இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித் துடிக்க முயன்ற இதயத்தைச் சமப்படுத்தும் வகைத் தெரியாது, மூடிய விழிகளை மெதுவாகத் திறந்து பார்த்தவன், அங்கே கண்ட காட்சியில் தன்னிலை கெட்டுப்போய் நின்றிருந்தான்.
அங்கே தன்னை நோக்கி வந்த வாகனத்தைக் கண்டதும் சுதாரித்த அலரந்திரி இரண்டடி வேகமாகப் பின்னால் சென்று நின்று கொண்டதால், மயிரிழையில் உயிர் தப்பினாள். இல்லையென்றால் இத்தனை நேரத்தில் ஏகவாமனின் உயிரையும் தன்னோடு எடுத்துச் சென்றிருப்பாள்.
தப்பிவிட்டாள்… அவனுடைய அலர் தப்பிவிட்டாள். கடவுளே… ஒரு விநாடியில் மறுபிறப்பு என்றால் என்னவென்று கண் முன்னால் காட்டிவிட்டாளே… மலைத்து நின்றவன் ஓரளவு சுதாரித்த வேளை, அந்தப் பெரிய வாகனம் விலகியதும், மீண்டும் அவனை நோக்கி வர முயன்றுகொண்டிருந்தவளைக் கண்டதும் இவனுடைய இரத்த அழுத்தம் உச்சியைத் தொட்டது. கண் மண் தெரியாத ஆத்திரத்துடன், இரண்டெட்டில் அலரந்திரியை நோக்கி வந்தவன், என்ன செய்கிறோம் என்பதைப் புரியாமலே, அவளை அறைவதற்காகத் தன் கரத்தை ஓங்கினான். ஒரே கணம்… ஒரே கணம் தன்னை நிதானித்தவன், தான் செய்ய வளைந்த காரியம் புரிபட, ஆத்திரம் மட்டுப்படாமலே, விரல்களை முஷ்டியாக்கியவன்,
“பைத்தியமா உனக்கு… என் கூட இருந்தால் உனக்கு ஆபத்து என்றுதானே போய்த் தொலையச் சொன்னேன்… இப்படி என் பின்னால் வந்து உயிரைவிடப் பார்த்தாயே… முட்டாள்…” என்று சீற, அலரந்திரியோ அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்தப் பார்வையில் கரைந்தவன், அடுத்த கணம் அவளை இழுத்துத் தன் உயிரணைப்பில் வைத்திருந்தான் ஏகவாமன். எங்கே விட்டால் மீண்டும் தொலைந்து போவாளோ என்று எண்ணியவன் போலத் தன்னோடு அவளை இறுக்கிக் கொள்ள, கரங்களோ மலைப்பாம்பென அவள் இடையையும் முதுகையும் வளைத்து நெரித்துக்கொண்டன. முகமோ மார்புக்குக் கீழாக நின்றிருந்த அவள் தலையில் பதிந்து,
“நெவர் எவர் டூ திஸ் டு மி… ஒரு கணம்… உன்னையும் தொலைத்துவிட்டேனோ என்று பயந்துவிட்டேன் கண்ணம்மா…” என்று குரலும் உடலும் நடுங்கக் கூறியவன், அவளை விடும் எண்ணமே இல்லாதவன் போல,
“ஓ காட்… உன்னை இழந்து நான் எப்படி…” என்று ஏதோ சொல்ல வர, அவசரமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்தவள்,
“உங்கள் தம்பியின் இழப்பு உங்களை எந்தளவு வருந்தச் செய்கிறது என்று எனக்குப் புரிகிறது சார்… அதற்காக மனமொடிந்து போக முடியுமா… நாளை என்று ஒன்று இருக்கிறது அல்லவா… அதை நோக்கிப் போகவேண்டாமா…” என்று மென்மையாகக் கேட்க, சற்று நேரம் அவளை உற்றுப் பார்த்தான் ஏகவாமன்.
“உனக்கு… உன்னை… ஜெயனின் இறப்பு பாதிக்கவில்லையா…” என்று சற்றுக் கரகரத்த குரலில் கேட்க, சற்று நேரம் தெருவை வெறித்துப் பார்த்தவள், எதையும் மறைக்கப் பிடிக்காதவளாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். மென்மையாக மறுப்பாகத் தலையை ஆட்டி,
“இல்லை சார்… ஒரு மனிதனின் இறப்புக்கு எத்தனை முறை அழ முடியும்? சொல்லப்போனால் அவருக்கு விடுதலை போல, எனக்கும் விடுதலை போலத்தான் தோன்றுகிறது. நீங்கள் காருண்யனின் வலியை உணர்ந்து கொண்டது கொஞ்ச நாட்களாகத்தான்…. நான் மூன்று வருடங்களாக அவர் பக்கத்திலேயே இருந்து பார்த்திருக்கிறேன்… சில வேளைகளில் கையை மீறிப் போகும்போது, இப்படி உயிரோடு இருந்து எதற்குச் சிரமப்படவேண்டும் என்று தோன்றும்…” என்றவள் மெல்லிய வருத்தத்துடன் சிரித்து, ஏகவாமனை ஏறிட்டுப் பார்த்து,
“நம் சுயநலத்திற்காக, முடியாத ஒருவரை உயிரோடு இருக்கவேண்டும் என்று விரும்புவது கூட அவருக்குச் செய்யும் தீங்குதானே சார்… தப்புவதற்கு வழி இருக்கிறது என்கிறபோது முயன்று பார்ப்பதில் தவறில்லை… ஆனால் ஏற்கெனவே சிதைந்து போனவரை வைத்தியம் என்கிற பெயரில் மேலும் சிதைப்பதில் எனக்கு உடன்பாடில்லை… காருண்யன் பட்ட சித்திரவதை மிக அதிகம் சார்… உடலாலும், உள்ளத்தாலும் அவர் பட்ட துயரம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது… எத்தகைய வலியிருந்தால், நம்மை எழுப்பக் கூடாது என்கிற ஒரு காரணத்திற்காக அந்த வயர்களைப் பிடுங்கி இருப்பார். அந்தளவுக்கு அவர் துடித்திருக்கிறார் என்றுதானே அர்த்தம். தன் தாய் தந்தை, சகோதரியைக் காப்பாற்ற முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சி உயிரோடு இருக்கும்வரை கொன்று குவிக்காதா? தன் வலியையெல்லாம் நீங்கள் பார்த்துக் கதறும் பொது, அவருக்கு எப்படி இருக்கும்…” என்றவள், எதையோ நினைத்துத் தலையை மேலும் கீழும் ஆட்டி,
“அவர் உயிரோடு இருக்கும்வரை, அவரைப் பற்றி என்னால் எதுவும் அறிய முடியவில்லை. ஆனால் அவருடைய மரணம், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு உணர்த்தி விட்டது சார்…” என்றாள் குரல் கம்ம. பின்.”ஒப்புக்கொள்கிறேன்… ஒரு அண்ணனாய் அவருடைய இழப்பைத் தாங்குவது உங்களுக்குச் சிரமம்தான்… ஆனால் ஒரு சேவகியாய்… இது அவருக்குக் கிடைத்த விடுதலை என்றே நினைக்கிறேன்…” என்றபோது ஏகவாமனின் மனதில் அந்த நிலையிலும் பெரும் அமைதி தோன்றியது உன்மை.
“சார்… செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறன…? அதை நீங்கள் வந்தால் மட்டுமே செய்ய முடியும்” என்று தயக்கத்துடன் கூற, அதுவரை அலரந்திரியையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, மீண்டும் தம்பியின் நினைவு வர முகம் கசங்கிப்போனது. திரும்பவும் மருத்துவமனை போவதை நினைத்தால் அடி வயிறு கலங்கியது. அவனுடைய உயிரற்ற உடலைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும்போதே உடலிலிருந்த இரத்தம் வடிவது போலத் தோன்றியது. ஏதோ பலம் முழுவதையும் இழந்தது போல எடுத்து வைத்த கால்கள் தள்ளாட அதைக் கண்டு, நின்று நிதானமாக அவனை ஏறிட்டஅலரந்திரி.
“வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை சார்… அதுதான் நிதர்சனம்… உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்… சிரமம்தான்… நீங்கள் உடைந்து போவதால் ஏதாவது மாறப்போகிறதா என்ன…” என்று மெல்லியதாகக் கேட்டவளை உற்றுப் பார்த்தான் ஏகவாமன்.
இவளால் எப்படி இத்தனை திடமாக இருக்க முடிகிறது… ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நன்கு புரிந்தது. தன்னை விட அவள் மனதளவில் மிகத் தைரியசாலி என்று.
அடுத்துக் காரியங்கள் வேகமாக நடந்து முடிந்தன. மறுநாள் மதியமே தம்பிக்குக் கொள்ளி வைத்துவிட்டு கொழுந்துவிட்டெரிந்த தீயையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தவாறு நின்றவன் மெதுவாகத் திரும்பினான். அலரந்திரியும் சற்றுத் தள்ளி எரியும் சிதையைத்தான் வெறித்துக்கொண்டிருந்தாள். அருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். ஏகவாமன்தான் நின்றிருந்தான்.
அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் எரியும் நெருப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க. முதலில் எப்படித் தொடங்குவது என்று தயங்கியவன், பின் அவள் புறமாக நிமிர்ந்து
“வில் யு அக்சப்ட் மை அப்பலொஜி…” என்றதும் நிமிர்ந்து ஏகவாமைனைப் பார்த்தாள் அலரந்திரி. ‘என்னது… ‘ஏகவாமன் அவளிடம் மன்னிப்புக் கேட்பதா? அவள் ஏதாவது கனவு காண்கிறாளா என்ன’ என்று நம்ப முடியாதவளாக அவனை வெறிக்க, அவள் பார்வை கூறிய செய்தியைக் கண்டு, ஆம் என்பது போலத் தலையை ஆட்டி,
“யெஸ்… ஐ ஓஹ் யு அன் அப்பலஜைஸ்…” என்றுவிட்டு, சற்றுத் தயக்கத்துடன் அவளை ஏறிட்டு,
“முதன் முதலாக நீ இந்த வீட்டிற்கு வந்து, என் தம்பியின் மனைவி என்றபோது நான் நம்பியிருக்க வேண்டும்… பட்… ஐ டிடின்ட்.. அதற்குக் கரணமிருக்கிறது… நான் ஜெயவாமனைக் கண்டு பிடித்தவுடன் வைத்தியர், அவன் அங்கேதான் மூன்று வருடங்களாக இருந்தான் என்று சொன்னார்… நானும் நம்பினேன்… திடீர் என்று நீதான் என் தம்பியின் மனைவி என்று வந்ததும்… அதை உண்மை என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தவிர நீ காருண்யன், ஜெயவாமன் என்று குழப்பி அடித்தாயா? நிச்சயமாக நீ பொய் சொல்கிறாய் என்று நினைத்தேன்… தவிர… எங்கள் குடும்பத்திற்கு நடந்த அவலம் உனக்குத் தெரியுமல்லவா… எங்கே என் தம்பி உயிரோடு இருப்பது தெரிந்தால், மீண்டும் அவனைத் தேடி எதிரிகள் வந்துவிடுவார்களோ என்று அஞ்சினேன்… நீ வேறு யார் என்று எனக்குத் தெரியாது… எப்படியாவது உன்னை என் தம்பியின் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்… அதனால்தான் பொய் சொன்னேன்… பட்…” என்றவன், மார்புக்குக் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டி,
“ஒரு வேளை நீ சொல்வதில் உண்மை இருக்கலாமோ என்று மெல்லிய சந்தேகம்… உன்னுடைய நேர்ப் பார்வை நிச்சயம் சொய் சொல்லாது என்று நினைத்தேன்… அதனால் உன்னைப் பற்றி முழுத் தகவல்களும் அறிய ஆசைப்பட்டேன்… ஆனால்… வந்த தகவல்கள் அனைத்தும் உனக்கு எதிராகத்தான் இருந்தன… அதில் நீ காருண்யனின் மனைவி என்றும், அவனுடைய உடல் அவனுடைய பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டது என்றும் இருந்தது. கூடவே ஜெயவாமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திகதியும், உன்னுடைய கணவன் அனுமதிக்கப்பட்ட நேரமும் வேறு வேறு… இந்த நிலையில் நீ சொன்னது உண்மை என்று எப்படி நம்புவேன் சொல்?” என்று மென்மையாகக் கேட்டவன்,
“ஆனால் ஜெயன் உண்மையைச் சொன்ன பிறகுதான்…” என்றவன், எதையோ விழுங்குபவன் போலத் தொண்டையை அசைத்து, “என் தவறு புரிந்தது… அந்த மருத்துவமனை பணத்துக்காகப் பொய் சொல்லியிருக்கிறது என்று அறிந்துகொண்டேன்… அலர்… என் தம்பியை மூன்று வருடங்களாக உன் சக்தியையும் மீறிக் காத்திருக்கிறாய்… ஆனால் நான்… சுலபமாக உன்மீது தப்பைப் பூசி அவன் உயிரோடு இருக்கும் உன்மையைக் கூட மறைத்து விட்டேன்… எத்தனை பெரிய தவறு அது… நீ செய்ததற்கு நன்றி என்கிற ஒரு சொல் போதுமா எனக்குத் தெரியவில்லை… முடிந்தால் அன்று நான் நடந்து கொண்டதற்காக மன்னித்து என் நன்றியை ஏற்றுக்கொள்வாயா…” என்று உன்மையாக வருந்தி அவன் கேட்டபோது, ஏனோ இவளுடைய தொண்டை அடைத்தது. கூடவே மெல்லிய விரக்திப் புன்னகை ஒன்றைச் சிந்தியவள்,
“மன்னிப்பு… செய்த குற்றங்களை மேலும் செய்யவைக்கும் வார்த்தை…” என்று ஒரு வித பெருமூச்சுடன் கூறியவள், பின் நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“உங்கள் நன்றிக்காக உங்கள் தம்பியை நான் வைத்துப் பார்க்கவில்லை சார்… அவர் என் கழுத்தில் தாலி கட்டிக் கணவரானவர்… அவரைக் காக்கும் கடமை எனக்கும் இருந்தது… செய்தேன்… தவிரச் செய்த தவற்றுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால், அந்தத் தவறு இல்லையென்றாகிவிடும் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால்… நான் உங்களை மன்னித்துவிட்டேன்…” என்றவள், அவன் விழிகளைப் பார்த்து,
“ஆனால் காருண்யன் இறந்ததாகச் சொல்லி இத்தனை மாதங்கள் அவரை என்னிடமிருந்து மறைத்து வைத்தீர்களே… அவர் உயிரோடு இல்லை என்று நினைத்து… நான்… நான்…” என்றவள் அடைத்த தொண்டையை எச்சில் விழுங்கிச் சமப்படுத்த முயன்று தோற்றவளாகக் கண்களில் கண்ணீர் பொங்க, “மறக்கமாட்டேன்… சார்! இந்த ஜென்மத்தில் மன்னிக்கவும் மாட்டேன்… நிச்சயமாக மன்னிக்கமாட்டேன்…” என்றபோது இப்போது கன்னத்தில் கண்ணீர் வழிந்து சென்றது. அதைக் கண்டு துடித்தவனாக, அவளை இன்னும் நெருங்கியவன்,
“அலர்… ப்ளீஸ்… நான்…” என்று அவன் எதையோ சொல்ல வர, அவன் முன்பாகக் கரத்தை நீட்டி அவன் பேச்சைத் தடுத்தவள்,
“நமக்கிடையில் இருந்த தொடர்பு காருண்யன் மட்டுமே… அதுவும்…” என்றவள் திரும்பிச் சிதையைப் பார்த்துவிட்டு, “சாம்பலாகிவிட்டது… இனியும் உங்களைப் பார்க்கும் நிலை வராதிருக்கட்டும்…” என்றுவிட்டு நடக்கத் தொடங்க அதிர்ந்தான் ஏகவாமன். இரண்டெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய கரத்தில் தன் கரத்தைப் பதித்துத் தடுத்தவனாக,
“அலர்… எங்கே போகிறாய்…” என்றான். அவளோ தன் கரத்தை அவன் பிடியிலிருந்து உதறி விடுவித்து,
“என் பழைய வாழ்க்கைக்கு… வேறு எங்கு?” என்று கேட்க,
“நோ… யு கான்ட்… நீ எங்கும் போக முடியாது… நீ என் கூடத்தான் இருக்கவேண்டும்… எங்கள் குடும்பத்திற்கு நடந்த அவலம்பற்றித் தெரியும் அல்லவா… என்று என் தம்பியின் மனைவி என்று கூறி என் வீடு தேடி வந்தாயோ, அப்போதே நீ அறியாமலே பல எதிரிகளையும் சம்பாதித்துவிட்டாய் அலர்… எங்கள் வம்சத்தையே அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கருந்தேவனுக்கு உன்னைப் பற்றிய செய்தி அத்தனையும் சென்று சேர்ந்திருக்கும்… நான் சொல்வதைக் கேள்… தனியாக நீ இருப்பது உனக்குத்தான் ஆபத்து…” என்று அவன் மறுப்பாகக் கூற, மெல்லியதாகச் சிரித்தவள்,
“இதுவரை என்னைக் காக்கத்தெரிந்த எனக்கு இனியும் காக்க முடியாதா என்ன? என் வாழ்க்கை எனக்குரியது சார்… அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை… இதுவரை காலமும் சுதந்திரமாய்… யாருக்கும் கீழ் அடி பணியாதவளாய்… தனியாகத்தான் இருந்தேன்… இனியும் இருப்பேன்… யாருடைய பாதுகாப்பும் எனக்குத் தேவையில்லை…” என்று அவள் அழுத்தமாகக் கூற, ஒரு கணம் அவளை ஆழமாகப் பார்த்தான் ஏகவாமன்.
“அலர்… உன்னைக் கடைசிக் காலம்வரைக்கும் வைத்துப் பார்த்துக் கொள்வதாக ஜெயவாமனிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன்… தயவு செய்து மறுக்காது என் கூட வா…” என்று வேண்டி நிற்க,
“அவர் வாக்குக் கேட்டு நீங்கள் வாக்குக் கொடுத்தால் ஆகிவிட்டதா… எனக்கென்று தனி விருப்பு வெறுப்பு இருக்காதா… இதோ பாருங்கள்… எனக்கு யாருடைய பாதுகாப்பும் வேண்டியதில்லை, யாருடைய பாதுகாப்பிலும் இருக்கவேண்டிய அவசியமும் எனக்கில்லை… தவிர… தேவையற்று ஒரு சுமையை நீங்கள் ஏன் சுமக்கவேண்டும்… உங்களுக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது… அந்த வாழ்க்கையை நோக்கிப் போய்க்கொண்டிருங்கள்… ஐயோ தம்பியின் வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று கவலையெல்லாம் படாதீர்கள்… உங்கள் தம்பி இறக்கும் தறுவாயில் மறுக்க முடியாது சூழ்நிலைக் கைதியாகி வாக்குக் கொடுத்தீர்கள்… மனிதாப அடிப்படையில் நானும் வாதிடாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்… இனி அது தேவையில்லையே… தயவு செய்து என்னைப் பற்றி எண்ணிக் கவலைப் படாதீர்கள்… உங்கள் பாதை வேறு என் பாதை வேறு… நமது பாதைகள் ஒரு போதும் இணையாது… இணையவும் கூடாது…” என்று கூறியவள், அடுத்து அவனுடைய பதிலையும் கேட்காது நடக்கத் தொடங்க, சென்று கொண்டிருந்தவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ஏகவாமன்.
அத்தனை திடமாக, உறுதியாகச் சொல்லிவிட்டுச் செல்பவளை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று அவனுக்குப் புரியவேயில்லை. தடுமாற்றத்துடன்,
“அலர்… ப்ளீஸ்… நான் சொல்வதைக் கேள்… நிச்சயமாக நீ என்னை விட்டு எங்கும் போக முடியாது… நான் சொல்வதைக் கேள்…” என்று அவள் பின்னால் போக, இப்போது அலரந்திரியின் முகத்தில் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. தன் இரண்டு கரங்களையும் அவனுக்கு முன்பாகத் தூக்கிக் கும்பிட்டவள்,
“இதோ பாருங்கள்… நான் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று எண்ணினால், என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்… போதும் சார்… கொஞ்ச காலம் என்றாலும், உங்களைச் சந்தித்தபின் நான் பட்ட வலிகள் போதும். இனியாவது சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இன்றோடு, இந்த விநாடியிலிருந்து உங்களுக்கும் எனக்குமான அறிமுகம் முடிந்து விட்டது… தயவு செய்து அலரந்திரி என்று ஒருத்தி இருந்தாள் என்பதை மறந்து விடுங்கள்… நானும் என் வாழ்வில் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் தம்பியும் இருந்தார் என்பதை மறந்து விடுகிறேன்… உன்மையாக எனக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்பினால்… இனி என் பாதையில் குறுக்கே வராதீர்கள்…” என்று கடுமையாகக் கூறியவள், தன் கரங்களை விலக்கி, வேகமாக நடக்கத் தொடங்க இவனோ, என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியுடன் அப்படியே சிலையாக நின்றிருந்தான். ஆனால் மனமோ,
“என் வாழ்க்கையே நீதான் பெண்ணே… நீ எப்படி எனக்குச் சுமையாவாய்? உன்னைத் தள்ளிவைத்துவிட்டு நான் எப்படி மகிழ்ச்சியாக இருப்பேன்… இதை எப்படி உனக்குப் புரியவைப்பேன். இதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறாய்…? என் தம்பியின் வாக்குக்காக இல்லாமல், எனக்காகவே உன்னைக் காக்க விளைவதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்…” என்று எண்ணியவாறு சென்றுகொண்டிருந்தவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் மறுத்தபின், மீண்டும் ஓடிச் சென்று தடுக்க அவனால் முடியவில்லை. என்னதான் திடமானவளாக இருந்தாலும், ஆழ் மனதில் உள்ள வலியை அவன் நன்கு அறிவான். இந்த நிலையில் நடந்த சம்பவத்தை ஜீரணிக்க அவளுக்குச் சற்றுக் காலம் தேவை. ஓரளவு அவள் தேறிய பின்பு இவனைப் புரிந்து கொள்வாள்… புரிந்துகொள்ள வைப்பான்… அந்தக் காலம் வரும் வரைக்கும் இவன் காத்திருக்கத்தான் வேண்டும்… காத்திருப்பான்… நிச்சயமாகக் காத்திருப்பான்…” என்று உறுதியா நம்பியவன் திரும்பி எரியும் சிதையைத் திரும்பிப் பார்த்தான்.
விழிகளை மூடியவன், “விரைவில் உன் ஆசையை நிறைவேற்றுவேன் ஜெயன்… நிச்சயமாக நிறைவேற்றுவேன்…” என்றபோது அதை மகிழ்வாக வரவேற்பது போலத் தீ மேலும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…
(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…
(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…
(8) குளியலறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…
(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…
(21) அன்று ஏகவாமனும் அலரந்திரியும் ஜெயவாமனின் அருகேயே அமர்ந்திருந்தனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை… பேசினால் மட்டும் வலிகளின் அளவு…