Categories: Ongoing Novel

தாமரையின் நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே – 7

 

7

கோவில் மணி உரத்து ஒலிக்க, பரிவட்டம் கட்டிய பூசாரி , மாலையும் அணிவிக்க, இன்னொரு மாலையை பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் கொடுத்து விட்டு, உடைத்த தேங்காய் , பழங்கள் மற்றும் பிரசாதங்கள் இருந்த தட்டை பாரியிடம் நீட்ட வாங்கியவன்,

வாம்மா நீலா. என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தான். ஒரு வாரமாக கண்ணிலேயே படவில்லையே, ஏதோ விழா என்று பேசிக் கொண்டார்களே.. பட்டுச் சேலையில் வேறு மாதிரி இருந்தாள்.

பூசாரி, என்ன ம்மா, பாதத்துல வச்சுக் கொடுக்கனுமா?

என்றதும், தலையசைத்தவாறு தட்டினை நீட்டியவள், இவர்கள் இருந்த புறம் தலை திருப்பாமல் அய்யனை வணங்கியபடி நிற்க , அவள் அருகில் வந்து நின்றான் மகிழ் வேந்தன்.

அரவம் உணர்ந்த நீலாம்பரி அனிச்சை செயலாய் வேகமாய் எதிர்புறமாய் நகர,

நீலு , குட்டி பிள்ளைக்கு மொட்டை போட்டாச்சு. குளிக்க வைக்கறாங்க. பெரிய மாமா துணிய கொடுக்க சொன்னாங்க. எனவும்,

சன்னதி நோக்கி கைகாட்டினாள். சாமி பாதத்தில வச்சு எடுத்து கொடுக்கனும் அத்தான். என,

உள்ளே சென்ற பூசாரியோ, இன்னும் மாலைகள் எடுத்து வந்து எதிரில் இருந்த பாரியின் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு மாலை தருவதினை அவசரமாக செய்து கொண்டிருக்க, பாரியின் அருகில் இருந்த பெண் மகிழ் வேந்தனை பார்த்து கண்களை விரித்து முறுவலித்ததோடு, அருகில் நின்ற தாயிடம் ஏதோ சொல்ல, அவரும் நட்பு முறுவல் சிந்தினார்.

சற்றே புருவம் சுருக்கிய மகிழ் வேந்தன், முறுவலித்தவர்களிடம் மரியாதையான முறுவலுடன் சிறு தலையசைவில் அங்கீகரித்தவாறு,

நேரமாவதை உணர்ந்து, முருகா அந்த தட்டு கொடு. என்று உரக்க சொல்லவும், பூசாரி இளைஞன் அவசரமாக எடுத்து வந்து தந்தான்.

இந்திரன் நீலாம்பரியை பார்த்து நிற்பதும், புன்னகைப்பதும் வெளிப் பார்வை வட்டத்திற்கு அப்பால் மங்கலாய் தெரிந்தாலும் சிறிதும் அப்புறம் திரும்பாமல் அய்யனாரையே பார்த்தவாறு தட்டினை வாங்கிய நீலாம்பரி, வெளியேறும் வழி திரும்பியவள், அவசரமாக தட்டினை சோதித்து, ” குட்டி பிள்ளை கழுத்தில போட மாலை கொடுத்து வச்சிருந்தோமே.. அதை சாமி கழுத்தில இருந்து எடுத்து வாங்க. ” என்றவாறு ஏறிட்டாள்.

பூசாரிக்கு சிறப்பு நாள் உதவியாளாக வந்திருந்த இளைஞன் விழித்தான்.

சற்று நேரம் முன்பு தான், பெரிய பூசாரி அய்யனாருக்கு அணிவித்த அந்த மாலையை அவன் அந்த இளம் பெண்ணின் கையில் கொடுத்திருந்தான்.

அவன் பார்வை போன திசையையும் , அவனின் பதட்டமும் கண்ட மகிழ் வேந்தன்,

அது இருக்கட்டும். அதோ புஷ்கலையம்மாக்கு போட்ருக்க மல்லி மாலைய எடுங்க.

கலவரமான குரலில் அத்தான், என்று மெல்லமாய் அழைத்த நீலாம்பரி, அது மல்லி, வெயிட்டா இருக்கும் குட்டிக்கு குத்தும்னு தா பெரியம்மா.. மெனக்கெட்டு ரோஜா இதழ்கள் வச்சு பண்ண சொல்லி வாங்கினோம்..

எனவும் என்ன செய்வது என நின்ற நொடியில்,

இவர்களின் பேச்சை கவனித்த அந்த பெண்மணி தன் மகளின் கையிலிருந்து மாலையை வாங்கி முன்னோக்கி நகர்ந்து வந்து,

தம்பி, இது நீங்க சாத்தினதா? நல்ல வேளையாக கனகா கையில தான் கொடுத்தாங்க. இந்தாங்க. என்று நீட்டினார்.

நீலாம்பரி தயங்கவும், மகிழ் வேந்தன் முன் சென்று வாங்கி தட்டில் உடுப்புகளின் மீது வைத்தான்.

நீ போய் கொடு நீலு. என்றவாறு நகர முற்பட்டவனிடம்,

நீங்க நம்ம பாப்பாக்கு கோச்சிங் சென்டர்ல கிளாஸ் எடுக்கறீங்கன்னு இப்போது தான் சொன்னா. இதான் உங்க குல தெய்வமா? எனக் கேட்க,

சிறு முறுவல் சிந்தியவன், ஆமாம் மா. அஞ்சு தலைமுறையா இவரைத் தா வழிபடறதா ஆச்சி சொல்வாங்க. என்றான்.

ஓ மகிழ்ச்சி தம்பி. எங்களுக்கு உடன்குடி பக்கம் தான் குலதெய்வம். ஆனா ஏழு தலைமுறை முன்னே இங்கே கோயில் படையெடுத்தது இவங்க பெரியவங்களாம். இன்று எங்க பாரிக்கு பிறந்த நாள். அதான் இங்கேயே பூஜை வச்சோம். என்று சகஜமாக பேச,

சரிங்கமா, இன்னிக்கு எங்க மாமா பேத்திக்கு மொட்டை போட்டு காது குத்தறோம். நீங்களும் குடும்பத்தோட குழந்தையை வாழ்த்த வாங்க. என்றவன்,

நிமிர்ந்து அங்கிருந்த அனைவரையும் பார்த்து, எல்லோரும் வந்து குழந்தையை ஆசீர்வாதம் பண்ணனும். என்று அழைப்பு விடுத்தான்.

நிச்சயம் வர்றோம் ப்பா.. என்று அகலமாய் சிரித்த சின்ன சேதுபதியை பார்த்து தலையசைத்தவன் நகர முற்பட,

வேந்தா என்ற அழைப்புக் குரலில் நின்றான்.

உங்க பெரிய மாமா சின்ன மாமா எங்கே இருக்காங்க என சேதுபதி வினவவும்

அது… ம்.. வேட்டைக்காரர் மண்டபத்தில உட்கார்ந்து இருப்பாங்க.

ஓ இதோ நாங்க கோயிலை சுத்திட்டு அங்கே வர்றோம். என்றார் சேதுபதி.

வாங்க என்று கரம் குவித்தவன் நகர்ந்து முன்னே செல்ல அனைவரும் கோவிலின் சிறு மண்டபம் விட்டு வெளியேறி, வலம் வரத் தொடங்கினர்,

வேகமாக முன்னே சென்ற மகிழ்வேந்தன் வழிமறித்து ஏதோ கேட்ட தாயாரிடம் பதில் சொல்லியவாறு, கண்களால் சுட்டி க்ருஷ்ணா கோட்ஸ் கிருஷ்ண ராய சேதுபதியும், விஜய ராய சேதுபதியும்.. நம்ம பக்கத்துக் காட்டை வாங்கினவங்க. அந்த பாரிக்கு பொறந்த நாளாம். பூஜ முடிச்சு வர்றாங்க. என்று சுருக்கமாக சொல்லிவிட்டு மரநிழலில் இருந்த பண்ணையாட்களை நோக்கிப் போனான்.

நட்புணர்வுடன் புன்னகை செய்தவாறு வாசுகிடம் பாரியின் பெரியன்னை இராஜேஸ்வரி பேசத் தொடங்கியதும், பாரி முதலான ஆண்கள் நடக்கத் தொடங்கி விட்டனர். கூடி பொங்கல் வைக்கும் அழகிய குடும்பத்தை கண்நிறைய பார்த்த பூங்கோதை, சத்தமின்றி நெடுமூச்சு விட்டு வழக்கம் போல கணவரின் அடியொற்றியவராய் பின்னே சென்றார்.

பெரியவர் கிருஷ்ண சேதுபதி, பாரிக்கு இருவத்தியெட்டு முடிஞ்சு இருவத்தொம்போது ஆகுதுல்லா.. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிடனும் விஜயா.

ம்.. ஆமா.. அதுக்கு தான் வழி பாத்திட்டு இருக்கேன். இந்த மகிழ்வேந்தன் குடும்பத்தில பொண்ணெடுக்கலாமான்னு.. என்று சொன்னார் சின்ன சேதுபதி.

மெதுவாய் நடந்தவாறு தம்பியை திரும்பி பார்த்தவர். ஓ.. நல்ல குடும்பம். சந்தோஷம். பாரி என்ன சொல்றான்?. என்றார்.

ப்ச்.. என்ற பாரி, ஏதாச்சும் சாதிக்கிற வரை இந்த பேச்செல்லா வேணாம்னு சொல்றேன். க்ருஷ்ணா கோட்ஸ் விட பெரிசா ஒரு ஸ்தாபனம் நிர்மாணம் பண்ணனும். அப்படி வீட்ல கல்யாணம் வைக்கனும்னு ஆசையா இருந்தா, இதோ இவனுக்கும் தா மூனு களுதை வயசாச்சு, இவனுக்கு மொதல்ல பண்ணுங்க. உங்க யோசனை எல்லாம் இவனுக்கு தான் சரிப்படும் , எனவும்

சிரித்தவாறே ஹே ஜாலி.. நான் ரெடி என்றான் இந்திரன்.

சிறு முறுவல் சிந்திய பெரிய தகப்பன், அண்ணன் இருக்க தம்பிக்கு கல்யாணம் பண்ண என்ன அவசரம்னு கேட்கறவங்களுக்கு என்ன பதில் சொல்றது. யோசனை இல்லாம பேசாதே பாரி. அம்மா கூட வருத்தப்படறா.. காலாகாலத்தில அதது நடக்கனும் கேட்டியா? என்றார்.

‘ஆங் அவங்க வேலைதானா இதெல்லாம். எவ்ளோ சொல்லியும் இவர்ட்ட போய் புலம்பினாங்களா? ‘ முகம் இறுக, திரும்பி தாயை முறைத்தான்.

அவர்தான் தன் பெயர் அடிபட்டதும் புத்திசாலித்தனமா நகர்ந்து பிள்ளையார் அமர்ந்து இருந்த அரச மரத்தை சுற்றப் போய் விட்டாரே.

பேசியவாறே அங்கேயிருந்த சிறு சிறு சன்னதிகள் கடந்து கோவிலின் முன்புறம் வந்திருந்தனர்.

சிறு மண்டபம், ஆங்காங்கே இருந்து சிறு தெய்வ சன்னிதிகள், மரத்தடி என்று எங்கும் மக்கள்.. சிறுவர் சிறுமிகள் ஓடியாடி விளையாட, விடலை பருவத்தினர் கள்ள விழிகளுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். இன்னிக்கு நாளைக்கு லீவா போச்சு அதான் இம்புட்டுக் கூட்டம். அடுத்த வருசமெல்லா பேசாத.. ராட்னம், வளையல், பலூன் விக்க கடைகள் கூட, கான்ட்ராக்ட் விட்டு போட சொல்லிடலாம். என்று விரித்த பனை ஓலை பாய்களில் அமர்ந்தவாறு கதை பேசிக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.

சொன்ன ஆளை கூர்ந்து பார்த்த பாரி, நம்ப கும்பிடறதுக்கு கோயிலு மண்டபம்னு கட்டி வச்சா, இவனுங்க என்னாமா கடை போட்டு வருமானம் பண்ண யோசிக்கறாங்க பாருங்க. என முணுமுணுக்கவும் புன்முறுவல் சிந்திய பெரிய சேதுபதி,

அதான் வியாபாரம் பண்றவங்க மூள, எங்கே எத எப்படி வியாபாரம் பண்ணனும்னு புத்தி ஓடிட்டே இருக்கும். ஏன் நீ யோசிக்கலையா? விவசாயம் பண்ண வாங்கிக் கொடுத்த காட்ல பணப் பயிர் மட்டுமே போடனும் இல்லாட்டி ஃபேக்கரி கட்ட இந்த நிலத்தை எப்படி தோதா மாத்தனும்னு..

இரண்டு ஃபேக்டரில ஒரு ஃபேக்டரி எம் பேர்ல இல்ல பசங்க பேர்ல மாற்றிக் கொடுத்திருந்தா ஏன் அவன் அப்படி எல்லாம் யோசிக்கப் போறான் என்று இடை புகுந்தார் சின்ன சேதுபதி.

ஏற்கனவே பேசித் தீர்த்த விஷயத்தை ஏன் நோண்டறவே.. இதற்கு தான் கோவிலுக்கு வாங்க வாங்கன்னு பல தடவ கூப்பிட்டியா. என்று சற்றே கடுமையேறிய குரலில் கேட்க,

வாங்கிக் கொடுத்த காட்டை எம் பிள்ளைகள் எப்படி கருத்தா பாக்கறாங்கன்னு தெரிஞ்சுக்குவீங்கன்னு தா. அது மட்டும் இல்லாத மொத்த நிலமும் கைக்கு வந்தா தான் ஏதாச்சும் பெருசா செய்ய முடியும்னு பிள்ளைக அபிப்பராயப் படுறாக., அதான் ஒன்னு பங்காளியா ஆகிடனும். இல்ல பணங் கொடுத்து வாங்கனும். பொண்ணு எடுத்தா அதச் சாதிச்சிடலாம்.

அதுக்கு அந்த சிவந்தியப்பர்ட்ட பொண்ணு கேட்கனும். அதுக்கு பெரியவங்க வச்சு கேட்டாத்தானே , கவுரவமா இருக்கும்? ஒன்னு பொண்ணு வரணும் இல்ல, அந்த நிலங்களை நீங்களே பேசி வாங்கிக் கொடுங்க. நீங்க தா நேக்கா பேசி சரியா காரியம் சாதிக்கறவக. நீங்க வளத்த பிள்ளைகன்னு வாய்க்கு வாய் சொல்வீங்கல்ல. இதை முக்கியமா செய்யுங்க. என்றார் வேகமாய்.

ப்பா இதில்லா பெரியப்பாட்ட முன்னமே சொல்லி கூட்டி வரலையா நீங்க என்று கையை இழுத்த மகனிடம், கண்களால் அமைதியாய் இருக்குமாறு சைகை செய்தவர்,

அதோ நம்ம முப்பாட்டன் சிலை கிட்ட தா இரண்டு அப்பனுங்களும் நிக்கறானுங்க. வாங்க போய் பேசலாம் என்று தமையனை கைப்பிடியாய் கூட்டிச் சென்றார் .

*********

எடே.. என்று தன் பண்ணையாட்களை அழைத்தவன் ஓடி வந்த முத்துவிடம், எல்லாம் காலை டிஃபனு சாப்டாச்சா. நாலு பேரு போய், நாட்டுக் கோழிங்களுக்கு தீவனங் கொடுக்கறது ஒராள் பண்ணு, தண்ணி மடை மாத்தி விடற வேல இரண்டு பேர் பாருங்க.. மாடுங்களுக்கு தீவன புல் அறுக்கறது ஒரு ஆள் பண்ணு. இன்னிக்கு மரங்களுக்கு தண்ணீர் விடற நாளு. அப்படியே அந்த கம்போஸ்ட் ஓரம் எடுத்து போய் தென்னை, கொய்யாக்குள்ள ஊடு பயிராக கெடக்க செடிகளுக்கு போடனும். போயிட்டு செந்தில அங்கன மஞ்சரியோட காட்டுல களையெடுத்திட்டு இருக்க பொம்பளயாளுகள வரச் சொல்லு. அவிக இன்னும் சாப்பிடல. எனவும்.

சரியென்று தலையசைத்தவன் திரும்ப,

ஏலே என்று நிறுத்தியவன் தோள் தொட்டு திருப்பி

,கோயிலுக்கு பின்னால போட்ட புதுப் பாதைல போ டே.. மேச்சலுக்கு வர்ற மாடுங்க கூட ஒருக்கா சொன்னதும் வழி மாத்திடுது.. நீ இன்னும் மாறல. எனவும் தலை சொரிந்தவன், பல வருஷப் பழக்கம் வேந்தண்ணே.. என்றவன் கோவிலின் புறமாய் சென்றான்.

அப்போது அங்கே வந்த கார்த்திக், வேந்தா , தேவ் ஃபோன் பண்ணான். வரச் சொல்லிடலாமா?

ஏடே, இன்னுமா கேட்டுட்டு இருக்காங்க, காரு தா எப்பவோ அனுப்பியாச்சே. அவுகள சீக்கிரமே வரச் சொல்லிருக்கலாம்ல..

எங்க அம்மா கேட்டா தானே.. நல்ல நேரத்துல தா அவங்க கிளம்பனுமாம். நல்ல நேரத்துல தா இங்க வந்து மஞ்சரிய பாக்கனுமாம் , பேசனுமாம்.

ஏன்லே சலிச்சுக்கறவே.. இதச் சொல்லத்தா பெரியவக.. செரி செரின்னுட்டு போகனும் கேட்டியா.. எனவும்

சிரித்தவன், அது செரி நீ என்னைக்கு உங்க அத்தைய மாமன விட்டுக் கொடுத்திருக்க. செரி , வா காது குத்த நேரம் ஆச்சு , வாடா தாய்மாமா.

தலை உலுக்கியவன், அந்த புள்ள ரெண்டு நாளாத்தா எம்முகம் பாத்து சிரிச்சுட்டு வந்திச்சு. அதுக்குள்ள அதை எம்மடில வச்சு எம்புட்டு கொடும படுத்த முடியுமோ படுத்தி.. என்னிய பாத்தாலே அலறி திரும்புதா போல வச்சிட்டீங்களாடே.. போ போ.. வர்றேன். என்றவாறு நடந்தவன்,

க்ருஷ்ணா கோட்ஸ் பெரியவர் தனது மாமன்களிடம் பேசிக் கொண்டிருப்பதையும் தனது பெரிய மாமன் முகம் இருண்டு இருப்பதைக் கண்ணுற்று,

கார்த்தி, அங்கே என்ன நடக்குது போய் பாரு. நிலவரம் ஏதோ சரியில்ல. காது குத்த போறோம்னு சொல்லி இரண்டு மாமனுங்களையும் கோவிலுக்கு கூட்டிட்டு வந்திடு. மாப்ள வீட உடனே வரச் சொல்லுடே. என்றவன் உற்று நோக்கி,

ஏதோ சரியில்ல.. சீக்கிரம் போ டே.. என்று துரத்தினான்.

*************

காது குத்தி பூஜை முடித்ததும் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட, பெரியவர்கள் சம்பிரதாயமான அறிமுகம் முடிந்ததும் , சிறியவர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இருவருக்கும் பொதுவான கார்த்திக் ரோஷினி பெரியவர்களுக்கு இடையே பாலம் போல நின்று கொண்டு இருந்தனர். பல வருடங்களாக வடக்கில் இருந்த போதிலும் தமிழ் மண்ணும் கலாச்சாரமும் ஊறியவர்களாக பெரியவர்கள் இருக்கு, சற்றே வட இந்திய கலாச்சாரத்தினனாய் மாப்பிள்ளை கிஷோர் தேவ் இருந்தான்.

தேவ மஞ்சரியை புகைப்படத்தில் பார்த்தே பிடித்து போயிருந்த அவனுக்கு நேரில் பார்த்தும்.. இன்னுமும் பிடித்தது, அவனின் மலர்ந்த முகத்திலும் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருந்த புன்முறுவலில் தெரிந்து விட , கார்த்திக் தனது வீட்டுப் பெரியவர்களின் முகத்தினைப் பார்த்தான். திருமணத் தேதி, நிச்சயம் செய்வது எப்போது எப்படி என்ற பேச்சு ஓடத் தொடங்க,

ஒரு நிமிஷம் என்று எழுந்த கிஷோர், நான் பொண்ணுட்ட பேசனும். என்றான்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குடும்பப் பெரியவர் நெல்லையப்பரைப் பார்க்க

அதுக்கென்ன பேசுங்க., மஞ்சரி! அப்படியே அந்த பாதை வழியா நம்ம காடு வரை போயிட்டு வாங்களேன். என,

அவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ மகிழ் வேந்தன்,

நீங்க முன்னாடி போங்க , நானும் நீலுவும் பின்னாடியே வர்றோம் என்றான்.

சரியென்று தலையசைத்தவள், எழுந்து கோவிலின் பின்புறமாய் நடக்கத் தொடங்க, நீள எட்டுக்களுடன் அவளுடன் இணைந்து நடந்தான் கிஷோர் தேவ்.

கோவிலில் இருந்து பஞ்சாங்கத்தை வாங்கிக் கொண்டு வா செந்திலு என்று சொன்ன நெல்லையப்பர் குரலினைக் கேட்டவாறே ஏற்றத்தில் ஏறி ஒற்றையடிப் பாதையை அடைந்தாள் தேவ மஞ்சரி.

கற்பித்தல் தொழிலில் இருப்பதால் அநாவசிய அலட்டல்கள் இன்றி இயல்பும் கம்பீரமுமாய் நடக்கும் அவளைக் கண்டவன் , சிறு முறுவலுடன் பின் தொடர்ந்தான்.

கண்மாய் பாதி நிறைந்து இருப்பதைக் கண்டவன், இந்த பாண்ட் எப்பவும் இவ்ளோ தண்ணீர் இருக்குமா என்றான் இயல்பாய் பேச்சு தொடங்கியவனாய்.

சில நொடிகள் அமைதியாய் இருந்தவள், இந்த வருஷம் கோடைல மழை அதனால ஒரளவு தண்ணி இருக்கு. பொதுவா பாதி ஊருணி நிறஞ்சு இருக்கும். மழை சரியில்லை ன்னா காஞ்சு பொட்டலா கூட கிடக்கும். என்றாள்.

ஓ, என்றவன், அப்புறம் ஏன் தனியா கூப்டேன்னா, எனக்கு உங்கள உங்க ஃபேமிலி ரொம்ப பிடிச்சு போச்சு. உங்களுக்கு இந்த ப்ரொபோஸல் பிடிச்சு இருக்கா? என்னை பற்றி, என் குடும்பம் ஜாப் பற்றி கார்த்திக் சொல்லிருப்பாங்க.

எனவும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

கல்யாணம் பத்தி எதிர்காலம் பத்தி ஏதும் கேட்க சொல்லனும்னு இருந்தா சொல்லிடுங்க. இந்த பதினஞ்சு நிமிஷப் பேச்சு தான் நம்மோட மிச்சமிருக்கிற வாழ்க்கையை தீர்மானிக்க போகிறது இல்லியா? என்று சிரித்தவன் , சொல்லுங்க மஞ்சரி..ஐ மீன் பேசுங்க. என்றவனை பாராமல் அமைதியாக நடக்க,

என்னை பிடிச்சுருக்கான்னு கேட்க முடியல. நான் தான் வந்ததிலிருந்து பாக்கிறேனே.. நீங்க என்ன நிமிர்ந்து கூட பாக்கல. இதை வெட்கம் என்று நினைக்கற அளவு நான் மோசமான 90’ஸ் கிட் இல்ல. உங்க மனசில என்ன இருந்தாலும் சொல்லுங்க என்றவன் , அவள் அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் புடவையின் முந்தி நுனியை கையில் திருகியபடி நடப்பதைக் கண்டவன் , தானும் அமைதியாகி கைகளை பின்னால் கட்டியபடி நடந்தான். சில நொடிகள் அவ்வாறே கழிய,

க்ராக் எனும் பயங்கர சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றாள்.

கண்மாயில் இருந்த பறவைகளில் ஒன்று தான் வாள் போன்ற நீண்ட கூரிய அலகினை திறந்து சப்தமிட்டுக் கொண்டிருந்தது.

பெரிய உருவமும் நீண்ட சிறகுகளும் உடைய பறவைகள் அங்கே கும்பல் கும்பலாய் எக்கச்சக்கமாய் நின்று , நீந்திய படி மீன் மற்றும் நத்தை வேட்டையில் பிஸியாக இருந்தன்.

மதிய சூரியன் உச்சிக்கு ஏறி இருக்க, வெயிலும் காற்றும் சம அளவு இருந்தது.

அவள் பதில் ஏதும் சொல்லாமல் நடப்பது கண்டவன் அப்படியே நின்றான். சில பத்து அடிகள் நடந்தவள், அவன் அருகில் வராதது உணர்ந்து நின்று திரும்பி பார்க்க, நாம திரும்பலாம் ங்க. இது போல தண்ணீர் பாக்க இங்கே வரை. மை ஜாப் ஓவர். இனி உங்களுக்க பிடித்தம் பிடித்தமில்லாதது என்னிடம் சொல்லலைனாலும்

உங்க ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட சொல்லுங்க.. என்றவன் திரும்பி நடக்கலானான்.

பேசீட்டீங்களா என்று கேட்ட மகிழ்வேந்தனை நோக்கிப் புன்னகை சிந்தியவன், நான் மட்டும், உங்க பொண்ணு பேசல. எங்க சைட் ஓகே, நீங்க பார்த்துக்குங்க.. என்றவன் தனது அலட்டலில்லா நடையில் கோவில் புறம் செல்ல..

நீர் நாரைகளை பார்த்தவாறு நிற்கும் தேவ மஞ்சரியிடம் சென்றான்.

ஓய் டீச்சரு,

மஞ்சரிம்மா..

எனும் குரல்களுக்கு திரும்பாதவள்,

மாரீயம்மா.. மாரீயம்மா… என்ற மலேஷியா வாசு தேவனின் குரலுக்கு முறைத்தவாறு திரும்பினாள்.

அலறிய அலைபேசியை எடுத்து, கையில் பிடித்தவாறு சில நொடிகள் இருக்க..

அதை நிறுத்துங்க அத்தான் எனும் மஞ்சரியின் அதட்டலில் சிரித்தவாறே அழைப்பினை எடுத்தான்.

என்னடே.. செனையா இருந்த ரேகாவா.. சாப்பிடாம அலபாயுதா.. செரி செரி.. நம்ப டாக்டருக்கு கூப்பிடு.. நம்ப அழகம்மா பாட்டிய கூப்பிட்டு பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லு. நாங்க இன்னும் சித்த நேரத்தில கிளம்பிருவோம் டே.. என்றவன்..

எதிர்புறம் என்ன கேட்டானோ.. அம்மாவாச அதுமா கறிக்கஞ்சி கேக்குதாடே.. தோ வர்றேன்.. ஒன்னிய வைடே ஃபோன.. என்றவன்..

நீலூ, நீயே ஒந்தங்கச்சிட்ட பேசு.. என்ன இந்த அம்மைய தாங்கனுமோ.. ஏ டீச்சரு கொஞ்ச நேரத்துக்கு மின்னே மாப்பிள்ள ஃபோனு அடிச்சது.. எப்படி அடிச்சது தெரியுமா… என்று பெரிய ஆச்சரியம் போலக் கேட்க..

சுளித்த புருவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள்.. அமைதியாக பார்க்க.

அப்புறம் திரும்பவும் அடிச்சது.. தெரியுமா, அவரு கட் பண்ணிட்டாரு.. என இழுக்க..

ப்ச்.. ஃபோனு அடிக்கறதை ஏன் இழுத்து இழுத்து சொல்றீங்க.. என்னவாம்.. எனவும், அவளின் தலையில் அலைபேசியாலேயே ஒரு தட்டு தட்டியவன்,

இப்போ ஹிட்டாச்சே ஒரு பாட்டு.. நீ கூட கேட்டுட்டே இருநிதியே.. ஆங்.. அகநக முக ன்னு வருமே அந்த பாட்டு.. அதும் அப்படியே காத்துல மொதக்க விடறாப் போல ஒரு புல்லாங்குழல் ரீமிக்ஸ்.. சவுண்டு.. சட்டையும் பாத்தியா வெள்ளை, மேல மெலிசா ப்ளூ.. செம்மையா இருக்காருல்ல.. ரசனை எல்லாம் ஒத்துப் போகும் போலத் தெரியுது. எவ்ளோ பாந்தமா பேசுறாக.. ஆசைதா இரண்டாயிரம் கிமீ தாண்டி வந்திருக்காங்க, ஒரு வார்த்தை கூட பேசாத.. என்ன புள்ளையோ.. என்றவன்.

நீலு ஒந்தாங்கச்சிட்ட நீ பேசு.. இந்தா அம்மையும் வந்திட்டாங்க.. மீ எஸ்கேப்பு.. என்றவாறு நடக்க ஆரம்பித்தான்.

சற்று நேரத்தில் மூச்சு வாங்க வந்து நின்ற வாசுகி, ஏண்டி, இப்பவே தட்டு மாத்தனும்னு பெரிய அண்ணாச்சி சொல்லுதாரு. மாப்பிள்ள என்னவோ நீ வந்து சரின்னு சொல்லனும்ங்கறாரு. இங்கே என்ன வழக்காடிட்டு இருக்கீங்க. எனவும்,

ப்ச் .. எல்லாம் உங்களால தா அத்தை என்றாள் மஞ்சரி.

ஏது.. என்னாலவா.. நா என்னடி பண்ணே.. என அதிர்ந்தவரின் குமட்டில் குத்தியவள், உங்கள யாரு ஒரு பையன மட்டும் பெறச் சொன்னது. இரண்டு பையனா பெத்திருந்தா நானும் உங்க பிள்ளையே கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே இருப்பேன்ல.. என்று விளையாட்டாய் சொன்னவள்.. கண்களில் நீர் நிறைய, உங்களை எல்லாம் பிரியனும்.. இந்த ஊரு, இந்த ஊருணி.. இந்த வயலு இதெல்லா எனக்கு எட்டாத தூரத்துல போய்டும்.. ஏன் என்னிய வேரூருக்கு கட்டிக் கொடுக்கனும்னு நினைங்கிறீங்க. நம்மூருல, பாவநாசத்துல எல்லாம் மாப்பிள்ள இல்லியா என்ன.. என்று கேட்க..

நீலாம்பரியை திரும்பிப் பார்த்தவர், என்னடியம்மா இவ இந்நேரம் இப்படிச் சொல்றா.. இந்த க்ருஷ்ணா கோட்ஸ் குடும்பத்துக்காரவங்க, சித்த நேரம் மின்னே பொண்ணு கேட்டுட்டாங்கனு சின்ன அண்ணாச்சி பாதி வெசனமும் பாதி சந்தோஸமும்மா சொல்லிட்டு இருந்தாரு.. இது காதுல விழுந்தா.. நல்லவேளையா போச்சுன்னு அந்த ஆட்கள் தட்டை தூக்கிட்டு வரப் போறாங்க. எனவும்

நெஞ்சில் கை வைத்து நீலாம்பரி , “அத்தே என்ன இப்படி சொல்றீங்க. நிசம்மாவா.. அந்த ஆளுங்க மண்ணையும் மதிக்க மாட்டாக பொண்ணையும் மதிக்க மாட்டாக. அவங்கட்ட எந்தங்கச்சி போய் வாழனுமா.. அப்பாட்ட நா சொல்றேன். அந்த பாரிய கல்யாணம் பண்றதும் இதோ இங்கன இருக்க புத்துக்குள்ளாற கை விடறதும் ஒன்னுன்னு சொல்றேன்.” என்று பாதை நோக்கி கைகாட்டியவாறு திரும்பியவள், அங்கே ஆறடி உயர ராஜநாகமாய் தலையுயர்த்தி இடுப்பில் கை வைத்தவாறு நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்து நின்றாள்..

நாயகன் ஆடுவான்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
தாமரை

Recent Posts

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

    சேதி 21 *********                 சென்னையின், போக்குவரத்து…

13 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது…

15 hours ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த…

2 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த…

3 days ago

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும்…

4 days ago

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக…

6 days ago