மெல்ல மெல்ல அவளை நெருங்க, அவனுடைய உடலின் வெம்மையை அவள் முழுதாக உணர்ந்த நேரம் அது. அவனுடைய மூச்சுக்காற்றின் அனல், அவள் முகத்தின் மீது பட்டுத் தெறிகும் அளவுக்கு நெருங்கியவன், ஒரு கணம் அவளை ஆழமாகப் பார்த்தனர்.
அவனுடைய அந்த விழி வீச்சைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன் விழிகளைத் தழைக்க, அவனோ அவளுடைய முகத்திலிருந்து தன் விழிகளைச் சற்றும் அசைக்காமல், சட்டைப் பையில் கொளுவியிருந்த பேனாவை இரண்டு விரல்களாலும் இழுத்தெடுத்து, ஒரு வித ஒவ்வாமையுடன் இன்னும் அவளுடைய பெருவிரலில் கொளுவியிருந்த மஞ்சள் கயிற்றை நோக்கி எடுத்துச் சென்றான்.
பேனாவினால் மஞ்சள் கயிற்றைத் தொட்டவன், அதை ஒரு சுழற்றுச் சுழற்றித் தூக்க மஞ்சள் கயிறு, அவளுடைய பெருவிலை விடுத்துப் பேனாவுடன் மேலேறியது. மஞ்சள் கயிறு நடுவிலிருக்க, சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் பேனாவைப் பிடித்து மேலும் இழுக்க, அறுந்துவிடுமோ என்கிற பயத்துடன் அதை வலக்கரத்தால் இறுகப் பற்றிக்கொண்டவளை உற்றுப் பார்த்தான் ஏகவாமன். பின் அந்த மஞ்சள் கயிற்றையும் பார்த்தான். உதடுகள் ஏளனமாக வளைய,
“மஞ்சள் தடவிய இந்தக் கயிற்றுக்கு ஐம்பது சதம் முடிந்திருக்குமா? இந்த மஞ்சள் கிழங்கு… ஐம்பது சதம்… வெறும் ஒரு ரூபாய்க்கு இதைக் கட்டிவந்து என் தம்பிதான் கட்டினான் என்று உரிமை கோரி அவனுடைய சொத்தையே அபகரிக்க வந்திருக்கிறாயே…” என்றவன் மேலும் தன்னை நோக்கி இழுத்து,
“இல்லை… தெரியாமல்தான் கேட்கிறேன்… என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது? கை சூப்பும் பாப்பா போலத் தெரிகிறேனா என்ன? நீயே உனக்கு வாங்கிக் கட்டி வந்துவிட்டு, இந்தச் சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோர வந்திருக்கிறாயே… எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் உனக்கு…” என்றான் கடும் ஆத்திரத்துடன். பின் அருவெறுத்தவனாகத் தன் பேனாவை அவளுடைய மஞ்சள் கயிற்றோடு சேர்ந்து விடுவித்து, இரண்டடி தள்ளி நின்றவாறு,
“ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் யோசிக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லை… சே… உன்னைப் போல இன்னும் எத்தனை பெண்களை நான் சமாளிக்கவேண்டுமோ…” என்று பெரும் சோர்வுடன் சொன்னவனைப் பெரும் வலியுடன் பார்த்தாள் அலரந்திரி. மறுப்பாகத் தன் தலையை ஆட்டியவள்,
“நானே எனக்குக் கட்டினேனா…! கடவுளே… நான் எதற்காக அத்தகைய கீழ்த்தரமான செயலைச் செய்யவேண்டும்… நீங்கள் என்னதான் இல்லை இல்லை என்றாலும் உண்மை ஒரு போதும் பொய்த்துவிடாது… சாட்சிகள் இல்லாமல் இருக்கலாம்… ஆனால்… நிஜம் ஒரு போதும் அழியாது… நான் காருண்… ஜெயவாமனின் மனைவி என்பதை உங்களால் என்ன.. அந்தக் கடவுளால் கூட மாற்ற முடியாது…” என்று அலரந்திரி தன் கோபத்தை மறைக்க முடியாதவளாக எகிற, அவனோ அவளைக் கிண்டலுடன் பார்த்தான்.
“இப்போது கூடத் தடுமாறுகிறாயே பெண்ணே… முதலில் யார் உன் கணவன் என்கிற தெளிவுக்கு வா…” என்றதும் அடிபட்ட பாவனையுடன் அவனை ஏறிட்டாள் அலரந்திரி. ஏனோ அந்தப் பார்வை ஒரு வித சங்கடத்தைக் கொடுக்க,
“சரி… அதை விடு… நீ சொல்வது போவலே நீ ஜெயவாமனின் மனைவி என்றே வைத்துக்கொள்வோம்…” என்றுவிட்டு அவளை உற்றுப் பார்க்க, அவளுடைய முகத்தில் மெல்லிய மலர்ச்சி… அதைக் கண்டவனுக்கு எப்போதும் போல அதுவும் தப்பாகப் பட, அவனுக்கு ஆத்திரம் மேலும் வந்தது. பற்களைக் கடித்துத் தன்னை அடக்கியவன்,
“அதற்கான ஆதாரம் என்ன? நீதான் என் தம்பியின் மனைவி என்பதை நிறுவ முடியுமா?” என்றான் அழுத்தமாக. அவளோ எப்படி என்பது போலப் பார்க்க,
“ஐ மீன்… திருமணச் சான்றிதழ்… படங்கள்… கடிதங்கள்… எனிதிங்… ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் ஏகவாமன்.
இதற்கு என்ன பதிலைக் கொடுப்பாள்? ஆதாரங்களுக்கு அவள் எங்கே போவாள்… ஆதாரம் எடுக்கும் வகையிலா என்னுடைய திருமணம் நடந்தது. கடவுளே பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு… சட்டப்படி கூட மணக்கவில்லையே… இவன்தான் மாப்பிள்ளை கழுத்தை நீட்டு என்றபோது நீட்டினாள். இனி உன் பாடு அவன் பாடு என்று விலகிப்போன உறவினர் கூட்டம்… இதில் புகைப்படத்திற்கு எங்கே போவாள்… சாட்சியென்று அவளுடைய தந்தை, சிற்றன்னை, தம்பி தங்கைகள் மட்டுமே. அவர்கள் வந்து எனக்கு ஆதரவாகச் சாட்சி சொல்வார்களா… அப்படியே சொன்னாலும்… அதை இவன் நம்புவானா. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்துடன் தவித்துக்கொண்டிருந்தவளை, எரிச்சலுடன் ஏறிட்ட ஏகவாமன், வலது கரத்தைத் தூக்கி வாசலை நோக்கிக் கட்டியவாறு
“என்ன நிற்கிறாய்… போ… போய் எடுத்து வா…” என்றதும், அவனை வெறித்துப் பார்த்தாள் அலரந்திரி.
இதற்கு மேல் என்ன செய்வதென்ற அவளுக்குப் புரியவேயில்லை… இவள்தான் ஜெயவாமனின் மனைவி என்பதை உறுதிப்படுத்துவதிற்குள்ளாக, வாழ்க்கையே முடிந்துவிடும் போல இருக்கிறதே. இறுதியில்
“நா… நான் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பேன். நியாயம் கேட்பேன்…” என்று அழுத்தமாகச் சொன்னவளை ஏளனத்துடன் பார்த்தான் ஏகவாமன். அவளை நெருங்கி,
“இஸ் இட்… பேஸ்ட் ஆப் லாக்… தாராளமாகப் போ… நான் தடுக்கப்போவதில்லை. அதற்கு முன்பு கொஞ்சம் யோசித்துவிட்டுப் போ. சட்டத்திற்குத் தேவை ஆதாரங்கள். இவ்வளவு ஏன்… ஒரு சின்ன ஆதாரமே போதும் நீ திருமணம் முடித்தவளா இல்லையா என்பதை நிரூபிக்க. என்ன பார்க்கிறாய். திருமணம் முடித்த அன்றே விபத்து நடந்தது என்றுதானே சொன்னாய். அப்படியானால் நீ இன்னும் கன்னியாகத்தான் இருக்கவேண்டும். மருத்துவப் பரிசோதனையில் இதை எல்லாம் பரிசோதிப்பார்கள். அப்போது நீ என்ன செய்வாய்? ஒரு வேளை… கணவன் முடியாமல் இருக்கிறானே என்று சுகத்துக்காக வேறு யாரையும் நாடினாயா? ப்ச்… நீயே உன் கணவனின் பெயர் காருண்யனா, ஜெயவாமனா என்று தெரியாமல் திணறுகிறாய்… இதில் எவனோடு?” என்று ஏகதாளமாகக் கூறிக்கொண்டு வந்தவன், முடிக்கவில்லை,
அதுவரை பொறுமையுடன் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தவள், அவன் கூறக் கூற, அத்தனை பொறுமையும் காற்றோடு பறந்துபோக, இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது சீறிப் பாய்ந்து அவனை நெருங்கி, என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே எக்கிக் கண் இமைக்கும் நொடியில் அவனை அறைந்துவிட்டிருந்தாள் அதுவும் பலமாக. இத்தனை பலமும் எங்கிருந்து அவளுக்கு வந்தது என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.
எப்போதுமே கறாராக அதுவும் எச்சரிக்கையோடு இருக்கும் ஏகவாமன் கூட இதை எதிர்பார்க்கவில்லை.
அவனை அறைவதா? அதுவும் ஒரு பெண் அறைவதா? ஒரே பாய்ச்சலில் அவளை நெருங்கியவன்,
“யார் மீது கைவைத்தாய்… யு ப்ளடி xxx xxx என் நிழலைக் கூடத் தொட அருகதையில்லாத நீ… என்னைக் கை நீட்டி அடிப்பதா?” என்றவன் அவளுடைய இரண்டு கரங்களையும் பற்றிப் பின்புறமாக வளைத்துப் பிடித்தான். அவளைத் தன்னுடன் இழுத்து நெரித்தவன், ஒரு கரத்தால் அவளுடைய தாடையை அழுந்த பற்றி உயர்த்தினான். அவனுடைய விழிகளில் எரிமலைக் குழம்பின் சீற்றம். சுளித்த புருவங்களிலோ கொலைசெய்யும் வேகம். கரங்களிலோ தண்டிக்கும் அவசரம்… இதுவரை யாரும் அவனைத் தொட்டதில்லை. முதன் முறையாக, அதுவும் ஒரு பெண் அவனைக் கைநீட்டி அடித்திருக்கிறாள்… அந்த ஆத்திரத்தில். புத்தியோ யோசிக்கும் திறனைத் தொலைத்தது.
அதே நேரம், இப்படி நடந்துகொள்ளுவோம் என்று எதிர்பாராத அலரந்திரி கூட அதிர்ந்துதான் போனாள். என்ன காரியம் செய்துவிட்டோம் என்று அவள் எண்ணித் தவிக்கும் நேரத்தில் அவள் முன்பாகச் சீறிப்பாயும் வேங்கையென வந்தவனைக் கண்டதும் அவளுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது.
இப்போது என்ன செய்யப்போகிறான்… அன்று காலை ஒருவனைக் கொன்றானே, அதே போல என்னையும் கொல்லப்போகிறானா…? இல்லை… அவளைக் கட்டிவைத்து சித்திரவதை செய்வானா…. அதற்கும் மேலாகப் போய்… கயவர்கள் செய்வது போhலத் தப்பாக…’ நினைக்கும் போதே இரத்தம் வடிந்து செல்ல, இன்றோடு தன்னுடைய வாழ்வின் அதிகாரம் முற்றுப் பெறப்போகிறது என்கிற அச்சத்தில் மலங்க மலங்க விழித்தாள்.
உடலோ பயத்தில் வெடவெடத்தது. முகம் வெளிறியது. உடலிலிருந்து இரத்தம் வடிந்து சென்றதும் அவளையும் மீறித் தலைக்குள் ராட்டினம் சுற்றின. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
அவளை நோக்கிக் குனிந்தவன்,
“ஏமாற்றி வாழும் நீ என்னை அறைவதா? நான் யார் தெரியுமா? என்னைச் சந்திப்பதற்காக எத்தனை அரசியல்வாதிகள் பின்னால் வரிசையாக நிற்கிறார்கள் தெரியுமா? என் அருகே நிற்க கூடத் தகுதியற்ற நீ… என்னை அறைவதா… அத்தனை தைரியமா உனக்கு… நீ தவறான இடத்தில் கை வைத்துவிட்டாய் பெண்ணே… தப்பான இடத்திலும் கால் வைத்துவிட்டாய்…” என்றவன், மேலும் அவளை நோக்கிக் குனிய, அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று பயங்கரமாகத் தோற்றுப்போனாள் அலரந்திரி உயிரைக் கையில் பிடித்தவாறு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
பெரும் ஆவேசத்துடன் அவளை நோக்கிக் குனிந்தவனோ, அவள் முகத்தில் தெரிந்த பயத்தையும், அச்சத்தையும் கண்டதும் ஒரு கணம் நிதானித்தான்.
கூடவே கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றையும் கண்டான்… என்ன நினைத்தானோ, ஏதோ தொடக்கூடாத ஒன்றைத் தொட்ட உணர்வில் அவளைத் தன்னிடமிருந்து விடுவித்துப் பலமாகத் தள்ளிவிட, அவன் தள்ளிவிட்ட வேகத்தில் அங்கிருந்த புத்தக அலமாரியின் மீது மோதுப்பட்டு நின்றாள் அலரந்திரி.
அவள் மோதுப்பட்ட வேகத்தில், மேலேயிருந்த தடித்த கனமான புத்தகங்கள் கடகடவென்று அவள் மீது விழத் தொடங்க, அதைக் கண்டவனின் சீற்றம் அடுத்த விநாடி காணாமல் போக, சற்றும் யோசிக்காது அவளை நோக்கிப் பாய்ந்தவன், அவளுடைய கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்த வேகத்தில் சுழன்று அவன் மார்போடு மோதி நின்ற அந்த நொடியில் புத்தகங்கள் வாயைப் பிளந்தவாறு தரையில் கொட்டத் தொடங்கின.
ஓரிரு விநாடிகளுக்குள் இது நடந்துவிட்டிருந்தன. அவன் மார்பில் மோதி நின்றவளின் காது கச்சிதமாக அந்த ஆண்மகனின் கீழ் மார்பில் பதிந்திருக்க, அவனுடைய இதயத்தின் துடிப்போசை இவள் காதின் வழியாகச் சென்று புத்திக்குள் நுழைந்து நாடி நரம்பினூடாகப் பயணித்து அவளுடைய இதயத்தைச் சென்றடைந்த போது, முதன் முறையாக, வாழ்வின் முதன் முறையாக ஒருவித பாதுகாப்பை உணர்ந்துகொண்டாள் அலரந்திரி.
இது சரியா, தவறா? எதையும் யோசிக்கும் நிலையில் அவள் அப்போது இருக்கவில்லை. யாரோ ஒருவன் அவளுக்காய் இருப்பது போன்ற ஒரு வித பாதுகாப்பு உணர்வு, இதை விட்டுப் பிரியக்கூடாது என்கிற ஏக்கம்… இதுவே நிரந்தரம் என்கிற உறுதி என்று அந்த நேரத்தில் அவளை ஆட்கொண்டது மட்டும் உண்மை.
அவனோ தன் மார்பில் விழுந்தவளின் மென்மையை உணர்ந்தவனாய் மலைத்துப்போய்ப் பேச சக்தியற்று அப்படியே நின்றிருந்தான். ஏனோ அந்தக் கணத்தில் தன் மீது கிடப்பவளை விட்டு ஒதுங்கக் கூடாது, இவள் எனக்குரியவள் என்கிற எண்ணம் மலையாய் உயர்ந்து நிற்க அப்படியே சற்று நேரம் விழிகளை மூடிக் கிடந்தவனின் மூச்சுக் காற்று மிக வேகமாக அவனை விட்டு வெளியேறியது. கூடவே முதன் முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உணர்ந்துகொண்டவனின் உடலில் மெல்லிய நடுக்கம் சென்று மறைய, தன்னையும் மறந்து இடக்கரத்தை அவளுடைய பின்னிடையூடாகக் கொண்டு செல்ல முயன்றவனுக்கு அப்போதுதான் தான் செய்துகொண்டிருந்த காரியம் புரிந்தது.
சடார் என்று தன் விழிகளைத் திறந்தவனுக்கு மார்பில் ஒட்டியிருந்த அவளுயைட கார்குழல்தான் விழிகளுக்குத் தெரிந்தது.
அதுவரை அவள் மீதிருந்த ஒரு வித அவஸ்தை கலந்த தேவை மாயமாக மறைந்து போக அந்தக் கணம் பெரும் அருவெறுப்பும், எரிச்சலும் தோன்றின. என்னை எய்க்கவா இந்த நாடகம்? என்று ஏளனத்துடன் எண்ணியவன், அவளை அணைக்க எடுத்துச் சென்ற விரல்களை இறுக மூடி முஷ்டியாக்கிப் பற்களைக் கடித்துத் தன்னை அடக்க முயன்றான்.
அடக்கினானா இல்லையா என்பது அவனுக்கே வெளிச்சம்… அடுத்தக் கணம் வேகமாகப் பிரித்தெடுக்கப்பட்டாள்.
அலரந்திரி விழிகளை மூடி நின்றிருந்த நேரம் எத்தனை நேரமோ அவளறியாள். திடீர் என்று அந்தப் பாதுகாப்பு வளையம் அவளிடமிருந்து பிய்த்து எடுக்கப்பட, அப்போதுதான் நடந்த நிகழ்வின் மெய்மை அவளுடைய முகத்தில் அடித்தது. அதை அறிந்ததும் விதிர் விதிர்த்துப் போனாள் அலரந்திரி.
என்ன காரியம் செய்துவிட்டாள்… கடவுளே.. ஒருகணம்… ஒரு கணமேயானாலும் வாழ்வில் ஏதோ பாதுகாப்புக் கிடைத்ததுபோல உணர்ந்தாளே… அதுவும் யாரினருகே… நினைக்கும் போதே தன் மீது கடும் சீற்றம் எழுந்தது. தகுந்த காரியத்தையா செய்ய விளைந்தாள்… கடவுளே..
நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் தலையை நிமிர்த்தி அவனை வெறித்துப் பார்க்க அவனோ அவளைக் கடித்துக் குதறும் ஆவேசத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
சற்று நேரம் என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எப்படிச் சொல்வதென்றும் புரியவில்லை… சற்று முன் நடந்தது வெறும் கனவாக இருக்கக் கூடாதா என்று பெரும் ஏக்கம் எழுந்தது. அவள் முகத்தில் கொந்தளித்த பல்வேறு பட்ட உணர்வைப் படித்தவனுக்கு ஏனோ அடிநெஞ்சில் வலித்தது. அதற்கு மேல் அவளைப் பார்க்க முடியாதவனாகத் தன் விழிகளை அழுந்த மூடி நின்றவன், விழிகளைத் திறக்காமலே,
“கெட் அவுட் ஃப்றொம் மை ப்ளேஸ்…” என்று கர்ஜித்தான். ஏனோ அவள் அருகே இருக்கும் ஒவ்வொரு விநாடியும் தனக்கு ஆபத்து என்பதுபோல உணர்ந்தான் ஏகவாமன். பின் தன் விழிகளைத் திறந்தபோது, அவை பலமடங்கு அதிகமாகவே சிவந்திருந்தன.
“நான் இனி உன்னை இங்கே அல்ல, இந்த ஊரிலேயே பார்க்கக் கூடாது. உன்னுடைய திட்டங்களுக்கு வேறு யாரும் இளிச்சவாயன் கிடைப்பான். அவனைப் போய்ப் பிடித்துக்கொள். வெளியே போ…” என்று அவன் உறும, அந்த உறுமலில் அண்ட சராசரமே நடுங்கிப்போனபோது, பாவம் அலரந்திரி மட்டும் எந்த மூளைக்கு? அடிபட்ட வேங்கையின் சீற்றத்துடன் சீறிக்கொண்டிருந்தவனின் வெம்மைக் காற்று கூட அவளை நடு நடுங்க வைத்தன.
ஆனால் ஏகவாமனுக்கோ அவளைப் பார்க்கப் பார்க்கப் புரியாத ஒரு வித அவஸ்தை அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. அவளைப் பார்த்தால்தானே இத்தனை சிக்கல்…? சடார் என்று அவளுக்கு எதிராகத் திரும்பி நின்றுகொண்டவனுக்குத் தன்னை எண்ணியே பெரும் வியப்பாக இருந்தது.
‘எனக்கு என்னவாகிவிட்டது. இவள்பால் என் மனம் இரங்கிச் செல்கிறதே… இதே இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் என் முன்னால் பேசக்கூட விட்டிருக்கமாட்டேன்… என் ஆட்களைக் கொண்டு ஊரின் எல்லையில் வீசச் சொல்லி உத்தரவிட்டிருப்பேன்… இதுவரை என் வீட்டில் வேற்று மனிதர்கள் யாரையும் நுழைய விட்டதில்லை. ஆனால் இவளை வீட்டிற்குள் நுழைய விட்டதோடு, என் அலுவலக அறைக்குள்ளும் வர வைத்தது மட்டுமல்லாது, அறைந்த பின்னும் கைக்கட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்…’ என்று குழம்பியவனுக்கு அவள் தான் ஜெயவாமனின் மனைவி என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
அதை எண்ணும் போதே உடல் இறுகியது.”எப்படிப் பொய் சொல்கிறாள். இவள் சொன்னதும் அதை நம்பிவிட நான் என்ன அடி முட்டாளா… சே… அப்படிச் சொல்லும்போது, இவள் வாய் கூசவில்லையா? இப்படித்தான் பிழைக்கவேண்டும் என்று என்ன கட்டாயம்…?’ உள்ளுக்குள் எரிமலையாகக் கொந்தளித்துக் கொண்டிருக்க, அவனையே பார்த்துக்கொண்டிருந்த அலரந்திரிக்கு இன்னும் காருண்யனைப் பற்றிய பதிலில்லாத கேள்வி மட்டும் அப்படியே இருக்க, சேலைத் தலைப்பை வலக்கரத்தில் எடுத்துச் சுருட்டிப் பிடித்தவாறு, நிமிர்ந்து நின்று,
“போ… போய் விடுகிறேன்… அதற்கு முன்பு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்…” என்று கிட்டத்தட்டக் கெஞ்ச, அந்தக் கெஞ்சல் அவனுக்குப் பிடிக்கவில்லையோ? பதில் கூறாது அப்படியே பிடித்துவைத்த சிலைபோல நின்றான் அதையே, அவனுடைய சம்மதமாக எடுத்துக் கொண்டவள்,
“காரு… உங்கள் தம்பி… ஜெயவாமனன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா… இல்லை… உண்மையாகவே அவர்…” என்று முடிக்க முடியாமல் உதட்டைக் கடித்துத் தன் வேதனையை அடக்க முயல, சடார் என்று அவள் பக்கமாகத் திரும்பியவன் தன் கூரிய விழிகளால் அவளை அளவிட்டான்.
ஏனோ அலரந்திரியால் அந்த விழிகளின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் தன் விழிகளைக் கீழே இறக்கினாளில்லை. அவனுடைய தீக்கக்கும் விழிகளைச் சலனமின்றிப் பார்க்க, இறுதியில் இவன்தான் தன் விழிகளை விலக்கவேண்டியதாயிற்று.
“அதைத் தெரிந்து என்ன செய்யப்போகிறாய்? வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்து உள்ளே நுழையப் போகிறாயா? அதற்கு இது இடமில்லை…” என்றான் சுள் என்று.
இதற்கு மேல் எப்படிக் கேட்பது? கேட்டால்தான் அவனால் விளங்கிக்கொள்ள முடியுமா?
“இல்லை… டாக்டர் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னார்… அது உண்மையா பொய்யா என்பதுதான் எனக்குத் தெரியவேண்டும். தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். அவர்… அவர் இருக்கிறாரா… இல்லை…”
“அவன் இறந்துவிட்டான். அவனுடைய இறுதிக் காரியங்களை இன்று காலையே முடித்துவிட்டோம்…” என்றான் அவன் சற்றும் இரக்கமற்று.
“ஓ…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச எதுவும் இருக்கவில்லை. ஏதோ மனம் நிம்மதியாக உணர்ந்தது. காருண்யனுக்குத் துன்பங்களிலிருந்து விடுதலை. (இன்னும் அவன் ஜெயவாமன் என்று ஒத்துக்கொள்ள அவள் தயாராக இல்லை) இந்தக் கரிய உலகிலிருந்து விடுதலை… பெரும் நிம்மதி தோன்ற வலக்கரத்தால் மார்பை அழுத்தி நிம்மதி மூச்சொன்றை விட்டவளுக்கு, அதுவரை இழுத்துப் பிடித்திருந்த தைரியமும், திடமும் மாயமாக மறைந்து செல்ல, அப்படியே கால்கள் தொய்யைத் தரையில் மயங்கிச் சரிந்தாள்.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…