Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 28/29

(28)

 

மனித நடமாட்டமே இல்லாத அந்தப் பாதையில் அவர்கள் மட்டும் தனியாய். உயிர் தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்க முன்னால் அமர்ந்திருந்த அம்மேதினிக்கோ நெஞ்சில் நம்பிக்கை ஒளி மெல்ல மெல்லப் பூக்கத் தொடங்கியது.

எங்கே அவனுக்கும் அவளுக்குமான வாழ்க்கை முடிவை நெருங்கிவிடுமோ என்று அஞ்சி நடுங்கிய நேரத்தில் காலம் அவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறதே. பெரும் நிம்மதியுடன் வண்டியை மிதித்துக் கொண்டிருந்த கந்தழிதரனின் மார்பில் நிம்மதியாகத் தன் தலை சாய்க்க அதைப் புரிந்துகொண்டவன் போலச் சற்றுக் குனிந்து தன்னவளின் தலையைப் பார்த்தான் கந்தழிதரன்.

தன்னையும் மறந்து அவளை நோக்கிக் குனிந்தவனுக்கு அன்று முழுதும் மறந்திருந்த முன்னிரவு நினைவுகள், ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்க இவன் உடல் உருகிக் குழைந்து போயிற்று. எந்த நம்பிக்கையில் தன்னை மொத்தமாக அவனிடம் கொடுத்தாள்.

இறுதி நிமிடத்தில் கிடைக்கும் சொர்க்கம் என்றல்லவா நினைத்தார்கள். கடைசியாக மரணிக்கும் தருவாயில் ஆண் பெண் சுகத்தை அறிந்துவிடும் வேட்கை இருவருக்குள்ளும் இருந்ததால் அவனும் தன்னிலை கெட்டு விட்டான்தான். ஆனால் இப்போது நினைக்கும் போது ஏதோ ஒரு வித குற்றக் குறுகுறுப்பு. கூடவே அவன் பலத்தைத் தாங்க முடியாது திணறிய அந்தப் பெண்மையும் நினைவுக்கு வர ஆழ மூச்செடுத்தவன், குனிந்து அவள் தலையில் உதடுகளைப் பொருத்தி,

“சாரிடி…” என்றான் மெல்லிய வலியுடன். இப்போது கோபத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“இப்போது எதற்கு இந்தச் சாரியும் பூரியும்…” என்று சினக்க, ஒரு கணம் குற்ற உணர்வில் தலை கவிழ்த்தான் அந்த ஆண் மகன்.

“சபா… இதை விட அந்த இராணுவத்திடம் பிடிபட்டிருக்கலாம் போல…” என்று எரிச்சலுடன் சொன்னவள், தன் கழுத்தில் தொங்கிய அவனுடைய சங்கிலியைத் தூக்கிக் காட்டி, “இதோ பாருங்கள்… இப்போது நானும் நீங்களும் கணவன் மனைவி… அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…” என்றுவிட்டுத் தெருவைப் பார்த்து,

“சரி சரி… வண்டியைச் சீக்கிரமாக மிதியுங்கள்… நன்றாக விடிவதற்குள் தப்பிவிடவேண்டும்..” என்றவளுக்கு இப்போது அன்னையின் நினைவு வந்தது. மீண்டும் நிமிர்ந்து பார்த்து,

“அம்மாவுக்கு ஒன்றுமாகியிருக்காது தானே கந்து…” என்று நடுங்கும் குரலில் கேட்க,

“ஏன்டி எதிர்மறையாகவே நினைக்கிறாய். அத்தைக்கு ஏதுவுமாகியிருக்காது… நம்பு…” என்றவன், வேகமாக வண்டியை மிதிக்கத் தொடங்க, பகலவனும் மெல்ல மெல்ல விழிக்கத் தொடங்கியிருந்தான்.

அந்த வெளிச்சத்தில் ஒரு வீட்டின் பின்புறம் சில ஆடைகள் காய்ந்து கொண்டிருப்பது தெரிய, வண்டியை வீட்டின் பின்புறத்தை நெருங்கியவன் யாராவது தங்களைப் பார்க்கிறானா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான். எவரும் இல்லை என்றதும், அதிலிருந்து ஒரு சட்டையை இழுத்து எடுத்து அணிந்தவாறு அம்மேதினியை நெருங்கி மீண்டும் அவளை வண்டியில் இருத்தி ஊர் நோக்கிச் செல்லத் தொடங்க, அப்போதுதான் அவர்களுக்கு ஒன்று உறுத்தியது. பாதுகாப்பு வலையம் என்று நினைத்து வந்தாயிற்று. ஆனாலும் மக்கள் நடமாட்டம் சுத்தமாக இருக்கவில்லை.

“என்ன கந்து… யாரையும் காணவில்லை…” என்று குழம்ப,

“அதுதான் எனக்கும் தெரியவில்லை அம்மணி…” என்றவாறு மேலும் முன்னேற, சற்றுத் தொலைவில், சிலர் தமது வண்டிகளில் மூட்டை முடிச்சுகளைக் கட்டியவாறு மிதிவண்டியை உருட்டிக்கொண்டு நடந்துசெல்வது தெரிந்தது. அதைக் கண்டு இருவரின் முகங்களும் மலர்ந்து போயின.

அப்படியானால் தப்பிவிட்டார்களா. அந்த ஆபத்தான இடத்தை விட்டு வந்துவிட்டார்களா… அவர்களின் ஆயுள் கெட்டியா என்ன… கடவுளே… என்கிற பெரும் நிம்மதி கொடுத்த உற்சாகத்துடன் மேலும் முன்னேறத் தொடங்க இப்போது சற்று அதிக மக்கள் பொருள் பண்டங்களுடன் தெருவில் நடந்துபோய்க் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் தெரிந்தது, அந்த ஊர் மக்கள் எல்லோரும் தங்கள் சொந்த இடத்தை விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள் என்று.

அவர்களை நெருங்கிய கந்தழிதரன், ஒற்றைக் காலைத் தரையில் ஊண்டி,

“ஐயா… என்னவாகிவிட்டது… எல்லோரும் எங்கே போகிறார்கள்?” என்று குழப்பத்துடன் கேட்க,

“என்ன தம்பி… செய்தி தெரியாதா? இராணுவம் மாதகல், தெல்லிப்பளை எல்லாவற்றையும் பிடித்துவிட்டதாம். இனி அடுத்தது சண்டிலிப்பாய் தானே… அதுவும் நேற்று முழுவதும் ஒரே ஷெல் அடி… முக்கால்வாசி வீடுகள் சேதமாகிவிட்டன… இனி இங்கே இருந்து என்ன செய்வது.. அதுதான்… கிழக்குப் பக்கமாகப் போகலாம் என்று ஊரே கிளம்பிவிட்டது… நேற்று முழுவதும் மாதகல் பண்டத்தரிப்பு இளவாளைச் சனங்கள் அத்தனை பேரும் சாரை சாரையாகக் கிளம்பிவிட்டார்கள்… இப்போது நாங்களும் கிளம்பிவிட்டோம். இனி இங்கே உயிருக்கு உத்தரவாதமில்லையே…” என்றுவிட்டு அவர் மேலும் தன் வண்டியின் வேகத்தைக் கூட்டத் தொடங்க, இருவரின் இதயங்களும் படு வேகமாகத் துடிக்கத் தொடங்கின.

மீண்டும் வீடு நோக்கிப் பயணித்தனர் இருவரும். இப்போது மெல்ல மெல்ல ஊர் நெருங்கியது. கூடவே சற்று நடமாட்டமும் அதிகரித்திருந்தது. அத்தனை பேரும் தமது இடங்களை விட்டுக் கிடைத்த பண்ட பாத்திரங்களுடன் உயிரைக் காக்கவேண்டிப் பயணப்பட்டுக்கொண்டிருக்க, அந்த நிலையைக் கண்ட அம்மேதினிக்கு நெஞ்சைப் பிசைந்தது.

சொந்த ஊரை விட்டுப் போவது என்பது எத்தனை கொடுமை. அதுவும் கட்டிய வீட்டையும் உற்றம் சுற்றங்களையும் விட்டுவிட்டுப் போவது அத்தனை சுலபமானதா என்ன? விழிகள் கலங்கிப்போக அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டை நெருங்க முதல், ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு ஷெல் வந்து விழும் ஓசை கேட்டது.

பதறிப்போனார்கள் அந்த மக்கள். எல்லோரும் சொல்லிவைத்தது போலப் பதுங்கு குழி நோக்கி ஓடத் தொடங்க, கந்தழிதரன் மிதிக்கும் வேகத்தை அதிகரித்தான்.

வண்டியை மிதிக்க மிதிக்க, கந்தழிதரனுக்குக் காயத்திலிருந்து இரத்தம் மீண்டும் பயங்கரமாகக் கசியத் தொடங்கியது. கூடவே உடல் குளிர்ந்தது. நடுங்கியது. ஆனால் அவன் இருந்த நிலையில் எதைப்பற்றியும் யோசிக்கும் நிலையிலில்லை.

இப்போது இன்னொரு ஷெல் அதே இடத்தில் வந்து விழுந்தது.

கடவுளே… மீண்டும் ஷெல் அடிக்கத் தொடங்கி விட்டார்கள். எந்த நேரம் எங்கே ஷெல் வந்து விழும் என்பது தெரியாது. என்று கலங்கும் போதே இன்னொரு ஷெல் மறு திசையில் சென்று விழுந்தது. அதைத் தொடர்ந்து மூன்று பொம்மர்கள் வானத்தில் பறக்கத் தொடங்கியது.

“ஐயோ… பொம்மர் பறக்கத் தொடங்கிவிட்டது…” என்று அம்மேதினி நடுங்கத் தன் வேகத்தை இன்னும் கூட்டினான் கந்தழிதரன். அதே நேரம் அம்மேதினியின் வீடு நெருங்க நெருங்க, அவள் வீட்டில் அதிகக் கூட்டம் கூடியிருப்பதைக் கண்டதும், அம்மேதினிக்குப் புரிந்து போனது தங்களைக் காணவில்லை என்று ஊரே அல்லோலகல்லோலப் பட்டிருக்கிறது என்று. கந்தழிதரன் வண்டியை நிறுத்துவதிற்குள் தாய்ப்பசுவைத் தேடிய கன்றாக,

“அம்மா…” என்று கதறியவாறு உள்ளே ஓட, அதுவரை கரங்களைப் பிசைந்துகொண்டிருந்த சொந்த பந்தங்கள் அவர்கள் இருவரையும் கண்ட உடன், பெரும் நிம்மதியுடன்,

“அப்பாடா வந்துவிட்டார்கள்… அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை…” என்று கூறி முடிக்கவில்லை, அதுவரை கந்தழிதரனுக்கும், அவளுக்கும் ஏதோ நடந்துவிட்டது என்று எண்ணிக் குற்றுயிராகத் தரையில் சரிந்திருந்த யசோதா, தன் மகளின் குரல் கேட்டு,

“என் கண்ணே…” என்று அலறியவராக எழுந்தவர், அங்கே முழுதாக எந்த ஆபத்துமில்லாது வந்துகொண்டிருந்த தன் மகளைக் கண்டு பாய்ந்து சென்று இறுக அணைத்து வாய்விட்டுக் கதற, அம்மேதியும் சேர்ந்து அன்னையோடு அழத் தொடங்கினாள்.

ஊர் மக்களோ,

“சரி சரி… மகள்தான் உயிரோடு வந்துவிட்டாளே… இனி அழுவதற்கு நேரமில்லை… எல்லோரும் கிளம்புங்கள்… எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம். மேதினி, போய் முக்கியமான பாத்திர பண்டங்களை ஒரு பைக்குள் போட்டுக் கட்டு, தேவையான இரண்டு மூன்று ஆடைகளை எடுத்து வை, நாங்கள் எல்லோரும் சாகவச்சேரி பக்கம் போகப்போகிறோம். இனி இங்கே இருக்க முடியாது. இராணுவம் எந்த நேரமும் ஊருக்குள் வந்துவிடலாம்…” என்று எச்சரிக்க அம்மேதியோ கலக்கத்துடன் அன்னையைப் பார்த்தாள்.

யசோதாவோ தன் மகள் வந்த மகிழ்ச்சியில் அதுவரையிருந்த அழுத்தம் கரைந்து போனவளாக,

“ஐயோ… என்னம்மா முகத்தில்… காயம் பட்டிருக்கிறதே…” என்று பதற,

“ஒன்றுமில்லை… தப்பும்போது பட்டுவிட்டது…” என்று சமாதானப்படுத்த,

“உன்னைக் காணவில்லை என்று எப்படித் துடித்துப்போனேன் தெரியுமா? உன்னுடைய அப்பா, செல்வன் போலத் திரும்பி வராமல் போய்விடுவாயோ என்று…” அதற்கு மேல் முடியாமல் யசோதா துடிக்க, அந்த நேரம் துவிச்சக்கர வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுக் குழுமியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு யசோதாவை நோக்கி வந்தான் கந்தழிதரன்.

அது வரை மகளை அணைத்தவாறு விசும்பிக்கொண்டிருந்த யசோதா, அவனைக் கண்டதும் பாய்ந்து அவனை அணைத்தவாறு கதறத் தொடங்கினார்.

‘கடவுளுக்கு நன்றி… உங்கள் இருவரையும் மீண்டும் பார்ப்போமா என்று எவ்வளவு பயந்துகொண்டிருந்தோம் தெரியுமா.. தம்பி… நீங்கள் என் மருமகன் இல்லை… என் தெய்வம்… எப்படியும் என் மகளைப் பத்திரமாகச் சேர்ப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்… கடவுளே… உங்கள் இருவருக்கும் எதாவது நடந்திருந்தால், அக்கா பவானி உங்கள் இருவரையும் காணவில்லை என்று சொன்னபோது, நான் எப்படித் துடித்தேன் தெரியுமா?” என்று விம்மியவாறு அழத் தொடங்க, தாய் அழுவதைக் கண்டதும், அம்மேதினியும் அழத்தொடங்க, உடனே அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் கந்தழிதரன்.

“மண்டு இப்போது எதற்கு அழுகிறாய்…” என்று கடிய, யசோதா அழுவதைப் பார்த்த ஒரு பெரியவர்,

“என்ன யசோ இது… அதுதான் பிள்ளைகள் இருவரும் சுகமாக வந்துவிட்டார்களே… பிறகு ஏன் அழுகிறாய்… போ… போய் ஆகவேண்டியதைப் பார்… அம்மா சொன்னது போலப் பொருட்களைக் கட்டு… எல்லோரும் இன்னும் அரை மணி நேரத்தில் புறப்பட்டுவிடவேண்டும்…” என்று முடிக்கவில்லை, மீண்டும் பொம்மரின் ஊர்வலம் வானத்தில் நடக்கத் தொடங்கியது.

“கடவுளே… பொம்மர் வரும் சத்தத்தைப்பார்த்தால் எங்கள் வீட்டிற்கு மேல்தான் போடப்போகிறார்கள் போல இருக்கிறது… எல்லோரும் பதுங்கு குழிக்கு ஓடுங்கள்…” என்று ஒருவர் கத்த, உடனே அவர் அவர் தங்கள் வீட்டிலிருந்த பதுங்குகுழியை நோக்கிப் பாய்ந்து ஓடத் தொடங்கினர். அதற்கிடையில் ஆவேசமாக வந்த பொம்மர் தாராளமாக நான்கு குண்டுகளை மிக அருகே ஒன்றன்பின் ஒன்றாகப் போட, அது பெரும் அதிர்வுடன் பூமியே கதிகலங்குவது போலப் பெரும் ஓசையுடன் வெடித்துச் சிதற, அதன் சத்தத்திலிருந்து போடப்பட்ட குண்டு அதிகத் தொலைவில் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மக்களுக்கு அதற்குமேல் சிந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் யசோதா, கந்தழிதரன், அம்மேதினி, வேலன், அனைவரும் பதுங்கு குழிக்குள் புகுந்து கொள்ள, பொம்மரிலிருந்து பெரும் சத்தத்தோடு குண்டுகள் பொழியத் தொடங்கின.

எங்கெங்கோ பலத்த கூக்குரல்கள். எதற்கும் பதில் சொல்ல முடியாத கூக்குரல்கள். என்ன சத்தமிட்டும் என்ன பயன், காக்கக் கடவுளா வரப்போகிறான். ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கும் அங்கிருந்தவர்களின் உடல் ஒரு முறை உதறி நடுங்கி நிலைத்தன. இதயம் வாய்க்குள் வந்து துடிப்பது போல அடித்துக் கொண்டது.

யசோதாவிற்கோ, இப்போது மகள் திரும்பி வந்துவிட்டாள் என்கிற மகிழ்ச்சியை அனுபவிப்பதா, இல்லை பெரும் ஆபத்திலிருந்து தப்பிவந்த மகள் இப்போது பொழியும் குண்டிலிருந்து மீண்டும் தப்பிப்பாளா… என்று கலங்குவதான எனப் புரியாமல் தவித்துப் போனாள். தன் விழிகளை மூடிய யசோதா,

“தெய்வமே உனக்கு உயிர்ப்பலி வேண்டுமானால் என்னை எடுத்துக்கொள். என் மகளையும், கந்தழியையும் மட்டும் விட்டுவிடு… என விழிகள் மூடி யாசிக்கத் தொடங்கினாள்.

இன்னும் என்னென்ன அவர்களுக்காகக் காத்திருக்கிறதோ என்று தெரியவில்லையே. ஒரு வருடமா இரண்டு வருடங்களா…? இன்று சரியாகும், நாளை சரியாகும் என்று அனைவரும் காத்திருந்ததுதான் மிச்சம். இதோ பன்னிரண்டு வருடங்களாகிவிட்டன. இன்றுவரை தமிழனின் ஓட்டமும் நிற்கவில்லை, அவனுடைய உயிர்ப்பலியும் நிறுத்தப்படவில்லை. இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான் இந்த ஓட்டம். எதுவும் புரியவில்லை. கலங்கிப்போய் நின்ற யசோதாவின் நிலையையறிந்து இறுக அணைத்துக் கொண்டவள்,

“பயப்படாதீர்களம்மா… பெரும் சிக்கலிலிருந்து நம்மைக் காத்த அந்தக் கடவுள் இப்போதும் காக்கும்… அஞ்சாதீர்கள்…” என்று சமாதானம் கூறியவாறு அவருடைய கழுத்தில் முகத்தைப் புதைத்தவாறு கிடந்தாள்.

மீண்டும் வெளியே ஷெல் பயங்கரமாக விழுந்தது. குண்டுகளைத் துப்பிவிட்டு ஒரு பொம்மர் போக இன்னொரு பொம்மர் சீறிக்கொண்டு வந்து நாலா திசையிலும் குண்டுகளை எறிந்துவிட்டு வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றது.

ஐந்து மணி நேரம் தொடர் தாக்குதல். யாருக்கும் சிந்திக்கவோ செயல்படவோ முடியாத நிலை.

ஒவ்வொரு குண்டுக்கும் கந்தழிதரனின் உடல் உதறியது..

தமிழரை அழிக்க இந்த வழிதானா கிடைத்தது? அவனை அழித்துவிட்டு இது சிங்கள பூமி என்றால் எல்லாம் சரியாகிவிடுமா? எதை அழித்தாலும் சரித்திரத்தை அழிக்க முடியாதே. இலக்கியங்கள் கூறும் உண்மையை அழிக்க முடியாதே. அவன்தான் ஈழத்தின் குடிமகன் என்பதை மறுதலிக்க முடியாதே… கடவுளே எத்தனை பெரும் கொடுமை இது.

தமிழன் ஒரு பக்கமாக மட்டுமா அடிவாங்கினான். நான்கு திசைகளாலும் அல்லவா அடி வாங்கினான். வாங்கிக் கொண்டிருக்கிறான். இதோ இப்போது படும் வலிக்கும் வேதனைக்கும் யார் பதில் கூறப் போகிறார்கள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தானே போராட்டத்திற்குச் சென்றான். ஆனால் அதற்குக் கூடக் கொடுத்து வைக்கவில்லையே. வலியுடன் எண்ணியவனுக்குப் புத்திக்குள் ஏதேதோ எண்ணங்கள் புகுந்தன. ஏதேதோ குழப்பின. திடீர் என்று மண்டைக்குள் சடுகுடு ஆட்டம். அவனையும் மீறி மூடிய விழிகள், மீண்டும் விழுந்த குண்டில் விழித்துக் கொண்டன. ஆனாலும் அதிக நேரம் விழித்திருக்க முடியாது சொருகின.

அதுவரை அன்னையை அணைத்துக்கொண்டு கிடந்தவள் மெதுவாக நிமிர்ந்து காதல் பொங்கத் தன்னவனைப் பார்க்க, அப்போதுதான் அவன் ஒருபக்கமாகச் சாய்வதைக் கண்டு அதிர்ந்து போனாள். தன்னை மறந்து,

“கந்து…” என்றவள் அன்னையை விடுத்து அவனை நோக்கிப் பாய்ந்தவள், சரிந்தவனைத் தன் தோள் மீது தாங்கிக்கொண்டாள். பதட்டத்துடன் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். அவன் உடல் அனலாகக் கொதித்தது.

“ஐயோ… இப்படிக் கொதிக்கிறதே. எப்போதிலிருந்து அவனுக்குக் கொதிக்கிறது… அது கூடத் தெரியாமல்…” பதறிக் கலங்கிப்போனவளாய் அன்னையைப் பார்த்து,

“அம்மா… கந்துவுக்கு உடல் சுடுகிறது…” வேகமாய் அவனருகே வந்து அவன் முன்னால் மண்டியிட்டமர்ந்தார் யசோதா. பதற்றத்துடன் அவன் கழுத்தில் கரம் வைத்துப் பார்த்தவர், அவன் மேல் சுடும் விதத்தைக் கண்டு துடித்துப் போனார்.

“ஐயோ… என்னடி… இவனுக்கு இப்படி மேல் சுடுகிறதே…” என்று பதறும்போதே மிக அருகே குண்டு விழும் சத்தம் கேட்க இவர்களின் பதுங்கு குழிக்கு மேல் போட்டிருந்த மண் மூட்டை ஒரு கணம் அதிர்ந்து நடுங்கியது. கூடவே மண் இவர்களின் மீது விழ, அம்மேதினி கந்தழிதரனின் தலையை இறுக பற்றி அவன் மீது குனிந்து அவனுக்கு மண் விழாது காத்துக்கொண்டாள். விழிகளோ கண்ணீரைத் தாரை தாரையாகச் சிந்தியது.

கலக்கத்துடன் அன்னையைப் பார்த்தவள்,

“அம்மா… இப்போது என்ன செய்வது? இவருக்குக் காயம் பட்டிருக்கிறது…” என்று நடந்ததைச் சுருக்கமாகக் கூறியவள், ஒரு வேளை தொற்று ஏற்பட்டிருக்குமோ தெரியவில்லையே…” என்று கலங்க, அவளுக்கும் விட்டுப்போன காய்ச்சல் வந்துவிடும் போல உடல வெடவெடத்தது.

“கடவுளே முன்னிரவு அவள்தானே காய்ச்சலில் அனர்த்தினாள். ஆனால் இப்போது அவன் படுத்துவிட்டானே… தெய்வமே… என்று எண்ணித் தேகம் நடுங்க, மறு கணம் எழுந்த யசோதா. ஆழ மூச்செடுத்துவிட்டு மற்றவர்கள் தடுப்பதற்கு முதல் பதுங்குகுழியை விட்டு வெளியேறியிருந்தார். போதாததற்குப் பயங்கரமாகக் குண்டின் வெடிப்பு இவர்களின் செவிப்பறையைக் கிழிக்க, இவர்களின் பதுங்கு குழியிலிருந்த மண் மீண்டும் இவர்கள் மேல் கொட்டத் தொடங்கியது.

(29)

 

கடகடவென்று மண் அவர்களின் மீது விழத் தொடங்கியதும் துடித்துப்போனாள் அம்மேதினி.

“அம்மா…” என்று வெளியே பாய்ந்த அன்னையைத் தடுக்கும் முதல் மீண்டும் பலமாகக் குண்டு விழும் சத்தம். தோளில் கிடந்தவனை இறுக அணைத்துக் கொண்டவளுடைய தளிர் மேனி பயங்கரமாக நடுங்கியது.

வெளியே சென்ற அன்னைக்காகத் துடிப்பதா, இல்லை காய்ச்சலில் விழுந்து கிடக்கும் கந்தழிதரனுக்காக அழுவதா என்று அவளுக்குப் புரியவேயில்லை

“உங்களுக்கு ஒன்றுமில்லை… ஒன்றுமேயில்லை…” என்று அவன் தலையை உடலை வருடிக் கொடுத்தவாறு அன்னையின் வரவுக்காகப் பதற்றத்துடன் காத்திருக்க, இப்போது இன்னொரு ஷெல் சற்றுத் தள்ளி விழும் ஓசை கேட்டது.

“காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க… தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க, பார்க்கப் பார்கக் பாவம் பொடிபட, காக்கக் காக்கக் கனகவேல் காக்க…” என்று தொடர்ந்து வேண்டிக்கொண்டிருக்க, அரை மணி நேரத்தில் பதுங்கு குழிக்குள் நுழைந்தார் யசோதா.

அவரைக் கண்டதும்தான் இவளுக்கு மூச்சே வந்தது.

“அம்மா… ஏனம்மா இப்போது வெளியே சென்றீர்கள்…” என்று உதடுகள் நடுங்க அவள் அழத் தொடங்க,

“எனக்கு ஒன்றுமில்லைடி… இந்தப் பாழாப்போன உயிருக்குப் பயந்தா, என் கந்துவின் நிலை என்னாவது… அதுதான், இவற்றை எடுத்துவரப் போனேன்…” என்றவாறு தன் கரத்திலிருந்த பாத்திரத்தைத் தரையில் வைத்துவிட்டு, கையிலிருந்த பழைய வேட்டியைச் சிறிய துண்டுகளாகக் கிழித்து நீரில் நனைக்கத் தொடங்க அழுதவாறே, தன் தோளில் சரிந்திருந்தவனை மடியில் படுக்கவைத்தாள் அம்மேதினி.

யசோதோ அவனுடைய நெற்றியில் பத்துப் போட, அம்மேதினி நடுங்கும் கரங்களால் அது விழாது பற்றிக் கொண்டாள்.

“வேலா… தம்பியின் சட்டையைக் கழற்று…” என்று உத்தரவிட்ட யசோதா, இன்னொரு பாத்திரத்தில் காய்ச்சிவந்த மஞ்சள் நல்லெண்ணெய்யை ஊதி ஊதிச் சூடாற்ற, வேலனின் உதவியுடன் கந்தழிதரனின் மேலாடை கழற்றப்பட்டது.

அப்போதுதான், அவனுடைய காயத்திற்குப் போட்ட கட்டைக் கண்டு யசோதா பதறிப்போனார். அப்படியே இரத்தம் பரவி காய்ந்திருந்தது. அதைக் கண்டு துடித்தவராக,

“என்னடி… இப்படி இரத்தம் வடிந்திருக்கிறது?” என்று அழுதவராக, அவனுடைய கட்டை அவிழ்க்க ஒரு வித மணம் பக்கென்று அவருடைய மூக்கைத் துளைத்தது. அதிலிருந்தே காயத்தில் தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதைப் புரிந்துகொண்டார் யசோதா. அதை உறுதிப்படுத்தியது சிவந்து வீங்கிக் காட்சிகொடுத்த காயம். அதைக் கண்டு என்று துடிக்க, வேலனோ,

“அக்கா எதுக்குப் பதறுகிறாய்… தம்பி இரும்பு மாதிரி… அவருக்கு ஒன்றுமாகாது… கடவுள் இருக்கிறான்… கொஞ்சம் பொறு, குண்டு விழுவது ஓயட்டும். வைத்தியரை அழைத்து வந்து காட்டாலாம்…” என்று கூற, நெஞ்சம் நடுங்கக் காய்ச்சிய மஞ்சள் நல்லெண்ணெய்யைக் காயத்திற்குப் போட்டுவிட்டுக் கலக்கத்துடனும் நெற்றிக்குப் பத்துப் போடாத் தொடங்கினார் யசோதா. என்னசெய்துதான் என்ன பயன்? அவனுடைய காய்ச்சல் குறையவுமில்லை. சூரியன் மறைந்த பின்னும் குண்டின் ஓசை நிற்கவுமில்லை.

இந்நிலையில் வைத்தியரை எங்கே என்று தேடுவது. ஒவ்வொரு முறையும் குண்டு விழும்போது ஏதோ பக்கத்திலேயே விழுந்த உணர்வு அனைவருக்கும். இப்போது பகல் சுத்தமாகத் தொலைந்து இரவு பிறந்தது. அதனால் ஆகாயத்திலிருந்து குண்டு போடுவது நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஷெல் அடிப்பது மட்டும் நிறுத்தப்படவில்லை.

இப்போது கந்தழிதரனின் உடல் வெளிப்படையாக நடுங்கத் தொடங்கியிருந்தது. அவள் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தவன், வலியாலும் உடலில் ஏற்பட்ட உபாதையாலும் மெதுவாக முனங்கத் தொடங்க, அப்போதுதான் கண்ணயர்ந்த அம்மேதினி, துடித்துப் பதைத்து எழுந்து கந்தழிதரனைப் பார்த்தாள்.

அவனிருக்கும் நிலையையறிந்து பதற்றத்துடன் அவனுடைய கன்னத்தைத் தட்டிக் கொடுத்து,

“கந்து… இதோ பாருங்கள்… விழித்துக் கொள்ளுங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை… எழுந்திருங்கள்…” என்று கெஞ்சச் சிரமப்பட்டுத் தன் விழிகளைத் திறந்தவன்,

“வலிக்கிறதுடி… என்னவோ செய்கிறது…” என்று முனங்கியவன் சிரமப்பட்டு அவள் வயிற்றில் முகம் புதைப்பது போலத் திரும்பிப் படுக்க, அம்மேதினியோ அவனை இறுக அணைத்துக்கொண்டு,

“எல்லாம் சரியாகிவிடும் கந்து… எல்லாம் சரியாகிவிடும்… இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்திருங்கள்… மருத்துவமனை போய்விடலாம்…” என்று அவனுடைய தலைமுடியைக் கோதியவாறு கூறிக்கொண்டிருக்க, யசோதாவோ கலங்கிய கண்களைத் துடைத்தவாறு அவனுடைய காய்ச்சலைப் பரிசோதித்துப் பார்த்தார். அதிகரித்ததன்றி இன்னும் குறையவில்லை.

“கடவுளே… இன்னும் குறையவில்லையே… என்ன செய்வேன்…” என்று பதற அம்மேதினி வெளிப்படையாகவே அழத் தொடங்கிவிட்டாள். அதைக் கண்ட வேலன்,

“தா… எதற்கு இப்போது அழுகிறாய்…” என்று கடிந்து விட்டு யசோதாவைப் பார்த்து,

“நான் போய் வைத்தியரை அழைத்துக்கொண்டு வருகிறேன்… அதுவரை இங்கேயே இருங்கள். இந்த இடத்தை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே போகாதீர்கள்… புரிந்ததா” என்று கூற, உடனே மறுத்தார் யசோதா.

“வேண்டாம் வேலா, இந்த நேரத்தில் வெளியே போவது புத்திசாலித்தன மில்லை…” என்று கலங்க,

“அடப் போக்கா, என் உயிரை விடத் தம்பியின் உயிர் முக்கியம்… பத்திரமாக அவரை அவர் இடத்துக்கு அனுப்ப வேண்டும்… என்னை நினைத்துப் பயப்படாதே… பக்கத்தில்தானே வைத்தியர் சஞ்சீவ் இருக்கிறார். அவரை அழைத்து வருகிறேன்.” என்று உத்தரவிட்டு வெளியேறிச் செல்ல, வேலன் வைத்தியரை அழைத்து வரும் வரைக்கும் இருவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தனர். அதுவரை வியர்த்த அவன் உடலைத் துடைத்து விடுவதும், காயத்தின் மீது ஊதி விடுவதும், அவனை அணைத்த வாக்கிலேயே இருப்பதும் என்று அம்மேதினி அமர்ந்திருக்க, அந்த நிலையில் அது பெரிய தவறாக யசோதாவிற்குத் தெரிய வில்லை.

அரை மணி நேரத்தில் லாந்தர் விளக்குடன், வைத்தியரை அழைத்துக்கொண்டு வேலன் வந்தான். கிடைத்த ஆடையை அணிந்துகொண்டுதான் ஓடிவந்தார் போலும், அவர் போட்டிருந்த ஷேர்ட் தாறுமாறாக இருந்தது.

வந்தது கந்தழிதரனின் காயத்தைப் பரிசோதித்தார். லாந்தர் விளக்கைத் தூக்கி வைத்து ஆடுதொடையிலிருந்த காயத்தையும் கவனமாகப் பரிசீலித்தார். புருவம் சுருங்க சற்று நேரம் நின்றிருந்தவர் ஏற்கெனவே போட்டிருந்த மஞ்சள் நல்லெண்ணெய்யைத் துடைத்து எடுத்துவிட்டுத் தன் கரத்திலிருந்த மருந்தைக் காயங்களுக்குப் பக்குவமாகப் போட்டுவிட்டு,

“பாட்லி இன்ஃபெக்டட்… உடனே இவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்…” என்றார் பெரும் கவலையுடன்.

“ஆனால் இப்போது எப்படிச் சேர்ப்பது நடக்கும் காரியமா. ஊரிலிருந்த அத்தனை மருத்துவமனைகளும் பூட்டியாயிற்றே…” என்று யசோதா கலங்க,

“அதைத்தான் நானும் யோசிக்கிறேன். தவிரச் சண்டிலிப்பாயில் இனி இருக்க முடியாது. எப்படியும் இடம் பெயர்ந்து போகவேண்டிய நிலை. இராணுவம் சண்டிலிப்பாயின் வடக்கு எல்லையையும் பிடித்து விட்டது… இந்த நிலையில் சண்டிலிப்பாய் மருத்துவமனையிலும் சேர்க்க முடியாது…” என்று கூறியவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை

அவராலும்தான் வேறு என்ன செய்ய முடியும். எந்த மருந்துகளும் இல்லாத நிலையில், அவை கிடைக்காத சந்தர்ப்பத்தில் எப்படித்தான் சிகிச்சை கொடுப்பார். குழம்பிக் கொண்டிருக்கும் போதே, இப்போது ஷெல் விழும் திசை சற்று மாறியிருந்தது. இதுவரை அவர்கள் இருந்த பக்கமாக வீசிய ஷெல் இப்போது எதிர்புறமாக விழுந்து கொண்டிருந்தது. அது விழுந்த ஓசையை வைத்தே அது விழும் தூரம் சற்றுத் தொலைவில் என்பதைப் புரிந்து கொண்டவராக, நிம்மதியுடன் எழுந்த வைத்தியர்,

“சரி நான் புறப்படுகிறேன்… நமக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி ரெட் க்ராஸ் தான். அவர்களின் உதவியோடு தம்பியைக் கொழும்புக்கு அனுப்பி வைக்க முடியுமா என்று பாருங்கள்… என்னைக் கேட்டால் அதுதான் பெட்டர்…” என்று தன் கருத்தைக் கூறிவிட்டு,

“இன்னும் ஒரு மணி நேரத்தில் நாங்களும் ஊரைவிட்டுப் புறப்பட்டுவிடுவோம்… நீங்களும் இங்கிருக்காமல் புறப்படுவது நல்லது… தம்பியை இப்படிக் காற்றுப்புக முடியாத இடத்தில் வைத்திருப்பதே, காயத்திற்கு நல்லதில்லை…” என்றுவிட்டு விடைபெற, அம்மேதினியோ தன் மடியில் கிடந்தவனை இழுத்துத் தன் மார்போடு இறுக அணைத்தவாறு அப்படியே கிடந்தாள்.

விழிகளோ கண்ணீரை ஆறாகப் பெருகச் செய்தது. எத்தனை கம்பீரமாக வந்தான். இப்போது வேரறுந்த மரமாகச் சாய்ந்து கிடக்கிறானே. இவனை எப்படிச் சரியாக்குவது. கடவுளே இந்தப் பிரச்சனையில் மருத்துவத்திற்கு எங்கே போவது… மருத்துவரைத்தான் எங்கே பிடிப்பது… கலங்கித் துடிக்க, எப்படியோ வேலனின் உதவியோடு கந்தழிதரனைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்து அவனைப் படுக்கையில் கிடத்தினர்.

நல்லவேளை அவர்களின் வீட்டுக்கு அதிக சேதமில்லை.  ஓடுகளில் மட்டும் ஓட்டை விழுந்திருந்தது. இப்போது அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. முதலில் அங்கிருந்து புறப்படவேண்டும். யோசிக்கும்போதே கசமுச கசமுச என்கிற சத்தம் தெருவிலிருந்து வந்தது.

இவள்தான் ஓடிப்போய் பொர்த்தாள். லாந்தர் விளக்குடன் மக்கள் வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் புரிந்துபோனது, ஊர் மக்கள் எல்லோரும் புறப்பட்டுவிட்டார்கள் என்று.

அதை உணர்ந்த யசோதாவும் வெளியே வந்து எட்டிப்பார்த்தார். அவர்களைச் சுற்றியிருந்த அண்டை வீட்டினர் அனைவரும் கிளம்பிவிட்டிருந்தனர். அதைக் கண்டதும்,

“சரோக்கா… இப்போதே கிளம்பிவிட்டீர்களா…” என்று பதறியவாறு கேட்க,

“ஆமாம் தங்கச்சி… ஷெல் ஓய்ந்திருக்கிறது. இந்த நேரம் நடையைக் கட்டினால்தான் உண்டு… இராணுவம் வேறு உள்ளே நுழைந்து விட்டதாம். இந்த நிலையில் குமரிப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு இங்கே இருக்க முடியாது யசோ… நீயும் ஒருத்தியை வைத்திருக்கிறாய். தாமதிக்காமல் கிடைத்ததை எடுத்துக்கொண்டு புறப்படு…” என்று எச்சரித்துவிட்டு நடக்கத் தொடங்க யசோதாவிற்குத் தலையைச் சுற்றியது. காயம்பட்ட கந்தழியோடு எப்படிச் செல்வது? கலங்கி நிற்க, தாயை நெருங்கிய அம்மேதினி,

“என்னம்மா நடக்கிறது?” என்றாள் பெரும் அச்சத்துடன்.

“பக்கத்து வீட்டார்கள் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் மேதினி… நாமும் கிளம்பவேண்டும்… போ… போய் முக்கியமான பண்டம் பாத்திரங்களைத் துனி மூட்டையில் கட்டு…” என்று கூற கந்தழிதரனை எப்படி அழைத்துச் செல்வது என்கிற கேள்வி இவளுக்குப் பிறந்தது. அன்னையை நிமிர்ந்து பார்த்து,

“அம்மா இந்த நேரத்தில் கந்துவை எப்படி அழைத்துச் செல்வது? அவரால் எழுந்து நடக்கவே முடியவில்லையே…” என்று தவிக்க, யசோதாவோ வேகமாகச் சென்று துனிகளை எடுத்துப் பெட்டிகளுக்குள் அடுக்கியவாறு, திரும்பி சிலையென நின்ற மகளைப் பார்த்து,

“ஏதாவது வழி யோசிப்போம்… நீ போம்மா… போய்ப் பாத்திரங்களை எடுத்து வை… அப்படியே வேலனையும் வரச் சொல்…” என்ற யசோதா மாட்டுக் கொட்டகை நோக்கி ஓடினர். அங்கே பரிதாபமாகக் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வாசலுக்குக் கொண்டுவர வேலன் நின்றிருந்தான்.

“வேலன் ஊர் சனங்கள் எல்லாரும் புறப்பட்டு விட்டார்கள் நீயும் புறப்படு…” என்றவர் மார்புச் சட்டைக்குள் இருந்து பணப்பையை எடுத்து, அதில் கத்தையாக இருந்த பணத்தை அவனிடம் நீட்டி,

“இந்தா செலவுக்கு வைத்துக் கொள்…” என்றவர் சற்றுத் தயங்கி, பெரும் வலியுடன் தன் சகோதரனான வேலையாளைப் பார்த்து,

“வேலா… நீ பத்திரமாக இருந்துகொள்வாய் தானே…” என்றார் குரல் கம்ம. அதைக் கேட்டதும் வேலனும் அழத் தொடங்கினான்.

இத்தனை காலம் சகோதரியாகப் பழகியவரை இனி எப்போது காண்பானோ. காணும் வாய்ப்புக் கிடைக்குமோ இல்லையோ… அதை எண்ணும்போதே இதயத்தில் இரத்தம் கசிய,

“அக்கா… என்னைப் பற்றிக் கலங்காதே… நீ பத்திரமாய் இருந்துகொள்…” என்றவன் பின் தன்னை மறந்து விம்மியவாறு,

“ஐயோ இனி உன்னையும், குழந்தையையம் நான் எப்போது பார்ப்பேனோ…” என்று அழத் தன் வலியை மறைத்துக், கனிவோடு சிரித்த யசோதா,

“இது அதிகக் காலங்கள் இழுபடாது வேலா… மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும்… அதுவரை உன்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்.…” என்று தைரியம் கூறியவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இனி ஒருபோதும் தான் அந்த மண்ணை மிதிக்கப்போவதில்லை என்று.

“சரிக்கா… நான் கிழம்புகிறேன்…” என்று கூறியவன், அவர்களை விட்டுப் பிரிய முடியாமல் தயங்கி நிற்க, அதை உணர்ந்தவர் போல,

“போ வேலா… உன் உறவுகளையும் நீ பார்த்துக்கொள்ள வேண்டுமே…” என்ற யசோதா எதையோ யோசித்தவர் போல,

“வேலா எனக்கு ஒரு மாட்டு வண்டி பிடித்துக் கொடுத்துவிட்டு உன்னால் போக முடியுமா? கந்தழியை இப்படி அழைத்துச் செல்ல முடியாது…” என்று கேட்க,

“அரை மணி நேரத்தில் வண்டியோடு வருகிறேன். தயாராக இருங்கள்…” என்று எச்சரித்துக்கொண்டிருக்கும் போதே மீண்டும் ஷெல் மழை பொழியத் தொடங்கியது.

“சீக்கிரம் வேலா…” என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே வேலன் வண்டி தேடி ஓடினான்.

அம்மேதினியோ, பாத்திரங்களைத் திணிக்க முதல், முன்னறைக்கு ஓடிவந்து கந்தழிதரன் பெற்ற பரிசுப் பொருட்களை ஒரு பையில் திணிக்க, அதைக் கண்ட யயோதா,

“மகள்… என்ன செய்கிறாய்?” என்றவாறு ஓடி ஓடி முக்கிய பொருட்களை ஒரு பையில் போடத் தொடங்க, இவளோ,

“கந்துவுடைய பரிசுப் பொருட்களம்மா… அவன் பெற்ற வெற்றிகளின் நினைவுச் சின்னம்… இதை இங்கே விட்டுச் சென்றால் அழிந்து போகுமே… அதன் பிறகு எத்தனை தவமிருந்தாலும் இவற்றை மீளப் பெறமுடியாதே… அதுதான் முடிந்தவரை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்…” என்று கூறத் தன் மகளைப் பரிதாபமாகப் பார்த்தார் யசோதா.

பிறந்த பண்ணையும், ஒன்றாய் வளர்ந்த சுற்றத்தையும் விட்டுக் கண்காணாமல் எங்கோ ஓடப்போகிறோம். இந்த நிலைமையில் நினைவுச் சின்னங்களை எடுத்துச் செல்ல விளைகிறாளே இந்தப் பிள்ளை…” பெருமூச்சு விட்டவர்,

“சரி சரி… அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு செல்ல முடியாது தங்கம்… முக்கியமானதை மட்டும் எடு…” என்று விட்டுப் பொருட்களைக் கட்டிக்கொண்டிருக்க வேலன் வந்தான்.

அவர்களின் போதாத காலம் வண்டி எதுவும் சிக்கவில்லை. இறுதியாக வேலன் மாடில்லாமல் சிறிய வண்டி ஒன்றை இழுத்து வர,

“தங்கச்சி… தம்பியை வண்டியில் கிடத்து… நான் இழுத்து வருகிறேன்…” என்று உத்தரவிட,

“நீயா… நீ எப்படித் தனியாக இழுப்பாய்… தவிர உனக்காக உன் உறவுகள் காத்திருக்குமேபா….” என்று மறுக்க முயல, வேலனோ,

“அடப் போக்கா… எனக்கென்ன மனைவியா குழந்தைகளா… அம்மா தங்கச்சி இதுதான் என் உறவு. அவர்கள் தங்களைப் பார்த்துக்கொள்வார்கள். நீ கிளம்பு… இத்தனை நாட்களும் எனக்குச் சாப்பாடு போட்ட குலசாமி நீ… உன்னை எப்படித் தவிக்க விடுவேன்…” என்றவன் நேராக வீட்டிற்குள் நுழைந்தான்.

வலியில் முனங்கிக்கிடந்த கந்தழிதரனைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டவாறு,

“கொஞ்சம் பொறுத்திருங்கள் தம்பி… இதோ கிளம்பிவிட்டோம்..” என்று சமாதானப் படுத்தியவாறு வண்டியின் பின்பக்கம் கிடத்திவிட்டு, திரும்பி இரு பெண்களையும் பார்த்து,

“கையிலிருக்கிற பாத்திர பண்டங்களை உள்ளே வையுங்கள்…” என்று உத்தரவிட்டவாறு மாடு பூட்டும் இடத்தில் தான் நின்றவாறு இழுக்கத் தொடங்க, யசோதா தன்னுடைய பசுமாட்டையும், ஆட்டையும் இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்க, அம்மேதினி வேலனுக்கு உதவியாக வண்டியைப் பின்புறமாக இருந்து தள்ளத் தொடங்கினாள்.

கந்தழிதரனோ பேசவும் முடியாமல், அசையவும் முடியாமல் வலி என்னும் நரக வேதனையைத் தாங்க முடியாத அரை மயக்கத்தில் மயங்கிக்கிடந்தான்.

What’s your Reaction?
+1
11
+1
0
+1
0
+1
0
+1
11
+1
0
Vijayamalar

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 33/34

(33)   வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன், “என்னம்மா… சீக்கிரமாக…

3 hours ago

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

1 day ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

2 days ago

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-22

(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…

3 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 30/31

(30)   நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…

5 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 21

(21) அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை. அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத்…

6 days ago