Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 11

(11)

 

இரவு புலப்படும் முன்பே முன்புற விறாந்தையில் ஒற்றைக் கால் நீட்டி அமர்ந்த யசோதா, ஆட்டுக்குட்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அம்மேதினியைப் பார்த்து,

“மகள்… லாந்தர் விளக்குகளைக் கொண்டுவா… சுத்தப்படுத்தித் தயார் படுத்தவேண்டும்…” என்று உத்தரவிட்டுவிட இவளோ ஆட்டுக்குட்டியை விட்டுவிட்டு உள்ளே சென்று ஒரு கரத்தில் இரண்டு லாந்தர் விளக்குகளையும் மறு கரத்தில், மண்ணெண்ணெய் போத்தல் மற்றும் துணியுடனும் வந்து அன்னைக்கு முன்னால் வைத்துவிட்டு, சப்பனமிட்டு அமர முயல,

“மகள்… போய்ச் செல்விக்குப் புல்லுக்கட்டுப் போட்டுவிட்டு வா… மறந்து விட்டேன்…” என்றார்.

உடனே எழுந்து பின்பக்கம் செல்ல, அவள் சென்றதும், அதிகம் கரிப்பிடித்திருந்த லாந்தரை சுத்தப்படுத்துவதற்காக இழுத்து எடுத்தார்.

லாந்தரின் பிடியைப் பற்றி, புகைபோக்கியை மேலே இழுக்க, லாந்தரின் பிடியிலிருந்து கண்ணாடிக் குடுவை சரிந்தது. அதை வெளியே எடுத்து, ஏற்கெனவே கரி படிந்திருந்த பருத்தித் துனியை உள்ளே நுழைத்துச் சுழற்றிப் படிந்திருந்த கரியைத் துடைத்தவாறே நிமிர்ந்து கந்தழிதரனைப் பார்த்தார்.

அவனோ சுவாரசியமாக ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தான்.

எப்படி ஆரம்பிப்பது என்று சற்றுத் தயங்கியவராக நின்றவர், பின் தன் காரியத்தில் கண்ணாக இருந்தவாறு,

“என்ன… நல்ல சுவாரசியமான புத்தகமோ?” என்று கேட்கத் தன் கவனம் கலைந்தவனாகப் புத்தகத்தின் ஓரத்தை மடித்து வைத்துவிட்டு, நிமிர்ந்து பார்த்து,

“இல்லையத்தை… பொழுது போகவேண்டுமே… இங்கேதான் ஊரடங்கு இருப்பதால், ஆறுமணிக்கு மேல் எங்கும் போக முடியாது… அதுதான்… புத்தகம் படிக்கிறேன்…” என்று கூற, மெல்லியதாகத் தலையசைத்த யசோதா,

“ஆமாம் தம்பி, அது இப்படித்தான் பல வருடங்களாக இருக்கிறது. எந்த நேரம் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது… உயிருக்கு உத்தரவாதமில்லை…” என்றவர் கலக்கத்துடன்,

“எனக்கு இவளை நினைத்துத்தான் பயமாக இருக்கிறது கந்தழி… ஏதாவது வெளிநாட்டிலிருந்து நல்ல வரன் வந்தால் செய்து அனுப்பிவிடலாம் என்று தோன்றுகிறது…” என்று யசோதா தன் மனதில் இருந்ததைக் கூற, கந்தழிதரன் பேரதிர்ச்சி கொண்டவனாக  அவரைப்  பார்த்தவன்.

“என்ன அத்தை சொல்கிறீர்கள்… இவளுக்குப் பதினாறு வயது அத்தை. இந்த நேரத்தில் இவளுக்குத் திருமணமா… இவள் குழந்தை அத்தை…” என்று சற்றுக் கோபமாகக் கூற, யசோதாவோ மெல்லியதாகச் சிரித்தார்.

“எனக்கு மட்டும் வேண்டுதலா கந்தழி… வேறு வழி இல்லாமல்தான் இந்த முடிவுக்கே வந்தேன். இங்கே ஈழத்தமிழர்கள் வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் உயிரைக் காக்கவேண்டி, வயதையும் பார்க்காமல் தப்பிப்பிழைத்தால் போதும் என்கிற நோக்கில் வருகிற வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் முடித்து அனுப்பி விடுகிறார்கள். உயிரை விட வயதொன்றும் பெரிய முக்கியமில்லையே… தவிர இங்கே அல்லோலகல்லோலப் படுவதை விட, வெளிநாட்டில் ஒருவனின் துணையோடு நிம்மதியாக, உயிர்ப் பயம் இல்லாமல் வாழலாம் அல்லவா…” என்று வருத்தத்துடன் கூற, தன் மகள் திருமணம் முடித்துப் போகவேண்டும் என்கிற அக்கறையை விட, அவள் இங்கிருந்து போனால் போதும் என்கிற வலி மட்டும்தான் அந்தக் குரலில் நிறைந்திருந்ததைக் கண்டான் கந்தழிதரன்.

“அத்தை… என்ன அத்தை இது… அம்மேதினி நன்றாகப் படிக்கக் கூடியவள்… அவள் படித்து முதலில் தன் காலில் நிற்கவேண்டாமா… இந்த வயதில் திருமணம் முடித்து, குழந்தை குட்டி என்று எதற்கு அல்லல் படவேண்டும் சொல்லுங்கள்…” என்று மென்மையாகத் தன் மறுப்பைக் கூற,

“படித்துச் சொந்தக் காலில் நிற்பதா? சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்…” என்று கேட்டு வலியோடு சிரித்தவர், கந்தழிதரனைப் பார்த்து, அதற்கு முதலில் உயிரோடு இருக்கவேண்டுமே தம்பி…” என்றார் குரல் அடைக்க. பின் தன் தலையை மறுப்பாக ஆட்டிவிட்டு, மேலும் கண்ணாடிக் குடுவையில் படிந்த கரியைத் துடைத்தவாறு,

இந்த கண்ணாடிக் குடுவையில் பட்ட கரிபோலத்தான் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும் தம்பி… முடிந்தவரை படிந்த பிரச்சனைகளை சுத்தப்படுத்தத்தான் பார்க்கிறோம்… ஆனால் பாருங்கள்… திரும்பத் திரும்ப வலிகளையும் வேதனைகளையும் சுமந்துகொண்டு… எத்தனை நாட்களுக்கு இந்த ஓட்டம்… தெரியவில்லை…” என்று கலங்கியவாறு கூற, நெஞ்சை அடைத்த வலியுடன், அத்தையைப் பார்த்தவன்,

“என்றாவது ஒரு நாள் சரி வரும் அத்தை… அதற்காக, அம்மேதினிக்கு இதனை பெரிய சுமையைக் கொடுக்கவேண்டுமா?” என்று வருந்தியவனை நிமிர்ந்து சற்று நேரம் இமைக்காது பார்த்தார் யசோதா.

“எப்போது சரிவரும் தம்பி? இன்று… நாளை.. இல்லை நாளை மறு நாள், ஒரு வருடம் கழித்து… ப்ச்… நம்பிக்கை விட்டுப் போய்விட்டது… முடிந்தவரை உயிரோடு இருக்க முயல்வதுதானே புத்திசாலித்தனம்…” என்று கேட்க, இவனோ,

“இல்லை அத்தை… குறைந்தது படிப்பையாவது முடிக்க வேண்டாமா?” என்றான். அதைக்கேட்டு சற்றுப் பெரிதாகவே நகைத்தவர்,

“தம்பி பல்கலைக்கழகத்தில், இளங்கலை முடித்து சிறந்த பெறுபேறுகளுடன் வெளியேறியவள் நான்… என்னத்தைச் சாதித்துவிட்டேன்? இந்தப் போராட்டக் காலத்தில் என் கணவரின் உயிரைத்தான் காக்க முடிந்ததா, இல்லை என் பிள்ளையைத்தான் காவாந்து பண்ண முடிந்ததா. உயிருக்கு முன்னாடி இதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சு தம்பி…

“தவிர திருமணம் முடித்துக் குழந்தை குட்டியோடு வாழ்வது சுமையென்று யார் சொன்னார்கள்? உயிரினம் பிறப்பதே அடுத்தச் சந்ததிகளை உருவாக்கத்தான். கற்பதற்காகவும், வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதற்காகவும் இல்லை. எந்த உயிரினங்களும் மனிதர்களைப் போலப் படிப்புப் படிப்பு என்று தலையைப் பிய்த்துக் கொள்வதுமில்லை, வேலை வேலை என்று ஓடுவதும் இல்லை… யாரோ ஒருவனுக்குக் கீழ் வேலை என்று முடங்கிக் கிடந்தது தொழிற்புரட்சிக்குப் பிறகு வந்த அவலம்தானே.

சொல்லப்போனால் வெறும் இருநூறு வருடங்கள்தான். இந்த இருநூறு வருடங்களில் எப்படியெல்லாம் நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. பணம்தான் முக்கியமானதாகிப் போய்விட்டது. இந்தக் குறுகிய காலத்தில் எத்தனை அசுர வளர்ச்சி… வளர்ச்சி இருந்தால் வீழ்ச்சியும் இருக்கத்தானே வேண்டும்… இருந்து பாருங்கள்… வளர்ந்த வேகத்திலேயே இதெல்லாம் காணாமல் போகும். அப்போது இந்த உலகமே திணறிப்போகும்… முன்னெல்லாம் வயது வந்ததும் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்… அது இயற்கையிட்ட கட்டளை. இப்போது படிப்பு… வேலை, அது, இது என்று வயது முப்பதுகளைக் கடந்தபிறகுதான் திருமணமே நடக்கிறது. இதன் பிறகு ஒன்றோ இரண்டோ என்றுதான் குழந்தைகள். கொஞ்சக் காலத்தில் உலகமே இளம் சமுதாயம் இல்லாமல் திணறப்போகிறது. அப்போது மீண்டும் பழைய காலம் போலப் பருவம் வந்ததும் திருமணம் என்கிற நிலைக்குத் தள்ளப் படுவோம்… இதெல்லாம் காலத்தின் சுழற்சி… காலத்தைக் கரைத்துவிட்டால் திரும்பப் பெற முடியாது கந்தழி…” என்று அவர் கூற, கந்தழிதரனோ,

“புரிகிறது அத்தை… ஆனால் அம்மணிக்கு இப்போதுதானே பதினாறு. குறைந்தது இருபதாவது ஆகவேண்டாமா?” என்று அவன் கேட்க,

“எனக்கு மட்டும் விரதமா என்ன இப்போதே கட்டிவைக்கவேண்டும் என்று? காலச் சூழல் நம் விருப்புக்கு விடுதில்லையே… என்ன செய்வது… உங்களுக்கே தெரியும், அடிக்கடி இந்தப் பக்கமாக ஷெல் அடிக்கிறார்கள். ஏதோ இந்த ஒரு வருடமாகத்தான் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறோம்… வெறுத்து விட்டது தம்பி, ஈழத்தமிழர்கள் என்ன தவறு செய்தோமோ தெரியவில்லை, காலம் காலமாக அடிவாங்கிக்கொண்டே இருக்கிறோம். எண்பத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்… இன்னும் ஓடி முடியவில்லை. அதுக்குப் பிறகு எண்பத்தேழாம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதிப்படை என்று வந்து செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவர்கள் சென்று முடிய இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் நுழையக் காத்திருக்கிறது. ஒரு வேளை அவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினால்…” சொல்லும்போதே யசோதாவின் உடல் நடுங்கியது. விழிகளில் கண்ணீர் மல்க,

“அவள் ஒருத்திதான் எனக்குத் தம்பி… அவளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று நான் அஞ்சி நடுங்குவது எனக்குத்தான் தெரியும்… அதைவிட, அவள் எங்காவது கண்காணா தேசத்திற்குப் போனாலும் நிம்மதியாக இருக்கிறாள் என்கிற செய்தி அறிந்தால் எனக்குப் போதும். வேறு எதுவும் தேவையில்லை…” என்று கூறியபோது அவருடைய கண்களிலிருந்து போலபோலவென்று கண்ணீர் கொட்டத் தொடங்கியது. அதைக் கண்டு, இருக்கையை விட்டு எழுந்த கந்தழிதரன், வேகமாக யசோதாவை நெருங்கி, அவரின் மேல் கைகளைத் தன் கரங்களால் பற்றி,

“அத்தை… என்ன இது… நாங்கள் இல்லையா… அம்மணியைப் பார்த்துக்கொள்ள மாட்டோமா… இதோ பாருங்கள்… நீங்களும் அம்மேதினியும் கொழும்பு வந்திடுங்கள். அங்கே இந்தச் சிக்கல்கள் இருக்காது அல்லவா…” என்று மென்மையாகக் கேட்க, தன் மருமகனின் கன்னத்தில் கரிபடிந்த கரத்தை மென்மையாக வைத்த யசோதா,

“அங்கே வந்து என்ன செய்வது? இங்கே இந்த வீடு இருக்கிறது, ஆடு மாடுகள் என்று இருக்கின்றன… இதை விட்டுவிட்டு எப்படி அங்கே வருவேன்? இங்கேதானே என் உழைப்பிருக்கிறது… இது என் தேசம்… எப்படி விட்டுவிட்டு வருவேன்?” என்று கேட்க, கன்னத்தில் வைத்த அவர் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன்,

“உங்கள் தேசம் என்கிறீர்கள், ஆனால் குழந்தைகளை மட்டும் வெளிநாட்டிற்கு அனுப்ப நினைக்கிறீர்களே… இது என்ன நியாயம்?” என்றான் மெல்லிய கோபத்தோடு. இப்போதும் சிரித்த யசோதா,

“கண்ணா… இந்தத் தேசமே ஒரு நாளைக்குச் சுடுகாடாகும்… இதைக் கட்டியெழுப்பச் சந்ததிகள் உயிரோடு இருக்கவேண்டாமா…? நீங்கள் எல்லோரும் இங்கிருந்தால், விதையிலேயே நசுக்கப்படுவீர்கள். இதுவே வெளிநாட்டில் இருந்தால், இங்கே என்ன நடந்தாலும் கேள்வி கேட்க நீங்கள் இருப்பீர்கள் தானே. தவிர, இங்கு தேவைப்படுவதை நீங்கள் அங்கிருந்து நிறைவு செய்ய மாட்டீர்களா? சிங்களவர்களின் கரங்களை எதிர்பார்க்காமல், வெளிநாட்டில் இருக்கும் என் சொந்தங்களின் கரங்களை எதிர்பார்ப்பது எவ்வளவோ மேல் அல்லவா…” என்று கேட்க ஆம் என்பது போலத் தலையாட்டினான் கந்தழிதரன்.

அப்போது அம்மேதினி அன்னை சொன்ன வேலையை முடித்துக்கொண்டு, அவர்களை நோக்கி வர, உடனே தன் பேச்சைக் கைவிட்டவராக,

“ப்ச்… இவளை விடு… இப்போது உன் விஷயத்திற்கு வருகிறேன்… நீ எப்போது திருமணம் முடிக்கப் போகிறாய்?” என்று புன்னகையுடன் கேட்க, அன்னை முன்னால் அமர்ந்த அம்மேதினிக்கு ஏனோ இதயம் படபடத்தது.

அவர்கள் பேசியதைத் தன் காதிலேயே வாங்கிக்கொள்ளாத பாவனையுடன் மறு லாந்தரை எடுத்துச் சிம்மினியை விலக்கித் துடைக்கத் தொடங்கினாலும் உள்ளே ஒருவித எதிர்பார்ப்புத் தோன்றியது.

‘ஒரு வேளை என்னை மணக்கிறாயா என்று அவனைக் கேட்கப் போகிறாரோ? அதை எண்ணும்போதே இவளையும் மீறி முகம் வெட்கத்தால் சிவந்தது. நெஞ்சில் பட்டாம்பூச்சிகள் படபடத்தன. அழுத்தமாகச் சிம்மினியைத் துடைத்தவாறு தன் காதுகளைக் கூர்மையாக்க, இவனோ யசோதாவை விட்டு எழுந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தவாறு,

“என்ன அவசரம் அத்தை, இப்போதுதான் கனடாவில் தனித்து வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறேன். அது நல்ல நிலைக்கு வரும்வரைக்கும் திருமணம் பற்றி யோசிக்க முடியாது அத்தை…” என்றான் கந்தழிதரன். யசோதாவோ லாந்தர் விளக்கின் மண்ணெண்ணெய் ஊற்றும் திருகைக் கழற்றியவாறு,

“உன்னுடைய வெற்றிக்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? அது அது பாட்டிற்கு இருக்கப்போகிறது. இது இதுபாட்டிற்கு இருக்கப்போகிறது. கண்ணா… சந்தர்ப்பம் சரியாக அமைகிற காலத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டும்பா… அப்போதுதான் வாழ்க்கை நிறைவாக இருக்கும் காலா காலத்தில் செய்வதைச் செய்துவிடவேண்டும்… என்ன புரிந்ததா?” என்று கூற, இவனோ சலிப்புடன்,

“அம்மா போலப் பேசுகிறீர்களே அத்தை…” என்றவன், எழுந்து இருக்கையில் அமர்ந்தவாறு, புத்தகத்தைக் கரத்தில் எடுத்தவாறு,

“பிடித்தவளாகக் கிடைக்கவேண்டுமே…” என்றான்.

‘ஏனோ அம்மேதினிக்கு மெல்லிய சுணக்கம் ஏற்பட்டது. பிடித்தவளாகக் கிடைக்க வேண்டுமா?’ என்று எண்ணியவளுக்கு அந்தப் பதில் ஏனோ பிடிக்கவில்லை. அதற்கான காரணமும் இவளுக்குப் புரியவில்லை.

“ஏன் தம்பி… நீங்கள் இங்கிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தால் அவளைக் காப்பாற்றியதாகவும் ஆகிவிடும், அவளுக்கு நல்ல வாழ்க்கை கொடுத்ததாகவும் ஆகிவிடும்… என்ன நினைக்கிறீர்கள்…?” என்று கேட்க இப்போது அம்மதியின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது. அவளையும் அறியாமல் கரங்கள் நடுங்கின. அவளுக்கு மட்டுமல்ல, கந்தழிதரனுக்கும் ஒரு வித பதட்டம் தொற்றிக்கொண்டது.

‘அத்தை என்ன சொல்ல வருகிறார்கள்? யாரை மணக்க அடித்தளம் போடுகிறார்கள். சற்றுமுன் அம்மேதினியின் திருமணம் பற்றிப் பேசியது கூட, இதற்காகத்தானா… அம்மணியை என்னோடு முடிச்சுப் போடத்தான் அத்தை இந்தளவுக்குக் கட்டம் கட்டினாரா? என்று ஒரு பக்கம் கோபம் எழுந்தாலும் மறுபக்கம் குழப்பமாகவும் இருந்தது. அம்மணியை எப்படி மணப்பது. அவனைப் பொறுத்தவரைக்கும் அவள் குழந்தையாயிற்றே. கடவுளே… அப்படி நேரடியாகக் கேட்டால் என்ன பதிலைக் கொடுப்பது?’ என்று அவன் தடுமாறும் போது, இவளோ,

‘அம்மா என்னை மணக்கச் சொல்லியா கேட்கப்போகிறார்?’ என்று எண்ணி உள்ளம் குதுகலிக்க, நிமிர்ந்து கந்தழிதரனைப் பார்க்க, அவனும் ஒரு வித தடுமாற்றத்துடன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். பின் திரும்பி யசோதாவைப் பார்த்து,

“அத்தை… அப்படி… அப்படி ஈழத்தில் யார்… யார் இருக்கிறார்கள்…” என்றான் உள்ளே எழுந்த உதறலை மறைக்க முயன்றவாறு. முகம் மலரத் திரும்பித் தன் மகளைப் பார்த்தவர், பின் கந்தழிதரனைப் பார்த்து,

“வேறு யாரை… ரோகிணி… ரோகிணியைத்தான் நான் சொல்கிறேன். அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க, ‘ஒரு கணம் நிம்மதியாக இருந்தாலும் மறு கணம் ஏதோ பெரும் ஏமாற்றம் ஒன்று கந்தழிதரனின் மனதில் எழத்தான் செய்தது. எதற்காக அந்த ஏமாற்றம்? எதற்காக அந்தத் தவிப்பு… அவனுக்குப் புரியவில்லை… புருவம் சுருங்க பேச்சற்று அப்படியே நின்றிருக்க, அதே நேரம் சிம்மினியைத் துடைத்துக்கொண்டிருந்த அம்மேதினியின் கரங்களும் அப்படியே அசையாது நின்றிருந்தன.’

“நெஞ்சில் எழுந்த பெரும் ஏமாற்றத்தையும் வலியையும் அடக்க சக்தியற்றவளாகத் திணறிக் கொண்டிருக்க, கந்தழிதரனோ,

“ரோகிணியா?” என்றான் யோசனையோடு.

“ஆமாம் தம்பி… ரோகிணிதான்…” என்ற யசோதா, லாந்தருக்கு மண்ணெண்ணெய் விட்டு முடிந்த கையோடு மூடியை அழுந்த மூடிவிட்டுத் தரையில் வைத்தவர், அவன் பக்கமாகத் திரும்பி முழங்கால் மடித்து அதன் மீது கரத்தைப் போட்டு,

“சொல்லு… ரோகிணியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றார் மீண்டும். கந்தழிதரனோ தடுமாற்றத்துடன்,

“அவள் நல்ல பெண்தான்… வடிவானவள்… புத்திசாலி… நிச்சயமாக அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது…” என்று அவன் முடிக்கவில்லை, இவளுக்குள் பொசுபொசு என்று எதுவோ எரிந்தது. பற்களைக் கடித்துக்கொண்டு அழுத்தமாகச் சிம்மினியைத் துடைக்கத் தொடங்க, அன்னை யசோதாவோ முகம் மலர்ந்தவராக,

“தம்பி… அவர்களுக்கு நல்ல வசதி இருக்கிறது…” என்று மெல்லியதாக இழுக்க, இவளோ பற்களை நற நற என்று கடித்தாள். அவனோ,

“ஆமாம்… தெரியும்… அவர்கள் மகன்கள் வெளிநாடு போக முதலே நல்ல வசதியானவர்கள் தானே…” என்றான் மெல்லிய தயக்கத்துடன்.

“அக்காக்கு… ரோகிணியை உங்களுக்குக் கொடுக்கவேண்டும்… என்று ஆசைப்…” முடிக்கவில்லை… ‘சலீர்..’ என்கிற சத்தம் பக்தத்திலிருந்து வர, கந்தழிதரனும், யசோதாவும் பதறித் துடித்துத் திரும்பிப் பார்க்க அங்கே கையில் வைத்திருந்த சிம்மினியை உடைத்துவிட்டு, அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மேதினி.

அடுத்தக் கணம் படு வேகமாக எழுந்த கந்தழிதரன், அவளை நெருங்கி மண்டியிட்டமர்ந்து கரத்தைத் தூக்கிப் பார்க்க மணிக்கட்டில் மெல்லிய வெட்டு விழுந்திருந்தது. கோபத்துடன் நிமிர்ந்து அம்மேதினியைப் பார்க்க, அவளோ விழிகளில் கண்ணீர் நிறைய, இன்னும் இரத்தம் வெளிவராத வெட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்ன பைத்தியமா அம்மணி? ஒரு அவதானம் வேண்டாம்… நல்லவேளை வெட்டு ஆழமில்லை…” என்று கடிந்தவனாக அவளுடைய கைத்தலத்தைத் தன் பெரிய கரத்தால் பற்றிப் பின்னால் சரித்துப் பரிசோதிக்க இப்போது மெல்லிய இரத்தக் கோடு விழுந்திருந்தது.

“தாங் காட்…! சுத்தப்படுத்தினால் போதுமானது…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தாய் காப்பித் தூளுடன் ஓடிவந்திருந்தார். அதை வாங்கி அவளுடைய கரத்தில் போட முயல, தன் கரத்தை உதறி விடுவித்தவள்,

“எனக்காக நீங்கள் ஒன்றும் வருந்த வேண்டாம்… அதற்குத்தான் அம்மா இருக்கிறார்களே…” என்று சுள் என்று விழுந்தவள் தாயை நிமிர்ந்து பார்த்து அதே கோபத்துடன் தன் கரத்தை நீட்டியவாறு மூக்கை உறிஞ்ச, அவளுடைய அந்தச் சிறுபிள்ளைத் தனத்தில் இளகிப்போனான் கந்தழிதரன்.

தன் வலது கரத்தைத் தூக்கி அவளுடைய தலையில் வைத்து ஆட்டிவிட்டு உடைந்திருந்த கண்ணாடித் துண்டுகளைச் சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்க, மறுகையால் அவனுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவள்,

“உடைத்த நானே சுத்தப்படுத்துவேன்… நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம்…” என்றாள் தழும்பிவிட்ட குரலில்.

தன் மகளுக்குப் பெரிய காயமில்லை என்பதைக் கண்டு நிம்மதி அடைந்தவராகக் காப்பித்தூளைக் காயத்தின் மீது கொட்டியவாறு கந்தழிதரனை நிமிர்ந்து பார்த்து,

“தம்பி…” என்றார். இவனோ காயத்திற்கு மருந்து போடுவதையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு,

“சொல்லுங்கள் அத்தை…” என்றான்.

“இல்லை… ரோகிணியை உங்களுக்குக் கொடுக்கப் பவானி அக்கா பிரியப் படுகிறார்கள்… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?” என்று கேட்க அம்மேதினியோ அன்னையை முறைத்தாள். பின் திரும்பி கந்தழிதரனைப் பார்க்க, அவனோ சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, எழுந்தவன், யசோதாவைப் பார்த்து,

“மறுப்பதற்கு எதுவும் இல்லைதான் அத்தை… ஆனால் என் வேலையில் கவனமாக இருக்கவேண்டுமே… அதனால் இன்னும் நான்கு வருடங்களுக்கு என்னால் திருமணத்தைப் பற்றி யோசிக்க முடியாது…” என்று அவன் கூற, இவளுடைய மனதில் ஏதோ நொறுங்கிய சத்தம் கேட்டது. மறுக்க ஒன்றுமில்லை என்றால் அவனுக்கும் அந்த ரோகத்தைப் பிடித்திருக்கிறது என்றுதானே பொருள். மேலும் கண்கள் கலங்க, அன்னையோ,

“திருமணத்தைப் பிறகு வைத்துக்கொள்ளலாம் தம்பி… ஆனால் நிச்சயம் போல வைத்தால் நல்லது தானே…” என்று பரபரப்புடன் கூற,

“யோசிக்கலாம் அத்தை… அம்மா அப்பாவிடமும் கேட்கவேண்டுமே…” என்று புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே செல்ல, இவளோ நெஞ்சம் உடையச் சென்று கொண்டிருந்தவனையே வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

What’s your Reaction?
+1
13
+1
2
+1
0
+1
0
+1
0
+1
6
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

15 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 15

(15)   மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக்…

2 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி...…

3 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)   அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது…

5 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 12

(12)   இப்படியே இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றன. கந்தழிதரனின் நண்பர்கள் அவனைத் தேடி வருவதும்,…

7 days ago