Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 9

(9)

மறு நாள் விதற்பரை எழுந்தபோது கால் வலியில் உயிரே போனது. பேசாமல் மருந்தைப் போட்டுவிட்டு உறங்கிவிடலாமா என்று கூடத் தோன்றிவிட்டிருந்தது. ஆனாலும் முடியாது. ஒப்படை முடிக்க வேண்டும். கூடவே பரீட்சை வேறு. நல்லவேளை பரீட்சை இருந்ததால், வேலைக்கு ஒரு கிழமைக்கு விடுப்புப்ப போட்டிருந்தாள். இல்லை என்றால் அவர்களுக்கு வேறு பதில் சொல்ல வேண்டும்.

எப்படியோ தயாராகிக் கட்டடத்திற்கு வெளியே வந்தபோது, அங்கே ஜிஎம்சி யுகொன் வாகனம் நின்றிருந்தது. சற்று உயரமான அந்த வாகனத்தைப் பார்த்துவிட்டு மேலும் நடையைக் கட்டத் தொடங்க, அந்த வாகனத்தின் கதவைத் திறந்தவாறு, வெளியே வந்தான் அவ்வியக்தன்.

தன்னைக் கடந்து சென்றவளைக் கண்டு,

“தற்பரை…” என்று அழைத்தான்.

அவன் குரலைக் கேட்டதும், மனம் பரபரக்க திரும்பி பார்த்தாள். அவ்வியக்தன்தான் நின்றிருந்தான்.

முன்னிரவுதான் தூங்க விடாமல் கனவிலும் நினைவிலும் வந்து தொல்லை செய்தான். இப்போது நேரில் வந்து தொல்லை செய்கிறானே. அவஸ்தையோடு அவனை நிமிர்ந்து பார்த்து,

“நீங்களா…? நீங்கள் எங்கே இங்கே…?” என்றாள்.

அவ்வியக்தனும், தன் விடுதிக்கு வந்தபோதே, விதற்பரையின் நினைவுகளைத் தூக்கித் தூரமாகப் போட்டுவிட்டதாகத்தான் நினைத்தான். ஆனால் ஆறு மணிக்குத் தூக்கம் தொலைந்து எழுந்தபோதே மனதில் வந்து நச்சரிக்கத் தொடங்கியிருந்தாள் விதற்பரை.

இப்போது எழுந்திருப்பாளா? குளித்திருப்பாளா? தேநீர் குடித்திருப்பாளா? சாப்பிட்டிருப்பாளா? கால் வலி மட்டுப்பட்டிருக்குமா? வலி தெரியாதிருக்க மருந்து எடுத்தாளா? என்று ஆயிரம் கேள்விகள் அவனைக் குடையத் தொடங்கின. என்னதான் முயன்றும் அவளுடைய நினைவுகளை அழிக்க முடியவில்லை.

பின் தன் மீதே கோபம் கொண்டவனாக,

“முட்டாள்… முட்டாள் அவளைப் பற்றிச் சிந்திக்காதே… இது சரியில்லை…” என்று திட்டியவன், குளித்து முடித்துத் தயாராகி, வேலைக்குக் கிளம்பினான். வண்டியை எடுத்துக் கொண்டு முக்கியத் தெருவை அடைந்த போது, அவனைக் கடந்து சென்றது ஒரு பேருந்து.

அதைக் கண்டதும் மீண்டும் விதற்பரையின் நினைவு அவனை அலைக்கழித்தது. ‘இன்று பல்கலைக் கழகத்திற்குப் பேருந்தில் போவதாகச் சொன்னாளே… இயலாத காலோடு பேருந்தில் ஏறிச் சமாளிப்பாளா? அங்கே அதிகக் கூட்டமிருக்குமே… அமர்ந்து செல்ல வசதி கிடைக்குமா? என்று வருந்தியவன், அவள் என்ன குழந்தையா? எப்படியும் சமாளித்து விடுவாள்’ என்று தேற்றிக்கொண்டு, போகவேண்டிய இடத்திற்கான தெருவில் வண்டியைத் திருப்ப எண்ணியபோதுதான் கவனித்தான், அவன் விதற்பரையின் கட்டிடத்தை நெருங்கியிருப்பதை.

இங்கே எப்படி வந்தோம்? என்று குழம்பியவனுக்கு, சிந்தனை வேறாக இருந்தாலும் செயல் அதற்கு மாறாக இருந்திருக்கிறது என்பது புரியப் பற்களைக் கடித்தான். மானசீகமாக தன்னையே திட்டியவன், அதற்கு மேல் தன் புத்தியோடு விவாதம் செய்யும் சக்தியற்றவனாக அவளுடைய கட்டடத்தின் முன்பாக வண்டியை நிறுத்தினான். நிறுத்தியதோடு விட்டானா? ஒரு வித பரபரப்போடு வெளியே வரும் விதற்பரைக்காககாத்திருக்கவும் தொடங்கினான்.

அவனை அதிக நேரம் காக்க வைக்காது, வண்டியை நிறுத்தி ஐந்து நிமிடங்களுக்குள் வந்துவிட்டிருந்தாள்.

அவளுடைய குழம்பிய முகத்தைக் கண்டவன், புன்னகையைச் சிந்தியவாறு,

“ஏன்மா…? வரக் கூடாதா என்ன?” என்று கேட்டவாறு, கதவைத் திறந்து

“சரி… வா… ஏறு… பள்ளியில் விட்டுவிடுகிறேன்…” என்றான்.

இவளோ பலமாகத் தலையசைத்து,

“இல்லை… இல்லை… நான் பேருந்திலேயே போய்விடுவேன்… எனக்கு அதுதான் வசதி” என்றவாறு எதிலோ தப்புவது போல அவனைக் கடந்து நடக்கத் தொடங்க, மறு கணம் அவளுடைய மணிக்கட்டு அவனுடைய வெம்மைக் கரங்களில் பட்டும் படாமலும் சிக்கிக் கொண்டது.

அந்தத் தொடுகை, இருவருக்குள்ளும் இனம் புரியாத உணர்வைப் பேரலையாய் எழச் செய்ய, அது கொடுத்த தாக்கத்தில், சடார் என்று தன் கரத்தை விட்டவன், அவளைப் பார்த்து,

“ஐ இன்சிஸ்ட்… ப்ளீஸ் கெட் இன் த கார்…” என்றான் தன்மையாய். இவளோ என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்துடன் நின்றிருக்க,

“என்னைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்காதே… தயவு செய்து வண்டியில் ஏறு…” என்று இதமாய்க் கூறியவாறு சற்றும் யோசிக்காமல் அவளுடைய புத்தகப் பையைக் கழற்றி எடுக்க, அதற்கு மேல் அவளாலும் மறுக்க முடியவில்லை. ஒரு பக்கப் புத்தி தப்பு என்றது. இன்னொரு புத்தி வண்டியில் ஏறு என்றது. வேறு வழியில்லாமல் இரண்டாவது மனம் சொன்னதைக் கேட்பவளாய் அவனுடைய வண்டியை நோக்கி நடந்தவள்,

“ஓக்கே தென்… ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்…” என்கிற கட்டளையோடு வாகனத்தில் சாய்ந்து நின்று தன் வலது காலின் ஊன்றுகோலைக் கழற்றி, அதை அவ்வியக்தனிடம் நீட்ட, அதை வாங்கிப் புத்தகப் பையோடு பின்னிருக்கையில் போட்டவன், பின் அவள் பக்கமாகத் திரும்பி, அவளைத் தன் கரங்களில் தூக்க, மீண்டும் அவளிடம் இனம் புரியாத அவஸ்தை கிளர்ந்து எழுந்தது. அது அடிவயிற்றில் எழுந்து நெஞ்சுவரை பாய்ந்து தொண்டையில் முட்டி நின்றது. அது கொடுத்த விளைவால், தன்னை மறந்து கீழ் உதட்டைக் கடித்தவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் தன் கரங்களில் ஏந்தியும் கனக்காத அந்த நிலவைத்தான் இமைக்காமல் பார்த்தான். வேண்டாம் இது சரியில்லை… இந்த உணர்ச்சிக்கு அடிமையாகாதே என்று ஒரு புத்தி எச்சரித்தாலும், வேண்டாம்… கிடைத்த சொர்க்கத்தை இழக்காதே. அவளை ஒரு போதும் கரங்களை விட்டு இறக்காதே.. உன் கூடவே வைத்துக்கொள் என்றது மறு புத்தி.

இரண்டு புத்திக்கும் இடையில் அல்லல் பட்டவனாய், தன் கரங்களிலிருந்தவளையே வெறித்தவன், எப்படியோ ஒரு வழியாக, சற்று உயரமாக இருந்த இருக்கையில் அவளை அமர்த்திவிட்டுப் பிரியப் பிடிக்காதவன் போலத் தன் கரங்களை அவளிடமிருந்து பிரித்தெடுக்க, அவன் இருக்கையில் கிடத்தியதும் சுயத்திற்கு வந்தவளுக்கு ஐயோ என்றானது.

சே… இவளுக்குப் புத்தி மழுங்கிவிட்டதா என்ன? இப்படி அவன் தொட்டதும் தொலைந்து போகிறோமே…’ என்று தன்னைத் திட்டியவளாக, அவன் விழிகளைப் பார்க்கும் தைரியம் அற்றவளாய்,

“ந… நன்றி…” என்று கூற, இவனும் அந்த நன்றியை ஏற்றதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்தமர்ந்து வாகனத்தை இயக்கியவாறே,

“இருக்கை வாரைப் போடு தற்பரை…” என்றான். அவன் சொன்னதற்கு ஏற்ப, இருக்கை வாரை இழுத்து போட்டவாறு,

“இந்த வாகனம் வேறாக இருக்கிறதே… நேற்றைய வாகனத்திற்கு என்னாயிற்று?” என்றாள்.

தன் தொள்களைக் குலுக்கியவன்,

“அதில் காயம் பட்ட காலோடு இப்படி வசதியாக அமர முடியாது இல்லையா… அதுதான் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எதை எடுத்து வந்தேன்…” என்றான்.

“ஓ… வாடகைக்கு எடுத்த வாகனமா…” என்றவளிடம் திரும்பிப் புன்னகைத்தவன்,

“ஆமாம்… நான் இப்பொதைக்கு இங்கே நிரந்தரமாகத் தங்கப் போவதில்லை. அதனால் சொந்தமாக வாகனத்தை வாங்கி என்ன செய்வது? அதனால் இப்போதைக்கு வாடகை வாகனம்தான்…” என்றான் அவன். அதை ஒப்புக் கொண்டவளாகத் தலையசதைது,

“அதுவும் சரிதான்… அயன்…” என்றாள். அவனோ இவள் கூறிய அயனில் திகைத்தாலும், மறு பக்கம் ஒரு விதக் கிலியோடு அவளைப் பார்த்தான். முன்தினம் இப்படித்தான் மாமா என்று அழைத்து அவனை அங்கிளாக்கிக் கலங்கடித்தாள். இப்போது அயன் என்று ஒன்றைச் சொல்லி என்ன குண்டைப் போட போகிறாளோ, பயந்தவனாய்,

“அ… அயனா? அப்படியென்றால்? தாத்தாவா?” என்றான் தன் உயிரைக் கையில் பிடித்தவாறு.

அதைக் கேட்டதும் அதுவரையிருந்த கலக்கம் மாயமாக மறைந்து போகத் தன்னை மறந்து கிளுக்கென்று சிரித்தாள் விதற்பரை.

சுத்தமாகத் தமிழ் தெரியாதவனுக்கு என்னதான் சொல்லிப் புரியவைப்பது? அவனுடைய பெயரின் சுருக்கம்தான் இந்த அயன் என்று சொன்னால் புரிந்துகொள்வானா? இதன் பொருள் மகத்தானது என்றால் விளங்கிக்கொள்வானா? அயன் என்றால் பிரம்மன், அருகன், சிவன் என்று சொன்னால் தெரிந்து கொள்வானா? ஏனோ அவன் தமிழ் புலமையை நினைத்து மேலும் சிரிப்பு வர, தலையை மேலும் கீழும் ஆட்டி,

“ஆமாம் குட்டிமாமா…” என்றதும் அப்பட்டமான எரிச்சலுடன் அவளைப் பார்த்து,

“என்ன கிண்டலா? ஒன்றில் மாமா என்கிறாய். இல்லை என்றால் தாத்தா என்கிறாய்? உன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கோபத்துடனும் சலிப்புடனும் கேட்க, விதற்பரையோ ‘உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்…’ என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை அடக்கப் பெரிதும் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

முன்தினம் தூக்கம் வராமல் அவள் பட்ட பாடு அவளுக்குத்தானே தெரியும். குரங்கை நினையாமல் மருந்தைக் குடித்தவன் கதையாக மாறிப்போன தன் நிலையை எப்படி விவரிப்பாள்? மீண்டும் உள்ளே எழுந்த இரசாயன மாற்றத்தை அடக்கும் வழி தெரியாமல் கீழ் உதட்டைக் கடித்தவாறு நின்றிருக்க, இவனோ வாகனத்தின் வேகத்தைக் கூட்டியவாறே,

“உன்னைத்தான் கேட்கிறேன்… அப்படி என்னை வயது போனவனாகக் காட்டுவதில் ஏன் அத்தனை சந்தோஷம்? உன்னை விட ஒன்பது பத்து வயதுதான் அதிகமாக இருப்பேன் தெரிந்துகொள்…” என்றான் அழுத்தமாக.

“அம்மாடியோவ் ஒன்பது வயது மூத்தவரா நீங்கள்… கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் பெரியவர்… அப்படியானால் நான் சொன்னது சரிதானே… நீங்கள் தாத்தாதான் எனக்கு” என்று விழிகளை விரிக்க எரிச்சலுடன் அருகேயிருந்தவளை ஏறிட்டு,

“சோ வட்… அதிக வயது வித்தியாசத்தில் இருப்பவர்கள் நண்பர்களாக இருக்கக் கூடாதா என்ன? எனக்கும் மிஸஸ் ஜான்சிக்கும் இடையில் முப்பது வருடங்கள் வித்தியாசம். அவர்களோடு நெருக்கமாக இருந்த அளவுக்கு யாரோடும் இருந்ததில்லை” என்றான்.

“இருக்கலாமே… அதில் என்ன தவறு?” என்று கேட்டவள் திரும்பி அவனைப் பார்த்து,

“மிஸஸ் ஜான்சி என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ?” என்றாள்.

மிஸஸ் ஜான்சி என்கிற பெயரைக் கேட்டதும் அவ்வியக்தனின் முகம் இளகிப் போயிற்று. அங்கே புன்னகை விரிய,

“ம்… மிக மிகப் பிடிக்கும். நானும் ப்ரோவும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் துக்கம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் அவரிடம்தான் பகிர்ந்து கொள்வோம். புன்னகை மாறாமல் கேட்பார்கள். ஒரு தாய் குழந்தைகளுக்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். அவர்கள் தாய்ப்பால் மட்டும்தான் ஊட்டவில்லை. மற்றும்படி எங்கள் தாய் அவர்கள்தான்… பல முறை நொடிந்து போன என்னை நிமிர்த்தியவர்களும் அவர்கள்தான்…” என்று கூற வியந்தவளாய் அவனை ஏறிட்டாள்.

“நொடிந்து போனீர்களா? ஏன்… என்ன ஆயிற்று…” என்றாள் ஆவலாய். இப்போது அவனுடைய முகத்தில் இளக்கம் மறைந்து அங்கே கடுமை ஏறியது. முகம் கறுக்கத் தெருவை வெறித்தவன்,

“எனக்கு அதைப் பற்றிப் பேசப் பிரியமில்லை…” என்றான் பட்டென்று. திடீர் என்று மாறிய அவன் முகத்தையும், குரலையும் கேட்ட விதற்பரைக்கு உள்ளே குளிர் எடுத்தது.

“ஐ ஆம் சாரி…” என்று தலை குனிய, உடனே முகத்தில் புன்னகையைத் தேக்கியவன்,

“ஹே… இட்ஸ் ஓக்கே… லீவ் இட்…” என்று சமாதானப் படுத்திவிட்டு அவளுடைய பல்கலைக் கழகத்திற்குச் செல்லவேண்டிய பாதையை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.

“ஏன் குட்டிமாமா… உங்களுக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாதா என்ன?” கேட்டவளை முறைத்தான்.

“மீண்டும் குட்டிமாமாவா? தயவு செய்து அதைக் கூறாமல் என்னை அழைக்க மாட்டாயா?” சலிக்க, இவளோ அதை அலட்சியம் செய்துவிட்டு,

“அதைப் பிறகு பேசலாம், இப்போது நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்… உங்களுக்குத் தமிழ் சுத்தமா வராதா?” என் றாள்.

ஏன் வராது… நான் ஒன்றும் என் ப்ரோவைப் போலச் சுத்தமாகத் தமிழ் தெரியாதவனல்ல… எனக்கும் கொஞ்சம் தெரியும்…. டை, மாஷி, மங்குனி. சிட்… சிட்டி… சிட்டிரை. டிங்கள்… புடன்… கார்டிகை… சாணி… ஆடி… தயிர், வடை, டைப்பொங்கள்…” என்று ஸ்டியரிங் வீலில் இருந்த வலது கரத்தை விலக்கி, ஒவ்வொரு விரல்களாக மடித்தவாறு குதுகலத்துடன் கூறத் தொடங்க, முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல், குழம்பியவள், பின்

“ஸ்டாப்… ஸ்டாப்… வட் த ஹெல் இஸ் தட்…” என்றாள் பெரும் அதிர்வாய். அவ்வியக்தனோ பெருமையுடன் மார்பு விம்ம,

“உனக்குத் தெரியாதா? டமில் மாதங்கள்…” என்றான்.

“வாட்” என்று அதிர்ந்தவளுக்கு அதற்குமேல் தன் சிரிப்பை அடக்க முடிந்திருக்கவில்லை. பலமாக வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.

எதற்கு இவள் இப்படிச் சிரிக்கிறாள் என்பது போலப் பார்த்தவனுக்கு அதற்குமேல் தன் விழிகளை அவளிடமிருந்து விலக்க முடிந்திருக்கவில்லை.

சிரிக்கும் பெண்களைப் பார்ப்பதொன்றும் அவனுக்குப் புதிதல்லத்தான். ஆனால் அவன் பார்த்த பெண்களின் சிரிப்பில் நடிப்பிருக்கும். ஒரு வித பயிற்சியிருக்கும். இந்த நேரத்திற்கு இந்தளவுதான் சிரிக்கவேண்டும் என்கிற அளவு வைத்து உதடுகளை விரிப்பார்கள். சிலர் தம்மை இளமையாகக் காட்டுவதற்காகவே கலகலவென்று சிரிப்பது போல நடிப்பார்கள். வேறு சிலர் சிரிக்கும் போது அதைப் பார்த்தாலே சிரிக்கும் எண்ணம் விட்டுப் போகும். ஆனால் இவளுடைய சிரிப்பு இரும்பை இழுத்தக் காந்தமாக அவள் பக்கமாகவே கவர்ந்து இழுத்தது. எதற்காகச் சிரிக்கிறாள் என்பது தெரியாது போனாலும், அவளோடு சேர்ந்து சிரிக்க மனம் விளைந்தது. அந்தச் சிரிப்பில் நடிப்பில்லை. நாகரிகப் பயிற்சியில்லை… எதார்த்தமாய் எழிலாய். இயற்கையாய் சுண்டியிழுக்கும் வகையில் பொற்காசுகளை அள்ளித் தெறித்த சத்தத்தோடு விழிகளும் சேர்ந்த சிரிக்கக் கன்னங்களும் சிவந்து சிரிக்க, அப்பப்பா பெண்கள் சிரித்தால் இத்தனை அழகாகவா இருப்பார்கள்?

நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டுவிட்டவன் போல அவளையே வெறித்திருக்க, இவளோ அதிகமாகச் சிரித்ததால் வழிந்த கண்ணீரைப் புறங்கையால் இழுத்துத் துடைத்தவாறு,

“ஓ போய்… ஐ ஆம் கோய்டு பி கிரேசி…” என்றவாறு மேலும் அதை நினைத்த நினைத்து பொங்கிச் சிரித்தாள். அவளுக்கு தன் சிரிப்பை அடக்க மிக நீண்ட நேரம் எடுத்தது. எப்படியோ சிரமப்பட்டுத் தன் சிரிப்பைக் குறைத்தவள்,

“ஓ… மை… மை..” என்றாள் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு. இன்னும் சிரிப்பு அவளுக்கு அடங்கவில்லை.

ஆனாலும் சமாளித்தவளாக, மிக அழகாக தமிழ் மாதங்கள் சொன்னீர்கள் அயன்… அதிலும் டை. சாணி, மாஷி, தைப்பொங்கல்… அப்புறம் ஒன்று சொன்னீர்களே… என்னது… ஆ… தயிர்… வடை” என்றவள் மீண்டும் பொங்கிப் பொங்கிச் சிரித்துவிட்டு, தமிழ் படித்தால் கூட இந்த மாதங்கள் தெளிவாக வராது தெரியுமா?” என்றவளுக்கு மீண்டும் சிரிப்புப் பீரிட்டுக் கொண்டு வந்தது.

அவள் சிரித்ததை வைத்தே தான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டோம் என்று தெளிவாகப் புரிந்ததுதான். ஆனாலும் விட்டு கொடுக்க மனமில்லாமல்,

“ஆமாம்… மிஸஸ் ஜான்சி இப்படித்தான் சொல்லிக்கொடுத்தார்கள்…” என்றான் உறுதியாய்.

“எதற்கு வீணாக அவர்களை வம்புக்கு இழுக்கிறீர்கள்… அவர்கள் சரியாகத்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். நீங்கள் அவர்கள் சொன்னதை மறந்துவிட்டுப் புதிதாக மாசி கருவாட்டையெல்லாம் அதற்குள் திணித்து விட்டீர்கள்…” என்றாள் சிரிப்பு மாறாமல். இவனோ ஆர்வத்துடன் உள்ளம் இளக அவளைப் பார்த்து,

“நீ சிரிக்கும் போது மிக மிக அழகாக இருக்கிறாய் விதற்பரை…” உண்மையை மறைக்காத குரலில். அதைக் கேட்டதும் இவளுடைய முகம் ஏனோ சிவந்து போயிற்று. அவசரமாகத் தன் கீழ் உதட்டை மேல் பற்களால் கடித்துச் சிரிப்பையும் முகச் சிவப்பையும் அடக்க முயன்றவள், அதைச் சமாளிக்கும் முகமாக, அவனை ஏறிட்டு,

“ஏன் தமிழ் படிக்காது விட்டீர்கள் அயன்? தமிழ் பிடிக்காதா” என்றாள் பேச்சை மாற்றும் விதமாக. அவனோ மீண்டும் பாதையில் கவனத்தைச் செலுத்தியவாறு தோள்களைக் குலுக்கியவன்,

“தெரியவில்லை… நாங்கள் பிறந்து வளர்ந்த காலத்தில் ஆங்கிலம்தான் வீட்டு மொழி. அதை விடுத்து பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலத்தில் ஃபிரெஞ்ச் ஒரு பாடமாகப் படித்தோம். அதனால் ஆங்கிலமும் ஃப்ரஞ்சும் அத்துப்படி. எனக்குச் சீன நண்பர்களும் இருந்ததால் சீன மொழியும் கற்றுக்கொண்டேன்… இதை விட வேற்று மொழித் தேவை இருந்ததில்லை…” சொன்னவனை வலியோடு பார்த்தாள் விதற்பரை.

தமிழ் வேற்று மொழியா. அது நம் சொந்த மொழி. நமக்கு மட்டுமே உரிமையான மொழி. அதைப் போய் அவன் அன்னிய மொழி போல பேசியதில் நெஞ்சம் தவிக்கத்தான் செய்தது.

“அயன்… தமிழ் என்கிறது மொழி இல்லை. அது நம்முடைய அடையாளம். நாம் தமிழர்கள் என்று சுட்டிக்காட்ட நம்மிடம் இருக்கும் ஒரே ஆதாரம். இதைப் போய் வேற்ற மொழி என்று பேசுகிறீர்களே…” என்றாள் பெரும் வருத்தமாக.

“ப்ச்… தெரிவில்லை… ஆரம்பத்தில் அதன் பெருமையைச் சொல்லி வளர்த்திருந்தால் இது என் மொழி என்கிற உணர்வு வந்திருக்குமோ என்னவோ… ஆனால் அப்படி எதுவும் தோன்றவில்லையே… நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, தமிழைப் படி என்று சொல்ல யார் இருந்தார்கள். ‘மாம்’ இற்கு அதில் அக்கறை இருந்ததும் இல்லை. அதனால் தமிழ்தான் என் தாய் மொழி என்று உணரவோ, அதைக் கற்கவோ எனக்குத் தெரியவில்லை. பின்பு மிஸஸ் ஜான்சி இருந்த வரைக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்தார்கள். தமிழின் அருமை பெருமைகளைக் கூறும்போதே ப்ரோ தூங்கிவிடுவான். நான்தான் அவர்களிடம் சிக்குவேன். ‘அ’னா ஆவன்னா ஏதோ ஒரு விதமாக எழுதத் தெரியும். அவர்கள் சொல்லிக்கொடுத்த மாதங்கள் கொஞ்சமாக நினைவிருக்கின்றன. அவர்களும் எங்கள் பதினெட்டாவது வயதில் போய்விட்டார்களா, அதற்குப் பிறகு தமிழைப் பற்றி அக்கறைப் படவில்லை. என்றான் அலட்சியமாக.

வேற்று மொழிகளை ஆர்வமாகக் கற்கத் தெரிந்தவனுக்குத் தன் தாய் மொழி தெரியாமல் போய்விட்டதே. இது எத்தனை பெரிய அவமானம். தன் முகவரியைத் தொலைத்ததால்தான் சுயத்தையும் அவனால் சுலபத்தில் தொலைக்க முடிந்ததோ? தெரியவில்லை.

“என் அம்மாவிற்கும் அப்பாக்கும் தமிழ் என்றால் உயிர் தெரியுமா. நம் வீட்டில் தமிழ் கட்டாயமாகப் பேசவேண்டும். சிலவேளைகளில் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினால் அம்மா துடப்பங்கட்டையோடு எங்களை அடிக்க வந்துவிடுவார்கள். அத்தையை அடிக்க மாட்டார்கள். ஆனால் என்னைப் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்…” என்று மென்னகையோடு கூற, இவனோ வியப்போடு இவளைப் பார்த்து,

“உன் அத்தையை அடிக்க மாட்டார்களா?” என்றான் வியப்புடன். இவளும் தலையாட்டியவாறு,

“ஆமாம்,” என்றதும்,

“ஏன்?” என்றான் அவ்வியக்தன்.

“அது பெரிய கதை அயன்…” என்றவள் சமர்த்தியின் வாழ்வில் நடந்ததைக் கூற, ஒரு கணம் ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான் அவன். பெற்ற குழந்தைகளையே சுமையாக நினைக்கும் இந்தக் காலத்தில், கணவனின் தங்கையைக் குழந்தையாகப் போற்றி வளர்ப்பதெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாதவை. அந்தக் கணமே அவனுக்கு விதற்பரையின் அன்னை மீது இனம் தெரியாத மதிப்பும் அன்பும் உற்பத்தியானது.

“வாவ்… உன் அம்மா அற்புதமான பெண்மணி அல்லவா…” என்றவனிடம்,

“நிஜம்தான் அயன்… மிக மிக அற்புதமான பெண்மணி… அதனால் இது வரை அவர்கள் இட்ட கட்டளையை நான் ஒரு போதும் மீறியதில்லை…” என்றவள், அவனுடைய வாகனம் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைய தொடங்கவும்,

“பல்கலைக் கழகம் வந்துவிட்டது…” என்றவாறு பேச்சை நிறுத்த, இவன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி, அவள் பக்கமாக வந்து, அவளுக்கு இறங்க உதவி செய்துவிட்டு, ஊன்றுகோலையும் அவளிடம் கொடுக்க, நன்றியுடன் பெற்றுக்கொண்டவள் அதை அணிந்துகொண்டு,

“நன்றி அயன்…” என்றதும் அவனுடைய முகம் கசங்கியது.

“அயனா…” என்றான் குறையுடன். இப்போதும் நகைத்தவள்,

“அயன் என்றால் நீங்கள் நினைப்பது போலத் தாத்தா அல்ல…” என்றவள் அதற்கான விளக்கத்தைக் கூற, இவனுடைய முகம் மலர்ந்தது.

“வாவ்… நன்றி நன்றி நன்றி… என் பெயரிற்குள் இத்தகைய பெரிய அர்த்தம் மறைந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாமலே போய்விட்டது…” என்றவன், “சரி போய்க் கொள்வாய் தானே… இன்று மாலை நான் வந்து அழைத்துச் செல்கிறேன் சரியா…” என்றான். இவளோ மறுத்தவாறு,

“இல்லை… இன்று இரண்டு பாடங்கள் மட்டும்தான்… எப்படியும் ஒரு மணிக்குள் முடிந்துவிடும், நான் என்பாட்டில் போய்க்கொள்வேன்… தயவு செய்து எனக்காக அலையாதீர்கள்… உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி… என்று விட்டுத் திரும்ப,

“ஒரு நிமிஷம் விதற்பரை…” என்றவன், குனிந்து டாஷ்போர்டிலிருந்து சிறிய பரிசுப்பொதியை வெளியே எடுத்து, அவளிடம் நீட்டினான்.

இவளோ புருவங்கள் சுருங்க அவனைப் பார்த்தாள். பின் பரிசுப்பொதியைப் பார்த்து, அதை வாங்காமலே,

“என்ன இது…” என்றாள்.

“சின்னப் பரிசு… சொல்லப்போனால் உன்னை வலிக்கச் செய்ததற்கான பிராயச்சித்தம் என்று நினைத்துக்கொள்ளேன்…” என்று கூற, இவளோ வாங்குவதா வேண்டாமா என்று தயங்கி நிற்க,

“கமான்… ப்ரோ கொடுத்தால் வாங்கியிருக்க மாட்டாயா? அப்படி நினைத்துக்கொள்…” என்று கூற, அதற்கு மேல் மறுத்தால் சிறுபிள்ளைத் தனமாக இருக்கும் என்று எண்ணியவளாய் வாங்கிக் கொள்ள, முகம் மலர்ந்தான்.

“சரி பிறகு சந்திக்கலாம்…” என்றுவிட்டு விடை பெற, விதற்பரையோ அவசரமாக அவன் கொடுத்த பரிசுப் பொதியைப் பிரித்துப் பார்த்தாள்.

அங்கே சமத்தாய் வீற்றிருந்தது இளஞ்சிவப்பில் பூனைக்குட்டிப் படம் போட்ட அவள் கைப்பேசிக்கான அழகிய உரை. தன்னையும் மீறி உதடுகள் புன்னகையில் மலர, அந்தப் பூனைக் குட்டியை வருடிக் கொடுத்தவள், அவசரமாகத் தன் கைப்பேசியின் பழைய உரையைக் கழற்றிவிட்டுப் புதியதைப் போட, அது கச்சிதமாக அவள் கைப்பேசியுடன் பொருந்திக் கொண்டது.

குதுகலத்துடன் பழைய உரையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, விழிகளில் தட்டுப்பட்டான் நகுலன். அவனுடைய விழிகள் ஆச்சரியத்துடன் கால்கட்டைப் பார்த்துப் பின் இவள் முகத்தை ஏறிட, தற்பரைக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

‘ஐயோ காலையே இவன் முகத்தில் விழித்துவிட்டோமே… இன்று மதியம் வேறு வந்து தொந்தரவு செய்வானோ?’ என்கிற கலக்கத்துடன், அந்த நகுலனைப் பார்க்காத மாதிரி மேலே நடக்கத் தொடங்க, அவனோ ஒரு விதப் புன்னகையும் இவளை வெறித்துக் கொண்டேயிருந்தான்.

What’s your Reaction?
+1
20
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

17 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 33/34

(33)   வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன், “என்னம்மா… சீக்கிரமாக…

2 days ago

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

3 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

4 days ago

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-22

(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…

5 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 30/31

(30)   நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…

7 days ago