Categories: Ongoing Novel

நிலவே என்னிடம் நெருங்காதே 51/55

நிலவு 51

அவள் புறங்கரத்தில் அழுத்த முத்தம் பதித்தவன், பின் உள்ளம் கையில் தன் இதழ்களை வைத்து அழுத்த, அந்தக் கணம், அவள் விரல்களில் திடீர் என்று சூடு படர, அநேகாத்மன் விலுக் என்று நிமிர்ந்தான். அவள் முகத்தில் தன் கரத்தைப் பதித்துப் பரிசோதித்தான்.

அவளிடம் திடீர் என்று தோன்றிய சூடு காணாமல் போக, வேகமாக இருக்கையை விட்டு எழுந்தவன், சர்வமகியின் முகத்தைத் தன் கரத்தில் தாங்கியவனாக,

“ஹேய்… மகிம்மா… நீ வெட்கப்படுகிறாய்… நீ வெட்கப்படுகிறாய்…” என்று கிட்டத்தட்டக் கூச்சலிட்டவனின் விழிகளிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வடிந்து அவள் கன்னங்களில் விழ, அந்தக் கணம், அவள் விழிகளில் மெல்லிய அசைவு.

அவள் விழிகளின் மெல்லிய அசைவை உணர்ந்துகொண்ட அநேகாத்மன், நம்ப முடியாதவனாக மீண்டும் சர்வமகியின் முகத்தைப் பார்த்தான்.

இப்போது அங்கே எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஆனாலும், அவள் விரல்களில் அவன் முத்தமிட்டபோது, அவள் உடலில் திடீர் என்று தோன்றி மறைந்த வெம்மை, அவள் உள்ளுணர்வின் விழிப்பை அவனுக்குப் பறைசாற்ற, மீண்டும் அவசரமாக அவள் உள்ளங்கையைத் தன் உதட்டில் அழுந்தப் பொருத்தி, நீண்ட ஒரு முத்தத்தைப் பதித்தான்.

மறு கணம், அவள் உடலில் சூடு படிந்து விலகியது. இப்போது, அவள் முகத்திலும், மெல்லிய சிவப்பு படர்ந்து மறைய, கூடவே, விரல்களிலும் மெல்லிய அசைவு. அதை உணர்ந்து கொண்டவனாக, உடல் நடுங்க, உள்ளம் உருக, அருகேயிருந்த பெல்லை அழுத்தினான்.

அடுத்த நிமிடம் ஒரு தாதி உள்ளே வந்து நின்றாள். அவன் விஷயத்தைச் சொல்ல,

“உங்கள் பிரமையாக இருக்கும் மிஸ்டர் அநேகாத்மன்…” என்றாள் புன்னகையுடன்.

“பிரமையும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை… ப்ளீஸ் செக் ஹெர்… தரோளி… ஷி இஸ் வேக்கிங்… ஐ கான் ஃபீல் ஹெர்…” என்று அவன் கத்தினான். அவன் சத்தத்தில் நார்ஸ் சற்றுப் பயந்துதான் போனார்.

“ஓக்கே… ஓக்கே… கூல் டவுன்… ஐ செக் ஹர்…” என்றவள் மொனிட்டரை ஏறிட்டாள். மொனிட்டரில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

“நான் சொன்னேன் அல்லவா… அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை… மானிடரைப் பாருங்கள்…” என்று சிறு கோபத்துடன் அந்தத் தாதி கூறிவிட்டுச் செல்ல முற்பட,

“மகிம்மா… ஐ லவ்யு…” என்றவாறு மீண்டும், அவள் உள்ளங்கையில் தன் உதட்டைப் பதிக்க, திடீர் என்று மொனிட்டரில் சிறிய மாற்றம் தோன்றி மறைந்தது. அலட்சியமாகப் பார்த்த செவிலியரின் விழிகளிலும் ஆச்சரியம். மீண்டும் கூர்மையாகப் பார்த்தார்.

மீண்டும் மெல்லிய அசைவு. உடனேயே நேர்ஸ் வைத்தியரை அழைக்க அவரும் உடனே வந்துவிட்டார்.

நடந்த விஷயத்தைக் கூற, அவரும் சர்வமகியை நன்றாகப் பரிசோதித்தார். இப்போது சர்வமகியிடம் சற்றுப் பெரிய அசைவு வந்து மறைந்தது. அதைத் தொடர்ந்து வலிப்பு போல அவள் உடல் உதறத் தொடங்கியது.

அநேகாத்மன் உண்மையில் பயந்துபோனான்.

“டாக்டர் வட் இஸ் ஹப்பினிங் ஹியர்… அவளை என்ன செய்கிறீர்கள்… எதற்காக இப்படி அவள் உதறுகிறாள்…” என்று சத்தம் போட்டான்.

“நத்திங் மிஸ்டர் அநேகாத்மன். இப்போது நீங்கள் பதட்டப் பட்டீர்கள் என்றால் எங்களால் உங்கள் மனைவிக்கு ஒழுங்காக ட்ரீட்மன்ட் கொடுக்க முடியாது… உங்களுக்கு அமைதியாக இருக்க முடியவில்லை என்றால் வெளியே செல்லுங்கள்…” என்று கடுமையாகக் கூற அநேகாத்மன் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரப் போராட்டத்தின் பின் சர்வமகி அமைதியானாள். முகம் முழுவதும் வியர்வையுடன் எழுந்த டாக்டர் அநேகாத்மனின் அருகே வந்தார்.

அநேகாத்மனோ, உயிரைத் தொலைத்தவனாக, அந்தக் காட்சியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வைத்தியர் அருகே வந்ததைக் கூட உணரவில்லை.

“மிஸ்டர் அநேகாத்மன்… மிஸ்டர் அநேகாத்மன்…” என்று இருமுறை அழைத்த பின்புதான் அவன் சுயநினைவிற்கே வந்தான். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க,

“உங்கள் வேண்டுதல் வீண் போகவில்லை… உங்கள் மனைவி பேர்ஃபக்ட்லி ஆல் ரைட்… இனி சீக்கிரம் விழித்துக் கொள்வார்கள்… நாளைவரைக்கும் தீவிர கவனிப்பில் இருக்கட்டும். அதற்குப் பிறகும் அவர்களின் இதயத்துடிப்பு எல்லாம் நன்றாக இருந்தால் லைஃப் சப்போர்ட்டைக் எடுத்து விடலாம். அது வரை அவர்கள் இப்படியே இருக்கட்டும்” என்று புன்னகையுடன் கூற இவன் நம்ப மாட்டாதவனாக, வைத்தியரைப் பார்த்தான்.

“அப்போ… எதற்கு அவள் இப்படி… உ… உதறினாள்…” என்றாள் வெளிறிய முகத்துடன்.

“அதுதான் இயற்கை மிஸ்டர் அநேகாத்மன். உடம்பு தன்னைத்தானே ரீசெட் பண்ணுகிறது. அதன் பாதிப்புத்தான் இது… இனி எல்லாம் சரியாகிவிடும்…” என்று தட்டிக் கொடுக்க,

“ஓ காட்… எனக்கு… எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை… தாங்க் யு தாங்க் யு சோ மச்…” என்றவனின் விழிகள் கலங்கி வழிந்தன.

“டோன்ட் சே தாட் மிஸ்டர் அநேகாத்மன். சிகிச்சை செய்தது நாங்களாக இருந்தாலும், அவர்களை உயிரோடு மீட்டு வந்தது, நீங்கள்… நீங்கள் மட்டும்தான். உங்களைக் கணவனாக அடைய உங்கள் மனைவி மிகவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் மிஸ்டர் அநேகாத்மன்…” என்றார் வைத்தியர் பெருமையுடன்.

“நோ டாக்டர்… அவளை மனைவியாக அடைய நான்தான் மாபெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்…” என்றவன் வைத்தியரின் கரத்தைப் பற்றினான்.

“டாக்டர்… நான் உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டேன்… ஐ ஆம் சாரி எனக்கு என் உலகத்தையே திருப்பிக் கொடுத்திருக்கிறீர்கள்… அதற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்…” என்றான் கலங்கிய குரலில்.

“நோ மிஸ்டர் அநேகாத்மன். நான் என்னுடைய கடமையைத்தானே செய்தேன்… தவிர உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது…” என்றவர் அநேகாத்மனை ஏறிட்டார்.

“நான் ஒரு மருத்துவராக ஒன்று சொல்லலாமா?” என்றார் கனிவுடன்.

“சொல்லுங்கள் டாக்டர்…”

“ஒரு உயிரின் இழப்பால் எதுவுமே அழிந்துவிடுவதில்லை மிஸ்டர் அநேகாத்மன். வாழ்க்கையில் எதையும் ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். உங்கள் மனைவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால்… ஒரு வேளை… அவர்களுக்கு ஒன்று என்றால் எல்லாமே அழிந்துவிட்டது என்று நம்மை அழிக்க முயல்வது… நல்லதல்ல…” என்றவரை வேதனையுடன் பார்த்தான் அநேகாத்மன்.

“என் மனைவிக்கு ஏதாவது ஒன்று நடந்திருந்தால்… யாருடைய உலகம் அழியாவிட்டாலும், என்னுடைய உலகம் நிச்சயமாக அழிந்திருக்கும் டாக்டர்… அவள் இல்லாத வாழ்வில் எனக்கு மட்டும் என்ன இருக்கமுடியும்… அதன் பிறகு நான் உணர்ச்சியற்ற பிண்டம் மட்டும்தான்…” என்றவனை வேதனையுடன் பார்த்தார் டாக்டர்.

“உண்மையாக உங்களை நினைக்கும் போது ஆச்சரியமாகவும், அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது… இத்தனை அருமையான கணவனைப் பெற்ற உங்கள் மனைவி நிச்சயம் கொடுத்து வைத்தவர்தான்…”

“இல்லை டாக்டர்… என்னை இப்படி மாற்றியதே என் மனைவிதான்…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.

“நீங்கள் லாயராச்சே… பேசி ஜெயிக்க முடியுமா? வாழ்த்துக்கள்… மிஸ்டர் அநேகாத்மன்…” என்று கூறிய வைத்தியர் அவன் கரத்தை மீண்டும் ஒரு முறை பற்றிக் குலுக்கிவிட்டு விடைபெற்றார்.

அநேகாத்மன் எல்லையில்லா காதலுடன் தன் மனைவியை நெருங்கினான். அவள் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள்.

“மகிம்மா… என் மகிம்மா… மை ஏஞ்சல்… மை லவ்… தாங்கஸ்டி… நீ மீண்டும் என்னிடம் வந்ததற்கு நன்றிம்மா…” என்றவன் அவள் தலை முதல், பாதம் வரை அளவில்லா காதலுடன் வருடிக் கொடுக்க, அவன் மனையாளின் உடலில் வெம்மை படர்ந்து மறைய, இவன் முகத்தில் அளவில்லா நிம்மதியும், மகிழ்ச்சியும் படர்ந்தது.

மறு நாள் அநேகாத்மன் இருக்கையில் சாய்ந்தமர்ந்திருந்தான். அவனுடைய கை சர்வமகியின் கரத்தைப் பற்றிக்கொண்டே இருந்தது.

ஏதோ ஒரு சக்தி அவனை உந்த விழிகளை மூடியிருந்தவன் திறந்து, சர்வமகியின் முகத்தைப் பார்த்தான். பார்த்தவன் திடுக்கிட்டான்.

அவள் விழி மலர்த்தி அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். வேகமாக அவள் புறம் குனிந்தவன் அவள் முடியற்று இருந்த தலையை வருடிக் கொடுத்தவாறு,

“கண்ணம்மா… யு ஆர் சேஃப்… நவ்… டூ யு ஹியர் மி…? யு ஆர் சேஃப்… உனக்கு ஒன்றுமில்லை…” என்று தவிப்புடன் கூறியவன் அது வரை நேரமும் அடக்கிவைத்திருந்த தவிப்புக் கரைந்து போக அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கதறினான்.

“நான் எப்படியெல்லாம் பயந்துபோனேன் தெரியுமா… என் உயிரே போய்விட்டது கண்ணம்மா… எங்கே நான் உன்னை முழுதாக இழந்துவிடுவேனோ என்று எப்படித் தவித்துப் போனேன் தெரியுமா… தாங்க் காட்… நீ என்னிடம் வந்துவிட்டாய்… நான் என்ன தவறு செய்தாலும், அதற்குத் தண்டனையாக எதை வேண்டுமானாலும் கொடு… என்னைக் கொல்லவேண்டுமானாலும் கொல்லு… ஆனால்… இப்படி வேண்டாம்டி… என்னால் உன்னை இப்படிப் பார்க்க முடியாது… இந்த வேதனை ஏழு ஜென்மத்திற்கும் போதும்… உயிரோடே என்னை எரித்துவிட்டாய் கண்ணம்மா…” என்றவன் எழுந்து, தன் கண்களில் வழிந்த கண்ணீரைக் கூடத் துடைக்காமல், டியூபால் மூடியிருந்த இடங்கள் தவிர முகத்தின் மற்றைய எல்லா இடங்களிலும் தன்னையும் மறந்து முத்தத்தால் அபிஷேகம் செய்தான். இறுதியில் அவள் உதட்டின் பக்கத்தில் தன் உதட்டைப் பொருத்தி விடுவித்தவனின் முகத்தில் இப்போது தெழிவு பிறந்திருந்தது.

அவள் விழிகளிலும், கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, தான் அழுவதால்தான் அவளும் அழுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன், வேகமாகத் தன் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கரங்களால் அழுந்தத் துடைத்து எடுத்தவன், சிரமப்பட்டு உதட்டில் புன்னகையைத் தேக்கி,

“ஷ்… நான்… அழவில்லைம்மா… சும்மா… இப்போ பார்… ஐ ஆம் ஓக்கே…” என்றவன், பின் அவள் கண்களையும் துடைத்து, “இனி இந்த விழிகளிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரக்கூடாது… அப்படி வந்தால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது…” என்று அவன் மிரட்டுவது போலக் கூறினாலும், இறுதியில் அவனுடைய உதடுகளும் அழுகையில் நடுங்கத்தான் செய்தன.

நிலவு 52

அடுத்து காரியங்கள் கட கட என்று நடந்தது. வைத்தியர் வந்தார் பரிசோதித்தார். லைஃப் சப்போர்ட் நீக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சர்வமகி எல்லோரையும் அடையாளம் காணச் சிரமப்பட்டாள்.

வைத்தியர் அது சாதாரணம் விரைவாகப் பழைய நிலைக்கு வந்துவிடுவார் என்று கூறிவிட்டார்.

ஐசியுவில் இருந்தவளை சாதாரண வோர்டிற்கு மாற்றினார்கள். அநேகாத்மன் பிடிவாதமாக சர்வமகிக்கு வேண்டிய சேவைகளைத் தானே செய்தான். அவளைத் தன் மீது சாய்த்து மெதுவாக நடத்திக் கூட்டிச் செல்வதிலிருந்து, அவளைக் கழிவறை அழைத்துச் செல்வது வரை அவனே செய்தான்.

சர்வமகி மெது மெதுவாகத் தன்னிலை பெற்று எல்லோரையும் புரிந்துகொள்ளத் தொடங்கினாள். யாரைப் புரிந்துகொள்ளாவிட்டாலும், அநேகாத்மனை உடனேயே புரிந்துகொண்டாள். தன் கணவன் என்பது வரை நன்றாகத் தெரிந்தது. தன் சகோதரர்களையும் இனம் கண்டுகொண்டாள். ஆனால் சம்பவங்கள்தான் அவளுக்குத் தெளிவாக நினைவு வரவில்லை.

அதுவும் விரைவாகச் சரிவந்துவிடும் என்று வைத்தியர் சொன்னதால் இவர்கள் அமைதி காத்தனர். சர்வமகி ஓரளவு திடம் பெறக் கிட்டத்தட்ட இரண்டு கிழமைகள் எடுத்தன. அந்த இரு கிழமைகளும், அநேகாத்மன் சர்வமகியே கதியென்று இருந்தான்.

அதன் பின், சர்வமகி ஓரளவு திடம் பெற்றதும் தேவகியிடம் சற்று நேரத்திற்கு சர்வமகியை ஒப்படைத்து விட்டுக் கொஞ்ச நேரம் வீட்டிற்குச் சென்று வந்தான் அநேகாத்மன். அதுவும் இரண்டு மணி நேரங்கள் மட்டும்தான். அந்த இரண்டு மணி நேரங்களில் மீண்டும் சர்வமகியைக் காணும்வரை இவன் நிலை பரிதாபமாக இருக்கும்.

அன்றும் அப்படித்தான், சர்வமகியை தேவகியிடம் ஒப்படைத்துவிட்டுப் பல முறை கவனம் என்று எச்சரித்து விட்டுத் தன்னைத் தொடர்ந்து வந்த பாதுகாவலர்களைச் சர்வமகிக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டளையிட்டு விட்டு வெளியே வந்தவனின் கைப்பேசியில் யாரோ அழைத்தனர்.

சர்வமகியின் நினைவிலேயே சென்றுகொண்டிருந்தவன், அழைத்தது யார் என்று கவனிக்காமல் கைப்பேசியை எடுத்துக் காதில் பொருத்த, மறுபக்கம் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

இவன் இரு முறை ஹலோ என்று அழைத்துப் பார்த்தும் மறு முறை எதுவும் கூறாமல் இருக்க எரிச்சலுடன் அதை அணைத்து விட்டுத் தன் எலக்ட்ரிக் காரில் ஏறினான். ஏறிக் காரை உயிர்ப்பித்து பிரதான பாதையை அடைந்தவன், அடுத்து, ஃப்ரீ வே 401 எக்சிட் எடுத்துக் காரை 120 KM/hr இல் தன் வீடு நோக்கிச் செலுத்தினான். மீண்டும் அவனுக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.

அவனுடைய கைப்பேசி தானாகக் காரில் உள்ள ப்ளு டூத்துடன் இணைய, இவன் ஹலோ என்றான்.

மீண்டும் அமைதி. பின் “ஹாய்… அநேகாத்மன்… இட்ஸ் மி…” என்றான் மறுபக்கமிருந்தவன். அந்தக் குரலை உடனே இனம் கண்டுகொண்டான் அநேகாத்மன்.

“ஹேய்… தீரன்… ஹவ் ஆர் யு…”

“ஐ ஆம் குட்… வட் எபவுட் யூ யங் மான்…” என்றார் அந்தத் தீரன் சற்றுக் கிண்டலாக.

“எனக்கென்ன… ஐ ஆம் சோ ஹப்பி… அதுதான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நீ ஜெயிலுக்குப் போகப்போகிறாயே…?” என்று நக்கலாகக் கூறினான் அநேகாத்மன். மறு புறம் சற்று அமைதி காக்க.

“ஆர் யு தெயர்.. மிஸ்டர் தீரன்…”

“யெஸ்… யங் மான்… உன்னை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 24 மணி நேரத்தில் வாசுதேவன் குற்றவாளி அல்ல என்பதை உலகறிய செய்து விட்டாயே…”

“ஓ… தாங்க் யு மிஸ்டர் தீரன்… என்னை அதிகமாகப் புகழாதீர்கள்… புகழ்ச்சி எனக்குப் பிடிக்காதே…” என்றான் அநேகாத்மன் அதே கிண்டல் சற்றும் குறையாமல்.

“ஆனால் ஒரு தப்பு செய்துவிட்டாய்…”

“அப்படியா… என்ன மிஸ்டர் தீரன்…”

“என்னைப் பற்றி முழுவதும் தெரியாமல் களத்தில் இறங்கிவிட்டாய்…”

“இஸ் இட்…” என்றவன் மெல்லியதாக நகைக்க,

“நகைக்கிறாயா…? நன்றாக நகைத்துக்கொள். என்னைப் பற்றிய மூழு செய்தியையும் பரப்பிவிட்டாய் அல்லவா? என் பின் புலம், நான் செய்யாத கொலை, செய்யாத தப்பு இவற்றைக் கூட நான் செய்ததாக உலகம் முழுதும் நம்பும்படி அறிவித்துவிட்டாயே…” என்றவரின் குரலில் அடக்கிய கோபம் இருக்க,

“யெஸ் மிஸ்டர் தீரன். நீங்கள் செய்த கொலைகள், செய்வித்த கொலைகள், இந்த நிலைக்கு வருவதற்கு எதையெல்லாம் மிதித்து ஏறி வந்தீர்கள்… என் மாமனார் வாசுதேவனை எப்படிச் சிக்க வைத்தீர்கள்… உங்கள் தாய் நாட்டில் நீங்கள் செய்த மன்னிக்க முடியா குற்றங்கள், கூடவே, நீங்கள் செய்து வந்த பாலியல் குற்றங்கள்… அனைத்தையும் உலகத்தில் உள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் பிரசுரிக்குமாறு செய்துவிட்டேன்… என்ன உண்மையில் நீங்கள் பாலியல் குற்றங்கள் செய்யவில்லைதான்… ஆனால் உங்கள் மீது கொலைக் குற்றத்துடன் சேர்த்து இதையும் சேர்த்துப் போட்டால் கொஞ்சம் தூக்கலாகச் சுவாரசியமாக இருக்குமே என்று, கொஞ்சமாகப் பணத்தைச் செலவழித்தேன்… சும்மா சொல்லக் கூடாது, உங்கள் செயலாளர் ஷெரோன்… கோடு தான் போட்டேன்… அவள் ரோடே போட்டு விட்டாள்… கொடுத்த பணத்திற்கு மேலாகவே நடித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்… ஆனாலும் நீங்கள் எனக்கு நன்றி சொல்லவேண்டும். ஏன் என்றால் இப்போது நீங்கள் உலகப் புகழ் பெற்றிருப்பதற்குக் காரணம் நான்தான்…” என்று கிண்டலாகக் கூற சற்று நேரம் அமைதி காத்த தீரன் பின்,

“தவறு செய்துவிட்டாய் அநேகாத்மன்…” என்று தீரன் மறுபக்கம் சீற,

“யார் நானா… ஹா ஹா… என்ன தைரியம் இருந்தால் என் தந்தையைக் கொன்றிருப்பாய்… எங்கள் மீது கைவைத்தால் என்னவாகும் என்று உனக்குத் தெரியவேண்டாம்… உன் கூட்டாளி நடராஜனுக்கு வைத்துச் செய்தது போல உனக்கும் செய்திருக்கவேண்டும்… பட்… நீ அத்தனை சுலபத்தில் சாகக் கூடாது… அணு அணுவாகச் சித்திரவதைப் பட்டுச் சாகவேண்டும் தீரன்… அதனால்தான் நீ செய்த பழி, செய்யாத பழி அனைத்தையும் உன் தலையில் போட்டேன்… இனி காலம் முழுவதும் நீ சிறையில்   இருக்க வேண்டியதுதான்… எனக்கு காவல்துறையில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள்… நீ அங்கே கழிக்கும் ஒவ்வொரு கணமும் நீ நரகத்தை அனுபவிக்கவேண்டும்…” என்றான் அநேகாத்மன் அடங்கிய சீற்றத்துடன்.

“எனக்குத் தெரியும்… நான் எச்சரித்தும்… நீ அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டாய் அல்லவா… அதற்கு நீ அனுபவிக்க வேண்டாம்… ஆ… நான் ஒன்று கேட்க மறந்துவிட்டேனே… உன்னுடைய மனைவி எப்படி இருக்கிறாள் அநேகாத்மன்? அவள் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டேனே…” என்றதும் எந்த வேகத்தில் காரை ஓட்டினானோ, அதே வேகத்தில் தன் காரை ஒரு ஓரமாக தடையை அழுத்தி நிறுத்தினான் அநேகாத்மன். அவன் நிறுத்திய வேகத்தில் கார் பெரும் ஓசையை எழுப்பி நின்றது.

“ஹேய் பார்த்து மான்… உன் உயிர் எனக்கு மிக முக்கியம்…” என்ற அவனின் கிண்டலில் இவன் பல்லைக் கடித்து,

“என்ன உளறுகிறாய்?” என்று அநேகாத்மன் சீற. மறு பக்கம் பெரும் சிரிப்புக் குரல் கேட்டது. அடுத்து,

“ஹாவ் எ குட் ஜேர்னி… மை போய்… வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்” என்று கூறிய தீரன் தன் தொலைப்பேசியை வைக்க, இவன் எதுவும் செய்ய முடியாது அதிர்ந்து போய் அப்படியே சிலையென நின்றான்.

திடீர் என்று இவனருகே பலத்த சத்தத்துடன் ஒரு கார் செல்ல சுய நினைவுக்கு வந்தவன், தீரனின் எச்சரிக்கை புரிய உள்ளமும் உடலும் பதறத் தன் காரை மீண்டும் வேகமாக எடுத்து மருத்துவமனை நோக்கிச் செலுத்தினான். செல்லும் போதே, “கால் விக்டர்” என்று தன் காருக்கு கட்டளை இட, அடுத்த நிமிடம், அவனுடைய நண்பர் பொலிஸ் அதிகாரி விக்டருக்கு அழைப்பு சென்றது.

மறு கணம் அவர் எடுக்க,

“விக்டர் ஐ நீட் யுவர் ஹெல்ப்…” என்றவன் நடந்ததைக் கூறி, ஏற்கெனவே சர்வமகிக்கு என்னுடைய பாதுகாவலர்களை அவளுக்குத் துணையாக அங்கே விட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன்… இருந்தாலும், அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது…” என்று  இவன் பதறியவாறு கூற,

“டோன்ட் வொரி நேகன்… நான் இப்போதே மருத்துவமனைக்குச் செல்கிறேன்…” என்று அவர் வாக்குக் கொடுக்க, இவன் நிம்மதியில்லாதவனாகவே, தன் காரின் வேகத்தைக் கூட்டினான்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. அவனுடைய வேகத்திற்கு இணையாக வந்த இன்னொரு காரின் கண்ணாடி கீழே இறங்கி, அதிலிருந்து துப்பாக்கி ஒன்று அவனை நோக்கி நீண்டது.

சர்வமகியை எண்ணிப் பதறிக்கொண்டு சென்றவனுக்கு, தன்னருகே கார் வந்ததையோ, இல்லை தன்னை நோக்கி துப்பாக்கி நீண்டதையோ இவன் சிறிதும் கவனிக்கவில்லை. திடீர் என்று ஒரு குண்டு இவன் கார் கண்ணடியில் படத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

புல்லட் ப்ரூஃப் கண்ணாடியில் குண்டு பட்டுக் கீழே விழுந்தது. அடுத்து இன்னொரு குண்டு மிண்டும் இவன் கண்ணடியைப் பதம் பார்க்க இப்போதும் எந்த சேதாரமும் இன்றி இவன் தப்பினான்.

அதே வேளை அவர்களின் அடுத்த நோக்கத்தை ஒரு விநாடியில் ஊகித்தவன், திடீர் என்று பிரேக் அடிக்க, அவர்களின் கார் முன்னால் செல்ல இவன் பின்னால் தங்கினான். இப்போது அவர்களின் வேகமும் குறைய, இவன் வேகம் எடுத்து அவர்களை நோக்கிப் பாய்ந்தான். மீண்டும் அவர்களின் துப்பாக்கி அநேகாத்மனின் கார் டயரைக் குறிபார்த்தது.

அடுத்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் கணப் பொழுதில் பரிந்துகொண்டவன், வேகமாகத் தன் காரை நிறுத்த முயல, அதற்கிடையில் அவர்களின் துப்பாக்கிக் குண்டு இவனுடைய கார் டயரில் குறி தப்பாமல் ஏற, பெரும் ஓசையுடன் கார் டயர் வெடிக்கக் கார் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கியது.

அநேகாத்மனுக்குக் கண் மண் தெரியாத கோபம் வர, “யாரிடம் வாலாட்ட நினைக்கிறீர்கள்…” என்று சீறியவன், தன் ஸ்டியரிங் வீலில் கவனத்தைச் செலுத்தியவாறு இறுக்கி அக்சிலேட்டரை அழுத்தினான்.

அவன் அழுத்திய வேகத்தில், அவனுடைய குண்டடிபட்ட முன்புறக் கார் சில்லுகள் புகையைக் கக்கியவாறு, அங்கும் இங்கும் திரும்பினாலும், ஸ்டியரிங் வீலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்தவாறு காரை நேராக்கியவன், அக்சிலேட்டரைப் பலமாக அழுத்தி, எதிரியின் காரை நோக்கிக் கடும் வேகமாகச் செலுத்தினான்.

அவனுடைய குறி தப்பாது, அநேகாத்மனின் கார், எதிரிகளின் காரின் பின்புறத்தைப் பலமாக அதுவும் வேகமாக இடிக்க, அநேகாத்மனின் இந்தத் திடீர் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத எதிரிகள் தமது காரை நிலை நிறுத்துவதற்குள்ளாக, இடித்த வேகத்தில், இரண்டு முறை சுழன்று  குட்டிக்கரணம் அடித்து, அங்கிருந்த ஐலன்ட் ஒன்றில் மோதுப்படது. அந்தக் கணம், அவர்களின் பெட்ரோல் டாங்க் பெரும் ஓசையுடன் வெடித்துச் சிதற, அவர்களுடைய காரில் நெருப்பு பக் எனப் பற்றிக்கொண்டது.

அநேகாத்மன் எவ்வளவோ முயன்று தடையை அழுத்தியும், அவனுடைய கார் அவன் பேச்சைக் கேட்காது, எரிந்துகொண்டிருந்த அந்தக் காரின் மீது மோதி, இரண்டு சுழன்று சுழன்றவாறு அரைக் கிலோமீட்டர் இழுத்துச் சென்று பிரண்டு தலைகீழாக நின்றது. இவை அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்துவிட்டிருந்தன.

அநேகாத்மனின் கார் அடிபட்ட வேகத்திலேயே காரின் நான்கு பக்கமும் இருந்த ’காற்றுப் பொதி’ (யசைடியப) வெடித்து அவன் அடிபடா வண்ணம் இறுகிப் பற்றிக்கொண்டதையும் அறியாது, “மகிம்மா…” என்ற முனங்கலுடன், அநேகாத்மன் தன் சுய நினைவை இழக்கத் தொடங்கினான்.

நிலவு 53

‘ஆத்மன்… என்ன செய்கிறீர்கள்… எழுந்திருங்கள்… உங்களுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்… எங்கே இருக்கிறீர்கள்… வேக்கப் ஆத்மன்…” என்று சர்வமகி அவனை எழுப்ப, சடார் என்று தன் விழிகளைத் திறந்தான் அநேகாத்மன்.

முதலில் மங்கலாகத் தெரிந்தது, பின் தெளிவாகத் தெரியத் தொடங்க, தான் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அதே நேரம் அவனருகே வந்த தாதி ஒருவர்,

“ஹாய் மிஸ்டர் அநேகாத்மன்… கான் யு ஹியர் மி…” என்று கேட்க, தன் தலையை ஆம் என்று ஆட்டியவனுக்கு அப்போதுதான் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது.

“மகி… மகிக்கென்னாகிவிட்டது…” என்று எண்ணிய வேகத்திலேயே வேகமாகப் படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தான் அநேகாத்மன். அவனுடைய கழுத்தைச் சுற்றி அசைக்க முடியாதவாறு பட்டை போடப்பட்டிருந்தது. கையில் ட்ரிப் ஏற்றப்பட்டிருந்தது. மார்பில் என்னென்னவோ ஒட்டியிருந்தார்கள்.

“வட் த ஹெல் இஸ் திஸ்?” என்று எரிச்லுடன் கேட்டவன், அனைத்தையும் பிய்த்து எறிந்தான். கரத்திலிருந்த ட்ரிப்பை இழுத்து எடுத்து ஒரு பக்கமாகப் போட்டான்.

“வட் ஆர் யு டூயிங்… நீங்கள் எழுந்திருக்கக் கூடாது… படுங்கள்…” என்று தாதி பதட்டமாகக் கூறி அவனருகே வந்து தடுக்க முயல,

“கோ டு ஹெல்…” என்று கர்ஜித்தவன், அவளைச் சற்றும் கருத்தில் கொள்ளாமல் படுக்கையை விட்டு எழுந்தான். ஒரு கணம் உடல் தள்ளாடியது. வேகமாகத் தன்னை நிலைப்படுத்தியவன், கழுத்தைச் சுற்றியிருந்த பட்டையைப் பிய்த்து எடுத்து ஒரு பக்கமாகப் போட, அந்தத் தாதி வைத்தியரை அழைத்து வர உள்ளே ஓடினாள். அதே நேரம் நொண்டியவாறு வெளியே வந்தான் அநேகாத்மன்.

அங்கே நின்றிருந்த ஒரு மனிதர் யாருடனோ கைப்பேசியில் உரையாடிக்கொண்டிருக்க,

“சாரி…” என்றவாறு அந்தக் கைப்பேசியைப் பறித்து சில இலக்கத்தை அடித்துத் தன் காதில் பொருத்தினான்.

அந்த, கைப்பேசியின் உரிமையாளனோ, அநேகாத்மனின் இந்த திடீர் செய்கையால் அதிர்ந்து போய் பார்த்தவர் பின்,

“வட் த xxx ஆர் யு திங்கிங் டு டூயிங்…“ என்ற காட்டுக் கத்தலையும் பொருட்படுத்தாமல், தன் உதவியாளன் கேர்வினுக்கு அழைத்தான்.

மறு விநாடி எடுக்க,

“கேர்வின் இட்ஸ் மி… சென்ட் மி எ கார் அன்ட் எ செல் ஃபோன் வித் பெயர் ஒஃப் மை ட்ரஸ் ரைட் நவ்…“ என்று உத்தரவிட,

“யெஸ் சார்… பட்… வட் இஸ் யுவர் லொக்கேஷன்…“ என்றான் கேர்வின் தயக்கமாக.

“யாருக்குத் தெரியும்…. என்றவன் சுற்றிப் பார்க்கச் சற்றுத் தொலைவில் பொறிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையின் பெயரைப் படித்தவன், அதைக் கூறிவிட்டு, கைப்பேசியை அணைத்து, மீண்டும் அந்த உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு, அவரை அழுத்தமாகப் பார்த்தான். பின்,

“நெக்ஸ் டைம் வோச் யுவர் டங்க்…“ என்று எச்சரித்தவன், அவர் திகைத்து நிற்பதையும் பொருட்படுத்தாது.  வெளியே வந்தான்.

அடுத்த இருபதாவது நிமிடங்களில் அவனுடைய கார் ஒன்று அவனுக்கு முன்னால் வந்து நின்றது.

அதை ஓட்டி வந்தவர், காரை விட்டு இறங்கி, அநேகாத்மனிடம் ஒரு பையைக் கொடுக்க, அதைப் பிரித்துப் பார்த்தான்.

அவனுடைய ஆடையும், கைப்பேசியும் இருந்தது. அது மருத்துவமனை வாசல் என்பதைக் கூட லட்சியம் செய்யாது, அதிலேயே ஆடையை மாற்றினான்.

மாற்றும் போது, வெளியே தெரிந்த அவனுடைய கட்டுடல் மயங்கிப்போய் அங்கிருந்த பெண்கள் அவனை வெறித்துப் பார்க்க, அதைக் கூட உணரும் நிலையில் அநேகாத்மன் இருக்கவில்லை.

கழற்றிய மருத்துவ மனை உடையை அருகேயிருந்த குப்பைத் தொட்டியில் போட்டவன், கைப்பேசியை எடுத்துத் தேவகிக்கு அழைத்தான்.

மறு கணம் தேவகி எடுக்க,

“தேவகி… அக்கா எப்படி… இருக்கிறாள்… என்ன செய்கிறாள்?“ என்றான் தன் உயிரைக் கையில் பிடித்தவாறு.

“அத்தான்… எங்கே போய்விட்டீர்கள்… நீங்கள் சென்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆர் யு ஓக்கே…“ என்று பெரும் படபடப்புடன் கேட்க,

“ஸ்டாப் அன்ட் ஆன்சர் மை குவஸ்ஷன்… அக்கா என்ன செய்கிறாள்…” என்று சீறினான் அவன்.

“அக்கா இப்போதுதான் தூங்கிக்கொண்டிருக்கிறாள். இவ்வளவு நேரமும் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்… இன்னும் சாப்பிடவில்லை. எத்தனையோ முறை ஊட்ட முயன்றேன். மறுத்து விட்டாள்…” என்று கூற, ஒரு பக்கம் தன் மனைவி தனக்காகக் காத்திருக்கிறாள் என்கிற மகிழ்ச்சி தோன்றினாலும், இன்னும் அவள் சாப்பிடவில்லை என்கிற வருத்தம் அவனை வேதனைகொள்ளச் செய்தது.

‘இதோ இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன் தேவகி. அது வரை அக்காவோடு இருந்துகொள்… எங்கும் போகாதே…” என்று எச்சரித்து விட்டுத் தன் காரில் ஏறி அமரும்போதே வலியில் உடல் நடுங்க, அதைப் பொருட்படுத்தாது, அதை உயிர்ப்பித்து, வேகத்தைக் கூட்டினான். காரை ஓட்டிக்கொண்டே மீண்டும் விக்டருக்குத் தொலைப்பேசி எடுத்தான்.

“வேர் த ஹெல் ஆர் யு நேகன்… எத்தனை மணி நேரமாக உன்னுடன் தொடர்பு கொள்ள முயன்றேன் தெரியுமா?” என்று விக்டர் கோபத்துடன் கூற, இவன் நடந்தவற்றைக் கூறி முடிக்க விக்டர் கொஞ்ச நேரம் அமைதி காத்தான்.

“டாமிட்… யு ஆர் லக்கி மான்… நினைக்கும் போதே பயமாக இருக்கிறது… யு ஓக்கே… ஆர் யு ஷூவர்?” என்று சந்தேகமாகக் கேட்க,

“ஐ ஆம் பேர்ஃபக்லி ஓக்கே… அங்கே அந்த ஹாஸ்பிடலில் ஏதாவது சந்தேகிக்கும் படி…“

“நோ நேகன்… சந்தேகிக்கும்படி யாரும் இங்கில்லை… ஐ திங்க் தீரனின் டார்கட் நீதான்… உன்னைத் திசைதிருப்ப, இல்லை உன் சிந்தனையை குழப்பியடிக்க அவன் உன் மனைவியின் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறான் போலும். அது தோற்று விட்டது என்பதை அறிந்தால் மீண்டும் முயல்வான்… நீ கவனமாக இருக்கவேண்டும். இதற்கிடையில், அவனை அரஸ்ட் பண்ணுவதற்கான முழு ஆவணங்களும் கிடைத்து விட்டன. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் கைதாகிவிடுவான்… அது வரை யு ஹாவ் டு பி கெயர் ஃபுல்…“ என்று எச்சரிக்க,

அவருக்கு நன்றி உரைத்து விட்டுக் கைப்பேசியை அணைத்தவன், வலித்த கழுத்தை வருடிக்கொடுத்தவாறே, மருத்துவமனையை அரை மணி நேரத்தில் வந்தடைந்தான்.

பதற்றத்துடன் உள்ளே நுழைந்தவனின் பார்வை முதலில், தூங்கிக்கொண்டிருந்த தன் மனையாளிடம் சென்று மீண்டது. அது வரை புத்தகம் படித்துக்கொண்டிருந்த தேவகி அத்மனைக் கண்டதும் அதிர்ந்து போனாள்.

“என்னாச்சு அத்தான்… முகம் எல்லாம் காயமாக… ஆர் யு ஓக்கே…” என்று பதைபதைத்தவாறு வர, அப்போதுதான் அநேகாத்மனுக்குத் தன் நிலை புரிந்தது. அவசரத்தில் முகத்திலிருந்த காயத்தை மறந்து விட்டான்.

“ஒன்றுமில்லை தேவகி… சின்ன ஒரு ஆக்சிடன்ட்…”

“ஆக்சிடன்டா…” என்று இவள் பதற, தன் வாயின் மீது விரலை வைத்து அவளை எச்சரித்தவன்,

“ஐ ஆம் ஓக்கே… சின்ன காயம் தான்…  நவ் ஐ ஆம் ஓக்கே… இனி நீ கிளம்பு… உனக்காக கார் வெளியே காத்திருக்கிறது… நான் அக்காவைப் பார்த்துக்கொள்கிறேன்…” என்று கூற,

“இல்லை அத்தான்… உங்கள் நிலையில் அக்காவை உங்களால் பார்த்துக்கொள்ள முடியுமா தெரியவில்லை… நீங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்களேன்… நான் அக்காவைப் பார்த்துக்கொள்கிறேனே…” என்று கெஞ்ச,

“இல்லை தேவகி… உன் அக்கா, நான் ஊட்டினால்தான் சாப்பிடுவாள். அவளுக்கு நான் அருகேயிருக்கவேண்டும். இல்லையென்றால் பதறிப்போவாள்… அதோடு நான் ஒன்றும் இயலாதவன் அல்ல… நீ போய்வா…” என்று அவன் அழுத்தமாகக் கூற, அந்தக் குரலின் கட்டளையைப் புரிந்துகொண்டவள் மறுக்க முடியாமல் தயங்கியவாறே விடைபெற்றாள்.

தேவகியைப் பத்திரமாக அனுப்பிவிட்டுத் தன் மனையாளின் பக்கமாகக் கால்களை இழுத்தவாறு வந்தமர்ந்தான்.

உடல் முழுவதும் உயிர் போகும் வலி இருந்தாலும், அதைச் சிரமப்பட்டுத் தனக்குள் அடக்கிக் கொண்டவன், சர்வமகி சாப்பிடவில்லை என்கிற நினைவு வர, அவளுக்காகப் பால் கரைத்து வந்தான். அவளுக்குப் புகட்ட முதல் அனைத்து மின்விளக்கையும் அணைத்து விட்டு மெல்லிய விளக்கை மட்டும் போட்டுவிட்டான். இல்லையென்றால், அவன் முகத்திலிருக்கும் காயங்களைக் கண்டால் துடித்துப்போவாள்.

மெதுவாக அவள் தலையை வருட, அவன் வருடலில் தன் விழிகளைத் திறந்தாள் சர்வமகி.

தன் முன்னால் கலக்கத்துடனும், கலைந்த தலையுடனும் நின்றிருந்த தன் உயிரானவனை அந்த மெல்லிய வெளிச்சத்தில் கண்டதும், விழிகளில் நீர் நிறைய, அவனைப் பாய்ந்து தன்னோடு அணைத்துக்கொண்டாள் அந்த மனதிற்கினியாள்.

அவளுடைய அந்த ஒற்றை அணைப்பில் அவனுடைய வலி அனைத்தும் மாயமாக மறைய,

“ஹெய் பேபி… என்னாச்சும்மா…” என்றான் கனிவுடன்.

“எ…ங்கே… போ…ய்… இரு…ந்தீ…ர்…கள்… காணோ…ம்…” என்று அவள் கூறி முடிப்பதற்கு முன்பாக, அவளுடைய முடியற்ற தலை உச்சியில் தன் உதட்டைப் பொருத்தியவன்,

“ஒரு சின்ன வேலை கண்ணம்மா… அதுதான் இத்தனை தாமதமாகிவிட்டது… அதுதான் இப்போது வந்துவிட்டேன் அல்லவா… நீ இன்னும் சாப்பிடவில்லை என்று தேவகி சொன்னாள்… இதோ பால் எடுத்து வந்திருக்கிறேன்… குடிக்கிறாயா?” என்று கேட்க, அவனுடைய மார்பில் சாய்ந்தவாறே, ஆம் என்பது போலத் தலையை ஆட்டியவளுக்குக் குழந்தைக்குப் பருக்குவது போல கொஞ்சம் கொஞ்சமாகப் பருக்கினான் அநேகாத்மன்.

அவள் குடித்து முடித்ததும், வாயைத் துடைத்து விட்டவன், “படுத்துக் கொள்கிறாயாடா?” என்றான் கனிவுடன். அவளோ மறுப்பாகத் தலையை ஆட்டியவள், மேலும் வாகாக அவன் மர்பில் தன் முகத்தைப் புதைக்க, இவன் உதடுகளில் என்றுமில்லா நிம்மதியும், மகிழ்ச்சியும் புன்னகையாக மலர,

“ஓ மை ஏஞ்சல்… ஐ லவ் யு சோ மச்மா…” என்று முணுமுணுத்தவன் அவளை அணைத்தவாறே அந்த படுக்கையில் தன் கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து கொண்டான். அவன் விழிகளும் களைப்பின் மிகுதியாலும், வலியின் மிகுதியாலும் தாமாக மூடிக்கொண்டன.

அநேகாத்மன் உறங்கிவிட்டான் என்பதை, அவனுடைய சீரான மூச்சுக்காற்றிலிருந்து உணர்ந்து கொண்ட சர்வமகி, மெதுவாகத் தலையை நிமிர்த்தித் தன் உயிரானவனைப் பார்த்தாள். தூக்கத்திலும், அவளை விட்டுப் பிரியமாட்டேன் என்பது போல அவளை இறுக அணைத்திருந்தான்.

அவளுக்கு நினைவு தெரிந்த நிமிடத்திலிருந்து அவனைப் பார்த்துக்கொண்டுதானே வருகிறாள்… ஒவ்வொரு விநாடியும், அவள் மனதைப் புரிந்து உருகும் அவனுக்கு, அவள் என்ன கைமாறு செய்யப்போகிறாள்…

தன் வலது கரத்தால், அவனுடைய மார்பைப் பட்டும் படாமலும் வருடிக்கொடுத்தவள், அப்படியே அவன் அணைப்பில் உறங்கியும் போனாள்.

நிலவு 54

மறுநாள் தன் கைவளைவில் பூனைக்குட்டிபோல வாகாகத் தூங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கண்டதும், முகம் முழுவதும் மகிழ்ச்சியில் மலர, அவள் தலையில் ஆழமாக முத்தமொன்றைப் பதிக்க, மெதுவாக நெளிந்தால் சர்வமகி.

“கண்ணம்மா…”

“ம்…”

“எழுந்துகொள்ளவேண்டுமில்லையா…” என்றான் மீண்டும் முத்தம் கொடுத்தவாறே.

“ம்ஹூ ம்…” என்றவாறு மேலும் அசைந்து சற்றுக் கீழிறங்கி தன் முகத்தை அவன் இறுகிய வயிற்றில் புதைத்துக் கரத்தை அவன் இடையைச் சுற்றிப் போட்டவாறு மேலும் உறங்கத்தொடங்கினாள் சர்வமகி.

அந்த அணைப்பில் ஒரு கணம் இறுகிப்போனான் அநேகாத்மன். கூடவே தன் மீது கோபமும் வந்தது. ‘இப்படி அணைத்தால் நான் என்ன செய்யட்டும்?’ என்று தனக்குள் முனங்கியவன்,

“ஹேய்… வோஷ்ரூம் போகனும்மா…” என்றான் இவன் அவஸ்தையாக. அவனுக்கு உடம்பு வேறு வலித்தது. இவளோ,

“ம்ஹூ ம்… பிற…கு போ..ய்க்கொல்ல…லாம்…” என்றவள் அவனை மேலும் இறுகத் தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

தன்னை நேற்றுக் காணாததால் இன்று அவனை விட்டு விலக அச்சப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அநேகாத்மன்,

“ஹே கிட்டின்… நான் எங்கும் போகமாட்டேன்மா… அதுவும் உன்னை விட்டு… வாய்ப்பே இல்லைடா… ஒரு ஐந்து நிமிடம் விட்டாய் என்றால், நான் போய்விட்டு வந்துவிடுவேன்… ப்ளீஸ்டி… என் கண்மணி…” என்று இவன் கெஞ்ச, அவன் கெஞ்சுவது பிடிக்காமல், தன் வலது கரத்தைத் தூக்கி அவன் வாயில் வைத்து அவன் பேச்சைத் தடுத்தவள், தன் விரல்களை ஐந்து என்பது போலப் பிரித்துக் காட்டிவிட்டு, விலகி, மெதுவாக அவன் முகத்தைத் தாபத்துடன் பார்க்க முயன்றாள்.

எப்படியோ அருகேயிருந்த துவாய் ஒன்றை எடுத்துத் தன் முகத்தைத் துடைப்பதுபோல, மறைத்துக் கொண்டவன், எழுந்ததும், விளையாடுவது போல, தன் கரத்திலிருந்த துவாயை அவள் வதனத்தில் போட்டுவிட்டு, அவள் அந்தத் துவாயை விலக்குவதற்கு முன்பாக, அவளைத் தூக்கி, வாகாகத் தலையணையில் படுக்க வைத்தான்.

ட்ரிப் ஏறாத கரம் கொண்டு, முகத்தை மூடியிருந்த துவாயை விலத்தி, அவனைப் பார்ப்பதற்குள்ளாக அவன் குளியலறைக்குள் நுழைந்துவிட்டிருந்தான்.

தன் அத்தியாவசிய தேவைகளை முடித்துக்கொண்டு, முகத்தைக் கழுவியவன், கண்ணாடியின் தன் பிம்பத்தைப் பார்த்தான்.

நல்லவேளை அவன் பயந்ததுபோல், பெரிதாக ஒன்றும் முகத்தில் தெரியவில்லை. முகம் சற்று அதைத்திருந்தது. வலக்கண்ணிற்குக் கீழே கருமை நிறம் அடிபட்டதற்கு அடையாளமாகத் தங்கியிருந்தது. மற்றும் படி, அதிக காயங்கள், மழிக்காத தாடிக்குள் மறைந்துவிட்டிருந்தன.

ஒரே ஒரு கீறல் மட்டும் காதுக்குக் கீழாக அவனைப் பார்த்துச் சிரிக்க, தண்ணீர் கொண்டு கழுவிப் பார்த்தான். அது போகமாட்டேன் என்று அடம் பிடிக்க, எரிச்சலுடன் தன் முகத்தை அங்கும் இங்குமாகத் திருப்பிப் பார்த்தான். சமாளிக்கக் கூடிய காயங்கள்தான். நிம்மதியுடன் வெளியே வந்தவனை ஆவலுடன் ஏறிட்ட சர்வமகியின் முகம் அதிர்ச்சியைக் காட்டியது.

பதற்றமாக எழுந்தமர முயன்றவளிடம் விரைந்தவன்,

“என்னடா… ஏதாவது வேண்டுமா?” என்று கனிவுடன் கேட்டான். அவளோ அவனை விழிகள் இமைக்காது வெறித்துப் பார்க்க,

“என்னடா?” என்றான்.

“எ… என்..ன.. ஆ…ச்சு…” என்றாள் தவிப்புடன் ட்ரிப் ஏறிக்கொண்டிருந்த கரத்தைத் தூக்கி, காதடியில் பட்டிருந்த காயத்தை வருட முயல, அதைப் பற்றி,

“வலிக்கப்போகிறது மகிம்மா…” என்று கூறியவன், அவள் கரத்தைப் பற்றி, மீண்டும் படுக்கையில் வைத்துவிட்டு,

“ஒன்றுமில்லைடா.. சின்னக் காயம்…”

“முகம்… அ..தை..த்து…க்… கி..ட…க்…கிறதே…” என்று அவள் தவிப்புடன் கேட்க,

“அதுவா… நேற்று சாப்பிட்ட ஏதோ ஒன்று ஒத்துக்கொள்ளவில்லை போல, அதுதான்… இந்தக் காயம் சின்ன ஆக்சிடன்ட்… குளிக்கும் போது, கால் வழுக்கிவிட்டது…” என்று சமாதானம் கூற, மீண்டும் தன் கரத்தைத் தூக்கி அவன் கன்னத்தில் பதித்து,

“வலிக்கிறதா?” என்றாள் கம்மிய குரலில் அந்த ஒற்றைக் குரலில் உருகிப்போனான் அவள் கள்வன். உடனே அவள் அருகே அமர்ந்தவன், அவளை இறுகத் தன்னோடு அணைத்து,

“இல்லைம்மா… நீ என் அருகே இருந்தால், எந்த வலியையும் நான் சுகமாக சுமப்பேன்டா…” என்றவனின் கரங்கள் அவள் உடல் முழுவதும் வருட, அவள் உடல் சூூடானது. அதை உணர்ந்து கொண்டவனின் உடலும் நகைப்பில் குலுங்கின.

“ஓ மை ஏஞ்சல்… மை லைஃப்… என் உயிர்…” என்றவன் இன்னனும் அவளைத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.

நிலவு 55

அன்று காலையே. தீரனுக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் முன் வைக்கப்பட, அவர் குற்றவாளி என்கிற காரணத்தால் அவர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். அவருடன் கூட இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். இனி அவர்களின் முடிவு அநேகாத்மனின் கரங்களில் என்பது கடவுளின் தீர்ப்பு.

அநேகாத்மன் தன் உடல் வலிக்கு வேண்டிய மருந்து சர்வமகியிடமிருந்ததால், யாருடைய கருத்தையும் கவராது தானாகத் தேறிக்கொண்டான்.

நாட்கள் சென்றன…

மருத்துவ மனையிலிருந்த சர்வமகியின் மழிக்கப்பட்ட தலை முடி ஓரளவு வளரத் தொடங்கியது. அதுபோலவே அவளுடைய நினைவுகளும் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கின. தந்தையின் இறப்பு… அநேகாத்மனின் கடுமை, அதைத் தொடர்ந்து அவனின் கனிவு, அந்த ரோசலின் கூறியது… அநேகாத்மன் எதற்கு அவளை மணம் முடித்தான் என்பதற்கான காரணம் எல்லாமே நினைவிற்கு வந்து போனது.

மெதுவாகத் தலையை வலிக்க, இடதுகரத்தால் தலையை மெதுவாக வருடிக்கொடுத்தாள்.

“ஹாய் பேபி… எழுந்துவிட்டாயா?” என்றவாறு அவளருகே வந்தான் அநேகாத்மன். அவனுடைய வலது கரம் அவள் நெற்றியை மென்மையாக வருடிக் கொடுத்தது.

“வலிக்கிறதா… இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லாம் சரியாகிவிடுமாம்… சொல்ல மறந்துவிட்டேனே… நேற்று உன்னை ஃபுள் செக்கப்பிற்கு அழைத்துச் சென்றார்கள் அல்லவா? நவ் யு ஆர் பேர்ஃபக்ட்லி ஆல் ரைட்… இனிப் பயப்பட ஒன்றுமே இல்லை என்று டாக்டர்ஸ் சொல்லிவிட்டார்கள்… இனி விரைவாக நாம் நம்முடைய வீட்டிற்குச் செல்லலாம்…” என்று அருகேயிருந்த கதிரையில் அமர்ந்தவாறு, முகம் விகசிக்கச் சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள் சர்வமகி.

“என்னடா… அப்படிப் பார்க்கிறாய்? ப்ராமிஸ்மா… அப்படியே உனக்கு ஏதாவது என்றாலும், முதலில் என்னைக் கடந்துதான் யமன் உன்னிடம் வரவேண்டும்… நவீன சத்தியவான் நானாக்கும்…” என்று நகைப்புடன் கூறியவன் மெதுவாக அவளுடைய உதட்டைத் தன் சுண்டுவிரலால் வருடிக்கொடுத்தான்.

அப்போதும் அவள் முகம் தெளியாததையும் அவன் கரம் பட்டாலே உடல் சிவந்து சூடேறும் மனைவி, அன்று எதுவுமில்லாமல் அவனை வெறிப்பதையும் கண்டவன், எழுந்து அவளருகே படுக்கையில் அமர்ந்தான். அவளை நோக்கிக் குனிந்தவன்,

“என்னம்மா… அப்படி என்ன கவலை உன் தலையை அரிக்கிறது… ம்…?” என்றான் கனிவுடன்.

சிரமப்பட்டுத் தன் தொண்டையைச் செருமியவள் மிக மிக மெல்லிய குரலில்,

“நா… நான்… பி…ழை…த்…து,… உங்… உங்களு…க்கு கஷ்டம் கொடுத்து…வி…ட்டேனா…” என்றவள் மெல்லியதாகச் சிரிக்க முடியன்று தோற்றுப்போனாள்.

அநேகாத்மன் விறுக் என்று படுக்கையைவிட்டு எழுந்தான். அவனுடைய முகத்தில் கோபம் ஆதங்கம், இயலாமை என்று பல உணர்வுகள் வர்ண ஜாலமிட்டன.

“மகிம்மா… உனக்கு…” என்று அவன் வலியுடன் கேட்க,

“நி..னை..வு.. வந்..து….விட்..ட்..டது” என்று திக்கித் திணறி ஒவ்வொரு சொல்லாகக் கூறினாள்.

“ஓ… கண்ணம்மா… நீ… நீ இன்னும் என்னைப் புரிந்துகொள்ளவில்லையா சர்வமகி? உனக்காக நான் தவிப்பது, உனக்காக நான் ஏங்குவது… உனக்காக நான் வாழ்வது… இது எதையுமே  நீ புரிந்துகொள்ளவில்லையா? நீ அழிந்துதான் எனக்கு வாழ்க்கை வேண்டுமானால் அந்த வாழ்க்கையே வேண்டாம் என்று நான் நினைப்பதை நீ உணரவில்லையா? இப்போது கூட நான் உன் இழப்பை விரும்புவேன் என்றா நினைக்கிறாய்? இதை விட நீ என்னைக் கொன்றிருக்கலாமே…” என்று வேதனையுடன் கூறியவன்,

“ஏன்… ஏன்டி இப்படி என்னைச் சித்திரவதைப் படுத்துகிறாய்? டாமிட்… சர்வமகி… ஐ லவ் யு… இந்த உலகத்தில் நான் மதிக்கும், விரும்பும், வாழ நினைக்கும் ஒரே ஒரு பெண் நீ… நீ மட்டும்தான்.” என்றவன் மீண்டும் அவளை நெருங்கினான்.

அவள் நெற்றியை, விழிகளை, மெல்லிய நாசியை, சிவந்த உதடுகளை அங்கம் அங்கமாக விழிகளால் பருகியவன், கரத்தைத் தூக்கி அவள் முகத்தில் பதித்தான். “இந்த முகம், இந்த உடல், இந்த உடலைத் தாங்கி நிற்கும் உன் மனசு… அனைத்தும் எனக்கு சொந்தமானது மகிம்மா… உன்னை நினையாமல், உன்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் மட்டும் யோசிக்கும் இந்த உள்ளம்… எனக்கொன்று என்றால் துடிக்கும் உன் ஆவி… இவற்றை எப்படி என்னால் இழக்க முடியும்? இதை எப்படி என்னால் வெறுக்க முடியும்?” என்றவனை வெறித்துப் பார்த்தாள் சர்வமகி.

அவள் பார்வையின் அந்நியத்தன்மையைப் புரிந்துகொண்ட அநேகாத்மன் உள்ளுக்குள் உடைந்து போனான்.

“ஓக்கே… நான் சொல்வதை நீ நம்பப் போவதில்லை அப்படித்தானே…” என்று அவன் கோபத்துடன் கேட்க,

“அ…ந்த… ரோ…சலி…ன்… உங்களை…. காதலிக்கிறா….” கூற முடியாது தொண்டை வறண்டு போக, அவள் நிலை புரிந்தவனாக, விரைந்து சென்று, ஒரு கிளாசில் நீர் எடுத்துக்கொண்டு வந்தான்.

“முதலில் இதைக் குடி…” என்று அவள் உதட்டில் பக்குவமாக கிளாசைப் பிடிக்க, அவள் இரண்டு மிடறு குடித்துவிட்டு, போதும் என்று தலையாட்ட, மீண்டும் அந்த கிளாசை மேசையில் வைத்துவிட்டு,

“என்ன சொன்னாய், ரோசலிக்கு என் மீது காதலா…” என்றவன் நகைத்தான். கூடவே, அவள் இதழோரம் வழிந்த நீரைத் தன் பிறங் கையால் துடைத்துவிட்டவாறு,

“குட் ஜோக் மகிம்மா…” என்றவன், அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவாறே, அவள் அருகே படுக்கையில் அமர்ந்தவன், ட்ரிப் ஏறாத கரத்தைத் தூக்கி அதை வருடிவிட்டவாறே,

“கண்ணம்மா… ரோசலினுக்கு வேண்டியது, தங்கு தடையற்ற பணம். கூடவே, செக்ஸ்…” என்றதும் இவள் உதட்டைக் கடித்தாள். அவள் சங்கடப் படுவது புரிய, இவனுக்கு வேதனையாக இருந்தது.

“மகிம்மா… அவளுக்கு நான் மட்டும் காதலனல்ல, என்னைப் போல இன்னும் பலர் இருக்கிறார்கள்…” என்றான் அவன் அவசரமாக.

“அது… அ..வளு..க்கு… ச..ரி… உ..ங்…களு…க்கு… நீங்…” என்று அவள் சிரமப்பட்டு எதையோ கூற வர, உடனே அவள் பேச்சைத் தடுத்தவனாக,

“நீ என்ன கூற வருகிறாய் என்பது தெரிகிறது… அவள்தான் வேற்று இனத்தவள்… அவளுக்கு இது சாதாரணம், உனக்கு என்ன வந்தது? நீ தமிழன் தானே…” இதைத்தானே கேட்க வருகிறாய்? மகிம்மா… நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கே. தவிர அம்மாவும் சின்னவயதில் இறந்துவிட்டார்கள். தனிமை… என்னுடைய உள்ளத்தில் ஏற்படும் அழுத்தத்தைத் தீர்க்க ஒரு வடிகால் வேண்டுமே… இந்த வழிதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது கண்ணம்மா… அப்போது இது தப்பென்று சத்தியமாக நான் நினைக்கவில்லை. இப்போது கூட எனக்கு அது தப்பாகத் தெரியவில்லை… பட் உன்னைப் பார்த்தபிறகு… அதுவும் முதல் பார்வையிலேயே உன்னைத் தவிர, வேறு யாரையும் என்னால், அந்த மாதிரி யோசிக்கமுடியவில்லை… முதலில் உன் மீது கோபம் ஆத்திரம் இருந்தாலும் கூட, ஏதோ தப்பு செய்வது போலவே மனசிற்குள் உறுத்திக்கொண்டிருந்தது… அதைத் தவிர, நான் ஒரு பொதும் ரோசலினை மனதால் தொட்டதேயில்லை… நம்புமா…” என்றான் அவன் அவளுக்குப் புரியவைத்துவிடவேண்டும் என்கிற வேகத்தில்.

“ஆனாலும்… தப்…பு த…ப்பு… தான்… “

“உன்னைப் பார்க்கும் வரைக்கும் அது தப்பாக எனக்குத் தெரியவில்லை மகிம்மா… அப்போதே நீ என் கூட இருந்திருந்தால் இப்போது நீ தப்பு என்று நினைப்பதை நான் அப்போதே செய்திருக்கமாட்டேன்… விதி உன்னைக் கொஞ்சம் தாமதமாகத்தானே எனக்கு அறிமுகப் படுத்தியது…” என்றான் இவன் அவசரமாக.

“ஒ..ரு… கொலை…யை … செய்து…விட்டு…. மன்னி…ப்பு…க்… கேட்…” அவள் முடிக்கவில்லை. அவள் வாயில் தன் கரத்தை வைத்து அவள் பேச்சைத் தடுத்தவன்,

“டோன்ட் ஸ்ட்ரெய்ன் யுவர் செல்ஃப்… ஒரு கொலையைச் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டால் சரியாகாதுதான்… ஆனால் அது எந்த விதமான கொலை என்பதைப் பொறுத்தது சர்வமகி…” என்று அழுத்தமாகக் கூறியவன், அவள் இன்னும் தெளியாமல் இருக்க,

“இப்போ என்ன சொல்ல வருகிறாய்? நான் கெட்டவன், உன்னோடு வாழத் தகுதியில்லாதவன்…. அதுதானே… சரி… ஓக்கே… ஃபைன்… லீவ் இட்… இனியும் உன்னை நான் தொந்தரவு பண்ணமாட்டேன். எனக்கு நீ பிழைத்தெழவேண்டும். நீண்ட காலம் நலமாக இருக்கவேண்டும்… நீ என்னோடு வாழ்வதால், அது உன் மகிழ்ச்சியைப் பாழாக்கும் என்றால்… அதை நான் மதிக்கிறேன். நான் விலகிப்போவதுதான் உனக்கு வேண்டும் என்றால்… நான் விலகிப் போகிறேன்… இனி உன் அருகே கூட வரமாட்டேன்… எனக்கு நீ சந்தோஷமாக இருந்தாலே போதும்… நீ சந்தோஷமாக இரு… குட் பாய்…” என்று நெற்றியில் கைவைத்து சல்யூட் அடித்தவன் வேகமாக வெளியே சென்றான்.

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

1 hour ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago