Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6)

தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை. பயத்தில் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது. பற்கள் பயத்தில் தந்தியடித்தன.

“இது என்ன… வலது… வலது பக்கம் திரும்ப வேண்டும்… எதற்காக நேராகப் போகிறீர்கள்…” என்று முடிந்த வரை தன் நடுக்கத்தை மறைத்த குரலில் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தானுமில்லை. பதில் சொன்னானுமில்லை.

“உங்களைத்தான்… எதற்காக நேராகச் செல்கிறீர்கள். தயவு செய்து வண்டியைத் திருப்புங்கள்…” என்றவளுக்கு இப்போது இயலாமையில் கண்ணீர் வேறு வரத் தொடங்கியது. அவனோ அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் பாதையில் கவனத்தைச் செலுத்தியவாறு,

“நான் உன்னை என் வீட்டிற்குக் கடத்திக்கொண்டு போகிறேன் விதற்பரை…” என்றதும் இவளுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. பேச சக்தி இழந்தவளாக அவனை வெறித்தாள். இதயமோ இந்த கணமே நின்றுவிடுவேன் என்று அச்சுறுத்தியது. அச்சம் பிடரியில் அடிக்க,

“எ… என்.. என்னது… கட… கடத்திக்கொண்டு… போ… போகிறீர்களா…?” என்றாள் பெரும் கிலியுடன்.

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது,

“பார்க்க எப்படித் தெரிகிறது…” என்றான்.

“நோ… நோ… ப்ளீஸ்… என்னை விட்டுவிடுங்கள்… நான் வீட்டிற்குப் போகவேண்டும்…” கெஞ்சியவளுக்குத் தொண்டை அடைத்தது.

“விடுவதா… இத்தனை அழகாக இருக்கிறாய்… உன்னை எப்படிச் சும்மா விடுவேன். அதுவும் பெண்களைக் கண்டால் பாய்ந்து கற்பழித்துவிடக் கூடியவன் நான்… உன்னைப் போன்ற அழகிகளை எப்படி விட்டு வைப்பேன்… வாய்ப்பேயில்லை…” என்றதும், இவளுடைய முகம் முழுதாக இரத்தப் பசையை இழந்தது. பயத்தில் காதுகள் அடைத்துக் கொண்டு வந்தன. எங்கே மயங்கி விழுந்துவிடுவோமோ என்று அஞ்சியவள் போல அவனைப் பரிதாபமாகப் பார்க்க, அதுவரை இறுக்கமாக நின்றிருந்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பக்கென்று சிரித்துவிட்டான்.

இவளோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளி வராமல்,

“நா… நான்… நீ… நான்…” என்று குழற, மேலும் விரிந்த புன்னகையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“கூல் விதற்பரை… நிறையப் பெண்களோடு படுக்கையைப் பகிர்ந்திருக்கிறேன் தான்… அதற்காகக் காமுகன் அல்ல… என்னை நாடி வரும் பெண்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் தொடுவதில்லை… நீயாக என்னிடம் வரும் வரைக்கும் நானாக உன்னை நெருங்கமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு…” என்றதும் அவளுக்குப் பயம் மறைந்து ஆத்திரம் பெருகியது.

கொஞ்ச நேரத்தில் எப்படி அலறவைத்து விட்டான். இப்போதும் அந்தப் பயத்தின் எச்சம் இருந்து வியர்த்துக் கொட்ட வைக்கிறதே. வழிந்த வியர்வையைத் துடைத்தவாறு சீற்றம் பொங்க,

“ஹெள டெயர் யு… எத்தனை தைரியமிருந்தால் என்னுடைய அனுமதியில்லாது எங்கோ அழைத்துச் செல்வீர்கள்… மரியாதையாக வாகனத்தைத் திருப்புங்கள்… இல்லை…” என்று கொதிப்புடன் சீற, இப்போதும் தன்னுடைய புன்னகையை மாற்றாமல், அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தான்.

“எதற்கு இத்தனை கோபம்…?” என்றவன் வாகனத்தை இடது பக்கமாக ஒடித்துத் திரும்ப, விதற்பரைக்குச் சர்வ நாடியும் அடங்கிப்போனது.

அவன் திருப்பிய வேகத்திற்கு, அவன் புறமாகச் சாயத் தொடங்கினாள். அவசரமாக் கதவின் பிடியைப் பற்றி நிலைப்படுத்தியவாறு, வாகனம் நேராகும் வரைக்கும் காத்திருந்தவள், கதவைத் திறக்கப் போக அது திறக்கமாட்டேன் என்றது. மீண்டும் பலமாகத் திறக்க முயன்றான். அசையவில்லை. திரும்பி அவனை வெறிக்க, அவளுடைய முயற்சியைச் சிறிது கூட அவன் கொண்டுகொண்டானில்லை.

மாறாக நிதானமாக வண்டியை ஓட்டியவன், ஒரு குறிப்பிட்ட கட்டடத்தின் முன்பாகத் தன் வாகனத்தை நிறுத்திவிட்டுத் வெளியே வந்தான். பின் அவள் பக்கமாகக் குனிந்து,

“பத்து நிமிடங்கள் இங்கேயே இரு… இதோ வந்துவிடுகிறேன்…” என்றுவிட்டுக் கதவை மூடத் தொடங்க,

“எங்… எங்கே போகிறீர்கள்” என்றாள் கரகரத்த குரலில். இப்போதும் புன்னகை மாறாமல் அவளைப் பார்த்தவன்,

“எதற்கா… பின்னே… நான் உன்னைத் தப்பாகத் தொடும் போது சும்மாவா இருப்பாய். திமிறுவாய் தானே. அதுதான்… உன்னைக் கட்டிவைக்கக் கயிறு வாங்கப் போகிறேன்…” என்றவன், பின் என்ன நினைத்தானோ, மீண்டும் அவள் பக்கமாகப் பார்த்து,

“தப்பி ஓடுவதாக இருந்தாலும் உன் விருப்பம்… தாராளமாக ஓடலாம்… ஆனால் இந்தக் காலோடு, ஊன்றுகோலின் வசதியுமில்லாமல் உன்னால் இயலாது. நொண்டி நொண்டிப் போவதாக இருந்தாலும், பத்தடிக்கு மேல் சிரமம்தான்;…” என்றுவிட்டுக் கதவைச் சாத்திவிட்டு அவன் போக, விதற்பரையோ அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கதவைத் திறக்க முயன்றாள். அந்தோ பரிதாபம், அவள் திறக்க முயன்ற கணம், வாகனத்தின் எழுப்பொலி பெரும் சத்தத்துடன் அலற ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தில் ஒரு கணம் துள்ளி அடங்கியவளுக்கு அதன் அலறலை எப்படி நிறுத்துவது என்று கூடத் தெரியவில்லை.

பதறி அடித்து எதை எதையோ தட்டினால், அந்த நவீனரக வாகனம் அசைந்தால் அல்லவோ. அது அத்தனை பூட்டுகளையும் இறுகப் போட்டுவிட்டு இவளைப் பார்த்துக் கிண்டலுடன் சிரித்தது. யாராவது ஒருவருடைய உதவியைக் கேட்கலாம் என்றால், மருந்துக்குக் கூடச் சுத்தவர யாருமில்லை.

அதே நேரம் உள்ளே சென்றுகொண்டிருந்த அவ்வியக்தன். இரண்டாம் தளத்தின் படிகளில் ஏறி, அங்கிருந்த கண்ணாடித் தடுப்புக்குள்ளாக எட்டிப் பார்த்தான். அவனுடைய வாகனத்தின் நான்கு விளக்குகளும் மின்னுவதையும், வாகனத்தின் ஒலியையும் கண்டவனுக்கு மீண்டும் உதடுகள் புன்னகையில் விரிந்தன. எதையோ நினைத்துத் தன் தலையை அங்கும் இங்குமாக ஆட்டியவன், தன் திறப்பை எடுத்து, அந்த எச்சரிக்கை சமிக்ஞையை நிறுத்திவிட்டுக் குறிப்பிட்ட ஒரு அறைக்குள் நுழைந்தான்.

அதே வேளை வியர்த்து விறுவிறுக்க அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் தேகம் உதற நின்றிருந்தவளை அதிகம் காக்க வைக்காமல் பத்து நிமிடங்களில் வந்துவிட்டிருந்தான் அவ்வியக்தன்.

வந்தவன் தன் கரத்திலிருந்த பொருளைப் பின் ட்ரங்கில் போட்டுவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் வந்தமர, அச்சத்தில் ஒடுங்கியவாறு உடல் நடுங்கக் கூனிக் குறுகி அமர்ந்திருந்தாள் விதற்பரை.

மீண்டும் அவனுடைய வாகனம் வந்தவழியே பயணப்பட, இவள் உலகத்தில் உள்ள அத்தனை கடவுளையும் அழைத்துத் தன்னைக் காக்கும்படி வேண்டிக்கொண்டிருந்தாள்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம், அவனுடைய வாகனம் அவளுடைய குடியிருப்பை நோக்கி நெருங்கத் தொடங்க முதலில் நம்ப முடியாமல் விழிகள் விரித்துப் பார்த்தவள், பின் ஆச்சரியத்தோடு தன்னருகே நின்றிருந்தவனை வெறித்தாள். அவள் தன்னைப் பார்ப்பது தெரிந்ததும்,

“நான் அவ்வியக்தன் என்று தெரிந்ததும், உன் முகத்தில் தெரிந்த பயத்தையும் அச்சத்தையும் கண்டேன். ஓரளவுக்கு அதற்கான காரணத்தையும் என்னால் ஊகிக்க முடிந்தது. அதனால்தான் சின்னதாக விளையாடினேன்…” என்ற கூற, அதுவரை விட்டுச் சென்ற தைரியம் திரும்ப அவளிடம் வந்து சேர்ந்திருந்தது.

அவனை முறைத்தவள்,

“விளையாடுவதற்கு இது என்ன மைதானமா?” என்றாள் சீற்றமாக. அவளுடைய குடியிருப்பின் அருகாமையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நிதானமாக அவளைப் பார்த்து,

“இதோ பார் தற்பரை… ஏற்கெனவே சொல்லியிருந்தேன் நானாக எந்தப் பெண்ணிடமும் போவதில்லை என்று… பிறகும் இந்த அச்சம் உன் முகத்தில் எதற்கு? தவிர உனக்கும் எனக்குமான எல்லை எந்தளவு என்பது நன்கு தெரியும். அதுவும் என் அண்ணன் மனைவியின் உறவினளான உன்னைத் தப்பான நோக்கத்தோடு எப்படி நெருங்குவேன்…?” என்று கேட்க, இப்போது இவளுடைய விழிகள் விரிந்தன. கூடவே நிம்மதியும் பிறந்தது.

ஆனால் அதன் மீதும் மண்ணள்ளிப் போட்டான் அவ்வியக்தன்.

“நீயாக என்னை நெருங்காத வரைக்கும் என் சுட்டுவிரல் நகம் கூட உன்னைத் தப்பான நோக்கத்தோடு தீண்டாது… நம்பு…” என்றான். அதைக் கேட்டதும், ஆத்திரத்துடன் அவனைப் பார்த்து முறைத்தவள்,

“ஓவர் மை டெட் பாடி…” என்றாள். எத்தனை தைரியம் இவனுக்கு, அவள் சம்மதித்தால் தொடுவானா என்ன? தொடட்டும் தொட்டுப் பார்க்கட்டும்… தொடும் கரத்தை முறித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறேன்…’ என்பது போல அவனைப் பார்த்தாள். ஆனால் உள் மனமோ, சற்றைக்கு முன் அவன் கடத்துகிறேன் என்று சொன்னபோது அஞ்சி நடுங்கியதை நினைவுறுத்தி எள்ளி நகையாடியது.

‘அவன் கடத்துகிறேன் என்று சொன்னதுக்கே அலறிப்போனாய்… நீயாவது அவனுடைய கரத்தை உடைத்துக் குப்பைத் தொட்டியில் போடுவதாவது. மயங்கி விழாமல் இருந்தாலே பெரிய காரியம்…’ என்று கிண்டலடிக்க அவசரமாக அந்த உணர்வுகளை உதறித் தள்ளிவிட்டு அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே பார்த்தாள்.

அவளுடைய மன நிலையை அவனும் புரிந்துகொண்டானோ? தன் அழகிய பற்கள் தெரிய நகைத்தான். பின், அவள் பக்கமாகக் குனிந்து,

“பெண்கள்… அதுவும் உன்னைப் போன்ற அழகான பெண்கள் என்னைத் தேடிவரும் போது அதை மறுப்பது மகா பாவம் தெரியுமா? கடவுளே என்னை மன்னிக்க மாட்டார்…” என்றவாறு அவளைக் குறுகுறு என்று பார்த்தான்.

“நீயாக என்னிடம் வரமாட்டாய் என்கிற நம்பிக்கை உனக்கு இருக்கிறதுதானே…” என்றான் கிண்டலுடன்.

திரும்பி அவனை எரிக்கும் பார்வை பார்க்க அந்த விழிகளைக் கண்டு தன் தோள்களைக் குலுக்கி,

“பிறகெதற்கு இத்தனை அச்சமும் கோபமும்…” என்று அவன் கூறும்போதே, அதற்கு மேல் அவன் உளறலைக் கேட்கும் தெம்பில்லாதவளாக, அந்த இடத்தை விட்டு ஓடினாலே போதும் என்று எண்ணியவள் போலக் கதவைத் திறந்து இடது காலை மட்டும் ஊன்டி எழத் தொடங்கினாள்.

மறு கணம் அவள் பக்கமாக வந்து நின்ற அவ்வியக்தன், அவள் சுதாரிக்கும் முன்பே, அவளைத் தன் கரங்களில் ஏந்தியும் கொண்டான்.

முதலில் எங்கே விழுத்தி விடுவானோ என்கிற அச்சத்தில், அவனுடைய சட்டைப் பட்டியை இறுக பற்றி அவனோடு ஒன்றியவள், பின் அவன் கரங்களில் கிடக்கிறோம் என்று புரியப் பயத்தில் தன்னை விடுவிக்க முயன்றவாறு,

“என்ன காரியம் செய்கிறீர்கள். விடுங்கள் என்னை…” என்று திமிற, அவனோ இளகாத வேக நடையுடன் அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் உள்ளே நுழையத் தொடங்கினாள்.

அங்கே இருப்பவர்கள் இவர்களை ஒரு மாதிரிப் பார்க்க,

“தயவு செய்து என்னை இறக்கி விடுங்கள்… எ… என்னால் நடக்க முடியும்… ஐயோ…! எல்லோரும் பார்க்கிறார்கள்…” என்று திமிற, நிதானமாக இவளைக் கீழ்க்கண்ணால் பார்த்தான். பின்,

“எப்படி? நொண்டி நொண்டியா? அதுவும் இந்தப் பனியில், உனக்கு ஊன்றுகோல் வேறு இல்லை… பேசாமல் வா…” என்றதும், இவளோ அவஸ்தையுடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“எல்லோரும் பார்க்கிறார்களே…” என்றாள் பெரும் சங்கடத்துடன். சுத்திவரப் பார்த்துவிட்டு,

“அவர்கள் பார்த்தால் நமக்கென்ன… நமக்காக அவர்களா வாழப் போகிறார்கள்…?” என்று அலட்சியத்துடன் கேட்டவாறு தன் வேகத்தைக் கூட்ட, அவன் கரங்கள் கொடுத்த தகிப்பில் எரிந்தவளாய்,

“இல்லை நான் நடப்பேன்… இறக்கிவிடுங்களேன்…” என்றாள் கெஞ்சலாய். அவள் சொன்னது அவனுடைய காதில் விழவே இல்லையோ? எதுவும் பேசாமல் மின்தூக்கியின் அருகே வந்தான்.

அவர்களுடைய போதாத நேரம், அங்கிருந்த ஒற்றை மின்தூக்கியின் அருகே ‘அன்டர் சேர்விஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது.

சுத்தம், எரிச்சலுடன் நிமிர்ந்து அவ்வியக்தனைப் பார்த்தாள்.

கிழக்குப் பக்கத்தில்தான் முக்கிய மின்தூக்கிகள் இருக்கின்றன… கொஞ்சத் தூரம் நடக்கவேண்டும்…”

சொன்னதும், அவள் சொன்ன திசைக்கு நடக்கத் தொடங்க, அப்போது அவன் விழிகளுக்குத் தட்டுப்பட்டது படிகள் என்கிற அடையாளத்தைப் பதித்திருந்த கதவு. உடனே அதை நெருங்கியவன், அதைத் திறக்க அவனுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டவளாக,

“படிகளிலா ஏறப்போகிறீர்கள்…! நான் தங்கியிருக்கும் இடம் ஒன்பதாவது மாடி. அத்தனை தூரம் உங்களால் நடக்க முடியாது…” என்று இவள் பதற, அவனோ சற்றுக்குனிந்து தன் கரங்களில் கிடந்தவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“ரியலி…” என்றவன் கடகட என்று ஏறத் தொடங்க விதற்பரை அதிர்ந்துதான் போனாள்.

அவள் சற்று ஒடிசல்தான். அதற்காக நிறையற்றவளும் அல்ல… அவளைத் தூக்கிக்கொண்டு அத்தனை படிகளிலும் ஏறுவது என்பது சாதாரண விடயமல்ல. சில வேளைகளில் இப்படி மின்தூக்கி கையை விரிக்கும்போது, புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு அரைவாசிப் படியில் அமர்ந்து இளைப்பாறிவிட்டுத்தான் வீட்டுக்கே செல்வாள். அப்படியிருக்கையில் ஒன்பது மாடிவரை இவளை ஏந்திக்கொண்டு ஏறுவது என்பது நிச்சயமாக இயலாத காரியம். கூடவே எங்கே தன்னைக் கீழே போட்டுவிடுவானோ என்கிற அச்சமும் இருந்ததால் அவனுடைய சட்டையைக் கெட்டியாகப் பிடித்தும்கொண்டாள்.

முதலாவது தளம் தாண்டி இரண்டாவது தளத்தை அவன் கடக்கும்போது,

“ப்ளீஸ் நான் நடந்து வருகிறேனே…” என்று மெல்லிய கிசுகிசுப்புடன் கூற, இவளைப் பார்த்துச் சிரித்தானன்றி, கொஞ்சம் கூட அவளைக் கீழே இறக்கும் எண்ணம் இல்லாதவனாக மேலே மேலே ஏறத் தொடங்கினான்.

இனி அவனிடம் கேட்டுப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாய் தன் பற்களைக் கடித்தவாறு அமைதி காத்தாள் விதற்பரை.

வேறு என்னதான் செய்யமுடியும் அவளால்? அவனிடமிருந்து தப்பி ஓடுவதற்காகவாவது திவ்வியமாய் இரண்டு கால்கள் வேண்டுமே. அப்படியே ஓடுவதாக இருந்தாலும் புத்தி தெளிவாக இருக்கவேண்டும். சும்மாவே மருந்து குடித்த அரை மயக்கம்… இதில் கால் வலி வேறு… அதற்கு மேல் அவளாலும் வாதாட முடிந்திருக்கவில்லை.

ஆனால் அவளைக் கரங்களில் ஏந்தியிருந்தவனின் பாடுதான் திண்டாட்டமானது. சொல்லிவிட்டான்தான் நீ சம்மதிக்காமல் உன்னைத் தவறாகத் தீண்ட மாட்டேன் என்று. ஆனால் அவளைக் கரங்களில் ஏந்தியிருந்த அந்த நிலை மிகக் கொடியதாகத்தான் இருந்தது அவனுக்கு.

அதுவும் மெல்லிடையாளின் மேனியின் மென்மையை உணர்ந்த அந்தக் கணம், உள்ளே பல உணர்வுகள் என்றுமில்லாதது போலப் பேயாட்டம் ஆடின. அவள் அணிந்திருந்த ஆடைகளையும் மீறி அவன் கரங்கள் உணர்ந்த அந்த மெல்லிய சூட்டில், இவன் உடல் தகிக்கத் தொடங்கியது. எப்போதும் அவன் அனுபவித்திராத அந்தப் புதுவித உணர்வில் கிறங்கிப் போனான். இத்தனை காலமாக, இதயத்தின் ஒரு ஓரத்தில் முள்ளாய் நெரித்துக்கொண்டிருந்த உணர்வு, பட்டென்று மலர்ந்து மென்மையாகி மலர் வீசியது போன்ற உணர்வில் லேசாகிப் போனான். தாங்க முடியாத சுமையை இறக்க இடமில்லாமல் அல்லல் படும் போது, திடீர் என்று அந்தச் சுமை காணாமல் போகும்போது ஏற்படும் இதம் இருக்கிறதே. அதை உணர்ந்து கொண்டான். இத்தனை நாளாய் தவித்த ஆன்மாவுக்கு அமைதி கிடைத்தது போல, அசுவாசப் பெருமூச்சு விட்டான்.

அவளை ஏந்தியிருந்த தித்திப்போ என்னவோ, அவனுக்குக் கடந்து வந்த அந்த ஒன்பது மாடிகளொன்றும் பெரிதாகவே தெரியவில்லை. சொல்லப்போனால் இன்னும் ஒன்பது மாடிகள் நடக்கவேண்டுமானாலும், அவனுக்கு அது மகிழ்ச்சிதான்.

எப்படியோ அவள் தங்கியிருக்கும் பகுதிக்கு முன்னால் வந்து நின்றான்.

“திறப்பெங்கே…?”

அவன் கேட்டதும், அவசரமாகத் தன் வயிற்றில் கிடந்த கைப்பையைத் திறந்து, திறப்பை எடுத்துக் கதவைத் திறக்க, உள்ளே வந்தவன், நேராக முன்னறைக்குச் சென்று அவளை அங்கிருந்த மென் நீள் இருக்கையில் இருத்திவிட்டு, நிமிர்ந்தபோது அவனிடம் ஆழமான மூச்சு மட்டுமே வெளிவந்தது அன்றிக் களைப்புக்கு உண்டான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

அவள் வசதியாக அமர்ந்ததும் விலகியவன், ஏதோ தான் கட்டிய வீடு போலச் சரியாகக் கணித்து அவளுடைய படுக்கையறைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு மீண்டும் அவளருகே வந்தான்.

தேநீர் மேசையை அவளுக்கு முன்பாக இழுத்துவிட்டு அதில் தலையணையை வைத்தவன், கட்டுப்போட்ட காலைத் தூக்கி அந்தத் தலையணை மீது வைத்தவாறு,

“சற்றுப் பொறு…. இதோ வருகிறேன்…” என்றுவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியே சென்றதும், அதுவரை எதுவோ அடைத்திருந்த உணர்வில் திக்குத் திணறிக்கொண்டிருந்த விதற்பரைக்கு அப்போதுதான் நிம்மதி மூச்சொன்று வெளியேறியது.

ஆனாலும் இன்னும் அவனுடைய கரங்கள் அவள் இடையை வளைத்திருப்பது போன்ற உணர்வில் தன்னையும் மறந்து இடையை வருடிக் கொடுத்தவளுக்கு ஏனோ தேகம் சிலிர்த்தது.

அவளையும் அறியாமல், ஏந்திவந்த அவன் உருவம் ஆழமாய் மனதில் பதிந்து போக, அதை உணராமலே இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்தவள், மெதுவாக விழிகளை மூட, மனக்கண்ணில்,அவளை ஏந்தி வந்த அவ்வியக்தன்தான் பூத்திருந்தான். கூடவே அவன் மீதிருந்த பயமும், தயக்கமும், ஒதுக்கமும் அவளை விட்டு விலகிச் செல்ல, அதற்கான காரணத்தை உணர்ந்தவளுக்கு நம்ப முடியாத ஆச்சரியம் தோன்றியது.

ஆம் அவ்வியக்தனின் பார்வை அவளோடு பேசும் போது தறிகெட்டு எங்கும் ஓடவில்லை. அவனுடைய விழிகள் அவளுடைய உதடுகளைத்தான் பார்த்தனவே தவிர மறந்து போயும் அதற்குக் கீழ் இறங்கவில்லை. கோபப்படும் போது மட்டும் தயங்காமல் அவளுடைய விழிகளைப் பார்த்துப் பேசினான். அக்கறையாகப் பேசும்போது அவளுடைய முகத்தைப் பார்த்துப் பேசினான். அதைத் தவிர அவனுடைய விழிகளில் எந்த விதமான விகல்ப்பமோ, தப்பான நோக்கமோ தெரியவில்லை. மாறாக நேர்மை இருந்தது. அது எப்படிச் சாத்தியம்? இவன் பெண் காமுகனாக இருந்தால் எப்படி அவன் விழிகளில் இத்தனை தெளிவு இருக்கிறது? குழம்பிப்போனாள் விதற்பரை.

(7)

 

விதற்பரை எத்தனை நேரமாக விழிகளை மூடியிருந்தாளோ. மீண்டும் அவளுடைய வீட்டுக் கதவு திறக்க, சடார் என்று விழிகளைத் திறந்து திரும்பிப் பார்த்தாள். அவ்வியக்தன் சற்று முன் எங்கிருந்தோ வாங்கிவந்த ஒரு பெட்டியோடு வந்துகொண்டிருந்தான்.

களைத்திருந்த அவள் முகத்தைக் கண்டதும்,

“என்ன… வலிக்கத் தொடங்கிவிட்டதா?” என்றான் கரிசனையாய். அப்போதுதான் விதற்பரைக்கே தான் காயம்பட்டது புத்தியில் உறைத்தது. அதை மறக்கடிக்கும் விதத்திலா அவனுடைய நினைவுகள் அவளைச் சூழ்ந்திருந்தன. நம்ப முடியாதவளாகத் தன் கீழ் உதடுகளைப் பற்களால் கடிக்க, கரத்திலிருந்த பெட்டியை முன்னிருந்த தேநீர் மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்த அவ்வியக்தனுக்கு, வெண்ணிற இரு பற்களுக்குள் சிவந்த செழித்த உதடுகள் சிறைப்பட்டிருப்பதைக் கண்டதும், விழிகளை விலக்க முடியாமல் அந்த உதடுகளையே வெறித்துப் பார்த்தான்.

அந்தக் கணமே விரைந்து சென்று அந்த உதடுகளை விலக்கவேண்டும் என்கிற வேகம் எழ, அவசரமாகத் தன் உணர்வுகளுக்குக் கடிவாளம் இட்டவன், தன் தலையை உலுப்பி விட்டுக் கவனத்தைக் கொண்டுவந்திருந்த பெட்டியில் செலுத்தினான்.

ஏனோ அங்கே நிற்கும் ஒவ்வொரு கணமும், புத்தியும் இதயமும் அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் வேறு எங்கோ செல்கிறது என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு அவனையும் மீறிப் படபடப்பு வந்தது.

தொடர்ந்து நின்றால், முட்டாள் தனமாக எதையாவது செய்து வைத்துவிடுவோமோ என்கிற அச்சம் பிறந்தது. உடனே அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்கிற உந்துதலுடன், தொண்டையைச் செருமிச் சமப்படுத்தியவன், கொண்டு வந்த அந்தப் பெட்டியைப் பிரிக்கத் தொடங்கினான்.

அவன் என்னத்தைப் பிரிக்கிறான்? என்கிற ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தவள், தன்னை மறந்து

“இது… இது என்ன குட்டிமாமா…?” என்றாள்.

இவனோ பிரிப்பதை விடாமல், அவளை நிமிர்ந்து பார்த்துப் புருவங்கள் சுருங்க,

“குத்தி மாமா? அப்படி என்றால்…” என்றான் குழப்பமாய்.

“உத்தியுக்தன் எனக்கு மாமா. அவர் தம்பி நீங்கள் எனக்குக் குட்டி மாமா…” என்றாள் தன் கவனத்தை அந்தப் பெட்டியிலிருந்து விலக்காமல்.

“குத்தி மாமா…” என்று சொல்லிப் பார்த்தான்.

அதைக் கேட்டதும் மெல்லிய புன்னகை உதட்டோரம் எட்டிப் பார்க்க,

“குத்தி மாமா இல்லை. குட்டி மாமா…” என்றாள் திருத்தும் விதமாய்.

இன்னும் தெளியாதவனாக அவளைப் பார்த்தான் அவ்வியக்தன்.

“மாமா என்றால் என்ன?”

சுத்தமாகத் தமிழ் தெரியாதவனுக்கு மாமா என்றால் புரிந்துவிடுமா என்ன? தமிழே தெரியாத அவனை, குறும்புடன் பார்த்தவள்,

“அங்கிள்…” என்றாள் சிரிக்காமல்..

அதைக் கேட்டதும் பேரதிர்ச்சி கொண்டவனாய்,

“வட்…” என்று அலறினான். தான் செய்துகொண்டிருந்த வேலையைக் கைவிட்டுவிட்டு அவளைப் பார்த்தான். தன்னையும் குனிந்து பார்த்தான். பின் கோபத்தோடு விதற்பரையை ஏறிட்டு,

“என்னைப் பார்த்தால் உனக்கு வயது போனவன் போலவா இருக்கிறது…?” என்று கேட்க, முதன் முறையாக வெண் பற்கள் தெரியச் சிரித்தாள் விதற்பரை.

சற்று திறந்த உதடுகளுக்குள் தெரிந்த வெண் பற்களைக் கண்ட அவ்வியக்தனுக்கு மீண்டும் இதயத்தின் துடிப்பு அதிகரித்தது. விழிகளோ அந்த உதடுகளிலிருந்து விலக மாட்டேன் என்று சண்டித்தனம் புரிந்தன.

“அப்படியில்லை குட்டி மாமா… அம்மாவின் தம்பியை மாமா என்போம். உத்தியுக்தன் அம்மாவிற்குத் தம்பி முறையானதால் அவர் எங்களுக்கு மாமா. அதனால் அவர் தம்பி நீங்கள் எங்களுக்குக் குட்டி மாமா… ஆங்கிலத்தில் உறவு முறைக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் இருக்கிறன. தமிழில் அப்படியில்லை. ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு… இந்த மாமா என்கிற சொல்லுக்கே தனிச் சக்தியிருக்கிறது தெரியுமா…” என்று அவள் கூற, அவனோ அவளை எரிச்சலுடன் பார்த்து,

“நீ என்னை அவ்வி என்று அழை. இல்லை அவ்வியக்தன் என்று வேண்டுமானாலும் அழை. ஆனால் இந்த மாமா குத்தி மாமா மட்டும் வேண்டாம்…” என்றான் முடிவாக.

“இல்லை குட்டி மாமா… நீங்கள் எனக்கு மாமா முறை… எப்படிப் பெயர் சொல்லி அழைப்பது?” என்று ஏகத்திற்கு அவனுடைய இரத்த அழுத்தத்தை எகிறச் செய்ய, நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தவன்,

“நான் உனக்கு அங்கிள் இல்லை…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“நீங்கள் மறுத்தால், முறை தவறாகிவிடுமா என்ன? மாமாவை மாமா என்றுதானே சொல்ல முடியும்…” என்று அவள் கிண்டலுடன் கூறியவாறு அவன் கரத்திலிருந்த பொருளைப் பார்த்தவள், நம்பமுடியாதவளாக விழிகளைத் விரித்தாள்.

“ஐவோக்கர் த்ரீ பாய்ன்ட் ஓ…” என்றாள் அதிர்வாய் அவனோ அந்த ஊன்றுகோலுடன் அவளை நெருங்கி,

“யெஸ்… இட் இஸ்…” என்றான். பின், அவளுடைய மேல் கரத்தைப் பற்றி,

“எழுந்திரு…” என்றான். எழுந்தவள் சற்றுத் தடுமாற அவளைப் பற்றி நிலை நிறுத்தியவன், அவளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்து, கட்டுப் போட்ட காலை மடித்து அவளுடைய முழங்காலையும், தொடையையும் பற்றிச் சரியாகப் பொருத்தப்படவேண்டிய இடத்தில் வைத்து, தொடையைச் சுற்றியும், முழங்காலைச் சுற்றியும் போடவேண்டிய பட்டியைப் போட்டுத் தோதாக இறுக்கிவிட்டு எழ, விதற்பரையோ வியப்புடன் தன் காலைப் பார்த்தாள்.

ஐவோக் என்பது சாதாரண ஊன்றுகோல் அல்ல. அதை முழங்காலோடு பிணைத்தால் போதுமானது. பாதிக்கப்பட்ட காலுக்குப் பதிலாக அது செயல்படும். கனமற்றது. அதே நேரம் சற்றுச் சாதாரணமாக நடக்கவும் முடியும். கரங்களுக்கும் சுதந்திரமாக இருக்கும். அதனால் அன்றாட வேலைகள் தடைப்படாது. ஆனால் விலை கூடியது.

இப்போது அந்த ஊன்றுகோலின் உதவியோடு நிலையாக நின்றவள், நன்றியோடு அவ்வியக்தனைப் பார்த்து,

“நன்றி குட்டி மாமா… மிக மிக நன்றி… இந்தக் காலோடு எப்படிச் செயல்படப்போகிறேன் என்று பயந்துகொண்டிருந்தேன்…” என்றதும் அவளுடைய தோள்களைப் பற்றியவன்.

“உன்னை என்னோடு அழைத்துச் சென்றிருப்பேன்… நான் அவ்வியக்தன் என்றதும் உன் முகத்தில் தெரிந்த அச்சத்தைக் கண்டேன்… நிச்சயமாக என் இடத்தில் உன்னால் சுயத்தோடு இருக்க முடியாது. அதுதான் இதை வாங்கினேன்…” என்ற கூறத் தன் மனநிலையைச் சரியாகக் கணித்தவன் மீது முதன் முறையாக மதிப்பு வந்தது. கூடவே அவன் வாங்கிக் கொடுத்த பொருளின் விலை உறுத்த,

“ஆனால்… இது அதிக விலையாயிற்றே…” என்று கூறினாலும், தனக்காய் அவன் யோசித்துச் செய்த அந்தச் செயல் அவளுடைய இதயத்தைத் தொட்டது என்பது மட்டும் நிஜம்.

இப்போது அவளை விட்டு விலகி நின்றவன், அவளை ஏறிட்டு,

“பணத்தை யோசித்தால் வசதியைப் பற்றி எண்ண முடியாது… பணம் இருப்பதே தேவைக்குச் செலவு செய்யத்தானே…” என்றதும், விதற்பரைக்குக் கண்கள் சட்டெனக் கலங்கின.

இந்த நேரத்தில் இத்தகைய அக்கறை கூட வரப்பிரசாதம்தான்.

“ஐ அப்ரிஷியேட் குட்டி மாமா…” என்றவள், “ஒரு நிமிஷம்” என்றுவிட்டு விறுவிறு என்று தன் அறைக்குள் நுழைந்தவள், மீண்டும் திரும்பி வந்த போது அவளுடைய கரங்களில் ஒரு சில ஐம்பது டாலர் தாள்கள் இருந்தன. அதைக் கொடுக்கலாமா இல்லையா? கொடுத்தால் வாங்குவானா மறுப்பானா? இல்லை கோபிப்பானா? என்று தெரியாத தயக்கத்துடன் அந்தப் பணத்தை அவன் முன்னால் நீட்டி,

“தவறாக நினைக்காதீர்கள்… உங்களிடமிருந்து இலவசமாக இதை வாங்க முடியாது… அதனால்…” என்றவாறு தயக்கத்துடன் அவனை ஏறிட, அவனோ வியப்புடன் அவளைப் பார்த்தான்.

இதுவரை அவன் வாங்கிக் கொடுத்த பொருளுக்கு யாரும் பணம் கொடுத்ததில்லை. முதன் முறையாக அவள் பணத்தை நீட்டியதும் ஆச்சரியத்தில் புருவங்கள் மலர்ந்தன. கூடவே அவளுடைய சுயமரியாதையும் மிகப் பிடித்துப் போனது.

மெல்லிய புன்னகையுடன் அவள் நீட்டிய பணத்தை வாங்கியவன், அதை எண்ணிப் பார்க்காமலே,

“இதுவரை யாரிடமிருந்தும் கை நீட்டிப் பணம் வாங்கியதில்லை. முதன் முறையாக உனக்காக, உன் சுயமரியாதையை மதித்து வாங்கிக் கொள்கிறேன்… ஆனால் இனிமேல் இப்படிப் பணத்தை நீட்டாதே…” என்றவன் அதைப் பான்ட் பாக்கட்டிற்குள் வைத்துவிட்டுத் திரும்ப,

“நன்றி குட்டி மாமா…” என்றாள் மனம் கனிந்தவளாய். அதைக் கேட்டதும், இவனுடைய முகம் கோணலானது. அவளை எரிச்சலுடன் பார்த்தவன்,

“எனக்கு நன்றி கூற ஆசைப்படுகிறாய் என்றால், முதலில் என்னை மாமா என்று அழைப்பதை நிறுத்து… ஏதோ உன்னை விடப் பலமடங்கு வயது அதிகம் போல ஒரு மாயை தோன்றுகிறது. என்னை அவ்வி என்றே அழை… போதும்…” என்று தன் மறுப்பைக் கூறியவன், பின் தன் பான்ட் பாக்கட்டிற்குளிருந்து தன் கைப்பேசியை எடுத்து,

“உன் கைப்பேசி இலக்கம் என்ன?” என்றான். அவளோ மறுக்க முடியாமல் கூற, அதைத் தன் கைப்பேசியில் பதிந்துவிட்டுத் தன்னுடைய தொலைப்பேசி இலக்கத்தையும் கூறியவன்,

“என்னுடைய தனிப்பட்ட இலக்கம் இது. எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் அழை. செய்யக் காத்திருக்கிறேன்…” என்றவாறு கைப்பேசியை பான்ட் பாக்கட்டிற்குள் வைத்தவாறு,

“சரி… இனி கிளம்புகிறேன்… கதவைப் பூட்டு” என்று விட்டுத் திரும்பியவன் எதையோ யோசித்தவன் போல அவள் பக்கமாகத் திரும்பி, “நாளை உனக்குப் பல்ககைலக்கழகம் இருக்கிறது அல்லவா… அங்கே எப்படிப் போவாய்?” என்றான் அக்கறையாய்.

“பேருந்தில்தான்…”

“ஓ… ஓக்கே…” என்றவன் தன் தோள்களைக் குலுக்கிவிட்டு, வாகனத்தின் திறப்பை எடுப்பதற்காக பான்ட் பாக்கட்டில் கை விட்டவனின் கரத்தில் டைலனோல் குப்பிச் சிக்குப் பட்டது. உடனே அதை வெளியே எடுத்து விதற்பரையிடம்ட நீட்டி,

“இந்தா வலித்தால் இதில் இரண்டைக் குடி…” என்றான்.

இவளும் மறுக்காமல் வாங்க, அவன் வெளியே சென்றதும் கதவை மூடிவிட்டு அதன் மீது சாய்ந்து நின்ற விதற்பரைக்கு நெஞ்சின் வேகம் அதிகரித்திருந்தது. கையிலிருந்த மருந்துக் குப்பியோடு மார்பை அழுத்திப் பிடித்துச் சமப்படுத்த முயன்றவளின் இரத்த ஓட்டம் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அவளையும் மீறி உதடுகள் தானாகச் சென்று பற்களுக்குள் சிறைப்பட, மனமோ இன்னும் அவன் அருகாமைக்காக ஏங்கத் தொடங்கியது. பார்த்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லையே. ஆனால் மனம் அவன் பக்கமாக அல்லவா செல்கிறது. இது என்ன விந்தை? புரியவில்லை. ஆனாலும் அவன் பக்கத்திலிருந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் அடித்துக் கொண்டது.

விழிகளை மூடியவள் அன்றைய நாள் முழுவதும் அவனோடு தங்கியிருந்த நிமிடங்களை எண்ணிப்பார்த்தாள். ஒவ்வொரு கணமும் அவள் நன்மைக்காக, அவளுடைய தேவைகளைப் புரிந்து நடந்துகொண்ட அவன் குணம் அவளை மிகவும் கவர்ந்தது. அதுவும் அவளுடைய இயலாத நிலையை எந்தச் சந்தர்ப்பத்திலும் தனக்குச் சாதகமாக அவன் பயன்படுத்தவேயில்லை… அவளைப் பற்றியிருந்த போது கூட அவனுடைய விரல்கள் அவளைத் தவறாகத் தீண்டவுமில்லை. ஒரு வேளை இவள்தான் அதை உணர்ந்து கொள்ளாமல் விட்டாளோ? மீண்டும் மனம் அவனோடான நாளை ஒன்று விடாமல் எண்ணிப் பார்த்தது. இல்லை… நிச்சயமாக இல்லை. அவன் பார்வையும் சரி, தீண்டலும் சரி, அதில் அவனோடான அக்கறைதான் தெரிந்ததே தவிர, அதை விடுத்து வேறு எதுவும் தெரியவில்லை.

இவன் பெண் பித்தன்தானா என்கிற சந்தேகம் அவளுக்குள் முளை விட்டது. கூடவே இப்படிப் பெண்களை அக்கறையாகப் பார்த்துக்கொண்டால் எந்தப் பெண்தான் அவனைத் தேடி வரமாட்டாள் என்கிற எண்ணமும் தோன்றியது.

அப்போதுதான் அவளுக்கு ஒன்று உறைத்தது.

ஒரு வேளை பெண்களைக் கவர்வதற்காகவே இப்படி நடந்து கொள்கிறானோ…? அவள் கூட அவனிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினாளே. அதுதான் அவனுடைய வெற்றியோ…? இப்படிப் பேசி, நடந்துகொண்டுதான் பெண்களை மயக்குகிறானோ… இவள்தான் அது புரியாமல்… முட்டாள் போல அவனை நம்பி… நினைத்தபோதே வியர்த்துக் கொட்டியது.

அந்த நேரம் அவளுடைய கைப்பேசியில் செய்தி வந்ததற்கான அறிவுறுத்தல் வர, விரைந்து சென்று எடுத்துப் பார்த்தாள். புதிய கைப்பேசி இலக்கம். உயிர்ப்பித்துப் பார்த்தாள்,

“கால் வலித்தால் மருந்தைக் குடித்துவிட்டுத் தூங்கு…” என்று செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்ததும்தான் காலின் வலி புரிந்தது.

அவன் சொன்னது போலவே கால் சுள் சுள் என்று வலிக்கத் தொடங்கியிருந்தது. யோசிக்காமல் தன் கரத்திலிருந்த குப்பியிலிருந்து இரண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு, சமையலறைக்குள் நுழைந்தவள், அந்தக் குப்பியை ஓரமாக போட்டு விட்டு, மருந்தை வாய்க்குள் போட்டு, ஒரு குவலையில் தண்ணீரைப் பிடித்து மிடறு விழுங்கிவிட்டு, முன்னறைக்கு வந்தாள்.

காலிலிருந்த ஊன்றுகோலை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவள், சிரமப்பட்டுக் காலைத் தூக்கித் தேநீர் மேசையில் வைக்கப் போக, இரண்டு மாநிற கரங்கள் அவளுடைய காலைப் பற்றி அக்கறையாகத் தேநீர் மேசையிலிருந்த தலையணை மீது வைத்தன. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் விதற்பரை.

அங்கே யாருமில்லாமல் இடம் வெறுமையாக இருக்கத் தன் கற்பனை கொடுத்த காட்சியை எண்ணி அதிர்ந்தவளாய்த் தன் தலையில் தானே கொட்டிக் கொண்டவள், அவசரமாகக் காலைத் தூக்கி நீள் இருக்கையில் வைத்துக்கொண்டு, சாய்ந்து விழுந்தாள்.

மனம் ஒரு நிலையில் இல்லாமல் மீண்டும் அவனிடம்தான் சென்றது. இறுதியாகத் தன் விழிகளை மூட அடுத்த கணம் உலகம் இருட்டாகிப் போனது.

What’s your Reaction?
+1
23
+1
7
+1
3
+1
2
+1
0
+1
1
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-22

(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…

2 weeks ago