Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-8

(8)

மறு நாள் பெரும் பரபரப்புடனே விடிய, அதிகாலையே பக்திப் பாடல்களைப் போட்டு அத்தனை பேரையும் எழுப்பிவிட்டிருந்தார் புஷ்பா.

முன்னிரவு அவ்வியக்தனுடன் பேசியபின், சுத்தமாகத் தூக்கத்தைத் தொலைத்திருந்த விதற்பரை, அன்னை எழுந்ததும், அதன் சத்தத்தில் தானும் எழுந்து கொண்டாள்.

தனக்குக் கூடமாட உதவிக்கு வந்த மகளின் முகம் சிவந்திருப்பதையும், கண்கள் சிவந்து வீங்கியிருப்பதையும் கண்ட புஷ்பா,

“என்ன விழிகள் இப்படிச் சிவந்திருக்கின்றன… உனக்கு என்ன காய்ச்சலா?” என்றவாறு வந்து மகளின் நெற்றியில் கைப்பதிக்க, மீண்டும் விழிகள் கலங்க முயன்றன விதற்பரைக்கு. சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவளாக,

“ஒன்றுமில்லைமா… நேற்று குளிரில் வெளியே நின்றேன் போல… அதுதான் ஒத்துக் கொள்ளவில்லை…” என்று கூறிச் சமாளிக்க, புஷ்பாவோ,

“உனக்குத்தான் குளிர் என்றால் மிகவும் பிடிக்குமே. பனி விழுந்தால், அந்தப் பனிக்குள் ஒருத்தியாக மாறிப்போவாய்… இப்போது என்ன புதிதாக உனக்குக் குளிர் ஒத்துக் கொள்ளவில்லை?” என்று கேட்க, சற்று அசடு வழிந்தவள்,

“புது இடம் மா… தூக்கம் வேறு வரவில்லை…” என்றாள் சமாளிப்பாக.

“எனக்கும்தான் விது… இன்றைய விழா நன்றாக நடக்கவேண்டுமே என்று எண்ணி சுத்தமாக உறங்க முடியவில்லை… சரி சரி… பேசி நேரத்தை விரையமாக்காமல், இந்தத் தட்டுகளை மேசையில் அடுக்கிவிட்டுத் தயாராகு…” என்று கூற, உடனே தாய்க்குக் கூட மாட உதவி செய்துவிட்டு, குளித்து முடித்து, தங்கையையும் எழுப்பிக் குளிக்க அனுப்பிவிட்டு, அன்னை எடுத்து வைத்த பட்டுச் சேலையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து கண்ணாடியில் பார்த்தபோது, முழுமதியொன்று தவறித் தரையில் விழுந்துவிட்டது போலக் கண்களைச் சிமிட்ட முடியா அழகுப் பொழிவுடன் நின்றிருந்தாள்.

ஏனோ கண்களில் மட்டும் சோகம் அப்பட்டமாய் அப்பியிருப்பது போலத் தோன்றியது. அதை மறைக்கும் முகமாகக் கண்களுக்குச் சற்று அழுத்தமாகவே மையிட்டு நிமிர, ரஞ்சனி சீப்போடு விதற்பரையை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

அவளை அமர்த்திவிட்டுத் தலையை அழகாக வாரிப் பின்னலிட்டுவிட்டு அலங்கார மேசையில் வைத்திருந்த மல்லிகைச் சரத்தில் கொஞ்சம் வெட்டித் தங்கைக்கு வைத்துவிட்டு அவள் முகத்தைத் தூக்கிப் பார்த்தாள். அலங்காரம் நன்றாக இருப்பது போலத் தோன்றியது.

“ம்… பொட்டை வை…” என்று உத்தரவிட்டுவிட்டுத் தன்னுடைய மலர்ச் சரத்தையும், அதைத் தலைக்குக் குத்துவதற்கான கிளிப்பையும் எடுத்துக்கொண்டு தாயைத் தேடிச் செல்ல, புஷ்பா தன் அலங்காரத்தை முடித்துக்கொண்டு பலகாரங்களை ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்.

உடனே தன் கரத்திலிருந்த பூச்சரத்தை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுத் தாய்க்கு உதவியவள், அடுக்கி முடித்ததும், மலர்ச் சரத்தை எடுத்து அன்னையிடம் நீட்ட, அதை வாங்கிய புஷ்பா அவற்றைச் சரியாக மடித்து தலையில் வைத்துக் குத்த தொடங்க, அப்போதுதான் தூக்கம் கலைந்து வந்த ரதி, அங்கே நின்றிருந்த இரு பெண்களையும் பார்த்து அவர்களின் அலங்காரத்தில் ஒரு கணம் திகைத்து நின்றார். சமர்த்தியின் உறவினர்கள் இத்தனை காலையில் எழும்பித் தயாராகி அத்தனை வேலையையும் செய்துகொண்டிருக்கத் தான் நன்றாக உறங்கி, சாவகாசமாக வருகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியில் தவிர்த்தவராய்,

“மன்னிக்கவேண்டும்…” என்றார் சங்கடமாக.

தன் சொந்த மகன் வீட்டிலேயே அந்நியப்பட்டவர் போல உள்ளே செல்வதா வெளியே செல்வதா என்பது போலத் தயங்கி நிற்க, அது வரை தன் மகளின் மீது கவனம் வைத்திருந்த புஷ்பா அவசர அவசரமாக அவள் தலையில் கிளிப்பைக் குத்தியும் குத்தாமலும் விட்டுவிட்டு,

“போ… போய் அத்தையைக் கவனி…” என்று மகளை அனுப்பிவிட்டு அங்கே நின்றிருந்த ரதியைக் கவனிக்கத் தொடங்கினார்.

தன் தாய் சரியாகத்தான் மலர்ச் சரத்தைக் குத்தியிருக்கிறார்களா என்று தடவிப் பார்த்தவாறு படிகளில் ஏறத் தொடங்கினாள் விதற்பரை.

அதே நேரம், புஷ்பா போட்ட பக்திப் பாடலில் தூக்கம் கலைந்து எழுந்தான் அவ்வியக்தன்.

படுக்கையை விட்டு எழப் பிடிக்காமல் அங்கும் இங்குமாக உளன்றவன் அந்தச் சத்தம் காதுகளுக்குள் நுழையாதிருக்கத் தலையணையைத் தூக்கிக் காதுகளை மறைத்தாற்போல வைத்துப் பார்த்தான். சத்தம் குறைவதாயில்லை.

முன்னிரவு விதற்பரையின் நினைவில் அவனால் சுத்தமாகத் தூங்க முடியவில்லை. மனதில் அவள் வேறு யாரையோ மணமுடிக்கப் போவதாகச் சொன்னதுதான் திரும்பத் திருமப வந்து அவனை இம்சித்த்து.

இறுதியாக அவன் விழிகளை மூடியபோது மூன்று மணியையும் தாண்டிவிட்டிருந்தது. ஆனால் ஐந்து மணிக்கு முன்பே எழு என்றால், அது முடியும் காரியமா? எரிச்சலுடன் எழுந்தவன் குளியலறைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் குளித்துவிட்டு, கிடைத்த ஆடையை அணிந்துகொண்டு வெளியே வர அவன் நாசியை இனிய மல்லிகை மணம் வருடிக்கொண்டு சென்றது.

அந்த வாசனையில் அத்தனை சோர்வும் பறந்து போக, ஆழ மூச்செடுத்து விட்டவன், உள்ளே எதுவோ செய்ய, எங்கிருந்து அந்த மணம் வருகிறது? என்று எட்டிப் பார்த்தான்.

அப்போதுதான் விதற்பரை கடகடவென்று படிகளில் ஏறி சமர்த்தியின் அறையை நோக்கிச் செல்வது தெரிந்தது.

அப்போதே அவளை நோக்கிச் செல்ல முயன்ற நேரம், விதற்பரை உத்தியுக்தனின் அறைக் கதவைத் தட்டத் தொடங்கினாள்.

திறந்தது உத்தியுக்தன்தான். எப்போதும் போல அவனைக் கண்டதும், மெல்லிய தயக்கத்துடன் இரண்டடி பின்னால் வைத்து மெல்லிய தடுமாற்றத்துடன், நெளிந்தவள், அவன் முகத்தைப் பார்க்கும் சக்தியற்றவளாகச் சற்றுத் தலையைக் குனிந்து,

“அ… அத்தையைத் தயார்ப்படுத்த வேண்டும் மாமா…” என்றாள்.

தன் முன்னால் நின்றிருந்த விதற்பரையை மெல்லிய குறுகுறுப்புடன் பார்த்தான் உத்தியுக்தன்.

அவ்வியக்தன் எதையாவது அந்தப் பெண்ணிடம் கூறியிருப்பானா? இவள் அதற்கு என்ன பதிலைக் கூறியிருப்பாள் என்கிற கேள்வி எழுந்தது. அதைக் கேட்டுவிடலாம் என்று வாயைத் திறந்தவன், உடனே மூடிக்கொண்டான்.

இல்லை வேண்டாம், இது அவளுக்கும் அவன் தம்பிக்குமான பிரச்சனை. அவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். முடிவு செய்தவனாகப் புன்னகைத்தவன்,

“இப்போதுதான் உன் அத்தை குளிக்கச் சென்றாள்…” என்றான் மெல்லிய தயக்கத்துடன்.

“இல்லை மாமா… பரவாயில்லை… பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன்…” என்று விட்டு வெளியேறி அங்கிருந்த அறை ஒன்றைக் கடக்க முயன்ற நேரம், வக்யூம் கிளீனரால் இழுக்கப்பட்ட காகிதத் துண்டு போல அந்த அறைக்குள் இழுபட்டாள் விதற்பரை.

அதிர்ச்சியுடன் தன்னை இழுத்தது யார் என்று யோசிக்க முன்னரே, அந்த அறைக்கதவு அவசரமாகப் பூட்டப்பட்டது. இவளோ அதிர்வுடன் நிமிர, கதவைப் பூட்டிவிட்டு இவளை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தான் அவ்வியக்தன்.

அதைக் கண்டதும் ஆத்திரம் வர,

“இது என்ன விளையாட்டு… கதவைத் திறங்கள்…?” என்று சிடுசிடுத்தவாறு கதவை நோக்கிச் செல்ல மறு கணம், அவளை இழுத்துச் சுவரோடு தள்ளியனான் அவ்வியக்தன்.

அவன் தள்ளிய வேகத்தில் சுவரை முத்தமிட்டு நின்றாள் விதற்பரை.

அவனோ, சுவரோடு மோதி நின்றவளை கண்ணிமைக்கும் நொடியில் நெருங்கி, அவளை அசையவிடாதிருக்க, இரு பக்கமும் கரங்களைப் பதித்து, அவளுடைய பின்புறத்தேகத்தோடு உரசி நின்றான்.

விதற்பரையோ எப்போதும் போல, அவனுடைய உடலின் வெம்மையில் தகித்தவளாய், திணறிப்போக, அவனோ செழித்த மலர்கள் நிறைந்திருந்த அவளுடைய கூந்தலை நுகர்ந்து பார்த்தான்.

அப்பப்பா, அந்த வாசனை சுவாசப்பையை நிறைத்து இரத்த நாளங்களுக்கூடாகப் பயணித்துப் புத்தியில் உறைந்து மதிமயக்கச் செய்கிறதே. நம்ப முடியாதவனாக, இப்போது தன் நாசியை அவளுடைய கூந்தலுக்குள் முழுதாகப் பொருத்தி அத்தனை காற்றையும் உள்ளிழுத்துப் பார்த்தான். இன்னும் போதை ஏறியது அவனுகு்கு. மயிர்க்கால்களோ குத்திட்டு எழுந்து நின்றன. இதுவரை காலமும் இத்தகைய ஒரு வித கிறக்க நிலைக்கு அவன் தள்ளுப்பட்டதில்லையே… மீண்டும் அந்தச் சுகந்தத்தை உள்வாங்கியவனாக,

“மை காட்… இதுதான் முதன் முறை, நிஜ மல்லிகையின் வாசனையை நுகர்வது… உன்னையே நுகர்வது போலத் தோன்றுகிறது தற்பரை…” என்றான் மயங்கிய குரலில். விழிகளோ அரை மயக்கத்தில் இருந்தன. இவளோ அவனுடைய நிலையை உணர்ந்தவளாகத் திமிறி, அவனிடமிருந்து விடு பட முயன்றாள்.

அவனோ தன் பிடியைச் சற்றும் இளக்காது, மீண்டும் அவளுடைய கூந்தலில் முகத்தைப் புதைத்தவாறு, விழிகளை மூடியவன்,

“ஹே… ஐந்து நிமிடம் அப்படியே இரு… நேற்று முழுக்க என்னால் உறங்கவே முடியவில்லை தெரியுமா…” என்றவனின் கரங்கள் அவளுடைய வெற்றிடைக்கூடாகச் சென்று அவளுடைய மென் வயிற்றை அழுந்த பதிந்து நிற்க, அந்தக் கரங்கள் கொடுத்த தகிப்பில் கொஞ்சம் தன்னிலை இழந்துதான் போனாள்.

அவள் என்ன ஜடமா? யாருக்கோ வந்த விருந்தென்று சும்மா இருக்க. உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் நிறைந்த சாதாரணப் பெண்தானே. அதுவும் அவன் மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டவளாயிற்றே. என்னதான் அவனை வெறுத்து ஒதுக்க நினைத்தாலும், அவனுடைய சுண்டுவிரல் பட்டால் கூடச் சிலிர்த்துப் போகிறாள்.

அதே நேரம் அதற்கு எதிர்மறையாகப் புத்தி நின்று எச்சரித்துக்கொண்டு இருந்தது.

‘வேண்டாம் விலகிக்கொள்… இது சரியில்லை… அவனுக்கு வேண்டியது உன் இதயமில்லை. உடல்தான்… இது தவறு விலகிப் போ என்று கண்டிக்கவும் செய்தது.

காதலுக்கும், காமத்திற்குமிடையில் போட்டி வருமானால் எப்போதும் புத்தி தேர்ந்தெடுப்பது காமத்தைத்தானே. விதற்பரையும் இப்போது அந்த நிலையில்தான் நின்றாள்.

அவள் செல்வது ஒரு வழிப் பாதை என்றால் அப்படியே போய்விடலாம். ஆனால் இது இரு வழிப் பாதையாக இருக்கிறதே. எந்தப் பக்கம் போவது என்று புரியாத நிலையில் இரு தலைக் கொள்ளியெறும்பாகத் தவித்தாள்.

அப்படியிருந்தும் ஓரளவு புத்தியைத் தெளியவைத்தவாறு,

“ப்ளீஸ்… லீவ் மீ…” என்றாள் மெல்லிய முனங்கலாய்.

அவள் ஆத்திரத்துடன் சொன்னாலே மசியாதவன், இப்படிக் கிரக்கமாகச் சொன்னால், விட்டுவிடுவானா என்ன? அதுவும் கிடைத்த கணத்தில் அவளை அடைய ஏக்கம் கொண்ட பித்தனாயிற்றே. எப்படி விடுவான்? மறுப்பாகத் தலையை அசைத்தவன், மேலும் அவள் கூந்தலுக்குள் தன்னுடைய முகத்தைப் பொருத்தியவாறு,

“இல்லை… உன்னை விட மாட்டேன்… நிச்சயமாக விட மாட்டேன், நீ என்னவள்… எனக்கு மட்டும் உரியவள்… உன்னை யாரும் உரிமை கொண்டாட நான் விட மாட்டேன்…” என்று சின்னப்பிள்ளை போலத் தலையை மலர்களுக்குள் புதைத்தவாறே மறுப்பாக அசைத்துக் கூறியவன், சடார் என்று அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான்.

அவன் திருப்பிய வேகத்தில் அவள் அணிந்திருந்த உச்சிப்பட்டித் திரும்பி நின்றது. அதைக் கண்டதும் தன் இரண்டு விரல்களால் அதைச் சரிப்படுத்திவிட்டு அதைப் பெரும் விரலால் வருடிக் கொடுக்க, விழிகளோ அந்த நகை அலங்காரத்தை ரசித்துப் பார்த்தன. அத்தனை நகைகளும் தன்னவளுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதுபோலத் தோன்றியது அவனுக்கு. இது வரை இத்தகைய நகைகளை அவன் கண்டதில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் மேற்கத்திய நகைகள்தான். ஆனால் தென் தேசத்து நகைகளுக்கென்று ஒரு உயிர்த்துடிப்பு இருக்கிறது என்பதை அன்றுதான் அவன் உணர்ந்தான்.

மெதுவாகத் தன் விழிகளால் அவள் முகத்தை வருடிக்கொண்டு வந்தவன் விழிகள் இப்போது அவள் காதுகளில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த சிமிக்கியில் நிலைத்தன. தன் சுட்டுவிரல் கொண்டு அதைச் சுண்டிவிட, அது சிலிர்த்துக்கொண்டு கடகடவென்று ஆடும் அழகைக் கண்டு மெய் மறந்தவனாய்,

“இட்ஸ் ப்யூட்டிஃபுள்…” என்றான். இவளோ திகைப்புடன் அவனைப் பார்க்க, இப்போது அவனுடைய விழிகள் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அட்டியலில் நிலைத்தன. அது அவளுடைய கழுத்துக்குக் கன கட்சிதமாகப் பொருந்தியிருக்க, இப்போது தன் விரல்களால் அட்டியலை வருடிக் கொடுத்தவன்,

“உனக்கென்றே செய்தது போல இருக்கிறது தற்பரை…” என்றான் கிசுகிசுப்புடன். ஆழ மூச்செடத்து அதை வெளிவிட மறந்தவளாய், அவனையே வெறிக்க, இப்போது அவனுடைய கவனம் இடையாரத்தில் நிலைத்தது.

அவளுடைய துடியிடையை எத்தனை அழகாய்க் கவ்வியிருக்கிறது… அதுவும் சற்றுத் தெரிந்த வெற்றிடையில், அது உரசி நின்ற அழகைக் கண்டவனுக்குச் சித்தம் மயங்கியது.. அந்த இடத்தைச் சுட்டுவிரலால் பட்டும் படாமலும் வருடிக் கொடுக்க விதற்பரையின் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. அவன் விரல்கள் கொடுத்த போதையைத் தாங்கும் சக்தியற்றவளாக, எதிலிருந்தோ தப்ப விரும்புபவள் போல விழிகளைப் படக் என்று மூடிக் கீழ் உதட்டைக் கடித்தவாறு நின்றாள்.

ஆனால் அவனோ, அவளை விட்டு விலகாமலே தள்ளி நின்றவாறு அவள் அழகைத் தலை முதல் கால்வரை ரசனையுடன் அளவிடத் தொடங்கினான்.

அவளுடைய எழில் அழகில் வெக்கமின்றித் தயக்கமின்றி அவனுடைய விழிகள் கூடிக் குலாவின. அவனுடைய பார்வைகள் சென்று தங்கிய இடங்களை உணர்ந்த விதற்பரைக்கு ஏனோ அடிவயிற்றில் ஒரு வித சிலிர்ப்பும் சங்கடமும் ஒன்று சேர எழுந்தது அவசரமாகச் சற்றுத் தெரிந்த இடையை மறைக்கும் முகமாகச் சேலையை நடுங்கும் கரங்களால் இழுத்து விட, அவனோ கண்ணுக்குப் படைத்த விருந்தை யாரோ தட்டிப்படைத்த உணர்வில், “ப்ளீஸ்… டோன்ட்…” என்றான்.

பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து,

“இந்த ஆடை உனக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது விதற்பரை…. உன் உடல் அழகை எத்தனை அழகாக எடுத்துக் காட்டுகிறது தெரியுமா… .” என்றவன் ரசனையுடன் அவளுடைய அங்க வளைவுகளைப் பார்த்துவிட்டு, உன் பெண்மையின் மென்மையை எழிலாய் எடுத்துக் காட்டுகிறது…” என்றான் இன்னும் தன் நிலைக்கு வராதவனாய்.

“தற்பரை… கான்ட் லொஸ்ட் யு… ஐ கான்ட் லிவ் வித்தவுட் யு… உன்னை நான் உள்ளங்கையில் வைத்துத் தாங்கிக் கொள்கிறேன்… என்னோடு வந்துவிடேன்… ப்ளீஸ்… ” என்றான் கெஞ்சலாக. அப்போதுதான் விதற்பரைக்கு உலகமே உறைத்தது.

இப்போதும் மணந்து கொள்ளலாம் வா என்கிறானா பார்… ஆத்திரத்துடன் எண்ணியவள், அவனை உதறிவிட்டுத் தள்ளி நின்று அவனை ஆத்திரத்துடன் பார்த்து,

“உங்களோடு வாழ வருவதா? திரும்பத் திரும்ப அதையே கேட்டால் என் மனம் மாறிவிடும் என்று நினைத்தீர்களா… இதோ பாருங்கள், நேற்றே என் முடிவை உங்களுக்குச் சொல்லிவிட்டேன்… எக்காலத்திலும் திருமணமில்லாத உறவில் நான் நுழையமாட்டேன் என்று. ஏன் அதை உங்கள் புத்திக்குள் ஏற்ற மாட்டேன் என்கிறீர்கள்…” என்றவள், ஆழ ஒரு மூச்சை எடுத்துவிட்டு,

“இதோ பாருங்கள்… ஏற்கெனவே சொன்னதுதான், நமக்குச் சரி வராது… இதை இத்தோடு விட்டுவிடலாம்… தயவு செய்து இனி என் அருகே வராதீர்கள்…” என்று விட்டுக் கதவை நோக்கிச் செல்ல முயல, ஆவனோ அடுத்தக் கணம் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு,

“நோ… யு கான்ட்… நீ என்னை விட்டுப் போக முடியாது… போகவே முடியாது… நான் உன்னைப் போக விடமாட்டேன்… யு ஆர் மைன்… மைன்… ஓன்லி…” என்றான் பிடிவாதமாக. அவனிமிடமிருந்து திமிறியவாறு,

“என்னது… நான் உங்களுக்குச் சொந்தமானவளா? இது என்ன வேடிக்கை… என்னைச் சொந்தம் கொண்டாடவேண்டுமானால், என்னை நீங்கள் மணந்திருக்க வேண்டும். என் கணவர் என்கிற உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்… இவை இல்லாமல் என்னை யாரும் உரிமை கொள்ள முடியாது அவ்வியக்தன்…” என்றாள் அழுத்தமாக.

“நீ என்னவள் என்று உரிமை கொண்டாடக் காதல் என்கிற ஒன்று போதும் தற்பரை… நாம் இருவரும் காதலிக்கிறோம்… அந்தக் காதல் கொடுக்கும் உரிமையே போதுமானது…” என்றான் அவசரமாக.

“ஓ… அப்படியா… ஆனால் என்னைக் கேட்டால் அந்தக் காதல் ஒன்று மட்டும் போதாது உரிமை கொண்டாட… காதல் என்கிறது மனித உணர்ச்சி. அது எப்போது வேண்டுமானாலும் மாறும்… அது எப்படி உரிமையைப் பெற்றுக் கொடுக்கும்… நான் சொல்லும் உரிமை கணவன் என்கிற உரிமை. அது எக்காலத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாறாது தெரியுமா… தவிர… உங்களிடமிருப்பது காதல் இல்லை… காமம்… உண்மைாயன காதல் இருந்திருந்தால், என் உணர்வுகளுக்க முக்கியம் கொடுத்து, எனக்காக உங்கள் கொள்கையை மாற்றியிருப்பீர்கள். ஆனால் நீங்கள், இதுவரை என்னை உங்கள் வழிக்குத்தான் வரச் சொல்கிறீர்களே தவிர, நீங்கள் என் பக்கமாகக் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மறுக்கிறீர்களே… இதை எப்படிக் காதல் என்பேன்.. உங்களுக்கு வேண்டியது இந்த உடல் மட்டும்தான்… இதன் மீதிருக்கும் பசி போனதும், சுலபமாக வேறு ஒரு உடலைத் தேடிப் போய்விடுவீர்கள்…” என்று விதற்பரை கூற. அதைக் கேட்ட அவ்வியக்தனின் உடல் இறுகியது.

“என்ன சொன்னாய் என் காதல் பொய்யானதா? நீ அதிகம் பேசுகிறாய் விதற்பரை… மிக மிக அதிகமாகப் பேசுகிறாய்…” என்றான் பற்களைக் கடித்தவாறு. இவளோ ஏளனப் புன்னகையைச் சிந்தி,

“நியாயமாகப் பேசுவதையும் இப்போது அதிகம் பேசுவதாகத்தான் சொல்கிறார்கள்…” என்றவள் மீண்டும் அவனிடம் விடுபட முயன்றவாறு, அவனை ஒரு வருத்தத்துடன் பார்த்தாள்.

“வீணாக உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். ஏமாற்றப்படுவீர்கள்…”

“நோ… உன்னை விடமாட்டேன்… எனக்கு நீ வேண்டும்…” என்றவன் மறு கணம் அவளுடைய தலையைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து அவளுடைய உதடுகளை ஆவேசமாகப் பற்றிக்கொண்டான்.

முதலில் அதிர்ந்தவள், பின் திமிறிப் அடங்கி அவன் முத்தத்தில் தன்னிலை கெட்டு நிற்க, மீண்டும் மீண்டும் அவளுடைய உதடுகளில் தன் ஆவேசக் கோபத்தை நிலை நிறுத்திவிட்டு விலகியபோது, அவளுடைய உதடுகளில் அவனுடைய கோபத்தின் ஆழம் நன்கு பதிந்துபோயிருந்தது.

முன்பும் அவளை முத்தமிட்டிருக்கிறான் தான். அப்போது அதில் மென்மையிருந்தது. தேடல் இருந்தது. பக்குவமாகக் கையாளவேண்டும் என்கிற அக்கறையிருந்தது. ஆனால் இந்த முத்தத்தில் ஆவேசம் இருந்தது. உரிமை இருந்தது. பிடிவாதம் இருந்தது… எல்லாவற்றிற்கும் மேலாக, நீ எனக்கானவள் என்பதனை உறுதிசெய்யும் ஆழம் இருந்தது.

இறுதியாக அவளை விட்டு அவன் விலகிய கணம், விதற்பரைக்கு ஆத்திரமும் அவமானமும் கூடவே அழுகையும் ஒன்று சேரப் பிறந்தது. என்னதான் அவனை விட்டு ஒதுங்க நினைத்தாலும், அவனுடைய இத்தகைய செயல் அவளை அவன் பக்கமாக இழுத்துத் தொலைக்கிறதே… எத்தனை உறுதியாக இருந்தாலும் அவனுடைய ஒற்றைத் தொடுகை அவளை நிலை குலையச் செய்கிறதே. அத்தனை மனத்தைரியம் அற்றவளா நான்… தன் இயலாமையைக் கோபமாகத் திரட்டியவள், அவனைத் தள்ளிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியபோது, அவளுக்குத் தேகம் பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. தன்னைச் சமப்படுத்துபவளாகப் படிகளின் தடுப்பை இறுகப் பற்றியவாறு தன்னை ஆசுவாசப் படுத்த முயன்றாள். விழிகளோ கலங்கிக் கொண்டு வந்தன. உதடுகளளோ அவனுடைய ஆவேச முத்தத்தில் வறண்டு போயின. தன்னை மறந்து நடுங்கும் கரங்களால் அந்த உதடுகளைத் தொட்டுப் பார்த்தவளுக்கு இன்னும் நடந்தது நம்ப முடியவில்லை.

நிச்சயமாக அவனுடைய கொள்கைக்குத் தான் சரிவராது என்று புரிந்த போது, விலகிவிட வேண்டும் என்றுதான் நினைத்தாள். ஆனால், அவன் தொட்டதும் தன்னிலை கெடும் இந்த உடலை எந்தத் தீயில் போட்டுப் பொசுக்குவது? தாங்க முடியாத வலியுடன் விழிகளை அழுந்த மூடியிருக்கக் கண்ணீரோ கண்மையைக் கரைத்துக் கொண்டு வழியத் தயாராக, அதை எரிச்சலுடன் துடைத்தெடுக்கும் போது, விதற்பரை என்கிற அழைப்புக் காதில் விழுந்தது. பதட்டத்தோடு கண்ணீரையும் கண் மையையும் சேர்த்துத் துடைத்து எடுத்தவள், திரும்ப உத்தியுக்தன்தான் நின்றிருந்தான்.

கலங்கிய அவள் முகத்தைக் கண்டு வியந்தவனாக,

“ஹே… ரிலாக்ஸ்… உன் அத்தை தயாராகிவிட்டார்கள்… போ…” என்றதும், விட்டால் போதும் என்பதுபோலப் பாய்ந்து உத்தியுக்தனின் அறைக்குள் நுழைய, உத்தியுக்தனோ யோசனையுடன் விதற்பரை சென்ற திசையைப் பார்த்துவிட்டுத் திரும்பச் சற்றுத் தள்ளி நின்றிருந்த அவ்வியக்தன்தான் தெரிந்தான்.

அவனைக் கண்டதும், என்ன என்பது போல விழிகளால் கேட்க, அவ்வியக்தன், வலி நிறைந்த புன்னகையைச் சிந்திவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

விதற்பரையோ பூட்டிய கதவின் மீது சாய்ந்து நின்றுகொண்டு படபடத்த இதயத்தை அடக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள். மார்புகளோ அச்சத்தில் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. வறண்ட உதடுகளை அவசரமாகத் தன் புறங்கை கொண்டு தேய்த்து விட்டாள். ஆனால் உடனே அழிந்து போகக் கூடிய முத்தத்தையா கொடுத்துத் தொலைத்தான் அவன். மீண்டும் மீண்டும் அந்த அழுத்தமான உதடுகள் இவளுடைய உதடுகளோடு ஒட்டி நிற்பது போன்ற அவஸ்தையில் தவித்தாள்.

இந்த அவல நிலையிலிருந்து எப்படித் தப்பப் போகிறாள். அவனை விடவும் முடியாமல், அன்னையை எதிர்க்கவும் முடியாமல்… கடவுளே… தவித்துத் துடிக்க,

“ஹே… என்னாச்சு உனக்கு?” என்றவாறு வந்தாள் சமர்த்தி. அவசரமாக நிமிர்ந்து நின்றவள் தொண்டையைச் சரிப்படுத்தியவாறு,

“ஒ… ஒன்றுமில்லை அத்தை…” என்று எதையோ கூறிச் சமாளிக்க,

“ஏய்… உன் உதட்டில் என்ன… ஒரு பக்கம் சிவந்து தடித்து வீங்கியிருக்கிறதே…” என்றாள் அக்கறையாக. தன்னை மறந்து உதட்டை வருடிக் கொடுத்த விதற்பரை, ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்தவாறு,

“தெரியிவில்லை அத்தை…. உதடுகளில் எதுவோ கடித்துவிட்டது… போல” என்றாள் சமாளிப்பவளாக.

“ஐயோ…! மருந்து போட்டாயா? எங்கே காட்டு…” என்றவாறு மருமகளை நெருங்கி வரத் தொடங்கினாள். இவளோ, தன் அத்தையைத் தடுத்தவாறு

“இல்லை… ஒன்றுமில்லை. விடு அத்தை… நீ வா… உன்னை அலங்காரம் செய்யவேண்டும்…” என்றவாறு தன் பிரச்சனைகளைச் சிரமப்பட்டு ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு சமர்த்தியைத் தயாராக்கத் தொடங்கினாள்.

What’s your Reaction?
+1
23
+1
7
+1
2
+1
0
+1
1
+1
6
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-9

(9) எப்படியோ வளைகாப்பு எந்தச் சிக்கலுமில்லாமல் நிறைவாகவே நடந்து முடிந்திருக்க அத்தனை பேரின் முகத்திலும் நிறைவான விழாவைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி.…

16 hours ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 1

(1) அதிகாலைச் சூரியன் கிழக்குத் திசையில் மெதுவாக விழிகளைத் திறந்து, தன் பொன் கதிர்களைக் கிடைத்த இடங்களை எல்லாம் நிரப்பித்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-7

(7) மறு நாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பேரில் தயாளன் குடும்பம் அங்கேயே தங்கியது. மறு நாள் அதிகாலையே…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-5/6

(5) முதலில் அவன் மடியில் விழுந்த அதிர்ச்சியை விட, எங்காவது யாராவது நின்று தம்மைப் பார்த்துவிடப் போகிறார்களோ, முக்கியமாக அன்னை…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-4

(4) விதற்பரை தேநீரைக் கொடுத்துவிட்டு ஓடியதன் பிற்பாடு, அவ்வியக்தனுக்குத் தன் கவனம் அண்ணனிடம் செல்வதாகவேயில்லை. மனமோ விதற்பரை சென்ற திசையிலேயே…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-2/3

(2) அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும்…

2 weeks ago