தன்னவளை நகர்த்திவிட்டு குற்ற உணர்வில் விழிகளை மூடியவன் எப்போது உறங்கினானோ தெரியாது. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனின் பாம்புச் செவிகளில், அந்தச் சரசரப்பு விழ, சடார் என்று விழிகளைத் திறந்தான் கந்தழிதரன். அவன் அசைவு உணர்ந்து,
“என்ன கந்து…” என்றவாறு அவன் மார்பில் தன முகத்தைத் தேய்க்க, உடனே அவள் வாயைப் பொத்தியவன்,
“ஷ்… சத்தம் போடாதே… யாரோ மேலே நடக்கிறார்கள்…” என்றான் கிசுகிசுப்பாய். கூடவே திரும்பி எரிந்துகொண்டிருந்த மெழுகுதிரியை ஊதி அணைக்க, அம்மேதினியோ அச்சத்துடன் எழ, அவனும் எழுந்தமர்ந்து காதுகளைக் கூர்மையாக்கினான்.
இப்போது நான்கைந்து பேர் நடந்து செல்வது போன்ற சத்தம் தெளிவாகக் கேட்டது. இவளுக்கோ பயத்தில் இதயம் வாய்க்குள் வந்துவிடும் போல் துடித்த்து,
இதோ அவர்கள் பயந்த நேரம் வந்துவிட்டது. மரணம் வாசல் கதவைத் தட்டுகிறது. திறக்காது இருக்க முடியாது. திறக்காவிட்டாலும் பின் வாசல் வழியாக வரும்.
அந்த நேரம் அருகே இருந்த கந்தழிதரன்தான் அவளுக்குத் துணையாகத் தெரிந்தான்.
இறக்கும் போது அவனை அணைத்தவாறு இறக்கவேண்டும் என்கிற ஆவேசத்தோடு அவனுடைய கரங்களை அணைத்தவாறு அம்மேதினி நின்றுகொள்ள, பயத்தில் அவளுடைய கரங்கள் நடுங்குவதைப் புரிந்து கொண்டான் கந்தழிதரன்.
உடனே அவளைச் சமாதானப் படுத்துவதுபோலக் கரங்களை அழுத்திக் கொடுத்தவன்,
“நாம் தப்புவதற்கான முயற்சியில் இறங்குவோம்… மிச்சம் கடவுள் விட்ட வழி…” என்றுவிட்டு அருகேயிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பான்டின் பின்புறம் செருகினான். ஏகே 47ஐ தோளில் மாட்டியவன், கிரனைட் குண்டுகளை வாரி எடுத்தவாறு நிமிர்ந்து அம்மேதினியைப் பார்த்தான். முன்தினம் கலையப்பட்ட ஆடை இப்போதும் சற்றுக் கலைந்துதான் இருந்தது. கூடவே, கூடலின் போது அவிழ்த்தெறிந்த துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத வெஸ்டைக் கண்டு
“ஆடைகளைச் சரியாக்கிவிட்டு அந்த வெஸ்டை எடுத்துப் போடு அம்மணி…” என்று உத்தரவிட, அவன் சொன்னதுபோலவே ஆடைகளைச் சரியாக்கிவிட்டுக் கழற்றிப்போட்ட வெஸ்டை அணிந்துகொண்டு அவனை நெருங்க, அவள் தோள்களைச்சுற்றித் தன் கரத்தைப் போட்டு,
“பயப்படாதே… வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது பதுங்கு குழிபோன்று தோன்றாது. அப்படித்தான் இதை வடிவமைத்திருக்கிறார்கள். அதுவும் விடியத் தொடங்கிய இந்த நேரத்தில் இதைக் கண்டு பிடிப்பது சிரமம். நம்முடைய உயிர் கெட்டியாக இருந்தால் நாம் இருவரும் தப்புவோம்… இல்லா விட்டால்… ” என்று சொன்னவனைத் தவிப்புடன் பார்த்தாள் அம்மேதினி.
அந்தக் கடவுள் இன்னொரு இரவை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாதா? என்று மனம் ஏங்கியது. குரல் கம்ம,
“இன்னொரு நாள் இறைவன் நமக்குத் தரமாட்டாரா கந்து…” என்று கேட்க, உள்ளம் வலிக்க அவளைத் திரும்பிப் பார்த்த கந்தழிதரன், அவளை ஆதரவாகத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.
“இதோ பார்… நாம் இப்படியே நொடிந்துபோய் அமர்ந்துவிடப் போவதில்லை. முடிந்த வரை தப்ப முயலப் போகிறோம். புரிந்ததா… மனத்தைத் தளரவிடாதே. அதுதான் நமக்கு எமன்… புரிந்ததா…” என்று கூறியவாறு அவளைத் தன்னோடு இறுக்க, அந்த அணைப்பில் ‘நான் இருக்கிறேன் தைரியமாக இருந்துகொள் என்ற செய்தி தெரிய, தானும் அவனை இறுக்கியவாறு சாய்ந்து நின்றுகொண்டாள்.
அவளையும் பற்றியவாறு சுவரோடு சாய்ந்து நின்றவாறு, கற்களால் மூடப்பட்டிருந்த வாசலை வெறித்துக்கொண்டு நின்றான். ஒரு கரமோ எந்த நேரமும் எதிரியைச் சுடுவதற்குத் தயார் என்பது போலத் துப்பாக்கியை நீட்டியவாறு நின்றது.
திடீரென்று சிங்களக் குரல் பலமாக இவர்களின் செவிகளில் வந்து மேதியது.
“இங்கே இரத்தம் இருக்கிறது…” என்கிற சத்தத்தைக் கேட்டதும் தன் விழிகளை இறுக மூடியவாறு பற்களைக் கடித்துக்கொண்டான் கந்தழிதரன்.
“ஷிட்…” என்று முணுமுணுக்க அம்மேதினியோ அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாமல்,
“எ… என்ன சொன்னார்கள்…?” என்றாள் தவிப்புடன்.
“நம்மைக் கண்டுகொண்டார்கள்…” என்றான் கிசுகிசுப்புடன். இவளோ அதிர்ச்சியில் விழிகள் தெறிக்க,
“என்ன… எப்படி… எப்படிக் கண்டுகொண்டார்கள்?” என்று திணற,
“என் காயத்திலிருந்து வடிந்த இரத்தம் வெளியே சிந்தியிருக்கிறது போல… அதைக் கண்டு கொண்டார்கள்…” என்றவன் திரும்பி அம்மேதினியைப் பார்த்து,
“அம்மணி… நீ என்னை நம்புகிறாய் தானே…?” என்று கேட்டான். இவளோ குழப்பத்துடன் அவனைப் பார்த்து,
“இதென்ன கேள்வி… என்னை விட உங்களை முழுதாக நம்புகிறேன்…” என்று அவள் உறுதியாகக் கூற,
“அப்படியானால் வெளியே வராமல் உள்ளேயே இரு… புரிந்ததா… எக்காரணம் கொண்டும் நீ வெளியே வரக் கூடாது… செய்வாய் தானே…” என்றான் அழுத்தமாக. இவளோ புரியாமல் அவனைப் பார்க்க.
“சத்தியம் செய் அம்மணி.. வெளியே வரமாட்டேன் என்று சத்தியம் செய்…” என்றதும் கலக்கத்துடன் தலையை ஆட்டி சம்மதம் சொல்ல ஒரு கணம் எச்சிலைக் கூட்டி விழுங்கியவன், அவளை இழுத்து இறுக அணைத்தான். பின் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டவன், இப்போது தயங்காமல் அவளுடைய உதடுகளைச் சிறைபிடித்து விடுவித்தான்.
“பி ஸ்ட்ராங்… பி எக் குட் கேர்ள்… ஓக்கே…” என்று கூற இவளோ பதற்றமாக,
“என்ன… என்ன செய்யப் போகிறீர்கள்…” என்று கேட்க நொண்டியவாறு திரும்பியவன், தன் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி,
“வெளியே போகப் போகிறேன்…” என்றான் அழுத்தமாக. இவளோ அதிர்ந்து போனாள்.
“இல்லை… இல்லை… நீங்கள் வெளியே போக முடியாது… போனால் உங்களைச் சுட்டு விடுவார்கள்… அதற்கு நான் சம்மதிக்கமாட்டேன்…” என்று அவள் கதறலாக மறுக்க,
“நான் போகவில்லை என்றால் நம் இருவரையும் சுட்டுவிடுவார்கள் அம்மணி… குறைந்தது நான் போனால் நான் ஒருவன் என்று என்னை மட்டும்தான் தாக்குவார்கள். கொல்வார்கள்… நம்பு…” என்று கூற, இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“என்னைக் காண மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் கந்து… உங்களுக்குப் பிறகு என்னைத் தேடிக்கொண்டு வரமாட்டார்களா… தயவு செய்து போகாதீர்கள்…” என்று அவள் கெஞ்ச,
“இங்கே இருந்தால் இன்னும் ஆபத்துதான் அதிகரிக்கும் அம்மணி… தயவு செய்து நான் சொல்வதைக் கேள்… இங்கேயே இரு… என்ன நடந்தாலும்…” என்றவன் அதில் மேலும் அழுத்தம் கொடுத்து,
“என்ன நடந்தாலும் வெளியே வராதே… இது என் மீது சத்தியம்” என்றவன் அவள் பதிலைக் கேட்காமல் முன்புறம் நோக்கி நடக்கத் தொடங்க, அழுகையினூடே அவனைத் தடுத்து “வேண்டாம்” என்று தலையை ஆட்டி மறுத்தாள் அம்மேதினி. இவனோ அவளை நெருங்கி அவள் முகத்தில் கரங்களைப் பதித்து, அவளுடைய விழிகளை உற்றுப்பார்த்தான். இவளோ இதயத்தில் உதிரம் சிந்த அவனைப் பார்த்தாள்.
அவனுடனான வாழ்க்கை வெறும் ஒரு சில மணித்துளிகள் மட்டும்தானா? இவ்வளவும்தானா கடவுள் அவர்களுக்குக் கொடுத்த காலம்… ஏனோ தன் உயிரே தன்னை விட்டுப் பிரிந்து செல்வது போலத் தோன்றியது அம்மேதினிக்கு.
அந்த நேரம் கடகடவென்று கற்கள் கொட்டத் தொடங்கின. கூடவே பெரிய துப்பாக்கிகளின் பின்புறம் தெரிய, அதற்கு மேல் தாமதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட கந்தழிதரன், திரும்பி அம்மேதினியைப் பார்த்து
“போ… அம்மணி… பின்னால் போய் மறைந்துகொள்…” என்க அவளோ பிடித்துவைத்த பிள்ளையார் போல ஆடாது அசையாது நின்றாள்.
வேகமாக அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றித் தரதர என்று இழுத்துக்கொண்டு இரண்டாம் பகுதியிலிருந்த மறைவொன்றில் அவளைத் தள்ளியவன் என்ன நினைத்தானோ, அவளை இழுத்து அனைத்தவன், அவள் உதடுகளை அழுத்தப் பற்றிக்கொண்டான். ஒரு வேளை இதுதான் இறுதி முத்தம் என்று நினைத்தானோ? முத்தமிட்ட வேகத்திலேயே அவளை விடுவித்தவன்,
“பத்திரமாக இரு அம்மணி… எனக்காக…” என்றவன் ஆழ மூச்சொன்றை எடுத்து விட்டான். அடுத்து ஏகே 47ஐ முன்னால் பிடித்தவாறு அம்மேதினியைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து,
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…’ என்றவன், பாரதியின் துணையோடு அத்தனை பலத்தையும் மீட்டு எடுத்தவனாய் முன்னேறி நடந்தவாறு,
‘துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’
முதலில் இராணுவ வீரர்களைப் பயமுறுத்த வேண்டும். அதற்கு இங்கே பலர் இருப்பதுபோலக் காட்சிப்படுத்த வேண்டும். தீர்மானித்தவன், நடக்கும் வேகத்திலேயே சுவாசிப்பதற்காகவும் வெளிச்சத்திற்காகவும் பதிக்கப்பட்டிருந்த குழாய்களைக் ஒரு இழுவையில் இழுத்துக் கழற்றினான். ஒரு கிரனைட் குண்டை வெளியே எடுத்து…
‘பச்சையூனியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’
என்று அழுத்தமாக உரைத்தவாறு கிரனைட்டின் க்ளிப்பைப் பல்லால் இழுத்தெடுத்து அதன் முனையை அசைய விடாது செய்தவாறு துளைக்கூடாக வெளியே தள்ள, அது உருண்டு சென்று வெடித்த வெடிப்பில் பதுங்குகுழியே நடுங்கியது.
அம்மேதினியோ கிரானைட் வெடித்த சத்தத்தில் இரு காதுகளையும் பொத்தியவாறு
‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்று முணுமுணுத்துத் தன்னைத் திடப்படுத்த முயன்றாள். கூடவே இறைவனிடம், இருவரையும் காக்கும்படி மன்றாடிக்கொண்டிருந்தாள்.
இவனோ மீண்டும் மீண்டும் அச்சமில்லை அச்சமில்லை என்றவாறு நடந்தவாக்கிலேயே அந்தக் குழாய்களைக் கழற்றுவதும், அதற்குள் கிரனைட்டை எறிவதுமாக முன்னேறிக் கொண்டிருக்க, வெடித்த குண்டில் இரண்டு இராணுவ வீரர்கள் தெறித்து விழுந்தனர்.
இந்தத் திருப்பத்தை இராணுவ வீரர்களும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் நிற்க அதைப் பயன்படுத்திக் கொண்டான் கந்தழிதரன். வேகமாக வாசலை நெருங்கியவன், ஏற்கெனவே இடம் விட்டிருந்த வாசல் பக்கம் துப்பாக்கியை நுழைத்துக் கண் மண் தெரியாமல் சுடத் தொடங்கினான்.
இதை எதிர்பார்க்காத இராணுவத்தில் ஐவர் தரைசாய்ந்தனர். எஞ்சியவர்களை வீழ்த்த முடியாது துப்பாக்கியில் குண்டு தீர்ந்திருந்தது. அதை ஓரமாகப் போட்டுவிட்டு,
உடனே தன் பான்ட் பின்புறத்தில் செருகியிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தவன், கிடைத்த இடைவெளிக்கூடாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தான். கிட்டத்தட்ட நான்குபேர் சற்றுத் தள்ளி தரையில் குப்புற விழுந்தவாறு பதுங்கு குழியின் வாசலைக் குறிபார்த்துக்கொண்டிருந்தனர்.
மேலும் இராணுவத்தினரை அழைக்க முதல் இவர்களை வீழ்த்திவிட்டுத் தப்ப வேண்டும்.
சற்றும் யோசிக்காமல் இன்னொரு கிரானைட் எடுத்து பதுங்கியிருந்தவர்களை நோக்கி விட்டெறிந்துவிட்டு, சற்றும் அவகாசம் கொடுக்காமல், வெளியே பாய்ந்து தரையில் குப்பிற விழுந்து சுழன்று எழுந்து சிதைந்த கட்டடம் நோக்கிப் புயலெனப் பாய்ந்தான்.
ஓரளவு சுயநினைவு பெற்ற இராணுவம் அவனை நோக்கித் துப்பாக்கி மழையைப் பொழிய, அதற்கிடையில் சுவருக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டான் கந்தழிதரன்,
எஞ்சிய இராணுவ வீரர்கள், அவன் இருந்த திசையை நோக்கிப் வர, அவர்கள் கொடுத்த அசைவின் ஒலிகேட்டு அதன் திசை அறிந்து, சடார் என்று வெளியே வந்தவன், தன் கைதுப்பாக்கியிலிருந்து இரண்டு தோட்டாக்களைத் துப்பிவிட்டு மறைந்து கொள்ள, அதில் ஒன்று கச்சிதமாய் ஒரு இராணுவத்தின் கழுத்துக்கூடாகச் சென்று அவனைத் தரை சாய்த்தது.
இன்னும் மூவர்தான். அவர்களை வீழ்த்தினால் போதும். ஆனால் அது எப்படி? அப்போதுதான் துப்பாக்கியின் கனம் குறைந்திருப்பதே அவனுக்கு உறைத்தது. துப்பாக்கியின் மகசீனைக் கழற்றிப் பார்த்தான். அவன் நினைத்தது சரிதான். சுத்தமாகக் குண்டில்லை அதைப் பார்த்ததும் ஐயோ என்றானது. ஆத்திரத்துடன் துப்பாக்கியைத் தூக்கி எறிந்தவனுக்குக் கரங்கள் நடுங்கின. பதட்டத்துடன் பான்ட் பாக்கட்டைத் தடவிப் பார்த்தான். கிரனைட் இல்லாமல் வெறுமையாக இருந்தது. தன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை என்று தெரிந்தபோது அதுவரை இருந்த தைரியம் சுத்தமாகத் தொலைந்து போனது. பலவீனம் அவனைப் பற்றிக்கொண்டது. இப்போது என்ன செய்வது? முதன் முறையாக மெல்லிய அச்சம் எட்டிப்பார்த்தது.
இப்போது என்ன செய்வது…? அவன் தப்புகிறானோ இல்லையோ. அம்மேதியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் அவனைப் பாடாய்ப் படுத்தியது. எப்படியோ அந்தப் பதுங்கு குழிக்கு எதிர்த்திசையாக இராணுவத்தை அழைத்து வந்தாயிற்று. இப்போது இவன் ஒருவன் மட்டும்தான் என்கிற எண்ணத்தில் இவனைக் கொன்றுவிட்டுப் போய்விடுவார்கள். இல்லை சந்தேகம் கொண்டு பதுங்கு குழிக்கு உள்ளே எட்டிப் பார்ப்பார்கள். அப்போது அம்மேதினியைக் கண்டால், அவள் நிலை என்னவாகும்? நினைக்கும்போதே இதயம் நின்றுவிடும் போலத் துடித்தது. அவனையும் மீறித் தேகம் நடுங்கியது. உள்ளே குளிர் எடுத்தது. பயம்… பயம்… பயம்… மரணத்தைக் கண்முன்னால் கண்டுவிட்ட பயம். அதையும் மீறி அம்மேதினிக்கு என்னாகுமோ என்கிற அச்சம், அவன் பலத்தை ஒரேயடியாக விழுத்தத் தொடங்கியிருந்த நேரம், மெல்லிய சருகுகள் மிதிபடும் ஓசை கேட்டது.
அதைக் கேட்டதும் உடல் இறுகியது. இதோ அவனுடைய நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம்தான். அதன் பிறகு அவன் உடல் துப்பாக்கிக் குண்டுகளால் சிதறவைக்கப்படும். நா வறண்டுபோக, விழிகளை அழுந்த மூடியவனின் மனக்கண்ணில் நின்று சிரித்தாள் அம்மேதினி. கன்னங்களில் கண்ணீர் வழிந்தன. உடல் நடுங்கியது. மார்பு திமிறியது. இதயம் பலமாகத் தவித்தது.
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்று தன்னைத் திடப்படுத்த முயன்றவனுக்கு அது இறுதி நிமிடப் போராட்டம் என்று தெரிந்து போயிற்று.
எப்படியோ சாகப்போகிறான். இறுதி முயற்சியாக விழிகளைத் திறந்தவன், சுத்தவரப் பார்த்தான். அவன் கண்களுக்குத் தட்டுப்பட்டன உடைந்து சிதறியிருந்த கற்கள். தாமதிக்காமல் குனிந்து அவற்றைப் பொறுக்கியவன், சற்றும் யோசிக்காமல் இராணுவத்தை நோக்கிக் கற்களைத் தாறுமாறாக வீசியவாறு வெளியே வர, அதில் ஒரு கல் கச்சிதமாக ஒரு இராணுவத்தின் ஒற்றைக் கண்ணில் பலமாக மோத, மற்றைய இரு இராணுவ வீரர்களும் அதிர்ந்துபோய் நின்றிருந்த அந்த விநாடி கந்தழிதரனுக்குப் போதுமாக இருந்தது.
கண்ணில் காயத்தொடு சரிந்தவனை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்து, அவன் கரத்திலிருந்த துப்பாக்கியைப் பறித்த வேகத்திலேயே பக்கத்தில் நின்ற இராணுவ வீரர்களைத் தாக்கித் தரையில் விழுத்தி, கரத்திலிருந்த துப்பாக்கியின் குண்டுகளை அவர்களை நோக்கித் துப்ப, மறு கணம் உயிரற்றுச் சரிந்தனர், கல்லடி பட்டவனோ எழ முடியாது தவித்துக்கொண்டிருக்கக் கச்சிதமாக அவன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்த, மறு கணம் அவனும் விண்ணுலகை அடைந்தான்.
கந்தழிதரனுக்குச் சற்று நேரம் எடுத்தது தான் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதை உணர்வதற்கு. இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு முறை ஆழ மூச்செடுத்துப் பார்த்தான். ஆம் மூச்செடுக்கிறான். அப்படியானால் உயிரோடுதான் இருக்கிறான். இது போதும் அவனுக்கு…
அந்த நேரம் வோக்கிடாக்கியில் சிங்கள மொழியில் அழைப்பு வர, அதுவரை இருந்த மந்த நிலை மறைந்து போக அங்கே அதிக நேரம் நிற்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாகக் கரத்திலிருந்த துப்பாக்கியைத் தூக்கி எறிந்தவன், பதுங்கு குழியை நோக்கிப் பாய்ந்தான்.
உள்ளே பாய்ந்து இறங்கியவன், அம்மெதினியை நோக்கி ஓட, அதுவரை வெளியே கேட்ட துப்பாக்கிக் குண்டின் ஓசையில் உயிரைத் தொலைத்தவள் போல, முழங்கால் மடித்து அதில் முகத்தைப் புதைத்து, அச்சத்தில் பறந்துசெல்ல முயன்ற உயிரைக் கையில் பிடித்தவாறு, தன் கந்தழிதரனை மீட்டுக் கொடு என்று இறைவனிடம் திரும்பத் திரும்ப மன்றாடிக்கொண்டிருந்த அம்மேதினி, யாரோ உள்ளே வரும் சத்தம் உணர்ந்து உடல் உதற, நெஞ்சம் பதற, ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்தாள். தேகமோ உதறத் தொடங்கியது. அடி வயிற்றிலிருந்து சில்லிட்ட பயப்பந்து மேலேறிப் புத்தியைப் பலமாக அடித்தது. நெஞ்சமோ பிறந்துவிடும் பொல்லாத துடித்தது. உடலின் பலவீனமானது போல சோர்ந்து போனது.
வருவது யாராக இருக்கும். இராணுவம் என்றால்..? அவளைக் கண்டால் என்னாகும்? பெரும் நடுக்கத்துடன், வியர்த்துக் கொட்ட, இரத்தம் உடலிலிருந்து வடிந்து செல்ல,
“கந்து… கந்து… கந்து…” என்று முணுமுணுத்தவாறு அப்படியே கிடக்க,
“அம்மணி…” என்கிற அவனுடைய ஒற்றை அழைப்பில், அதுவரை அவளை அடக்கி ஆழ்ந்திருந்த அத்தனை பயமும் மொத்தமாய்த் தொலைந்துபோக
“கந்து…” என்கிற அலறலுடன் அவனை நோக்கிப் பாய்ந்தவள், அவனை இறுக அணைத்துக் கதறிவிட்டாள்.
“ஓ… கந்து… என் கந்து… எங்கே உன்னைத் தொலைத்து விடுவேனோ என்று பயந்துபோனேன் கந்து… இராணுவம் என்னைப் பிடித்துக்கொள்ளுமோ என்று உயிரே மரித்துப் போனது கந்து… ஓ கந்து… நீ வந்துவிட்டாயா…” என்று அவன் மார்பில் முகம் புதைத்து விம்ம, கந்தழிதரனின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்தான்.
“ஓ… மை பேபி கேர்ள்… எனக்கு ஒன்றுமே இல்லைடி… எனக்கு ஒன்றுமே இல்லை… இதோ பார்… நான் நன்றாகத்தான் இருக்கிறேன்…” என்று அவளைச் சமாதானப் படுத்த, மெதுவாக அவனை விட்டு விலகியவள் தன் கரம் கொண்டு அவன் தேகத்தை வருடி உண்மையாகவே அவன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று அறிய முயன்று அதில் பேருவகை கொண்டு, உதடுகள் சிரிக்க,
“என் கந்து… எங்கே உன்னைத் தொலைத்துவிட்டேனோ என்று… கந்து…” என்று மீண்டும் விம்ம, ஓரிரு வினாடிகள் அவளை அணைத்தவாறே நின்றவனுக்கு இன்னும் தாம் உயிரோடு இருக்கிறோம் என்பதையே நம்பமுடியவில்லை.
எங்கிருந்து அத்தனை பலம் வந்தது? எங்கிருந்து அந்த ஆவேசம் வந்தது? எப்படி அத்தனை இராணுவத்தையும் வீழ்த்தினான்? சத்தியமாக இதுவரை அவனுக்குப் புரியவில்லை. ஆனால், அம்மெதினியைக் காக்கவேண்டும் என்கிற அந்த ஆவேசம், தேவை, வேண்டுதல், எல்லாமாகக் கொடுத்த தைரியம், அதையும் மீறி, உள்ளத்திலே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சீற்றம், எல்லாமாகச் சேர்ந்து அவனை மிருகமாக்கி விட்டிருந்தது போலும். இல்லை முண்டாசுகவி கொடுத்த துணிவோ? தெரியவில்லை… அத்தனை உடல் வலியையும் மறக்கச் செய்து, எதிரிகளைச் சாய்க்க வைத்துவிட்டதே! அந்த ஆவேசம்தான் அவனை அவளிடம் திரும்ப அழைத்து வந்திருக்கிறது.
இப்போது அம்மேதினி அவனை அனைத்திருக்க, அந்த ஆவேசம் வடிந்தவனாய், சற்று நேரம் அவள் உச்சந்தலையில் முகத்தைப் புதைத்தவாறு நின்றான்.
எனோ அழவேண்டும் போல இவனுக்குத் தோன்றியது. ஆனால் அதற்க்கு நேரமில்லை என்பதைப் புரிந்தவனாய், அவளை விட்டு விலகிக் கலங்கிய அவளுடைய முகத்தைத் துடைத்துவிட்டு,
“அம்மணி அதிக நேரம் நிற்க முடியாது… புறப்படு…” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு வந்தவன், முதலில் பாய்ந்து வெளியேறி, அவளை நோக்கித் தன் வலது கரத்தை நீட்ட, அதை அவள் பற்றிக்கொண்டதும் இழுத்து மேலே எடுத்தான். வெளியே வந்தவள் அங்கே சரிந்திருந்த இராணுவ வீரர்களைக் கண்டதும் அதிர்ந்து போனாள். விழிகள் பிதுங்க அந்தக் காட்சியையே வெறித்திருக்க, இவனோ, இவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினான்.
சற்றுத் தூரம் போனதும் அம்மேதினியின் ஓட்டம் தடைப்பட்டது.
இவன் என்ன என்று பார்க்க அவள் ஒரு வீட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
திரும்பிய கந்தழிதரனுக்கும் அந்த வீடு எது என்று புரிந்தது. அது அம்மேதினியின் வீடு. இப்போது உருக்குலைந்துபோய்ப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. விழிகள் கலங்க, பெரும் வலியுடன் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே
“இதற்கு நேரமில்லை… விரைந்து வா…” என்றவாறு அவளை இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினான் கந்தழிதரன்.
அழுது கரைய அது நேரமில்லை. எந்த நேரமும் இராணுவ வீரர்களிடம் சிக்கிவிடலாம். அதற்கிடையில் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்து விட வேண்டும். இதற்கிடையில் காயம் பட்ட மார்பை மறைக்க வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற சந்தேகங்கள் எழும்.
இதற்கிடையில் சற்று ஓய்ந்திருந்த ஷெல் வீழ்ச்சி மீண்டும் பயங்கரமாகக் கூவத் தொடங்கியது.
எதற்குத் தப்பினாலும் அதற்குத் தப்பவேண்டுமே. மீண்டும் ஓட்டம், ஓட்டம்.
எப்படியோ புலராத அந்தக் காலைப் பொழுதில், குறுக்குப் பாதைக்குள்ளாக நுழைந்து மறைந்து இருவரும் ஓடத் தொடங்கிய நேரம், ஓரளவுக்குப் பாதுகாப்பான இடம் வந்ததும், நின்ற கந்தழிதரன், திரும்பி அம்மேதினியைப் பார்த்து,
“அம்மணி… ஸாரிம்மா… எனக்கு அவசரமாக…” என்றவன் தன் சுண்டு விரலைக் காட்டிவிட்டு ஒரு புதருக்குள் மறைந்து கொள்ள, இவளோ மறுபக்கம் நின்றவாறு,
“கந்து…” என்றாள். இவனோ,
“ம்…” என்று கூற,
“எப்படிக் கந்து… உன்னால் அத்தனை இராணுவத்தையும் மொத்தமாய் வீழ்த்த முடிந்தது?” என்று தன் வியப்பைக் கொட்ட, அவனோ,
“இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது… விடுதலைப் போராட்டத்தில் இணைந்த போது ஆறுமாதம் பயிற்சி கொடுத்தார்கள். அப்போது எந்தத் துப்பாக்கி எப்படிப் பிடிக்க வேண்டும், எப்படிச் சுடவேண்டும் என்றெல்லாம் பயிற்றுவித்தார்… இல்லையென்றால் எப்போதோ மண்ணைக் கவ்வியிருப்பேன்…” என்றுவிட்டுத் தன் தேவையை முடித்துக்கொண்டு வெளி வந்தவன், அம்மேதினியைப் பார்த்து,
“நீ போகவில்லையா…?” என்று கேட்டான். இவளுக்கும் போகவேண்டித்தான் இருந்தது. ஆனால் எப்படி… அதுவும் வெட்ட வெளியில். அவள் தயங்க,
“இந்த வெளிச்சத்தில் எதுவும் தெரியாது… போய் விட்டு வா…” என்று அவன் கூற இவளோ நெளிந்தாள்.
இத்தகைய சூழ்நிலைக்குப் பழக்கப்படாதவளிடம் வெட்டவெளியே போ என்றால் எப்படிப் போவாள். அவளின் சங்கடத்தைப் புரிந்தவனாக, சுற்றும் முற்றும் பார்த்தவன், ஒரு ஒதுக்குப் புரத்தில், சிதைந்துபோன ஒரு கட்டடம் தென்பட, அம்மேதினியை அழைத்துக்கொண்டு அங்கே போனான். போக முதல், அம்மேதினியைத் தன் பின்னால் வருமாறு கூறிவிட்டுத்தான் நடக்கத் தொடங்கினான்.
எங்குவேண்டுமானாலும் பயங்கர மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம். கூடவே விஷ ஜந்துக்கள் வேறு அங்கே நடமாடலாம். அதனால் மிக அவதானமாகப் பார்த்துப் பார்த்து நடந்தவன், குறிப்பிட்ட சிதைந்த வீட்டை அடைந்ததும் ”விரைந்து உள்ளே போ” என்று கூற மறுக்காது நுழைந்தாள் அம்மேதினி.
அவள் உள்ளே நுழைந்ததும் சுத்தவரப் பார்த்தான். காடுபோல மரங்கள் வளர்ந்திருந்தன. நெஞ்சமோ பயங்கரமாகத் துடித்தது. எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது அதற்கிடையில் அவளைப் பத்திரமாகக் கொண்டு சென்றுவிடவேண்டும். யோசித்தவனுக்கு முன்னிரவு அவளும் அவனுமாய்க் காதலுடன் கூடியது சுத்தமாக மறந்து போனது. பதிலுக்கு அவளை எப்படியாவது காத்துவிடவேண்டும் என்கிற எண்ணம் மட்டும்தான் அவனுக்கு.
முன்பு சுத்தமாகத் தொலைந்திருந்த நம்பிக்கை இப்போது ஓரளவு ஏற்பட்டிருந்தது. எங்கோ ஒரு புள்ளியில் அவர்கள் தப்பிவிடுவார்கள் என்று உள் மனம் சொன்னது.
யோசனையுடன் அவளுக்காகக் காத்திருக்க, திடீர் என்று அம்மேதினியின் அலறல் கேட்கப் பதறியடித்தவனாகச் சத்தம் வந்த திசை நோக்கிப் பாய்ந்தான் கந்தழிதரன். தன்னை நோக்கி ஓடிவந்தவனைக் கண்டதும் புயல்போல அவளை நோக்கி ஓடியவள், பாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டு, அவனை இறுக அணைத்துக்கொள்ள, அவளைத் தன்னோடு இறுக்கியவன், முதுகை வருடிக் கொடுத்தவாறு,
“அம்மணி… என்னடா… என்னவாகிவிட்டது?” என்று பதறியவனாக இவன் கேட்க, அவள் ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டினாள். அங்கே பெரிய நாகப்பாம்பு ஒன்று தூக்கம் தடைப்பட்ட கோபத்தில் எழுந்து நின்று இவர்களைப் பார்த்து முறைத்துக்கொண்டு நின்றிருந்தது.
அதைப் பார்த்துவிட்டுத் திரும்பி இவளைப் பார்த்து முறைத்தவன்,
“இதற்கா இப்படி அலறினாய்? நீ அலறிய அலறலில் தூரத்திலிருக்கும் இராணுவமே சத்தம் கேட்டு உள்ளே வந்திருக்கும்…” என்று திட்டும்போதே உலங்கு வானூர்தியின் சத்தம் கேட்கத் தொடங்கியது.
அதை உணர்ந்ததும் இருவரின் உடல்களும் இறுகிப்போனது.
இவர்களை மீண்டும் தேடத் தொடங்கி விட்டார்கள். உடனே அம்மேதினியின் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்றவன், அங்கிருந்த அடர்ந்த மரங்களுக்குள் மறைந்து கொள்ள, அந்த இடத்தை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றது வானூர்தி.
நிம்மதி மூச்சொன்றை விட்டவன்,
“சரி வா…” என்றவாறு மேலும் நடக்கத் தொடங்கினான்.
இருவரும் நடக்கத் தொடங்க கொஞ்சத் தூரத்தில், அம்மேதினியின் வலது கால் எதிலோ படச் சமநிலை தவறித் தரையில் பொதார் என்று விழுந்தாள்.
முன்னால் போய்க்கொண்டிருந்தவன் அம்மேதினி விழுவதைக் கண்டதும்,
“என்னம்மா… பார்த்துக் கால்களை வைக்கமாட்டாயா?” என்று கடிய, இவளோ அவனைப் பார்த்து முறைத்து,
“எனக்குக் கீழே விழவேண்டும் என்று விரதம் பாருங்கள்…” என்று சீறியவள் எழுந்து கரங்களைத் தட்டிவிட்டு மேலும் நடக்கத் தொடங்க, அப்போதுதான் கவனித்தாள்.
அவள் தடுக்கி விழுந்தது துருத்திக்கொண்டிருந்த ஒரு எலும்பின் மீது.
அதைக் கண்டதும் “என்ன எலும்பு அது…? மாட்டெலும்பா ஆட்டெலும்பா?” என்று அருவெறுத்தவாறு கூறியவள் திரும்ப, அவள் விழிகளில் பட்டது அது. தன்னை மறந்து வாயைப் பிளந்தவளுக்கு உடல் நடுங்கியது. விட்டுப்போன காய்ச்சல் வந்துவிடும் போலத் தள்ளாடியது. ஒன்றல்ல இரண்டல்ல… பத்து இருபது எலும்புக்கூடுகள் ஒரே இடத்தில். அதைக் கண்டதும் வாய்விட்டு அலறத் தொடங்க, அதை உணர்ந்துகொண்ட கந்தழிதரன், பாய்ந்து அவளுடைய வாயைப் பொத்திக்கொள்ள, அதனால் அவள் அலறிய அலறல் அவன் கரத்தோடு அடைபட்டுக்கொண்டது.
அவளுடைய உடல் பயங்கரமாக நடுங்க, உடல் உதற, பதறித் துடித்தவளைச் சமாதானப் படுத்தவேண்டி தன்னோடு அணைத்துக் கொண்டவனாக,
“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே…” என்று சமாதானப் படுத்தினாலும் அங்கிருந்த எலும்புக் கூடுகளைப் பார்க்கும்போதே தெரிந்தது சுடப்பட்டுக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று. யாரோ எவரோ. எதற்காகச் சுடப்பட்டார்களோ. அது கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம். இறந்த உடல் இல்லாமல் கிரிகைகள் கூடச் செய்திருப்பார்கள். அங்கே குவிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் அம்மேதினியின் தந்தைகூட இருக்கலாம். யாருக்குத் தெரியும். தவிப்புடன் அதையே வெறித்துப் பார்த்திருக்க,
“கந்து…” என்கிற அம்மேதினியின் குரலில் சுயநினைவு பெற்றவனாக, அவளுடைய உச்சந்தலையில் தன் உதடுகளைப் பொருத்த,
“அப்பா, செல்வன்… இருவரும் இப்படித்தானே எங்கோ எலும்புக்கூடுகளாக… ஐயோ… அவர்கள் கூட இதற்குள் இருக்கலாமே…” என்று கதறியவளாக அந்த எலும்புக்கூட்டுக் குவியலை நோக்கி ஓடத் தொடங்க,
வேகமாக அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன்,
“வேண்டாம் அம்மணி… விட்டுவிடு… தொலைந்தவர் தொலைந்தவராகவே இருக்கட்டும். அவர்கள் இந்த உலகில் இல்லை என்பதற்கான ஆவணங்கள் வேண்டாம். ஒரு வேளை மாமாவும், தம்பியும் இங்கே இருக்கிறார்கள் என்றால், அதைப்போல வலி எதுவும் இருந்துவிடாது… விட்டுவிடு… அத்தைக்காக…” என்று கெஞ்ச, அவன் கழுத்தைத் தன் கரங்களால் கட்டிக் கொண்டவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வரப் பலமாக விசும்பத் தொடங்கினாள். சற்று நேரம் அவளுடைய தலையை வருடிக் கொடுத்தவன்,
“வா அம்மணி… போகலாம்…” அவளை அணைத்துக்கொண்டே நடக்கத் தொடங்க, இங்கே இருக்கும் மனிதப் புதைகுழி எப்போது வெளிச்சத்திற்கு வரும்? யார் கண்டுபிடிப்பார்கள்? எத்தனை காலத்திற்குப் பிறகு கண்டுபிடிப்பார்கள்? தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழனின் சரித்திரம் புதைகுழிக்குள் மண்ணோடு மண்ணாக அந்த எலும்புக்கூடுகள் போலப் புதைக்கப்படுவதைக் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கமட்டும்தான் அவர்களால் அப்போதைக்கு முடிந்தது.
அம்மேதினி சிறகுடைந்த பறவையாக அச்சத்துடன் கந்தழிதரனின் மார்பில் தன் மென் முகத்தைப் பதித்துக் கிடக்க, அவளுடைய உடல் நடுங்கியது. அவளுடைய நிலையைப் புரிந்து கொண்டவனாக, கந்தழிதரனும் தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான். உதடுகளோ அவளைச் சமாதானப் படுத்தும் நோக்கில் தலை வகிட்டில் அழுந்தி அழுந்தி விலகின.
அந்தக் கணம், அவனுடைய அணைப்பும் அருகாமையும் அவளுக்குப் பயங்கரமாகத் தேவைப்பட்டது. வாழ்வில் இத்தகைய ஒரு காட்சியை அவள் பார்த்ததே கிடையாது. எத்தனை எலும்புக்கூடுகள். அப்பப்பா… யாரோ எவரோ… இவர்களின் மரணம் அவர் உறவினர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ… என்று கலங்கியவளை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான் கந்தழிதரன்.
சற்றுத் தூரம் போனதும், அவனுடைய கண்கள் ஒரு இடத்தில் குத்திட்டி நின்றன. தன்னை அணைத்தவாறு நடந்துகொண்டிருந்தவளைக் குனிந்து பார்த்து அவனுடைய முகத்தைப் பற்றித் தூக்க, இப்போது அவளுடைய முகம் வெளிறியிருந்தது. மென்மையாக அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தவன்,
“பேபி கேர்ள்… சற்றுப் பொறு… இதோ வருகிறேன்…” என்றுவிட்டு அவளை விட்டு விலகிக் குறிப்பிட்ட ஒரு இடத்தை நோக்கி வேகமாகச் சென்றான். அங்கே ஒரு மதிவண்டி கவிழ்த்து வைக்கப்பட்டிருக்க, அதை நிமிர்த்திப் பார்த்தான். பழைய வண்டிதான். இருந்தாலும், ஓடும் அளவிற்கு நல்லதாகவே இருக்க, அதன் டயர்களைப் பார்த்தான். கடவுளுக்கு நன்றி. காற்றுப் போகாமல் அப்படியேதான் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை உருட்டிக்கொண்டு அம்மேதினியின் அருகே வந்தான்.
“அம்மணி… இதோ நமக்கான புஷ்பக விமானம் ஏறு” என்று தன் இடைய குனிந்து அழைத்துவிட்டுக் காலைப் பின்புறமாகப்போட்டவாறு இருக்கையில் அமர்ந்தவாறு அம்மேதினியை ஏறிட, அவளும் தற்போதைக்கு எலும்புக் கூடுகளை மறந்தவளாகக் குதுகலமாகவே முன்பக்கம் வந்தமர்ந்தாள். அவனோ அவளை ஏற்றியவாறு வண்டியை வேகமாக மிதிக்கத் தொடங்கினான்.
(33) வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன், “என்னம்மா… சீக்கிரமாக…
(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…
(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…
(30) நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…
(21) அன்று நான்கு முப்பதிற்கெல்லாம் விதற்பரை தயாராகிவிட்டாள். உள்ளே எழுந்த கற்பனை அவளை உறங்கவே விடவில்லை. அவன் சொல்லப் போகும் காதலுக்காகத் தவமிருக்கத்…