அகங்காரம் 200%
பொஸசிவ் 200%
பொறுமை மனஸ் 100%
அன்பு 0.0%
விட்டுக்கொடுத்தல் 0.0%
சர்வமகி (சர்வமுமாய் இருப்பவள். பூமி முழுவதும் நிறைந்திருப்பவள். சக்தியின் மறு பெயர்)
கோபம் மைனஸ் 10%
அகங்காரம் மைனஸ் 10%
பொஸசிவ் 00%
பொறுமை 200%
அன்பு 200%
விட்டுக்கொடுத்தல் 100%
சகோதரர்களுக்காக வாழும் அவள். தனிக்காட்டு ராஜாவாக வாழ்பவன் அவன். மாறுபட்ட குண இயல்புகள் கொண்ட இருவர் சூழ்நிலையால் சேர்வதும், அதே சூழ்நிலையால் பிரிவதும், அதே சூழ்நிலை காலத்தின் பிடியில் சிக்கி, அவர்களை இணைப்பதுமே இக் கதை. படித்த விட்டுக் கூறுங்கள்.
கிட்டத்தட்ட இருபது மாடிகள் கொண்ட கட்டடம் அது. ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொரு விதமான அலுவலகங்கள். பத்தாவது மாடி முழுவதிற்கும் உரிமையானவர் வெங்கடேஷ் மாபெரும் வணிகர். அவர் செய்யாத தொழிலே கிடையாது. உலகம் முழுவதும் ‘பி.வி.எஸ்… ப்ராடக்ஷன் என்றால் அதற்குத் தனி மரியாதை. நேர்மையான மனிதன். இதுவரை அவர் தன் கரங்களை அழுக்காக்கியது கிடையாது. அவரிடம் ரூபாய்கள் புழங்குவதை விட, அமரிக்கன் டாலர்கள் புரண்டதே அதிகம். இலங்கை மட்டுமல்லாமல் லண்டன், இந்தியா, கனடா, அமரிக்கா, யப்பான் போன்ற நாடுகளிலும் தன் வியாபாரத்தைப் பல்கிப் பெருக்கி வைத்திருக்கும் உலகம் அறிந்த மா பெரும் புள்ளி
கனடாவில் அவர் குடியுரிமை பெற்றிருந்தாலும், தொழில் நிமிர்த்தமாக அவர் உலகமெல்லாம் சுற்றித்திரிவதால், கனடாவில் அவர் தங்குவது மிக மிகக் குறைவு. அமரிக்க ஜனாதியைக் கூடச் சந்தித்துவிடலாம், ஆனால் திரு வெங்கேடஷை சந்திப்பது என்பது, முடியாத காரியமாகவே சாதாரண பணக்காரர்களுக்கு இருந்தது.
பல வித்தியாசமான தொழில்கள் செய்தாலும், அவருக்குப் பிடித்த தொழில் புதிய புதிய வாகனங்களை வடிவமைப்பதும், அதற்குரிய உதிரிப்பாகங்களைச் செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுமே.
அவருடைய முன்னேற்றத்தால், அழிந்தவை எத்தனையோ நிறுவனங்கள். அதனால் எதிரிகளும் அதிகம். பாதுகாப்பும் அதிகம். அவரை இலகுவில் யாருமே பார்க்கவும் முடியாது. நெருங்கவும் முடியாது. அதையும் மீறி அவரைச் சந்திப்பதாக இருந்தால், முன் கூட்டியே ஒரு மாதத்திற்கு முன்பு அனுமதி வாங்க வேண்டும்.
அப்படி அனுமதி வாங்கி வெங்கடேஷைச் சந்திக்க உள்ளே நுழைந்தவர்தான் திருவாளர் வாசுதேவன். அவரும் ஒரு காலத்தில் பெரிய பணக்காரராகத்தான் இருந்தார். கவிதா இன்டர்நஷனல் எக்ஸ்போர்ட் அன்ட் இம்போர்ட் என்கிற சர்வதேச நிறுவனம் ஒன்றை வைத்திருந்தார். அதன் பிறகு திடீரென்று வெங்கடேஷின் உயர்ச்சியால் அவருடைய வியாபாரம் அதள பாதாளத்தில் விழுந்ததால் வேறு வழியில்லாமல் கம்பனியை இழுத்து மூடிவிட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக, தரகர் வேலையில் இறங்கிவிட்டார்.
தரகர் வேலை என்றால், இரண்டு பெரிய நிறுவனங்களுக்கிடையே தொடர்பேற்படுத்தி, அவர்களின் வியாபாரம் லாபகரமாகக் கூடி வந்தால் இவருக்குக் கணிசமான தொகை கிடைக்கும். இவரை ஏற்கெனவே பலருக்குத் தெரியும் என்பதால், இவருடைய புதிய தொழிலும் ஓரளவு நன்றாகத்தான் நடந்தது.
அந்த நேரத்தில்தான், ‘டி.என் இன்டஸ்ரி’ என்கிற நிறுவனம், தங்களுடைய வாகன உதிரிப்பாகங்களை, ‘பி.வி.எஸ் இன்டஸ்ட்ரி’க்கு விற்றுத்தர முடியுமா என்று கேட்டனர். இவரும் பி.வி.எஸ் இன்டஸ்ட்ரி என்றதாலும், அவருடைய நெருங்கிய நண்பர் நடராஜின் மூலம் இத் தொடர்பு கிடைத்ததாலும், வேறு யோசிக்காமல் தலையாட்டிவிட்டார். அவர் கொஞ்சம் யோசித்திருந்தால், இந்த ‘டி.என். இன்டஸ்ரி’ யைப் பற்றி விசாரித்திருப்பார் விசாரித்திருந்தால், பின்னால் வந்த விழைவுகளை இவர் தவிர்த்திருக்கலாம்.
பி.வி.எஸ் இன்டர்ஸ்ரிக்கிடையில் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது என்றால் அது அவருக்கல்லவா பெருமை. தயங்காமல் ஒப்புக்கொண்டுவிட்டார். உடனேயே வெங்கNடஷை சந்திக்க அனுமதி வேண்ட, இரண்டு மாதம் கழித்துத்தான் அந்த அரும்பெரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
உள்ளே சென்றவரை செக்கியூரிட்டி நன்றாகப் பரிசோதித்தார். பரிசோதனை முடிந்து உள்ளே செல்லும் போது ஒரு வெண்ணிற ஆடை அணிந்த ஒருவன் அவரிடம் எங்கோ போவதற்கான வழியைக் கேட்க, இவர் ‘தனக்கும் இந்த இடம் புதிது, வேறு எவரிடமாவது கேட்டு அறிந்துகொள்ளுமாறு கூறிவிட்டு முன்னோக்கி நடந்தார். அதற்கு நன்றி கூறிக் கை குலுக்கிவிட்டுச் சென்றார் அந்த புதிய மனிதன்.
தான் வெங்கடேஷை சந்திக்கப்போகிறேன் என்கிற பெருமையில், உள்ளே சென்று, அங்கிருந்த வரவேற்பாளரிடம் செய்தியைக் கூற, அவர் சரி பார்த்துவிட்டு, இருக்கையில் அமருமாறு பணிந்தார். ஐந்து நிமிடம் கடந்திருக்கும், அவருக்குரிய நேரம் வந்ததும், அழைக்கப்பட்டார்.
வெங்கடேஷின் அறையை வரவேற்பாளர் காட்ட இவர் அந்த அறையை நோக்கிச் சென்றார்.
உள்ளே நுழைந்ததும், அவரை வரவேற்ற வெங்கடேஷ் கரம் பற்றிக் குலுக்கி, அமருமாறு பணிந்துவிட்டு, செய்தியைக் கேட்க, வாசுதேவன் தான் வந்ததற்கான காரணத்தைக் கூறினார்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வெங்கடேஷ் சற்று அமைதி காத்துவிட்டு, அங்கே ஆவலுடன் அமர்ந்திருந்தவரை நிமிர்ந்து பார்த்து,
“நோ… மிஸ்டர் வாசுதேவன்… நீங்கள் சொல்வதற்கு என்னால் சம்மதம் தெரிவிக்க முடியாது. நான் யோசிக்கவேண்டும்…” என்றார் உறுதியாக.
“அவசரப் படாமல் நன்கு யோசியுங்கள் மிஸ்டர் வெங்கடேஷ். இதில் லாபம்தான் அதிகம்…” என்றார் இவர் பொறுமையாக.
“இதில் யோசிப்பதற்கு எதுவுமே இல்லை மிஸ்டர் வாசுதேவன். நீங்கள் கூறும் நிறுவனத்தைப் பற்றி நல்ல அபிப்ராயங்கள் எதுவும் தற்போது எனக்கில்லை. தவிர உங்களுக்கு என்னுடைய கொள்கைகளைப் பற்றியும் நன்கு தெரியும். நியாயமற்ற எதையும் நான் தொடவும் மாட்டேன், அதைப்பற்றிப் பேசவும் மாட்டேன்…” என்றார் அவர் உறுதியாக.
“நீங்கள் நினைப்பது தவறு… அவர்கள்… நீங்கள் நினைப்பதுபோல தவறானவர்கள் அல்ல. ஏதோ போதாத நேரம், அவர்களுடைய எதிர் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையால்… அவர்களின் மீது தவறான வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள்…” என்றார் வாசுதேவன் அவசரமாக.
கொஞ்ச நேரம் வாசுதேவனையே உற்றுப் பார்த்த வெங்கடேஷ்,
“மிஸ்டர் வாசுதேவன்… நீங்கள் எடுத்து வந்திருக்கும் செயல்திட்டத்தின் தொகை எவ்வளவு தெரியுமா? ஐந்து கோடி… இதுவே உண்மையான, நேர்மையான நிறுவனத்தில் இந்தப் பொருட்களை வாங்குவதாக இருந்தால் சுமார் பத்துகோடி வேண்டும். பத்துகோடி பெறுமதியான இந்த பொருட்களை, வெறும் ஐந்து கோடிக்குத் தருவதாக இருந்தால், இவர்கள் நேர்மையாகத்தான் தருகிறார்கள் என்று என்னால் எண்ண முடியவில்லை? நோ… எனக்கு எங்கோ தப்பு நடப்பதுபோலத்தான் இருக்கிறது. எதற்கும்… நான் யோசிக்கவேண்டும்…” என்று அவர் கறாராக முடிக்க, விழுந்து போன முகத்துடன், இனி அவரின் மனதை மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டவராக எழுந்த வாசுதேவன்,
“ஓக்கே சார்… அப்படியானால் அவர்களிடம் சொல்லிவிடுகிறேன்…” என்றவாறு எழுந்தவரிடம்,
“லுக் மிஸ்டர் வாசுதேவன்… நீங்களும் அவர்களுடன் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது… வெளுத்தவை எல்லாம் பாலாக எண்ணக் கூடாது.” என்றவரைச் சோர்வுடன் பார்த்தார் வாசுதேவன்.
“என்னுடைய தொழில் அப்படி… என்ன செய்வது மிஸ்டர் வெங்கடேஷ். லாபகரமாக இரண்டு பக்கமும் தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்தால் கணிசமான தொகை எனக்குக் கிடைக்கும். அப்படி வந்தவர்கள்தான் ‘டி.என் என்டர் பிரைஸ்.’ நீங்கள் தொடங்கி இருக்கிற புதுவகையான வாகனத்துக்கு உதிரிப்பாகங்களைக் குறைந்த விலையில் செய்து தருவதாகக் கூறினார்கள். சரிதான் என்று வந்தும் விட்டேன். பரவாயில்லை மிஸ்டர் வெங்கடேஷ்… அவர்களிடம் சொல்லி விடுகிறேன். நானும் அவதானமாக இருக்கப்பார்க்கிறேன்…” என்று புன்னகையோடு கூறி விடைபெற்ற வாசுதேவன், தனது வலதுகரத்தை நீட்டினார்.
அதைப் பற்றிக் குலுக்கிய வெங்கடேஷ் விடை கொடுக்க, வாசுதேவன் வாசல் புறமாகத் திரும்பினார். அப்போதுதான் அது நடந்தது.
எங்கிருந்தோ ஒரு தோட்டா நேராக வெங்கடேஷின் இதயத்தில் பாய, என்ன ஏது என்பதை அவர் உணர்வதற்குள்ளாகவே, முன்புறமிருந்த மேசையில் சரிந்து விழுந்தார்.
அச்சத்துடன் திரு திரு என்று விழித்த வாசுதேவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. எப்படியோ தன்னை நிலைப் படுத்தியவர், எதுவும் புரியாமல் வெங்கடேஷை நெருங்கினார்.
“மிஸ்டர் வெங்கடேஷ்…” என்றவர் முன்புறமாக விழுந்திருந்தவரை நிமிர்த்தினார்.
‘இரத்தம்… ஓ காட்…’ செய்வதறியாது திகைத்தவர், அங்கே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு ஆபத்து என்பதைப் புரிந்தவராக, வேகமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
சர்வமகி பெரும் அதிர்ச்சியுடன் தொலைக்காட்சிப் பெட்டியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் தன் விழிகளையே நம்பமுடியவில்லை.
“இல்லை… இது பொய்… நான் நம்பமாட்டேன்… யாரோ வேண்டும் என்று… அவள் தந்தையை மாட்டிவைத்திருக்கிறார்கள்… நிச்சயமாக அவள் தந்தை அந்தக் கொலையைச் செய்திருக்கமாட்டார்… யார் என்ன சொன்னாலும் அவள் நான் நம்பமாட்டேன்… கடவுளே…” என்று அரட்டியவள் வேகமாகத் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள்.
இதயம் வேகமாகத் துடித்தது. கண்களில் கண்ணீர் பொங்கிப் பார்வையை மறைத்தது.
நல்ல வேளை அவள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, யாருமே அருகில் இல்லை. இருந்திருந்தால்… எல்லோரும் அவளைக் கேள்வியாலேயே கேட்டுக் குடைந்தெடுத்திருப்பார்கள்.
சர்வமகி… வாசுதேவனின் அன்பு மகள்.
நன்றாக இருந்த காலத்திலும் சரி, நொடிந்துபோன காலத்திலும் சரி, தம் இயற்கைக் குணத்தை மாற்றாமல், எப்போதும் போல எளிமையாக ஒரேமாதிரி இருக்கும் ஒரு சிலரில் அவளும் ஒருத்தி.
ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில் பிரம்மா எவ்வளவு அழகைப் படைக்க முடியுமோ அவ்வளவையும் ஒன்றும் விடாமல் படைத்துவிட்ட அற்புத ஓவியம். பேசும் போதும் சரி, சிரிக்கும் போதும் சரி, சப்தம் அருகே இருப்பவர்களுக்கு இலகுவில் கேட்காது. அத்தனை மென்மை.
அவளுக்குப் பிறகு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்திருந்தாலும், வாசுதேவனுக்குத் தன் மூத்த மகளின் மீதுதான் கொள்ளைப் பிரியம்.
கடைக் குட்டி அபிதன் பிறந்த நேரம், அவர் மனைவி கவிதா பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலால் மரணம் அடைந்த போது, தன் வேதனையை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்து விட்டு அவருக்கு ஆறுதல் சொன்னது பன்னிரண்டே வயதான சர்வமகிதான். அது எப்படிச் சாத்தியம் என்று கேட்டால் அதற்குப் பதில் தெரியாது. ஆனால் அதுதான் உண்மை. எப்போதாவது ஒரு அற்புதக் குழந்தை பிறக்கும் அல்லவா. அது போலத்தான் வாசுதேவன் கவிதாவிற்குக் கிடைத்த அற்புதக் குழந்தை சர்வமகி.
அந்தக் குழந்தைப் பருவத்திலேயே தந்தையைக் கவனிப்பதிலிருந்து, கைக்குழந்தையான தம்பி அப்பிதனை காத்துக்கொள்வது வரை எல்லாமே சர்வமகிதான். அதனால் சகோதரர்களைப் பொறுத்தவரை அவள் ஒரு அன்னையே.
கவிதா இருந்த வரை ஓகோ என்று கொடிகட்டிய வியாபாரம், அவள் இறந்த பின்பு படுத்துப் போக, அதை இழுத்து மூடிவிட்டு வேதனையோடு வீட்டுக்கு வந்தவரைத் தட்டிக்கொடுத்தவள் பதினைந்து வயது நிரம்பிய அவர் மகள் சர்வமகி.
அதன் பின் அவர்கள் இருந்த பெரிய வீட்டை விற்றுவிட்டு, அவர்களுக்கு ஏற்றதாக ஒரு சிறிய வீட்டை வாங்கிக்கொண்டு அங்கே அவர்கள் குடி புகுந்தபோது, வாசுதேவன் மனம் தளரவில்லை. காரணம் அவர் மகளின் மீதிருந்த நம்பிக்கை. அந்தச் சின்ன வயதிலேயே அவள் வீட்டுப்பொறுப்பை லாவகமாகக் கையாண்ட விதம் அவருக்குப் பெரும் தெம்பைக் கொடுத்தது.
அவளை விட மூன்று வயது இளையவளான தேவகி தவறு செய்தால் கண்டிப்பதிலிருந்து, தேவகி பிறந்து மறு வருடமே பிறந்த மாதவிக்குப் புத்தி சொல்வதிலிருந்து, மாதவிக்கு ஒரு வருடம் கழித்துப் பிறந்த பிரதீபன் செய்யும் லூட்டியைப் பார்த்து ரசிப்பதிலிருந்து, அவனுக்கும் ஏழு வருடங்களுக்குப் பிறகு போனசாகப் பிறந்த அபிதனை அன்னையாக அரவணைப்பதிலிருந்து சர்வமகி, அனைவருக்கும் சர்வமுமாகிப் போனாள்.
பல்கலைக் கழகம் சற்றுத் தொலைவில் கிடைத்தபோது, பிடிவாதமாகத் தன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க முடியாது என்கிற காரணத்தினால், அருகிலேயே ஒரு கல்லூரியில் சேர்ந்து கம்பியூட்டர் சயன்ஸ் செய்தாள். படித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைக்க உடனேயே சேர்ந்துவிட்டாள்.
“இப்போது நீ வேலை செய்துதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமா மகி… நீ இன்னும் சின்னக் குழந்தை கண்ணம்மா… நீயும் உன்னுடைய இளவயதை அனுபவிக்கவேண்டாமா” என்று குறையோடு கூறிய தந்தையிடம்,
“எனக்கும் பதினெட்டு தொடங்கப்போகிறது… இன்னும் என்னைக் குழந்தை என்கிறீர்களேப்பா… தவிர என்னுடைய மகிழ்ச்சியே நம்முடைய குடும்பம்தான்… உங்கள் எல்லோருடைய சந்தோஷமும்தான் என்னுடைய சந்தோஷமும். அப்பா… நான் வேலைக்குப் போவதால் நம் குடும்பத்திற்குத்தானே நல்லது. உங்கள் ஒருவரின் உழைப்பால், கனடாவில் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா? ஏதோ கூடுதலாக வந்தால், தங்கை தம்பிகளுக்குக் கொஞ்சம் சேர்த்து வைக்கலாமேப்பா…” என்று மறுக்க முடியாதவாறு இனிமையாகக் கூறியவளிடம் எப்படி முகம் முறித்து மறுக்க முடியும்?
அமைதியானார் வாசுதேவன். அவள் கூறுவதில் தவறிருந்தால் திருத்தலாம். அவள் கூறியதில் முழுக்க முழுக்க உண்மையல்லவா இருக்கிறது. அதை எப்படி தவறென்று ஒதுக்க முயும்.
எது எப்படியோ, அவளுடைய சம்பாத்தியம் வீட்டிற்குப் பெரிதும் உதவியது என்றுதான் கூற வேண்டும். ஒரு வருடம் கழிய, அவள் பகுதிநேர வேலை, முழு நேர வேலையாக மாற்றப்பட்டதோடு, நிரந்தரவேலையாகவும் அமைய ஒரு வாய்ப்புத் தேடிவந்தது. ஆனால் அதற்குரிய பயிற்சியை அவள் மேற்கொண்டால் மட்டுமே அந்த நிரந்தர வேலை அவளுக்குக் கிடைக்கும். அவளுடைய வேலை நிரந்தரமாக்கப்பட்டால், சம்பள உயர்வுவோறு பிற உதவிகளும் கிடைக்கும் ஆனாலும், அப் பயிற்சியை மேற்கொள்வதா, விடுவதா என்கிற பெரும் சிக்கலில் அவள் சிக்கியிருந்தாள்.
காரணம், அந்தப் பயிற்சியை அவள் அவள் வேலைசெய்யும் செயலகத்தின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள வினிபெக்கில் ஒரு மாதம் தங்கி மேற்கொள்ள வேண்டியிருந்தது. வாகனத்தில் பயணிப்பதாக இருந்தால். கிட்டத்தட்ட இருபதுமணி நேரப் பயணம். அவளால் எப்படி எல்லோரையும் அம்போ என்று விட்டுவிட்டுப் போக முடியும். இருந்தாலும் கிடைத்த வாய்ப்பைத் தூக்கியெறியவும் மனமில்லை.
தந்தையோ “நீ போய்வாம்மா… முப்பது நாட்கள்தானே. நாங்கள் சமாளிப்போம். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. எதற்காக அதை மறுப்பான்?” என்று அவளை ஊக்கப் படுத்த, மறுக்க முடியாமல் அவள் வினிபெக் செல்வதற்கு அரைமனதாகவே சம்மதம் தெரிவித்தாள்.
அவள் போவதற்குள்ளாகத் தேவகியையும், மாதவியையும் அழைத்து, பல விதமாகப் புத்திமதிகளைக் கூறி, தந்தையிடமும் அவர் என்ன என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் சொல்லி, பல முறை அவர்களால் ஒழுங்காக வீட்டை நடத்த முடியுமா என்று தெளிவு படுத்திய பின்தான் கிளம்பினாள்.
“அக்கா… எனக்கு பதினைந்து வயது ஆகிவிட்டது. தவிர, எனக்குள்ளும் உன் இரத்தம் ஓடுகிறது. அதனால் பயப்படாமல் போய் வாக்கா… தம்பியை நாங்கள் ஒழுங்காகப் பார்த்துக்கொள்கிறோம்…” என்று தங்கை தேவகி சொன்ன பிறகுதான் ஓரளவு மனம் தெளிந்து வினிபெக் வந்தாள்.
வினிபெக் வந்தவள் காலை மாலை இரு வேளையும் வீட்டுக்கு ஸ்கைப் மூலம் அவர்களின் சுக நலத்தைக் கேட்கத் தவறவில்லை.
இன்று காலை ஸ்கைப்பில் பேசியபோது கூட அவர்கள் மகிழ்ச்சியாகத்தானே இருந்தார்கள். அப்படி இருக்கிறபோது, எப்படி அந்த மகிழ்ச்சியான நிலைமை இப்படித் தலைகீழாக மாறியது?
சர்வமகிக்குத் தன் சகோதரர்களை நினைக்க நினைக்கத் தாளவில்லை. அவர்கள் எப்படிப் பரிதவிக்கிறார்களோ என்கிற எண்ணம் அவளைப் பெரிதும் அலைக்கழித்தது.
வேகமாகத் தன்னுடன் தொடர்ந்து வேலை செய்யும் ஜெஸ்டின் என்பவனின் அறைக் கதவைத் தட்டினாள்.
வெளியே வந்த ஜெஸ்டினின் புருவம் வியப்பால் விரிந்தது. இது வரை காலமும் தேவையற்ற பேச்சுக்கு இடமளிக்காமல் இறுக்கமாக இருந்த அந்த இலங்கைப் பெண் தன்னைத் தேடி வருவதைக் கண்டால் வியக்காமல் என்ன செய்ய முடியும்.
“என்ன ஷர்வமகி…” என்றான் ஆங்கிலத்தில் வியப்பை மறைக்காத குரலில்.
“ஜெஸ்டின்… நான்… நான் உடனடியாக டொரன்டோ போக வேண்டும்… அதுதான் உன்னிடம் சொல்லலாம் என்று வந்தேன்…” என்றாள் தயக்கமாக.
“எனிதிங் ராங்” என்ற ஜெஸ்டின், அவளுடைய கலங்கிய முகத்தைக் கண்டதும் அக் கலக்கத்தைத் தன்னதாக எண்ணி அவளை நெருங்கினான்.
“என்னால் ஏதாவது உதவ முடியுமா?” என்றான் நல்ல எண்ணத்தில்.
“இ… இல்லை… என்னால் சமாளிக்க முடியும்… நான்… நாளை பயிற்சிக்கு வரமாட்டேன் என்பதை உன்னிடம் கூறத்தான் வந்தேன். இதைத் தயவு செய்து பயிற்சியாளர்களிடம் அறிவித்துவிடு…” என்றவளைப் புரியாமல் பார்த்தவன்,
“ஆனால் இந்தப் பயிற்சியை இடையில் நிறுத்தினால், உன் நிரந்தர வேலைக்கான வாய்ப்பு தடுக்கப்படுமே… தவிர… இப்போது நீ செய்துகொண்டிருக்கும் வேலைக்கும் ஆபத்து வரும்… அதனால், கொஞ்சம் யோசித்து…” என்றான் அவள் நன்மை கருதி.
“என்னுடைய வேலையை விட, இப்போது நான் போக வேண்டியது மிக முக்கியம்…” என்றதும்,
“ஓக்கே… ஷர்வமகி… நான் சொல்லிவிடுகிறேன்… என்ன உதவி வேண்டுமானாலும், எனக்குக் கால் பண்ணு… உதவி செய்யக் காத்திருக்கிறேன்…” என்று அவன் கனிவுடன் சொல்ல, தலையாட்டிவிட்டு கனத்த மனதுடன் வெளியேறினாள் சர்வமகி.
சர்வமகி வீட்டிற்குள் நுழைந்தபோது, சோபாவில் பயத்துடன் அமர்ந்திருந்த சகோதரர்கள் நால்வரும் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினர். அவளில்லாமல் அவர்கள் நன்றாகப் பயந்துவிட்டிருந்தது தெரிந்தது.
“ஷ்… எதற்கு இப்படிக் கலங்குகிறீர்கள்… அ… அப்பாவை வெளியே கொண்டுவந்துவிடலாம்…” என்று அன்பாகக் கூறி தைரியமூட்டிய சகோதரியை நம்பிக்கையில்லாமல் பார்த்தாள் தேவகி.
“உண்மையாகவா அக்கா… ஆனால்… ஆனால் அப்பாதான் இந்தக் கொலையைச் செய்தார் என்பதற்கு எல்லா ஆதாரங்களும் இருக்கிறதாமே…” என்றாள் அவள் தவிப்புடன்.
“என்ன ஆதாரம் இருந்துதான் என்ன தேவகி… நம்முடைய அப்பாவைப் பற்றி நமக்குத் தெரியாதா? நிச்சயமாக எங்கள் அப்பா இந்தக் கொலையைச் செய்திருக்கமாட்டார். இதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது…” என்றாள் மென்மையாக.
“அது சரியக்கா… ஆனால் தீர்ப்பிற்கு ஆதாரம் வேண்டுமே… அதற்கு நாம் எங்கே போகப்போகிறோம்?” என்றான் பதின்மூன்று வயதான பிரதீபன்.
“நம்முடைய கனடா பொலிஸ் மிகவும் புத்திசாலி பிரதீபன்… எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துவிடுவார்கள்…” என்று நம்பிக்கையுடன் சொன்னவளிடம்,
“கண்டு பிடிப்பார்கள் அக்கா… என்ன இன்னும் இருபது வருடம் கழிந்தபிறகு. அதற்கிடையில் என்னென்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்…” என்று விரக்தியாகக் கூறிய மாதவியைத் தட்டிக் கொடுத்து,
“நாம் யாருக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை மாதவி… நிச்சயமாகக் கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்…” என்று நம்பிக்கையுடன் கூறியவளை ஏளனமாகப் பார்த்தாள் தேவகி.
“கடவுளா? உனக்கு இன்னும் அந்தக் கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா அக்கா? எனக்கு அந்த நம்பிக்கை போய் வருஷங்கள் எத்தனையோ ஆச்சு…” என்றாள் சினத்துடன். அவளை வேதனையுடன் பார்த்த சர்வமகி,
“தவறு மாதவி… எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. நம்பிக்கைதான் கடவுள்… நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். எனக்கு எங்கள் அப்பாவைக் காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது…” என்று உறுதியுடன் கூறியவளை விரக்தியாகப் பார்த்தாள் தேவகி.
“போக்கா… நீ எப்போதும் நேர்மறையாகவே யோசிக்கிறாய்… ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல வாழ்க்கையிலும் இரண்டு பக்கங்கள் உண்டு… ஒன்று நேர்மறை, மற்றது எதிர்மறை…” என்றாள் சோர்வுடன்.
அவள் சோர்ந்த முகம் எதையோ அவளுக்கு உணர்த்த,
“தேவகி… நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று கனிவுடன் கேட்டாள்.
“இல்லையக்கா… பயத்தில் பசியே மரத்துவிட்டது…” என்று கூற, உள்ளே சென்று பார்த்தாள். தந்தை சென்றதிலிருந்து பெரிதாகச் சமைக்கப்படவில்லை என்பது தெரிய,
“என்ன தேவகி இது… எதுவுமே சமைக்கவில்லையா?” என்றாள் சிறு கண்டிப்புடன்.
“யாரும் சாப்பிடத் தயாராக இல்லை. அபி மட்டும், பிரெட் சாப்பிட்டான்…” என்று தேவகி கூற,
“தப்பு தேவகி… என்ன பிரச்சனையாக இருந்தாலும், சாப்பாட்டைத் தவிர்க்கக் கூடாது…” என்று கூறியவள், கிடைத்ததை வைத்து ஏதோ சமைக்கத் தொடங்கினாள்.
தேவகியும் உதவி செய்ய, இரண்டு கறி, சோறு என்று சமையல் தாயாரானது. அனைவரும் மேசையில் அமர,
“அக்கா நீயும் உட்கார்ந்து எங்களோடு சாப்பிடு…” என்றாள் மாதவி. அவளுக்கு அவர்களுடைய சகோதரியைப் பற்றித் தெரியாதா என்ன? தந்தையின் கவலையில் அவளும் சாப்பிட்டிருக்கமாட்டாள், இல்லையென்றால், சாப்பிடாமல், அப்பாவை எப்படி வெளியே கொண்டுவருவது என்று யோசித்துக்கொண்டிருப்பாள்.
“ஆமாமக்கா… நீயும் சாப்பிடு… வா…” என்று அவளை இருத்தி வைத்து உணவைப் பரிமாற, உண்மையில் சகோதரிகளின் அன்பில் சர்வமகி நெகிழ்ந்துதான் போனாள்.
மறுப்புக் கூறாமல் அவர்களுடன் சேர்ந்து உண்டுவிட்டு, பாத்திரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, சகோதரர்களைத் தூங்க அனுப்பிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. அத்தனை நேரமாக அடக்கிவைத்திருந்த வேதனை வெளிப்படக் குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள்.
அவளால் எது வரைக்கும் போராட முடியும்? அந்த… அந்த வெங்கடேஷ பெரும் புள்ளியாயிற்றே… அவருடைய மரணத்தைச் சர்வசாதாரணமாக எடுக்கமாட்டார்களே. கிண்டிக் கிளறுவார்களே… அவர்களுக்கு எதிராக இவளால் என்ன செய்துவிடமுடியும்?’ சகோதரர்களிடம் நம்பிக்கை தரும் விதமாகப் பேசினாலும், அந்தத் தனிமை அவளுடைய நம்பிக்கையை, மெல்ல மெல்லக் கரைத்துச் செல்வதை உணர்ந்து பெரிதும் பரிதவித்துப் போனாள்.
மறுநாள் தன்னால் முயன்றவரைக்கும் தெரிந்த சட்டத்தரணிகளுடன் பேசிப் பார்த்தாள். எல்லோரும் வழக்கு பக்காவாக இருப்பதால் எதுவும் செய்வதற்கில்லை என்றார்கள். இதைச் சொல்வதற்கு ஒவ்வொரு சட்டத்தரணிகளுக்கும் அவள் கிட்டத்தட்ட முந்நூறு நானூறு என்று அழவேண்டித்தான் இருந்தது.
சட்டத்தரணிகளைப் பார்ப்பதும், அவர்களுடன் பேசுவதும், பணத்தைக் கொடுப்பதுமாகக் காலம் ஓடியதே தவிரத் தந்தையை வெளியே எடுப்பதற்குரிய நடவடிக்கை எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையில் தந்தையைப் போய் பார்த்துவிட்டும் வந்தாள்.
அவளைக் கண்டதும் குலுங்கி அழுதார் வாசுதேவன்.
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை கண்ணம்மா… நான் செய்த ஒரே தவறு, அந்த வெங்கடேஷ் சுடுபட்டு இறந்ததும், தப்பித்தால் போதும் என்கிற எண்ணத்தில் ஓடி வந்ததுதான். நின்று காவல்துறைக்கு அறிவித்திருந்தால், என்மீது விழுந்த சந்தேகம் ஓரளவாவது குறைந்திருக்கும்…” என்று கதறியவரைத் தேற்ற முடியாது தவித்தாள் மகள்.
“வருந்தவேண்டாம் அப்பா… எது நடக்கவேண்டுமோ அதுதானே நடக்கும்… எப்படியாவது உங்களை வெளியே கொண்டுவர முயற்சிசெய்கிறேன்… எப்படியாவது… எங்கள் சொத்து அழிந்தாலும் பரவாயில்லை…” என்று உறுதியுடன் கூறியவளுக்குக் காலம் கூட உதவுவதாக இல்லை.
இருக்கிற பிரச்சனை போதாது என்று, அவளுடைய தந்தை குற்றவாளி என்று நம்பிய அவளுடைய நிறுவனம், அவள் இடையில் பயிற்சியை முறித்துக்கொண்டு வெளியேறியதால், வேலை நீக்கம் செய்யப்படுகிறாள் என்று கண் துடைப்புக்காக ஒரு காரணத்தைக் கூறி வேலையிலிருந்து நிறுத்திவிட்டது.
சொல்லப்போனால் அது அவளுக்குக் கவலைக்குப் பதில் பெரும் நிம்மதியைத்தான் கொடுத்தது.
தந்தையை வெளியே கொண்டுவருவதற்கான முயற்சியில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் இறங்கலாமே. அதைச் செயலிலும் காட்டத் தொடங்கினாள் சர்வமகி.
இனித் தந்தையை எப்படி வெளியே கொண்டுவருவது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போதுதான், தந்தையின் நண்பனான நடராஜன், அவளைப் போய் கனடாவின் முதலாம் தரத்தில் தற்போது இருக்கக்கூடிய, பெரிய குற்றவியல் சட்டத்தரணியான அநேகாத்மனைப் போய்ப் பார்க்கச் சொல்லிக் கூற, உடனேயே கிளம்பிவிட்டாள்.
அவளுடைய அவசரத்திற்கு நியமனம் கிடைத்தால் அல்லவோ. இரண்டு கிழமை கழித்துத்தான் கிடைத்தது.
அவளுக்கு அந்தப் பெயரே விசித்திரமாக இருந்தது. அநேகாத்மன். பல உயிர்களை உடையவன், அல்லது பல இடங்களில் ஒரே நேரம் நிற்கக் கூடியவன் என்று பொருள். சர்வ வல்லமை பொருத்திய அந்த சிவபிரானின் பெயர். அவனால் அவளுக்கு உதவி கிடைக்குமா?
மனம் நிறைந்த நம்பிக்கையுடன் அவனைச் சந்திக்கச் சென்றாள் சர்வமகி.
அவனுடைய பிரமாண்டமான அலுவலகத்திற்குள் நுழைந்தவள், முன்னால் நின்றிருந்த வரவேற்பாளரிடம் செய்தியைக் கூற, அவளை ஒரு இருக்கையில் அமருமாறு பணிந்துவிட்டு, தொலைப்பேசியில் செய்தியைக் கூறினாள். மறு பக்கமிருந்து என்ன பதில் வந்ததோ,
“யெஸ் சார்…” என்றுவிட்டு தொலைப்பேசியை வைத்தாள்.
ஐந்து நிமிடம் கழிய, “மிஸ் சர்வமகி… யு கான் கோ நவ்…” என்று அவள் போகும் பாதையைக் கூறி அனுப்பிவிட, இவள் உள்ளே சென்றாள்.
ஒரு சட்டத்தரணிக்கு இத்தனை காவலாளி தேவையா? வியப்பாக இருந்தது சர்வமகிக்கு. அந்த இடத்தைப் பார்த்ததும், அவருக்குக் கொட்டவேண்டிய பணத்தின் அளவும் அதிகமாக இருக்கும் என்பது புரிந்தது. ஆனால் பணத்தைப் பார்த்தால் தந்தையைக் காப்பாற்ற முடியாதே… இருக்கும் வீட்டை விற்றாவது தந்தையைக் காப்பாற்ற வேண்டுமே…
ஒரு வித அச்சத்துடன் உள்ளே நுழைந்தவள், மேசையின் மறுபுறமிருந்தவனைக் கண்டதும் வழிகளை மூட மறந்தவளாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஏதோ ஒரு ஃபைலைக் குனிந்து படித்துக்கொண்டிருந்தவன், இவள் உள்ளே வரும் அரவம் கேட்க, சற்று விழிகளை மட்டும் நிமிர்ந்து இவளைப் பார்த்தாள்.
இவளைக் கண்டதும், வியப்பு முகத்தில் தெரிய நிமிர்ந்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு, தன் காலின் மீது காலைப் போட்டான். விரலிடுக்கில் வைத்திருந்த 24 காரட் தங்கப் போனாவினால், முன் இருக்கையைச் சுட்டிக் காட்டி,
“டேக் யுவர் சீட் என்றான்…”
அந்தக் குரலின் அழுத்தமும், ஆழமும், ஏனோ சர்வமகியை சிலிர்க்க வைத்தது.
அவள் எதிர்பார்த்து வந்தது, நாற்பது வயதுடைய மனிதரை… ஆனால் இவன்…
இருபதுகளின் பிற்பகுதியிலிருந்தான். என்ன ஒரு இருபத்தேழு, இருபத்தெட்டு இருக்குமா? இருக்கும்.
கிட்டத்தட்ட ஆறடிக்கும் நான்கு அங்குலம் கூடுதலாக இருக்கக் கூடிய உடல் என்பது அவன் இருக்கும் முறையைவைத்தே தெரிந்தது. மேசைக்கு மேல் அகன்றிருந்த மார்பும், கோர்ட்டை மீறித் தெரிந்த தினவெடுத்த தசைகளும், அவனைக் குத்துச்சண்டை வீரன் போலக் காட்டியது. அறிவைக் கூறும், சற்று அகன்ற நெற்றி. அடர்ந்த புருவம். கூரிய ஆழமான விழிகள். தொட்டால் குத்துவது போன்ற நாசி. அழுத்தமான உதடுகள். அதற்கு மேல், அடர்ந்த மீசை. கறுப்பும் வெள்ளையும் என்று சொல்ல முடியாத பொது நிறம். சுருண்ட கரிய நிறக் கேசம். நேர்த்தியாக அணிந்திருந்த கறுப்பு நிற சூட், வெள்ளை ஷேர்ட், தோதாகக் கறுப்பு நிற டை. மேசையிலிருந்த கரத்தின் சுத்தம் அவளை வியக்கவைத்தது. ஒட்ட வெட்டிய கை நகத்தில் கூட, அத்தனை சுத்தம். ஒரு மனிதனின் கை நகங்கள் கூட ஆண்மையைப் பிரதிபலிக்குமா? வியந்தவள், நிச்சயமாக இவன் படம் நடிக்கப் போனால் ஹாலிவூட் நடிகர்களை ஓரம்கட்டிவிடுவான் என்று புரிந்தது.
தன்னைப் பார்த்துத் திகைத்து நின்றவளைக் கண்டவன் முகத்திலிருந்த இதம் மறைந்து, அதில் சற்று எரிச்சல் தொனிக்க,
”ப்ளீஸ் சிட்…” என்றான். அதன் பிறகுதான், அவன் கூறியும் அமராமல், அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பது, அவளுக்குப் புரிந்தது.
உடனேயே சுயநினைவு பெற்றவளாக இருக்கையில் அமர்ந்தாள் சர்வமகி. அவளுக்குத் தன்னை நினைத்தே பெரும் அவமானமாக இருந்தது. ஒரு ஆண்மகனைப் போய்க் கண்டதைக் காணாததுபோலப் பார்த்தால், அவன் எரிச்சல் படாமல், வாழ்த்தியா வணங்குவான்?
“யெஸ்… வட் கான் ஐ டூ ஃபோர் யு?” என்று கேட்டதும், முதலில் தன்னை அறிமுகப் படுத்த,
“யேஸ் ஐ நோ… நீங்கள் வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்…” என்றான் அவன் அழுத்தமாக.
அதிகம் பேசுவது அவனுக்குப் பிடிக்காது என்று புரிந்தது. உடனே, தாமதிக்காமல், தான் கூறவந்ததை அப்படியே ஒப்பித்தாள்.
முதலில் அலட்சியமாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில், அவள் சொல்லச் சொல்ல அவனுடைய முகம் கடினமாக மாறத் தொடங்கியது. தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் தன்னையே வெறித்துப் பார்ப்பதை அறியாத சர்வமகி, நடந்தவற்றைத் தலை குனிந்தவாறு வேதனையில் குரல் தளதளக்கக் கூறி முடித்தாள்.
கூறி முடித்ததும், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இதுதான் சார் நடந்தது… என் தந்தை எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவருக்காக நீங்கள்தான் வாதாடி அவரை வெளியே கொண்டு வரவேண்டும் சார்… ப்ளீஸ்…” என்றபோது அவளுக்கு விழிகளில் கண்ணீர் முட்டி நின்றது.
அவளை உற்றுப் பார்த்தவன், தன் புருவத்தைச் சுருக்கினான். தன் இருக்கையில் நன்கு சாய்ந்தமர்ந்தவன், இடது முழங்கையை மடித்து, லாவகமாகக் கதிரையின் கைப்பிடியில் ஊன்றியவாறு, கரத்திலிருந்த இருபத்து நான்கு கரட் கோல்ட் பேனாவை, கண்ணிமைக்கும் நேரத்தில் விரல்களுக்குள்ளாகச் சுழற்றி சுழற்றி வட்டமடித்தான். அவனுடைய கூரிய விழிகள் அவளைத் தலைமுதல் மார்புவரை அலசின.
‘சுண்டினால் சிவந்து போகும் வெண் நிறம், நீண்ட விழிகள். அவற்றிலே பெரிய கருமையான கண்மணிகள். வில் போன்ற அடர்ந்த புருவம். நடுவிலே சிறிய செஞ்சாந்துப் பொட்டு. அதிகம் சுருட்டையில்லாத அடர்ந்த முடிக் கற்றைகள். மேசைக்கு மறு புறம் அமர்ந்திருந்ததால், அது எது வரை நீண்டிருந்தது என்று தெரியவில்லை. மெல்லியதாக நடுங்கிய சிவந்த இதழ்கள். சங்குக் கழுத்து. ஆணுக்கே உரித்தான பார்வையாக அவளுடைய மார்பைச் சற்று அழுத்தமாக ஒரு நிமிடம் இமை மூடாது பார்த்தவன், மேலும் தன் பார்வையை அவள் விழி வரை கொண்டு சென்றான்.
கவர்ச்சியில்லாத சாதாரண ஆடைதான். மிகவும் எளிமையாகவே அதுவும் பேரழகியாகவே இருந்தாள். ஆனால் இதையெல்லாம் காட்டி அவனை மயக்கிவிடலாம் என்று அவள் எண்ணினால், அது அவளுடைய முட்டாள்தனம்… ‘என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இருக்கும் அழகை வைத்துச் சாய்த்துவிடலாம் என்று எண்ணினாளா? அத்தனை சாதாரணமானவனா நான்… என்ன தைரியம் இவளுக்கு… என்னை யார் என்று எண்ணினாள்? வேலை வெட்டி இல்லாதவன் என்றா? என் முன்பாகவே வரத் தகுதியில்லாத கீழ்த்தரமானவள்… இவள் எனக்குச் சமனாக இருந்து பேசுவதா?’ சினங்கொண்டு அவளை வெறித்துப் பார்த்தவன், இது வரையும் அவளை அங்கே இருக்க விட்டதே பெரும் தவறு என்று நினைத்தவன் போன்று அவளை எரிப்பதுபோலப் பார்த்தான்.
“எங்கே வந்து பிச்சை எடுக்கிறாய்? உன் அழகைக் காட்டி என்னை மயக்கிவிடலாம் என்று எண்ணினாயா? அதற்கு நீ வேறு யாரையும்தான் பார்க்கவேண்டும்…” என்றவாறு அவன் இருக்கையை விட்டு எழ, அவன் எழுந்த வேகத்தில் இவளும் ஒன்றும் புரியாது, பயத்துடனே எழுந்து நின்றாள்.
அவனுடைய திடீர் கோபம் அவளை ஏனோ நடுங்கச் செய்ய, பாயும் புலியிடம் சிக்கிய மான் போல, மெய் பதற, அதற்குத் தோதாக, விரல்களும் நடுங்கத் தொடங்கியவாறு மருண்டவாளாக நின்றிருந்தாள்.
“சா… சார்…” என்றாள் வெடவெடக்க.
“உனக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் தருகிறேன்… அதற்குள் நீ இந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும்… கொட் இட்” என்று அவன் கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப, சர்வமகி புரியாத குழந்தையென அதிர்ச்சியுடன் அவனை மலங்க மலங்கப் பார்த்தாள்.
இவன் என்ன சொல்கிறான்? எதற்காக திடீர் என்று என்னை வெளியே போகச் சொல்கிறான்… அதுவும் நீண்டநாள் பகையாளிபோல விரட்டுகிறானே… அப்படி கோபம் கொள்ளும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? சத்தியமாக அவளுக்குப் புரியவில்லை.
“சார்… நீ… நீங்கள்…” அவள் முடிக்கவில்லை, அவள் குரலைக் கேட்டதும், பெரும் சீற்றத்துடன், மேசையில் ஓங்கி அடிக்க, ஒரு முறை மேசையிலிருந்த அத்தனை பொருட்களும் துள்ளி அடங்கின. அதனால் அங்கே பெரும் சத்தமே. எழுந்து அடங்கியது.
அவனுடைய திடீர் சீற்றத்தையும், அதனால் எழுந்த விளைவுகளையும் எதுவும் புரியாத கையாலாகாத் தனத்துடன், விழிகள் கலங்க, பயத்தில் உடல் வியர்க்க, நடுக்கத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளின் அச்சமோ, இல்லை நடுக்கமோ அவனைச் சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லை.
“நீ என்ன நினைத்துக்கொண்டு இங்கே வந்தாயோ எனக்குத் தெரியாது… பட்… நீ நினைப்பது எதுவும் இங்கே நடக்காது… நீ எதற்கு இங்கே வந்தாய், உன்னுடைய மோட்டீவ் என்ன என்பதை என்னால் ஊகிக்கமுடியும். பட் உன்னால் என்…” என்றவன் தன் முடியைப் பிடித்துக் காட்டி, “இதைக் கூடப் பிடுங்க முடியாது… ஏன் என் நிழலைக் கூட உன்னால் எதுவும் செய்ய முடியாது…” என்று அலட்சியமாகச் சொன்னவன், அதன் பிறகும், தெளியாத அவள் அதிர்ந்த முகத்தைக் கண்டு, “லிசின்… நான் கொலைகாரன் ஆவதற்குள் நீ இந்த இடத்தை விட்டுச் சென்று விடுவது உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது… கெட் அவுட்… அன்ட் கெட் லொஸ்ட்…” என்று உறுமியவனை ஒன்றுமே புரியாமல் ஏறிட்டாள் சர்வமகி.
“சார்… சத்தியமாக நீங்கள்… என்ன சொல்ல…” என்று முடிக்கும் முன்பாக அவளை வெறித்தவன், அதற்கு மேல் உன்னோடு என்ன பேச்சு என்பது போல, அவளுக்கு முதுகு காட்டி நின்றவாறு, அலட்சியமாகத் தன் அகேயிருந்த தொலைப்பேசியின் ரிசீவரை எடுத்தான். ஒரு சில இலக்கங்களை அழுத்த, மறு கணம் ஒரு வாட்ட சாட்டமான மனிதன் உள்ளே வந்தான்.
“பாஸ்…” என்று அவன் அழைக்க, திரும்பினான். தன் இரண்டு உள்ளங்கைகளையும், மேசையில் பதித்துக் குனிந்தவாறு, புதியவனை ஏறிட்டவன். அங்கே நின்றிருந்த சர்வமகியை விழிகளால் காட்டி,
“இன்னும் இரண்டு நிமிடங்களில் இவள் இந்தக் கட்டடத்தை விட்டே வெளியேறவேண்டும்… அதனால் அவர்கள் போவதற்கான பாதையைக் காட்டுங்கள்…” என்று ஆங்கிலத்தில் கூற, அந்த பாதுகாப்பாளன் அவன் கட்டலையை நிறைவேற்ற அவளை நெருங்கினான்.
வேகமாக இரண்டடி பின்னால் வைத்தவள், அங்கேயிருந்த கதிரையில் தட்டுப்பட்டு சமநிலை தவறி அந்த இருக்கையிலேயே மீண்டும் தொப் என்று அமர்ந்தாள், அவளை நெருங்கிய அந்த காவலாளி,
“மாம்… ப்ளீஸ்…” என்று வாசலைக் காட்ட, அந்த காவலாளியிடம் விழிகளாலேயே இறைஞ்சியவள்,
“ப்ளீஸ்… ஒரு நிமிஷம்… இப்போது போய்விடுவேன்,” என்று நடுங்கும் குரலில் கூறியவள், திரும்பி அநேகாத்மனைப் பார்த்தாள். எதற்காக இவன் திடீர் என்று தன்னிடம் கடுமை காட்டுகிறான் என்பதும், எதற்காக அவன் தன்னை இத்தனை கோபத்துடன் வெளியேற்றுகிறான் என்பதையும் அறியவேண்டும் என்கிற உந்துதல் அவளை ஆட்கொண்டது.
இது வரை யாரும் அவளிடம் இத்தனை கடுமையாக நடந்துகொண்டதில்லை. அவள் அவ்வாறு பிறர் நடக்க வழிவகுத்ததும் இல்லை.
ஒரு மனிதன், இதுவரைத் தன்னைக் கண்டிராத ஒருவன், இத்தனை வெறுப்புக் காட்டுகிறான் என்றால், அங்கே ஏதோ ஒரு தவறு இருக்கத்தானே வேண்டும். அது என்ன என்பதைத் தெரியாமல், அவளால் அடுத்த அடிகூட எடுத்து வைக்கமுடியவில்லை.
“ப்ளீஸ் சார்… நான்… நான் போய் விடுகிறேன்… ஆனால் ஏதோ காரணத்திற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அது ஏன் என்றுதான் என்னால் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியவில்லை… தயவு செய்து… எதற்காக என்னை வெளியேறச் சொல்கிறீர்கள், எதற்காக உங்களுக்கு என் மீது இத்தனை கோபம், வெறுப்பு… என்று சொல்லுங்கள்…” என்றாள் தவிப்புடன்.
அப்படியே ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக அவனுக்கு அவள் மீது கோபம் வந்திருந்தால், அந்தக் கோபத்தை நிச்சயமாக அவளால் போக்க முடியும். அதற்கான காரணத்தை அறிந்து, அதற்குரிய விளக்கத்தைக் கூறினால், நிச்சயமாக இவன் தன்னைப் புரிந்துகொள்வான். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டால், தன் தந்தைக்கு ஆதரவாக அவன் நிச்சயமாக வழக்காடுவான் என்று அவள் முழுதாக நம்பினாள்.
ஒரு கணம் அவளை ஆழப் பார்த்தவனுக்கு அவளுடைய புரியாத முகம் ஒரு கணம் யோசனையைக் கொடுத்தாலும், மறுகணம், எல்லாம் நடிப்பு…’ என்று இளக்காரமாக நினைத்தவன், திரும்பி அந்த காவலாளியைப் பார்த்து, தன், வலது கரத்தைத் தூக்கி இரு விரல்களை மட்டும் அசைத்து, வெளியே போகுமாறு, உத்தரவிட, அவன் தலை வணங்கிவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியே சென்றதும், சர்வமகியைப் பார்த்து,
“தூங்குகிறாயா? இல்லை தூங்குவதுபோல நடிக்கிறாயா?” என்றான் சற்றும் இளகாதவனாக.
“சார் சத்தியமாக என் மனதறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. வீடாகட்டும், வேலைத்தளமாகட்டும், ஒரு போதும் நான் தவறு இழைத்ததில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் உங்களைப் பார்க்காமலே, உங்களைத் தெரியாமலே, புண்படுத்தியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரிகிறது… பட் அது எங்கே, எப்படி என்றுதான் தெரியவில்லை. தெரிந்தால், அதற்குரிய விளக்கத்தையும் உங்களிடம் கூறமுடியுமில்லையா… என் மீது தவறு இல்லை என்பதைத் தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக என் அப்பாவைக் காப்பாற்றிக் கொடுப்பீர்கள் அல்லவா…” என்றாள் அவள் அவனுக்குப் புரியவைத்துவிடவேண்டும் என்கிற வேகத்தில்.
அதைக் கேட்டதும், அவன் கடகட எனச் சிரிக்கத் தொடங்கினான். ஒருவாறு சிரித்து ஓய்ந்தவன்,
“அடேங்கப்பா… நீ மட்டும் நடித்தாய் என்றால் அந்த ஆஸ்கார் விருது உனக்குத்தான். உன்னால் மட்டும் எப்படி இப்படி நடிக்க முடிகிறது. அது சரி கொலைகாரன் மகளுக்கு நடிக்கச் சொல்லிக்கொடுக்கவேண்டுமா என்ன?” என்று பெரும் ஏளனத்துடனும், இளக்காரத்துடனும், கூடவே சீற்றத்துடனும் அவன் கூற, ஒரு கணம் சர்வமகி ஆடிப்போனாள்.
ஏதோ ஒரு காரணத்திற்காக அவள் மீது அவன் கடுங்கோபத்திலிருக்கிறான் என்று தெரியும். ஆனால், இத்தனை பெரும் வெறுப்பை வைத்திருக்கிறான் என்று அவள் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. அதுவும் அவளைக் கொலைகாரனின் மகள் என்றது அவளால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னை மறந்து,
“சார்…” என்று அதிர்ச்சியுடன் ஏறத்தாழ கத்தினாள் சர்வமகி.
“கொலை காரன் மகளா… சார்… என் அப்பா எந்தக் கொலையும் செய்யவில்லை… ப்ளீஸ் என்னை நம்…” அவள் முடிக்கவில்லை,
“ஸ்டாப் இட்…” என்கிற அவனுடைய கர்ஜனை அவளுடைய வாயை அழுந்த மூடச் செய்தது.
“என்ன சொன்னாய்… உன் அப்பன் கொலைசெய்யவில்லை என்றா… யாரிடம் வந்து என்ன சொல்கிறாய்… என் தந்தையை உன் அப்பன் கொன்றான். அவனைக் காப்பாற்ற என்கிட்டேயே வருகிறாயே… நீ எவ்வளவு பெரிய கிரிமினலாக இருக்கவேண்டும்… ஒருவேளை என் அப்பாவைக் கொன்றதுபோல, நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாயா?” என்று அவன் நக்கலாக அவளிடமே வினாவ, சர்வமகி ஆடிப்போனாள்.
என்ன சொன்னான்? அவன் தந்தையை அவள் தந்தை கொன்றாராமா? அப்படியானால் இவன் அந்த வெங்கடேஷின் மகனா? சர்வமகிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. கூடவே புரியாத புதிரும் ஓரளவு விடுபட்டது.
வெளியே எதற்காக இவனுக்கு இத்தனை பாதுகாப்பு என்று எண்ணினாளே… தன் மேல் எதற்கு இத்தனை சீற்றம், என்று கலங்கினாளே… அத்தனைக்கும் காரணம் இதுதானா….
“கடவுளே…” என்று வதங்கியவள், தன்னையும் மீறி,
“நீ… நீங்கள்… அந்த… வெங்கடேஷின்… ம… மகனா?” என்றாள் நாக்கு அண்ணாக்குடன் ஒட்ட.
“ஓ…இது தெரியாமல்தான் வந்திருக்கிறாயாக்கும்… இதை நான் நம்பவேண்டும்… இதற்கு யாராவது ஒருவன் காதில் பூ சுற்றியிருப்பான் அவனிடம் போய் கூறு… என்ன தைரியம் உனக்கு…” என்று அவன் மேலும் சீற, சர்வமகி, தான் அமர்ந்திருந்த கதிரையின் சட்டத்தை அழுந்தப் பற்றிக்கொண்டாள். அவளுடைய முகம், இரத்தப்பசையின்றி வெளுத்துப்போயிருந்தது.
இடக் காரம் தாமாக எழுந்து நெற்றிப்பொட்டை அழுத்திக்கொடுத்தது.
நல்லவேளை அவள் இருக்கையில் அமர்ந்திருந்தாள். இல்லை என்றால், அந்த அதிர்ச்சியான செய்தியில் அவள் நிச்சயமாக மயங்கி விழுந்திருப்பாள்.
“நீங்கள் உண்மையாக… வெங்கடேஷ் சாரின் மகனா…” என்றாள் இன்னும் நம்ப மாட்டாதவளாக…
“ஏன்…அதற்குச் சாட்சி வேண்டுமோ?” என்று பெரும் எகத்தாளமாகக் கேட்க, அதற்கு மேல் அங்கே நிற்கமுடியாது என்பதைப் புரிந்தவளாக இருக்கையை விட்டு மெதுவாக எழுந்தாள்.
அவளுடைய நம்பிக்கை அத்தனையும் தகர்க்கப்பட்டு விட்டன… எப்படியும் இவன் தன் தந்தையை வெளியே கொண்டுவருவான் என்று நம்பியிருந்தாளே. அத்தனை நம்பிக்கையும், சொடக்குப் போடும் கணத்தில் தவிடுபொடியாகிவிட்டது.
விதிதான் எத்தனை வலியது… வலிக்க வலிக்க அடித்துவிட்டுக் கைக்கட்டி வேடிக்கைபார்க்கிறதே…
ஏனோ, அவன், கொலை செய்யப்பட்டவரின் மகன் என்றதும், அவளால் தாளமுடியவில்லை. எவன் தன் தந்தைக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறானோ, அவனிடமே போய், தன் தந்தையின் விடுதலைக்காக உதவி கேட்டு வந்தாளே… இந்த நிலையில் அவளைக் கண்டு சீறாமல், கைகுலுக்கி ஆதரவா தெரிவிக்கப் போகிறான்… அவளுடைய கழுத்தைப் பிடித்துத் தள்ளாதது ஆச்சரியமே. ஐயோ… இனி அவள் தந்தையின் நிலை.
நினைக்கும் போதே, சர்வமகிக்குச் சர்வமும் நடுங்கிப்போனது. கால்கள் நடுங்கிப் பலமிழந்துவிடும் போலச் சரியத் தொடங்கியது. உடனேயே அருகேயிருந்த ஒரு கதிரையைப் பற்றித் தன்னை நிலைப்படுத்த முயன்றாள். தலைக்குள் டமாரம் அடிக்கத் தொடங்கியது.
‘பொறு வலியே… பொறு… இப்போது என்னைத் தீண்ட இதுவல்ல நேரம்… நான் யோசிக்கவேண்டும். இவன் சொன்னதை நான் ஜீரணிக்கவேண்டும்… கொஞ்சம் பொறுத்துக்கொள்… இப்போது என்னைவிட்டுப் போய்விடு…’ என்று தலையில் குடையத் தொடங்கிய வலியிடம் மன்றாடிப் பேரம் பேசினாள்.
அதுவோ, நீ சொல்லி நான் என்ன கேட்பது என்று மேலும் குடைச்சல் கொடுக்க, கரம் கொண்டு தன் தலையை அழுந்தப் பற்றி, வலியைப் போக்க முயன்றாள். முடியாமல், நிமிர்ந்து அருகேயிருந்தவனைப் பார்த்தாள். முன்னால் நின்றிருந்தவள் சற்று மங்கலாகத் தெரிய, தன் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி அவன் உருவத்தைச் சரி செய்ய முயன்றாள். பார்வையோ மேலும் மங்கலாகத் தெரிய, அவன் முன்னால் தான் உடைந்துபோகக் கூடாது என்கிற வேகம் எழத், தன் கைப்பையில் கரத்தை விட்டு எதையோ எடுக்க முயன்றாள். கரமோ, கைப்பையைத் தவிர, மற்றைய இடமெல்லாம் துழாவ முயன்று இறுதியில் கைப்பையில் தஞ்சம் புகுந்தது.
அவனோ கண்ணிமைக்கும் நேரத்தில் அவளருகே வந்தவன், அவள் கைப்பையை அவளிடமிருந்து பறித்து எடுத்தான்.
“கைப்பையில் என்ன வைத்திருக்கிறாய்? துப்பாக்கியா? அத்தனை சுலபத்தில் என்னைச் சுட்டுவிட்டு நீ தப்பிக்கலாம் என்று நினைத்தாயா?” என்றவன், அவள் கைப்பையைத் தன் மேசையில் கவிழ்த்தான். கைப்பையிலிருந்த அத்தனை பொருட்களும், சிதறி விழுந்தன.
அதில் விழுந்த பொருட்களை உன்னிப்பாகப் பார்த்தான் அநேகாத்மன். கொஞ்சம் சில்லறை, கொஞ்சம் பணம். கைதுடைக்கும் பேப்பர். கார் திறப்பு. கூடவே வீட்டுத் திறப்பு. ஒரு சின்ன டவல். அப்படியே ஏதோ ஒரு சில மாத்திரைகள். அவற்றைத் தவிர, சந்தேகப்படும்படி எதுவும் இருக்கவில்லை. யோசனையுடன் திரும்பிப் பார்த்தவன், அவள் நிற்கும் கோலத்தைக் கண்டு, கொஞ்சம் நிதானத்திற்கு வந்தான்.
“ஹேய்… ஆர் யு ஓக்கெ… டோன்ட் கிரியேட் எனிதிங் நியூ… இதையெல்லாம் நான் நம்புவேன் என்று நீ நினைத்தால் அது உன் முட்டாள் தனம்…” என்று அவன் கடுமையாகக் கூற, ஒரு கணம் தெளிந்த பார்வையில், மேசையில் கொட்டியிருந்த பொருட்களில் தெரிந்த மாத்திரை தட்டுப்பட்டது.
மீண்டும் கண் பார்வை மசமசக்க, ஒரு குத்து மதிப்பில் இரண்டு அடிகளை எடுத்து வைத்து மேசையை அடைய முயல, இது வரை தாக்குப்பிடித்ததே பெரிய காரியம் என்பதுபோல, கால்கள் வலுவிழந்து சரிய, அதைக் கண்டவன், இரண்டெட்டில் சர்வமகியை நெருங்கி அவள் இடையினூடாகக் கரத்தை எடுத்துச் சென்று பின் முதுகில் தன் கரம் கொடுத்து, தரையில் விழாதவாறு தன்னோடு தாங்கிக்கொண்டான்.
அவன் இறுகிய பிடியில் தன்னை நிலை நிறுத்தியவள், அவனிடமிருந்து விலக முயன்றவாறே. அவனுடைய மேசையை வந்தடைந்தாள். நடுங்கும் கரங்களால், அந்த மேசையை வருடியவளின் கரங்களில் அந்த மாத்திரை தட்டுப்பட, அதை எடுத்தாள்.
ஏதோ மலையைக் கூட சுலபத்தில் புரட்டிவிடலாம் என்பது போல, பலமிழந்த கரங்களால், அந்த மாத்திரையின் அட்டையைக் கிழிக்க முயன்று தோற்றாள். நடுங்கிய கரங்களும், மங்கிய பார்வையும், அவளை நிலையிழக்கச் செய்தன.
இயலாமையில் அவளுக்கு அழுகை வேறு வந்தது. அந்தக் கொஞ்ச நிமிடத்தில், சர்வமகி படும் சிரமத்தைக் கண்டவன், கல்நெஞ்சனாகவே அவளை வெறித்துப் பார்த்தான்.
அந்த மாத்திரையின் அட்டையை அவள் கிழிக்க முயன்ற விதம், அவனைச் சற்றுத் தடுமாற வைத்ததோ, சற்றுப் பொறுத்துப் பார்த்தவன், ஒரு பொறுமையிழந்த மூச்சுடன் அவளை நெருங்கி அவள் கரத்திலிருந்த மாத்திரையைக் கிட்டத்தட்டப் பறித்து, உடைத்து அவளிடம் நீட்டினான்.
நன்றியுடன் பெற்றுக்கொண்டவள், அதை வாயில் போட்டு விழுங்க முயன்றாள். ஏற்கெனவே காய்ந்திருந்த தொண்டையினூடாக, மாத்திரை சுலபமாக இறங்க மறுக்க, தொண்டை கமறியது.
அவள் விழுங்கச் சிரமப்படுவதைக் கண்டவன், மேசையில் மூடிவைத்திருந்த தண்ணீர் கிளாசை எடுத்து அவளிடம் நீட்டினான். கரம்கொண்டு அதனைப் பற்ற முயன்றவள், முடியாமல் கரங்கள் நடுங்க, அவன் முன்னால் இத்தனை பலவீனமாக இருக்கிறோமே என்கிற அவமானமும், வேதனையும் அவளை மேலும் சோர்வுறச் செய்ய, கன்னத்தில் கண்ணீர் தாராளமாக வழிந்து ஓட, கரத்திலிருந்த கிளாசும், அவளுடைய கைகளுக்குப் போட்டியாக நடுங்கத் தொடங்கியது.
அவள் கரத்தில் வைத்த தண்ணீர் கிளாஸ் எந்த நேரமும் தரையில் விழுந்து உடையலாம் என்பதைப் புரிந்துகொண்டவன், அவள் கரத்திலிருந்த கிளாசைப் பறித்துத் தானே அவள் வாயருகில் வைத்துப் பருக்கி விட, தன் மேல் நீர் விழுவதைக் கூடப் பொருட்படுத்தாது ஒரு மிடறு விழுங்கி, மாத்திரையை வயிற்றுக்குள் அனுப்பினாள்.
இரண்டு பெரிய மூச்சுக்களை உள் இழுத்து வெளிவிட்டவளுக்கு அப்போதும், அவள் உடல் கட்டுப்பாட்டில் இல்லாமல் சண்டித்தனம் செய்தது. விழிகளை அழுந்த மூடித் தன் தலையைப் பின்புறமாகச் சரித்து, அந்த வலியிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்றாள். அதில் ஓரளவு வெற்றியும் பெற, விழிகளை மெதுவாகத் திறந்தாள். இப்போது ஓரளவு பார்வையில் தெளிவு வந்தது.
“யு… ஓக்கே…” என்றான் அவன். அந்தக் குரலில் சிறிதும் பரிவு இருக்கவில்லை. பதிலுக்குத் தாராளமாகக் கோபமும், எரிச்சலும்தான் வெளிப்பட்டது.
“யெ..யெஸ்… தாங்கஸ்…” என்று நன்றியுறைத்தவள்,
சிரமப்பட்டு, மேசையில் சிதறியிருந்த தன் பொருட்களை இன்னும் கட்டுக்கள் வராத கரங்களால், எடுத்துக் கைப்பையில் போட்டு தன் தோளில் மாட்டிக்கொண்டாள். மீண்டும் கால்கள் பலமிழந்துவிடும் போல நடுங்கத் தொடங்கின.
எங்கே விழுந்துவிடுவாளோ, என்று அவளைப் பற்ற அருகே வந்தான் அநேகாத்மன். அவன் நோக்கம் புரிந்தவளாக, இரண்டெட்டுத் தள்ளி நின்றவள், தன் வலக்கரத்தைத் தூக்கிக் காட்டி,
“ஐ… ஐ ஆம்… ஓக்கே… தாங்க்ஸ்…” என்றாள் அவன் உதவியை மறுத்தவளாக.
இன்னும் கொஞ்சம் தாமதித்தாலும் மீண்டும் தரையில் சரிந்து விழும் நிலையில் இருக்க, மறுபடியும் அவன் முன்னால், தன் பலகீனத்தைக் காட்டப் பிடிக்காதவளாக, சிரமப்பட்டுத் தன் வலியை அடக்க முயன்றவளின் மனதில் தந்தையின் எண்ணம் பூதாகரமாகத் தாக்கியது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனைத் தவிப்புடன் பார்த்தாள் சர்வமகி. அவன் நினைத்தால் மட்டும்தான் தன் தந்தையைக் காப்பாற்ற முடியும் என்று புரிந்தது.
ஆனால் பாறையால் செய்த கோட்டைக்கு, இரும்புக் கதவுகள் போட்டுப் பூட்டியதுபோல, காதையும், மனதையும் இறுக வைத்துக்கொண்டு, கேட்கமாட்டேன் என்பவனிடம் போய் என்னவென்று சொல்வது…
“ஓ… அப்பா… நான் என்ன செய்யட்டும்… எப்படி உங்களை வெளியே கொண்டுவரப்போகிறேன்…” என்று விழிகளை மூடிக் கலங்கியவள், இனி அங்கே நின்று பயனில்லை என்பது புரந்தவளாக, வெளியேற முயன்றாள்.
அதே நேரம் அவளுடைய பலவீனத்தைக் கைகட்டி, அலட்சியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு, ஏனோ அவள் என்ன மாத்திரை எடுத்தாள் என்று அறியவேண்டும் என்கிற தேவையற்ற பரபரப்பு அவனை ஆட்கொண்டது. அவள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அவனால் சிந்திக்க முடியவில்லை. அதற்குரிய காரணமும் புரியவில்லை.
“நீ எதற்காக மாத்திரை எடுத்தாய்?” என்றான் அவன் கறாராக.
அவளோ உனக்கென்ன பதில் கூறுவது…’ என்பதுபோல, வாசல் கதவை நோக்கிச் செல்லத் தொடங்க,
“நான் ஒரு கேள்விகேட்டேன்…” என்றான் அவன் அதிகாரமாக.
அவளோ உனக்கென்ன பதில் கூறுவது என்பதுபோல அறைக்கதவைத் திறக்கப்போக, அவன் தன் கைப்பேசியைக் கரத்தில் எடுத்து, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு, அதில் எதையோ அழுத்தினான்.
சோர்வுடன் அவன் அறைக்கதவைத் திறக்க முயல, கதவோ, நான் திறக்கமாட்டேன் என்று அடம்பிடிக்க, அநேகாத்மனை ஏறிட்டாள் சர்வமகி.
“ப்ளீஸ் சார்… கதவைத் திறவுங்கள்… நான் போகவேண்டும்…” என்றாள் எல்லையற்ற களைப்புடன். அந்த மாத்திரை வேறு தன் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது.
“போகலாம்… முதலில் என் கேள்விக்குப் பதிலைக் கூறு…” என்றான் அவன் பிடிவாதமாக.
அப்போதுதான் அவன் நினைத்ததைச் சாதிக்கும் ரகம் என்று புரிந்தது.
“அதைத் தெரிந்து என்ன சார் செய்யப்போகிறீர்கள்?” என்றாள் சர்வமகி சற்றுச் சலிப்புடன்.
“நத்திங்… ஜெஸ்ட் கியூரியோசிட்டி…” என்றான் அவன் தன் கைப்பேசியில் எதையோ நோண்டியவாறு.
“ப்ளீஸ் சார் கதவைத் திறவுங்கள்… நான் போகவேண்டும்…”
அவனோ காதில் எதுவுமே விழாதவன் போல, கைப்பேசியிலேயே தன் கவனத்தைச் செலுத்தியிருந்தான். அறியாமல் விடமாட்டான் என்பது புரிய,
“சார்… அது வெறும் தலைவலி மாத்திரை… இப்போதாவது கதவைத் திறவுங்கள்…”
“தலைவலிக்கு எடுக்கும் மாத்திரைபோல தெரியவில்லையே…” என்று அவன் சந்தேகத்துடன் மேலும் துருவ.
“இல்லை… எனக்கு சிவ்யர் சயனஸ் பிரச்சனை இருக்கிறது… அதற்கான மாத்திரைதான் இது…” என்றபோதே அவளுடைய தலைவலி சற்று மட்டுப்பட்டிருந்தது.
“இப்போ எப்படி இருக்கிறது? ஆர் யு ஓக்கே…” என்றான் அவன். கொஞ்சமே கொஞ்சமாய்… அக்கறை தெரிந்ததோ? ஆனால் அவன் முகம்மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இறுகிப்போய் இருந்தது.
அவள் ‘ஆம்’ என்று தலையாட்ட, தன் கைப்பேசியிலிருந்து எதையோ அழுத்த, அறைக்கதவு லாக் விடுபட்டது.
“குட்… நவ் லீவ் மை ப்ளேஸ்… ஐ டோன்ட் வோன்ட் டு சீ யுவர் ஃபேஸ் எனி மோர்…” என்றவாறு தன் இருக்கையில் வந்தமர்ந்தவனின் முகத்தில் அதீத கடுமை சற்று மட்டுப்பட்டிருந்தது.
கொஞ்சம் இளகியிருக்கிறானே… கடைசியாக தன் தந்தைமீது தவறில்லை என்பதையாவது அவனுக்குப் புரியவைக்கலாமே என்கிற எண்ணத்துடன்,
“சார்… உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது… ஆனால் எ… என் அப்பா… உங்கள் அப்பாவை…” அவள் முடிக்கவில்லை,
“கொன்றார்…” என்று இரக்கமில்லாமல் முடித்தான் அவன்.
“இல்லை… சார்… என் அப்பா உங்கள் அப்பாவைக் கொல்ல வில்லை… தயவு செய்து நம்புங்கள். அப்படியே என் தந்தை உங்கள் தந்தையைக் கொல்ல வேண்டுமானால், அதற்கு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் அல்லவா? என் அப்பாக்கு உங்கள் தந்தையைத் தெரியாது… அப்படி இருக்கிற போது அவர் எப்படி உங்கள் தந்தையைக் கொல்ல முடியும்? தயவு செய்து யோசித்துப் பாருங்கள்…” என்றாள் கலக்கத்துடன்.
“என் தந்தையை உன் தந்தை கொன்றதற்கான மோட்டீவைத்தானே கேட்கிறாய்? சொல்கிறேன். என் தந்தையின் வியாபார வளர்ச்சியால் நொடிந்து போன நிறுவனங்களில் உன் தந்தையின் நிறுவனமும் ஒன்று. அதனால் என் தந்தையைப் பழி வாங்க எண்ணியிருக்கலாம். இல்லா விட்டால் உன் தந்தை எதற்காகச் சம்பவம் நடந்த இடத்தை விட்டு ஓட வேண்டும்?” என்றவனை வேதனையுடன் பார்த்தாள் சர்வமகி.
“சாட்சி சந்தர்ப்பங்கள் மட்டும் இருந்துவிட்டால், அந்த மனிதன் குற்றவாளியாகிவிட முடியாது மிஸ்டர் அநேகாத்மன்… ஒரு வேளை உங்கள் தந்தையின் எதிரிகள் வேறு யாராவது இந்தக் கொலையை செய்திருக்கலாம் அல்லவா?” என்று மெல்லிய குரலில் கூறியவளை எரிச்சலுடன் பார்த்தான் அந்த அநேகாத்மன்.
“அந்த எதிரியே உன் தந்தை என்கிறேன்… பிறகென்ன… இதோ பார்… நீ இங்கே நிற்பதால் உனக்கு எந்தப் பயனும் கிடையாது. உன் தந்தையுடைய ஆயுள் தண்டனை என் கையில்தான். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நிற்கப்போவது நான்தான். எல்லா சாட்சியங்களையும் சேகரித்துவிட்டேன். இதைக் கோர்ட்டில் சப்மிட் பண்ணினால் போதும், ஆயுளுக்கும் அந்தாள் வெளியே வர முடியாது…” என்றவனுடைய கண்கள் சினத்தில் கொவ்வைப்பழம் போலச் சிவந்திருந்தன.
“ப்ளீஸ் சார்… கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… என் தந்தை கொலை செய்யக்கூடியவரல்ல…” என்றவளுடைய குரல் கம்மியிருந்தது.
இளகியிருந்த முகம் மேலும் பாறையாக இறுக,
“எனக்கு நிறைய வேலை இருக்கிறது… சோ…” என்று வாசலைப் பார்த்துக் கை காட்டிவிட்டு மேசையிலிருந்த ஒரு ஃபைலில் தன் கவனத்தைச் செலுத்தினான் அவளுடைய நேரம் முடிந்தது என்பதைக் கூறுவதுபோல.
அவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனுடைய கோபத்தையும், வேகத்தையும் பார்த்தால், இப்போதே அவள் தந்தைக்குத் தண்டனைவாங்கிக் கொடுத்துவிடுவான் போல இருந்தது.
அவனுடைய ஆக்ரோஷத்தைப் பார்த்தால் அவனைத் தடுத்து நிறுத்தமுடியாது என்பது புரிந்தது.
“நான் என்ன செய்வேன்… கிடைத்த ஒரே நம்பிக்கையும் பொய்த்துவிட்டதே…” என்று கலங்கியவள் வெளியேறத் திரும்பினாள்.
திரும்பியவளைச் சொடக்குப் போட்டு அழைத்தான் அந்த அநேகாத்மன்.
திரும்பாமலே நின்றாள் சர்வமகி. ஃபைலில் இருந்து பார்வையை விலக்காமலே,
“உன் தந்தையைச் சந்தித்தால் சொல்… எந்தக் கொம்பனாலும் அவரை வெளியே கொண்டு வரமுடியாது என்று…” என்று அதிகாரமாகக் கூறியவனை வேதனையுடன் திரும்பிப் பார்த்தாள் சர்வமகி.
“உங்கள் வேதனை எத்தகைய பாரதூரமானது என்று எனக்குத் தெரிகிறது மிஸ்டர் அநேகாத்மன். ஆனால் என் தந்தை கொலை செய்யவில்லை என்பது எனக்கும் தெரியும், அந்தக் கடவுளுக்கும் தெரியும். எது எப்படியோ… என் தந்தை குற்றவாளியில்லை என்று நிரூபிக்க யாராவது ஒருவர் அந்தக் கடவுள் போல வருவார்… நிச்சயமாக வருவார்…” என்று நம்பிக்கையுடன் கூறியவளை அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்தான் அநேகாத்மன்.
“யார் வந்தாலும்… ஏன் உன் கடவுளே வந்தாலும், உன் தந்தைக்கு ஆயுள் தண்டனை உறுதி…” என்று பெரும், ஏளனத்துடன் கூறியவனைக் கலக்கத்துடன் பார்த்தாள் சர்வமகி.
அந்தப் பார்வையில் என்ன இருந்தது? வலி, வேதனை, தவிப்பு புரிந்துகொள்ள மறுக்கிறாயே என்கிற அவலம்… ஏதோ ஒன்று அவனைச் சற்றுத் தடுமாற வைத்தது என்பது மட்டும் உண்மை. ஏனோ, அவளுடைய கண்களைப் பார்த்த அநேகாத்மனுக்கு எங்கோ வலிப்பதுபோல் இருந்தது.
அந்தப் புதிய உணர்வில், தன்னை நினைத்தே, அதிர்ந்தவன், வேகமாக அந்த உணர்வைத் துடைத்தெறிந்தவாறு, அவளை அலட்சியமாகப் பார்த்தான்.
அதற்கு மேல், பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டவளாக விழிகளை அழுந்த மூடி
“கடவுளே… எது நடந்தாலும், எங்களுக்குத் தாங்கும் சக்தியைத்தா…” என்று மனமாற இறைவனிடம் வேண்டியவள், மெதுவாக விழிகளைத் திறந்தாள். உடலோடு மனமும் அதீதமாய் சோர்ந்துபோனது. சற்றுத் தள்ளாடியவாறு வெளியேறினாள் சர்வமகி.
அவள் வெளியேறுவதைத் தலைகுனிந்து ஃபைலை வாசித்தவாறு, மண்டைக் கண்ணால் பார்த்தவன், எதுவோ உந்த, ஃபைலை ஒருபக்கமாகப் போட்டுவிட்டு, இருக்கையை விட்டு வேகமாக எழுந்தான்.
விரைந்து சென்று ஜன்னல்புறமாக வெளியே எட்டிப் பார்த்தான். சற்றைக்கெல்லாம், சர்வமகி, தளர்ந்த நடையுடன் நடந்து செல்வது தெரிந்தது. சற்றுத் தள்ளி பார்க் பண்ணியிருந்த கறல் பிடித்திருந்த, டொயோட்டா கம்ரி 94 மாடலில் அவள் ஏறி அமர்வது தெரிய, இவனையும் அறியாமல், இவனுடைய இரத்த அழுத்தம் எகிறியது.
‘இதையெல்லாம் யார் கார் என்று சொன்னார்கள்… இதில் ஏறி எப்படி பத்திரமாக வீட்டிற்குப் போய்ச் சேர்வாள்… கொஞ்சமாவது அறிவுவேண்டாம்…’ என்று தன்னை மறந்து கோபத்துடன் நினைத்தவன், எதுவோ உந்த, தன்னுடைய பின் பான்ட் பாக்கெட்டிலிருந்த செல்லை எடுத்தான்.
“கேர்வின்… இப்போது நம்முடைய அலுவலகத்தை விட்டு வெளியேறும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து செல். அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்றதும், எனக்குத் தெரியப்படுத்து.” என்று உத்தரவிட, அவனுடைய உத்தரவு மறு கணம் நிறைவேற்றப் படுவதுபோல, அவனுடைய உதவியாளின் கார், அந்த பில்டிங்கை விட்டு வெளியேறி, ஊர்ந்துகொண்டிருந்த அந்த டொயோட்டா கம்ரியை பின்தொடர்ந்து செல்லத் தொடங்கியது.
நிம்மதியுடன், தன் கைப்பேசியில் இன்னொரு இலக்கத்தை அழுத்த,
“ஹாய் அநேகாத்மன்… வட்கான் ஐ டூ ஃபோர் யு…” என்கிற குரல் உற்சாகமாக மறுபுறமிருந்து வர,
“டேவிட்… ஐ நீட் யுவர் ஹெல்ப்…”
“கமோன்… அநேகாத்மன்… உனக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறேன்… சொல்…” என்றான் அந்த டேவிட்.
“எனக்கு ஒருத்தரைப் பற்றிய முழுத் தகவலும் இன்னும் ஒரு மணி நேரத்தில் என் மேசைக்கு வந்தாகவேண்டும்… இட்ஸ் பேர்சனல்…” என்றான்.
“ஷூவர்… யார் அது…”
“சர்வமகி… சர்வமகி விஸ்வநாதன்”
(1) விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…
27) மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…
(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…
(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…