மறு நாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பேரில் தயாளன் குடும்பம் அங்கேயே தங்கியது. மறு நாள் அதிகாலையே எழவேண்டும் என்பதால் அத்தனை பேரும் விரைவாகவே உறங்கச் சென்றுவிட்டிருந்தனர்.
ரஞ்சனியோடு ஒரே அறையில் படுத்திருந்த விதற்பரைக்கு அன்று தூக்கம் சுத்தமாக வருவதாயில்லை. மனம் மீண்டும் மீண்டும் அவ்வியக்தனிடமே சென்றது. கையெட்டும் தூரத்தில் அவன் இருக்கும்போது, ஏனோ இவளால் இம்மியும் உறங்க முடியவில்லை.
இளமைக்கும், புத்திக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் பெரிதும் திணறித்தான் போனாள் விதற்பரை.
என்னதான் முயன்றும் அவனுடைய நினைவுகளைச் சுத்தமாக ஒதுக்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்து ரஞ்சனியின் உறக்கத்தைக் கெடுத்ததுதான் மிச்சம்.
ஒரு கட்டத்தில் துயில் கலைந்து எழுந்த ரஞ்சனி, எரிச்சலோடு,
“அக்கா… இன்று உனக்கு என்ன ஆயிற்று…” என்று சினந்தவாறு அரைத் தூக்கத்தில் கேட்க, அவசரமாய்த் தன் தங்கையின் பக்கமாகத் திரும்பிப் படுத்த விதற்பரை,
“ஒ… ஒன்றுமில்லை… புது இடம் தூக்கம் வரவில்லை…” என்று சமாளித்தாள். அதற்கு ரஞ்சனியோ, மீண்டும் படுக்கையில் தொப்பென்று விழுந்து சரிந்து படுத்தவாறு,
“உனக்குத் தூக்கம் வரவில்லை என்றால், தோட்டத்தில் போய் உலாத்து… எதற்கு என்னை எழுப்புகிறாய்… ப்ளீஸ்கா… தூ…ங்…க வி…டு…” என்றவாறே விட்ட உறக்கத்தைத் தொடங்க, விதற்பரையோ ஆடாது அசையாது ஒரு பக்கமாகச் சரிந்து படுத்தாள்.
மனமோ சமையலறைக்குள் வந்து ஏதோ காணாததைக் கண்டது போலப் பயந்து ஓடிய அவ்வியக்தன் வந்து நின்றான். ஏன் பயந்து ஓடினான்? ஏதோ அவனுடைய மனத்தை அழுத்துவது மட்டும் விதற்பரைக்குப் புரிந்து போயிற்று. ஆனால் என்ன என்பதுதான் தெரியவில்லை. அன்றும் ஒட்டாவாவில், அவனுடைய பழைய காதலி பற்றிக் கேட்டபோது, அவனுடைய முகம் மாறியதே. அந்த மாற்றம் எத்தகையது என்று பிரித்தறிய முடியாதது என்பதால்தான் இன்னும் அழியாமல் அந்த முகம் நினைவில் இருக்கிறது.
ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில், அதற்கு மேல் படுக்கையில் புரண்டு படுக்க முடியாதவளாக எழுந்தமர்ந்தாள். காரணம் இன்றியே அந்த அறையே மூச்சு முட்டுவது போலத் தோன்றியது.
இங்கே புரண்டு படுத்து தங்கையின் தூக்கத்தைக் குலைக்காமல், வெளியே சென்று நல்ல காற்றைச் சுவாசிக்கலாம் என்று நினைத்தவளாய், அறையை விட்டு வெளியே வந்தாள்.
பின் வாசல் கதவைத் திறக்க, சைவருக்கும் மேலே ஐந்து பாகை செல்சியஸ் வெப்பம் சில்லென்று அவளை வரவேற்றது. ஒரு கணம் சிலிர்த்தவள், உள்ளே சென்று சுவட்டரை எடுக்கப் பஞ்சிப்பட்டவளாக வெளியே வந்தாள். அங்கேயே கழற்றி வைத்திருந்த யாருடையதோ ஒருவரின் சப்பாத்தை அணிந்துகொண்டு, பாதையில் கால் வைத்தாள்.
கடந்த இரண்டு கிழமைகளாகக் குளிர் சைவருக்கும் மேலே செல்லத் தொடங்கியிருந்ததால், பெரும்பாலான பனி உருகி வடிந்து சென்றிருக்க, உருகமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றிருந்த பனித் திட்டுக்கள், மட்டும் அங்கும் இங்குமாக, அந்த முழு மதியின் வெளிச்சத்தில், இவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தன.
மே மாதம் வந்துவிட்டால், குளிர் ஓரளவு மட்டுப்பட்டுவிடும்… நடந்தவள், உருகிய பனியில் மிளிர்ந்த இலையுதிர் தோட்டத்தைப் பார்த்தவாறே அங்கிருந்த பெரிய பாறையொன்றில் சாய்வாக அமர்ந்தாள்.
மெல்லிய காற்றில் சிலிர்த்த மரங்களிலிருந்து துளித்த பனித்துளிகள் அவள் மீது பட, சிலிர்த்தவளாய் அண்ணாந்து பார்த்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பனி இப்போது உருகத் தொடங்கியிருந்தது. அதனால், இலைகளில்லா மரங்களில் பனித்துளிகள் இலைகள் போலக் காட்சியளிக்க, அது நிலவின் ஒளியைக் கடன்வாங்கி, குட்டி மின் விளக்குகள் பூட்டியது போலத் தொங்கிக் கொண்டிருந்தன.
அதைக் கண்டதும் வேளை கெட்ட நேரத்தில் அவனும் அவளுமாய் இரண்டு மாதங்களுக்கு முன்பு வின்டர்லூட் விழாவில் கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. கூடவே அவனுடைய இதழ் முத்தமும் கரங்களின் தீண்டலும் மனதில் தோன்றி இம்சிக்கத் தன்னை மறந்து உதடுகளைக் கடித்தவள், குளிரில் சிலிர்த்த தேகத்தை அடக்க முயன்றவளாய் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். இவளைப் பொலிவுடன் பார்த்துச் சிரித்தது வளர்நிலா.
ஆனாலும் அது அவளுடைய மனதிற்கு இதத்தைக் கொடுப்பதற்குப் பதில் பெரும் வலியையே கொடுத்தது. விழிகள் கலங்கின. அவளுடைய காதல் ஏன் பொய்யாகிப்போனது? இதுவரை யாருடைய சிந்தனைக்கும் இடம் கொடுக்காதவள், இவனுக்குக் கொடுத்துத் தொலைத்ததன் காரணம் என்ன? இப்போது நின்று விம்மி வெதும்புவதில்தான் பலன் என்ன? ஏக்கத்துடன் எண்ணும்போதே,
“ஹாய்… தூங்கவில்லையா…” என்கிற ஆழமான குரல் சற்றுத் தள்ளிக் கேட்டது.
அந்தக் குரலில் உள்ளம் சிலிர்க்க, குளிருக்கும் எம்பி நிற்காத மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கத் திரும்பிப் பார்த்தாள் விதற்பரை.
அவன் நினைவு தாளாமல்தான் வெளியே வந்தாள். இப்போது அவனே அங்கே வந்தால், அவள் எங்கேதான் போவாள்? அங்கே நின்றால், மேலும் உள்ளம் தடுமாறிவிடுவோம் என்று புரிந்தவள் போல, அவனைக் கடக்க முயன்றவளின் தளிர் கரத்தைத் தன் பலம் பொருந்திய கரத்தால் பற்றிக்கொண்டான் அவ்வியக்தன்.
அந்தத் தொடுகையில் நெஞ்சம் கலங்க, கூடவே கண்களும் கலக்கத் தன் கரத்தை உதற முயன்றவள், முடியாமல் தோற்றுப் போக, அவனோ அவளைத் தன்னை நோக்கி இழுத்து மருதாணி இட்ட கரத்தைத் தூக்கித் திருப்பிப் பார்த்தான். நிலவின் ஒளியில் அவள் கரங்களின் வடிவம் நன்றாகத் தெரிய மிகுந்த ரசனையுடன் அதை வரைந்திருந்த சித்திரத்தைப் பார்த்தான். அந்தக் களிம்பு காய்ந்திருந்தாலும், அவளுடைய கரத்தை விட்டு விலகாமல் ஒட்டியிருக்க, அவள் கரங்களை நோக்கிக் குனிந்தவன், முகர்ந்து பார்த்தான்.
மருதாணியின் வாசனையை விட, அவளுடைய உள்ளங்கையின் மென்மை அவனைப் போதை கொள்ளச் செய்ததோ, விழிகளை மூடி ஒரு கணம் அந்தச் சுகந்தத்தை ரசித்தவனாய் நின்றிருந்தவன், பின் நிமிர்ந்து,
“காய்ந்து கரங்களோடு ஒட்டியிருக்கிறதே… எடுத்து விடவா?” என்றான் மென்மையாய். பெரும் வலியோடு அவனைப் பார்த்தவள்,
“உங்கள் நினைவும்தான் மனசோடு ஒட்டியிருக்கிறது… அதை எடுத்துவிட உங்களால் முடியுமா?” என்று தமிழில் கேட்டாள்.
“’மானசோத ஒத்தி’…” என்றவனுக்கு அவள் வேகமாகப் பேசியதால் அவனால் சட் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் குழப்பத்தோடு,
“புரியவில்லை…” என்று கூற, இவளோ தலையை அசைத்து விட்டு,
“புரியாது இருப்பதுதான் நல்லது…” என்றாள் கம்மிய குரலில்.
பின் தன் கரத்தை விலக்கிவிட்டு உள்ளே போக முயல, அவளுடைய பாதையை மறைத்தவாறு நின்றான் அவ்வியக்தன். இவள் கண்களில் முட்டிய கண்ணீரை மறைக்க முயன்று தோற்றவளாய்,
“என்ன இது… வழியை விடுங்கள்…” என்றபோது அவளையும் மீறிக் குரல் தழுதழுக்கத்தான் செய்தது. எதற்காக அவள் அழ வேண்டும். அவன் செய்த காரியத்திற்கு அவன் அல்லவா அழவேண்டும். இதுதான் பெண்களிடம் உள்ள எளிய குணம்… சே… சட் என்று அழுகை வந்து தொலைகிறது.
எரிச்சலுடன் நினைக்கும்போதே, அவளுடைய கண்ணீரை ஒரு வித ரசனையுடன் பார்த்தவன், அவளுடைய தோள்களைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, இவளோ அவன் இழுத்த வேகத்தில் அவனை நெருங்கியவளாகக் கண்ணீர் வடியாமலே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இவனும், கலங்கிய அவளுடைய முகத்தைக் கண்டு. கண்ணீரில் மின்னிய விழிகளைப் பார்த்வாறு, அழகாய் ஒரு புன்னகையைச் சிந்தினான். விழிகளோ மகிழ்ச்சியில் பளபளத்தன.
“இந்தக் கண்ணீர் எனக்காகத்தானே…” என்றான் ஆர்வம் நிறைந்த பரபரப்போடு.
அதைக் கேட்டதும்ட, ஆத்திரத்துடன் விழிகளைச் சிமிட்ட, அவை கன்னத்தில் வடிந்து கீழே விழ, அவனோ அவளுடைய கன்னங்களைத் தன் உள்ளங்கரங்களால் பற்றி மெதுவாக மேலே தூக்கி ஈரத்தால் நனைந்த அக் கன்னங்களைப் பெரும் ரசனையோடு மாறி மாறிப் பார்த்தான். மீண்டும் மீண்டும் ஈரமாகிய அக் கன்னங்களைக் கண்டு அவனுடைய விழிகளும் கலங்கிப் போனாலும், தனக்காய் உருகும் அந் தையலவளிடம் இருந்து தன் விழிகளை விலக்கவே முடியவில்லை
“இதுவரை எனக்காக மிஸஸ் ஜான்சியைத் தவிர வேறு யாரும் கண்கள் கலங்கியதில்லை தற்பரை… அவர்களுக்குப் பிறகு நீதான் கலங்கியிருக்கிறாய்…” என்றவனின் குரலில் விலை மிதமிஞ்சித் தெரிந்தது.
அதைக் கேட்டதுமட் ஆத்திரத்தோடு அவனை விட்டு விலகி நின்றவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஆத்திரத்துடன் துடைத்துவிட்டு,
“என்னது… உங்களுக்காக் கண்ணீர் விட்டேனே…? ஏன் இந்த உலகத்தில் உங்களைத் தவிர எனக்கு முக்கியமானவர்கள் யாரும் கிடையாதா என்ன?” என்ற எரிந்து விழுந்துவிட்டு, இன்னும் அங்கே நின்றால், அதன் பிறகு மேலும் முட்டாளாகி விடுவோமோ என்று அஞ்சியவளாகத் திரும்பிச் செல்ல முயன்றாள். இவனோ இரண்டெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய மேல் கரங்களைப் பற்றித் இழுத்து இறுக அணைத்துக் கொள்ள, அவன் முன் உடலோடு, பின்னுடல் மோத நின்றிருந்தவளுக்கு என்ன முயன்றும் சுயத்தோடு இருக்க முடியவில்லை.
அவளையும் மீறி தேகம் குழைந்தது. உள்ளம் கிறங்கியது. புத்தி பேதலித்தது. அதிலிருந்து தப்பும் வழி தெரியாதவளாகத் தன் விழிகளை மூட மேல் பற்களோ கீழ் உதடுகளை உள்வாங்கிக் கடித்தன.
அதுவும் அவனுடைய சுவாசக் காற்றுக் கழுத்து வளைவைத் தீண்டிச் செல்ல, அதற்கு மேல் சிந்திக்கும் திறன் அற்றவளாய் மயங்கி நின்றாள் விதற்பரை.
இவனோ, மெல்லிய புன்னகையோடு அவளை நோக்கிக் குனிந்து, அவளுடைய வடிவான கழுத்து வளைவில் தன் உதடுகளைக் குவித்து ஊத, அந்த நிலையிலும் தேகம் சிலிர்க்க, உடல் நடுங்கியது.
அதை அவன் புரிந்து கொண்டானோ, இப்போது மேல் கரத்தைப் பற்றிய கரங்களைக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவன், கட்சிவிட்டுத் தாவும் கட்சியாளர் போல அவளுடைய இடையைக் கைப்பற்றிச் சற்று அழுத்திவிட்டு, வயிற்றோடு கரங்களை எடுத்துச் சென்று தன்னோடு இறுக்கி, அவளுடைய கழுத்து வளைவில் தன் உதடுகளை அழுந்த பொருத்தி நின்றான்.
இவளுக்கோ அடிவயிற்றில் மாபெரும் மத்தாப்பூவின் வெடிப்பு. வார்த்தைகளால் சொல்ல முடியாத் தவிப்பு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. அதன் விளைவு கால்கள் வலுவிழந்தவை போலச் சரியத் தொடங்கின. அவனோ அவள் விழுந்துவிடா வண்ணம் மேலும் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டு, தன் உதடுகளைப் பிரிக்காது நீண்ட நேரமாக அப்படியே நின்றான். எத்தனை நேரமாக அவளுடைய கழுத்து வளைவின் நீள அகலத்தை உதடுகள் கொண்டு அளப்பது. ஒரு கட்டத்தில், உதடுகளைக் காது வரை இழுத்து வந்தவன்,
“ஐ மிஸ் யு பேபி…” என்றான் கிறக்கமாய். பின் அவளுடைய காதில் தன் உதடுகளைப் பொருத்தி எடுத்து,
“உன் அருகாமை…” என்றவன், உதடுகளைக் கீழே எடுத்து வந்து கழுத்தில் அழுத்தி, ஆழ மூச்செடுத்து, “உன் வாசனை…” மறுபக்கக் கழுத்து வளைவைச் சுட்டுவிரல் கொண்டு மேலிருந்து கீழாகக் கீறி, சிலிர்த்த அவள் தேகத்தை உணர்ந்தவனாய், “உன் மென்மை…” , தன் மூக்கை அவளுடையு கூந்தலில் புதைத்து, தலையில் முத்தமிட்டு, “உன் வெம்மை…” கழுத்து வளைவை வரைந்த கரம் கொண்டு பெருவிரலால் அவளுடைய வடிவான கீழ் உதட்டைக் கீறி, “உன் சிரிப்பும் பேச்சு…” என்று காதலில் தொலைந்தவனாய் வார்த்தைகளைக் கொட்டியவன், இப்போது மயங்கிக் கிறங்கி நின்றவளைத் தன்னை நோக்கித் திருப்பித் தன்னோடு அணைத்து, அவள் விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து,
“ரியலி ரியலி மிஸ் இட்…” என்றவன், தொடர்ந்து,
“இப்படியே காலக் காலத்துக்கும் உன்னை என் கைவளைவில் வைத்தவாறு மிச்ச நாட்களையும் மகிழ்ச்சியாய் கடக்க ஆசை தோன்றுகிறது விதற்பரை…” என்றான் கிறக்கமாக.
அது வரை அவன் விரல்களின் தொடுகையில், மயங்கிக் கிடந்தவள், சுயம் பெற்றவளாய், தானிருக்கும் கோலம் உணர்ந்தவளாய், அவனை உதறித் தள்ளி,
“நெவர் எவர் டச் மீ…” என்றாள் சீறலாய். அவனோ இன்னும் மயக்கம் தெளியாதவன் போல, அவளை நோக்கி ஓரடி வைக்க முயல,
“அங்கேயே… நில்லுங்கள்… ஒரு அடி எடுத்து வைத்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்… என்றவளின் கோபமறிந்து, ஓரளவு தன்னை மீட்டெடுத்தவனாய்,
“காட்… விதற்பரை… ஏன்… ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்… நான்… நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உனக்குப் புரியவில்லையா?” என்றுறான் பெரும் தவிப்புடன். இவளோ அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்து,
“நீங்கள் எந்த மண்ணும் எனக்குச் சொல்லவும் வேண்டாம், அதை நான் கேட்கவும் வேண்டாம்… அதுதான் பேசவேண்டியவை அனைத்தையும் மூச்சு முட்டப் பேசியாயிற்றே. நானும் இரத்தம் காதிலிருந்து வழியும் வரைக்குக் கேட்டாயிற்று. இதற்கு மேல் எதையும் கேட்கும் சக்தி எனக்கில்லை… தயவு செய்து என்னை விட்டு எங்காவது தொலைந்து போங்கள்…” என்றவாறு விலக முயல, விட்டானா அவன்.
ஏதோ உந்தப்பட்டவன் போல, மீண்டும் அவளை இழுத்து அணைத்தவாறு, சுழன்று சென்று, அங்கிருந்த பாறை ஒன்றில் அமர, விதற்பரை எந்தச் சிக்கலும் இல்லாமல் அவன் மடியில் அமர்ந்திருந்தாள். அவள் சுதாரித்து எழ முதல், அவளை இறுகி அழுத்திப் பிடிக்க, விதற்பரையோ திமிறியவாறு,
“மரியாதையாக என்னை விடுங்கள்… அவ்வியக்தன்” என்றாள் சீறலாக. இவனோ, மறுப்பாகத் தலையை அசைத்து,
“நோ… உன்னை நான் விடமாட்டேன்… என்னை விட்டு நீ எங்கும் போக முடியாது… உன் காதலை, உன் அன்பை, உன் அருகாமையை எந்தக் காலத்திலும் நான் இழக்க மாட்டேன். எனக்குக் கிடைத்த பொக்கிஷம் நீ… அதைக் கை நழுவ விடமாட்டேன்…” என்று ஒரு வித பிடிவாதத்துடன் கூறினான்.
அதைக் கேட்டவளுக்குக் கோபம்தான் வந்தது. அவனுடைய இந்தக் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் அவள் முழுதாகக் கிடைக்கும் வரைதானே. அதற்குப் பிறகு ஏன் என்று கூடப் பார்க்க மாட்டர்ன. திமிறியவாறு,
“உங்களுக்கென்ன பைத்தியமா… விடுங்கள் என்னை…” என்றாள் ஆத்தரத்துடன். அவனோ, மேலும் அவளை உடைத்துவிடுவது போல நெரித்து,
“ஆமாம்… எனக்குப் பைத்தியம்தான், உன் மீது எனக்குப் பைத்தியம்… கொள்ளைப் பைத்தியம்…” என்றவன், அடுத்தக் கணம், அவளைத் தன்னருகே அமர வைத்துவிட்டு, அவளுக்கு முன்பாக மண்டியிட்டமர்ந்தான். இவளோ பயத்துடனும், குழப்பத்துடனும் அவனைப் பார்க்க, அவளுக்கு இரு பக்கமும் கரங்களைப் பதித்து, அவளை அண்ணாந்து பார்த்தான். எப்போதும் யாசகம் கேட்பவர் கரங்கள் கீழேயும், கொடுப்பவர் கரங்கள் மேலேயும் இருப்பதுதானே முறை. அந்த முறை மாறாது, தன்னவளிடம் யாசகம் கேட்பவனாய், கெங்சலுடன் அவளைப் பார்த்தான். ஆனால் அவளோ, யாசகம் கொடுக்க மறுக்கும் கஞ்சன் போலச் சற்றும் இரக்கமில்லாதவளாக இவனை வெறித்துப் பார்த்தாள்.
“தற்பரை…!” என்றவன், அடுத்து அவளுடைய கரங்களைப் பற்றித் தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக்கொண்டே அவளை ஏறிட்டு,
“இங்கே டொரன்டோ வருகிறேன் என்று என்னிடம் சொல்லாமல் வந்துவிட்டாய் அல்லவா… அப்போது உன்னைக் காணாமல் மிகவும் துடித்துப் போனேன். உலகமே அந்நியப்பட்டது போல, எல்லாவற்றையும் இழந்தது போலத் தோன்றியது. சரி உனக்கும் எனக்குமான வாழ்க்கை சரிப்படாது என்று நினைத்து, விலகிவிடலாம் என்கிற நோக்கத்தோடுஅவுஸ்திரேலியா போனேன்… ஆனால்… அங்கே போன பின்தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது… அது…” என்றவன், குனிந்து அவளுடைய கரங்களைப் பார்த்தவாறே,
“ஐ கான்ட் லிவ் வித்தவுட் யு… மகிழ்ச்சி, துக்கம், இன்பம், எல்லாமே நீதான் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்றவன் முகம் கசங்க, “ஐ பெக் யு… ப்ளீஸ்… ஃபர்கிவ் மீ…” என்ற போது ஒரு வித அதிர்ச்சியும், ஆச்சயரியும், ஆராய்வும் என்று அவனைப் பார்த்தாள் விதற்பரை. அந்த விழிகளைக் காணும் சக்தியற்றவனா, அவளுடைய மடியில் தன் தலையைப் பதித்து, விழிகளை மூடிச் சற்று நேரம் அப்படியே இருந்தான். விதற்பரையோ என்ன செய்வது என்று தெரியாத மந்த நிலையில் தன் மடியில் கிடந்தவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, இவனோ, அவள் மடி கொடுத்த சுகத்தை ஆழ்ந்து அனுபவித்தவாறு,
“தற்பரை… நீ என்னை விட்டு விலகிய பின்தான் நான் எத்தனை பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்றே எனக்குத் தெரிகிறது… அன்று நீ என்னை விரும்புவதாகச் சொன்னாய் அல்லவா…? அப்போது எனக்கு இந்தக் காதலில் நம்பிக்கையில்லை என்று சொன்னேன் தானே… ஆனால் அது தப்பு தற்பரை…” என்றவன், எழுந்து அவளை அண்ணாந்து பார்த்து, குளிரில் விறைத்துப்போன அவளுடைய விரல்களை அழுத்திக் கொடுத்து, அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க முயன்று தலையை மறுப்பாக ஆட்டி, ஒரு வித வலி நிறைந்த புன்னகையைச் சிந்தி,
“ஐ ஆம் டோட்டலி ரோங்…” என்றான். பின் தன் பெரு விரல்களால் அவளுடைய இரு உள்ளங்கைகளையும் வருடிக் கொடுத்து,
“ஐ ஆம் ஃபெல் இன் லவ் வித் யு…” என்றான் கிசுகிசுப்புடன். இவளோ நம்ப முடியாதவளாய் அவனை வெறிக்க, இவனோ, அதைப் புரிந்து கொண்டவன் போலத் தலையை ஆட்டி,
“நம்பு தற்பரை… நான் சொல்வது நிஜம்… நான் உன்னைக் காதலிக்கிறேன். முழு மனதாக. நீ ஒட்டாவாவை விட்டு இங்கே வந்த பிறகு, உன்னைக் காணாமல் நான் தவித்த தவிப்பு, எனக்குப் புரிய வைத்தது நீ இல்லாமல் என்னால் வாழ முடியாதென்று… நீயில்லாத ஒவ்வொரு நொடியும். விநாடியும் நான் நரகத்தில் வாழ்ந்தேன் தற்பரை…” என்றவன் ஒரு விதப் பயத்தோடும், வேண்டுதலோடும் அவளைப் பார்த்து,
“தற்பரை… நீ என்னுடைய காதலை ஏற்றுக்கொள்வாய்தானே…” என்று கேட்டான்.
“இது… இதற்காகத்தானே ஏங்கினாள். இதற்காகத்தானே தவித்தாள். கடவுளே… அவன் காதலை உணர்ந்து விட்டானா… அவளுடைய தவிப்புக்கும் ஏக்கத்திற்கும் விடிவு கிடைத்து விட்டதா…?? கண்ணீர் மகிழ்ச்சியில் பொலபொல என்று கொட்ட, ஒருபக்கம் ஆனந்தமாய் முகம் மலர்ந்தாலும், மறு கணம் நம்ப முடியாத தவிப்புடன்,
“நீ.. நீங்கள்… உண்மையாகத்தானே…. சொல்கிறீர்கள்… இல்லை என்றால் உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காகப் பொய் சொல்லவில்லைதானே…?” என்று கேட்டவளைப் பார்த்தவன், இப்போது எழுந்து, அவளுக்கு அருகாமையில் அமர்ந்து,
“இல்லை… இல்லை…” என்றவன் அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றி இடது மார்பில் வைத்து,
“என் இதயத் துடிப்பின் வேகம் உனக்குத் தெரிகிறதா?” என்றான் கிசுகிசுப்பாய். நிஜம்தான் மிகப் பலமாக அது அடித்துக்கொண்டிருக்க, மேலும் தன் மார்போடு அக்கரத்தை அழுத்தியவன்,
“இந்த இதயத் துடிப்பின் மீது சத்தியமாக நான் உன்னைக் காதலிக்கிறேன்… ஐ மீன்… இந்த உணர்வுக்கு நீங்கள் எல்லோரும் வைத்திருக்கும் பெயர்தான் காதல் என்றால், ஆமாம் நான் காதலிக்கிறேன் தற்பரை… நீ இல்லை என்றால் நானில்லை என்கிற உணர்வுக்குத் தள்ளப்படும் அளவு காதலிக்கிறேன்…” என்று கூறி முடிக்க முதல் அவனைப் பாய்ந்து மார்போடு அணைத்துக் கொண்டாள் விதற்பரை.
“அயன்… இது போதும் எனக்கு….” என்று குழறியவாறு விம்ம, அவனும் அந்த அணைப்பில் கட்டுண்டவனாய்,
“ஓ… தற்பரை… உன்னை வருத்திவிட்டேன்… என்னை மன்னித்துவிடு… ஆனால் உனக்குச் சத்தியம் செய்கிறேன். இந்த உடலில் உயிர் இருக்கும் வரைக்கும் உன்னைக் காதலித்துக்கொண்டே இருப்பேன். உன்னை மட்டும் காதலிப்பேன்…” என்று கூறியபோது இவனுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்தத்தான் செய்தது.
சற்று நேரம் அவனுடைய அணைப்பிலிருந்தவள், இப்போது மெதுவாக விலகி, அவனுடைய கன்னத்தைப் பற்றி நெற்றியில் தன் உதடுகளைப் பொருத்தி எடுத்து
“மகிழ்ச்சியாக இருக்கிறேன் அயன்… மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்… ஒரு போதும் நாம் சேர மாட்டோம் என்று நினைத்தேன்… ஆனால்…” என்றவள் முகம் மலர,
“மகிழ்ச்சியில் இதயம் நின்றுவிடும் போலத் தோன்றுகிறது அயன்…” என்றாள் அழுகையும் புன்னகையுமாய். அதை உணர்ந்தவன் போல அவனும் மகிழ்வுடன் நகைத்தவன், இப்போது அவளைத் தன்னிடமிருந்து பிரித்துக் கரங்களால் அவளுடைய முகத்தைத் தாங்கி,
“உன் வாயிலிருந்து அயன் என்கிற சொல்லைக் கேட்காமல் நல்லாவே இல்லை தற்பரை…” என்றவன் விழிகள் கலங்க அவளைப் பார்த்தான்.
“நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றால் நீ நம்புகிறாய்தானே…?”
“ம்… நம்புகிறேன் அயன்..”
“என் காதலை நம்பி என்னோடு வாழ வருவாய் தானே…” என்று அவன் கேட்க, அவன் கேட்ட விதத்தில் எதுவோ உறுத்த, மெதுவாக அவனிடமிருந்து தன்னை விடுவித்தவள்,
“என்னோடு வாழ வா என்றால்… இப்போதும் திருமணம் இல்லாமல் வாழ வா என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்…” என்றறாள் ஒரு மாதிரிக் குரலில்.
“அவளை வலியோடு பார்த்தான் அவ்வியக்தன். அவன் முகத்தைக் கண்டதுமே விதற்பரைக்கு அவன் இன்னும் திருமணத்திற்குத் தயாராகவில்லை என்று புரிந்துபோயிற்று. அதுவரை இருந்த குதுகலம் சுத்தமாக வடிந்து போக, வரையறுக்க முடியாத வலியில் நெஞ்சம் விம்ம, அதற்கு மேல் அவனைப் பார்க்கும் சக்தியற்றவளாக, எழுந்து கொண்டாள். உடனே அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன்,
“ப்ளீஸ்… தற்பரை… போகாதே…. நான் திருமணம் வேண்டாம் என்பதற்காக, உன் மீதிருக்கும் காதல் பொய்யானது அல்ல… தற்பரை… எப்படிப் புரிய வைப்பேன்… எனக்கு இந்தக் காதல் திருமணம் இது எதிலும் நம்பிக்கை இல்லை என்பதற்குப் பின்னால் தக்க காரணம் உண்டு… ஆனால் அதைச் சொன்னால் நீ… நீ…” என்றவன் எதையோ சொல்ல வாய் எடுத்தான். ஆனால்… வார்த்தைகள் வராது தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொள்ளத் தடுமாறியவன், பின் மறுப்பாகத் தலையசைத்து,
“ஐ… ஐ கான்ட்…” என்றான் இயலாமையுடன். இவளோ மீளாத் துயரில் அவனை ஏறிட்டு,
“இல்லை அயன்… உங்களுக்கு வேண்டியது, என் உள்ளம் அல்ல… இதோ இந்த உடல் மட்டும்தான். இதை அடையும் வரைக்கும் நீங்கள் காதல் என்று நினைக்கிற காமம் இருக்கே… அது கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதான் இருக்கும்… ப்ளீஸ் அயன்… தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு உரியவள் நான் அல்ல…” என்று அவள் வலியுடன் கூற, இவனோ,
“நோ… நோ தற்பரை… நானும் ஆரம்பத்தில் உன் உடல்தான் எனக்குப் பிரதானம் என்று நினைத்தேன்… ஆனால் அது அப்படியில்லை… உன் உடல்தான் எனக்கு முக்கியமாக இருந்திருந்தால், உன் பிரிவை எண்ணி ஏன் துடிக்க வேண்டும்? உயிரே மரித்ததுபோல ஏன் உணரவேண்டும்… நம்பு தற்பரை… ரியலி ரியலி ஐ லவ் யு…” என்று அவசரமாகக் கூற, இவளுக்கோ, சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
“காதல்…? எது காதல்? உரிமையில்லாத ஒருவனுடன் தேகச் சுகத்தைத் தீர்ப்பதுதானா காதல்…? அதை விடக் காதலுக்கு அவமரியாதை வேறு எதுவும் இருந்துவிடப் போவதில்லை…” என்று விரக்தியுடன் கூறியவள், தன் தலையை மறுப்பாக ஆட்டி,
“எனக்குத் தகுதியானவர் நிச்சயமாக நீங்கள் இல்லை… அயன்… இரண்டு துருவங்கள் ஒரு போதும் நேர் கோட்டில் சந்திப்பதில்லை. அப்படித்தான் நாமும்…” என்றவள் அவனை நெருங்கி, அவனுடைய இடது மார்பில் தன் வலக் கரத்தைப் பதித்து அண்ணாந்து பார்த்து,
“இங்கே நீங்கள் சொல்வது போல, காதலில்லை… காதல் இருந்திருந்தால், என்னையும் என் சார்ந்த சிக்கலையும் புரிந்திருப்பீர்கள். என் விருப்பத்திற்குச் சம்மதித்திருப்பீர்கள், எனக்காக உங்கள் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்து, என்னை அடைவதற்காகவாவது மணக்க சம்மதித்திருப்பீர்கள்… ஆனால்…” என்றவன் தன் கரத்தை விலக்கிக் கசப்புடன் அவனைப் பார்த்து, “எனக்கு வேண்டியது அப்பழுக்கற்ற காதலுடனான திருமண வாழ்க்கையே தவிர, காமத்துடனான படுக்கையறை அல்ல” என்றவள் அவனை விட்டு விலக, இவனோ, பதைப்புடன் அவளுடைய கைத்தலத்தைப் பற்றினான் அவ்வியக்தன்.
“ப்ளீஸ் தற்பரை… எனக்காகக் கொஞ்சமாவது யோசிக்கக் கூடாதா?” என்றான் வலியுடன். இவளோ, விரக்தியுடன் தன் கரத்தை விலக்கிவிட்டு மேலும் முன்னேற, பதட்டமாக அவளுடைய பாதையை மறைத்து நின்றான்.
“சரி… சரி… உன் வழிக்கே வருகிறேன்… நாம் கொஞ்சக் காலங்கள் ஒன்றாக வாழலாம். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பிறகு மணம் முடிக்கலாம்…” என்று உலகமகா பெரிய திட்டத்தைக் கூற, விதற்பரை அவனை ஏளனத்தோடு பார்த்தாள்.
“தாங்ஸ் ஃபோர் யுவுர் ஆஃபர்… ஆனால் எனக்குத் தேவையில்லை. இதை விட நல்ல ஆஃபர் எனக்கு இருக்கிறது… புரியவில்லை…? என் அம்மாவும் அப்பாவும் எனக்காக ஒருத்தனைப் பார்த்து வைத்திருக்கிறார்கள். இத்தனை நாளும் என்ன பதில் கொடுப்பது என்கிற குழப்பத்திலிருந்தேன்… இப்போது அந்தக் குழப்பம் போய்விட்டது… காதல் என்கிற மாயைக்குள் விழுந்து என் எதிர்காலத்தை நாசமாக்குவதை விட, திருமணம் என்கிற பந்தத்தில் விழுந்து என் எதிர்காலத்தைப் பதப்படுத்துகிறேன்…” என்றதும், அதிர்வுடன் அவளைப் பார்த்தான் அவ்வியக்தன். உடல் இறுக, உள்ளே ஏதோ ஒன்று உள்ளே கொழுந்து விட்டெரிந்தது. ஆத்திரத்துடன், அவளை முறைத்து,
“என்ன…? இன்னொருத்தனை மணமுடிக்கப்போகிறாயா…” என்றபோது அவனுடைய குரல் பயங்கரச் சீற்றத்தில்தான் வந்தது. அதை உணர்ந்தாலும், உணராதவள் போல,
“பின்னே, உங்களுக்காக, உங்கள் மனம் மாறும் நாளுக்காகக் காத்திருப்பேன் என்று நினைத்தீர்களா என்ன? இல்லை உங்களிடம் மண்டியிட்டு என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவேன் என்று நினைத்தீர்களா? எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா? எனக்கென்று ஒரு குடும்பம் வேண்டாமா? கடைசி வரைக்கும் உங்கள் நினைவில் வாழ்ந்து அழிந்து போக, நான் என்ன முட்டாளா? ” என்று கேட்டவள், தன் தோள்களைக் குலுக்கி, இதுதான் என் பாதை என்று தெரிந்து விட்டது… அந்தப் பாதையில் நான் பயணிக்கப் போகிறேன்…” என்று கூற, இவனோ,
“நோ… யு கான்ட்… என்னை விட யாரும் உன்னை நெருங்க முடியாது…” என்றான் அழுத்தம் திருத்தமாக. விதற்பரையோ நம்ப முடியாதவளாக அவ்வியக்தனை நிமிர்ந்து பார்த்தாள். அந்த முகத்திலிருந்த பிடிவாதமும், கோபமும், நீ என்னவள் என்கிற உரிமையும், அப்பட்டமாக அந்த முகத்தில் தெரிவதைக் கண்டவளுக்க அவளையும் மீறி உள்ளம் குதுகலமாய்த் துடிக்க, அது முகத்தில் தெரிய,
“என்ன பொறாமையாக இருக்கிறதா?” என்றாள் விதற்பரை. அவனோ,
“யெஸ் ஐ ஆம் டாமிட்… ஐ ஆம் xxxxx ஜெலஸ்…” என்றவனை ஏளனத்துடன் பார்த்து உதடுகளைப் பிதுக்கியவள்,
“குட் ஃபார் யு… கீப் இட் அப்…” என்றவளைப் பொறுமையிழந்து பார்த்தான்.
“கமான் தற்பரை… டோன்ட் டு திஸ் டு மீ… அதுதான் திருமணம் பிறகு செய்து கொள்ளலாம் என்று சொன்னேனே…” என்றவனைக் கிண்டலுடன் பார்த்தவள்,
“எப்போது, இருவருக்கும் ஒத்துவராது என்று தெரிவது? எப்போது பிரிந்து செல்வது. ப்ச் எப்படியிருந்தாலும் பாதிக்கப் படுவது நான்தான்… புரியவில்லை, உங்களுக்கென்ன. இரண்டு வருடங்களோ, ஐந்து வருடங்களோ முடிந்த வரைக்கும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, இனி நீ வேண்டாம், பிரிந்து விடலாம் என்று கூறிவிட்டுப் போய்விடுவீர்கள்… அதன் பிறகு நான் அல்லவா நடு வீதியில் நிற்க வேண்டும். உங்கள் விருப்பப்படி வந்தேன் என்று வையுங்கள், என் குடும்பம் மொத்தமாய் என்னைத் தலை முழுகி விடுவார்கள், அதன் பிறகு உதவி வேண்டி அவர்களிடம் போய் நிற்கவும் முடியாது, திருமணம் முடித்திருந்தாலாவது விவாகரத்துப் பெற்று என் எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டிய பணத்தை உங்களிடமிருந்து மொத்தமாய் உருவிவிட்டு, பொருளாதாரச் சிக்கலில்லாமல் மிச்சக்காலத்தை வாழ்ந்துவிட்டும் போகலாம்… அதற்கும் வழியில்லை…! எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், நீங்கள் சொல்வது போல உங்களோடு வாழ்ந்தேன் என்றால், ஆசை நாயகி என்கிற பெயரைத் தவிர வேறு எதுவும் எனக்கு எஞ்சாது. இதுதான் நடக்கும் என்று தெரிந்த பின்னாலும் உங்கள் விருப்பத்திற்குச் சம்மதித்தேன் என்றால், என்னைப் போல முட்டாள் வேறு யாரும் இல்லை… அதனால்…” என்றவள்,
“விஷ் மி எக் குட் லக் மிஸ்டர் அவ்வியக்தன்…” என்று புன்னகையுடன் கூறிவிட்டு, அவனுக்கு முன்னால் தன்னுடைய முகம் கசங்க முதல் முதுகு காட்டித் திரும்பியவள், கடகடவென்று உள்ளே செல்ல, இவனோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றிருந்தான்.
என்னது இவள் யாரோ ஒருவனை மணம் முடிக்கப் போகிறாளா என்ன? என்னை விட இன்னொருத்தனின் கரங்கள் அவள் மீது படிய அவள் சம்மதிக்கப் போகிறாளா? இனம் தெரியாத ஒரு முகம் அவளைக் கட்டியணைத்து முத்தம் கொடுப்பதைக் கற்பனையில் கண்டவனுக்குத் தேகம் தகித்துக் கொண்டு வந்தது.
“நோ… நோ… நிச்சயமாக அவளை இன்னொருத்தன் தொடக் கூடாது… கூடவே கூடாது… இவள் எனக்கானவள். எனக்கு மட்டுமே உரிமையானவள். இன்னொருவன் கனவில் கூட அவளை நினைக்கக் கூடாது…” என்று ஆத்திரத்துடன் எண்ணியவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று சுத்தமாகப் புரியாமல், குழம்பிப்போய் நின்றான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அது, எக்காரணம் கொண்டும் விதற்பைரையை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பது
(9) எப்படியோ வளைகாப்பு எந்தச் சிக்கலுமில்லாமல் நிறைவாகவே நடந்து முடிந்திருக்க அத்தனை பேரின் முகத்திலும் நிறைவான விழாவைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி.…
(1) அதிகாலைச் சூரியன் கிழக்குத் திசையில் மெதுவாக விழிகளைத் திறந்து, தன் பொன் கதிர்களைக் கிடைத்த இடங்களை எல்லாம் நிரப்பித்…
(8) மறு நாள் பெரும் பரபரப்புடனே விடிய, அதிகாலையே பக்திப் பாடல்களைப் போட்டு அத்தனை பேரையும் எழுப்பிவிட்டிருந்தார் புஷ்பா. முன்னிரவு…
(5) முதலில் அவன் மடியில் விழுந்த அதிர்ச்சியை விட, எங்காவது யாராவது நின்று தம்மைப் பார்த்துவிடப் போகிறார்களோ, முக்கியமாக அன்னை…
(4) விதற்பரை தேநீரைக் கொடுத்துவிட்டு ஓடியதன் பிற்பாடு, அவ்வியக்தனுக்குத் தன் கவனம் அண்ணனிடம் செல்வதாகவேயில்லை. மனமோ விதற்பரை சென்ற திசையிலேயே…
(2) அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும்…