தைக்க வேண்டியதைச் சரிப்படுத்தித் தையல் இயந்திரத்தின் ப்ரஷர் ஃபூட்டில் செருகித் தைக்க ஆரம்பித்தவளுக்கு ஏனோ மனம் தைப்பதில் செல்லவில்லை. மனம் எங்கெங்கோ தறிகெட்டுச் சென்றுகொண்டிருந்தது. ஒரு மனம் அவன் வருடலில் தவித்தது என்றால் மறு மனம், அவன்தான் முதலாளி என்பதில் நின்று தடுமாறிக்கொண்டிருந்தது.
எது எப்படியாக இருந்தாலும் அவனுக்குக் கீழ் வேலை செய்ய முடியுமா என்கிற கேள்வியும் பூதாகரமாக எழுந்தது. இங்கே வேலை செய்தால் அடிக்கடி அவனைப் பார்க்க நேரிடுமே… பார்க்கும் போதெல்லாம் காருண்யன் நினைவுக்கு வருவான். அவன் மட்டுமா, அவனைக் கண்டதும் தடுமாறும் மனதை என்ன செய்வது. கூடவே ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் கக்கிய தீ வார்த்தைகள் வேறு நினைவிற்கு வந்து அவளை அலைக்கழிக்குமே…? அப்படியிருக்கையில் இனி எப்படி அவனுடைய கண்பார்வையின் கீழ் வேலை செய்வாள்?
மனம் ஒரு நிலையில் நிற்காது தத்தளிக்கக் கைகளோ பழக்கத் தோஷத்தில் துணிகளைத் தள்ளிக்கொண்டிருந்தது. அதே நேரம் ஏகவாமன், தைத்துக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வை பார்ப்பதற்காக நடந்து வந்துகொண்டிருந்தான்.
அவனை அவள் காணவில்லை. ஆனாலும் அவளையும் மீறி இதயம் படபடக்கத் தொடங்க கரங்கள் நடுங்கத் தொடங்கின. உடல் வேறு அவள் கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கத் தொடங்கியது. எதற்காக அவள் பயப்படவேண்டும்? இல்லை அவள் பயப்படவில்லை… அவளுக்குள் இருப்பது ஒரு வித அவஸ்தை… இல்லை இல்லை… அவஸ்தையல்ல… பயம்தான்… அவனைக் கண்டதும் எங்கே தீயைக் கக்கிவிடுவானோ என்று அவள் அஞ்சுகிறாள்… ஆனால் எதற்காக அவனைக் கண்டு அஞ்சவேண்டும். அவனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறாளா என்ன? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. அவன் அருகே வந்தால் அவளால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது நிச்சயமாக முடியாது.
அவன் நெருங்க நெருங்க இவள் பதட்டம் அதிகரித்தது. இதோ வருகிறான்… இதோ நெருங்கிவிட்டான்… இதோ இவள் தைப்பதை வாங்கிப் பார்க்கப் போகிறான்… எங்காவது சிறிய பிழை கண்டு, உலகமகா தவறு செய்தது போல அவளைக் காயப்போகிறான்…’ என்று உள்ளுக்குள் அலறியவளின் சிந்தனை தைப்பதில் இல்லாது அவனுடைய காலடி ஓசையில் நிலைத்திருக்க, என்ன செய்கிறோம் என்பதை உணர முதலே, துணியுடன் சேர்த்துத் தன் சுட்டு விரலையும் கொண்டு செல்ல, ஊசிக்குத் தெரியுமா அது விரலா இல்லை துணியா என்று. அது வஞ்சகம் இல்லாமல் அவளுடைய நகத்திற்கூடாகக் கீழே இறங்கிவிட்டிருந்தது. அதிர்ச்சியாலோ, இல்லை பதட்டத்தாலோ முதலில் அலரந்திரி அதை உணரவில்லை.
சற்றுப் பொறுத்து சுளீர் என்று குத்தும் வலி புரியத்தான் வலது கரத்தைப் பார்த்தாள். நிலைமை புரியப் பதட்டத்துடன் கரத்தை இழுக்க முயன்றாள். அடி வயிற்றிலிருந்து பாய்ந்து சென்ற வலி, தலை உச்சியில் அடிக்க, கத்துவதற்காக வாயெடுத்தவள், ஏகவாமனின் காலடியோசை மிக நெருக்கமாகக் கேட்கக் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள். அவளுக்கு ஊசி கரத்தில் ஏறியதை விட, இதை ஏகவாமன் பார்த்துவிடுவானோ என்கிற அச்சமே அதிகமாக இருந்தது.
அவன் நெருங்கி வருவதற்குள் ஊசியை நீக்கிவிடும் வேகத்தல், மறு கரத்தால் தையல் இயந்திரத்தின் சக்கரத்தை உருட்டி ஊசியை மேலே கொண்டுவர முயன்றாள். அவளுடைய போதாத காலம் தைத்த வேகத்தில் ஊசியின் முன்புறம் வளைந்திருந்ததால் அவளால் ஊசியை மேலே இழுத்து எடுக்க முடியவில்லை.
இந்த நேரமா அவளை அவன் நெருங்க வேண்டும்? சிரமப்பட்டுக் கரங்களை மறைப்பதற்காகக் கீழே தொங்கிய துணியைத் தூக்கித் தன் கரத்தின் மீது போட்டு மறைத்துக் கொள்ள, அவள் விரலுக்கு நடந்த விபத்துத் தற்காலிகமாக அவன் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டது.
ஆனால் ஊசியில் சிக்கியிருந்த விரலை எடுக்காமல் குறைந்தது தைப்பதுபோல நடிக்கக் கூட முடியாது.
‘அவளுடைய போதாத காலத்திற்கு, எங்கே நீ செய்த வேலையைப் பார்ப்போம்’ என்று அவன் கேட்டால், நினைக்கும் போதே வியர்த்துக் கொட்டியது. வேறு வழியில்லை… கடவுளை வேண்டிக்கொண்டு, அவளைக் கடக்கும் வரைக்கும் பல்லைக் கடித்து வேதனையைப் பொறுத்து அமைதியாக இருக்கவேண்டியதுதான். அதைச் செயற்படுத்தும் முகமாக ஏதோ வேலை செய்வது போல ஒற்றைக் கரத்தால் பாசாங்கு செய்ய, முதுகில் குறுகுறுத்தது.
அவன்தான். அவனுடைய கூரிய விழிகள் தன்னைத் துளைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவளுக்கு இருந்த பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
“இவர்கள்தான் மிசஸ் காருண்யன். அப்போது… உங்கள்மீது மோதுப்பட்டார்களே… இங்கே வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. என்று சங்கரன் அறிமுகப் படுத்த, இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
‘ஆமாம்… இது ரொம்ப முக்கியம்… டேய்… என்னுடைய நிலை தெரியாமல் அறிமுகப் படுத்திக்கொண்டிருக்கிறாயே… எங்காச்சும் இவனைக் கூட்டிப்பொடா…” என்று பல்லைக் கடித்தவாறு அவள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே,
“ஓ…” என்றவாறு அவளைக் குனிந்து பார்த்தான்.
அவள் அமர்ந்திருந்த விதம் அவனுக்கு உறுத்தியதோ?
“என்ன அப்படியே இருக்கிறாய்… தைக்கவில்லையா?” என்று கேட்க, எங்கே தான் தைக்கும் துணியை வாங்கிப் பார்த்துவிடுவானோ என்று அஞ்சியவளாகத் தலையைச் சற்று மேலே தூக்கி அவனைப் பார்க்காமலே,
“இ… இதோ… தை… தைக்கப் போகிறேன்…” என்று திக்கித் திணறிக் கூறியவள் அவசரமாக மறு கரத்தால் துணியை இணைத்துப் பிடிக்க முயல்வது போலப் பாசாங்கு செய்ய, அவனோ அவளை ஒரு மாதிரிப் பார்த்து,
“அப்படியானால் தைக்கவேண்டியதுதானே… எதற்காக அமைதியாக இருக்கிறாய்… சும்மா இருந்து பராக்குப் பார்க்கவா இந்த நிறுவனம் பணம் கொடுக்கிறது… என்ன சங்கரன்? நிறைய மாற்றம் இந்த நிறுவனத்துக்குச் செய்ய வேண்டும் போலவே… வெறும் ஐம்பத்தைந்து பேர்தான் தைக்கிறார்களா… போதாது… இதைச் சற்று விரிவு படுத்த வேண்டும்” என்று மெல்லிய பொறுமையற்ற தன்மையுடன் கூற, உடனே அவனுக்கு உதவியாக,
“என்ன அலரந்திரி… சார் சொல்லிக்கொண்டிருக்கிறார்… நீ அமைதியாக இருக்கிறாய்… வேகமாகத் தைக்கத் தொடங்கு… இப்படி ஆறுதலாகத் தைத்து எத்தனை சட்டைகளை முடிக்கப் போகிறாய்… ம்… ஆகட்டும்…” என்று விரட்டும் பாணியில் கூற, ஒரு கணம் பொறுமையற்ற மூச்சுடன் சங்கரனைக் குனிந்து பார்த்தான் ஏகவாமன்.
அவர் தன்னுடைய கெத்தைக் காட்ட விளைவது புரிய, எதுவும் கூறாமல் மீண்டும் அலரந்திரியை நோக்கிக் குனிந்து, அவன் எதைக் கேட்கக் கூடாது என்று அவள் வேண்டினாளோ அதைக் கேட்டே விட்டான். ஆம்,
“எங்கே நீ தைத்ததைக் காட்டு?” என்றான் சாதாரணமாக.
இவளுக்கோ அதிர்ச்சியில் காயத்தின் வலிகூட மறந்து போனது. எதற்குப் பயந்தாளோ அதை அவன் கேட்டே விட்டான், கடவுளே… அருகே நிற்பவனை எப்படிப் போ என்று சொல்வது? வேதனையில் கீழ் உதட்டைப் பற்களால் கடித்தவள், எதுவும் பேசாமல் தலைகுனிய, அவளுடைய போக்கு அவனுக்கு விசித்திரமாக இருக்க, அவனே அவள் தைத்திருந்த துணியை எடுத்துப் பார்க்க விளைந்தவனாகத் துக்க முயன்றவன், அப்போது மறு கரத்தை மூடியிருந்த துணி விலக, விரலில் ஏறியிருந்த ஊசி வெட்டவெளிச்சமானது. அதைக் கண்டு பதறிப்போனான்.
“மை காட்… என்ன செய்து வைத்திருக்கிறாய்?” என்று சீறியவன் அவளுக்கு இடப்புறமாக வந்து மண்டியிட்டமர்ந்து, அந்த ஊசி ஏறியிருந்த விதத்தைப் பார்த்தான். உடனே திரும்பி மேற்பார்வையாளரைப் பார்த்து,
“ஓடிப்போய்க் கட்டிங் ப்ளையரை எடுத்து வாருங்கள்…” என்று அவன் கத்த, உடனே மறுப்புக் கூறாமல் திரும்பி ஓடியவர் வரும் பொதுப் பிளையரோடு வந்தார். அதற்கிடையில் இயந்திரத்திலிருந்து தையலூசியை அவளுடைய கரத்தோடு பிரித்தெடுக்க, வெறும் இடையின் வருடலுக்கே தன்னிலை கெட்டவள் இப்போது காயத்தைப் பார்க்கிறேன் என்று அவன் கரங்கள் அவள் கரங்களைப் பற்றியும் வருடியும் தூக்கியும் திருப்பியும் என்று நர்த்தனம் ஆட, அவள் மூச்சு விடுவதைக் கூட மறந்து போனாள்.
அவனோ மிகக் கவனமாக அவள் கரத்தைத் தன் கரங்களில் ஏந்தி ஆராய்ச்சியே செய்தான்.
நிச்சயமாக எலும்பை ஊசி குத்தவில்லை. அப்படிக் குத்தியிருந்தால் ஊசி வெளியே வந்திருக்காது, அல்லது உள்ளே உடைந்திருக்கும். அதனால் பயப்பட ஒன்றுமில்லை…’ என்று எண்ணிக்கொண்டிருக்கத் தன்னுணர்வு பெற்றவளாக, அவசரமாகத் தன் கரத்தை உதறி விலக்கிக்கொண்டவள், அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தரையைப் பாhர்த்தவாறு,
“எ… எனக்கு ஒன்றுமில்லை சார்… வெறும்… காயம்தான்” என்று அவள் கூற, ஒரு கணம் அவளை வெறித்துப் பார்த்தான் ஏகவாமன். பின் பொறுமையற்ற மூச்சுடன்,
“முட்டாள் தனத்திற்கும் ஒரு அளவிருக்கவேண்டும்…” என்றுவிட்டு அவள் அனுமதியையும் வேண்டாது அவள் கரத்தைப் பற்றித் தூக்கியவன், ஷங்கரன் வைத்திருந்த பிளையரை மறு கரத்தில் வாங்கி, அலரந்திரியைப் பார்த்து,
“பயப்படாதே… கீழே வளைந்திருக்கும் துண்டை வெட்டப்போகிறேன்… கொஞ்சம் வலிக்கும் பொருத்துக் கொள்…” என்றுவிட்டு முடிந்த வரை அவளுக்கு வலிக்காமல் அந்தத் துண்டை வெட்டி எடுத்தான். வெட்டும்போது மிகக் கவனமாக ஊசி ஆடாதவாறு பார்த்துக்கொண்டான் ஏகவாமன்.
பின் தன் இடது கரத்தால் அவளுடைய கரத்தை அசையாமல் அழுந்தப் பற்றியவன், பிளையர் கொண்டு ஊசியைப் பற்றி, மேலே இழுக்க ஊசி கரத்தைவிட்டு வெளியே வந்தது.
இத்தனைக்கும் அலரந்திரிக்குக் காயம் வலிக்கவேயில்லை. அவன் அருகே நிற்கிறான் என்கிற பதட்டமா, இல்லை இப்படி அவன் முன்னே காயம் பட்டு நிற்கிறோமே என்கிற அவமானமா இல்லை… அவன் கரம் கொடுத்த தைரியமா? என்னவென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவனுடைய அருகாமை காயத்தின் வலியைக் கூட அண்டவிடவில்லை என்பது மட்டும் உன்மை.
ஊசி மேலே வந்ததும், இரத்தம் பொட்டுப் பொட்டாக வழியத் தொடங்கியது. அவசரமாக இரத்தம் வெளி வராது அழுந்தப் பற்றி, மீண்டும் மேற்பார்வையாளரைப் பார்த்து,
“ஏன் சங்கரன்… இங்கே விபத்து நடந்திருக்கிறது… ஓடிப்போய் முதலுதவிப் பெட்டி எடுத்துவர வேண்டும் என்று கூடவா உங்களுக்குத் தோன்றவில்லை… நீங்கள் எல்லாம் என்ன மேலதிகாரி?” சுள் என்று விழ, பதட்டத்துடன் திரும்பியவர் அடுத்த கணம் முதலுதவிப் பெட்டியுடன் வந்து நின்றார்.
அலரந்தரிக்கோ, இப்படி அனைவரும் பார்க்கக் காட்சிப்பொருளாகிவிட்டோமே என்கிற சங்கடம் எழ, அனைவரையும் ஒரு முறை தவிப்போடு பார்த்துவிட்டு,
“எ… எனக்கொன்றுமில்லை… தயவுசெய்து கையை விடங்கள்…” என்றவாறு அவனுடைய கரத்திலிருந்து தன் கரத்தை விடுவிக்க முயல, அவனோ, அவளைக் குனிந்து பார்த்தானன்றி, தன் செய்கையில் அவள் கூறியது உறைத்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. மாறாகக் காயத்தை அழுத்தியிருந்த விரல்களை விலக்கிப் பார்த்தான். அதுவரை அடங்கியிருந்த இரத்தம் மீண்டும் கொட்டத் தொடங்க, ஏனோ இவனுக்கு வலிப்பது போலத் தோன்றியது.
இவனுக்கெதற்கு வலிக்கவேண்டும்? அதற்கான பதில் அவனிடத்தில் இல்லை. சொல்லப்போனால், அவனை எய்ப்பதற்காக வந்தவள், அவன் தம்பி ஜெயவாமனின் மனைவி என்று பொய்சொல்லி உள்ளே நுழைந்தவள், பார்க்கப்போனால் அவள்மீது வெறுப்புதான் தோன்றவேண்டும்… அதுவும் ஏகவாமன் எதையும் மன்னிப்பான்… ஆனால் யாரும் பொய் சொன்னால், ஜென்மத்திற்கு மன்னிக்கவும் மாட்டான்… மறக்கவும் மாட்டான். அப்படிப் பட்டவன், ஏமாற்றுக்காறியான அந்தப் பெண்ணிற்காக ஏன் கலங்க வேண்டும்? புரியாத புதிர்தான் அது.
மீண்டும் இரத்தம் வழியத் தொடங்கிய கரத்தை அழுந்தப் பற்றி, அவள் முன்னால் மண்டியிட்டமர்ந்தவன், சங்கரன் கொண்டு வந்த முதலுதவி பெட்டியைத் திறந்து அதிலிருந்த பொருட்களைக் கொண்டு காயத்தைத் துடைத்தவாறு,
“என்ன பெண் நீ… கொஞ்சமாவது அவதானம் வேண்டாம்? என்னமாதிரி இரத்தம் வருகிறது பார்…” என்றான் தவிப்புடன்.
அவளோ அவன் பிடியிலிருந்து தன் கரத்தை உறுவ முயன்றவாறு,
“அது… சின்னக் காயம்தான்… நான் சமாளித்துக்கொள்வேன்… தயவுசெய்து… இதைப் பெரிது படுத்தவேண்டாமே…” என்று சங்கடத்துடன் அவள் கூற, அவளை முறைத்துப் பார்த்தவன்,
“சின்னக்காயமா… இது சின்னக் காயமா? கொஞ்சம் விலகியிருந்தாலும் எலும்புக்குள் ஏறியிருக்கும் தெரியுமா?” என்று சுள்ளென்று விழுந்தவன், “ஊசி ஏறும் வரைக்கும் என்ன செய்துகொண்டிருந்தாய்…” என்றான் சினத்துடன்.
அவளோ பதில் கூறாது இதழ்களைத் தன் பற்களால் கடிக்க ஒரு கணம் அவனுடைய விழிகள் அவளுடைய கடிபட்ட உதடுகளில் தங்கி நின்று பின் மேலெழுந்து அவள் விழிகளை அலசின.
அங்கே கண்ட வலியையும், அதைக் காட்டாதிருக்க அவள் படும் முயற்சியையும் கண்டவன், வேறு ஏதும் கூறாமல் பருத்தியிலான மென்மையான துணியைக் கொண்டு கவனமாகக் கட்டுப் போட்டான். கட்டுப் போடும் போதே அவளை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தவன், வெறித்த அவள் விழிகளைத் தன் விழிகளால் தாங்கி,
“அடுத்த முறை தைக்கும்போது, துணியை மட்டும் தைத்தால் போதுமானது… உன் விரலை உன் கூடவே வைத்துக்கொள்…” என்றவன், காயத்திற்குக் கட்டி முடித்த பின்னும் அவள் தளிர் கரங்களை விடும் எண்ணமில்லாதவனாகப் பற்றியவாறு எழுந்து சங்கரனைப் பார்த்து,
“சங்கரன், இவர்களை உடனடியாக மருத்துவரிடம் அனுப்பி வையுங்கள். ஏற்பூசியையும் போடச் சொல்லுங்கள்…” என்றான் கட்டளையாக.
அவளோ வேகமாக அவனுடைய பிடியிலிருந்து தன் கரத்தை விலக்கி, சங்கரனைப் பார்த்து,
“சார்… எ… எனக்கு இன்று லீவு வேண்டும்… நான்… நான் போகலாமா?” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.
“என்ன கேள்வி இது… போம்மா… போ… போகும்போது அப்படியே மருத்துவரிடம் காட்டிவிட்டுப் போ…” என்று அவர் உத்தரவு இட, எழுந்தவள், அருகே நின்றிருந்த ஏகவாமனைப் பார்த்தும் பார்க்காதவளாக,
“உ… உங்கள் அக்கறைக்கு ந…நன்றி சார்… என்னைப் பார்த்துக்கொள்ள எனக்கும் தெரியும் சார்…” என்றவள், அடுத்தக் கணம் அந்த இடத்தை விட்டுப் போனால் போதும் என்று எண்ணியவளாக வேகமாக விலகிச் செல்ல, அவனோ, அவளுடைய முதுகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
நேராக வீட்டிற்கு வந்த அலரந்திரிக்குக் கோபமும் வேதனையும் ஒன்றாகப் போட்டிப்போட, வழிந்த கண்ணீரைக் கோபத்துடனேயே துடைத்துவிட்டு, நிலத்திலே ஒற்றைக் கையால் பாயை விரித்து, இறுகிப்போன தலாணியையும் போட்டுவிட்டுத் தொப்பென்று அமர்ந்து படுத்துக்கொண்டாள்.
அவளுக்கிருந்த கோபத்தில் உடல் திகு திகு என்று எரிந்தது. இருந்த கோபத்தில் வைத்தியரிடம் போகவேண்டும் என்றோ, கையைக் காட்டி ஊசிபோடவேண்டும் என்றோ தோன்றவில்லை. தோன்றவில்லை என்பதை விட, இவன் சொல்லி நான் என்ன கேட்பது என்கிற ஆத்திரமே அதிகமாக இருந்ததால், காயத்தை அலட்சியம் செய்தாள்.
இப்போது எரிச்சலுடன் காயத்தைத் தூக்கிப் பார்த்தாள். அவன் தொட்டுக் கட்டுப்போட்டது தான் நினைவுக்கு வந்தது. கூடவே அவன் தொட்டபோது உடலில் தோன்றிய மாற்றங்களும், அந்த வெம்மையான கரங்களும் நினைவுக்கு வர, அந்த நிலையிலும் உடல் சிலிர்த்தது.
கூடவே தன் மீதே ஏற்பட்ட ஆத்திரத்துடன் துணியை அவிழ்த்துத் தூர எறிந்தாள். அவன் யார் அவளுக்குக் கரிசனையுடன் கட்டுப்போட… என்று எண்ணியவளுக்கு மீண்டும் அந்தத் தொடுகைக்காக உள்ளம் ஏங்கத் தொடங்கியது. அந்தப் புதிய உணர்வில் அலமலந்து போனாள் அலரந்திரி.
கோபத்தை விடத் தவிப்பு கட்டுப்பட மறுத்தது. கூடவே புதுவித உணர்ச்சிகளால் தூண்டப்பட்டவளுக்கு அழுகை வேறு வந்தது. கோபத்தையும் மீறி, அவன் காட்டிய அக்கறை இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் உணர்வுகளைத் தட்டிப் பார்த்தது. இப்படிப் பல்வேறு பட்ட ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத உணர்வில் தவித்துப் போனவளுக்கு அதை எப்படிக் கையாள்வது என்றும் புரியவில்லை.
அழுதும் வேதனை மட்டுப்பட மறுத்தது. தன்னை மறந்து விசித்தவாறே விழிகளை மூடியவள் அழுகை கொடுத்தக் களைப்பில் தன்னையும் அறியாமல் விழிகளை மூடிக்கொண்டாள்.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…