Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-2/3

(2)

அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும் வரைக்கும் அவளைப் பின்தொடர்ந்து சென்றவன், அதன் பின் அவள் மனம் அமைதியாகும் வரைக்கும் காத்திருக்கலாம் என்று இரண்டு நாள் விட்டுப் பிடித்து மீண்டும் விதற்பரையைத் தொடர்பு கொள்ள முயன்றான் அவ்வியக்தன்.

ஆனால் அவனுடைய அழைப்பை அவள் ஏற்க மறுக்கப் பெரும் படபடப்பானது. இதயம் பயங்கரமாக வலித்தது. அவளைப் பார்க்காமல் இவனால் ஒரு பருக்கை சோறு கூடத் தின்ன முடியவில்லை.

அதுவும் அவள் கூடப் பேசவில்லை என்றால் உலகமே தன் சுழற்சியை நிறுத்திவிடுமோ என்று அஞ்சியவனாக மீண்டும் மீண்டும் அவளை அழைத்துப் பார்த்தான்.

இறுதியில் அவளுடைய இலக்கம் உபயோகத்தில் இல்லை என்று தெரிந்த பின்தான் அவனுக்கு நிதர்சனம் புரிந்தது.

அவளுடைய எண் உபயோகத்தில் இல்லையா? ஏன் என்னவாயிற்று? பதறியவனாய் அவளுடைய பல்கலைக் கழகம் சென்று காத்திருந்தான். அவள் வரவில்லை. ஒரு வேளை இன்று வராமல் வீட்டில் தங்கியிருப்பாளோ? உடனே இருப்பிடத்திற்குச் சென்று கதவைத் தட்டிப் பார்த்தான். உள்ளே இருப்பதற்கான அடையாளமேயில்லை. எங்கே போனாள்? என்னாயிற்று? கலங்கிப் போனான் அவ்வியக்தன்.

கடவுளே அவளைப் பார்க்காமல் பைத்தியமே பிடித்து விடும் போலத் தோன்றுகிறதே… இந்தக் கணமே அந்தக் கதவைத் திறந்து அவளை அணைத்து ஆறுதல் படவேண்டும் என்று உள் மனம் கெஞ்சுகிறதே… ஒரு முறை அவளுடைய தரிசனம் கிடைத்தால் போதும் என்று இதயம் புலம்புகிறதே. அவளுடைய பாராமுகம் அவனுடைய உயிரை அறுத்து எடுப்பது போல அல்லவா வலிக்கிறது இதிலிருந்து எப்படி வெளியே வருவது?

முதன் முறையாக நெஞ்சில் பெரும் அச்சம் பாரமாக வந்து அமர்ந்து கொண்டது. ஒரு வேளை மெய்யாகவே இவனை உதறிவிட்டாளா… சீ சீ இருக்காது… அவளுக்கு என்னைப் பிடிக்கும்… மிக மிகப் பிடிக்கும்… நிச்சயமாக என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாள். சற்று நாட்கள் அவகாசம் கொடுக்கலாம். அவளுடைய மனம் தேறியதும், என் பக்கத்து நியாயத்தை உணர்ந்து கொள்வாள். அவனை வெறுக்கும் அளவுக்கொன்றும் தவறாகக் கேட்கவில்லையெ. சேர்ந்து வாழலாம் வா என்றுதானே கேட்டான். அது பெரிய குற்றமா? இந்த உலகத்தில் எத்தனை பேர் மணமாகாமல் மனப் பொருத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்க்ள வாழ்க்கையைத் தொலைத்துவிட்டா வாழ்கிறார்கள். இது ஏன் இவளுக்குப் புரியவில்லை. அவனுக்கு அவள் கூட மகிழ்ச்சியாக வாழவேண்டும்… அதற்கான வழியைத்தானே சொன்னான்… அது புரியாமல் இவளைத் தவிர்க்க எதற்காக நினைக்கிறாள்?

அன்றும் அவளைக் காணும் வெறியுடன் பல்கலைக் கழகத்தில் காத்திருக்க, அவனைக் கண்டதும், ஒரு பெண் அழகிய புன்னகையுடன் வந்தாள். அவளை எங்கும் கண்ட நினைவில்லை. யோசனையுடன் தன் புருவத்தைச் சுருக்க, அவளோ,

“ஹாய்… ஹவ் ஆர் யு…” என்றாள். இவனோ அவளுடைய புன்னகைக்குப் பதில் புன்னகையைக் கொடுத்துவிட்டு,

“குட் அன்ட் வட் எபௌட் யு? என்று திரும்பக் கேட்க, அவனுடைய முகத்திலிருந்த குழப்பதைக் கண்டு புன்னகைத்தாள்.

“உனக்கு என்னை நினைவில் இல்லை அப்படித்தானே…”

“சாரி… இல்லை… பெண்களை அதிகம் நினைவில் வைத்திருப்பதில்லை…” அதைக் கேட்டு மெல்லியதாக நகைத்தவள்,

“நான் ஜெனிலியா… சில நாட்களுக்கு முன்பு உன்னை மதுக் கூடத்தில் சந்தித்தேன்…” என்றாள். இவனோ யோசனையுடன் புருவங்களைச் சுருக்கி,

“சில நாட்களுக்கு முன்பா…” நினைவு வராதவனாக,

“ஓ… சாரி… எனக்கு நினைவில்லை…” என்று தயங்கியவனை மீண்டும் புன்னகையுடன் ஏறிட்டவள், அன்று மதுக் கூடத்தில் அவனைச் சந்தித்ததையும், அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்ததையும் கூற, அப்போதுதான் அவ்வியக்தனுக்கு, ஓரளவு நினைவுக்கு வந்தது.

“ஐ ஆம் சாரி… போதையில் இருந்ததால் நினைவில் இல்லை… நீ இங்கே என்ன செய்கிறாய்…” குழப்பமாகக் கேட்டான்.

பல்கலைக் கழகத்தைச் சுட்டிக்காட்டி,

“இங்கேதான் படிக்கிறேன்…” என்றாள் தோள்களைக் குலுக்கி. கூடவே,, “நீ எங்கே இங்கே…” என்றாள்.

“எனக்குத் தெரிந்த பெண்… இங்கேதான் படிக்கிறாள். அவளைப் பார்க்க வந்தேன்…” என்றவனின் முகம் வாடியிருந்தது.

அதைக் கண்டுகொண்டவளாய்,

“சந்தித்து விட்டாயா?” என்றாள் இதமாய்.

உதடுகளைப் பிதுக்கியவன், தன் வலியை மறைத்தவனாக, ஒரு புன்னகையைச் சிந்தி,

“இன்று வரவில்லை போலும்… நாளைக்கு வந்து பார்க்கிறேன்…” என்றுவிட்டு வணடிக்குள் ஏற,

“யார் என்று சொன்னால் விசாரித்துச் சொல்வேன்…” சொன்னதும், இவனுடைய முகம் பளிச்சிட்டது.

“உன்னால் முடியுமா?”

“முயற்சி செய்கிறேன்… அவள் பெயர் என்ன? என்ன படிக்கிறாள்?”

என்று கேட்க, இவன் உடனே விபரம் சொன்னான்.

“ஒரு நாள் அவகாசம் கொடு. விசாரித்து விட்டுச் சொல்கிறேன். நாளை இதே நேரத்திற்குச் சந்திக்கிறேன்…” என்று விட்டுத் திரும்ப அவளைத் தடுத்தான் அவ்வியக்தன். இவள் நின்று திரும்பிப் பார்க்க,

“நன்றி…” என்றான் மனம் உணர்ந்து. அதற்கும் புன்னகைத்தவள்,

“அன்று எதுவும் செய்யாமல் எனக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போனாய்… குறைந்தது இந்த உதவியையாவது செய்கிறேன்…” என்று விட்டு விடைபெற, இவன் நிம்மதியோடு தன் விடுதிக்குச் சென்றான்.

ஒரு நாள் எப்படியோ சமாளித்தவன், சரியான நேரத்திற்குப் பல்கலைக் கழகத்தில் காத்திருக்க, அவனைத் தேடி வந்தாள் ஜெனிலியா.

“விசாரித்தாயா?” தன் பரபரப்பை அடக்கக் கொஞ்சம் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

கொஞ்சம் வருத்தமாய்ப் புன்னகைத்தவள்,

“உன் தோழி ஊருக்குச் சென்றுவிட்டாள்…” என்று சொல்ல அதைக் கேட்ட அவ்வியக்தனுக்கு கொஞ்சம் நிம்மதியானது.

“ஓ… எப்போது திரும்ப வருவாள் என்று ஏதாவது சொன்னார்களா?” பரபரப்பும் ஆவலுமாகக் கேட்டான். அதைக் கேட்டதும் உதடுகளைப் பிதுக்கியவள்,

“அவளுடைய நெருங்கிய தோழியிடம்தான் விசாரித்தேன். அன்று வருட முடிவுக்கான விழாவின் போது போதைப்பொருள் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையால், இனி இந்த பல்கலைக் கழகத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார்கள்…” என்று கூற, அதைக் கேட்டவனுக்கு உலகமே நின்ற உணர்வு. தன்னை மறந்து

“வட்…” என்று அலறியவன், பின் தன் நிலைமையை உணர்ந்து,

“சாரி…” என்றவனுக்கு அதற்கு மேல் எதையும் கேட்கும் தைரியம் இருக்கவில்லை.

விதற்பரை அங்கில்லை என்றதைக் கேட்டதும், உள்ளே மிகப் பெரும் பிரளயம். இதயம் நின்றுவிடுவேன் என்பது போலப் பலமாகத் துடிக்க, இடதுமார்பை அழுத்தி அதனுடைய துடிப்பை சமப்படுத்த முயன்றான். ஏனோ விழிகள் வேறு கலங்க முயன்றன.

அவள் டொரன்டோ போனதை இட்டு ஒரு பக்கம் நிம்மதி எழுந்தாலும், மறு பக்கம் தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டாளே என்கிற வலியும் எழுந்தது.

அதை மறைக்க முயன்ற தோற்றவனாய், வாடிய முகத்துடன் வண்டியில் ஏற முயல,

“அன்று இவளுக்காத்தான் என்னோடு வர மறுத்தாயா?” என்றாள் அந்தப் பெண் கனிவாய். ஒரு கணம் குழம்பியவனுக்கு மறுத்தது கூட நினைவில் இல்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்க,

“நீ அவளைக் காதலிக்கிறாய் இல்லையா…?” என்று பெரிய குண்டொன்றை அவனுடைய தலையில் போட்டாள் ஜெனிலியா. இவனோ அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,

“வட்… ஓ… நோ… நோ… ஐ கான்ட் லவ் எனிபடி…” என்று தலையை ஆட்டிவிட்டு, அவசரமாக வண்டியில் ஏறியவன், எதிலிருந்தோ தப்பிப் பிழைப்பது போலத் தன் வண்டியை மிக வேகமாக ஓட்டிச் சென்றான்.

ஏனோ ஜெனிலியா கூறியவது அவன் புத்தியில் நின்று குடைய தொடங்கியது.

“நீ அவளைக் காதலிக்கிறாய்… நீ அவளைக் காதலிக்கிறாய், நீ அவளைக் காதலிக்கிறாய்… இதுவே திரும்பத் திரும்ப அவன் புத்தியில் நின்று நர்த்தனமாட அதிர்ந்து போனான் அவ்வியக்தன்.

அவள் சொல்வது போல விதற்பரையைக் காதலிக்கிறானா என்ன? நோ நோ… இல்லை… நிச்சயமாக இல்லை… அவனுக்குத் தேவை அவளுடைய உடல் மட்டுமே தவிர, அவளுடைய காதல் இல்லை. என்னால் யாரையும் காதலிக்க முடியாது… நிச்சயம் முடியாது… இங்கே இருப்பதால்தான் அவளுடைய நினைவுகள் என்னை வதைக்கின்றன. இங்கிருந்து சென்றுவிட்டால்… இரண்டு கிழமைகள் அவளைப் பார்க்கவேண்டும் என்று புத்தி நின்று தவிக்கும். அதற்குப் பிறகு பழையது போல ஆகிவிடுவேன்… நிச்சயமாகப் பழையது போல மாறிவிடுவேன்… முடிவு செய்தவன், முதல் வேலையாக இரண்டு நாள் கழித்து அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

(3)

 

இதோ ஒட்டாவாவை விட்டு ஊருக்கு வந்து இரு மாதங்களாயிற்று. இத்தனை நாட்களில் அவள் மகிழ்ந்திருந்த தருணங்களை விட, உள்ளுக்குள்ளே உருகி நலிந்ததுதான் அதிகம்.

என்னவோ நகுலன் என்ற ஒருவனின் பிரச்சனையால்தான் டொரன்டோ வந்ததாக விதற்பரை கூறினாலும், புஷ்பாவின் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே வந்தது. ஒரு இளம் பெண், போதைப் பொருளைக் குடி என்று ஒருவன் வற்புறுத்தியதற்காக இப்படிச் சோர்ந்திருப்பாளா என்ன? அதை நம்பும் அளவுக்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லையே.

அந்த நேரம் பார்த்து விதற்பரையைப் பெண் கேட்டு புஷ்பாவழி உறவினர் ஒருவர் வர, ஆஹா ஓஹோ என்று வசதியில்லா விட்டாலும், பையன் கை நிறையச் சம்பாதித்ததால் புஷ்பாவிற்கும் தயாளனுக்கும் அந்த வரன் வந்ததில் பெரும் மகிழ்ச்சிதான். தவிர, திருமணத்திற்குப் பிறகும் அவள் படிக்கலாம் என்று அவர்கள் கூறியபின் அந்தச் சம்பந்தத்தை மறுக்க எந்தக் காரணமும் இல்லையே. உடனே புஷ்பா இந்த வரன் பற்றி விதற்பரையிடம் கூறி, அவளுக்குள் பெரும் சூறாவளியை ஏற்படுத்திவிட்டார்.

அவ்வியக்தனின் கொள்கைக்கும், எண்ணத்திற்கும் நிச்சயமாக இவள் ஒத்து வர மாட்டாள்தான். இருவருடைய வாழ்க்கையும் வேறு வேறு. அப்படியிருக்கையில் சேர்ந்திருப்பது என்பது சாத்தியமல்ல தான். ஒரு போதும் ஒட்டாத உறவுதான் அது. ஆனாலும் அத்தனை சுலபத்தில் அவனை மறந்துவிட்டு இன்னொருத்தனுக்குக் கழுத்தை நீட்டிவிட அவளால் முடியுமா என்ன? அதுவும் அந்த எல்லை வரை சென்ற பின் இன்னொரு அன்னிய ஆடவனின் கரங்கள் அவள் மீது படுவதா? நினைக்கும் போதே அருவெறுத்தது அவளுக்கு.

ஒரு வேளை காலத்தின் மாற்றத்தில் மாறலாம். அந்தக் காலம் நிச்சயமாக இப்போதல்ல என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகப் புரிந்துபோனது விதற்பரைக்கு. நிச்சயமாக அவளால் ஒருவனை இப்போதைக்குக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

ஆனால் இந்தத் திருமணம் வேண்டாம் என்று எப்படிச் சொல்வது?. ஏன் வேண்டாம் என்கிற கேள்விதான் அடுத்து வரும். நான் படித்து முடித்த பின் திருமணம் முடிக்கிறேன் என்றால் அதற்கும் வழியில்லை. திருமணம் முடித்துவிட்டுப் படிப்பதிலும் தடையில்லையே. இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் அதற்கான காரணமும் சொல்லவேண்டும். தவித்துக் கலங்கியவளாக, எப்படியோ யோசிக்க அவகாசம் கேட்டு அந்த நேரத்தில் தப்பித்துக் கொண்டாலும், அதிக நாட்களுக்குப் புஷ்பா சும்மா இருக்கமாட்டார் என்று விதற்பரைக்கு நன்கு புரிந்தது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து அவளைக் கடவுளாக வந்து காப்பாற்றினாள் சமர்த்தி.

ஆம் ஏழு மாத பிரிவில், தன் மனைவி கற்பம் என்பதை அறிந்து கொந்தளித்த உத்தியுக்தன் அவளை டொரன்டோவிற்கே இழுத்து வந்துவிட்டிருந்தான்.

இப்படித் தன் மனைவி எதுவும் அறிவிக்காமல் தன் குழந்தையைச் சுமப்பது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியென்றால், இவர்களுக்கோ அதை ஜீரணிக்க முடியாத வலியைக் கொடுத்தது. அதுவும் பெற்ற குழந்தைக்கும் மேலாகப் பாராட்டி வளர்த்த மகள், இப்படி அன்னியள் போல, யாரோ போல நடந்து கொண்டதை இட்டு குடும்பமே ஆடிப்போனது. அதிகம் நொடிந்து போனது புஷ்பாதான்.

எத்தனை கோபம், ஆதங்கம், அழுகை, வலி… இந்தச் சிக்கலில் புஷ்பாவும் தயாளனும் விதற்பரையையும், அவள் பிரச்சனையையும் சுத்தமாக மறந்து போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவளும் தற்காலிகமாகத் தன் பிரச்சனை தீர்ந்த நிம்மதியில் பெருமூச்சொன்றை எடுத்து விட்டு அசுவாசப் படுத்தினாள்.

அதன் பிறகு, சமர்த்திக்கு வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தபோது விதற்பரைக்கும் தற்காலிகமாகத் தன் வலியை மறந்தாள். சும்மா எதையோ எண்ணித் துடிக்கும் மனதுக்கு அந்த விழா ஒரு வகையில் பெரும் வரப்பிரசாதமாகவே இருக்க முழு மனதுடன் அந்த விழாவில் ஈடுபட்டாள்.

ஆனாலும் உத்தியுக்தனைப் பார்க்கும்போதெல்லாம் இவள் இதயத்தின் துடிப்பு எகிறுவதை மட்டும் தடுக்க முடியவில்லை. அவ்வியக்தனை மறக்க முயன்றாலும், உத்தியுக்தனின் உருவம் அதற்கு வழிவிடும்போல இல்லையே. அவனைப் பார்க்கப் பார்க்க அவ்வியக்தன்தானே மனதில் வந்து தொலைக்கிறான். நல்ல வேளை இவனுக்கு நீண்ட முடியில்லை. இல்லையென்றால், நிச்சயமாக இருக்கும் மனக் குழப்பத்தில் உத்தியுக்தனின் மார்பில் விழுந்து கதறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மறு நாள் சமர்த்திக்கு வளைகாப்பு என்கிற நிலையில், அன்று மாலையே உத்தியுக்தன் வீட்டிற்கு அனைவரும் படையெடுக்க அத்தனை பேரும் அந்த வீட்டை இரண்டு படுத்திவிட்டார்கள். கிட்டத்தட்ட அந்த வீட்டை ஒரு கோவிலாகவே மாற்றியிருந்தார் புஷ்பா. சமர்த்தியின் வளைகாப்பு என்பதால், வந்திருந்த உத்தியுக்தனின் தாய் ரதிக்கு, அந்தச் சத்தங்களும் ஓசைகளும் ஒரு வித ஒவ்வாமையே கொடுத்திருந்தன.

மேற்கத்திய நவநாகரீக விழாக்களுக்குப் பழக்கப்பட்டவருக்கு, பலத்த ஓசையோடு முழங்கிய பாடல்களைக் கேட்கக் காதுகள் அடைத்துக்கொண்டுதான் வந்தன. ஆனாலும் அவரால் எதுவும் பேச முடியாத நிலை. இது அவருடைய வீடு அல்லவே. அவருடைய மகனின் வீடு. அங்கே தன் ஆதிக்கத்தைச் செலுத்த முடியாதே. இந்த விழாவிற்குக் கூட மகன் அழைத்திருக்க மாட்டான் என்பது சர்வ நிச்சயமே. சொந்த மகன் வீட்டிலேயே அந்நியப்பட்டிருக்கும் போது, எப்படி வாய் திறந்து தன் கருத்தைச் சொல்வார்?

அதனால் எப்போதும் போல இவர்களோடு பட்டும் படாமலும் இருந்து கொள்ள, இவரோடு மினக்கட அங்கே யாருக்கும் அவகாசம் கிடைக்கவில்லை.

வசந்தன், ரகுநந்தன், பிரபஞ்சம் ரஞ்சனி அந்த வீட்டை அலங்கரிப்பதில் ஈடுபடப் புஷ்பா எப்போதும் போலத் தயாளனை வேலைக்கு ஏவியவாறு சமையலறையில் பலகாரம் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் விதற்பரையிடம் தேங்காய்க்கு மஞ்சள் பூசுமாறு ஏவ, இவளும் தாய் சொன்ன கட்டளையை நிறைவேற்றும் முகமாக ஒரு தட்டில் மஞ்சளை எடுத்து அதில் தண்ணீரைக் கலந்துகொண்டு முன்னறைக்கு வந்தாள்.

அந்த நேரம் பார்த்து, வீட்டு வாசல் மணி அடித்தது. புஷ்பா கேட்டுக் கொண்டதற்கு இணங்கப் பூக்களை உதிரிகளாகப் பிரித்துக்கொண்டிருந்த ரதி, தன் வேலையை நிறுத்திவிட்டு எழ முயல, அப்போதுதான் மஞ்சள்தட்டோடு வந்துகொண்டிருந்த விதற்பரை, மரியாதை கருதி அவரைத் தடுத்துவிட்டு,

“நான் போய்த் திறக்கிறேன் அத்தை… நீங்கள் அமருங்கள்…” என்றுவிட்டு ஒரு கரத்தில் மஞ்சள் தட்டை ஏந்தியவாறு, கதவை நோக்கிச் சென்றாள். வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்கவேண்டும் என்கிற நாகரீக அறிவு கற்பித்த பாடத்தைப் பின்பற்றியவளாகப், புன்னகையைச் சிந்தியவாறு, கதவைத் திறந்தவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும், அதிர்ச்சியில் மலைத்துப் போய் நின்றாள். உதடுகளில் தேங்கியிருந்த புன்னகை அப்படியே உறைந்து போக முகமோ வெளிறிப் போனது.

கூடவே தன்னை மறந்த நிலையில், கரத்திலிருந்த மஞ்சள் தட்டைக் கைவிட, வாசலருகே நின்றிருந்தவனோ, விழத் தொடங்கிய தட்டை லாவகமாகத் தன் கரத்தில் ஏந்தி, முகம் முழுவதும் மலர,

“ஹாய்… ஏஞ்சல்… எப்படியிருக்கிறாய்” என்றான் அவ்வியக்தன்.

அவனுடைய விழிகளோ இம்மியும் அவளிடமிருந்து விலகுவதாக இல்லை. இரண்டு மாதங்கள் அவளைப் பார்க்காது தவித்த தாகத்திற்குக் கிடைத்த அமிர்தமாக அவளுடைய முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, விதற்பரையோ நடுங்கிய கால்களைச் சமப்படுத்தும் சக்தியில்லாமல் அவனை வெறித்தான்.

முன்பு குவித்துக் கட்டிய கொண்டையைக் காணவில்லை. பதிலுக்கு அழகாய் கன்ன உச்சி எடுத்து முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. நீண்ட அடர்ந்த தாடி இப்போதில்லை. மாறாக அழகாகக் கச்சிதமாய்ப் பொருத்தமாக நறுக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர அதே புன்னகை, அதே காந்தப் பார்வை… அதுவும் அந்தப் பார்வை எவ்விதக் கிலேசமும் இன்றித் தன் முன்னால் நின்றிருந்தவளின் உடல் எழிலை ரசனையுடன் வருடிச் செல்ல, அவளையும் மீறி தேகம் சிலிர்த்தெழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை என்பதுதான் வேதனையே.

வெறும் பார்வையே அவளுக்குள் பல மாற்றங்களைச் செய்து தொலைக்கிறதே. பக்கத்திலிருந்தாலே மனம் தறிகெட்டு ஓடுகிறது… இதில் எப்படி அவனை மறப்பது. நடக்கும் காரியமா அது.

அவனை வெறித்த விதற்பரைக்கு நெஞ்சைப் பிளந்து கொண்டு வலி பிறந்தது.

சத்தியமாக அவ்வியக்தன் இந்த விழாவிற்கு வருவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவளுடன் தொடர்பு கொள்ள முடியாது என்று தெரிந்ததும் தன் தொழிலைப் பார்க்க அவுஸ்திரேலியாவிற்குச் சென்றிருப்பான் என்றுதான் நினைத்தாள்.

சென்றவன் இவளை மறந்து பழைய வாழ்க்கைக்குள் நுழைந்திருப்பான், இனி இவளை நினைக்கமாட்டான் என்றுதான் உறுதியாக நினைத்தாள். ஆனால் இப்படி அண்ணனின் வளைகாப்பிற்கு வந்து நிம்மதியை மொத்தமாய்க் கெடுப்பான் என்று கனவா கண்டாள். இவன் வருவான் என்று தெரிந்திருந்தால், சத்தியமாக ஏதாவது சாக்கிட்டு எங்காவது ஓடியிருப்பாளே… அவனால் ஏற்பட்ட வலியைத் தாங்கும் சக்தியில்லாமல் அவசரமாகக் கண்கள் கண்ணீரைக் கோர்த்துக் கொண்டன.

அன்று எத்தகைய கொடிய வார்த்தைகளைக் கூறிவிட்டுச் சென்றான். இப்போது எதுவும் நடக்காதது போல, அவளைப் பார்த்துச் சிரிக்கிறானே. கூடவே அவளை ரசனையாக வேறு பார்க்கிறான். அந்தப் பார்வை வேறு இவளுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்திக் குன்ற வைக்கிறதே. அது அவளுடைய பலவீனத்தை அல்லவா எடுத்துக் காட்டுகிறது… கடவுளே… இவனைக் கண்ட பின் இன்னும் மனம் அலைபாயுமே…? அதிலிருந்து எப்படித் தப்பிக்கப் போகிறாள்?

சிரமப்பட்டுத் தன்னை நிலை நிறுத்த முயன்றவளுக்கு இப்போது, தன் இயலாமையில் எழுந்த ஆத்திரம் வர, அந்த ஆத்திரத்தை அவன் மீது காட்டும் பொருட்டு அவனை முறைத்தாள்.

எதுவுமே நடக்காதது போலச் சிரிக்கும் அந்த உதடுகளில் ஓங்கிக் குத்தவேண்டும் என்கிற எரிச்சல் கூட எழுந்தது. அவளை மயங்க வைக்கும் அந்த விழிகளை நோண்டிக் குப்பைத் தொட்டியில் எறியவேண்டும் என்று ஆவேசம் வந்தது. ஆனாலும் அவனை வலிக்கச் செய்யும் சக்தி அவளுக்கு இல்லையே. இந்தப் பாழாய்ப் போன காதல் ஏன்தான் வந்து தொலைக்கிறதோ. தவறுக்குக் கூட நியாயம் கற்பிக்கப் பார்த்துக் கழுத்தை அறுக்கிறது.

சிரமப்பட்டு அடக்கியவளாக, அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, அவன் கரத்திலிருந்த மஞ்சள் தட்டைப் பறித்தவாறு, சமையலறை நோக்கி ஓட, அவனோ, ஓடும் அவள் பின்னழகைக் கண்டு ரசித்தவாறே உள்ளே வந்தான்.

தன் இளைய மகனும் விழாவிற்கு வந்திருக்கிறான் என்பதைக் கண்டு, மலர்ந்து போனார் ரதி.

தன் வேலையை அப்படியே விட்டுவிட்டு, அவனை நோக்கி வந்தவராக,

“அவ்வி… நீயும் வந்துவிட்டாயா?… மிக்க மகிழ்ச்சி” என்று சற்று நாகரிகம் இளையோட, அவனை அணைப்பதற்காக, நெருங்கினார்.

அவனோ ஒரு வித வலி நிறைந்த புன்னகையைத் தாயை நோக்கி வீசிவிட்டு,

“ஹாய் மாம்… ஹவ் ஆர் யு? ஹவ் இஸ் யுவர் டே…” என்றவன், யாருடைய கவனத்தையும் உறுத்தாதவாறு தாய் அணைத்துவிடாதிருக்க, நாகரிகமாகத் தள்ளி நின்று கொண்டான்.

தன் அணைப்புப் பிடிக்காமல் மகன் விலகியதும் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் வலியையும் மென்று விழுங்கிய ரதி, அப்படியே அடுத்த அடியை எடுத்து வைக்காது அங்கேயே நின்றார். ஆனாலும் சமாளித்தவாறு,

“குட்… நீ… நீ எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டபோது ஏனோ அவருடைய குரல் தளதளததிருந்தது.

இந்தப் பராமுகத்திற்கும், வெறுப்புக்கும் மூல காரணம் அவர் அல்லவா? அவர் மட்டும் அன்னையாக இருந்திருந்திருந்தால், பெற்ற குழந்தைகளிடமிருந்து இப்படி அந்நியப்பட்டிருக்க மாட்டாரே. இனி எத்தனை தவமிருந்தாலும் எத்தனை வேண்டினாலும் முடிந்து போன காலத்தை மீட்டெடுக்கவும் முடியாது, அவர் மகன்கள் பெற்ற வலியை, மறக்கடிக்க வைக்கவும் முடியாது.. நெஞ்சம் தவிக்க,

“கண்ணா… நீ…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மாடிப்படிகளில் அசைவு தெரியத் தன் தாயை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தான் அவ்வியக்தன்.

அங்கே தன் உயரத்திற்கு ஏற்ப நிமிர்ந்தவாறு, கம்பீரமாகக் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான் உத்தியுக்தன். அதைக் கண்டதும் முகம் பளிச்சென்று மலர, அன்னையை மறந்து அண்ணனிடம் விரைந்தான்.

“ஹாய்… ப்ரோ… ஹவ் ஆர் யு” என்றவாறு அவனை இறுக அணைக்க, அவனும் தன்னோடு பிறந்த தம்பியை அணைத்து விடுவித்து,

“குட் அவ்வி… நீ எப்படி இருக்கிறாய்?” என்றான் பதிலுக்கு.

“ஹெல்த்தி அஸ் எ ஹோர்ஸ் ப்ரோ?” என்றதும், தன் தம்பியின் முதுகில் தட்டி,

“என்ன… கனடாவில் அதிக நாட்கள் நிற்பதாகக் கேள்விப்பட்டேனே… நான் அறியும் வகையில் ஏதாவது செய்தி” என்று கேட்ட உத்தியுக்தனின் முகத்தில் தெரிந்த ஒரு வித எதிர்பார்ப்பைக் கண்டு மெல்லியதாய் நகைத்த அவ்வியக்தன்,

“நீ நினைப்பது போல எதுவும் இல்லை ப்ரோ… என் தொழிலை இங்கே மாற்ற யோசித்திருக்கிறேன்… சில வேலைகளுக்கு இங்கேதான் வசதி…” கூறிக்கொண்டிருக்கும்போதே, சமையலறையில் அன்னை கட்டளைக்கு இணங்கி, அனைவருக்கும் தேநீர் வார்க்கத் தொடங்கினாள் விதற்பரை.

அதுவும் ஒரு குவளையில் மட்டும் அதிகச் சாயமும், இனிப்பும் கலக்காது தனியாக எடுத்து வைக்க, அதைக் கண்டு வியந்த, புஷ்பா,

“அது யாருக்கு விது… அதிகச் சாயத்தோடு கொண்டு போகிறாயே… கசக்குமே…” என்றார். இவளோ, எல்லாவற்றையும் தட்டில் சரியாக எடுத்து வைத்தவாறு,

“அது குட்டிமாமாவுக்கு… அவருடைய தேநீருக்கு அதிகச் சாயம் வேண்டும்…” என்று தன் போக்கில் சொல்லிவிட்டுத் தட்டைக் கரங்களில் எடுக்க, புருவங்களைச் சுருக்கிய புஷ்பா,

“குட்டிமாமாவா? அது யார்?” என்றார் வியப்பாக. விதற்பரையோ,

“வேறு யார், மாமாவுடைய தம்பிதான்…” என்றவள் முன்னறைக்குப் போக, புஷ்பாவோ அதிர்வுடனும், குழப்பத்துடன் தன் மகளின் முதுகையே வெறித்தார்.

“ஐயோ… இவன் எதற்கு இங்கே வந்து தொலைத்தான்…? இவனிருந்தால் பெண்கள் எப்படி நிம்மதியாக இங்கே இருப்பது…?” என்று கலங்கியவருக்கு இன்னொன்றும் உறுத்தியது.

உத்தியுக்தனின் தம்பியை குட்டிமாமா என்று எப்போது இவள் அழைக்கத் தொடங்கினாள்? தவிர அவனுக்கு இப்படித்தான் தேநீர் பிடிக்கும் என்று இவளுக்கு எப்படித் தெரியும்? குழம்பியவர், அடுத்தக் கணம் அவனுடைய பார்வையில் இவள் படாமல் தடுக்கவேண்டும்…’ என்கிற எண்ணமும் வந்தது.

தேநீரோடு வெளியே சென்ற தன் மகளை அவர் தடுக்கப் போவதற்குள், முன்னறைக்குச் சென்றுவிட்டிருந்தாள் விதற்பரை.

நல்லவேளை அந்தத் தெருப் பொறுக்கி, உத்தியுக்தனோடு இருந்ததால் புஷ்பா நிம்மதி மூச்சொன்றை விட்டவாறு, மீண்டும் சமையல் வேலையில் இறங்கினார்.

விதற்பரையோ அங்கிருந்தவர்களுக்குத் தேநீரை நீட்டிவிட்டு, உத்தியுக்தனும், அவ்வியக்தனும் தனித்திருந்த இடத்தை நோக்கி வந்தாள். அவர்களை நெருங்கும் போதே, இவளுடைய கால்கள் நடுங்கத் தொடங்கின.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்தது இவளைப் பெரிதும் தடுமாறச் செய்தது.

எப்படி அவனை ஏறிட்டுப் பார்ப்பது என்கிற தவிப்போடு அவர்களை நெருங்கினாள் விதற்பரை.

உத்தியுக்தனிடம் ஒன்றை நீட்டிவிட்டு, இவளையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தவனின் முகம் பார்க்காமலே தட்டை நீட்ட, தேநீர் எடுப்பதற்காகக் கரத்தை நீட்டியவனின் விழிகள் தலை கவிழ்ந்திருந்த விதற்பரையை விட்டு அங்கும் இங்கும் விலகுவதாயில்லை.

அவனுடைய கூர் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்தவளுக்கு ஏனோ வியர்த்துக் கொட்டியது. சொல்ல முடியாத ஒரு வித அவஸ்தையோடு, அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் நிமிர்ந்ததும், ஒற்றைக் கண் அடித்தவன், தட்டிலிருந்த தேநீரை எடுக்க, இவளோ பதட்டத்துடன் திரும்பி உத்தியுக்தனைப் பார்த்தாள். நல்ல வேளை அவனுடைய கவனம், தேநீரிலிருந்தது. நிமிர்ந்து அவ்வியக்தனை எரிப்பதுபோலப் பார்த்துவிட்டு சமையலறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

உடலோ வெடவெடத்தது. ‘கடவுளே… இவன் ஏன் இங்கே வந்தான்… இவனைக் கண்டாலே உள்ளம் தடுமாறித் தொலைக்கிறதே. ஒட்டாவாவில் நடந்த நிகழ்வுகள் மனதில் தோன்றி இம்சை பெறச் செய்கிறதே… இது என்ன கொடுமை….” மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க, நல்ல வேளையாகப் புஷ்பா இவளை அதிகம் யோசிக்க விடவில்லை.

சுவரின் ஓரமாக நின்று கீழ் உதட்டைப் பற்களால் கடித்தவாறு நின்றிருந்தவளைக் கண்டு, கோபம் கொண்டவராக,

“அங்கே என்ன பராக்குப் பார்க்கிறாய்? நேரம் போகிறது… அந்த முறுக்குத் தட்டை எடு…” என்று கடிய, திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அப்போதைக்குத் தன் நினைவுகளைக் களைந்து எறிந்துவிட்டு, அன்னைக்கு உதவத் தொடங்கினாள் விதற்பரை.

What’s your Reaction?
+1
14
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

2 weeks ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

2 weeks ago