Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 19/20

(19)

 

கந்தழிதரன் குறிப்பிட்ட கடையை அடைய, அங்கே அவனுக்காக ரோகிணியும் பவானியும் வெளியே காத்திருந்தனர். இவனைக் கண்டதும்,

“என்ன தம்பி… அதற்கிடையில் எங்கே சென்றீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் வினவ,

“பக்கத்தில்தான் அத்தை…” என்றவன் ரோகிணியைப் பார்த்து, சேலையைத் தேர்ந்தெடுத்துவிட்டாயா?” என்று கேட்டான்.

“நீங்கள் தேர்வுசெய்யாமல் நான் எப்படி அத்தான் அதை உடுப்பேன்… அதுவும் நம்முடைய நிச்சயதார்த்தத்திற்கு…” என்று வளைந்து நெளிய, பின்னால் வந்துகொண்டிருந்த அம்மேதினியின் உடல் காட்டில் பரவிய தீபோல எரிந்தது.

‘பார்த்துமா… நெளிகிற நெளியலில் எலும்புகள் எக்குத்தப்பாகச் சிக்கப்போகிறது…’ என்று மனதிற்குள் எரிந்து விழுந்தவள், அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடைக்குள் நுழைய,

“பாருங்கள் அம்மா… நிச்சயதார்த்தம் எனக்கா அவளுக்கா? ஏதோ தனக்குப் போல முன்னால் போவதைப் பாருங்கள்…” என்று எரிச்சலுடன் தாயின் காதில் குசுகுசுக்க,

“ப்ச்… அவள் முன்னால் போனால் என்ன, பின்னால் வந்தால் என்ன… உன் கழுத்தில்தானே கந்தழி தாலி கட்டப்போகிறார்… அதை எண்ணிச் சந்தோஷப்படு… சரி சரி… உள்ளே வா…” என்றுவிட்டு நுழைய, அவர்களின் பின்னால் நடராஜரும், கந்தழிதரனும் உள்ளே நுழைந்தனர்.

அதன் பின் பவானியும், ரோகிணியும் கூட வந்தவர்களைக் கவனிப்பதாகவே இல்லை. அவர்கள் அந்தக் கடையையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டிருக்க அம்மேதினி சுத்திச் சுத்தி ஏனோ தானோ என்று சேலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

அவளால் அந்தப் புடவை தேடும் படலத்தைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஏதோ தனக்குரியதை அவர்கள் அபகரிப்பது போலத் தோன்ற, அவளால் அதனோடு ஒன்ற கூட முடியவில்லை. போதாததற்கு அந்த ரோகிணி ஒவ்வொரு சேலையாக எடுத்துத் தோள் மீது போட்டுக் கந்தழிதரனின் கவனத்தைத் திசைதிருப்பி,

“அத்தான்…! இது நன்றாக இருக்கிறதா….? அத்தான் இந்த நிறம் எப்படி இருக்கிறது…? அத்தான்… இந்தக் கரை எப்படி இருக்கிறது…? இதன் தலைப்பைப் பாருங்கள்.. அழகாக இருக்கிறது அல்லவா…!” என்று அவனைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருக்க, அந்தக் கண்டராவியைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுச் செல்லத் தலைப்பட்டாள் அம்மேதினி.

அவள் வெளியேற முயல்வதைக் கண்ட கந்தழிதரன், ரோகிணியிடமிருந்து விலகி அம்மேதினியை நெருங்கி,

“அம்மேதினி… என் நிச்சயதார்த்தத்திற்கு நீ எதுவும் வாங்கவில்லையா…?” என்று என் நிச்சயதார்த்தம் என்பதில் அழுத்தம் கொடுத்துக் கேட்க, சடார் என்று திரும்பி அவனைப் பார்த்து முறைத்தவள்,

“எதற்கு வயிறெரிவதற்கா?” என்று கேட்டாள் பட்டென்று. இவனோ அதைக் கருத்திற் கொள்ளாது, அங்கிருந்த சிப்பந்தி ஒருவரை அழைத்து,

“இவர்களுக்கு ஏற்ற பாவாடை சட்டை காட்டுங்கள்” என்று கூற இவளுக்குள் சுறு சுறு என்று சினம் எகிறிப் பாய்ந்தது. அவள் சிறுமி என்று குறிப்பால் காட்டுகிறானாம். ஆத்திரம் பொங்க,

“அண்ணே… பாவாடை சட்டை போடும் அளவுக்கு நான் ஒன்றும் சிறுமியில்லை… சேலையே காட்டுங்கள்…” என்று அந்தச் சேலையை அழுத்திக் கூற, ஒரு கணம் தயங்கிவிட்டு,

“உன்னுடைய நன்மைக்காத்தானே…” அவன் முடிக்கவில்லை தன் கரத்தைத் தூக்கி அவன் பேச்சைத் தடுத்தவள்,

“ஐயா… சாமி…! ஆளை விடுங்கள்… என் நன்மையைப் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு எனக்குப் புத்தியும் இருக்கிறது… பொறுப்பும் இருக்கிறது… நீங்கள் ஒன்றும் ஈ ஓட்டவேண்டாம்… போங்கள்… போய்… உங்கள் வருங்கால மனைவிக்கு ஈ என்று பல்லிளிக்கும் கரையுள்ள சேலை ஒன்றை வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்துங்கள்… போங்கள்… போங்கள்…” என்று ரோகிணியின் பக்கமாகக் கரத்தைத் தூக்கிக் காட்டிக் கூற, இவள் கந்தழிதரனுடன் பேசுவது அந்த ரோகிணிக்கு எப்படித்தான் தெரிந்ததோ, மறு கணம்,

“அத்தான்…!” என்றவாறு வர, ஏளனத்துடன் கந்தழிதரனை நிமிர்ந்து பார்த்தவள்,

“போங்கள்… உங்கள் சொத்தை… அதாவது… உங்கள் சொத்து உங்களைக் கூப்பிடுகிறது… போங்கள்… போய்ச் சேலையைத் தேர்வு செய்யுங்கள்…” என்றுவிட்டுத் திரும்ப, இவர்களின் அருகே வந்த ரோகிணி,

“இவளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது அத்தான்? நீங்கள் வாருங்கள்… நீங்கள் தேர்வு செய்யும் சேலையைத்தான் நிச்சயதார்த்தத்திற்கு நான் உடுக்கவேண்டும் என்று அம்மா கூறிவிட்டார்கள்…” என்றவள் கந்தழிதரனின் கரத்தைப் பற்ற, பற்றிய இரு கரங்களையும் வெறித்துப் பார்த்தாள் அம்மேதினி.

அவள் பற்ற வேண்டிய கரம் அல்லவா அது… வலியுடன் முகத்தைத் திருப்ப, அவள் விழிகளில் தட்டுப்பட்டாள் அவளுடன் ஒன்றாகப் பயின்ற வான்மதி. முதலில் அது வான்மதிதான் என்று இவள் நம்பவில்லை. மீண்டும் உற்றுப் பார்க்கச் சந்தேகமேயில்லை வான்மதியேதான். முகம் முழுவதும் மகிழ்ச்சியில் பிரகாசிக்க,

“ஏய்… வான்மதி…! எப்படி இருக்கிறாய்…?” என்று முகம் முழுவதும் மகிழ்ச்சி பரவ அம்மேதினி கேட்டதும்தான், அதுவரை சுரிதாரை வாங்குவதில் ஆர்வமாக இருந்த அந்த இளம் பெண் திரும்பிப் பார்த்தாள். அங்கே அம்மேதினியைக் கண்டதும், முகம் பிரகாசிக்க,

“ஏய்… அம்மேதினி… நீயா…? நிஜமாகவே நீதானா… நம்பவே முடியவில்லையே… எப்படி இருக்கிறாய்…? உன்னை இங்கே எதிர்பார்க்கவே இல்லையே… இங்கே என்ன செய்கிறாய்…?” என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பணிக்க இவளோ தற்காலிகமாகக் கந்தழிதரனையும், ரோகிணியையும் மறந்தவளாக, ஓடிப்போய் அவளை இறுக அணைத்து விடுவித்தவள், முகத்தில் குறும்பு கொப்பளிக்க.

“நானா… இங்கே கத்தரிக்காய், தக்காளி மலிவு என்று கேள்விப்பட்டேன்… அதுதான் வாங்கலாம் என்று…” என்று அம்மேதினி இழுக்க, வான்மதி கலகலவென்று சிரித்தாள்.

“போக்கிரி… உன் பழைய குறும்பு அப்படியேதான் இருக்கிறது…” என்று கூற, ஆசையாக வான்மதியின் கரத்தைப் பற்றிக்கொண்ட அம்மேதினி,

“கூடவே பிறந்தது… எப்படிப் போகும்?” என்றாள் குதுகலமாக.

“அம்மேதினி… உன்னைப் பார்த்து எத்தனை காலங்களாகிவிட்டது தெரியுமா… எட்டு வருடங்கள் இருக்குமா? தெல்லிப்பளையிலிருந்து துரத்தப்பட்டபோது கடைசியாகப் பார்த்தது. அன்றைக்குக் கொழும்பு சென்றவர்கள்தான்… இப்போதுதான் இங்கே வந்தோம். இப்போது திரும்ப அங்கே போக முடியாது சிக்கிவிட்டோம். இன்னும் ஒரு கிழமையில் பாதையைத் திறந்து விடுவார்களாம்… திறந்ததும் கொழும்பு சென்று விடுவோம்…” என்றதும் இவள் முகம் வாடியது.

அப்படியானால் கந்தழிதரனும் சென்றுவிடுவானே… அவனும் பாதை மூடப் பட்டதால்தானே இங்கே சிக்கி நிற்கிறான். பாதையைத் திறந்தால் கொழும்புக்குப் போய்விடுவான். அதன் பிறகு இவனுடைய தொடர்பு முற்றாக இல்லாது போய்விடும்… எண்ணும்போதே வேதனை நெஞ்சை அரிக்க, திடீர் என்று வாடிய தன் தோழியின் முகத்தைக் கண்டு,

“என்னடி… நான் சென்றுவிடுவேன் என்றதும் கவலையாக இருக்கிறதா? என்ன செய்வது இங்கேயே இருக்க முடியாதே…” என்று கூற, மெல்லியதாக நகைத்தவள்,

“எப்போது வந்தீர்கள்?” என்றாள்.

“ஒரு மாதம் இருக்கும் அம்மேதினி… அம்மம்மாவைப் பார்க்க வந்தோம்… பாதை திறந்து கொழும்புக்குப் போய்விட்டால் இனி எப்போது இங்கே வருவோமோ தெரியாது…” என்று என்று கூற மலர்ந்து சிரித்தவள்,

“அம்மம்மாவை உங்கள் கூடவே அழைத்துச் செல்லலாமே…”

“செல்லலாம்தான் வரவேண்டுமே. பிள்ளையாகப் போற்றி வளர்த்த வீடு விட்டுவிட்டு வரமாட்டேன் என்றுவிட்டார்கள்… தவிரச் சின்னம்மா இங்கேதானே இருக்கிறார். அவர்களை விட்டு வர மாட்டார்கள்.” என்று கூற,

“இங்கே எல்லோருக்கும் அதுதானே பிரச்சனை… குழந்தைகளைக் கூட நாடு விட்டு நாடு செல்ல அனுமதிப்பார்கள். கட்டிய வீட்டையும் பிறந்து வளர்ந்த ஊரையும் விட்டு விலகவே மாட்டார்கள்…” என்று அம்மேதினி கூறிக்கொண்டிருக்கும் போதே,

“மதி…” என்றவாறு வந்தான் அந்த இளைஞன். அவனைக் கண்டதும் முகம் மலர்ந்த வான்மதி அம்மேதினியைப் பார்த்து,

“ஹே… இது யார் என்று தெரிகிறதா?” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

“தெரியாமல் என்ன உன் அண்ணா… ஈழபுவன்” என்றவள்,

“எப்படி இருக்கிறீர்கள் புவன்…” என்றாள் மென்மையாக.

ஈழவுபனோ, தன் முன்னால் நின்றிருந்தவளைக் கண்டு, தன் இமைகளைக் கூட மூட மறந்தவனாக அம்மேதினியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்து எட்டு வருடங்கள் இருக்குமா. இத்தனை வருடங்களில் எத்தனை மாற்றம் அவளிடத்தே. பெண்மையாய் மென்மையாய்… அடேங்கப்பா… அந்தப் பதினாறு வயது பருவத்திற்குள் இத்தனை அழகா. அவனால் நம்பவே முடியவில்லை. இமை தட்ட மறந்தவனாக அப்படியே நின்றவன், பின் எப்படியோ சுதாரித்து,

“நன்றாக இருக்கிறேன் மேதினி… நீ எப்படி இருக்கிறாய்… நன்றாகப் படிக்கிறாயா? அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சை அல்லவா?” என்று கேட்க, இவள் ஆம் என்று தலையை ஆட்ட,

“எந்தப் பாடம் உனக்குப் பிடிக்கும்?”

“விஞ்ஞானம்…” என்று அவள் பதில் கூறக் கூற இவனுடைய இதயமோ சற்று வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அதன் பின் சற்று நேரம் படிப்பு, பள்ளி என்கிற பேச்சுக்களோடு,

“நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள் புவன்?” என்று கேட்க,

“மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பொறியியல் இரண்டாம் வருடம்… அனேகமாகப் புலமைப்பரிசு கிடைத்தால் லண்டனுக்குப் போக யோசிக்கிறேன்… பார்க்கலாம்…” என்று அவன் கூற,

அவர்களின் பக்கமாக ஒரு கூட்டமே வந்தது. அதைக் கண்டு தன்னிச்சையாக, ஈழபுவன்பக்கமாகச் சென்று நின்றுகொண்டாள். புவனும் எதேச்சையாக அவளுடைய மேல் கரத்தைப் பற்றித் தனக்கு அருகாமையில் வைத்துக்கொள்ள அந்தக் கூட்டம் அவர்களைத் தாண்டிச் செல்ல, அதைச் சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கந்தழிதரனுக்கு என்னவோ போலிருந்தது.

ஒரு இளைஞன் அவளருகே வந்ததும், அவளோடு பேசிக்கொண்டிருந்ததையும் கண்ட போது அவனையும் மீறி ஒரு வித படபடப்பு அவனுக்குள். எதற்காக அந்தப் படபடப்பு என்பதற்கான பதில் அவனிடத்தேயில்லை. ஆனால் ஏனோ அது பிடிக்கவில்லை. அதுவும் அந்தக் கூட்டம் வந்தபோது எதேச்சையாக என்றாலும் அவன் பக்கமாகப் போய் அவள் நின்றது இவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

முன்னமே அவன் அப்படித்தான். அம்மேதினியை எந்த ஆண்களும் நெருங்க விடமாட்டான். அவள் சிறுமியாக இருந்தபோதும் அப்படித்தான். சற்று வளர்ந்த பின்னும் அப்படித்தான். யார் அவளோடு பேசுவதாக இருந்தாலும் அவனைத்தாண்டித்தான் பேச முடியும். அதே உணர்வு இப்போதும் அவனை ஆட்டிப்படைக்க ஒரு வித அவஸ்தையுடன் அங்கிருந்தே இங்கு நோட்டம் விடத் தொடங்கினான் கந்தழிதரன்.

அதே நேரம் “மேதினி… பக்கத்தில் சுவையகம் இருக்கிறது… போய் ஐஸ்க்ரீம் குடித்துவிட்டு வரலாம் வருகிறாயா?” என்று வான்மதி கேட்க, உடனே தலையை ஆட்டினாள் அம்மேதினி.

அந்த ரோகிணிக்குச் சேலை வாங்கும் கண்ணராவியைப் பார்ப்பதை விட, அவர்களுடன் சென்று குளிர் கழி (ஐஸ்க்ரீம்) அருந்திப் புண்ணான நெஞ்சுக்கு ஒத்தடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தவள்,

“போகலாமே… ஒரு நிமிடம் பொறு… இதோ வருகிறேன்…” என்றுவிட்டு பவானியை நோக்கிச் சென்றாள். கந்தழிதரன் இவளைச் சற்றுக் குறுகுறு என்று பார்க்க, இவளோ அவனைப் பார்வையால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு, நேராகப் பவானியின் அருகே சென்றாள்.

“பெரியம்மா… நான்… வந்து என் தோழியை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வருகிறேன்…” என்று கூற, பவானிக்கு என்ன அக்கறை. அவள்தான் அக்கறைப்படச் சொந்த மகள் இருக்கிறாளே. அதனால், மகிழ்ச்சியாகவே அனுப்பிவிட்டு இன்னொரு சேலை தேர்ந்தெடுக்க முயல, கந்தழிதரனோ,

“யார் அவர்கள்… எதற்காக அவர்களோடு போகிறாய்?” என்று வந்து நிற்க, இவளோ அவனை நிதானமாகப் பார்த்து,

“உங்கள் நிச்சயதார்த்த சேலை… தேர்ந்து எடுத்து விட்டீர்களா… அத்த்த்த்தான்…” என்று அழுத்தம் கொடுத்துக் கேட்டவள், உன் வேலையை நீ பார், என் வேலையை நான் செய்கிறேன் என்பது போல நடக்கத் தொடங்கக் கந்தழிதரனின் கை முஷ்டிகள் இறுகத் தொடங்கின. ஆத்திரத்துடன் எதையோ சொல்ல வர, இவளோ அதை ஒரு பொருட்டாகவே எடுக்காது வான்மதியை நெருங்கி,

“வா… வான்மதி….” என்றுவிட்டுப் ஈழபுவனையும் பார்த்து,

“நீங்களும் வருகிறீர்களா…?” என்றாள் புன்னகையுடன்.

அவளுடைய புன்னகைக்குச் சொத்தையே எழுதிக் கொடுக்கும் நிலையில் இருந்தவன், அழைத்ததும் போகாமல் விடுவானா என்ன? காந்தம் இழுத்த இரும்பாய் அவள் பின்னே போகத் தொடங்க இருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக் கடையை விட்டு வெளியே செல்ல, அவளை எதுவும் செய்யமுடியாத கையாளாகாத் தனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் கந்தழிதரன்.

அவனுக்கு ஏனோ இதயம் பலமாகத் துடித்தது. அவள் இப்படி வெளியே சென்றது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுவும் அந்த இளைஞன் அவளை நெருங்கி நிற்க முயல்வதை ஒரு ஆணாக இங்கிருந்தே உணர்ந்து கொண்டவனுக்கு முதன் முறையாகக் குருதி சற்றுக் கொதிக்கத் தொடங்கியது.

இவன் தவிப்புடன் வெளியே வெறித்திருக்க, அவனருகே வந்த பவானியோ,

“கந்தழி… என்ன பார்க்கிறாய்?” என்று கேட்க, உடனே சமாளித்தவன்,

“ஒன்றுமில்லை பெரியத்தை…” என்று சொன்ன போது முதன் முறையாகத் தான் அவசரப்படுகிறோமோ என்று உறுத்தத் தொடங்கியது.

(20)

 

வான்மதி, புவன் ஆகிய இருவரோடும், வெளியே வந்த அம்மேதினி, பழைய கதைகளைப் பற்றிப் பேசிச் சிரித்தவாறு, சுவையகத்திற்குள் நுழைய, மூவரும் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டு தமக்கு வேண்டியதை வரவழைத்து விட்டுக் காத்திருக்க ஈழபுவனோ அம்மேதினியின் மீதிருந்த பார்வையை விலக்க முடியாதவனாகத் தவித்துக்கொண்டிருந்தான்.

பல்கலைக் கழகத்தில் பெண்களைப் பார்க்காதவனா என்ன? ஆனால் அவர்களிடம் காணாத ஏதோ ஒன்றை அவளிடம் கண்டுகொண்டவனாய் அமர்ந்திருந்தவனுக்கு அவளுடைய வயதைப் பற்றிய கருத்து மனதளவில் பதியாமலே போனது.

முதலில் அம்மேதினி அவனுடைய பார்வையைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் போகப் போக அந்தப் பார்வையின் வீரியம் அவளைச் சிறு சங்கடத்திற்குள் உள்ளாக்க, நெருப்புக்குப் பயந்து வாணலிக்குள் விழுந்த கதையாகிப் போனது அவளுடைய நிலை.

அதுவும் ஐஸ்க்ரீம் ஒவ்வொரு வாய் வைக்கும் போதும் அவனுடைய விழிகள் அவளையே துளைத்துக் கொண்டிருக்க, ஏனோ அந்தச் சுவை மிக்கக் குளிர்பானம் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. நல்லவேளை உதவிக்கு வந்தாள் வான்மதி.

“இப்போது சொல்… நம்முடைய பழைய நண்பர்கள் யாரையாவது சந்தித்தாயா? எத்தனை பேரைச் சந்தித்தாய்?” என்று ஆவலாக வான்மதி கேட்க, முன்னால் அமர்ந்திருந்தவனிடமிருந்து தன் கவனத்தைத் திசை திருப்பியவளாக,

“ப்ச்… இல்லைடி… எல்லோரும் ஒவ்வொரு திக்காகப் போய் விட்டோம். அதிகமானவர்கள் வெளிநாட்டிற்குப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். சிலர் கொழும்பில்தான் இருக்கிறார்கள். நம்மோடு படித்தவர்கள் என்று… ம்கூம் யாரையும் பார்த்ததில்லை உன்னைத் தவிர… நீ சொல்… யாரையாவது கண்டாயா?” என்று ஆவலாகக் கேட்க,

“ஆமாம் மேதினி, நம்முடைய கருவாடு கமலா, தேவாங்கு தேவிதா, பூசணி பூமா குரங்கு ரக்ஷிகா… அடிமட்டை விஜயா… அப்புறம் கறிவேப்பிலை மஞ்சு, இவர்களைக் கண்டேன்…” என்று குதுகலிக்கப் பக்கென்று சிரித்தாள் அம்மேதினி.

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பட்டம் வைப்போம் அப்போது…” என்று பழைய நினைவில் கூறியவளுக்கு முகம் கனிந்து போனது. கூடவே உதடுகளில் அழகிய புன்னகை மலர்ந்தது.

“அது என்ன மதி… கருவாடு… தேவாங்கு…” என்று ஈழபுவன் வியந்தவாறு கேட்க, இப்போது பெரிதாகச் சிரித்த வான்மதி,

“அதுவா அண்ணா… கமலா கறுப்பாய் ஒல்லியாய் இருப்பாளா… அதனால் அவளுக்குக் கருவாடு பட்டப் பெயர். தேவிக்காவிற்குக் கண்கள் பெரிதாகக் கொஞ்சம் வெளியே தள்ளியவாறு இருக்குமா… கூடவே எப்போது பார்த்தாலும் அழுவாளா அதனால் அவளுக்குத் தேவாங்கு… பூமா கொஞ்சம் குண்டாய் கொழுகொழு என்று இருப்பாள். அதனால் அவளுக்குப் பூசணி… ரக்ஷிகா ஒரு இடத்தில் இருக்க மாட்டாள். அங்குத் தாவி இங்குத் தாவிக்கொண்டே இருப்பாளா… அவளுக்குக் குரங்கு… அப்புறம் விஜயா நடக்கும் போதே நிமிர்ந்து தான் நடப்பாள் வளையவே மாட்டாள். அதனால் அவளுக்கு அடிமட்டம். மஞ்சு ஒரே ஒருத்தி… அதனால் கறிவேப்பிலை…” என்று கூறி கலகலத்து நகைக்க, அதைக் கேட்டுத் தானும் சிரித்த ஈழபுவன்,

“அப்போ உனக்கென்ன…” என்று கேட்க, அதைக் கேட்டதும் வாய்க்குள் வைத்திருந்த ஐஸ்க்ரீம் தெறித்து விழச் சிரித்த அம்மேதினி, தன்னை மறந்து,

“இவளுக்கா? ஹா ஹா ஹா… பல்லி…” என்று விட்டு மேலும் கலகலவென்று சிரித்தாள். இவனோ புரியாமல் அம்மேதினியைப் பார்த்து,

“பல்லியா… இவளுக்குத்தான் பல்லு துருத்தி ஒன்றும் இல்லையே… அப்புறம் எப்படிப் பல்லியானாள்?” என்று கேட்டு வியக்க, அப்போதும் அடக்கமாட்டாமல் நகைத்தவள்,

“அதுவா புவன், ஒரு வாட்டி பள்ளிக்கூட அறையில் பல்லி ஒன்று இவளுக்குப் பக்கத்தில் விழுந்ததா… ஹா ஹா ஹா… இவள் கத்தியவாறு சுவரோடு பல்லிபோலவே ஒட்டி நின்றாளா… ஹா ஹா ஹா… அன்றிலிருந்து இவளுக்குப் பட்டம் பல்லி…” என்று விட்டுப் பலமாகச் சிரிக்க, அசடு வழிந்த வான்மதியோ,

“நானாவது பல்லி… இவள் என்ன என்று கேள் அண்ணா…” என்று கூற, கப்பென்று தன் சிரிப்பை அடக்கியவள் வாயைப் பொத்தி மறுப்பாகத் தலையை அசைத்துச் சொல்லாதே சொல்லாதே என்று கெஞ்ச, புவனோ பெரும் ஆர்வத்துடன்,

“சொல்லடி… இவளுக்கு என்ன பட்டம்…” என்றான் ஒரு வித பரபரப்புடன்.

“ம்…. ரம்பம்… கூடவே…” என்றவாறு சிரித்தவள் ஈழப்புவனின் ஆர்வத்தை எகிறவைத்தபின், “நீர்யானை…” என்றாள் அந்த இடமே அதிரும்படி சிரித்தவாறு.

அம்மெதினியோ வெட்கம் தாளமுடியாமல் தன முகத்தை இருக்கரங்களாலும் பொத்தியவாறு தன் தோழியைத் திட்ட, ஈழப்புவனோ,

“வாட்… நீர்யானையா?” என்று வாயைப் பிளக்க. இன்னும் சிரிப்பு மாறாமல், சிரித்தாள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டவாறு,

“ஆமாம்…” என்றவள் தன் இரு கரங்களையும் அகட்டிவைத்து குண்டு என்பதைச் சைகையால் காட்டி,

“இப்படி இருப்பாளா, போதாதுக்கு நம்முடைய குழுவிலேயே கொஞ்சமே கொஞ்சமாய்க் குள்ளமாக இருப்பாளா… நடக்கும்போது குடுகுடு என்று நடப்பாளா… ஹா ஹா ஹா அதுதான்… கூடவே பேசிப்பேசியே கழுத்தறுப்பாளா… அதனால் ரம்பமும் அவளுக்குத்தான்…” என்றுவிட்டு மீண்டும் பலமாக வாய்விட்டுச் சிரிக்க, இப்போது புவனும் தன்னை மறந்து சிரிக்கத் தொடங்கினான்.

ஒரு ஆண்மகனின் முன்னால் தன் மானத்தை வாங்கிவிட்டாள் என்கிற ஆத்திரத்துடன் நிமிர்ந்து தன் தோழியைப் பார்த்தவள்,

“சதிகாரி… பல்லி… உன்னை…” என்றவாறு தாறுமாறாக அவளை அடிக்கத் தொடங்க, அவளுடைய அடியிலிருந்து தப்ப முயன்று தோற்றவளாகக் கலகலத்துக் கொண்டிருக்கும் போதே, அம்மெதினியை ஏறிட்ட ஈழபுவன்,

“உனக்கு நீர்யானை என்று பெயர் வைத்ததால் அந்த நீர்யானையே அழகாகத் தெரிகிறது மேதினி…” என்றான் மென்மையாய்.

ஒரு கணம் அந்த மென்மையில் தடுமாறிப் போனாள் அம்மேதினி. அவளையும் மீறிக் காதுமடல்கள் சிவந்தாலும், உள்ளே ஒரு வித சங்கடம் ஏற்பட, அதுவரை தோழியை அடித்துக் கொண்டிருந்தவள், அவசரமாக அவளை விட்டு விலகி அமர்ந்தவாறு சங்கடத்துடன் ஈழபுவனைப் பார்த்து,

“அது… அது வந்து… நன்… நன்றி…” என்று கூறியவாறு நெளிய. வான்மதியோ, விழிகள் மின்னத் தன் அண்ணனைப் பார்த்தாள். அவன் பார்வையும், அம்மேதினியைக் கண்டு குழைந்த அவன் உடலையும் கண்டு திகைத்தவள் பின் புரிந்து கொண்டவளாக,

“ஓகோன்னானாம் வெள்ளைக் காரன்…” என்று பாய்ந்தெழுந்து அமர்ந்தவள், நகைப்புடன் அண்ணனைப் பார்த்து,

“என்ன… வழிகிறது துடைத்துக் கொள்…” என்றாள் கிண்டலுடன். இவனோ புரியாமல் பார்க்க,

“அசடு… அசடு வழிகிறது துடைத்துக்கொள்…” என்று கூறி அம்மேதினி அவதானிக்காத வகையில் கண்ணடிக்க, தன் தங்கை தன்னைப் புரிந்துகொண்டாள் என்பதைப் புரிந்துகொண்ட அந்த இருபத்தொரு வயது இளைஞன் சற்று வெட்கத்தில் தடுமாறிப்போனான். அதைக்கண்டு தன் தொண்டையைச் செருமியவள்,

“சரி சரி… பேசிக்கொண்டிருங்கள்… கழிவறைப் பக்கம் போய்விட்டு வருகிறேன்…” என்று விட்டு உள்ளே செல்ல, இவளோ ஒரு வித சங்கடத்துடன் ஈழபுவனைப் பார்த்தாள்.

தங்கையை நன்றியுடன் பார்த்தவன், அவள் மறைந்ததும்,

“நீ மிகவும் அழகாக இருக்கிறாய் அம்மேதினி…” என்றான் ஒரு வித வேகத்துடன். அதைக் கேட்டதும் இவளுக்கு ஒரு மாதிரியாயிற்று. கைகள் வேறு குளிர்ந்தன. இதுவரை யாரும் இப்படி நேரடியாகச் சொன்னதில்லை. சொல்லப் பயம் என்பது வேறு கதை. ஆனால் இவன் நேரடியாகச் சொன்னதும் அதற்கு எப்படிப் பதில் கூறுவது என்று தெரியாது தவிப்புடன் கீழ் உதட்டைக் கடித்துத் தலை குனிந்தவாறு நிற்க,

“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது…” என்றான் அடுத்து. இவளோ அதிர்ச்சியுடன் அவனை ஏறிட,

“கேட்கும் போது அபத்தமாகத்தான் தெரியும். பார்த்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் காதலா என்று நீ யோசிக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது… எனக்கும் அது முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது. காதலைப் புரிந்து சொல்ல எனக்கு வயதிருக்கிறது. அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள உனக்கு வயதில்லை என்பதும் புரிகிறது… ஆனால் இன்னும் ஐந்து வருடங்கள் உனக்காகக் காத்திருக்க என்னால் முடியும். எனக்காக நீ காத்திருப்பாயா?” என்று நேரடியாகக் கேட்க இவளோ பேச முடியாது வாயடைத்துப் போனவளாக அவனை வெறித்துப் பார்த்தாள்.

ஐந்து வருடங்கள்… கந்தழிதரனிடம் அவள் கேட்ட அதே ஐந்துவருடங்கள்… ஆனால் அவனால் நிராகரிக்கப்பட்ட வருடங்கள். அதையே இன்னொருவன் அவளிடம் கேட்கிறான். ஆனால் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத வேண்டுகோள். விதியின் சதியை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்றே அவளுக்குத் தெரியவில்லை.

“நான்… நீங்கள்… நான் வந்து…” என்று அவள் தடுமாறும்போதே நெஞ்சம் தவித்தது.

யாசகம் எத்தனை கொடுமையானது. வயிற்றுக்குப் பசி என்கிறபோது கையேந்துவது எத்தனை கொடுமையானதோ, அதைவிடக் கொடுமையானது யாசகம் கேட்பவர்க்குப் பகிர்ந்து கொடுக்காது இருப்பது. அது போலக் காதல் யாசகமும் கொடுமையானதுதானே. அன்று கந்தழிதரனிடம் காதல் யாசகம் கேட்டாள். பயங்கரமாக நிராகரிக்கப்பட்டாள். இப்போது ஈழபுவன் அவளிடம் காதல் யாசகம் கேட்கிறான்… ஆனால் அவளால் கொடுக்க முடியாதே. நெஞ்சம் கனத்துப் போனது அம்மேதினிக்கு.

அவளுடைய தயக்கத்தைக் கண்ட ஈழபுவனுக்கு அவள் சிறியவள் என்பதால் என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறுகிறாள் என்று தவறாகப் புரிந்துகொண்டவனாக, அவளுடைய கரங்களைத் தன் கரங்களில் பற்றி இறுக்கியவன்,

“அவசரமில்லை மேதினி… உன் நிலை எனக்குப் புரிகிறது… திடீர் என்று இப்படிக் கேட்டால் நீயும்தான் என்ன செய்வாய்… ஆனால் நான் சொன்னது சத்தியம் மேதினி. என்னவோ தெரியவில்லை… உன்னைக் கண்ட அந்த நொடியே நீ எனக்கு என்று என் உள் மனம் சொல்கிறது… எவ்வளவு காலம் ஆனாலும் உனக்காகக் காத்திருக்கவேண்டும் என்று  தோன்றுகிறது… நிச்சயமாக உனக்காகக் காத்திருப்பேன்… உனக்கான வயது வந்ததும் உன் வீடு தேடி வருகிறேன்… அப்படி வரும் போது என்னை ஏற்றுக் கொள்வதற்கு நீ தயாராக இருக்கவேண்டும்… இருப்பாய் தானே…?” என்று அவன் அன்பாய்க் கேட்க, அம்மேதினியின் மனதில் வந்து போனான் கந்தழிதரன்.

‘கடவுளே…! காலம் கடந்து வந்து வேண்டி நிற்கிறானே… இத்தனை ஆர்வத்தோடு, இத்தனை வேண்டுதலோடு கேட்கிறானே… எப்படி மறுப்பாள். ஆனால் அது அவளால் முடியாதே. கந்தழிதரனை விடுத்து வேறு ஒருவரைக் கணவனாக, காதலனாக எண்ணக்கூட முடியாதே. நினைக்கும்போதே அருவெறுக்கிறதே. அவளுடைய வாழ்வில் ஒரே ஒருத்தனுக்கு மட்டும்தானே இடமிருக்கிறது. அந்த இடம் கந்தழிதரனுக்கானது ஆயிற்றே… அவனைத் தவிர வேறு ஒருவனை வேறு நிலையில் வைத்து அவளால் சிந்திக்கக் கூட முடியாதே…’ என்று தவித்தவளுக்கு விழிகளில் கனிவைத்தேக்கி, அவளுடைய பதிலை யாசகமாய் எதிர்பார்க்கும் அந்த ஆண்மகனிடம் எப்படி மறுப்பது என்று தெரியாமல் குழம்பினாள் அம்மேதினி.

மறுப்பால் மனம் எப்படி உடைந்துபோகும் என்று அவள் அறியாததா என்ன? அவள் தவித்துத் தடுமாறும்போதே, வான்மதி அவர்களை நோக்கி வரத் தொடங்க, அதைக் கண்டுகொண்டவனாகத் தன் கரங்களை விலக்கியவள், அவசரமாக

“நான் காத்திருப்பேன் மேதினி… உனக்காகக் காத்திருப்பேன்…” என்று உறுதியாகக் கூறிக்கொண்டிருக்கும் போதே,

“கூஊஊஊஊஊஊஊஊ…. விஷ்…” என்கிற சத்தம் கேட்டதுமே அங்கிருந்தவர்களின் உடல் ஒரு கணம் விறைத்து நின்றது. அது எதற்குரிய சத்தம் என்று புரிந்து அவர்கள் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கு முதலே,

“டொம்… டமார்” என்று எங்கோ அருகே வெடிக்கும் பெரிய சத்தம் கேட்டது.

அது ஷெல்… அதன் சத்தத்தை வைத்தே எங்கே விழுந்திருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள. அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். அப்போது அம்மேதினியின் மனதில் நின்றிருந்தவன் கந்தழிதரன்தான். ஐயோ….! அவனுக்கு என்னவாயிற்றோ… நெஞ்சம் பதறித் துடிக்கச், சத்தம் கேட்டு வான்மதியும் இவர்களை  நோக்கி ஓடிவந்தாள்.

“மேதினி… ஷெல் அடிக்கிறார்கள்… அது இங்கே எங்கேயோதான் விழுந்திருக்கிறது… முதலில் இந்த இடத்தை விட்டு வெளியே ஓடுங்கள்…” என்று பதறித் துடிக்கும் போதே, கூஊஊஊ…. விஷ்ஷ்… டொம்ம் டமார்” என்று இன்னும் நெருக்கமாக  இன்னொரு  ‍ஷெல் விழும் சத்தம் கேட்க, அங்கிருந்தவர்களின் உடல் வெளிப்படையாகவே நடுங்கியது.

அனைவரும் அதிர்ந்து போய்ச் சிலையென நின்றது ஒரு விநாடிதான். அதன் பின் எப்போதும் இத்தகைய சூழ்நிலைக்குப் பழக்கப்பட்ட மக்கள், மறு கணம் சற்றும் யோசிக்காது, தம் உயிரைக் காக்கும் பொருட்டுப் பெரும் கூக்குரலுடனும் கதறலுடனும் வெளிப்பக்கம் நோக்கி ஓடத் தொடங்க, “கூஊஊ…. விஷ்ஷ்… டொம்ம்” இது இன்னும் நெருக்கமாக விழுந்தது.

உடனே அனைவரும் தரையில் குப்புற விழுந்துக் காதுகளைப் பொத்திக்கொள்ள, அத்தனை பேரின் நெஞ்சமும் வெடித்து இதயம் வெளியே வந்து விழுந்துவிடுவதுபோலப் பலமாகக் கதறத் தொடங்கியது.

உயிர்…! உலகில் போனால் வராத, விட்டால் பிடிக்க முடியாத கண்ணுக்குத் தெரியாத மாயை. அது இருப்பதே மெய்யின் அசைவில்தான் தெரியும்… அந்த மாயையைக் காக்கவேண்டி மனித இனம் எதையெல்லாம் செய்யத் துணிகிறது. சாதிக்கிறது… எத்தனை ஆராய்ச்சி எத்தனை ஆய்வு? அந்தக் கண்ணுக்குத் தெரியாத ஒற்றை உயிரைக் காக்க எத்தனை போராட்டம். எத்தனை துடிப்பு எத்தனை வேதனை. ஒரு உயிரைப் பிரசவிக்கப் பெண் படும் அவஸ்தைக்கும் வலிக்கும் நிகர்தான் ஏது? அத்தகைய உயிரை ஒரு கணத்தில் கண்ணிமைப் பொழுதில் பறித்துவிடுவதென்றால் அது எத்தனை பயங்கரம்.

விலைமதிப்பற்ற அந்த உயிரைக் காக்கவேண்டி மனிதன் படும் அவஸ்தைதானே மரணப் பயம்… அந்தப் பயம் எத்தனை பயங்கரமானது என்பதை அனுபவித்தவனுக்கு மட்டும்தான் தெரியும்.

அதுவும் கண் முன்னால் உயிர் பிரியும் அவலத்தைக் காணும்போது ஏற்படும் விபரீதப் பயத்திற்கு உவமையாக எதைக் கூறுவது? அதுவும் உற்ற உறவுகள் கண் முன்னால் துடித்து மரணிப்பதைப் பார்க்கும் பயங்கரம் இருக்கிறதே… அப்பப்பா அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா என்ன? நெஞ்சத்தை அருவாள் கொண்டு பிளப்பது போலத் தோன்றும் ஆனாலும் அசைய முடியாது. சிதைந்து தெறிக்கும் இரத்தத்துளிகளோடு சதைப்பிண்டங்களைக் கண்டும் அலற முடியாது. கண் முன்னால் துண்டிக்கப்படும் தலையையும், கை கால்களையும் கண்டு கதறித் துடித்து ஓடிச் சென்ற அரவணைக்க முடியாது… கட்டிய கணவனோ பெற்ற குழந்தையோ தாயோ சகோதரமோ… யார் சிதைந்தாலும் ஆறுதல் சொல்ல முடியாது… ஏன் எனில் அசைந்தால் அசைந்தவரின் உயிருக்கு உத்தரவாதமில்லை. கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையாய் நடக்கும் அவலத்தைப் பார்த்தவாறு இருக்கும் கொடுமை இருக்கிறதே… அது இன்னொரு கலிங்கத்துப் பரணி அப்பப்பா… தெய்வங்கள் கூட விழிகளை முடித்தானிருக்கும்.

அத்தகைய இக்கட்டான நிலையில் ஈழத் தமிழினத்தைச் சிக்கவைத்த அரசை என்னவென்று சொல்வது. கடவுளை என்ன செய்வது… கடவுள் உண்டா இல்லையா? உண்டென்றால் எங்கே போய்த் தொலைந்தது…? இல்லையென்றால் ஏன் இல்லாமல் போனான்? அவலம்… அவலம்… தெறிக்கும் குண்டுகள் மத்தியில் வீழ்ந்து கிடந்தது ஈழத் தமிழினம். கண்ணீர் துடைக்க யாருமில்லாது, பட்ட தூசியைக் கழுவ நாதியில்லாது, உள்ளூர் போரென உலகமே விழிகளை மூடிச் சுகமாக உறங்கிக் கிடந்த வேளையில், குண்டுகளின் மத்தியில் பறிபட்ட உயிர்களைக் காக்கத் திராணியற்று கொத்துக் கொத்தாக மடிந்த தமிழர்களை அடக்கம் செய்யவும் வழியில்லாது திணறிப்போயிருந்தது ஈழத் தமிழினம்.

அந்தக் கணம் தமது உயிரைக் காக்கும் சக்தி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் விழிகளை மூடித் தமது இறுதி விநாடிகளை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், “கூஊஊ…. விஷ்ஷ்… டொம்ம் கூஊஊ…. விஷ்ஷ்… டொம்ம்” கூஊஊ. விஷ்ஷ்… டொம்ம்” ஷெல் மழை, பயங்கரமாகத் தொடர்ந்து விழ, யாருக்குமே எழுந்திருக்க அவகாசம் கிடைக்கவில்லை.

விழும் ஷெல் கூட எத்திசையிலிருந்து வருகிறது என்று கூடத் தெரியவில்லை. இரு குண்டுகளுக்கும் இடையில் அவகாசம் கூடக் கிடையாது. அதே நேரம் ஒவ்வொரு முறையும் விழுந்த ஷெல்லின் தூரம் குறுகிக் கொண்டு வர, அடுத்தக் கணம் என்ன நடக்கும் என்பதை அறுதியிட்டு உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்தச் சூழ்நிலையே தலைகீழாக மாறிப் போனது.

செந்தீ விழுந்து தமிழ் ஈழமே செம்பொற்பாறையாகத் தகித்துப் போனது.

அம்மேதினியும் விழுந்தவாறு உயிர் துடிக்க உள்ளம் பதறக் கந்தழிதரனைத் தேடித் தன் தலையை அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தாள்.

“கூஊஊ…. விஷ்ஷ்… டொம்ம்” எல்லாக் கடைகளுக்குள்ளிருந்தும் ஆட்கள் வெளியே ஓடிவந்துகொண்டிருந்தனர்.

இறுதியாக வெளியே வந்தான் கந்தழிதரன். முதல் ஷெல் கூவும்போதே நிலைமையை உணர்ந்தவனாக, அங்கிருந்தவர்களைப் பார்த்து,

“எல்லோரும் வெளியே ஓடுங்கள்… ஷெல் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்…” என்று கத்தியபோதே அவனுடைய உள்ளத்தில் தோன்றிய உருவம் அம்மேதினிதான்.

நண்பர்களுடன் போவதாகக் கூறிச் சென்றாளே… கடவுளே… எங்கே போய்த் தொலைந்தாள்… துடித்துப் பதைத்தவனாக, ஓட முயல, எல்லோரும் ஒரே நேரம் வாசலைக் கடக்க முயன்றதன் பயனாக யாருமே வெளியேற முடியாத வகையில் பாதை அடைபட்டுக் கிடந்தது.

எரிச்சலுடன் அவர்களை நோக்கிப் பாய்ந்தவன்,

அவர்களை விலக்கிப் பாதையைச் சரிப்படுத்துவதற்குள்ளாக இரண்டு ஷெல்கள் வந்து விழுந்தன. எப்படியோ வெளியேறி அம்மேதினியைத் தேடிய கந்தழிதரனுக்குப் பவானியும் ரோகிணியும் சுத்தமாக மறந்து போயிற்று. நெஞ்சம் துடிக்க உயிரைக் கையில் பிடித்தவாறு அவள் சென்ற திசை நோக்கி ஓட முயன்றபோது, ரோகிணி கந்தழிதரனின் கரத்தைப் பற்றி,

“அத்தான் வாருங்கள்… போகலாம்… ஷெல் பக்கத்தில்தான் விழுகிறது…” என்று அச்சத்தில் அவனை இழுக்க முயல, இவனோ,

“சற்றுப் பொறு… அம்மேதினி எங்கே… அவளையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும்…” என்று கந்தழிதரன் சொல்ல, கடும் ஆத்திரத்துடன் அவனைப் பார்த்து முறைத்த ரோகிணி,

“என்ன அவளையும் அழைத்துக்கொண்டு போவதா? அவளுக்காகக் காத்திருந்தால், நாம் சாகவேண்டியதுதான். அவள் தப்பிப் பிழைத்தால் திரும்பி வருவாள்… முதலில் வாருங்கள்…” என்று வெடுக்கென்று சொன்ன ரோகிணி அவனுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல முயல, வேகமாத் தன் கரத்தை உதறி விடுவித்தவன், அவளுடைய பதிலையும் எதிர்பார்க்காது, அம்மேதினியைத் தேடத் தொடங்க, ரோகிணியோ எக்கேடும் கெட்டுத் தொலை என்பது போல, முன்னால் சென்ற தாய் தந்தையிடம் ஓடிப்போய்ச் சேர்ந்தாள். இவனோ அம்மேதினியைத் தேடி வெளியே பாய்ந்தான்.

What’s your Reaction?
+1
18
+1
2
+1
0
+1
0
+1
8
+1
0
Vijayamalar

Recent Posts

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-24

(24) இப்போது பாடல் நின்றது. ஆனாலும் அவளை விட்டுவிடும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. அவளுக்கும்தான். சொர்க்கம் நரகம் என்பது அவர்…

10 hours ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 33/34

(33)   வீட்டிற்கு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பதட்டத்துடன் வந்த தாயைக் கண்டு, ஓடிவந்து கட்டிக்கொண்ட மகன், “என்னம்மா… சீக்கிரமாக…

1 day ago

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-23

(23) எத்தனை ஆர்வம், எத்தனை குதுகலம், எத்தனை பரவசம்... அத்தனையும் மொத்தமாய் உள்ளத்தைப் பொங்கச் செய்ய, அது முகத்தில் தெரிய, மெதுவாகப் பெட்டியைத் திறந்தவளின் முகம்…

2 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி.…

3 days ago

தொலைதூரத்து வெளிச்சம் நீ 1-22

(22) விட்டலூட் திருவிழா என்பது, கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் நடைபெறும் மிகப் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும். இந்த விழாவினைக் கண்டு கழிப்பதற்கென்றே உலகநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள்…

4 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 30/31

(30)   நீண்ட நடையின் பின் மானிப்பாயை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது அந்த ஊர் மக்களும் வீட்டைவிட்டுப் புறப்படத்…

6 days ago