ஆறு மாதங்களுக்குப் பின்
ஆழ்ந்த உறக்கத்தில் அந்த கிங்காங்குடன் டூயட் பாடிக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. அவளுடைய உறக்கத்திற்கு அற்ப ஆயுசு போலும், யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க, அவளிடமிருந்து விடைபெறத் துடித்த அந்த கிங்காங்கைத் தடுத்து நிறுத்த முயன்றவளாகத் திரும்பிப் படுத்தாள். திரும்பிப் படுத்ததுதான் தெரியும், மீண்டும் துயிலில் ஆழ்ந்து போக, விட்ட இடத்திலிருந்து அந்த கிங்காங்கின் கரங்களுடன் தன் கரங்களைக் கோர்த்து ஏதேதோ, பேச முயன்றாள்.
மீண்டும் மெல்லியதாகத் தட்டிய கதவு இப்போது பலமாகத் தட்டுப்பட, அதுவரை அவளுடைய கரங்களுடன் தன் கரங்களைக் கோத்திருந்த அந்த ராட்ஷசன், தன் கரத்தை வேகமாக உதறிவிட்டுக் காற்றோடு காற்றாகக் கரைந்து போக, தன் கனவில் அதுவரையும் மகிழ்ந்திருந்தவன், விட்டுச் சென்ற கோபத்தில், சோர்வுடனும், எரிச்சலுடனும் எழுந்தமர்ந்தாள்.
விழிக்க முடியாத விழிகளைச் சிரமப் பட்டு திறந்தவள் எரிச்சலுடன் அங்கே மின்னிக்கொண்டிருந்த மின்சாரக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
நடுச் சாமம் 11:58 என்றது அது. ‘பேய்கள் டூயட் பாடும் நேரத்தில் எந்தக் கபோதிப்பயல் வந்து கதவைத் தட்டுகிறான்…’ என்று சினந்தவாறு, எரிச்சலுடன் குலைந்திருந்த தலையை ஒதுக்கிவிடாமலே, தூக்கக் கலக்கத்துடன் ஆடியாடி வந்தவள், வாசல் கதவின் சிறு துவாரத்தின் ஊடாக எம்பிப் பார்த்தாள்.
முதலில் யாரோ ஒருவருடைய முடி மட்டும் தெரிய, கோபத்துடன், ‘யோவ் பன்னிரண்டு மணிக்கு வந்து முடியை மட்டும் காட்டுகிறாயே அறிவில்லை… முகத்தைக் காட்டுடா…’ என்று மனதிற்குள் வைதவாறே மீண்டும் உற்றுப் பார்க்க, இப்போது திரும்பினான் அவன்.
முன்புரம் நின்றிருந்தவனைக் கண்டதும் தூக்கம் பறந்துபோக… ‘டே மச்சான்…’ என்று மகிழ்ச்சியில் முணுமுணுத்தவாறு, பேருவகையுடன் கதவைத் திறந்தாள். அங்கே மெல்லிய புன்னகையுடன் நின்றிருந்தான் ரகு.
சற்று கருமை பூசிக்கொண்டால் நடிகன் கிருஷ்ணாவை நினைவு படுத்துவான். பெண்களே கண்டு பொறாமைப்படும் வெண்மை. அவன் அன்னை பானுமதியிடமிருந்து கிடைத்த வரம். சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அதற்கு மயங்காத பெண்களே கிடையாது என்று சொல்லாம். அதிக உயரமும் இல்லாமல், கட்டை என்றும் சொல்ல முடியாத அளவான உயரம். மொத்தத்தில் அழகான கதாநாயகன்.
அவனைக் கண்டதும், உவகை பொங்கத் தன் வீட்டுக் கதவைத் திறந்து விட்டவள்,
“ரகு… என்ன? இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்?” என்று மகிழ்ச்சியும் வியப்பும் ஒன்று சேரக் கேட்டாள் சிவார்ப்பணா.
“ஏய்… இப்படியே வெளியே வைத்துக் கேட்டால் என்ன பதில் சொல்வது…? இது தான் தமிழர் பண்பாடா? முதலில் என்னை உள்ளே வா என்று வரவேற்பாயா… அதை விட்டுவிட்டு இப்படி ஷாக் அடித்த குரங்கு மாதிரி நிற்கிறாயே…” என்று கிண்டலுடன் கேட்டவனை, நாக்கைப் பல் இடுக்கில் வைத்துக் கடித்தவாறு,
“ஓ… ஐ ஆம் சாரி… உள்ளே வா ரகு… எனக்கென்ன தெரியும்? நீ பேயோடெல்லாம் டீலிங் வைத்திருப்பாய் என்று” என்றவாறு வழிவிட்டு விலகி நிற்க, உள்ளே வந்தான் ரகு. அப்போதுதான் இரவுடையில் நிற்பது நினைவுக்கு வர, அவளுக்கு சிறு சங்கடம் எட்டிப் பார்த்தது.
“சாரி ரகு…கொஞ்சம் பொறு… இதோ வருகிறேன்…” என்று கூறியவள் தன் அறைக்குள் வேகமாக நுழைந்து, அவசரமாகக் கையில் கிடைத்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.
“சொல்லு…? என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்? இஸ் எவ்ரிதிங் ஓக்கே…? மாமா அத்தை சுகமாக இருக்கிறார்கள் தானே…” என்று சற்றுக் கவலையுடன் கேட்டாள்.
“ஏதாவது அவசரம், பிரச்சனை என்றால்தான் உன்னிடம் வரவேண்டுமா அநா? சும்மா வரக் கூடாதா?” என்று கேட்டவனை அர்த்தத்துடன் பார்த்தாள் சிவார்ப்பணா.
“யார் இல்லை என்றது… ஆனால் காலை ஆறு மணிக்குப் பிறகு வந்திருந்தாயானால் இந்தச் சந்தேகம் எழுந்திருக்காது. நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு, அதுவும் பேய் உலாவும் நேரம் வந்திருக்கிறாயே… அதுதான் கொஞ்சம் உதைக்கிறது… எதற்கும் உன் காலைக் காட்டுகிறாயா?” என்று கிண்டலுடன் கூறியவளிடம்,
“ரிலாக்ஸ்… அநா… உன்னிடம் வருவதற்கு எந்தப் பேய்க்கு தைரியம் இருக்கிறது?” என்றான் ஆச்சரியம்போல.
“உனக்குத்தான்…” என்று பட் என்று சொன்னவளை முறைத்த ரகு பின் சிரித்தவாறு,
“இதை இன்னொரு பேய் சொல்கிறது… சரி சரி… இந்தா…” என்றவாறு அது வரை தன் கரத்தில் வைத்திருந்த அழகிய தாளால் சுற்றிக்கட்டப்பட்டிருந்த ஒரு இருபது இஞ்ச் அகலமுள்ள பெட்டியை அவள் முன்னால் நீட்டினான் ரகு.
“எ… என்ன ரகு இது?” என்று அவள் வியப்புடன் வாங்கத் தயங்கியவாறு கேட்க,
“ஏய், முந்திரிக்கொட்டை … முதலில் திறந்து பார்…” என்றான்.
அதற்கு மேல் அவனுடன் தர்க்கம் புரியாமல் அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்க முயன்றவளுக்கு, அதையும் கவனமாகப் பிரிக்கப் பொறுமையற்றவளாக, அதைப் பிய்த்தெடுக்க,
“குரங்கின் கை பூமாலை…” என்று சிறு கண்டிப்புடன் கூரிய ரகுவை அவள் சற்றும் லட்சியம் செய்யவில்லை. அதற்குள் என்ன இருக்கிறது என்று அப்போதே பார்க்கவேண்டுமே.
அதற்கிடையில், மணி பன்னிரண்டு என்பதை அறிவுறுத்தும் வகையில் மணி டான் டான் என்று அடிக்க, “ஹப்பி பேர்த்டே அநா… மெனி மோர் ஹப்பி ரிட்டேர்ன்ஸ் ஒஃப் தி டே…” என்று புன்னகையுடன் கூற, சிவார்ப்பணா திகைப்புடன் விழித்தாள்.
“ரகு… நீ… நான்… ஓ காட்… நீ என் பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறாயா? நான் கூட இதை யோசிக்கவில்லை பார்… ஒவ்வொரு முறையும் இப்படிப் பன்னிரண்டிற்கு வந்து வாழ்த்துவாய் என்பதை மறந்தே போனேன்டா…” என்று பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கக் கூறியவளைக் கனிவுடன் பார்த்தான் ரகு.
“உன்னுடைய பிறந்தநாளை நான் மறப்பேனா அநா… அதுவும் இந்த வருட பிறந்தநாள்.. மிக முக்கியமானது… ஆறு மாதங்களுக்கு முன்பு, உனக்கு ஒரு பெரிய தத்து கழிந்ததல்லவா… அதைக் கொண்டாடியே ஆகவேண்டுமே…” என்றவன் அவளுடைய கரத்தில் பாதி பிரித்தபடி இருந்த பார்சலை வாங்கி மிகுதியைத் தானே பிரித்து, சிவார்ப்பணாவின் கரத்தில் வைத்தான்.
அவள் கரத்தில் லெனொவோ லப் டப் புதிய மாடல் வீற்றிருக்க, அதைப் பெரும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா.
“ரகு… இது… இது எனக்கெதுக்கு… அதிக விலையாக இருக்குமே?” என்று தவிப்புடன் கேட்டவளின் தோள்களிலே தன் கரங்களை வைத்து அழுத்திக் கொடுத்தவன்,
“இல்லை அநா… இது என்னுடைய நண்பன் ஒருவன் எனக்குத் தந்தான். அவன் இப்போது எங்கேயோ போகிறானாம். போகும் போது அவனிடமிருந்த இந்த லப்டாப்பை என்னிடம் கொடுத்தான். என்னிடம் ஏற்கனவே ஒரு லப் டப் இருக்கிறதே. அதுதான் உனக்கு உபயோகமாக இருக்குமே என்று கொடுத்தேன்.” என்றவாறு புன்னகைக்க, அந்த லப் டாப்பை மகிழ்ச்சியாக வருடிக் கொடுத்தவாறு தன் மார்போடு அணைத்து மகிழ்ச்சியை வெளிக்காட்டினாலும், அதன் பெறுமதி சற்று உறுத்த,
“இருந்தாலும்… இது…”
“அநா…. உனக்கு உறவென்று சொல்ல நாங்கள் மட்டும் தான் இருக்கிறோம். உனக்கு நாங்கள் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? அதோடு, உன்னிடம் இருக்கும் பழைய லப்டாப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு இதை வைத்துக்கொள்… என்ன புரிந்ததா” என்று கனிவுடன் கேட்டவனிடம், அவள் ஆம் என்று தலையாட்ட,
“சரிம்மா.. நேரம் போய்க்கொண்டிருக்கிறது… நான் போய் வரப் போகிறேன்… நான் அழைத்ததும், கும்பகர்னி போலத் தூங்காது எழுந்து வந்ததற்கு, மிக்க நன்றி. இனிப் போய்த் தூங்கு… சாரி உன்னுடைய தூக்கத்தைக் கெடுத்துவிட்டேன்.” என்று கூறியவனிடம்,
“இட்ஸ் ஓக்கே ரகு… தாங்யூடா…” என்றவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்,
“ஏய்… எனக்கு எதற்கு நன்றி சொல்கிறாய்? நான் என்ன அந்நியனா உனக்கு?” என்று அவன் கோபமாகக் கேட்க,
“இல்லைடா… நீ என் பிறந்தநாளை நினைவில் வைத்திருக்கிறாய்.. கூடவே… எனக்கு வேண்டிய பரிசாகக் கொடுத்தும் இருக்கிறாய்… அதை நினைக்கும் போதுதான்…” என்று கூறியபோது, அவள் நீண்ட நயனங்கள் கலங்கிப்போயிருந்தன.
“கமோன் பேர்த்டே கேர்ள்… எதற்கு இந்தக் கலக்கம்… இப்போது போய் அழலாமா… இன்று முழுவதும் நீ சிரித்தவாறே வேண்டும்…” என்றவனைப் பார்த்து வேதனையுடன் சிரிக்க, அவள் தலையில் தன் கரத்தை வைத்து,
“இட்ஸ் ஓக்கேமா.. உன்னுடைய வேதனை எனக்குப் புரிகிறது… பட்… எல்லா வேதனைகளையும் தாண்டி நாம் போகவேண்டும்… உன்னை எங்களோடு வந்து தங்கும்படி பலமுறை கேட்டுவிட்டோம்… நீதான் மறுத்துவிட்டாய்… இப்போது பார், தனிமையில் யாரும் இல்லா அநாதை போல… ப்ளீஸ் அநா… நம்முடன் வந்துவிடேன்…” என்றான் ஒரு வித தவிப்புடன்.
அவளோ மறுப்பாகத் தன் தலையை ஆட்டி, அவனை வலியுடன் பார்த்து,
“இல்லை ரகு… நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை… எனக்கு இதுவே வசதிதான்டா…” என்று கூறியவளிடம் எதையோ சொல்ல வந்தவன், பின் அதனை விடுத்துத் தன் தோள்களைக் குலுக்கி,
“ஓக்கே… நான் கிளம்புகிறேன்… நாளைக்கு உன்னை வெளியே அழைத்துச் செல்கிறேன்… தயாராக இரு… இப்போது பாய்…” என்று கூறிவிட்டுக் கிளம்பியவனிடம், அப்போதுதான் ஏதோ நினைவு வந்தவள் போல,
“ஐயையோ… டேய்… நீ… எதுவும் குடிக்காமல் போகிறாயே… உனக்கு ஓவல் பிடிக்குமே… கரைத்துத் தரட்டுமா” என்று ஆவலாகக் கேட்டாள்.
“டோன்ட் வொரி மை லிட்டில் ஏஞ்சல். நாளைக்கு வருகிறேன்… அப்போ சாப்பிட்டுவிட்டே போகிறேன்… பட்… இப்போது பாய்… கதவைப் பூட்டு…” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறியவனை விழிகள் நனைய, உள்ளம் நிறைந்த கனிவோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா.
அவளுடைய பெற்றோர் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் இறந்தபொது, எதுவும் செய்வதறியாது திகைத்து நின்றவளை இரு கரம் நீட்டி வரவேற்றது அவளுடைய தாயின் தூரத்து உறவான ராகவன், பானுரேகா தம்பதியர்தான். அவர்களின் ஒரே ஒரு செல்வ மகன்தான் ரகு. ராகவன் வேலை வேலை என்று அடிக்கடி உலகம் சுற்றச் சென்றுவிடுவார். பானுமதி மிக மிக அமைதியான பேர்வழி. தானுண்டு தன் குடும்பம் உண்டென்று இருப்பவர். இரக்கத்தின் மறு உரு அவர் என்று சொல்லலாம். தங்களுக்குப் பெண் குழந்தையில்லையே என்று கலங்கியிருந்தவர்களின் துயரத்தைப் போக்குவதுபோல, அவர்களின் குறையைத் தீர்க்க, சிவார்ப்பணா அங்கே வந்து சேர்ந்தாள்.
அவர்களிடம் அள்ளிக் கொட்டும் அளவு பண வசதி இல்லா விட்டாலும், அரவணைத்துத் தாங்கிக்கொள்ளும் மனம் அதிகமாகவே அவர்களிடமிருந்ததால், சிவார்ப்பணாவைத் தமது மகளாக ஏற்றுக்கொண்டு அவளைப் போற்றத் தொடங்கினர்.
தன் மனம் ஆறும் மட்டும், பானுமதியோடு இருந்தவள், பின்பு அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாது, அவளுக்காக அவள் பெற்றோர் விட்டுப்போன இரண்டறைகள் கொண்ட சொந்த அப்பார்ட்மன்டில் தங்கத் தொடங்கினாள்.
பானுமதி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், சிவார்ப்பணா மறுத்துவிட்டாள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று அவளைப் பெற்ற அன்னை அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதனால், அவர்கள் சலிப்பதற்கு முன்பாகவே தனியாக வந்துவிட்டாள். அதுமட்டுமன்றி, தாய் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறல்லவா? பெற்ற தாய்க்கே இப்படிக் கூறும் போது… உறவினரான பானுமதியிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது தவறல்லவா?
ஆனால் கிடைத்த நேரத்தில் பானுமதியிடம் சென்று விடுவாள். அவர்களுக்குத் தன்னால் வேண்டிய உதவிகளைச் செய்து கொடுப்பதில் ஒரு பரம திருப்தி.
அவள் வாழ்வது கனடா என்பதால் அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை யாரும் அலசி ஆராயவில்லை.
அவள் இப்போது ஒரு அலுவலகத்தில், பகுதிநேரமாக வேலை செய்தவாறு, தன் படிப்பையும் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
ஓஹோ… என்று சொல்லும் அளவுக்கு வசதிகள் இல்லாவிட்டாலும், அவள் தனியாக வாழ்வதால் பெரிதாக அவளுக்குச் செலவு என்று வந்துவிடுவதில்லை. இருந்தாலும் அடிக்கடி மக்கர் பண்ணும் காருக்கு அழுது வடியவேண்டித்தான் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக ஒரு லப்டப் வாங்குவது என்பது அவளைப் பொருத்தவரைக்கும் தேவையற்ற செலவே.
ரகு கொடுத்த பரிசை ஆசையுடன் பார்த்தவள், பின் கதவை பூட்டிவிட்டு வந்து மெதுவாகத் திறந்து பார்த்தாள்.
வின்டோஸ் 10. புதிய மாடல்.
கிட்டத்தட்ட 1500 டாலர்களாவது இருக்கும். அதை உயிர்ப்பிக்க நினைத்தவள், உடனே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.
இப்போதே பன்னிரண்டரையைத் தாண்டிவிட்டது. இனி இதற்குள் தலையைப் போட்டால், நித்திரைக்கு கோவிந்தாதான். தவிர, நாளைக்கு வேலைத்தளத்தில் முக்கிய வேலை இருக்கிறது. அங்கே போய் தூங்கி வழிந்துகொண்டிருக்க முடியாது.
கரத்திலிருந்த லாப்டாப்பை பத்திரமாக மேசையில் வைத்தவளுக்கு அதைக் கொடுத்த அவன் நண்பனின் நினைவுதான் வந்து போனது. இந்த பெறுமதி மிக்க லாப்டப்பை சர்வ சாதாரணமாக ரகுவிடம் கொடுத்துவிட்டுச் செல்வதென்றால்…? அந்த நண்பனின் செல்வ வளம் நன்கு புரிந்தது. இருந்தாலும் அதில் எங்கேயோ உறுத்தியது.
‘ஒரு வேளை ரகு யாராவது தவறான நண்பர்களுடன்…” என்று எண்ணியவள் தன் மீதே கோபம் கொண்டவளாகத் தன் தலையை வேகமாகக் குலுக்கிக் கொண்டாள்.
“சே… சே… போகிறது பார் புத்தி… ரகு அப்படியெல்லாம் அடி மட்ட நண்பர்களிடம் பழக மாட்டான். அவனைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்.
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏதாவது ஒரு வித்தியாசமான பரிசை அவளிடம் கொடுப்பது அவனுடைய வழக்கம். சிறுமியாக இருந்தபோது சின்னச் சின்ன பரிசாகக் கொடுப்பான். சற்று வளர்ந்த பின் அதுவும் அவளுடைய தாய் தந்தை இறந்த பின் அவனுடைய பரிசுகளின் பெறுமதியும் தரமும் அதிகரித்துத்தான் போனது. போன பிறந்த நாளுக்கு அவளுக்காக வெள்ளியில் நிறைய அலங்காரம் செய்த சிறிய திறப்பு வடிவம் கொண்ட பென்டனும் ஒரு கைக்கடிகாரமும் பரிசளித்திருந்தான். அந்த பென்டனைத்தான் இப்போதும் அன்னையின் சங்கிலியோடு அணிந்திருக்கிறாள். இப்போது இந்த மடிக்கணினி. இத்தனை விலை உயர்ந்த பரிசு அவளுக்கெதற்கு…? ஒரு வேளை தாய் தந்தையரின் இழப்பு அவளைப் பாதிக்கக் கூடாது என்பதாகக் கூட இருக்கலாம். இல்லை அதையும் விடுத்து வேறு காரணம் ஏதாவது இருக்குமோ?
பத்திரமாக லப் டப்பை ஒரு இடத்தில் வைத்தவள், மீண்டும் உறங்கச் சென்றாள். கட்டிலில் விழுந்தவள், அடுத்த நிமிடம் உறக்கத்தின் வசமானாள்.
மறுநாள் சிவார்ப்பணா வேலைத்தளத்தில் தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போதே மாலை நான்கு முப்பதையும் தாண்டியிருந்தது.
ஐந்து மணிக்கு வந்து அவளைக் கூட்டிச்செல்வதாகக் கூறியிருந்தான் ரகு. அதனால் கடகடவென்று மீண்டும் சின்ன குளியலைப் போட்டுவிட்டு வெளியே செல்வதற்குத் தயாராகக் கிளம்பி வெளியே வந்து நேரத்தைப் பார்க்க, அது ஐந்து பதினைந்தென்றது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான்…’ என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டவள், அவன் வரும் வரைக்கும் தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்று அதை உயிர்ப்பித்துப் பார்த்துக்கொண்டிருக்க, நேரம் போனதன்றி, ரகு வரவேயில்லை.
நேரத்தைத் திரும்பிப் பார்த்தபோது, அது ஆறு பதினைந்து என்றது. அன்று வெளியே செல்வதாக இருந்ததால், அவள் மதியம் நன்றாகச் சாப்பிடவில்லை.
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. இவனுக்காகக் காத்துக்கொண்டிருந்த நேரத்திற்கு அவள் சமையலை முடித்துச் சாப்பிட்டிருப்பாள். ஒரு பக்கம் எரிச்சல் தோன்ற,
ம்கூம்… இனி இவனுக்காகக் காத்திருந்து பயனில்லை. ஏதாவது விரைவாகச் சமைத்துச் சாப்பிடக் கூடியது இருந்தால் சாப்பிட வேண்டியதுதான்… வரட்டும்… இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்காமல் விடப் போவதில்லை.’ என்று கறுவியவள், கோபத்துடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் பருப்பை எடுத்து அடுப்பில் வைக்கும் போது கதவு தட்டும் ஓசை கேட்டது.
வந்து விட்டான்… ஆறு மணி என்பது உன்னுடைய அகராதியில் ஏழு மணியா என்று கேட்கவேண்டும். என்றவாறு, விரைந்து சென்று கதவைத் திறந்தவள் அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் கோபம் வடிந்து போய், ஆச்சரியமும் அதனுடன் கூடிய அதிர்ச்சியும் கூடவே மகிழ்ச்சியும் ஒன்றிணைந்து அவள் முகத்தில் நர்த்தனம் ஆட, அவளையும் அறியாமல் வாய் “கிங்காங்…” என்று முணுமுணுத்தது. கூடவே ‘இவன் எங்கே இங்கே…?’ என்று திகைத்தவள்,
“நீங்களா?” என்றாள் தன் திகைப்பைச் சற்றும் மறைக்காமல்.
அவனோ அவளைத் தெரிந்ததாக இம்மியளவும் காட்டிக்கொள்ளவில்லை. மாறாக முகத்தில் யோசனை மட்டுமே தெரிந்தது.
“எக்ஸ்கியூஸ் மி… டூ யு நோ மீ?” என்று அவன் திகைப்புடன் கேட்க இவள் அதிர்ந்தாள்.
‘இவனுக்கு என்னை நினைவில்லையா? இல்லை தெரியாதது போல நடிக்கிறானா?” என்று புரியாமல், அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தவளுக்கு, எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெளுமையாக இருந்தது முகம். அவளைத் தெரிந்தது போன்ற எந்த பாவனையும் அவனிடத்தே இருக்கவில்லை.
அதைக் கண்டதும் ஏனோ அவளுக்குப் பெரும் ஏமாற்றமே ஏற்பட்டது.
அந்த விபத்திற்குப் பின்பு அவனை மறக்க முடியாமல் எப்படித் தவித்துக்கொண்டிருக்கிறாள்… ஏன் முன் தினம் கூட அவனுடன் கனவில் டூயட் பாடினாளே… அது மட்டுமா அவனுடைய வெற்றுடலும், அந்த உடல் கொடுத்த கதகதப்பும் அவளை நிலைகொள்ள விடாது தவிக்கச் செய்கின்றனவே.
அவனை எண்ணி இவள் கலங்கியிருக்க, இவனோ எந்த உணர்வுமில்லாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. உண்மையாகவே இவளை மறந்துவிட்டானா? இல்லை மறந்தது போல நடிக்கிறானா? ஒருவேளை இவன் அவன் உருவத்திலிருக்கும் வேறு ஒருவனோ? தவிப்புடன் அவனை உற்றுப் பார்க்க, அவனுக்கே அவனுக்கான அந்தப் பிரத்தியேக மணம் இவள் நாசியைச் சென்றடைய, இல்லை அவன்தான் இவன் என்று புத்தி சண்டித்தனம் செய்தது. அப்படியானால் எதற்கு என்னைத் தெரியாதவன் போல நடிக்கிறான்… உண்மையாகவே என்னை மறந்துவிட்டானா? என்று எண்ணியவளுக்கு இனம் புரியாத ஒரு வலி ஏற்பட்டது.
“உங்களுக்கு என்னைத் தெரியவில்லையா?” என்றாள் ஒரு வித படபடப்புடன். அவனோ இவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“சாரி… நாம் எப்போதாவது சந்தித்திருக்கிறோமா?” என்றான் உண்மையான திகைப்புடன்.
அவன் பொய் சொல்லவில்லை என்பது புரிய இவள் சோர்ந்தாள். அப்படியானால் இவன் அந்த அநபாயதீரன் இல்லையோ? வேறு யாருமோ?’ என்று எண்ணியவள், தன் வலியைப் பெருமளவு மறைக்க முயன்றவளாக,
“ய… யார் வேண்டும் உங்களுக்கு?” என்றாள். இருந்தாலும், தன் குரலில் தெரிந்த தவிப்பை வெளிக்காட்டாது இருக்கப் பெரும் பாடுபடவேண்டித்தான் இருந்தது. ஆனால் அவனோ,
“ஹாய்… ஐ ஆம்… அநபாயதீரன்…” என்றவாறு தன் கரத்தை நீட்ட இவளுக்கு சுரு சுரு என்று கோபம் கொழுந்து விட்டெறிந்தது. அப்போ நான் நினைத்தது சரிதான். இவன் அந்த கிங்காங்தான்.
‘டேய்… மறதிக்குப் பிறந்த மருதநாயகமே… உன்னை எனக்கு அறிமுகப்படுத்துகிறாயா? உன்னை மறப்பது போலவா அன்றைக்கு நடந்துகொண்டாய்? வாலில்லாத குரங்கு போல அங்கும் இங்கும் தாவித் தாவிச் சென்றதை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்தாயா? நீ அறிமுகப் படுத்தி, உன் கரத்தை நான் பற்றவேண்டுமா?’ என்று கொதிப்புடன் எண்ணியவள், அவனுடைய கரத்தையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
‘நீ என்ன என்னை மறப்பது… இப்போது நான் சொல்கிறேன்… உன்னை நான் மறந்து விட்டேன். இந்த விநாடியே மறந்துவிட்டேன்… முற்றும் முழுதாக மறந்து விட்டேன்… எனக்கு நீ யார் என்றும் தெரியாது… இனி உன்னை நினைத்தேன் என்றால்… நினைத்தேன் என்றால்…” என்று பெரும் சீற்றத்துடன் தனக்குள் சினக்க, அவளுடைய மனசாட்சியோ, ‘ஒன்றும் பிடுங்கமாட்டாய்… அவனைக் கவனி…’ என்று கிண்டலடிக்க, அதன் உண்மை புரிய தன் முகத்தைச் சீராக்கியவாறு அவனை அழுத்தத்துடன் பார்த்தாள்.
“சோ…” என்றாள் மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டியவாறு.
ஒரு கணம் திகைத்த அநபாயதீரன், அவளையும், கூடவே மார்புக்குக் குறுக்காகக் கட்டியிருந்த கரங்களையும் மாறி மாறிப் பார்த்தான். பின் தன் தேளைக் குலுக்கியவனாகத் தன் கரத்தை இறக்கி,
“இங்கே… ராகவன் என்று…” இவன் இழுக்க, அவனை எரிச்சலுடன் பார்த்தாள் சிவார்ப்பணா.
“ராகவனா? நீங்கள் யார் வீட்டிற்கோ மாறி வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது… விலாசத்தைச் சரிபார்த்துவிட்டுப் போய் கதவைத் தட்டுங்கள்…” என்று மலையிறங்காமல் கூறிவிட்டுக் கதவை மூட முயல, அவனோ குறுக்காக நின்று,
“இல்லையே… நான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறேன்…” என்றான் இனிய புன்னகையுடன். அந்தப் புன்னகையில் சரிய முயன்ற இதயத்தை இறுகப் பிடித்தவாறு, இன்னும் கம்பீரமாக நின்றவளாக,
“ஓ…அப்படியா… பட் சாரி மிஸ்டர். எனக்கு நீங்கள் யார் என்று தெரியாது… உங்களை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை… நீங்கள் கூறும் ராகவன் என்று யாரையும் எனக்குத் தெரியாது. இப்போது எனக்கு வேறு வேலை இருக்கிறது. அதனால்… இடத்தைக் காலி செய்கிறீர்களா?” என்றவள், அவனுடைய பதிலையும் எதிர்பார்க்காமல் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டுப் படபடத்த இதயத்தைச் சமப்படுத்தத் திராணியற்றவளாக அதிலேயே சாய்ந்தவாறு கொஞ்ச நேரம் நின்றாள். விழிகளை மூடியவளுக்கு அவளை மறைத்து நின்ற கிங்காங்கின் உருவம்தான் மீண்டும் மீண்டும் வந்தது.
‘உண்மையாக என்னை மறந்து விட்டானா?’ என்கிற ஏக்கம் ஏனோ அவளைப் பூதாகரமாகத் தாக்கத் துடித்த தன் கீழ் இதழைத் தன் மேல் பற்களால் கடித்தவாறு, நிற்க அவளுடைய பொறுமையை மீண்டும் சோதிப்பதுபோலக் கதவு தட்டப் பட்டது. அவனாகத்தான் இருக்கவேண்டும். அவளிடமிருந்து விடைபெற இருந்த பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு திரும்பி கதவைத் திறந்தாள்.
அவன்தான். அங்கேயே அசையாமல் நின்றிருந்தான். அவளுக்கோ பசி வேறு காதை அடைப்பதுபோல் இருந்தது. எல்லாம் இந்த ரகுவால் வந்தது. வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் அவள் எப்போதோ சமைத்துச் சாப்பிட்டிருப்பாள்.
“என்ன சார் வேண்டும்?” என்று ஆங்கிலத்தில் தன் குரலில் தெரிந்த எரிச்சலை மறைக்காது கேட்க, அவனோ,
“நான்…” என்று எதையோ கூற வந்தான். இவளோ தன் கரத்தை நீட்டி அவன் பேச்சைத் தடுக்க,
“அநபாயதீரன்… அதைத்தான் ஏற்கனவே சொல்லிவிட்டீர்களே…” என்றாள் அலட்சியமாக எங்கோ பார்த்தவாறு.
அவளுடைய முந்திரிக் கொட்டைத் தனத்தைக் கூர்மையாக அளவிட்டவனது உதட்டில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது. இவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் விழித்தவன்,
“ராகவன்…” என்று அவன் மீண்டும் இழுக்க,
“மிஸ்டர் அநபாயதீரன், உங்களுக்குக் காது டமா… சாரி… உங்களுக்குக் காதில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்… ராகவன் என்று இங்கே யாரும் கிடையாது… அதனால் நீங்கள் வேறு யாரோ…” அவள் முடிக்கவில்லை, உடனே அவன்,
“நான் தேடி வந்தது, ரகு.. ராகவன்… ஐ மீன்.. ரகுராம் ராகவன்…“ என்று கூறத்தான் இவள் விழித்தாள்.
“ரகுராமைத் தேடி வந்தீர்களா?“ என்றபோதுதான், அவன் ரகுவைத் தேடி வந்திருக்க வேண்டும் என்பதே இவளுக்குப் புரிந்தது.
“அவன் ஆம் என்பது போலத் தலையாட்ட,
“சாரி மிஸ்டர் அநபாயதீரன்… இப்போது உங்களுக்கு என்னால் உதவ முடியாது. இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பது… அந்த பரம் பொருள் சிவபிரானுக்குத்தான் தான் தெரியும். அவரும் கொஞ்சம் பிசி என்கிறதால், அவருக்கும் அது தெரியுமோ தெரியாது… நானும் அவனுக்காகத்தான் இத்தினை நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இன்னும் அந்தத் தடியனைக் காணவில்லை.” என்று எரிச்சலுடன் பற்களைக் கடித்தவாறு சிடுசிடுத்தவள், அந்த அநபாயதீரனுக்கு முன்னால் ரகுவைக் கரித்துக் கொட்டிவிட்டோம் என்கிற உண்மை புரிய, முகத்தில் லேசாக அசடு வழிந்தது. அதை வெளிக்காட்டப் பிடிக்காதவளாக,
“நீங்கள் யார்? உங்களுக்கு ரகுவை எப்படித் தெரியும்? உங்களை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே…’ என்றாள் ஆராயும் நோக்குடன். ஏனோ அவனுடைய விழிகள் அவளைக் கூர்மையுடன் ஆராய்ந்து பின்,
“நான்… ரகுவினுடைய பால்ய சினேகிதன். ஃபேஸ் புக்கில் அவனைக் கண்டு பிடித்தேன். சோ… தொடர்பு கொண்டபோது அவன் இங்கே இன்று வருவது பற்றிக் கூறியிருந்தான். இந்தப் பக்கமாக வந்தேன்… சரிதான் அவனைப் பார்த்துவிட்டே போகலாம் என்று…” அவன் இழுக்க, இவள் தன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். ஏழரையைத் தொட்டுக்கொண்டிருந்தது.
“சுத்தம்… இனி இவன் எப்போது கிளம்பி, இவள் எப்போது சமைத்து…’ சலிப்புடன் அவனைப் பார்த்தவள்.
“ஐ ஆம் சாரி மிஸ்டர் அநபாயதீரன்… இன்று இங்கே வருவதாகத்தான் கூறியிருந்தான். இன்னும் அவனைக் காணவில்லை. அவனுக்காகத்தான் காத்திருந்துவிட்டுச் சமைக்கச் சென்றேன்…” என்றவள் சற்று நிதானித்துப் பின் அவனை ஏறிட்டாள்.
“வேண்டுமானால் போய்விட்டுப் பிறகு வாருங்களேன்…” என்றாள் தயக்கமாக.
“ஓக்கே… நோ பிராப்ளம். எத்தனை மணிக்கு வந்தால் அவனைச் சந்திக்கலாம்?” என்றான் அவன்.
“தெரியவில்லை மிஸ்டர் அநபாயதீரன்… அவனுடைய அலைபேசி இலக்கம் இருந்தால் அடித்துப் பார்க்கலாமே…” என்றவளிடம்
“யா… நான் முயற்சித்துப் பார்த்தேன். மை பாட் லக்… அவன் செல்லை ஆஃ.ப் பண்ணி வைத்திருக்கிறான்…” என்றான் வருந்துவது போல.
“ஓ…” என்றவள் என்னுடைய கைத்தொலைப்பேசி இலக்கத்தை எழுதுங்கள்… சற்றுப் பொறுத்து அடித்துப் பாருங்கள்…” அவன் வந்துவிட்டான் என்றால் சொல்கிறேன், என்று கூறிவிட்டுத் தன்னுடைய இலக்கத்தைக் கொடுக்க அதை உடனேயே தன்னுடைய செல்லில் பதிந்தவனின் விழிகள் தன் செல்லிலும், அவளுடைய அந்த நீண்ட விழிகளிலும் கூர்மையுடன் பதிந்து விலகியது. பின்,
“தாங்ஸ் மிஸ்…” என்று இழுக்க, இவளுக்கு மேலும் சுரு சுரு என்று கோபம் அவளையும் கேட்காது பொங்கத் தொடங்கியது.
‘படுபாவி… உன் பெயரை நான் நினைவில் வைத்திருக்கிறேன்… நீ என்னையே மறந்துவிட்டாயே… நீ என்ன துஷ்யந்தனா? துர்வாசரிடம் சாபம் பெற்று என்னை மறந்து போக …’ என்று மனதளவில் திட்டியவள், அவளையும் அறியாமல்,
“சிவார்ப்பணா…” என்று கூற,
“தாங்ஸ்… அர்ப்பணா…” என்று அவன் கூற இவள் அதிர்ந்து போய் நின்றாள்.
அன்றும் அந்த நிலையில், அவளை அர்ப்பணா என்று சொன்னானே… உன்மையாகவே இவன் என்னை மறந்துவிட்டானா?” என்று குழம்பியவளிடம்,
“அன்ட்… நீங்கள் ரகுவுடைய…” என்று இவன் இழுக்க, இவள் விழிகள் பளபளத்தன. எதற்காக இதைக் கேட்கிறான்?’ என்கிற துடிப்புடன், இவள்,
“ரகுவுடைய?” என்று இழுக்க, அவனோ,
“ரகுவுடைய… கேர்ல் ஃப்ரன்டா?” என்றான் எதையோ அறிந்துகொள்ளும் அவசரத்துடன்.
ஒரு கணம் அவனைக் கூர்ந்து பார்த்தவள்,
“ஆமாம் சார்… நான் ரகுவுடைய கேர்ள் ஃப்ரன்ட்தான்…” என்று அவனுக்குக் கடுப்பேற்ற அவள் கூறினாலும், அவளுடைய விழிகள் ஆவலுடன் அவனுடைய முகத்தை ஆராயத் தொடங்கின.
அவனோ, தன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாது,
“டேக் கெயர்… பிறகு சந்திக்கிறேன்…”,
அவன் விடைபெற்றுச் சென்ற போது கூட சிறிய புன்னகை ஒன்றை உதித்துவிட்டு அவளிடமிருந்து விடைபெற்ற தோற்றம் ஏனோ அவள் மனக் கண் முன்னால் வந்தது.
கதவைப் பூட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள் இடையில் நிறுத்திவிட்ட சமையலைத் தொடர்ந்தாள். கை தன் போக்கில் சமைத்தாலும், சிந்தனை முழுவதும் அந்த அநபாயதீரன் மீதே நிலைத்திருந்தன.
ஆறு மாதங்களுக்கு முன்பு, மயிரிழையில் தப்பியது இன்றும் நினைவுக்கு வந்தது.
அந்த பஸ்ஸோடு தமது கதை முடிந்துவிட்டது என்று எண்ணியவளாகத் தனது விழிகளை இறுக மூடி, அந்த ஆற்றில் விழுவதற்குத் தயாராக இருந்த நேரம், எதுவுமே நடக்காது, அந்தரத்தில் தொங்குவதுபோலத் தோன்றத் தன் விழிகளை மெதுவாகத் திறந்து பார்த்தாள் சிவார்ப்பணா.
அப்போதுதான் தான் நிற்கும் நிலை புரிந்தது. நம்பமாட்டா, அதிர்ச்சியுடன் தன்னை அணைத்தவாறு தூக்கிக்கொண்டிருந்த அந்த கிங்காங்கையே ஏறிட்டாள்.
பஸ் விழுந்த அந்த நொடி, சிவார்ப்பணாவைத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்ட அநபாயதீரன், கண்ணிமைக்கும் நேரத்தில், பாய்ந்து, கயிற்றேணியைத் தனது வலிய இடது கரத்தால், இறுகப் பற்றியிருந்தான். அவனுடைய கொடுக்குப் பிடியில், சிவார்ப்பணா, சிறிதும் வழுக்காமல், அவனுடனே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் நம்பமுடியா தன்மையுடன், தன்னைத் தாங்கியிருந்த அநபாயதீரனை விழிகள் மூடாமல், அப்படியே பார்த்துக்கொண்டிருக்க, அதைக் கண்டவன் மெல்லியதாக நகைத்தான்.
“டோன்ட் பனிக்… நான் இருக்கிறேன்… உன்னைப் பத்திரமாக மேலே கொண்டு சேர்ப்பேன்…” என்று தன் அக்மார்க் புன்னகையைச் சிந்த, அதில் தன்னை மறந்தாள் அந்த நாயகி.
மீண்டும் பஸ் எங்கோ விழுந்து உருளும் சத்தம் கேட்கச் சுயநினைவுக்கு வந்தவள் திரும்பிச் சிதறிய பேருந்தை வெறித்துப் பார்த்தாள்.
இப்போது அந்த அனபாயதீரன் அவளை இழுத்து எடுக்காமலிருந்திருந்தால்…? நினைக்கும் போதே உடல் உதறியது. அந்த பேருந்துடன் அவள் சமாதியாகி இருப்பாள். இந்த உலகத்தில் இல்லாது போயிருப்பாள். அவளுடைய படத்திற்கு மாலை அணிவித்திருப்பார்கள். கொஞ்சக் காலம் சென்றதும் அவளும் ஒரு கதையாகப் போயிருப்பாள்.
நினைக்கும் போதே நெஞ்சுக் கூட்டிற்குள் வெறும் காற்று இருப்பதுபோல உணர்ந்தாள் சிவார்ப்பணா.
“ஆர் யு ஓக்கே…” என்ற குரல் வரத் தலையைத் திரும்பி அவனைப் பார்த்து, விழி முட்ட நீர் பொங்க, ஆம் என்பது போலத் தலையை ஆட்டியவளின் இடையை மேலும் தன்னோடு இறுக்கியவாறு நிற்க, இப்போது அவர்கள் மெல்ல மெல்ல மேலே மேலே போகத் தொடங்கினர்.
என்னதான் அவன் சிடுசிடு மூஞ்சியாக இருந்தாலும், அவனால் அல்லவா அவள் காப்பாற்றப் பட்டாள். இப்போது அவன் முகம் அவளுக்கு வெறுப்பைக் கொடுக்கவில்லை. மாறாக ஏதோ கடவுளே முன்னால் நிற்பது போன்ற உணர்வில் அவள் தடுமாறினாள்.
இருவரும் கவனமாக மேலே ஏற்றப்பட்டனர்.
மேலே வந்து தரையில் கால் பட்டதும், ஒரு விநாடி அவளை அணைத்தவாறே நின்றவன், பின் அவளை விலக்கி, அவள் முகத்தில் தன் உள்ளங்கைகளைப் பதித்துத் தூக்கினான்.
அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலக்கவிட்டவன், தன் இடது கரத்துப் பெரும் விரலால், அவள் கன்னத்தை மென்மையாக வருடிவிட்டவனின் விழிகள், இப்போது, நடுக்கத்தில் துடித்துக்கொண்டிருந்த, அந்த சிவந்த ரோஜா இதழ்களில் நிலைத்தன.
தன்னை மறந்து, வலக் கரத்தால், அவளுடைய உதடுகளை வருடிக் கொடுத்தவன், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவனாகக் குனிந்து, அவள் இதழ்களைத் தன் இதழ்களால், அழுந்த மூடிக்கொண்டான்.
அவள் இதழ்கள் தேனைச் சிந்தினவோ? இல்லை ஐஸ்க்ரீம் போலக் குளிர்ந்து சுவைத்ததோ, தன் உதடுகளை அவள் இதழ்களிலிருந்து பிரிக்க முடியாதவனாக, மீண்டும் மீண்டும் வன்மையாகச் சுவைத்தான். எப்படியோ சிரமப்பட்டுத் தன் உதடுகளைப் பிரித்தவன், மீண்டும் அவள் கன்னத்தை வருடிக்கொடுத்து,
“ப்ளீஸ் டேக் கெயர்… ஒஃப் யுவர் செல்ஃப்“ என்று விட்டு, அவள் சுய உணர்வு பெறுவதற்கு முன்பாகவே அவளை விட்டு விலகியவன், அங்கேயிருந்த மக்களுக்குள் ஒருவனாகக் கலந்து போனான்.
அன்று சென்றவன் தான். அதற்குப் பிறகு, இப்போதுதான் அவனைப் பார்க்கிறாள். ஆனால் அவனுக்குத்தான் அவளை நினைவில்லையே… மனம் தவித்தது.
தன்னை மறந்து நடுங்கித் துடித்த தன் இதழ்களைக் கரம் கொண்டு வருடிக் கொடுத்தாள். அன்று அவன் பதித்த முத்திரை இன்றும் அழியாத இனிமையாக அவள் உள்ளங்கால் முதல், தலைவரைப் படர்ந்து விரிந்தது.
“ஏன்டா என்னை மறந்தாய்? உன்னைக் கண்டதும், எப்படி மகிழ்ந்தேன் தெரியுமா? எங்கு வெளியே சென்றாலும், நீ கண்களுக்குத் தெரிகிறாயா என்று அலைபாய்ந்ததை நீ அறிவாயா… ஆறு மாதங்களாக உன் நினைவில் மருகிப் போயிருந்தேனே… ஆனால்… நீ சுத்தமாக என் நினைவைத் துடைத்து விட்டல்லவா முன்னே வந்து நிற்கிறாய்… உன்னை என் வீட்டு வாசலில் கண்டபோது, எத்தனை மகிழ்ந்தேன் தெரியுமா? தொலைத்த மனதிற்கினியி பொருள் மீண்டும் கைகளில் கிடைத்தது போலப் பூரித்துப் போனேனே… ஆனால் உன் முகத்தில் தெரிந்த அந்த அன்னியத் தன்மை, என் உணர்வைக் கொன்றுவிட்டதே… நான் உன் மனதில் சிறு சலனத்தைக்கூட விதைக்கவில்லையா? ஏன்டா என்னை மறந்தாய்… அன்று நீ கொடுத்த முத்தத்தைக் கூடவா மறந்து போனாய்? ஏன்டா… அந்த இதழ் ஒற்றலை இன்று வரை என்னால் மறந்துபோக முடியவில்லையே… என்ன செய்வேன்…” என்று எண்ணியவளின் விழிகளில் குளங்கள் கட்டின. பின் தன் மீதே கோபம் கொண்டவளாக,
“நான் எதற்குக் கலங்கவேண்டும்? அவன்தான் கலங்க வேண்டும்… என்னை மறந்து விட்டதற்காக அவன்தான் தவிக்கவேண்டும்… இப்படி ஒரு நல்லவள், வல்லவள்… கிடைக்கவில்லையே என்று அவன்தான் வருந்த வேண்டாம்… போடா போ… நீ எனக்கு வேண்டும்…” என்று கூறியவள், அப்போதுதான் கவனித்தாள். அவளுடைய பருப்பு கருகும் நிலையிலிருந்ததை.
“ஐயையோ… டேய்… தீரா… என் பருப்பைக் கருக வைத்துவிட்டாயே… உன்னை சும்மா விடமாட்டேன்…” என்று இல்லாத பழியை அவன் மீது போட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டவளாக, பருப்பு சட்டியைத் தூக்கி, சிங்கில் போட்டு விட்டுச் சோர்வுடன் முன்னறைக்கு வந்தாள்.
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. சரிதான். இன்று அவள் கையாலேயே சாப்பிடும் பிராப்தம் இல்லை போலும்… வெளியே சென்று சாப்பிடலாம் என்று எண்ணியவள், தன் கைப்பையை எடுத்தவாறு வெளியேறியவளுக்கு, அடுத்து வரப்போகும் விபரீதம் தெரிந்திருந்தால்…
(1) விதற்பரை ஒட்டாவாவை விட்டு டொரன்டோவிற்கு வந்து இரண்டு மாதங்களாயிற்று. அங்கேயிருந்தால் அவ்வியக்தன் தொடர்ந்து அவளை வதைப்பான் என்பதாலும்,…
27) மிக மிக இதமான போர்வையில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவளின் காதடியில் மெல்லிய தென்றல் காற்று வீசிச் செல்ல, அதன்…
(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும்…
(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…