Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 8

(8)

எத்தனை நேரமாக உறங்கினாளோ தெரியாது. கால்களின் வலி தெரிய, உறக்கம் கலைந்து எழுந்தாள் விதற்பரை. வலி அதிகரித்திருந்தாலும் மருந்தின் வீரியம் குறையவில்லை போலும். எங்கோ பறப்பதுபோலத் தோன்றியது. ஆனாலும் வலி அவளை முகம் சுழிக்கச் செய்தது. பற்களைக் கடித்தவாறு எழுந்தவளுக்குக் கழிவறை போகவேண்டிய தேவையிருக்க, வலது காலைத் தரையில் பதித்தவளுக்கு ஊன்றுகோலின் தேவை புரிந்தது.

அதுவரை மறந்திருந்த அவ்வியக்தன் மீண்டும் இதயத்தில் குடி புகுந்தான். மீண்டும் உதடுகள் பற்களுக்குள் சிறைப்பட்டன. அவனை எண்ணியவாறே சற்றுச் சரிந்து ஊன்றுகோலை எடுத்து மாட்டிக்கொண்டவள், தன் அறைக்குச் சென்றாள். மீண்டும் பூட்டியிருந்த ஊன்றுகோலைக் கழற்றிவிட்டு, படுக்கையில் அமர்ந்தாள்.

ஏற்கெனவே அரைவாசி வரை கத்தரிக்கோலால் வெட்டப்பட்ட டெனிம் பான்டைச் சிரமப்பட்டுக் களைந்து ஓரமாகப் போட்டுவிட்டு, இதர ஆடைகளையும் களைந்து அங்கிருந்த அழுக்குக் கூடைக்குள் இருந்த வாக்கிலேயே சுருட்டி எறிந்துவிட்டு நிமிர்ந்தபோது பாதம் என்னைக் கவனியேன் என்றது. வலியில் முகம் சுழித்தவள், மீண்டும் ஊன்றுகோலின் உதவியோடு எழுந்து, குளிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் குளியலறை சென்றாள். இயற்கைத் தேவையை முடித்துக்கொண்டு, கட்டின் மீது தண்ணீர் படாதவாறு குளித்து முடித்து வெளியே வந்தபோது, ஓரளவு சோர்வு குறைந்திருந்தது.

மீண்டும் அறைக்குள் நுழைந்து தொடைவரை பரவிய கையில்லா இரவாடை ஒன்றை அணிந்துகொண்டு முன்னறைக்கு வந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது.

எதையாவது தருவித்து உண்ணவேண்டியதுதான் என்று நினைத்தவாறு கைப்பேசியை எடுக்கும் போது அவளுடைய வீட்டு வாசல் மணி அழைத்தது.

யார் அழைக்கிறார்கள். அதுவும் இந்த நேரத்தில். யோசனையுடன் நிமிர்ந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். அது ஒன்பது முப்பது என்றது. எச்சரிக்கை உணர்வில் அவள் சிலையாக நிற்க, அவளுடைய கைப்பேசியில் ஒரு செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது.எடுத்துப் பார்த்தாள். அவன்தான்.

இவன் எதற்கு இந்த நேரத்தில் அழைக்கிறான். நெஞ்சம் பதறக் கைப்பேசியை அவன் அனுப்பிய செய்தியைத் திறந்து பார்த்தாள்.

“கதவைத் திற…” என்றிருந்தது. இந்த நேரத்தில் எதற்காகக் கதவைத் திறக்கச் சொல்கிறான்? அச்சத்தில் கால்களை அசைய மறுக்க, மீண்டும் அவனிடமிருந்து செய்தி.

“கதவைத் திற தற்பரை…” என்று வந்திருந்தது. ஒரு பக்கம் சந்தேகம் எழுந்தாலும், இன்னொரு பக்கம் அவளோடு இருந்தபோது அவன் காத்த கண்ணியம் கதவைத் திறக்கச் சொன்னது.

திறப்பதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தியவள், தன்னையும் மறந்து நடந்து சென்று கதவை மெதுவாகத் திறந்து பார்த்தாள்.

அங்கே சாதாரண டீ ஷேர்ட்டும் டெனிமும் அணிந்தவாறு கையில் ஒரு பொதியுடன் நின்றிருந்தான் அவ்வியக்தன்.

எதற்கு வந்தாய்? என்பது போல இவள் பார்க்க, அவனோ அவளைப் பார்த்ததும் திருப்தி கொண்டவனாக,

“நாட் பாட்… நினைத்ததுபோல அல்லாமல் ஃப்ரஷ் ஆகவே இருக்கிறாய்…” என்று ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கியவாறு, அவளுடைய அனுமதியையும் கேட்காமல் உள்ளே வந்து கதவைச் சாத்தினான்.

இவளோ என்ன செய்வது என்று தெரியாமல் திருதிரு என்று விழிக்க,

“சாப்பிட்டிருக்க மாட்டாய்… பசிக்கும்… அதுதான் வாங்கி வந்தேன்…” என்று தன் கரத்திலிருந்த பொதியைத் தூக்கிக் காட்டிவிட்டு உணவு மேசையருகே செல்ல, அதுவரை இருந்த அழுத்தம் குறைந்தவளாய், நிம்மதி மூச்சு விட்டாள் விதற்பரை.

கூடவே நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள். சற்றிற்கு முன்புதான் பசிக்கிறதே என்று எண்ணினாள். இவனோ சாப்பாட்டோடு வந்துவிட்டானே.

சத்தியமாக இப்படி உணவு கொண்டுவருவான் என்று அவள் எண்ணி இருக்கவில்லை. மீண்டும் அவனுடைய அக்களை இவளுடைய இதயத்தைத் தொட்டது.

அவ்வியக்தன், சாப்பாட்டை மேசையில் அடுக்கிவிட்டுத் தன் ஜாக்கட்டைக் கழற்றி அங்கிருந்த இருக்கையில் போட்டுவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தவன், தன் விழிகளால் அவளைத் தலை முதல் கால் வரை அளவிட்டான். பின் என்ன நினைத்தானோ, அவள் விழிகளைப் பார்த்து,

“நீ ஏன் உன் ஆடையை மாற்றிவிட்டு வரக் கூடாது?” என்றான் எதையோ அறிவிப்பது போல.

ஆடையை மாற்றுவதா? ஏன் மாற்ற வேண்டும்? என்பது போலக் குனிந்து பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் நிற்கும் கோலமே உறைத்தது.

ஆடை கால்வாசி தொடைவரை இறங்கி இருந்தது. கையில்லாத ஆடை எண்பதால், அது அங்கங்களை வெளிப்படையாகவே காட்ட முயன்றுகொண்டு இருந்தது.

அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், பதட்டத்துடன் தன் மார்புகளை மறைப்பது போலக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,

“நான்… அது வந்து… நான்…” என்று திணறியவள், அதற்கு மேல் பேச முடியாமல்,

“இ… இதோ வருகிறேன்…” என்றவாறு தன் அறைக்குச் சென்றவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

அவன்தான் கதவைத் திறக்க சொன்னான் என்றால் சற்றும் யோசிக்காமல் போய்த் திறந்து விடுவதா… கடவுளே… என்னை இந்த கோலத்தில் பார்த்துவிட்டானே… அவளைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? பெரும் சங்கடமும் அவமானமும் இவளைச் சூழ்ந்து கொள்ள அவசரமாகக் கண்ணாடிக்கு முன்னால் வந்து நின்று தன் உருவத்தைப் பார்த்தாள்.

தனியே இருக்கிறோம் என்கிற அலட்சியத்தில் போட்ட ஆடை அப்பட்டமாக அவளுடைய எழிலை இப்படியா எடுத்துக் காட்ட வேண்டும்? தன் நெற்றியில் தானே அடித்துக் கொண்டவள், கைக்குக் கிடைத்த பாவாடையையும், டீ ஷேர்ட்டையும் அணிந்தவாறு வெளியே வந்தபோது இவளுடைய முகம் கண்டிச் சிவந்து போயிருந்தது.

இவனோ இவளைக் கண்டு இனிமையாய் புன்னகைத்து,

“குட்… இப்போது வலி எப்படி இருக்கிறது? குறைந்திருக்கிறதா?” என்றான்.

சிரமப்பட்டுப் புன்னகைத்தவள்,

“வலி இருக்கிறது…! ஆனால் முன்பு குடித்த மருந்தின் வீரியத்தால் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது…” என்று உண்மையைச் சொல்ல, ஏனோ அவனுடைய முகம் வாடிப் பின் தெளிந்தது.

“சரி… வா…! பசிக்கும்…! சாப்பிட உட்கார்… நானும் சாப்பிடவில்லை… பசிக்கிறது…” என்றதும் அதற்கு மேல் வாதம் செய்யாமல் தன் காலில் பூட்டியிருந்த ஊன்றுகோலைக் கழற்ற தொடங்க உடனே உதவிக்கு வந்தான் அவ்வியக்தன். தானே அந்தப் பட்டிகளை அவிழ்த்து, ஊன்றுகோலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவள் கரத்தைப் பற்றி மென் நீளிருக்கையில் அமர்த்திவிட்டுக் கட்டுப்போட்ட காலைத் தூக்கி வசதியாய் அங்கிருந்த தலையணையின் மீது வைத்து

“யு ஓக்கே நவ்…?” என்றான்.

இவள் ஆம் என்று தலையை ஆட்ட, குட் என்றுவிட்டு, அவளுடைய உணவுகளைப் பிரித்து எடுத்து வசதியாய் உண்ணும் வகையில் முள்கரண்டியை வைத்து நீட்ட, ஆவலுடன் வாங்கிப் பார்த்தாள்.

உருளைக் கிழங்கைப் பொரித்து, அதில் பாற்கட்டிகளைத் துண்டுகளாக வெட்டிப்போட்டுச் சுடச் சுட ஒருவகைச் சோஸ் விட்டுச் செய்யப்பட்டிருந்த புட்டின் அவள் பசியை மேலும் தூண்டியது. சற்றும் தாமதிக்காமல் ஒரு வாய் எடுத்து வைத்தவளுக்கு அது மிக மிக இதமாகவே இருந்தது. கூடவே சான்ட்விச் வேறு.

அவ்வியக்தனும், அவளுடன் சேர்ந்து தன்னுடையதைப் பிரித்து, உண்ணத் தொடங்க,

இரண்டு வாய் வைத்தவள்,

“எனக்கு உணவு எடுத்து வருவதற்காக நீங்கள் அலைந்திருக்கவே வேண்டியதில்லை… நானே உணவைத் தருவித்து உண்டிருப்பேன்…” என்று கூற, இவனோ தன் தோள்களைக் குலுக்கி சான்ட்விச்சை சரியாக பற்றியவாறு,

“இதில் என்ன இருக்கிறது. எப்படியும் உன்னால் சமைக்க முடியாது. நானும் வெளியேதான் உணவு எடுத்துச் சாப்பிடுகிறேன்… அதுதான் சேர்ந்தே சாப்பிடலாம் என்று வாங்கிவந்தேன். ஒன்பது மணியாகிவிட்டதே, ஒரு வேளை நீ உறங்கியிருப்பாயோ என்று பயந்துகொண்டுதான் வந்தேன்…” என்றவன் இன்னொரு வாயை மென்று விழுங்கிவிட்டு,

“நல்லவேளை… இல்லை…” என்றான்.

“புட்டின்… நன்றாக இருக்கிறது… எங்கே வாங்கினீர்கள்?” என்று ஒரு வாயை அதக்கியவாறு கேட்க அதற்குப் பதிலும் சொன்னான்.

இப்படியே இருவரும் சற்று நேரம் எதை எதையோ பேசியவாறு உணவை உண்ணத் தொடங்கினர். அந்த நேரம் இருவருக்கும் தாங்கள் அன்னியமானவர்கள் என்கிற எண்ணம் சுத்தமாக வரவில்லை. மாறாக, பல ஆண்டுகளாக நன்கு பழகியவர்கள் போலப் பேசிச் சிரித்தவாறு உணவை உட்கொள்ளத் தொடங்கினர்.

எந்த வித அலட்டலும் இல்லாது உணவை ரசித்து உண்பதைக் கண்டவள்,

“உங்களுக்குச் சாப்பாடு ரெம்பப் பிடிக்குமோ?” என்றாள். இவனோ சிரித்தவாறு தலையாட்டி,

“ம்… மிகப் பிடிக்கும்… சமைக்கவும் பிடிக்கும்… தவிர யாராவது பசியோடு இருந்தால் சுத்தமாகப் பிடிக்காது…” என்றான் அடுத்த வாயை மென்றவாறு.

“ஏன் அப்படி?” என்று இவள் வியக்கத் தன் தோள்களைக் குலுக்கியவன்,

“தெரியவில்லை… சில வேளை யாராவது பசியோடு இருக்கும்போது நீ சாப்பிடாதே என்று மிஸஸ் ஜான்சி சொல்லிக்கொடுத்தது மனதில் பதிந்திருக்கலாம். இல்லையென்றால், பசி எத்தனை கொடுமை என்று தெரிந்ததாலும் இருக்கலாம்… தெரியவில்லை…” என்று கூறியவனை வியந்து பார்த்தவள்,

“உங்களுக்குப் பசிக் கொடுமை தெரியுமா? இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா?” என்று வாயைப் பிளக்க, இப்போது அவன் உதட்டில் முதன் முறையாக இனம்புரியாத வலியுடனான புன்னகை ஒன்று மலர்ந்து பின் வாடியது.

“பசி என்பது வறியவர்களுக்கு மட்டும்தான் ஏகபோக உரிமையா… பணக்காரர்களுக்கு இருக்கக் கூடாதா?” என்று ஒரு மாதிரிக் கேட்க, அந்தக் குரலில் ஒரு கணம் கலங்கித்தான் போனாள் விதற்பரை.

பணத்திலேயே மூழ்கி எழுந்தவனுக்குப் பசி என்றால் யாராவது நம்புவார்களா? குழம்பினாலும் ஏன் எதற்கு என்று கேட்க ஏதோ தடுத்தது. ஆழ்ந்து உள்ளே நுழைந்து கேள்விகள் கேட்குமளவுக்கு இன்னும் நெருங்கவில்லையே. அதனால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டு,

“நீங்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து கனடா எப்போது வந்தீர்கள்?” என்றாள் பேச்சை மாற்றும் முகமாக. இப்போது முகம் மலர்ந்தவன்,

“ஒரு கிழமையாகிவிட்டது… புதிய கிளை திறக்கும் விடயமாக வந்தேன். எல்லாமே சுமுகமாக முடிந்துவிட்டது. சில ஆவணங்கள் வர இருக்கின்றன. அதில் கையெழுத்துப் போடுவதற்காகக் காத்திருக்கிறேன்… அனேகமாக இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் வந்துவிடும்… அந்த வேலையையும் முடித்தால் இங்கே இருப்பவர்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு மீண்டும் அவுஸ்திரேலியா போய்விடுவேன்…” என்றான். ஏனோ அவன் சில தினங்களில் போய் விடுவான் என்பதை அறிந்த போது இவளுடைய முகம் வாடிப் போயிற்று. தன்னை மறந்து

“இத்தனை விரைவாகா…?’ என்று கேட்க நிமிர்ந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“போய்த்தானே ஆகவேண்டும்… இங்கேயே என்னால் டோரா போட முடியாதே… என் மற்றைய தொழில்களையும் கவனிக்கவேண்டுமே…” என்றான்.

“ஓ…” என்றவள், “நீங்கள் இங்கேதானே பிறந்தீர்கள்… பிறகு ஏன் அவுஸ்திரேலியா போனீர்கள்…” என்று கேட்க, திடீர் என்று அவ்வியக்தனின் முகம் மாறிப் போனது. சற்று நேரம் எதுவும் பேசாமல் தன் உணவையே வெறித்துக் கொண்டிருந்தவன், அதே உணர்வோடு இவளையும் வெறித்தான். அந்த விழிகளில் தெரிந்த அகோரத்தைக் கண்டு விதறபரை ஒரு கணம் ஆடித்தான் போனாள். அவனோ

“அந்த நாடு எனக்குப் பிடித்துக்கொண்டதால் போனேன்… அதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா உனக்கு…” என்று அவன் கேட்ட தோணியில், விதற்பரையின் இதயம் சில்லிட்டது.

அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று இதற்கு மேல் எதையும் கேட்காதே என்று எச்சரிப்பது போலத் தோன்ற, அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல் தன் உணவையே வெறித்தாள். அவனோ சற்று நேரம் அப்படியே இருந்து விட்டு, தன் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன், அவளை ஒரு பரிதவிப்போடு பார்த்துவிட்டு,

“சாரி… ஏதோ நினைவில்…” என்று தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டான். அந்த ஒவ்வாத அந்தச் சூழ்நிலையைக் கலைக்க வேண்டி,

“அதை விடு, நீ என்ன படிக்கிறாய்?” என்றான் நிலைமையைச் சுமுகமாக்கும் பொருட்டு. அவள் பதில் கூற,

“ம்… நல்ல தேர்வு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறன இதற்கு” என்றவன் அது சார்ந்த விவரங்களைக் கேட்டறிந்து அவளுக்கு வேண்டிய ஒரு சில தகவல்களையும் கூறிவிட்டு,

“உனக்கு டொரன்டோவிலேயே இந்தப் பாடங்களுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது, தனியாக இங்கே வந்து ஏன் சிரமப்படுகிறாய்?” என்றான் அக்கறையாய். இப்போது அவனை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தவள்,

“இங்கே வந்து படிக்கப் பிடித்தது வந்தேன்… இதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?” என்று அவன் கேட்ட அதே தொனியில் கேட்க, அவன் மெல்லிய சிரிப்போடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“ம்… நல்ல மூக்குடைப்புதான்…” என்றதும் சற்று அசடு வழிந்தவள்,

“இதை மறைப்பதற்கு எந்தப் பரமரகசியமும் கிடையாது. இங்கே புலமைப் பரிசிலோடு கிடைத்தது… அம்மாவும் தள்ளிச் சென்று படித்தால் அனுபவம் கிடைக்கும் என்றார்கள்… வந்து விட்டேன்… ஆரம்பத்தில் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது… இப்போது பழகி விட்டது…” என்றவள், மேலும் ஒரு வாயை உண்டுவிட்டு மேல் கண்ணால் அவனைப் பார்த்தாள்.

அவனோடு பழகும் போது அவன் ஒன்றும் தப்பானவனாகத் தோன்றவில்லை. விழிகளில் கூட எந்தத் தப்பான சிந்தனைகளும் தெரியவில்லை. அப்படியிருக்கையில் தன்னைப் பெண் பித்தன் என்று ஏன் சொன்னான்? ஏனோ அதைப் பற்றி அறிந்தே ஆகவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. கூடவே தயக்கமாகவும் இருந்தது. இவள் எதையாவது கேட்க போய், முன்பு பேசியது போலப் பேசிவிட்டால்… ம்கூம்… வேண்டாம்…” என்று தன்னை மறந்து தலையை மறுப்பாக அசைக்க, அவளுடைய அசைவை அவன் புரிந்துகொண்டானோ, நிமிர்ந்து பார்த்தவன்,

“பரவாயில்லை கேட்டுவிடு…” என்றான் முள்கரண்டியில் பால் கட்டியைக் குத்தி எடுத்தவாறு. இவளோ அவனை நிமிர்ந்து பார்க்க, அவனுடைய கவனம் சாப்பாட்டில்தான் இருந்தது. பிறகு எப்படி இவள் எதையோ கேட்க வருகிறாள் என்று உணர்ந்து கொண்டான், யோசிக்கும்போதே, இவளை நிமிர்ந்து பார்த்தவன் பின் உணவில் கவனமாகி,

“அதுதான் கழுத்து வரை வந்துவிட்டதே… பிறகென்ன தயக்கம்? கேள்…!” என்றான்.

“இல்லை…! கேட்டுவிடுவேன்…! ஆனால் முன்பு போல நச்சென்று எதையாவது கூறிவிடுவீர்களோ என்றுதான் தயக்கமாக இருக்கிறது…” என்றதும் மெல்லியதாய் நகைத்தவன்,

“ம்… எதுவும் சொல்லமாட்டேன் கேள்…” என்று அனுமதி கொடுக்க,

“அது வந்து… நிஜமாகவே… நீங்கள் நிறையப் பெண்களோடு… வந்து… நிறையப் பெண்களோடு…” என்று சொன்னவள் முடிக்க முடியாமல் திணற, அவனோ தன் கரத்திலிருந்த வெற்றுப் பாத்திரத்தை மேசையில் வைத்துவிட்டுப் புட்டினை எடுத்துக்கொண்டு, சாய்ந்தமர்ந்தவாறு காலுக்கு மேலாகக் காலைப் போட்டு,

“உறவு வைத்திருக்கிறேன் என்று கேட்கிறாயா?” என்றான் வெளிப்படையாக. அதைக் கேட்டதும் ஏனோ இவளுடைய முகம் சங்கடத்தில் சிவந்து போக, அதைக் கண்டு தன் தோள்களைக் குலுக்கியவன்,

“இதில் சங்கடப் பட என்ன இருக்கிறது… ஆமாம்… பெண்கள் துணையில்லாமல் உறங்கிய இரவுகள் மிக மிகக் குறைவே…” என்று ஒப்புக்கொள்ள, ஏனோ நெஞ்சம் கனத்துப்பேனது இவளுக்கு. கூடவே கோபமும் வந்தது.

“ஏன், பெண் சுகம் வேண்டுமானால் யாராவது ஒருத்தியைத் திருமணம் முடிக்கவேண்டியதுதானே… இப்படித் தினம் ஒரு பெண்ணோடு இருப்பது உங்களுக்கு அருவெறுக்கவில்லையா?”

நிஜமான அருவெறுப்பில் அவளுடைய முகம் கசங்கிப் போனது. அவனோ நிதானமாக அவளைப் பார்த்தான். பின் தன் தோள்களைக் குலுக்கி,

“மணம் முடிப்பதா? நானா? ஹா ஹா…” என்று சிரித்து விட்டு, பின், காலைக் கீழிறக்கிவிட்டு எழுந்தான்.

“எனக்குப் பெண்களைப் படுக்கையில்தான் பிடிக்கும் மணவறையில் அல்ல… ஒருத்தியைக் காதலிப்பதே நடக்காத காரியம் என்கிற போது, திருமணம்… ம்கூம் வாய்ப்பேயில்லை…” என்று உறுதியாகக் கூறியவனை எரிச்சலோடு பார்த்தாள் விதற்பரை.

“ஒரு பெண்ணின் மீது பிரியமில்லாமலா படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்…” என்று ஏளனமாகக் கேட்க அவனோ,

“பெண்களைப் பிடிக்காது என்று நான் சொல்லவில்லையே…. ஒரு பெண்ணைப் பிடிக்காமல் எப்படி அவளோடு மகிழ்ந்திருப்பேன்… பெண்களைப் பிடிக்கும்… ஆனால் அது நான்கு சுவருக்கு மத்தியில் படுக்கையில் மட்டும் பிடிக்கும்…” என்றபோது ஏனோ விதற்பரையின் நெஞ்சம் ஏமாற்றத்தில் கலங்கிப்போனது.

எதற்காகக் கலங்கவேண்டும், எதற்காகக் கண்ணீர் தோன்றவேண்டும்? அவன் ஆயிரம் பெண்களோடு ஒரே படுக்கையில் படுத்தால் இவளுக்கென்ன வந்தது? வேதனை ஏன் அரிக்க வேண்டும்? அதற்கான காரணம் புரியவில்லை. ஆனாலும் வலித்தது. தன் வலி நிறைந்த முகத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் தலையைக் குனிந்தவள்,

“ஏன்…” என்றாள் ஒற்றைச் சொல்லாக. இவனோ குழப்பத்தோடு அவளைப் பார்த்துவிட்டு,

“ஏன் என்றால்… புரியவில்லை…” என்றவனை எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தவள்,

“ஏன்… இத்தனை பெண்களை நாடுகிறீர்கள்…” என்று சிரமப்பட்டுத் தன் ஆத்திரத்தையும் வலியையும் மறைக்க முயன்றவாறு கேட்க, அவனோ குறும்பாக அவளைப் பார்த்துச் சிரித்து,

“பிகாஸ்” என்றவாறு உருளைக் கிழங்குப் பொரியலைச் சுட்டுவிரலாலும், பெருவிரலாலும் எடுத்து வாய்க்குள் போட்டு மென்றுகொண்டே அவளைப் பார்த்தான். அவளோ அவனுடைய பதிலுக்கு ஆவலாகக் காத்திருந்தாள்.

அவளை மேல் கண்ணால் பார்த்து,

“ஐ ஆம் நாட் எக் கே…” என்றான் கிண்டலாக. அதைக் கேட்டதும் அப்பட்டமான கோபத்துடன் அவனைப் பார்த்து முறைத்தவள்,

“உங்கள் நகைச்சுவைக்குச் சிரிப்பு வரவில்லை… பிறகு யோசித்துச் சிரிக்கிறேன்…” என்று கடுப்படித்தவள், எஞ்சியிருந்த புட்டீனை அவசரமாக வாய்க்குள் திணித்துவிட்டு, வெற்றுப் பாத்திரத்தை மேசையில் வைக்க அவனோ அவளுக்கு முன்பாகத் தண்ணீர் குவலையை நீட்டினான். விதற்பரை மறுக்காது வாங்கி ஒரு மிடறு குடித்தாலும் அவளிடம் பேரமைதி வந்து அமர்ந்து கொண்டது.

மற்றையப் பெண்களைப் போலத்தான் இவளையும் நினைக்கிறானோ? என்கிற கேள்வி அவளைக் குடைந்தது. அப்படி ஒரு சிந்தனையிருந்தால், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும் என்கிற வேகம் பிறக்க, எழ முயன்றவளின் முன்னே உதவிக்கு வந்தான் அவ்வியக்தன்.

தன் கரத்தைத் தூக்கி அவனைத் தடுத்தவள், கெந்தியவாறே எட்டித் தன் ஊன்றுகோலை எடுத்து, காலில் பூட்டிவிட்டு நிமிர்ந்து நின்றாள்.

அதைக் கண்டு நிம்மதி கொண்டவனாக, அவளை விட்டு விலகி, உண்டு முடித்த குப்பைகளை ஒன்றாகச் சேர்த்துக் கடையில் கொடுத்த பையிலேயே திணித்து ஒரு முடிச்சுப் போட்டவாறே கதவை நோக்கி நடந்தான்.

கதவைத் திறக்கும் பொது மெல்லிய தயக்கம் எட்டிப் பார்த்தது.

அவள் தனியாகத் துணையில்லாமல் இருப்பாளா. இரவில் ஏதாவது அவசரம் என்றால் என்ன செய்வாள்? சமாளிப்பாளா? அதைக் கேட்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் வேகமாகத் திரும்பியவன், பின்னால் வந்து கொண்டிருந்தவளோடு உரசி நிற்க, அவளோ, அவன் தேகம் தீண்டியதும், பதறியவாறு பின்னால் போக, அவளுடைய வேகத்தைத் தாங்கமுடியா ஊன்றுகோல் வழுக்கிச் சரிய, சமநிலை தவறிப் பின்புறமாகச் சரியத் தொடங்கியவளைச் சற்றும் யோசிக்காமல் இடை கொண்டு பற்றி நிறுத்தினான் அவ்வியக்தன். அத்தோடு விட்டிருக்கலாம், பற்றியவன் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மார்போடு மோதியும் நின்றாள்.

முதலில் அவளைத் தாங்கவேண்டும் என்கிற எண்ணத்தால் மட்டும் அணைத்துப் பிடித்தான் அவ்வியக்தன். ஆனால் அந்த இரண்டு விழிகள் நான்கு விழிகளாகிப் பின் ஒரு காட்சியாக மாறிப்போக, உலகம் தன் சுழற்சியை நிறுத்திக் கொண்டது.

முதன் முறையாக ஒரு ஆண்மகன் தொட்டதாலோ என்னவோ, அவளையும் அறியாமல் தேகம் உருகிக் குழைந்து கரைந்து போயிற்று. ஒரு ஆணுடைய கரத்தில் இத்தனை சக்தியிருக்கிறதா என்ன? தொட்ட உடன் பற்றிக் கொள்ளச் செய்கிறதே… இது என்ன மாயை…? அதனால்தான் நெருப்பையும் பஞ்சையும் அருகருகே வைக்கக் கூடாது என்று சொல்கிறார்களோ? இனம்புரியாத அவஸ்தையில் அவள் தடுமாறி நிற்க, அவனோ, அவளுடைய அந்தக் காந்த விழிகளுக்குள் சிக்குண்டு வெளிவரத் தெரியாது பாதை தப்பிய குழந்தை போல அவளையே வெறித்தான்.

பாதை தெரியாது ஓடிக்கொண்டிருந்த சிறுவனுக்குத் தொலைதூரத்தில் வெளிச்சம் தெரிந்ததோ? அந்த வெளிச்சத்தை நோக்கி ஓடுபவன் போல, அந்த மலர் முகத்தை நோக்கு மேலும் குனியத் தொடங்கினான் அவ்வியக்தன்.

இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து யுத்தம் செய்தவாறு, வஞ்சகமில்லாமல் கலந்து கரைந்து செல்ல, இப்போது அவனுடைய விழிகளோ, நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டுவிட்டது போலத் துடித்துக்கொண்டிருந்த அந்தச் செவ்விய செழித்த உதடுகளில் நிலைத்து நின்றன.

இதழ்களா அவை? சுவைமிக்க மாங்கனிகளைப் பிளந்து இதழ்களாக இறைவன் படைத்திட்டானோ? பார்க்கும்போதே உள்ளே இனம்புரியாத உணர்ச்சியின் கொந்தளிப்பாக இருக்கிறதே. அதைச் சுவைத்தால் எப்படியிருக்கும்? ஏனோ அந்தக் கணமே அந்த உதடுகளைப் புசித்துப் பசியாறிவிடவேண்டும் என்று எண்ணியவன் போல, மெல்ல மெல்ல அவற்றை நோக்கிக் குனியத் தொடங்கினான் அவ்வியக்தன்.

அழகு.. எல்லாம் அழகு. அவள் அழகு… அவள் மூச்சு அழகு… அவள் உடல் தெறிக்கும் வாசனை அழகு… கலைந்திட்ட கார் குழல் அழகு. அவை அவள் முகத்தில் சித்திரம் தீட்டுவதும் அழகு… அவளைச் சுற்றிய திசையாவும் பேரழகு.

மேலும் தன்னை இழந்தவனாய், அவளிடம் மயங்கியவனாய், இன்னும் குனிந்தவனின் உதடுகள், செழித்த இதழ்களின் வெம்மைதனை உணர்ந்திட்ட நேரம் அது. ஒரு விரல் இடைவெளியில் தயங்கி நின்ற அந்த இரு உதடுகளும் ஒன்றை ஒன்று ஒற்றி வன்னிதழ், மென்னிதழையும். மென்னிதழ் வன்னிதழையும் தீண்டத் தயாரான அந்தக் கணம், இதோ இதோ ஒன்றை ஒன்று முட்டத் தொடங்கிவிட்டன… முட்டுகின்றன…

அடடே… இது என்ன அநியாயம்… அநீதி… அக்கிரமம்… எங்கும் நடக்காத மாபெரும் கொடுமை. கூடவேயிருந்து குழிபறித்துவிட்டனவே அந்தப் பாழாய்ப் போன நாசிகள் இரண்டும். முட்ட இருந்த அந்தக் காதலர்களைப் பிரிக்கும் அதிகாரத்தை அந்த நாசிகளுக்குக் கொடுத்தது யார்? ஐயையோ இதைக் கேட்க யாருமே இல்லையா? தகித்த உதடுகள் தவிப்புடன் புலம்ப, நாசிகளோ எதிர் உதடுகளைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றன.

அத்தனை காலம், யாரும் திருடாதிருக்க வேல்கொண்டு காத்திருந்த மெல்லிய கூர் நாசியும், கொடுக்கவில்லையென்றால் போர்தொடுக்கத் தயார் என்பது போலப் பேரிய கூரிய சிற்ப நாசியும் தம் மார்புகளை நிமிர்த்திப் போருக்குத் தயார் என்பது போல ஒன்றை ஒன்று முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்க, முதலில் சுய உணர்வு பெற்றது அவ்வியக்தன்தான்.

மிக மிக நெருக்கத்தில் அந்தத் தேவதையின் முகம். இரண்டு நாசிகளும் முட்டி நிற்க, அடுத்து நடக்க இருப்பதன் விளைவைப் புரிந்துகொண்டவனாக பதட்டத்தோடு அவளை விட்டு விலகி நின்றவனுக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது முழுதாக உலகை வந்தடைய.

என்ன காரியம் செய்ய துணிந்து விட்டான். விதற்பரையைப் போய் அவன் முத்தமிட நினைத்தானே… அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? குழப்பத்துடன் அவளை விட்டு விலகி நின்றவனுக்கு உள்ளே பெரும் பிரளயமே எழுந்தது. விதற்பரையோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டவளாய் மலங்க மலங்க விழித்தாள்.

கரங்களோ அவளையும் அறியாது நடுங்கிய உதடுகளை மூடிக்கொண்டன. கால்களோ பலமற்றவை போலத் தோயத் தொடங்கின. கொஞ்சத்திற்கு முன்னர்தான், அவனிடமிருந்து முழுதாக விலகிவிடவேண்டும் என்று எண்ணினாள். ஆனால் மறு கணம், அவன் கொடுக்கும் முத்தத்தை ஏந்தத் தயாராக நின்று கொண்டாளே. எத்தனை பெரிய வெட்கக் கேடு…

கலங்கியவளாக நின்றிருக்க, அவனும் அவளுடைய தவிப்புக்கு மாற்றுக் குறையாமல் முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்க்கச் சங்கடப்பட்டவன் போல எதையோ சொல்வதற்கு வாயைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தான். வார்த்தைகள் ஏனோ வரவில்லை. ஆனாலும் ஏதோ சொல்லவேண்டும் என்று வார்த்தைகள் தொண்டைவரை வந்து நின்றன. ஆனாலும் அவனால் பேச முடியவில்லை.

நல்லவேளையாக இருவரின் தவிப்புக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுபோல விதற்பரையின் கைப்பேசி அழைத்தது.

முழுதாகச் சுயநினைவு பெற்றவளாய் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அன்னைதான் அழைத்திருந்தார்.

“எக்ஸ்கியூஸ்மி…” என்றவள் சற்றுத் தள்ளிச் சென்று, எடுத்துக் காதில் பொருத்தி,

“ஹாய் மா…” என்றாள். மறுபக்கம் கூறியதைக் கேட்டுவிட்டு,

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வீட்டில் இருக்கிறேன்… சரிம்மா… கவனமாக இருக்கிறேன்… பாய்… என்று விட்டுக் கைப்பேசியை அணைத்துவிட்டுச் சங்கடத்துடன் அவ்வியக்தனைப் பார்த்து,

“அம்மா…” என்றாள்.

“ஓ…” என்றவனுடைய பார்வை, பிய்ந்து போயிருந்த அவள் கைப்பேசி உறையில் இருக்க, அவன் விழிகள் போன திசையைப் புரிந்துகொண்டவளாகக் கைப்பேசியைத் தூக்கிப் பார்த்துப் புன்னகைத்தவள்,

“கைப்பேசியின் உறையை மாற்ற நேரம் கிடைக்கவில்லை…” என்றாள் சங்கடத்துடன். மீண்டும் இவனுடைய விழிகள் அவள் உதடுகளில் நிலைத்திருக்க, அவசரமாய்த் தன் விழிகளைத் தாழ்த்தியவனாக,

“சரி… நான் போகவேண்டும்… கிளம்புகிறேன்…” என்று முணுமுணுத்தவன், எதிலிருந்தோ தப்பிக் கொள்பவன் போல அவசரமாக அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல முயல,

“ஒரு நிமிஷம்…” என்றாள் இவள். இவன் நின்று திரும்பிப் பார்க்க,

அம்மா… அப்பாவிற்கு என் நிலைமை தெரியக் கூடாது… தெரிந்தால் தாங்க மாட்டார்கள். உடனே இங்கே வந்துவிடுவார்கள். அங்கே என் சகோதரர்களுக்குத்தான் சிக்கலாகிப் போகும்… அதனால்…” என்று கூறி முடிக்காமல் அவனைப் பார்க்க,

“பயப்படாதே… இது பற்றி யாரிடமும் வாய் விடமாட்டேன்…” என்றுவிட்டு,

“டே கெயர்… தேவைப்பட்டால் என்னை அழை…” என்றுவிட்டு விடைபெற, விதற்பரையோ தன் வீட்டுக் கதவை அறைந்து சாற்றிவிட்டு, அதன் மீது சாய்ந்தவாறு நின்று கொண்டாள்.

இன்னும் அவளுக்கு நம்ப முடியவில்லை. அவளா? அவளா அவனுடைய முத்தத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். சே… எத்தனை பெரிய அசிங்கம். அவனுக்கு இந்த முத்தமிடுதல், கட்டி அணைத்தல் எல்லாம் பெரிய விடயமில்லை. ஆனால் அவளுக்கு… நல்ல ஒரு தாயின் வளர்ப்பில் வந்துவிட்டு, இப்படி ஒரு பெண் பித்தனின் முத்தத்திற்காகத் தவித்துப் போய் நின்றிருந்தாளே. இதை விட ஒரு அவமானம் ஏதாவது இருந்துவிடப் போகிறதா இந்த உலகில்? தவித்தவாறு விழிகளை மூடி நின்றாலும், புத்தியோ முகம் நோக்கிக் குனிந்த அந்தக் கம்பீர முகத்தில்தான் நிலைத்திருந்தது.

சற்று முன்னேறியிருந்தாலும் உதடுகள் ஒட்டியிருக்கும். ஒட்டியிருந்தால் என்னவாகியிருக்கும். அவனுடைய இதழ்கள் என்ன கூறியிருக்கும்… முதன் முறையாக அந்த உதடுகளைத் தொட்டிருக்கலாமோ? என்கிற எண்ணம் தோன்ற விதிர் விதிர்த்துப் போனாள் விதற்பரை.

இவளுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? அதுவும் யாருடைய உதடுகளைத் தொட நினைக்கிறாள்? அவ்வியக்தனுடையதா…? அதுவும் எந்தப் பெண் என்றாலும் காமம் கொள்ளும் அவனுடைய உதடுகளையா தொட நினைத்தோன்…? கடவுளே…!” என்று தவித்துத் துடிக்க, அதே நேரம் வெளியேறிய அவ்வியக்தனுக்கும் சட்டென்று அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற முடிந்திருக்கவில்லை.

அவள் கதவுக்கு அருகாமையிலிருந்த சுவரோடு சாய்ந்து நின்றிருந்தவனுக்கும் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. அவளைக் கண்ட நொடியில் பிறந்த தவிப்பு இம்மியும் குறையாமல் அவனை அலைக்கழித்தது.

சற்று முன் நெருக்கத்தில் தெரிந்த அந்தப் பூ முகத்தை நினைக்க நினைக்க உடலில் இனம் புரியாத அவஸ்தை. அந்தக் கணமே பூட்டிய அந்தக் கதவைத் திறந்துகொண்டு அவளிடம் செல்லவேண்டும் என்று கூக்குரலிட்ட புத்தியை அடக்க அவன் மிகவும் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

வாழ்வில் முதன் முறையாகப் போதையின்றி ஒரு பெண்ணைத் தீண்டத் துடிக்கும் விசித்திரமான உணர்விற்குள் சிக்குப்பட்டவனாய் செயல் கெட்டு நின்றான் அவ்வியக்தன்.

ஆனாலும் அந்தச் சிந்தனை, அவனுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் ஆபத்தாய் முடியும் என்கிற உண்மை அவனை அறையத் தன் தலையை உலுப்பியவன், அவசரமாக அவள் சிந்தனைகளை உதற முயன்றவாறு, எதற்கோ பயந்து ஓடுபவன் போலக் கடகடவென்று கட்டடத்தை விட்டு வெளியேறினான். ஆனாலும் அவளுடைய நினைவுகள் மட்டும் அவனை விட்டு வெளியேறாமல் சண்டித்தனம் புரிந்தன.

What’s your Reaction?
+1
18
+1
3
+1
4
+1
4
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 17

(17)   இந்தப் பிள்ளைக்கு என்னவாகிவிட்டது? நான் இவ்வளவு காட்டுக் கத்தலாகக் கத்தியும், கேட்காதவளைப் போல் அறையில் அடைந்துகிடக்கிறாளே...” என்று…

13 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 16

(16)   அன்று இரவு ஏனோ கந்தழிதரனுக்கு உறக்கம் சுத்தமாக வரவில்லை. உள் மனனோ, அம்மேதினி முன்பு சொன்னதைத்தான் திரும்பத்…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

4 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 15

(15)   மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக்…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி...…

6 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)   அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம்…

1 week ago