Categories: Ongoing Novel

தகிக்கும் தீயே குளிர்காயவா 7/8

(7)

 

தன் கைப்பையை எடுத்துக்கொண்டு, குளிருக்குத் தோதாக, தடித்த மேற்சட்டையை அணிந்துகொண்டு, வீட்டைக் கவனமாகப் பூட்டிவிட்டு, மின்தூக்கியின்  அருகே வந்தவள், அதன் பொத்தானை அழுத்தி, அது வரும் வரைக்கும் காத்திருந்தாள்.

 

அடுத்த இரண்டு நிமிடங்களில் மின்தூக்கியின் கதவு திறக்க, உள்ளே நுழைய முயன்றவள் சற்றுத் தயங்கினாள். அங்கே வாட்ட சாட்டமாக மூவர் உள்ளே நின்றிருந்தனர். அதில் இருவர் கறுப்பர். மற்றவன், இந்தியன், இல்லை ஈழத்தவனாக இருக்கலாம். அதில் சிவார்ப்பணாவின் விழிகள் யோசனையுடன் அந்த கறுப்பனின் மீது நிலைத்தன.

 

‘இவனை எங்கோ பார்த்ததுபோல இருக்கிறதே… எங்கே?” என்று யோசித்தவளுக்கு எங்கேயென்று கைகாட்ட முடியவில்லை. உள்ளே நுழைவதா, இல்லை வெளியே நிற்பதா என்று தயங்கியவள், நேரம் போன காரணத்தால் காத்திருக்கப் பிடிக்காமல் உள்ளே நுழைந்து ‘ஜி’ பொத்தானை அழுத்த அடுத்த விநாடியில் மின்தூக்கி தரையை வந்தடைந்தது.

 

எலிவேட்டரிலிருந்து வெளியே வந்தவள், தான் வழமையாகச் செல்லும் ‘மிஸ்டர் சப்’ இதற்குள் நுழைந்து, பிடித்ததைக் கூறிவிட்டு அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு உணவோடு, மேசையில் வந்து அமர்ந்தவளுக்கு மீண்டும் அந்த அநபாயதீரனின் நினைவு வந்தது. கூடவே அவனுடைய முத்தமும்.

 

‘சே… ஓரளவு அவனை மறந்திருந்தாள்… அதற்கிடையில் மீண்டும் அவனுடைய நினைவுகள் பூத்துவிட்டனவே… எல்லாம் அந்த ரகுவால் வந்தது…’ என்று எண்ணியவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.

 

இதுவரை அவன் யாரையும் அவளுடைய வீட்டிற்கு அழைத்துவந்ததில்லை. அது அவளுக்குப் பிடிக்காது என்பதும் ரகுவிற்குத் தெரியும். அப்படியிருக்கிற போது, எப்படி அந்த அநபாயதீரனை இங்கே வரச்சொல்லி அழைத்திருப்பான்?’ யோசித்தவளுக்கு மீண்டும் ரகுவின் மீது கோபம் வந்தது.

 

‘இப்படி ஒருவன் வருவான் என்று சொல்லாமல் எங்கே போய்த் தொலைந்தான் கபோதி..’ என்று முடிந்த வரை அவனைத் திட்டித் தீர்த்தவள், தன் வாய்க்குள் உணவைத் திணித்தவாறு, ‘வரட்டும் வரட்டும்… எப்படியும் என் கையில் சிக்காமலா இருக்கப்போகிறான் அப்போது இருக்கிறது அவனுக்குக் கச்சேரி… என்று திட்டியவாறு, திணித்த உணவைச் சுவைக்கத் தொடங்கினாள்.

 

தனிமையில் சாப்பிடும் போது, ஏனோ, மனம் கனத்தது. இன்று அவளுடைய பிறந்தநாள். யாரும் இல்லாத அநாதையாக உணவை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாளே.

 

“படுபாவி… என்னுடைய பிறந்தநாளை நிம்மதியாக அனுபவிக்க விடாமல், எங்கே போய்த் தொலைந்தான்…” என்று ரகுவைத் திட்டியவாறே அடுத்த வாயை வைத்தவளின் கண்கள் எல்லா இடமும் சுழன்றன.

 

அப்போதுதான் அவள் கவனித்தாள்.

 

அந்த எலிவேட்டரில் அவளுடன் வந்த மூவரும், சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தனர். முதலில் அதை அவள் பெரிதாக எடுக்கவில்லைதான். ஆனால், அதில் ஒருத்தனின் பார்வை அவள் பக்கமே அடிக்கடி வந்து போக, ஏனோ இவளுக்குக் குளிரெடுத்தது.

 

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, அவர்கள் சாதாரணமாகக் கூட வந்திருக்கலாம்… இவள் தேவையற்றும் பயப்படலாம்… ஆனால், அங்கிருப்பவர்களின் பார்வை, அடிக்கடி இவள் பக்கமாக வந்து செல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

 

‘ஓக்கே… ஓக்கே… ஒரு அழகான பெண் தனித்திருந்தால், இப்படித்தான் பார்க்கத் தோன்றும்… அதற்கெல்லாம் சந்தேகப்பட முடியுமா?’ என்று தன்னையே தேற்றிக்கொண்டவள், மீண்டும் சாப்பாட்டில் ஒரு வாய் வைத்தவளுக்கு ஏனோ பசி மரத்துப் போனது.

 

அவளையும் அறியாது ஒருவிதப் பயம், ஆட்கொள்ள, அதற்கு மேல் அவளால் உண்ண முடியவில்லை. சாப்பிட்டது, சாப்பிடாதது என்று அப்படியே தட்டில் போட்டுவிட்டு எழுந்தவள், அதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெளியே வர, அந்த மூவரும், தங்கள் சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு அவள் நிழலாக நடக்கத் தொடங்கினர்.

 

அதை உணர்வால் புரிந்துகொண்டவளுக்கு இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.  ஒரு வித அச்சத்துடன் தன் நடையின் வேகத்தைக் கூட்டியவளுக்கு எதற்காக அவர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்கிற புரியா குழப்பத்தில் சற்றுத் தடுமாறியவளாக மேலும் தன் வேகத்தை அதிகரித்தாள்.

 

அச்சத்துடன், யாராவது அந்தப் பாதையால் நடந்து போகிறார்களா? அவசரத்திற்கு ஏதாவது உதவி கிட்டுமா என்று எட்டி எட்டிப் பார்த்தவளுக்குத் தன் தலையைத் திருப்பிப் பின்தொடர்ந்தவளைப் பார்க்க அச்சமாக இருந்தது. ஆனாலும் தன்னையும் மீறித் திரும்பிப் பார்க்க, இவளைத்தான்  அவர்கள் முறைத்துப் பார்த்தவாறு பின்னால் வந்துகொண்டிருந்தனர். இதயம் வாய்க்குள் வந்து துடிப்பது போலத் தோன்றியது சிவார்ப்பணாவிற்கு.

 

குறைந்தது தொலைவில் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். மருந்திற்கும் ஆட்களில்லை. அவள் வசிக்கும் இடத்தில், பொதுவாகவே கோடைக்காலத்தில் மனித நடமாட்டம் குறைவாக இருக்கும். அதிகமானவர்கள், வாகனத்திலேயே கூடியளவு பயணிப்பார்கள். நடைப்பயிற்சி என்றால் மட்டும் வெளியே தலைகாட்டுவார்கள். அதுவும் குளிர்காலத்தில் சுத்தம். இந்த நிலையில். பின் தொடர்ந்து வருபவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது?

 

அவள் தன் வேகத்தை மேலும் கூட்ட தொடர்ந்து வந்தவர்களும் தங்கள் வேகத்தைக் அதிகரித்தனர். அதைக் கண்டதும் அச்சம் மேலும் பற்றிக்கொண்டது. அவசரத்திற்கு மூளைகூட வேலை செய்ய மாட்டேன் என்று மக்கர் பண்ணியது. அப்போதைக்கு அவளுக்குத் தெரிந்தது ஓடுவது ஒன்றுதான். உடனே வேகமாக ஓடத் தொடங்க, அவர்களும் அதற்கேற்பப் பின்னால் ஓடிவரத் தொடங்கினர். அவளுக்கும் அவர்களுக்குமான தூரம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது.

 

இப்போது என்ன செய்வது? தன் வீட்டுப் பக்கமாகப் போகவும் அச்சமாக இருந்தது. அவள் தனியாகத்தானே இருக்கிறாள் என்று அத்துமீறி உள்ளே நுழைந்துவிட்டால்? காவல்துறையை அழைத்தால் கூட, அவர்கள் வருவதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே…

 

இப்போது பின்னால் வந்தவர்களின் அரவம் மிக அருகே கேட்க, அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாக, மெய் பதற மேலும் தன் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்கினாள். மூச்சு வேறு வாங்கியது. கிடைத்த திருப்பங்களில் திரும்பி ஓடினாள்… அவர்களும் கச்சிதமாக அவளைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்தனர்,

 

‘கடவுளே… எதற்குப் பின் தொடர்கிறார்கள்… என்ன செய்யப்போகிறாள்… இவளைக் கடத்திச் சென்று கற்பழித்துக் கொலை செய்யப் போகிறார்களோ… ஐயோ.. இவளை யார் காக்கப் போகிறார்கள்…?’ செயல் பட மறுத்த புத்தியைத் தட்டி எழுப்ப முயன்றாள். அதுவோ விழிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. எங்காவது பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளலாம் என்றால் எங்கேயென்று ஒளிந்து கொள்வது. இந்த இரவு ஒன்பது மணிக்கு, யார் கதவைத் திறந்து உதவப் போகிறார்கள்.

 

“ஓ… காட்… ப்ளீஸ் ஹெல்ப் மி…” என்று தன்னை மறந்து வேண்டியவள், அப்போதுதான் பார்த்தாள். சற்றுத் தொலைவில் பேருந்துத் தரிப்பிடத்தில், ஒரு சிலர் நின்றிருந்தனர். அதுவரை அடைத்திருந்த பயம் மாயமாக விலகிப் போக, பெரும் நிம்மதியுடன், அவர்களை நோக்கி வாயு வேகம் மனோவேகத்துடன் ஓடி அவர்களுடன் உயிரைக் கையில் பிடித்தவாறு திரும்பிப் பார்த்தாள். இப்போது அவர்களைக் காணவில்லை.

 

பெரும் நிம்மதி மூச்சுடன், திரும்பியவளின் காதில்,

 

“நவம்பர் மாதம்தான் ஆகியிருக்கிறது… அதற்குள் குளிர் இப்படி வாட்டுகிறதே… சே…” என்று இருவர் பேச, சடார் என்று அவளுக்கு நினைவு வந்தது.

 

ஆறு மாதங்களுக்கு முன்பு, பேருந்தில் ஏறுவதற்காக, அவள் தரிப்பிடத்தில் நின்றபோது, சற்றுத் தள்ளி இருவர் நின்று கைப்பேசியை வைத்து நோண்டிக்கொண்டிருந்தது இவர்கள்தானே… மீண்டும் விழிகளை மூடி, மங்கலாகத் தெரிந்த உருவங்களைத் தெளிவு படுத்த முயன்றாள். ஆமாம் அவர்களேதான். இவள் பேருந்தில் ஏறிய போது இவர்கள் ஏறாமல் அங்கேயே தங்கி நின்றிருந்தனர்.

 

அப்படியானால், இவர்கள் ஆறுமாதங்களாக என்னைப் பின்தொடர்கிறார்களா? இல்லை ஏதேட்சையாக அவளைத் தொடர்கிறார்களா… அன்று என்னைக் கண்ட பின்புதான் என்னைப் பின்தொடர நினைக்கிறார்களா? அப்படியே பின்தொடர்ந்தாலும், எதற்காக என்னைப் பின் தொடர்கிறார்கள்? எனக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று விடை தெரியாக் கேள்விகளைக் கேட்டவளுக்கு, அவர்களின் நோக்கம் நல்லதல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

 

“கடவுளே’ என்று பதறியவாறு, மீண்டும் திரும்பிப் பார்த்தாள். நல்லவேளை அவர்களைக் காணவில்லை.

 

திரும்பித் தனியாகப் போகவும் அச்சமாக இருந்தது. ஆனாலும், இருந்த கொஞ்ச நஞ்ச தைரியத்தைத் தொகுத்து, இணைத்து மெதுவாகத் தன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கியவளுக்கு விரைவிலேயே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

 

ஒரு சந்தில் மறைந்திருந்தவர்கள், அவள் தனியாக வருவதைக் கண்டதும், இப்போது, அவள் முன்னால் தைரியமாக நின்றிருந்தனர்.

 

அந்த மூன்று பேரின் முகங்களிலும், அப்பட்டமான ஏளன நகைப்பு வழிந்துகொண்டிருந்தன. அதிர்ந்துபோனாள் சிவார்ப்பணா.

 

பயத்துடன் அவள் திரும்பி ஓட முயல, அவளுடைய பாதையை மறைத்தவாறு ஒருவன் வந்து நின்றான். பதறிப்போனாள் அவள். இதயம் வேகமாக வாய்க்குள் வந்து துடித்தது. அச்சத்தில் மூச்சு பெருமூச்சாக மாறி, வேகமாக வீச, மார்பு மேலும் கீழுமாக அசைந்தது.

 

அவளுடைய மார்பின் அசைவையே வெறித்துப் பார்த்த ஒருவன், இழித்தவாறு, “ஹே பியூட்டி…” என்றவாறு நெருங்கத் தொடங்கினான்.

 

பதட்டத்துடன், மறுபக்கம் அவள் திரும்ப முயல, அந்த இடத்தை இன்னொருவன் மறித்தான்.

 

‘ஓ காட்… நான் எப்படித் தப்பப் போகிறேன்? ப்ளீஸ் அநா… யோசி… யோசி… யு கான் டூ இட்… நீ எப்படியாவது தப்பித்துப் போகவேண்டும்… யோசி.. யோசி…’ என்று உள் மனது, அவளுக்கு உரம் ஊட்ட, பதட்டத்தில் பிடிமானம் இல்லாமல், தன் கைப்பையை அழுந்தப் பற்றியவாறு,

 

“ஹூ… ஹூ ஆர் யு… லீ… லீவ் மி…” என்று முடிந்த வரைக்கும் தன் குரலில் பதட்டம் தெரியாதவாறு கத்த முயன்றாலும், அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி, அவளுடைய குரல் நடுங்கத்தான் செய்தது.

 

அதைப் புரிந்துகொண்ட அந்த மூவரும் பலமாகச் சிரிக்க, எங்கே பயத்தில் அறிவு கெட்டு மயங்கிவிடுவோமோ என்று அஞ்சியவளாக, தன்னை மறந்து…

 

“எ… என்ன வேண்டும்… உங்களுக்கு … லெட் மி கோ… எதற்காக என்னை… இப்படி…” அவள் முடிக்கவில்லை, ஒருவனின் கரம், அவளுடைய தோளில் படிய, அதற்கு மேல், தாங்க முடியாதவளாகத் தன் கைப்பையை எடுத்து, அவன் முகத்தில் விசிறி அடித்தவள், அவன் தடுமாறிய தருணத்தைப் பயன்படுத்தி, வேகமாக ஓடத் தொடங்கினாள்.

 

எங்கே ஓடுகிறோம், எந்தப் பக்கம் போகிறோம் என்பது கூடத் தெரியாமல், ஓடியவள், ஒரு சந்தியில், பலமான, இரும்பு போன்ற ஒரு உடலுடன் மோதி நின்றாள். நிமிர்ந்து பார்த்தால், அவன் தலையைத் தொடுவதற்கே ஏணி தேவைபோல இருந்தது. உடல் அவளுடைய கிங்காங்கை விட ஒன்றரை மடங்கு அகலம். அதைக் கண்டதும் அதுவரையிருந்த தைரியம் சுத்தமாகத் தொலைந்து போனது சிவார்ப்பணாவிற்கு.

 

‘சரி அவள் கதி அதோ கதிதான்…’ என்று எண்ணியவளாக, அவனிடமிருந்து விலக முயன்றவளுக்கு அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெரிய உருவத்தின் கரங்கள், அவள் உடலை வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தன என்பது.

 

“ஹெல்ப் மீ… ஹெல்ப்…” என்று அவள் கத்திய கத்திற்கு அந்த மூன்று தடியர்களும், அவள் பின்னால் வந்து நின்றதுதான் மிச்சம். அதில் ஒருவனின் கண் வீங்கிப்போய் சிவந்திருக்க, மறு கண்ணால். அவளைக் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.. அது அவள் செய்த நல்ல காரியம்தான். அவள் கைப்பையால் அடித்தபோது, அவனுடைய ஒற்றைக் கண்ணில் காயம் பட்டிருக்கவேண்டும்.

 

‘தப்புப் பண்ணிவிட்டேன்… மற்றைய கண்ணிலும் ஓங்கி ஒன்று போட்டிருக்கவேண்டும்…’ என்று காலம் கடந்து எண்ணியவள், தன் முன்னால் நின்றிருந்த ராட்ஷசன் அவளைப் பற்றித் தூக்க முயல, திமிறித் துடித்தவாறு, அவனிடமிருந்து தன்னை விடுவிக்கப் போராடினாள்.

 

அப்போதுதான் மின்னலென, உயர்நிலைப் பள்ளியில் சொல்லிக்கொடுத்த தற்காப்புக் கலை நினைவுக்கு வந்தது. அதை இவனிடம் பிரயோகிக்க முடியுமா? அவள் அடித்தால், அவனுக்குக் கொசு கடித்ததுபோல அல்லவா இருக்கும்? இருந்தாலும் முயன்று பார்ப்பதில் தப்பில்லையே.. என்று எண்ணியவள், அவன் தன்னை சுதாரிப்பதற்கு முன்பாகத் தன் முழங்காலை மடித்து, அவனுடைய உயிர் நாடியில் ஓங்கி ஒரு அடி அடிக்க, அவனுடைய அழுத்தமான பிடி சற்றை இளகியது.

 

மீண்டும் தன் கைப்பையை ஓங்கி அந்த ராட்ஷசனின் மீது வீசியவள், அடுத்து, காற்றுக்குப் போட்டியாக ஓடத் தொடங்கினாள். அவளால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் ஓட முடியவில்லை. அதுவும் அந்த அடிவாங்கிய ராட்ஷசன், எப்படியோ அவளைப் பிடித்துவிட்டிருந்தான்.

 

அந்த நேரத்திலும் தன்னால் முடிந்த வரை, உதவிக்கு அழைக்க, “ஹெல்ப்… ஹெல்ப் மீ… ஹூ த xxx…. ஆர் யு… லீவ் மீ… லீவ் மீ… ஹெல்ப் மீ… “ என்று அவள் கதறிய கத்தம், மறு கணம், அவள் வாயில் ஒட்டிய பிளாஸ்தர் மூலம் நிறுத்தப்பட்டது.

 

சிவார்ப்பணாவிற்கு மூச்சு முட்டியது. ‘படுபாவி, வாயை ஒட்டுகிறேன் என்று, மூக்கையும் சேர்த்து ஒட்டிவிட்டானே. டேய் பிளாஸ்திரியை எடுத்துவிடுடா… மூச்சு எடுக்க முடியவில்லை…’ என்று சொல்வதற்கு வாய் திறக்க, வெறும் முனங்கும் ஒலிதான் வெளியே வந்தது.

 

அவள் துடித்து உதறுவதை அந்தப் பெரிய மிருகம் கொஞ்சமும் லட்சியத்தில் கொண்டானில்லை. வேகமாக அவளைத் தூக்க முயல, இவளோ தன் கால்களை உதறி, மேலும் அவனை அடிக்க முயல, அதை இலகுவாகத் தடுத்த அந்த ஜம்போ ஹல்க், அவளை ஒரு பை போல, பக்கமாக ஒற்றைக் கரத்தால், தூக்கியிருந்தான்.

 

சரி அவள் கதை அத்தோடு முடிந்தது. இனி ஒரு போதும் அந்த கிங்காங்கை அவள் பார்க்கப் போவதில்லை… அவள் இறந்தாலும் அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ… வேதனையுடன் எண்ணிக்கொண்டிருந்த நேரம்,

 

“லீவ் ஹர்…“ என்கிற அழுத்தமான, அடர்த்தியான, பலமான இரும்பை ஒத்த குரல் ஒன்று காற்றைக் கிழித்தவாறு அந்த இடத்தை நிரப்பியது.

 

முதலில் அந்தச் சத்தம் சிவார்பப்ணாவின் காதுக்குக் கேட்கவேயில்லை. திடீர் என்று, எதிரிகளிடமிருந்து அசைவு நின்றுவிட்டது என்பதை அறிந்து புரியாமல், அவனிடமிருந்து விடுபடத் துடித்தவாறு, என்ன நடக்கிறது என்பதைப் பரப்பதற்காகத் தலையை அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய கால்கள் முன்புறமும், தலை பின்புறமும் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியவில்லை.

 

அந்தப் பெரிய ராட்ஷசனோ,

 

“ஹூ த ஹெல் ஆர்… யு… மூவ் எவே…“ என்று கர்ஜிக்க, அப்போதுதான் குறுக்காக யாரோ நிற்கிறார்கள் என்பது சிவார்ப்பணாவிற்குப் புரிந்தது.

 

‘யாராக இருக்கும்? அவளைக் காக்க வந்த கடவுளா? இல்லை கொல்ல வந்த எதிரியா? கடவுளே… ப்ளீஸ் ஹெல்ப் மீ…’ என்று துடித்தவள், ஏனோ அந்தப் பெரிய ராட்ஷசனின் பிடி விலக, இவள் துடித்த துடியில் குப்புற பொத்தென்று தரையில் விழுந்தாள். விழுந்தவளின் முக்கு தரையோடு பலமாக மோதுப்பட, உள்ளே பொய் மூக்கு உடைந்து கொடகொடவென்று இரத்தம் வேறு வழியத் தொடங்கியது.

 

மூக்கைப் பற்றிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தவள், விழிகளில் நீர் முட்ட, நிமிர்ந்து பார்த்தாள். அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும், வாய்பேசும் திறன் இழந்து அப்படியே தன்னிலை கெட்டு அமர்ந்திருந்தாள். அங்கே இரண்டு கால்களையும் சற்று அகட்டி, முதுகுக்குப் பின்னால் இரு கரங்களையும் கட்டி, நாடி நிமிர்ந்திருக்க, தேர்ந்தெடுத்த படைவீரன் போல நின்றிருந்தான் அவன்.

 

‘கிங்காங்…’ அதுவரை அவளைவிட்டுப் போயிருந்த அந்தப் பலம் மீண்டும் அவளை வந்தடைய, கிடைத்த வாய்ப்பை வேகமாகப் பற்றுபவள் போல, அவர்களிடமிருந்து விலகிக் கண்ணிமைக்கும் நொடியில், அவனருகே சென்று அவன் மார்பில் பலமாக மோதி அடைக்கலம் புகுந்திருந்தாள் சிவார்ப்பணா.

 

எப்படி எழுந்தாள், எப்படி ஓடினாள், எப்படி அவனிடம் சென்று சேர்ந்தாள் என்பது, அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

அப்போதைக்கு அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அவனிடம் சென்று சேருவது மட்டுமே.

 

அவனுடைய தடித்த மேற்சட்டையைத் தன் இரு கரங்களாலும் அழுந்தப் பற்றித் தன் முகத்தை அவன் மார்பில் ஆழமாகப் புதைத்திருந்தாள்.

 

அவளுடைய முகம், முடிந்தால், அந்த மேற்சட்டையையும் கிழித்துக்கொண்ட, அவனுடைய மார்பிற்குள் தஞ்சம் புகுந்துவிடும் போல, அழுத்திக்கொண்டிருந்தது. உடலோ நடுங்கியது.

 

“தீரன்… ப்ளீஸ் சேவ் மி… யாரோ என்னை என்னைக் கடத்த முயல்கிறார்கள்…“ என்று அவள் பிதற்ற பிளாஸ்டரையும் மீறிக் கேட்ட ஓசையில்  அவள் என்ன கூறுகிறாள் என்பது புரியாமல், தன் மார்புக் கூட்டில் புதைந்திருந்த அந்தச் சின்ன உருவத்தை, உடல் அசையாமலே, விழிகளால் மட்டும் கீழே பார்த்து ஒரு கணம் விழித்தான் அந்த அநபாயதீரன்.

தன் கிங்காங்கிடமிருந்து எந்த அசைவும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சிவார்ப்பணா, சிறு எரிச்சலுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அப்போதுதான் அவள் கூறிய வார்த்தைகள் வெறும் முனங்கல்களாக வெளிப்பட்டதற்கான காரணம் புரிந்தது.

 

நிமிர்ந்து அந்தத் தடியர்களை வெறித்துப் பார்த்தவன், பற்களைக் கடித்துப் பெரு மூச்சொன்றை வேகமாக விட்டு அவளுடைய நாடியைப் பற்றித் தூக்கி, ஒரு இழுவையில் அந்தப் பிளாஸ்தரை, உரித்தெடுக்க.

 

“அவுச்…“ என்கிற சத்தத்துடன், தன் வாயைப் பொத்தினாள் சிவார்ப்பணா. அநபாயதீரனைப் பார்த்து முறைத்து

 

‘மெதுவாக இழுத்தால் என்ன கை உடைந்துபோகுமா… அம்மாடி… என்னமாக வலிக்கிறது…’ என்று திட்டினாலும், அவனை விட்டு அவள் இம்மியும் விலகாது, அவனை ஒட்டியே நின்றுகொண்டாள்.

 

அநபாயதீரனோ மீண்டும் அவள் முகத்தைப் பற்றித் தூக்கிப் பார்த்தான். அங்கே கண்ட இரத்தத்தைக் கண்டதும் அவன தாடை இறுகின. பற்கள் ஒன்றையொன்று அரைத்தன.

 

அதே நேரம், அந்தத் தடியன், இருவரையும் நோக்கிக் கோபமாக வந்தான்.

 

சிவார்ப்பணாவிற்குச் சர்வமும் நடுங்கியது. இன்னும் தன்னை அவனுக்குள் புதைத்துவிடுபவள் போல, அவனுடைய வலது கரத்தைத் தன்னோடு இறுக அணைத்துப் பிடித்தவாறு, அவனுக்குப் பின்னால் மறைய முயன்றுகொண்டிருந்தாள்.

 

அது ஒன்றும் பெரிய கடினமாக இருக்கவில்லை. அநபாயதீரனுடைய பெரிய உருவம், அவளை இலகுவாகவே பிறர் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டிருந்தது.

 

தன்னோடு, புதைந்துவிடுவதுபோல, நெருங்கி நின்றிருந்தவளின் தளிர் உடலின் நடுக்கத்தைக் கண்ட அநபாயதீரனின் கை முஷ்டிகள் இரண்டும் மேலும் இறுகின.

 

“யார் அவர்கள்…“ என்றான் தன் தலையைத் திருப்பாமல், தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களையே பார்த்தவாறு.

 

அவனுடைய முகம் அவளுக்குத் தெரியவில்லைதான், ஆனால், அந்தக் குரலின் ஓசையும், அது வெளிப்பட்ட விதமும், அதன் ஏற்ற இறக்கமும், அவளுக்குக் குளிர் எடுத்து விதிர் விதிர்க்க வைத்தது.

 

கூடவே கோபமும் வந்தது… அவன் தூக்கிவந்ததைப் பார்த்தான் தானே… அவளுக்குத் தெரிந்தவனாக இருந்திருந்தால் கூடப் போயிருக்கமாட்டாளா…?’ ஆனாலும், அதை அப்படியே கூறவும் பயமாக இருந்தது. அவள் அமைதி காக்க, அவள் பதிலுக்காகக் காத்திருந்தவன், பதில் வராது போகப் பொறுமையற்றவனாக, பின்னால் மறைந்திருந்தவளை முன்புறமாக இழுத்து நிறுத்தி,

 

“கேட்கிறேன் அல்லவா? யார் அவர்கள்?“ என்றான் இப்போது அவளைத் தன் முன்னாக இழுத்துப் பிடித்தவாறு.

 

“தெ… தெரியாதே…“ என்று தலையையும் ஆட்டி, விழிகளையும் விரித்து உதடுகளைப் பிதுக்கிக் கூறியவளின் பாவனையில் ஒரு கணம் பேச்சிழந்து நின்றான் அந்தத் தீரன்.

 

ஏனோ அவனுடைய உடல் மேலும் இறுகியது. தற்போதிருக்கும் சூழ்நிலையை முற்றாக மறந்தவனாக, பிதுக்கிய உதடுகளை இழுத்து வைத்துத் தன் இதழ்களால் பற்றித் தண்டிக்கவேண்டும் என்கிற வேகம் எழ, அவனுடைய கடினப் பார்வை மாறி, அதில் மெல்லிய காமப் பார்வை படர்ந்து அந்த இதழ்களில் நிலைக்கத் தொடங்கின.

 

சிவார்ப்பணாவிற்கு அந்தப் பார்வைக்கான விளக்கம் புரியாவிட்டாலும், ஏனோ அவளுடைய இதயம், அவளையும் அறியாது படபடக்க, அவளும் தன்னை மறந்து அந்த விழிகள் கூறும் செய்தியைப் படிக்க முயன்றாள்.

 

அதே நேரம், அவளைத் தூக்கிவந்த ராட்ஷசன், அவர்களை நெருங்கி வர, இப்போது, காமப் பார்வை மாறி, அதில் கூரிய பார்வையுடன் கூடிய, கொலைப்பார்வை தெரிய, அச்சத்துடன் தன்னிலை பெற்றாள் சிவார்பப்ணா.

 

அநபாயதீரனின் பார்வை, அவளுடைய தலைக்கு மேலாக எங்கோ படிந்திருக்க, பயத்துடன், திரும்பிப் பார்த்தாள்.

 

அந்தத் தடியன், அநபாய தீரனை விடச் சற்று உயரமாக மட்டுமல்ல, அநபாயதீரனை விட, இரண்டு மடங்கு அகன்றிருந்தான். அவனை விழுத்துவதற்கு, இரண்டு கிங்காங்ஸ் வேண்டும் போலிருந்தது.?

 

“ஐயையோ… இவனை ராவணன் சமாளிப்பானா? இவனே படத்தில் வருகிற ஹல்க் போல இருக்கிறானே… ஹல்க் பலம் கொண்டவனா, என் கிங்காங்க பலம் கொண்டவனா? இந்த ஹல்க்கைப் பார்த்தால், சண்டையெல்லாம் அவனுக்கு வெறும் ஜுஜுபி போல இருக்கே… என்னுடைய கிங்காங்கிற்கு, வைத்தியம் மட்டும்தானே தெரியும்… இந்த அடிதடியெல்லாம் தெரியுமா? உடம்பை மட்டும், நன்றாகத்தான் வைத்திருக்கிறான்… ஆனால் அடிதடி… இவனுக்குத் தெரியுமா?? பத்தாதற்கு மூன்று குரங்குகள் வேறு பின்னால் நின்று சொரிந்துகொண்டு இருக்கின்றனவே… இப்போது யார் நமக்கு உதவப் போகிறார்கள்… கடவுளே… பிள்ளையாரப்பா, ப்ளீஸ்… யாரையாவது அனுப்பி நம்மைக் காப்பாத்திவிடேன்… உண்டியலில் பத்து டாலர்… போட்டுவிடுகிறேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…“ என்று அந்த நிலையிலும் கடவுளிடம் வேண்டினாள் சிவார்ப்பணா.

 

இப்போது அந்த ஹல்க்கின் இடைவெளி மிகக் குறைந்திருந்தது. பயத்தில் நெஞ்சுக் கூடு காலியான உணர்வுடன், அவனுடைய கரங்களைப் பற்றித் தன்னோடு இறுக்கியவாறு மீண்டும்  சிறந்த வீராங்கனையாக அவன் பின்னால் ஒளிந்துகொண்டாள் சிவார்ப்பணா. இப்போதைக்கு அவளுக்குத் தெரிந்து அவளைக் காக்கும் கடவுள் அந்த அநபாயதீரனே. அவனைக் கைவிடும் நிலையில் தற்போது அவளில்லை.

 

பின்னால் நின்றிருந்தவள், மெதுவாக அவனுடைய கரத்தைச் சுரண்ட, அவனிடமிருந்து மெல்லிய அசைவு கூட இல்லை.

 

‘இவன் என்ன இப்படி இறுகிப்போயிருக்கிறான். ஒரு வேளை பயத்தில் பாறையாக மாறிவிட்டானோ?  ஐயையோ… அப்போ நம் கதி…’ மீண்டும் அவனுடைய தோளைச் சுரண்ட, எரிச்சலடைந்தவன்,

 

“வட்…“ என்றான் தலையை மட்டும் சிறிது திருப்பி. ஆனால் விழிகள் மட்டும் தன்னை நெருங்கிக்கொண்டிருந்த அந்த வில்லனின் மீதே நிலைத்திருந்தன.

 

“நா… நாம்… இப்படியே ஓடிவிடலாமா…“ என்றாள் பெரிய திட்டத்தைக் கண்டுபிடித்தவள் போல.

 

ஒரு கணம், புரியாமல் நெற்றியைச் சுருக்கிய அநபாயதீரனுக்கு ,அவள் கூறியது முழுவதுமாக உறைக்க, அவளைப் பார்த்து முறைக்கவும் முடியாது, திட்டவும் முடியாதவாறு, அந்த எதிரி மிக மிக நெருங்கியிருந்தான்.

 

“ஹே… யு… லீவ் ஹெர்…“ என்றவாறு அரக்க முடியாதவன் போல நடந்து.. இல்லை இல்லை உருண்டு வந்தவன், அநபாயதீரனைத் தாண்டிய சிவார்ப்பணாவின் தோளில் கரத்தை வைக்கப்போக, தன் கரங்களைக் கட்டிப்பிடித்தவாறு பின்னால் ஒதுங்கியிருந்தவளை, அக் கரம் கொண்டே தனக்குப் பின்னால் மேலும் தள்ளி நிறுத்தியவன்,

 

“டோன்ட்… டோன்ட் டச் ஹர்…“ என்று கூறும்போதே, அவனுடைய உடல் இறுகி இரும்பென நிமிர்ந்து நின்றது.

 

அவனுடைய உறுதியில் அந்த இயமன் ஒரு கணம் கிண்டலுடன் சிரிக்க, அதை லட்சியம் செய்யாதவனாக சிவார்ப்பணாவின் கரத்தைப் பற்றி

 

“லெட்ஸ் கோ… ஃப்ரம் ஹியர்…” என்றவாறு அவளை இழுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கினான்.

 

அதைக் கண்ட அந்த ராட்ஷசன், கிண்டலாக நகைத்தவாறு, அநபாயதீரனின் பின்புறமாக,  நெருங்கியதுதான் தெரியும். மறு கணம், அவன் தரையில் விழுந்திருந்தான்.

 

முதலில் சிவார்ப்பணாவிற்கே எதுவும் புரியவில்லை. அநபாயதீரனின் அருகில்தான் இருந்திருந்தாள். ஆனால் எப்போது, அவன் அந்த ராட்ஷசனின் கரத்தைப் பிடித்தான், எப்போது இழுத்தான், எப்படி விழுத்தினான் என்று அவளுக்குச் சிறிதும் புரிந்திருக்கவில்லை.

 

(8)

 

தரையில் விழுந்திருந்த அந்த ஹல்க்கையும், தன் ராவணனையும் மாறி மாறிப் பார்த்தாள் சிவார்ப்பணா. என்ன நடந்தது? இந்த ஹல்க் எப்படித் தரையை முத்தமிட்டான்… முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

அநபாயதீரன், அந்த ஹல்க்கை வீழ்த்தியது கூட அவளுக்கு நினைவுக்கு வரவில்லை.

 

அதிர்ந்து ஒரு கணம் நின்றிருந்தவள், தன் நினைவைச் சிரமப்பட்டு, அந்த ஹல்கை, எப்படிக் கிங்காங் விழுத்தினான் என்பதை முடிந்த அளவு நினைத்துப் பார்த்தாள். மெதுவாக அவள் மனதில் அது படம்போல காட்சியானது.

 

அந்த ராட்ஷசன், அநபாயதீரனின் பின்புறம் வந்து, அவனுடைய கழுத்தில், தன் கை வளைவைப் போட்டு, இறுக்க, அநபாயதீரன், தன் கரத்தைப் பற்றியிருந்த சிவார்ப்பணாவை உதறித் தள்ளிவிட்டுக் கழுத்தை வளைத்துப் பிடித்திருந்த எதிரியுடைய வலது கரத்தை இடது கரத்தால் பற்றிக் கீழே இழுத்தவாறு, வலது முழங்கையால், ஓங்கி அவன் மார்பில் பலமாகக் குத்த, அவன் குத்திய வேகத்தில் வலி பொறுக்க முடியாமல், முன்புறம்  இவனுடைய தோள் வளைவிவை நோக்கிக் குனிய, இடது கரத்தை முஷ்டியாக்கி ஹல்க்கின் மூக்கில், ஒரு குத்து. பிறகுத் தன் இரும்பையொத்த தலையால், அவன் மண்டையில் ஓங்கி ஒரு அடி, பிறகு ஒரு உதறல் உதறிவிட்டுத் திரும்பித் தாடையின் கீழே பலமாக ஒரு குத்து… அடுத்து அந்த வில்லன் தரையில் கிடந்திருந்தான்.

 

இது கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் நடந்துவிட்டிருந்தன. ‘அடேங்கப்பா… அவளுடைய கிங்காங்கிற்கு சண்டை பிடிக்கக் கூடத் தெரியுமா?’ தன்னை மறந்து விழிகளை அழுந்த மூடித் திறந்தவளுக்கு நம்ப முடியவில்லை. அதிர்ச்சியுடன் மீண்டும் மீண்டும் நடந்ததை மீள் சுற்றிப் பார்த்தாள். படங்களில் கூட அத்தகைய காட்சிகளை அவள் கண்டதில்லை. பொதுவாகக் கதாநாயகன் வில்லனை விழுத்த குறைந்தது அரை மணி நேரம் சண்டைபிடிப்பான். இவன் என்னவென்றால் மின்னல் விரைவுடன் இரண்டு விநாடிகளுக்குள் ஒருவனின் கதையை முடித்து விட்டானே.

 

அதே நேரம், மற்றைய மூவரும், அவனை நோக்கி வர, அநபாயதீரன், தான் சண்டைக்குத் தயார் என்பது போல, முறுக்கிய இரண்டு கரங்களையும் அருகருகே வைத்துக் காலை அவர்களை நோக்கித் திருப்பி அகட்டி வைத்தவன் மூவரையும் உற்றுப் பார்த்தான். பின் பாக்சர் போல, இரு கரங்களையும் முஷ்டியாக்கி முகத்துக்கு நேராகப் பிடித்தவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்தவாறு அங்கும் இங்கும் துள்ளியவாறு வருபவர்களைத் தாக்கத் தயார் என்பது போல நின்றான்.

 

அவன் நின்ற விதமும், அவன் பார்வையில் தெரிந்த கனலும், வீரியமும், எதிரிகளை ஒரு நிமிடம் நிதானிக்க வைத்தது.

ஆனாலும், தங்கள் கூட்டாளி விழுந்து கிடந்த கோபத்தில், வேகமாக அவனை மூவரும் ஒன்றாக நெருங்க, ஒவ்வொருவரும் நெருங்கிய நேரத்தைக் கணக்கிட்டவன், ஒன்றிலிருந்து மூன்றுவரை யாரை முதல் தாக்குவது என வரிசைப்படுத்தி மின்னல் விரைவுடன் செயற்பட்டான் அந்த வீரன்.

 

அவனை முதலில் நெருங்கியவனின், மார்பிலே, தன் இரும்பையொத்த, முஷ்டிகளால் ஓங்கிக் குத்தியவன், அவன் வேகமாகச் சற்றுத் தொலைவில் போய் விழுந்த விநாடிகளைப் பயன்படுத்திய அநபாயதீரன், அதே வேகத்தில், வலது கால் தரையில் பதிய அரை வட்டமடித்துத் திரும்பி, தன் முன்னால் கையை ஓங்கிக்கொண்டு வந்திருந்தவனின் கரத்தில் பலமாக வெட்டித் தள்ளிவிட்டு,   வலக் கரத்தால், அவனுடைய முகத்தில் பொறிகலங்குமாறு ஓங்கி அறைய, அவன் பின்புறமாகத் தரையில் விழுவதைக் கூடக் கவனிக்க நேரமில்லாமல், தனக்குப் பின்னால் நின்றிருந்த மற்றவனின் பக்கமாக அதே வேகத்துடன் திரும்பி, ஓங்கி அவன் தொடையில் தன் இடக்காலால் தாக்கி, அவன் சரிந்த நேரத்தில் நாடியின் கீழ் ஒரு குத்துக் கொடுக்க, அவன் தரையில் சரிவதற்கு முன்பாக, ஏற்கனவே அடிவாங்கி விழுந்த ஹல்க் ஆக்ரோஷம் கூடப்பெற்றவனாகப் பாய்ந்து வந்தான்.

 

வந்தவன் அநபாயதீரனைத் தன் முஷ்டியால் குத்த வர, உடனே இரு கரங்களையும்  தன் முகத்திற்கு நேராகப் பிடித்துப்  பாதுகாத்தவன், பின்னால் மற்றவன் பாய்ந்து வருவது தெரிய, நொடியில் லாவகமாகச் சரிந்து விலக, பாய்ந்தவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் சமநிலை தவறித் தன் முன்னால் நின்றிருந்த தன் நண்பனின் மீது போய் விழுந்தான்.

 

ஆத்திரம் கொண்ட அந்த ஹல்க் பெரும் சீற்றத்துடன் தன் மீது பாய்ந்த நண்பனைத் தள்ளிவிட்டு அநபாயதீரனை நெருங்க, அவனோ, ஓங்கித் தன் இடக்காலால், அவன் தொடையில் ஓங்கி  ஒரு வெட்டு வெட்ட அவன் மடங்கிச் சரிந்த நேரம், வலக்காலைத் துக்கித் திரும்பி அவன் கழுத்தை நோக்கி ஒரு விசுக்கு விசுக்க, மறு கணம், வேர் அறுந்த மரமாகத் தரையில் குப்புறச் சரிந்தான் அவன்.

 

மீண்டும் அவனை நோக்கி வந்த மற்றைய இருவரும் தாக்க முயல, படபடவென அவர்களின் மார்பிலும் கழுத்திலும் முகத்திலும் அடித்துவிட்டு ஒருவனின் கழுத்திலும் மற்றவனின் மார்பிலும் பலமாகக் குத்தி விலக, அடுத்த விநாடி அவர்கள் தரையில் நினைவற்றுச் சரிந்தனர்.

மீண்டும் அந்த ஹல்க்கிடமிருந்து அசைவைக் கண்ட அநபாயதீரன், தாமதிக்காமல் அவன் அருகே நெருங்கி, அவன் வயிற்றின் மீது தன் வலது முழங்காலை மடித்து வைத்து அமர்ந்தவன், மார்பில் இரு குத்து, கன்னத்தில் ஒரு குத்து என்று கொடுக்க, அடுத்து அவனிடம் அசைவில்லாது போனது.

 

நால்வரிடமும் அசைவில்லை என்பதை உறுதி செய்துகொண்டிருந்த அநபாயதீரன், சிவார்ப்பணாவின் அருகே வந்தான்.

 

அவளோ, தன் அதிர்ச்சியை மறைக்க முடியாதவளாக, அநபாயதீரனையே விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

‘யாருடா நீ… எங்கேயிருந்து வந்தாய்? வானத்திலிருந்த குதித்தாயா? இப்போது நீ இங்கில்லாமல் இருந்திருந்தால் என் நிலை என்ன?’ நினைக்கும் போதே, வலுவிழந்த கால்கள் சரியத் தொடங்க, அதைக் கூடப் பொருட்படுத்தாமல், அவளைத் தாங்கிக் கொண்டவன், தன் கை வளைவில் அவளை நிறுத்தி, வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினான் அநபாயதீரன்.

 

கொஞ்சத் தூரம் சென்றதும், அவளை விட்டு விலகியவன், அங்கிருந்த கல்லொன்றில் அவளை அமர்த்திவிட்டுக் கொஞ்ச நேரம் பேசாமல் அவளை முறைத்துப் பார்த்தான். எதையோ பேச வாய் எடுப்பதும், பின் அழுந்த மூடுவதுமாக இருந்தவன், பின், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து,

 

“இந்த நேரத்தில் தனியாக வெளியே வரச்சொல்லி யார் சொன்னது? டோன்ட் யு ஹாவ் எனி சென்ஸ்… உன்னுடைய மூளையை எங்கே கடன் கொடுத்தாய்… அந்த இடத்தில் நான் இல்லாதிருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?…“ என்று சீற, அவனைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்தாள் சிவார்ப்பணா. பதில் கூறாது வெறித்தவளை மேலும் சீற்றத்துடன் பார்த்தவன்,

 

“உன்னிடம்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்… கொஞ்சமாவது அறிவுவேண்டாம்… வாயைத் திறந்து பதில் சொல்…“ என்றவாறு அவளருகே வந்து, அவளுடைய இரு தோள்களையும் பற்றி, உலுக்கி “கேட்கிறேன் அல்லவா… பதில் சொல்…“ என்று அவன் சீறத் தன் நிலைபெற்றவள், வேகமாக அவனை உதறித் தள்ளியவள் சீற்றத்துடன் எழுந்து நின்றுகொண்டாள்.

 

அந்த நேரம், அவன்தான் தன்னைக் காத்தான் என்கிற எண்ணமே அவளுக்கு மறந்து போனது. இவன் யார் என்னைக் கேள்வி கேட்க என்கிற எரிச்சல் மட்டுமே, அவளை ஆட்கொள்ள,

 

“இந்த நேரத்தில் வெளியே வரச் சொல்லி யார் சொல்லவேண்டும்? என் கால்கள், என் விருப்பம். அதைக் கேட்க நீங்கள் யார்? சென்ஸ் இருந்திருந்தால், தாங்ஸ் டு யு… நான் சமைக்கும் நேரத்தை நாசமாக்கியதே நீங்கள்தான்… நீங்கள் வராமல் இருந்திருந்தால் பருப்பும் சாதமுமாவது வைத்து சாப்பிட்டுவிட்டு அக்காடா என்று டிவி பார்த்துவிட்டுத் தூங்கியிப்பேன். இப்படி வெளியே வந்து சாப்பிட யோசித்தும் இருக்கமாட்டேன், இப்போது உங்களுடன் பேசிக்கொண்டும் இருந்திருக்க மாட்டேன்… அடுத்து என்ன கேட்டீர்கள்… ஆ… மூளையை எங்கே கடன் கொடுத்தேன் என்றுதானே… அதைப் பக்கத்து வீட்டில் வாடகைக்கு விட்டிருக்கிறேன்… திரும்பி வந்ததும் மாட்டிக்கொள்வேன்… அந்த இடத்தில் நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்… என்னவாகியிருக்கும், தீரன் இல்லை என்றால், ஒரு கீரன் வந்து காத்திருப்பான். இல்லை அவன் கடத்திக்கொண்டு போய், என்னை… என்னை…“ அதற்கு மேல் கூற முடியாது, குரல் அடைக்க, உடல் நடுங்கத் தடுமாற அப்போதுதான், தான், சிக்கிய ஆபத்தின் பாரதூரம் அவளுக்குத் தெரிந்தது.

 

இது வரை நேரமும், அநபாயதீரன் அருகேயிருந்ததனால், அதன் தாக்கம் தெரியவில்லை… ஆனால் இப்போது… நினைக்கும் போதே, அவளுடைய ஈரக்குலையே நடுங்கியது.

 

அவளை எதற்காகக் கடத்திக்கொண்டு போக நினைத்தார்கள்? அவளைக் கற்பழித்திருப்பார்களா? இல்லை கொலை செய்து… எதற்காக அவளைக் கொலை செய்யவேண்டும்? நினைக்கும் போதே, அவளுடைய உணர்வுகள் மங்கும் போலத் தோன்ற, சற்றுத் தள்ளாடினாள்.

 

அது வரை அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த, அநபாயன், அவளுடைய தள்ளாட்டத்தைக் கண்டதும், விரைந்து சென்று அவளைத் தாங்கியவனாக மீண்டும் இருக்கையில் அமர்த்தினான்.

 

அவளுடைய முகமே, அவளுடைய அவலநிலையைக் கூற, வேகமாக அவளருகே அமர்ந்தவன்,

 

“ஈசி…ஹனி… ஈசி…“ என்றவாறு அவளைத் தட்டிக்கொடுக்க,

 

“யார் அவர்கள்… எதற்காக என்னைக் கடத்த முயலவேண்டும்… காங் ரேப்பிற்காக… எ… என்னை…“ அவள் சொல்ல முடியாது தடுமாற, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாதவனாக, அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் அநபாயதீரன்..

 

“இட்ஸ்… ஓக்கே… இட்ஸ்… ஓக்கே… அதுதான் எதுவுமாகவில்லையே… நான்தான் வந்துவிட்டேனே… பிறகு என்ன” என்று அவன் சமாதானப் படுத்தியவாறு, அவள் முகத்தைச் சுட்டுவிரலால் பற்றித் தூக்கி, மறைத்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவாறு கூறியவனிடமிருந்து, மெதுவாக விலகியவள், தன் மூக்கை உறிஞ்சி இழுத்துவிட்டவாறே.

 

“நீங்கள் எப்படித் தக்க நேரத்தில் வந்தீர்கள்?” என்று குழந்தை போலக் கேட்டவள், பின் தன் துடித்த உதடுகளைக் கடித்துத் தன் அழுகையை அடக்க முயன்றவளாக,

 

“டு யூ நோ வட்… ” என்றவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கூடப் பொருட்படுத்தாமல், நிமிர்ந்து அவனைப் பார்த்து, “இன்று என் பிறந்தநாள்…” என்றவளின் உதடுகளில் வலியுடன் கூடிய புன்னகை மலர்ந்து பின் மங்கியது.

 

“ஒவ்வொரு வருடமும், ரகு என்னை அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கித்தருவான்… இன்றும் என்னை வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினான்… ஆனால் அவன் வரவில்லை… அவன் பக்கத்தில் இருக்கும் பொது, நாம் தனியாளில்லை… நமக்கென்றும் ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை, தைரியம் தோன்றும்… ஆனால் இப்போது…”  என்றவள் தன் உதட்டைக் கடித்து அழுகையை அடக்க முயன்று தோற்றவளுக்கு ஏனோ தன் பலவீனத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்கவில்லை. தன் தலையைத் திருப்பிக் கொண்டு வழிந்த கண்ணீரை வேகமாகத் தட்டிவிட்டவளுக்கு உடலுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது. குளிராலா, இல்லை பயத்தாலா என்பதைக் கண்டுபிடிக்க முடியாதவளாகக் கரங்கள் நடுங்க, கையுறை போடாத கரங்களைத் தேய்துவிட்டவாறு,

 

“பசிக்கிறதே என்று சாப்பிட வெளியே… எ… என்ன செய்கிறீர்கள்… விடுங்கள் என்னை…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, வலக்கரத்தைப் பற்றி எழுப்பி விட்டவனை வியப்புடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

“கம் வித் மி…” என்றவாறு அவளை இழுத்துக்கொண்டு, கொஞ்சத் தூரம் நடந்தான்.

 

“தீரன்… என்ன செய்கிறீர்கள்…” என்று இவள் தடுமாறியவாறு அவன் இழுத்த இழுப்பிற்கு ஏற்றாற்போல நடக்க, சற்றுத் தூரம் சென்றதும், ஒரு திருப்பத்தில் தெரிந்த உணவுக்கடை ஒன்றிற்குள், அவளையும் இழுத்துக்கொண்டு நுழைந்தான்.

 

“எ… என்ன இது… இங்கே ஏன்…” என்று அவள் தடுமாற, அவளுடைய உதட்டில் தன் வலது கரத்தின் சுண்டுவிரலை வைத்து, அவள் பேச்சைத் தடுத்தவன்,

 

“டோன்ட்… ஜெஸ்ட்… ரிலாக்ஸ்…” என்று விட்டுக் காத்திருக்க, அவர்களை அழைத்துச் செல்ல, ஒரு பேரர் வந்தார். அவர்களிடம் இரண்டு மெனு கார்டைக் கொடுத்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்று இரு இருக்கைகளைக் காட்ட, அவள் இருப்பதற்காக, ஒரு இருக்கையை இழுத்துவிட்டு, அவள் தோள்களைப் பற்றி அமர வைத்தவன், தானும் அவளுக்கு முன்பாக வந்தமர்ந்தான்.

 

அவளோ தயக்கமாக,

 

“இல்லை… எனக்கு… பசிக்கவில்லை…” என்று கூறியவளைச் சற்றை நேரம் உற்றுப் பார்த்தவன், வந்த பேரரிடம், தானே சிலதுகளை எடுத்து வருமாறு கூறிவிட்டுக் காத்திருந்தான்.

 

சிவார்ப்பணாவும், சற்று முன்பு நடந்த அதிர்ச்சியில், அவன் என்ன சொன்னான் என்பது கூடப் புரியாமல், எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் உணவு வர, அதை அவள் முன்பாக வைத்து,

 

“சாப்பிடு அர்ப்பணா…” என்றான் அழுத்தமாக.

 

அவளுக்கோ நடந்த சம்பவத்தால் பசி மரத்துப்போயிருந்தது. சலிப்புடன் உணவைப் பார்த்தவள் திகைத்து அதிர்ந்து போனாள். தன் விழிகளையே நம்ப முடியாமல், அவனை வெறித்துப் பார்த்தாள்.

 

அனைத்தும் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளே.

 

“எனக்கு இந்த உணவுகள் பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ” என்றாள் தன் வியப்பை மறைக்காத குரலில்.

 

“ம்… ரகு சொன்னான்… ” என்றதுதான் தாமதம், சடார் என்று இருக்கையை விட்டு எழுந்தாள் சிவார்ப்பணா.

 

“சிட் டவுன்… அர்ப்பணா…” என்றவனின் குரலில் மறுக்க முடியாது, மீண்டும் அமர்ந்தவள், முடிந்த வரை தன் குரலைத் தணித்து,

 

“வட் கம் எகெய்ன்… ” என்றாள். இப்போது குரலின் ஓசை தனித்திருந்தாலும், அதில் அதீத அழுத்தம் தெரிய,

 

“ரகு சொன்னான் சிவார்ப்பணா…” என்றான் அவனும் அழுத்தமாக.

 

இப்போது, இவளுடைய இதழ்களில் ஏளனச் சிரிப்பொன்று மலர்ந்தது.

 

“பொய்… பொய்…. ரகுவிற்கே எனக்கு என்ன என்ன உணவுகள் பிடிக்கும் என்பது இது வரை தெரியாது. அவனுக்கு உணவுக்கு தருவிப்பதே நான்தான்…” என்று சீறியவளுக்கு உடல் நடுங்கியது. நடுங்கும் கரங்களால், தன் கூந்தலை ஒதுக்கிவிட்டவள், சிவந்திருந்த முகத்தை மேலும் அழுத்தத் துடைத்துத் தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.

 

சத்தியமாக அவளால் அந்தச் சூழ்நிலையை ஜீரணிக்க முடியவில்லை. ஏதேதோ எல்லாம் மனதிற்குள் படங்களாக விரிந்தன… சேராத புதிர்கள் சேர்ந்தன போலவும், சேர்ந்த புதிர்கள் பிரிந்தன போலவும் தோன்றின. என்னென்னவோ சொல்லமுடியாத குழப்பங்கள் அவளை ஆட்கொண்டன.

 

“வட்ஸ் கோய்ங் ஆன்… யார் நீங்கள்… ஒவ்வொரு முறையும் நான் ஆபத்தில் சிக்கும் போது, எனக்கு முன்பாக நீங்கள்தான் இருந்திருக்கிறீர்கள்… இது எதேச்சையாக நடந்ததா? இல்லை திட்டமிட்டதா?” என்றவள் அச்சத்துடன் தோன்றிய புருவ முடிச்சைத் தேய்த்து விட்டவளாக,

 

“அன்று பஸ்டான்டில் நின்றவர்கள்தான் இன்று என்னைக் கடத்த முயன்றார்கள்… என்னை எதற்காக அவர்கள் கடத்தவேண்டும்?” என்றவள் அவனை உற்றுப் பார்த்து,

 

“அன்று ரகுவைத் தேடிக்கொண்டு என் வீட்டிற்கு வந்திருந்தீர்கள்… எந்த அந்நியர்களையும் நான் வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று ரகுவுக்குத் தெரியும்… நிச்சயமாக அவன் உங்களை என் வீட்டிற்கு வரச்சொல்லிச் சொல்லியிருக்க மாட்டான்… ரகுவின் பெயரைச் சொல்லி நீங்கள்தான் வந்திருக்கிறீர்கள். ஏன்? எதற்காக? வந்தது மட்டுமல்லாமல், என்னைத் தெரியாதது போலவே நடந்துகொண்டீர்கள்… நான் விரும்பி உண்ணும் உணவு அனைத்தும் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது… நிச்சயமாக ரகு இதைச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை… என் உணவு பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமா, இல்லை… இன்று எனக்கு ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று தெரிந்துதான் முன்னால் வந்து நின்றீர்களா? எப்படி… யார் நீங்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்…? ” என்று கேட்டவளுக்கு அப்போதுதான் சுளீர் என்று ஒன்று உறைத்தது.

 

ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தப் பேருந்தில், அவள் தன்னுடைய பெயரைக் கூறாமலே சரியாக அவளை அர்ப்பணா என்று அழைத்திருந்தான்… எப்படி… இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்… நடந்த அதிர்ச்சில் அதை அவளால் சரியாகக் கிரகிக்கக் கூட முடியவில்லை… ஓ மை காட்… யார் இவன்…’ என்று தனக்குள் எண்ணியவள் அவனை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவளாக, வேகமாக இருக்கையை விட்டு எழுந்தவள்,

 

“அன்று பேருந்தில் என்னைச் சரியாகப் பெயர் சொல்லி அழைத்தீர்கள்… எப்படி…?” என்றாள் அழுத்தமாக. அவனோ புரியாத குழப்பத்துடன்,

 

“என்ன உளறுகிறாய்… பேருந்தில் உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேனா? எப்போது எங்கே…” என்று அவன் புரியாதவன் போலக் கேட்க, அதற்கு மேல் சிவார்ப்பணாவால் முடிந்திருக்கவில்லை.

 

“நோ… ஐ கான்ட் ஹான்டில் திஸ்… ” என்று குழப்பத்துடன் கூறியவள், எதுவும் சாப்பிடாமல் உணவகத்தை விட்டு வெளியேற, தன் மீதே கோபம் கொண்டவனாக எதையோ தனக்குள் முணுமுணுத்தவாறு அவளை வேகமாகப் பின் தொடர்ந்தான்.

 

சிவார்ப்பணாவோ, கட்டுக்கடங்காத சினத்துடன், வேகமாக நடந்துகொண்டிருக்க, அவளைத் தொடர்ந்து சென்றவன், அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தான்.

 

அதைச் சற்றும் எதிர்பார்க்காத சிவார்ப்பணா, அவன் இழுத்த வேகத்தில், அவன் மார்போடு மோதி நிற்க, அவள் தோள்களில் தன் கர்தைப் போட்டு,

 

“நான் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு போதும் இப்படி இடையில் கிளம்பிச் செல்லாதே…” என்று பற்களைக் கடித்தவாறு அவன் உறும, அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்றவளாக,

 

“போனால் என்ன செய்வீர்கள்… அந்த… அந்தக் கடத்தல்காரர்களை அடித்தது போல, என்னையும் அடிப்பீர்களோ… இதற்கெல்லாம் பயப்படும் லுச்சாப் பெண் என்று நினைத்தீர்களா? கோ டு ஹெல்…”  என்று சீறியவாறு மீண்டும் அவனிடமிருந்து திமிறினாள். ஆனால் அவனோ லாவகமாக அவளைத் தன்னோடு நெரிக்க, அது கொடுத்த வலியில்,

 

“வி… விடுங்கள் என்னை…” என்றாள் திக்கித் திணறி.

 

“நோ… யு கான்ட்… நான் சொல்வதைக் கேட்கும் வரைக்கும் நீ எங்கும் போகமுடியாது அர்ப்பணா…” என்றான் அவன் கடுமையாக. அந்த அர்ப்பணாவில் சர்வமும் நடுங்க,

 

“ரியலி?” என்றவள் முகம் வெளிற அவனை ஏறிட்டு,

 

“லிசின் மிஸ்டர் அநபாயதீரன்… இதையெல்லாம் ஜீரணிக்க எனக்குச் சற்று நேரம் வேண்டும்… ப்ளீஸ்… என்னை விடுங்கள்… ஐ ஹாவ் டு கோ… லீவ் மீ…” என்றவளின் விழிகளில் கண்ணீர் முட்டி நிற்க, அழுகையில் உதடுகள் துடித்தன.

 

ஏனோ அவளுடைய கோபத்தைத் தாங்கிக்கொள்ள முடிந்தவனால், அவளுடைய கலங்கிய முகத்தை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன நினைத்தானோ, அவளுடைய கரத்தை விட்டவன்,

 

“வீட்டுக்குப் போய் ஓய்வெடு அர்ப்பணா…” என்றான் தன் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு. அவளோ இப்போது மாறி நின்றாள். அவன் சொல்லி நான் என்ன போவது என்கிற வீம்பும் தோன்ற,

 

“நோ… நான் போகமாட்டேன்… உன்மை தெரியாமல் நான் இங்கிருந்து ஒரு அடிதன்னும் வைக்கமாட்டேன்… ஐ நீட் த ஆன்சர்… யார் நீங்கள்… உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… ரகுவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்… என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்… சொல்லுங்கள்… ” என்று கேட்டவள் அவனை நோக்கி முன்னேறத் தொடங்கினாள். அவனோ அவளுக்கும் தனக்குமான இடைவெளியைக் கண்களால் அளந்தான் அன்றி அவள் நெருங்குகிறாள் என்பதற்காக ஒரு அடி தன்னும் அவன் பின் செல்லவில்லை. மாறாகக் கால்களை அகட்டி அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“டெல்மி… யார் நீங்கள்… எனது விருப்பு வெறுப்பு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று முன்னேறியவாறு கேட்க, அவனோ தன் நிலையிலிருந்து சற்றும் மாறாமல்,

 

“லிசின் சிவார்ப்பணா… நீ தப்பாக எதையோ…”

 

“ஸ்டாப்… ஸ்டாப் இட்… தப்பாகா? மை ஃபுட்… ஐ அம் நாட் எ ஸ்டுப்பிட்… யார் நீங்கள்… உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றாள் அறிந்தேயாகவேண்டும் என்கிற வெறியில்.

 

“நீ நினைப்பது போல, எதுவும் இல்லை சிவார்ப்பணா… உண்மையாக நான் ரகுவைத் தேடித்தான் வந்தேன்…” என்றவனின் கண்களை ஆழப் பார்த்தவள்,

 

“ரகுவை உங்களுக்கு எப்படித் தெரியும்? ” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

 

“ரகு என் நண்பன்…”

 

“ஸ்டாப் மிஸ்டர் அநபாயதீரன்… நிச்சயமாக ரகு உங்கள் நண்பராக இருக்க முடியாது. ரகுவின் நண்பர்களை எனக்குத் தெரியும். ஒரு போதும் உங்களைப் பற்றிய செய்திகளை அவன் இது வரை என்னிடம் கூறியதில்லை… சரி அதை விடுங்கள்… எனக்குப் பிடித்த உணவு வகைகள் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்

 

“வெதர் யு லைக் இட் ஓர் நாட்… என்னிடமிருக்கக்கூடிய ஒரே ஒரு பதில், ரகு…” என்று அவன் முடிப்பதற்கு முன்பாக, அவன் முன்னால் தன் வலக் கரத்தை நீட்டி அவனுடைய பேச்சைத் தடுத்தவள்,

 

“பொய்…. பொய்…. டூ யு நோ வட்… என் வாழ்வில் திரும்பத் திரும்ப சந்திக்கவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய ஒரே ஒரு நபர்… அது நீங்கள்தான். ஆனால், இப்போத சொல்கிறேன்… ஐ ஹேட் யூ… ஐ ஹேட் யூ ஃப்ராம் த பொட்டம் ஒஃப் மை ஹார்ட்… எனக்கு மட்டும் சக்தியிருந்தால், கடந்த ஆறு மாதங்களாக என்னை அலைக்கழித்த நினைவுகள் அத்தனையையும் அழித்துவிடுவேன்…” என்று தன்னை மறந்து குரல் தழுதழுக்கக் கூறியவள், அதற்கு மேல் அவனுடன் பேசப் பிடிக்காமல் விடுவிடுவென்று தன் வீடு நோக்கி ஓடத் தொடங்கினாள் சிவார்ப்பணா.

 

அவனும் அவளைத் தடுக்கவில்லை. ஆனால், அவள் வீடு செல்லும் வரைக்கும், அவளுடைய நிழலாகக் கூடவே சென்றவன், அவள் உள்ளே செற்ற பின்புதான், அவன் தன் பாதையில் நடக்கத் தொடங்கினான்.

 

நடக்கும் போது, அவனுடன் இருவர் இணைய, அவர்களைப் பார்த்துத் திரும்பி நின்றான் அநபாயதீரன்.

 

“குட் ஜாப் காய்ஸ்… உங்கள் பார்வையிலிருந்து அவளைத் தொலைத்து விடாதீர்கள்…” என்றவனின் குரலிலிருந்த அழுத்தத்தையும், கட்டளையையும், கூடவே தெரிந்த எச்சரிக்கையையும் புரிந்துகொண்டவர்கள், வேறு பதில் கூறாது, “யெஸ் சார்”  என்றதைக் கூடக் கேட்காமல், அந்தக் குளிர் இருட்டோடு கலந்து சென்றான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ 2-1

(1)   விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…

14 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-27

27)   மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…

3 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…

5 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

1 week ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 week ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

2 weeks ago