உருவங்கள், பணம் கொடுத்தால் எதையும் செய்வார்கள் என்பது பார்த்த உடனேயே புரிந்துகொள்ள முடிந்தது.

 

அவர்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி மெல்ல மெல்லக் குறையத் தொடங்க, இன்னும் இரண்டே இரண்டடிகள்தான்… என்கிற நிலையில், முன்னே போய்க்கொண்டிருந்த சர்வாகமனின் இதயம் தன்னையும் மீறி படபடக்கத் தொடங்கியது.

 

தன் நடையை நிறுத்தியவன், தன் மார்பின் மீது கரத்தை வைத்தவாறு திரும்ப, அங்கே வெறும் வெற்று வெளி மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது. யோசனையுடன் தன் விழிகளால் நாலா பக்கமும் பார்த்தான்.

 

தாமரையோ, நிரந்தரியோ கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. மெல்லிய பதற்றம் தொற்றிக்கொள்ள, திரும்பி பிரகாஷைப் பார்த்து,

 

“பிரகாஷ்… தாமரையைiயும், நிரந்தரியையும் காணவில்லையே…” என்றான்.

 

“திரும்பிப் பார்த்த பிரகாஷ்,

 

“அந்த எருமை, எங்காவது அண்ணியை இழுத்துச் சென்றிருக்கும் அண்ணா… ஏதாவது பூக்களை வாய் பிளக்கப் பார்த்துக்கொண்டிருக்கும்… நீங்கள் வாருங்கள்…” என்று அழைக்க, சர்வாகமன் தயங்கினான். ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

 

“சரிபிரகாஷ்… நீ முன்னால் போ… நான் போய் அழைத்து வருகிறேன்…” என்று அவர்களை அனுப்பிவிட்டு, இவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

What’s your Reaction?
+1
18
+1
4
+1
2
+1
0
+1
4
+1
2
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

13 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

5 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

2 weeks ago