Categories: Ongoing Novel

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 21

(21)

அன்று ஏகவாமனும் அலரந்திரியும் ஜெயவாமனின் அருகேயே அமர்ந்திருந்தனர். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை… பேசினால் மட்டும் வலிகளின் அளவு குறைந்துவிடுமா என்ன? இல்லை… அமைதி சொல்லும் வார்த்தைகளின் ஆழத்தைத்தான் மொழிகள் சொல்லிவிடுமா?

அலரந்திரிக்கு ஏனோ ஏகவாமனின் இறந்த காலத்தை நினைக்கும் பொதுத் தாளமுடியவில்லை. எத்தனை வலிகள், எத்தனை துடிப்புகள். அத்தனையும் அவனை மொத்தமாய் உருக்குலைத்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்த நிற்கும் அவன் பாங்கு… அதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கூடவே தன் குடும்பத்தை மொத்தமாகத் தொலைத்து விட்டு எப்படித் துடித்திருப்பான்… எப்படிக் கதறியிருப்பான்? அதைக் கற்பனையில் எண்ணியபோது, விழிகள் அவளையும் மீறிக் கலங்கிக் கன்னத்தில் வழியத் தொடங்கியது.

அதுவும், மரணப் படுக்கையிலிருக்கும் தன் தம்பியைக் கண்டு அவன் கலங்கித் தவித்தபோது, அப்படியே ஓடிச்சென்று அவனை அணைத்து, ‘கலங்காதீர்கள்… மனத்தைத் தேற்றுங்கள்’ என்று சொல்லத் துடித்த மனதை அடக்க அவள் பட்ட பாடு.

பெரு மூச்சுடன் தன்னையும் மறந்து ஏகவாமனைத் திரும்பிப் பார்த்தாள். மூன்று பேர் அமரக்கூடிய சோபாவில் பின் புறமாகத் தலையைச் சாய்த்து அமர்ந்திருந்தான். விழிகள் என்னவோ மூடித்தான் இருந்தன. ஆனால் அவன் உறங்கவில்லை என்பது அமைதியற்று அசைந்த உடலிலிருந்தும், புருவங்களின் சுருக்கத்திலிருந்தும் தெரிய, மீண்டும் அவனுக்காய் உள்ளம் கலங்கித் தவித்தது. விரைந்து சென்று சமாதானப் படுத்த வேண்டும் என்கிற வேகம் எழுந்தது. ஆனாலும் தன்னை அடக்கியவளாகத் திரும்பிப் படுக்கையிலிருந்த ஜெயவாமனைப் பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு ஒன்று உறைத்தது.

இத்தனை நேரமாக அவள் சிந்தனை ஏகவாமனிடம்தான் இருந்ததேயன்றி, கண்முன்னால் உயிருக்குப் போராடும் ஜெயவாமனிடமில்லை… ஏகவாமனுக்கு வலிக்கிறது என்கிறபோது, இதயத்தின் துடிப்பின் வேகம் அதிகரித்த அளவுக்கு ஜெயவாமனின் வலியை உணர்கிறபோது எழவில்லை… அதை எண்ணியதும், கண்கள் கலங்கின. தன் மீதே ஒருவித வெறுப்புத் தோன்றியது.

“தாலி கட்டியவன் படுக்கையிலிருக்கிறான்… ஆனால் அவனை எண்ணி வருந்தாது, அவன் அண்ணனை எண்ணி வருந்துகிறேனே… இது தவறில்லையா? எனக்கு என்னவாகிவிட்டது? கடவுளே… எத்தகைய மாபாதகம் இது… அவள் மனம் ஏன் இப்படித் தவறாகவே சிந்திக்கிறது…?” என்று பதறியவாறு தன் விழிகளை மூடினாலும் மனம் என்னவோ தன் தம்பிக்காகக் கலங்கி நிற்கும் ஏகவாமனிடமே சென்று கொண்டிருந்தது.

இரு மனங்களின் போராட்டத்திற்குள் எப்போது விழிகளை மூடினாளோ அவளுக்கே தெரியாது. சற்று நேரத்தில் தூக்கத்தில் அவளுடைய தலை மேசையின் புறமாகச் சரியத் தொடங்கியது.

அந்த நேரம் விழிகளை மூடி அமர்ந்திருந்த ஏகவாமனுக்கு எதுவோ உறுத்தியதோ? மெதுவாக விழிகளைத் திறக்க, அவன் விழிகளில் பட்டது, மேசையை நோக்கிச் சரிந்த அலரந்திரிதான்.

இயற்கையாக எழுந்த அக்கறையுடன் எழுந்து ஓரெட்டில் அவளை நெருங்கிச் சரியத் தொடங்கிய அவள் தலையைத் தன் உள்ளங்கை கொண்டு தாங்கிக்கொள்ள, அவளுடைய கன்னம் கச்சிதமாக அவன் உள்ளங்கையில் பொருந்தி நின்றது.

முதன் முறையாக அவளுடைய மலர் முகத்தை ஏந்தியவனின் விழிகள் கனிந்து குழைந்தன. ஏதோ கிடைத்தற்கரிய பொருளைத் தாங்கியது போல அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுடைய கன்னத்தின் மென்மையை உள்ளங்கை நுகர, ஏனோ நெஞ்சம் படு வேகமாக அடிக்கத் தொடங்கியது. அந்தக் கணம் அவனும் அவளும் மட்டுமாய் அந்த உலகத்தில் உயிர் தரிக்க மாட்டோமா என்கிற பெரும் ஏக்கம் எழ, அவனையும் மீறிப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது. கூடவே எப்போதும் இப்படியே அவளைத் தாங்கி நிற்க மாட்டோமா என்கிற தவிப்பு எழ, அந்த நேரம் அவளிடம் மெல்லிய அசைவு.

அவனையும் மீறி அவனுடைய இடது கரம், மேலெழுந்து தலையை வருடிக் கொடுக்க, மறு வினாடி மீண்டும் உறங்கிப்போனாள் அவள். மெல்லிய பெருமூச்சுடன் அவள் தலைக்கு வாகாக வைப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தான்.

சற்றுத் தள்ளி உணவு வைக்கும் சிறிய மேசையின் அருகாமையில் ஒரு தலையணை இருக்க அதை எட்டி இழுத்து எடுத்துக் கட்டிலில் வைத்துவிட்டு மெதுவாக அவள் தலையைத் தலையணையில் வைத்துவிட்டுத் தன் கரத்தை, மிக மெதுவாக எடுத்துக்கொள்ள முயன்றான்.

அதை அவளுடைய உள்ளுணர்வு புரிந்துகொண்டதோ? அதுவரை தன்னைக் காத்த ஏதோ ஒன்று விட்டு விலகுகிறது என்று அஞ்சியவள் போல, அவனுடைய கரத்தைத் தன் கரங்களால் பற்றி, அதில் தலையைப் பதித்து மீண்டும் உறங்கிப்போக, சிலிர்த்துப்போனான் ஏகவாமன்.

அவளுடைய தளிர் கரங்களின் ஸ்பரிசத்தில் தன்நிலை கெட்டவனாகக் குனிந்து பார்த்தான். இன்னும் விழிகள் மூடித்தான் இருந்தன. ஆனால் உதடுகளோ, எதையோ முணுமுணுத்தன. என்ன அப்படி முணுமுணுக்கின்றன என்று உற்றுக் கேட்க விளைந்தவனாகத் தன் தலையைக் குனிந்து காதைக் கூர்மையாக்கிக் கேட்க முயன்றான்.

“போகாதீர்கள்… பயமாக இருக்கிறது…” என்று அவள் கூறியதைக் கேட்டு விதிர் விதிர்த்து எழுந்தான் ஏகவாமன். கனவில் ஜெயவாமனுடன் பேசுகிறாளா என்ன? பரிதவித்துப்போனான் அந்த ஆண்மகன். நெஞ்சம் வேதனையில் தடுமாறத் தன் கரங்களை அவளுடைய பிடியிலிருந்த விடுவிக்க முயன்ற விநாடி, தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்து பார்த்தாள் அலரந்திரி.

தன் முகத்திற்கு நேராகத் தெரிந்த ஏகவாமனின் முகத்தைக் கண்டு பதறி எழுந்தமர்ந்தவளுக்குச் சற்று நேரம் எடுத்தது தான் இருக்கும் சூழ்நிலை புரிய. அப்போதும் அவன் கரங்களை விடாத பற்றியிருப்பது புரிய, சடார் என்று தன் கரத்தை விலக்கியவள்,

“சா… சாரி… கொஞ்சம் அயர்ந்துவிட்டேன்…” என்று மன்னிப்புக் கேட்டவளை இரக்கத்துடன் பார்த்தவன்,

“இட்ஸ் ஓக்கே… நீ போய்த் தூங்கு… நான் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்கிறேன்…” என்று அவன் கூற தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“இல்லை… நானே…” என்று அவள் மறுக்க,

“சொல்கிறேன் அல்லவா… போய்த் தூங்கு…” என்றவனிடம் மறுக்கவும் அவளால் முடியவில்லை. உள்ளமும் புத்தியும் முற்றாகக் களைத்துப் போன நிலையில் தூக்கம் அவளைச் சுழற்றிப் போட முயன்று கொண்டிருந்தது. கொஞ்ச நேரமாவது விழிகளை மூடி உறங்கினால் அன்றி, புத்தி தெளியாது என்பது நன்கு புரிய எழுந்தவள் தூக்கக் கலக்கத்தில் மெல்லியதாகத் தள்ளாடினாள்.

“பார்த்து…” என்றவாறு அவள் கரத்தைப் பற்ற வந்தவன், உடனே அந்த எண்ணத்தை மாற்றி அவளுக்கு வழி விட்டுத் தள்ளி நிற்க, சற்று முன் ஏகவாமன் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவள், அப்படியே சாய்ந்து கொள்ள விழிகள் தாமாக மூடிக் கொண்டன.

மறுநாள் எந்த மாற்றமும் இல்லாமல் கழிந்தது. ஜெயவாமன், முன்தினம் போலவே சற்றுப் பேசினான்… கொஞ்சம் சிரிக்க முயன்றான்… நிறைய அழுதான்… மீண்டும் அலரந்திரியைப் பார்த்துக்கொள்ளுமாறு சத்தியம் பெற்றான்… தாய் தந்தையின் இழப்புத் தன்னைப் பாதிப்பதாகக் கூறினான்… அவர்களைப் பார்க்கவேண்டும் போல ஏக்கமாக இருப்பதாகக் கூறினான். அலரந்திரியிடம், எப்போதும் ஏகவாமனை விட்டு விலகாதே அவன் கூடவே இரு என்று கண்டிப்பாகச் சொன்னான். மூச்சு விட முடியாது திணறினான்… நிறையச் சிரமப்பட்டான்… இப்படியே இரண்டு நாட்கள் கடக்கத் தன் தம்பி படும் வேதனையைப் பார்த்த இவன்தான் உள்ளுக்குள் உடைந்து போனான்.

மூன்றாம் நாள் நடுச்சாமம் ஜெயவாமனின் படுக்கையில் தலைவைத்துப் படுத்திருந்த அலரந்திரிக்குத் திடீர் என்று விழிப்பு வர, சடார் என்று எழுந்தமர்ந்து விழிகளைச் சுழல விட்டாள். வெளியே பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்துகொண்டிருக்க, வேகமாக வீசிய காற்றில் மழைச்சாரல் உள்ளே வந்து விழுவதைக் கண்டவள் திரும்பி ஏகவாமனைப் பார்த்தாள்.

அவன் மழைச்சாரல் விழுவது கூடத் தெரியாமல், ஜன்னலுக்கு அருகிலிருந்த சோபாவில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். சோபாவின் பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்ததால், அவனுடைய பின் முதுகுதான் தெரிந்தது.

பாவம் கடந்த மூன்று நாட்களாகப் பொட்டுக் கண் கூட மூடவில்லை. அவளாவது அடிக்கடி கண்ணயர்ந்தாள். அவனுக்கு அதுவுமில்லை. இப்போதுதான் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருக்கிறான்.

நெஞ்சம் கனக்க, எழுந்தவள் ஜன்னலைச் சாத்துவதற்காக விரைந்தாள். ஏகவாமனின் தலைப் பக்கம் நின்றவாறு எட்டி ஜன்னலைப் பூட்ட முயல, சோஃபாவிற்கு நடுவில் ஜன்னல் இருந்ததால் அவள் கரங்களுக்குக் கதவு எட்டவே இல்லை.

வேறு வழியில்லாமல் சோபாவிற்கு முன் புறமாக வந்தவள், நன்றாக முன்புறம் சரிந்து கதவைப் பூட்ட முயன்றாள். அப்படி இருந்தும் கதவுகள் எட்டவில்லை. சற்றும் யோசிக்காது, அதன் கரையோரமாக்க ஒரு காலை முட்டிபோட்டு முன்புறமாகச் சரிய, இப்போது ஜன்னல் கதவு கரத்தில் அகப்பட்டது. இரண்டு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டு நிமிர, அந்த நேரம் பார்த்து ஏகவாமன், இவள் புறமாகத் திரும்பிப் படுத்தான்.

அவனுடைய வயிறு இவளுடைய முழங்காலில் பட்டதுதான் தாமதம், அதிர்ந்துபோய் எழ முயன்றவள், தடுக்கி அவன்மீது விழத் தொடங்கிய மறு விநாடி, தரையில் விழுந்திருந்தாள் அலரந்திரி. அவள் விழுந்தது மட்டுமல்ல ஏகவாமனும் எழுந்தமர்ந்து கொண்டான். அவனுடைய விழிகள் தூக்கத்தாலோ, இல்லை ஆத்திரத்தாலோ சிவந்திருந்தது கூட அந்த அறையின் மங்கிய வெளிச்சத்தில் தெரிய, நடுங்கிப்போனாள் அலரந்திரி.

இருவருக்குமே சற்று நேரம் எடுத்தது என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள. தன் விழிகளை இறுக மூடி மூடித் திறந்த ஏகவாமன், தரையில் அமர்ந்தவாறு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தவளைப் பார்த்து,

“என்ன செய்கிறாய்?” என்றான் கர்ஜனையாக.

பயத்தில் முகம் வெளிற, கரத்தைத் தூக்கி ஜன்னலைக் காட்டி,

“மழை பெய்கிறது… இடி மின்னல் வேறு… சாத்தலாம் என்று வந்தேன்… தவறி உங்கள்மீது…” என்று கூறாமல் உதட்டைக் கடிக்க, தலையைத் திருப்பிப் பார்த்தான். ஜன்னல் பூட்டியிருந்தது. ஆனாலும் இடியின் சத்தம் காதைப் பிளக்க, அப்போதுதான் தான் செய்த மடத்தனம் புரிந்தது.

அவள் தன் மீது விழுந்ததும், எச்சரிக்கை உணர்வு விழித்துக்கொள்ள, யாரோ எதிரிகள் என்று எண்ணி அவளைத் தள்ளிவிட்டது தெரிந்தது.

“ஓ… காட்…” என்று முணுமுணுத்தவன், தன் முகத்தை உள்ளங்கரங்களால் அழுந்தத் தேய்த்துவிட்டு, மன்னிப்புக் கேட்கும் விதமாக,

“ஐ ஆம் சாரி… நான்… வேறு யாரோ என்று எண்ணி…” என்றவாறு எழுந்தவன், தன் கரத்தை அவள் புறமாக நீட்ட, இப்போது இவளுக்குக் கோபம் வந்தது.

அவன் கரத்தைப் பற்றாமல் எழுந்தவள், தன் சேலை முந்தானையை உதறி இடுப்பில் செருகிவிட்டு எரிச்சலுடன் ஜெயவாமனுக்கு அருகே சென்று அமர்ந்து கொள்ள ஏனோ இவனுக்கு நெஞ்சம் சுட்டது. கூடவே, அவளுடைய களைத்து வாடிய முகம் மனதைப் பிசைய,

“ஐந்து நிமிடம் தா… இதோ வந்துவிடுகிறேன்…” என்றுவிட்டுக் கழிவறைக்குச் சென்று கதவைச் சாத்தியவனுக்குச்சற்று நேரம் எடுத்தது தன்னிலை வர. அவளைத் தள்ளிவிட்ட தன் கரத்தைத் தூக்கிப் பார்த்தான். தூக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவளைத் தள்ளிவிட்டுவிட்டோமே… வலித்திருக்குமா?’ என்று வேதனையோடு எண்ணியவனுக்கு வேளை கேட்ட நேரத்தில், தம்பியின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது.

‘நீ வேண்டினாலும், வேண்டவில்லை என்றாலும், அவள் என் பொறுப்பு ஜெயன்… அவள்மீது சிறு துரும்பும் படாது காப்பேன்டா…” என்று உளமார சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஜெயவாமனின் அருகே அமர்ந்திருந்த அலரந்திரக்குத் தொண்டை வறண்டதுபோலத் தோன்றியது.

அருகேயிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து ஒரு மிடறு விழுங்கியவாறே நேரத்தைப் பார்த்தாள். இரண்டு பத்து என்றது கடிகாரம். உதடுகளில் வடிந்த தண்ணீரைப் புறங்கையால் துடைத்துவிட்டு, போத்தல் மூடியை மீண்டும் அதன் தலைமீது அமுக்கிப் பழைய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பியவளின் முகத்தில் கணனியின் திரை விழுந்தது. அங்கே வெறும் கோடுகளாக ஓடிக்கொண்டிருக்க, புருவம் சுருங்கத் திரும்பி ஜெயவாமனைப் பார்த்தாள்.

ஏதோ உறுத்த, அவனுடைய மார்பில் கரம் பதித்துப் பார்த்தாள். அசைவில்லை. நிலைமை புரிந்தும் புரியாததுமாகப் பதறி எழுந்து, அந்த அறையோடு ஒட்டியிருந்த கழிவறையை நோக்கிப் பாய்ந்தவள், பலமாகக் கதவைத் தட்ட, உள்ளே முகத்தைக் கழுவிக்கொண்டிருந்த ஏகவாமன் வழிந்த தண்ணீரைக் கரத்தால் வழித்தெடுத்தவாறு கதவைத் திறந்தான்.

ஆங்கே பதட்டத்துடன் நின்றிருந்த அலரந்தரியைக் கண்டதுமே தன் நம்பிக்கை பொய்த்துப்போனது புரிந்தது. நெஞ்சம் துடிக்கத் தன்னை மறந்து அவளுடைய தோள்களில் கரங்களைப் பதித்துத் தள்ளியவாறு வெளியே வந்தவன் இரண்டெட்டில் ஜெயனின் அருகே வந்தான்.

விழிகளை மூடிப் படுத்திருந்தான் ஜெயவாமன். பதற்றத்துடன் திரையை ஏறிட்டான். நிலைமை புரிந்தது. அவனையும் மீறி உடலில் ஒரு நடுக்கம் ஓட, நெஞ்சம் தவிக்க, எங்கே இதயம் வெடித்துவிடுமோ என்று அஞ்சியவன் போல மார்பைப் பற்றியவன், பற்களை இறுகக் கடித்தவாறு சற்று நேரம் ஜெயவாமனையே வெறித்துப் பார்த்தான்.

பார்க்கும்போது தூங்குவதுபோலத்தான் தோன்றியது… என்ன விழிப்பில்லாத தூக்கம்… முடிவான தூக்கம்… நடுக்கத்துடன் மார்பை அழுத்தியிருந்த கரத்தை விலக்கித் தம்பியின் உயிரிழந்த கரத்தைப் பற்றினான். இன்னும் மெல்லிய வெப்பம் அவன் கரங்களில் தெரிய, அவன் மீளாத் துயிலில் ஆழ்ந்து சில நிமிடங்களே கடந்திருப்பது புரிந்தது.

அப்போதுதான் கவனித்தான் அவனுடைய கரத்தில் கணினியின் வயர்.”இது எப்படி இங்கே வந்தது?” என்று குழப்பத்துடன் அதை எடுத்துப் பார்க்கத்தான் தெரிந்தது தன் தம்பிதான் கழற்றியிருக்கிறான் என்று. இல்லையென்றால் அவனுடைய மூச்சு திணறும்போது கணினி சத்தம் போட்டிருக்கும். அது போடாததால்தான் அவனுடைய மரணம் இவர்களுக்குத் தெரியாமலே போனது.

நெஞ்சம் வெடிக்கத் தன் தம்பியை ஏறிட்டுப் பார்த்தான். எதற்காகக் கழற்றினான்…? தான் மரணிக்கும் போதும், எங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கழற்றினானா? இல்லை தன்னைக் காப்பாற்ற முயற்சிசெய்வோம் என்று அஞ்சிக் கழற்றினானா, இல்லை தான் இறக்கும் வலியை நான் பார்க்கக் கூடாது என்று எண்ணிக் கழற்றினானா? நினைக்கும்போதே நெஞ்சம் காந்தியது.

இறுதி நேரத்தில் என்ன நினைத்திருப்பான், சிரமப்பட்டானா? அதிகம் வலித்திருக்குமா? துடித்தானா… அவன் துடித்திருந்தால், அருகே படுத்திருந்த அலரந்திரிகுத் தெரிந்திருக்கும் அல்லவா…! அப்படியானால் கஷ்டப்படாமல் தானே போய் இருப்பான்… என்று கலங்கித் துடித்தவன், இனி தன் தம்பி உயிரோடு இல்லை என்கிற உன்மை நிதர்சனமாய் உறைக்க, உடல் தள்ளாடியது…

ஏகவாமனின் நிலையை அறிந்துகொண்ட அலரந்திரி பதறிப்போனாள். சரிந்தவனைத் தன் கரங்கள் கொண்டு தாங்கியவள்,

“சார்…” என்று அழைக்க, அவசரமாக அவளிடமிருந்து தன்னை விடுவித்தவன், வேதனையான புன்னகை ஒன்றைச் சிந்தித்துவிட்டு, “ஐ ஆம் ஓக்கே…” என்றுவிட்டுத் தள்ளாட்டத்துடன் வெளியே நடக்கத் தொடங்க, ஜெயவாமன் இறந்ததைவிட, ஏகவாமனின் வலிதான் அவளை மிகவும் கலங்கச் செய்தது.

உயிரைக் காற்றோடு கரைத்துவிட்டு அமைதியாகக் கிடந்தவனை எண்ணி வருந்துவதை விட, தன் தம்பியையும் இழந்த துக்கத்தில் துடித்துப்போய்ச் செல்பவனைத் தேற்றவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மேலோங்கியிருக்க, வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது அவன் பின்னாலேயே ஓடினாள் அலரந்திரி.

அவனை எதிர்த்துப் பொழிந்த அடைமழையையும் பொருட்படுத்தாது நடந்த ஏகவாமனுக்குத் தான் எங்கே செல்கிறோம் ஏன் செல்கிறோம் என்று கூடப் புரியவில்லை. மூன்று வருடங்களாக நம்பிக்கையைக் கையில் பிடித்தவனாகத் தம்பியைக் கண்டுபிடித்தவன், இன்று அவனை ஒரேயடியாக இழந்துவிட்டுத் தனிமரமாக நிற்கிறானே… இதுதான் அவன் வாங்கிவந்த வரமா? வெறும் இருபத்தைந்து வருடங்கள்தான் அவனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கான காலம் என்று கடவுள் எழுதி வைத்திருக்கிறானோ…

பெரும் வேதனையுடன் நடந்து வந்தவன், ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் நின்று இரு தொடைகளிலும் உள்ளங்கைகளைப் பதித்துக் கால் மடித்துத் தரையில் முழங்காலில் தொப்பென்று விழுந்தவனுக்கு நெஞ்சமே சிதறிப்போனது. வெடித்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்க முயன்றவனாக, ஆழ மூச்செடுத்து மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றான். தீரும் வலியா அது… ஆறும் வடுவா அது… கரையும் வேதனையா அது… தன்னை அடக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் தோற்றுக்கொண்டிருந்த தருணத்தில், அவனருகே நிழல் விழ, மழையுடன் கரைந்து சென்ற கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவனுக்கு இணையாகப் பெரும் வேதனையுடன் நின்றிருந்தவளைக் கண்டவனுக்கு அதற்கு மேல் அடக்கிவைக்க முடிந்திருக்கவில்லை.

தன் வலியை அவள் போக்கிவிடுவாள் என்று நம்பியவனாக, அவளால் மட்டுமே போக்கவைக்க முடியும் என்பதை உணர்ந்தவனாக,

“அ… அலர்…” என்றது மட்டும்தான் தெரியும் மறுகணம் அவனுடைய முகம் அவள்மேல் வயிற்றோடு அழுந்தப் பதிந்திருந்தது. அவனுடைய இரு கரங்களும் அவளுடைய இடையைச் சுற்றித் தன்னோடு இறுக்கியிருந்தது. அந்த மழையின் ஈரத்திலும் ஏகவாமனின் கண்ணீர்த் துளிகளை உணர்ந்து கொண்டவள் துடித்துப் போனாள்.

அந்த நேரத்தில் நாகரீகத்திற்கும், ஒதுக்கத்திற்கும் வேலையிருக்கவில்லை. அவனுடைய வலியைப் போக்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கியிருக்க, சற்றும் யோசிக்காது, அவனுடைய தலையைத் தன் வயிற்றோடு இறுக அழுத்திக் கொண்டவள், அப்படியே அவனுக்கு இணையாக முழங்காலிட்டு அமர்ந்து அவனைத் தன் மார்போடு தாங்கிக்கொண்டாள் அலரந்திரி.

கண்ணீர் எத்தனை பெரிய வரம்… ஆறாத வடுவையும் ஆற்றிவிடும் ஆற்றல் அதற்குத்தானே இருக்கிறது. கண்ணீர் பேசும் மொழியை வார்த்தைகள் சொல்லிவிடுமா என்ன? தன் மார்பில் கிடந்து அழ முடியாது திக்கித் திணறித் துடித்துக்கொண்டிருந்தவனின் தலை முடிகளுக்கு ஊடாகத் தன் விரல்களைச் செலுத்தியவள், அவனை ஆசுவாசப் படுத்தும் முகமாக முடிகளைப் பற்றுவதும் விடுவதும், கழுத்தை வருடுவதும் முதுகைத் தடவுவதுமாகத் தனக்குத் தெரிந்த வகையில் அவனை ஆறுதல் படுத்த முயல, இவளுடைய கண்ணீரோ மழையோடு கலந்து அவன் சுருண்ட முடிக்கூடாக விழுந்து பயணிக்கத் தொடங்கியது. ஆனாலும் ஒரு வார்த்தை பேசினாளில்லை. இந்த நேரத்திற்கு அது தேவையும் இருக்கவில்லை.

எத்தனை நேரமாக அப்படியே இருந்தனரோ… சற்று நேரத்தில் ஏகவாமனிடம் மெல்லிய அசைவு. அதில், தற்போது கிடைத்த ஆறுதலைக் கைவிட விரும்பவில்லை என்பதைக் காட்டுவது போல, அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டவனாக, மேலும் அவளுக்குள் தன் முகத்தைப் புதைத்தான். ஏனோ அந்த நேரம் உலகைச் சந்திக்கும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.

பகைவர்களைப் பாரபட்சம் பார்க்காது, கொன்று குவித்த அந்த ராட்சசன், அந்தக் கணம் குழந்தையாகிப் போக,

“அவனாவது என் கூட வருவான் என்று நினைத்தேன் அலர்… இப்போது யாருமில்லாத அநாதையாக… நினைக்கும்போதே பயமாக இரக்கிறதே… நான் மட்டும் தனியனாய்… எப்படி வாழப் போகிறேன்… அவன் தொலைந்த போதாவது ஒரு நம்பிக்கை இருந்தது… அவன் கிடைப்பான் என்று… ஆனால் இனி… எந்த நம்பிக்கையில் இந்த உலகில் வாழப் போகிறேன்… நான் என்ன செய்யட்டும்…” என்றவன் மெதுவாகக் கமறி”நிச்சயம் அவன் பிழைப்பான் என்று நினைத்தேன்… அவனை என்னால் காப்பாற்றிவிட முடியும் என்று நினைத்தேன்…” என்றவன் தன் முகத்தை அவள் மார்பில் மேலும் புதைத்தவாறே மறுப்பாகத் தலையை ஆட்டி,

“இல்லை… என்னால் முடியவில்லை… நான் தோற்றுவிட்டேன்…” என்றான். சற்று நேரம் அப்படியே கிடக்க, அப்போதும் அவள் எதுவும் பேசினாளில்லை. ஆனால் அவன் அழுவதைப் பார்த்து இவள் உடலும் அழுகையில் விம்மி வெடிக்கத்தான் செய்தது. ஆனாலும் அந்த நிலையிலும் அவளுக்குப் பேசத் தோன்றவில்லை. அவள் பேசினால் மட்டும் அவனுடைய வலிகள் காணாமல் கரைந்து மறைந்து விடுமா என்ன? அதைவிட அவனாகவே தேறும் வரைக்கும் அழுது கரைந்தால், அவன் வலி குறைந்து விடாதா? அது அவன் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஒரு வடிகாலாகாதா? என்று அமைதியாக இருந்தாள். ஆனாலும் தன் வருடலின் மூலம் அவன் உணர்வைப் புரிந்து கொண்டேன் என்பதைக் கரங்களால் தெரிவித்துக் கொண்டிருக்க, திடீர் என்று என்ன நினைத்தானோ, ஆவேசமாக அவளை உதறிவிட்டு எழுந்தான் ஈக்வாமன். இரண்டடி தள்ளி நின்று,

“போய் விடு… என் அருகே இருக்காதே… போய் விடு… நீ இருந்தால் உனக்கும் ஆபத்து… அட்லீஸ்ட்… நீயாவது உன் உயிரைக் காத்துக் கொள்… என் குடும்பத்தைக் காக்க முடியாத நான், உன்னை மட்டும் காத்துவிடுவேனா?… போய் விடு… கெட் லாஸ்ட்…” என்று கத்தியவன் கட கட என்று ஏதோ பைத்தியம் பிடித்தவன் போல நடக்கத் தொடங்க, இவளுக்குத்தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. பதற்றத்துடன் அவன் பின்னால் ஓடியவள்,

“சார்… நில்லுங்கள் சார்… எங்கே போகிறீர்கள்…” என்று இவள் அழைக்க, அவனோ காது கேளாதவன் போலப் போய்க்கொண்டேயிருந்தான். தன்னையும் மறந்து,

“சொல்வதைக் கேளுங்கள் சார்…! தயவு செய்து நில்லுங்கள்…” என்று கத்தியவாறு தெருவைக் கடக்கத் தொடங்கினாள்.

அதற்கிடையில் வேக நடையுடன் தெருவின் மறு பக்கம் வந்திருந்த ஏகவாமன், எதுவோ உறுத்த, சடார் என்று திரும்பிப் பார்த்தான். அங்கே இரு பக்கமும் திரும்பிக் கூடப் பார்க்காமல் இவனை நோக்கி வந்து கொண்டிருந்த அலரந்திரியைக் கண்டு அதிர்ந்தவனாய்,

“ஏய்… என்ன காரியம் செய்கிறாய்… நில்…” என்று அலறியவாறு அவளை நோக்கிப் போக முயல, சற்றுத் தொலைவில் ஒரு பெரிய ட்ரக் இவளை நோக்கி வருவதைக் கண்டான்.

“அலர்… பின்னால் போ…” என்று கத்தியவாறு, மின்னல் வேகத்துடன் இவளை நோக்கிப் பாய முயல, அந்த ட்ரக்கின் வேகத்திற்கு முன்னால் இவனுடைய வேகம் எடுபடாமல் போனது.

ஒரு விநாடி… ஒரு விநாடியில் ஏகவாமனின் உலகமே அழிந்து போனதோ…? அதிர்ந்து விழித்த விழிகளில் அந்த ட்ரக் சீற்றத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்து கடக்கத் தொடங்கியது.

தன்னவளின் இறுதி நிமிடங்களை உணர்ந்து கொண்டவன், தன் உயிரை உருவி எடுக்கக்கூடிய அந்தக் காட்சியைக் காணும் சக்தியற்றவனாக, அந்த விநாடியிலிருந்து தன் உயிரும் தனக்குச் சொந்தமில்லை என்பதைப் புரிந்து கொண்டவனாக, வெறுக்கத் தக்க அந்த விநாடிகளைப் பார்க்கத் திராணி அற்றவனாக விழிகளை இறுக மூடிக்கொண்டவனின் உலகம் தன் சுழற்சியை நிறுத்திக் கொண்டது.

What’s your Reaction?
+1
16
+1
1
+1
1
+1
0
+1
8
+1
2
Vijayamalar

Recent Posts

புயலோடு மோதும் பூவை – 10

(10) இதங்கனை கண் விழித்தபோது எல்லாமே மங்கலாகத்தான் தெரிந்தன. தலை வேறு விண் விண் என்று வலிக்க ஒற்றைக் கரத்தால்…

18 hours ago

புயலோடு மோதும் பூவை – 9

(9) இப்போது அவளை எப்படி அழைத்தான்... இதங்கனை என்றா? உடலில் உள்ள இரத்தம் அத்தனையும் வடிந்து செல்ல அவனை விறைத்துப்…

3 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 23/24

(23) இரண்டு நாட்கள் கழிய, அன்றும் அலரந்திரிக்குத் தூக்கம் சுத்தமாக வருவதாக இல்லை. நடந்த சம்பவத்தை எண்ணி எண்ணித் தவித்தவளுக்கு…

5 days ago

புயலோடு மோதும் பூவை – 8

(8) குளியலறையை  விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாகச் சுருண்டு சிலுப்பிய தலை முடியைக் கரங்களால் வாரி விட்டுப் பின்…

6 days ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 22

(22) இதோ… எல்லாம் முடிந்தது… பெய்யும் மழையில் இரத்தம் கரைந்து போக, நசிந்து போயிருக்கும் தன்னவளைப் பார்க்கும் சக்தியில்லாதவனாக எகிறித்…

7 days ago

புயலோடு மோதும் பூவை – 7

(7) அவள் நினைத்தது போலப் பாழாய்ப் போன அரவனில்லை. அங்கே வேலைசெய்யும் ஒரு சீனத்துப் பெண்மணி. அவளுடைய கரங்களில் ஒரு…

1 week ago