Categories: Ongoing Novel

நிலவே என்னிடம் நெருங்காதே – 31/35

நிலவு 31

தன் காருக்குள் ஏறி, அதை இயக்கி தான் இருக்கும் விடுதிக்கு வரும்வரை அவன் தன்னிலையில் இருக்கவில்லை. எப்படி விபத்தில்லாமல் வந்து சேர்ந்தான் என்பது, அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

தன் அறையினுள் நுழைந்தவன், அறைக் கதவை அறைந்து சாற்றினான். உள்ளே நுழைந்தவனை, ஆளுயரக் கண்ணாடியொன்று வரவேற்றது. அதில் தன் பிம்பத்தைக் கண்டவனுக்கு, பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்தது போல, அருவெறுக்க அதை நெருங்கினான். தன் பிம்பத்தையே கொஞ்ச நேரம், வெறித்துப் பார்த்தவன், ஓங்கி வலக்கை முஷ்டியால் அந்தக் கண்ணாடியைக் குத்த, அதுவோ உடையாமல் மீண்டும் அவன் உருவத்தைத் தயங்காமல் காட்டியது. மீண்டும் ஓங்கிக் குத்தினான், யார் மீதோ கோபம் கொண்டவனாக, அடக்க முடியாத வெறியில் மீண்டும் மீண்டும் குத்தினான். அந்தக் கண்ணாடி குத்திய இடத்தில் வட்டமாக நொறுங்கியும், அவன் முகத்தின் பிம்பம் மறைந்தும், அவன் அடங்கினானில்லை.

ஓங்கிக் குத்திய முஷ்டியிலிருந்து இரத்தம் வழிந்தும் அவன் அந்தக் கண்ணாடியைக் குத்துவதை நிறுத்தவில்லை. “ஏன்… ஏன்… ஏன்…” என்கிற கேள்விமட்டும் அவன் வாயிலிருந்து வந்துகொண்டே இருந்தது.

ஓயாமல் கண்ணடியைக் குத்தியவனுக்கு, யாரோ கழுத்தைப் பிடிப்பதுபோன்ற உணர்வு தோன்ற, என்ன செய்கிறோம் என்கிற எண்ணமேயில்லாமல், தன் டையைக் கழற்றி எறிந்தான். சட்டையைக் கோபத்துடன் பிய்த்து இழுக்க, அத்தனை பொத்தான்களும் தெறித்து விழுந்தவாறு பிய்ந்து கையோடு வந்தது. தன் போக்கில், ஒரு புறமிருந்த ஜிம்மிற்குள் நுழைந்து, அங்கிருந்த நடக்கும் இயந்திரத்தில் ஏறி நின்றவனுக்கு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. எதற்கு ஏறினோம் என்று கூடப் புரியவில்லை. ஒரு கணம் குழம்பியவன், எதுவோ முடுக்கிவிட்டது போல, இலக்கம் பத்தை அழுத்தினான். அது ஓடத் தொடங்கியது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடியவனுக்குச் சிந்தனை எங்கெங்கோ எல்லாம் போனது.

அவளை முதன் முதலாகக் கண்டது, அன்று அவள் தலைவலி என்று மாத்திரை உண்டது அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது. இப்போதுதான் சர்வமகி அடிக்கடி ஏன் மயங்கிவிழுந்தாள் என்பதும் ஏன் பலவீனமாக இருந்தாள் என்பதும் புரிந்தது. “ஓ காட்…” என்றவன் தன் வேகத்தை மேலும் கூட்டினான்

அவள் நோயுடன் போராடுகிறாள்… அதுவும் தனியாக… பெரிய தியாக சிகரம் என்று நினைப்பு… சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்டலாம். இது கூடத் தெரியாமலா அலட்சியமாக இருந்தாள். ஒரு வேளை அந்தக் கட்டி பாரதூரமாக, மாற்றவே முடியாததாக இருந்தால்…” அதை நினைத்ததும், ஓடிக்கொண்டிருந்தவன், அதிர்ச்சியுடன் அதன் ஓட்டத்தை நிறுத்தினான். மீண்டும் மீண்டும் மனம் அதிலேயே நின்றது.

விரைந்து குளியலறைக்குள் நுழைந்தவன், குளிர் தண்ணீரைத் திறந்துவிட்டு அதன் கீழ் நின்றான். பூவாகச் சிந்திய நீர், கடும் குளிருடன் அவன் தலையில் வீழ்ந்தும், உடல் முழுதும் பரவியும், அவன் அச்சத்தை அது சற்றும் குறைக்கவில்லை.

அவளுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமா? இதை நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு உதறியது.

“நோ… நோ.. நோ…” என்று தன்னை மறந்து கத்தியவன், நெற்றியைச் சுவரில் முட்டுக்கொடுத்துத் தன் உள்ளங்கையால் சுவரைப் பலமுறை ஓங்கி அறைந்தான். அவனுக்குக் கைவலி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பலம் கொண்ட மட்டும் அறைந்தான். கண்ணாடி குத்தியதால் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் கழுவப்பட்டுப் போனதேயன்றி, அவனுடைய பயம் எள் அளவும் கழுவப்பட்டுப் போகவில்லை.

“ஏன்டி… ஏன் என்னிடம் சொல்லாமல் மறைத்தாய்… ஏன் மறைத்தாய்… உயிரில்லாத என் கோட்டிற்குக் கிடைத்த பாக்கியத்தைக் கூட எனக்குத் தரவேண்டும் என்று எண்ணவேயில்லையா…? ஏன்டி? ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருக்கலாமே… அப்படி என்ன மன்னிக்க மடியாத பாவம் செய்தேன்…?” என்று வாய் விட்டுப் புலம்பியவன், திரும்பி நின்று, பின்புறம் சுவரில் சாயுமாறு நின்றவனுக்கு ஊடல் மெதுவாக நடுங்கத் தொடங்கியது. பின்தலையோ சுவரில் கோபத்துடன் முட்டி முட்டி எழுந்தது. வலது புரத்துக் கரம் முஷ்டியாகி, சுவரை ஓங்கிக் குத்திக்கொண்டிருந்தது.

“இருக்காது… அவளுக்கு ஒன்றுமில்லை… ஒன்றுமே இல்லை… அவளுக்கு எதுவுமாக விடமாட்டேன். என் சொத்துக் கரைந்தாலும் சரி… உலகில் எந்த மூலைக்கும் நான் அவளை அழைத்துச் சென்று குணப்படுத்துவேன்… ஐ வில் டூ தட்… அவளுக்கு ஒன்றுமாகாது…’ என்று புலம்பியவனுக்க, அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தவன், தன் தலையை கரத்தில் தாங்கிக்கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றான்… கண் முன்னால், உயிரற்ற சர்வமகியின் உருவம், அவன் அனுமதியையும் மீறி வந்துபோக, அவனால் தாங்கமுடியவில்லை.

“நோ…” என்று உலகமே கேட்குமாறு பெரும் குரலெடுத்துக் கத்தியவனின் தொண்டையும், அதனூடே ஓடிய நரம்புகளும் அவன் கத்திய அழுத்தத்தில் இப்போதே வெடித்துவிடுவோம் என்பதுபோல, விடைத்துப் புடைத்து, பயமுறுத்தின. ஷவரிலிருந்து விழுந்த தண்ணீருடன் அவனுடைய கண்ணீரும் கரைந்து சென்றது. ஆம் அந்த ஆறடி நான்கங்குல ஆண்மகன், உடைந்துபோய் வாழ்வில் முதன் முதலாக அழுதான். அவன் வாழ்நாளில், அவனுடைய கண்கள் கண்ணீரைக் கண்டன.

அநேகாத்மனுக்குத் தன்மீதே தாங்கமுடியாத கோபம் வந்தது.

சுலபத்தில் அவள் தப்பானவள் என்கிற முத்திரையைக் குத்திவிட்டு, அவன் போய்விட்டானே. ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம், சர்வமகி ஏன் அப்படித் தன்னோடு நடந்துகொண்டாள் என்பதை யோசித்திருந்தால், ஏதாவது க்ளு கிடைத்திருக்குமே. மூன்று வருடம் எத்தனை பெரும் சித்திரவதையை அனுபவித்துவந்திருக்கிறாள். இது புரியாமல், அவள் மீது கோபப்பட்டு, அவளையும் வருத்தி, தானும் வருந்தி.

சர்வமகியை இப்படியே விட முடியாது. அவளைக் காப்பாற்ற வேண்டும். அவன் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றவேண்டும். அவள் இல்லாத வாழ்க்கையில் அவனுக்கும் இடமில்லை… ஒரு முடிவு எடுத்தவனாகக் குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

முதன் முறையாகக் கண்ணீரைக் கண்ட கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. ஒருவாறு தன்னைச் சமாதானப் படுத்தியவன், நேரத்தைப் பார்த்தான். நேரம், இரவு பன்னிரண்டு மணிக்கும் மேலாகியிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது. கைக்குக் கிடைத்ததை அணிந்துகொண்டு, தடித்த லதர் கோட்டைப் போட்டவாறே, வெளியேறித் தன் காரை எடுத்து, மீண்டும் சர்வமகியின் வீட்டிற்கு வந்தான்.

வீட்டின் மணியை அடிக்கக் கையை ஓங்கியவன், சற்று நிதானித்தான். உறங்கிக்கொண்டிருக்கும் சர்வமகியை எழுப்ப மனம் வரவில்லை. தேவகியின் கைப்பேசிக்கு அடித்தான். மறுகணம் கதவு திறக்கப்பட வியந்த அதிர்ந்த பார்வையுடன் நின்றவளைச் சற்றும் கருத்தில் கொள்ளாது, உள்ளே நுழைந்தவாறே,

“உங்களிடம் ஃபக்ஸ் இருக்கிறதா?” என்றவாறு, தேவகியின் பதிலைக் கேட்காமலே சர்வமகியின் அறைக்குள் நுழைய, அவள் இன்னும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் காலருகே அமர்ந்தவன், வெளியே சிறிதாகத் தெரிந்த பாதங்களின் மீது தன் கரத்தை வைக்க, அவை குளிர்ந்தன. தன் கரங்களாலேயே, அவற்றை அழுந்தப் பற்றி சூடேற்ற முயன்றவன்,

“ஏன் இந்த அறை இவ்வளவு குளிர்கிறது?” என்றான் சற்றுக் கவலையாக.

“இது கொஞ்சம் பழைய கட்டடம். ஹீட்டர் சில வேளைகளில் நன்றாக வேலை செய்யாது…” என்றாள் தேவகி சற்றுத் தயக்கமாக.

“டாமிட்…” என்று பெருமூச்சுடன் சீறியவன், “ஒரு ஹீட்டர் கூடவா வாங்கிப் போட முடியவில்லை?” என்று கோபமாகக் கேட்டவாறு, தன் கைப்பேசியை வெளியே எடுத்து, தன் காவலாளி ஒருவனை அழைத்து செய்தியைக் கூற, அந்த நடுச் சாமத்திலும், பெரிய ஹீட்டருடன் ஒருவன் வாசலருகே நின்றிருந்தான்.

அதை வாங்கிப் பூட்டியபின்தான் அநேகாத்மன் சற்று ஓய்ந்தான். மீண்டும் சர்வமகியின் அருகேயிருந்தவன், விழி மூடி உறங்கிக்கொண்டிருப்பவளை, கண்கள் நிறையப் பார்த்தான்.

ஒரு பக்கக் கன்னத்தைப் பெரும் விரலால் வருடிக்கொடுத்தவன், கையோடு அவள் கழுத்தையும் வருடிக்கொடுத்தான். அவளுடைய அந்த நிலையைப் பார்க்கும் போது, மீண்டும் கண்கள் கரித்தன. அவள் இனிப் படப்போகும் துன்பத்தை எப்படித் தாங்கப்போகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவள் வலக்கரத்தை எடுத்து, தன் உதட்டில் பொருத்தியவன்,

“உன் துன்பத்தை நான் எப்படித் தாங்கப்போகிறேன் என்றே தெரியவில்லை கண்ணம்மா…” என்றான் வலி நிறைந்த குரலில்.

கொஞ்ச நேரம் அப்படியே இருந்தவன்,

“நான் ஃபக்ஸ் இருக்கிறதா என்று கேட்டேனே…” என்றான் தன் விழிகளைச் சற்றும் அசைக்காமல்.

“ஆமாம் சார்…” என்று மெல்லிய குரல் பின்னால் இருந்து வரத் திரும்பிப்பார்த்தான்.

தேவகிதான் தயக்கத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். மீண்டும் சர்வமகியைப் பார்வையால் வருடிவிட்டு, வெளியே வந்தவன், “குட்…” என்றான்.

தொடர்ந்து தன் கைப்பேசியை எடுத்து, சில இலக்கங்களை அழுத்த, அவனுடைய அழைப்பு என்பதால், பன்னிரண்டைத் தாண்டியும், தயங்காமல் எடுக்கப்பட்டது. யார் யாருடனோ தொடர்பு கொண்டான்.

அவன் வைத்த இடத்திலேயே சர்வமகியின் ஃபைல் இருந்தது.

ஃபைலை ஒழுங்காகத் திறந்து காகிதங்களை வெளியே எடுக்கப் பொறுமை இல்லாதவனாக, இழுத்து எடுத்தான்.

ஃபக்சிலே எண்களைப் பதிந்து, எங்கெங்கோ அனுப்பினான்.

ஏனோ அவனுடைய கரங்கள் நடுங்கின. சட்டைப் பையிலிருந்த சிகரட்டை எடுத்து உதட்டில் பொருத்தியவன், பால்கனியில் வந்து நின்றான்.

வெளியே தெரிந்த கரிய நிறம் போலவே, அவன் மனமும் இருண்டு போயிருந்தது. சர்வமகிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்சம், அவனை நிலைகுலையச் செய்தது.  அவனிடம் எவ்வளவு பணம் கொட்டிக்கிடந்துதான் என்ன பயன்? சர்வமகியை இழந்துதான் அவன் பணம் வைத்திருக்கவேண்டும் என்றால் அந்தப் பணம்தான் அவனுக்கு எதற்கு.

தற்போதைய நிலையில் அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். அவளுடைய தந்தை கொலைகாரன் என்பதையோ, அவளுடைய தம்பி தன் தந்தையின் வீட்டிலேயே திருடவந்தான் என்பதையோ, எல்லாவற்றையும் மறந்துபோனான். இப்போது மனம் முழுவதும் சர்வமகியே நிறைந்திருந்தாள். அவள் முழுதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நலமோடு, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்கின்ற எண்ணம் மட்டும் அவனை முழுவதுமாக வியாபித்திருந்தது. இருப்பாள்… நிச்சயமாக இருப்பாள்…’

சிகரட்டின் முனை விரலைச் சுட, சுய நினைவுக்கு வந்தான். அதே நேரம் தொலைப்பேசி சிணுங்க வேகமாக எடுத்துக் காதில் பொருத்தினான்.

அவனுடைய முகம் இறுகிப்போனது.

நிலவு 32

தன் கரத்திலிருந்த தொலைப்பேசியையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தான். மீண்டும் பாக்கட்டிலிந்த சிகரட்டைப் பற்ற வைத்தான்… நன்கு இழுத்து, நுரையீரலை நிரப்பிப் பார்த்தான். அவனுடைய பதட்டமும், பயமும் சற்றும் குறைவதாயில்லை.

மீண்டும் மணி அடித்தது. எடுத்து காதில் பொருத்தினான். இப்படி இரண்டு மூன்று தொலைப்பேசிகள் அவனை அழைத்தாலும், யாருமே அவனுக்குப் பிடித்த பதிலைக் கூறவில்லை.

கோபத்துடன், பல்கணியின் கம்பியை ஓங்கிக் காலால் உதைக்க, அது அவனுடைய பலத்துக்கு முன்னால், நிமிர்ந்து நிற்கமுடியாமல், அப்படியே இரண்டு கம்பிகள் வளைந்துபோய் நின்றன.

நோ… சர்வமகிக்கு எதுவும் ஆகாது… ஆகவும் கூடாது… அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்…” என்று தன்னை மறந்து கூறியவன், கரத்திலிருந்த சிகரட்டை சுண்டி எறிந்துவிட்டு உள்ளே வந்தான்.

அவன் முகத்திலிருந்த இறுக்கத்தைத் தேவகி புரிந்துகொண்டாள்.

“எ… என்ன சொன்னார்கள்…” என்றாள் தவிப்புடன்.

தன் உதட்டைக் கடித்துத் தலையை அவன் மறுப்பாக ஆட்ட,

“ஓ…” என்றவாறு தொப் என்று இருக்கையில் அமர்ந்தாள் தேவகி.

“அப்போ… அக்காவைக் காப்பாற்ற முடியாதா?” என்று பெரும் ஏக்கத்துடன் அவள் கேட்க,

“வை நாட்… உன் அக்காவுக்கு ஒன்றும் ஆகாது… நான் இருக்கும்வரை ஆகவும் விடமாட்டேன்…” என்று சுள் என்று பாய்ந்தவன், தேவகியின் பயந்த முகத்தைக் கண்டு தன்னை அடக்கினான்.

“லிசின்… உன் அக்காவை… இல்லை என் மகிமாவை உலகின் எந்த மூலைக்குக் கொண்டு போயும் காப்பாற்றுவேன் தேவகி… அவள் உயிர் போவதாக இருந்தால், அது என் பிணத்தைத் தாண்டித்தான் போகும்…” என்று அவன் வலியுடன் கூற, தேவகி அதிர்ந்தாள்.

“சார்… நீங்கள் அக்காவை…” அவள் முடிக்கவில்லை,

“யெஸ்… ஐ லவ் ஹர்… என் உயிரிலும் மேலாக… என் மகி இல்லாத உலகில்… எனக்கு எதுவுமே… எதுவுமே கிடையாது… நான் ஒரு முட்டாள்… இதைப் புரிந்துகொள்ள, இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது…” என்றவன் தன் நிலையை நினைத்தே சிரித்தான். “அன்று என்னை மணக்கச் சொல்லிக் கேட்டபோது, அவள் மறுத்துவிட்டாள். நான் அப்போதே அவளைப் பிடிவாதமாக மணந்திருக்கவேண்டும்…” என்றான் பெரும் வலியுடன்.

“என்ன…? அக்காவை மணக்கக் கேட்டீர்களா? எப்பொழுது? அப்படியானால் அக்காவுக்கும் உங்கள் மீது காதல் இருக்கிறதா சார்?” என்றாள் தேவகி ஆர்வமாக.

ஒரு கணம் தன் விழிகளை மூடி யோசித்தான் அநேகாதமன். அன்று அவள் தன்னிடம் தஞ்சம் புகுந்ததும், அவளிடம் அவன் அடைக்கலம் புக விளைந்தபோது மயங்கி நின்றதும், பின்பு, மறுத்ததும், ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வந்தது. முதலில் மயங்கியிருந்தவள், பின்பு மறுத்ததற்கான காரணம் இப்போதுதான் புரிந்தது.

“யெஸ்… அவளும் என்னை விரும்புகிறாள்…” என்றான் அழுத்தமாக.

“எதை வைத்து அப்படிக் கூறுகிறீர்கள்… உங்களை அக்கா விரும்பியிருந்தால், எதற்காக மணக்க மறுத்திருக்கவேண்டும்…?” என்றாள் தேவகி அழுத்தமாக.

“உன் அக்காவை நீயே புரிந்துகொள்ளவில்லையே தேவகி… உன் அப்பாவிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது ஒருபக்கமாக இருந்தாலும், தன் சகோதரர்களுக்காகத் தன்னையே அழித்துக்கொண்டிருப்பவள், தன் உயிருடன் கலந்த எனக்காகத் தன் உயிரையும் தருவாளேயன்றி, என் வாழ்வைக் கேள்விக்குறியாக்க அவள் ஒருபோதும் சம்மதித்திருக்கமாட்டாள். பைத்தியக்காரி… அவள் இல்லையென்றால்தான் என் வாழ்க்கை அழிந்துபோகும் என்று அவள் எண்ணவில்லை… அப்போது அவள் மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது.” என்றபோது, மெல்லியதாகக் கமறினான். உடனே, இருமி தன்னைச் சமப்படுத்தியவன்,

“ஐம் சாரி…” என்று அவசரமாக, மன்னிப்பு வேண்டியவாறு, விரைந்து பல்கணிக்குச் சென்றான். நீண்ட பெரிய மூச்சுக்களை எடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றான். அவனுடைய கரங்கள், பல்கணியின் இரும்புக்கம்பிகளைப் பற்றி முறுக்கின.

அவனால், அவனையே கட்டுப்படுத்த முடியாமல் திணறினான். உலகின் மிகப்பெரும் பணக்காரனின் ஒரே ஒரு மகன், கனடாவின் லீடிங் வழக்கறிஞர் என்று பெயர் பெற்றவன், அத்தனை பிரச்சனைகளையும், கை சொடுக்குவதற்குள்ளாக, சுழியோடி வெளியே வரக்கூடிய ஆற்றல் பெற்றவன், முதன் முறையாக, ஒரு பெண்ணுக்காக, கலங்கி அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல், தவித்துக்கொண்டிருந்தான்.

அடுத்து என்ன செய்யவேண்டும் என்று கூட அவனுக்குப் புரியவில்லை. அந்த மைனஸ் பத்திலும், உடல் எல்லாம் நெருப்பால் எரிவது போலத் தவித்துப்போனான். தன் கோட்டைக் கழற்றி, அங்கே இருந்த இருக்கையில் எறிந்தான். அணிந்திருந்த ஷேர்ட்டின் இரண்டு மூன்று பட்டன்களைக் கழற்றிவிட்டு மீண்டும் பல்கணி கம்பிகளைப் பற்றினான்.

ஏதேதோ சிந்தனைகள் வந்து. அவனை வதைத்தன. மனக்கண்ணில், மீண்டும் மீண்டும் உயிரற்ற, சர்வமகியின் பிம்பம் வந்து வந்து போக,

“நோ…”என்றவாறு தன் தலையைப் பற்றிக்கொண்டான் அநேகாத்மன். “நோ… நோ… நோ…” என்று வெறிபிடித்தவன் போல அவன் கத்த, தேவகி பயத்துடன் வெளியே வந்தான்.

அந்தக் குளிரிலும், அவன் அணிந்திருந்த ஷேர்ட் தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. அவனுடைய பதட்டமும், இறுகிய முகமும், இவளுக்கு அச்சத்தைக் கொடுக்க,

“சார்…” என்றாள் அவள்.

வேகமாக அவள் புறம் திரும்பியவன்,

“தேவகி… நான் உன் அக்காவை மணமுடிக்கப் போகிறேன்…” என்றான் நேராக.

“சார்…” என்று அதிர்ந்தவளுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை.

“யெஸ்… ஐ ஆம் கோய்ங் டு… எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மகியை மணக்கப்போகிறேன்..” என்றான் உறுதியாக.

“சார் நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?” என்றாள் ஆவலும், சந்தேகமும் போட்டிப்போட.

“நான் செய்யாத எதையும் சொன்னது கிடையாது தேவகி…” என்றான் அவன் அழுத்தமாக.

வேகமாக அவனை நெருங்கி அவன் கரங்களைப் பற்றியவள்,

“சார்… நான்… நான் இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை… எனக்கு… எனக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை…” என்றாள் அழுகையினூடே.

“நீ எனக்கு ஒன்றே ஒன்றுதான் செய்யவேண்டும். உன் அக்காவைச் சம்மதிக்க வைக்கவேண்டும்… உன்னால் முடியுமா?”

“என்னால் முடியும் சார்… நிச்சயமாக முடியும்…” என்றாள் உறுதியுடன். ஆனால், அந்த உறுதிக்கு அர்த்தமில்லை என்பதை அப்போது அவள் புரிந்துகொள்ளவில்லை.

நிலவு 33

தேவகி சர்வமகியிடம் பக்குவமாக அநேகாத்மனின் எண்ணங்களைக் கூற, செய்தியைக் கேட்டதும் சர்வமகி ஒரேயடியாக மறுத்தாள்.

“நோ… என்னால் முடியாது…” என்றாள் பிடிவாதமாக.

சகோதரர்களின் கெஞ்சல், வேண்டுதல் எதுவுமே அவளிடம் பலிக்கவில்லை.

தேவகி செய்வதறியாது, கலக்கத்துடன் உதட்டைப் பிதுக்கிய தேவகி, அநேகாத்மனுடைய கைப்பேசிக்கு அழைத்தாள். அப்போது அவன், ஒரு முக்கிய கூட்டத்திலிருந்தவன். கைப்பேசி வர, அதில் தேவகியின் நம்பரைக் கண்டதும், உடனே அதை  உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி,

“வன் செக்… தேவகி…” என்றவன், கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்துத் தன் முன்னால் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்களைப் பார்த்து,

“சாரி காய்ஸ்… இந்த கூட்டத்தை தொடர்ந்து என்னால் நடத்த முடியாது… என்னுடைய  உதவியாளர் கேர்வின் தொடர்வான். எனக்கு ஒரு அவசர வேலை இருக்கிறது…|” என்றவன், அவர்களின் சம்மதத்தையும் பெறாது, பதிலையும் கேட்காது, கூட்டம் நடக்கும் அறையை விட்டு வெளியே போகக் கேர்வினோ, விழி பிதுங்க, சென்றுகொண்டிருந்த அநேகாத்மனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘அவன் தொடர்ந்து நடத்துவதா? இது என்ன ஒரு மில்லியன் இரண்டு மில்லியன், டாலர் பெறுமதியான டீலா, நூறு மில்லியன் டாலர் பெறுமதியான வியாபாரம். அதை விட, அந்த தொலைப்பேசி அழைப்பு முக்கியமா?’ என்று அவனால் மனதிற்குள் புலம்பத்தான் முடிந்தது. கூடவே தன்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த, பிரமுகர்களைக் கண்டதும், இவனுக்கு வயிற்றுக்குள் பிசைந்தது.

இவர்களை எப்படிச் சமாளிக்கப்போகிறேன். அந்த இடத்தில் அநேகாத்மன் என்றால், அவன் என்ன சொன்னாலும் மறு பேச்சுப் பேசாமல் பூம் பூம் மாடுபோலத் தலையாட்டுவார்கள். தன்னை என்ன பாடுபடுத்தப்போகிறார்களோ, என்று பயந்தவனாக, அநேகாத்மன் விட்டுச் சென்றதிலிருந்து தொடங்கினான் கேர்வின்.

அதே நேரம், கைப்பேசியுடன் தன் பிரத்தியேக அலுவலக அறைக்குள் நுழைந்த அநேகாத்மன், தன் கதிரையில் சாய்ந்து அமர்ந்தவாறு,

“இப்போது சொல்லு தேவகி… என்ன உன் அக்கா மறுத்துவிட்டாளா?” என்று கேட்டான் மெல்லிய நகைப்புடன்.

“சார்…” என்று திகைத்தாள் தேவகி.

“உன் அக்காவைப் பற்றி எனக்குத் தெரியாதா? உயிர் போனாலும், சம்மதிக்கமாட்டாள்…” என்றான் அவன் விரக்தியுடன்.

அப்படியானால் என்ன சார் செய்வது…” என்றாள் தெவகி வேதனையுடன். அவளைப் பொறுத்தவரையும், அவள் சகோதரி மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

“டோன்ட் வொரி… தேவகி… உன் அக்காவைச் சம்மதிக்கவைக்கும் வழி எனக்குத் தெரியும்…” என்றவனுடைய முகத்தில், அழுத்தமான புன்னகையொன்று வந்து அமர்ந்து கொண்டது.

“எப்படி சார்…” என்றாள் தேவகி ஆவலுடன்.

“வெய்ட் அன்ட் சீ…” என்றவன், தன் கைப்பேசியை அணைத்து மேசையில் போட்டான். தன் இரு கரங்களையும் உயர்த்தித் தலையின் பின்புறமாகக் கட்டியவாறு, கால்மீது கால் போட்டுத் தலையைப் பின்புறமாகச் சரித்தவாறு யோசித்தான்.

சர்வமகியைப் பணத்தைக்காட்டியெல்லாம் சம்மதிக்கவைக்க முடியாது. பார்ப்பதற்கு அவள் பூப்போல மென்மையானவள்தான். ஆனால், மனதளவில் அவள் இரும்புக்கும் நிகரானவள். பணம் எல்லாம் அவளுக்கு வெறும் வெற்றுத்தாள்கள். அவளை ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும்தான் சம்மதிக்க வைக்கமுடியும். அது பாசம்.

முடிவு செய்தவன், சர்வமகியைத் தேடிக்கொண்டு அவள் வீட்டிற்கே சென்றான்.

அனைவரும் பாடசாலை சென்றிருந்ததால், சர்வமகிமட்டும்தான் தனித்திருந்தாள்.

இவன் வீட்டு மணியை அடிக்க, வந்து திறந்தவள். இவனைக் கண்டதும், ஒருகணம் அவள் முகத்தில் மலர்ச்சி தோன்றி மறைந்தது. அதனைக் கண்டும் காணாதவன் போல,

“கான் ஐ கம் இன்சைட்…” என்றான் அவள் முகத்திலிருந்து தன் விழிகளை அகற்றாமல்.

உடனே அவள் வழிவிட, இவன் உள்ளே வந்து, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, தன் கால்மீது கால்போட்டு, சர்வமகியையும் அமருமாறு பணிந்தான்.

மறுக்காமல் வந்தமர்ந்தாள் சர்வமகி.

அவளுடைய விழிகள் தவிப்புடனும், பதட்டத்துடனும் அநேகாத்மனை ஏறிட்டன. இப்போது என்ன குண்டைக் கொண்டுவந்திருக்கிறான் என்பதை அவள் ஓரளவு யூகித்திருந்தாள்.

அநேகாத்மனோ, தான் சொல்ல வந்ததை மறந்து ஒரு கணம் சர்வமகியை விழி மூடாமல் பார்த்தான்.  எங்கோ கிளம்பியிருந்தாள் போலும்.  நீண்ட இளஞ்சிவப்பு நிறத்தில் பாவாடையும். வெண்ணிற மேல் சட்டையும் அணிந்திருந்தவளின் அழகு பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை.

“வெல்… இப்போது எப்படியிருக்கிறது?” என்றான் அவன் கனிவுடன்.

“இப்போ பரவாயில்லை…” என்றாள் அவள் ஒற்றைச் சொல்லாக. முன்தினம் நடந்த சம்பவத்தை அவளால் சிறிதும் நம்பமுடியவில்லை. ஏனோ அவன் முகத்தைப் பார்த்துப் பேசும் தைரியம் அவளுக்கு வரவில்லை.

“என்ன முடிவு செய்திருக்கிறாய் சர்வமகி…” என்றான் அநேகாத்மன் அதிகம் அலட்டாமல்.

அவன் எதைக் கேட்கிறான் என்பது அவளுக்கு உடனே புரிந்தது. தான் மறுத்ததும், அப்படியே அவன் விட்டுவிடமாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்ததே. எப்படியும் அவளை, சம்மதிக்க வைக்காமல் அவன் ஓயமாட்டான் என்பதும் அவள் அறிந்ததே. எதுவாக இருந்தாலும், அவனை மணப்பதில்லை என்கிற முடிவை அவள் மாற்றிக்கொள்வதாக இல்லை. அதனால் அவளுடைய விழிகள் தரையையே கூட்டிக்கொண்டிருக்க, பொறுமை இழந்தவனாக.

“லுக் அட் மை ஃபேஸ் சர்வமகி… உன்னிடம்தான் கேட்கிறேன்…” என்றான் அவன் அழுத்தத்துடன்.

ஒரு முடிவுக்கு வந்தவளாகப் பெருமூச்சொன்றை எடுத்து விட்டவள்.

“நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்… நான்… உங்களை… நோ… என்னால் முடியாது…”  என்று அவள் மறுக்க,

“ஏன்?” என்றான் ஒற்றைச் சொல்லாக.

“ஏனா… ஏன் என்றால், என் காலம் குறுகியது… என் மரணத்தின் வாசல் ஏற்கெனவே திறந்து கிடக்கிறது… இந்த நிலையில் என்னால் திருமணம் என்கிற ஒன்றை எப்படிச் சிந்திக்கமுடியும்… அது என்னால் முடியாது…” என்று ஒரே அடியாக மறுத்தாள் அவள்.

அவள் கூறிய மரணவாசல் என்கிற வாசகத்தைக் கேட்டதும், இவன் கடுமையிழந்தவனாக,

“உனக்கு வேண்டிய சிகிச்சை செய்தால், நீ நூறுவயது வரைக்கும் வாழலாம் மகிம்மா…” என்றான் அவன் தவிப்பாக.

“நூறு வயதா?” என்று ஆவலாகக் கேட்டவளின் முகத்தில், பின்பு வலி வந்து குடிகொண்டது.

“என்னம்மா…” என்றான் இவன் தவிப்புடன்.

“நூறு வயது என்பது எவ்வளவு நீண்ட காலம்… எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை ஆத்மன்… இன்னும் ஒரு ஐந்து வருடங்கள்…” அவள் முடிக்கவில்லை,

“ஸ்டாப் த நான்ஸன்ஸ்… சர்வமகி… நீ வாழத்தான் போகிறாய்… இன்னும் நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், ஏன் பூட்டப்பிள்ளைகளையும் கண்டுதான் போகப்போகிறாய்… என்னை மீறி உன் உயிர் போது… போகவும் விடமாட்டேன்…” என்று அவசரமாகக் கூறியவன், விரைந்து சென்று அவள் அருகே நெருங்கி அமர்ந்தான். அவள் வலக் கரத்தைத் தன் இரு கரங்களாலும் பற்றிப் பொத்தி, அக் கரத்தை உதட்டில் பொருத்தி விடுவித்தவன்,

“ப்ளீஸ்… சே யெஸ் மகிம்மா… நான் மனதார உன்னை மணக்க விரும்புகிறேன்…” என்றான் ஆவலாக.

“இல்லை அநேகாத்மன்… நீங்கள்…”

“ஆத்மன்… கால் மி ஆத்மன்…” என்றான் அவள் விழிகளை உற்றுப் பார்த்தவாறு.

தன் உதடுகளைக் கடித்து வேதனையை அடக்க முயன்றவள், முடியாமல், விழிகளில் கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது.

‘எனக்கு மட்டும் உங்களை மணக்க ஆசையில்லையா…’ என்று மனதிற்குள் நினைத்தவள், “இல்லை ஆத்மன்… என்னால் உங்கள் வாழ்க்கை பாழாகப்போவதை நிச்சயமாக நான் விரும்பமாட்டேன்… அதற்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன்…” என்றாள் அவள் பிடிவாதமாக.

“லுக் சர்வமகி… எல்லோரும் எப்போதோ போகத்தான் போகிறோம்… ஒரு வேளை உனக்கு முன்பாக நான்…” என்பதற்குள், பதட்டமாகத் தன் தலையை அங்கும் இங்கும் ஆட்டிப் பேசவிடாது செய்தவள், நடுங்கும் குரலில்,

“தயவு செய்து, இனிமேல் இப்படிப் பேசாதீர்கள்…” என்றாள் பெரும் வலியுடன். அவள் வலியைக் காணப் பிடிக்காதவனாக, இருக்கையை விட்டு எழுந்து வேகமாக அவளை நெருங்கி, இழுத்து தன்னோடு அணைத்தவன்,

“இல்லை… இனி இப்படிப் பேசமாட்டேன்… ஆனால் நீயும் புரிந்துகொள்ள வேண்டுமில்லையா… மகிம்மா… உனக்கு வலிப்பது போலத்தானே எனக்கும் வலிக்கும்… நீயே சொல் பிழைப்பதற்கு வழி இருக்கிறபோது, அதை மறுப்பது மடத்தனம் அல்லவா…” என்றான். வேகமாக அவன் அணைப்பிலிருந்து பிரிந்தவள்,

“ஒரு வேளை நான் பிழைக்காமல் போனால்…” என்று அவன் விழிகளை நேராகப் பார்த்தவாறு கேட்க, இவன் முகம் இரத்தப் பசையற்று வெளுத்தது.

சர்வமகியை உற்றுப் பார்த்தவன்.

“ஒரு வேளை… ஒரு வேளை உனக்கு ஏதாவது நடந்தால், நான்… நான்…” என்றவன், அதற்கு மேல் பேச முடியாது தவித்தான்.

எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைக்கவேண்டுமே என்கிற ஆவேசத்தில்,

“இதோ பார் மகிம்மா என்னை விடு… உன்னுடைய சகோதரர்களின் நிலையை எண்ணிப் பார்த்தாயா? உனக்கு ஒன்று என்றால், அவர்களின் நிலை என்ன? அவர்கள் நடுத்தெருவில்தானே நிற்பார்கள். உன்னைப் போலவே தேவகி குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்டாலும், அவளுக்கென்று ஒருவாழ்க்கை வேண்டாமா? உனக்குப் பிறகு அதைச் செய்ய யார் இருக்கிறார்கள்…” என்றபோது, அவள் உடலும் அந்த நிலையை நினைத்து நடுங்கித் தள்ளாடியது.

உடனே அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டவன் அவள் தோளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுத் தன்னோடு இறுக்கியவாறு,

“ஏதாவது குடிக்கக் கொண்டு வரட்டுமா?” என்றான் பதைப்புடன்.

“இல்லை. ஐ ஆம் ஓக்கே…” என்று அவள் கூற, தோளிலிருந்த கரம் கொண்டு அவளைத் திருப்பித் தன்னோடு அணைத்தவன், இதயம் முழுவதும் வலியுடன், அவள் தலை மீது தன் தலையைப் பதித்தான்.

“மகிம்மா… நீ இல்… நீ…” என்று அவள் இல்லாத நிலையைப் பேச முடியாது தவித்தவன், தன் உதட்டைக் கடித்துத் தன்னை அடக்கப் பெரும் பாடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றவன் “அதைக் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை மகிம்மா… அச்சமாக இருக்கிறது… வாழ்வில் முதன் முறையாக அச்சம் என்றால் என்ன என்பதை உணர்கிறேன்… கண்ணம்மா…” என்றவன் மெல்லியதாகச் சிரித்தான். அந்த சிரிப்பு அவனுடைய விரக்தியை அப்பட்டமாக வெளிக்காட்டியது.

“பட்… ஐ வில் பிராமிஸ் யு… உன்னைப் போல, உன் சகோதரர்களைக் காக்க என்னால் முடியும். உன் சகோதரர்களை என் சகோதரர்களாக முன்னுக்குக் கொண்டு வருவேன். உன் தந்தைக்கும் வாக்குக் கொடுத்திருக்கிறேன். தயவு செய்து மறுக்காதே… பிரதீபன் உனக்காகத்தான் திருடினான். ஆனாலும் திருட்டு திருட்டுதானே. அவனை நல்வழிப் படுத்திக் கொண்டு வர என்னால் முடியும் மகி. அவன் பிறப்பால் நல்லவன், சொல்லப்போனால் என்னை விட அவன் நல்லவன் மகிம்மா…” என்று வலியுடன் கூறியவன்,

“தயவு செய்து என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்…” என்றான் ஏக்கத்துடன். சர்வமகி அநேகாத்மனைப் பார்த்தாள்.

“ஆத்மன்… எனக்குப் பிறகு என் சகோதரர்களை, தேவகி பார்த்துக்கொள்வாள்… அவளுக்குத் துணையாக மாதவி இருக்கிறாள். என் சகோதரர்களை வைத்து, உங்கள் வாழ்வை சீரழிக்க நான் தயாராக இல்லை…” என்றாள் அவள் அதே உறுதியுடன்.

“டாமிட்… என் வாழ்க்கை சீரழியும் என்று யார் சொன்னார்கள். நீ என் அருகில் இல்லையென்றால்தான் என் வாழ்க்கை சீரழியும்…” என்றான் அவன் கோபமாக.

“உங்களுக்குப் புரியவில்லை ஆத்மன்… என்னை மணமுடித்தால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது? நோயாளி மனைவியைக் கட்டிக்கொண்டான் என்கிற பெயர்தான் உங்களுக்குக் கிடைக்கும்… அது மட்டுமல்ல, உங்கள் தந்தையைக் கொன்றவரின் மகளை மணம் முடித்தீர்கள் என்று தெரிந்தால், எத்தனை பெரிய அவமானம்… உங்களுக்கு அவமானம் வர நான் காரணமாக இருக்கமாட்டேன் ஆத்மன்” என்றாள் சர்வமகி தவிப்புடன்.

“எனக்கு அதைப்பற்றிய வருத்தம் கிடையாது சர்வமகி. நான் யாரைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. நீ என் அருகில் இருக்கவேண்டும்… அது மட்டும்தான் என் வேண்டுதல். இதோ பார்…” என்றவன் அவளுடைய முகத்தைத் தன் கரத்தால் பற்றித் தூக்கினான்.

“எனக்கு உன் மீது கோபம் இருந்தது நிஜம். உன் தந்தையால் என் வாழ்க்கைப் பாதை மாறிவிட்டது என்கிற ஆத்திரம் இருந்தது உண்மை. உன் தம்பியால் என் நகை பறிபோய்விட்டதே என்று உங்கள் மீது கொலைவெறி கொண்டதும் உண்மை. ஆனால், நீ… ஆபத்தில் இருக்கிறாய் என்பதை அறிந்ததும், இந்தக் கோபம், ஆத்திரம் எல்லாமே என்னை விட்டுப் போய்விட்டது… இப்போது என் சிந்தனை எண்ணம் முழுவதும், நீ… நீ மட்டும்தான். உன் ஆரோக்கியம் மட்டும்தான் என் குறிக்கோள். அதை மீறி எதையும் நான் எண்ணி வருந்தப் போவதில்லை…” என்று அவன் கூறியும் அவள் முகம் தெளியவில்லை.

கண்ணம்மா… நான் கோடிக்கணக்கான பணத்தில் புரண்டுகொண்டிருக்கிறேன்… அதைப் பயனுள்ளதாகச் செலவழிப்பதில் எனக்கு எந்தத் தடையும் கிடையாது. உன் சகோதரர்களுக்காகவாவது அவர்களுடைய வளமான எதிர்காலத்திற்காகவாவது, நீ என்னை மணக்கச் சம்மதிக்க வேண்டும்… டெல் மி யெஸ்…” என்றான்.

சர்வமகியோ, அவனை ஒரு கணம் வெறித்துப் பார்த்தாள். பின் அவனை விட்டு விலகியவள், சற்றுத் தள்ளி நின்று கொஞ்ச நேரம் அவனை விழி மூடாது பார்த்தாள்.

‘என்னைப் பற்றி என்ன நினைத்தான்… பணம் என்றதும், மாறுவேன் என்று எண்ணினானா… அவ்வளவுதானா இவன் என்னைப் புரிந்துகொண்டது?’ மனம் வலிக்க, வாசல் புறம் சென்று கதவைத் திறந்து அநேகாத்மனை  ஏறிட்டு

“நீங்கள் என்ன சொன்னாலும் நான் மாறப்போவதில்லை ஆத்மன். நான் முடிந்துபோன அத்தியாயம். முற்றுப் புள்ளி வைத்தாயிற்று… இனி கமா போட யோசிக்காதீர்கள்…” என்றாள் அவள் உறுதியுடன். ஒருகணம் அவளை வெறித்துப் பார்த்தவன், வேகமாக அவளை நெருங்கி, அவள் திறந்து வைத்த கதவை அடித்துச் சாற்றினான்.

“அத்தனை சுலபத்தில் என்னை வெளியேற்ற முடியாது சர்வமகி… நான் இன்னும் முடிக்கவில்லை.” என்றவன் அழுந்த சர்வமகியைப் பார்த்தான்.

“அதைக் கேட்க நான் தயாராக இல்லை ஆத்மன்… என் வாயால் வெளியே போ என்று உங்களிடம் கூற முடியாது… நீங்களாகவே…” என்றவள் மீண்டும் கதவைத் திறக்க,

எதைக் கூறினாலும், சர்வமகி தன்னை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட அநேகாத்மன், திறந்த கதவை மீண்டும் அடித்துச் சாற்ற, அதற்கு மேல், அவனுடன் தர்க்கம் புரிய முடியாமல், சர்வமகி உள்ளே திரும்பிச் செல்லத் தொடங்க, அவள் திரும்பிச் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அநேகாத்மன், கடைசியாகத் தன் கையில் வைத்திருந்த ட்ரம்ப் கார்டை அவளுக்கு முன்னால் போட்டான்.

கடைசியா அவன் கூறியதைக் கேட்டதும் பிரேக் போட்டதுபோல அப்படியே நின்றவள் அதிர்ச்சியுடன் திரும்பி அநேகாத்மனைப் பார்த்தாள்.

நிலவு 34

அவளை எப்படியாவது சம்மதிக்கவைக்கவேண்டும் என்கிற வெறி, அநேகாத்மனுக்கு எழ, உதட்டிலே மெல்லிய நகை தோன்ற, அதைக் கூறினான்.

“உன் அப்பா இறந்து 3 வருஷம் ஆகிவிட்டதல்லவா?| என்று அவன் வியந்த குரலில் கேட்க, உள்ளே செல்லத் தொடங்கியவள், தடைபோட்டதுபோல அப்படியே நின்றாள். அதிர்ச்சியும், கோபமும் போட்டிப்போடத் திரும்பிப் பார்த்தாள் சர்வமகி.

அழுத்தமான நடையுடன் அவளை நெருங்கியவன்,

“இந்த மூன்று வருடத்தில், உன்னுடைய தந்தையை நிரபராதி என்று நிரூபிக்க என்ன முயற்சி செய்தாய் மகி…” என்றவனின் குரலில் அதீத கிண்டல் வழிய, சர்வமகி அடிபட்ட பாவனையுடன் அநேகாத்மனை ஏறிட்டாள்.

இந்த மூன்று வருடத்தில் தந்தையை நிரபராதியென்று உலகுக்கு அறிவிக்க என்ன முயற்சி செய்தாள்? ஒன்றுமேயில்லையே… அவளால் ஒரு அடிகூட அதற்காக எடுத்து வைக்க முடியவில்லையே… எப்படி முயற்சிப்பாள்… அதற்குரிய பொருளாதார வசதிக்கு எங்கே போவாள். வீடு விற்று வந்த பணத்தில் கடனெல்லாம் கட்டி முடிய, அவள் கைக்கு வந்தது வெறும் இருபத்தைந்தாயிரம் மட்டும்தானே. அதைக் கொண்டு, தந்தைக்காகப் போராடினால், பின்னால், அவளை எதிர்பார்த்திருக்கும் சகோதரர்களின் நிலை? பிறகு பார்த்துக்கொள்ளலாம், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வருடங்கள் ஓடினதுதானே மிச்சம். அவளால் தந்தைக்கு ஆதரவாகத் தன் சுண்டுவிரலைக் கூட அசைக்கமுடியவில்லையே. தவிப்புடன் அநேகாத்மனை ஏறிட, அந்த வலியைப் புரிந்துகொண்டாலும், தன் முகத்தில் எவ்வித இளக்கத்தையும் அவன் காட்டவில்லை.

“ஏன் மகிம்மா… உன் தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இந்த மூன்று வருடங்களும் போதவில்லையா என்ன?” என்று கேட்டதுதான் தாமதம், சர்வமகியின் கண்களில் கண்ணீர் முனுக் என்று எட்டிப்பார்த்தது.

அதைக் கண்டதும், விரைந்து சென்ற அவளை அணைத்து ஆறுதல் படுத்தத் துடித்த மனதைச் சிரமப்பட்டு அடக்கியவன்,

“என்னம்மா… பதில் தெரியவில்லையா? இல்லை நான் கூறுவது புரியவில்லையா…” என்றவன், அவளை இன்னும் நெருங்கினான்.

“உன் தந்தை நிரபராதியென்று நிரூபிப்பதாக அன்று சவால்விட்டாயே, அதை எப்படி நிரூபிக்கப்போகிறாய்?” என்றான் அவன் மீண்டும். இப்போதும் சர்வமகி எதுவும் பேசாமல் அவனையே வெறித்துப் பார்த்தாள். அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவன்,

“நேரடியாகவே விஷயத்திற்கு வரட்டுமா? உன் தந்தையை நான் நிரபராதி என்று நிரூபிக்கிறேன்…” என்று அவன் தாமதிக்க, தன் காதுகளை நம்ப முடியாதவளாகத் திகைப்புடன் அநேகாத்மனைப் பார்த்தாள்.

“எ… என்ன சொன்னீர்கள்…” என்றாள் இன்னும் நம்பமுடியாதவளாக.

சர்வமகியை நெருங்கியவன், அவளைக் கனிவுடன் பார்த்தான். அவள் அரையில் தன் கரம் கொடுத்துத் தன்னோடு நெருக்கியவன்,

“உன் தந்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்க என்னால், என்னால் மட்டும்தான் முடியும்… ஐ வில் ஹெல்ப் யு…” என்றான் அவன் காதுகளில், அவளுடைய அந்த சுகந்தமான மணத்தை அவள் அறியாவண்ணம் ஆழ இழுத்துத் தன்னுள் நிரப்பித் தன்னைத் தொலைத்தவனாக, அவள் காது மடலைத் தன் மூக்கால் வருடினான். அந்த மென்மையில் புதைந்து புதைந்து கலந்திட வேண்டும் என்று உடலும், உள்ளமும் உருகின.

தொலைந்த மூன்று வருடங்களை எண்ணி வருந்தியவனாக, இனியும் அவளை விட்டுப் பிரிய முடியாது என்பதைப் புரிந்தவனாக,

“மகி… ஐ ப்ராமிஸ் யு… உன் அப்பா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நான் நிரூபிக்கிறேன்…” என்றான், தன் நாசியால், அவள் கன்னத்தை வருடியவாறு, அவள் மூக்கோடு மூக்கு உரசி நின்றான்.

“எ… எப்படி நிரூபிப்பீர்கள்…” என்றாள் சர்வமகி வியப்புடன். மெல்லியதாக நகைத்தவன்.

“உன் தந்தைக்கு எதிராக இருக்கக்கூடிய அத்தனை தடையங்களையும் அழிப்பது அத்தனை சிரமமா என்ன?” என்றான் தன் ஒற்றைப் புருவத்தை மேலேற்றி.

“நோ…” என்றவாறு அவனைத் தள்ளி விட்டுப் பிரிந்தவள். “இல்லை ஆத்மன்… இதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் தந்தையை எந்த ஆதாரங்களை வைத்துக் குற்றம் செய்தவர் என்று உறுதிசெய்தார்களோ, அதே ஆதாரத்தை வைத்து, அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கவேண்டும். அவரைக் குற்றவாளியாக்கிய ஆதாரங்களை அழித்து அவரை நிரபராதியாக்கினால், அது என் தந்தை குற்றம் செய்தவர் என்பதை ஒப்புக்கொண்டதற்குச் சமானம்… நான் அதற்குச் சம்மதிக்கமாட்டேன்…” என்றாள் சர்வமகி உறுதியாக.

“ஓக்கே… ஓக்கே மகிம்மா… அஸ் யு விஷ்… அதே ஆதாரத்தை வைத்து உனக்காக… நான் இந்தக் வழக்கை திரும்ப எடுத்து நடத்துகிறேன். நானே அனைத்து ஆதாரங்களையும், திரட்டி உன் தந்தைக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டை உடைத்தெறிகிறேன். உன் தந்தை நிரபராதி என்று உலகுக்கு அறிவிக்கிறேன்…” என்று அவன் உறுதியுடன் கூற, சர்வமகி ஆவலும், மகிழ்ச்சியுமாக அநேகாத்மைனைப் பார்த்தாள். பின் அவள் முகம் சோர,

“எப்படி… நீங்கள்தானே என் தந்தைக்கு எதிராக வாதாடினீர்கள்… இப்போது, அவருக்கு ஆதரவாக வாதாடினால், ஏற்றுக்கொள்வார்களா?” என்றாள் சோர்வுடன்.

அது என் பிரச்சனை மகி… உனக்காக, நான் எந்த எல்லைக்கும் போக நான் தயார்… அதற்கு நீ…” என்று தாமதித்தவன்,

“என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்?” என்றான் அநேகாத்மன்.

அப்போதுதான் அவள் விழித்துக்கொண்டாள். தந்தையைக் காட்டி அவளை மடக்க எண்ணி விட்டான். அவள் எப்படிச் சம்மதிப்பாள்… ஆனால் தந்தையின் பெயர்… எந்தத் தப்பும் செய்யாது கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அவரின் நிலை. அவருடைய களங்கம் துடைத்தால்தானே, அவளுடைய சகோதரர்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும். என்ன செய்யப்போகிறாள். தந்தையைக் குற்றவாளியல்ல என்பதை நிரூபிப்பதற்காக, அநேகாத்மனை பலிகடாவாக ஆக்கப்போகிறாளா. இல்லை, தந்தையின் குற்றம் அப்படியே இருக்கட்டும் என்று அநேகாத்மனின் நல்வாழ்விற்காக விலகப்போகிறாளா…? மீண்டும் மண்டையில் வண்டு குடையத் தொடங்க தவித்துப்போனாள் சர்வமகி.

கலக்கத்துடன் அநேகாத்மனைப் பார்க்க, அந்தப் பார்வையைச் சந்திக்க முடியாமல், இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் அநேகாத்மன். அவளை அப்படி ஒரு இக்கட்டில் நிறுத்திவிட்டோமே என்று மனம் அடித்துக்கொண்டது. ஆனால், அப்படியே அவன் விட்டுவிட்டால், சர்வமகியைத் தன்னவளாக்க முடியாதே. மருந்து கசக்கும் என்பதற்காகக் குடிக்காமல் இருக்கமுடியுமா?

அவள் கலங்குகிறாள் என்பதற்காக அவனால் தள்ளித்தான் நிற்கமுடியுமா? அதுவும் இத்தகைய நிலையில், ஒரு கணம் கூட அவனால் பிரிந்திருக்க முடியவில்லையே… எப்படி அவளை விட்டு நிரந்தரமாகப் பிரிவான். தன் அணைப்பை இறுக்கியவன்,

“ஜெஸ்ட் சே யெஸ்… ஐ வில் டேக் கெயர் ஒஃப் எவ்ரிதிங்… உன் சகோதரர்களையும் என் சகோதரர்களாகக் காப்பேன்… உன் தந்தையை நான் நிரபராதி என்று அறியச் செய்வேன்… ஆம் என்கிற ஒரு வார்த்தையை மட்டும் கூறு…” என்றவனின் தலை அவளது தலையில் பதியத் தன், வழிகளை மூடினான்,

“ஐ ஆம் சாரிப்பா… என் மகி எனக்கு வேண்டும். எனக்கே எனக்காக வேண்டும்… அவள் தந்தையை நிரபராதியாக்கினால்தான் அவள் எனக்குக் கிடைப்பாள் என்றால், அவருக்கு எதிராக இருக்கக் கூடிய அனைத்து, ஆவணங்களையும் அழிப்பேன். இதற்கு மகி சம்மதிக்கமாட்டாள்தான்… ஆனால், எனக்கு வேறு வழியில்லை. அவளுக்குத் தெரியாமலே, அத்தனையையும் அழித்து, அவள் தந்தையை நிரபராதி என்று இந்த உலகை நம்பவைப்பேன்… ஆனால் அதை அழித்தால், உங்கள் மரணத்திற்குக் காரணமான குற்றவாளி நிரபராதியாகிவிடுவான்… உங்கள் மரணத்திற்கான பதில் இல்லாது போகும்… பட்… தராசில் உங்களையும். என் மகியையும் நிறுத்தும்போது, அவளுடைய தட்டுத்தான்பா தாழ்ந்துபோகிறது… அவளுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்பா… அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்…” என்று அவன் மானசீகமாகத் தன் தந்தையிடம் மன்னிப்பு வேண்ட, அவன் மார்பிலே முகம் புதைந்திருந்தவள், அப்படியே இருந்தவாறு,

“என்னை மணந்தால், நீங்கள் இழப்பதுதான் அதிகம் ஆத்மன்…” என்றாள் கம்மிய குரலில்.

“இல்லைடா… நீ இல்லையென்றால் நான் அணைத்தும் இழந்தவனாவேன்…” என்றாள் அவளை இன்னும் இறுக அணைத்தவாறு.

“பரிதாபத்தில் எடுக்கும் முடிவு ஒருபோதும் ஜெயிப்பதில்லை…”

“பரிதாபம் என்று யார் சொன்னா… நீ எனக்கு வேண்டும். எனக்கே எனக்காக வேண்டும். என் அருகே எப்போதும் இருக்கவேண்டும்… என் மனைவியாக வேண்டும்… நீ என் மனைவி என்கிற உரிமை வேண்டும்… உன் சார்ந்த அனைத்தும் என்னதாக இருக்கவேண்டும்… அதனால் நம் வாழ்க்கை ஒரு போதும் தோற்காது மகிம்மா…” என்றான் தன் உதட்டை அவள் உச்சந்தலையில் பொருத்தி.

அவளோ, தன் விழிகளுக்குச் சற்று மேலாகத் தெரிந்த, அவனுடைய சட்டைப் பொத்தானைத் திருகியவாறு,

“இல்லை ஆத்மன்… என்னுடைய ஆயுள் மிகக் குறைவு… இன்றோ நாளையோ….” சொல்லி முடிக்கும் முன் அவளைத் தன்னிடமிருந்த பிரித்தவன்,

“டோன்ட்.. டோன்ட் சே எ வேர்ட்…. லிசின்… நீ எனக்குத்தான் மகிமா… நீ இன்னும் நூறு வருஷம் என்னோடு இருக்கப்போகிறாய்… அதை அந்தக் கடவுளால் கூட மாற்றமுடியாது…” என்றான் அனேகாதமன் வெறிகொண்டவன் போல. அவன் முகமும் கலங்கியிருந்தது.

“ஆத்மன்… பேசுவதற்கு நன்றாக இருக்கும்… ஆனால் வாழ்க்கைக்கு…. என்னால் உங்களுக்கு எந்த சுகமும் இருக்கப்போவதில்லை…” என்றாள் சர்வமகி வேகமாக.

“யார் சொன்னது… ஏன் இப்போத நீ என் கைவளைவில் இருக்கிறாயே.. இதை விட இன்பம் வேறு என்ன இருக்கமுடியும் சொல்… அதை விடு… லுக்… ஒருநாள் என்றாலும்… உன் கணவனாக, உனக்குரியவனாக நான் வாழவேண்டும்… அந்த வரத்தை நீ எனக்குத் தரமாட்டாயா?” என்றான் அநேகாத்மன் பெரும் ஏக்கமாக.

சர்வமகி திகைத்துப்போனாள்.

‘வரமா… வரமென்றா அவன் கேட்கிறான்… அவள் அணையும் சுடர் என்று தெரிந்தும், அவளை வரமாகக் கேட்கிறானா… அதிர்ந்துபோனாள் சர்வமகி.

“என்னால்… யோசிக்க முடியவில்லை ஆத்மன்…” என்றாள் சர்வமகி பெரும் சோர்வுடன். அவளுக்கு உடல் சோர்வை விட, சிந்தனையால் ஏற்பட்ட சோர்வே அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அநேகாத்மன், தன் அணைப்பை விடாமலே அங்கிருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்று அவளை இருத்தித் தானும் அருகே அமர்ந்தான்.

மீண்டும் அவளைத் தன் கைவளைவில் வைத்திருந்து, அவள் கரத்தைப் பற்றி, கரத்தின் மேற்புறத்தை பெரும் விரலால், வருடிக்கொடுத்தவாறு,

“சொய்ஸ் இஸ் யுவர்ஸ் மகி… உன் தந்தை நிரபராதியாகவேண்டுமானால், நீ என்னை மணக்கவேண்டும்… உன் தந்தை குற்றவாளியாகவே கனடா வரலாற்றில் எழுதப்படவேண்டுமா, இல்லை அவர் நிரபராதி என்கிற பெயரில் மக்களின் மனதில் இடம்பிடிக்கவேண்டுமா? என்பது, நீ சொல்லும் பதிலில்தான் இருக்கிறது. நீ என்னை மணக்கச் சம்மதித்தால், உடனேயே அதற்கான வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவேன்…” என்றவன், அவள் முகத்தைப் பற்றி, நெற்றியில் மெல்லிய முத்தத்தைப் பதித்து,

“இப்போது நான் புறப்படுகிறேன்… நன்றாக யோசித்து உன் முடிவைச் சொல்…” என்றவாறு, அவள் கன்னத்தை வருடிக் கொடுத்துவிட்டு எழுந்தான்.

நிலவு 35

சர்வமகி நீண்ட நேரமாக யோசித்தாள். அவளுக்கு ஆத்மன் கூறியதே திரும்பத் திரும்ப மனதில் ஓடியது. அவளுக்கு ஏதாவது நடந்தால், அவளுடைய சகோதரர்களைத் தேவகி பார்த்துக்கொள்வாள்தான். ஆனால் அவளால் இத்தனை பெரிய சுமையைத் தாங்க முடியுமா என்கிற ஐயம் இப்போது எழுந்தது. அதுவும் பிரதீபன் செய்த காரியத்தைக் கண்டபின், அந்த எண்ணம் ஆட்டம் கண்டது. நிச்சமாகத் தேவகியால் அவர்களைத் தனியாக வழி நடத்த முடியாது என்பதை அவள் தெளிவாகப் புரிந்துகொண்டாள். தேவகிக்கும் ஒரு வாழ்க்கை அமைந்தால், அவளை மணப்பவன், சங்கிலித்தொடராக இருக்கும் சகோதரர்களை ஏற்றுக்கொள்வானா என்பது அடுத்த கேள்வி. அதற்காகவே தேவகி மணம் முடிக்காமல் தனித்து இருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இத்தனை பெரிய சுமையை அவள் தலையில் கட்டிவிட்டுப் போவது எத்தனை பெரிய சுயநலம். நினைத்தபோதே அவளுடைய அடிவயிறு கலங்கியது. அநேகாதமன் நிச்சயமாக நல்ல ஒரு பாதுகாவலனாக மட்டுமன்றி, நல்ல ஒரு வழிகாட்டியாகவும் இருப்பான்.

அதுமட்டுமா அப்பாவை நிரபராதி என்று உலகுக்கு அறிவிக்க ஆவன செய்வேன் என்றானே…  எதை மறுத்தாலும், இதை அவளால் மறுக்க முடியாதே. இந்த வாய்ப்பை விட்டால், நிச்சயமாகத் தந்தை நிரபராதி என்பதை வெளி உலகுக்குக் கொண்டுவர அவளால் முடியாது. ஆனால் அதற்காக அவன் கேட்கும் விலை, அது அவனுடைய வாழ்க்கைக்கு ஊதிய சங்கல்லவா. தந்தைக்காக அநேகாத்மனை மணந்தால், அவள் உயிரோடு கலந்த அவனின் நிலை… தந்தைக்காக அநேகாத்மனை மணப்பதா, இல்லை ஆத்மனுக்காக தந்தை நிரபராதி என்பதை நிரூபிக்காமல் விடுவதா? கடவுளே நான் என்ன செய்வேன்…  இதில் எந்த முடிவை எடுப்பது? இரண்டு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்றால் எதை அவள் தேர்வுசெய்வாள்.

அவளை மணப்பதை வரமாகவல்லவா அநேகாத்மன் நினைக்கிறான். வரம் என்று கேட்பவனுக்கு என்ன சொல்லப்போகிறாள்… பெரிதும் தடுமாறிப்போனாள் சர்வமகி.

சர்வமகியின் குழப்ப நிலை அறிந்து, தேவகியும், மாதவியும், சர்வமகியிடம் பலவாறு பேசினர். வேறு வழியில்லாமல் தந்தைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்கிற காரணமே வலுப்பெற,  சர்வமகி அநேகாத்மனை மணக்கச் சம்மதித்தாள்.

செய்தி கேட்டதும் செய்த வேலையை விட்டுவிட்டு ஓடிவந்தான் அநேகாத்மன்.

கதவைத் திறந்த தேவகியைப் புறக்கணித்துவிட்டு, “மகி எங்கே…” என்றவாறு உள்ளே சென்றவன், அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்திருந்தவளை, அவசரமாக நெருங்கி குழந்தையைத் தூக்குவது போலத் தன் கரங்களில் ஏந்தியவன், பெரும் ஆரவார மகிழ்ச்சியுடன்  சழண்று, அவளைக் கீழே விடாமலே, அத்தனை மேலே தூக்கியும் கிட்டத்தட்ட தன் மூக்கின் அளவு மட்டுமே உயர்ந்திருந்தவளின் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தி,

“தாங்ஸ் மகிம்மா… தங்க் யு சோ மச்… நான்.. நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா? அப்படியே வாணத்தில் பறப்பதுபோல… ஐ ஆம் சோ ஹாப்பி” என்றான் முகம் முழுவதும் மலர்ச்சியில் மலர. கழுத்தின் வளைவில் மழிக்கப்படாத தாடி மீசையின் உரசலில் உடல் சிலிர்த்தவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில், எல்லையில்லா மகிழ்ச்சியின் புன்னகை.

சர்வமகியோ திடீர் என்று இவன் வந்து தன்னை இப்படித் தூக்குவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவன் ஆரவாரத்தில் உடல் சிலிர்த்தாலும், எங்கே விழுந்துவிடுமோ என்கிற அச்சத்தில், அவனுடைய வலுவான தோள்களைப் பற்றியவள், தன் கால்களை உதறி, இறங்க முயன்றவாறு,

“ஆத்மன்… என்ன இது… என்னைக் கீழே விடுங்கள்…” என்று திமிறியவளின் முகம் சிவந்துபோயிருக்க, அநேகாத்மனோ, சிவந்த அவள் முகத்தைவிட்டுத் தன் பார்வையை விலக்க முடியாதவனாக, அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய கன்னங்கள் இரண்டும் செம்மையைப் பூசிக்கொள்ள, நடுங்கிய உதடுகளை, முத்துப் பல்கொண்டு கடித்து அடக்க முயன்றிருந்தவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தெவிட்டவில்லை.

அன்று, சில நாட்களுக்கு முன்பு, அவள் மயங்கிக்கிடந்தபோது, அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டான். அப்போதும் அந்த மயக்கத்திலும் கூட, இப்படித்தானே அவள் முகம் சிவந்திருந்தது…’ தன் நிலை மறந்து, இடம் பொருள் ஏவல் மறந்து உலகம் மறந்திருந்தவனை, அவளுடைய கூந்தலிலிருந்து விழுந்த இரு நீர்த்துளிகள் அவன் நெற்றிப்பொட்டில் பட்டுத் தெறிக்க, திடுக்கிட்டுச் சுய நினைவுக்கு வந்தான் அந்தக் காதலன்.

மீண்டும் அந்த சிவந்த முகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற வெறி தோன்ற,

“எகெய்ன்…” என்றான் அவசரமாக. சர்வமகி புரியாமல் குழப்பத்துடன் அவனைப் பார்க்க,

“கொஞ்சத்துக்கு முன்னம் உன்னுடைய முகம் சிவந்திருந்தது மகிம்மா… ஐ வோன்ட் டு சீ தட் எகெய்ன்…:” என்றான் அதைப் பார்க்கும் பரபரப்பில். சத்தியமாக அவன் என்ன கேட்கிறான் என்று அவளுக்குப் புரியவேயில்லை.

“என் முகம் சிவந்ததா? என்று வியப்புடன் கெட்டவள், அப்போதுதான் தள்ளி நின்றிருந்த தேவகி ‘க்ளுக்’ என்று சிரிப்பதைக் கண்டதும், இவள் முறைத்தாள்.

“சாரிக்கா… என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை…” என்றாள் தேவகி இன்னும் நகைப்பை விடாமல்.

“என்னை விடச்சொல் தேவகி…” என்று சர்வமகி முறையிட.

“ஆளை விடு சாமி… நீயாச்சு உன் ஆளாச்சு… நான் கிளப்புகிறேன்… எனக்கு வேலையிருக்கிறது…” என்றவாறு வெளியேறியவளை, தன் உடல் முழுவதும் அவன் மீது அழுத்தமாகப் பதிவது கூட உணராமல் கை நீட்டி அவளைத் தடுக்க முயன்றவளாக,

“தேவகி… நில்…” என்றாள்.

அந்தோ பரிதாபம், தேவகி காற்றை விட வேகமாகப் பறந்துவிட, அவளுடைய கெஞ்சல் பயனற்றதாகப் போக, என்றும் இல்லாதவாறு அன்று என்னவோ அவனுடன் தனித்திருக்க முடியாது, இதயம் வேகமாகப் படபடக்க, அதை அடக்கும் வழி தெரியாது, தன் உதடுகளைக் கடித்தாள்.

திடீர் என்று ஏதோ ஒரு விதமாக மாறிய அவன் விழிகள் மொழியைப் புரிந்துகொண்டவளுக்கு, இவனோடு தனித்திருப்பது, பெரும் ஆபத்து என்பதை அறிந்தவளாக… கடித்த உதடுகளை விடாமலே, தன் கால்களை உதைந்தாள்.

அவனோ தன்னுடைய இறுகிய பிடியைச் சற்றும் இளக்கினான் இல்லை. அவளுடைய கடிபட்ட உதடுகளையே இமைக்காது பார்த்தவன்,

“அந்த உதடுகள் என்ன தப்பு செய்தன… இப்படித் தண்டிக்கிறாயே மகி…” என்று அவன் கிசுகிசுப்பாகக் கேட்க, அவனை முறைக்க முயன்று முடியாமல்,

“விடுங்கள் ஆத்மன்… என்ன இது…” என்றாள் அவள் சற்றுக் கோபத்துடன். அவனோ விடாமலே, அவளுடைய முகத்தில் தன் விழிகளை நிறுத்தியிருந்தான்.

“ஆத்மன்…” என்று உதறியவாறு அவன் சட்டையை இறுகிப் பிடிக்க, அவனுக்கோ ஒரு சிறுமி அவன் சட்டையைப் பிடித்த உணர்வைத்தான் கொடுத்தது.

“ஆத்மன் என்னைக் கீழே இறக்கப்போகிறீர்களா, இல்லையா?” என்று அவள் தன் கோபத்தைத் தேக்கிக் கேட்க, அவனோ, இல்லை என்பது போலத் தலையை ஆட்டி மறுத்தான்.

“ப்ளீஸ்… ஆத்மன்… என்னை இறக்கிவிடுங்கள்…” என்று மெதுவாக அவள் கெஞ்ச, அவளுடைய கெஞ்சலைப் பொறுக்காமல், அதற்கு மேல் அவளைச் சோதிக்க விரும்பாமல், மெதுவாக அவளை இறக்கிவிட்டான் அநேகாத்மன்.

இறக்கும்போது, அவளுடைய உடல் ஸ்பரிசத்தால், ஒரு வித போதைக்கு உட்பட்டவன், எங்கே தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்கிற பயத்தில், மீண்டும் அவளைத் தன் கைவளைவில் நிறுத்தியவாறு,

“நான் இத்தனை மகிழ்ச்சியாக ஒருபோதும் இருந்ததில்லை தெரியுமா? முதன் முதலாக எனக்கே எனக்கென்று ஒரு உறவு வரப்போகிறது…” என்றவனின் குரலில் கலப்படமில்லா பாசமும் காதலும் கொட்டிக் கிடக்க, சிரமப்பட்டு தன் இடையைச் சுற்றியிருந்த அவனுடைய கரத்தை விடுவித்தவள்,

“நான் உங்களுடன் சற்றுப் பேசவேண்டும்…” என்றாள் அவனுடைய விழிகளைப் பார்த்தவாறு.

அதுவரை நேரமும், சொர்க்கத்திலிருந்தவன், ஒருவாறு பூலோகத்திற்கு இறங்கிவந்து,

“தாராளமாகப் பேசலாமே…” என்றான் முகத்தின் மலர்ச்சி சற்றும் வாடாமல்.

“முன்னறையில் இருங்கள், இப்போது வந்துவிடுகிறேன்…” என்றவள், உள்ளே சென்று கையில் சிறு பையுடன் அவனுக்கு முன்புறமாக இருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்.

அநேகாத்மனின் விழிகளோ சர்வமகியின் முகத்தை விட்டு சிறிதும் அசையவில்லை. சர்வமகியோ கொஞ்ச நேரம் அமைதி காத்தாள்.

“என்னம்மா. எதையோ சொல்லவந்துவிட்டு அமைதியாக இருக்கிறாய்?” என்றான் அவன்.

அவளோ தன் கரத்திலிருந்த பையை அவனை நோக்கி நீட்ட, சாய்ந்து அமர்ந்திருந்தவன், புருவத்தில் எழுந்த முடிச்சுடன் ஒற்றைக்கரம் நீட்டி அதை வாங்கி, விழிகளாலேயே என்ன இது என்கிற கேள்வியைக் கெட்டான்.

“இது… இது என் தந்தையின் டயரி…” என்றதும், அநேகாத்மன் தன் முகம் மாறாதிருக்கப் பெரிதும் சிரமப்பட்டான். ஒரு வாறு தன்னை அடக்கியவன், அந்தப் பையைத் திறந்து அந்த குறிப்பேட்டை வெளியே எடுத்தான்.

“இதில் என் தந்தை உங்கள் தந்தையைப் பார்க்க வருவதற்கு முன்பு என்ன என்ன செய்தார் என்பது பற்றி எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது…”

“ம்கூம்…”

“இதில் என் தந்தை “டிஎன் இன்டஸ்ட்ரி என்கிற நிறுவனத்தின் எம் டியை ஒரு கிழமைக்கு முன்பு சந்திக்கச் சென்றிருக்கிறார்… தவிர அவர்கள் தான் என் தந்தையைச் சந்திக்கவும் விரும்பியிருக்கிறார்கள். அன்று நீங்கள் கூறும்போது டிஎன் என்கிற நிறுவனமே இல்லை என்று வாதாடினீர்கள்… ஆனால் அப்பா டயரியில் டிஎன் நிறுவனத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். பேர்சனல் டயரியில் பொய்யாக எழுதவேண்டிய அவசியம் கிடையாதே…

“ஓக்கே…”

“எல்லாம் டீட்டெய்லா இதில் இருக்கிறது… இதை நான் ஏன் உங்களிடம் கொடுக்கிறேன் என்றால், உண்மையாக ‘டிஎன்’ என்கிற நிறுவனம் இருந்ததா இல்லையா? அல்லது அப்படி ஒரு பொய்யான நிறுவனத்தைச் சொல்லி, யாரோ ஒருவர், ஏன் என் தந்தையைப் பணயமாக வைத்து உங்கள் தந்தையைக் கொன்றிருக்கிறாரா? அவன் தப்புவதற்காக எங்கள் தந்தையை மாட்டிவிட்டிருக்கிறானா. இதை நீங்கள் ஆராயவேண்டும்…” என்று கூற அநேகாத்மன் நம்பிக்கையில்லாமல்தான் அதைத் திறந்து பார்த்தான்.

அவள் சொல்வதுபோல, ஒரு மாதத்திற்கு முன்பே அவர் அந்த டிஎன் நிறுவன உரிமையாளரோடு பேசியிருக்கிறார். மறுநாள் அவன் தந்தையின் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு தந்தையுடன் பேசுவதற்கு அனுமதி பெற்றிருக்கிறார்…. அதைத் தொடர்ந்து, வெவ்வேறு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார்…

ஏன் தந்தையின் தொழிலுக்கு எதிரான நிறுவனம் ஒன்று பொய்யான பெயர் ஒன்றைக் கொடுத்து, நல்லவரான மகியின் தந்தையை மாட்டியிருக்கக் கூடாது? அவர் நல்லவர் என்தை அறிந்து தெரிந்ததால் தானே தந்தையைச் சென்று சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அப்படியானால் வாசுதேவனை ஒரு பகடைக்காயாக வைத்து யாராவது விளையாடியிருக்கிறார்களா? யார்?

சிறிய சந்தேகம் பெரிய சந்தேகமாக வலுத்தது. அவன் முகம் இறுகியது. அவன் முகம் சிரிப்பைத் தொலைத்தது. தன்னையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த சர்வமகியை ஏறிட்டவன்,

“முயற்சி செய்கிறேன் சர்வமகி… நீ சொல்வது போல, மீண்டும் இந்தக் கோணத்தில் முயற்சிசெய்து பார்க்கிறேன். தவறு செய்தவன் யாராக இருந்தாலும், எந்தக் கொம்பனாக இருந்தாலும், அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்…” என்று கூற,

“அப்போ என் தந்தை என்ன தவறு செய்தார் ஆத்மன்” என்றாள் அவள் வேதனையுடன்.

“மகி…” என்றவாறு அவளை நெருங்கி அமர்ந்தவன்,

“இது வரை நான் தவறு செய்தவன் என்றே எண்ணவில்லை மகிம்மா. உன் தந்தைக்கான ஆதாரங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. ஒரு வேளை, உன் தந்தை குற்றமற்றவராக இருந்தால், நிச்சயமாக அதை வெளிக்கொண்டு வருவேன்… இது உன் மீது ஆணை…” என்றவன், அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

“அத்மன்…”

“ம்…”

“எனக்கு… எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை… நீங்கள் எல்லோரும் என்னைக் கம்பல் பண்ணுவதால்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தேன்…”

“ம்ஹூ ம்?”

“உ… உங்களுக்கும் என்னைப் பிடிக்காது…”

“நான் அப்படிச் சொல்லவில்லையே சர்வமகி…” என்றான் அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தவாறு.

“நீங்கள் சொல்லாவிட்டாலும் எனக்குத் தெரியும் அநேகாத்மன்… அதை விளங்கிக்கொள்ளாத அளவு நான் முட்டாள் அல்லவே…” என்றாள் மெல்லிய குரலில்.

“சரி… அப்படியானால் உன்னை நான் ஏன் மணக்கவேண்டும்?” என்றான் அவன் கூர்மையாக. அவனுடைய மலர்ந்த முகம், அப்படியே வடிந்து, அதில் கோபம் அமர்ந்து கொண்டது. விழிகளில் கூர்மையுடன் கூடிய, எரிச்சல் பிறந்தது.

“என் மேல் ஏற்பட்ட பரிதாபமாக இருக்கலாம்… அல்லது இரக்கமாக இருக்கலாம்” என்றவள் அவனை உற்றுப் பார்த்தாள்.

“புள்ஷிட்… பரிதாபப் படுவதாக இருந்தால் நான் சிகிச்சைக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு விலகியிருப்பேனே… இத்தனை பெரிய பொறுப்பை நான் எடுக்கவேண்டிய அவசியம் என்ன? அதுவும் உன் தந்தையை நிரபராதியாக்குவதாக உனக்குக் கூறவேண்டிய தேவையென்ன” என்றான் அவன் சுள் என்று.

“அது… அதுதான் எனக்கும் புரியவில்லை… எதற்காக நீங்கள் இதையெல்லாம் எனக்குச் செய்வதாகக் கூறி மணக்க விரும்புகிறீர்கள்… என்னதான் முயன்றும் என்னால் அதற்கான விளக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை ஆத்மன்… ஒரு வேளை நீங்கள் என்னை விரும்புகிறீர்களா?” என்றாள் அவள் கூர்மையுடன். ஒரு கணம் அவளைப் பார்த்தவன், அதற்கு மேல் மறைக்க முடியாதவனாக,

“யெஸ்… டாமிட்… யெஸ் ஐ லவ் யு… கேட்டதா… நான் உன்னைக் காதலிக்கிறேன்… என் உயிருக்கும் மேலாகா… போதுமா விளக்கம்?” என்றான் அவன் தன்னை மறந்தவனாக.

சர்வமகி அதிர்ந்துபோனாள்.  விறுக் என்று இருக்கையை விட்டு எழுந்தவள்,

“நோ… நோ… நீங்கள் என்னை விரும்பவில்லை… நிச்சயமாக என்னை விரும்பவில்லை… இது… இது… நான் நம்பமா…” என்றவளை அவனது உதடுகள் மேலே பேச விடாது இடையில் நிறுத்தின

அவளுடன் கூடவே எழுந்தவன், அவள் என்ன என்பதை உணரும் முன்பாகவே, அவள் தோள்களைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து, அவளுடைய தேன் சிந்தும் இதழ்களை, வண்டாகிப்போன தன் உதடுகளால், அழுத்தமாக மூடிவிட்டிருந்தான்.

முதலில் திமிறியவள், பின் அவனுடைய இறுகிய பிடியில் விலக முடியாது, தவித்துப் பின் துடித்து, கரைந்து மங்கிக் கிறங்கி நின்றாள் அந்தப் பேதை.

நீண்ட நேர இதழ் ஒற்றலுக்குப் பின்பு, விடுவித்தவன், விழிகள் மூடித் தன்னை மறந்திருந்தவளின் அழகில் மீண்டும் நிலை கெட்டவனாக, மறுபடியும் அவள் இதழ்களை நாடினான்.

முதலில் மென்மையாகத் தொடர்ந்த முத்தம், தன்னைப் புரிய வைப்பதற்காகத் தொடர்ந்த யுத்தம், நேரம் செல்லச் செல்ல பல நாள் உணவில்லாது தவித்த  அவனுடைய உதடுகள் அறுசுவை உணவு கிடைத்ததுபோல வேகமாகத் தொடர்ந்து, உண்டு முடித்ததும் கிடைத்த பழரசம் போல ரசித்துச் சுவைத்து பின் உண்ட களைப்பில் தூங்குவதுபோல அவள் உதடுகளுடன் இளைப்பாறி நின்றன. அந்த மெல்லிய இதழ்களை விட்டுப் பிரிய மனமில்லாதவை போல மீண்டும் மீண்டும் இதழ்களைக் கவர முயன்றன. நீண்ட யுத்தத்தின் பின் மெல்லிய நகையுடன் விலகியவன், அதிர்ந்து நின்றிருந்தவளின் முகத்தைத் தன் கரத்தில் ஏந்தியவாறு,

“என்னைப் புரியவைக்க இதைவிட வேறு வழி தெரியவில்லை கண்ணம்மா…” என்றான், அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து.

விழிகளில் கண்ணீர் தேங்கியிருக்க, அவனுடைய அப்பழுக்கில்லா அன்பில் மயங்கி நின்றவளுக்கு, நாளைய அவன் நிலையை எண்ணிக் கலக்கம் ஏற்பட்டது.

“ஆத்மன்…” என்றாள் குரல் கம்ம.

“என்னடா…” என்றான் அவளுடைய விழிகளுடன் தன் வழிகளைக் கலக்கி.

“இந்த சத்திர சிகிச்சையில் நான் பிழைப்பேனா மாட்டேனா என்று எனக்குத் தெரியாது…” என்று அவள் சொல்ல அநேகாத்மன் விறுக் என்று அவளைத் தள்ளிவிட்டுக் கோபத்துடன் எரிப்பதுபோல பார்த்தான்.

ஆனாலும் எதுவும் பேசவில்லை. அவள் மேலே சொல்லட்டும் என்பதுபோல, பான்ட் பாக்கட்டிலிருந்த சிகரட் பெட்டியை வெளியே எடுத்தவனின் கரத்தில் மெல்லிய நடுக்கம். ஒரு சிகரட்டை எடுத்து, வாயில் பொருத்தியவன், லைட்டரைத் தேட, தன்னையும் அறியாமல் அவனை நெருங்கிய சர்வமகி, அவன் வாயிலிருந்த சிகரட்டைத் தன் கரத்தில் எடுத்து, அதை மடக்கிக் கசக்கியவாறு,

“நீங்கள்… எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை. எனக்குப் பிறகு என்னுடைய நினைவுகள் எல்லாவற்றையும் வழித்துத் துடைத்துவிட்டுப் புதிய வாழ்விற்குள் நுழையவேண்டும்… நீங்கள்… நீங்கள் அதைச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டவளை அவன் வெறித்துப் பார்த்தான்.

“லிசின் மகிம்மா… நான் சொல்வதைக் கவனமாகக் கேள்…” என்றவன் இன்னொரு சிகரட்டை வாயில் பொருத்த, அதையும் சர்வமகி தன் கரத்தில் எடுத்துக் கசக்க, அவளை ஒரு கணம் முறைத்தவன்,

“டாமிட்…” என்றவாறு ஆழ மூச்சு எடுத்து விட்டான். ‘நான் ஏற்கெனவே இதைப்பற்றிக் கூறியிருக்கிறேன்… என் வாழ்வில் திருமணம் என்பது ஒரு முறைதான்… அது ஒரு நாளோ, நூறு வருடமோ… எனக்குத் தெரியாது. என்று என் தாலி உன் கழுத்தில் ஏறுகிறதோ, அன்றிலிருந்து நீ மட்டும்தான் எனக்கானவள்… அதற்குப் பிறகு என் மனைவியாக என் அருகேயிருக்க யாருக்கும் உரிமை கிடையாது…’ சொல்லிவிடலாம்தான்…. ஆதற்குப் பிறகு…? அவளுடைய பிடிவாதம் தெரிந்தவனாயிற்றே…

இப்போது தந்தைக்காக இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவள், அதன் பின் ஒரேயடியாக மறுத்துவிடுவாள். அதை விட, என்றவன், மீண்டும் சிகரட்டை எடுத்து வாயில் வைக்க, இப்போதும் அதைப் பறித்துக் கசக்கிய சர்வமகியை எதுவும் செய்ய இயலாதவனாகப் பார்த்தவன்,

“லிசின் மகி… நடக்காததை எண்ணி வருந்துவதில் பயனில்லை… இதை விட வேறு பேசலாமே….” என்றான்.

“இல்லை… இதற்கு எனக்குப் பதில் தெரிந்தாகவேண்டும்… நீங்கள் இன்னொரு திருமணம் முடிப்பீர்கள் அல்லவா?” என்றாள் அவள் ஆவலாக.

‘இன் யுவர் ட்டீம்…’ என்று மனதிற்குள் சினந்தவன், உதட்டில் புன்னகையை மலரவிட்டவாறு,

“உன் ஆசைப்படியே… ‘தேவகிக்கு… நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து…’ திருமணம் முடித்துவிட்டால் போச்சு…” என்றான் இடையில் சொல்லாமல் முதல் கடை வரிகளை அழுத்தமாகச் சொல்லியவாறு.

“இடையில் என்ன முணுமுணுத்தீர்கள்?” என்றாள் சர்வமகி சந்தேகமாக.

“ஒன்றுமில்லை மகிம்மா… உன்னைப் போல ஒருத்தி கிடைக்கவேண்டுமே… அதைத்தான் சொன்னேன்…” என்றதும், சர்வமகியின் முகம் பிரகாசமாவதைக் கண்டவாறே, மீண்டும் ஒரு சிகரட்டை எடுக்க முயன்றவன், அவள் மலர்ச்சி மாறி, அங்கே சற்று அழுத்தம் பிறக்க, எடுத்ததை உள்ளே அழுத்திவிட்டு, சிகரட் பெட்டியை பான்ட் பாக்கட்டில் நுழைத்தான்.

மீண்டும் அவள் முகம் மலர,

“நன்றி ஆத்மன்…” என்றாள் நிஜமான மகிழ்வுடன். அவள் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு, உள்ளுக்குள் பிசைந்தது.

‘எப்படி… உன்னால் மட்டும் இத்தனை நல்லவளாக இருக்கமுடிகிறது… இந்த உலகத்தில் உன்னைப் பேல ஒருத்தி யாருக்காவது கிடைப்பாளா… உன்னை நான் எப்படி இழப்பேன்… அது என்னால் முடியுமா? அதுவும் உன்னைப் போன்ற ஒருத்தியைக் காதலித்து மணந்த பின், இன்னொரு பெண்ணின் சிந்தனைதான் எனக்கு வருமா? இதையேன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாய்?’ என்று தன்மனதோடு பேசியவனுக்கு இதயம் கனத்துப்போனது.

“ஆத்மன் எனக்குப் பிறகு….” என்று அவள் தொடங்க,

தானாக சிகரட்டைத் தேடிச் சென்ற தன் கரத்தை அடக்கியவாறு, “ஸ்டாப் இட் சர்வமகி… திரும்பத் திரும்ப உன் முடிவு நாளைக் குறிப்பிடாதே…” என்று சீறியவனை, அவள் லட்சியம் கொள்ளாது,

“தீ என்றால் நாக்கு வெந்துவிடாது ஆத்மன்…” என்றாள் அவள். சற்று நேரம் அவளை முறைத்துப் பார்த்தவன்,

“உண்மைதான்… ஆனால் மனம் வெந்துபோகிறதே…” என்றவன், அவளை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.

“காலம் முழுவதும்… இப்படியே, உன்னை அணைத்தவாறு, யாரும் இல்லா தனியிடத்தே, நீயும் நானுமாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது மகிம்மா…” என்றவன், ‘நீ இருக்கும் காலம்வரை, நானும் உன்கூட இருந்து, இறுதிக் காலம் வரை ஒன்றாகவே நாம் பயணிக்கவேண்டும் என்று உள்ளம் துடிக்கிறதடி…’  என்று மனதோடு கூறிக்கொண்டவனுக்கு இதயத்தில் இரத்தம் கசிந்தது. அவன் அணைப்பில் பாந்தமாக அடங்கியிருந்தவள்,

“ஆத்மன்… என் சகோதரர்களை நீங்கள் சரியான முறையில் வழி நடத்தவேண்டும்…” என்றாள் அவள். அவனோ இப்போது வேறு உலகில் பயணித்துக்கொண்டிருந்தான்.

“ம்…”

“நான் ஏற்கெனவே காப்பீடு செய்திருக்கிறேன். அந்தப் பணம் வரும்… அதை அவர்களுக்கு முறையாகப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும், அபிதனை நல்ல ஒரு குடும்பத்திடம் வளர்ப்பதற்குக் கொடுத்துவிடுங்கள்… அவன்… அவன் உங்கள் கண்காணிப்பிலிருந்தால் இன்னும் நல்லது…” என்றவள் உதட்டைக் கடித்தாள். மீண்டும் அவளைத் தன்னோடு இறுக அணைத்து விடுவித்தவன்,

“சர்வமகி… எப்போது உன் சகோதரர்கள் என் பொறுப்பு என்று நான் சொன்னேனோ, அன்றிலிருந்து அவர்களின் நல்லது, தீயது எல்லாவற்றிலும் எனக்குப் பங்கிருக்கிறது… அவர்கள் உனக்கு எப்படியோ, அப்படித்தான் எனக்கும். அதனால்… நீ தேவையற்றதை எண்ணி வருந்தாமல், இனி நடக்க இருப்பது நல்லதாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள். அது போதும் எனக்கு…” என்றான் அவன் அழுத்தமாக.

கொஞ்ச நேரம் தலையைக் குனிந்திருந்தவள், மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனிடம் அதை எப்படிச் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை.

“இன்னும் என்ன சர்வமகி…”

“இல்லை… திருமணம் முடித்த பிறகு நம்முடைய வாழ்க்கை எப்படி…” என்றவள் சற்றுத் தடுமாறினாள்.

அவள் எங்கே வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன்,

“இப்போது என்னுடைய எண்ணம் எல்லாம் உன்னுடைய சிகிச்சையில்தான் இருக்கிறது சர்வமகி. அதைத் தாண்டி எதையும் சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. அதனால் பயப்படாமல் நம் திருமணத்திற்குத் தயாராகு…” என்று அவன் கூற நிம்மதியுடன் தலையாட்டினாள் சர்வமகி.

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

3 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago