Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25)

அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது.

எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை மணக்க முடியுமா?

“ஏன் முடியாது?’ அவள் மனசாட்சியே அவளைக் கேள்வி கேட்கத் திடுக்கிட்டுப் போனாள். பலமாகத் துடித்த இதயத்தை அடக்கும் முகமாக மார்பில் கை வைத்தவளுக்கு, அவனை மணம் முடிக்க மனம் தயாராவதை நினைத்து அதிர்ந்து போனாள்.

“நோ… நோ… இட்ஸ் ராங்…” தன்னை மறந்து பலமாகத் தலையை அசைக்க,

“எதுடி தப்பு?” என்றது ஒரு குரல். அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்க்க, பழைய திகழ்வஞ்சி உடல் முழுக்கப் பச்சை குத்தப்பட்ட நிலையில் கவரச்சியான ஆடையில் நவநாகரிகமாகக் கண் முன்னால் வந்து நின்றிருந்தாள்.

அவளைக் கண்டு அதிர்ந்தவள், ‘நீயா…’ என்றாள்.

“ம்… நான்தான்…” என்றது அந்த உருவம்.

“நீ எப்படி…?” அவள் முடிக்கவில்லை, தன் உதட்டில் கரத்தைப் பதித்து, “ஷ்…” என்றாள் அவள்.

“லிசின்… எதுவும் பேசாதே… நான் சொல்வதை மட்டும் கேள்… நீ அபராசிதனை மணந்து கொள்…” என்று அது சொல்ல, உடனே மறுப்பாகத் தலையை அசைத்தாள் இவள்.

“திகழ்…! நான் சொல்வதை முதலில் கேள்… அதற்குப் பிறகு பேசு… வாய்ப்புத் தானாகக் கிடைத்திருக்கிறது. அதைப் பற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். எதற்காக இல்லை என்றாலும், ஆராமுதனுக்காக நீ அபராசிதனை மணந்து கொள்வதுதான் சரி. பழம் நழுவித் தானாகப் பாலில் விழுந்திருக்கிறது. பயன்படுத்திக்கொள். கூடவே உனக்கு நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும். மறுக்காதே…”

“ஆனால் இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருக்கிறதே. அந்த விஜயராகவன், அவர் மனைவி…”

“அதனால் என்ன… அவர்கள் கூடவா நீ வாழப் போகிறாய். இதோ பார் அந்தம்மா ஈஷ்வரிக்கு உன்னைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் உன்னை இந்தக் குடும்பத்திலிருந்து பிரித்து விடுவார்கள். இதையே நீ அபராசிதனை மணந்து கொண்டால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. தவிர அமலனின் சொத்து ஆராவுக்கு வந்து சேரவேண்டும்… அதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை…”

“சொத்தா…? பைத்தியம் போல உளறாதே… யாருக்கு வேண்டும் அந்த சொத்து…?” சீற்றமாக இவள் கேட்க,

“உனக்குத் தேவையில்லை… ஆராவுக்குத் தேவை திகழ்… அவன் வளர்ந்த பிறகு நாம் சிரமப்பட்டது போல அவன் சிரமப்படக் கூடாது. அவன் சந்தோஷமாக இருக்கவேண்டும். அதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடுவது முட்டாள்தனம். அது அவனுக்குரியது. அதை மறுக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை… சொல்வதைக் கேள்… அபராசிதனை மணந்து கொள். நிம்மதியாகச் சந்தோஷமாக இரு…” பேராசையில் அந்த உருவத்தின் கண்கள் மின்னின. இவளோ தவிப்போடு அந்த உருவத்தைப் பார்த்து மறுத்தாள்.

“என்னால் முடியாது…”

“முட்டாள்…!” என்று அந்த உருவம் அங்கும் இங்கும் நடந்தது. பின் நின்ற அவளைப் பார்த்து, “உனக்கு அபராசிதனைப் பிடித்திருக்கிறது தானே…” என்றது. அதைக் கேட்டு அதிர்ந்தவள்,

“என்ன உளறுகிறாய்…” என்றாள்.

“உளறவில்லை… நிஜத்தைச் சொல்கிறேன். எங்கே, உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு, உனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்று… உன் ஆழ் மனதுக்கும் அவனைப் பிடிக்கத்தானே செய்கிறது. அவன் அருகே இருக்கும் போது நீ பாதுகாப்பாகத்தானே உணர்கிறாய். உன்னை மீறி மனது மகிழ்ந்து போகிறதுதானே. எங்கே இல்லை என்று சொல் பார்க்கலாம்…”

“அது… அது வந்து.. நான்…”

“உண்மையில்லை என்றால் எதற்காக யோசிக்கிறாய்? இதோ பார், அபராசிதன் நல்லவன். அவன் இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால், உன் நிலைமை என்னாகியிருக்கும் என்று யோசித்துப் பார்? ஆராவமுதனுக்காக உன்னை ஏற்றுக்கொள்ளத் தயாரானது மட்டுமல்ல, நீ அவனுடைய அன்னை என்பதற்காகவே அதற்குரிய மரியாதையையும் கொடுக்கிறான். இப்படி ஒரு வாழ்க்கைத் துணை நீ தேடினால் கூடக் கிடைக்காது. இறுகப் பற்றிக் கொள்…”

“ஆனால் இது தவறில்லையா…? என்னால் அவனுடைய எதிர்காலம் பாழாகி விடாதா..”

“லூசு மாதிரி உளறாதே திகழ். நீ அவனுடைய வாழ்க்கையைப் பாழாக்க அவன் ஒன்றும் குழந்தையில்லை. அபராசிதன் உன்னை மணந்து கொள்ளக் கேட்கிறான் என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஒரே காரணம் ஆராவமுதன் மட்டும்தான். அவன் முழுதாக உரிமையோடு அவர்களுக்கு வேண்டும். அதற்கு ஒரே வழி உன்னைத் திருமணம் செய்வது. அதை நீ பயன்படுத்தப் போகிறாய். இதில் தவறு எதுவும் இல்லை. கிடைத்த வாய்ப்பை முட்டாள் தனமாக மறுக்காதே. இங்கே நல்லவனுக்கு வாழ்க்கையில்லை. தக்கன பிழைத்து வாழ்தல் உயிரியல் தத்துவம். நல்லவனாய் இருந்தால் சிறு துரும்பு கூட மதிக்காது. இந்த உலகத்தில் தப்புக்குத்தான் மரியாதை. நீதி நேர்மைக்கு எந்தப் பெறுமதியும் இல்லை… நம்பு… சம்மதம் சொல்” சொன்ன பழைய திகழ்வஞ்சி சட்டென்று மாயமாக மறைந்து போகக் குழம்பிப்போனாள் இவள்.

ஆனாலும் அவளால் சட்டென்று முடிவும் எடுக்க முடியவில்லை. யோசிக்கவும் முடியவில்லை.

மறுநாள், திகழ்வஞ்சி எழுந்தபோது அபராசிதன் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டிருந்தான். எட்டு மணியளவில் குழந்தையின் தேவைகளை முடித்துக் கொண்டு தானும் காலைச்சாப்பாட்டை முடித்து, ஆராவமுதனை அவனுடைய அறையில் விளையாட விட்டுத் தரையில் ஓரமாக அமர்ந்து விளையாடும் மகனையே பார்த்துக்கொண்டிருந்தாள் திகழ்வஞ்சி.

மனதில் ஆயிரம் குழப்பங்கள். முன்தினம் அபராசிதன் கேட்டதற்கான பதில் சரிவரத் தெரிய வில்லை. என்ன முடிவு எடுப்பது என்றும் புரிய வில்லை. தன்போக்கில் தன்னை நோக்கி வந்த, விளையாட்டுக் காரைத் திருப்பி மகன் பக்கமாக ஓடவிட, அந்த நேரம் அவளைத் தேடி கமலா வந்தாள்.

வாசலடி நின்றிருந்த கமலாவைக் கண்டதும், மெல்லிய சிரிப்பைச் சிந்தியவள்,

“என்ன கமலா?” என்றாள்.

“அது… பெரிய ஐயா வந்திருக்கிறார்கள். உங்களைப் பார்க்கவேண்டுமாம்…” என்று தயக்கமாகச் சொல்லக் குழம்பினாள் இவள்.

“பெரிய ஐயாவா? யார் அது…?”

“அவர்கள் தான்… ராகவன் ஐயா…” கமலா கூற முகம் இறுகிக் கறுத்துப் போனது திகழ்வஞ்சிக்கு.

இராகவனா? அவர் எதற்கு என்னைத் தேடி வந்திருக்கிறார். மனம் சீற்றத்தில் கொந்தளிக்க, ‘நான் வரவில்லை அவரைப் போகச் சொல்’ என்று சொல்வதற்காக வாயை எடுத்தவள் கப் என்று மூடிக் கொண்டாள். தன் கோபத்தைக் கமலாவிடம் காட்ட முடியாதே. பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கியவள்,

“சரி.. நான் போய் பார்க்கிறேன், நீங்கள் கொஞ்ச நேரம் ஆராவுடன் இருக்க முடியுமா… பிளீஸ்” கேட்க,

“அது எதற்குப் பிளீஸ் எல்லாம். இரு என்றால் இருந்துவிட்டுப் போகிறேன்… நீங்கள் போய்ப் பேசுங்கள்…” என்றுவிட்டுக் குழந்தையுடன் விளையாடத் தொடங்க, இறுகிய முகத்துடன் கீழே வந்தாள் திகழ்வஞ்சி.

அங்கே நீளிருக்கையில் அமர்ந்திருந்த விஜய ராகவன், இவளைக் கண்டதும் முகம் மலர, எழுந்து அவளை நோக்கி வர முயன்றவர், இறுகிச் சினத்த அவளுடைய முகத்தைக் கண்டதும், தன் முயற்சியை விடுத்து முகம் வாட அவளைப் பார்த்தார். இவளோ அவரை எகத்தாளமாகப் பார்த்தாள்.

“என்ன மிஸ்டர் விஜயராகவன் இந்த நேரம் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?” என்று கடமைக்குக் கேட்பவளைப் போலக் கேட்க அவளை உற்றுப் பார்த்தார் விஜயராகவன்.

“உனக்கு என்னைத் தெரியும்…!” கேட்கும் போதே அவருடைய குரல் தழுதழுத்தது.

“இது என்ன கேள்வி? அதுதான் நேற்று பார்த்தேனே… டாக்டர் அபராசிதனின் அக்கா புருஷன்தானே நீங்கள்…” அவள் சொல்ல, அவளை வலியோடு பார்த்தார் அவர்.

“அதற்கு மேலும் நான் யார் என்பதும் உனக்குத் தெரியும்?” என்றார் அவர். அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தவள், உதடுகளைப் பிதுக்கி,

“சாரி மிஸ்டர் விஜயராகவன். எனக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படவில்லை…” என்று சொன்னவள் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி முகம் இறுக அவரைப் பார்த்து,

“நீங்கள் எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள்…” என்று அன்னிய ஆடவர்களுடன் பேசுவதுபோல பேச, மேலும் முகம் வாடிப் போனார் விஜயராகவன்.

ஆனால் இவளோ தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு,

“எதுவும் இல்லை என்றால் நான் மேலே போகட்டுமா?” உள்ளே எரிமலை வெடிக்கத் தயாராக இருந்தாலும், அதைச் சிரமப்பட்டு அடக்கியவளாகக் கேட்க, நிமிர்ந்து பார்த்தவரின் விழிகளோ கலங்கி இருந்தன. அந்தக் கலங்கிய விழிகள் அவளை இளக்க வைப்பதற்குப் பதிலாக மேலும் ஆத்திரத்தைக் கொடுக்கப் பற்களைக் கடித்தவள்,

“என்ன பரிதாபத்தைச் சம்பாதித்துவிட்டுப் போகலாம் என்று வந்தீர்களா மிஸ்டர் ராகவன்…? சாரி… அந்த இடத்தில் நீங்கள் இல்லை…” என்றவள், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் சட்டென்று திரும்பி மேலே போக முயல,

“கண்ணம்மா… நீ… அங்கவையா சங்கவையா?” என்றார் தடுமாற்றமாக.

அதைக் கேட்டு இளக்காரமாகச் சிரித்தவள்,

“தெரிந்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றாள் கடுமையாக. அதைக் கேட்டுத் தடுமாறியவர்,

“ஏன்மா… மற்றவள் எ… எப்படிடா இருக்கிறாள்? அவள் நலம்தானே…?” ஏக்கத்தோடு அவர் கேட்க, சட்டென்று நின்றாள் திகழ்வஞ்சி. உதடுகளில் இகழ்ச்சியான புன்னகை ஒன்று மலர, சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தவள்,

“அவள் எப்படியிருந்தால் உங்களுக்கு என்ன? எதற்காக இதையெல்லாம் கேட்கிறீர்கள்? யார் சார் நீங்கள்…?” அவள் எகத்தாளமாகக் கேட்க,

“பிளீஸ்டா… தயவு செய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்” அவர் சொல்ல அதீத வெறுப்புடன் தன் முன்னால் நின்றிருந்தவரை ஏறிட்டாள் அவள்.

“நான் எதையும் கேட்கத் தயாராக இல்லை மிஸ்டர் விஜயராகவன்… தயவு செய்து போய் விடுங்கள்…” அவள் கடுமையாகச் சொல்லக் கதிகலங்கி நின்றார் அவர்.

“நீ என்மீது கோபமாக இருக்கிறாய் என்பது எனக்குப் புரிகிறதம்மா… ஆனால் நான்… சொல்லும் விளக்கத்தையாவது…” அவர் முடிக்கவில்லை, ஆத்திரத்தோடு அவரைப் பார்த்தவள்,

“விளக்கமா… அதுவும் உங்களிடமிருந்தா? சாரி சார் எனக்கு எந்த டாஷூம் கேட்க வேண்டிய அவசியம், இல்லை. அதற்குப் பொறுமையும் இல்லை… தயவுசெய்து நீங்கள் போய்விடுங்கள்…”

“கண்ணம்மா…” அவர் எதுவோ சொல்லவர, அவர் முன்பாகத் தன் கரங்களை உயர்த்தி அவர் பேச்சைத் தடுத்தாள் திகழ்வஞ்சி.

“டோன்ட்… டோன்ட் கால் மி லைக் தட்… என் பெயர் வஞ்சி… திகழ்வஞ்சி…” பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப, வலி நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்தினார் விஜயராகவன்.

“நீ இப்போது திகழ்வஞ்சியாக இருந்தாலும், எனக்கு அங்கவையோ சங்கவையோ தான்மா…” என்றார் வலியோடு.

“வேண்டாம்… அப்படி என்னைக் கூப்பிடும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. அது… அது என் தந்தைக்கு மட்டும்தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை. அதனால் கண்ட கண்டவர்களெல்லாம் என்னை அப்படி அழைப்பதை நான் விரும்பவில்லை…” என்று கூறியவளை ஏக்கத்தோடு ஏறிட்டார் விஜயராகவன்.

“அந்தத் தந்தையே நான்தானேமா…” அவர் சொல்ல, அவரை அதீத வெறுப்போடு பார்த்தவள், வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்து விட்டு.

“என்னது… நீங்கள்தான் என் தந்தையா? ஹா ஹா ஹா குட் ஜோக்… பட் மிஸ்டர் விஜயராகவன், என் அப்பா என்னுடைய நான்காவது வயதில் இறந்து விட்டார்…” அவள் முடிக்கவில்லை,

“கண்ணம்மா…!” என்றார் அவர் கோபமும் வேதனையுமாக. ஆனால் அவளோ, அவரை இரக்கமற்றுப் பார்த்து,

“என் பெயர் திகழ்வஞ்சி…” என்றாள் கடும் சினத்தோடு.

“சரிடா… சரி… ஆனால் நான் கூறுவதை..” அவர் முடிக்கவில்லை,

“கேட்க மாட்டேன் போதுமா. உங்களுடைய முகத்தைப் பார்த்தாலே உள்ளே எரிகிறது. எனக்கு மட்டும் சக்தியிருந்தால் உங்கள் கழுத்தை நெரித்துக் கொன்று இருப்பேன். ஆனால் அதற்கான தைரியம் இல்லாததால் அடக்கிக் கொண்டிருக்கிறேன்… தயவு செய்து என்னுடை பொறுமையைச் சோதிக்காமல் விலகிச் சென்றுவிடுங்கள்…” சொல்லிவிட்டுத் திரும்ப முயன்றவளிடம் பதட்டமாக நெருங்கியவர்,

“கண்.. வஞ்சிமா… உன்னுடைய கோபம் எனக்குப் புரிகிறது. அதனால்தான் இத்தனை பொறுமையாக என்னுடைய நிலையை விளக்க முயல்கிறேன்… ஒத்துக் கொள்கிறேன், நான் உங்களுக்குச் செய்தது பெரும் துரோகம்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் நிஜத்தை நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்… கொஞ்சம் நான் சொல்வதைக் கேள்டா..” என்று தவிப்புடன் சொல்ல தன் காதுகளைப் பொத்திக் கொண்டு மறுப்பாகத் தலையசைத்தாள் திகழ்வஞ்சி.

“வெண்டாம்… நீங்கள் எதுவும் கூறவேண்டாம்… நான் எதையும் கேட்கத் தயாராக இல்லை…” என்றவள் தன் கரங்களை விலக்கி அவரை வெறுப்போடு திரும்பிப் பார்த்தாள்.

“அன்று உங்கள் பழைய காதலிக்காக எங்களை உதறித் தள்ளிவிட்டுச் சென்றீர்களே… அப்போதாவது எங்களை யோசித்திருக்கலாமே. நான்கு வயது எங்களுக்கு… என்ன தெரியும்? நீங்கள் விட்டுச் சென்ற பின், இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று நானும் வல்லபையும் வாசலில் காத்திருந்தது எதுவும் உங்களுக்குத் தெரிய நியாயம் இல்லை. உங்களுக்கென்ன… புது மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் எங்களை மறந்துவிட்டீர்கள்… அதற்குப் பிறகு நாங்கள் பட்ட அவமானத்தையும், வேதனையையும் யார் அறிவர். இதோ இந்த நிமிடம் வரை இன்னும் இதயத்தில் முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது… அந்தப் புண்ணை ஆற்ற, இதுவரை யாரும் வரவில்லை. இனியும் வரவேண்டாம். தயவுசெய்து இருக்கிற வலியே போதும். திரும்பவும் அதைக் கிளறித் தோண்டாதீர்கள்… ப்ளீஸ்…” என்று இரு கரம்கூப்பிக் கும்பிட்டவள், வேதனையுடன் அவரைப் பார்த்தாள்.

“அபராசிதனின் அத்தான் நீங்கள்தான் என்று தெரிந்திருந்தால் சத்தியமாக அவரோடு இங்கே வந்திருக்கவே மாட்டேன் தெரியுமா. சாகும் வரைக்கும் உங்கள் பெயரையோ, உங்கள் முகத்தையோ, கேட்கவும் பார்க்கவும் கூடாது என்று நினைத்தேன். ஆனால்… சே… நானும் வல்லபையும் பட்ட அவமானங்கள், வேதனைகள் இது எதற்கும் உங்கள் மன்னிப்பு ஈடாகாது… எங்கள் வாழ்க்கை சிதையக் காரணம் நீங்கள் தான். நீங்கள் மட்டும்தான். நீங்கள் கொடுத்துவிட்டுச் சென்ற கசப்பு அம்மாவைச் சாகடித்தது. எங்கள் வாழ்க்கையை நரகத்திற்குள் தள்ளியது… உங்களுக்கு ஒன்று தெரியுமா, தந்தை இருந்தும் அநாதையாக வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? அத்தை, மாமா வீட்டில் வேண்டாத பொருட்களில் நாங்களும் ஒருவராக… அதை அனுபவித்த எங்களுக்கு மட்டும்தான் தெரியும்… வேண்டாம்… தயவு செய்து என் கண் முன்னாடி வந்து நிற்காதீர்கள். போய்விடுங்கள். ஏற்கெனவே நொந்துபோய் இருக்கிறேன். திரும்பவும் நோகடித்து விடாதீர்கள்.” என்று கரங்களைக் கூப்பி ஆத்திரத்தோடு சொன்னவளை வேதனையுடன் பார்த்தார் ராகவன்.

“உன்னுடைய கசப்பு எனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறாயாமா… ப்ளீஸ்ம்மா… ஒரே ஒரு முறை நான் சொல்வதைக் கேள்… என் பக்கத்து நியாயம் உனக்குப் புரியும்.” அவர் முடிக்கவில்லை மீண்டும் கோபமாக அவரைப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

“என்ன சொல்லப் போகிறீர்கள்? உங்கள் பழைய காதலின் புராணத்தைத் தானே? ஆளை விடுங்கள்… இதோ பாருங்கள்… மரியாதையாகப் போய்விடுங்கள்… இல்லை அபராசிதனை அழைக்க வேண்டி வரும். பிறகு இப்போதிருக்கிற நிம்மதியான வாழ்க்கை கூட உங்களுக்குக் கிடைக்காமல் ஆக்கிவிடுவேன்…” என்று சொன்னவள், சீற்றத்துடன் திரும்ப, மனதோ அவர் விட்டுச் சென்ற பிறகு அன்னை பட்ட வலியும் வேதனையும் அவலமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்ணின் முன்னால் திரையாய் விரிய இதயமோ வேதனையில் வெடித்துச் சிதறத் தயாரானது.

அதைத் தொடர்ந்து தாயின் இறப்பு, அநாதையாக இவர்கள் இருவரும் விடப்பட்டது. அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்தது என்று ஒவ்வொன்றாக அவளைச் சிதைத்தது. இன்று அவளுடைய வாழ்க்கை இந்தளவு கேவலமாகிப் போகக் காரணம் அவர் தானே.

இதற்கு மேலும் இந்த வீட்டில் அவள் இருக்க வேண்டுமா? இருந்தால், இதோ இவரை அடிக்கடிப் பார்க்க நேருமே. அது அவளைச் சித்திரவதை செய்யுமே. மறக்க முயலும் பழைய கசப்புகள் தானாகப் பொங்கி வருமே. எதற்கு இத்தனை வலிகள். வேண்டாம்… இந்தக் குடும்பத்தின சகவாசமே வேண்டாம். போய் விடலாம். அந்த வீட்டிலிருந்து ஒரேயடியாக விலகி எங்காவது சென்று விடலாம். போதும். வாழ்க்கையில் பட்ட அடிகள், வலிகள், வேதனைகள் அனைத்தும் போதும். இனியும் தாங்க அவளிடம் சக்தியில்லை.

முடிவு செய்தவளாக, வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு படிகளில் ஏறத் தொடங்க, தன்னை முற்றாக வெறுத்து ஒதுக்கிச் செல்லும் தன் மகளைக் கண்டவருக்கு, ஏமாற்றம், பதட்டம், வேதனை அனைத்தும் ஒன்றாகத் தாக்கியது.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கூடக் கேட்க முடியாமல் வெறுத்து ஒதுக்கும் மகளிடம் தோற்றுப் போனவருக்கு, அந்த வலி நாடி நரம்பின் எல்லாப் பகுதிகளுக்கும் அலைவடிகாக உருமாறி உடல் முழுவதும் படர்ந்து, மூளைக்குச் சென்று, இதயத்தைத் தாக்க, படார் என்று இதயம் வெடித்த உணர்வில் நெஞ்சை அழுந்த பற்றிக் கொண்டார் விஜயராகவன்.

“கண்ணம்மா” சிரமப்பட்டு அவளை அழைத்தவர், அப்போதும் அவள் திரும்பிப் பார்க்காமல் செல்வதைக் கண்டு மேலும் உடைந்த போனவராக அப்படியே கீழே விழ, அதில் ஏற்பட்ட சத்தத்தில் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தாள் திகழ்வஞ்சி.

அங்கே ராகவன் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள். தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும் என்பது இதைத்தானோ. என்னதான் அவர் மீது வெறுப்பும் கசப்பும் அளவுக்கதிகமாக இருந்தாலும், அவர் தரையில் கிடப்பதைக் கண்டவளால், அதற்கு மேல் ஏனோ தானோ என்று தள்ளி நிற்க முடிந்திருக்கவில்லை..

தன்னை மறந்து “அப்பா…” என்றவாறு அவரை நோக்கி ஓடிவந்தவள், முழங்கால் அடிபடத் தரையில் மடங்கிச் சரிந்து தந்தையைப் பார்க்க, அவரோ இதயத்தைப் பற்றியவாறு வியர்த்துக் கொட்ட முகம் கசங்கக் கிடந்தார்.

“என்னாச்சு…? உங்களுக்கு என்ன செய்கிறது?” தன்னை மறந்து துடிப்புடன் கேட்க,

“வஞ்.. வஞ்சிமா… அப… அபராசிதனை கூப்…” அதற்கு மேல் பேச முடியாமல் தலை சரித்து மயங்கினார் விஜயராகவன்.

“அப்பா… அப்பா…” என்று பலமுறை அழைத்தும் அவரிடத்திலிருந்து எந்தப் பதிலும் வராது போகப் பதறிப் போனாள் திகழ்வஞ்சி. அதுவரை அவர் மீதிருந்த வெறுப்புக் காணாமல் போக, கண்ணிமைக்கும் நொடியில் செயல்பட்டாள். பான்ட் பாக்கட்டில் செருகியிருந்த கைப்பேசியை நடுங்கும் கரங்களில் எடுத்தவள், உடனே அவசர ஊர்திக்குத் தகவல் கொடுத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாள்.

மூளை வேலை செய்ய மறுத்தது. இதயம் வேறு பயத்தில் படபடத்தது. அவருக்கு ஏதாவது நடந்தால்… கடவுளே, அதை நினைத்துப் பார்க்கக் கூட அவளால் முடியவில்லை. இமயம் அளவு அவர் மீது வெறுப்பு இருந்தாலும், தந்தை என்கிற பாசம் அவளிடம் ஒட்டியிருந்ததால் அவரை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற மனநிலையில் தவித்தவளுக்குச் சட்டென்று கண்முன்னாடி வந்து நின்றான் அபராசிதன்.

அபராசிதன், அவனுக்கு உடனே தகவல் சொல்லவேண்டுமே… ஆனால் அவனுடைய தொலைப்பேசி இலக்கம்? சட்டென்று குனிந்து விஜயராகவனின் பான்ட் பாக்கட்டைத் தட்டிப் பார்க்கக் கைபேசி தட்டுப்பட்டது. இழுத்து எடுத்தவள் அவருடைய பெருவிரலை வைத்து கைப்பேசியை உயிர்ப்பித்தாள்.

அழைப்புக்குள் நுழைந்து அபராசிதனின் இலக்கத்தைத் தேட, உடனே வந்தது. அந்த இலக்கத்திற்கு அழைக்க, அவள் தொடர்புகொண்ட மறு நிமிடமே அபராசிதன் இணைப்பில் வந்தான்.

“சொல்லுங்கள் அத்தான்…” என்று அவன் குரலைக் கேட்டதும் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

“இது… நான்… நான்தான் பேசுகிறேன்…” என்ற திகழ்வஞ்சியின் குரலைக் கேட்டதும் ஒரு விநாடி மறுபக்கம் அமைதியானது. கண்ணிமைக்கும் நொடியில் என்னாகியிருக்கும் என்று அவன் ஊகித்திருந்தான் போல,

“அத்தானுக்கு என்னாச்சு…?” உடனே கேட்க, நடுக்கத்துடனும் கலக்கத்துடனும்,

“வந்து உங்கள் அத்தான் இங்கே வந்திருந்தார்… திடீர் என்று நெஞ்சைப் பிடித்தவாறு விழுந்து விட்டார். என்ன செய்வது என்று புரியவில்லை…” என்று இவள் பதற,

“நீ அம்புலன்சை உடனேயே அழை… நான் பக்கத்தில்தான் இருக்கிறேன் இப்போதே வருகிறேன்…” என்றவன், பக்கத்தில் ஏதோ வேலையாகப் போய்க்கொண்டிருந்தவன், உடனே வண்டியைத் திருப்ப,

“இல்லை… ஏற்கெனவே அம்புலன்சை அழைத்து விட்டேன். எந்த நேரமும் அவர்கள் வருவார்கள். ஆனால் எனக்குப் பயமாக இருக்கிறது…” கலக்கத்துடன் சொன்னவளிடம்,

“பயப்படாதே… நான் சொல்வதை மட்டும் செய், இடது மார்புக் குழியில் ஒரு கரத்தை வைத்து அதன் மீது மறு கரத்தை வைத்துப் பலமாக இரண்டு விநாடிகளுக்கு ஒரு முறை அழுத்திக் கொடுத்துக்கொண்டேயிரு. முடிந்த வரை விரைவில் வந்துவிடுகிறேன்…” என்று அவன் சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைக்க, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை உடனே புரிந்து கொண்டாள் திகழ்வஞ்சி.

உடனே அவருடைய இதயக் குழியில் கரங்களைப் பதித்துப் பலமாக அழுத்திக் கொடுக்கத் தொடங்க, காயம்பட்டு தையலிட்ட மார்பு அவளுடைய அந்தச் செயலில் வலிக்கத் தொடங்கியது. ஆனால் அவள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. அந்த நேரத்தில் விஜயராகவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவளுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தது. என்ன தான் அவர் மீது அதீத வெறுப்பு இருந்தாலும், அவர் செத்துப்போகவேண்டும் என்று சத்தியமாக அவள் நினைத்திருக்கவில்லை.

ஒரு வேளை அவருக்கு ஏதாவது ஆனால், அந்தக் குற்ற உணர்ச்சி வேறு அவளைக் கொன்று தொலைக்கும். “பிளீஸ் வேக்கப்…” முனங்கியவள், பலம் முழுவதையும் திரட்டி அவருடைய நெஞ்சில் அழுத்திக் கொண்டிருக்க மனதோ இறைவனிடம் மன்றாடியது.

கடவுளே…! இவரைக் காப்பாற்றிவிடு. அவரை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறது. அவர் ஆரோக்கியமாக, நலமாக இருக்கவேண்டும்… காத்துக்கொள் தெய்வமே…’ என்று மனதாரப் பிரார்த்திக்கும்போதே அபராசிதனின் கார் வேகமாக வீட்டின் முன்னால் வந்து நின்றது.

அதிலிருந்து மின்னலாக வெளியே வந்தவன் வீட்டிற்குள் நுழைய, அவன் கரத்தில் மருத்துவத்திற்குத் தேவையான பெட்டியும் தங்கியிருந்தது.

அபராசிதன் உள்ளே நுழைந்ததும், அத்தனை நேரமாகத் தோன்றியிருந்த இறுக்கம் அவள் உடலைவிட்டு அகல, நிம்மதி மூச்சோடு தான் செய்துகொண்டிருந்த செயலைக் கைவிடாமல் அவனைப் பார்க்க, பாய்ந்து அவளருகே ஓடி வந்தான் அபராசிதன்.

“தாங் காட்… நீங்கள் வந்துவிட்டீர்கள்… நான்… நான் மிகவும் பயந்துகொண்டிருந்தேன்… எனக்கு… எனக்கு என்ன செய்வது என்று எதுவுமே புரியவில்லை…” என்று கண்ணீர் மல்கக் கூறியவளின் தோளைச் சுற்றிக் கரத்தைப் போட்டு ஒரு அழுத்து அழுத்திவிட்டு விலகியவன்,

“தள்ளு… நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்றுவிட்டு அவரை அவசர அவசரமாகப் பரிசோதித்தவனுடைய முகம் இறுகிப் போனது. “ஷிட்… ஷிட்… ” என்று பதட்டமாகக் கூறியவன், தன் பெட்டியிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து அவருடைய வாயைப் பலவந்தமாகத் திறந்து நாக்கின் அடியில் வைத்தான். அவருடைய மேல் சட்டையின் முன்பக்கத்தை இழுத்துக் கழட்டி இரண்டு கரங்களாலும் அவருடைய மார்பில் அழுத்தி சிபிஆர் மூலம் இரத்த ஓட்டத்தை இதயத்திற்கு அனுப்ப முயன்றான்.

“கமோன்… கமோன்… அத்தான்… விழித்துக் கொள்ளுங்கள்.. உங்களால் முடியும்… எங்களுக்கு நீங்கள் தேவை… கமோன்…” என்று கூறியவாறு ஒரு நிமிடத்துக்கு நூறிலிருந்து நூற்றியிருபது முறை பலமாக அழுத்திக் கொண்டிருந்த நேரம் அவசர மருத்துவ ஊர்தி அவர்கள் வீட்டின் முன்னால் பெரும் ஓசையுடன் வந்துநின்றது.

அவர்களுக்கு அபராசிதனை நன்கு தெரியும் போலும்… “ஹலோ டாக்டர்… வட் ஹப்பின்ட்…” என்றவாறு வேகமாக வந்தனர்.

“லுக்ஸ் ஹார்ட் அடாக். நைட்ரோகிளிசரின் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் பல்ஸ் குறைந்து கொண்டு போகிறது.” அவன் கூற,

“நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் டாக்டர்… கவலைப் படாதீர்கள்…” என்ற துணை மருத்துவர்கள் மறு கணம் மின்னலாகச் செயற்பட்டார்கள். அபராசிதனின் உதவியோடு அவசர சிகிச்சையைச் செய்தவர்கள், அடுத்து கண்ணிமைக்கும் நொடியில் விஜயராகவனை வண்டியில் ஏற்றினார்கள்.

அவர்களின் வேகமும் அவசரமும் விஜய ராகவனின் நிலைமையைக் கூற, அதுவரை நெஞ்சின் மீது கைவைத்து நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்த திகழ்வஞ்சியின் முகம் வெளிறிப் போயிற்று.

அவளையும் மீறி எழுந்த குற்ற உணர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விக்கித்து நின்றிருக்க அபராசிதன் தன் வண்டியை நோக்கி ஓடுவது தெரிந்தது.

அவன் வண்டியில் ஏறி அமர்வதற்குள், இவள் அவனுக்குப் பக்கத்தில் ஏறி அமர்ந்திருந்தாள்.

திரும்பி இவளைக் குழப்பமாகப் பார்க்க,

“பிளீஸ்… நானும் வருகிறேன்…” என்றாள் அவள்.

“குழந்தை…?”

“கமலா அக்கா பார்த்துக் கொள்வார்கள்…” அவள் முடிக்கவில்லை வண்டி தெருவை நோக்கிப் பாய்ந்தது. திரும்பி திகழ்வஞ்சியைப் பார்த்தான்.

“என்ன நடந்தது…?” அவன் கேட்க அவளோ பதிலே சொல்லாமல் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உன்னைத்தான் கேட்கிறேன்… அத்தான் எதற்காக வீட்டிற்கு வந்தார்?” அவனுடைய அழுத்தமான கேள்வியைப் போலவே அவனுடைய வண்டியும் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தது.

அவனிடம் என்ன பதிலைச் சொல்வாள்? எப்படிச் சொல்வாள். உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“தெ… தெரியவில்லை…” என்றாள் திக்கித் திணறி. அந்த நேரம் பார்த்து குறுக்காக ஒரு வண்டி வர, சடார் என்று கண்ணிமைக்கும் நொடியில் பாதையை மாற்றி வண்டியை விட அவன் பாதையை மாற்றிய வேகத்தில் சமநிலை தவறி, முன்பக்கம் சரிந்தவளின் நெஞ்சுக்குக் குறுக்காகத் தன் கரத்தைக் கொடுத்து அவள் அடிபடாமல் காத்தவன் திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான்.

“முட்டாள்… சீட் பெல்ட்டைப் போடு…” கத்தியவன், அவள் இருக்கைப் பட்டியைப் போடச் சிரமப்படுவதைக் கண்டதும், உடனே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுச், சரிந்து அவளுடைய இருக்கை வாரை இழுத்துப் பூட்டிவிட்டு, மீண்டும் வண்டியை தெருவில் விட்டு வேகத்தைக் கூட்டியவாறு

“சொல்லு… அத்தான் எதற்காக வீட்டிற்கு வந்தார்?” என்றான் அழுத்தமாக.

“எனக்கு எப்படித் தெரியும்? உங்களைக் கேட்டுத்தான் வந்தார்?” அவள் சொல்ல திரும்பி அவளை ஒரு மாதிரிப் பார்த்தான் அபராசிதன்.

“பொய்… அத்தான் வீட்டிற்கு வர முதல் என்னிடம் பேசிவிட்டுத்தான் வந்தார். நான் வேலையாக வெளியே நிற்கிறேன் என்று அவருக்குத் தெரியும். பேசும் போது கூட அவர் வீட்டுக்கு வருவது பற்றி எதுவும் சொல்லவில்லை…”

“அது… உங்களைக் கேட்டு வந்தார் என்றா சொன்னேன். உங்களைத் கேட்டுத்தான் வந்து இருப்பார் என்று சொன்னேன்…” அவள் சமாளிக்க, இளக்காரமாக அவனுடைய உதடுகள் வளைந்தன.

“எனக்குக் காதுகள் இன்னும் அதன் செயல் திறனை இழக்கவில்லை திகழ்…” என்றவனைத் திரும்பி அழுத்தமாகப் பார்த்தவள்,

“இதோ பாருங்கள். அது உங்கள் அக்காவின் கணவர். அவர் எதற்காக உங்கள் வீட்டிற்கு வந்தார் என்று எனக்கு எப்படித் தெரியும்? ஒரு வேளை உங்களைத் திருமணம் முடிக்கச் சம்மதம் சொல் என்று கேட்க வந்திருக்கலாம்…” அவள் போகிற போக்கில் சொல்ல, அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக எதை எதையோ யோசித்தவாறு வண்டியை ஓட்டியவன், கடைசியாக அந்தப் பெரிய மருத்துவமனையின் முன்பாக வந்து வண்டியை நிறுத்தினான்.

அது அவன் வேலை செய்யும் மருத்துவமனை தான். அது தெரிந்துதான் துணை மருத்துவர்கள் விஜயராகவனை அங்கே அழைத்து வந்திருந்தார்கள்.

இவளையும் அழைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே செல்ல, அதற்கிடையில் விஜயராகவன் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அவள் கரத்தைப் பற்றியவன் “வா என் கூட…” என்றவாறு அழைத்துச் சென்றவன், அவளை அவனுக்குரிய அறையில் விட்டுவிட்டு,

“நீ இங்கேயே இரு திகழ்…” என்றவன் திரும்ப, சட்டென்று அவனுடைய கரத்தைப் பற்றினாள் திகழ்வஞ்சி. இவன் என்ன என்பது போலத் திரும்பிப் பார்க்க, அவனுடைய இறுகிய முகத்தையும், தவித்த நிலையையும் கண்டுகொண்டவளாக,

“அவருக்கு ஒன்றும் ஆகாது அபராசிதன்…” என்றாள் மென்மையாக. அதற்குப் பதில் சொல்லாமல் நம்புகிறேன் என்பது போலத் தலையை அசைக்க, இப்போது அவனுடைய கரத்தை விடுவித்தவள்,

“உங்கள் அக்காவிற்குத் தகவல் கொடுக்க வேண்டும் அல்லவா?” என்று தயக்கமாக.

“வேண்டாம் திகழ்… அக்காவை இப்போது அழைக்கவேண்டாம். அவர்களால், இந்தச் சூழ்நிலையைத் தாங்கமுடியாது. பிறகு… பிறகு கூறிக்கொள்ளலாம்…” என்றான் கலக்கமாக.

“பிறகு என்றால் எப்போது…?” அவள் குரலில் எதை அறிந்தானோ, அவன் விழிகள் இறுக மூடிப் பின் திறந்தனஞ்

“நம்பிக்கைதான் வாழ்க்கை… எதுவாக இருந்தாலும் பிறகே சொல்லலாம்…” என்றவன், நேராக விஜயராகவன் அனுமதிக்கப்பட்ட அவசரச் சிகிச்சைப் பிரிவை நோக்கிக் கிட்டத்தட்ட ஓடினான்.

 

What’s your Reaction?
+1
40
+1
8
+1
1
+1
0
+1
8
+1
1
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍.
    அடக்கடவுளே 😮😮😮😮😮
    என்ன இப்புடி ஆகிப் போச்சே?🙄🙄🙄

    • பாவம் மனுஷன், நெஞ்ச புடிச்சிட்டு விழுந்துட்டாரு

  • யாருக்கு பாவம் பார்ப்பது என்றே தெரியவில்லை

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

12 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…

1 day ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

2 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

6 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 23/24

(23) அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது…

1 week ago