Categories: Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- 18

(18)

இருவரும் வெளியே வந்தபோது நேரம் மதியம் ஒரு மணியாக இருந்தது. அவளைக் கார்வரை அழைத்து வந்தவன் அவளுக்காகக் கார்க் கதவைத் திறக்க, நாற்காலியை விட்டு எழுந்தவள், இருக்கையில் ஏறி அமர முயன்ற நேரம், காயம் கொடுத்த வலியில் சற்றுத் தடுமாற, சட்டென்று அவளைப் பற்றி, இருக்கையில் அமர்த்தினான் அபராசிதன். அதற்கு நன்றி சொன்னவள் சாய்வாக அமர்ந்தவாறு மார்பின் காயத்தின் மீது கரத்தைப் பதித்துப் பற்களைக் கடித்தாள்.

மருந்தின் உபயத்தால் விண் விண் என்று தெறிக்கும் வலி இல்லாவிட்டாலும், இப்படியான சின்னச் சின்ன அசைவுகள் மங்கிக் கிடக்கும் வலியைத் தட்டி எழுப்பிவிடுகிறது. அதீத இரத்தப் போக்கு வேறு அவளைப் பலவீனமாக்கியிருந்தது. அதனால் ஏற்பட்ட முக வெளுப்போடு விழிகளை மூட, அவளுடைய இயலாமையைக் கண்டவன் ஒரு விநாடி தயங்கினான். பேசாமல் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்கட்டும் என்று விட்டிருக்கலாமோ? பத்தாவது முறையாக யோசித்தான்.

அவள் சரியாக அமர்ந்து விட்டாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டவன், இருக்கைப் பட்டியை அவளுக்குப் போட்டுவிட்டு, ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்து வண்டியைக் கிளப்ப, அவன் பக்கமாகத் திரும்பியவள்,

“ஆரா… ஆரா எப்படி இருக்கிறான்…?” என்றாள் பரபரப்போடு.

“ம்… நன்றாக இருக்கிறான்…”

“அவன்… என்னை… என்னைத் தேட வில்லையா?” ஒரு அன்னையின் எதிர்பார்ப்போடும் பரிதவிப்போடும் கேட்க,

“ம்… தேடத்தான் செய்தான்… ஆனால் அவன் குழந்தைதானே. சுலபமாகவே அவனைத் திசை திருப்பிவிட்டேன்…” அவன் சொல்ல ஏனோ பெரும் ஏமாற்றமாக உணர்ந்தாள் திகழ்வஞ்சி.

குழந்தை கூட அவளைத் தேடவில்லையா…? அவன் அவளை மறந்து விட்டானா? இது எப்படிச் சாத்தியம். கலங்கிப் போனவளுக்கு அப்போது தான், ஆராவின் முக்கிய ஆவணங்கள் வீட்டில் இருப்பதே நினைவுக்கு வந்தது.

“அபராசிதன், ஒரு முறை என் வீட்டுக்குப் போய்விட்டு உங்கள் இடத்திற்குப் போகலாமா?” என்றாள் கேள்வியாக.

“எதற்கு?”

“இல்லை… என்னுடையதும் ஆராவுடையதுமான ஆடைகளை எடுத்து வரவேண்டும்…” அவள் சொல்ல,

“தேவையில்லை… டொரன்டோ போய் வாங்கிக் கொள்ளலாம்…” அவன் சொல்ல உடனே மறுத்தாள் திகழ்வஞ்சி.

“திரும்ப ஆடைகள் வாங்கும் அளவுக்கு என்னிடம் வசதியில்லை..” என்றவளை ஏளனத்துடன் பார்த்தான் அபராசிதன்.

“என்ன அண்ணாவிடம் வறுகி எடுத்த அத்தனை பணத்தையும் செலவு செய்துவிட்டாயா என்ன?” அவன் சுள் என்று கேட்க, பதில் சொல்ல முடியாது வெளியே வெறித்தாள் திகழ்வஞ்சி.

இனி இப்படித்தான்! அடிக்கடி இத்தகைய பேச்சுகளைக் கேட்க நேரிடும். வேறு வழியில்லை. தாங்கித்தான் ஆகவேண்டும். ஆழ மூச்செடுத்துத் தன் வலியை விழுங்கியவள்,

“பிளீஸ்… ஆராவின் அத்தனை ஆவணங்களும் அங்கேதான் இருக்கிறது. என்னுடையதும்…” அவள் சொல்ல,

“எங்கே இருக்கும் என்று சொல், நான் போய் எடுத்து வருகிறேன்…” என்றான் அவன்.

“இல்லை… வேண்டாம்… அது… நான்… என்னால்தான் அவற்றை எடுக்க முடியும்… பிளீஸ்…” அவள் கெஞ்சுவது போலக் கேட்க, அதற்கு மேல் வாதிடாமல் வண்டியை அவளுடைய வீட்டை நோக்கி விட்டான்.

வீடு நெருங்க நெருங்க இவளுடைய இதயம் பலமாகத் துடிக்கத் தொடங்கியது. முகம் வெளிறியது. அவன் வண்டியை வீட்டின் முன் நிறுத்திய பின்னும் அவள் இறங்கினாளில்லை.

அச்சத்தோடு அவளுடைய வீட்டைப் பார்க்க, அபராசிதனின் பலமிக்க வலது கரம் அவளுடைய இடது கரத்தின் மீது பதிந்தது. இவள் அதே பயத்தோடு அவனைப் பார்க்க,

“அவனைப் பிடித்தாயிற்று… இனி அவனால் வெளியே வர முடியாது…” அபராசிதன் சொல்ல, அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது விழிகளை மூடி ஒரு விநாடி நிம்மதியாக ஆழ மூச்செடுத்து விட்டாள் திகழ்வஞ்சி.

இப்போது நிம்மதியோடு வண்டியை விட்டு இறங்கியவள்,

“நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய் எடுத்து வருகிறேன்…” சொன்னவள் விடுவிடு என்று கதவை நோக்கிச் செல்ல, அப்போதுதான், வீட்டுத் திறப்பு தன்னிடம் இல்லாததே அவளுக்குப் புரிந்தது.

சங்கடத்தோடு திரும்பிப் பார்க்க அபராசிதன் அவள் பின்னால்தான் நின்றிருந்தான்.

தன் பான்ட் பாக்கட்டிலிருந்த திறப்பை எடுத்துக் கதவைத் திறந்து விட, உள்ளே வந்தாள் திகழ்வஞ்சி. வீடு சுத்தமாக இருந்தது. இரத்தக் கறை எதுவும் இல்லை. வியந்து போய் அவனைப் பார்க்கத் தோள்களைக் குலுக்கியவன்,

“காவல்துறை தங்கள் விசாரணையை முடித்த பின், ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்வித்தேன்…” என்றான் எங்கோ பார்த்தவாறு.

அவனை நன்றியுடன் பார்த்தவளுக்கு அன்று நடந்த சம்பவம் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்க, அவளையும் மீறி உடல் நடுங்கிப் போனது.

சட்டென்று அவளுடைய தோளில் கரத்தைப் பதித்தவன்,

“இதனால்தான் நான் எடுத்து வருவதாகச் சொன்னேன்…” அவன் சொல்ல, மெல்லிய புன்னகை ஒன்றைச் சிந்தியவள்,

“ஐ.. ஐ ஆம் ஓக்கே…” என்றுவிட்டு, நேராகத் தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள். அலமாரிக்குள் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த தோள் பையை எடுத்துத் திறந்து பார்த்தாள். அதில் அவளுடையதும் ஆராவமுதனுடையதுமான முக்கிய ஆவணங்கள் பத்திரமாக இருந்தன. உள்ளே ஓரமாக இருந்த குறிப்பேட்டையும் எடுத்து அந்தப் பைக்குள் திணித்தவள், அதனோடு சேர்த்து ஒரு நகைப்பெட்டியும் இருக்க அதையும் எடுத்துப் பையில் போட்டுப் பத்திரப்படுத்தினாள்.

பக்கத்திலிருந்த கதிரையை எடுத்துப் போட்டு அதன் மீது ஏறி நின்று, அலமாரியின் மேல் கிடந்த ஒரு பெட்டியை இழுத்து எடுக்க முயல, சத்தம் கேட்டு உள்ளே வந்த அபராசிதன் அவள் நின்றிருந்த கோலத்தைக் கண்டு,

“என்ன முட்டாள்தனமான காரியம் செய்கிறாய்?” என்றான் கோபமாக.

அவனுடைய குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள்,

“அந்தப் பெட்டியை இறக்க வேண்டும்…” என்றாள் தயக்கமாக.

“அதற்கு நீயே ஏறி நிற்பாயா? கீழே விழுந்தால் என்னாகும்? யோசிக்க மாட்டாயா? முதலில் கீழே இறங்கு…” என்றவன், அவளுடைய கரத்தைப் பற்றி, இறக்கி விட்டு எட்டி அந்தப் பெட்டியை எடுத்துக் கட்டிலில் வைக்க,

“ந… நன்றி…” என்றவள் ஒற்றைக் கையால், அலமாரியிலிருந்த ஆடைகளை அந்தப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினாள்.

அனைத்தையும் பெட்டியில் போட்டு மூடிவிட்டு, அதைக் கரத்தில் எடுக்க முயல, சட்டென்று அவளுடைய கரத்தைத் தட்டிவிட்டவன், அந்தப் பெட்டியைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டான்.

“இல்லை… நானே…” சொன்னவளை ஒரு பார்வை பார்க்க, உடனே வாயை மூடிக்கொண்டாள் திகழ்வஞ்சி. கடைசியாக அந்தத் தோள் பையை எடுப்பதற்காகக் கரத்தை நீட்ட, அதையும் எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டவன்,

“இனியாவது கிளம்பலாமா?” என்றான் பொறுமையிழந்து.

கடைசியாக இருவரும் வெளியே வந்த பின்,

“வீட்டு உரிமையாளரிடம் பேச வேண்டுமே…” என்றாள் தயக்கமாக.

“அதைப் பிறகு பேசிக்கொள்ளலாம், திறப்பை வேண்டுமானால் ஈவாவிடம் கொடுத்துவிடு…” அவன் சொல்ல, திகழ்வஞ்சி ஈவாவின் வீட்டிற்குச் சென்று திறப்பை அவளிடம் கொடுத்து, உரிமையாளரிடம் கொடுத்துவிடுமாறு சொல்ல, நல்ல தோழியாக அவளை அணைத்து விடுவித்தாள் ஈவா.

அடுத்து இருவரும் அபராசிதன் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு திகழ்வஞ்சியைத் திரும்பிப் பார்க்க, அவளோ களைப்பிலும், வலியிலும் உறங்கியிருந்தாள். தலை கதவின் பக்கமாகச் சரிந்திருந்தது. வெளியே வந்தவன், மறுபக்கம் வந்து கதவைத் திறக்க, அவளுடைய தலை, கதவு திறந்த வேகத்தில் அவனை நோக்கிச் சரிய, சட்டென்று உள்ளங்கையால் அக் காரிகையின் மென் வதனத்தை தாங்கிக் கொண்டான் அபராசிதன். அதே நேரம், தலை பிடிப்பிடம் இல்லாமல் சரியவும் திடுக்கிட்டு விழிகளைத் திறந்த திகழ்வஞ்சி, அபராசிதன், அவளுடைய தலையைத் தாங்கிக் கொள்வதை உணர்ந்ததும் ஒரு வித பதட்டத்தோடு அவனை விட்டு விலகியவள்,

“சா… சாரி… உறங்கிவிட்டேன் போல…” என்றாள் சமாதானமாக.

“விடுதி வந்து விட்டது…” என்றதும் மெதுவாகக் காலை வெளியே வைத்து இறங்க முயல, எந்தத் தயக்கமுமின்றி கை கொடுத்து அவளை எழுப்பி விட்டான் அபராசிதன்.

“ந… நன்றி” அவள் முனங்க, அவளுடைய நன்றியைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. வண்டிக் கதவைச் சாற்றிவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு, தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

கதவைத் திறக்க, அதுவரை குழந்தை பராமரிக்கும் பெண்ணோடு விளையாடிக் கொண்டு இருந்த ஆராவமுதன் திரும்பிப் பார்த்தான்.

உள்ளே வந்த அபராசிதனைக் கண்டதும் பற்கள் தெரியச் சிரித்தவன், அவனுக்குப் பின்னால் வந்த தாயைக் கண்டதும், முகத்தில் திகைப்பும், அதைத் தொடர்ந்து மகிழ்ச்சிப் புன்னகையும், அதைத் தொடர்ந்து விம்மலுடனான அழுகையுமாக எழுந்தவன்,

“மம்ம்ம்மா…” என்கிற கூச்சலோடு தத்தக்கா பித்தக்கா என்று அன்னையை நோக்கிப் பாய, திகழ்வஞ்சிக்கு அதுவரையிருந்த உயிர் கொல்லும் வலி மொத்தமாகத் தொலைந்து போனது.

“ஆரா… கண்ணா…” என்றவள் விம்மல் வெடித்துக் கிளம்ப, தன்னை நோக்கி ஓடிவந்த மகனை நோக்கிப் பாய்ந்து முழங்காலிட்டு அமர்ந்து பாய்ந்த மகனை அள்ளி எடுத்து மார்போடு இறுக அணைத்துக் கொள்ள, தாயிடம் பாய்ந்த குழந்தையோ மொத்தமாக அன்னையைத் தன்னோடு அணைத்துவிடும் வேகத்தில் பரபரப்போடு தாயின் கரங்களுக்குள் புகுந்த நேரம், அவனுடைய முழங்கால் சரியாகத் திகழ்வஞ்சியின் மார்புக் காயத்தைத் தாக்க, சுரீர் என்று ஏற்பட்ட வலியில் ஒரு கணம் துடித்து அடங்கினாள் திகழ்வஞ்சி. ஆனாலும், குழந்தையைத் தன்னோடு இறுக அணைப்பதை மட்டும் அவள் விடவில்லை.

குழந்தை, தாயைக் கண்ட மகிழ்ச்சியில் விம்மி அழ, அவனுடைய பிஞ்சு முகத்தை தட்டிக் கொடுத்தும், வருடிக் கொடுத்தும், முத்தமிட்டும் ஆசுவாசப் படுத்த முயன்றவளின் உதடுகளோ புன்னகையைச் சிந்த, விழிகளோ கண்ணீரைச் சொரிந்தன.

“ஷ்… ஷ்.. என் கண்ணன்ல… என் செல்லம்ல… அழக் கூடாதுடா கண்ணா… அதுதான் அம்மா வந்துவிட்டேனே… ம்… அழாதேடா…” மகனை சமாதானப் படுத்த, மகனோ தாயின் கழுத்தைக் கட்டியவாறு தோளில் முகம் புதைத்து விம்மிக் கொண்டிருந்தான்.

அங்கே அரங்கேறிக்கொண்டிருந்த, தாயினதும் மகனதும் பாசப் போராட்டத்தைக் கண்ட அபராசிதனுக்கு வியப்பில் புருவங்கள் மேலேறின.

கூடவே திரும்பவும் அந்த நெருடல் அவனுக்குள். இவள் பணத்திற்காகத்தான் குழந்தையைச் சுமந்து பெற்றாள் என்று யார் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். அந்தளவு மகன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். வியந்து பார்த்திருந்தவனின் விழிகள், அவளுடைய மார்புக்குக் கீழே நிலை குத்தி நின்றன.

அடுத்த கணம், அவளை நெருங்கியவன், அவளை உடும்புப் பிடியாகப் பற்றியிருந்த ஆராவமுதனைப் பிடிவாதமாகப் பிரித்து எடுத்துச், சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை பார்க்கும் பெண்ணிடம் நீட்ட, ஆராவமுதனோ தாயை விட்டுப் பிரிந்த சோகத்தில் எட்டு வீடு கேட்க வாய் பிளந்து கத்தத் தொடங்கினான்.

அதைக் கண்டு துடித்துப் போனாள் திகழ்வஞ்சி. திடீர் என்று அபராசிதன் இப்படிக் குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுப்பான் என்று அவளும் நினைத்திருக்கவில்லை.

“என்ன செய்கிறீர்கள்… குழந்தை அழுகிறான்…” அவள் துடிக்க,

“அவன் அழுவதால் ஒன்றும் ஆகிவிடாது… நீ முதலில் என் கூட வா….” என்றவன் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தவாறு, அங்கிருந்த அறைக்குள் நுழைய, இவளோ காயம் கொடுத்த வலியில் முகம் சுனங்கியவாறு காயத்தின் மீது கரத்தை வைத்த போதுதான் அங்கே பிசுபிசுப்பதை உணர்ந்தாள். குழப்பத்தோடு கரத்தை எடுத்துப் பார்க்க அங்கே இரத்தம் தோய்ந்திருந்தது.

அதிர்ச்சியோடு தன் டி ஷேர்ட்டைத் தூக்கிப் பார்க்க குறுதி சற்று அதிகமாகவே படிந்திருந்தது. அப்போதுதான், ஆராவமுதனைத் தூக்கியபோது, பட் என்று காயத்தில் எதுவோ அறுவது போலத் தோன்றியது நினைவுக்கு வந்தது.

தையல் அறுந்து விட்டது போல. முகம் வெளிற அவனைப் பார்க்க,

“உட்கார் திகழ்…” சொன்னவன் மின்னல் விரைவோடு அறையின் மறுபக்கம் சென்றான். திரும்பி வந்த போது அவனுடைய கையில் ஒரு பெட்டி இருந்தது.

திகழ்வஞ்சி அவன் சொன்னது போலவே படுக்கையில் அமர்ந்திருக்க, பெட்டியைத் துக்கி அவளுக்கு அருகாமையில் வைத்தவன் அவளைப் பார்த்து,

“டி ஷேர்ட்டைக் கழற்று…” என்றான் பெட்டியைத் திறந்தவாறு. மறுக்கவில்லை திகழ்வஞ்சி. நடுங்கும் கரங்கள் கொண்டு டீஷேர்ட்டைக் கழற்ற முயல, வலித்தது அவளுக்கு. உடனே உதவிக்கு வந்தான் அபராசிதன்.

சட்டென்று அவளுடைய டீஷேர்ட்டை, அவளுக்கு வலிக்காத அளவுக்குக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டுக் காயத்தைப் பார்க்க, அவளுடைய வயிறு முழுவதும் செங்குருதி அப்பிக் கிடந்தது. ஒரு நிமிடத்திற்குள் அத்தனை குருதியா. வியப்பை மீறிப் படபடப்பு ஏற்பட்டது அவளுக்கு.

அதற்கிடையில் பெட்டியைத் திறந்த அபராசிதன், கையுறையை அணிந்துவிட்டு, அவளை ஏறிட, அவளோ முகம் வெளிற நின்றிருந்தாள்.

“பயப்பட எதுவும் இருக்காது, தையல் அவிழ்ந்து விட்டது போல. நான் பார்க்கிறேன்… முதலில் படு…” என்றவன் அவள் படுத்ததும், இரத்தத்தால் குளித்திருந்த கட்டை கத்தரிக்கோலால் வெட்டி எடுத்து ஓரமாகப் போட்டான். காயத்தைச் சுத்த படுத்திவிட்டுப் பார்த்தான். காயத்தின் மத்தியில் ஒரு ஸ்டேப்ளர் கழன்றிருந்தது. அதிலிருந்துதான் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அந்த இடத்தை மருத்துவத் துண்டால் அழுத்திப் பிடித்தவன், தொற்று நீக்கிய துருப்பிடிக்காத இரும்பாலான சிறிய கம்பி ஒன்றைத் தையல் விடுபட்ட இடத்திற்குள் விட, பயந்து போனாள் திகழ்வஞ்சி.

“எ… என்ன செய்கிறீர்கள்…?” பதற,

“ப்ச்… அசையாதே… உள் தையலும் அவிழ்ந்து விட்டதா என்று பார்க்க வேண்டும்…” என்றவன், அந்தக் கம்பி போன அளவை வைத்து நிம்மதி கொண்டவனாக,

“நல்ல வேளை… உள்ளே எதுவும் ஆக வில்லை…” சொல்லிவிட்டு, தைப்பதற்கு வேண்டிய பொருட்களை வெளியே எடுத்தான்.

அவள் வியந்து பார்க்கையில் அவள் விழிகளை உற்றுப் பார்த்தவன்,

“வலிக்காமல் இருப்பதற்காகப் போடும் மருந்து இப்போது என் கைவசம் இல்லை. சின்னதாக ஒரு தையல்தான். கொஞ்சம் வலிக்கும்.. சமாளித்துக் கொள்…” என்றவன், கண்ணிமைக்கும் நொடியில், தையல் விடுபட்ட இடத்தில் ஊசியால் குத்தி வளைத்து எடுக்க, வலியில் முனங்கினாள் திகழ்வஞ்சி.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், தன் கடமையிலிருந்து சற்றும் விலகாமல், நைலோன் நூலை ஒரு சுழற்று சுழற்றிக் கட்டுப் போட்டு, கத்தரிக் கோலால் அதை வெட்டி எடுக்க, அதற்கிடையில் அந்தக் காயம் கொடுத்த வலியில் திகழ்வஞ்சியின் முகம் சிவந்தே விட்டிருந்தது.

“முடிந்துவிட்டது…” சமாதானம் சொன்னவன், மீண்டும் இரத்தம் கசிந்த காயத்தைச் சுத்தப்படுத்தி, கட்டுப் போட்டான். கூடவே அவள் வயிற்றில் பரவியிருந்த இரத்தக் கறையைத் துடைத்து எடுக்க முயலும் போது, அவனுடைய பார்வை அவளுடைய வலது புறத்து இடைக்குச் சற்றுக் கீழே படிந்தது.

அவள் அணிந்திருந்த பாவாடை சற்றுக் கீழே இறங்கியிருந்ததால், வெண்ணிற இளம் இடை கண்களுக்கு விருந்தாக அதைக் கண்டவனின் விழிகள் அங்கிருந்து விலக மறுத்தன.

அவன் பார்வை சென்ற திசையைக் கண்டு குழம்பியவள் குனிந்து பார்க்க, அவன் அணிந்து இருந்த பாவாடை இளகித் தொப்புளுக்கும் மிகக் கீழே இறங்கியிருப்பதைக் கண்டு பதறிப்போய் பாவாடையை மேலே தூக்க முயல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தான் அபராசிதன். பின் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“அந்த டட்டுவுக்கு என்னாச்சு?” என்றான் குழப்பமாக.

“ட… டட்டுவா?” இவள் புரியாமல் விழிக்க, அவளை ஒரு மாதிரிப் பார்த்தவன்,

“ம்… பல நிறங்களில் வண்ணத்துப் பூச்சி பறப்பது போல இங்கே ஒரு பச்சை குத்தி இருந்தாயே. இப்போது அதைக் காணோம்…” என்றவன் விழிகளை அவளுடைய இடது தோள் புறம் எடுத்துச் சென்றான். அங்கே குத்தப்பட்டிருந்த பச்சை இருக்கவில்லை. இவன் குழப்பமாக அவளைப் பார்க்க. சட்டென்று அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டு எழுந்தவள், அந்த படுக்கையின் ஓரமாக இருந்த தலையணையால் தன் உடலை மறைத்தவாறு அங்கிருந்து விலக முயல. வேகமாக அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன், அவளை உற்றுப் பார்த்தான்.

“உன்னைத்தான் கேட்கிறேன்… குத்திய பச்சை எங்கே போனது?” அவன் குழப்பமும் சந்தேகமுமாகக் கேட்க, அவசரமாகத் தன் கரத்தை உதறிவிட்டு விலகியவள், ஓரமாகப் போட்டிருந்த இரத்தம் தோய்ந்த டீஷேர்ட்டையே எடுத்துப் போட முயல, அதைப் பறித்துத் தூற எறிந்தான் அபராசிதன்.

இப்போது அவனுடைய முகத்தில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவனுடைய முகத்தைப் பார்க்கும் தைரியம் இல்லாதவளாக தலை குனிந்து கொண்டவள்,

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் சங்கடமாக.

“நீ அண்ணாவுக்கு அனுப்பிய படங்களை எல்லாம் பார்த்தேன். அதில் ஒரு படத்தில், மேலும் கீழும் ஏதோ ஒன்றைப் போடவேண்டுமே என்பதற்காக ஒரு நீச்சலுடை அணிந்திருந்தாய். அதில் நீ குத்தியிருந்த பச்சை எல்லாம் அப்படியே தெரிந்தது. தொப்புளில் கூட வளையம் போட்டிருந்தாய்…” என்றவனின் பார்வை மறைக்காது விடுபட்டிருந்த அவளுடைய தொப்புளில் நிலைக்க, ஒரு கரம் கொண்டு வயிற்றை மொத்தமாக மறைத்தாள் திகழ்வஞ்சி. முகமோ சிவந்து போனது.

“அ.. அமலன் இ… இறந்த பிறகு, இதில் எதிலும் ஆர்வம் இல்லாமல் போயிற்று. அதனால், அனைத்தையும் நீக்கி விட்டேன்… யாருக்காக இல்லையென்றாலும், ஆராவுக்காக நான் மாற வேண்டும் என்பதால் என் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் மாற்றிக்கொண்டேன். பழைய திகழ்வஞ்சியைக் கொன்றுவிட்டுப் புதிதாகப் பிறந்தேன்.” அவள் சொல்ல, சந்தேகம் தீர்ந்தவனாகத் தன் தோள்களைக் குலுக்கியவன்,

“ஏதோ குழந்தைக்காகவாவது நல்ல அம்மாவாக இருக்கிறாயே. அதுவரை சந்தோஷம்தான்…” என்றவன் இரத்தம் படிந்த கையுறைகளையும் கழற்றி, மிச்ச குப்பைகளையும் ஒன்றாக எடுத்து ஒரு பையில் போட்டுக் கட்டியவாறு, அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“இனிமேல் ஆராவைத் தூக்காதே? ஆராவை மட்டுமில்லை, எந்தக் கனமான பொருளையும் தூக்காதே. வெளிப்புறத் தையல் என்பதால் சுலபமாகப் போயிற்று. இதுவே உள் தையலாக இருந்தால், சிரமமாக இருந்திருக்கும்.” சொன்னவன், படுக்கையை விட்டு எழுந்து,

“உன் வயிற்றில் படிந்த இரத்தத்தை முழுதாகத் துடைக்கவில்லை. போய் சுத்தம் செய், அதற்குள் சென்று உன் பெட்டியை எடுத்து வருகிறேன்…” என்று விட்டு வெளியேறியவன் அடுத்த பத்து நிமிடங்களுள், அவளுடைய பெட்டியைக் கட்டிலில் வைத்துத் திறந்து கொடுத்தான்.

நன்றியோடு வாங்கிக் கொண்டவள், அவனை ஏறிட்டு,

“மூன்று நாட்களாகக் குளிக்க முடியவில்லை… இப்போது குளிக்கலாமா?” சந்தேகம் கேட்க, எதுவும் பேசாமல், திரும்பவும் தன் கரத்திலிருந்த பெட்டியைத் திறந்து, அதிலிருந்து தண்ணீர் உட்புகாத பெரிய பிளாஸ்தர் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டி,

“இதை காயத்தின் மீது ஒட்டிவிட்டுக் குளி… உன்னால் ஒட்ட முடியுமா? இல்லை… நான் ஒட்டிவிடவா?” அவன் கேட்க, உடனே மறுத்தாள்.

“இ… இல்லை… நானே ஒட்டிக் கொள்கிறேன்… நன்றி…” என்று வாங்கிக் கொண்டவளிடம், அங்கிருந்த ஒரு அறையைக் காட்டி,

“அதுதான் குளியலறை… போய்க் குளி. கதவை மூடாதே. தேவை என்றால் உடனே என்னை அழை…” உத்தரவாகச் சொல்லிவிட்டு, வெளியேற, முதன் முறையாக அவன் மீது மரியாதை பிறந்தது திகழ்வஞ்சிக்கு.

அவன் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால், நிச்சயமாக அவளைப் படுத்தி எடுத்திருப்பார்கள். அதுவும் அண்ணனின் வாழ்க்கையை அழித்தவள் என்கிற காரணத்திற்காகவே இரக்கம் காட்டியிருக்க மாட்டார்கள்.

ஆனால் இவன் அப்படியில்லாமல், அவள் நிலையிலும் கொஞ்சம் நின்று யோசிக்கிறான். சில வேளைகளில் கடுமை காட்டினாலும் கூட, சந்தர்ப்பம் அறிந்து இளகிப் போகிறான்.

இதோ இப்போது கூட, அவளுடைய காயத்தைக் கண்டு அதற்குக் கட்டும் போட்டு, அவளுடைய தேவையை அறிந்து அதற்கான வழிவகுத்தும் கொடுக்கிறான்.

கூடவே பச்சை குத்திய இடங்களை அவன் நினைவு வைத்திருந்ததும் அவளுக்குள் ஒருவிதமான அவஸ்தையைக் கொடுக்கவே செய்தது.

ஏன் என்றால் பச்சை எங்கே எல்லாம் குத்தப் பட்டிருந்தது என்பது அவளுக்குத்தான் நன்றாகத் தெரியுமே.

பெருமூச்சோடு மாற்றுடைகளையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்த திகழ்வஞ்சி, குளித்துவிட்டு வெளியே வந்த போது, ஓரளவு உடலும் மனதும் தன்நிலை பெற்றிருந்தது,

What’s your Reaction?
+1
52
+1
8
+1
6
+1
2
+1
2
+1
2
Vijayamalar

View Comments

Recent Posts

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக்…

21 hours ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே…

2 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது.…

3 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன்…

4 days ago

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை…

5 days ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில்…

7 days ago