Categories: Ongoing Novel

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 15

(15)

 

மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக் கணம் உலகமே எதிரியானது போன்ற அவலத்துடன் வண்டியை விட்டு இறங்கினாள்.

அதை நிறுத்தக் கூடப் புத்தி செயற்படாதவளாக அப்படியே விட்டுவிட்டு, வேகமாக நடக்கத் தொடங்கியவளின் கால்கள் தன்பாட்டிற்கு நடந்து சென்றது பிள்ளையார் கோவிலின் கேணியருகே வந்து நின்றது.

கேணியின் உள் புறமாகக் கால்களைப் போட்டு தனக்கு இரு பக்கமும் கரங்களைத் தரையில் அழுத்தி அமர்ந்தவளுக்கு ஓவென்று வந்தது. கண்களில் நீர் முட்ட முட்டக் கேணியில் நிறைந்திருந்த தண்ணீரைப் பார்த்தாள்.

நாட்டில் ஏற்பட்ட சீர்கேட்டால் கேணி சுத்தப்படுத்துவதே இல்லையென்றாகி விட்ட நிலையில், தண்ணீர் கலங்கலாகப் பாசி படிந்து அழுக்காகியிருந்தது அவளுடைய மனதைப் போல.

எத்தனை பெரிய ஏமாற்றம். அந்த ரோகிணி மோதிரம் போட்டபோது கூட அவன் மறுக்கவில்லையே. மகிழ்ச்சியாகத்தானே பெற்றுக் கொண்டான். நினைக்க நினைக்க அவளுக்குத் தாளவில்லை.

‘அப்படியானால் தரன் எனக்கில்லையா… அவன் என்னவனில்லையா… இத்தனை நாளும் இவளைக் குழந்தையாகப் பாதுகாத்துப் போற்றிய கந்தழிதரன் அவளுக்குக் கிடையவே கிடையாதா?’ நினைக்கும்போதே நெஞ்சம் வெடித்துப் போனது. அந்த ரோகிணி மோதிரம் போடும்போது, அவன் மறுக்காது இருந்ததை நினைக்கும்போது இவளால் தாஙகவே முடியவில்லை.

அவனுக்கு ரோகிணியின் செயல் பிடிக்காது இருந்திருந்தால்,  அந்த மோதிரத்தைக் கழற்றி அவர்களின் முகத்தில் விட்டெறிந்திருப்பான். இல்லையென்றால் அதைக் கழற்றி மரியாதை யாகவே அவர்களிடம் கொடுத்து,

“மன்னித்துவிடுங்கள்…! இதில் எனக்கு விருப்பமில்லை…” என்று நாகரீகமாகக் கூறி மறுத்திருப்பான் அதுவுமில்லை என்றால், ‘அம்மா அப்பாவோடு பேசுங்கள்… என்னிடம் வேண்டாமே…’ என்றாவது சொல்லியிருக்கலாம். ஆனால் எதையும் சொல்லாமல் இடித்த புளி போல அல்லவா அமைதியாக இருந்தான்.

ஒரு பொருள் அருகே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. அது தொலையும் நிலையில்தான் அதனுடைய அருமை பூதாகரமாகத் தாக்கும். அம்மேதினியும் இப்போது அந்த நிலையில்தான் இருந்தாள்.

‘அந்தக் கணம்தான் அவளுக்குக் கந்தழிதரன் மீது இருக்கும் பற்றுச் சாதாரணப் பற்று அல்ல என்பதே புரிந்தது. கடவுளே…! அவள் விரும்புகிறாள்…! கந்தழிதரனை உயிருக்கும் மேலாக விரும்புகிறாள்! அவனில்லாத வாழ்வில் ஒன்றுமேயில்லை என்று என்னும் அளவுக்கு விரும்புகிறாள்…! எது இல்லை இருக்காது வாய்ப்பே இல்லை என்று அவள் பிடிவாதமாக நினைத்திருந்தாளோ, அவை பொய்யாகி  நிதர்சனம் உரைக்க உறைந்துபோனாள் அவள்.

தாள முடியாது தன்னை மறந்து விம்மத் தொடங்க அங்கே, அம்மேதினி புறப்பட்டதும் கந்தழிதரன், முகத்தில் சிறு யோசனையுடன் சற்று நேரம் அமர்ந்திருந்தான். அவள் சென்ற பின், ஏனோ அவனால் அவர்களோடு ஒன்றிப் பேச முடியவில்லை. புறப்பட்டாளே, வீட்டிற்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருப்பாளா? தொலைபேசி வசதி இருந்தாலாவது, அவள் போய்ச் சேர்ந்தாளா இல்லையா என்பதை அறிய முடியும். இல்லை இந்த நாடு பிரச்சனையற்ற நாடாக இருந்தாலாவது, அம்மேதினி போய்ச் சேர்ந்திருப்பாள் என்கிற நிம்மதியாவது இருக்கும். இது எதுவும் இல்லாமல் மனம் அடித்துக் கொண்டது.

அம்மேதினியின் நினைவு கந்தழிதரனுக்கு அணிவித்த மோதிரத்தைக் கூட மறக்கடித்து விட்டிருந்தது. அதன் பின் அவர்கள் கூறிய எதுவுமே அவனுடைய புத்திக்குள் ஏறவில்லை. எல்லாவற்றிற்கும், புரிந்தவன் போலத் தலையாட்டிக் கொண்டிருந்தாலும், அவன் யோசனைகள் முழுவதும், அம்மேதினியைச் சுற்றிக் கொண்டே இருந்தன.

அந்த நேரத்திலும் அவனுக்கு அம்மேதினி மீது கோபம் கோபமாக வந்தது. அப்படி என்ன கண்டறியாத அவசரம் வீட்டிற்குச் செல்வதற்கு… எரிச்சலுடன் எண்ணிக் கொண்டவனுக்கு ஒரு கட்டத்திற்குமேல் அவர்களின் அலட்டல்களைக் கேட்க முடியவில்லை. அவசரமாகச் சாப்பிட்டு முடித்து எழுந்தவன், உதட்டிலே புன்னகையைத் தவழவிட்டவாறு,

“சரி பெரியத்தை…! மூன்று மணிக்கு ஒருவர் என்னைப் பார்க்க வருவார்… அதனால் நான் இப்போது வீட்டிற்குக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும்… இன்னொரு நாள் சாவகாசமாக வந்து உங்களுடன் உரையாடுகிறேன்… இப்போது கிளம்புகிறேன்…” என்று கூறிவிட்டுத் தன் மிதிவண்டியை எடுக்கப் போக, அவனை மறித்த பவானி,

“என்ன தம்பி…! திடீர் என்று…? சற்றுப் பொறுங்கள்… மாமா மோட்டார் வண்டியில் உங்களை அழைத்துச்சென்று விட்டுவிட்டு வருவார்… உங்கள் வண்டியை பிறகு எடுத்துக் கொள்ளலாமே” என்றதும் கந்தழிதரன் நடேசனைப் பார்த்தான்.

அவர் வீட்டில் அணியும் ஆடையோடு இருக்க, இவர் எப்போது உடை மாற்றி, எப்போது என்னைக் கொண்டுபோய் விடுவது. அதை விட நானே தனியாகப் போவது மேல்…’ என்று தோன்ற, பவானியைப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்து,

“என்ன அத்தை… இங்கே நான் புதிதா என்ன? பல முறை சுற்றித்திரிந்த இடங்கள்தானே… நானே போய்க்கொள்கிறேன்” என்றவாறு நடக்கத் தொடங்க, உடனே அவசரமாகத் திரும்பித் தன் மகளைப் பார்த்த பவானி,

“அம்மா ரோகிணி…! தம்பிக்கு நீ ஏதோ பலகாரம் செய்து வைத்திருந்தாயே… எடுத்துக்கொண்டு ஓடிவா…” என்று உத்தரவிட ரோகிணி மின்னலென வீட்டிற்குள் மறைந்தாள்.

கந்தழிதரனோ பொறுமையிழந்த பெருமூச்சுடன் ஏதோ சொல்ல வர, உள்ளே வேகமாகச் சென்ற ரோகிணி பலகாரம் அடங்கிய பையுடன் வெளியே வந்து அதனைக் கந்தழிதரனின் கரத்தில் கொடுத்தாள். அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டவன், இன்னும் நின்றால் வேறு எதையாவது சாக்கிட்டு நிறுத்திவிடுவார்களோ என்று அஞ்சியது போலத் தன் வண்டியில் பாய்ந்து ஏறி வேகமாக மிதிக்கத் தொடங்க, அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை வந்தடைந்தான் கந்தழிதரன்.

வீட்டிற்குள் நுழையும் போதே, அம்மேதினியின் மிதிவண்டி இல்லாமல் இவன் புருவங்கள் சுருங்கின. வண்டியைத் தரித்துவிட்டுப் இரண்டெட்டில் பாய்ந்து படியைக் கடந்தவன் யசோதாவைத் தேடிச் சென்றான்.

அவர் பின்புறமாகக் கிணற்றடியில் தண்ணீர் பட்டு ஊறியிருந்த காய்ந்த தென்னம் ஓலைகளை, வேலிக்காக வேண்டி குந்தி அமர்ந்தவாறு பின்னிக்கொண்டிருந்தார். யசோதாவை நெருங்கி

“அத்தை… அம்மணி எங்கே…?” என்றான் மெல்லிய பதட்டத்துடன். அதைக் கேட்டதும், பின்னிய கரங்கள் அப்படியே இருக்கச் செயல் இழந்தவர் போலப் பதட்டத்துடன் நிமிர்ந்து,

“அம்மணி எங்கேயா…! அவள் உன்னுடன்தானே வந்தாள். எங்கே போனாள்? எங்காவது போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாளா என்ன…?” என்று கேட்டுக் கந்தழிதரன் அடிவயிற்றில் புளியைக் கரைத்தார். அவனோ ஒரு வித நடுக்கத்துடன் நெற்றியை வருடிக் கொடுத்து,

“அது வந்து… அவள் அங்கே வந்ததும், கொஞ்ச நேரத்தில் இருக்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டாள்…. தனியாகக் கிளம்பியதும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வந்து சேர்ந்துவிட்டாளா இல்லையா என்று பதட்டமாக இருந்தது, நானும் அங்கிருக்க முடியாமல் புறப்பட்டு விட்டேன்… இப்போது நீங்கள் சொல்வதைப் பார்த்தால்…” என்று சிறு கலக்கமாகச் சொல்ல, அந்தக் கலக்கம் யசோதையும் பற்றிக்கொண்டது.

கலக்கத்துடன் எழுந்தவர், சற்றுத் தள்ளியிருந்த வாளியில் நிறைந்திருந்த தண்ணீரில் கரங்களைக் கழுவிட்டிட்டு, ஈரக் காரத்தைப் புடவையில் தேய்த்தவாறு,

“கடவுளே… இந்தப் பெண் எங்கே போனாள்…? இன்னும் இங்கே வரவே இல்லையே தம்பி…! அதுவும் இந்தச் சிக்கலான காலத்தில்… என்ன நடந்தது என்றுகூடத் தெரியவில்லையே… ஒருவேளை விடுதலைப் போராளிகள் அவளை அழைத்துச் சென்றிருப்பார்களோ?  அப்படி போராளிகள் அழைத்துச் சென்றிருந்தால்…? கடவுளே… நான் என்ன செய்வேன்…! எங்கே நிற்கிறாள் என்று கூடத் தெரியவில்லையே…?” என்று அன்னையாய் பதறித் துடிக்க, இவனுக்கும் நெஞ்சம் பதறியது.

‘எண்ணற்ற விடுதலைப் போராளிகள் மரணித்த நேரம் என்பதால், போராட்டத்திற்கு வீரர்கள் தேவைப்பட்ட காலம் அக்காலம். அந்த நேரத்தில், போராட்டத்திற்கு வேண்டி போராளிகள் இளைஞர் இளைஞிகளை அழைத்துச் சென்று போராட்டத்தில் இணைத்து விடுவார்கள். தமிழ் தேசம் காக்கவேண்டி, தாய் தந்தையருக்குத் தெரியாமல் போராட்டத்தில் இணைந்த இளங்குருத்துகளும் உண்டு.  இந்நிலையில் ஈழத் தமிழ்ப் ‍பெற்றோர்கள், வெளியே சென்ற பிள்ளைகள், இராணுவம் போடும் குண்டுகளில் உயிர் சிதைந்து, வீடு காணாமல் போவார்களா, இல்லை தேசம் காக்க போராட்டத்தில் இணைந்து, வீடு வராது போவார்களா என்று வயிற்றில் அமிலம் கரைய உயிரைக் கையில் பிடித்தவாறு காத்திருந்த காலம் அது.

அப்படி இருக்கையில் அவளைக் காணவில்லை என்றால், யசோதாவும் என்னதான் நினைப்பார். அவர் என்ன ஐந்தாறா பெற்றிருக்கிறார்? ஒன்று போனால் மற்றொன்று என்று  மனத்தைத் தேற்ற. இருந்த ஆண்மகனையும் இராணுவம் காவுகொண்டு விட்டது. இப்போது இருப்பது, ஒரே ஒரு மகள். அவளுக்கு ஒன்று என்றால், உயிரையும் விட்டுவிடுவாரே.

இந்த மனதுதான் எத்தனை விசித்திரமானது? வேளை  கெட்ட நேரத்தில் ஒரு போதும் சாதகமாக எண்ணாது பாதகமாக அல்லவா எண்ணித் தொலைக்கிறது. தன் மகளுக்கு என்னாகிவிட்டதோ என்கிற அச்சத்தில் நடுங்கத் தொடங்க அதைக் கண்ட கந்தழிதரன்,

“பயப்படாதீர்கள் அத்தை… அவளுக்கு ஒன்றுமாகியிருக்காது… ஒரு வேளை தன் தோழிகள் வீட்டிற்குப் போயிருப்பாள்…” என்று தேற்ற முயல, மறுப்பாகத்  தலையை அசைத்த யசோதா,

“தெரியவில்லையே தம்பி. அப்படிப் போவதாக இருந்தாலும், சொல்லாமல் போகமாட்டாளே…” என்று கூற, கந்தழிதரனின் அடிவயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில் பெரிய பாறாங்கல்லே உருண்டு ஓடத் தொடங்கியது.

“கடவுளே… இந்தப் பெண் எங்கே போய்த் தொலைந்தாள் என்று தெரிய வில்லையே…” என்று தவித்தவன், தன் மிதிவண்டியை நோக்கி ஓடி அதில் ஏறி அமர்ந்து மிதிக்கத் தொடங்கியபோது  எத்திசை சென்று தேடுவது என்று ‍தெரியாது விழித்தான். அவள் தோழிகள் யார் என்று கூடத் தெரியாத நிலையில் எங்கேயென்று  போவது.

வேறு வழியில்லாமல் பவானியின் வீட்டுப் பக்கமாக வண்டியை மிதிக்கத் தொடங்கினான். இருபது நிமிட ஓட்டத்தில் தொலைவில் யாரோ மிதிவண்டியை உருட்டிக்கொண்டு வருவது தெரிய, இவன் தன் வேகத்தைக் கட்டுப்படுத்தியவாறு உற்றுப் பார்த்தான். அவன் நினைத்தது போல அம்மேதினிதான்.

அதுவரையிருந்த இறுக்கமும் பதட்டமும் மெதுவாய் மறைந்து போக, இப்போது அங்கே பெரும் ஆத்திரம் எழுந்தது.

‘காணாமல் வீட்டில் தேடுவார்கள் என்கிற அக்கறை கொஞ்சமாவது இருக்கிறதா பார்…’ என்கிற கோபத்தோடு, அவளுக்கு முன்பாக வந்தவன், வண்டியின் தடையைப் போட்டு நிறுத்திவிட்டு, ஒற்றைகாலைத் தரையில் ஊன்றியவாறு அவளைப் பார்த்து முறைத்தான்.

முகம் களையிழந்திருந்தது. போதாததற்கு அழுததற்கு அறிகுறியாக விழிகள் சிவந்து மூக்கு விடைத்து முகம் அதைத்து என்று பார்க்கவே பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆத்திரம் வந்தது. இருபது நிமிடங்களாக எப்படியெல்லாம் எண்ணிப் பதறிவிட்டான். எண்ணாத எண்ணங்களெல்லாம் எண்ணினானே. தன்னை அடக்கும் சக்தி அற்றவனாக,

“முட்டாள்… எங்கே போய்விட்டு வருகிறாய்… உன்னைக் காணவில்லை என்று நானும் அத்தையும் எவ்வளவு பதறிப் போனோம்… கொஞ்சமாவது அறிவிருக்கிறதா உனக்கு?” என்று அவள் மீது பாய, அவளோ அவன் கத்தியது உறுத்தாதவளாக அவனுடைய கரத்தில் மின்னிக்கொண்டிருந்த அந்த வைர மோதிரத்தைத்தான் வெறித்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் புசுபுசு என்று அழுகை வந்தது. மூக்கு விடைத்தது. விழிகளில் கண்ணீர் மெதுவாகத் தேங்க, ஆத்திரத்துடன் நிமிர்ந்து தன் முன்னால் கோபத்துடன் நின்றிருந்தவனைப் பார்த்துவிட்டு, ‘நீ யார் என்னிடம் கேள்விகள் கேட்க, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன்னோடு என்ன பேச்சு’ என்பது போல நடக்கத் தொடங்க, பொறுமை இழந்த மூச்சுடன் நின்ற வாக்கிலேயே தன் துவிச்சக்கர வண்டியைத் தூக்கிச் சுழற்றித் திருப்பியவன், அவளுடைய கரியரை வலக்கரத்தால் அழுந்தப் பற்றினான். வண்டியை இழுத்துப் பார்த்தவள், அது வராது அடம்பிடிக்கத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் தன் கரியரைப் பற்றிக் கொண்டிருந்தான். கோபம் அவனுக்கு மட்டுமா ஏகபோக உரிமை? அதற்கு மேல் வண்டியை உருட்ட முடியாது உள்ளே கனன்று கொண்டிருந்த கோபத்தை மறைக்க முயன்று தோற்றவளாக எதுவும் பேசாது சிலையென அப்படியே நின்றாள்.

காலை ஒரு உந்து உந்தி, அவள் பக்கமாக வந்து நின்றவன், கரியரிலிருந்து கரத்தை எடுத்து, அவளுடைய வண்டியின் கைப்பிடியை அழுந்த பற்றி,

“இப்போது உனக்கு என்ன பிரச்சனை அம்மணி…” என்றவன் அப்போதுதான் கவனித்தான், அவளுடைய வண்டியில் காற்றுப் போயிருப்பதை. அதனால்தான் நடந்து வந்தாளா? கோபம் சற்று மட்டுப்படத் தன் வண்டியின் கைப்பிடியில் பற்றியிருந்த கரத்தை விலக்கி,

“சரி… வண்டியில் ஏறு வீட்டிற்குப் போகலாம்…” என்றான் நிதானமாக.

இவனுடைய வண்டியில் ஏறிப் போவதா? அதை விட, இராணுவத்தின் புல்டோஸரில் ஏறிப் போவாள்.

அவனை லட்சியம் செய்யாது தன் வண்டியைத் தள்ள முயல, அந்தோ பரிதாபம். அவனுடைய அழுத்தமான பிடியிலிருந்து அவளால் அசைய முடிந்தால் அல்லவோ…?

இப்போது கோபத்துடன் நிமிர்ந்து கந்தழிதரனை முறைத்துப்  பார்க்க,

“வருகிற கோபத்திற்கு ஓங்கி அறைந்தேன் என்றால் முப்பத்திரண்டும் கொட்டிவிடும்…  யாரைப் பார்த்து முறைக்கிறாய்? ஒருத்தனுக்குச் சொந்த புத்தி இருக்கவேண்டும். இல்லையென்றால் சொற்புத்தியாவது இருக்க வேண்டும். எதுவும் இல்லையென்றால் என்ன செய்வது? இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும். போதாததற்கு ஊரடங்கு வேறு. இப்படியே நடந்து எவ்வளவு தூரம் போகப் போகிறாய்… விடுதலைப் போராளிகள் கண்டால் என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியுமா தெரியாதா? மரியாதையாக வந்து வண்டியில் ஏறு…” என்று அவன் அதட்ட, அவளோ, ஆழ மூச்செடுத்து,

“எதற்கு… எதற்கு நான் ஏறவேண்டும்… அது எனக்கான இடமில்லை. உங்களுக்குத்தான் ரோகிணி இருக்கிறாளே… அவளை ஏற்றிச் செல்லுங்கள்… நான் வரவில்லை…” என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு முகத்தைத் திருப்ப, இவனோ,

“இப்போது எதற்கு அவளை இழுக்கிறாய்? அவளா இப்போது வண்டியில் காற்றுப்போய், தெருவில் அதுவும் இந்த நேரத்தில் அல்லல் படுகிறாள்?” என்று எரிச்சலுடன் கேட்டவன், “மரியாதையாக வந்து ஏறு…” என்றான் அடக்கிய ஆத்திரத்தில். அப்போதும் அவள் கேட்பேனா பார் என்பது போலத் தொலைவையே வெறிக்கத் தொடங்கினாள்.

“காட்…” என்று தன் தலையைப் பின்னால் சரித்து, ஒரு கணம் ஆழ மூச்செடுத்தவன். மறு கணம், வண்டியை விட்டு இறங்கி ஸ்டான்ட் போட்டுவிட்டு, அவளை நெருங்கி வண்டியின் கைப்பிடியில் பற்றியிருந்த அவளுடைய கரத்தைப் பலவந்தமாக விலக்கி, வண்டியின் இடப்பக்கமாக இழுத்து வந்தவன், எங்கே கரத்தை விட்டால் ஓடிவிடுவாளோ என்று அஞ்சியவன் போல, அவளுடைய இடது கரத்தை விடாமலே, வலது காலைப் பின்புறமாகச் சுழற்றிப் பெடலில் வைத்துத் தன் வண்டியின் இருக்கையில் அமர்ந்து, கரத்தைப் பற்றி இழுத்து, முன்புறம் அமரும் கம்பியைக் காட்டி, “உட்கார்” என்றான் கறார் குரலில். அவளோ

“உங்கள் வண்டியில் நான் வரமாட்டேன்… விடுங்கள் என்னை…” என்றவாறு பிடிவாதமாகப் பற்றியிருந்த கரத்தை விடுவிக்க முயல, விடுவானா அவன்?

“என்ன முட்டாள்தனமான பிடிவாதம் இது…? பொறுத்துப் பொறுத்துப் போனால் அதிகமாகத்தான் ஆடுகிறாய். பாவம் சின்னப்பிள்ளை என்று பார்த்தால் உன் பிடிவாதம் அதிகரித்துக்கொண்டு போகிறது…” என்று கடிந்தவன் மேலும் அவளை இழுத்து அமரும் கம்பியினருகே விட்டு, வண்டியின் கைப்பிடியில் கரங்களைப் பதித்து, அவளை அசையவிடாது செய்து,

“உட்கார் அம்மணி…” என்றான்.

அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை. அவன் கைப்பிடியில் கரத்தைப் பதிந்திருந்ததால் அவனுடைய நடுக்கை அவளுடைய வயிற்றுப்புறத்தைப் பலமாகவே அழுத்தி, அவளுக்குப் பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. வேறு வழியில்லாமல் எக்கிக் கம்பியில் அமர, தரையில் விழுந்திருந்த, அவளுடைய மிதிவண்டிக்குள், கந்தழிதரன்  தன்னுடைய வலதுகாலைச்  செருகி ஒரு எத்து எத்த, அவளுடைய வண்டி மேலே நிமிர்ந்தது. அதன் கைப்பிடியைப் பற்றியவாறு தனது வண்டியை மிதிக்கத் தொடங்க, வண்டி அவர்களுடைய வீட்டை நோக்கிப் புறப்படத் தொடங்கியது.

அந்தக் கோபத்திலும் ஆத்திரத்திலும் அவனுடைய தேகத்தின் வருடலில் சிலிர்த்துத்தான் போனாள் அம்மேதினி. அவளுடைய தலை அவனுடைய கீழ் மார்பில் அடிக்கடி பட்டுப் பட்டு விலக, அவளுடைய முதுகு அவனுடைய முன் தேகத்தில் தாராளமாகவே பட்டுக்கொண்டிருக்க, மேல் கரங்களோ அவனுடைய கரங்களை உரசிக்கொண்டிருக்க அவளை ஏற்றியவாறு வண்டியை மிதித்த காரணத்தால் ஏற்பட்ட சற்றுச் சீறலான மூச்சு இவள் தலையில் பட்டுத் தெறிக்க, அவளுடைய அத்தனை கோபமும் மெல்ல மெல்லக் கரைந்து போகத் தோடங்க, அதுவரை மங்கிப்போன காதல் மெல்ல மெல்லத் தளிர்விடத் தோடங்கியது அம்மேதினிக்கு.

கிறங்கிப்போனவளாய் அவளுடைய பார்வை அவன் ஆளுமை மிக்கக் கரங்களில் பதிந்தன. நரம்போடிய கரங்கள். அதில் வியர்வைத் துளிகள் வேறு. ஏனோ தன் விரல் கொண்டு புடைத்தெழுந்த நரம்பின் வரிவடிவத்தைத் தொட்டு நுகர்ந்து திளைக்கவேண்டும் என்கிற ஒரு ஆவேசம் பிறக்க, தன்னையும் மீறித் தன் வலது உள்ளங்கையைத் தூக்கி அவனுடைய வலது கரத்தின் மீது பதித்து அந்த ஆண்மகனின் ஆண்மையை உணர முயல, அந்தோ பரிதாபம், அவளுடைய பொன் விரல் கச்சிதமாகத் தொட்டு நின்றது அவனுடைய மோதிரவிரலை.

அதுவரை ஒரு வித மாயையில் திளைத்திருந்தவள், சுயத்திற்கு வந்தவள் போலச் சடார் என்று கரத்தை இழுத்துக்கொள்ளக் கண்ணீர் மீண்டும் விழிகளில் முட்டிக் கொண்டது.

‘இன்னும் கழற்றாமல் வைத்திருக்கிறானே…! அப்படியானால் இவன் எனக்கில்லையா… அவளுக்குத்தானா?’ என்று எண்ணியவளால் தாள முடியவில்லை. அதற்கு மேலும் அவனோடு பயணிக்க முடியாமல்,

“நான்… நான்… இறங்கி நடந்து வருகிறேன்…” என்று அவள் திக்கித் திணறும்போதே வண்டி நின்றது. தன் கரத்தை விலக்கி,

“இறங்கு…” என்று அவன் கூற, அண்ணாந்து அவனைப் பார்த்தாள். அவனுடைய முகத்தல் கோபத்திற்குப் பதில் சற்றுக் கடினம் இருக்க, குதித்துக் கீழே இறங்கியவள் அப்போதுதான் கவனித்தாள், அவள் வீட்டிற்கு முன்னால் இறங்கியிருப்பதை. ‘அத்தனை சீக்கிரமாகவா வந்து சேர்ந்தார்கள். அல்லது அவனுடைய அருகாமை நேரத்தை மறக்கடித்ததா? தெரியவில்லை.’

சோர்வுடன் வீடு நோக்கிப் போக முயல,

“ஒரு நிமிடம்…” என்று அவளை அழைக்க, அவளோ திரும்பாது வீட்டைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஆத்தா… உன்னுடைய வண்டியைப் பிடி…” என்று அவன் கூற, அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவன் கரத்திலிருந்து வண்டியை வாங்கி உள்ளே உருட்டிக்கொண்டு போக, தன் மகள் வருவதைக் கண்டு அதுவரை தவிப்புடன் இருந்த யசோதா பாய்ந்து ஓடி வந்தார்.

“என்னம்மா… எங்கே போனாய்? இப்படிப் பயப்படுத்திவிட்டாயே. தனக்கு முன்பே கிளம்பிவிட்டாய் என்று தம்பி சொன்ன போது நான் எப்படிப் பயந்தேன். தெரியுமா…?” என்று கோபத்துடன் சீற, அவளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கந்தழிதரனோ, தனது வண்டியின் நிறுத்தியை இழுத்துத் தரித்துவிட்டு, எரிகிற நெருப்புக்கு எண்ணெய் விடுபவன் போல,

“நன்றாகக் கேளுங்கள் அத்தை.! தனிப்பிள்ளை என்று இவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டீர்கள். அதனால்தான் தான்தோன்றி போல நடந்துகொள்கிறாள்… பெண் பிள்ளையென்றால் கொஞ்சமாவது பொறுப்பு வேண்டும்… அப்படி என்ன அவசரம் விரைவாக வீடு வருவதற்கு… நின்று என்னோடு வந்தால் என்ன குறைந்து விடும்…” என்றவன் திரும்பி இப்போதும் மரமென நின்றிருந்த அம்மேதினியைப் பார்த்து,

“இத்தனை பேசுகிறேன் அசைகிறாளா பாருங்கள்… பவானி அத்தையைப் பற்றி நீ அறியாததா…? இது என்ன உனக்குப் புதுசா…? அவர்கள் பேசுவதைப் பேசிவிட்டுச் செல்லட்டும்… அதை ஒரு காதில் கேட்டு மறு காதால் விடுவதற்கு என்ன? முட்டாள் பொண்ணே…! வரும் வழியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால்? அதற்குப் பிறகு குய்யோ முறையோ என்று அலறுவதில் என்ன பயன்?” என்று தன் பங்குக்கு அவன் கடிய, ஏற்கெனவே படு ஆத்திரத்திலிருந்தவளுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை. விழிகளில் நிறைந்த கண்ணீருடன் அவனை முறைத்தவாறு தாறுமாறாகத் திட்ட வாயெடுக்க, பெற்றவருக்குத் தெரியாதா தன் மகளைப்பற்றி, அவள் வாயைத் திறப்பதற்கு முதலே,

“ஏன் அவனைப் பார்த்து முறைக்கிறாய்? தம்பி சொன்னதில்தான் என்ன தப்பு? இப்போது வர வர உன் போக்கே சரியில்லை. எதற்கெடுத்தாலும் கோபப் படுவதும், எரிச்சல் படுவதும் என்று நிறையவே மாறிவிட்டாய்…! இத்தனை நேரம் எங்கே போனாய் என்று கேட்டால், பதிலைச் சொல்வதை விட்டுவிட்டு முறைக்கிறாயே…!” என்று யசோதை தன் பங்குக்குத் திட்ட, அம்மேதினி உதடுகளைப் பற்களால் கடித்தவாறு சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

‘எப்படிச் சொல்வாள்? இவன் இனி எனக்கில்லை என்கிற வேதனையில் மருதடிப் பிள்ளையார் கோவிலில் அமர்ந்து அழுதுவிட்டு வந்தேன் என்று எப்படிச் சொல்வாள்?’ ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவள், நிமிர்ந்து அன்னையைப் பார்த்து,

“மன்னித்துவிடுங்கள் அம்மா… வரும்போது ஒரு தோழியைச் சந்தித்தேன். அவளிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வரும்போது வண்டியில் காற்றுப் போய்விட்டது. பணம் வேறு எடுத்துச் செல்லவில்லை. அதனால் வண்டியை அங்கிருந்து உருட்டிக்கொண்டு வருகிறேன்…” என்று குரல் கம்மக் கூற, யசோதா உடனே மலையிறங்கினார்.

“அடடே… என்னம்மா நீ…! வெளியே போகும்போது பணம் எடுத்துப் போகவேண்டும் என்று உனக்குத் தோன்றாதா? இன்னும் குழந்தைப்பிள்ளை போலவே இருக்கிறாயே…! சரி சரி…! அழாதே…! கண்களைத் துடை… இனியும் வெளியே நிற்கவேண்டாம். உள்ளே வாருங்கள்…” என்றவாறு யசோ நிம்மதியுடன் செல்ல, அம்மேதினியும் வண்டியை உருட்டியவாறு மறுபக்கம் போக எத்தனித்தாள். அந்த நேரம் கந்தழிதரனுடைய ஒரு கரம் அம்மேதினியின் கரத்தை இறுகப் பற்றியது.

“உண்மையைச் சொல் அம்மணி… எங்கே போய்விட்டு வருகிறாய்?” என்று கேட்டான் சற்று அழுத்தமாக. இவளோ படு ஆத்திரத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அவனோ அவளுடைய விழிகளுடன் தன் விழிகளைக் கலந்து,

“உன் அம்மா நம்பியதுபோல என்னையும் நம்பச் சொல்கிறாயா…?” என்றான் தன் ஆழ்ந்த குரலில். வேகமாகத் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து விலக்க முயன்றவள் முடியாமல் தடுமாறியவாறு,

“இதென்னடா வம்பாகப் போய்விட்டது… உங்களுக்கு ஒரு ரோகிணி கிடைத்தது போல எனக்கொரு ரோஹித் கிடைக்காமலா இருந்திருப்பான். அவனோடு கடலை போட்டுக் காதல் வசனங்கள் பேசி… போதைக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல அப்பப்போ, முத்தமிட்டு… அப்பப்பா…! நேரம் போனதே தெரியவில்லை தெரியுமா!” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டுச் செல்ல முயன்றவளின் கரத்தை கந்தழிதரனுடைய கரம் இன்னும் இறுகப் பற்றியது. அவன் கரம் கொடுத்த வலியில் பல்லைக் கடித்த அம்மேதினி

“மரியாதையாகக் கையை எடுங்கள். இல்லாவிட்டால் மரியாதை கெட்டுவிடும்…” என்றாள் கடும் சினத்துடன்.

அவள் சொல்லிச் செய்துவிட்டால் அவன் கந்தழிதரன் அல்லவே. அவனோ அவளைத் தன்னருகே இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மேனியோடு முட்டி நிற்க, அவள் பற்றியிருந்த வண்டியோ மறு பக்கமாகக் கீழே விழுந்தது.

மீண்டும் நெருக்கத்தில் அவன். இவளுடைய இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. விழிகளோ அந்தக் கம்பீர முகத்தில் அழுத்தமாகப் பதிந்து கொண்டன. மனமோ இவன் உனக்குரியவன் அல்ல அல்ல என்று பல முறை கூறி அவளை விழிப்படையச் செய்ய முயன்றன. ‘ம்கூம்.. பாழாய்ப் போன மனம், இவன் எனக்கில்லையா எனக்கில்லையா என்று மீண்டும் மீண்டும் அவளைக் கேட்டு இம்சித்தது.’

ஆனால் கந்தழிதரனோ தன் சுட்டுவிரலால் அவளுடைய நாடியைப் பற்றி மேலே தூக்க, அவளுடைய இரு பெரிய விழிகளும் கந்தழிதரனின் முகத்தைச் சந்தித்தன. ‘அந்த விழிகளுக்கூடாகத் தன் விழிகளைச் செலுத்தி மாறி மாறி எதையோ தேடினான். அவன் தேடியது கிடைக்கவில்லையோ?’

“எங்கே போனாள் என் பேபி கேர்ள்…? என்னைக் கண்டால் பொங்கிச் சிரிக்கும் அந்தப் பத்து வயது இளம் சிட்டை எங்கே தொலைத்தேன்…? இங்கே இருப்பது என்னுடைய அம்மணி அல்ல…! இது வேறு…! நான் தேடிவந்த அம்மணி இவள் அல்ல…!” என்று மென்மையாகக் கூறியவன், இப்போது அவள் முகம் நோக்கிக் குனிந்து,

“உனக்கு என்னடி ஆச்சு…? எதற்காக இப்படித் தலைகீழாக மாறி நிற்கிறாய்…? என் மீது உனக்கு அப்படி என்ன கோபம் ஆத்திரம்…? போராட்டத்திற்குப் போனது குற்றமா? அது தேசப் பற்றுடி…! நம்முடைய நாட்டிற்காக ஒரு துளி இரத்தம் சிந்தத் தவம் இருந்திருக்கவேண்டும்… அதற்காகப் போனேன்… அது பெரிய தவறா?” என்று அவன் மென்மையாகக் கேட்க, இப்போது நிமிர்ந்து அவனை உற்றுப் பார்த்தாள் அம்மேதினி.

பதில் சொல்ல முடியாது தவித்தவளுக்கு, அவனே எடுத்துக் கொடுத்து விட்டான். அதைப் பற்றியவளாக,

“தவறுதான்…! உங்கள் போராட்டம், பிறரை வருத்தக் கூடாது… உங்கள் அம்மா அப்பா, நாங்கள் எல்லோரும் உங்களுக்குச் சம்மதம் கொடுத்து நீங்கள் போயிருக்க வேண்டும்…! திருட்டுத்தனமாகப் போயிருக்கக் கூடாது…! அது எங்களுக்கு மட்டுமல்ல போராட்டத்திற்கும் அவமானம்…” என்றவள் அவன் கரத்தை உதறிவிட்டு உள்ளே ஓட, ஏனோ தவித்துப்போனான் அந்த ஆண்மகன்.

What’s your Reaction?
+1
17
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

12 hours ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 5

(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப் பார்த்து, “சாரி...…

2 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 13/14

(13)   அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம்…

4 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 4

(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது…

4 days ago

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 12

(12)   இப்படியே இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றன. கந்தழிதரனின் நண்பர்கள் அவனைத் தேடி வருவதும்,…

6 days ago

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 3

(3) அன்றைய முக்கிய வகுப்புகளை முடித்துக்கொண்டு மதியம் போலப் புறப்பட்ட விதற்பரைக்கு, ஏனோ சலிப்புத் தட்டியது. எப்போதும் அவள் கூட வரும் கதரின்…

1 week ago