Categories: Ongoing Novel

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)

 

விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும், அவன் மீதிருக்கும் பைத்தியத்தில், எங்கே அவன் விருப்பத்திற்கு இணங்கிவிடுவோமோ என்று அஞ்சியதாலும், யாரிடமும் சொல்லாமல் வந்து சேர்ந்துவிட்டாள் விதற்பரை. வந்த பின் அவள் செய்த முதல் காரியம், கைபேசியின் இலக்கத்தை மாற்றியதுதான்.

இல்லை என்றால் அழைத்தும் தொல்லை செய்வான், குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை செய்வான். என்னதான் அவனோடு தொடர்பாடல் இல்லாமல் ஒதுங்கிப் போனாலும், அவனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் உயிர் வலியைக் கொடுக்கவே செய்தது.

இன்னொரு பக்கம், தாய் தந்தையையும் சகோதரர்களையம் பார்க்கும் போது பெரும் குற்ற உணர்ச்சி எழுந்தது. அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் திணறினாள் விதற்பரை. யாருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாளோ, அதைப் பாழாக்கி வந்தது மட்டுமல்லாது, தாய் தந்தையரின் அளவற்ற நம்பிக்கையையும் அல்லவா பொய்யாக்கிவிட்டாள்.

அதே நேரம், வீடு வந்த மகளின் வாடிய முகமும், எதையோ பறிகொடுத்தது போல அவள் நடந்த விதமும், விழிகளை எட்டாத சிரிப்பும் ஏதோ சரியில்லை என்று புஷ்பாவுக்குப் புரிய வைக்க, தன் மகளிடம் கேட்க முயன்றார்.

ஆனால் விதற்பரையோ ஏதோ கூறிச் சமாளித்தாலும், அந்தச் சமாளிப்பு புஷ்பாவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை.

தாய் அறியாத சூலா? அதுவும், வந்த மகள் ஒரு கிழமை கடந்த பின்னும் பல்கலைக்கழகம் புறப்படும் எண்ணம் இல்லாமல், இருக்கக் காரணம் என்ன என்று தெரியாமல் கையைப் பிசைந்தார். தயாளன்தான் அவரைச் சமாதானப் படுத்தினார்.

“ப்ச்… அவள் என்ன குழந்தையா? எதுவாக இருந்தாலும் அவளே சமாளிப்பாள் விடுமா..”

“அது சரி தயா…! ஆனால், என்ன என்று சொல்கிறாள் இல்லையே? தெரிந்தாலாவது நாம் ஏதாவது செய்யலாம்… எப்போது கேட்டாலும் ஒன்றுமில்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்கிறாள்….” என்றார் வருத்தமான குரலில்.

“பார்க்கலாம்… அவளாகச் சொல்லவேண்டும் என்று தோன்றினால் சொல்ல மாட்டாளா? நம் குழந்தையை நமக்குத் தெரியாதா? சற்று நாட்கள் பேசாமல் விடு… அவளே தன்னைத் தேற்றிக்கொண்டு நடந்ததை நம்மிடம் சொல்வாள்… வீணாக நீயும் தோண்டித் துருவி அவளுடைய சிக்கலை பெருப்பிக்காதே…” என்று கண்டிப்பாகக் கூற, சற்று நாட்கள் பொறுத்திருந்த புஷ்பாவால் அதற்கு மேல் முடிந்திருக்கிவில்லை.

நிச்சயமாக ஏதோ சிக்கலில் மாட்டியிருப்பாள் என்றுதான் நினைத்தாரே தவிர, தன் மகள் காதலில் விழுந்து, அதுவும் எல்லை கடக்கும அளவுக்குச் சென்று வந்திருக்கிறாள் என்று கொஞ்சம் கூடச் சந்தேகிக்கவில்லை.

கொஞ்ச நாள் விட்டுப் பிடித்தவர், மேலும் நாட்கள் கடந்தும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லாததைக் கண்டு பேசிவிடுவது என்று முடிவெடுத்தவராக, மகளுக்குத் தேநீர் வார்த்துக்கொண்டு சென்றார்.

அவளிடம் நீட்டியவாறு, அவளுக்கப் பக்கத்தில் அமர்ந்தவாறு மகளை உற்றுப் பார்த்தார்.

விதற்பரைக்கு இதயம் படபடத்தது. தன் அன்னையைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் தேநீரில் கவனம் செலுத்த,

“சரி… இப்போது சொல்லு… உனக்கு இப்போது என்ன பிரச்சனை…” என்று கேட்டார் அழுத்தமாக.

பட்டென்று முகம் வெளுறியது விதற்பரைக்கு. அவளையும் மீறி கரங்கள் நடுங்கின. ஆனாலும் சமாளித்தவளாக,

“எ… என்ன பிரச்சனை…? அப்படி எல்லாம் எதுவும் இல்லைமா…! நான் நன்றாகத்தான் இருக்கிறேன்…!” முடிந்த வரை குரலை நிதானமாக்கிக் கூற, உடனே தன் மகளின் நாடியைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினார் முஷ்பா.

குறுகுறு என்று தன் மகளின் முகத்தைப் பார்த்தார்.

“உன்னுடைய முகத்தை வைத்தே என்னால் கண்டுபிடிக்க முடியும் விதற்பரை. என் மகளைப் பற்றி எனக்குத் தெரியாதா? இங்கே வந்து ஒரு கிழமைக்கும் மேலாகிவிட்டது. இன்னுமா பல்கலைக் கழகம் போகும் எண்ணமில்லாமல் எதையோ பறிகொடுத்தது போல இருக்கிறாய்…! சொல்லு என்ன பிரச்சனை…?” எதுவாக இருந்தாலும் சொல்லுடா… தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இருக்காது… உனக்காக நானும் அப்பாவும் இருக்கிறோம்… சொல்லுமா…! என் தங்கக் கட்டிக்கு என்ன பிரச்சனை?”

அன்னை கேட்டதும் முணுக் என்று கண்களில் கண்ணீர் பொங்கியது. அவசரமாகத் தாயிடமிருந்து விலகியவளுக்கு எதை எப்படிக் கூறுவது என்று சுத்தமாகத் தெரியவில்லை.

அவளை அடித்திருந்தால் கூட நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. குறைந்தது திட்டியாவது இருக்கலாம்.

அதே நேரம் தயாளனும் கையில் தேநீர் குவுளையோடு தன் மனைவியை உரசியவாறு அமர்ந்தார்.

புஷ்பாவோ அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தன் மகளிடம் கவனத்தைத்திருப்ப, இவளோ என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்று தெரியாத குழப்பத்துடன் விழிகளை விட்டு வெளியே வர முயன்ற கண்ணீரை உள் இழுக்கக் கடும் சிரமப்பட்டு நின்றாள்.

தயங்கி நின்றாள். எப்படியும் அவர்களுக்குச் சொல்லத்தானே வேண்டும். குறைந்தது அந்தப் பல்கலைக் கழகத்துக்குப் போகப்போவதில்லை என்பதையாவது தெரிவிக்க வேண்டுமே. உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“இனி அங்கே போகப்போவதில்லை அம்மா…” என்றாள் அத்தனை தைரியத்தையும் சேர்த்து.

அதைக் கேட்டதும், இருவருமே அதிர்ந்துபோய் நின்றனர்.

“என்னடி சொல்கிறாய்…?” என்று புஷ்பா ஆத்திரத்தோடு குரலை உயர்த்தியவர்,

“உனக்கென்ன பைத்தியமா? கல்வி என்பது என்ன விளையாட்டுப் பொருளா, பிடிக்கவில்லை என்றதும் தூக்கி எறிந்து விட. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எத்தனை ஆயிரம் டாலர்களைக் செலவழித்தாயிற்று. இத்தனை செலவு செய்தது விழலுக்கு இறைத்த நீராகப் பயனற்றுப் போகவேண்டுமா? எத்தனை சுலபமாக இனி போகமாட்டேன் என்றுவிட்டாய்…?” என்று ஆத்திரத்துடன் தன் மகளை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.

ஒரு வகையில் அந்தத் திட்டுக்கூட அவளுக்கு இதமாகத்தான் இருந்தது.

செய்த தவறுக்குக் கிடைத்த தண்டனையாக அதை ஏற்றுக்கொண்டவள் தலையைக் குனிந்து கொண்டாலும், கண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தான் செய்தது. மகளின் கண்ணீரைக் கண்டதும் துடித்துப்போனார் தயாளன்.

“சரி விடு புஷ்…! ஏதோ பிடிக்காமல்தானே வந்திருக்கிறாள்…! காரணம் இல்லாம் இப்படிச் செய்யமாட்டாள்…” என்று சமாதானப் படுத்த தன் கணவரை எரிப்பது போலப் பார்த்த புஷ்பா,

“வேண்டாம்…! என் வாயைக் கிளறாதீர்கள்…! இப்படி நினைத்த நேரத்திற்குப் படிப்பு வேண்டாம் என்று சொல்லும் அளவு தைரியம் எங்கிருந்து வந்தது. படிப்பு என்கிறது அவ்வளவு சுலபமாகிப் போயிற்றா… அதுதானே அவளுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது” என்று கணவரையும் திட்டத் தொடங்க, அவர்தான் பதில் கூற முடியாது திருத் திரு என்று விழிக்க வேண்டியதாயிற்கு. புஷ்பாவோ, எரிச்சலுடன் தன் மகளைப் பார்த்து,

“என்ன… தற்காலிகமாகத்தான் படிப்பை நிறித்திவிட்டு வந்திருக்கிறாயா, இல்லை படிப்புக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டுவிட்டாயா?” என்றார் அடங்காத கோபத்தோடு.

அவருக்கு நினைக்க நினைக்கத் தாளவில்லை. எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டாள் இனி போகப் போவதில்லை என்று. எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை காத்திருப்புகள்… ஒரு நொடியில் உதறிவிட்டு வருவதென்றால்…

விதற்பரையோ தயக்கத்துடன் அன்னையைப் பார்த்து,

“அங்கே சிரமமாக இருக்கிறதும்மா… தனியாக முடியவில்லை… அதுதான் இங்கே பக்கத்தில் எங்காவது ஒரு பல்கலைக் கழகம் போகலாம் என்று…” அவள் திணற, அப்போதும் ஆத்திரத்துடன் மகளைப் பார்த்தவர்,

“இதை ஒன்றரை வருடங்களுக்கு முதலே செய்திருக்கலாமே. இத்தனை நாளும் நன்றாகப் போன பல்கலைக் கழகம், இப்போது மட்டும் கசந்து போகக் காரணம் என்ன?” என்றார் முக்கியப் புள்ளியை பிடித்தவராக. இப்போதும் தன் மகளுக்கு ஆதரவாக முன் வந்த தயாளன், எப்படியோ மனைவியைச் சமாளித்து,

“சரி… விடு புஷ்… சும்மா அதிலேயே பிடித்துத் தொங்காதே… அவள்தான் சிரமமாக இருக்கிறது என்கிறாளே… பிறகும் எதற்கு வதைக்கிறாய்.. அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்… இங்கே பல்கலைக் கழகத்தில் இடம் சுலபமாகவே கிடைத்துவிடும்…” என்று சமாதானப் படுத்தினாலும், புஷ்பா ஆறவில்லை. அவர்கள் என்ன பணத்தின் மீதா விழுந்து கிடக்கிறார்கள். கலங்கிப் போன புஷ்பா,,

“சரி… அங்கிருந்து இங்கே வந்துவிட்டாய்… எதற்காக வந்தாய் என்கிற காரணத்தையாவது சொல்லித் தொலையேன்…” என்றார் கடுகடுப்பாய். அதைக் கேட்டதும் இவளின் முகம்தான் வாடிப்போனது. மீண்டும் விழிகளில் கண்ணீரும் தோன்றத் தொடங்கியிருந்தது.

இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வாள், அவள் மட்டும் அவ்வியக்தனை விரும்பியது தெரிந்தால் புஷ்பா உருத்திரவத் தாண்டவம் ஆடிவிடுவார்களே. சமர்த்தி உத்தியுக்தனோடு வந்ததற்கே ஓங்கி அறைந்தவர். அப்படியிருக்கையில் அவள் மகள், பெண்பித்தன் என்று பெயர் எடுத்த ஒருவனைக் காதலித்தாள் என்று தெரிந்தால்… கொலையே செய்துவிடுவார். பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவளுக்குப் பளிச்சென்று நகுலன் கண் முன்னால் வந்து நின்றான்.

அவள் சொல்வது பொய்யில்லை… நடந்ததைத்தான் சற்று மாற்றிச் சொல்லப் போகிறாள். இதை விட்டால் அவளால் சமாளிக்க முடியாது.

“அது… அம்மா… அங்கே நகுலன் என்று ஒருத்தன்… என்னைக் காதலிப்பதாகச் சொன்னான்” என்றதும் புஷ்பாவின் விழிகள் விரிந்தன.

“என்னடி சொல்கிறாய்?”

“ஆமாம்மா… தவிர அவன் எனக்குப் போதைப் போருள் கொடுக்க முயன்றான் அதுதான்… இங்கே வந்துவிட்டேன்…” என்றதும் அதைக் கேட்ட புஷ்பா சற்று ஆடித்தான் போனார்.

“ஐயோ…! என்னடி சொல்கிறாய்… பல்கலைக் கழகத்தில் போதைப் பொருள் கொடுக்கிறார்களா… இதை அந்த நிர்வாகம் கொஞ்சம் கூடவா கவனிப்பதில்லை…” என்று அதிர்வுடன் கேட்க, இவளோ,

“அம்மா… இங்கே எல்லாரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் அவர்களின் தனி உரிமையில் யாரும் தலையிட மாட்டார்கள். தலையிடவும் கூடாது. அவர் அவரைப் பாதுகாப்பது அவர் அவர் பொறுப்பு… நகுலன் எதையும் செய்யக் கூடியவன்.. அதுதான் காலம் கடக்க முதல் இங்கே வந்துவிட்டுன்… இனி நான் என்ன செய்யட்டும்… அங்கே திரும்பப் போகவா, இல்லை இங்கேயே தங்கி வேறு பல்கலைக் கழகம் தேடவா…” என்று முடிந்த வரை குரலை திடமாக்கியவாறு கேட்க, அதற்குப் பிறகு அவளை அங்கே போ என்று சொல்ல புஷ்பாவுக்குப் பைத்தியமா என்ன?

“ஐயையோ! இது தெரியாமல் உன்னைத் திட்டிவிட்டேனா…? சாரிடி… சரி சரி நீ படிக்காமல் வீட்டில் இருப்பதாக இருந்தாலும் எனக்குச் சரிதான்… இனி அங்கே போகவேண்டாம்…” என்று மறுத்துவிட, தயாளனும் உடனே அதற்கு ஒத்தூதினார்.

ஆனால் புஷ்பா விலகிச் சென்றதும், தன் மகளின் அருகே வந்து அமர்ந்தவர், அவளுடைய தோள்களுக்கு மேல் தன் கரங்களைப் போட்டுத் தன்னோடு அணைத்தார்.

குனிந்து தன் மகளைப் பார்த்து அன்பாய் சிரித்தார். ஏனோ விதற்பரைக்கு அவர் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து சிரிக்க முடியாது போனது.

சங்கடத்துடன் தன் தலையைக் குனிய,

“கண்ணம்மா… அம்மாவுக்குச் சொன்ன பொய்யை நான் நம்புவேன் என்று நினைத்தாயா?” என்று கேட்கக் கலக்கத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள் விதற்பரை. பின் மீண்டும் தலை குனிந்து,

“போதைப் பொருள் எனக்குக் கொடுக்க முயன்றது உன்மைதான்பா…” என்றதும், தன் தலையை ஆட்டி,

“ம்… உன்மையாக இருக்கலாம்… இந்தப் போதைப் பொருள் பிரச்சனை எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் இருப்பதுதான். அதனால் அதுதான் நீ இங்கே வந்ததற்கான காரணம் என்று நம்புவதுதான் எனக்குச் சிரமமாக இருக்கிறது… அப்படி வருபவளாக இருந்தால், போன வருடமே நீ வந்திருக்கவேண்டும்” என்றவர் பின் அவளைத் தன்னோடு நெருக்கி விடுவித்துவிட்டு,

“எதுவாக இருந்தாலும், நீ ஒன்றும் சின்னப்பிள்ளையில்லை. உலகம் தெரிந்தவள்… உனக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை… தவிர, எப்போதும் சரியான பாதையில் போவாய் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது… இனி நீ குழந்தையில்லை கரத்தைப் பற்றி அழைத்துச் செல்வதற்கு. இது உன் வாழ்க்கை… உன் பாதை.. நீதான் பயணிக்கவேண்டும்… பார்த்து நடந்துகொள்…” என்று விட்டு விலகிச் சென்றவளின் கரத்தைச் சட்டென்று பற்றிக்கொண்டாள் விதற்பரை.

வியப்புடன் அவர் திரும்பிப் பார்க்க, யாசிப்பது போலத் தந்தையைப் பார்த்தவள்,

“அப்பா… நான் உங்கள் மகள்பா… அம்மாவின் வயிற்றில் பிறந்தவள்… தப்புச் செய்தாலும் திருத்திக்கொள்வேன்…” சொன்ன மகளைக் கருணையுடன் பார்த்தார் தயாளன்.

“தப்புச் செய்வதில் தவறில்லை கண்ணம்மா…! அதைத் திருத்தாமல் விடுவதுதான் தவறு…! இது போதும் எனக்கு. கவலைப்படாதே… இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு அனுபவமா எடுத்துக்கொள்.” என்று மகளின் தலையை வருடிவிட்டு அவர் விலகிக் கொள்ள, நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் சற்று அமைதி அடைந்தது.

ஆனாலும், மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக, அவ்வியக்தனைப் பார்க்கக் கூடாது என்று டொரன்டோ வந்தாயிற்று. ஆனால் அவன் நினைவுகள் அவளைப் பெரிதும் அலைக்கழித்துக்கொண்டே இருந்தன. அதுவும் அந்தப் பனிச் சறுக்கலும், அவனுடைய உதட்டு முத்தமும், அணைப்பும், தேக உரசலும், ஆற்றிலே மூழ்கிய அந்த அபாயக் கட்டமும், குளிரில் விறைத்திருந்தவனைப் பாதுகாப்பாக இழுத்துச் சென்ற காட்சியும், அவனுடைய கட்டுடலும் என்று அவளைப் பெரிதும் தவிப்புக்குள் உள்ளாக்கிக்கொண்டே இருக்க, அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் விழித்தாள் விதற்பரை.

எதிலும் ஒட்டாமல், சற்று விலகி நின்றவளை வசந்தனும் ரகுநந்தனும் புதிதாகப் பார்த்தார்கள். வசந்தன் வாய்விட்டுக் கூடக் கேட்டுவிட்டான்.

“ஏய் எதற்கு எல்லாவற்றையும் பறிகொடுத்தவள் போல இருக்கிறாய்? ஏதாவது காதல் தோல்வியா?” என்றான் தனக்கே உரிய கிண்டலுடன்.

அதைக் கேட்டதும் அவளையும் அறியாமல் இதயம் அச்சத்தில் ஒரு கணம் துடித்தது. கள்ளம் செய்த உள்ளம், எது கேட்டாலும் துடிக்கத்தான் செய்யும்.

ஆனாலும், தன்னைச் சமாளித்தவளாக,

“காதலா? அம்மாவை நினைத்தால் காதல் வருமாடா… நீ வேறு…” என்று அப்போதைக்குக் கூறிச் சமாளித்தாலும், பிறரின் கவணத்தை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்கிறோமே என்று புரிய மெல்ல மெல்லத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாள் விதற்பரை.

(2)

அங்கே ஒட்டாவாவில் விதற்பரை அவ்வியக்தனை விட்டு விலகிய பின், அவள் பாதுகாப்பாக வண்டி ஏறி அவளுடைய குடியிருப்பு வரும் வரைக்கும் அவளைப் பின்தொடர்ந்து சென்றவன், அதன் பின் அவள் மனம் அமைதியாகும் வரைக்கும் காத்திருக்கலாம் என்று இரண்டு நாள் விட்டுப் பிடித்து மீண்டும் விதற்பரையைத் தொடர்பு கொள்ள முயன்றான் அவ்வியக்தன்.

ஆனால் அவனுடைய அழைப்பை அவள் ஏற்க மறுக்கப் பெரும் படபடப்பானது. இதயம் பயங்கரமாக வலித்தது. அவளைப் பார்க்காமல் இவனால் ஒரு பருக்கை சோறு கூடத் தின்ன முடியவில்லை.

அதுவும் அவள் கூடப் பேசவில்லை என்றால் உலகமே தன் சுழற்சியை நிறுத்திவிடுமோ என்று அஞ்சியவனாக மீண்டும் மீண்டும் அவளை அழைத்துப் பார்த்தான்.

இறுதியில் அவளுடைய இலக்கம் உபயோகத்தில் இல்லை என்று தெரிந்த பின்தான் அவனுக்கு நிதர்சனம் புரிந்தது.

அவளுடைய எண் உபயோகத்தில் இல்லையா? ஏன் என்னவாயிற்று? பதறியவனாய் அவளுடைய பல்கலைக் கழகம் சென்று காத்திருந்தான். அவள் வரவில்லை. ஒரு வேளை இன்று வராமல் வீட்டில் தங்கியிருப்பாளோ? உடனே இருப்பிடத்திற்குச் சென்று கதவைத் தட்டிப் பார்த்தான். உள்ளே இருப்பதற்கான அடையாளமேயில்லை. எங்கே போனாள்? என்னாயிற்று? கலங்கிப் போனான் அவ்வியக்தன்.

கடவுளே அவளைப் பார்க்காமல் பைத்தியமே பிடித்து விடும் போலத் தோன்றுகிறதே… இந்தக் கணமே அந்தக் கதவைத் திறந்து அவளை அணைத்து ஆறுதல் படவேண்டும் என்று உள் மனம் கெஞ்சுகிறதே… ஒரு முறை அவளுடைய தரிசனம் கிடைத்தால் போதும் என்று இதயம் புலம்புகிறதே. அவளுடைய பாராமுகம் அவனுடைய உயிரை அறுத்து எடுப்பது போல அல்லவா வலிக்கிறது இதிலிருந்து எப்படி வெளியே வருவது?

முதன் முறையாக நெஞ்சில் பெரும் அச்சம் பாரமாக வந்து அமர்ந்து கொண்டது. ஒரு வேளை மெய்யாகவே இவனை உதறிவிட்டாளா… சீ சீ இருக்காது… அவளுக்கு என்னைப் பிடிக்கும்… மிக மிகப் பிடிக்கும்… நிச்சயமாக என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாள். சற்று நாட்கள் அவகாசம் கொடுக்கலாம். அவளுடைய மனம் தேறியதும், என் பக்கத்து நியாயத்தை உணர்ந்து கொள்வாள். அவனை வெறுக்கும் அளவுக்கொன்றும் தவறாகக் கேட்கவில்லையெ. சேர்ந்து வாழலாம் வா என்றுதானே கேட்டான். அது பெரிய குற்றமா? இந்த உலகத்தில் எத்தனை பேர் மணமாகாமல் மனப் பொருத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்க்ள வாழ்க்கையைத் தொலைத்துவிட்டா வாழ்கிறார்கள். இது ஏன் இவளுக்குப் புரியவில்லை. அவனுக்கு அவள் கூட மகிழ்ச்சியாக வாழவேண்டும்… அதற்கான வழியைத்தானே சொன்னான்… அது புரியாமல் இவளைத் தவிர்க்க எதற்காக நினைக்கிறாள்?

அன்றும் அவளைக் காணும் வெறியுடன் பல்கலைக் கழகத்தில் காத்திருக்க, அவனைக் கண்டதும், ஒரு பெண் அழகிய புன்னகையுடன் வந்தாள். அவளை எங்கும் கண்ட நினைவில்லை. யோசனையுடன் தன் புருவத்தைச் சுருக்க, அவளோ,

“ஹாய்… ஹவ் ஆர் யு…” என்றாள். இவனோ அவளுடைய புன்னகைக்குப் பதில் புன்னகையைக் கொடுத்துவிட்டு,

“குட் அன்ட் வட் எபௌட் யு? என்று திரும்பக் கேட்க, அவனுடைய முகத்திலிருந்த குழப்பதைக் கண்டு புன்னகைத்தாள்.

“உனக்கு என்னை நினைவில் இல்லை அப்படித்தானே…”

“சாரி… இல்லை… பெண்களை அதிகம் நினைவில் வைத்திருப்பதில்லை…” அதைக் கேட்டு மெல்லியதாக நகைத்தவள்,

“நான் ஜெனிலியா… சில நாட்களுக்கு முன்பு உன்னை மதுக் கூடத்தில் சந்தித்தேன்…” என்றாள். இவனோ யோசனையுடன் புருவங்களைச் சுருக்கி,

“சில நாட்களுக்கு முன்பா…” நினைவு வராதவனாக,

“ஓ… சாரி… எனக்கு நினைவில்லை…” என்று தயங்கியவனை மீண்டும் புன்னகையுடன் ஏறிட்டவள், அன்று மதுக் கூடத்தில் அவனைச் சந்தித்ததையும், அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்ததையும் கூற, அப்போதுதான் அவ்வியக்தனுக்கு, ஓரளவு நினைவுக்கு வந்தது.

“ஐ ஆம் சாரி… போதையில் இருந்ததால் நினைவில் இல்லை… நீ இங்கே என்ன செய்கிறாய்…” குழப்பமாகக் கேட்டான்.

பல்கலைக் கழகத்தைச் சுட்டிக்காட்டி,

“இங்கேதான் படிக்கிறேன்…” என்றாள் தோள்களைக் குலுக்கி. கூடவே,, “நீ எங்கே இங்கே…” என்றாள்.

“எனக்குத் தெரிந்த பெண்… இங்கேதான் படிக்கிறாள். அவளைப் பார்க்க வந்தேன்…” என்றவனின் முகம் வாடியிருந்தது.

அதைக் கண்டுகொண்டவளாய்,

“சந்தித்து விட்டாயா?” என்றாள் இதமாய்.

உதடுகளைப் பிதுக்கியவன், தன் வலியை மறைத்தவனாக, ஒரு புன்னகையைச் சிந்தி,

“இன்று வரவில்லை போலும்… நாளைக்கு வந்து பார்க்கிறேன்…” என்றுவிட்டு வணடிக்குள் ஏற,

“யார் என்று சொன்னால் விசாரித்துச் சொல்வேன்…” சொன்னதும், இவனுடைய முகம் பளிச்சிட்டது.

“உன்னால் முடியுமா?”

“முயற்சி செய்கிறேன்… அவள் பெயர் என்ன? என்ன படிக்கிறாள்?”

என்று கேட்க, இவன் உடனே விபரம் சொன்னான்.

“ஒரு நாள் அவகாசம் கொடு. விசாரித்து விட்டுச் சொல்கிறேன். நாளை இதே நேரத்திற்குச் சந்திக்கிறேன்…” என்று விட்டுத் திரும்ப அவளைத் தடுத்தான் அவ்வியக்தன். இவள் நின்று திரும்பிப் பார்க்க,

“நன்றி…” என்றான் மனம் உணர்ந்து. அதற்கும் புன்னகைத்தவள்,

“அன்று எதுவும் செய்யாமல் எனக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போனாய்… குறைந்தது இந்த உதவியையாவது செய்கிறேன்…” என்று விட்டு விடைபெற, இவன் நிம்மதியோடு தன் விடுதிக்குச் சென்றான்.

ஒரு நாள் எப்படியோ சமாளித்தவன், சரியான நேரத்திற்குப் பல்கலைக் கழகத்தில் காத்திருக்க, அவனைத் தேடி வந்தாள் ஜெனிலியா.

“விசாரித்தாயா?” தன் பரபரப்பை அடக்கக் கொஞ்சம் சிரமப்படவேண்டித்தான் இருந்தது.

கொஞ்சம் வருத்தமாய்ப் புன்னகைத்தவள்,

“உன் தோழி ஊருக்குச் சென்றுவிட்டாள்…” என்று சொல்ல அதைக் கேட்ட அவ்வியக்தனுக்கு கொஞ்சம் நிம்மதியானது.

“ஓ… எப்போது திரும்ப வருவாள் என்று ஏதாவது சொன்னார்களா?” பரபரப்பும் ஆவலுமாகக் கேட்டான். அதைக் கேட்டதும் உதடுகளைப் பிதுக்கியவள்,

“அவளுடைய நெருங்கிய தோழியிடம்தான் விசாரித்தேன். அன்று வருட முடிவுக்கான விழாவின் போது போதைப்பொருள் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையால், இனி இந்த பல்கலைக் கழகத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார்கள்…” என்று கூற, அதைக் கேட்டவனுக்கு உலகமே நின்ற உணர்வு. தன்னை மறந்து

“வட்…” என்று அலறியவன், பின் தன் நிலைமையை உணர்ந்து,

“சாரி…” என்றவனுக்கு அதற்கு மேல் எதையும் கேட்கும் தைரியம் இருக்கவில்லை.

விதற்பரை அங்கில்லை என்றதைக் கேட்டதும், உள்ளே மிகப் பெரும் பிரளயம். இதயம் நின்றுவிடுவேன் என்பது போலப் பலமாகத் துடிக்க, இடதுமார்பை அழுத்தி அதனுடைய துடிப்பை சமப்படுத்த முயன்றான். ஏனோ விழிகள் வேறு கலங்க முயன்றன.

அவள் டொரன்டோ போனதை இட்டு ஒரு பக்கம் நிம்மதி எழுந்தாலும், மறு பக்கம் தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டாளே என்கிற வலியும் எழுந்தது.

அதை மறைக்க முயன்ற தோற்றவனாய், வாடிய முகத்துடன் வண்டியில் ஏற முயல,

“அன்று இவளுக்காத்தான் என்னோடு வர மறுத்தாயா?” என்றாள் அந்தப் பெண் கனிவாய். ஒரு கணம் குழம்பியவனுக்கு மறுத்தது கூட நினைவில் இல்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்க,

“நீ அவளைக் காதலிக்கிறாய் இல்லையா…?” என்று பெரிய குண்டொன்றை அவனுடைய தலையில் போட்டாள் ஜெனிலியா. இவனோ அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,

“வட்… ஓ… நோ… நோ… ஐ கான்ட் லவ் எனிபடி…” என்று தலையை ஆட்டிவிட்டு, அவசரமாக வண்டியில் ஏறியவன், எதிலிருந்தோ தப்பிப் பிழைப்பது போலத் தன் வண்டியை மிக வேகமாக ஓட்டிச் சென்றான்.

ஏனோ ஜெனிலியா கூறியவது அவன் புத்தியில் நின்று குடைய தொடங்கியது.

“நீ அவளைக் காதலிக்கிறாய்… நீ அவளைக் காதலிக்கிறாய், நீ அவளைக் காதலிக்கிறாய்… இதுவே திரும்பத் திரும்ப அவன் புத்தியில் நின்று நர்த்தனமாட அதிர்ந்து போனான் அவ்வியக்தன்.

அவள் சொல்வது போல விதற்பரையைக் காதலிக்கிறானா என்ன? நோ நோ… இல்லை… நிச்சயமாக இல்லை… அவனுக்குத் தேவை அவளுடைய உடல் மட்டுமே தவிர, அவளுடைய காதல் இல்லை. என்னால் யாரையும் காதலிக்க முடியாது… நிச்சயம் முடியாது… இங்கே இருப்பதால்தான் அவளுடைய நினைவுகள் என்னை வதைக்கின்றன. இங்கிருந்து சென்றுவிட்டால்… இரண்டு கிழமைகள் அவளைப் பார்க்கவேண்டும் என்று புத்தி நின்று தவிக்கும். அதற்குப் பிறகு பழையது போல ஆகிவிடுவேன்… நிச்சயமாகப் பழையது போல மாறிவிடுவேன்… முடிவு செய்தவன், முதல் வேலையாக இரண்டு நாள் கழித்து அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

What’s your Reaction?
+1
20
+1
3
+1
3
+1
0
+1
5
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

5 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

2 weeks ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-22

(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…

2 weeks ago