Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-5/6

(5)

முதலில் அவன் மடியில் விழுந்த அதிர்ச்சியை விட, எங்காவது யாராவது நின்று தம்மைப் பார்த்துவிடப் போகிறார்களோ, முக்கியமாக அன்னை பார்த்துத் தொலைத்துவிடுவார்களோ என்கிற அச்சம்தான் ஏற்பட்டது.

இந்த நிலையில் இவர்களைப் பார்த்தால், அவ்வளவும்தான். சும்மாவே அவன் மீது தப்பபிப்பிராயம் வைத்திருப்பவர்களுக்கு இந்தக் காட்சி போதாதா நரசிம்ம அவதாரம் எடுப்பதற்கு?. இதயம் நின்றுவிடும் அளவு பலமாக அடிக்க, அங்கும் இங்கும் பார்த்தாள். நல்லவேளை யாருமில்லை. அவளையும் மீறி நிம்மதிப் மூச்சு வெளிப்பட, திரும்பிப் பார்த்து அவனை முறைத்தாள். கூடவே அவனிடமிருந்து தன்னை விடுவிக்கத் திமிறினாள்.

விட்டானா அந்த விடாக்கண்டன். அவளை மேலும் தன்னுடலோடு இறுக்கியவன், அவளுடைய காதை நோக்கிக் குனிந்து,

“ஐ மிஸ் யு… பேபி… டு யு மிஸ் மீ…” என்றான் கிசுகிசுப்பாய். அத்தோடு விட்டிருக்கலாம், கூடவே அவள் கூந்தலில் நாசியைப் பொருத்தி ஆழ மூச்செடுத்து அந்த வாசனையை நுகரக் கள்ளுண்ட வண்டாய் புத்தி மயங்கிப் போனது.

எந்தப் போதையை உட்கொண்டாலும் சீறிப்பாயாத உணற்சிப் பெருக்கு, அவளருகே இருக்கும்போது மட்டும் பொங்கிப் பெருகுவதை ஒரு வித வியப்போடு உணர்ந்தான். அதுவும் அந்தப் போதைக்கு அடிமையானவன் போல, மீண்டும் அவளுடைய கூந்தலில் ஆழ மூச்செடுத்தான். அந்தப் போதை கொடுத்த கிறக்கத்தைச் சுமக்க முடியாதவன் போல அவளுடைய தலையில் தன் முகத்தைப் புதைத்தவாறு,

“தித்திக்கிறாய் தற்பரை…” என்றான் கிறக்கமாக.

அவனுக்கு மட்டுமா அவள் அவஸ்தையைக் கொடுத்தாள். அவன் செய்யும் செயலில் உருகிக் குழைய முயன்ற தேகத்தைக் கடிவாளமிட்டு அடற்கியவள் அவனிடமிருந்து திமிற முயன்றாள்.

ஆனால் அவனோ, தன் பரந்த உள்ளங்கையை அவள் அணிந்திருந்த டீஷேர்ட்டிற்குள்ளாக எடுத்துச் சென்று பசுமை வயிற்றின் மீது வைத்துத் தன்னோடு இறுக்க, தன்னையும் மீறிச் சிலிர்த்தாள் அந்தப் பேதை.

சட்டென்று மலர்ந்த பெண்மையை அடக்கும் வழி தெரியாமல், திணறியவள்,

“இது என்ன விளையாட்டு… மரியாதையாக என்னை விடுங்கள்…” என்று வெளியே சத்தம் வராதவாறு சீறினாள்.

ஆனால் அவனுக்கோ அவளுயை சீற்றம் தாலாட்டுப் பாடுவது போல இருந்தது போல. விழிகளை மூடியவாறு அவளை இம்மிகூட விட்டுப் பிரியாமல் அவளுடைய கூந்தலில் முகத்தைப் புதைத்தவாறு நின்றான்.

“கொஞ்ச நேரம் இப்படியே உட்கார்ந்திரு விதற்பரை… ஐ நீட் டு ஃபீல் யு…” என்றான் முணுமுணுப்பாய்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சொர்க்கத்தை அத்தனை சுலபத்தில் விட்டு விலக முடியும் போல அவனுக்குத் தோன்றவில்லை. மாறாக அவளுடைய கூந்தலில் நீண்ட நேரமாகத் தன் உதடுகளைப் பொருத்தியவாறு இருந்தான். பின் சற்று விலகி, முத்தமிட்ட இடத்தில் தன் கன்னத்தைப் பதித்து,

“கேட்டேனே… மிஸ் மீ…?” என்றான்.

அதைக் கேட்டதும் இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன் பற்களைக் கடித்துக் கோபத்தை அடக்க முயன்றவளாய்,

“ஏன்… எனக்கு உங்களை நினைப்பதை விட வேறு வேலை எதுவும் இல்லை என்று நினைத்தீர்களா… விடுங்கள் என்னை…” என்றாள் தன் மீதே கோபம் கொண்டவளாக.

பின் அவளை இப்படி அணைத்தால், உடனே கிறங்கிப் போகவேண்டுமா?

ஆனால் அவனோ கொஞ்சம் கூட அவளைத் தன்னிடமிருந்து பிரித்தானில்லை.

“இப்போது என்ன அவசரம், உன் கையில் போட்டிருக்கும் ‘மடுதானி’ காயும் வரைக்கும் இப்படியே உட்கார்…” என்றான் மென்மையாய். அதைக் கேட்டு அதிர்ந்தவளுக்கு வியர்த்துக் கொட்டியது. இதயமோ யாராவது வந்து தொலைத்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் பலமாகத் துடித்தது.

அந்த நிலையிலும் அவள் ஒன்றை எண்ண மறந்துவிட்டாள். அன்னையின் வரவுக்கு முன்னே எழுந்து செல்லவேண்டும் என்றுதான் எண்ணினாளே தவிர, அவ்வியக்தனின் அணைப்பிலிருந்து விலகிச் செல்லவேண்டும் என்று தோன்றவேயில்லை.

அங்கும் இங்கும் பார்த்தவாறு, பயத்தில் வியர்த்துக் கொட்டத் திமிறிப் பார்த்தாள். இரும்புப் பிடியாக இருந்தது அவனுடைய அணைப்பு. அதுவும் வெற்று வயிற்றில் படிந்த அவனுடைய கரங்கள் வேறு அவளைத் திக்குமுக்காடச் செய்தது.

“ப்ளீஸ்… என்னை விடுங்கள். வெளியே போன அப்பா எந்த நேரமும் வந்துவிடுவார். அம்மாவேறு உள்ளே இருக்கிறார்கள். நம்மை இந்தக் கொலத்தில் பார்த்தால் கொன்றே போட்டுவிடுவார்கள்… கையை எடுங்கள்…” திமிற அவனோ மறுப்பாகத் தலையை அசைத்து, சற்றுக் குனிந்து பின் முதுகில் முத்தமிட்டு, பின் நெற்றியை அழுந்த பதித்து,

“ம்கூம்… விட்டால் நீ காற்றாய் மறைந்து விடுவாய்… நீ இப்படி என் கையில் இருப்பதை அணு அணுவாக ரசிக்கவேண்டும். உணரவேண்டும்… நீ எங்கும் போகவில்லை, இங்கே என் கையணைப்பில்தான் இருக்கிறாய் என்பதை நான் நம்ப வேண்டும்… இப்படி உன்னைக் கரங்களில் வைத்திருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை… கிடைத்த வாய்ப்பை இழக்கும் எண்ணமும் எனக்கில்லை. கொஞ்ச நேரம் இப்படியே இரு தற்பரை…” என்றவன் இப்போது அவளுடைய கழுத்து வளைவில் தன் நாடியைப் பதித்து,

“இப்படி நீ என் அருகே இருக்கும் போது, உலகமே என் காலடியில் இருப்பது போலத் தோன்றுகிறது தற்பரை… என்றுமில்லாத தைரியம் என்னைச் சூழ்கிறது” என்றான் மென்மையாய். இவளோ, திமிறியவாறு,

“மரியாதையாகக் கரங்களை எடுங்கள் அவ்வியுக்தன்… இல்லை… மரியாதை கெட்டுவிடும்…” என்று ஆத்திரமாகக் கூற இவனோ உடல் இறுக ஒரு கணம் நின்றான்.

ஆசையாய் அவள் அழைக்கும் அயனைக் காணவில்லை. குட்டிமாமா கூடத் தொலைந்து போனது. நெஞ்சம் வலித்தது அவனுக்கு. ஆனாலும் அதை வெளிக்காட்டாதவனாக அவளை மேலும் தன்னோடு இறுகி அணைத்தவாறு,

“இரண்டு மாதங்கள், உன்னைப் பார்க்காமல், உன் கூடப் பேசாமல் நன்றாகவேயில்லை தெரியுமா… ஏதோ தொலைக்கக் கூடாத ஒன்றைத் தொலைத்தது போல…” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே,

“அண்ணி…” என்கிற அழைப்பு சற்றுத் தொலைவிலிருந்து வரப் பதறிப்போனாள் விதற்பரை.

“ஐயோ… அத்தை வருகிறார்கள்… விடுங்கள் என்னை…” என்று விடுபட முயல, விட்டானா அவன். விடும் எண்ணம் சற்றும் இல்லாதவன் போல,

“நான் உன் கூட நிறையப் பேசவேண்டும் தற்பரை…” என்றான் இதமாய். இவளோ அவன் சொல்வதைக் கேட்கும் நிலையிலா இருந்தாள். சமர்த்தி வேறு இந்தக் காட்சியைக் கண்டுவிட்டால் இவள் நிலை என்ன? அச்சத்தில் உடல் தெப்பலாக நனைந்து போனது.

“உங்களுடன் பேசவேண்டியவை அனைத்தையும்தான் ஏற்கெனவே பேசியாயிற்றே… இனி பேச எதுவும் இல்லை… விடுங்கள் என்னை… அத்தை வருகிறார்கள்…” திணறும்போதே மெதுவாக நடந்துவரும் காலடிச் சத்தம் கேட்டது.

இரத்தம் வடிந்து போக,

“ஐயோ அத்தை வருகிறார்கள்… விட்விடுங்களேன்…” என்றவளுக்குச் சமர்த்திப் படிகளிலிருந்து மெதுமெதுவாக இறங்கும் சத்தம் கேட்கப் பயத்தில் காதுகளே அடைத்தன. கீழே இறங்கி இடப்பக்கம் திரும்பினால் போதும், இவன் மடியில் இவள் அமர்ந்திருப்பது தெரிந்து போகும். அதற்குப் பிறகு? ஐயோ சமர்த்தி இறங்கிவிட்டாளே… இன்னும் ஒரு சில வாநாடிகளில் இவர்கள் பக்கம் திரும்பிவிடுவாள்… இனியும் காத்திருக்க முடியாது என்பதைப் புரிந்தவளாகத் தன் கரங்களை உபயோகிக்க முயன்ற தருணம், ஒருமுறை அவளை இறுக அணைத்து மீண்டும் அவளுடைய முதுகில் ஆழமான அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்துவிட்டுத், தன் கரத்தை விலக்கினான் அவ்வியக்தன். மறு கணம், தண்ணீரில் அமுக்கி விடுவிக்கப்பட்ட பந்தாகப் பாய்ந்து துள்ளி எழுந்தவள் சீற்றத்துடன் அவனைப் பார்த்து முறைக்கக் கூட வழியில்லாமலம், அந்த இடத்தை விட்டு ஓட முயன்ற விநாடி, அவளுடைய கரத்தைச் சடார் என்று பற்றினான் அவ்வியக்தன்.

இவளோ, பதைப்புடன் சமர்த்தி வரும் திசை நோக்கித் திரும்பிப் பார்த்துவிட்டு, இவனை எரிச்சலுடன் ஏறிட, அவ்வியக்தனோ அவளுடைய முகத்தை ஒரு வித தாபத்துடன் பார்த்தான். பின், எழுந்து அவளை நோக்கிச் சென்று,

“டு யு மிஸ் மீ…” என்றான் மீண்டும்.

இதைப் பற்றிக் கேட்கிற நேரமா இது… வாழ்வா சாவா என்கிற தருணத்தில் கேட்பதற்கு வேறு கேள்வியா இல்லை? ஆத்திரத்துடன் தன் கரத்தை உதறி விடுவித்த நேரம், சமர்த்தி மெல்ல மெல்ல படிகளில் இருந்து இறங்கி வரத் தொடங்கினாள்.

நிம்மதியோடு, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“மிஸ் பண்ணுவதா? நான் எதற்கு உங்களை மிஸ் பண்ணப் போகிறேன்? உங்களை நினைக்கும் அளவுக்கோ, இல்லை உங்களை எண்ணி ஏங்கும் அளவுக்கோ, நீங்கள் ஒன்றும் எனக்கு முக்கியமானவராக மாறிவிடவில்லை…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறியவள், தன் கரத்தை உதறிவிட்டு, விட்டால் போதும் என்று, சமர்த்தி நின்ற திசைக்கு எதிர்பக்கமாக ஓடினாள்.

அந்த வீடடிற்குள் நின்றாளே மூச்சு முட்டிச் செத்துவிடுவோமோ என்று அஞ்சியவளாக, ஓடிய வேகத்தில் பின் தோட்டத்திற்குச் செல்லும் கதவைத் திறந்துகொண்டு பாய்ந்தவள், இறுதியில் அடர்ந்த மரமொன்றின் மீது முட்டி நின்றாள்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

‘கண்ணிமைக்கும் நொடியில் யாருடைய கண்ணிலும் படாமல் தப்பிவிட்டாளே… அப்பா… கொஞ்ச நேரத்தில் எப்படிப் பதற வைத்துவிட்டான் ராட்சசன்…’ என்று எண்ணியவாறு விழிகளை மூடி அசுவாச மூச்சொன்றை எடுத்துவிட்ட நேரம், அவளுடைய தோளில் கரம் ஒன்று படிந்தது. ‘ஐயோ மீண்டும் அவனா?” என்று அதிர்ந்தவள் துள்ளியவாறு திரும்பிப் பார்த்தாள்.

அங்கே புன்னகையும் கேள்வியும் ஒன்று சேர நின்றிருந்தார் தந்தை. அவரைக் கண்டதும், அவசரமாகத் தன்னைச் சமாளித்தவளாக, ஒருவித அவஸ்தைப் புன்னகையைச் சிந்தி,

“ஹீ… ஹீ… கடையிலிருந்து வந்துவிட்டீர்களாப்பா…” என்றாள். தந்தையோ கிண்டலுடன்

“இல்லையே… இன்னும் கடையில்தான் இருக்கிறேன்…” என்றார். அதைக் கேட்டு உதடுகளைச் சுளித்தவள், மொத்தமாய் இயல்பு நிலைக்கு வந்தவள் போலச்,

“என்ன கடியா…” என்றாள்.

தான் இயல்பாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு அவள் பட்ட பாடு அவளுக்கு மட்டும்தான் தெரியும். இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அத்தை மட்டுமில்லை, அப்பாவும் பார்த்திருப்பார். நினைக்கும்போதே உள்ளே குளிர் எடுத்தது. வியர்த்துக் கொட்டியது.

பாவம் மகளின் போராட்டமட் பற்றி எதுவும் தெரியாத தந்தையோ, தலையை மேலும் கீழும் ஆட்டி ஆம் என்றுவிட்டு,

“அது கிடக்கட்டும், நீ இங்கே என்ன செய்கிறாய்… முகம் ஏன் வாடியிருக்கிறது?” என்று கேட்க, மீண்டும் பதற முயன்ற இதயத்தை அடக்கியவளாக, தலையை மறுப்பாக ஆட்டிவிட்டுத் தன் கரத்தைத் தூக்கித் தந்தையிடம் காட்டினாள். மருதாணி இட்ட கரங்கள் பலமாக நடுங்குவதைக் கண்டு, திடுக்கிட்டவள், தந்தை கவனிக்கும் முன்பே கீழிறக்கி,

“மருதாணி இட்டுக்கொண்டேன்பா… அதுதான் சற்றுக் காயட்டுமே என்று…” என்று அவள் கூறி முடிக்க முதல், தந்தையோ, நிதானமாகத் தன் மகளைப் பார்த்து,

“எது… இந்தக் குளிரில்… அதுவும் ஜக்கட்டும் போடாமல்…? அதுதான் உன் உடல் இப்படி நடுங்குகிறது போல” என்றார் கண்டிப்பாய்.

ஏப்ரல் மாதம் என்பதால் முன்னைய போலக் கடும் குளிர் இல்லாவிட்டாலும் சில்லிடும் குளிர் இருக்கத்தான் செய்தது.

“ப்ச்.. இல்லைப்பா… அத்தனை குளிராக இல்லை…” என்று கூறிச் சமாளிக்க, மகளின் தோளின் மீது கரத்தைப் போட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்ட தயாளன்,

“சரி, சரி உள்ளே வா… நல்ல நாளும் அதுவுமாக ஏதாவது காய்ச்சல் தடிமனை இழுத்துப் பிடிக்காதே…” என்றுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு செல்ல, விதற்பரையைப் பின் தொடர்ந்து வந்த அவ்வியக்தனோ இந்தக் காட்சியைக் கண்டு, வியந்து போய் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டான்.

ஒரு தந்தைக்கும் மகளுக்குமிடையில் இத்தகைய அன்னியோன்னியம் இருக்க முடியுமா? அவனுக்குத் தெரிந்து அப்படியில்லையே.’ என்று வியந்தவன், ஏனோ தயாளன் இருக்கும் இடத்தில் தான் இருக்கவேண்டும் என்கிற அவா பிறக்கத் தன்னையும் மறந்து பெரும் ஏக்கத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அவர்கள் சென்று மறைந்ததும்,

“மிக மிக அழகாக இருக்கிறாள் அல்லவா…” என்கிற குரல் அவன் பின்னாலிருந்து வந்தது.

இவனோ தன்னை மறந்து,

“ஆமாம்” என்றவாறு குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிய நேரம் பலம்பொருந்திய கரம் ஒன்று அவனுடைய கழுத்தைப் பற்றி அழுத்தியவாறு தள்ளிச் சென்று வீட்டின் சுவரோடு நச் என்று மோதி நின்றது.

முதில் அதிர்ந்த அவ்வியக்தன், அங்கே கொலை வெறியுடன் நின்றிருந்த தன் அண்ணனைக் கண்டதும், எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே நின்றான்.

“உனக்கு எத்தனை தைரியம் இருந்தால், சதியின் அண்ணன் பெண்ணை அப்படியொரு கோணத்தில் பார்ப்பாய்…” என்றான் சீற்றமாக.

முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் விழித்த அவ்வியக்தன், பின், அர்த்தம் புரிய, கழுத்தை நெரித்துப் பிடித்த அண்ணனின் கரத்தை விலக்க முயன்றவாறு,

“ப்ரோ… நீ என்னைத் தவறாகப் புரிந்திருக்கிறாய்… சத்தியமான நீ நினைப்பது போல இல்லை…” என்றான் நிஜகத்தைப் புரியவைக்கும் வேகத்தோடு.

உத்தியுக்தனோ, தன் தம்பியை மேலும் அழுத்தி,

“டோன்ட் ப்ளே எ கேம் வித் மி அவ்வி…” என்றான் கட்டுக்கடங்காத சீற்றத்துடன்.

அண்ணனின் கோபத்தில் பாதிப்படையாதவனாக,

“ரிலாக்ஸ் ப்ரோ… நான் சொல்வதைக் கேள்… ப்ளீஸ்… அவ்வளவுதானே நீ என்னைப் புரிந்துகொண்ட விதம்…” என்று சமாதானம் செய்ய முயல, அவன் கழுத்திலிருந்து தன் கரத்தை எடுத்த உத்தியுக்தன், தம்பியின் சட்டையைப் பட்டியைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்து,

“என் மனைவியின் குடும்பத்தோடு ஏதாவது திருவிளையாடல் செய்ய நினைத்தாய்… என் கூடப் பிறந்தவன் என்றும் பார்க்கமாட்டேன்… கொன்று புதைத்துவிடுவேன் ஜாக்கிரதை…” என்று பற்களைக் கடித்தவாறு வார்த்தைகளைத் துப்ப, அவ்வியக்தனோ அவனுடைய கரத்தை அழுந்த பற்றி,

“ப்ரோ… ட்ரஸ்ட் மீ… நீ நினைப்பது போலத் தப்பாக எதுவும் இல்லை… ஏன் என்றால்…. என் என்றால்…” என்று சொல்லத் தயங்கியவனாகத் திணற, உத்தியுக்தனோ இன்னும் சட்டையைக் கை விடாமல், முறைத்துக்கொண்டே நின்றான்.

பின் நிமிர்ந்து நின்று தயங்காமல் தன் அண்ணனின் விழிகளைப் பார்த்தான். பின் தன் தொண்டையை அசைத்து அண்ணனிடமிருந்து தன் விழிகளைப் பிரித்து வேறு எங்கோ வெறித்தவாறு,

“ஏன் என்றால்… நா… நான்…” என்றவன் விழிகளில் கண்ணீர் திரையிட, “ஏன் என்றால் நான் அவளைக் காதலிக்கிறேன்…” என்றான் பெரும் தளர்ச்சியுடன். அதைக் கேட்டதும் அதிர்ந்து நின்ற உத்தியுக்தன் நம்ப மாட்டாதவனாகத் தன் தம்பியைப் பார்த்தான். பின் தன் கரத்தை மெதுவாக விலக்கி,

“எ… என்ன சொல்கிறாய் நீ…” என்றான் நம்ப முடியாத அதிர்ச்சியுடன். பின் தன் தலையை மறுப்பாக அசைத்து,

“நோ… பொய் சொல்லாதே அவ்வி… நீ ஏதோ…” என்று சொல்ல வந்தவன், அவ்வியக்தனின் கசங்கிய முகத்தைக் கண்டு வாயடைத்துப் போய் நின்றான்.

தன் கூட ஒன்றாக ஜனித்த தம்பியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாதவனா அவன்?

விழிகளில் அப்பட்டமாக வியப்புத் தெரிய,

“அவ்வி….. நீ… நிஜமா…?” அதற்குமேல் முடிக்க முடியாமல் தடுமாறினான்.

“எனக்குத் தெரியும் ப்ரோ… நீ நம்ப மாட்டாய் என்று. ஆனால் அதுதான் நிஜம்!” என்றவன் வலியோடு, தன்னுடைய வலது நெற்றியின் கரையோரத்தை வலது கரத்தின் சுட்டுவிரல் மற்றும் நடுவிரல்களால் குத்திக் காட்டி,

“இங்கே… இங்கே இருந்து என்னை வதைக்கிறாள்…” என்றவன், அதே வலியோடு மார்பில் தட்டி, “இங்கே நின்று என்னைக் கொல்கிறாள்… முதலில் நானும் அது உடல் தேவை என்றுதான் நினைத்தேன்… ஆனால்… இல்லை ப்ரோ… இது வேறு… அவளைப் பார்க்காமலிருந்தாலே, பைத்தியம் பிடிக்கிறது ப்ரோ… அவள் கூட இருக்கும் போது உள்ளே… என்னை அறியாமலே ஒரு வித சக்தி பிறக்கும். அதே வேளை அவளை விட்டு விலகும் போது… அத்தனை உறுதியும் வடிந்து போய் உள்ளே பயம் எழுகிறது. அவளருகே இருக்கும்போது மட்டும் ஏற்படும் அந்தப் பாதுகாப்பு உணர்வு அவள் இல்லாத போது மட்டும் வதைத்துத் தொலைகிறது.

ப்ரோ…! உனக்கு என்னைப் பற்றித் தெரியும்தானே… நான் யாரையும் நம்ப மாட்டேன் என்று… ஆனால்… இவள் மீது இருக்கும் நம்பிக்கை… எப்படிச் சொல்ல… இவள் பக்கத்தில் இருந்தால் யாருமே என்னை நெருங்க மாட்டார்கள், சிதைக்கமாட்டார்கள் என்கிற தைரியம் பிறக்கிறது. மதுவின் துணையின்றிப் பெண்களை நெருங்க மாட்டேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும் அல்லவா. ஆனால்… இவளிடம் மட்டும் எந்தப் போதையும் இல்லாமல் என்னால் குளிர் காய முடிகிறது. அப்படி என்றால் அதன் அர்த்தம் என்ன?

இவ்வளவு ஏன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு விபத்து. அந்த விபத்தில், விதற்பரையைக் காக்கவேண்டும் என்கிற குறிக்கோள் மட்டும்தான் என்னிடம் இருந்ததன்றி, நான் தப்பவேண்டும் என்று கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை… என் உணர்வுகளைப் பணையம் வைத்து அவளைக் காக்க முயல்கிறேன் என்றால், அவளை நான் வெறித்தனமாகக் காதலிக்கிறேன் என்றுதானே அர்த்தம்.

இத்தனை உணர்வுகளுக்கும் பெயர் காதல்தான் என்றால்… நான் அவளைக் காதலிக்கிறேன். இப்போதும் எனக்குக் காதல் என்பது உண்டா இல்லையா என்று தெரியாதுதான். ஆனாலும் என்னை வதைக்கும் இந்த உணர்வுக்குப் பெயர்தான் காதல் என்றால், யெஸ் ஐ லவ் ஹர்…” என்று அழுத்தமாகக் கூற உத்தியுக்தனோ, குழப்பமும் அதிர்ச்சியுமாக அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான்.

இவன் எங்கே எப்போது எப்படி விதற்பரையைக் கண்டான்? விபத்து என்று தை சொல்கிறான்? அதுவும் எங்கே நடந்தது? இருவருக்குள்ளும் எப்படிப் பழக்கம் வந்தது? இப்படி ஆயிரம் கேள்விகள் அவனுக்குள் குடைய அதை அறிந்துவிடும் வேகத்தில்.

“உனக்கு எப்படி விதற்பரையைத் தெரியும்?” என்றான் பட்டென்று.

இதுவரை எதையும் அண்ணனிடம் மறைக்காதவன், இப்போதா மறைத்துவிடப் போகிறான். சொன்னான். அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான். ஆனால், அன்று பல்கலைக் கழக விழாவில் அவள் சிக்கியதை மட்டும் கூறாமல் தவிர்க்க முயன்றான்.

ஆனால் உத்தியுக்தனை ஏமாற்றுவது அத்தனை சுலபமில்லையே.

“அப்படியானால், அன்று விழாவில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டது விதற்பரைக்குத்தானா?” என்றான் அழுத்தமாக.

அதற்கு என்ன பதிலைக் கூறுவது. தயங்கியவனாக, அமைதி காக்க, உத்தியுக்தனுக்குப் புரிந்து போயிற்று. வாயில் எதையோ முணுமுணுத்தவன், நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தான்.

உத்தியுக்தனுக்கு அவ்வியக்தனைப் பற்றி நன்கு தெரியும். அவன் பொய் சொல்ல மாட்டான். அதுவும் காதல் சார்ந்து நிச்சயம் பொய் சொல்லமாட்டான். ஆனால் இவன் எப்படிக் காதலித்தான்… இவனால் அந்த உணர்வை மீட்டெடுக்க முடியுமா? குழப்பத்துடன் தம்பியை நிமிர்ந்து பார்த்தவனுக்கு மனதிற்குள் ஆயிரம் போராட்டங்கள்.

அவன் சிறு வயதிலிருந்து எத்தனை பெரிய பாரதூரமான சிக்கல்களுக்குள் சென்று வெளியே வந்தவன் என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும். அவன் சிறுவயதில் சந்தித்த மறக்க முடியாத அந்த விபத்தில் ஏற்பட்ட வடுவின் எச்சத்தை இன்று வரை அனுபவித்துக் கொண்டிருப்பவன். அப்படிப்பட்டவன், இன்று காதலிக்கிறேன் என்று சொல்வது நம்ப முடியாத அதிசயம்தான். ஆனால், அவன் விரும்புவது விதற்பரையை அல்லவா… இது எப்படிச் சரி வரும்? அவனைப் பற்றித் தவறான கருத்துப் பத்திரிகையில் வந்தபோதே, புஷ்பா அவனை எப்படித் தள்ளிவைத்துப் பார்த்தார் என்று அனுபவப் பூர்வமாக அறிந்தவன். அப்படிப்பட்டவர், தன் மகளுக்குத் துணையாக இவனை ஏற்றுக்கொள்ளச் சம்மதிப்பாரா? நிச்சயமாக மாட்டார்.

இந்த நிலையில் அவன் யாருக்கு ஆதரவாக நிற்பது? தம்பிக்காக நிற்பானா, இல்லை தன் மனைவியின் உறவினர் பக்கம் நிற்பானா? குழப்பத்துடன் தலை முடியைக் கோதிவிட்டவாறு அவ்வியக்தனை ஏறிட்டான்.

சே, இவனுக்கு வேறு பெண்களா காதலிக்கக் கிடைக்கவில்லை. தவிக்கும் போதே,

“ப்ரோ… எனக்குக் கனவு வரும் என்று உனக்குத் தெரியும்தானே… விதற்பரையைச் சந்தித்த பின், உறங்கும் போது அவளையே எண்ணி உறங்குவேன்… அந்த நாட்களில் எனக்குக் கனவு வந்ததே கிடையாது… அவளுடைய விழிகள் என்னை நேராகப் பார்க்கும் போது நான் புதிதாகப் பிறப்பது போலத் தோன்றும்… அவள் என்னைக் காக்க வந்த, மீட்க வந்த தேவதை…” என்றான் விழிகளில் கனவு மின்ன.

அப்படிச் சொன்ன தன் தம்பியை இரக்கத்தோடு பார்த்தான் உத்தியுக்தன்.

ஏனோ அவனை எண்ணி எப்போதும் போல நெஞ்சம் கனத்துப் போனது.

ஆனாலும் அவனுக்காக யோசிக்கும் நிலையில் இவன் இல்லையே. அவ்வியக்தனின் வாழ்க்கை முறை மட்டும், விதற்பரையின் வாழ்க்கை முறைக்க ஒத்துவருமாக இருந்தால், அவனே சென்று தைரியமாகப் பெண் கேட்டிருப்பான். ஆனால் அதற்குக் கூட வழியில்லாமல், அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கிறதே. பெரும் வருத்தத்தோடு,

“அவ்வி… என்னை மன்னித்துவிடு… இந்த இடத்தில் என்னால் உனக்கு உதவ முடியாது. விதற்பரை இதற்குச் சம்மதித்தாலும், புஷ்பா இந்தக் காதலுக்குச் சம்மதிக்க மாட்டார்கள்…” என்றான் வலியோடு.

தன் தம்பிக்கு உதவியாகத் தன்னால் நிற்கமுடியவில்லையே என்கிற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், புஷ்பா தயாளனின் வாழ்க்கை முறை அறிந்து, அதற்கு எதிராகவும் அவனால் செயற்படமுடியவில்லை.

“அவர்களின் சம்மதம் எனக்கு எதற்கு… ப்ரோ… தற்பரை என்னை விரும்புகிறாள்… எனக்கு அது தெரியும்… நான்தான் முட்டாள்தனமாக அத்தனையையும் உடைத்துச் சிதறவிட்டுவிட்டேன்… சிதறிய துண்டுகளை ஒழுங்காகப் பொறுக்கி ஒட்டி மீண்டும் அவளிடம் கொடுத்தால் என்னை ஏற்றுக்கொள்வாள் ப்ரோ… நான் அவளைக் காதலிப்பது தெரிந்தாலே என்னை மன்னித்து ஏற்று விடுவாள்…” என்று அவன் போகிற போக்கில் கூற, மறுப்பாகத் தலையை அசைத்தான் உத்தியுக்தன்.

“அவ்வி… இது நீ நினைப்பது பொல சாதாரணம் இல்லை. நம்முடைய வளர்ப்பு வேறு. வாழ்க்கை வேறு. விதற்பரையின் குடும்ப வாழ்க்கை முறை வேறு. அவர்கள் பண்பாடு பழக்கவழக்கத்திற்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வாழ்பவர்கள். குடும்பம், உறவு என்பது அவர்களின் மூச்சுகப் காற்று போல. எதுவாக இருந்தாலும் உதறிவிட்டுப் போய்விடும் வழக்கம் இல்லாதவர்கள். என்னதான் நீங்கள் இருவரும் காதலித்தாலும், விதற்பரை தாய் தந்தையை மீறி ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டாள்…” என்றவன் இந்தப் பிரச்சனையை என்ன செய்வது என்று புரியாமல் அங்கும் இங்கும் குறுக்கே நடந்தான்.

ஒரு பக்கம் தம்பியென்றால், இன்னொரு பக்கம் விதற்பரை. என்ன செய்வது என்று தெரியாமல், நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தவனுக்கு ஒரு பக்கம் அவன் மீது பரிதாபமும் எழுந்தது. வாழ்வில் முதன் முறையாக அவனுடைய வாழ்க்கை சார்ந்து உருப்படியான ஒரு வேலை செய்திருக்கிறான். ஒரு சகோதரனாய் அவன் விதற்பரையைக் காதலிப்பது மகிழ்ச்சிதான். சொல்லப்போனால் விதற்பரை மீது அவன் காதல் கொண்டது பெரும் நிம்மதியும் கூட. நிச்சயமாக அவள் அவ்வியக்தனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வாள்தான்.

ஆனால், இவனுடைய ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதுதான் பெரும் கேள்வியே. நிறைவேறுவதை விட, இக்காதல் தோல்வியில் சென்றடையத்தான் வாய்ப்புகள் அதிகம். அப்படியிருக்கையில், இவனால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியுமா. இப்போது முகத்திலிருக்கும் அந்த நம்பிக்கை, மகிழ்ச்சி, குதுகலம் எல்லாம் அழிந்து ஒழிந்து போகுமே. அதாவது பரவாயில்லை. மீட்டெடுத்து விடலாம், ஆனால் முன்னையதைப் போல ஏதாவது முட்டாள் தனம் செய்துவிட்டால்? அச்சம் பிறந்தது உத்தியுக்தனுக்கு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவனுடைய காதலால் சமர்த்தியின் குடும்பம் பெரும் சிக்கலில் மாட்டிவிடுமோ என்கிற தவிப்பும் எழுந்து இவனை வாட்டியது. திரும்பி தன் தம்பியைப் பார்த்து,

“அவ்வி… எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை… ஆனால் எதுவாக இருந்தாலும் கவனமாக இரு. சமர்த்தியின் குடும்பம் காயப்பட்டால், நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன்…” என்று உறுதியாகக் கூறிவிட்டுத் தம்பியை நெருங்கியவன், அவனுடைய தோள்களில் தன் கரங்களைப் பதித்து,

“உன்னோடு கூடப் பிறந்தவன் என்கிற வகையில், விதற்பரையை உன் காதலியாகத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எனக்குச் சதியின் மகிழ்ச்சி மிக முக்கியம் அவ்வி… தயாளனின் குடும்பம் சிதைந்தால், அது சதியை பாதிக்கும்… அதே நேரம், சதியின் உறவினர்கள் உன்னால் வருந்தினால், அதையும் என்னால் தாங்க முடியாது” என்று கூறப் பளிச்சென்று மலர்ந்தவன்,

“ப்ரோ… நம்பு… நீ நினைப்பது போல எதுவும் நடக்காது… எனக்கு விதற்பரை உயிர்… அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வேன்…” என்றான் உறுதியுடன்.

அதைக் கேட்டதும், தம்பியின் தோளில் தட்டிய உத்தயுக்தன்,

“இதைக் கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அவ்வி… அவளை மணந்து நீ மகிழ்ச்சியாக இருந்தால் அதை விட நிம்மதி எதுவும் இருக்காதுதான்… ஆனால்…” என்று கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்த அவ்வியக்தன்,

“ப்ரோ… நான் தற்பரையைக் காதலிக்கிறேன். ஆனால் திருமணம் எல்லாம் செய்யமாட்டேன்… திருமணமே நம் காதலுக்கு எதிரியாக வந்துவிடும்… அதனால், காலம் முழுக்க அவளோடு மகிழ்ச்சியாக இருப்பேன், திருமணம் முடிக்காமலே…” என்று கூறியவனிடமிருந்து தன் கரங்களை விலக்கியவன்,

“இதற்கு விதற்பரையும், அவள் குடும்பமும் சம்மதிக்காது என்பது நூறுவீதம் உறுதியே. ஆனால், எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நீ வளர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வி, இன்னொரு முறை, முன்பு செய்த முட்டாள் தனத்தை நீ செய்யமாட்டாய் என்று நம்புகிறேன்…” என்ற அண்ணனை அதே மகிழ்ச்சியுடன் பார்த்தான் அவ்வியக்தன்.

“ப்ரோ… அப்படி நான் நடந்துகொண்ட போது எனக்கு வயது பதினெட்டு. இன்று அதை நினைத்தாலும், எத்தனை பெரிய முட்டாள்தனம் செய்திருக்கிறேன் என்று எரிச்சல்தான் வருகிறது. இப்போது வெற்றிகரமாகத் தனியாளாகத் தொழிலைச் செய்கிறேன். தன்னம்பிக்கை இருக்கிறது… எதுவாக இருந்தாலும் தற்பரை மட்டும் என்னருகேயிருந்தால், எதையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும்..” என்றவன் தன் அண்ணனை இறுக அணைத்து,

“எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா… இப்போதே மிஸஸ் ஜான்சியிடம் இதைச் சொல்லப்போகிறேன். நான் ஒருத்தியைக் காதலிப்பது தெரிந்தால் மகிழ்வார்கள்… அதற்கு முதல் விதற்பரையிடம் சொல்லவேண்டும்…” என்று பரபரத்தவன். வெளியே செல்ல முற்பட, அவன் கரத்தைப் பற்றித் தடுத்தான் உத்தியுக்தன்,

“அவ்வி… ஒன்றை முடிவு செய்தால் உடனே அதைச் செயல்படுத்திவிட வேண்டுமா. கொஞ்சம் யோசி… இந்த நேரத்தில் தேவையற்ற சிக்கல் வேண்டாம். சும்மாவே விதற்பரை உன் மீது கோபத்தில் இருக்கிறாள். இந்த நேரத்தில் நீ சொல்லும் காதலை அவள் புரிந்துகொள்வாளா என்பதை முதலில் யோசிக்கவேண்டும். கொஞ்ச நாட்கள் அவகாசம் கொடு. முதலில் அவள் உன்னைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து வெளியே வரட்டும்…” என்று எச்சரிக்க, ஒரு அசட்டுப் புன்னகையைச் சிந்திய அவ்வியக்தன்,

“சாரி ப்ரோ… நினைத்ததை உடனே சொல்லிப் பழக்கப்பட்டு விட்டேனா… இப்போதும் என் மனதில் இருப்பதைக் கொட்டிவிடவேண்டும் என்று பரபரப்பாக இருக்கிறது. நீ சொல்வதும் சரிதான். ஆறுதலாகவே அவளுக்குப் புரிய வைத்து விடுகிறேன்…” என்றவன் சற்று முகம் வாடி,

“ப்ரோ… என் காதலை அவள் ஏற்றுக்கொள்வாள் தானே…” என்றான் பெரும் கலக்கத்துடன். அதைக் கேட்டு மெல்லிய புன்னகையைச் சிந்திய உத்தியுக்தன், பற்றிய அவன் கரத்தை விடுவித்துவிட்டு,

“உன்னுடைய காதல் உன்மையானது என்றால், நிச்சயமாக அதை அவள் ஏற்றுக்கொள்வாள். உன் காதல் உன்னைச் சேர்த்து வைக்கும். நம்பு…” என்றதும், வாட்டம் மறந்து பளிச்சென்று மலர்ந்தவன், தன் அண்ணனை இறுக அணைத்து விடுவித்துவித்தான்.

“தாங்ஸ் ப்ரோ…” என்றவன் குதுகலத்துடன் வீட்டிற்குள்ளே செல்ல, அவனையே இரக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் உத்தியுக்தன்.

இவனுடைய இந்த மகிழ்ச்சி நீடிக்குமா, இல்லை நொறுங்கிப் போகுமா… நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னோடு பிறந்தவனுக்காகக் கலங்கி நின்றான் அந்த ஆண்மகன்.

(6)

வெளியே வந்த அவ்வியக்தனுக்கு இருப்பே கொள்ளவில்லை. அந்தக் கணமே மிஸஸ் ஜான்சியிடம் தன் காதலைப் பற்றிச் சொல்லவேண்டும் என்கிற வேகம் பிறந்தது. கூடவே அங்கே இப்போது அதிகாலை இரண்டு மணியாக இருக்கும் என்பதால் அவருடைய தூக்கத்தைக் கலைக்காமல் பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு, அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான்.

இரவு பத்து மணியானதும், கைப்பேசியை எடுத்து அதில் கடகடவென்று சில இலக்கங்களை அழுத்திக் காதில் வைக்க அழைப்புப் போனது.

அதே நேரம் இலங்கையில் அதிகாலை எழுந்து, குளித்துச் சுத்தமாகி இயேசுவின் திரு உருவப் படத்தின் முன்னால் நின்று பைபிளில் ஒரு பகுதியைப் படித்துவிட்டு “ஆமேன்…” என்றவாறு பக்குவமாக அதை மூடி நெற்றியில் தொட்டெடுத்து, தேவனின் பாதத்தின் கீழ் வைத்துவிட்டுச் சமையலறைக்குச் செல்ல அவருக்குத் தேநீர் தயாராக இருந்தது.

அதை வார்த்துக் கொடுத்த வேலையாளுக்கு ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, எடுத்துக்கொண்டு, தோட்டம் வந்தார் ஜான்சி. இரண்டு மிடறு குடித்துவிட்டு அதை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுப் பூ வாளியில் தண்ணீர் ஏந்தி, ஏற்கெனவே சிலிர்த்திருந்த பூங்கண்டுகளுக்குத் தண்ணீர் விடத் தொடங்கிய நேரம், உத்தியுக்தனால், அமர்த்துப்பட்ட வேலையாள், அவருடைய கைப்பேசியை எடுத்துக்கொண்டு வந்து பவ்யமாக நீட்டினான். அதைப் புன்னகையுடன் பெற்றுக்கொண்டவர்,

“உணவு உண்டுவிட்டாயா பண்டா…” என்று மென்மையாகக் கேட்க அதற்கு இல்லை என்று தலையசைத்த வேலையாளைப் பார்த்து முறைத்து,

“எத்தனை முறை சொல்லிவிட்டேன் நேரத்திற்குச் சாப்பிடு என்று… போ… போய்ச் சாப்பிடு…” என்று கடிந்துவிட்டுத் தன்னை யார் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தார்.

அங்கே அவ்வியக்தனின் பெயரைக் கண்டதும், அதிகாலையில் எதற்கு அழைத்தான் என்கிற மெல்லிய பதட்டம் இழையோட, மீண்டும் அவனுக்கு அழைக்க முயன்ற நேரம் மீண்டும்ட இவருடைய கைப்பேசி சத்தம் போட்டது. உடனே உயிர்ப்பித்துக் காதில் பொருத்தி,

“கண்ணா…” என்க, இவனோ

“மிஸஸ் ஜான்சி… இட்ஸ் மீ…” என்றான். அதுவரை கரத்தில் பற்றியிருந்த பூவாளியைக் கீழே போட்டுவிட்டு,

“உன் இலக்கத்தைப் பார்த்ததும் நீதான் என்று தெரிந்து கொள்ள மாட்டேனா… விடியக்காலையிலேயே அழைத்திருக்கிறாயே… ஏதாவது பிரச்சனையா அவ்வி… சமர்த்தி நன்றாகத்தானே இருக்கிறாள்… அவளுக்கு எந்தப் பிரச்சனையுமில்லையே… பிரசவத்திற்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறதே… ஏதாவது சிக்கலாப்பா” என்று கலக்கத்துடனும் பதட்டத்துடனும் கேட்டார்.

“உங்களுக்குக் கைப்பேசி எடுத்தது நானா இல்லை ப்ரோவா?…” என்றான் அவ்வியக்தன் மெல்லிய பொறாமையோடு.

அதை உணர்ந்து கொண்டதும் இவருடைய கலக்கம் தளர்ந்தது. ஏதாவது சிக்கலாக இருந்திருந்தால், அவ்வியக்தன் அதைத்தான் முதலில் கூறியிருப்பான். இப்படிப் பொறாமை பட்டிருக்க மாட்டான். நிம்மதி அடைந்தவர் போலச் சிரித்தவர்,

“இத்தனை வயதாகியும் இந்தப் பொறாமை போகவில்லையா உனக்கு…” என்று கடிந்தவர், “எனக்கு இருவரும் இரண்டு கண்கள் போலத்தான்… சொல்லு இப்போது நீ எங்கே இருக்கிறாய்… நாளைக்குச் சமர்த்திக்கு வளைகாப்பு என்று உத்தி சொன்னானே… நீ டொரன்டோ போகவில்லையா?” என்றார், புதினம் அறியும் ஆவலோடு.

“நான் இப்போது டொரன்டோவில்தான் இருக்கிறேன். ப்ரோ, சமர்த்தி, எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்… மிஸஸ் ஜான்சி” என்றதும் மகிழ்ந்தவராய்,

“சந்தோஷம்பா… சரி சொல்லு… இந்த நேரத்தில் உனக்கு நான் எடுத்தால்தான் உண்டு… இன்று அதிசயமாக நீ எடுத்திருக்கிறாயே… ஏதாவது விஷேசமா…” என்று இருக்கையில் நன்றாகச் சாய்ந்தமர்ந்தவாறு கேட்டார்.

இவனும், அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றவாறு, ஒரு காலுக்குக் குறுக்காக மறு காலைப் போட்டு, பாக்கட்டிற்குள் தன் ஒற்றைக் கரத்தைச் செலுத்தியவாறு முப்பத்திரண்டு பற்களும் தெரியச் சிரித்தான்.

எப்படிச் சொல்வது என்று தெரியாமல் கொஞ்சம் தடுமாறினான். முகமோ சற்று வெட்கத்தில் சிவந்து தான் போயிற்று. அவனுடைய அமைதியைக் கண்டு வியந்தவர், இணைப்பு அறுந்துவிட்டதோ? என்று எண்ணியவராய்,

“ஹாலோ… ஹலோ… அவ்வி…” என்று அழைத்துப் பார்த்தார்.

“யா… யா… ஐ ஆம் ஹியர்…” என்றவன், பாக்கட்டிற்குள் சிக்கியிருந்த கரத்தை விடுவித்துத் தன் தலை முடியை வாரியவாறு,

“கெஸ் வட்…” என்றான் துள்ளலாய்.

அவனுடைய குரலை வைத்தே இவன் குதுகலமாய் இருப்பதை உணர்ந்துகொண்ட ஜான்சிக்குக் கற்பனைச் சிறகுகள் நாலா திசையிலும் பறந்து சென்றன. ஆனாலும் அடக்கியவராய்,

“டேய்… நீ அங்கே, நான் இங்கே நான் எப்படி ஊகிப்பேன், நீயே சொல்லு…” என்றார் தன் ஆசையைக் குழி தோண்டிப் புதைத்தவாறு.

“ம்கூம்… நீங்கள்தான் ஊகிக்கப் போகிறீர்கள்…” என்றதும், ஜான்சியின் முகத்தில் மெல்லிய குறும்பு புன்னகை ஒன்று மலர்ந்தது.

“ம்… ஏதாவது புதுத் தொழில் தொடங்கப் போகிறாயா?” என்று கேட்க, இவனோ,

“இல்லை…” என்றான் பட்டென்னு.

“ஏதாவது விருது கிடைத்திருக்கிறதா?”

“ஐயோ இல்லை மிஸஸ் ஜான்சி…” எரிச்சல் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ம்… அதுவும் இல்லையென்றால், ஏதாவது புது வீடு வாங்கியிருக்கிறாயா?”

“காட்… மிஸஸ் ஜான்சி, அதிகாலையில் உங்களுக்குக் கைப்பேசி எடுத்திருக்கிறேன் என்கிற போதே நான் சொல்ல வந்தது எத்தனை முக்கியமானது என்று உங்களுக்குப் புரிய வேண்டாமா…” என்று பொறுமையிழந்து சிடுசிடுக்க,

“ப்ச்… எனக்கு எப்படித் தெரியும் அவ்வி… உனக்கு இவைதானே முக்கியம். இவை இல்லையென்றால், வேறு எதற்கு இப்படிக் குதுகலிக்கப் போகிறாய்…” என்று சலிப்புடன் கேட்க, இவனோ பொறுமை இழந்தவனாக,

“மிஸஸ் ஜான்சி… ஐ ஃபெல் இன் லவ்…” என்றான் பட் என்று. ஒரு கணம் ஜான்சிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ந்தவராகத் தான் இருந்த நிலை மாறி நிமிர்ந்தமர்ந்தவர்,

“வட்…” என்றார் அதிர்வுடன்.

இவனோ முகம் மேலும் சிவக்க,

“யெஸ் மிஸஸ் ஜான்சி, நான் காதலிக்கிறேன்…” என்றதும், ஏதோ ஜான்சிக்குத் தான் குற்றால அருவியின்கீழ் இருப்பது போன்ற உணர்வில் அகமகிழ்ந்து போனார்.

“நிஜமாகவா சொல்கிறாய் அவ்வி… கர்த்தருக்கு ஸ்தோத்திரம்… ஐயோ… என்னால் நம்பவே முடியவில்லையே தங்கம்…” என்று விழிகள் கலங்க, நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்மக் கூற, இவனோ,

“ஆமாம் மிஸஸ் ஜான்சி,..” என்றதும், விழிகளில் கண்ணீர் பொங்க அவசரமாக அதைத் துடைத்து விட்டவர்,

“யார்ப்பா அந்தப் பெண்…” என்றார் குரல் தழுதழுக்க.

“சமர்த்தியுடைய உறவினள்… விதற்பரை…” என்று இவன் கூற, ஜான்சியின் முகம் மலர்ந்ததும்,

“அந்தப் பெண்ணா… உனக்கு நல்ல பொறுத்தமான பெண்பா. அவளும் உன்னைக் காதலிக்கிறாள்தானே…” என்றார் சந்தேகமாக.

“ஆமாம் மிஸஸ் ஜான்சி… அவளே சொன்னாள்…” என்றதும் நிம்மதி அடைந்தவராக,

“இதைக் கேட்க எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? சரி சொல், எப்போது திருமணம் முடிக்கப் போகிறாய்? உன் திருமணத்திற்கு எனக்கு என்ன உபசாரம் செய்யப் போகிறாய்… இந்த முறை, இங்கே வன்னியில் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்குச் சேவகம் செய்யப் பணம் அனுப்புகிறாய் சரிதானே…” என்று அவர் அடுக்கிக் கொண்டு போக,

“ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்… என்று அவருடைய பேச்சை இடையில் தடுத்து நிறுத்தினான் அவ்வியக்தன்.

“கமான்… மிஸஸ் ஜான்சி. நான் காதலிப்பதாகத்தானே சொன்னேன்… திருமணம் முடிக்கப்போவதாகக் கூறவில்லையே…” என்று பெரிய குண்டொன்றை அவர் தலையில் போட, மறுபக்கம் ஜான்சி மலங்க மலங்க விழித்தார்.

“என்னப்பா சொன்னாய், காதலிப்பதாகக் கூறினாயே…”

“ஆமாம் மிஸஸ் ஜான்சி… நான் அவளைக் காதலிக்கிறேன். அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்கிற அளவிற்கு நான் காதலிக்கிறேன்… ஆனால் இந்தத் திருமணம் என்கிற பொய்யான சடங்கு மட்டும் கிடையாது… நானும் அவளும் திருமணம் முடிக்காமல் காலம் பூராக ஒன்றாக இணை பிரியாமல் வாழப்போகிறோம்…” என்று கூற, இங்கே ஜான்சியின் முகம் கூம்பிப் போனது.

“கண்ணா… இது வாழ்க்கைக்குச் சரி வருமா… நாளைக்குக் குழந்தை குட்டி என்று ஆகிறபோது, அது தப்பான குழந்தை என்று சமுகத்தில் முத்திரை குத்திவிடுவார்களே… அது அந்தக் குழந்தையின் வாழ்க்கையைப் பாதிக்காதா?”,

“குழந்தையா… ஓ நோ… நோ… மிஸஸ் ஜான்சி, என்னைப் பற்றித் தெரிந்தும் இப்படிச் சொல்கிறீர்களே. நான் அவளைக் காதலிப்பது நிஜம், அவளோடு வாழப் போவது நிஜம், ஆனால் இந்தத் திருமணம், குழந்தை இவை என் வாழ்க்கையில் மட்டும் கிடையவே கிடையாது. ஒரு அவ்வியக்தன் இந்த உலகத்தில் பிறந்து பட்ட அவலம் போதும். அவன் குழந்தைகளும் பிறந்து வதை பட வேண்டாம்…” என்று மெல்லிய எரிச்சலுடன் கூற, ஜான்சியோ பேச்சற்று சற்று நேரம் அப்படியே இருந்தார்.

ஏனோ அவருக்குக் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

“கண்ணா… இது தப்புப்பா… இது நீ மட்டும் எடுக்கும் முடிவில்லை… விதற்பரையும் இதற்குச் சம்மதிக்கவேண்டும்…”

“நிச்சயமாகச் சம்மதிப்பாள் மிஸஸ் ஜான்சி. என் காதலைப் புரிந்துகொண்டால் நிச்சயம் சம்மதிப்பாள்…” என்றான் இப்போது குதுகலத்தோடு. ஆனால் ஜானிசிதான் சமாதானம் ஆகாமல் தவித்தார்.

“எனக்கு ஏதோ இது தப்பாகப் படுகிறதே… நான் அறிந்த வரை, சமர்த்தியின் குடும்பம், இத்தகைய வாழ்க்கை முறைக்கு ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது. நான் புஷ்பாவோடு பேசிப் பார்த்த வரைக்கும், அவர்கள் ஒரு வரைமுறையோடு வாழ்பவர்கள். நிச்சயமாக உன்னோடான இந்த வாழ்க்கை முறைக்குச் சம்மதிக்கமாட்டார்கள் அவ்வி…” என்று அவனுக்கு விளக்கப்படுத்த முயன்றார்.

“மிஸஸ் ஜான்சி நீங்களும் ப்ரோபோலவே பேசுகிறீர்கள். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வதை மறுக்க அவர்கள் யார்.” என்று நிஜமான குழப்பத்துடன் கேட்டவனுக்கு எப்படி விளங்கப்படுத்துவது என்று தெரியாமல் விழித்தார் ஜான்சி.

“மறுக்க அவர்கள் யாரா.. அவர்கள்தானே விதற்பரையைப் பெற்றவர்கள்… அவர்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?”

“கமான்… அவர்களுக்குத் தற்பரையைப் பெற்று பதினெட்டு வயதுவரை வளர்த்ததோடு அவர்களின் கடமை முடிந்தது… அதன் பிறகு விதற்பரை தனி மனுஷி. அவளுடைய முடிவை அவள்தான் எடுக்கவேண்டும். அதில் தலையிட அவளைப் பெற்றவர்களுக்குக் கூட உரிமையில்லை…” என்று அவன் உறுதியாகக் கூற, ஜான்சிக்குப் பெரும் வேதனையாக இருந்தது.

அவரும்தான் என்ன செய்வது. குழந்தைகளே வேண்டாம் என்று இருந்த ரதி தேவை கருதித்தான் உத்தியுக்தனையும், அவ்வியக்தனையும் பெற்றாள். பெற்றதோடு தன் கடமை முடிந்தது என்பதுபோலத் தன் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டாள். இதில் அடிபட்டு நொந்துபோனது அவ்வியும் உத்தியும்தான்.. கொண்டதே கோலம், கண்டதே காட்சி என்று வாழ்ந்தவர்களுக்கு, குடும்பம் பற்றிய பெருமை எப்படித் தெரியப்போகிறது.

கிடைத்த பெண்களுடன் மகிழ்ந்தால் போதும் என்று வாழும் மிருக வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று எண்ணும் மனித வாழ்க்கையில் எதைக் கூறி விளங்கப்படுத்த முடியும்? குழம்பியவராக,

“அவ்வி நீ நினைப்பதும் சிந்திப்பதும் தவறுப்பா. தமிழனின் சமுகம் சுயநலமானது அல்ல. அது தன்னை மட்டும் யோசிக்காது. தன் சமுகம் சார்ந்து யோசிக்கும். ஒரு தவறு செய்தால், அது தன்னைச் சார்ந்தவர்களையும் பாதித்துவிடுமோ என்று அஞ்சி ஒரு எல்லைக்குள் வாழும் வாழ்க்கை நம்முடையது. துக்கம் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் அத்தனை பேரும் பகிர்ந்து கொள்வார்கள்… நீ நினைப்பது போலத் தன் மகிழ்ச்சியே முக்கியம் என்று நினைத்தால், நம் தமிழ் சமுகம் என்றோ காணாமல் போயிருக்கும்… இதோ பார் அவ்வி… விதற்பரையைப் பொறுத்தவரை அவள் தனி மனுஷியில்லை. திருமணம் ஆகும் வரைக்கும் அந்தக் குடும்பத்திலிருந்து இவளைத் தனியாகப் பிரித்து எடுக்க முடியாதுப்பா… நிச்சயமாக விதற்பரை அந்தக் கட்டுப்பாட்டை மீறி வர மாட்டாள். நம்பு…” என்றதும் பெரும் சலிப்புடன் தன் தலை முடியை வாரிக் கலைத்து விட்ட அவ்வியக்தன்,

“சமுகம் சமுகம் சமுகம்… சமுகம் என்கிறது ஒரு சுமை மிஸஸ் ஜான்சி. அதன் பிடியிலிருந்தால் நாம் நாமாக இருக்க முடியாது. நமக்குப் பிடித்ததைச் செய்ய முடியாது. அது பாறாங்கல்லாக முதுகில் ஏறி அழுத்தும்… அப்படி ஒரு சமுகம் எனக்கு வேண்டாம்… நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்…” என்றான் எரிச்சலுடன்.

“நீ சொல்வது தப்பு கண்ணா… காட்டில் தனியாகச் சிக்கியிருக்கும்போது, இரைதேடி வரும் சிங்கத்திடம் ஆயுதமில்லாத கையறு நிலையில் இருக்கும்போது, உன்னை எப்படிக் காத்துக்கொள்வாய். அதே உன்னிடம் ஒரு ஆயுதமிருந்தால்? இந்தச் சிங்கம்தான் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் கண்ணா. உன் கையில் உள்ள ஆயுதம்தான் உன் சமுகம். சமுகம் இன்றித் தனியாக இந்த உலகத்தில் ஜெயிக்க முடியாதுப்பா… நல்லது கெட்டது சொல்ல உன்னைச் சுற்றி ஆட்கள் வேண்டும். நான் தனியேதான் இருப்பேன் யாரும் வேண்டாம் என்றால் காணாமலே போய்விடுவாய் கண்ணா… நீ காணாமல் போனால், அழிந்து போவது நீ மட்டுமல்ல, உன்னைச் சார்ந்தவர்களும்தான்.. உன் சமுகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அது வரைந்த கோட்டைத் தாண்டாமல் இருக்கவேண்டும். ஒரு சமுகம் ஒரு கோட்டை வரைந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பட்டு நொந்த அனுபவங்கள் நிறைய இருக்கிறது… மனுஷன் சமுக விலங்கு அவ்வி… அவன் குழுவாக இருந்தால்தான் அவனால் முன்னேற முடியும். இன்று உலகத்தில் மனிதனின் கரங்கள் ஓங்கி இருக்கிறது என்றால் அதற்கான காரணம் அவன் ஒரு குழுவாக இருந்ததால்தான். அதைப் பிரித்து எடுத்துவிட்டால், இப்போதும் நாம் காட்டில்தான் வேட்டையாடின் கொண்டிருப்போம்…” என்று அவர் முடிக்க முதல் குறுக்கிட்ட அவ்வியக்தன்,

“நீங்கள் பார்க்கும் கோணம் வேறு, நான் பார்க்கும் கோணம் வேறு… இப்போது சொன்னீர்களே, சிங்கம் ஆயுதம் என்று… உங்களைப் பொறுத்தவரைக்கும் சிங்கம்தான் பிரச்சனை என்றால், எனக்கு அந்தச் சிங்கம்தான் சமுகம் மிஸஸ் ஜான்சி… என் கையிலிருக்கும் ஆயுதம்தான் என் தன்நம்பிக்கை. எப்படி மிஸஸ் ஜான்சி… ஒரு சமுகம் மூடத்தனமாக எதையாவது செய்யச் சொல்லி மிரட்டும்… அதையும் ஆதரிக்கச் சொல்கிறீர்களா… இந்தத் திருமணம் கூட ஒரு வித மூட நம்பிக்கைதான் மிஸஸ் ஜான்சி…” என்றான் அழுத்தமாக.

“மறுக்கவில்லை அவ்வி, நம்மிடம் நிறைய மூடக் கொள்கைகள் உண்டுதான்… அது கூட அனுபவத்தின் வெளிப்பாடுதான். பழைய காலத்திற்கு அத்தியாவசியமாகப் பட்டதை இந்தக் காலத்திற்குள் புகுத்தும்போது அது மூடத்தனம்தான். அதைத் திருத்துவதில் தப்பில்லை…. ஆனால் திருமணம் என்பது அத்தியாவசியம்… அது சமுகத்தின் தேவை. அது ஒரு சமுகத்தின் வளர்ச்சி… அதனால் வரும் குழந்தைகள் நம் அடுத்தத் தலைமுறையை எடுத்துச் செல்லும் மின்சார வண்டி. அது இல்லையென்றால் பயணமே ஸ்தம்பித்துப் போகும்…” என்றவரிடம் பொறுமை இழந்தவனாக,

“என்னது… திருமணம் சமுகத்தின் வளர்ச்சியா..?. குட் ஜோக்… திருமணம் மட்டும்தான் வாழ்க்கையா… இங்கே எத்தனை பேர் திருமணம் ஆகாமல் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிறார்கள்… அவர்கள் வாழவில்லையா…? எந்தச் சட்டப் பிரச்சனையுமில்லாமல், பிரியும் காலத்தில் நண்பர்களாகவே பிரிந்து போகிறார்கள்… நீங்கள்தான், திருமணம் வாழ்க்கை என்று சிக்கல்களை இழுத்து வைத்துக் கொள்கிறீர்கள்…” என்றான் கோபமாக.

“அவ்வி… இந்தச் சட்டங்குகள் எல்லாம் ஏன் வந்தது என்று கொஞ்சமாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? திருமணம் என்பது பொறுப்பு நிறைந்ததுதான்… ஆனால் இந்தப் பொறுப்பு இல்லையென்றால் சமுகம் முன்னேறிச் செல்லாதே…” என்றவர், அவனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் சற்றுக் குழம்பினார். எப்படியாவது அவன் மனதில் திருமணத்தின் மீது இருக்கும் வெறுப்பைக் கலைந்துவிட வேண்டும் என்கிற வேகம் பிறக்க,

“ராஜா… திருமணம் என்பது இன்று நேற்று தோன்றியதில்லை. ஒரு மனிதன் எப்போது பொருள் தேடத் தொடங்கினானோ அன்றைக்கே இந்தத் திருமணமும் தோன்றிவிட்டது. தமிழர்கள், பபிலோனியா, எஜிப்ட், இவர்களிடம் திருமணம் முடிக்கும் வழக்கம் ஆதிகாலத்தில் இருந்ததால்தான் அந்தச் சமுகத்தின் வாழ்க்கை மிக உச்சத்திலிருந்தது. இப்போதும் இருக்கிறது…  இந்தத் திருமணம் எல்லாம் ஏன் வந்தது என்று நினைக்கிறாய்? தான் தேடியதைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறபோது, அந்த உரியவர் என்று யாரைச் சுட்டிக்காட்ட முடியும்… சொல்லு… அப்போது அவர்களுக்கிருந்த ஒரே வழி, இவள் என்னவள், இது என் குழந்தைகள் என்று சட்டரீதியாகக் காட்டுவது மட்டும்தான். இந்தத் திருமணம் இல்லையென்றால், அவன் உழைப்பில் சேர்த்ததை யாருக்குக் கொடுப்பான்?.”

“திருமணம் இல்லாது வாழும் சமுகம் மொத்தமாய் அழிந்து போகும் தெரியுமா. திபெத்… எத்தனை பேரரசாக இருந்த நாடு. எத்தனை வெற்றிகளைக் கண்ட நாடு…. இன்று ஒரு பக்கமாக ஒதுக்கப்பட்டிருக்கிறதே… ஏன்? இன்ப வாழ்க்கை முக்கியமில்லை, துறவறமே சிறந்தது என்றார்கள். கடைசியில் என்ன நடந்தது, அந்தப் பேரரசு இருந்த இடமே தெரியவில்லையே… அமரிக்கா மற்றும் கனடியப் பூர்வீகக் குடிகளின் வாழ்க்கை பற்றி அறிந்திருக்கிறாய் தானே. அதில் மோஹோக், இருகுவா, மனிடோபாஸ் இனங்கள் அழிந்துகொண்டு வருகிறதே… அதற்கு முக்கியக் காரணம் என்ன என்று உனக்கு நான் சொல்ல வேண்டுமா? அவர்களுக்குத் திருமணம் என்றாலே என்னவென்று தெரியாது. யார் யாரோ எவர் எவரோடோ பிள்ளை பெறுவார்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா? ஒரு பெண் ஒரு முறை குழந்தையைப் பெற்றால், அவளை வேறு எந்த ஆணும் தொட மாட்டான். அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் அவளிடம் தொற்று வந்திருக்குமோ என்கிற அச்சம். விளைவு ஒரு குழந்தை பெறுவதே அதிசயமாகிப் போன நிலையில் இன்று அவர்களின் நிலை என்ன அவ்வி? இன்று அவர்களால் கொஞ்சம் கூடப் பிற சமுகத்திற்குப் போட்டியாக முன்னேற முடியவில்லையே… ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கிரீசில் இருந்த ஸ்பாட்டா நகரம் நமக்கொரு பாடம் கற்பித்திருக்கிறது அவ்வி… இன்று அந்த நகரமே இல்லை. மொத்தமாக அழிந்து போனது ஏன்…? இதோ உன்னைப் போலத்தான், திருமணம் இல்லாமலே, குழந்தையைப் பெற்று வளர்க்கிறோம் என்று, கிளம்பினார்கள். விளைவு அது இருந்த இடம் கூடத் தெரியவில்லை. இதோ இப்போது உன்னைப் போல எல்லோரும் யோசித்தால், அந்த ஸ்பாட்டாவிற்கு நிழ்ந்ததுதான் நமக்கும் நடக்கும்” என்றவர், தொடர்ந்து,

“கண்ணா… திருமணம் இல்லையென்றால் பொறுப்புகள் வராது, பொருள் சேர்த்து வைக்கும் தேவையும் இருக்காது. பொருள் தேடவில்லை என்றால் இனம் எப்படி முன்னேறும்?? திருமணம் ஒரு சமுகத்தில் குடும்பஸ்தன் என்கிற பாரிய அந்தஸ்தைக் கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகக் கணவன் மனைவிக்கிடையே பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. யாருக்கும் கொடுக்காத கொடுக்க முடியாத உரிமையைக் கொடுக்கிறது. இறுதி வரைக்கும் துணையாக வருவதற்கான உறுதியைக் கொடுக்கிறது… ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற வாழ்வியல் அறத்தைப் பின்பற்றக் காரணமாக இருக்கிறது. அந்த அறம்தான் தம்மைப் பெற்றவர்களையும், தாம் பெற்றவர்களையும் பாதுகாக்கும் உரிமையைக் கொடுக்கிறது… அந்த ஒழுக்கம் இல்லை என்றால் அழிஞ்சிடுவோம்பா…” என்றதும், அதைக் கேட்டு, விரக்தியாகச் சிரித்த அவ்வியக்தன்,

“சமுகம்… காட் டாமிட்… அதற்காக நான் ஏன் வருந்தவேண்டும் மிஸஸ் ஜான்சி… அது எனக்கு என்ன செய்தது?” என்று வலியுடன் கேட்க, இவரோ,

“அந்தச் சமுகத்தைச் சார்ந்தவன் தானே நீ… நீ அதற்கு என்ன செய்தாய்? சமுகம் இதைச் செய்தது, அதைச் செய்தது என்று குற்றம் சொல்லத் தெரிகிறதுதானே, அதே சமுகத்தைச் சரியான பாதையில் வழி நடத்த நீ என்ன செய்திருக்கிறாய் அவ்வி…?” என்று அவர் கடினமாகக் கேட்க, சற்று நேரம் அமைதியாக இருந்த அவ்வியக்தன்,

“என் ஒருவனால் ஒரு சமுகம் சீரழிந்து போய்விடப் போகிறதா என்ன?” என்றான் சற்று எரிச்சலோடு.

“நீ ஒருவன் மட்டும்தானா இப்படி இருக்கிறாய். ஏன் உத்தி என்ன செய்தான்… அரசியலுக்குள் குதிக்காமலிருந்திருந்தால், அந்த ஜூலியட்டை மணந்துகொள்ளும் எண்ணம் இல்லாமல் அவள் கூடச் சேர்ந்துதானே வாழ்ந்திருப்பான்? அவன் எதற்காகச் சமர்த்தியை மணந்தான்? காதல் ஒரு காரணமாக இருந்தாலும், அதையும் மீறித் தன் மீது இருக்கும் கரும் புள்ளியை நீக்கிவிடத்தானே… அவ்வி… உங்களைப் போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள். உங்களை உதாரணமாக வைத்து இன்னும் எத்தனை பேர் பின்னால் வருவார்கள்… ஒன்று பத்தாகும், பத்து நூறாகும் நூறு கோடியாகும். இது போதாதா நம் இனம் அழிய.” என்றவர், சற்று நேரம் அமைதி காத்தார்.

“அவ்வி… திருமணம் என்றாலே சத்தியம்… அந்தச் சத்தியம் இருந்தால்தானே, குடும்பம் சீராகச் செல்லும்… அது இல்லையென்றால், வெறும் உடல் இச்சைக்காக மட்டும்தான் நாம் வாழ்வதாகிவிடும்.. அது எத்தனை பெரிய அசிங்கம்?” என்று அருவெறுத்தவாறு கூற, அவனோ ஏளனமாகச் சிரித்தவாறு,

“திருமணம்…. சத்தியம்… இதை எண்ணும் போதே வேடிக்கையாக இல்லை…? தெரியாமல்தான் கேட்கிறேன், திருமணம் முடித்தவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடித்துக்கொண்டா இருக்கிறார்கள். திருமணம் முடித்த பின்பும், மனைவியை ஏமாற்றும் கணவன் இல்லையா. கணவனை ஏமாற்றும் மனைவியில்லையா… ஏன் உங்களுக்குத் தெரியாததா? ‘மாம்’ அத்தகைய காரியத்தைச் செய்தவர்கள்தானே. குழந்தைகள் இருந்தும் அவர்களைப் பற்றிய அக்கறையில்லாமல், யாரோ ஒருவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுத் தன் மகிழ்ச்சியைப் பெரிதாக எண்ணி விலகிச் செல்லவில்லையா… பேசாமல் சேர்ந்து வாழ்ந்துவிட்டுப் பிடிக்கவில்லை என்றதும் பிரிந்து சென்றிருக்கலாமே. எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை தவிப்புகள்… விவாகரத்துச் செய்வது அவர்களின் குழந்தைகளுக்கு மனதளவில் எத்தகைய பெரும் பாதிப்பைக் கொடுக்கும் என்று உங்களுக்குத் தெரியும்தானே…” என்றவன் குரல் கம்ம,

“ஒவ்வொரு நாளும், அவர்கள் சேர்ந்துவிடுவார்கள் சேர்ந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு அதிகாலை விழிப்பேன் தெரியுமா… அவர்கள் சேரவேண்டும் என்பதற்காகவே நான்…” என்றவன் பற்களைக் கடித்துச் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பின் தொண்டையைச் செருமி,

“நீங்கள் மட்டும் அருகே இல்லாதிருந்திருந்தால், நான்… நான் காணாமலே போயிருப்பேன் மிஸஸ் ஜான்சி…” என்றவன் மறுப்பாகத் தன் தலையை அசைத்த,

“வேண்டாம்… திருமணம், குழந்தை குட்டி எதுவும் வேண்டாம்… எனக்குத் தற்பரை மட்டும் போதும்… உயிரோடு இருக்கும் வரைக்கும் அவளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டுப் போகிறேன். என்றாவது ஒரு நாள் நம் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றால், சிக்கலின்றியே பிரிந்து விடலாம்..” என்று கூறி முடிக்க, ஜான்சியின் நெஞ்சம் வேதனையில் கசங்கிப் போனது.

சுண்டியதும் மாறக் கூடிய வலிகளா அவனுடையது. அவனுடைய இளமைக்காலப் பருவத்தைக் கண்கூடாகக் கண்டு வந்தவராயிற்றே. பசுமரத்தாணி போல ஆழமாகப் பதிந்த வடு, அத்தனை சுலபத்தில் அழிந்து போகாதே…

“அவ்வி! உன் வலி எனக்குப் புரிகிறது… ஆனால் வாழ முதலே பிரிவுக்கான அட்டவணையைப் போட்டால் வாழ்க்கை எப்படிப்பா மகிழ்ச்சியாக இருக்கும். கண்ணா உன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து வாழ்க்கை முழுவதும் போராட்டம் இருக்கும் என்று யோசிப்பது தவறு… எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்… கண் முன்னால் புஷ்பாவின் வாழ்க்கையைப் பாரேன். பணமில்லை என்றாலும் கூட, அவர்களிடம் மகிழ்ச்சி குறையவில்லையே. அதை விடு, நீ உன் விருப்பத்தைப் பற்றி மட்டும்தான் பேசுகிறாயே தவிர விதற்பரையின் மனநிலை பற்றி நீ யோசிக்கவில்லையேப்பா… அவள் இதற்குச் சம்மதிக்க வேண்டுமே…” என்றதும் முகம் பளிச்சிட மலர்ந்தவன்,

“நிச்சயமாகத் தற்பரை ஒத்துக்கொள்வாள் மிஸஸ் ஜான்சி. அவளுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். அவள் என்னைக் காதலிக்கிறாள். அந்தக் காதல் உண்மையென்றால், நிச்சயமாக நான் சொல்வதற்குச் சம்மதிப்பாள்…” என்றான் உறுதியாக.

எனக்குத் தெரிந்த வரையில் அவள் சம்மதிக்கமாட்டாள் என்றுதான் தோன்றுகிறது. ஏன் என்றால் அவள் தமிழ்ப் பண்பாட்டுக்கு உட்பட்டவள், நிச்சயமாக இத்தகையை முறையற்ற வாழ்க்கைக்குச் சம்மதிக்க மட்டாள்பா…” என்றவர் பெரும் வலியுடன்,

“அவ்வி… நீயும் தமிழன்தானே… உன்னிடமும் அந்தத் தமிழனின் பண்பாட்டுப் பாரம்பரிய மரபணு இருக்கத்தானே வேண்டும்… நீ மட்டும் எப்படிப்பா அதன் உணர்வே இல்லாமல் ஒதுங்கி நிற்கிறாய்?” என்று கேட்டார் பெரும் ஏமாற்றத்தோடு. இவனோ விரக்தியும் ஏளனமும் ஒன்று சேரச் சிரித்தான்.

“என்ன சொன்னீர்கள்… தமிழ் பாரம்பரியத்தில் வந்தேனா… எப்படி மிஸஸ் ஜான்சி. அது மரபணுவிலிருந்தால் மட்டும் போதாது, வழக்கத்திலும் இருக்க வேண்டும். வளர்ப்பிலும் இருக்கவேண்டுமே. நான் பிறந்தது தமிழ்த் தாய் தந்தையாக இருக்கலாம். ஆனால் வளர்ந்த முறை… அம்மா அப்பா அதைப் பின் பற்றினால்தானே நானும் அதைப் பின் பற்ற… எப்போதாவது நம் பழக்க வழக்கங்கள் இதுதான், நம் பண்பாடு இதுதான் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறதா…? பிறகு எப்படி அதை உணர்வு பூர்வமாக உணர முடியும்… இவ்வளவு ஏன், தமிழ் பேச கூட நமக்கு வாய்ப்புக் கிடைக்காத போது, நான் எப்படித் தமிழன் என்று சொல்வது… நீங்கள் கற்றுத் தர முயன்றீர்கள்… என்ன நடந்தது. தேவையில்லாத குப்பை ஓரத்தில் போடுங்கள் என்று ‘மாம்’ தடுக்கவில்லை? அப்படியே தமிழும் எனக்குத் தேவையில்லாத குப்பையாகவே மாறிப் போயிற்று. இப்போது போய், பண்பாடு பழக்கவழக்கம் என்றால், எங்கிருந்து வரும்?” என்று இவன் எரிச்சலுடன் கேட்கப் பதில் கொடுக்க முடியாமல் வாயடைத்துத்தான் போனார் ஜான்சி.

உண்மைதான். ரதி மேலைத்தேயப் பண்பாட்டுக்கு ஈர்க்க்பட்ட அளவுக்குத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஈர்க்கப்பட்டதில்லை. இவர்தான் தைப்பொங்கல் அன்று அடுப்பில் பானையாவது வைத்துப் பொங்குவார். உத்தியுக்தனும் அவ்வியுக்தனும் சர்க்கரைப் பொங்கல் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால், அடிக்கடி சர்க்கரைப் பொங்கல் செய்து கொடுக்கப்படும். அதனால் அந்தப் பொங்கலும் பத்தோடு பன்னிரண்டாகப் போய்விடும். இது தவிரத் தமிழ் கற்றுக் கொடுக்கப் பல முறை முயன்று தோற்றும் போனார். ரதியும் ஊக்கப்படுத்தவில்லை. தமிழைக் கற்று என்ன செய்யப்போகிறார்கள். அதனால் தேவையற்ற நேர விரையம் என்றுதான் சொன்னாரே தவிர, தமிழ் எங்கள் உரிமை என்று ஊக்கப்படுத்த அவர் சிறிதும் முயலவில்லை. இதில் குழந்தைகள் எங்கே தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுக் கொள்வது. நடக்கும் காரியமா.

“சரிப்பா நீ சொல்வது போலவே வைத்துக் கொள்வோம். அதற்கு விதற்பரை மறுத்தால்…” என்றார் ஜான்சி. சற்று நேரம் அமைதியாக இருந்த அவ்வியக்தன்,

“சம்மதிக்கும் வரை விடமாட்டேன் மிஸஸ் ஜான்சி…” என்று உறுதியாகக் கூறியவன், தன் கைப்பேசியை அணைத்துவிட்டுச் சற்று நேரம் சிலையென நின்றான்.

ஒரு வேளை மிஸஸ் ஜான்சி சொல்வது போல விதற்பரை மறுத்துவிட்டால்? அந்த நினைப்பே பெரும் கசப்பைக் கொடுக்க எதையோ மென்று விழுங்கியவனுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

நெஞ்சம் நடுங்கியது. விதற்பரை தனக்குக் கிடைக்காது போய்விடுவாள் என்பதை அவனால் கற்பனையில் கூடச் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. எதையும் இழந்துவிடலாம் போலத் தோன்றியது. ஆனால் தற்பரையை… ம்கூம் நிச்சயமாக முடியாது… முடியவே முடியாது…’ என்று தீர்மானமான எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த இருட்டில் அவனைக் கடந்து சென்றது அந்த உருவம். அதைக் கண்டதும் விழிகள் பளிச்சிட, அந்த உருவத்தைப் பின் தொடர்ந்தான் அவ்வியக்தன்.

What’s your Reaction?
+1
17
+1
5
+1
2
+1
1
+1
5
+1
2
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-9

(9) எப்படியோ வளைகாப்பு எந்தச் சிக்கலுமில்லாமல் நிறைவாகவே நடந்து முடிந்திருக்க அத்தனை பேரின் முகத்திலும் நிறைவான விழாவைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி.…

16 hours ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 1

(1) அதிகாலைச் சூரியன் கிழக்குத் திசையில் மெதுவாக விழிகளைத் திறந்து, தன் பொன் கதிர்களைக் கிடைத்த இடங்களை எல்லாம் நிரப்பித்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-8

(8) மறு நாள் பெரும் பரபரப்புடனே விடிய, அதிகாலையே பக்திப் பாடல்களைப் போட்டு அத்தனை பேரையும் எழுப்பிவிட்டிருந்தார் புஷ்பா. முன்னிரவு…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-7

(7) மறு நாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பேரில் தயாளன் குடும்பம் அங்கேயே தங்கியது. மறு நாள் அதிகாலையே…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-4

(4) விதற்பரை தேநீரைக் கொடுத்துவிட்டு ஓடியதன் பிற்பாடு, அவ்வியக்தனுக்குத் தன் கவனம் அண்ணனிடம் செல்வதாகவேயில்லை. மனமோ விதற்பரை சென்ற திசையிலேயே…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-2/3

(2) அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும்…

2 weeks ago